Loading

தூவானம் 51 :

மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்துவிட்டு, மருந்தகத்தில் பூ மருந்திற்காக காத்திருந்த தருணம்.

பாரிக்கு அழைக்க, வேறொரு தொடர்பில் இருப்பதாக வந்தது.

அருகில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்,

தான் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், தனக்கு ஆட்டோ பிடித்து தர முடியுமா? என்று பூவிடம் கேட்க, அவரின் முகவாட்டம் அவருக்கு உதவி செய்ய ஒப்புக்கொள்ள வைத்தது.

அந்நேரம் பாரி சொல்லிய வார்த்தைகள் சரியாக நினைவில் மேலெழும்பின.

“எங்க போனாலும் ரொம்ப கவனமா இருக்கணும். தெரியாதவங்க யாரிடமும் பேசக்கூடாது. யாராவது வந்து பேச்சுக்கொடுத்தாலும் ஒதுங்கி போயிடணும். உனக்கு எதாவது தவறா மனதில் பட்டால் உடனடியா எனக்கு கால் பண்ணிடனும்.”

பாரியின் அவ்வார்த்தகளை மீறிட முடியாது அப்பெண்ணை ஏறிட்ட பூவிற்கு அவரிடம் எதுவும் தவறாக தோன்றாததால், அவருடன் மருத்துவமனை விட்டு வெளியில் சென்று, வாயிலிலேயே நின்றிருந்த ஆட்டோவை அழைத்து, அப்பெண் ஏறுவதற்கு உதவி செய்தாள்.

பூவின் கையை பற்றுக்கோலாக பிடித்து ஆட்டோவில் ஏறி அமர்ந்த பெண், பூவின் கையை விடாது பிடித்திருந்தாள்.

“அண்ணா கொஞ்சம் பொறுமையா ட்ரைவ் பண்ணுங்க” என்று அப்பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு பூ ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லிக்கொண்டிருக்க, பற்றியிருந்த பூவின் கையை பிடித்து ஆட்டோவிற்குள் பூவை இழுத்திருந்தாள் அப்பெண்.

அடுத்து பூ என்னவென்று உணர்வதற்கு முன் ஆட்டோ கிளம்பியிருந்தது. சொல்ல முடியாத வேகம்.

வெளியிலிருந்து பார்ப்போருக்கு பூவாகவே ஏறியது போல் தான் தோற்றமளிக்கும்.

“அண்ணா ஆட்டோவை நிறுத்துங்க” என்ற பூ, “அக்கா என்ன பன்றீங்க, என்னை எதுக்கு உள்ள இழுத்தீங்க?” என்று அப்பெண்ணிடம் கேட்க… ஒரே அறை தான்.

அப்பெண் அடித்ததில் பூ மயங்கியிருந்தாள்.

அடுத்து எப்படி எப்போ அங்கு வந்து சேர்ந்தோமென்றெல்லாம் பூவிற்கு தெரியவில்லை.

பூ கண் விழிக்கும் போது அமோஸ் சத்யாவை அடித்து கீழே தள்ளியிருந்தான்.

இருக்குமிடம் அவளது குவார்ட்டர்ஸாக இருந்தது.

தனக்கு முன்னால் இருந்த ஒருவரையும் பூவிற்கு தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தாள்.

“பாஸ் அந்த பொண்ணு முழிச்சிடுச்சு.”

ரேமண்ட் சொல்லிட அனைவரின் பார்வையும் பூவின் பக்கம் திரும்பியது.

“இவனை கட்டிபோடு” என்று சத்யாவை ரேமண்டிடம் காட்டிய அமோஸ், பூவின் மீது பார்வையை வைத்து… “ஷீ லுக்கிங் சோ ப்ரிட்டி” என்றான் ராயப்பனிடம்.

“தேவையில்லாத வேலை வேண்டாம் அமோஸ். அந்த பாரி ஜெம்ஸ் கொண்டு வரும்வரை இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது.”

அமோசின் எண்ணம் போகும் திசையறிந்து விவாஷ் அவனை எச்சரித்தான்.

“யா… யா…” என்று விவாஷின் பேச்சினை ஆமோதித்தான் அமோஸ்.

“பட் உங்க இண்டியன் கேர்ள்ஸ் ஆர் சமத்திங் ஸ்பெஷல் மேன்” எனக்கூறி வெடிச்சிரிப்பு சிரித்தான்.

அவன் பேச்சும் பார்வையும் அருவருப்பாக இருக்க முகம் சுளித்தாள் பூ.

தானிருக்கும் இடத்திலிருந்து பூ எழுந்திருக்க… வேகமாக அவளின் இருபக்கமும் ரேமண்டும், விவாஷும் வந்து நின்றனர்.

“எதுக்கு இப்போ இம்புட்டு அச்சம் உங்களுக்கு. நான் எங்கனையும் போவமாட்டேன். தாகமா இருக்கு. தண்ணீத்தேன் குடிக்க போவுதேன்” என்று சொல்லிய பூ, நீங்கள் கடயத்தியதால் எனக்கு துளி அளவும் பயமில்லை என்பதை அவர்களுக்கு தன் பேச்சின் மூலம் காட்டி… இருவரையும் தாண்டி அடுக்கலைக்குள் சென்றாள்.

“போலீஸ்காரன் பொண்டாட்டியை நல்லாவே ட்ரெயின் பண்ணியிருக்கான்.” ராயப்பன் அமோஸிடம் கூறிட,

“ஷீ இஸ் வெரி ஸ்மார்ட்” என்றான் அமோஸ்.

“மக்கும் இவன் வேற அவகிட்ட கவுந்துட்டான் போல” என்று முணுமுணுத்த ராயப்பன் அமோஸிடம் வராத சிரிப்பை உதிர்த்தார்.

“இவள் ஸ்லாங் வேற மாதிரி இருக்கே?”

‘இருக்கிற பிரச்சனையில் இது ரொம்ப முக்கியம்’ என்று நினைத்த ராயப்பன், “நேட்டிவிட்டி” என்றார்.

சமையலறைக்குள் சென்ற பூ அங்கிருந்த நீரினை குடித்து தன்னை நிலைப்படுத்தினாள்.

