
அத்தியாயம் 1
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள்
பெற்றவ ளாமே
தன் காதில் விழுந்த கந்த சஷ்டி கவசத்தின் துணையால் உறக்கம் கலைந்து விழி திறந்தான் அபிமன்யு. மீண்டும் மூடச் சொல்லி விழிகள் கெஞ்ச துவங்கியது அவனிடம். இரவு தாமதமாக உறங்கியதால் எரிச்சலாகவும் இருந்தது. மறுபடியும் விழி மூட ஓர் அழகிய பிம்பம் விழித்திரையில் தெரிந்தது.
அவனது கைகள் அனிச்சையாக பக்கத்தில் தடவிப் பார்க்க அங்கிருந்த வெறுமை மனதைச் சுட்டது. அவனது மனசுக்குள் அந்த வெறுமை குடியேறி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதன் பிறகு அவனுக்கு தூக்கம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் எழுந்தவன் மாடிக்கு சென்றான். பக்கத்தில் தெரிந்த முருகன் கோவில் கோபுரம் அவன் மனதை சற்று ஆறுதல் படுத்தியது. இன்னும் கந்த சஷ்டி கவசம் முடியவில்லை. ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
உண்மையிலே அவன் செய்த பிழைகள் தான் எத்தனை? அதற்கான தண்டனைதான் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தான். வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்தது. ஆனால் அவன் வாழ்க்கை மட்டும் இன்னும் கும்மிருட்டில்.
கீழே வந்தவன் கதவைப் பூட்டி விட்டு வெளியே சென்றான். கால்கள் ஓயும் வரை கடற்கரையில் நடை பயின்றவன் வெயில் சுள்ளென்று முகத்தில் பட்ட பின்பே வீட்டுக்கு சென்றான்.
நேராக கிச்சனுக்குள் சென்றவன் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தபடி காபி குடிக்க ஆரம்பித்தான்.
பின் குளித்துவிட்டு எப்போதும் போல் ஆபிசுக்கு சென்றான். இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தவனை பார்த்து அனைவரும் காலை வணக்கம் சொன்னார்கள். அவனும் சின்ன தலையசைவுடன் ஏற்றுக் கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டான். அபிமன்யு என்ற பொன்னிற எழுத்துக்களால் ஆன பெயர் பலகை அவனது டேபிளில் மின்னிக் கொண்டிருந்தது. வந்தவன் வேலைகளை பார்க்க தொடங்கி விட்டான். புதுப் புராஜெக்ட் கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. டீம் லீடரை அழைத்தவன் தன் அறைக்கு வந்து போகச் சொன்னான்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்றபடி வந்தான் அதிசயன்.
“உள்ளே வாடா எருமை என்ன புதுசா பர்மிசன் எல்லாம் கேக்குற” என்றான் அபி.
“என்ன இருந்தாலும் நீங்க எனக்கு மேல இருக்குற பாஸ் அதான் மரியாதை…”
“மண்ணாங்கட்டி”
“தாங்க்ஸ் பாஸ். எதுக்கு கூப்பிட்டீங்க?”
“புது வொர்க் எந்த நிலையில இருக்கு டா”
“ஆல்மொஸ்ட் டிசைனிங் எல்லாம் முடிச்சாச்சு இனி கோடிங் பண்ணனும் அபி”
“சரி நீ போய் உன் வேலையை பாரு டா” என்றான் அபிமன்யு. அபி வேலையில் கவனமாகிவிட அதிசயன் நகராமல் அழுத்தமாகப் பார்த்தபடி நின்றான்.
“இன்னும் என்ன?” என அவன் நிமிர
“அபி ஒரு நிமிசம் ப்ரண்டா பேசிக்கலாமா?” என அனுமதி வேண்டி நின்றான்.
முறைத்தவன் பேசித் தொலை என்பது போல் பார்த்தான்.
“அப்பா போன் பண்ணியிருந்தார்….என்றதும் அபியின் முகம் பயங்கரமாக மாறியது.”
“டேய் அபி இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே தனியா வேற வீட்டுல இருக்கப் போற டா. அம்மா அப்பா பாவம். அவங்க கூட பேசக் கூட மாட்ற டா. அம்மா அழுறாங்க டா”
“சொல்லி முடிஞ்சுட்டன்னா உன்னோட இடத்துக்கு போயி உன் வேலையை பாரு”
“அபி….”
