
அத்தியாயம் -15
சபரியின் தவிப்பையும் சங்கடத்தையும் ஒரு விநாடி பார்த்து இரசித்தாள் மீனா. பிறகு பூக்காரப் பெண்மணியிடம் திரும்பினாள்.
“இங்கே என் கிட்ட தாங்கக்கா, நானே தலையில வச்சுக்கிறேன்” என்றபடி அந்தப் பெண்ணின் கையில் இருந்து வாங்கிக் கொண்டாள்.
“என்ன தம்பி நீங்க, உங்க பொஞ்சாதிக்கு பூ வச்சு விட்றதுக்கு இவ்வளவு கூச்சப் பண்றீங்க?”
சிரித்துக் கொண்டே கிண்டல் செய்வது போல் பேசினாள் அப்பெண். கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டான் சபரி.
‘ஆமாமா.. இவனா கூச்சப் பட்றான்? என்னைப் பொண்டாட்டியா மதிச்சா தானே இதெல்லாம் செய்வான்? இவன் என்னை ஒரு மனுஷியா கூட மதிக்காதவன்! இவன் கிட்ட போயி இதைச் சொன்னா? ஹூம்ம்.. இதெல்லாம் எப்படி இவங்களுக்கு தெரியப் போகுது?’
மனதிற்குள் எப்படி இதை நினைக்காமல் இருக்க முடியும் பெண்ணவளால்? அவனை அவளுக்குத் தானே தெரியும்!
பூவுக்கான விலையைக் கேட்டு எடுத்துக் கொடுத்து விட்டுக் கோவிலின் உள்ளே சென்றான் சபரி.
இப்போது அவளுக்காக சிறிதுக் காத்திருந்து அவளோடு இணைந்து நடந்தான்.
பூக்காரப் பெண்மணியின் முன்பு அவள் எதுவும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ என்று நினைத்துக் கொண்டாள் மீனா.
அடுத்ததாக இருந்த கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு உள்ளே இறைவன் சந்நதிக்குச் சென்றனர்.
அர்ச்சனைத் தட்டு கையில் வாங்கும் போது அர்ச்சனை யார் பேருக்குச் செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் கேட்க, அதற்கும் முழித்தான் சபரி.
“என்ன தம்பி, பேரு சொல்றதுக்கு இப்படி முழிக்கிறீங்க?”
“அந்த அம்பாள் பேருக்கே அர்ச்சனை பண்ணிருங்க சாமி”
சட்டென்று பதில் கூறி சமாளித்தாள் மீனா.
வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அது சிறிய கோவில் தான் என்றாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சம்பிரதாயப்படி சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டுப் பிறகு போகலாம் என்கிற எண்ணம் இருவருக்குமே மனதில் இருந்தது. அது பொதுவான ஒரு பழக்கம் தானே!
ஆனால் அதை யார் யாரிடம் சொல்வது? எப்படிப் பேசுவது என்கிற ஒரு சங்கடம் வர, தயங்கித் தயங்கி நின்றனர் இருவரும்.
கோவிலுக்கு வெளியே மீனாவிடம் அவ்வளவு அலட்சியம் காட்டிய சபரி, கோவிலுக்கு உள்ளே அப்படி அலட்சியப் படுத்த முடியாமலும் அதே நேரம் அவளுக்கு உரிய உரிமையையும் மரியாதையையும் கொடுத்து அவளிடம் பேச முடியாமலும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருந்ததை மீனாவால் நன்கு உணர முடிந்தது.
‘வேணும் வேணும் நல்லா வேணும்! நல்லா கஷ்டப்படட்டும்! இவர் தவிக்கிறதப் பாக்குறதுக்கு ஒரு பக்கம் பாக்க நல்லா தான் இருக்கு’
ஏதோ சாதித்து விட்ட திருப்தியில் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் மீனா.
அவனிடம் எதுவும் கூறாமல், நடந்து கொண்டிருந்தவள் திடீரென அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் இருந்த திட்டில் தானாகவே அமர்ந்து கொண்டாள்.
சட்டென்று அவனும் நின்றான். செய்வதறியாமல் தானும், அவளை விட்டுச் சிறிது தள்ளி அமர்ந்து கொண்டான்.