உண்மையிலும் அவளுக்கு அத்தனை பயம். கைகள் உதறும் போலிருந்தது. தன்னுடைய பயம் அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே முயன்று வரவைக்கப்பட்ட தைரியத்தில் இயல்பாக பேசுவதைப்போல் பேசி வேகமாக அங்கு வந்தாள்.

‘வேந்தனுக்கு எப்படியும் தகவல் கொடுக்க வேண்டுமே’ என கைகளை பிசைந்தபடி பூ யோசித்துக் கொண்டிருக்க,

“தண்ணீ குடிச்சிட்டல… வா, வந்து இங்க உட்கார்” என்று மிக அருகில் ஒலித்த விவாஷின் குரலில் நடுங்கிய கைகளை மறைத்தபடி அவன் சொல்லிய இடத்தில, சத்யாவை கட்டி வைத்திருந்த இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்தாள்.

“உள்ள யோசனையெல்லாம் பலமா இருக்கும் போலவே?”

விவாஷின் நக்கல் குரலில் பூ பற்களை கடித்தாள்.

“தப்பிக்க மட்டும் முயற்சிக்காத!” ரேமண்ட் எச்சரித்தான்.

இன்னமும் இவர்கள் எதற்காகத் தன்னை கடத்தியிருக்கின்றனர். தன் பக்கத்தில் கட்டிப் போட்டிருக்கும் சத்யா யாரென்றேல்லாம் பூவிற்கு தெரியவில்லை.

நால்வரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த பூவிற்கு, எப்படியும் பாரி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மலையளவு இருந்தது. அதனால் தன் மொத்த பயத்தையும் விரட்டியவள், இருக்கையில் நன்றாக வசதியாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

பூவின் நடவடிக்கை சத்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“உங்களுக்கு பயமா இல்லையா சிஸ்டர்?”

கிசுகிசுப்பான சத்யாவின் குரல் கேட்க, கண்களை திறந்த பூ, அவன் யாரென்று தெரியாத போதும் அவன் சொல்லிய சிஸ்டர் என்கிற வார்த்தையால் அவனுக்கு பதில் அளித்தாள்.

“பயமிருக்குத்தான். இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனால் பயத்தைவிட இவனுங்க நிலையை நினைச்சாதான் பாவமா இருக்கு. என் புருஷனை பற்றி தெரியாம என்மேல் கை வச்சிட்டானுங்க” என்ற பூ மீண்டும் கண்களை மூடிக்கொள்ள…

“ஆமாம்… ஆமாம்… பாரியைப்பற்றி தெரியாமலில்லை. முழுசா தெரிந்ததால் தான் உங்களை கிட்நாப் செய்து… உங்க வீட்டிலே அடைத்து வைத்திருக்கானுங்க” என்ற சத்யாவின் வார்த்தையில் திடுக்கிட்டு கண் திறந்து சத்யாவை ஏறிட்டாள்.

“பாரியோட உயிர் நீங்கதான்னு அவனுங்களுக்கு தெரிந்திருக்கு” என்று தெளிவாகக் கூறினான் சத்யா.

“நீங்க…?”

“சத்யா.”

இப்போ சத்யா யாரென்பது பூவிற்கு தெரிந்தது. பாரியின் துறையில் நெருக்கமானது சத்யா தான் என்று அவனும், ஜென்னும் சொல்ல பூ கேட்டிருக்கிறாள்.

“நீங்க எப்படி மாட்டுனீங்க?”

“அங்கென்ன ரெண்டு பேரும் கதை பேசிட்டு இருக்கீங்க?” இருவரிடமும் வந்த விவாஷ் கேட்டிட…

“போர் அடிக்குது. கிட்நாப் மெட் ஆகிட்டோம். அதான் பேசி பழகுறோம்.” முகத்தை இழுத்து வைத்து பூ சொல்லிட…

“ஹேய் உண்மையாவே உனக்கு பயமில்லை?” எனக் கேட்டான் விவாஷ்.

“நீங்களே வேந்தனுக்கு… ஐ மீன் என் புருஷனுக்கு பயந்துதானே என்னை கடத்தியிருக்கீங்க. அதுவும் அவன் வீட்டிலே வந்து ஒளிஞ்சிக்கிட்டா அவன் கவனம் இங்க வராதுன்னு பயந்து வந்திருக்கீங்க. அப்படிபட்ட உங்களை பார்த்து நான் ஏன் பயப்படனும்” என்ற பூவின் பேச்சில் விவாஷ் ஆத்திரம் கொண்டான் என்றால், சத்யா உள்ளுக்குள் சுபாஷ் போட்டுக்கொண்டான்.

“நீ ரொம்ப பேசுற…?”

“என்னால ரொம்ப நேரமெல்லாம் பேசமா இருக்க முடியாது. உங்க டீல் என்னவோ சீக்கிரம் என் புருஷன்கிட்ட பேசி, என்னை விட  பாரு” என்றவள், “சும்மா என்கிட்ட வந்து என்னை கடத்தியிருக்கன்னு அடிக்கடி சொல்லணும் அவசியமில்லை. எனக்கே அது நல்லா நினைவிருக்கு. அதான் என் மொபைல் பிடுங்கி வச்சிக்கிட்டியே, நானே நினைத்தாலும் வேந்தனிடம் எதுவும் தகவல் கொடுக்க முடியாது. அதனால அப்படி ஓரமா போய் உன் ஆளுங்கக்கூட இரு” என்று மூச்சுவிடாது பேசியவள்,

“நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கண்ணா” என்று சத்யாவிடம் திரும்பினாள்.

“ஷ்ஷ்ஷ்…” காற்றை வெளியேற்றி ஊதிய விவாஷ் ராயப்பனிடம் சென்று அமர்ந்தான்.

அமோஸின் பார்வை முழுக்க பூவின் மீது தான்.

அவள் விவாஷிடம் இவ்வளவு நேரம் என்ன பேசிக்கொண்டிருந்தாள் என்பது காதில் விழவில்லை என்றாலும், அவள் சற்றும் தங்களை கண்டு அச்சம் கொள்ளவில்லை என்று நினைத்தவனுக்கு அவளின் அந்த தைரியம் ரொம்ப பிடித்தது.

“ஐ…”

அமோஸ் என்ன சொல்ல வந்தானோ, அவனின் வாயை மூடிய ராயப்பன், “முதலில் அந்த பாரிக்கு தகவல் அனுப்பு” என்று கடிந்தான்.

