“சரி எத்தனை நாட்களுக்கு, வருடங்களுக்கு இப்படியே இருக்கப்போற?” இன்று அவியும் விடுவதாக இல்லை.
“இந்தப்பேச்சினை விடேன் அவி.” இப்போது பாரிக்கு ஆயாசமாக வந்தது.
ஏற்கனவே அவளை பார்த்ததும்… இல்லாத கோபத்தையும் வெறுப்பையும் இழுத்து பிடிக்கும் நிலையில் அவன். இப்போது அவியும் அவளுக்காக படுத்தியெடுக்கிறானென நொந்து போனான்.
“சரி தமிழ் பேச்சை விட்டுடுறேன். அவளை புரிஞ்சிக்கோன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் உனக்கில்லை. அவளை உன்னைவிட அதிகமா புரிஞ்சிக்கிட்டது யாருமில்லை. சோ, தமிழ் உன்மேல வச்சிருக்க காதலை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே.”
அவி தமிழுக்கு அவன்மீது காதலென்று சொல்லியது தான்… அப்படியொரு சிரிப்பு பாரியிடம். வெடி சிரிப்பு என்பார்களே அதே. அவ்வளவு சத்தமிட்டு வேறு சிரித்தான். நினைத்து நினைத்து சிரித்தான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான். கண்ணில் நீர் வரும்வரை நிற்கவில்லை அவனது சிரிப்பு.
அவியே கடுப்பாகிவிட்டான்.
பாரியின் சிரிப்பு சத்தம் கேட்டு… தன்னுடைய வண்டியை துடைத்துக் கொண்டிருந்த ஜென் ஜெர்க்காகி நிற்க, சிறிது நேரத்திற்கு முன் கலங்கிய கண்களுடன் வீட்டிற்குள் சென்ற தமிழ் வெளியில் ஓடிவந்து ஜென் அருகில் நின்று பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்தாள்.
“பாரியா தமிழ் சிரிக்கிறான்?”
“ம்ம்ம்” என்று தலையசைத்த தமிழுக்கு கண்கள் நிறைந்துவிட… உதட்டில் புன்னகை உறைந்தது.
“ஹேய் தமிழ் என்ன? அவன் தான் பேய் மாதிரி சிரிக்கிறான்னா நீ எதுக்கு காரணமே இல்லாம மழையையும் வெயிலையும் ஒரே நேரத்தில் காட்டுற?”
“இது… இப்போ சிரிக்கிறது பாரியில்லை ஜென். வேந்தன். என்னோட வேந்தன். அவன் சிரிப்பு சத்தம் கேட்டு எத்தனை நாளாச்சு.” காரணம் அறிந்திடாத தன்னவனின் ஒற்றை சிரிப்பிற்கே அத்தனை உவகை கொண்டாள்.
“ரொம்பத்தான் முத்திப்போச்சு. அவன் என்ன பேசினாலும் கோபமே இல்லாம எப்படித்தமிழ் இவ்வளவு லவ் அவன் மேல?”
அதற்கும் தமிழிடம் புன்னகையே!
“சும்மா பல்லைக் காட்டி கடுப்படிக்கடிக்காத தமிழ். போ கிளம்பு. பர்ஸ்ட் டே. லேட்டா போகாதே!” என்று ஜென் அவளைத் துரத்திட…
“எனக்கு டிரைவர் இருக்காங்க. நான் ஏன் லேட்டா போகப்போறேன்?” என்ற தமிழ்… “அவியை இங்க ஷிஃப்ட் பண்ணிட்டேன். இனி பாரியும் இடம் மாறமாட்டான், எனக்கும் ஆபீஸ் போயிட்டு வர ஃப்ரீ டிரைவர் கிடைச்சாச்சு” எனக்கூறி கண் சிமிட்டிச் சென்றாள்.
ஜென் தான் அவியின் வருகையை அறிந்து ஸ்தம்பித்து நின்றாள்.
“சொல்லிட்டு சிரிக்கிறியா?” இடுப்பில் கை வைத்து அவி கேட்டத் தோரணையில்…
“அப்பப்பா நான் பயந்துட்டேன்… போடா” என்று கேலி செய்தான் பாரி.
“ரீஸன் சொல்லுடா?”
“தமிழுக்கு என்மேல் ஏதோன்னு சொன்னியே. அது தான் சிரிப்பு வந்திடுச்சு.”
