Loading

அத்தியாயம் 6 :

“சார் போலாமா?”

ஹோம் மினிஸ்டரை சந்திப்பதற்காக அனுமதி வாங்கியிருந்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்க ஜென்சி பாரிக்கு நினைவுக் கூர்ந்தவளாகக் கேட்டாள்.

“வென் டிட் ஷீ கம்?”

“வாட் சார்.”

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது பாரி ஒன்று கேட்டிட, உண்மையிலேயே அவன் என்ன கேட்கிறானென்று புரியாது வினவினாள்.

“உன் ஃபிரண்ட்?”

இப்போது புரிந்தது. இருந்தும் அவனை சீண்டினாள்.

“அவி உனக்கும் பிரண்ட் தானே பாரி.”

அவளை முடிந்த மட்டும் முறைத்தான்.

“உண்மையாவே உனக்கு நான் என்ன கேட்கிறேன் விளங்கல? நான் ஷீ சொன்னனா ஹீ சொன்னனா உனக்கு கேட்கலை… அப்படித்தான?”

ஆமாமென்று வேகமாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“வெல்” என்றவன் கேண்டியை சுவைத்தான்.

சில நிமிடங்களில் பாரி வெளியேற அவனை பின் தொடர்ந்தாள் ஜென்சி.

கணபதி காருடன் தயாராக இருக்க…

“நான் மட்டும் போயிட்டு வர்றேன்” என்ற பாரி தன்னுடைய இருசக்கர வாகனம் நோக்கி செல்ல…

“விக்டிம் லேடி. சோ, நானும் வர்றேன்” என்றாள் ஜென்சி.

உண்மையில் காரணம் அதுவல்ல. பாரியை அங்கு அவரை சந்திக்க தனித்து அனுப்ப அவளுக்கு மனமில்லை. ஏற்கனவே மினிஸ்டரின் மீது கோபமாக இருப்பவன், நேரில் பார்க்கும்போது என்ன செய்வானோ என்று அவளுக்கு பயந்து வந்தது. அத்தோடு அது அமிர்தாவின் வீடு. பாரி எந்தளவிற்கு நிதானத்தோடு இருப்பானென்று அவளுக்குத் தெரியவில்லை. அவனின் பதவி, தைரியம், விவேகம் எதுவும் அவளிடத்தில் நினைவில்லை. நிஜத்தில் நண்பனுக்கு அரணாக செல்ல நினைத்தாள்.

ஜென்சியை ஆழ்ந்து பார்த்தவன்…

“லெட்ஸ் கோ” என சொல்லிட… அவனது இரு சக்கர வாகனத்தின் பின் அமர்ந்தாள் ஜென்சி.

செல்லும் வழியில் சிக்னலில் வண்டி நின்றிட…

“உன் வண்டியில் உன் ஃபிரண்ட் அவளைத் தவிர யாரையும் ஏத்தனது இல்லதான?” என்றாள் ஜென்சி.

கண்ணாடியின் ஊடே ஜென்சியை அடி கண்களால் பார்த்தானேத் தவிர எதுவும் சொல்லவில்லை.

“உன் கோபம் குறையவே குறையாதா பாரி. தமிழ் பாவம்.”

“ஜஸ்ட் ஷட் அப் ஜென். டோன்ட் டாக் அபௌட் தட்.” முகம் காட்டாது சீறீனான்.

“நான் டிசி. நீ எஸ்.ஐ. அவ்வளவுதான் நமக்குள்ள” என்றவன் அத்தோடு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“அவ்வளவுதான” என்றவளுக்கு உள்ளுக்குள் கடுகடுவென வந்தது.

ஹோம் மினிஸ்டரின் வீட்டிற்கு முன் வந்து வண்டியை நிறுத்திய பாரி… ஜென்சி இறங்கியதும் ஸ்டாண்ட் இட்டவாறு இறங்கி நின்றான்.

“பொறுமையா டீல் பண்ணு…ங்க சார்ர்ர்…” உதட்டை இழுத்து வைத்தாள்.

சிரிப்பு வந்தாலும் மறைத்துக் கொண்டான்.

“நான் பழைய பாரி கிடையாது ஜென்.”

“நல்லாவேத் தெரியுது.”

இருவரையும் பார்த்ததும் எவ்வித கேள்வியும் கேட்காது… காவலாளி உள்ளே அனுமதித்தார்.

“பாரி…” மினிஸ்டரை நேரில் பாரி சந்திக்கவிருக்கின்றான். ஒரு காலத்தில் அவன் காதலித்த பெண்ணின் தந்தை அவர். அவர்களின் காதலுக்கு முதலில் மறுப்புத் தெரிவித்தவர். இருவரின் சந்திப்பு. அதுவும் அமிர்தாவின் இறப்பு இங்கு வழக்காக. ஜென்சிக்கு சற்று உதறலாகத்தான் இருந்தது. அதனாலே மீண்டும் அவனை எச்சரிக்கை செய்ய அழைத்திட…

“உன் ஃபிரண்ட் சொல்லிவிட்டாளா. என்னை பேம்பர் பண்ண சொல்லி. நாலு வருசமா தனியாத்தான் இருந்தேன். என் பூவைத்தவிர யாரோட அக்கறையும் எனக்கு வேணாம்.” சத்தமில்லாது பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“நானும் உன் ஃபிரண்ட் தான் பாரி. அவள் மட்டும் தான் உன்னை கேர் பண்ணுவாளா?”

ஜென்சி அப்படி கேட்டதும் பாரிக்கு என்னவோ போலானது.

“ஹேய்… ஜென். ஐ டிடின்ட் மீன் இட்.”

“இட்ஸ் ஓகே. உனக்கு ஃபிரண்ட் அப்படின்னா அவள் மட்டுந்தான்னு நல்லாவேத் தெரியும். அவளுக்கான ரீபிளேஸ் யாருமில்லை. பட் அவளுக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதே. உனக்காக மொத்த வாழ்க்கையையும் கொடுக்க ஒருத்தி காத்திட்டு இருக்கா(ள்).”

ஜென்சி நினைத்தாலும் அவளால் தமிழைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாரி ஏதோ சொல்லவர…

“இனி உன் பாஸ்ட் பற்றி எதுவும் பேசமாட்டேன்” என்றாள் வேகமாக.

இருவரும் உள்ளே செல்ல வேலையாள் வரவேற்று மினிஸ்டரின் அலுவலக அறையில் அமர வைத்தார்.