அப்போது தான் ஜென்னை கடத்திய ஆள் ஒருவன் வந்து அவளின் அலைபேசியை ரேமண்டிடம் கொடுத்தான்.

அதிலிருந்து பாரிக்கு சிலையை கொண்டுவந்து கொடுத்திட்டு பூவை மீட்டுக்கொள் என்பதாக செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் அலைபேசியை அவனிடமே கொடுத்தான் அமோஸ். ஜென்னின் எண்ணை வைத்து கண்டுபிடித்திடக் கூடாதென.

அவன் சென்றிட…

“இனி அந்த போலீஸ் நம்ம கையில் நாம ஆட்டுவிக்க சுழலுவான்” என்று ராயப்பன் சொல்லிட… அமோஸ் தலையாட்டினான்.

“பாரிக்கு ஏற்ற ஆள் தான்” என்ற சத்யா…

“பாரிக்கு நான் உதவிடக்கூடாதுன்னு என்னை கடத்திட்டாங்க. இங்க என்னை அழைத்து வரும்போது நீங்க மயக்கமா இருந்தீங்க. அதை கேட்டதுக்கு தான் அடித்து கட்டி வச்சிட்டானுங்க” என்று சோகமாகக் கூறினான்.

“நீங்க டிடெக்டிவ் தான. ஃபைட்டெல்லாம் போடத் தெரியாதா?”

தன்னுடைய பயத்தை போக்குவதற்கு பேச்சினை உபயோகித்தவளாக சத்யாவிடம் வரிசையாக கேள்விகள் கேட்டாள்.

“அந்த ரேமண்டை பாரு…”

சத்யா யாரை சொல்கிறான் என்று பூவிற்கு தெரியவில்லை.

“யாருண்ணா?”

“அதான் ஹல்க் மாதிரி இருக்கானே, அவன் தான். அவன் சைசுக்கு அவனெல்லாம் என்னை ஒத்த கையாலே தூக்கிட்டு வந்துட்டான்” என்று சத்யா சொல்லிய தொனியில் பூவிற்கு சிரிப்பு வந்தது.

“கையை வேற கட்டிபோட்டுட்டானுங்க, மூக்கு அரிக்குது” என்றான் சத்யா.

“ஓய் ஹல்க்.” பூ சத்தமாக அழைத்திட நால்வருமே திரும்பி பார்த்தனர்.

“உங்களையெல்லாம் இல்லை. அவனை அந்த ஹல்கை” என்று ரேமண்டை சுட்டிக் காட்டினாள்.

அமோஸ் போ எனும் விதமாக கண்ணசைக்க, ரேமண்ட் பூவிடம் சென்றான்.

“உனக்கு அந்த பொண்ணு மேல ஒரு கண்ணுன்னு தெரியுது. அவளை பார்த்துக்கிட்டே நம்ம விடயத்தை கோட்டை விட்டுடாத அமோஸ்.” விவாஷ் எச்சரிப்பாகக் கூறினான்.

“ம்ம்… ம்ம்…” என்ற அமோஸின் பார்வையெல்லாம் பூவின் மீது தான்.

ராயப்பன் வெளிப்படையாகவே தலையில் தட்டிக்கொண்டான்.

“அவனுக்கு தகவல் அனுப்பி எவ்வளவு நேரமாச்சு. இன்னும் அவனிடமிருந்து நமக்கு எந்த பதிலும் வரலையே!” ராயப்பன் கேட்க, “நாமதான் அவனை காண்டாக்ட் பண்ணனும். அவன் நம்மை தொடர்புகொள்ளுற மாதிரி இருந்தால், இந்நேரம் நாமிருக்கும் இடத்தை கண்டுபிடித்திருப்பான்” என்றான் அமோஸ்.

“உங்களை தாக்குற அளவுக்கு எங்ககிட்ட தெம்புகூட இல்லை. அப்புறம் என்னத்துக்கு மேன் அவரை கட்டிப்போட்டு வச்சிருக்க. அவிழ்த்துவிடு” என்று அருகில் வந்த ரேமண்டிடம் கட்டளையாகக் கூறினாள் பூ.

“ஹேய்… ரொம்ப வாய் பேசுற…”

பூவை அடிக்க ரேமண்ட் கையினை உயர்த்திட,

“ரேமண்ட்” என்று அதட்டினான் அமோஸ்.

“ச்சை…” என்று தூக்கிய கையை கீழே போட்டுவிட்டு, ‘இவன் வீக்னெஸ் தான் இவனை போட்டுத்தள்ளப்போகுது’ என்று மனதில் புலம்பினான்.

“அவனை அவிழ்த்துவிடு” என்று அமோஸ் கூற, அவனின் பேச்சை தட்ட முடியாது சத்யாவின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.

“இங்க இழுத்திட்டு வா?”

சத்யாவை வேகமாக இழுத்து அமோஸின் அருகில் தள்ளினான்.

அவனது முன்பு சில கேஜெட்ஸ்களை வைத்தவன், “உன் ஃபிரண்டை ட்ராப் பண்ணு” என்றான்.

“எதுக்கு?”

“சொன்னதை செய்டா” என்று விவாஷ் சத்யாவின் தலையில் தட்டினான்.

“அவன் எங்களுக்கு எதிரா எதாவது செய்தால் தெரியணுமே!” என்றான் அமோஸ்.

பாரி சத்யாவிற்கு மட்டுமே தெரியும் எண் ஒன்றை வைத்திருக்கிறான். அந்த எண் பூவிற்கு, பரிதிக்கு கூடத் தெரியாது.

இதுபோன்ற சிக்கலானத் தருணங்களில் பாரி எந்த எண்ணை தனிப்பட்ட காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்வான் என்பதை அறிந்திருந்த சத்யா, தைரியமாக… அனைவருக்கும் பொதுவாக பாரி பயன்படுத்தும் எண்ணை அமோஸ் கூறியபடி செய்தான்.

“இப்போ அவன் எங்கிருக்கான்?”

“கமிஷனர் ஆபிஸ்.”

“இன்னமும் அங்கேயே தான் இருக்கானா?” அமோஸ் தன்னுடைய நாடியை நீவினான்.

“அவன் சிலையை கமிஷனரிடம் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறானோ?” ராயப்பன் சந்தேகமாக இழுத்தான்.

