
தூவானம் 50 :
பரிதி தானாகவே அவர்களின் கையில் சிக்கியிருக்கிறான் எனும்போது இன்னும் சிறிது நேரத்தில் பாரி அனைத்தையும் சரி செய்திடுவான் என்ற நம்பிக்கையில் அதுவரையிருந்த தங்களின் கையறுநிலை, இறுக்கம் என அனைத்தும் விலக, பரிதியின் வார்த்தையில் சிரிக்கவும் செய்தனர்.
“தமிழ் இருக்க இடம் தெரியணுமே!” என்ற பரிதி,
அறையின் கதவு அருகில் அவியை சென்று நிற்க கூறினான்.
ஏனென்ற கேள்வி எழுந்தபோதும் அவி பரிதி சொல்லியதைப்போல் கதவருகில் நின்றான்.
தான் அணிந்திருந்த ஷூவிற்கு உள்ளிருந்து தன்னுடைய மற்றொரு அலைபேசியை எடுத்த பரிதி,
“நீ நினைச்ச மாதிரி எல்லாரும் இங்க அமோஸ் கஸ்டடியில் தான் இருக்காங்க. ஆனால், தமிழ் இங்கில்லை” என்ற தகவலை பாரிக்கு அனுப்பி வைத்தான்.
பாரி தகவலை பார்த்துவிட்டான் என்பதற்கு அடையாளமாக நீல நிற குறி தென்பட, ‘இனி அவன் பார்த்துப்பான்’ என நிம்மதி கொண்டான் பரிதி.
“உங்களை எப்படிடா அரெஸ்ட் பண்ணாணுங்க?” உண்மையிலேயே பரிதி தெரிந்துகொள்ளவே வினவினான்.
தீபனும் அவியுமே விட்டால் பத்து பேரை அடிப்பார்கள். இருப்பினும் இரண்டு பேருக்கு எப்படி கட்டுப்பட்டார்கள் என்பது தெரிந்தே ஆகவேண்டுமென்கிற ஆர்வத்தில் பரிதி கேட்டிருந்தான்.
“ப்ரொஜெக்ட் விஷயமா பேசணும் வந்தானுங்க…”
“உங்க கோ ஷேர் ஹோல்டர்ஸ் மீட் பண்ணனும், அப்போ தான் ப்ரொஜெக்ட் பேசுவோம் சொன்னானுங்க…”
“நான் கம்பெனி எந்தளவுக்கு டெடிகேஷனா ஒர்க் பண்ணி கொடுப்பாங்கன்னு எக்ஸ்பிலைன் பண்ண வந்தேன், இவனுங்க என்னையும் பிடிச்சு போட்டுடானுங்க…”
அவி, லீ’யைத் தொடர்ந்து தீபன் சொல்லியதில் பரிதி சத்தமாக சிரித்தான்.
“அவனுங்க ரெண்டு பேரு மூஞ்சிய பார்த்துமாடா நம்புனீங்க?”
“தமிழை நினைச்சிட்டே இருந்ததில் சரியா கவனிக்கல பரிதிண்ணா…” அவியின் முகம் பாவமாக இருந்தது.
“நீங்க மூணு பேர் தான் தமிழின் பிரண்ட்ஸான்னு கேட்டானுங்க. ஒருவேளை தமிழிடம் அல்ரெடி பேசியிருப்பானுங்கன்னு நினைத்தேன்” என்று சொல்ல,
மேலே சொல் எனபதைப்போல் பரிதி கை காண்பித்தான்.
“ஆமா” என்று மூவரும் ஒன்றாக சொல்ல… “வேற யாராவது இருக்காங்களான்னு அவனுங்க கேட்க, நாங்க இல்லைன்னு சொல்ல… அப்போ தமிழ் உயிரோட வேணுன்னா நாங்க சொல்றதை மட்டும் தான் நீங்க கேட்கணுமுன்னு அவனுங்க சொல்லியது தான் நினைவிருக்கு… நொடியில அறையை காலி பண்ணி எங்களை ரூம் அரெஸ்ட் பண்ணிட்டானுங்க” என்று மூவரும் சேர்ந்து கதைப்போல் கூறிட,
“கோரஸ் பாடுறதை நிறுத்துங்கடா” என்று அதட்டிய பரிதி, நீ சொல் என்பதைப்போன்று ஜென்னை பார்த்தான்.
“நான் ஸ்கூட்டியில் போயிட்டிருந்தேன், அப்படியே தூக்கிட்டானுங்க… எதையோ முகத்தில் ஸ்ப்ரே பண்ணிட்டானுங்க. விழிக்கும் போது இந்த மூஞ்சிங்க தான் கூட இருக்கு.” ஜென் கன்னத்தில் கை வைத்து சொல்லுவதை பார்த்த அனைவருக்குமே சிரிப்பு எட்டிபார்த்தது.
பரிதியின் அலைபேசி மெல்லிய சத்தமிட எடுத்து பார்த்த பரிதி,
“ஷ்ஷ்” என வாயில் விரல் வைத்து அனைவரையும் அமைதியாக இருக்கக் கூறியவன் “பாரியிடமிருந்து மெசேஜ்” என்றான்.
“பூ இருக்கும் இடம் தெரிந்து விட்டது.”
பாரியின் தகவலை படித்ததும், உட்கார்ந்திருந்த நிலையிலேயே இரு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த பரிதி,
“வாங்க போகலாம்” என்று அழைத்தான்.
“பரிதிண்ணா, தமிழ் அவங்க கையில்…” ஜென் அர்த்தமாக இழுத்தாள்.
“நீ போலீஸ் தான?”
“அப்பப்போ ஞாபகப்படுத்துங்க பரிதிண்ணா…” என்று சொல்லிய ஜென்னின் பதிலில் அங்கு சிரிப்பு சத்தம் அதிகமாகிட, வெளியில் நின்றிருந்த இரு தடியர்களும் உள்ளே வந்தனர்.
“என்னத்துக்கு அப்போல இருந்து சிரிச்சிட்டு இருக்கீங்க? உங்க பிரண்ட் ரெண்டு பேரு எங்க கையில… அது நினைவிருக்கட்டும்.”
உள்ளே வந்த இருவரில் ஒருவன் அவர்களை எச்சரிக்க செய்தான்.
“ரெண்டு பேரா? அப்போ பாரி…?” லீ அதிர்ச்சியடைந்தாள்.
“அவன் சத்யாவை சொல்லுறான்” என்று பரிதி சொல்லிட… மற்ற மூவருமே யாரது என்பதாக பார்த்தனர்.
