Loading

தூவானம் 52 :

[வாசகர்களுக்கு : ரொம்ப ஆழமாக மருத்துவத்தின் உள்நுழைந்து ஆராய்ந்து இதனை பார்க்க வேண்டாம். கதைக்கு ஏற்றதை மட்டும் சரியாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன். தவறு என்று தெரிந்தால் என்னிடம் சுட்டிக் காட்டுங்கள்.]

பேஸ் மேக்கர் (pacemaker) – இதயமுடுக்கி.

(Artificial pacemaker – செயற்கை இதயமுடுக்கி.)

இதயத் தசைகளை மின் முனைகள் தொடர்பு கொள்ளும்போது வெளிவரும் மின் துடிப்புகளைப் பயன்படுத்தி இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் ஒரு மருத்துவக் கருவியாகும்.

இதயமுடுக்கியின் முக்கிய நோக்கம் ஒரு போதுமான இதய விகிதத்தை பராமரிப்பதாகும். இதயத்துடைய இயற்கை முடுக்கியானது போதுமான வேகத்திற்கு செயல்படாததால் அல்லது இதயத்துடைய மின்கடத்தும் அமைப்பில் தடுப்பு இருப்பதால் இது அவசியமாகிறது.

நவீன இதயமுடுக்கிகள் வெளியிலிருந்தே நிரல் ஏற்கக்கூடியவைகளாய் இருக்கின்றன. *மேலும் இதயவியல் மருத்துவரால் தனித்தனி சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான தகுந்த வேகமுறைமைகளை நியமிக்க முடிகிறது.*

*ஒரு நோயாளியின் உட்பகுதியில் பொருத்தப்பட்ட செயற்கை இதய முடுக்கியை, அந்த மருத்துவரால் வெளியிலிருந்து கட்டுப்படுத்த முடியும்.*

அலைபேசியின் அலைகற்றை வழி அதனை எவ்வளவு தூரத்தில் எங்கிருந்தாலும், ஓர் இடத்திலிருந்து ஹேக் மற்றும் ட்ராப் செய்யும் முறை போன்றுதான் இதுவும்.

இத்யத்தசையில் செயற்கையாக பொருத்தப்பட்ட மின் முனைகளின் வேகத்தை மருத்துவரால் கட்டுப்படுத்த முடியும். நோயாளியின் ரத்த ஓட்டத்திற்கு ஏற்ப அதன் செயல்பாட்டை கூட்டியோ குறைத்தோ மாற்றியமைக்க முடியும்.

ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்போது இதன் செயல்பாடு அவசியமாற்றதாகிறது. இதயத்தின் இயக்கம், ரத்த ஓட்டத்தின் அளவை பொறுத்தது. அதில் தடை ஏற்படும் போது… இதயம் தன்னுடைய வேலையை சரியாக செய்வதற்கு தசைகளோடு இணைந்திருக்கும் முடுக்கி வேலை நிறுத்தம் செய்கிறது. இதனால் இதயம் தன் ஓட்டத்தை மெல்ல மெல்ல நிறுத்திக்கொள்ளும்.

அந்நேரங்களில் செயற்கை இதய முடுக்கியை இதயத்தின் கீழ் அறையில் தசையை கிழித்து பொருத்தி… ரத்தம் செல்லும் வேகத்தின் அளவை கண்டறிந்து, அதற்கேற்ப இதய முடுக்கியின் மின் துடிப்பின் வேகத்தை நிர்ணயித்து இதயத்தை செயல்பட வைக்க முடிகிறது.

இதில் பாரியின் திட்டம்… ராயப்பனின் இதயத்தில் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை இதய முடுக்கியின் வேகமுறையை சீரற்றதாக மாற்றியமைத்து, இதயத்தில் ஓட்டத்தில் தடுமாற்றம் செய்திடவே இதயவியல் மருத்துவரான விஷாலின் உதவியை பாரி நாடினான்.

பாரியிடமிருந்து அழைப்பு வந்த அடுத்த கணம்… மானிட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் ராயப்பனின் செயற்கை இதய முடுக்கியின் மின் முனைகளின் வேகத்தை, அவனது ரத்த ஓட்டத்தின் வேகத்தை விட அதிகரிக்க அங்கு ராயப்பனின் இதயம் சீரற்றுத் துடிக்க ஆரம்பித்தது.

பூ உதைத்ததால் கீழே விழுந்த அமோஸின் நிலை கண்ட ரேமண்ட் பூவின் தலை முடியை கொத்தாக பிடித்து அவளை தூக்கி நிற்க வைக்க… அமோஸ் எழுந்திட உதவி செய்த விவாஷ் பூவின் கழுத்தை நெறித்த நொடி… ராயப்பன் தன்னுடைய இதயப்பகுதியை பிடித்துக்கொண்டு மூச்சுவிட முடியாது கண்கள் சொருகி இருக்கையிலிருந்து தலைகுப்புற தரையில் விழுந்தான்.

ராயப்பன் விழுந்த தருணம் விவாஷிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது.

“அப்பா… அப்பா…” என்று ராயப்பனின் கன்னம் தட்டியவன் அவரைத் தூக்கி நீண்ட கோச்சில் படுக்க வைத்தான்.

“சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகணும் அமோஸ்” என்று விவாஷ் கூறிட, அதனை நிர்தாட்சண்யமாக மறுத்தான் அமோஸ்.

“இவனால நான் மாட்டிக்கத் தயாரா இல்லை. நான் வந்தது என்னுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் கிடையாது. நான் மாட்டினா அதை வைத்தே அந்த போலீஸ்காரன் என் கதையை முடிச்சிடுவான்” என்ற அமோஸ், “உன் அப்பன் செத்தா செத்துட்டு போகட்டும். பங்கு ஒன்னு குறையும்” என்று அசால்ட்டாகக் கூறியவனின் மீது ஆக்ரோஷமாக பாய்ந்திருந்தான் விவாஷ்.

இவர்களின் இந்த மோதலுக்காகத்தான் பாரி விஷாலை இதனை செய்யக் கூறினான்.

பாரியின் கணிப்பின்படி ஒன்றாக இருந்தவர்கள் முட்டிக்கொண்டனர்.

“அமோஸ் வேண்டாம். என் உதவி இல்லாம உன்னால இங்கிருந்து உன் நாட்டிற்கு போக முடியாது.” விவாஷ் அமோஸை மிரட்டினான்.