“இருக்கும்… இருக்கும்… அவன் பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னா தான் பய அந்த துடி துடிப்பானே” என்று தானறிந்ததை சொல்லிய அமோஸ், “லவ் மேரேஜா?” எனக் கேட்டான். பூவிடம் பார்வையை பதித்து.

“அவன்கிட்டவே கேட்டுக்கோ” என்று பாரியிடமே கேட்டுத் தெரிந்துகொள் என்பதாகக் கூறியவள்,

“அண்ணா அவனுங்களுக்கு ஹெல்ப் பண்ணாதீங்க. இங்க வாங்க” என்று சத்யாவை அழைத்தாள்.

“இவள் ரொம்ப பேசுறா(ள்). இவளை நாம் கடத்தியிருக்கோமான்னே எனக்கு டவுட் வருது. பேசாமல் கதையை முடிச்சிடவா” என்று விவாஷ் துப்பாக்கியை கையில் எடுக்க… அவனை வேகமாக தடுத்திருந்தான் ராயப்பன்.

“டேய் அவளோட உயிர் அவனைவிட(பாரி) நமக்கு இப்போ ரொம்ப முக்கியம்டா” என்றான் ராயப்பன்.

“எஸ்… ஹீ இஸ் கரெக்ட்” என ஆமோதித்தான் அமோஸ்.

அதன் பின்னர் அவர்களிடம் பாரியை எதிர்நோக்கிய காத்திருப்பு மட்டுமே.

பாரி பரிதியை அழைத்தது, அலுவலகத்தில் இருந்தவாறு பரிதி பாரிக்கு தகவல் அனுப்பியதெல்லாம் அவனின் தனிப்பட்ட எண்ணிலிருந்து தான்.

பாரி அழைத்த போது யாரென்று தெரியாமல் தான் பரிதி ஏற்றிருந்தான். ஆனால், பரிதி யாரென்று கேட்டு அறிவதற்கு முன்னரே சோர்ந்த குரலில் பேசிவிட்டு பாரி வைத்திருந்தான். தம்பியின் பேச்சில் வருத்தத்தை உணர்ந்த பரிதி எப்படி என்று தெரியாமலேயே அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை வந்திறங்கினான்.

பாரி சம்மந்தப்பட்ட அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த அமோஸ், பரிதி பாரியை ஆணையர் அலுவலகத்தில் சந்தித்துவிட்டு சென்று கொண்டிருக்கிறான் என்கிற தகவல் கிட்டியதும் பரிதியையும் கடத்தி மற்றவர்களுடன் சேர்த்து தன் ஆட்களின் பிடியில் வைத்தான்.

“இருங்க உங்க ஃபிரண்ட் நம்மளை சேவ் செய்த பிறகு, நீங்க இவங்களுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னு போட்டு கொடுக்கிறேன்.” தான் அழைத்து வரவில்லையென பூ மீண்டும் சத்யாவை அழைத்தாள்.

“இவள் வேற கத்திக்கிட்டே இருக்காள். அவள் வாயை கட்டுடா?” விவாஷ் ரேமண்டிடம் சொல்ல, “வேண்டாம்” என்று மறுத்தான் அமோஸ்.

‘இவனை முதலில் போட்டுத்தள்ளணும். பணத்துக்காக இவனோடலாம் டீல் வைக்க வேண்டியதா இருக்கு.’ விவாஷ் மைண்ட் வாய்ஸ்.

சில நிமிடங்கள் எதையெதையோ படபடவென மடிகணினியில் தட்டிய சத்யா… “இனி பாரி இருக்கும் இடத்தை நீங்களே பார்க்கலாம்” என்று சொல்லி பூவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“என்னண்ணா… உங்க ஃபிரண்டுக்கு துரோகம் பண்ணிட்டிங்களே” என்று பூ சிரித்துக்கொண்டே விளையாட்டாய் கேட்க,

“ரெண்டு லொகேஷன்… அதை மட்டும் தான் மாற்றி மாற்றி காட்டும்” என்றுக்கூறி குறும்பாக கண் சிமிட்டினான் சத்யா.

“செம போங்க” என்றவள்,

“இவ்வளவு நேரமாச்சு இன்னும் ஏன் வேந்தா வரல?” சத்யாவிடம் கேட்பதுபோல் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.

நேரம் செல்ல செல்ல அவளின் திடமெல்லாம் குறைவது போலிருந்தது.

“இன்னும் நாமிருக்கும் இடம் அவனுக்கு தெரிந்திருக்காது” என்று சரியாகக் கூறினான் சத்யா.

“அதெல்லாம் தெரிந்திருக்கும். இதோ இதுல என்னை வாட்ச் பண்ணிட்டே இருப்பான்” என்று பூ தன்னுடைய கையில் கட்டியிருந்த ஸ்ட்ராப்பை சத்யாவிடம் காட்டினாள்.

அந்த ஸ்ட்ராப் பாரி கேட்டானென்று சத்யா தான் வாங்கி கொடுத்திருந்தான்.

இப்போது பூவின் கையில் அதை பார்த்ததும் சத்யாவிற்கு கூட, ‘அப்புறமும் ஏன் பாரி இன்னும் இங்கு வரவில்லை’ என யோசனை செய்தான்.

“சிக்னல் போயிருக்காது” என்ற சத்யா,

“அதை ஆன் பண்ணும்மா” என்றான்.

“ஆன் பண்ணணுமா?” எனக் கேட்டவள், “எப்படி?” என்றாள்.

“இதை ஆன் பண்ணனும் பாரி உனக்கு சொல்லலையா?”

“இல்லையே… டெய்லி அவன் தான் கட்டிவிடுவான். இன்னைக்குக்கூட அவன் தான் கட்டிவிட்டான். ஆன் பண்ண மறந்துட்டான் போல” என்றவள் ‘தானிருக்கும் இடம் தெரியாது எங்கெல்லாம் தன்னைத்தேடி அலைந்து கொண்டிருக்கின்றானோ’ என்று கணவனை நினைத்து வேதனை அடைந்தாள்.

“ஸ்ட்ராப் டாப்பில் மெல்ல விரலால் அழுத்தி விடு தமிழ். ஆன் ஆகிடும்.”

சத்யா சொல்லியதைப்போல் பூ செய்திட… பச்சை நிறம் ஒளிர்ந்து நொடியில் மறைந்தது.