“சத்யா பாரியோட க்ரைம் பார்ட்னர்” என்று ஜென் கூறிட, “அபிசியல் ஃபிரண்ட் போல” என்றான் தீபன்.
“எஸ்” என்ற பரிதி…
“நாங்க அப்படித்தேன் சிரிப்போம். என்னல செய்வ, இல்லை உன்னால என்னதாம்ல செய்ய முடியும்?” பரிதி திமிராக கேட்டான்.
“என்னடா பயமில்லாம பேசுற?”
“பயமா எனக்கா?” என்று சத்தமாக சிரித்த பரிதி,
“எங்க எல்லாரையும் கடத்துனதுக்க பதிலா, ஒரே ஒரு ஆள்… அவனை கடத்தியிருந்தா உங்களுக்கு எம்புட்டு வேலை மிச்சம் தெரியுமாலே” என்றதோடு, “நாங்க எல்லாரும் உள்ள இருக்கிறதும், அவன் ஒருத்தன் மட்டும் வெளியிலிருப்பதும் ஒண்ணுதேன்” என்றான்.
“இப்போ இவரு எதுக்கு தமிழ் பேசுற மாதிரி பேசுறாரு?” தீபன் அவியின் காதில் கிசுகிசுத்தான்.
“அவரு அவனுங்களை டைவர்ட் பண்ண பேசிட்டு இருக்காரு.”
இங்கே தீபனும் அவியும் தங்களுக்குள் முணுமுணுக்க, அங்கு தடியர்களை தன் பேச்சினைக் கேட்க வைத்த பரிதி, முடிக்கும் தருவாயில் தன் கால் உரையில் மறைய வைத்திருந்த பாரியின் துப்பாக்கியை எடுத்து ஒருவனின் தோள்பட்டையில் சுட்டிருந்தான்.
அவன் ரத்தம் குபுக்கென வெளியேறும் தோளினை அழுத்தி பிடித்தவனாக கதவிலேயே பின்பக்கமாக சரிந்து தரையில் அமர்ந்தான்.
பரிதி இமைக்கும் நொடியில் செய்திருந்தான்.
இன்னொருவன் என்ன ஏதென்று உணர்ந்து பரிதியை நோக்கி நீண்ட அரிவாளோடு ஓடிவர, அவனின் கையிலேயே பரிதி சுட, அரிவாள் கீழே விழ, அவனும் வலியில் கையை உதறியபடி கீழே விழுந்தான்.
“இந்த காலத்திலும் அரிவாளை தூக்கிட்டு வரான். கன் வச்சிருக்க என்கிட்ட” என்ற பரிதி விழுந்தவனை காலாலே எத்தினான்.
“என்னண்ணா சுட்டுட்டீங்க?” அவி அதிர்வாக வினவ, அவனின் நிலையில் தான் மற்றவர்களும் இருந்தனர்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் குட்டிம்மாவை கடத்திருப்பானுங்க” என்ற பரிதி “ஜென் இவனுங்கள என்ன பண்ணனுமோ பண்ணிடு” என்றவனாக துப்பாக்கியை சட்டையின் பின்பக்கம் சொருகியவனாக கீழே விழுந்து கிடைந்தவனை தாண்டிச் சென்றான்.
“எப்படிடா குறி மிஸ் ஆகாம போட்டிருக்காரு?” லீ திறந்த வாய் மூடாது வினவினாள்.
“பரிதிண்ணா ஆர்ச்செரி (archery) கேமில் ஸ்டேட் பிளேயர்” என்றான் அவி.
“ஹோ…”
“அண்ணா போயிட்டாங்க வாங்க” என்று ஜென்னை தவிர்த்து மற்றவர்கள் பரிதியின் பின் செல்ல… ஜென் கணபதிக்கு அழைக்க, தடியர்களிடமிருந்த தங்களுடைய அலைபேசியை எடுத்தாள்.
தீபன் மற்றும் லீயை அலுவலகத்தை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிய பரிதி அவியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
இங்கு நடந்த எதுவும் தெரியாது பணியாளர்கள் தங்கள் பணியில் மூழ்கியிருக்க… தீபனும், லீயும் ஒன்றும் அறியாதவர்கள் போல் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஜென் லீக்கு அழைப்பினை தவறவிட…
“திட்டம் பற்றிய அவசரக்கூட்டம்” என்று அனைவரையும் மீட்டிங் ஹாலில் ஆஜர்படுத்தியிருந்தான் தீபன்.
அந்நேரத்தை பயன்படுத்தி கணபதியின் உதவியோடு ஜென் இரண்டு தடியர்களையும் அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்ந்திருந்தாள்.
பரிதியுடன் சென்று கொண்டிருந்த அவி…
“இப்போ எங்க பரிதிண்ணா போயிட்டு இருக்கோம். பாரி என்ன சொன்னான்?” என்று வினவ பரிதியிடம் பதிலில்லை.
பரிதியை அலுவலகம் அனுப்பி வைக்கும்போதே, தான் பாதுகாப்பிற்கென்று தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் துப்பாக்கியை பரிதியிடம் கொடுத்த பாரி…
“பூ அங்கிருந்தா எனக்கு மெசேஜ் பண்ணுங்க. நான் வந்து டீல் பண்ணிக்கிறேன். சப்போஸ் பூ ஆங்கில்லைன்னா, நான் சொல்லும்போது கன் யூஸ் பண்ணி மத்தவங்களை சேவ் பண்ணிடுங்க” என்று சொல்லியேதான் அனுப்பி வைத்தான்.
பாரி பூ இல்லையென்றாலும் நண்பர்களை காப்பாற்ற எண்ணி அவ்வாறு கூறியிருந்தான்.
பரிதியும் பாரி சொல்லியது போலவே செய்து முடித்திருந்தான்.
பரிதி பாரியின் அலுவலகப் பக்கம் வண்டியை திருப்பிட…
“பாரி தமிழை கூட்டிட்டு வந்துட்டானா பரிதிண்ணா?” எனக் கேட்டான் அவி.
“கொஞ்ச நேரம் வாய் மூடிட்டு வாடா!”
பரிதியின் கடுகடுப்பில் அவி அதன் பின் வாயே திறக்கவில்லை.
*****
பரிதியை அனுப்பி வைத்த பின்னர் பாரி மீண்டும் ஆணையர் குமாரை பார்க்கச் சென்றான்.