வெடி சிரிப்பு சிரித்த அமோஸ்… “என்னை என்ன உன்னை மாதிரி ஒரு ஸ்டேட்டில் மட்டும் டீலிங் வைத்திருப்பவன் நினைச்சியா? உன்னை மாதிரி ஆயிரம் பேரு பல நாடுகளில் எனக்கு கீழ் இருக்காங்க” என்று தன்னுடைய பலத்தைக் கூறினான்.

“வி…விவ்…விவா…” ராயப்பன் மூச்சுவிட வெகுவாக சிரமப்பட… அவரின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய செயல்பாட்டை குறைத்துக் கொண்டிருந்தது.

“பாரி இன்னும் என்ன யோசனை… உள்ள போகலாம்.” பரிதியும் அவியும் பூவிற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்தனர்.

மானிட்டரின் உதவியின் மூலம் ராயப்பனின் தற்போதைய நிலையை அறிந்த விஷால், பாரிக்கு அழைத்திட…

“இன்னும் எவ்வளவு நிமிஷத்துக்கு இப்படியே அவரால தாக்குப்பிடிக்க முடியும்?” என்று தனக்கு வேண்டியதை வினவினான் பாரி.

“எயிட் மினிட்ஸ் பாரி… அதுக்கு அப்புறம் பேஸ்மேக்கரின் மின் முனை வேகத்தை சரி செய்யலன்னா கண்டிப்பா இறந்து விடுவார்” என்றான் விஷால்.

“த்ரீ மினிட்ஸ் அப்புறம் அவரின் இயக்கத்தை சரி செய்திடுங்க விஷால்” என்ற பாரி, ஜென்னிற்கு சிக்னல் கொடுத்தான்.

பாரியிடமிருந்து உத்தரவு வந்ததும் ஜென்னும், கணபதியும் வீட்டின் முன்பக்க கதவினை திறக்க முயற்சித்தனர்.

“அவங்க கதவை திறந்து மாட்டிக்கப்போறாங்க பாரி…”

“ஜென்னால் கதவை திறக்க முடியாது. நான் கொடுத்தது ஒரிஜினல் கீ கிடையாது” என்ற பாரி அமைதியாக உள்ளே நடப்பதை அவதானித்தபடி நின்றிருக்க… “இன்னும் என்னடா?” என்று சினந்தான் பரிதி.

ராயப்பன் வலியில் துடிக்க… விவாஷ் தன்னுடைய தந்தையின் நிலையை கண்டு தவித்தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாது அமோஸ் பூவின் மீதே கண்ணாக அவளை நெருங்க முயற்சிக்க… தடுக்க வந்த சத்யாவை ரேமண்ட் பிடித்துக்கொண்டான்.

சரியாக மூன்று நிமிடங்கள் முடிய, விவாஷ் செயற்கை இதய முடுக்கியின் மின் முனைகளின் வேகத்தை சீராக்கிட, மெல்ல மெல்ல ராயப்பனின் இதயம் துடிக்கத் துவங்கி சீர் பெற ஆரம்பித்தது.

அமோஸிடம் இதனை எதிர்பார்த்திடாத விவாஷ்… ராயப்பனின் நிலையை எண்ணி பயந்து கத்தினான், மிரட்டினான், மன்றாடினான்.

“உனக்கு தமிழைவிட கடமை முக்கியமா போயிடுச்சா பாரி?”

பாரியிடம் உள்ளே செல்லலாமென எவ்வளவோ கெஞ்சியும், அவன் தன் திட்டம் நடைபெறுவதற்காகக் காத்திருக்க… அவியால் பாரியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாததைப்போல் பரிதியால் இருக்க முடியவில்லை.

அதனால் தன்னையும் மீறி, பூவின் மீது பாரிக்கு இருக்கும் அளவற்ற அக்கறையின் அளவு தெரிந்தும் அவ்வாறு வினவினான்.

பரிதியை அழுத்தமாக ஓர் பார்வை பார்த்த பரிதி… கதவின் மேல் கை வைத்து எதையோ இழுத்து தள்ளிட சத்தமின்றி கதவு திறந்து கொண்டது.

அந்நேரம் தான் ஜென்னும் முன்பக்கம் கதவினை திறக்க முயன்றாள்.

இங்கு விவாஷ் கத்தி, கெஞ்சி பார்த்தும் அமோஸ் தன்னுடைய நிலையில் இருக்க, எங்கே இங்கிருந்து ராயப்பனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால் உயிருக்கு கேடாய் முடிந்திடுமோ என்று அஞ்சியவன், வெளிபக்கம் கதவு திறக்க முயற்சிப்பதை கதவில் வரும் ஒலியை வைத்து கிரகித்து, இங்கிருந்து யாரிடமும் மாட்டாது தப்பிக்க அமோஸை தாக்க முற்பட,

பூவின் மீதே கண்ணாக இருந்த அமோஸ் சுற்றுப்புறத்தை கவனிக்க மறந்தவனாக,

“இவன் உயிரோட இருப்பதால் தானே, என்னையே தாக்க வர” என்று சினந்து ராயப்பனை நோக்கி பட்டென்று துப்பாக்கியால் சுடவும், இயக்கம் சீரான ராயப்பனின் இதயம் நொடியில் தன்னுடைய துடிப்பை நிறுத்தியது.

இப்போது ராயப்பன் இறந்தது பாரியின் திட்டத்தாலோ, விஷாலின் மருத்துவ செயல்பாட்டினாலோ அல்ல.

முற்றிலும் அவனின் தனிப்பட்ட தீய எண்ணத்தால். தீயவனுடனான நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ராயப்பன் தான் சிறந்த உதாரணம்.

அமோஸ் ராயப்பனை சுடுவதற்கும் பாரி, பரிதி, அவி மூவரும் படிகளில் இறங்கி வீட்டின் உள்பக்கம் வருவதற்கும் சரியாக இருந்தது.

ராயப்பன் இறந்து விட்டான் என்பதை அலட்சியம் செய்த அமோஸ், பூவின் கையை பற்றி… “லாட்ஸ் ஆஃப் டிஸ்டப(ர்)ன்ஸ், நாம வா உள்ள போவோம்” என்றபடி பூவிடம் கவனத்தை திருப்பியிருக்க… உள்ளே வந்தவர்களை கவனிக்கவில்லை.

கவனித்துவிட்ட விவாஷ் பாரியின் பார்வையில் படாமல் இருப்பதற்காக அமோஸின் பக்கம் நகர்ந்திட…

பூவின் கையை அமோஸ் பிடித்திருந்ததை பார்த்த பாரி, அமோஸின் கையை சரியாக குறி பார்த்து சுட்டிருந்தான்.