“பாரிக்கு சிக்னல் போயிருக்கும்” என்று சத்யா சொல்ல…

பூவிற்கு மனதில் மெல்லிய நிம்மதி தோன்றியது.

******************

காவலர் குடியிருப்பு பகுதி.

ஆமினி வாகனத்தில் அந்த வளாகத்தினுள் நுழைந்த பாரி, தன்னுடைய வீட்டை கடந்து சென்று… அங்கிருந்த மரத்திற்கு கீழ் நிழலுக்காக வண்டியை நிறுத்துவதைப்போல் நிறுத்தினான்.

அங்கிருந்து பார்த்தால் தன்னுடைய வீடு நன்கு தெரியுமளவிற்கு தூரத்தை கணக்கிட்டு நிறுத்தியிருந்தான்.

“இப்போ என்ன பண்ண போகிறோம் பாரி?” பரிதி கேட்டிட பாரியிடம் பதிலில்லை.

“எவ்வளவு தைரியமிருந்தால் போலீஸ் குவார்ட்டர்ஸ் உள்ளவே வந்து வேலையை காட்டுவானுங்க?” கணபதி கூறிட, “இங்கிருக்கும் மற்ற போலீசுக்கு சந்தேகம் வந்திருக்காதா? இல்லை யாருமே அவர்களை பார்த்திருக்க மாட்டார்களா?” என அவி வினவினான்.

“இந்த இடம் மற்ற இடங்கள் போல் அடுக்குமாடியோ, அருகருகே வீடுகள் கொண்ட அமைப்போ இல்லை அவி. இரண்டு இரண்டு வீடுகள் அருகருகே இருக்க… மற்ற வீடுகளுக்கு இடையே இடைவெளி அதிகமாவே இருக்கு. இங்கிருந்து சத்தமா கத்தினால் தான் மற்ற வீடுகளுக்கு சின்ன சத்தமாவது கேட்கும். அதுவுமில்லாம வீடு மூடிய நிலையில் மற்றவர்களுக்கு எப்படி சந்தேகம் வரும்.” ஜென் சொல்லியது ஏற்புடையதாக இருந்தது.

“நாம மற்ற காவலர்களை உதவிக்கு அழைக்கலாமா?”

“அவன் வாயினை முதலில் மூடு ஜென்” என்று கடிந்தான் பாரி.

“உள்ளே எத்தனை பேர் இருக்கானுங்க தெரியல” என்று புருவத்தை கீறிய பாரி, கேண்டியை வாயிலிட்டு சுவைத்தான்.

“பாரி…”

“என்னடா?”

“எனக்கும் ஒரு கேண்டி கொடுடா… இப்படி பார்க்க வச்சே எத்தனை கேண்டி சாப்பிட்ட தெரியுமா?” அவி அப்படி கேட்டதில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பினை அங்கிருந்த அனைவருக்கும் அடக்குவது கடினமாகவே இருந்தது.

“இந்தா மொத்தத்தையும் நீயே வச்சிக்கோ” என்று தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த அனைத்தையும் அவியிடம் கொடுத்தான் பாரி.

“இப்போ உள்ளே எப்படி போகப்போறோம் பாரி.”

“சிலைக்காக அவனே கால் பண்ணுவான் பரிதிண்ணா… கால் பண்ணட்டும்” என்று பரிதி கேட்டதற்கு பதில் சொன்னான் பாரி.

“சார் நான் வேணுன்னா நோட்டமிட்டு வரவா?” கணபதி கேட்டிட, “வீட்டின் பின்பக்கம் போனால் மதில் சுவர் பக்கத்தில் ஒரு மரமிருக்கும். அதிலேறினா டெரஸ் போயிடலாம் அங்கிள். பட் உங்களால மரம் ஏற முடியுமா?” எனக் கேட்டான் பாரி.

அவரின் வயது மரம் எற உகந்ததாக பாரிக்கு படவில்லை.

“நான் போகட்டுமா பாரி?” பரிதி கேட்டிட,  வேண்டாமென்றவன் அவியை போகக் கூறினான்.

“நானா…?” அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தான் அவி.

“நீயேதான். காலையில என்ன பேச்சு பேசுன. நீயே போ” என்றான் பாரி.

“கோத்துவிடுற நேரமாடா இது?” என்று கேட்டாலும், அவி வாகனத்திலிருந்து இறங்கியிருந்தான்.

“ஒவ்வொரு அடியும் கவனமா இருக்கணும் அவி.” பாரி சொல்லியதற்கு அவி தலையசைக்க அவன் கையில் தன்னுடைய துப்பாக்கியை கொடுத்தான்.

துப்பாக்கியை பார்த்து அரண்டு விழித்தவனின் தோளை தட்டிய பாரி, “இது உன் சேஃப்ட்டிக்கு. பயப்பட இல்லை” என்று சொல்ல, கைகளில் உண்டான நடுக்கத்துடன் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு பின்பக்கம் செல்லும் வழியில் சென்று இருட்டில் மறைந்தான் அவி.

“பரிதிண்ணா ரொம்ப நேரமா உங்க மொபைல் வைபிரேட் ஆகுது” என்று பரிதியின் சட்டை பையில் அலைபேசியின் வெளிச்சத்தை கண்டு ஜென் சொல்லிட, “எல்லாம் இளா தான். எடுத்து என்ன சொல்லுறது தெரியல” என்றான்.

பரிதி தயங்கியபடி இருக்க அவனின் சட்டையில் கைவிட்ட பாரி அலைபேசியை எடுத்திருந்தான்.

“இளா… பாரி! பரிதிண்ணா என்னோடதான் இருக்காங்க. ஈவ்னிங்கே வந்துட்டாங்க. டூ ஹவ்ர்ஸில் வந்திடுவாங்க” என்று இளாவை பேசவே விடாது வேகமாக சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு மொத்தமாக அலைபேசியை அணைத்து பரிதியின் சட்டை பையிலேயே மீண்டும் வைத்துவிட்டான்.

அடுத்து சில நிமிடங்களில் வீட்டு எண்ணிலிருந்து பாரியின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

இளாவிடம் இப்போதுதான் பேசியிருக்க, வரும் அழைப்பை உடனடியாக தவிர்க்க முடியாதென்று அதனை ஏற்று காதில் வைத்தான்.

“பாரி…”

பார்வதியின் குரல் அதீத கவலையில் ஒலித்தது.