“இல்லைன்னு சொல்லுவியா நீ?”
“அப்போ இருக்குங்கிறியா நீ?”
“எஸ்.”
“குட் ஜோக்.”
“அப்படியா?”
“ம்.” இறுதியில் பாரியிடம் தோள் குலுக்கல்.
“தமிழை உன்னை விட அதிகம் தெரிந்தவங்க யார் பாரி?” என்ற அவி, “தமிழுக்கு பிடிக்காத ஒன்னை ஏத்துக்கொள்ள முடியும் நினைக்கிறியா? அதுவும் எனக்கு பிடிக்கலன்னு நீ சொல்லியும்… சாரி சாரி கெஞ்சியும் தமிழ் உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சிருக்காள் அப்படின்னா என்ன அர்த்தம் பாரி?” என பொட்டில் அறைந்தது போல் உண்மையை பிட்டு வைத்தான்.
“ஹான் என் தலையை உருட்டனும் அர்த்தம். போடா, கண்டதை யோசிச்சி என் உயிரை வாங்காதே” என்று மழுப்பலாக அவியை கடந்து குளியல் அறைக்குள் நுழைந்து கொட்டும் நீருக்கடியில் நின்றவனின் மனதில் அவியின் வார்த்தைகளே உலா போயின.
“அய்யோ இவனும் என்ன குழப்புறானே!” அரற்றினான்.
எவ்வளவு நேரம் யோசனையிலேயே நீருக்கடியில் நின்றிருந்தானோ…
“பாரி டைம் ஆகுது” என்ற அவியின் குரலில் தான் குளித்து முடித்து கிளம்பி வந்தான்.
அப்போதும் பாரியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
‘கண்டதை பேசி என்னை இப்படி புலம்ப வச்சிட்டானே’ என்று கண்ணாடி முன் நின்று தலை முடியை கைகளால் கோதிக்கொண்டிருந்த அவியை கொலை வெறியில் முறைத்து பார்த்தான்.
“என்ன மச்சான் இப்படி பாசமா சைட் அடிக்கிற?” என்று கண்ணாடி ஊடே கேட்ட அவியிடம்…
“அழகா இருக்க பயமா இருக்கிறது” என்று சொல்லிவிட்டு போலீஸ் நடையுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
“கொழுப்புதானே உனக்கு. ஹிந்தி மாடல் மாதிரி இருக்கேங்குற திமிரு” என்ற அவியும் வேக வேகமாக தன்னுடைய ஸ்லிங் பேக்கினை தோளில் மாட்டியவாறே… காலினை ஷூவுக்குள் நுழைத்தபடி வெளியில் வந்தான்.
பாரி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
“பை மச்சான்.” பாரியிடம் கிளம்புவதாகச் சொல்லிய அவி பக்கத்து வீட்டை நோக்கி விசிலடிக்க… அங்கிருந்து உற்சாகமாக முழு கருமை நிற டாப் மற்றும் ஜீனில் இடைத்தாண்டிய கூந்தலை விரித்துவிட்டபடி குதித்து ஓடி வந்தாள் தமிழ்.
அவியின் விசில் சத்தத்தில் கவனித்த பாரி…
‘பார்த்தால சோகத்தில் இருக்கவ மாதிரியா தெரியுது. எவ்வளவு ஜாலியா குதிச்சுவராள். இவளுக்கு போய் சப்போர்ட் பன்றான் இந்த அவி.’
‘சோகமா இருந்தா எப்பவும் நான் சோகத்தில் இருக்கேன்னு உம்முன்னு முகத்தை வச்சு காட்டிக்கிட்டே இருக்கணுமா? அப்படி இருக்கத்தான் முடியுமா?’
ஒரு மனம் தமிழை சாடியது என்றால் மற்றொரு மனம் அவளுக்குத் துணை நின்றது. தன் மனமே இரண்டாகப் பிரிந்து வாதம் செய்வதை வினோதமாக எண்ணினான்.
தனக்கு எதிரியே தான் தானென்று அந்நொடி தெளிவாக விளங்கியது.
அவி காரில் அமர்ந்திருக்க…
“என்னடா கார் கொண்டு வந்திருக்க? உன்கிட்ட பைக் இல்லையா?” என்ற தமிழ் காரிலேறாது வெளியவே நின்றாள்.