வலியில் கையினை உதறியவன், விவாஷ் தான் தன்னை சுட்டதாக எண்ணி, சிறு மணித்துளியில் விவாஷின் மார்பில் குண்டினை இறக்கியிருந்தான்.

கண்ணுக்கு முன்னால் இரண்டு மரணம். அதுவும் கொலை. அதிர்ச்சியில் விழிகள் அகண்டு உறைந்து போனாள் பூ.

பாரியின் நிகழ் கூட அவளை சுயம் மீட்கவில்லை.

பரிதியும், அவியும் சத்யாவை பிடித்திருக்கும் ரேமண்டை ஒரே நேரத்தில் தாக்க முற்பட… பாரி பூவின் அருகில் சென்றான்.

அப்போது கூட அமோஸ் தன்னிலையில் மாற்றம் இல்லை என்பதைப்போல, பூவை இழுத்தான்.

இரண்டு கொலையின் அதிர்வில் இருந்தவளால் நடப்பது எதையும் கருத்தில் ஏற்ற முடியவில்லை. அந்நிலையிலும் வேண்டாத ஒருவனின் தொடுகை என்று மூளை வலியுறுத்திட, அவனிடமிருந்து தன் கையை பிரித்து இழுக்க வேண்டுமென்று மனம் போராட… அவளால் ஏனோ அதனை செயல்படுத்த முடியவில்லை.

தெறித்த ரத்த துளிகள் அவளின் நிகழை அந்நொடியிலேயே ஸ்தம்பிக்க வைத்திருந்தது.

கண்கள் இருட்டிக் கொண்டுவர… மயங்கி தொய்ந்து இருக்கையில் விழ போனவளை, அமோஸ் தன்மீது சாய்க்க விழைந்த கணம் சடுதியில் அவனை ஒரே தள்ளில் தலைகுப்புற கவிழச் செய்து தன்னவளை நெஞ்சம் தாங்கியிருந்தான் பாரி.

பக்கவாட்டில் இருந்த அறைக்குள் மனைவியை தூக்கிக்கொண்டு நுழைந்த பாரி… அவளை அங்கிருந்த மெத்தையில் கிடத்தி வலிக்காது இரு கன்னத்தையும் மாற்றி மாற்றி தட்டினான்.

“பூ… டேய் மலரே! என்னை பாருடா!”

“கண்ணைத் திறடாம்மா…”

“பூ… பூ… உனக்கு எதுவுமில்லதான!” பாரி அழுகையில் தழுத்தழுத்த ஓலம் அவ்வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பட்டு பரவியது.

சுயமிழந்து… உயிரற்ற உடலாகக் கிடந்தவளை கண் கொண்டு காண முடியாது…

“பூ…” வீடே அதிர்ந்திட கத்தினான்.

அவர்களின் திருமணத்தன்று அழுதது… அதன் பின்னர் இன்று தான் அழுகிறான்.

‘மனைவியையும் காப்பாற்ற வேண்டும், அதே நேரம் குற்றவாளிகளும் தப்பிவிடாது அவர்களின் செயல்களுக்கான தண்டனையை பெற்றிருக்க வேண்டுமென நினைத்து சற்று பொறுமை காத்தது தவறோ’ என்று அவன் எண்ணிய நொடி…

பாரியின் தோளில் பரிதியின் கரம் பதிந்தது.

பாரி திரும்பி பார்க்க… ரேமண்ட் மாமிச மலையென தரையில் கிடந்தான்.

அமோஸின் இரு பக்கமும் அவியும் சத்யாவும் பிடித்தபடி இருக்க… அவர்களின் பிடியில் அமோஸ் திமிறிக் கொண்டிருந்தான்.

பாரி பூவை தாங்கியதுமே கீழே விழுந்த அமோஸ் பாரியின் முதுகை நோக்கி துப்பாக்கியில் குறி வைத்தான்.

மூன்று பேர் தாக்கியும் ரேமண்டை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மூவரையும் காற்று போல் ஊதி தள்ளினான்.

அதில் அமோஸின் அருகில் விழுந்த பரிதி, தன் காலால் அவனின் கையை எத்திட அமோஸின் பிடியிலிருந்த துப்பாக்கி சற்று தள்ளி இருக்கைக்கு கீழ் விழுந்தது.

பரிதியின் மீது அமோஸ் பாய்ந்திட… அவனை பின்னிருந்து பிடித்து இழுத்த அவியை ஒரே கையால் தூக்கி எறிந்தான் ரேமண்ட். அவி வாயில் கதவில் மோதி சுருண்டு விழுந்தான்.

உள்ளே கேட்கும் சத்தத்தில் பாரி உள்ளே சென்றுவிட்டான் என்பதை அறிந்து ஜென் கதவினை வேகமாகத் தட்டிட… சத்யா ஓடிச்சென்று கதவினை திறந்துவிட ஜென்னும் கணபதியும் உள் வந்தனர்.

வலியில் சுருண்டு கிடந்த அவியை நோக்கி ஜென் சென்றிட… பரிதியை அடித்துக் கொண்டிருந்த அமோஸை சத்யாவும், கணபதியும் இழுக்க முயன்றனர்.

அவர்கள் இருவரையும் அனாயசமாக ரேமண்ட் வீழ்த்தியிருக்க… அவனும் பரிதியை அடிக்க ஆரம்பித்திருந்தான்.

அமோசை தாக்கு பிடித்தளவிற்கு ரேமண்டை பரிதியால் சமாளிக்க முடியவில்லை. ஹல்க் போன்று இருந்தவனிடம் பரிதி திணறினான்.

மெல்ல எழுந்த சத்யா, ரேமண்டை தாக்குவதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்திட… கணபதி கொண்டு வந்திருந்த ஒரு ஆள் உயர நீண்ட நாட்டுத் துப்பாக்கி ஜென்னின் கையில் இருந்தது. அதனை எடுத்து அடிப்பகுதியால் ரேமண்டின் உச்சி மண்டையில் அடிக்க… மாமிசமலை சரிந்தது.

அதன் பின்னர் அவர்களால் அமோஸினை விழச்செய்வது அத்தனை கடினமானதாக இல்லை.

பரிதி அமோஸின் மூக்கிலேயே ஓங்கி குத்திட ரத்தம் வெளியேற தரையில் மடங்கினான்.

அந்நேரம் தான் பாரி பூ என்று கத்தியிருந்தான்.