“ம்மா…”

“உங்க எல்லாருக்கும் ஒண்ணுமில்லையே கண்ணா? இன்னைக்கு மனசே சரியில்லப்பா. இந்த லீலாவும் வந்ததிலிருந்து ஏதோ பறி கொடுத்தவ(ள்) மாதிரியே உட்கார்ந்திருக்காள். எதுவும் சொல்ல மாட்டேங்கிறா(ள்). நீங்களாம் பக்கத்திலேயே இருக்கீங்க. இருந்தாலும் தமிழ் இன்னைக்கிலாம் போனே எடுக்கல, உனக்கு ட்ரை பண்ணால் நாட் ரீச்சபில்.”

அவன் தான் தன்னுடைய தனிப்பட்ட எண்ணை உபயோகித்துக் கொண்டிருந்தான்!

“பரிதி தூரத்திலிருக்கான். அவனிடம் பேசினால் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் போட்டால். அவனும் எடுக்கல. இப்போ அவன் உன்னோட இருக்கான். எதுவும் பிரச்சினையா பாரி?”

ஒரு தாய்க்கே இருக்கும் உள்ளுணர்வு அது. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் மனம் ஒரு நிலையில் நில்லாது ஏதேதோ எண்ணங்களை கொடுக்கும்.

“ம்மா…” என்ற பாரிக்கு பார்வதியிடம் பொய் சொல்ல வராமல், பரிதியிடம் அலைபேசியை கொடுத்திட்டான்.

“ம்மா… நாங்க இங்க பத்திரமாத்தான் இருக்கோம். தமிழுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வந்தேன். அதை நேரா கொடுத்திட்டு போயிடலாமேன்னு வந்தா, சாப்பிட்டு போக சொல்லி அவளே குக் பண்ணிட்டு இருக்காள். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்தூவிடுவே(ன்)ம்மா” என்று இல்லாத ஒன்றை நிகழ் போல் சொல்லி அவரை அமைதிப்படுத்தி வைத்தவன், காற்றினை உள்ளிருந்து ஊப் என்று ஊதினான்.

“இதுக்கு மேல சமாளிக்க முடியாது பாரி. சீக்கிரம் எதாவது செய்.”

அப்போது ஜென்னின் அலைபேசி தன்னுடைய இருப்பை காட்டியது.

“ஆமாம் பாரி இனியும் எல்லாரிடமும் மறைக்க முடியாது போலிருக்கு. கோதை அம்மா வேற கால் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க” என்றவள், “நான் ஒரு கேஸ் விஷயமா பாரியுடன் வெளியில் வந்திருக்கேம்மா. வர கொஞ்சம் லேட்டாகும். அவிக்கு நியூ ப்ரொஜெக்ட் வொர்க், அவனும் லேட்டாத்தான் வருவான்” என்று கோதையிடம் அவர் என்ன கேட்பாரென்று யூகித்து படபடவென்று பதில் வழங்கியவள் அதே வேகத்துடன் இணைப்பை துண்டித்தும் இருந்தாள்.

“இன்னும் எதுக்காக வெயிட் பன்ற பாரி?”

“அவி மெசேஜ் பண்ணட்டும் பரிதிண்ணா.”

பாரியின் வீட்டு மாடியில் சீலிங்கில் சதுர வடிவில் காண்ணாடி பதித்திருக்கும். அதன் வழி பார்த்தால் கீழே வரவேற்பறை நன்கு தெரியும்.

வீட்டின் உள்ளே மின் விளக்கு ஒளிர்வதால், அந்த இருட்டிலும் உள்ளே காட்சிகள் நன்கு தெரிந்தது.

அறையின் ஓரத்தில் சத்யாவும், பூவும் அமர்ந்திருக்க, மற்ற நால்வர்களை மட்டுமே அவியால் பார்க்க முடிந்தது. தன்னால் முடிந்தவரை வேறு யாரும் இருக்கின்றனரா என்று கவனித்து பார்த்த அவி, மெல்ல அந்த கண்ணாடியை கழற்ற முயற்சித்தான்.

சில பல நிமிடங்களில் கண்ணாடியை எடுத்தவன் தன் செவியை கூர்மை படுத்தி உள்ளிருந்து ஒலிக்கும் குரல்களை அவதானிக்க ஆரம்பித்தான்.

“அந்த பாரிக்கு நாம கொடுத்த நேரம் முடிஞ்சிடுச்சு. சிலை என்னாச்சுன்னு கேட்டு கால் பண்ணு அமோஸ். எவ்வளவு நேரம் இப்படி ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது.” ராயப்பன் கடுப்பாகக் கூறினார்.

“இந்த தொழிலில் பொறுமை ரொம்ப முக்கியம் ராயப்பன். அவசரப்பட்டு தான், எல்லாத்தையும் இழந்து நிக்குறீங்க.” அமோஸ் ராயப்பனையும், விவாஷையும் பார்த்து அர்த்தமாகக் கூறினான்.

“இப்போ நடக்கப்போவதை மட்டும் பார்ப்போம் அமோஸ்.” அமோஸ் மறைமுகமாக அவர்கள் அவசரப்பட்டு அமிர்தாவை கொலை செய்ததால் தான் அனைத்து வில்லங்கத்திற்கும் காரணமென்று கூறியதில் கோபம் வரப்பெற்று விவாஷ் அப்பேச்சினை கத்தரிக்கும் விதமாக பேசினான்.

“ரேமண்ட்…” அமோஸ் ரேமண்டிடம் கையை நீட்டிட…

“நம்ம மொபைல் சிக்னல் வைத்து அவன் கண்டுபிடிக்க சான்சஸ் இருக்கு பாஸ். அதனாலதான் ஆஃப் பண்ணி வைத்திருக்கோம்” என்றான் ரேமண்ட்.

“யா…” என்ற அமோஸ், “அவனை கூப்பிட்டு நெட் கால் செய்ய சொல்லு. நான் அந்த போலீஸ்காரங்கிட்ட பேசணும்” என சத்யாவை குறிப்பிட்டான்.

“ஹேய்… எழுந்து வா?” ரேமெண்ட் இருந்த இடத்திலிருந்தே அதிகாரமாக சத்யாவை அழைத்தான்.

