Loading

அத்தியாயம் 7 :

நிச்சயம் தமிழ் வந்து கதவினை திறப்பாளென்று பாரி எதிர்பார்க்கவேயில்லை.

நான்கு வருடங்களுக்குப் பின்னர் தமிழை மிக அருகில் நேரில் காண்கிறான்.

இதயம் தடுமாறி இடம் பெயர்ந்தது என்னவோ உண்மை. அவள்மீது விருப்பமில்லை என்றாலும், அவளின் கழுத்தில் அவன் கட்டிய தாலி என்ற ஒன்று அவனின் உணர்வுகளில் அதன் மந்திரத்தை நிகழ்த்தத்தானே செய்யும். செய்தது. அதனாலேயே அவ்வளவு தூரம் தமிழை வெறுத்த போதும்… அவளை மட்டுமே மனதில் கொண்டு ராயப்பனிடம் தனக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும், மனைவியென்று ஒருத்தி இருக்கிறாளென்றும் பாரியால் எளிதாகச் சொல்ல முடிந்தது.

பாரியின் மனம் ஒப்புக்கொண்ட ஒன்றை ஏனோ அவனின் மூளை ஏற்க மறுக்கிறது.

‘தமிழை மனைவியாக ஏற்கத் தொடங்கிவிட்டால், பூவின் நட்பை மறந்து விடுவோமோ?’ என்கிற அவனுள் ஆழப்பதிந்துபோன அச்சம் அது.

தமிழை நேரில் பார்த்ததும் பாரியின் விழிகளில் அலைப்புறுதல். சட்டென்று பாக்கெட்டிலிருந்த கூலர்ஸை எடுத்து வேகமாக கண்களுக்கு அணிந்து கொண்டான்.

கூலர்ஸ் மறைத்த கண்களால் தமிழை நுனி முதல் அடி வரை பார்வையால் அலசினான். ஆராய்ந்தான். கண்களில் பதித்து நெஞ்சத்தில் சேமித்தான்.

இன்னும் அழகாகத்தான் தெரிந்தாள் அவனுக்கு.

அதனை அன்றும் ஏனோ சொல்ல முடியவில்லை. இன்றும் சொல்ல மனம் விழையவில்லை.

பாரியை கண்டதும்… தமிழிடம் அவனைப்போல் எவ்வித தடுமாற்றமும் இல்லை. நிலைப்படியில் பக்கவாட்டாக நன்கு சாய்ந்து மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி எவ்வித ஆர்வமும் முகத்தில் காட்டாது நிர்மலமாக அவனை பார்த்திருந்தாள்.

பாரியின் தடுமாற்றத்தையும்… கண்ணாடி மறைத்த கண்களால் தன் நலன் அறிந்திடும் அவனின் திருட்டுத்தனத்தையும் உணர்ந்தே இருந்தாள்.

அருகருகே வீட்டில் இருந்துகொண்டு இனி தினமும் பாரியை பார்க்க நேரிடும். ஒவ்வொரு முறையும் அதிர்ந்து கொண்டிருக்க முடியாதென ஏற்கனவே இதுபோன்ற சந்திப்புகளில் இயல்பாக இருக்க வேண்டுமென மனதையும் உணர்வுகளையும் அடக்கி வைத்திருந்தாள். அதுவே இப்போது தமிழுக்கு கை கொடுத்தது.

“யார் வேணும்?”

தமிழ் கேட்ட கேள்வியில்… பாரியின் மைண்ட் வாய்ஸ்,

‘அடிப்பாவி.’

பாரியின் ரியாக்ஷன்…

இமைகள் அகல விரிந்தன. வாயில் கை மட்டும் தான் வைக்கவில்லை.

‘இவளுக்கு கொழுப்பை பாரேன். என்னைத் தெரியாதாம்!’ மனதில் சடசடத்தான்.

நாம் விலகும் போது தெரியாத ஒன்று நம்மை ஒருவர் விலகும் போது தெரியுமாம். அதுவே இங்கு பாரியின் விடயத்திலும்.

‘என்னை உனக்குத் தெரியாதுல’ என்று இதழ் திறக்காது கடுகடுத்தவன், நொடியில் தன்னை மீட்டுக்கொண்டான்.

இப்போது பாரியின் உடல் மொழியில் ஒரு அந்நியத்ன்மை.

“இஸ் ஜென்சி தேர்?”

இலகுவான குரலில் கேட்டிட…

‘நீ உஷாராகிட்டியா?’ என நினைத்த தமிழ்…

“நீங்க யாருன்னு தெரியாம நான் எப்படி சொல்றது?” எனக் கேட்டாள்.

குனிந்து தன்னையும் தான் போட்டிருக்கும் காக்கி உடையையும் ஒருமுறை பார்த்துக்கொண்ட பாரி…

‘இந்த ட்ரெஸ் பார்த்துமா எனக்கு பதில் சொல்ல மாட்டேங்கிற’ என மனதில் அவளை கருவினான்.

பாரி அவனையே பார்க்க குனிந்த சமயம்…

வராதா அலைபேசியை ஏற்று காதில் வைத்த தமிழ்… பாரியின் பார்வை தன்னிடம் இல்லாததை உறுதி செய்து கொண்டவளாக,

“ஹலோ அவி…” என இல்லாத அழைப்பில் இழுத்து பேசினாள்.

“செமயா இருக்கடா. ஃபர்ஸ்ட் டைம் உன்னை இந்த ட்ரெஸ்ஸில் இவ்வளவு கிட்டக்க பார்க்கிறேன். சும்மா மாஸ்ஸா இருக்கடா” என்று பாரியை ரசித்தபடியே கூறியவள், அவளின் பேச்சில் சரேலென பார்வையை உயர்த்தி அவளை பார்த்ததும் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் தமிழ்.

‘உடம்பு முழுக்கத் திமிரு.’ பாரியின் மனம் சொல்லிக்கொண்டது.

“உன் ஃபோட்டோ தாண்டா அவி. அழகா இருக்கடா” என்று ஓரக்கண்ணால் பாரியை பார்த்தவாறே தமிழ் மீண்டும் சொல்ல… அவன் பற்களை கடித்தான்.

“இந்த ட்ரெஸ்ஸில் நீ கெத்து தான் போ” என்று தமிழ் சொல்லி முடிக்கும் முன்…

“யாரு தமிழ்… யாரு கெத்து” என்றபடி வெளியில் வந்தாள் ஜென்சி.