“தமிழுக்கு ஒன்னுமில்லை பாரி. அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கும்” என்று பரிதி அவனைத் தேற்றிட, ஜென் கையில் நீரோடு வந்து பாரியை விலக்கிவிட்டு பூவின் முகத்தில் தண்ணீரை தெளிக்க… எங்கிருந்து என்று தெரியாதளவிற்கு, அமோஸின் ஆட்கள் பத்து பதினைந்து பேர் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர்.

வந்தவர்கள் என்ன ஏதென்று உணரும் முன்னர் அங்கு நின்றிருந்த அவி, சத்யா, கணபதி என மூவரையும் தாக்கியிருந்தனர். மீண்டும் எழ முடியாத அளவிற்கு அவர்கள் சரிந்திருந்தனர்.

அடுத்து பரிதியை அவர்கள் தாக்கிட பாரியின் கவனம் பூவிடமிருந்து தடியர்களின் மீது திரும்பியது.

ஒருவன் பரிதியின் தலையில் உருட்டு கட்டையால் அடிக்க, பாரி தடுப்பதற்கு முன் பரிதி விழுந்திருந்தான்.

“இத்தனை பேர் எப்படி வந்தாங்க பாரி? சமாளிக்க முடியுமா?” என்ற ஜென்னை பூவின் பக்கம் திருப்பியவன், “முடிச்சிட்டு வரேன்” என்றவன் வீடு முழுக்க நிறைந்திருந்த தடியர்களை நோக்கி மெல்ல மெல்ல தன்னுடைய நீண்ட எட்டுக்களை எடுத்து வைக்க, ஒருவன் பாரியை நோக்கி அவனின் மார்பில் குறி வைத்து ஓங்கிய கத்தியுடன் ஓடிவர, அவனுக்கு வலப்பக்கம் உடலை ஒடித்து அவனின் கையை பிடித்து பாரி முறுக்கியதில், அவனது பிடியிலிருந்து கத்தி நழுவியது.

தடியனின் கை நரம்பில் பாரி தனது இரு விரல் சுழற்றி ஒரு அழுத்தம். அவ்வளவுதான் அவன் சாய்த்திருந்தான்.

நால்வர் ஒரே நேரம் பாரியை நோக்கி ஓடிவர, முன்வந்த இருவரையும் வலது இடதென இருப்பக்கமும் சாய்ந்து அவர்களின் வயிற்றில் பாரி வைத்த குத்தில் அலறியபடி விழுந்தனர்.

ஜென் பூவின் முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்திட, பூவிடம் மெல்லிய அசைவு, மெல்ல இமை விரித்தவள் கண்டது, நடுவில் பாரி நின்றிருக்க அவனைச்சுற்றி ஏழு எட்டு பேர் தாக்கிக்கொண்டிருக்க அவர்களை எல்லாம் சுழன்றடித்துக் கொண்டிருந்தான் பாரி.

பார்த்தவளுக்கு அத்தனை மிரட்சி.

பரிதி, அவியெல்லாம் விழுந்து கிடக்க மீண்டும் அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

“வேந்தா…” சத்தமின்றி அழைக்க… காற்றில் மோதிய தன்னவளின் விளிப்பில் ஒருவனை வீழ்த்தியபடி பூவை ஏறிட்ட பாரி கண்களால் அவளின் நலன் கேட்டிட, தலையசைத்து பதில் வழங்கினாள்.

அக்கணம் ஒருவன் பாரியின் முகம் நோக்கி குத்து வைக்க கையை கொண்டு சென்றிட, அவனின் ஒரு பக்க முகத்தில் தன்னுடைய பரந்த உள்ளங்கையினை அழுத்தி பதித்தவன் அவனை அப்படியே பக்கவாட்டாக கீழே சரித்தான். அவனுக்கு காதுக்குள் பூச்சி ரீங்கரிக்கும் சத்தம்.

காற்றாய் சுழன்றவன் சுற்றி நின்றிருப்பவர்களில் கவனத்தை பதித்து அடித்து வீழ்த்திக் கொண்டிருக்க…

அமோஸ் மற்றும் ரேமண்டை கருத்தில் கொள்ள மறந்திருந்தான்.

மெல்ல எழுந்து நின்ற பரிதி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள போராட, தலை சுற்றியது. ஜென் பரிதியை சென்று தூக்கி நிறுத்தியவளுக்கு அவர்களால் முடியாதென்று அறிந்து ஆம்புலன்ஸிற்கு அழைத்து விவரம் கூறினாள்.

பாரி அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். இத்தனை நேரம் இவர்களெல்லாம் எங்கு ஒளிந்திருந்தனர் என்றே தெரியவில்லை.

எப்போது தன்னால் முடியாதென்று அமோஸ் நினைத்தானோ அக்கணமே தான் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆட்களுக்கு தகவல் அனுப்பிவிட்டான்.

இப்போது அவர்களே பாரியிடம் அடி வாங்கிட முடியாது திணறிக்கொண்டிருந்தனர். இருப்பினும் அமோஸிடம் வாங்கிய பணத்திற்காக விடாது பாரியை தாக்க அதையெல்லாம் அனாயசமாக பாரி தடுத்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திட… இறந்து கிடந்த விவாஷ் மற்றும் ராயப்பனின் உடலை அப்புறப்படுத்தக் கூறினாள் ஜென்.

சத்யாவிற்கு நெற்றியில் ரத்தம் வழிய, தன்னை ஓரளவு சமன் செய்து எழுந்து நின்ற அவி… தானே சத்யா மற்றும் பரிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி தாங்கள் கொண்டு வந்திருந்த ஆமினியில் ஏற்றி அழைத்துச் சென்றான்.

கணபதி வயதின் காரணமாக ஒரு அடியிலேயே விழுந்திருந்தவர், தனக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு ஒன்றுமில்லையென ஜென்னுடன் நின்று கொண்டார்.

கிட்டத்தட்ட அனைவரையும் பாரி தன் போலீஸ் அடியால் முடித்திருந்தான்.

அப்போதுதான் எழுந்த ரேமண்ட் பாரியை பின்பக்கமிருந்து தாக்கிட, பாரியின் மீதே கண்ணாக இருந்த பூ, “வேந்தா” என்று சத்தமிட்டு அவனின் கவனத்தை ரேமண்டின் பக்கம் திருப்பினாள்.

பாரியின் மரண அடிக்கு முன்னால் ரேமண்டால் தாக்குப்பிடிக்க முடியாது சில நிமிடம் போராடியவன், பாரி கழுத்திலே இரு விரல் சுழற்றி  சொருகியதில் கண்கள் மேலெழும்ப மொத்தமாக வீழ்ந்தான்.