ஐந்து நிமிடங்கள் கழித்து, எழுந்து மீண்டும் நடந்தாள். அவள் எழுவதைக் கண்டதும் தானும் எழுந்து கொண்டான்.
கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து, காரில் ஏறிக் கொள்ளும் சமயத்தில் திடீரென பின்னால் இருந்து குரல் ஒன்று கேட்டது.
“ஹலோ மிஸ்டர் சபரி”
இருவரும் நின்றுத் திரும்பிப் பார்த்தனர். ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். மீனாவுக்கு அவர் யாரென்று தெரியவில்லை.
“ஹலோ டாக்டர்!” சிரித்துக் கொண்டே அவரருகே சென்று கையை நீட்டினான் சபரி. இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.
“என்ன மிஸ்டர் சபரி, இதுவரை உங்கள இந்தக் கோவில்ல பாத்ததே இல்லையே! புதுசா இப்ப தான் வந்துருக்கீங்களோ?”
“நோ டாக்டர், நான் வழக்கமா இந்தக் கோவிலுக்குத் தான் வருவேன் டாக்டர்”
என்று கூறி விட்டு “பை தி வே டாக்டர், திஸ் இஸ் மை வொய்ஃப் மீனா”
மீனாவின் புறம் கையைக் காட்டி அவளை அறிமுகம் செய்தான்.
‘ஓ! மனைவின்னு எல்லாம் அறிமுகம் செய்றாரே! சோ, வெளியே தனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட வேற வழியில்லாம மரியாதைக்காக மனைவின்னு சொல்றாரு. அந்த நேரத்தில தன்னோட பழி வாங்குற புத்தியக் காமிக்க முடியல இவருக்கு. ம்ம்?’
யோசனையுடன் அந்த மனிதரைப் பார்த்து, மரியாதை நிமித்தம் அவளும் “வணக்கம்” என்று கூறி அவரை வணங்கினாள்.
“ஓ! உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா மிஸ்டர் சபரி? சொல்லவே இல்லையே! எப்ப ஆச்சு?”
“ஆமா டாக்டர், சடனா ஆனதில யாருக்கும் சொல்ல முடியல. ரிசப்ஷன் கூடிய சீக்கிரம் வைக்கிறதா இருக்கோம் டாக்டர். உங்களுக்குக் கால் பண்ணி இன்வைட் பண்ணுவேன். கண்டிப்பா நீங்க வரணும் டாக்டர்”
“ஓ! அப்படியா? கண்டிப்பா வர்றேன் மிஸ்டர் சபரி. உங்க ரிசப்ஷன் ஃபங்க்ஷனுக்கு எப்படி நான் வராம இருப்பேன்? நீங்க எனக்கு ரொம்ப முக்கியமானவர் ஆச்சே! மிஸ் பண்ணுவேனா உங்க ஃபங்க்ஷனை?”
இதைக் கூறும் போது அவருடைய குரலில் ஒரு மரியாதை தெரிந்தது. மீனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘ஒரு டாக்டர், இவர் கிட்ட இவ்வளவு மரியாதையா பேசுறாரே! முக்கியம்னு வேற சொல்றாரு? இவருக்கு அப்படி என்ன செஞ்சிருப்பார் இவர்?’
அவளுடைய கேள்விக்கான பதில் அப்போதே கிடைத்தது அவளுக்கு.
“அந்த பேஷண்ட் இப்ப எப்படி இருக்கார் டாக்டர்? நல்ல ரெகவர் ஆயிட்டாரா?”
“எஸ் மிஸ்டர் சபரி, நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது அவர் கிட்ட. உங்களுக்குத் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். சரியான நேரத்தில நீங்க அன்னைக்கு ஹெல்ப் பண்ணி இருக்கலேன்னா, அவருக்கு ஆபரேஷன் சரியா நடந்துருக்காமா என்றதே கொஞ்சம் சந்தேகம் தான். ரொம்ப ரிஸ்க் ஆயிருக்கும். நானுமே கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் அந்த நேரத்தில. அந்தக் கடவுள் தான் உங்களை அந்த நேரத்தில அனுப்பி வச்சிருந்து இருக்காரு. தேங்க் காட்!”
