
அத்தியாயம் -10
புது மருமகள் மீனாவின் சமையலை ருசி பார்த்த மாலதி, அவளை ஒரேடியாகப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்.
மாமியார் தன்னை வாயாரப் புகழ்வதைக் கண்டு மீனாவின் முகத்தில் சந்தோஷச் சிரிப்பு பொங்கி வழிந்து கொண்டு இருந்ததே.
அதைத் தன் அறையில் இருந்து பார்த்து விட்டு, மனதில் வெகுண்டான் சபரி.
‘இது சரியில்லையே! கொஞ்சம் கூட நல்லதே இல்ல. உடனே நிறுத்தணும் இத. இவ முகத்தில சிரிப்பே இருக்கக்கூடாது, சுத்தமா அத நிறுத்தணும்னு நான் இங்கே நினைச்சிட்டு இருந்தா, இங்கே இவ இப்படிச் சிரிச்சுட்டு இருக்காளே!
அதுக்குக் காரணம் என்னோட அம்மாவும் அப்பாவும்! ம்ம்.. இவளோட முகத்தில இருக்கிற இந்தச் சிரிப்பு காணாமப் போகணும். அதுக்கு நான் என்ன செய்யணும்?’
அதற்கு வழியைத் தேட ஆரம்பித்து இருந்தான் சபரி. அவன் முகத்தில் குரூரம் பொங்கி வழிந்தது.
‘அம்மா கிட்டேயும் அப்பா கிட்டேயும் மீனா நல்ல பெயர் வாங்கிட்டான்னா, நான் இல்லாத நேரத்தில அவ இந்த வீட்டில சந்தோஷமா தானே இருப்பா! அது எப்படி இவ சந்தோஷமா இருக்கலாம்?
இவளப் பத்தி அப்பா அம்மா கிட்ட எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் இருக்கக்கூடாதுன்னா, அவங்க கிட்ட ஏதாவது சொல்லி இவளப் போட்டுக் குடுக்கணுமே என்று யோசித்தவாறு அறையை விட்டு வெளியே வந்தான் சபரி.
சமையல் அறையில் மருமகளிடம் பேசிக் கொண்டே திரும்பிப் பார்த்த மாலதி, மகன் உணவு மேஜைக்கு வருவதைக் கண்டதும்,
“இதோ சபரி கூட வந்துட்டானே! எல்லாம் எடுத்து முன்னாடி மேஜையில கொண்டு வந்து வைம்மா மீனா. உன் மாமாவும் வந்துருவார் இப்ப. ரெண்டு பேரும் சாப்பிடட்டும்”
மருமகளிடம் கூறியவாறு சிரித்த முகத்துடன் முன்னால் இருக்கும் உணவு மேஜைக்கு நடந்தார்.
“வாடா சபரி, உன் பொண்டாட்டி ரொம்ப நல்லா சமைக்கிறா தெரியுமா? அவ்வளவு டேஸ்டா இருக்கு” மருமகளின் புகழாரத்தைப் பாடினார் மகனிடம்.
“ஆமாம்மா, சமையல் செய்றதுன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டமாம்மா. அவ வீட்டிலேயும் அவ தான் சமையல் செய்வாளாம். அதனால இனிமே நீங்க எல்லா வேலையையும் உங்க மருமக கிட்ட ஒப்படைச்சிட்டு பேசாம ரெஸ்ட் எடுங்க. எல்லாத்தையும் அவளே பாத்துப்பா”
என்று இல்லாததையும் சேர்த்து தன் அம்மாவிடம் பிட்டு போட்டான். பேசியபடி திரும்பி மனைவியைப் பார்த்தான்.
‘என்னது.. எங்க வீட்ல நான் தான் சமையல் செய்தேனா? நான் எப்ப அப்படி சொன்னேன் இவர் கிட்ட? எதுக்காக இப்ப இந்தப் புகழ்ச்சி?’ யோசித்துக் கொண்டிருந்தாள் மீனா.
“என்ன மீனா, நான் சொல்றது சரி தானே? இனிமே அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு எல்லாத்தையும் நீயே பொறுப்பா பாத்துப்பேல்ல?” என்று கேட்டான்.
அவனுடைய குரலைக் கேட்டதும் சட்டென கவனம் கலைந்தாள்.