அவ்விடமே… கால் வைத்திடக் கூட இடமின்றி அடிப்பட்டு கிடந்த தடியர்களால் நிரம்பியிருந்தது.

அமோஸ் தலைகுப்புற தரையில் கிடக்க… எல்லாம் முடிந்ததென பாரியும் ஜென்னும் நேருக்கு நேர் பார்த்திட…

“வேந்தா” என்ற அலறலோடு பூ பாரியின் காலுக்கடியில் விழ, பாரியின் முகத்தில் தெறித்திருந்தது அவனவளின் குருதி துளிகள்.

__________________________

மொத்த நண்பர்கள் பட்டாளமும் மருத்துவமனையில் கூடியிருந்தது. லீயை தவிர்த்து.

பரிதி முதல் சத்யாவரை அனைவரும் எங்கோ வெறித்தபடி நின்றிருந்த பாரியை தீயாய் முறைத்துக் கொண்டிருக்க…

“நடந்தது பாரியே எதிர்பார்க்கல. தமிழ் தான் அவசரப்பட்டு குறுக்க வந்துட்டாள்” என்று பாரியின் மீது எந்தவொரு தவறுமில்லையென அவர்களுக்கு புரிய வைத்திடும் நோக்கில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஜென்.

சிகிச்சை அறைக்குள் கொண்டு சென்று ஒருமணி நேரத்திற்கும் மேலானது. இன்னும் பூவின் நிலைப்பற்றி ஒருவரும் வெளியில் வந்து தெரிவிக்கவில்லை.

அறையின் கதவினையே ஏக்கம் சுமந்து பார்த்தபடி கண்கள் கலங்கி நீர் முட்டிக்கொண்டு நிறப்பதைக்கூட உணராது தவிப்போடு நின்றிருந்தான் பாரி வேந்தன்.

“புரியுது ஜென்” என்ற பரிதிக்கும்… உண்மையிலேயே பூ குறுக்கே வருவதை பாரி எதிர்பார்த்திருக்க மாட்டான். இல்லையென்றால் நிச்சயம் பூவின் மீது தான் அவனது முழு பார்வையும் இருந்திருக்கும் என்ற உண்மை புரியத்தான் செய்தது.

பூ அறையின் உள்ளே தானே இருக்கின்றாள் என்று பாரி சற்று மெத்தனமாக இருந்துவிட்டான்.

அமோஸ் தலைகுப்புற தரையில் கிடக்க… எல்லாம் முடிந்ததென பாரியும் ஜென்னும் நேருக்கு நேர் பார்த்து தங்களை சற்று இளகுவாக உணர்ந்தனர்.

அமோஸ் வெகு நேரமாக அப்படியே இருந்ததால், அவன் மயக்கத்திலோ அல்லது உயிர் துடித்தோ கிடக்கின்றான் என்று பாரி நினைத்திருக்க…

பாரியின் காட்டு அடியை கண்களால் பார்த்தே அரண்டு போயிருந்த அமோஸ் பாரி அசரும் நேரத்திற்காக அப்படியே அசைவற்று கிடந்தான்.

பாரியின் ஆசுவாசமான மூச்சினை உணர்ந்த அமோஸ் அவனின் கவனம் ஜென்னிடம் இருப்பதை உறுதி செய்துகொண்டு இருக்கைக்கு கீழ் விழுந்து கிடந்த துப்பாக்கியை கை நீட்டி எட்டி எடுத்து பாரியை நோக்கி குறி வைத்து டிரகரை அழுத்திட… பாரியையே பார்த்திருந்த பூவின் விழிகள் அவனை கடந்து அமோஸின் மீது பதிந்தது.

ஜென்னை தொடர்ந்து பூவின் மீது பார்வையை பாரி திருப்பிட, பூவின் அதிர்ந்த விழிகளை கண்டு… அவளின் பார்வை நிலைக்கும் திக்கை நோக்கி பாரி திரும்பிடவும், அமோஸின் எண்ணம் புரிந்து சடுதியில் தன் இடையிலிருந்த துப்பாக்கியை எடுத்து அமோஸினை பாரி சுடுவதற்கும், “வேந்தா” என்ற அலறலோடு பாரிக்கு பின்னாலிருந்த பூ ஓடிவந்து அவனை தள்ளிவிட்டு அவனுக்கு முன் குறுக்கே வந்திட, அமோஸின் குறி பூவின் இடது மார்பிற்கு சற்று மேல் துளைத்து ரத்த துளிகளை சிதறச் செய்தது.

பாரியின் குறி தவறாது அமோஸின் நெற்றி பொட்டில் துளைத்து அவனின் மரணத்தை கொடுத்தது.

அவன் இறந்து விட்டான் என்று தெரிந்தபோதும் தன்னவளை தாக்கியதன் தாக்கம் குறையாது சரமாரியாக குண்டுகளை பொழிந்து அமோஸின் உடலில், தன் ஆத்திரம் தீரும் மட்டும் குண்டுகளை பாய்ச்சியிருந்தான்.

இமைப்பொழுதில் நடந்து முடிந்திருக்க… ஜென் உடல் நடுங்க நின்றிருந்தாள்.

குண்டு துளைத்து சிதறிய பூவின் செங்குருதி பாரியின் முகத்தில் துளி துளியாக படிந்திருக்க… தன் காலுக்கடியில் சரிய இருந்த தன்னவளை கைகளில் தாங்கியிருந்தான் பாரி.

“பூ… ஏண்டி?” என்றவனுக்கு கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.

“உனக்கு ஒன்னும் ஆகலையே?” அந்நிலையிலும் திக்கித்திணறி தன்னவனின் நலன் கேட்ட பூ அவனின் கைகளிலேயே கண்கள் மூடி தொய்ந்திட…

“பூ” என்று உலகமே கிடுகிடுக்க வெடித்து கத்தியிருந்தான் பாரி.

ஜென் தன் அதிர்விலிருந்து மீண்டது பாரியின் அழுகையின் ஓலத்தில் தான்.

பூவின் நிலை கண்டு துடித்தவள், பாரி சுயத்தில் இல்லை என்பதை உணர்ந்து…

“பாரி… பாரி… ஹாஸ்பிட்டல் போகணும். சீக்கிரம் சீக்கிரம்” என்று விரட்டி அவனை செயல்பட வைத்தாள்.

ராயப்பன் மற்றும் விவாஷின் உடல்களை மருத்துவமனையில் சேர்த்திட்டு மீண்டும் வந்திருந்த ஆம்புலன்சினில் பூவை ஏற்றிக்கொண்டு விரைந்தான் பாரி.