மிகவும் உருக்கமான குரலில் கூறினார் அவர்.
“எப்படியோ அவர் இப்ப நல்லா இருக்காரே! அது தான் முக்கியம்” அடக்கமாகக் கூறினான் சபரி.
மீனாவுக்கோ, இவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் தாள முடியவில்லை.
‘இவன் உண்மையிலேயே நல்லவனா கெட்டவனா?’
அவள் நினைத்து முடிப்பதற்குள் அந்த மருத்துவர் அவளைப் பார்த்து பேசினார்.
“என்னம்மா, ஆச்சரியமா பாத்துட்டு இருக்கே? யூ ஆர் வெரி லக்கிம்மா! மிஸ்டர் சபரி மாதிரி ஒருத்தர் உங்களுக்கு வாழ்க்கையில கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.
எஸ்.. ஹீ இஸ் வெரி கைண்ட் ஹார்ட்டட் பெர்ஷன். ஒரு பத்து நாள் முன்னாடி ஒரு பேஷண்ட்டுக்கு சர்ஜரி பண்ற நேரத்தில, அவருக்காக பிளட் டொனேட் பண்றதுக்காக அரேஞ்ச் பண்ணியிருந்த அந்த பெர்ஷன் திடீர்னு மயக்கமாகி கீழே விழுந்துட்டாரு.
அவரையே அட்மிட் பண்ண வேண்டிய நிலைமை. பிளட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான், உங்க ஹஸ்பண்ட், அவங்க அம்மாவ ஒரு நார்மல் செக்கப்புக்காக கூட்டிட்டு வந்திருந்தவர், விஷயத்தைக் கேள்விப்பட்டு, தன்னோட பிளட்டும் அதே குரூப்னு சொல்லி, நாங்க கேட்காமலே டொனேட் பண்றதுக்கு முன் வந்தாரு.
அன்னைக்கு மட்டும் இவர் சரியான நேரத்தில பிளட் கொடுத்து இருக்கலேன்னா, அந்த பேஷண்ட்டோட கண்டிஷன் பெரிய ஆபத்தில முடிஞ்சிருக்கும். இவர நல்ல கெட்டியா புடிச்சுக்கோங்க”
சபரியின் புகழ் புராணத்தை மீனாவிடம் அவர் பாட்டுக்கு மன நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார் அந்த மருத்துவர்.
ஆனால், பெண்ணவளுக்குத் தான் அவற்றை எல்லாம் கேட்டு எந்தப் பெருமிதமும் பட முடியவில்லை.
“டாக்டர் ப்ளீஸ்! நீங்க ரொம்ப ஓவரா சொல்றீங்க. போதும் டாக்டர், வேணாமே!” சபரி அடக்கமாகக் கூறினான் அவரிடம்.
“ஓ!” பெரிதாகச் சிரித்தார் அவர்.
‘அப்பப்பா! என்ன அடக்கம்! என்ன ஒடுக்கம்! செவாலியர் விருதே தூக்கிக் குடுக்கலாம் குடுக்கலாம் போலயே இவருக்கு!’
இதையெல்லாம் பார்க்க பற்றிக் கொண்டு தான் வந்தது மீனாவுக்கு.
‘இவரா நல்லவர்? நல்லா வேஷம் போட்றார் டாக்டர் இவர். படிச்ச நீங்க கூட ஏமாந்துட்டீங்களே இவர் கிட்ட! இவருக்கு உள்ளே இன்னொரு முகம் இருக்கு. அது எனக்கு மட்டும் தான் தெரியும். உங்க கிட்ட எல்லாம் அந்த முகத்தைக் காட்றதுக்கு இவருக்கு இன்னும் சந்தர்ப்பம் வரல. வர்றப்ப தெரியும் உங்களுக்கு. ஷாக் ஆகிடுவீங்க நீங்க!’
பாவம்! மனதிற்குளேயே தான் பேசிக் கொண்டாள் அவள்.
“ஓகே மிஸ்டர் சபரி! நான் வர்றேன். ரிசப்ஷன் எப்பன்னு சொல்லுங்க. கண்டிப்பா வர்றேன்”
விடைபெற்றுக் கிளம்பினார் அந்த மருத்துவர். இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும், காரை ஸ்டார்ட் செய்யாமல் இவள் புறம் முகத்தைத் திருப்பி அமர்ந்து கொண்டான் சபரி.