“ம்ம்.. ம்.. பா.. பாத்துப்பேங்க”
தன்னிடம் கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள் மீனா.
அவன் வார்த்தையில் தெரிந்த கனிவும் குழைவும் ஆச்சரியப் படுத்தின அவளை.
‘அப்பப்பா! நேத்து நைட்டு பேசின அதே ஆள் தானா இவரு? வார்த்தையில என்ன ஒரு கனிவு, என்ன ஒரு பரிவு? சரிதான்!’
நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
ஆனால் உண்மையில் அவன் கூறியதின் உண்மையான அர்த்தமே வேறு என்பது அப்போது அளவுக்குப் புரியவில்லை.
“அதுசரி, இப்ப தானே வந்துருக்கா. அதுக்குள்ள பொறுப்பு கிறுப்புன்னு சொல்லி அவளைப் பயமுறுத்தாதேடா” மகனிடம் அவசரமாகக் கூறினார் மாலதி.
உண்மையிலேயே மீனா தன்னைத் தவறாக எடுத்துக் கொண்டு விடக்கூடாது என்கிற ஒரு அவசரம் தெரிந்தது அதில்.
“ஏண்டா சபரி, நீ குளிச்சிட்டே தானே?”
“ஆமாம்மா குளிச்சிட்டேன். இன்னுமா குளிக்காம இருப்பேன்? நான் ஆஃபிசுக்குப் போக வேண்டாம்? ஏன் எதுக்கு கேக்குறீங்க?”
“என்னது, ஆஃபிஸ் போறியா? ஏண்டா, அப்படி என்ன இன்னைக்கும் உனக்கு ஆஃபிஸ் வேண்டிக் கிடக்கு?”
“ஏன் இன்னைக்கு என்ன விசேஷம்? நான் ஏன் லீவு போடணும்?”
“டேய், உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆயிருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா?”
“ஆமாம்மா.. ஆனா திடீர்னு தானேம்மா நடந்துச்சு. அது எப்படி ஆஃபிசுக்குத் தெரியும்?”
“சரி, அப்ப தெரியலேன்னா என்ன? நீ இப்ப சொல்ல வேண்டியது தானே? அப்படியே லீவும் சொல்லிரு”
“அதெல்லாம் முடியாதும்மா. இன்னைக்கு ஒரு இம்பார்டண்ட் மீட்டிங் வேற இருக்கு. லீவெல்லாம் போட முடியாது என்னால”
“இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு வரணும்டா சபரி. அதுதான் உன் கிட்ட சொல்லச் சொல்லி மீனா கிட்ட சொல்லி அனுப்பினேனே. அவ சொல்லல உன் கிட்ட?”
இவ்வளவு நேரம் அம்மாவும் மகனும் பேசிக் கொண்டு இருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மீனா, இப்போது அவசரமாக அவர்களுக்கு நடுவில் வந்து பதில் சொல்ல எத்தனித்தாள்.
“நான் சொ..சொன்..”
அவளை எப்படி மாட்டி விடலாம் என்று சந்தர்பத்திற்காக காத்திருந்தவனின் புத்தியில் உடனே ஒரு திட்டம் உருவாகி விட்டது.
பதில் சொல்ல முயன்றவளைப் பேச விடாமல் அவளை முந்திக் கொண்டு பதில் கூறினான் சபரி.
“என்னது.. மீனாவ என் கிட்ட சொல்லச் சொன்னீங்களா?” எதுவுமே தெரியாதது போல் ஆச்சரியமாகக் கேட்டான்.
“ஆமாங்க.. நான் தான் சொ..”
பேச வந்தவளைக் சற்றும் கவனியாதது போல், மீண்டும் அவனே பேசினான்.
“இல்லையேம்மா.. என் கிட்ட அவ எதுவுமே சொல்லலையே! கோவிலுக்குப் போகணும் என்ற விஷயமே இப்ப நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும்”
தன் அம்மாவிடம் கூறி விட்டு மனைவியிடம் திரும்பினான்.
“ஏன் மீனா, அம்மா சொன்னாங்களா? அப்படின்னா ஏன் நீ என் கிட்ட சொல்லவே இல்ல? ஒரு விஷயத்த என் கிட்ட சொல்லச் சொல்லி அனுப்பினா, அதை நீ அப்பவே சொல்றது இல்லையா என் கிட்ட? ஏன் இப்படி பண்றே?”