அந்நேரம் பாரியின் அலைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்புவர, மினிஸ்டர் ராயப்பனும் அங்கு வந்தார். அவரின் வரவால் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

“காக்க வச்சிட்டேனா?” எனக் கேட்டபடி அவர்களுக்கு முன் ஒற்றை கதிரையில் அமர்ந்தார்.

அவரின் பதவிக்காக இருவரும் எழுந்து நின்று… மீண்டும் அமர்ந்தனர்.

“வெல்கம் டூ அவர் சிங்கார சென்னை மிஸ்டர்.பாரி வேந்தன்.” அமர்த்தலாக பாரியை வரவேற்றவர் முறையாக உபசரிக்க “எதுவும் வேண்டாம்” என தன்மையாக மறுத்து விட்டான்.

“பழைய விசயங்கள் எதுவும் இன்னும் மறக்கல போலிருக்கே!”

“நான் இப்போ உங்க முன்னாடி நிக்கிறது போலீஸ்காரனா. அத்தோட எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.”

அவன் சொல்லியதில் ராயப்பன் அதிர்ந்தாரோ இல்லையோ அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஜென்சிக்கு அப்பட்டமான அதிர்வு. அதிர்வு கலந்த ஆச்சரியம் என்பதே சரியாக இருக்கும்.

பின்னே தனக்கு நடந்த திருமணத்தையே அடியோடு வெறுப்பவன் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தையை கேட்டால் அதிராமல்… ஆச்சரியம் கொள்ளாமல் என்ன செய்வாள்?

இதனை உடனடியாக தமிழிடம் சொல்லி மகிழ அவளின் வாயும் மனமும் பேராவல் கொண்டது.

இருக்குமிடம் கருதி முயன்று தன்னை கட்டுப்படுத்தினாள்.

“நீங்க பெங்களூரில் தனியாத்தான்…”

ராயப்பனை முழுதாகக் கேட்க பாரி அனுமதிக்கவில்லை.

“தட்ஸ் மை பெர்சனல் சார் அண்ட் என்னோட தனிப்பட்ட வாழ்வைப்பற்றி பேச நான் இங்க வரல” என்று அழுத்தமாகவேக் கூறினான்.

“அமிர்தா இறந்தது என்னவோ என் வீட்டில் இங்க தான். ஆனால் அவளின் இறப்பு தற்கொலை இல்லைன்னு தோணுது” என்றார்.

“ஓகே சார் அவ்வளவு தான். நாளை முதல்கட்ட விசாரணையைத் தொடங்குறேன்” என்று பாரி இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.

“நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல மிஸ்டர்.பாரி.”

“எனக்கு போதுமானதை சொல்லிட்டிங்களே சார். மத்ததை நானா தெரிஞ்சிக்கிறேன்” என்றவன், “Mrs.ரித்தேஷ்வரன் இறந்து கிடந்த இடத்தை பார்க்கலாமா” எனக் கேட்டிருந்தான். அவர் முன் அமிர்தாவின் பெயரைக் கூட தவிர்த்தான்.

‘அடப்பாவி’ மொமண்ட் ஜென்சிக்கு.

‘அப்போ வேணும்னே என்கிட்ட அமிர்தா பெயரை சொல்லியிருக்கான்’ என மனதில் அவனை வருத்தெடுத்தாள்.

“ஓ எஸ்” என்றவர் தானே அழைத்துச் சென்று அமிர்தா இறந்து கிடந்த அவளது அறையை காண்பித்தார்.

கதவு பூட்டப்பட்டிருந்த போதும்… வழக்கு விசாரணையில் இருப்பதால் போலீஸால் பேரிக்கேட் டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

பூட்டை அகற்றி தாழ்ப்பாளை நீக்கிய பாரி… டேப்பினை அகற்றாது அதனை தாண்டி உள் நுழைந்தான்.

ஜென்சி உள்ளே வர முயற்சிக்க வேண்டாமென்று தடுத்துவிட்டான்.

கிட்டத்தட்ட அரை மணிநேரம் கழிந்த பிறகே வெளியில் வந்தான்.

பாரியின் நிர்மலமான முகத்தை வைத்து ராயப்பனால் எதுவும் கணிக்க முடியவில்லை. வெகு சாதாரணமாக இருந்தான்.

“எதாவது தடயம் கிடைச்சுதா?”

“சொல்லணுமா?” என்ற பாரி ஜென்சியிடம் டைரி ஒன்றை கொடுத்தான்.

“என்னதிது?” ராயப்பனிடம் பதற்றம்.

“இந்த கேஸில் எனக்கு முழு சுதந்திரம் வேணும். கிடைக்காது எனும் பட்சத்தில் நானா எடுத்துக்கத் தயங்கமாட்டேன்.

மரியாதை உங்களுடைய பதவிக்கு மட்டும் தான்.

என்னுடைய ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு அப்டேட் பண்றது என் வேலையில்ல.” அவனின் குரலில் மட்டுமே கடுமை.

ராயப்பனை பற்றித் தெரிந்திருந்த ஜென்சிக்குத்தான் பாரியின் இப்பேச்சு உதறலை கொடுத்தது.

ராயப்பனால் அவனின் பேச்சிற்கு எதிர்வினை ஆற்ற இயலவில்லை. இப்போது எது பேசினாலும், அவன் போலீஸ் கண்ணோட்டத்தில் மட்டுமே ஆராய்வான் எனக் கருதியவர் அமைதியாக நின்றார்.

“இனி இங்க நான் அடிக்கடி வர நேரிடும். எந்த நேரத்திலும். ஒவ்வொரு முறையும் உங்கக்கிட்ட அனுமதிகேட்டு என்னால் காத்திருக்க முடியாது. அது எனக்கு நேர விரயம்…” என்று பாரி தன் புருவத்தை கீறிவிட,

“நான் சொல்லிவைக்கிறேன். எப்போ வேணும்னாலும் வாங்க” என்று பதில் வழங்கினார் ராயப்பன்.

“நமக்குள் இந்த வழக்கு மட்டுமே சம்மந்தம்.” உறுதி தொனி.

“ம்ம்… ம்ம்ம்…”

‘சும்மா இருந்த ஓணானை தானே எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகிடுச்சே.’ ராயப்பனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

எதுவும் சொல்லாது பாரி வாயிலை நோக்கி நகர…

“இதுல பழிவாங்கிடமாட்டிங்களே?”