அங்கிருக்கும் உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல முடியாது ஜென் தேங்கி நின்றாள்.

ஆணையர் குமாருக்கு அழைத்து விரைந்து வர சொல்லியவள் நடந்ததை அப்படியே விவரிக்க… இனி தான் பார்த்துக்கொள்வதாக அவர் கூறிடவும், அங்கிருந்த கணபதியிடம் ஆணையருக்கு உதவும்படி சொல்லிவிட்டு பூவின் நிலையறிய மருத்துவமனை நோக்கி ஓடோடி வந்திருந்தாள்.

சத்யா தலையிலும், பரிதி கையில் சிறிய கட்டுடனும் இருக்க, அவிக்கு காலில் சுளுக்கு மட்டுமே.

கட்டிட்டு முடித்து அப்போதுதான் அவர்கள் மூவரும் மருத்துவமனை விட்டு வெளியில்வர பாரி தன் பூவை கைகளில் ஏந்தியபடி உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தான்.

பூவின் ரத்தம் பாரியின் கை வழி தரையில் வழிந்தபடி அவன் ஓடி வரும் கோலம் கண்டு பதறியவர்கள் பூவின் நிலையறிந்து அதிர்ச்சியாகினார்.

பூவை சிகிச்சை அறைக்குள் அனுப்பிவிட்டு அவ்வறையையே பார்த்தபடி நின்றுவிட்ட பாரியிடம் மூவரும் என்னவாகிற்று எப்படி என்று எத்தனை முறை கேட்டும் அவனிடம் பதிலின்றி போக முறைத்து பார்த்தனர்.

அக்கணம் அங்கு வந்த ஜென் நடந்ததை விளக்கிட… பாரியின் தோள் தட்டி, “எதுவும் ஆகாதுடா” என்று பரிதி தேறுதலாக சொல்லிட அவனை கட்டிக்கொண்டு கதறிவிட்டான் பாரி.

அத்தளம் முழுக்க பாரியின் கதறல் ஒலித்தது.

பார்த்திருந்த நால்வருக்கும் பூவின் நிலை கவலை அளித்தது என்றால் பாரியின் கண்ணீர் மனதை உலுக்கியது.

“முடியல பரிதிண்ணா. என் பூ… ரொம்ப ரொம்ப சாஃப்ட் பரிதிண்ணா அவள்… எப்படி எப்படி… வலிக்குமே!” என்று அரற்றியவன், பரிதியிடமிருந்து விலகி,

“நான் தான் காரணம். என் பூ இப்படியிருக்க நான்தான் காரணம்” என்று தலையில் அடித்துக்கொண்டு சுவற்றோடு சரிந்து தரையில் மடங்கி அமர்ந்து வெடித்து குமுறினான்.

தன் உயரம், பதவி என அனைத்தையும் தன்னவளின் முன்பு மறந்திருந்தான்.

அவர்களால் பாரியை கண்கொண்டு காண முடியவில்லை. பரிதி எவ்வளவோ முயற்சித்தும் பாரியின் கதறலை கேட்க முடியாது… தன்னுடைய கையறு நிலையை வெறுத்தவனாக பாரிக்கு அருகில் மண்டியிட்டிருந்தான்.

துடித்து அழும் பாரிக்காகவாவது பூ சீக்கிரம் கண் திறந்திட வேண்டுமென சத்யா தன் மனதோடு வேண்டிட, அவி பாரியின் மற்றைய பக்கம் அணைத்து தேற்றிக் கொண்டிருந்தான்.

“பாரி ஒன்னுமாகாது… அழாதடா ப்ளீஸ்… நீ அழறதை பார்க்க முடியலடா” என்ற பரிதி பாரியின் முகத்தை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

நேரம் விடியலை நெருங்கிக்கொண்டிருக்க… பாரியிடம் சிறிதும் மாற்றமில்லை.

அந்நேரம் பாரியின் குடும்பம் பதற்றத்தோடு அங்கு வருகைதர, பரிதி ஜென்னை அர்த்தமாக ஏறிட்டான்.

“அம்மா வந்தாதான் பாரியை சமாதானம் செய்ய முடியும். அத்தோட இதை மறைக்கவும் முடியாதே பரிதிண்ணா. அதான் கால் பண்ணேன்.”

பரிதியின் பார்வைக்கான கேள்வி புரிந்து ஜென் பதில் கூறினாள்.

“பரிதி என்னப்பா என்னாச்சு? ஜென் என்னென்னமோ சொன்னாளேப்பா” என்று பரிதியிடம் கேட்டபடி அருகில் வந்த பார்வதி தன்னுடைய இளைய மகன் இருக்கும் கோலம் கண்டு, “பாரி என்னடா கண்ணா” என்று தன் மடி தாங்கினார்.

அன்னையின் அணைப்பில் சேயாய் ஒடுங்கிய தன் தம்பியை கண்ட பரிதி அப்போதுதான் நினைவு வந்தவனாக,

“ஜென், தமிழ் வயித்துல குழந்தை?” என்று கேள்வியாக இழுத்தான்.

“என்னங்க என்ன சொல்றீங்க? தமிழ் கன்சிவ்வா இருந்தாளா?” என்று பரிதியை தொட்டு இளா வினவ, அவ்விடயம் புதிதாக அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சி.

தில்லை இருக்கையில் தொப்பென்று வேதனையுடன் அமர்ந்தார்.

“அம்மா… பூ… பூ… வயித்துல குழ…” அதற்கு மேல் சொல்ல முடியாது பாரியின் அழுகை அதிகமாகியது.

“தமிழுக்கு என்னடா ஆச்சு, எப்படி?” என்ற பார்வதி, பரிதியிடம் வினவ அவன் நடந்த அனைத்தையும் விவரித்துக் கூறினான். இளா தலையில் அடித்துக்கொண்டு அழுகையில் வெடிக்க, அவளை அடக்குவதற்குள் பரிதி திணறிப்போனான்.

“இளா அழறதை நிறுத்து. பாரியை கொஞ்சம் யோசித்துப்பார். உன் அழுகை அவனை இன்னும் அழுத்தும்” என்று பரிதி கத்திட, இளா தன் வருத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கையில் அமர்ந்தாள். மடியில் சின்னுவை அணைத்து உட்கார்ந்த அவளின் கண்கள் மட்டும் கண்ணீரை வழிய விட்டபடி இருந்தது.

