
நான் அவள் இல்லை
அத்தியாயம் -1
அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டம் ஒரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது, அந்தக் காலை நேரத்தில். இனிமை நிறைந்த மேள இசையின் ஒலி கேட்பதற்குப் பதிலாக மனிதர்களின் பதட்டம் நிறைந்த குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அங்கு.
வாத்தியக் கருவிகளை வைத்து அவ்வளவு நேரம் கண்களை மூடி ஒரு வித இரசிப்புடன் முழங்கிக் கொண்டிருந்த வாத்தியக்காரர்கள் அங்கு நடக்கும் களேபரத்தைக் கண்டு இசைப்பதை ஒவ்வொருவராக நிறுத்திக் கொண்டே வந்தனர்.
தொடர்ந்து வாசிக்கலாமா கூடாதா என்பது தெரியாமல் செய்வதறியாதுச் சங்கடத்துடன் ஒருவருக்கொருவர் தங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டனர்.
மணமக்களின் குடும்பத்தினரோ அனைவரும் அங்கும் இங்கும் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தனர்.
திருமணத்தை வேடிக்கை பார்க்க வந்த உற்றார் உறவினர்களோ, குடும்பத்தினரின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகத்துடன் ஒருவருக்கொருவர் காதில் கிசுகிசுவெனப் புரளி பேசிக் கொண்டு இருந்தனர்.
“ஏங்க்கா, என்னாச்சு? கல்யாணம் நடக்குமா இல்லையாக்கா?”
“அதுதான் கல்யாணி எனக்கும் சந்தேகமா இருக்கு. இங்கே நடக்குறதப் பாத்தா எதுவும் சரியாப்படல எனக்கு. பிரச்சினை என்னன்னும் ஒன்னும் தெரியலையே!”
“ஒருவேளை மணப்பொண்ணு வேற யார் கூடவாவது ஓடிப் போயிட்டாளோ?”
“தெரியலேடி எதுவும். வந்ததில இருந்து உன் கூடத் தானே நானும் உக்காந்து இருக்கேன். ஆனா ஒரு பக்கம் நீ சொல்ற மாதிரி தான் நடந்துருக்கும்னு தோணுது”
“எப்படியும் விஷயம் வெளியே வராமேயா போகும்? வந்து தானே ஆகணும்? இன்னும் கொஞ்ச நேரத்தில பிரச்சினை என்னன்னு தெரியப் போகுது. அதுவரை உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியது தான்”
“ஆமாமா, நீ சொல்றது சரி தான். விஷயத்தை எவ்வளவு நேரம் மூடி மறைக்க முடியும்?”
வந்திருந்தவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகி விட்டது. இஷ்டத்திற்கு ஒவ்வொரு கதையாகத் திரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.
பாதி மண்டபம் நிறைந்து இருந்தது. இன்னும் ஒரு சில உறவினர்கள், நண்பர்கள், திருமண நிகழ்ச்சிக்காக என்று மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மண்டபத்தின் வாயில்படி ஏறும் போதிருந்தே, அங்கு திருமணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாதததைக் கண்டு, தாங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கிறோமா என்று அவர்களுக்குச் சந்தேகமே வந்து விட்டது.
“என்னங்க, மண்டபத்திலே எந்தச் சத்தத்தையும் காணோம்? சரியான இடத்துக்குத் தான் வந்துருக்கோமா நாம? மாறி கீறி வந்துடலையே?”
“அதெல்லாம் சரியா தான் வந்துருக்கோம் சொர்ணம். ஆனா, கல்யாணம் நடக்கப் போறதுக்கான எந்த ஒரு சத்தத்தையும் காணோமே! என்னன்னு ஒன்னும் புரியல. உள்ளே போயி பாப்போம் வா”
“கல்யாணம் ஒருவேளை நின்னு போயிருக்குமாங்க?”
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடந்த சம்பாஷணை தான் இது. அவர்களின் பேச்சுக்களில் தான் எத்தனை உற்சாகம்!