ராயப்பனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தொண்டை வரை அடைத்து நின்ற வார்த்தையை எவ்வளவு நேரம் தான் அவராலும் அடக்கி வைக்க முடியும்.

ஒரு பக்கமாகத் திரும்பி அவரை பார்த்தவன்…

“பழிவாங்க இதுதான்னு இல்லை. பெர்சனல் வெஞ்சன்ஸ்க்கு நான் காக்கி ட்ரெஸ் போடல” என்றவன்… “யாருன்னே தெரியாத ஒருத்தரை நான் எதுக்கு பழிவாங்கணும்?” எனக் கேட்டான்.

ஜென்சிக்கு விசில் அடிக்க வேண்டும் போலிருந்தது. பின்னே மறைமுகமாக அமிர்தா என்பவள் கூட எனக்கு தெரிந்தவளில்லை என்று சொல்லிவிட்டானே. மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

ராயப்பனால் பாரியை அன்றும் சரி இன்றும் சரி கணிக்கவே முடியவில்லை. அவனின் செயல்களிலும் பேச்சிலும் குழம்பி நின்றார்.

செல்லும் அவனையே வெறித்து நின்றார் ராயப்பன்.

வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்க…

“இதென்ன டைரி பாரி?” எனக் கேட்டிருந்தாள் ஜென்சி.

“அமிர்தாக்கு டைரி எழுதுற பழக்கமிருக்கு.”

அது அமிர்தாவின் டைரி என்பது ஜென்சிக்கு புரிந்தது.

“மேக் புக், நோட் பேட் வந்த இந்த காலத்துலையுமா?” என்ற அமிர்தா, “நான் படிக்கலாமா?” எனக் கேட்டாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு ஜென்.” என்ற பாரியினுள் பல யோசனைகள். அவனால் இது கொலையென்று உறுதியாக சொல்ல முடியும். அதற்கான சரியான யூகங்கள் அவனிடம் உள்ளது. அதனை ஒவ்வொன்றாய் ஆராய வேண்டும். முடிவில் அவனது யூகம் சரியென்ற பட்சத்தில் குற்றவாளிக்கு நிச்சயம் தண்டனை உண்டு. எங்கிருந்து தொடங்குவது என்பது மட்டுமே தற்போது அவனின் யோசனை.

செக்ரியின் மூலம் பாரி அறிந்தது…

அவனின் மாற்றலுக்கு முக்கிய காரணம் ராயப்பன். ஆனால் அதற்கு காரணமே வேறொருவர் என்பதை பாரி இங்கு வந்ததும் தெரிந்து கொண்டான்.

மகளின் இறப்பு விடயத்தில் தந்தையே அமைதியாக இருக்கும்போது அந்த வேறொருவருக்கு என்ன அக்கறை என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.

“பாரி உன் மொபைல் ரொம்ப நேரமா ரிங் ஆகுது.”

ஜென்சி தோள் தட்டி சொல்லிய பிறகே தன்னுடைய யோசனையிலிருந்து சுயம் மீண்டான்.

வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தியவன்… அலைபேசியை எடுத்து செவி மடுக்க…

ஹலோ என்ற குரலோடு இணைப்பு துண்டாகியிருந்தது.

அப்போதுதான் கவனித்தான் ராயப்பனின் வீட்டிற்கு சென்றது முதல் அவ்வெண்ணிலிருந்து அதற்குள் கிட்டத்தட்ட ஆறு அழைப்புகள் வந்திருந்தன.

யோசனையாக புருவத்தை கீறியவன், கேண்டியை பிரித்து வாயில் போட்டுக்கொண்டான்.

“எனித்திங் சீரியஸ் பாரி.”

“எவ்ரித்திங் இஸ் சீரியஸ்” என்றவன், “ராயப்பனோட முகத்துல தன்னோட பொண்ணு இறந்துட்ட வருத்தம் கொஞ்சம் கூட இல்லை. நோட் பண்ணியா ஜென்?” எனக் கேட்டான்.

“நான் எங்க அதையெல்லாம் கவனிச்சேன். நீ பேசினதுலேயே நான் ப்ரீஸ் ஆகிட்டேன்” என்றாள்.

“ஜென் பீ சீரியஸ்” என்றவன், “அமிர்தா இறந்து ஃபோர் மந்த்ஸ் தான் ஆகுது. அதுக்குள்ள ஒரு அப்பா மகளோட துக்கத்திலிருந்து வெளிய வரமுடியுமா?” எனத் தன் சந்தேகத்தை கேட்டான்.

பாரிக்கு பெரும் நெருடலாக இருந்ததே… இதற்கு முன் நடந்த விசாரணை தெளிவாக இல்லாததே.

“இப்போவே ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத பாரி.” அதற்கு மேல் ஜென்சியால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பாரியைப்பற்றி கல்லூரி நாட்களில் நிறையத் தெரிந்திருந்தாலும், இப்போதிருக்கும் பாரியிடம் அவளுக்கு ஆயிரம் வித்தியாசங்கள் தெரிந்தன. அவன் எப்போது என்ன பேசுகிறான், செய்கிறான், செய்வான் என்பதை தோழியாகக் கூட அவளால் கணிக்க முடியாது போனது.

“நான் அந்த இன்ஸ்பெக்டரை மீட் பண்ணனும் ஜென்” என்ற பாரி, “இந்த கேஸ் ரீ ஓப்பன் பண்ணது யாருன்னு முதல்ல தெரியணும்” என்றான்.

“ஓகே சார்” என்றதில் பாரி சிரித்து விட்டான்.

“எதுக்கு சிரிக்குற?”

“ஒரு நேரம் பாரி சொல்ற… ஒரு நேரம் சார்…”

“அது டக்குன்னு சார் வர மாட்டேங்குது. ட்ரை பண்றேன்.” அசடு வழிந்தாள்.

“உனக்கு என்ன வருதோ அதை சொல்லு. வேலையில் சின்சியரா இருந்தா போதும். இந்த மரியாதையெல்லாம் நான் எதிர்பார்க்கமாட்டேன்” என்றான்.

“ஹலோ உனக்கு மரியாதையா? யார் கொடுத்தா?” என்றவள், “எல்லாம் உன் தோளில் இருக்கும் இந்த ஸ்டார்க்காக” என்று அவனின் உடையிலிருந்த நட்சத்திரங்களை தொட்டு காண்பித்தாள்.