“நைட் நீ மிரட்டிய மிரட்டலில் மூட்டை முடிச்செல்லாம் எடுத்துவர கார் தான் சரியா இருந்துச்சு தமிழ். ஈவ்வினிங் ஃபிளாட் போய்ட்டு பைக் கொண்டு வந்திடுறேன்” என்ற அவியின் பேச்சை தமிழ் ஏற்கவேயில்லை.
“பைக் தாண்டா நல்லாயிருக்கும். காரெல்லாம் வயசானவங்க சொகுசா போறதுக்கு” என்றாள்.
தமிழ் அவியிடம் பேசியதற்கு பாரி கவுண்டர் கொடுத்துக்கொண்டான்.
‘கொஞ்சம் ஸ்பீடா போனாலே பைக் பின்னால் உட்காரவே கதறுவா(ள்). இப்போ பேச்சை பாரு.’ நொடித்துக் கொண்டான்.
“அப்போ… நீ வேணுன்னா பாரிகிட்ட கேளேன்.” அவிக்கு உள்ளுக்குள் தமிழ் சென்று கேட்டால் அவன் என்ன பதில் கொடுப்பானென்று ஒரு பக்கம் தோன்றியது.
“எதுக்கு? ஆங்… என்னத்துக்குன்னு கேட்குறேன்? எங்கோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தான்னு ஏறறதுக்கா?” என்றவள் பாரியின் பக்கம் திரும்பக்கூடவில்லை.
“இன்னைய கோட்டா முடிஞ்சிப்போச்சு. காலையில அவன் பேசியதே போதும். பொழுதுக்கும் தாங்கும்.”
அவி காரை எடுத்தால் தான் பாரி வண்டியை எடுக்க முடியும். இருப்பினும் தமிழின் பேச்சினைக் கேட்பது அவனுக்குள் ஓரத்தில் எங்கோ ரசிக்க வைத்தது.
‘வாய் தான்.’
அந்நேரம் சரியாக ஜென்சி தன்னுடைய இருசக்கர வாகனத்தை வெளியில் தள்ள…
“ஒக்க நிமிடம் வெயிட்கா” என்றவள்,
“ஹேய் ஜென் வண்டியில அதென்ன” என்று ஜென் சுதாரிப்பதற்குள் வண்டியை தன் கையில் பிடித்தவள் ஏறி அமர்ந்து இயக்கி அவிக்கு பக்கத்தில் நிறுத்தினாள்.
அவி ஜென்னை யார் நீ என்ற மூன்றாம் நபர் பார்வைக்கூட பார்க்கவில்லை. கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப்போல் பார்த்து சாதாரணமாகத் திரும்பிக்கொண்டான்.
ஜென்னிற்குத்தான் உயிர் வலியாகியது.
அவியிடமிருந்து கார் சாவியை பிடுங்கிய தமிழ் ஜென்னை நோக்கி வீசிட, தன்னைப்போல் அதனை பற்றியிருந்த ஜென்…
“என் வண்டி” எனக் கேட்க வருமுன்,
“வேணுன்னா கார் யூஸ் பண்ணிக்கோ ஜென்” என்றவள் அவியை பார்த்திட… ஒரு கணம் யோசித்து தமிழின் பின்னால் ஏறி அமர்ந்தான்.
அவியின் மீதான பாரியின் உஷ்ணம் கூடிக்கொண்டே போனது. தமிழையும் உள்ளுக்குள் வறுத்தெடுத்தான்.
‘ராட்சசி என்னை ஒரே ஒருமுறை உட்கார வச்சி ஓட்டுன்னு எவ்வளவு கெஞ்சியிருப்பேன். அப்போலாம் பயம் பயம் சொல்லிட்டு இப்போ இவனை மட்டும் உட்கார வச்சு ஓட்டுறாள்.’ அவனின் வாய் முணுமுணுப்பாக அசைந்தது.
“டேய் எவ்வளவு நேரம்டா, வெட்டி ஆபீசர்ஸ். கொஞ்சம் வழிவிட்டு நில்லுங்க.” கடுப்பைக் காட்டினான் பாரி.
அவியின் மீதான பாரியின் முறைப்பு மட்டும் மாறவில்லை.
“இப்போ என்னத்துக்குடா உன் தோஸ்த்து உன்னை பாசமா பார்க்குறான்?”