“நம்ம அவி தான் ஜென்…” என்று தமிழ் கூறிட,

தமிழை முறைத்தபடி நின்றிருந்த பாரியை கண்ட ஜென்சி, “ஹேய் பாரி உள்ள வா?” என வரவேற்றாள்.

அதற்கு அவன் ஏற்கும் விதமாக தலையசைக்கும் முன்,

“இவங்க உனக்குத் தெரிஞ்சவங்களா ஜென். நான் யாருன்னு கேட்டும் பதில் சொல்லலையா அதான் சந்தேகப்பட்டு வெளியிலே நிற்க வச்சு விசாரிச்சேன்” என தமிழ் அசராது கூறினாள்.

பாரியின் முகத்தில் உஷ்ணம் கூடியது.

‘அய்யாவுக்கு கோபத்தை பாருடா. உன்னை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேண்டா’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட தமிழ் சிறு தோள் குலுக்களுடன் உள்ளே சென்றிட… பாரி அவளையே முறைத்திருந்தான்.

இருவருக்கும் நடுவில் யாருக்கு பார்ப்பதென்று தெரியாத ஜென்சிக்கு சுவற்றிலேயே முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

அப்போது அவி. இப்போது ஜென். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆட்களின் நிலை தான் பரிதாபமாகும்.

“அது வந்து பாரி… அவள் ஏதோ விளையாட்டுக்கு…”

“எது விளையாட்டுக்கு? நான் யாருன்னே அந்த வாலுக்கு தெரியாதாம்மா? சும்மா என்னை சீண்டி பார்க்க வேணாம் சொல்லிவை” என்று தமிழுடன் உரிமையாக பேசிட முடியாத தன் நிலையற்ற மனதை எண்ணி தன்மீதான கோபத்தையே ஜென்னிடம் காட்டினான்.

“பாரி…” ஜென் கைகளை பிசைந்தாள்.

“நான் ரொம்பவும் பொறுமையா இருக்கேன் ஜென்.”

“ஆமாம் ஆமாம். ரொம்ப பொறுமைத்தான். நாலு வருட பொறுமையாச்சே” என்றபடி மீண்டும் வந்த தமிழ்… “இந்த பொறுமையால் என்ன ஜென் கிடைத்தது. எதுவாயிருந்தாலும்… அது கோபமோ ஆற்றாமையோ அப்பவே காட்டியிருந்தா மனசிலிருக்கும் பாரம் குறைஞ்சிருக்கும். பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்திருக்கும். சுயநலமா நம்முடைய நலனை மட்டும் எதிர்பார்த்து ஓடி ஒளிஞ்சு இருக்கிறவங்களுக்கெல்லாம் மன வேதனைதான் மிட்சம்” என்றாள்.

“ஹேய்… யாருடி ஓடி ஒளிஞ்சா? துஷ்டனை கண்டால் தூர விலகனும் தெரியுமா தெரியாதா? அதேதான் பிடிக்காதவங்களையும் பக்கத்துலே வச்சிக்கிட்டு இருக்க முடியாது. நான் யாருக்கும் வலியையும் கஷ்டத்தையும் கொடுக்கல. நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என் மொத்த சந்தோஷமான என் பூவை, என் ஃபிரண்ட்ஷிப்பை மொத்தமா அழிச்சிட்டீங்க. உன்னை பார்த்தாலே உடம்பெல்லாம் எரியுதுடி. அப்படியே… ச்சை” என்று தூக்கிய கையை கீழே இறக்கியவன்,

“என் வாழ்க்கையிலேயே நான் பார்க்க கூடாது நினைக்கிறது உன் முகம் தாண்டி” என இரு கைகளையும் பின்னந்தலையில் கோர்த்து அழுத்தியவாறு முகத்தை மேல் உயர்த்தி ஆர்ப்பரிக்கும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயற்சித்தான்.

அதிகமாக பேசிவிட்டான். மிக அதிகமாக பேசிவிட்டான். அவனுக்கேத் தெரிந்தது. ஆனாலும் அந்நேர மனப்புழுக்கத்தை எப்படி ஆற்றுவதென்று தெரியாது வார்த்தைகளை சிதறி கத்தியும் விட்டான்.

அவளது பாரியின் வார்த்தைகளில் உறைந்து சிலையென நின்றவள் அவனை பார்த்தது பார்த்தபடியே இருந்தாள்.

உதடு துடித்ததிலேயே அவள் அழுகையை அடக்குகிறாள் என்பது ஜென்சிக்கு புரிந்தது.

எவ்வளவு கோபம், வெறுப்பு இருந்தாலும், தன்னுடைய பாரியின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வருமென்று தமிழ் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். மரித்தே விட்டாள்.

அப்போதும்… அவனின் மனநிலை அறிந்தும், தான் அவனுடன் வார்த்தையாடியிருக்கக் கூடாதென்று அவனுக்காகவே வருந்தினாள்.

பாரி கண்களை மூடி ஆழ்ந்து மூச்சினை வெளியேற்றியும் அழுத்தம் குறைவது போலில்லை. அவனின் நெஞ்சுக்கூடு ஏறியிறங்கி அவனது தன்னிலையில்லாத் தன்மையை பார்ப்பவருக்கு எடுத்துக்காட்டியது.

பாரியை அப்படி பார்ப்பதற்கு அவளுக்குத்தான் அதிகம் வலித்தது. அவன் எவ்வளவு அழுத்தத்தை உள்ளுக்குள் வைத்திருக்கிறான் என்பது அந்நொடி அவளுக்கு புரிந்தது.

ஜென்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பாரி தமிழை பார்த்து உதிர்த்த வார்த்தைகளில் ஜென்சியும் அதிர்ந்து போயிருந்தாள். அடுத்து என்னவென்று யோசிக்கும் நிலையில் அவளுமில்லை.

சடுதியில் தன்னை மீட்டுக்கொண்ட தமிழ்… ஜென்சியை நகர்த்தி பாரிக்கு முன் அருகில் வந்து நின்றாள்.

‘அச்சோ திரும்பவுமா!’ என்றிருந்தது ஜென்சிக்கு.

“தமிழ் வேண்டாம்” என்று அவளை கைபிடித்து தடுத்தாள் ஜென்.

ஜென்னின் கையை எடுத்துவிட்ட தமிழ்… ஒரு கணம் இமையை அழுந்த மூடி திறந்தாள்.