“போடா” அபி கோபமாக கத்தினான்.
இரண்டு வருடமாக அவன் இப்படித்தான் இருக்கிறான் இப்ப மட்டும் என்ன மாறிடவா போறான் என்று எண்ணிக் கொண்டு வெளியே சென்று விட்டான் அதிசயன்.
அவன் சென்றதும் தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்தவன் நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரிஞ்சும் இவன் இப்படி பேசுறானே என்று ஆற்றாமையாக இருந்தது. தலை பயங்கரமாக வலித்தது…அப்படியே டேபிளின் மேல் தலை கவிழ்ந்து படுத்தவன் இமைகளை மூடினான்.
திடீர் என தன் தலையை பிடித்தது தளிர்கரம் ஒன்று. அதன் சில்லென்ற ஸ்பரிசத்தில் தன்நிலை மறந்தவன் மெதுவாக “உத்ரா” என்றான்.
அந்த விரல்கள் அவனது தலையை மெதுவாக கோதிக் கொண்டு இருந்தது. தலை வலி அவனை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. ஆனாலும் கண்ணைத் திறக்காமலே அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. இறுக்கமாய் இருந்த முகம் இளகிக் கிடந்தது. புன்னகையை தொலைத்திருந்த இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது.
கை நிறைய சம்பாரித்தும் மனம் மட்டும் நிம்மதி இல்லாமல் இருந்தது. காரணம் அவனது உத்ரா. தற்போது இருக்கும் அவனுக்கு சந்தோசம் என்ற ஒன்று உண்டு என்றால் அது அவள் தான். அவள் அவனிடம் மீண்டும் வந்தால் தான். இப்போது அவள் எங்கிருக்காளோ? என்ன செய்து கொண்டிருக்காளோ?
அவன் அவளைப் பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொண்டான். அதன் பிறகு அவளைப் பிடித்து அவளை தேடும் போது அவன் வாழ்வில் இருந்து தொலைந்தே போனாள் அவள். அவளைத் தேடுவதில் தான் இப்போது அவன் கவனம் முழுவதும் இருந்தது. ஆனால் அவள் கிடைத்தபாடில்லை. வாழ்க்கை இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று முதலிலேயே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தூங்க முடியாமல் வாழப் பிடிக்காமல் வாழும் இந்த வாழ்க்கை அவனுக்கு வெறுப்பை தந்தது. இந்த இழவுக்குத்தான் அவன் கல்யாணத்தையே வெறுத்தான். அவனை வலுக்கட்டாயமாக திருமணப் பந்தத்தில் சேர்த்து வைத்து அவதிப்படச் செய்துவிட்டார்கள். அதனாலேயே அப்பா அம்மாவிடம் அவன் பேசுவதில்லை. அவள் அந்த முடிவு எடுத்ததற்கு அவன் ஒரு காரணம் என்றால் அவர்கள் ஒரு காரணம்.
உத்ரா நீ எங்க இருக்க ப்ளீஸ் என்கிட்ட வந்துரு. என்னால முடியல…என்று வாய்விட்டு புலம்ப ஆரம்பித்து விட்டான்.
ஏதேதோ நினைவுகளின் பிடியில் இருந்தவனை அவனது செல்பேசி நிகழ்காலத்துக்கு கூட்டி வந்தது. எடுத்தவன் வேகமாக அக்கா என்றான்.
“அபி “
“சொல்லுக்கா என்னா பண்ற…நல்லா இருக்கியா”
“நீ எப்படிடா இருக்க”
“எனக்கு என்னக்கா நான் நல்லா இருக்கேன். மச்சான் எப்படி இருக்காரு அப்பறம் பாப்பா எப்படி இருக்கா”
“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனா நீ தான் நல்லா இல்லன்னு எனக்கு தெரியும் என்கிட்டயும் நீ நடிக்க கத்துக்கிட்ட இல்லடா”
“ஏய் லூசு அப்படிலாம் இல்ல”
“எனக்கு தெரியும் அபி உன்னை பத்தி”
“….”