“இது ஈஸியா கிடைச்சிடல ஜென்.” அவனின் குரலில் அதற்காக அவன் பட்ட முயற்சிகளின் ஆழம் தென்பட்டது.

“இது கூட அவளுக்காகத்தான் இல்லையா?”

“என்னோட பூவுக்காக.” பாரியின் முகமே அவ்வளவு கனிந்திருந்தது. அப்படியொரு நெகிழ்வு.

இவ்வளவு நேரம் இறுக்கமான முகத்தோடு, யோசனை பாவனையில் இருந்தவனா இவனென்று ஆச்சரியமாக இருந்தது அவனை பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு.

‘இப்போ தமிழ் பேச்சை எடுத்தால் எப்படியிருக்கும்?’ என்று நினைத்த ஜென்சிக்கு, காலையில் அவன் கத்திய “ஜஸ்ட் ஷட் அப் ஜென்” என்பது காதில் எதிரொலித்தது. உடனே தலையை உலுக்கிக்கொண்டாள்.

“என்னாச்சு” என்றவன் வண்டியில் அமர்ந்து அதனை இயக்க, அவன் பின்னால் ஏறி அமர்ந்தவாறே…

“உன் பூகிட்ட கூட பேசணும் உனக்குத் தோணலையா பாரி?” எனக் கேட்டிட… சட்டென்று வண்டியை நிறுத்தி மீண்டும் இயக்கியிருந்தான். அவனிடம் மீண்டும் அப்படியொரு இறுக்கம். கடினம்.

****

ஜென்சி வீட்டிற்கு வந்த போது தமிழ் மடிகணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“தமிழ் என்ன பண்ற? நான் வந்தது கூடத்தெரியாம” என்ற ஜென்சி ஷூவினை கழுட்டி அதனிடத்தில் வைத்தாள்.

“உன் ஃபிரண்டுக்கு நான் இங்க வந்தது தெரிஞ்சுப்போச்சு.” தமிழ் சொல்லியது தான்… அவளுக்கு அருகில் பொத்தென்று வேகமாக அமர்ந்தாள் ஜென்சி.

காலையில் அவன் கேட்ட கேள்வி இப்போது விளங்கியது.

“பாரியை பார்த்தியா… நிஜமாவா தமிழ். அவன் உன்னை பார்த்தானா?” என்று வியப்பு மேலிட ஆர்வத்துடன் வினவினாள்.

“ம்ம்…” என்ற தமிழ் இருவரும் பார்த்துக்கொண்ட தருணத்தை விவரிக்க…

“உன்கிட்ட பேசக்கூட முயற்சிக்கலையா?” என ஆர்வம் வடிந்துவிட்ட முகத்துடன் சுரத்தின்றி கேட்டிருந்தாள்.

“என்ன பேசணும் ஜென்?”

“என்ன பேசணுமா? ஹேய் தமிழ் ஹீ இஸ் யூர் ஹஸ்?”

“சோ வாட்?”

“தமிழ் விளையடாத!”

“நானா… நான் வொர்க் தான செய்றேன்” என்ற தமிழ் மீண்டும் லேப்டாப்பை தட்ட ஆரம்பித்திருந்தாள்.

அதிலும் பாரியைத்தான் தமிழ் வரைந்து கொண்டிருந்தாள்

ஜென் அவளை கடுப்புடன் பார்த்திருக்க…

“இங்க பாரு ஜென்… ஃபிரண்ட்ஷிப்பை மறக்கும் வரை அவன் என் முகத்தைக்கூட பார்க்க மாட்டான். அவனுக்கு வேண்டியது அவனோட ஃபிரண்ட்ஷிப் தான். மனைவியெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதுக்காக நான் ஃபீல் பண்ணலாம் இல்லை. எப்படியிருந்தாலும், எங்கிருந்தாலும் அவன் என்னோட பாரி” என்று சற்று கர்வமாகவேக் கூறினாள் தமிழ்.

“எதுல ஒன்னோ இல்லையோ இதுல ரெண்டு பேரும் ஒன்னு தான்.” ஜென்சி அன்று காலை பாரியிடம் தான் பேசியதையும் அதற்கு அவன் சொல்லிய…

“என் மௌனம்… புரிய வேண்டியவளுக்கு நல்லாவே புரியும். அவளைத் தவிர யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டாம். அவளுக்கு நான் வாய் வார்த்தையாத்தான் சொல்லணும் கூட இல்லை” என்பதையும் சொல்ல தமிழிடம் பாரியின் புரிதலை நினைத்து மென் புன்னகை.

“பிரிஞ்சி இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு புரிதல் தமிழ். உங்க ரெண்டு பேரையும் நினைக்கும்போது சில நேரம் எனக்கு பொறாமையா இருக்கு” என்ற ஜென்சி டீபாயின் மீது தமிழின் அலைபேசி ஒலிக்க அதனை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

“சொல்லு அவி. நாளைக்கு ஜாயின் பண்ணிடுவேன்.”

தமிழ் அவியென்றதுமே வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஜென்சி.

அவி வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்தில் தான் தமிழும் பணியில் சேர இருக்கின்றாள்.

அங்கு நடந்த ஆன்லைன் தேர்வில் தமிழ் தேர்வான பிறகே இருவருக்கும் தெரியும். இன்றே வேலையில் சேர்வதாக தமிழ் சொல்லியிருக்க… அவள் வராததால் அதனை கேட்பதற்காக அலுவலகம் விட்டு வந்ததும் தமிழுக்கு அழைத்திருந்தான்.

அதன் பின்னர் பாரி தன்னை அழைத்து கத்தியதை சொல்லி வைத்துவிட்டான்.

வாயிலில் மணி அடிக்கும் சத்தம்.

தமிழ் சென்று கதவை திறக்க பாரி நின்றிருந்தான்.

*********

பள்ளி காலத்தின் இறுதி தேர்வு நாள்.

எப்போதும் அமரும் மரத்தடி பெஞ்சில் தேர்வு எழுதி முடித்த பூ வேந்தனுக்காகக் காத்திருந்தாள்.

தேர்வு முடிந்த மகிழ்வு அவளது முகத்தில் துளியுமில்லை. கல்லூரியில் அடியெடுத்து வைக்கப்போகும் சந்தோஷமில்லை. மாறாக முகம் முழுக்க அத்தனை வேதனையை சுமந்திருந்தது.