“நேத்து… நேத்து தாம்மா, குழந்தை இருப்பதே தெரியும். அதுக்குள்ள… எல்லாம் என்னாலதாம்மா,” சிறுபிள்ளை போல் அரற்றுபவனை தேற்றும் வழி தெரியாது பார்வதியும் திணறினார்.

அந்நேரம் பூவிருந்த அறையின் கதவு திறந்து சிகிச்சை அளித்த மருத்துவர் வெளிவர, அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

“டாக்டர் தமிழ்…?”

“அவங்க உடம்பிலிருந்த புல்லட் எடுத்தாச்சு… இதயத்துக்கு பக்கத்தில் என்பதால் கொஞ்சம் டேஞ்சர் சோனில் தான் இருக்காங்க. கண் விழிச்சிட்டா ப்ராப்ளம் இல்லை” என்று அவர் சொல்லும்போதே…

“அவள் கன்சிவ்வா இருந்தாள் டாக்டர்” என்று பார்வதி இடையிட்டு கேள்வியாகக் கூறிட,

மருத்துவர் “சாரி” என்ற வார்த்தையில் கடந்து விட்டார்.

அதுவே சொல்லாமல் சொல்லியது கரு கலைந்துவிட்டதை.

கனத்த தருணம். பெரும் வேதனையை விழுங்கியபடி யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது மௌனமாக கண்ணீர் சிந்தியவர்கள் பாரியின் பக்கம் திரும்பிட…

பார்வதி விட்டுச்சென்ற அதே இடத்தில் அமர்ந்திருந்தான். ஆனால் அவனின் நிலையில் மாற்றம். சுவற்றில் சாய்ந்து ஒரு கால் நீட்டி, ஒரு கால் குத்திட்டு அதன் மேல் ஒற்றை கையை நீட்டி வைத்தபடி அமர்ந்திருந்தவனின் முகம் அத்தனை இறுக்கமாக இருந்தது.

இவ்வளவு நேரமும் பாலகனாக அழுகையில் கரைந்தவன் இவனா என்கிற சந்தேகம் அனைவருக்குமே தோன்றியது.

பாரியின் கதறலைவிட, அவனின் இந்த அமைதி அங்கிருந்தவர்களை அச்சம் கொள்ள செய்தது.

பாரியின் அருகில் பார்வதி தன் நடுங்கும் கைகளை கொண்டு சென்றிட, வேகமாக எழுந்தவன்… டக்கின் செய்திருந்த காக்கி சட்டையை வெளியில் எடுத்துவிட்டு உதறவியவனாக அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“பாரி…”

“அம் ஓகேம்மா” என்று மரத்த குரலில் கூறியவன், “உள்ள படுத்திருக்கவ(ள்) கண் திறந்தா, அவளைத் தாங்கிக்க நான் திடமா இருக்கணும்மா” என்றான்.

பாரியிடம் சடுதியில் இத்தனை தெளிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னவளுக்கு ஒன்றென்று நெஞ்சம் துடிக்க சுயம் தொலைத்து விம்பியவன், தன்னுடைய உதிரத்தில் உதித்த கரு உருவம் பெரும் முன் புள்ளியாக கரைந்ததை அறிந்து விம்பிய நெஞ்சம் விறைக்க இறுகிப்போனான். மரத்துப் போனான் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

உணர்வற்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன்னவள் மீண்டு வந்து, தங்கள் குழந்தையை பற்றி கேட்டால், அவளைத் தேற்றிட தான் சுயத்தோடு இருக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்த கணம், தன் வருத்தம், வேதனை, சோகம், வலியென அனைத்தையும் உள்ளுக்குள் புதைத்தவனாக தன்னிலை மீட்டிருந்தான்.

அவன் சொல்லாவிட்டாலும் அவனின் மாற்றத்திற்கான பொருள் அங்கிருப்பவர்களுக்கு புரியத்தான் செய்தது.

“என்ன மாதிரியான காதல் இது.” எண்ணாமல் இருக்க முடியவில்லை.

தன்னவளுக்காக… தன் அண்ணன், அம்மாவிடம் ஆறுதல் தேடியவன், தன் மகவிற்கான ஆறுதலை தன் பூவிடம் தான் பெற முடியுமென்று நினைத்தான். அவளின் மடியில் தான்… துடிக்கும் மனதிற்கு அமைதி கிடைக்கும் என்றே தன்னை மீட்டிருந்தான். இது அவன் மட்டுமே அறிந்தது.

“பாரி…?” பரிதி நம்ப முடியாது தன் தம்பியை பார்த்தான்.

“நான்… நான் ஓகே பரிதிண்ணா” என்றவனின் குரலில் என்ன முயன்றும் தழுதழுப்பை மறைக்க முடியவில்லை.

“அழணும் போலிருந்தா அழுதிடு பாரி.” பார்வதி கூறிட, கலங்கும் கண்களை முயன்று சரிசெய்து கண்ணீரை உள்ளிழுத்திருந்தான்.

அவனது காக்கிச்சட்டை முழுக்க அவனது பூவின் ரத்தத்தால் நனைந்திருந்தது. அவளை மார்பில் தாங்கியதால், அவனது இடது பக்கம் முற்றாக ரத்த நிறம் கொண்டிருக்க, உணர்ச்சி துடைத்த பார்வையை அங்கு பதித்தபடி, தன் உள்ளங்கை வைத்து சட்டையை இறுக்கமாக கசக்கி பிடித்தான்.

“பாரி அழுத்தி வைக்காத!” தில்லை சொல்லிட… நிமிர்ந்து அமர்ந்தான்.

அப்போது அங்கு வந்த மருத்துவர்…

“இத்தனை பேர் இங்கிருக்கக்கூடாது. யாராவது ரெண்டு பேர் இருங்க. மத்தவங்க கிளம்பிடுங்க” என்று சொல்ல…

“வயித்துல அடி இல்லதான டாக்டர். அப்புறம் எப்படி?” இளா தன்னுடைய சந்தேகம் வினவினாள்.

“அவங்க அதீத அதிர்வில், மனசோர்வில் இருந்திருக்காங்க. அத்தோட அவங்க ரொம்பவே பயந்திருக்காங்க. இதெல்லாம்விட அவங்களுக்கு இதயத்துக்கு பக்கத்தில் குண்டடிப்பட்டிருக்கு. இந்த மாதிரியான நேரத்தில் சின்ன அதிர்வு கூட கருக்கலைப்பிற்கு காரணமாக அமையும்” என்றவர் விளக்கம் கொடுத்து செல்ல, அனைவரும் பாரியைத்தான் பார்த்தனர்.