இருக்கையிலிருந்து எழுந்த சத்யாவின் காலில் கை வைத்து அழுத்தி அவனை எழவிடாது தடுத்த பூ,

“எங்களாலதான் உங்க நாலு பேருக்கும் காரியம் நடக்க வேண்டும். அதனால் நீதான் எங்ககிட்ட வரணும்” என்று ரேமண்டை வார்த்தையால் அலற வைத்தாள்.

ரேமண்ட் பற்கள் கடிக்கும் சத்தம் அனைவருக்கும் கேட்டது.

பூவின் குரல் கேட்டு… மொத்த கலக்கமும் வடிந்து, அவளின் பேச்சில் அவிக்கு நிம்மதி உணர்வு.

உதட்டில் தோன்றிய புன்னகையுடனே பாரிக்கு நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்று தகவல் அனுப்பினான்.

ஆமோஸின் பார்வையில் ரேமண்ட் மடிகணினியை சத்யாவின் அருகில் சென்று கொடுக்க…

“என்ன லுக்கு… ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்டா, என் புருஷனிடமிருந்து தப்பிக்க நான் ரெக்கமெண்ட் செய்றேன்” என்று கெத்தாகக் கூறி அவனை கடுப்பின் உச்சத்திற்க்கே அழைத்துச் சென்றாள்.

“பாஸ்… என்னால முடியல. இங்க யாரு யாரை கடத்தியிருக்காங்க, யாருக்கு யார் பயப்படுறதுன்னே தெரியல” என்று ரேமண்ட் அலறினான்.

‘ஓட விடுகிறாள் போலவே.’ அவியின் எண்ணம்.

அவியிடமிருந்து தகவல் வந்த அதே நொடி சத்யாவினால் பாரிக்கு கால் செய்திருந்தான் அமோஸ்.

“சிலை உன் கைக்கு வந்திடுச்சா?”

“ம்ம்… எங்க வரணும்?”

“நான் இன்னும் முடிவுபண்ணல. பண்ணிட்டு சொல்லுறேன்” என்று அமோஸ் பேசி முடிக்க காத்திருந்தவள் போல… “வேந்தா” என்று அழைத்திருந்தாள் பூ.

தன்னுடைய உள்ளத்து மொத்த உணர்வுகளையும் ஒற்றை அழைப்பில் அவனுக்கு கடத்தியிருந்தாள்.

விவாஷ் பூவை தடுக்க முயல…

“அவளுடைய குரலை கேட்டா பய நாம சொல்லுறதை எந்த ஆட்டமும் காட்டாம செய்வான்” என்று ராயப்பன் சொல்லியதில் பின்வாங்கினான்.

பூவின் குரலை கேட்டதும் பாரியின் உடலில் மின்சார அதிர்வு.

“பூ…” கரகரப்பான குரலில் விளித்தவன், கமறும் தன் தொண்டையை சரி செய்து… “நீ ஓகே தானடா?” என்று வினவினான்.

பாரி தன்னை குறித்து அதீத வருத்தத்தில் இருக்கின்றான் என்பதை தெரிந்துகொள்ள பூவிற்கு அவனது பூ என்ற அழைப்பே போதுமானதாக இருந்தது.

சத்யா ஆதுரமாக அவளின் கையில் தட்டிக்கொடுக்க…

பாரியின் குரல் கேட்டதும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியவள், தன் மனதை சரிசெய்து பாரிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினாள்.

“வேந்தா எப்போ வருவ? ரொம்ப பசிக்குதுடா. இவனுங்களுக்கு பசிக்குமா என்னன்னு தெரியல… இங்கு கூட்டிட்டு வந்ததிலிருந்து ஒண்ணுமே கொடுக்கலடா. கிச்சனிலும் இன்ஸ்டன்ட் ஃபுட் எதுவுமில்லை. வரும்போது புரூட்ஸ் வாங்கிட்டு வா. இங்க இருக்க ஹல்க் புரூட்ஸ் பாஸ்கெட் மொத்தத்தையும் காலி பண்ணிட்டான்” என்று சிறுபிள்ளையென பாரியிடம் முறையிட்டவளை கண்டு சத்யா கனிவாக பார்த்தானென்றால் விவாஷ் மற்றும் ரேமண்ட் கொலைவெறியில் பார்த்தனர்.

அப்போதுதான் ப்ரிட்ஜில் வைத்திருந்த ஆப்பிளை எடுத்து கடித்த ரேமண்ட் அதனை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டிருந்தான்.

“என்னவோ சொன்னீங்க அவள் பேசினா அவன் கலங்கி ஓடிவருவான்னு. இவள் பேசுறதுக்கு அவன் அங்க ஜாலியா நம்மைத் தூக்க பிளான் போட்டுட்டு இருப்பான்” என்று ராயப்பனிடம் வெடித்த விவாஷ்…

“இவள் இங்க அலறுறது அவனுக்கு கேட்கணும்” என்றவனாக பூவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

காலையிலிருந்து… தன்னை கடத்தியிருக்கிறோம் என்கிற பயமோ, வருத்தமோ கொஞ்சமும் இல்லாது… இத்தனை ஆண்கள் மத்தியில் தனித்து இருக்கின்றோமே என்ற நடுக்கம் கூட இல்லாது திடமாக இருப்பவளின் மீது கனன்ற மொத்த ஆத்திரத்தையும் தன்னுடைய ஒரு அடியில் காட்டியிருந்தான் விவாஷ்.

அவன் அடித்ததில் கீழே சரிந்தாளே தவிர, சிறு சத்தத்தை கூட பூ வெளிக்காட்டவில்லை.

ஆனால் அவன் அடித்த வலியின் வீரியம், நொடியில் கன்றி சிவந்த கன்னங்களில் வழிந்த நீர் காட்டிக்கொடுத்தது.

“தமிழ்” என்று அதிர்ந்த சத்யா விவாஷின் சட்டையை கொத்தாக பற்றியிருந்தான்.

“உனக்கும் அந்த மாதிரி ஒண்ணு கொடுத்தாதான் அடங்குவியா நீ?” என்ற விவாஷ் ஒரே உதறலில் சத்யாவை கீழே தள்ளியிருந்தான்.

விவாஷின் அறையின் சத்தமும், சத்யாவின் தமிழ் என்கிற அழைப்பின் சத்தமும் பாரிக்கு நன்கு கேட்டிட… அந்தப்பக்கம் அவன் பூ என்று கத்திக்கொண்டிருந்தான்.