“என்ன மேடம், இதெல்லாம் பாக்குறப்ப அதிர்ச்சியா இருக்கா? இவ்ளோ பெரிய டாக்டர் இவர்! இவரே இப்படி உன் புருஷன அந்தப் புகழ் புகழ்றாரேன்னு இருக்கா?
கரண்ட்டக் கையில தொடமயே ஆயிரம் வாட்ஸ் உடம்புக்குள்ள ஏறின ஒரு ஃபீலிங் வந்துருக்குமே உனக்கு? இருக்கும், கண்டிப்பா இருக்கும். இப்படி அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியா குடுக்குறேனா உனக்கு?”
நக்கலாகக் கூறியவன் அதே நக்கல் கலந்த ஒரு பார்வையில் பார்த்தான் அவளை.
பெண்ணவளோ, முகத்தில் எந்த ஒரு உணர்வும் இன்றி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஏன், இவங்க எல்லாம் நீங்க செட்டப் பண்ண ஆளுங்களா?’ பாவம், இதையும் எப்போதும் போல் மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.
“யூ நோ ஒன் திங்க் மிசஸ் மீனா?” அழுத்தமாகப் பார்த்தான் அவளை.
இப்போதும் எந்த உணர்ச்சியும் இன்றி அதே நிலையில் இருந்தாள் அவள். ஆனால் மனதில் மட்டும் கொஞ்சம் ஆர்வம் எட்டிப் பார்த்தது.
‘அப்படி என்ன சொல்லப் போறான் இவன்?’ யோசித்தாள்.
“ஆக்ட்சுவலி நான் ரொம்ப, ரொம்ப நல்லவன் தெரியுமா. ஆனா அது உன் கிட்ட இல்ல”
ஆள்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டி இருந்தான்.
“உனக்கு, உனக்கு மட்டும் நான் என்னைக்குமே கெட்டவன் தான். அண்டர்ஸ்டாண்ட் பேபி?”
இதைக் கூறும் போது அவனுடைய முகத்தில் அவ்வளவு வெறுப்பு தேங்கி நின்றிருந்தது.
அவனுடைய அந்த முகத்தைக் கண்டு இன்னும் அதிர்ந்தாள் அவள்.
‘என் மேலே இவனுக்கு இவ்வளவு கோவமும் வெறுப்பும் வந்ததுக்கான காரணத்தை நான் எப்படித் தெரிஞ்சிக்கறது? எப்படியும் இவன், தானா எல்லாம் எதுவும் சொல்லப் போறதில்ல என் கிட்ட. அதுதான் சொல்லாம என்னைப் பைத்தியமாக்கப் போறதா தான் இவனே சொல்லிட்டானே!
அதனால இனிமே இவன் கிட்ட கெஞ்சுறது வேஸ்ட். நானே தான் கண்டுபிடிக்கணும். கண்டுபிடிக்கிறேன்!’
யோசிக்க ஆரம்பித்தாள் மீனா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கண்டிப்பா நாங்களும் காரணத்தை தெரிஞ்சுக்கணும்
மிக்க நன்றி 😊
கோவிலுக்குள் அவளை அன்னியப்படுத்தவும் முடியாமல், அவளுக்கான உரிமையையும் அளிக்கமுடியாமல் திணறுகிறான்.
அவளுக்கு மட்டும் கெட்டவன் அவதாரம்.
அவனது வெறுப்புக்கான காரணத்தை அவளே அறிய முனைவது நல்லது.
மிக்க நன்றி 😊
எதுக்கு இப்படி நடந்துக்கிறான்?
மிக்க நன்றி 😊
பொண்டாட்டியை தவிர மீதி எல்லாரிடமும் நல்லவனா தான் இருக்கான்.
இவனைப் போன்றவருக்கு தான் வீட்டுல புலி வெளியில எலி என்பார்களோ…
அட அட அட செவாலியே அவார்டு கூட தரலாமாம் இவர் நடிப்புக்கு.
நம்ம நடிகர் திலகத்தையே முந்தி விட்டார். பாருங்கடா…
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி 😊