இந்த மனிதர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒரு இடத்தில் எதிர்மறை விஷயம் ஏதாவது நடந்து விட்டது என்றால் அது வெளியே தெரிவதற்கு முன்பிருந்தே அரசல் புரசலாக, ஒன்றிற்கு நான்காக திரித்து எப்படி எல்லாம் பேசி விடுகிறார்கள்!
அதுவும் அடுத்த வீட்டில் எப்போது ஒரு கெட்ட செய்தி நடக்கும் என்று காத்திருப்பது போல் அல்லவா இருக்கின்றனர்?
அந்தக் கணவனும் மனைவியும் வேகமாக ஆர்வமாக உள்ளே சென்றனர், எதுவும் தங்களுக்குத் தெரியத் தவறி விடக்கூடாதே என்று நினைத்தபடி.
மணப்பெண் மீனாவின் தாயார் ரேணுகா, கண்களில் கண்ணீர் திரள, மணப்பெண்ணின் அறைக்கு முன்பு நின்றிருந்தார்.
அவரருகே அவருடைய கணவர், மீனாவின் தந்தை சுந்தரம் மனைவியைச் சாந்தப் படுத்துவதா, இல்லை தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வதா என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தவாறு, எரிகிற தீயில் நிற்பது போல் நெஞ்சம் பதைபதைக்க நின்று கொண்டிருந்தார்.
“இப்ப என்னங்க பண்றது? இப்படி ஆயிடுச்சேங்க!”
“என்ன பண்ணச் சொல்றே ரேணுகா? இந்த மாதிரி ஒன்னு நடக்கும்னு நாம என்ன எதிர்பாக்கவா செஞ்சோம்? எல்லாம் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?”
அப்போது வெளியே தந்தையும் தாயும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு, அறையின் உள்ளிருந்து மணப்பெண் மீனா, வேகமாக எழுந்து அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அவளுக்கு என்னவோ அவளுடைய தாய் தந்தையைப் பார்த்து, சரியாகப் படவே இல்லை.
ஏதோ ஒரு பிரச்சினை நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதைத் தான் அவளால் அனுமானிக்க முடியவில்லை.
அதற்குள் மகளைப் பார்த்து விட்ட ரேணுகா, சட்டென்று கண்களில் திரண்டு நின்றிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
தன் அம்மா, தனக்குத் தெரியக்கூடாது என்று அவசரமாக கண்ணீரைத் துடைப்பதைக் கண்டு, அதிர்ந்து விட்டாள் மீனா.
‘இதென்ன, இன்னும் கொஞ்ச நேரத்தில எனக்குக் கல்யாணம் ஆகப் போகுது. என் கழுத்தில தாலி ஏறப் போற இந்த நேரத்தில அம்மா எதுக்கு அழணும்?’
சிந்தனையுடன் தந்தையைப் பார்த்தாள். அவரோ இவள் பார்வையைத் தவிர்க்க, வேண்டுமென்றே கவனிக்காதது போல் திரும்பிக் கொண்டார்.
“அப்பா.. என்னப்பா?” மனம் தாளாமல் கேட்டாள் மீனா.
அவரோ பதில் எதுவும் கூறாமல் மனைவியைப் பார்த்தார்.
“அம்மா.. என்னம்மா நடக்குது இங்கே? எனக்கு எதுவும் புரியல. ஏதாவது பிரச்சனையாம்மா?”
“அது.. இல்லையே! என்ன பிரச்சினை? எதுவும் இல்லே மீனா”
“ம்மா.. இப்ப ஒழுங்கா சொல்லப் போறீங்களா இல்லையா? பணம் ஏதாவது பத்தலையாம்மா? கடைசி நேரத்தில ஆகாஷ் வீட்டில வரதட்சணை எதுவும் கேக்குறாங்களாம்மா?”
“அதெல்லாம் இல்லேடி மீனா”
“அப்படின்னா வேற என்ன? உங்க ரெண்டு பேரோட முகம் கொஞ்சம் கூட சரியே இல்ல. இப்ப என்னன்னு சொல்லப் போறீங்களா இல்லையா? அப்பா, நீங்களாவது சொல்லுங்கப்பா”
இரண்டு பேருக்கும் இப்போது வேறு வழியில்லை. மகளிடம் உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்கிற ஒரு நிலைமைக்கு வந்து விட்டிருந்தனர்.