அமோஸிடமிருந்து ஜென்னின் அலைபேசி வாயிலாக வந்த தகவலை காண்பித்தான்.
“நான் அறைநிலையத்துறை அதிகாரியிடம் பேசி பார்க்கிறேன். நமக்கு தமிழ் மற்றும் சத்யாவின் உயிர் முக்கியம். முடியாதுன்னா வேற வழியில் சிலையை பெற முயற்சிப்போம்” என்ற குமாரை தடுத்தான் பாரி.
“நான் நீங்க சிலையை அவங்ககிட்ட பேசி வாங்கித் தருவீங்க என்பதற்காக இதை சொல்லல” என்ற பாரி,
“அந்த துறையிடம் ஒப்படைத்ததை என் தனிப்பட்ட விஷயத்திற்காக கேட்பது முறையற்றது… முறையற்ற ஒன்றை எப்போதும் நான் செய்யமாட்டேன்” என்றான்.
‘இந்நிலையிலும் இவனால் எப்படி இப்படியிருக்க முடிகிறதென’ ஆணையருக்கு வியப்பு.
“எல்லா நேரங்களிலும் நேர்மை சரிவராது பாரி. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பாரி… நல்லதுக்காக பொய் மட்டும் தான் சொல்லனுமில்லை. நேர்மையையும் கொஞ்சம் தள்ளி வைக்கலாம்” என்றார்.
“நேர்மையால் கிடைக்கிற வெற்றி தான் நிறைவை கொடுக்கும்” என்ற பாரி, எந்நிலையிலும் நேர்மையை கைவிடமாட்டேனென்று தீர்க்கமான பார்வையின் மூலம் வெளிப்படுத்தியிருந்தான்.
பாரியை மெச்சுதலாக பார்த்தார்.
“சரி , இப்போ நான் என்னதான் செய்யணும்?”
“ராயப்பன் அண்ட் விவாஷ் எஸ்கேப்ட்.”
“இப்போதான் நியூஸ் வந்துச்சு.”
“ம்ம்ம்” என்ற பாரி, பரிதியை அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததன் நோக்கத்தைக்கூறி, “அமோஸ் அங்கில்லைன்னா, என் ஃபிரண்ட்ஸை என்னோட அண்ணா பார்த்துப்பாங்க. பட் நமக்கு வேலை இன்னும் அதிகமாகிடும்” என்றான்.
“கொஞ்சம் சிக்கல் தான். நீ சொல்றது புரியுது பாரி. அந்த அமோஸ் சாதாரண ஆளில்லை. அவன்மீது இல்லாத வழக்குகளே இல்லை. அப்படிப்பட்டவன் இரு நாட்டு விமான விதிமுறைகளையும் மீறி இங்கு வந்திருக்கான் அப்படின்னா எவ்வளவு மூளைகாரனா இருப்பான்” என்ற குமாரை பார்த்து இதழ் சுளித்தான் பாரி.
“அவன் பண்ண பெரிய தப்பு அதுதான் சார்” என்ற பாரியினுள் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.
“புரியலையே!”
“புரிய வரும் சார்” என்ற பாரி, “ராயப்பனை வைத்துதான் நாம அமோஸ், ரேமண்டை பிடிக்கப்போறோம். என் வைஃப் மற்றும் சத்யாவை மீட்கப்போறோம்” என்று பாரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பூ அங்கில்லையென பரிதியிடமிருந்து தகவல் வந்தது.
“நான் நினைத்த மாதிரியே அமோஸ் அங்கில்லை. வேறெங்கு” என்ற பாரிக்கு மீண்டும் அமோஸ் சொல்லிய வார்த்தைகள் நினைவில்…
“உன் பார்வை படுமிடம்…”
“எங்க… எங்க… எங்க…?”
உடனடியாக பார்வதிக்கு அழைத்தான்.
“என்னடா பாரி அதிசயமா இருக்கு. நீயா கால் பண்ணியிருக்க?”
எடுத்ததுமே பார்வதி உற்சாகமாக பேசிட.. ‘அப்போ அங்கில்லை’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், “சும்மா பேசணும் தோணுச்சும்மா” என்றவன் மேலோட்டமாக பேசிவிட்டு இரு வார்த்தைகளில் வைத்து விட்டான்.
“என்னாச்சு பாரி?”
“நத்திங் சார்” என்ற பாரி “என்னோட குவார்ட்டர்ஸ் தான் இப்போ அவனுங்க இருக்குமிடம்” என்றான்.
“அவ்வளவு உறுதியா எப்படி பாரி சொல்லுற?”
“இங்க சொல்லுது சார்” என்று தன் மனதை விரல் வைத்துக் காட்டியவன்,
“அந்த அமோஸ் எனக்கு க்ளுவாக் கொடுத்தது மூன்றே வார்த்தை தான். ‘என் பார்வை படுமிடம்.’ என் பிரண்ட்ஸ் கம்பெனி, என்னோட வீடு, குவார்ட்டர்ஸ். இதில் மத்த இரண்டிலுமில்லை. அப்போ கண்டிப்பா குவார்ட்டர்ஸ் தான்” என்று அடித்துக் கூறினான்.
“அப்போ நம்ம ஆளுங்களை விட்டு பார்க்கச் சொல்றேன் பாரி.” ஆணையர் வேகம் காட்டினார்.
“அவன் அலர்ட் ஆகிடுவான் சார்” என்று தடுத்தான். தவிர்த்தான்.
“பாரி… எப்படிடா உன்னால இப்பவும் இத்தனை பொறுமையா நிதானமா இருக்க முடியுது.” ஆயாசமாக வினவினார்.
“அங்கிருக்கிறது என் உயிர் சார். எனக்கு முழுசா வேணும். பதறிய காரியம் சிதறுமே சார்” என்ற பாரி மனதிற்குள் தன் நிதானத்தை மீட்டெடுத்த பரிதிக்கு நன்றி தெரிவித்தான்.
“ஓகே. குவார்ட்டர்ஸில் தான் இருக்காங்கன்னு சொல்லுற. இல்லாமல் போனால்?”
“சான்ஸே இல்லை. என்னுடைய எண்ணம் பொய்யாகாது. பரிதிண்ணாவை ஆபீஸ் அனுப்பி வைக்கும்போதே எனக்குள்ள சின்ன நெருடல். இப்போ அப்படியில்லை” என்றவன் “என்னோட ட்ரம் கார்டு ராயப்பன் தான்” என்றான்.
“நீ ஏதோ கேட்க வந்தீயே பாரி?”