“அவன் அப்படித்தான் தமிழ், காலையிலிருந்தே நான் அழகா இருக்கேன்னு என்னை வெறிக்க வெறிக்க பார்க்குறான்” என்று அவி வெட்கப்பட…
“அய்யோ சகிக்கல” என்றதோடு, “அவனுக்கு பை சொல்லுடா கிளம்புலாம்” என்றாள்.
அவியும் பாரியை பார்க்க…
“இருக்க கோபத்துக்கு செல்லுக்குள் வச்சு லாடம் கட்டிடுவேன். என்னை படுத்தி எடுக்குறதுக்குன்னே வந்திருக்கீங்களாடா?” என்ற பாரியின் கேள்வியில்,
“விடு ஜூட்” என்று எடுத்ததும் தமிழ் வேகத்தில் சீற… அவி ஒரு ஆட்டம் ஆடி அவளின் தோளினை பிடித்து நிலைபெற்றான்.
‘நைட் வீட்டுக்கு வாடா. உனக்கு இருக்கு.’ அவிக்கு புலனம் வழி செய்தியனுப்பியவன், அப்படியே செல்லும் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்த ஜென்னின் அருகில் சென்று வண்டியை நிறுத்தி… “ஏறு” என்றான்.
தான் சொன்னது புரியாது மலங்க மலங்க விழித்தவளை…
“உன் ஆளை பார்த்து உள்ளுக்குள்ள அதிர்ந்து வருந்தி முடிச்சிட்டன்னா கிளம்பலாம்” என மீண்டும் விவரித்துக் கூறினான்.
“என்ன… என்ன பாரி?”
“ஏறு ஜென்.”
வண்டியில் அமர்ந்தவளின் முகம் ஸ்டேஷன் வந்து இரண்டு மணிநேரம் கடந்த பின்னரும் தெளியவில்லை.
அவளை கவனித்த பாரி தன்னறைக்கு அழைத்தான்.
“என்னாச்சு ஜென்? எதுவாயிருந்தாலும் சரியாகும்” என்றான்.
“பாரி… அவி, அவிக்கு நான்…” வரியை முடிக்காது இழுத்தவள்,
“உன்னை ஹக் பண்ணிக்கவா பாரி” எனக் கேட்டிருந்தாள்.
“ஹேய் ஜென்” என்றபடி இருக்கையிலிருந்து எழுந்து அவளருகில் சென்று தோளோடு அணைத்து விடுவித்தான்.
அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
“நீ பண்ணது சரின்னு நான் சொல்லமாட்டேன் ஜென். ஆனா அவி இன்னமும் உன்னை விரும்புறான். அவனுடைய கோபம் குறைய கொஞ்ச நாளாகும். நீ வெயிட் பண்ணித்தான் ஆகணும்” என்றான்.
“உனக்கெப்படித் தெரி…?”
“தெரியும்.” கேண்டியை எடுத்து வாயில் போட்டவன், “அவி சொல்லல” என்றான்.
“அவி உன்கிட்ட சொல்லியிருந்தாலும் எனக்கு ஒண்ணுமில்லை” என்று நம் நட்பிற்கு இடையில் இப்போதும் எந்த மறைவுமில்லை என மறைமுகமாக உணர்த்தினாள்.
“பட் என்னால் எதையும் வெளிப்படையா சொல்ல முடியாது ஜென்” என்ற பாரி… “நோ பெர்சனல் ஜென். நான் வந்த கேஸினை சீக்கிரம் முடிக்கணும்” என்றவன், “இங்க பார்த்துக்கோ” எனக்கூறி வெளியேறினான்.
நேராக டீ கடைக்குச் சென்றவன், கந்தனிடம் ஒரு தேநீரை சொல்லிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.
தேநீர் கொண்டு வந்து கொடுத்தவர்…
“இப்போ தான் சார் உங்க ஆளுங்க சாப்பிடறதுக்கு பணம் கொடுக்குறாங்க” என்றவர் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு… “ரெண்டு நாளா அந்த ஆட்டோ ஸ்டேஷனுக்கு வெளியில் நிக்குது சார்” என்றார்.
அந்த ஆட்டோவினை பாரியும் காலையில் கவனித்திருந்தான். காரணம் தான் தெரியவில்லை.
“ஆட்டோ தானேண்ணா! சவாரிக்காகக்கூட நின்றிருக்கலாம்.”