“என்னங்க, சொல்லிருவோங்க மீனா கிட்ட. எப்படியும் அவளுக்குத் தெரிஞ்சு தானே ஆகணும்! எவ்வளவு நேரம் மறைக்க முடியும் சொல்லாம? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க அவ கிட்ட”
குரல் நடுங்க கணவரிடம் கூறினாள் ரேணுகா.
அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு மேலும் கொஞ்சம் பதட்டம் ஆகி விட்டது மீனாவுக்கு.
“என்னம்மா, என்னென்னமோ சொல்றே? அப்படி என்ன பிரச்சினை? சீக்கிரம் சொல்லுங்க யாராச்சும்”
“மீனா, இப்ப நான் சொல்லப் போறதைக் கேட்டு நீ ஷாக்காயிடாதேம்மா. மனச கொஞ்சம் திடமா வச்சுக்கோ கேக்குறதுக்கு”
இந்த அளவு பலமான பீடிகை போடும் தந்தையை, குழப்பத்துடனும் ஒருவித பயத்துடனும் பார்த்தாள் மீனா.
‘இப்படி ஒரு வார்னிங் குடுக்குற அளவுக்கு அப்படி என்ன தான் நடந்துருக்கும்?’ நெற்றியில் வரி வரியாக குழப்ப ரேகைகள் படிந்தன மீனாவுக்கு.
“மா.. மாப்பிள்ளையக் காணோம்மா. மண்டபத்தை விட்டு ஓடிப் போயிட்டதா பேசிக்கிறாங்கம்மா மீனா!”
ஒருவாறு மகளிடம் விஷயத்தைக் கூறி விட்டுத் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயைப் பொத்தி அழ ஆரம்பித்தார்.
அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்று விட்டாள் மீனா.
‘எ..என்னது? ஆகாஷ், என் கூட கல்யாணம் வேணாம்னு மண்டபத்தை விட்டு ஓடிப் போயிட்டாரா? எப்படி? அதெப்படி முடியும் அவரால? சான்சே இல்லையே!’
“அப்பா.. என்னப்பா சொல்றீங்க? ஆகாஷ் அப்படி ஒரு காரியத்தைச் செய்றதுக்குக் கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லேப்பா. நேத்து நைட் கூட என் கிட்ட பேசினாரேப்பா. அப்புறம் எப்படிப்பா? கண்டிப்பா இது உண்மையா இருக்காது. நல்லா விசாரிங்கப்பா. ஃபிரண்ட்ஸ் கூட வெளியே எங்கேயாவது போயிருக்கப் போறாருப்பா. இப்ப வந்துருவாரு. அதுக்குள்ள நீங்களா எதுக்கு கண்டதையும் கற்பனை பண்ணிக்கிறீங்க?”
அப்போது அங்கு அவசரமாக ஓடி வந்தனர் மீனாவின் அண்ணன் நவீனும் அவனுடைய மனைவி அர்ச்சனாவும்.
இருவருடைய முகத்திலும் திட்டுத் திட்டாக வியர்வை அப்பி இருந்தது. அத்துடன் அதில் பதட்டமும் ஏமாற்றமும் ஒட்டி இருந்தது.
மகனின் முகத்தைப் பார்த்தே விஷயத்தைக் கிரகித்து விட்டார் சுந்தரம்.
“என்ன நவீன், மாப்பிள்ளையப் பத்தின தகவல் எதுவும் தெரிஞ்சதாடா?”
“இல்லேப்பா.. எதுவும் தெரியல. ஒரு மணி நேரமா வண்டியில எங்கெங்கே அலைய முடியுமோ அலைஞ்சுப் பாத்துட்டோம்பா. எங்கேயும் கண்ணிலேயே படல”
அவனைத் தொடர்ந்து அவனுடைய மனைவி அர்ச்சனாவும் கூறினாள் தன் பங்குக்கு.