அப்போதுதான் பாரி பூ இருக்கும் இடம் தெரிந்துவிட்டதென பரிதிக்கு தகவல் அனுப்பினான்.
“ராயப்பனுக்கு பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க இல்லையா?”
“எனக்குத் தெரியலயே பாரி!” குமாருக்கு உண்மையில் அவ்விடயம் தெரிந்திருக்கவில்லை.
“எஸ்… பேஸ் மேக்கர் பொறுத்தியிருக்கான். அவனுடைய மெடிக்கல் ரிப்போர்ட் அமிர்தா கொலைக்காக அவன் வீட்டுக்கு போயிருந்தப்போ பார்த்திருக்கேன்” என்ற பாரி “அதை ஹேக் செய்தால் போதும். முடிஞ்சிடும்” என்று சாதாரணமாகக் கூறினான்.
முடிஞ்சிடும் என்று அவன் எதை சொல்கிறான் என்று ஒரு கணம் குமாருக்கு விளங்கவில்லை.
“நீ எதை சொல்லுற?”
“நீங்க எதை நினைக்கிரீங்களோ, அதை!”
குமாருக்கு விழி பிதுங்கியது.
“பாரி திஸ் இஸ் நாட் அ ஜோக். ராயப்பன் பொலிட்டிக்களில் ரொம்ப பெரிய ஆளு.” அவர் இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்.
“பொல்லாத அரசியல்வாதி” என்று வாய்க்குள் மேலும் சிலபல வார்த்தைகளில் முணுமுணுத்தவன், “அவன் இப்போ அவனுடைய கட்சியில் அடிமட்டத் தொண்டன் கூட கிடையாது” என்றான்.
“அதுக்காக?”
“இப்படிபட்டவனெல்லாம் நம்ம நாட்டிலிருந்து என்ன செய்யப்போறான்?” ஒருவித அலட்சிய பாவம் பாரியின் முகத்தில்.
“வேண்டாம் பாரி பெரிய பிரச்சினை ஆகிடப்போகுது…”
“பெரிய பிரச்சனை தான் சார்… பெரிய பிரச்சனை தான். அவன் கை வைத்தது என் பூ மீது.” இதுவரை அமைதியாக இருந்த முகமா என்று ஆணையருக்கே பாரியின் முகத்தில் தாண்டவமாடிய கொலைவெறி கிலியை உண்டாக்கியது.
“காம் டவுன் பாரி…”
“அம் கூல்… சார்” என்ற பாரி நொடியில் முகபாவத்தை மாற்றியிருந்தான்.
அப்போது பாரியின் அலைபேசியில் வித்தியாசமான சத்தம் ஒலித்தது. அதை கேட்டதும் பாரியிடம் பரபரப்பு.
அலைபேசியை திறந்து பார்த்தவனுக்கு தன்னுடைய கணிப்பு சரியென்ற ஆசுவாசம்.
பூ தன்னுடைய கையிலிருந்த ஸ்டராப்பை ஆன் செய்திருந்தாள். அது பாரி எண்ணியது போலவே அவனது குவார்ட்டர்ஸ் குடியிருப்பு பகுதியைத்தான் சுட்டிக்காட்டியது.
“அம் கெரெக்ட் சார்” என்ற பாரி…
ஒரு மருத்துவமனையின் பெயரை சொல்லி, “இதில் தான் ராயப்பன் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கான். அவனுக்கு பேஸ்மேக்கர் பொறுத்திய டாக்டர் டீடெயில் கிடைச்சா நல்லாயிருக்கும். அபிசியலா வேண்டாம் நினைக்கிறேன்” என்றான்.
“எனக்கு அங்க யாரையும் தெரியாதே” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே…
“நீங்க அங்கதான், உங்களுடைய சுகருக்கு கன்சல்டிங் போறீங்கன்னு கேள்விப்பட்டனே!” என்றான் பாரி.
“எப்படிடா இதெல்லாம் கண்டுபிடிக்குற?”
“ராயப்பனை காப்பாற்றி நீங்க என்ன சார் பண்ணப்போறீங்க” எனக்கேட்டவன், இதில் எனக்கு நீங்க ஃபுல் ஃபிரீடம் கொடுத்ததா நினைவு” என்றவன் வேகமாக எழுந்துகொண்டான்.
“பாரி…”
“எனக்கு உங்களைவிட பெட்டரா ஒரு ஆள் கிடைச்சிருக்கு சார்” என்று பாரி வெளியில் வர, பரிதி அவனுக்காகக் காத்திருந்தான்.
“எல்லாரும் சேஃப் தான?” கேட்டுக்கொண்டே காரில் ஏறினான் பாரி.
“ம்ம்ம்” என்ற பரிதி, “அவனுங்க ரெண்டு பேர் இப்போ அமோஸிற்கு தகவல் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆனால் அதுவும் டேஞ்சர் தான். அவனுங்களுக்கு அமோஸ் கால் பண்ணி எடுக்கலன்னா அலர்ட் ஆகிடுவான்” என்று தன் எண்ணத்தைக் கூறினான்.
பரிதி சொல்லியது ஏற்கக்கூடியதும் கூட.
“அமோஸிற்கு எல்லா வழியிலும் என்னை ப்ரீஸ் பண்ணனும். அதுக்காக மட்டும் தான் உங்களையெல்லாம் பிடித்து வைத்தது. அவன் உங்களை எவ்ரி மினிட் கண்காணிக்கவெல்லாம் மாட்டான். ஏதாவது தவறா நடந்தா உங்களை பிடித்து வைத்திருந்த தடியர்களே அழைப்பார்கள் என்று மெத்தனமாத்தான் இருப்பான். அவனுக்கு கண்ணெல்லாம் பூ மீதுதான்” என்ற பாரி “ரித்தேஷ் வீடு உங்களுக்கு தெரியும்தானே பரிதிண்ணா. அங்க போங்க” என்றவன் இருக்கையில் பின் சாய்ந்து கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
‘தைரியமா இருடி. நான் வந்துட்டே இருக்கேன்.’ மனதின் மூலம் தன்னவளுக்கு செய்தி அனுப்பினான்.
பாரியின் ஓய்ந்த தோற்றம் என்னவோ செய்திட, அவனின் தோளில் தட்டிவிட்டு பரிதி வாகனத்தை செலுத்திட…
அவி பாரியின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டான்.