“என்னடா ஏன் அமைதியா இருக்க”
“ஒன்னும் இல்லை”
“வீட்டுக்கு போலாம்ல”
“நீயும் ஆரம்பிக்காத க்கா”
“வேற யாரு உன்கிட்ட சொன்னது”
“எல்லாம் என் ப்ரண்ட் ன்னு ஒரு இடியட் தான்”
“அவன் இடியட்டா இருக்கப் போயித்தான் உன் கூட இத்தனை நாள் குப்பை கொட்டிட்டு இருக்கான்.”
அப்போது அபி என்றபடி உள்ளே வந்தான் அதிசயன்
“ஃபோன் பேசுறியா சாரி டா நான் அப்பறமா வர்றேன்” என்று அவன் செல்லும் முன் “டேய் அக்கா தான் வெயிட் பண்ணு…அதுவும் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருந்தா”
“என்னைப் பத்தியா எங்க குடு” என்று போனை வாங்கியவன் “அக்கா சொல்லுங்க” என்றான்
“ஏன்டா அதி அவன்கிட்ட நீயாவது சொல்ல கூடாதா”
“சொன்ன உடனே உன் உடன்பிறப்பு சரின்னு கேட்டுடுமா அடப் போக்கா”
“ஏன்டா”
“நான் நிறைய தடவை சொல்லிட்டேன் நாதாரி கேக்க மாட்றான் க்கா.நான் தான் சொல்லி சொல்லி டயர்டா ஆகிட்டேன்.அப்பாவும் அம்மாவும் எனக்கு போன் பண்ணி கவலைப்படுறாங்க.அதை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு”
“ஏன்டா அவளைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா”
“தெரியவே இல்ல. எனக்கென்னவோ… டேய் டேய் போனை குடு டா இன்னும் நான் அக்காட்ட பேசணும்” அபி போனைப் பறித்ததில் டென்ஷன் ஆகிக் கத்தினான் அதிசயன்.
“அதை வீட்டுல போயி பேசு” என்றவன் போனில் “அக்கா அப்பறமா பேசுறேன் பாய்” என்று வைத்து விட்டான்.
“ஏன்டா அபி உனக்கே நீ பண்றது நியாயமா தெரியுதா”
“தெரியலைதான் ஆனா என்ன பண்றது..ஆபிஸ் நேரத்துல அதிகமாக போன் பேசக் கூடாதே.அதனால போய் வேலையைப் பாரு”
“அதான் போனை புடுங்கிட்டயா.”
“ஆமா”
“நீ நடந்துக்கிறது எனக்கு சரியாப் படலை டா அபி. எப்படி இருந்தவன் டா நீ. இப்போ என்னடான்னா ஏதோ சந்நியாசி மாதிரி காலத்தை ஓட்டிட்டு இருக்க.இன்னும் எத்தனை நாளைக்கு. நீ ஏன் வேற கல்யா…”
“ஸ்டாப்பிட் அதிசயா…..என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா…”
“எனக்கு தெரியுது. உன் மரமண்டைக்குத்தான் அது தெரியலை. அவதான் எங்க இருக்கானே தெரியலைல. அப்பறம் என்னவாம். எதார்த்தம் என்னென்னு புரிஞ்சுக்கோ. கல்யாணம் பண்ண நேரத்துக்கு நீ வாழ்ந்திருந்தால் உன் வாழ்க்கையே மாறியிருக்கும். அவளுக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். அப்போ எல்லாம் அவ மேல எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு இப்போ இவர் சாவகாசமா ப்லீங்க்ஸ்லயே குப்பைக் கொட்டுவாராம்.. இரிட்டேட்டிங் அபி” என்றான் அதிசயன் கோபமாக
வெகுநேரம் தனது கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தவன் பின்
“நான் மரமண்டை தான் டா எனக்குத் தான்
தெரியலையே எதுவும். அவளை.. அவளோட உணர்வுகளை இப்படி எதையுமே புரிஞ்சுக்காத மரமாத்தான நான் இருந்திருக்கேன். அடுத்து நான் புரிஞ்சுக்கிட்ட பிறகு அவ என்னை பழி வாங்கிட்டா. இதைத்தான் கர்மா ன்னு சொல்லுறாங்க போல. நான் இப்போ ஏன் இப்படி இருக்கேன்னு எனக்குமே புரியல. இந்த காதல் வந்ததுல இருந்து நான் நானா இல்லைதான். எனக்குப் புரியுது.