“ஆமா அத்த. விஷயம் தெரிஞ்சவுடனேயே கிளம்பிட்டோம். அதுக்குள்ள எங்கே போயிருப்பாரு? அது நினைச்சுத் தான் எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு”
இவ்வளவு நேரம் அமைதியாக வாய்க்குள்ளேயே அழுது கொண்டிருந்த ரேணுகா, இப்போது வாய் விட்டுப் புலம்ப ஆரம்பித்தார்.
“போச்சு போச்சு! எல்லாம் போச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில நடக்க வேண்டிய நம்ம பொண்ணு கல்யாணம் மட்டும் இப்ப நடக்காம நின்னு போச்சுன்னா அப்புறம் என் பொண்ணை யாரு கட்டிப்பா? இந்த ஜென்மத்தில அவ கழுத்தில தாலி ஏறுமான்றதே சந்தேகமாச்சே! அப்புறம் என் பொண்ணோட நிலைமை?”
புலம்பிக் கொண்டு சத்தமாகவே அழ ஆரம்பித்து விட்டார்.
“அய்யோ அம்மா! நீ கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா? ஆகாஷ் அப்படி எல்லாம் எதுவும் செஞ்சிருக்க மாட்டார்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னன்னா அதுக்குள்ள அவ்வளவு தூரம் போயிட்டே! மொதோ உன் அழுகைய நிறுத்தும்மா”
தன் அம்மாவிடம் சத்தம் போட்ட மீனா, திரும்பி தன் அண்ணனைப் பார்த்தாள்.
“அண்ணே, நீ சொல்லு. அம்மாவும் அப்பாவும் ஆகாஷ் பத்தி கண்டது எல்லாம் சொல்றாங்க. அதெல்லாம் நிஜமா? என்ன நடந்தது?”
தன் அண்ணனிடம் இருந்து எந்த ஒரு எதிர்மறையான பதிலும் வந்து விடக்கூடாதே என்கிற ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்தாள் அவனை.
நீண்டதொரு பெருமூச்சு விட்டபடி, கவலை தோய்ந்த முகத்துடன் தங்கையைப் பார்த்தான் நவீன்.
“ஆமா மீனா, அம்மா அப்பா சொல்றது நிஜம் தான். ஒரு மணி நேரமா ஆகாஷைக் காணோம். மண்டபத்த விட்டு ஓடிப் போயிட்டதா சொல்றாங்க”
மீனாவால் இதைச் சிறிதும் நம்ப முடியவில்லை.
“யாருண்ணே சொன்னது இதை?”
“ஆகாஷோட அப்பா தான் சொன்னாரும்மா”
“உங்க கிட்ட வந்து சொன்னாரா?”
“ஆமா மீனா.. அப்பா மட்டும் தனியா நின்னுட்டு இருந்தப்ப வந்து சொல்லி இருக்காரு. அவரே வந்து சொன்னப்புறம் அதில எப்படிம்மா உண்மை இல்லாம இருக்கும்?”
“இல்லேண்ணே. எனக்கு இதில சுத்தமா நம்பிக்கை இல்ல. நல்லா விசாரிச்சாராமா அவரு? இப்ப அவங்க எங்கே? போயி பாக்கலாம் வாங்க. எதை வச்சு ஆகாஷ் ஓடிப் போனதா சொல்றாருன்னு கேக்கலாம் வாங்க” நம்பிக்கையுடன் கூறினாள் மீனா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான ஆரம்பம்.
மீனாவின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஆகாஷ் வந்து விடுவானா பார்ப்போம்..
மிக்க நன்றி சகோதரி 😊
பரபரப்பான தொடக்கம் … பாவம் மீனா … என்ன நடந்திருக்கும் 🤔
மிக்க நன்றி சகோதரி 😊 கதையைத் தினமும் தொடர்ந்து வாசியுங்கள்.
பரபரப்புடன் கூடிய தொடக்கம்.
வார்த்தைகளின் கோர்வை நேர்த்தியாக உள்ளது. கதையின் போக்கில் இனிதே பயணிப்போம்.
படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼
மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி 😊