பாரியின் கத்தல் பூ மற்றும் சத்யாவை தவிர மற்ற நால்வருக்கும் ஆனந்தமாக இருந்தது.

வாய்ஸர் அருகே குனிந்த விவாஷ்…

“உன்னோட இந்த கத்தல் கேட்கும்போது எவ்வளவு சுகமா இருக்குத் தெரியுமா?” என்றான்.

“டேய்…”

“கத்தாம நான் சொல்லியதை செய் மேன்” என்று கூறினான் அமோஸ்.

பாரியின் வேதனை சுமந்த குரலை கேட்க பிடிக்காது, தன் முகத்தை அழுந்த துடைத்து, நேராக நிமிர்ந்து அமர்ந்தவள்…

“நீ இவனுங்களை அடிக்கிறதை நான் பார்க்கணும் வேந்தா” என அழுத்தமாகக்கூறி தானே இணைப்பை அணைத்திருந்தாள்.

“போலீஸ்காரன் பொண்டாட்டில அதான் திமிரு அதிகமாவே இருக்கு. அதை அடக்கிடுவோமா?” என்று பூ அமர்ந்திருந்த இருக்கையின் இருபக்கமும் கைகுற்றி அவளிடம் வினவிய விவாஷ்,

அமோஸிடம் திரும்பி…

“வந்ததிலிருந்து உனக்கு இவள் மேல ஒரு கண்ணுல. போலீஸ்காரன் வந்தா பார்த்துக்கலாம். யூ என்ஜாய்!” என்றான்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம். நிறைய நேரம் வேஸ்ட் ஆகிப்போச்சு. இவளை பார்த்துகிட்டு மட்டுமே இருக்கணுமோன்னு நினைத்தேன்” எனக்கூறி சத்தமாக சிரித்த அமோஸ் பூவின் அருகில் வர,

“அமோஸ் வேண்டாம். அவள் மேல கை வைத்தால் உன் உயிர் உனக்கில்லை” என்று குறுக்கே நின்று தடுத்தான் சத்யா.

சத்யாவை ஓரம் தள்ளிவிட்டு அமோஸ் முன்னேற…

அவனின் முதுகில் உதைத்து அவனை கீழே தள்ளியிருந்தான் சத்யா.

வேகமாக எழுந்த அமோஸ், அதே வேகத்தில் சத்யாவின் கன்னத்தில் அறைந்து… “இவனை கட்டிபோடுடா?” என்று ஆக்ரோஷமாக சினந்தான் அமோஸ்.

பூவிடம் சிறு மிரட்சியையாவது பார்த்துவிடலாம் என்று நினைத்த விவாஷிற்கு ஏமாற்றமே.

அமோஸ் அருகில் வர அவனை அழுத்தமாக உருத்து பார்வையால் குத்தினாளே தவிர, இருக்கையில் ஒண்டவோ மாறாக எழுந்து ஓடவோ அல்லது விட்டுவிடு வேண்டாம் என்றோ சிறு மறுப்பு, மன்றாடல் என எதுவுமில்லை.

பூவின் அருகே நெருங்கிவிட்ட அமோஸ், அவளின் கையினை பற்றிட வர… உட்கார்ந்திருந்த நிலையிலிருந்தே, அவன் மார்பில் கால் வைத்து உதைத்திருந்தாள்.

உள்ளே நடப்பது தெரியவில்லை என்றாலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது தெளிவாக இல்லாவிட்டாலும் புரியும் அளவிற்கு கேட்க… அவி செய்வதறியாது தவித்தான்.

பூவின் குரலை கேட்டு ஸ்தம்பித்து அமர்ந்திருந்த பாரியை பரிதி உலுக்கி நிகழ் மீட்க…

அவியின் தகவலை பார்த்துவிட்டு, பரிதியை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றான்.

செல்வதற்கு முன்பு,

“நான் சிக்னல் கொடுக்கும் போது வீட்டின் முன்பக்கம் திறந்து நீயும், அங்கிளும் வாங்க” என்றவன் தன்னிடமிருந்த வீட்டு சாவியை ஜென்னிடம் கொடுத்தான்.

கதவோடு பொருத்தப்பட்டிருக்கும் பூட்டு என்பதால் உள்ளே இருப்பவர்கள் பூட்டியிருந்தாலும், வெளியிலிருந்தும் பூட்டினைத் திறக்க முடியும்.

பாரியுடன் வீட்டின் மேலேறிய பரிதி அவியிடம், “என்னடா நடக்குது?” என்று வினவ…

“இன்னும் ஒரு நொடி தாமதித்தாலும் நம்ம தமிழ் நமக்கில்லை பாரி” என்று சத்தமில்லாது அழுதான் அவி.

“என்னடா சொல்லுற? இப்போ தான் பூ என்கிட்ட பேசினா… அவள் தைரியமாத்தான் இருக்காள்” என்று கூறிய பாரியிடம்…

“ஒரு பொண்ணோட தைரியத்தை எந்த வகையில் குலைக்க முடியுமோ… அதை ஆயுதமா பயன்படுத்தினால்?” என்ற கேள்வியை கேட்டான் அவி.

உள்ளே நடக்கவிருப்பதை நேரடியாக சொல்ல அவிக்கு வார்த்தை வரவில்லை.

உன் மனைவியை ஒருவன் ஆட்கொள்ளவிருக்கின்றான் என்று ஒருவனால் தன் நண்பனிடம் எப்படி சொல்லிட முடியும்?

அவியின் வார்த்தைகளில் உள்ள பொருள் புரிந்ததும் மின்னலென பாரி தன்னுடைய அலைபேசியை எடுக்க…

மாடியிலிருந்து வீட்டிற்குள் செல்லும் வழியை மூடியிருக்கும் கதவின் அருகில் சென்ற பரிதி அதனை திறக்க முயற்சித்தவாறே…

“இதோட சாவி இல்லையா பாரி?” என்று வினவினான்.

“இதுக்கு லாக் இல்லை பரிதிண்ணா. உட்பக்கத் தாழ்ப்பாள் மட்டும் தான்” என்று பதில் சொல்லியிருந்தான் அவி.

“அப்போ உடைக்கலாமா?” பரிதி கேட்டிட,

“வெயிட் பரிதிண்ணா” என்ற பாரி, அலைபேசியில் விஷாலிடம் தன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூறினான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்