“நானும் அப்படித்தான் நினைச்சேன் சார். ஆனால் ஆட்டோ கேட்டு வந்த யாரையும் ஏத்தாம அங்கேதான் நிக்குது. ரெண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை ஆள் மாறிக்கிறாங்க” என்றவரிடம் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி கிளம்பியவன், ராயப்பனின் வீட்டிற்குதான் வந்திருந்தான்.
யாரின் அனுமதியுமின்றி வீட்டிற்குள் சென்றவன் அமிர்தாவின் அறைக்குள் நுழைந்திருந்தான்.
அன்று அவன் ஆராய்ந்த அதே அறை. மாற்றம் ஏதேனும் உள்ளதா என கண்களில் கூர்மையை படரவிட்டான்.
அறையில் பால்கனி உள்ளது. அதற்கு எதிர் பக்கம் சன்னல். மாடியில் உள்ள சிறு வரவேற்பறையை காணும் வகையில். பால்கனிக்கு அருகில் மரமோ தூணோ எதுவுமில்லை. அமிர்தா விழுந்து கிடந்த இடம் ஃபாரான்சிக் மூலமாக மார்க் செய்யப்பட்டிருக்க, அதனை தன் அலைபேசியில் பல கோணங்களில் க்ளிக் செய்துகொண்டான். அவ்வறையின் ஒரு பக்க சுவர் முழுக்க அமிர்தாவின் சிறு வயது முதல் இறுதி தோற்றம் வரை அனைத்தும் படங்களாக சட்டங்களில் அடைத்து மாட்டப்பட்டிருந்தது. அவளது திருமணப்படமும் அதில் அடக்கம்.
அப்படத்தை பார்க்கும்போது பாரிக்கு எவ்வித சலனமும் இல்லை. சிறு வருத்தமோ கோபமோ கூட தோன்றவில்லை. நிர்மலமாகவே இருந்தான். தன் முன்னால் காதலி என்கிற தடுமாற்றமோ… அல்லது அவளின் பக்கத்தில் நின்றிருக்கும் ரித்தேஷின் மீது துளி பொறாமையோ கூட எழவில்லை. அதுவே அவனின் மனதை அவனுக்கு பளிங்காய் காட்டிட, கண்ணாடியாய் தமிழின் முகத்தையும் உடன் பிரதிபலித்தது.
‘விடமாட்டா(ள்) போலிருக்கே’ என்றவன் முயன்று பூவின் உருவத்தை கண்முன்னே கொண்டு வந்து தமிழை விரட்டினான். தலையை அழுந்த கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் மீண்டும் வேலையில் கவனமானான்.
‘எல்லாம் அவள நேரில் பார்த்ததால் வந்த எண்ணம்’ என தனக்கு சாதகமாக நினைத்துக் கொண்டான்.
அறையிலிருந்த ஒவ்வொரு இழுவைகளையும் இழுத்து அதில் என்ன உள்ளன என அலசி ஆராய்ந்தான்.
வார்ட்ரோபிற்கு மேலிருந்த மறைமுகமான இழுவையில் பல சிற்பங்களின் புகைப்படங்கள் பத்திரபடுத்தப்பட்டிருந்தது. புகைப்படங்கள் சுற்றப்பட்டிருந்த கவரின் மேல் ரத்தத் துளிகள். எடுத்து பார்த்தவனுள் யோசனை.
அமிர்தாவிற்கு சிற்பங்கள் என்றால் மிகவும் பிடித்தம். அது கல்லூரி நாட்களில் அவளுடனான பழக்கத்தின் போது பாரி அறிந்து கொண்டது. அந்த படங்களுக்கு பின்னால் தேதிகள் வேறு குறிப்பிடப்பட்டிருக்க அதனை தன்னுடைய சட்டைக்குள் வைத்துக்கொண்டான்.
இங்கு கிடைக்கும் தடயங்கள் எதுவும் யார் கண்ணுக்கும் புலப்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
ஏனென்றால் அமிர்தாவின் இறப்பு கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளி இவ்வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பது பாரியின் தொண்ணூறு சதவீத கணிப்பு.
அமிர்தாவின் இறப்பில் பெரிய மர்மம் உள்ளதென்று ஆணித்தரமாக அவன் நம்பிட மேலும் சில விடயங்கள் கிடைக்க அதனையும் எடுத்துக்கொண்டான்.