பாரியின் பேண்ட் பாக்கெட்டில் அவன் உணரும் முன் கையை விட்டவள்… அவளின் தொடுகை உணர்ந்து கண் திறந்த பாரி என்னவென்று கேட்கும் முன்… கேண்டியை எடுத்து பிரித்து அவனின் வாய்க்கு அருகே நீட்டியிருந்தாள்.

கருவிழி அசையாது உதட்டினை அவன் மேலும் இறுக்கமாக மூடிக்கொள்ள…

அவனின் மூக்கை அழுத்தி பிடித்தாள். சுவாசம் தடைபட அவன் வாய் தானாக திறந்துகொள்ள… கேண்டியை அவனின் வாயில் வைத்தாள்.

முதல் முறை அவனுக்கு பூ இவ்வாறு தான் உணவு ஊட்டியிருக்க… அந்நாள் நினைவில், அவனது பூவின் நினைவில் சட்டென்று அவனின் மன உணர்வுகள் மாற்றம் கொண்டன.

பாரிக்கு தன்னை கட்டுப்படுத்த முடியாத… ஒரு நிலையில் ஒன்ற முடியாத தருணங்களில், ஒரு முடிவை எடுக்க வேண்டிய சமயங்களில், ஆழ்ந்த யோசனையில் தன்னை நிதானித்துக்கொள்ள கேண்டி சுவைப்பது வழக்கம். இதுவும் அவனது பூவால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம்.

இதுபோன்ற சமயங்களில் பாரி நகம் கடிக்கும் பழக்கம் கொண்டிருக்க… அதனை விரட்டவே கேண்டியை சுவைக்க பழக்கப்படுத்தியிருந்தாள் பூ.

இன்று அதையே பாரியை கட்டுப்படுத்த தமிழ் கையாண்டாள்.

அவளின் அச்செயல் பாரிக்கு முதல் நாள் பூவை சந்தித்த நிகழ்வை நினைவுபடுத்திட…

“ஏண்டி இப்படி என்னை சாகடிக்குற?” எனக் கேட்டவனாக அங்கிருந்து வேகமாகச் சென்றிருந்தான்.

செல்லும் அவனையே இதழில் மலர்ந்த புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

‘அச்சச்சோ அவன் திட்டியதில் இவள் லசாகிட்டாளா?’ என்று தமிழை உலுக்கிய ஜென்… “ஆர் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டாள்.

பாரி பேசிய பேச்சின் தாக்கம் வருத்தமாக இருந்த போதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளது… தோளை குலுக்கி இல்லையென்று கண் சிமிட்டிய தமிழ்… “இப்போவாது அவனுடைய கோபம் கொஞ்சமா குறைஞ்சிருக்கும்ல ஜென்” என்றாள்

“இல்லை இல்லை உனக்கு முத்திப்போச்சு.”

“என்னது?”

“பைத்தியம்.”

“அவன் மேல.”

“இதுக்கு மேலையும் கிறுக்கு பிடிச்சு சுத்தாமல் இருந்தால் சரி” என்ற ஜென்… “அவன் எதுக்கு வந்தான் தெரியல… கேட்டுட்டு, அப்படியே இந்த டைரியை கொடுத்திட்டு வரேன்” என்று ஜென் பாரியின் வீட்டை நோக்கிச் சென்றாள்.

ஜென் அகன்றதும் அனைத்தும் ஓய்ந்தவளாக அப்படியே வாயில் படியில் அமர்ந்திட்டாள் தமிழ்.

அடுத்து பரிதிக்கு அழைத்திருந்தாள்.

வீட்டிற்கு வந்த பாரி… மொத்த உணர்வுகளும் வடிந்தவனாக தலையை தாங்கியவாறு நீள் இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

முகத்தை உள்ளங்கையால் அழுந்த துடைத்து… இருக்கையின் பின்னால் தலையை சாய்த்தவன் உடலை சற்று சரித்து கால்களை அகட்டி வைத்தான்.

அவனால் தமிழை பார்க்காதவரை எப்படியோ தெரியவில்லை. ஆனால் அவளை பார்த்த பிறகு தமிழ், பூ என்று இருவேறு மனநிலையில் தத்தளிக்கின்றான்.

‘பூவுடனான நட்பால் தமிழுக்கு துரோகம் செய்கிறோமோ’ என்று சிந்திக்கத் துவங்கியிருந்தான்.

“ராட்சசி… படுத்துறாள்.” வாய்விட்டே அரற்றினான்.

மீண்டும் சற்று நேரத்திற்கு முன் நடந்ததை அசைபோட்டவனின் முகம் தமிழின் பேச்சிலும் செய்கையிலும் தானாக மலர்ந்தது.

வசதியாக அவன் சிதறிய வார்த்தைகளை மறந்து போனான்.

தமிழ் அவியிடம் பேசுவதாக தன்னை ரசித்துக் கூறிய வார்த்தைகள் நெஞ்சத்தை நிறைக்க…

“வாலு… கொஞ்சம் கூட நீ மாறலடி” என்றவன் அவிக்கு அழைத்தான்.

‘இப்போ என்னவோ’ என்ற பதட்டத்தில் தான் அவி பாரியின் அழைப்பை ஏற்றான்.

“என்ன ஃபோட்டோ அது?”

எடுத்ததும் பாரி அவ்வாறு கேட்டதும் அவி “எந்த ஃபோட்டோ டா… என்ன?” என்று புரியாது வினவினான்.

“உன் ஃபிரண்டுக்கு எந்த போட்டோ அனுப்பின?”

“என் ஃபிரண்ட் நீதானடா! உனக்கு நான் எதுவும் அனுப்பலையே!” இப்போதும் சுத்தமாக அவிக்கு புரியவில்லை.

“ஓ… நான் மட்டும் தான் உன் ஃபிரண்டா?”

“ப்ளீஸ் பாரி ஸ்ட்ரெய்ட்டா கேளு?” விட்டால் அழுதுவிடும் நிலையில் கேட்டான்.

“ஜஸ்ட் கிட்டிங் அவி” என்ற பாரி தமிழ் தன்னை போலீஸ் உடையில் சிலாகித்துக் கூறியதைக் கூறி… “என்னையே வெறுப்பேத்துறாள் மச்சான். அவளுக்கு எவ்வளவு தைரியம்” என்று சன்னமான சிரிப்புடன் கூறினான்.

‘இவன் அவ(ள்)கிட்ட கவுந்திட்டான்னு சொன்னால் நம்மை காவு வாங்கிடுவானே’ என பாரியின் மனம் புரிந்தவனாக எண்ணிய அவி அவன் போக்கிலேயே உடன் மகிழ்ந்தான்.