அவளையே பார்த்தவாறு கேட்டான். மீனாவுக்கோ எதுவும் புரியவில்லை.
‘இதென்ன! இவர் ஏன் இப்படி பொய் சொல்றாரு? நான் சொன்னதுக்கு, இப்ப உன் கூட ஜோடியா வேற போகணுமான்னு எரிஞ்சு எல்லாம் விழுந்தாரே!’
குழப்பமான முகத்துடன் பார்த்தாள் அவனை.
அதற்குள் மாலதி, மீனாவை இலேசான ஒரு கோபம் கலந்த பார்வையுடன் பார்த்தார்.
“ஏம்மா, நான் தான் உன் கிட்ட அத்தனை தடவை சொல்லி அனுப்பினேனேம்மா! ஆனா நீ எதுவுமே அவன் கிட்ட சொல்லவே இல்ல பாரு. கடைசி நேரத்தில சொன்னா அவனுக்குப் பிடிக்காதுன்னு கூட நான் சொன்னேனே உன் கிட்ட. அப்பவும் சொல்லாம வந்துருக்கே. என்ன பொண்ணோ போ”
அவள் மேல் அவருக்கு ஒரு அதிருப்தி வந்து விட்டது என்பதை அவருடைய பேச்சில் அப்பட்டமாகவே தெரிந்தது மீனாவுக்கு.
மீனாவோ மனம் வலிக்க தன் கணவனைப் பார்த்தாள்.
‘இதென்ன, நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிட்டே இருக்காரே இவர்! இப்ப தான் என்னமோ அவ்வளவு நல்லா பேசினாரு. அதுக்குள்ள இப்படி மொத்தமா மாறிட்டாரு! நான் முழுப் பூசணிக்காயை சோத்தில மறைச்ச மாதிரி நான் சொன்ன விஷயத்தையே இல்லேங்குறாரு! ஒருவேளை நான் சொன்னத மறந்து போயிருப்பாரோ!’ குழப்பம் தான் நீடித்தது அவளுக்கு.
இதை அப்படியே விட வேண்டாம் என்று அவனிடமே கேட்டு விட வேண்டும் என்கிற முடிவோடு கோபத்துடன் திரும்பினாள்.
“ஏங்க, கோவிலுக்குப் போற விஷயத்த நான் உங்க கிட்ட சொல்லல? நான் சொன்னதுக்கு நீங்க, இது வேறயான்னு எரிஞ்சு விழுந்தீங்களே! மறந்து போச்சாங்க உங்களுக்கு? நான் சொல்லவே இல்லேன்னு சொல்றீங்க?” கேட்டே விட்டாள்.
“என்ன சொல்றே மீனா நீ? நீ எப்ப சொன்னே? ஏன் இப்படி பொய் சொல்றே?”
அவன் இப்படி மீண்டும் பழியை அவள் மேலேயே திருப்பியதும், தான் கூறியதை எப்படி நிரூபிப்பது என்று அவளுக்குப் புரியாமல் குழப்பம் தான் மிஞ்சியது அவளுக்கு.
அதற்குள் இருவரின் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த மாலதி, மகனைப் பரிந்து கொண்டு வந்தார்.
“மீனா, ஏம்மா இப்படி பொய் எல்லாம் சொல்றே? அப்படி என்ன அவசியம் வந்துச்சு? இது நல்லது கிடையாதும்மா. தயவு செஞ்சு இந்தப் பழக்கத்த மாத்திக்கோ” என்று கொஞ்சம் கடுமை நிறைந்த குரலில் கூறினார்.
மீனாவுக்கு எப்படியோ ஆகி விட்டது. கண்களில் இலேசாக கண்ணீர் திரள, பார்த்தாள் சபரியை.
அவனோ ஒரு எகத்தாளச் சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘பாத்தேல்ல.. ஜாக்கிரதை. இந்த வீட்டில நீ சொல்றத யாரும் நம்ப மாட்டாங்க. நான் சொல்றதத் தான் நம்புவாங்க. புரிஞ்சுதா?’
அவனுடைய பார்வை இதைத் தான் உணர்த்தியது அவளுக்கு. அதற்குள் மாலதி மீண்டும் மகனிடம் வந்தார்.