“எல்லாம் இந்த வேலையால் வந்தது.” பார்வதி முணுமுணுக்க…

ஏற்கனவே வேலையை விட சொல்லி தர்க்கம் செய்பவள், இப்போது தங்கள் பிள்ளையை அதனாலேயே பறிகொடுத்திருக்க எங்கே முற்றும் முழுவதுமாக தன்னை காரணம் காட்டி தண்டித்துவிடுவாளோ என்று உள்ளூர எட்டிப்பார்த்த அவனின் பயம், பார்வதியின் வார்த்தையில் மேலும் அதிகமாகியது.

அக்கணம் ஏற்கனவே தன் கையால் கொன்றிருந்த அமோஸை மீண்டும் மீண்டும் கொல்லும் வெறி அவனுள் பொங்கியது.

“ஜென்” என்றவன் ஜென்னிடம் கையை நீட்டிட, புரிந்தது என்பதுபோல் ஜென் அலைபேசியை அவனின் கையில் வைத்தாள்.

ஆணையர் குமாருக்கு அழைத்தவன் தன்முன் தன்னுடைய குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற எண்ணம் சிறிதுமில்லாமல் முழு காவலனாக மாறியிருந்தான்.

“மீடியாக்கு தெரியாம எல்லாத்தையும் சரி செய்துட்டேன் பாரி” என்ற குமார், பூவைப்பற்றி விசாரிக்க, அவரின் கேள்வியை புறம் தள்ளினான்.

“அந்த அமோஸ் உடல் அவன் நாட்டுக்கு போகக்கூடாது. அவன் இங்க வந்ததே ட்யூப்ளிகேட் பாஸ்போர்டில் தான். அவன் இங்க வந்ததற்கான ஆதாரம் ஒண்ணுமே கிடையாது. அமோஸ்ன்னு ஒருவன் இருந்ததற்கான அடையாளமே இருக்கக்கூடாது” என்று சிங்கத்தின் கர்ஜனையில் கூறியவனின் வார்த்தையை மறுக்க முடியாது குமாருக்கு பாரியின் நியாயம் தான் சரியெனப்பட்டது.

பாரியின் இன்னொரு முகத்தை முதல் முறையாக கண்டவர்களுக்கு அவனிடம் தோன்றும் அச்சத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

“இப்படி செய்ய வேண்டுமா பாரி. விசா ஆபிஸ் மூலமா எம்பசியில் ப்ராப்ளம் வராதா?”

அனைவரும் கேட்க நினைத்ததை அவி கேட்டிருந்தான்.

“அவன் இங்க வந்ததற்கு ஆதாரமே இல்லைங்கிறப்போ, அவன் போகாலனா மட்டும் என்ன நடந்திடும். அவன் வந்தது ஒரிஜினல் பாஸ்போர்ட் கிடையாது. அவன் வந்த அடையாளம், விசா லிஸ்டிலே இருக்காது. இங்க வந்த அடுத்த நிமிஷம் போலி பாஸ்போர்ட் கணக்கை ஹேக் செய்து அழிச்சிட்டான். இனி அவன் பிணம் பல மீன்களுக்கு இரையாகிப்போகும்.”

“சிறையிலிருந்து தப்பித்த ராயப்பன் மற்றும் விவாஷ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இதை மட்டும் மீடியாவுக்கு தெரிவிச்சிடுங்க.”

பாரியின் ரௌத்திரம் அங்கிருந்தவர்களுக்கு கிலியை உண்டாக்கியது.

“இவன் நம்ம பையன் பாரியில்லைங்க!” பார்வதி சொல்லியதை ஆமோதித்த தில்லை, “இவன் தமிழோட கணவன் பார்வதி” என்றவர், “பூவை வைத்து பாரியின் மனதை பார். அவன் செய்றது சரின்னு படும்” என்றார்.

அவர் சொல்லியது அனைவருக்கும் கேட்க… பாரி செய்தது சரியென்றே பட்டது.

அப்போது வந்த செவிலி மருத்துவர் சொல்லியதாக இருவரைத் தவிர்த்து மற்றவர்களை கிளம்பச் சொல்லிட… ஆளாளுக்கு நான் நீ என்று ஒரு முடிவுக்கு வராது பேசிக் கொண்டிருந்தனர்.

“யாரும் இருக்க வேண்டாம். எல்லாரும் கிளம்புங்க.” பாரியின் அழுத்தம் மறுவார்த்தையின்றி அனைவரையும் கிளம்ப வைத்தது.

“தமிழ் கண் விழிக்கும் வரையாவது இருக்கின்றோமே பாரி.” பார்வதி தயக்கத்தோடு கேட்டார்.

“எப்போ கண் திறப்பாள் தெரியலம்மா… அவ்வளவு நேரம் இத்தனை பேர்…” என்று இழுத்தவன், “நீங்க கிளம்புங்க கண் விழிச்சிட்டா கால் செய்றேன்” என்றிட அனைவரும் மனமேயின்றி கிளம்பியிருந்தனர்.

மருத்துவரிடம் அனுமதி பெற்றவன், பூவின் படுக்கைக்கு அருகிலேயே இருக்கையை போட்டு அமர்ந்துவிட்டான்.

இமை மூடிய மலராக, வதங்கிய கொடியென படுக்கையில் கிடப்பவளை காண காண இதயத்தில் ரணம் உணர்ந்தான்.

தன்னுடைய உடையில் தன்னவளின் ரத்தத்தை காண்கையில் தன்னால் தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற முடியவில்லையே என்கிற வலியோடு குற்றவுணர்வும் போட்டிபோட,

அவிக்கு கால் செய்தவன்…

“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணனும் அவி” என்று மட்டும் சொல்லி வைத்திட்டான்.

பூவின் கையை தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டவன்,

“சாரிடி… நான் இப்படியாகும் எதிர்பார்க்கல” என்று கண்கள் கலங்கியவன், “என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா மலரே! அவ்வளவு நேரமும் பயத்தில் ஒதுங்கி நின்னுட்டிருந்த உனக்கு, என்னை சுடப்போகிறான்னு தெரிந்ததும் தைரியம் வந்திடுச்சா?” எனக் கேட்டான்.

“உன்னை இப்படி பார்க்க முடியலடி. என்னை அதிகம் காக்க வைக்கமா என்கிட்ட வந்திடு மலரே!”

அவனின் மனம் விடாது அவளிடம் அவனின் வருத்தத்தோடு சேர்த்து காதலையும் வார்த்தையால் கொட்டிக்கொண்டிருந்தான்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
37
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்