“நீ இன்னும் அதே பழைய பாரி தாண்டா. அதுக்கு சாட்சி இப்போ நீ சிரிக்கிறியே அதுதான். உன் வேலையில் மட்டும் தான் இறுக்கம். அதையே உனக்கு முழுசா போட்டுக்கிட்டு இருக்க. வெளிய வா மச்சான். வீட்டுக்கு போடா. அம்மா, அண்ணாலாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று எப்படியாவது நண்பனை அவனது உறவுகளோடு சேர்த்து வைத்திட வேண்டுமென பேசினான் அவினாஷ்.

“அவங்களால் நான் இழந்தது ரொம்ப பெருசுடா. யார் வேணாலும் ஃபிரண்ட் ஆகலாம். பார்த்ததும் ஒருத்தரை ஃபிரண்டுன்னு ஒட்டிக்கலாம். ஆனால் உயிர்வரை அந்த ஃபிரண்ட்ஷிப் ஆழமா இறங்க அவங்களுக்குள் எந்தளவுக்கு புரிதல் வேணும் தெரியுமா? அது எளிதில் அமையாது அவி. இன்னொரு பூ எனக்கு கிடைக்கமாட்டா(ள்). அதுக்காக நீ, ஜென்லாம் என் ஃபிரண்ட் இல்லையா? நமக்குள்ள இருக்கிறது ஆழமான நட்பில்லையா கேட்காத. எனக்கு பதில் தெரியல. ஆனால் பூ இடத்தில் என்னால் யாரையும் வச்சுப் பார்க்க முடியாது.

உலகத்தில் நமக்குன்னு எத்தனை பேர் இருந்தாலும் நமக்கே நமக்குன்னு ஒருத்தவங்க இருப்பாங்கத் தெரியுமா, அந்த ஸ்பெஷல் பெர்சன் எனக்கு என் பூ தான்.”

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மிக நீளமாக பேசிய பாரியின் வார்த்தைகள் அனைத்தும் அப்பட்டமான உண்மை. பாரி பேச பேச, அவிக்கும் அப்படிப்பட்ட ஒரு நபரின் முகம் கண்ணில் தோன்றி மறைந்தது. கூடவே வேண்டாத சில நிகழ்வுகளும் காட்சிகளாய் விரிய அந்நபரின் முகத்தை ஒதுக்கித் தள்ளினான்.

“புரியுது பாரி. பட் இது லைஃப். கொஞ்சம் சீக்கிரம் முடிவெடு. போயிட்டா திரும்ப வராது.”

“ஐ க்னோவ்” என்ற பாரி… “என்னால அவளை பார்த்துக்கிட்டு எந்நேரமும் கோபப்பட்டுகிட்டே இருக்க முடியாது மச்சான். நான் நாளைக்கே அங்க உன் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிடுறேன். உனக்கு ஒன்றும் ப்ரொப்ளம் இல்லையே” என்றான் பாரி.

நிஜத்தில் தமிழ் மீது கோபம் உள்ளது போல் காட்டிக்கொள்வது முடியாது என்பதே காரணம். அவளை பார்த்ததும் தான், கோபம் இருந்த சுவடின்றி வடிந்திருந்ததே. ஆனால் அவள் கொடுத்த காயத்தின் ரணம். எங்கு மேலும் கீறப்பட்டுவிடுமோ… இன்று போல் வார்த்தைகளை கொட்டிவிடுவோமோ என அஞ்சியே இந்த முடிவு.

அவிக்கு அவன் கேட்டதில் பயந்து வந்தது.

‘எனக்கு ஒன்னுமில்லைடா. உன் அவளுக்குத் தெரிஞ்சா நான் தொலைஞ்சேன். உனக்காக வந்து அங்க உட்கார்ந்திருப்பவளுக்கு, அவளை பார்க்க பிடிக்காது இடம் மாறுற தெரிஞ்சா? அய்யோ…’ மனதில் புலம்பினான்.

“ஓகேடா… நாளைக்கு மீட் பண்ணுவோம்.”

“டேய்… பாரி… பா…” அவி பதில் சொல்வதற்கு முன் பாரி வைத்திருந்தான்.

“அய்யோ… இன்னமும் என் தலை உருளும் போலிருக்கே” என்ற அவி அடுத்து தமிழ் என்ன கூத்து கட்டப்போகிறாளோ என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

கதவு திறந்திருக்கும் போதும் இருமுறை தட்டியும் பதிலின்றியிருக்க… ஜென் உள்ளே வந்திருந்தாள். பாரி யாருடனோ பேசிக்கொண்டிருக்க… அமைதியாக அவனுக்கு பின்னால் வாயிலில் அருகேயே நின்றவள் பாரி அவியுடன் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டாள்.

அவளுக்கு “அடப்பாவி” என்றிருந்தது.

இதனை உடனடியாக தமிழிடம் சொல்ல வேண்டுமென திரும்பிய ஜென்…

“என்ன வந்த உடனே போற?” என்ற பாரியின் கேள்வியில் அப்படியே நின்று அவனை ஏறிட்டாள்.

“அது வந்து பாரி… ஆங்க், இந்த டைரியைக் கொடுக்கத்தான் வந்தேன்” என அதனை அவன் முன் நீட்டினாள்.

“நானும் இதை வாங்கத்தான் வந்தேன். கடைசியில வாங்காம வந்துட்டேன்” என்றவன் டைரியை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டான்.

“அடுத்தவங்க பெர்சனல் படிக்கிறது தப்பில்லையா பாரி?”

எங்கே அமிர்தா பாரியின் மீதான நேசத்தைப்பற்றி ஏதேனும் எழுதி வைத்து, அதனை பாரி படித்து… கோபமாக என்றாலும் அதனை நேரடியாகத் தமிழிடம் காட்டி இப்போதுதான் கொஞ்சம் இறங்கி வருகிறான். அதில் மண் விழுந்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடுமோ என்று அவளுக்கு கவலை. அதனாலேயே டைரியை படிப்பதை தடுப்பதற்காகக் கேட்டாள்.

“இதை நமக்கு ஆதாரம் அப்படிங்கிற வகையில் பார் ஜென்” என்ற பாரி, “இதிலென்ன குண்டு இருக்கோ?” என்று ஜென்சியை அர்த்தமாகப் பார்த்தான்.

_______________________

தமிழின் அழைப்பு என்றதும் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக அலைபேசியை எடுத்திருந்தான் பரிதி.