“சரிடா, அவ சொல்லலன்னா என்ன? அதுதான் இப்ப நான் சொல்றேனே! கோவிலுக்கு இன்னைக்கு போயித் தான் ஆகணும். லீவு கேட்டுத் தான் பாரேண்டா சபரி”
மாலதி மறுபடியும் மகனிடம் கூறினார் ஒரு கெஞ்சலுடன்.
அதற்குள் அங்கு சீனிவாசனின் குரல் கேட்டது.
“என்ன, என்ன பிரச்சினை நடக்குது இங்கே? யாரு என்ன சொல்லல?”
தன் அறையில் இருந்து அப்போது தான் குளித்துத் தயாராகி வெளிப்பட்டார் சீனிவாசன்.
“அது ஒன்னும் இல்லேங்க. கல்யாணம் முடிஞ்ச மறுநாள், மாப்பிள்ளையும் பொண்ணும் கோவிலுக்குப் போயிட்டு வர்றது நம்ம சம்பிரதாயம் தானேங்க! அது சொன்னா, இவன் இன்னைக்கு ஆஃபிசுக்குப் போயே ஆகணும்னு சொல்றான். உங்க மருமகளும் என்னடான்னா, காலையில டீ கொண்டு போயி குடுக்குறப்பவே, கோவிலுக்குப் போகணும்னு உன் புருஷன் கிட்ட சொல்லிருன்னா எத்தனை தடவை சொல்லி அனுப்பியும் இவ சொல்லவே இல்ல. நீங்களே உங்க பையன் கிட்ட சொல்லுங்க” என்று மகனைப் பற்றியும் மருமகளைப் பற்றியும், கணவனிடம், நீளமாக குற்றப் பத்திரிகை வாசித்தாள் மாலதி.
“அப்படியா? ஏன்பா சபரி, இன்னைக்கு ஒரு நாள் உன்னால லீவு போட முடியாதாப்பா? நீ அவசரமா திடீர்னு கல்யாணம் பண்ணிகிட்டே என்றதுக்காக, நம்ம சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் செய்யாம விட முடியுமாடா?”
“சரிங்கப்பா, ஆஃபிஸ்ல லீவு கேட்டுப் பாக்குறேன்”
“ம்ம்.. இப்ப வழிக்கு வந்தியா? உனக்கு எல்லாம் சொல்றவங்க சொன்னா தாண்டா சரி!”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லேம்மா. உங்க கிட்டேயும் சொல்லத்தான் வந்தேன். நீங்க இன்னும் கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தீங்கன்னா நான் அப்பவே ஆபீசுக்கு மெயில் பண்ணி விட்ருப்பேன். இப்ப லேட் ஆயிடுச்சு பாருங்க. அது தான் கோவம் வந்துச்சு எனக்கு”
மிகவும் எதார்த்தமாகப் பேசுவது போல் தன் அன்னையிடம் கூறினான் சபரி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வில்லன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்
மிக்க நன்றி 😊
தான் இருக்கும் போது மட்டும் இல்லாமல் இல்லாத போதும் அவள் சந்தோசமாக இருந்து விட கூடாது என்ற எண்ணம்.
இப்போ தான் அவ கொஞ்சமா அவங்க மனசுல நுழைஞ்சா அதுக்குள்ள அவ மேல் பொய் சொல்றா, பொறுப்பு இல்லைனு போலி பிம்பத்தை உண்டு செய்யரான்.
உண்மைய சொன்னா நம்பாமல் அவளை குற்றவாளி ஆகிட்டாங்க கடைசியில். எப்படி எல்லாம் யோசிச்சு செயல்படுறான் சபரி. கில்லாடி வில்லன் தான்.
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
கட்டிய மனைவி பெற்றோரிடம் பாசமாக இருப்பது பிடிக்காமல் பற்ற வைத்து விட்டான்.
பாவம் அவள், செய்யாத தப்புக்கு முதல் நாளே அவமானப்படுத்தி விட்டான்.
மாமியாரே, உங்க மகன் சொன்னால் உடனே மருமகள் மீது கோபம் வந்துடுமா? அதை சாதாரணமா முகச்சுணக்கம் இல்லாம சொல்ல தெரியாதா?
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