பரிதி தன்னால் முயன்றளவு வேகமாக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
தீடீரென வண்டியை நிறுத்தக்கூறிய பாரி,
“அந்த ஷாப்பில் போயிட்டு கேண்டி வாங்கிட்டு வாடா” என்று அவியை விரட்டினான்.
பாரியை நன்கு முறைத்த அவி,
“இப்பவுமாடா” என்று கேட்க…
“மண்டை ரொம்ப சூடாகிப்போச்சுடா. அவசியம் வேணும். இல்லைன்னா, நான் பாட்டுக்கு பொட்டு பொட்டுன்னு கண்ணுல படுறவனையெல்லாம் சுட்டுத்தள்ளி போயிட்டே இருப்பேன்” என்று காய்கறி வெட்டுவதைப்போல் கூறிட அவி வேகமாக இறங்கிச் சென்றான்.
“அமோஸ் உன்னை வாட்ச் பண்ணிட்டு இல்லையா பாரி…?”
“குவார்ட்டர்ஸ் உள்ளே அவன் போனதே பெரிய விஷயமா இருக்கும். இதில் எங்க அவன் என்னை வாட்ச் பண்ணப்போறான். அப்படியே செய்தாலும், என் மொபைல் நெம்பர் வச்சு நானிருக்கும் இடம் மட்டும் தான் ட்ராப் பண்ணுவான்.
அதைக்கூட இப்போ, என் யூகம் சரின்னா சத்யாவை வைத்துதான் செய்வான். சத்யா நிச்சயம் நானிருக்கும் சரியான இடங்களை காட்டிக்கொடுக்க மாட்டான்.”
அவி வர அவர்களின் பேச்சும் முற்று பெற்றது.
“இந்தாடா.. நல்லா முழுங்கு” என்ற அவி, பாரியின் கை நிறைய கேண்டியை வைத்தான்.
“எம்மேல அம்புட்டு பாசமா மச்சான்” என்ற பாரி அவியின் முறைப்பை கண்டுகொள்ளாது. கேண்டி ஒன்றை பிரித்து வாயில் போட்டான். அவி தன் தலையில் தட்டிக்கொண்டான்.
“இதென்ன ஹாபிட் பரிதிண்ணா? சீரியஸ் டைமில் கேண்டி சாப்பிடுறது?”
“அதை தமிழிடம் தான் கேட்கணும் அவி.”
குமாரிடமிருந்து பாரிக்கு அழைப்பு…
“சொல்லுங்க சார்?”
“நான் எதாவது டீம் அரேஞ் செய்யவா பாரி. உதவிக்குக்கூட போலீஸ் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை போலிருக்கே?”
“எனக்கு பலமா என் குடும்பம் இருக்கு சார். அத்தோட இதை நானே பார்த்துக்கிறேன். என்னைத் தொட்டவனை, நான் மட்டும் தான் போட்டுத்தள்ளனும்” என்ற பாரி, இதை நான் தனியாகவே பார்த்துக்கொள்கிறேன் என்று மறைமுகமாக அவரிடம் சொல்லியிருந்தான்.
“டென்சன் ஆகாதடா!” அவி பாரியின் தோள் தொட்டு அழுத்தினான்.
“அவளை கடத்திட்டான் தெரிந்ததிலிருந்து நான் நானாவே இல்லைடா அவி. மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடுற மாதிரி இருக்கு. நெஞ்சுக்குள்ள எதையோ கனமா தூக்கி வச்ச மாதிரி இருக்கு. என்ன வேணாலும் செய்துக்கோன்னு சொல்லிட்டு, நான் என் பிளான் சொன்னா முட்டுக்கட்டையா எதையாவது சொல்லுறாரு. இதை நான் விட போறதில்லை. அவன் திரும்ப அவன் நாட்டுக்கு போகப்போறதில்லை” என்று வெடித்து சிதறிய பாரியின் கோபம் பரிதிக்கே புதிது. பாரியின் கோபம் தெரியும். ஆனால் இத்தனை ஆக்ரோஷத்ததை அவனிடம் பார்த்ததில்லை.
இந்நேரம் தான் அமைதிப்படுத்தும் விதமாக பேசினாலும், அவனை போட்டு அழுத்துவதாகத்தான் தெரியுமென பரிதி வாய் திறக்கவில்லை.
ரித்தேஷின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய பரிதி…
“நாங்களும் வரட்டுமா பாரி?” என்று தாங்கள் உடன் வருவதைப்பற்றி வினவினான்.
“இப்போ நான் மட்டும் போறேன் பரிதிண்ணா. இங்கிருந்து இன்னொரு இடம் போற மாதிரி இருக்கும்” என்ற பாரி ரித்தேஷின் வீட்டிற்குள் சங்கரன் வர சொல்லியிருப்பதாக சொல்லிச் சென்றான்.
பாரியை எதிர்பார்க்காத சங்கரன் அவனை வரவேற்க… முகமன் கூறுவதற்கெல்லாம் நேரமில்லாத பாரி நேராக விடயத்திற்கு வந்திருந்தான்.
பூவை கடத்தியது முதல், ராயப்பன், விவாஷ் சிறையில் தப்பியது தொடர்ந்து… இப்போது தான் போட்டிருக்கும் திட்டம் வரை அனைத்தையும் துரித கதியில் கூறிய பாரி, ராயப்பன் மருத்துவம் பார்க்கும் இதய நிபுண மருத்துவரை பார்க்க வேண்டுமென்று கேட்டான்.
பாரியின் திட்டம் இதுதான் என்று தெரிந்தும், எவ்வித ஆட்சேபனையும் கூறாமல் பாரியுடன் புறப்பட்டிருந்தார் சங்கரன்.
பரிதி வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க தன்னுடன் இறுகிய நிலையில் அமர்ந்து வரும் சங்கரனின் எண்ணவோட்டத்தை கணிக்க முடியாது,
“உங்களுக்கு இதில் எந்தவொரு வருத்தமும் இல்லையே?” என்று வினவினான்.
“அவன் என்னுடைய நண்பன் சொல்றதையே நான் வெறுக்கிறேன் பாரி. அமிர்தா எனக்கு பிறக்கவில்லை அவ்வளவுதான் வித்தியாசம். என்கிட்ட சொல்லியிருந்தா, அவளை கண்காணாம எங்கயாவது வாழ வைத்திருப்பேனே. நான் தூக்கி வளர்த்த பொண்ணு பாரி. இப்போதான் அவளை கையில தூக்கின மாதிரி இருக்கு. அதற்குள் இந்த கையாலே மண்ணை போட வச்சிட்டானே!” அத்தனை நாள் யாரிடம் சொல்லி மனக்குமுரலை கரைப்பதென்று தவித்திருந்த சங்கரன் சொல்லி அழ ஆள் கிடைக்கவும் வயதையும் மீறி கண்ணீர் சிந்தினார்.