“பிஸியா மாமா?”

“வொர்க், அது எப்போதான் இல்லாமல் இருந்திருக்கு. என்ன விஷயம் தமிழ்?”

இந்த நான்கு வருடங்களில் தமிழ் பரிதியை அழைத்தவை யாவும் மனதில் வலி நிறைந்த நேரங்கள். எப்போதெல்லாம் பாரம் அதிகமாகி வலி கூடிப்போகிறதோ அப்போதெல்லாம் அதனை இறக்கி வைத்திட பாரிக்கு பின் அவள் நாடிய நபர் பரிதி மட்டுமே!

தமிழின் மன அமைதிக்கு தன்னை விட்டால் இப்போது பாரியுமில்லையென அது எந்நேரமாக இருந்தாலும் தமிழின் அழைப்பென்றால் உடனடியாக ஏற்றிடுவான் பரிதி.

மதிய வேளையில் பாரியை நேருக்கு நேர் பார்த்ததையும், இப்போது சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்ததையும் அவனின் வார்த்தைகளையும் ஒன்று விடாதுக் கூறினாள். மொத்தமாக உடைந்து விட்டிருந்தாள்.

ஜென்னிடம் தன்னைத் திடமாகக் காட்டிக்கொண்ட தமிழ் இவளில்லை. தாய் மடியில் அனைத்து வலிகளையும் இறக்கி வைக்கும் சேய் ஆகியிருந்தாள் அக்கணத்தில்.

“எனக்கு அவன் இல்லாம முடியல மாமா. அவனுக்கு அந்த மாதிரி தோணலையா? நான் அவனுக்கு அவ்வளவு தானா? இப்போக்கூட அவன் பேசின வார்த்தைகள் என்னைவிட அவனுக்கு அதிகம் வலிக்கும் மாமா. அப்படியிருக்க அவன் ஏன் அப்படி பேசினான்? உண்மையாவே என்னை வெறுக்கிறானா மாமா?” கதறிவிட்டாள். அதற்கு மேல் அடக்கி வைக்க முடியாது மொத்தமாக சிதறினாள். நான்கு வருட அழுத்தம் ஒட்டு மொத்தமாக வெளிவரத் துடித்தாள். கண்களில் நீர் கரகரவென வழிந்தது.

“இந்த நேரம் அவன் பக்கத்தில் இருந்தும் என்னோட வேதனையை உங்கக்கிட்ட ஷேர் பன்றேன்னு எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு மாமா. எனக்கு எல்லாம் அவன் தான்னு அவனுக்குத் தெரியும் தான, அப்புறம் ஏன் மாமா என்னை தூரமா தள்ளி வச்சிருக்கான். ரொம்ப வலிக்குது மாமா” என்ற தமிழ் முகம் மூடி அழுதிட… குழந்தையாய் அவளை தன் மடி தாங்கினான் பரிதி.

தன்னுடைய வேதனையை பகிரும் நேரங்களில் கூட தமிழின் குரலில் ஒரு திடம் இருக்கும். ஆனால் இன்று அவள் முதலில் சொல்லிய ஹலோவிலேயே அவளது மனம் உருக்குலைந்திருக்கிறாள் என்பதை கணித்த பரிதி அவளிடம் பேசிக்கொண்டே அவளிருப்பிடம் வர கிளம்பியிருந்தான். சரியான தருணத்தில் தனக்கு மகளாகிப்போன மைத்துனியை மடி தாங்கியிருந்தான்.

வெயிலில் சுற்றித் திரிபவனுக்கு இளைப்பாற நிழல் கிடைத்தால் எப்படியிருக்கும். இப்போது அந்நிலையில் தான் தமிழ். சாய்ந்திட தோள் கிடைத்ததும் அத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனைத்தும் இமை உடைத்து வெளியேறிக்கொண்டிருந்தது.

பாரி சென்றதிலிருந்து… அவனாக புரிந்து வருவானென்று திடமாக இருந்தவளின் உறுதி யாவும் இன்று அவனை கண்டதிலும் அவன் பேசியதிலும் ஆட்டம் கண்டிருக்க… தமிழின் நம்பிக்கை யாவும் எங்கோ சென்றிருந்தது. அதன் வெளிப்பாடே அவளின் அழுகையென அவளை அழவிட்டான் பரிதி. மொத்தமாக அழுது அழுத்தம் குறையட்டும் என எண்ணினான்.

எதுவுமேயில்லை எனும் நிலையில் உடைப்பெடுக்கும் கண்ணீரின் முடிவில் வரும் திடம் அசாத்தியமானது. தனி உத்வேகத்தை கொடுக்கும் வல்லமை அந்த இறுதித்துளி கண்ணீருக்கு உள்ளது.

ஜென்சி பாரியிடம் டைரியை கொடுத்துவிட்டு திரும்பி வந்த போது தமிழ் தெளிந்திருந்தாள்.

பரிதியின் மடியில் தலை வைத்து கால்களை சுருட்டி நீள் இருக்கையில் சுருண்டிருந்தாள்.

பரிதியின் ஒரு கரம் அவளின் புஜத்தில் தட்டிக்கொடுக்க… மற்றொரு கரம் அவளின் தலையை வருடிக் கொண்டிருந்தது.

“ரொம்ப கஷ்டப்படுத்தினால் வேண்டான்னு விட்டுடு அம்மு.”

பரிதிக்கு அவனது தம்பியின் மீதே அத்தனை கோபம் எழுந்தது. இவள் இங்கு இத்தனை வலிகளை சுமந்திருக்கும் போது கூட பாரியின் நிலையிலிருந்து யோசிப்பவளை அவன் எப்படி விலகியிருக்கின்றான் என்கிற கோபம். அத்தனை வருட அன்பை எப்படி ஒரு நொடியில் தள்ளி நிறுத்த முடியுமென்கிற கோபம். இத்தனை வருட ஒத்தி வைப்பில் ஒரு முறை கூட அவன் இவளைப்பற்றி யோசிக்கவில்லையே என்கிற கோபம்.

அதனாலேயே தமிழ் செய்யமாட்டாள் என தெரிந்தும் அவ்வாறு கூறினான்.

பரிதி பாரியை விட்டுவிடு என்று சொல்லிய அடுத்த கணம்… துப்பாக்கியிலிருந்து புறப்படும் குண்டின் வேகத்தில்…

“அதுக்கு நான் செத்திடுவேன் மாமா” என மொழிந்திருந்தாள்.