இன்னும் சில மணி நேரத்தில் இப்பள்ளியோடு பெண்ணிற்காண நட்புக்கள் முற்று பெற்றுவிடும்.

அலைபேசி வாயிலாக நீடித்துக்கொள்ளலாம் என்றாலும் எத்தனை நாளுக்கு? ஆண் பிள்ளைகளுக்கு இருந்த இடைவெளி, சுதந்திரத் தன்மை அப்போது பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் மந்தம் வாய்ந்தவை.

இங்கு அனைத்திலும் ஆண் பெண் வேறுபாடு உள்ளதே. அது ஒருத்தரிடம் கொள்ளும் நட்பு மற்றும் உறவிலும் கூட உள்ளது.

அதுவே இங்கு பூவின் வேதனைக்கு காரணம்.

அதிலும் அவளுக்கு அவளின் தாத்தாவை மீறி தன் வேந்தனின் நட்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற பயம்.

அந்த வருத்தத்தில் அன்றைய தேர்வை நன்றாக எழுதினாளா என்கிற எண்ணவோட்டம் கூட அவளிடமில்லை.

அவளின் மனம், எண்ணம், சிந்தை முழுக்க வேந்தன் வேந்தன் அவளின் வேந்தன், அவனுடனான் நட்பு மாத்திரமே. இனி வேந்தனின்றி பூவின் பயணமா? எனும்போதே கசந்து வந்தது.

கண்கள் முழுக்க நீர் திரையிட்டுவிட்டது.

தேர்வு முடிந்ததும் தங்களின் இடத்திற்கு ஓடி வந்த வேந்தனின் கண்ணில் பட்டது தனக்கு முன்பாக வந்து, சோகமாக அமர்ந்திருக்கும் பூவைத்தான்.

பூவின் அருகில் அமர்ந்தவன்… “பூ” என்று விளிக்க அவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவனுக்கு தான் அழுதால் பிடிக்காது என்பதால் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.

“ஹவ் டிட் யூ ரைட் தி எக்சாம்?”

“குட்.”

“தென்?”

“தெரியல” என்றவள் உதடு பிதுக்கி அழத் தயாராகினாள்.

“என்ன தெரியல உனக்கு? என்ன கோர்ஸ் ஜாயின் பண்ணப்போற?”

“இதெல்லாம் இப்போவே திங்க் பண்ணனுமா?” என்ற பூ… “அவ்வளவு தானா வேந்தா… இனி நாம ஒண்ணா இருக்க முடியாதா?” எனக் கேட்டாள்.

“ஏண்டா இப்படியெல்லாம் கேட்குற? உன்னை பிரியனும் நினைச்சாலே அவ்வளவு கஷ்டமா இருக்கு. அதை மறைக்கத்தான் வேற பேசினேன்” என்றவனின் குரலில் அப்பட்டமான வருத்தம்.

பூவின் கை விரல்களோடு தன் விரல்கள் நுழைத்து கோர்த்துக்கொண்டான்.

“இனி எனக்கு யாரு கதை சொல்லுவாங்க? என்கிட்ட நிறைய பேசுவாங்க? என்னோட சாப்பிடுவாங்க? நீயில்லாம எப்படின்னே தெரியலடா” என்ற வேந்தனுக்கு தொண்டை அடைத்தது.

“தாத்தா தான் ப்ரொபளம் வேந்தா. இப்போவே என்னை அங்கனவே லேடீஸ் காலேஜில் தான் சேர்க்கணுமுன்னு அப்பாகிட்டா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம்” என்றவளுக்கும் அத்தனை வருத்தம்.

“உன் தாத்தாகிட்ட நான் வந்து பேசவா பூ?”

“அச்சோ வேற வினையே வேணாமாட்டிக்கு. பொறவு என்னை படிக்கவே அனுப்பமாட்டாரு.”

“உன்னோட இந்த ஸ்லாங்கை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்றதோடு…

“ஏன் தான் இவ்வளவு பயப்படுறியோ?” என்ற வேந்தனுக்கு ஆயாசமாக வந்தது.

“வீக்லி ஒன்சாவது கால் பண்ணிடுடா!  இலைன்னா தாத்தா எந்த டைமுக்கு இருக்க மாட்டாங்க சொல்லு… அந்த டைமுக்கு டெய்லி ரெகுலரா கால் பன்றேன். அங்கிள் கிட்ட சொல்லி உனக்குன்னு ஒரு மொபைல் வாங்கிக்கோடா” என்று இருவரும் பேசிக்கொள்ள என்னவெல்லாம் தோன்றியதோ அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லாது… கலங்கிய குரலில் ம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“பூ…” என்று சொல்லியவனின் விழித்திரையில் நீர் நிறைந்து விட்டது.

“நீ நம்ம வீட்டுக்கு வந்துடுறியாடா?”

வேந்தன் அப்படி கேட்பானென்று பூ எதிர்பார்க்கவில்லை. விட்டால் அவனுடன் சென்றிடுவாள் தான். ஆனால் அவளின் குடும்பம்… நினைக்கையில் அழுகை முட்டியது.

இருவரும் ஒருவருக்கொருவர் விழி அகலாது பார்த்திருக்க…

“பாரி உன் வீட்டிலிருந்து ஆள் வந்துட்டாங்க?” என்ற விடுதி பணியாளரின் குரல் இருவரையும் கலைத்தது.

பாரிக்கு முன் வேகமாக ஓடிச்சென்று யாரென்று பார்த்த பூ , அங்கு ட்ரைவருடன் பாரியின் அண்ணன் நின்றிருக்க…

பின்னால் திரும்பி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த பாரியை நோக்கி,

“வேந்தா குட்டி மாமா வந்திருக்காங்க” என்று சத்தமிட்டுக் கூறினாள்.

வைத்தியை மாமா என்று அழைப்பதால் பாரியின் அண்ணன் பரிதியையும் பார்வதி மாமா என்றே அழைக்கச் சொல்ல… அவளோ குட்டி மாமா என்று அழைத்தாள்.

அருகில் வந்தவளின் தலையில் கொட்டியவன்… “குட்டி சொல்லாதே சொல்லிருக்கேன்ல” என்றான்.