பாரி அங்கு வந்த போது ராயப்பன் வீட்டிலில்லை. ஆனால் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்திருந்தார்.
அவரின் பதட்டமும் கலவர முகமும் பாரிக்கு எதையோ அறுதியிட்டு கூறியது.
“என்ன சார் எதுவும் கிடைச்சுதா?” குரலில் அத்தனை நடுக்கம்.
“கிடைக்கலையே” என்றவன், “அமிர்தா யூஸ் பண்ணிக்கிட்டிருந்த போன் வேணுமே?” எனக் கேட்டான்.
“அது… அது… மாப்பிள்ளைக்கிட்ட இருக்கு?” உளறலாகத்தான் கூறினார்.
“அப்போ அவங்க இறக்குற அன்னைக்கு, இங்க வந்தப்போ மொபைல் கொண்டு வரலையா?”
“இங்க தான் இருந்துச்சு. போன வாரம் தான், அவளோட ஃபோன்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ் எல்லாம் இருக்கு. எனக்கு அந்த ஃபோன் வேணும்னு ரித்தேஷ் வாங்கிக்கிட்டார்” என்றார் ராயப்பன்.
“ஓகே. நீங்க ஏன் அமிர்தா மொபைலை விசாரணைக்கு கொடுக்கல?” எனக் கேள்வியாக இழுத்தவன், “ஏன்னா இப்போ இருக்க நிலையில் ஒருத்தருடைய மொபைலை ஆராய்ந்தா போதும், அவங்களைப்பற்றிய அனைத்துக்கும் தீர்வு எளிதா கிடைச்சிடும்” என்றான்.
“உங்களுக்கு முன்னால விசாரிச்ச இன்ஸ்பெக்டர் கேட்கல. அதனால் கொடுக்கல.” ராயப்பனிடம் ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.
“ரித்தேஷ் எப்போ வர்றார்?”
“எங்க?”
ராயப்பனின் கேள்வியில் பாரி சுதாரித்தவனாக, “வீட்டிற்கு?” என்று மட்டும் கேட்டான். வெளியூரிலிருந்து என்ற வார்த்தையை தவிர்த்தவனாக.
“வீட்டில் தான இருக்கார்” என்ற ராயப்பன், “கட்சிக்குள்ள உட்கட்சி பூசல். அதனால் யாரும் கட்சி ஆபீஸ் போறதில்லை” என தன்னைப்போல் கூறியிருந்தார்.
“ம்” என்ற பாரி மேற்கொண்டு எதுவும் கேட்கவோ, சொல்லவோ இல்லாது சென்றுவிட்டான்.
மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த போதும் அந்த ஆட்டோ அங்கேயே நின்று கொண்டிருந்தது. கவனித்தபடி உள்ளே சென்றவன் அடுத்த இரு நிமிடங்களில் வெளியில் வேகமாக வந்து ஆட்டோவில் ஏறி அமர்ந்தவனாக,
“எமெர்ஜென்சி சீக்கிரம் எடுங்க” என்று கூறினான்.
ஆட்டோவில் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் திருத்திருக்க…
“ஸ்டார்ட் பண்ணுங்க” என்று படப்படத்தான்.
பாரியின் நடிப்பில் மிரண்டு போன அவன், உண்மையாகவே ஏதோ அவசரம் போல் என எண்ணி…
“எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியாதுங்க சார். வேற ஆட்டோ புடிச்சுக்கிட்டு வரேன்” என்றான்.
“ஆட்டோ ஓட்டத் தெரியாமலே ஆட்டோ வச்சிருக்கியா நீ” என்ற பாரி கால் மேல் காலிட… அத்தோரணையே அவனுக்கு கிலி பிடிக்க வைத்தது.
“நான் கிளினருங்க சார்.” சமாளிக்க வேண்டுமே எனக் கூறினான் அவன்.
“சரி அப்போ டிரைவரை வரச்சொல்லு” என்ற பாரி கணபதிக்கு கண்காட்டிட, அவர் வந்து அவனை இழுத்துச் சென்றார்.
அந்த ஆட்டோவில் சோதனையிட்ட பாரிக்கு முகவரி அட்டை ஒன்று கிடைக்க… அவனின் முகம் தீவிரமாக மாறியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
37
+1
1
+1
1