“அவ்ளோ காதலா தமிழ்?” அவனின் கைகள் தட்டிக்கொடுப்பதையும் வருடிக்கொடுப்பதையும் நிறுத்தவில்லை.

“காதலின் மொத்தமும் அவன் தான் மாமா.”

“அடிப்பாவி.”

மூன்றாவதாக ஒரு குரல் கேட்டிட… இருவரும் யாரென்று பார்த்திட, ஜென்சி.

“நான் கேட்டப்போ மே பீ சொன்னியேடி. இப்போ பிரேமா, பியார், காதல், லவ், இஷ்டம் ரேஞ்சுக்கு சொல்லுற” என்று வாய் பிளந்தாள் ஜென்.

“என்கிட்டவே இப்போதான் சொல்றா(ள்)?” என்ற பரிதியிடம் கூட ஜென்னின் அதே வியப்பு.

“தெரிய வேண்டியவனுக்கே இன்னும் சொல்லலை” என சுரத்தேயின்றிக் கூறிய தமிழை பார்க்கையில் இருவருக்கும் பாவமாகத்தான் இருந்தது.

“நோ சிம்பத்தி” என்றவள் கலைந்திருந்த கேசத்தை சரி செய்தவாறு எழுந்து அமர்ந்தாள்.

இருவரும் பேசட்டுமென்று இரவு உணவிற்கு தயார் செய்ய அவர்களுக்கு தனிமை கொடுத்து அடுக்கலைக்குள் நுழைந்த ஜென் அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

“மதியம் சாப்பிடலையா நீ?” எனக் கேட்க தமிழ் திருதிருத்தாள்.

“இதே சொல்ல வேண்டியவங்க சொல்லிட்டு போயிருந்தா சாப்பிட்டிருப்பத்தான?” ஒரு தோழியாக ஜென் கேட்ட கேள்வியில் தமிழ் சுணங்கினாள்.

“இப்போலாம் நினைத்தாலும் சொல்லுறதுக்கு அப்படி அந்த ஆளில்லை” என்ற தமிழ், “தனியா சாப்பிடத் தோணல ஜென்” என்க…

“அவனை பார்த்ததால் தோணாலன்னு சொல்லு” என்று கடிந்தாள்.

“ஷீ இஸ் கரெக்ட்” என்று ஜென் சொன்னதிற்கு வழி மொழிந்தான் பரிதி.

“இனி அவனை நீ தினமுமெல்லாம் பார்க்க இருக்காது” என்ற ஜென்சி, பாரி அவியிடம் பேசியதை சொல்ல…

“அந்தளவுக்கு அவனுக்கு நான் வேண்டாதவளாகிட்டனா?”

முறைத்த தமிழிடம் என்னவென்ற பரிதி… “நீ சாப்பாடு கொண்டு வாம்மா. இப்போ அவள் சாப்பிடுவாள்” என்றான் ஜென்சியிடம்.

மதியத்திற்காக ஜென்சி செய்து வைத்திட்டுச் சென்றிருந்த உணவு அப்படியே இருக்க… சூடு செய்து தட்டிலிட்டு கொண்டு வந்து பரிதியிடம் கொடுத்தாள்.

பரிதி தமிழிடம் தட்டினை நீட்டிட… அவளோ வாய் திறந்து காண்பித்தாள்.

சிறிதும் தயக்கமின்றி அவள் ஊட்டிவிடச் சொல்ல… தாமதிக்காது எழுந்து சென்று கையினை கழுவி வந்தவன் கண்களில் துளிர்த்த நீரை மறைத்தவனாக அவளுக்கு ஊட்டிவிடத் தொடங்கியிருந்தான்.

அவனுக்கும் இளாவுக்குமான திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிதி தமிழுக்கு ஊட்டிவிட்ட நினைவு நெஞ்சின் மேலெழும்ப இருவருமே உணர்வின் பிடியில். எத்தனை அழகிய தருணம் அது. அன்றைய நாளின் சந்தோஷம் போல் இந்த நான்கு வருடங்களில் அவ்வீட்டாருக்கு வாய்க்க பெறவில்லை.

உணர்வுக் குவியலாக உண்மையான அன்பு கண்களில் வெளிப்பட அவர்களிருந்த தோற்றத்தை புகைப்படம் எடுத்த ஜென் பாரிக்கு அனுப்பி வைத்தாள்.

தமிழ் உண்டு முடித்ததும் பரிதி அங்கிருந்து கிளம்ப…

“அவளுக்கு ஒரு ஐடியா கொடுத்திட்டு போங்கண்ணா. இல்லைன்னா என் தலையை உருட்டுவாள்” என்ற ஜென்சி பரிதி செல்வதைத் தடுத்தாள்.

“என்னைக் கேட்டால் தமிழுக்கு அவன் வேண்டான்னு தான் சொல்லுவேன். அவனுக்காக இவள் தான் வாழ்க்கையை தெரிஞ்சே தொலைச்சிக்கிட்டு இருக்கா(ள்).

பட் இது அவளோட லைஃப் அவள் தான் முடிவு பண்ணனும். அவளோடது என்ன முடிவாயிருந்தாலும் நான் துணையிருப்பேன்” என்று தமிழை ஆழ்ந்து பார்த்தவாறே வெளியேறியிருந்தான்.

******

இரவு நேர ரோந்து முடித்து அப்போது தான் வந்து மெத்தையில் விழுந்தான்.

நேரம் நள்ளிரவை கடந்திருந்தது. இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் முன் விடியல் தொடங்கிவிடும்.

அந்நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டிட… மேசையில் வைத்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மின் விளக்கை போடாது கதவை திறந்தவன் தனக்கு எதிரே வாயில் படியில் நின்றிருந்த உருவத்தை நோக்கி துப்பாக்கியை காண்பித்திருந்தான்.

“அய்யோ… அம்மா” என்று அலறிய குரல் பரிச்சயமானதாக இருக்க… எட்டி வாயில் விளக்கை ஒளிரச் செய்த பாரி யாரென்று முகம் பார்த்திட, மூன்று பெட்டிகளும், இரண்டு தோள் பையுடன் நின்றிருந்தான் அவினாஷ்.

“அவி… நீயாடா?” எனக் கேட்டவன், “அரசியல்வாதி மேல கை வைச்சிட்டோமே எவனாவது என்னை போட்டுத்தள்ள வந்துட்டான்னு அலார்ட்டா வந்தா நீ இப்படி வந்து நிக்கிற” என்றான்.