ஆனா அவளைக் காதலிச்சு தொலைச்சுட்டேனே. இப்போ அவ இல்லாம இருக்க முடியாது அப்படிங்கிற நிலைல நான் இருக்கேனே டா. அது புரியாம ஆளாளுக்கு அட்வைஸ் பண்றீங்க. உன்மையிலே உங்களுக்கு என்னோட வேதனை புரியல டா. எங்கயோ இருக்காளே அவளுக்கும் அது தெரியாது. என்னை விட்டு போன அந்த நொடியில இருந்து இப்பவரைக்கும் நான் அவ இல்லாம ஒவ்வொரு நாளும் செத்து செத்து பொழைக்கிறேன். நான் பண்ணதுக்கு இப்படி தனியா இருந்து கஷ்டப்படனும் அதுதான் எனக்கு நானே கொடுத்துக்கிற தண்டனை டா. அவ வராம நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன். அப்பா அம்மா கிட்ட பேசமாட்டேன். என்னை விடுங்கடா. தினமும் ஏன் இப்படி இருக்கன்னு கேட்டு கேட்டு கொல்லாதீங்க ப்ளீஸ். இந்த ஜென்மத்துல அவ மட்டும் தான் எனக்கு. அவ என்னை விட்டு போயிட்டா தான். ஆனா திரும்பி அவ என்கிட்டயே வருவா. அதுவரைக்கும் நான் அவளுக்காக காத்திருப்பேன் என்னோட தேடலையும் விடமாட்டேன்” என்றான்.
அதிசயன் அமைதியாக வெளியேறினான். புலம்பித் தீர்த்தவன் பின் தெளிந்து தனது வேலையை முடித்துவிட்டு ஆபிசில் இருந்து புறப்பட்டான்.
கீழே சென்று தனது வண்டியை எடுக்க பின்னால் வந்து அவனது நண்பன் ஏறிக் கொண்டான்.
“ஏய் என்னடா”
“வண்டியை எடுடா அபி”
“உன் வண்டியை எங்க?”
“இங்கதான் இருக்கு. இன்னைக்கு எனக்கு ரொம்ப பசிக்குது வா ஹோட்டல் போயிட்டு சாப்பிட்டு போலாம் அபி”
“இல்ல எனக்கு வேணாம் நீ வேணும்னா சாப்பிடு”
“இங்க பாருடா எனக்கு ரொம்ப பசிக்குது பேசாம வா அவ்வளவுதான். இங்கதான் வண்டியை நிறுத்திட்டு உள்ள வா”
அவனது பேச்சை மீற முடியாது அபியும் ஹோட்டலுக்கு சென்றான்.
“என்னடா சாப்பிடுற”
“எனக்குத்தான் எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டேன்ல”
“நீ வீட்டுக்கு போனா சாப்பிட மாட்டேன்னு எனக்கு தெரியும் டா அபி. ப்ளீஸ்டா எனக்காக சாப்பிடு. இல்லைன்னா எனக்கும் சாப்பாடு வேணாம்.”
“சரி டா ஒரு தோசை மட்டும் போதும்”
இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அதிசயனை அவனது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டுக்கு வண்டியை விட்டான் அபிமன்யு.
தனது வீட்டிற்கு முன் நின்றவன் கதவைத் திறந்து உள்ளே சென்றான். கண்களில் எதிர்ப்பார்ப்பை தேக்கி தன்னையே பார்த்தபடி வரவேற்கும் அந்த தேவதையை எதிர்பார்த்து தற்போது உள்ளம் ஏங்கியது…
அப்போது எல்லாம் வெறுப்பாக இருந்த அந்த செய்கைகள் அனைத்தும் இப்போது தனக்கு கிடைக்காததால் அவனை வெறுமையாக உணர வைத்தது. எதுவுமே இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று புரிந்து கொள்ள அவன் கொடுத்த விலை தான் இந்த பிரிவு.
உள்ளே சென்றவன் விளக்கை கூட போடாமல் உடையையும் மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்தான். மீண்டும் அவனது புலம்பல் தொடர்ந்தது.
என்னை ஏன் தனியா விட்டு போன?
ஏன் போன?
அதுவும் நான் உன்னை
தேடும் போது ஏன் தொலைந்து போன?
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அபி பாவம் தான்.