“ராயப்பனை நானே கொலை செய்யணும் இருந்தேன் பாரி. இப்போ உனக்கு உதவி செய்வதில் எனக்கு கொஞ்சமும் வருத்தம் கிடையாது. பெற்ற மகளையே பணத்திற்காக கொல்லும் இவனெல்லாம் மனித இனத்திலேயே சேர்த்தி கிடையாது” என்று கோபமாக பேசியவர், “முடிந்தால் ரித்தேஷையும் கொன்னுடனும் பாரி” என்றார்.
“சார் அவர் உங்க மகன்!” அவர் பேச்சினை கேட்டபடியிருந்த அவி அதிர்ந்து கூறியிருந்தான்.
“பெத்துட்டேங்கிறதுக்காக அவன் என் பிள்ளையாகிட முடியாது தம்பி. குணம், நடத்தை, மனம், இதில் எதிலுமே அவன் என் பிரதிபலிப்பு இல்லை. அப்புறம் எப்படி என் மகனாவான். நல்லவேளை இவனை இப்படி பார்க்க என் மனைவி உயிரோடில்லை” என்றவர் “அவன் என் மகன் என்கிற நினைப்பே எனக்கு சுத்தமாயில்லை” என சினத்துடன் கூறினார்.
அவரின் உள்ளத்து உணர்வை ஆண்கள் மூவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
அவர்கள் வர வேண்டிய இடம் வந்திருக்க, சங்கரன் அவர்களை அந்த பிரமாண்டமான மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்.
காக்கி உடையில் வந்திருப்பதால் அனைவரும் பாரியை ஒருமுறை திரும்பி பார்த்து கடந்தனர்.
“நீ ட்ரெஸ் சேன்ஞ் பண்ணியிருக்கலாம் பாரி.” சொல்லிய அவியை உருத்து விழித்தான் பாரி.
“வேணுன்னா உன் ட்ரெஸ் கழட்டி கொடுடா?” பரிதி அவியின் முதுகில் ஒன்று வைத்தான்.
சங்கரன் அங்கு சிகிச்சைக்காக அடிக்கடி வருவதாலும், அவரின் உயரமும் எவ்வித விதிகளுமின்றி அவரை அவர்கள் பார்க்க வந்திருக்கும் மருத்துவரிடம் நேராக செல்ல அனுமதித்தது.
“உங்களுக்கும் ஹார்ட் ப்ராப்ளம் இருக்கா சார்?”
“ஒருமுறை மைல்ட் அட்டாக் பாரி. அப்போ ராயப்பன் தான் இந்த டாக்டரை ரெஃபெர் செய்தான்” என்றவர் அந்த மருத்துவரின் அறைக்குள் நுழைந்திட, பாரியின் வயதை ஒத்த ஒருவன் மருத்துவர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
“என்ன அங்கிள் முன்னால் காவல்துறை அமைச்சர்ன்னு சிட்டி டிசி’யை கூட்டிட்டு வந்து ப்ரூஃப் பன்றிங்களா?” எனக் கேட்டவனின் பேச்சில் உண்மையிலேயே அங்கிருந்தவர்கள் முகம் சிரிப்பினை பிரதிபலித்தது.
(*ஏந்திழையின் இரட்சகன் படித்தவர்களுக்கு இந்த டாக்டர் யாருன்னு தெரிஞ்சிருக்கும்.)
“விஷால் இவர்…” என்று சங்கரன் பாரியை அறிமுகம் செய்ய விழைய,
“இப்போ தான அங்கிள் சொன்னேன், இவர் டிசி’ன்னு எனக்குத் தெரியும்” என்ற விஷால் “ஹாய் அம் விஷால். கார்டியாலோஜிஸ்ட். ராயப்பன் கேஸில் உங்களை நீயூஸில் பார்த்திருக்கேன்” என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டதோடு, அவனுக்கு எப்படி பாரியை தெரியும் என்பதையும் கூறியிருந்தான்.
“அந்த கேஸ் தான் இப்போ எங்களை உங்க முன்னால் உட்கார வைத்திருக்கிறது” என்ற அவியிடம் ஏக கடுகடுப்பு.
“அவனை கண்டுக்காதீங்க டாக்டர்” என்ற பாரியை பார்த்து விஷால் சிரித்தானென்றால், அவி முறைத்தான்.
“பேசுவதற்கெல்லாம் நேரமில்லை. வந்த வேலையை பாருடா. அங்க தமிழ் என்ன நிலையில் இருக்காளோ?” என்று புலம்பினான் அவி.
“பரிதிண்ணா இவனை முதலில் வெளிய தள்ளிக்கிட்டு போங்க” என்ற பாரியின் பேச்சினை பரிதி தட்டாது செய்திருந்தான்.
“பாரி டாக்டர் யெங்கா இருக்காருன்னு நினைக்காதே. மோஸ்ட் வாண்டட் கார்டியாலோஜிஸ்ட். நீ உன் பிளான் சொல்லு” என்று பாரியிடம் கூறிய சங்கரன், “அவர் கேட்பதற்கு எவ்வித மறுப்பும் சொல்லிடாதீங்க விஷால்” என்று அந்த இளம் மருத்துவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி பரிதியுடன் அமர்ந்தார்.
“பில்டப் எல்லாம் பலமா, பயங்கரமா இருக்கே” என்ற விஷால் தனக்கு முன்னிருந்த இருக்கையில் பாரியை உட்காரக் கூறினான்.
நன்றி கூறியவனாக இருக்கையில் அமர்ந்த பாரி, விஷாலின் மருத்துவ அறையை நிதானமாக பார்வையால் அலசினான்.
“என்ன மிஸ்டர்.பாரி, நீங்க என் ரூமை சுற்றி பார்க்கத்தான் நோ சொல்லிடாதன்னு அங்கிள் சொல்லிட்டு போனாரா?” என்று விஷால் செய்த கேலியில் தன் சுழலும் பார்வையை விஷாலின் மீது நிலைக்கச் செய்தான் பாரி.
“இந்த ரூமில் காமிரா இருக்கா டாக்டர்” என்று பாரி கேட்டதில் விஷால் அர்த்தமாக ஏறிட்டான். இருப்பினும் பாரி கேட்ட கேள்விக்கு விஷால் பதில் அளித்திருந்தான்.