அத்தோடு அவன் தூக்க முடியாது தூக்கிக்கொண்டு வந்த பெட்டிகளையும் அனாயசமாக தூக்கி உள் வைத்தான்.

“சரி என்னடா இந்நேரம் பெட்டியும் கையுமா, வெளியூர் போறியா?”

“அதுக்கெதுக்குடா இந்த ராத்திரி நேரத்தில் உன்னைத்தேடி வரப்போறேன்” என்ற அவி அங்கிருந்த இருக்கையில் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அமர்ந்து ஆழ்ந்து மூச்சு விட்டவனாக, “இங்க ஃப்ரீயா இருக்க ரூமில் என் திங்க்ஸ்லாம் வச்சிடுடா. நான் உன்னோடு தான் தங்கப்போறேன்” என்று சொல்லியதோடு அப்படியே சரிந்து கண்களை மூடிக்கொண்டான்.

“டேய்… என்னடா?”

“அந்த வீட்டுக்காரன் என்னை துரத்திவிட்டுட்டான் மச்சான்” என்று கண்களைத் திறவாமலேயே கூறினான்.

“ம்ம்” என்று தோள் குலுக்கிய பாரி நண்பனின் உடைமைகளை காலியாக இருந்த மற்றொரு அறையில் வைத்தான்.

‘இந்த ரூமுக்கு ஒரு கட்டில் வாங்கணும்.’   சொல்லிக்கொண்டான்.

“நான் உன்னோட இருக்கலாம் சொன்னா… நீ இங்க வந்திருக்க, பேய் மாதிரி” என்று சொல்லியவன் அவியின் காலிலேயே ஒரு உதை விட்டான்.

“ஹேய் அவி” என்று அவனை உலுக்கி எழுப்பிய பாரி…

எதையோ கண்டு கொண்டவனாக,

“அந்த வீடு உன்னோட சொந்த வீடு தான… அப்புறம் எப்படி வீட்டுக்காரர்?” என்று கேட்க…

கருவிழிகளை அனைத்து பக்கமும் சுழற்றி… “இப்போ என்ன நான் உன் கூடத் தங்கக்கூடாதா?” என கோபமாகக் கத்துவது போல் குரலை உயர்த்தி, “தூக்கம் வருதுடா” என்று கால்களை குறுக்கி படுத்துவிட்டான் அவினாஷ்.

உண்மையிலேயே தூங்கிவிட்டானோ அல்லது நடிக்கின்றானோ அவனையே சில நொடிகள் ஆழ்ந்து ஆராய்ந்த பாரிக்கு… அவியின் இங்கு தங்கும் படலம் யாரின் யோசனை என்று கண்டறிவது அவ்வளவு கடினமாக இருந்திடவில்லை.

எல்லாம்  தமிழின் வேலையென்று நொடியில் யூகித்துவிட்டான்.

‘என்ன செய்தாலும்… உன் முகம் பார்த்தே இருந்தாலும் என்னுடைய கோபம் மட்டும் குறையாது.’ பூவுடன் கைகோர்த்து நடக்கும் இரவு வேளை நினைவில் வர அவன் வார்த்தைகளின் உறுதி தீவிரம் அடைந்தன.

வெளியில் சென்று விளக்கை அணைத்து கதவினை அடைத்துவிட்டு வந்த பாரி… தூங்கும் அவியை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு சென்று தன்னுடைய அறை மெத்தையில் கிடத்தி அருகில் படுத்துக்கொண்டான்.

“கட்டிக்கிட்ட பொண்ணிருக்க இப்படி என்னைத் தூக்கிட்டு வந்து பக்கத்துல படுக்க வச்சு தூங்கிறானே.” உறக்கத்தில் உளருவதைப்போல் அவி புலம்ப…

“நடிக்கிறியாடா மலைக்குரங்கே” என்று அவனின் இடையில் ஒரு எத்து எத்தினான் பாரி.

அவி கட்டிலிலிருந்து உருண்டு அந்தப்பக்கம் தரையில் விழுந்திருந்தான்.

எழ முடியாமல் எழுந்து பாரியை முறைத்து… “எதுக்குடா எத்துன?” எனக் கேட்க பாரியிடம் பதில் இல்லை. போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டான்.

“போடா நான் போறேன். உனக்கு என் மேல பாசமே இல்லை” என்று கால்களை உதறிய அவி வராத கண்ணீரை துடைத்திட…

“மூ****டு படுடா” என்ற பாரியின் குரலில் வேகமாக மறுபக்கம் ஏறி படுத்தான்.

*********

காலை நேர ஓட்டத்திற்கு சென்ற பாரி வீட்டிற்குள் நுழையும் போது… உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது.

அவி யாரிடமோ போன் பேசிக்கொண்டிருப்பான் என்று எண்ணிக்கொண்டவன், வீட்டிற்கு முன் மதில் சுவருக்கு உள்ளேயே இருக்கும் செடிகளுக்கு நீர்விட ஆரம்பித்தான்.

பேச்சுக்குரல் இரண்டாகவும், சிரிப்பு சத்தமும் அதிகரிக்க…

“இது போன் கான்வர்சேஷன் மாதிரி இல்லையே” என உள்ளே வந்தவன் அய்யனாராக நிமிர்ந்து நின்று ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தான்.

“அவி நான் இங்க இருக்கணுமா? இல்லை இன்னும் வேறெங்காவது ஓடிப்போகனுமா?” கத்தவில்லை, குரலை உயர்த்தவில்லை. ஆனால் அத்தனை உறுதி, அவ்வளவு அழுத்தம்.

அவியும் தமிழும் பேசி சிரித்துக் கொண்டிருந்த காட்சி பாரியின் கோபத்திற்கு காரணமாக இருந்தது.

தமிழை விட்டு அவன் விலகிச்சென்றிட நினைக்க… அவளோ சட்டமாகத் தன் வீட்டிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவ்வளவு ஆத்திரம்.

தன்னுடைய கோபத்திற்கெல்லாம் மதிப்பே இல்லாததைப்போல் தமிழின் செயல்கள் இருப்பதாகக் கருதினான்.