“அவள் தலையில் கொட்டத்தான் நீ வந்தியா?” என்று பாரி கேட்க… “உன் ஃபிரண்டை ஒன்னும் சொல்லலைடா” என்று ஜகா வாங்கினான் இளம்பரிதி.

“லக்கேஜ் கொண்டு வாடா” என்று பாரியை அனுப்பியவன் பூவிடம் பேசிக்கொண்டிருக்க, அரசுவும் வந்துவிட்டார்.

அதன் பின்னர் இருவரும் அலைபேசியின் மூலம் பேசிக்கொள்ளலாம், அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சந்தித்துக் கொள்ளலாம் என்கிற முடிவுடன் பிரிந்தனர்.

அவர்களின் வருத்தம் அரசுவையும் வருந்தச் செய்தது. இவர்களின் இந்த அன்பிற்காகவாவது ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டார்.

ஆனால் அவரின் தந்தையை மீறி செய்திடுவாரா?

தத்தம் வீட்டிற்கு வந்த பாரிக்கும் பூவுக்கும் ஒருவருக்கொருவர் உடனில்லாது பார்க்காது அன்றைய பொழுதை பகிராது ஒரு நாளை கடப்பதே மலையை குடைவது போலிருந்தது. மனம் சுருண்டு போனது.

எப்போதடா பூ அழைப்பாள் என்று பாரி பார்வதியின் அலைபேசியும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்தான்.

அவனாக அழைத்தாலும் பூவின் தாயாரே எடுக்க சோர்ந்து போனான்.

அரசுவிற்கு அழைத்தாலும், அவர் வெளி வேலையாக இருப்பதாக சொல்ல முற்றிலும் பூ உடன் இல்லாத அந்நாளை வெறுத்தான்.

வெளி வேலை முடிந்து வீட்டிற்கு இரவு உணவு நேரம் கடந்த பின்னர் வந்த அரசு பொன்னு உறங்கிவிட்டார் என்பதை உறுதி செய்துகொண்டு பூவிடம் அலைபேசியை கொடுத்தார்.

“மாடி அறைக்கு போய் பேசு கண்ணு.” அப்பத்தா சொல்ல அங்கே சென்று பார்வதிக்கு அழைத்தாள்.

“கள்ளமில்லாத இந்த பிஞ்சுகளோட அன்புக்கு பிரிவு வந்துடக்கூடாதுங்க. தம்பி நாலஞ்சு வாட்டி போனு போட்டுருச்சு. மாமா இன்னைக்குலாம் வீட்டுலே இருக்கவும், போனை அவள்கிட்ட கொடுக்க முடியல” என பூவின் அன்னை கணவரிடம் சொல்லி வருந்தினார்.

“பாரி நம்ம மவளை அக்கறையா பார்த்துகிடும் போதெல்லாம் நமக்கு மவனில்லையேன்னு தோணும் மணி” என்ற அரசுவின் பேச்சை இரு பெண்களுக்கும் எப்படி எடுத்துக்கொள்வதென தெரியவில்லை.

ஆனால் பாரியுடன் பூ இருந்தால் அவளுக்கு அவன் எல்லாமுமாக இருப்பான் என்கிற எண்ணம் அம்மூவருக்குமே அந்நொடித் தோன்றியது.

மெல்ல சத்தம் எழுப்பிடாது மேலே வந்த பூ பார்வதிக்கு அழைப்பு விடுத்து அவர் எடுப்பதற்காகக் காத்திருந்தாள்.

அழைப்பு முடியும் இறுதி ஒலியில் ஏற்கப்பட்டு… “பூ” என்று ஒலித்த பாரியின் குரலில் பூவின் கண்கள் நிறைந்துவிட்டன.

“வேந்தா… எப்படிடே இருக்க? சாப்பிட்டியா? என்ன பண்ணுத? அங்கன எல்லாரும் சவுரியமா? நீ இந்நேரம் வரை உறங்காம என்ன செய்யுத?” பூ படபடவென அவனிடம் கேட்டுக்கொண்டே செல்ல… பாரியின் முகம் புன்னகையால் ஒளிர்ந்தது.

ஏழு வருடங்கள் தினமும் இந்த படபடப் பேச்சில் தானே அவனின் நாட்கள் நிறைந்திருந்தன. இப்போது திடீரென அதில்லை என்றதும் அவனின் நேரங்கள் சூன்யம் தான்.

“இப்போலாம் தோப்பு தொறவு எல்லாம் அப்பாவே பார்த்துகிடுறாங்க வேந்தா. ஐயா எந்த சோலிக்கும் வெளியில போய் வாரதில்லை. நித்தமும் வீட்டுக்குள்ளாறவே இருக்காவ. அதேன் போன் போட முடியிறதில்லை. இப்பவே அப்பத்தாதேன் போன் குடுத்து மெத்தைக்கு (மாடி) அனுப்பி வச்சாவ” என்று பூ சொல்ல…

வழக்கம்போல் பாரி அவளின் பேச்சினை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்னடா ஒண்ணும் பேசாம கிடக்க…”

“மிஸ் யூ டா.” பாரியின் அவ்வார்த்தையிலேயே அனைத்து உணர்வுகளும் அடங்கிப் போயிருந்தன.

அதற்கு மேல் பூவாலும் ஒன்றும் பேசிட முடியவில்லை.

“வேந்தா…” என்று பூவின் குரல் நா தழுதழுக்க… அவளின் கையிலிருந்த அலைபேசி பொன்னுவால் பறிக்கப்ட்டது.

பூ அதிர்ந்து நிற்க…

“இனியொருவாட்டி எம் பேத்திக்கிட்ட நீ பேசுறத கண்ட… அவளை வெட்டி பொலி போட்டுபுடுவேன்” என்று பாரியை பூவை வைத்து மிரட்டிட… அந்த வயதில் அதிகமான தைரியம் கொண்டவனாக இருப்பினும் பூ எனும் போது பொன்னுவின் வார்த்தையால் பயந்து போனான்.

பாரி பதில் பேசும் முன் அணைத்தவர், அலைபேசியை ஓங்கி சுவற்றில் அடித்திருந்தார். அது மொத்தமாக உயிரிழந்து தூள் தூளாகியது.

பொன்னு பூவிடம் ஒரு வார்த்தை வாய் திறந்து என்ன ஏதென்று கேட்கவில்லை. ஆனால் அடி வெளுத்துவிட்டார். சின்ன பெண் அவரின் அடிகளில் சுருண்டு மயங்கிவிட்டாள்.

சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வரும்போது கண்டது மயங்கி சரிந்த பூவைத்தான்.

பொன்னு பேசியதுமே பாரிக்கு பூவின் சிவந்து தடித்து வீங்கிய கன்னம் தான் நினைவிற்கு வந்தது.

உடனடியாக பூவின் அன்னையின் எண்ணிற்கு அழைத்து விட்டான். யாரும் எடுக்கப்படாதிருக்க… பூவிற்கு என்ன ஆனது என்கிற பயத்தில் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தான்.

பூவை அவளின் அறையில் கிடத்தி தண்ணீர் தெளிக்க முகச்சுணக்கத்தோடு மெல்ல விழி திறந்தவள்…

தன்னெதிரே இன்னமும் கோபம் குறையாது உக்கிரமாக நின்றிருந்த தாத்தாவை கண்டு மிரண்டு அஞ்சி அருகில் அமர்ந்திருந்த அன்னையின் மார்பில் ஒண்டினாள்.

பார்த்த அரசுவிற்கு மனம் பதபதைத்து போனது.

மகளின் கண்களில் பயம், அழுகை இரண்டையும் பார்த்த அரசுவிற்கு தந்தை இரண்டாம் பட்சம் ஆகிப்போனார்.

மகள் குற்றமே செய்தாலும் தந்தைகளுக்கு இளவரிசிதானே. அதிலும் பூவைப் போன்ற பெண்கள் என்றென்றைக்கும் ராணிக்கள் தான்.

ஆயிரம் தவறுகள் தெரிந்தே செய்யும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாரியை முதல் நாள் பள்ளியில் சந்தித்தது முதல் அவன் சோகம் கண்டு வருந்தி… “நானெல்லாம் ஜாலியத்தானேப்பா இருக்கேன். அவனும் என் கிளாஸ் தான, அவனுக்கு என்ன சோகம்” என்று வெள்ளந்தியாகக் கேட்டு… “அவனை நான் பேசி சிரிக்க வைக்கட்டுமாப்பா?” என குழந்தைபோல் வினவிய அன்றைய பூவின் கபடமற்ற குரல் இப்போதும் அரசுவின் காதில் எதிரொலித்தது.

அன்று முதல் இன்று வரை பாரியுடனான எப்பேச்சினையும் பூ அரசுவிடம் மறைத்தது இல்லை. தங்கள் நட்பிற்கு அப்பாவால் எவ்வித தடையும் வராது என்ற நம்பிக்கை பூவிடம் இருக்கையில் அதனை குலைக்க அவரெப்படி நினைப்பார். மகள் தன்னிடம் வெளிப்படையாக இருப்பதாலேயே அவளின் நட்பையும் இத்தனை வருடங்களுக்கு அரசு ஆதரித்து வந்தார். தன் தந்தையின் வெறுப்பையும் மீறி மறைமுகமாக.

ஆனால் இன்று, தன் மகள் ஏதோ செய்யக்கூடாத செயலை செய்துவிட்டதைப்போல் பொன்னு அடித்ததை பார்த்தவர் மனம் விண்டு போனது. அதுவும் பூவின் மயக்கம் தன் தந்தையை எதிர்த்து பேசும் திடத்தை அளித்தது.

“எவ்வளவு பெரிய காரியம் செய்துபுட்டு எப்படி கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கா(ள்).” பூவை பார்க்க பார்க்க பொன்னுவிற்கு அவரது மகளின் நினைவு வர அன்றைய கோபத்தையும் சேர்த்து இன்று பூவின் மீது காட்டினார்.

“தப்பு பண்றதுக்கு அவள் உங்க பொண்ணு கிடையாதுப்பா!”

அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது அரசு வார்த்தையை சிதறவிட அது சரியாக பொன்னுவை பதம் பார்த்தது.

“அரசு…”

“ஏங்க!”

பூவின் அன்னையும், அப்பத்தாவும் அதிர… என்றுமே தன் தந்தையின் முன் அதிர்ந்துகூட பேசிடாத தந்தை இன்று கோபமாக பேசியதை பூவும், அவளது தமக்கையும் விழி விரித்து பார்த்தனர்.

“பின்ன என்னம்மா… எப்பவோ அவரு மவ(ள்) செஞ்சிட்டு போனதுக்கு எம்மவள வாட்டுறாரு” என்று அரசு மேலும் தன் மனத்தாங்கலை வெளிப்படுத்த மற்றவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பூவுக்கு தன்னால் தானோ என்று குற்றவுணர்வாகிப்போனது.

“மன்னிச்சிகிடுப்பா… இனி உம் மவள நான் ஒண்ணும் சொல்லலை. உங்க இஷ்டப்படிக்கி இருங்க” என்ற பொன்னு அவ்வறையை விட்டு வெளியேறினார்.

அவர் செல்வதை வருத்தத்தோடு அரசு பார்க்க…

“இந்த மனுசனை எதிர்த்து பேசிட ஆளில்லாமத்தேன் இம்புட்டு ஆட்டம். நீ பேசினதுல தப்பு ஒன்னுமில்லய்யா. வெசனப்படாத” அப்பத்தா ஆறுதல் சொல்ல அரசு தெளிந்தார்.

“நீ அவனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி மோண்டா” என்று தன் முதல் பேத்தியை விரட்டினார்.

அவள் தண்ணீர் எடுக்க அடுக்கலைக்குள் வர, அவளது அன்னையின் அலைபேசி ஒலித்தபடி இருந்தது.

எடுத்து பேசியவள் பாரி என்றதும், தன் தங்கை அடிவாங்க காரணமாக இருந்தது அவன் தான் என்ற கோபத்தில்…

“உங்க பூ உயிரோடு இருக்கணுமுன்னா இன்னுமாட்டிக்கு போன் போடாதீக” என்று கோபமாகவேக் கூறினாள்.

அவ்வார்த்தைகள் பாரிக்கு அவ்வளவு வலியை கொடுத்தது.

இருப்பினும்… “இனி… இனி நான் பேசல” என்றவன் குரல் தழுதழுத்தது.

“பூ… பூவுக்கு ஒன்னுமில்லையே அதை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்” என இரைஞ்சினான்.

“பூ நல்லாயிருக்க, நான் பேசக்கூடாதுன்னா நான் பேசல. அவள் பேசிட்டிருக்கும் போதே தாத்தா கத்துற சத்தம் தான் கேட்டது. அவளுக்கு எதுவுமில்லையே… பதில் சொல்லுங்க ப்ளீஸ்.” கிட்டத்தட்ட மன்றாடினான்.

‘என்ன மாதிரியான அன்பு.’ அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அவளுக்கு ஒன்னுமில்லை” என்றவளின் வார்த்தையில் தான் பாரியின் படபடப்பு அடங்கியது.

“கொஞ்ச நாள் போகட்டும் பாரி. அவளே பேசுவாள்” என்றவள் துண்டித்துவிட… தன்னுடைய ஆத்மார்த்தமான நட்பும் துண்டித்து போனதென்று பாரியின் மனதில் சோகம் ஏறியது.

அதன் பிறகு தேர்வு முடிவுகளின் போதுகூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் என வாங்க வருகையில் கூட இருவராலும் சந்திக்க இயலாது வேறு வேறு தினங்களாக அமைந்தது.

இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிய முடியாது தவித்துப்போயினர்.

பிரிவு என்பது எந்த உறவிலும் வலியைக் கொடுக்கும். அவ்வலியை இருவரும் நொடிக்கு நொடி அனுபவித்தனர்.

பாரி படும் துன்பத்தை காண சகியாது…

“நாம வேணும்னா ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வரலாம் பாரி” என்ற பார்வதியிடம், பூவின் தமக்கை பேசியதை சொல்லி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.

பாரிக்கு துணையாக பரிதியும் வருந்தினான்.

நட்பு…
இரு ஆண்களுக்கோ
இரு பெண்களுக்கோ
ஆண் பெண்ணிற்கோ
இடையில்,
ஆத்மார்த்தமாக
ஆழமாக
உணர்வுப்பூர்வமாக
வாய்க்கப்பெறுமாயின்
அங்கே வரம் பெற்றதாகிறது
நட்பு…!

“என்ன கோர்ஸ் படிக்கலாம் இருக்க பாரி?”

பரிதி தன் தந்தையின் தொழிலை நிர்வகிக்கத் தொடங்கியிருந்தான்.

“பூ எதும் சொல்லலையே பரிதிண்ணா” என்ற பாரி, “ஐபிஎஸ் ஆகணும். பூவுக்கு போலீசுன்னா ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதே சமயம் பூவும் அங்கு தன் தமக்கையிடம் அதைத்தான் கூறிக்கொண்டிருந்தாள்.

“பாரி என்ன படிக்கப்போறான் தெரியலையேக்கா. அவன்கிட்ட நான் கேட்காம விட்டுட்டேனே” என்று வருந்தினாள்.

“ஆனால் பாரி ஐபிஎஸ் ஆகணும்’க்கா. அவனோட லுக்குக்கு போலீஸ் ஆனா செம கெத்தா இருக்கும்” என்று சிலாகித்தாள்.

“இப்போதான் வீடு நார்மலாகியிருக்கு. நீ கொஞ்சம் கம்முன்னு இருடி. திரும்ப பாரியைப்பற்றி பேசி வீட்டுக்குள்ள புதுசா குண்டு ஏதும் போட்டுடாதே” என்ற பெரியவள, தாத்தா இருக்கிறாரா என்று சுற்றி ஒருமுறை பார்த்தும் கொண்டாள்.

பாரியிடம் அன்று தான் பேசியதை தங்கையிடம் சொல்லியிருந்தாள்.

தன் நலனிற்காகவே பாரி இத்தனை நாட்களில் தன்னை அழைக்கவில்லையென பூவும் உணர்ந்தே இருந்தாள்.

பிரிந்தே இருந்தாலும் நட்பு குறையப்போவதில்லை என்ற எண்ணம் இருவருக்குள்ளும் நன்றாகவே வலுவடைந்திருந்தது.

“பாரிகிட்ட நான் பேசவே முடியாதாக்கா.”

“பேசலாமே” என்ற பெரியவள், “தாத்தா மேலோகம் போனதும்” என்று மெல்லிய குரலில் சொல்லிட பூவிடம் சன்னமான சிரிப்பு.

“அதுக்காகலாம் தாத்தா சீக்கிரம் போக வேண்டாம். பாரி எனக்காக வெயிட் பண்ணிட்டே இருப்பான்” என்ற பூவுக்குமே கூட எத்தனை நாளைக்கென்று ஆயாசமாக இருந்தது.

“இந்த பிரிவு இப்படியே நீண்டு விடுமோ?” என்ற பயம் பாரி, பூ இருவருக்குள்ளுமே மலையாக எழுந்து பயத்தை கொடுத்தது.

விருப்பமானவர்களிடமும், அன்பு கொண்டவர்களிடமும் ஒரு நாளுக்கு மேல் பிரிவினை நீட்டிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் அப்பிரிவு பழகிப்போகும். மனம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடும்.

அதுவே அவர்களின் பயத்திற்கான காரணம்.

இவ்வுலகில் எதுவும் ஆரம்பம் மட்டுமே தயக்கத்தையும் தடையையும் வலியையும் வருத்தத்தையும் கொடுக்கும். அதன் பின்னர் அனைத்தும் கடந்து போகும் அல்லது பழகிப்போகும். அதுவே நிதர்சனம்.

அவர்களின் நட்பு நீடித்ததா? அல்லது இப்பிரிவு இப்படியே தொடர்ந்ததா?

‘அன்றைய நாள் பிரிவாகவே இருந்திருக்கலாம். பூவின் நட்பை இழந்திருக்க மாட்டேன்’ என பாரி வருந்தாத நாட்கள் இல்லை.

இன்றும் அந்த நாட்களின் நினைவுகளில் உழன்றவன் நினைத்தது அதையே!

பாரியிடம் நட்பாக இருந்த உணர்வு பூவிற்கும் நட்பாகவே இருந்திருக்க வேண்டுமென்பதில்லையே! அதனை அவன் உணராது போனானோ அல்லது பூ உணர வைத்திட முயற்சிக்கவில்லையோ! ஏதோவொன்று மீண்டும் பூவையே பிரிவை கொடுக்க வைத்தது. ஏற்கவும் வைத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
38
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பூ பிரிவில் காதலை உணர்ந்து இருக்கிறாள். பூ அக்கா தான் பரிதி மனைவியா?.

      1. Author

        ஆங் இப்போ என்ன நான் சொல்றது 😁😁😁😁😁