“யூ கேன் கால் மீ விஷால். தட்ஸ் எனாஃப் ஃபார் மீ” என்ற விஷால் “இங்க இல்லை. ஆனால் வெளியில் ஹாஸ்பிட்டல் சுற்றி நிறைய காமிராக்கள் உள்ளன. பேஷண்ட் டீடெயில் ஹைலி ப்ரோடெக்டிவ்” என்றான்.
“ஹ்ம்ம்” என்று சொல்லிய பாரி, மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி நன்கு நிமிர்ந்து அமர்ந்தான்.
“ரொம்ப பெரிய விஷயமா? உங்க ப்ராப்ளம் என்னன்னு சொல்லுங்க பாரி. என்னால க்யூர் பண்ண முடியுதா பார்க்குறேன்” என்ற விஷாலை நேர்ப்பார்வையாக பார்த்தான் பாரி.
“இப்போ நான் சொல்லப்போறது மோஸ்ட் ஹைலி காண்பிடன்ஷியல் விஷால்” என்ற பாரி, சொல்வதையெல்லாம் கேட்ட விஷாலுக்கு தலை சுற்றியது.
பாரி சொல்லிக்கொண்டிருக்கும் பாதியிலேயே, விஷால் தனக்கு முன்னிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தினான்.
விஷாலால் பாரி சொல்வதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றனரா என்ற எண்ணவோட்டம் தான் அவனிடம்.
எதற்காக தான் இதனை செய்ய சொல்லிக் கேட்கிறேன் என்பது விஷாலுக்கு புரிய வேண்டுமென்பதற்காகவும், விஷால் மறுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமிர்தா தொட்டு ஆதி முதல் அந்தம் வரை பாரி அனைத்தையும் கூறினான்.
“இப்போ நான் என்ன செய்யணும் பாரி?”
விஷாலின் குரலே மாறியிருந்தது.
அவர்கள் அவனை காண வந்த போதிருந்த குரலுக்கும் தற்போதைய குரலுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருந்தது.
என்ன செய்ய வேண்டுமென்று பாரி சொல்லிவிட்டான். ஆனால் கேட்ட விஷாலுக்கு இதயம் நின்று துடித்தது.
“ஆர் யூ ஷுயூர் பாரி?”
“எஸ்… டாம் ஷுயூர்.”
“இதுக்கு பெயர் கொலை…”
“நச்சு பாம்பை கொல்றது கொலையில் சேராது.” பாரியின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.
“நீங்க சொன்னதையெல்லாம் கேட்டபோது எனக்கே ராயப்பனுக்கு அறுவை சிகிச்சை அப்போ காப்பற்றியிருக்கக் கூடாதோ தோன்றியது உண்மை. ஆனால்…”
“என்ன விஷால் ஆனால். அவன் உயிரோட இருந்தா இன்னும் என்னவெல்லாம் நம்ம நாட்டு வளங்களை நாம இழப்போமோ தெரியாது. ஆனால், அவனை வைத்து தான் அந்த அமோஸை பிடிக்க முடியும்” என்ற பாரி இப்போது நீ நான் சொல்வதை செய்துதான் ஆக வேண்டுமென்கிற தொனியில் பேசியிருந்தான்.
“இதனை செய்வதற்கு எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை பாரி. ஒரு மருத்துவனா ஒரு உயிரை காப்பாற்றத்தான் வேண்டும். இப்படி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை…”
“எப்படி செய்றதுன்னு கேட்குறீங்க?” என்ற பாரி தன் அலைபேசியிலிருந்து ஒரு காணொளியை ஓடவிட்டு விஷாலிடம் காண்பித்தான்.
“இந்த பெண்களை எல்லாம் ராயப்பன் எதுக்கு கடத்தியிருப்பான் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை. இதையே பத்து வருஷமா செய்திட்டிருக்கான்.”
விஷாலால் பாரி காட்டும் காட்சிகளை பார்க்க முடியாது கண்களை மூடிக்கொண்டான்.
“கொலை, பொக்கிஷங்கள் கடத்தல் என்று அதனோடு சேர்த்து இதையும் கண்டுபிடிச்சோம். இந்த மாதிரி விஷயம் அவனுக்கு பெருமையா இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு. அந்த பெண்களுக்காக இந்த விஷயம் கொஞ்சம் கூட வெளியில் கசியாம மூடி மறைச்சிருக்கோம்.
இப்போ சொல்லுங்க ஏண்டா அவனை காப்பாத்திட்டிருக்கோம் அப்படிங்கிற எண்ணம் உங்களுக்கு வரலையா?”
அடுத்த கணம்,
“நான் இதை செய்றேன் பாரி” என்று தன்னிடமிருக்கும் தன்னுடைய நோயாளிகளின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய கோப்புகளிலிருந்து ராயப்பனின் அறிக்கையை கையில் எடுத்திருந்தான் விஷால்.
“ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் விஷால்” என்ற பாரி விஷாலின் கையை பிடிக்க, பாரியின் கையில் தட்டிக் கொடுத்தான் விஷால்.
“எப்போ செய்யனும் பாரி?”
“நீங்க தயாரா இருங்க” என்று பாரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குமார் மீண்டும் அவனை அழைத்திருந்தார்.
“நான் சி.எம்’கிட்ட பேசிட்டேன் பாரி. அவரே உன் பிளானுக்கு பெர்மிஷன் கொடுத்திட்டாரு. அந்த அமோஸ் அவன் நாட்டுக்கு போய்டவேக் கூடாதுன்னு சொன்னாரு” என்றவர் சற்று தயங்கி, “அந்த ராயப்பன், பொண்ணுங்க விஷயத்தில் இத்தனை செய்திருக்கான் தெரிஞ்ச அப்பவே முடிச்சிடலாம் சொன்னேன். கேட்டீங்களான்னு என்னை வறுத்து எடுத்துட்டார் பாரி. அத்தோடு அந்த அமோஸ் அவன் நாட்டில் செய்து கொண்டிருக்கும் இல்லீகள் பிஸ்னெஸ் பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார். அவனால் நம்ம நாட்டிற்கும் ஏகப்பட்ட நஷ்டம் போலிருக்கு. இவனால பல நாடுகளில் க்ரைம் ரேட் மலையளவுக்கு உயர்ந்திருக்காம். அதனால் அவன் இறந்தா நமக்கு பிரச்சினை எதுவுமில்லைன்னு சொல்லிட்டாரு. மீறி எதாவது வந்தால் அவர் பார்த்துக்கொள்கிறாராம்” என்று நீண்டு பேசியவருக்கு “சி.எம். நிலவேந்தனுக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன் சொல்லிடுங்க” என்ற பாரி, “முடிச்சிட்டு கூப்பிடுறேன்” என வைத்துவிட்டான்.
(நிலவேந்தன் – ‘மின்னலே என் நெஞ்சிலே’ கதையின் நாயகன்.)
பாரியின் மனதில் இப்படியொரு முடிவை எவ்வித அரசியல் நோக்கமுமின்றி தைரியமாக எடுத்த முதல்வர் நிலவேந்தன் உயர்ந்து தெரிந்தான். நேரில் பார்த்தே இல்லாதவன் மீது தனிப்பட்ட மரியாதை அதிகரித்தது.
பாரியையே விஷால் பார்த்திருக்க, குமாரிடம் பேசிவிட்டு வைத்தவன் விஷாலிடம்…
“இனி இதை நீங்க லீகலாவே செய்யலாம் விஷால். கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பெர்மிஷன் கிடைச்சாச்சு” என்றான்.
“நம்ம சி.எம் யங் மேன் இல்லையா? அதான் இந்த ஜெனரேஷன் வேவ் லென்த்துக்கு ஒத்துப்போறார். இனி எந்தவொரு கில்ட் ஃபீலும் எனக்கில்லை” என்றான் விஷால்.
“ஹாங்…” என்று எதையோ சொல்ல வந்து பாரி தயங்கிட, விஷால் சொல்லுமாறு ஊக்கினான்.
“இந்த விஷயம்…” என்று இழுத்த பாரி, “முக்கியமா பெண்கள் விஷயம், கமிஷனர், சி.எம், என்னை தவிர்த்து யாருக்கும் தெரியாது. இப்போ உங்களுக்கு” என்றான் அழுத்தமாக.
“நிச்சயம் என்னிடமிருந்து எந்தவொரு தகவலும் லீக் ஆகாது” என்ற விஷாலிடம் அவனது அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு, விஷாலிடம் பார்வையாலேயே தைரியம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
பாரி வந்ததும், நேராக சங்கரனிடம் சென்று… “தேன்க்ஸ் சார்” என்று இந்த விஷயத்திற்காக அவர் செய்ததற்கு நன்றி தெரிவித்தான்.
“காவல்துறையை பற்றி நன்கு தெரியும் என்பதால் உன்னுடைய எண்ணம் புரிந்து என்னால் உதவ முடிந்தது பாரி. நன்றியெல்லாம் வேண்டாம்” என்றவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
“எல்லாம் ஓகேவா பாரி?”
“இனியெல்லாம் விஷால் கையில் தான் பரிதிண்ணா இருக்கு” என்ற பாரி பரிதியை இறுக அணைத்திருந்தான்.
“பாரி என்னடா இது. இவ்ளோ நேரம் எவ்ளோ தைரியமா இருந்த! இப்போ இப்படி கலங்கி நிற்கலாமா?” என்று ஆறுதல் செய்த பரிதியின் அணைப்பில் இருந்தவாறே, “ஒருநாள் முடிஞ்சிடுச்சு பரிதிண்ணா. பூ தைரியமா இருப்பாளா? அவனுங்க பூவை எதுவும் செய்திருக்க மாட்டானுங்களே?” பயத்தோடு கேட்டிருந்தான்.
“ச்சூ… இப்படியெல்லாம் யோசிக்காதே பாரி. நீயென்ன செய்யனும் நினைத்திருக்கியோ அந்த வழியில போ. எல்லாம் நல்லதாவே முடியும்” என்ற பரிதி “நெக்ஸ்ட்?” என்க பாரி தன்னை மீட்டிருந்தான்.
“அவனுக்கு அந்த சிலை வேண்டும். அது அவனுக்கு கிடைக்கும் வரை அவன் தமிழை ஒன்னும் செய்யமாட்டான் பாரி. தைரியமா இரு.”
என்னதான் தனக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும், அவர்களின் மொத்த திடமும் பாரியே! அவனே கலங்கி நிற்பது அவியை தைரிய வார்த்தைகள் கூற வைத்தது.
அவர்கள் மூவரும் மருத்துவமனைவிட்டு வெளியில் வரும்போது இருட்டத் தொடங்கியிருந்தது.
“இந்த கார் வேண்டாம் பரிதிண்ணா” என்று பாரி சொல்லும்போதே கணபதியுடன் ஆம்னியில் வந்து சேர்ந்தாள் ஜென்.
பாரி ஏற்கனவே ஜென்னிடம் சொல்லியிருந்தான்.
“அங்க எல்லாம்…?” பாரி ஜென்னிடம் வினவினான்.
“ஆபீஸ் டைம் ஓவர் பாரி. எல்லாம் ஓகே தான். லீயும், தீபனும் பாதுகாப்பா வீட்டுக்கு போயிட்டாங்க. லீயிடம் எதையும் வீட்டில் சொல்லக்கூடாதுன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்கேன்” என்று பாரிக்கு வேண்டிய தகவல்களை ஜென் கூறிட,
“அந்த தடியனுடைய மொபைலுக்கு ஒரு கால் வந்தது சார். அட்டெண்ட் பண்ணலன்னா சிக்கலாகிடும் நினைத்து அட்டெண்ட் பண்ணேன். ‘பார்த்து ஜாக்கிரதை. கடைசியா கஸ்டடி எடுத்த பையன் மூலமா அந்த பாரி எதாவது திட்டம் போட்டிருப்பான். ரொம்ப கவனமா இருங்க. அவங்கயெல்லாம் நம்ம கையில இருக்கவரைதான் நாம சேஃப்.’ அப்படினு எதிர் முனையில் யார் இருக்கான்னு கூட கேட்காமல் சொல்லிட்டு வச்சிட்டான் சார்” என்று கணபதி கூறினார்.
அடுத்து ஜென் கொண்டு வந்த வாகனத்தில் அவர்கள் சென்றது காவலர் குடியிருப்பு பகுதி.
#ஏந்திழையின்_இரட்சகன்
#மின்னலே_என்_நெஞ்சிலே புத்தகமாக வெளிவந்துள்ளது.
விலை : ₹ 350 /-
தொடர்புக்கு : 8124489417
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
19
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

செமடா
semma sister