தனக்கு பிடிக்காதென்று தெரிந்தும் தமிழ் தனக்கு பக்கத்திலேயே தங்கியது. நேற்று கோபத்தில் அவ்வளவு பேசியும், அதனை பொருட்படுத்தாது அவனது வாயில் கேண்டியை திணித்தது. அதன் சுவையை ஆழ்ந்து ருசித்திட்ட போதும் பூவென்ற நினைவு தமிழின் கசப்பை அவனுள் எடுத்துக்காட்டிட மறக்கவில்லை. அதனால் வந்த கோபம் வேறு அவனுள் முனுக்கென்று மின்னிக்கொண்டிருந்த வேளை, அவளுடன் வீண் நிகழ்வுகள் எதற்கென்று… மீண்டும் அவளிடமிருந்து தூரம் சென்றிட எண்ணி அவியுடன் தங்கிட நினைக்க அவனையே அவனுடன் தங்க வைத்த கோபம். அத்தோடு, தான் அத்தனை வெறுக்கின்றேன் எனத் தெரிந்தும் தன் வீட்டில் உரிமையாக அமர்ந்திருகின்றாள் என்கிற கோபம்.

கோபத்தினால் அவளை புரிந்துகொள்ளவில்லையா அல்லது புரிந்துகொள்ளவே மறுக்கின்றானா?

அவளின் வருத்தம் யாவும் அவனைச் சென்றடைய கூடாதென்பதில் கவனமாக இருப்பவளின் உள்ளத்து வேதனைகளை அவனறிந்திட வாய்ப்பில்லை தான்.

அவள் வருந்தினாலும் வருந்தப்போவது அவன் தான் என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறான்.

பாரி கூறியதில் சட்டென்று கன்னம் இறங்கிட்ட நீரை புறங்கை கொண்டு துடைத்திட்டவள், மௌனமாக வெளியேறியிருந்தாள்.

அவியை முறைத்தவன் அறைக்குள் நுழைந்து அடுத்த நொடி அவியென வீடே உடைந்திடும் அளவிற்கு கத்தினான்.

‘இப்ப என்னவோ?’ என்று ஓடிய அவி என்னவென்க…

“இங்கிருந்த போட்டோ எங்கே?” என கட்டிலுக்கு அருகிலுள்ள சிறு மேசையை சுட்டிக் காட்டினான்.

“அங்கதான் இருக்கேடா!”

“இது இல்லை… இதை யார் இங்கு வச்சது” என்று சற்று நேரத்திற்கு முன் தமிழ் மாற்றி வைத்திட்ட போட்டோவை கையிலெடுத்தவன் அதனை விசிறியடிக்க முயற்சித்து முடியாது போக… தூக்கிய கையை மெதுவாக இறக்கி மீண்டும் அதேயிடத்தில் வைத்திட்டான்.

புகைப்படத்தில் பாரியும் தமிழும். பாரி தமிழின் கழுத்தில் தாலி கட்டும் காட்சி.

அதற்கு முன் அங்கிருந்த புகைப்படம் பாரியும் பூவும். பள்ளிச் சீருடையில்.

அந்த ஃபோட்டோவினைத் தூக்கி எறிந்திட முடியாத கோபமும் தமிழின் மீதே திரும்பியது.

“இப்படியெல்லாம் செய்து என்னை மாத்த முயற்சிக்கலான்னு நினைக்க வேண்டாம். சொல்லி வை. வீண் கற்பனை வளர்த்துக்கிறது நல்லதில்லை.

நான் இங்க வந்த கேஸ் முடிஞ்சிட்டா அடுத்த நொடி இங்கிருந்து கிளம்பி போயிட்டேயிருப்பேன்” என்ற பாரி மீண்டும் அப்புகைப்படத்தினைக் கேட்க…

“தமிழ் எடுத்துக்கிட்டு போயிட்டாள்” என்றான் அவினாஷ்.

“ஒழுங்கா அதை வாங்கிக்கொடு” என்றவனின் பார்வை அவனது திருமணப் புகைப்படத்தில் பதிந்து மீண்டது.

அதில் தமிழின் முகத்தை ஆழ்ந்து பார்த்திருந்தால் அவளின் கண்களில் ஒளிரும் ஒளியை கண்டு கொண்டிருப்பானோ!

தமிழை அப்படி வெறுக்கின்றான். ஆனால் ஏதோ ஒன்று அவனுள் அவளுக்குத் துணையாக. அந்த ஒன்றை புரிந்துகொண்டால் தமிழை ஏற்றுக்கொள்வானோ. அவளுடன் வாழ்ந்திடுவானோ!

“பாரி…” என்று ஏதோ சொல்ல வந்த அவியை கைகாட்டி தடுத்தவன்,

“நீயேன் அவி ஜென்னை தள்ளி நிறுத்துற?” எனக் கேட்டிருந்தான்.

தங்களுடைய விடயம் இன்னும் தமிழுக்கே தெரியாத போது, பாரிக்கு எப்படித் தெரிந்ததென்று அவிக்கு சில நொடி அதிர்வு.

“என் காரணம் வேறு மச்சான்.”

“அவரவருக்கு அவரவர் காரணம் பெருசு அவி.” பாரி அசறாது பதில் வழங்கினான்.

“உனக்கு கல்யாணம் ஆகிருச்சு பாரி. தமிழ் உன் வைஃப்.”

“அப்படியா? எனக்குத் தெரியாமப்போச்சே.” பாரியிடம் நக்கல் வழிந்ததோ.

“சரி எத்தனை நாளுக்கு, வருஷங்களுக்கு இப்படியே இருக்கப்போற?” இன்று அவியும் விடுவதாக இல்லை.

பாரிக்கு தமிழ் மீது விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை. அவனின் மனம் ஒப்பவில்லை. அவ்வளவே. அவன் வேண்டாமென்று மறுத்த ஒன்றை அவள் வேண்டுமென்று ஏற்றுக்கொண்டதோடு அவனையும் செய்ய வைத்திட்ட கோபம் மட்டுமே அவனுள். அவன் நினைத்தாலும் அவளை வெறுத்திடத்தான் முடியுமா? வெறுப்பில்லாமலே வெறுப்பு உள்ளதென வாழ்கிறான்.

பாரியின் உண்மை மனம் புகைப்படத்தை மீண்டும் அதேயிடத்தில் அவன் வைத்ததுமே அவிக்கு தெளிவாக விளங்கிவிட்டது.

அதனாலேயே அவனுக்கு புரிய வைத்திடும் முனைப்புடன் கேட்டான்.

புரிய வேண்டியவனுக்கு புரியாமல் இருந்தால் தானே புரிய வைத்திடும் முயற்சி வெற்றி அடையும்.

புரிந்து புரியாததைப்போல் இருந்தால்?

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
34
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment