Loading

அத்தியாயம் 5 :

தீபாவளி முடிந்த மறுநாள்.

பள்ளிக்குச் செல்ல பூ ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

பொன்னு வீட்டிலில்லை என்று அவள் நினைத்திருக்க… அவரோ உள் அறையில் தோப்பு கணக்கைப்பற்றி தன் மகனிடம் ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா வரலையாம்மா?” அறையிலிருந்து வெளிவந்தவளாக கூடத்தில் டப்பாவில் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த அன்னையிடம் கேட்டாள்.

“இல்ல கண்ணு. இங்கன ஏதோ சோலி கெடக்காம்.”

“சரிம்மா” என்று மீண்டும் அறைக்குள் சென்றவள் தனது பையை எடுத்து வந்து கூடத்தில் வைத்தவாறே…

“வேந்தனுக்கு அதிரசம் எடுத்து வச்சியாம்மா?” எனக்கேட்டு “நிறையவே வைம்மா. அவனுக்கு நிரம்ப பிடிக்கும்” என்றதோடு, “நோம்பு கயிறு அவனுக்கு கொடும்மா” என்றாள்.

இருவருமே பொன்னு அங்கு வந்து நின்றதை கவனிக்கவில்லை.

தந்தைக்கு பின் வந்து நின்ற பூவின் தந்தை என்ன சொல்வதென்று தெரியாது கைகளை பிசைந்தார்.

“அதிரசம் தான் டப்பாக்குள்ள அடுக்குறேன். சாமி அறையில கும்பிட்ட கயிறு கலசத்து மேல இருக்கும். எடுத்திட்டு வா” என்றவர் அதிரசம் அடுக்கவதிலேயே முனைப்பாக இருந்தார்.

கயிறு எடுக்க பூஜையறை பக்கம் செல்லத் திரும்பிய பூ பொன்னு நின்ற தோரணையில் உடல் நடுங்கினாள்.

“தாத்…” அதற்கு மேல் அவளுக்கு பேச்சு வரவில்லை.

“யாரது?” கோபமாக குரல் ஒலித்தது.

“ஃபிரண்ட்…” நா தடுமாற மொழிந்த கணம் பளாரென்ற சத்தம் அவ்விடத்தை நிறைத்தது.

பூ இரண்டடி தள்ளி கீழே விழுந்திருந்தாள்.

தூக்க வந்த மருமகளை கைகாட்டி தடுத்தவர்,

“அவ(ள்) கேக்குறான்னு நீயும் மூட்டை கட்டுறத பார்த்தாக்கா, அவளோட பழக்கம் உனக்கும் தெரியுமாட்டிருக்கு” என்றார்.

“அது வந்து மாமா…”

“ஆண் சகவாசம் கூடாதுன்னு சொல்லித்தானே அனுப்பினேன்.”

“அவன் என்னோட ஃபிரண்ட் தாத்தா. எங்கனக்குள்ள ஃபிரண்ட்ஷிப் மட்டுந்தேன். வேற என்னத்தையும் கற்பனை செஞ்சி என்னை அசிங்கப்படுத்திப்புடாதீக.”

அவளின் பேச்சில் வெகுண்டவர், மீண்டும் அடித்த கன்னத்திலேயே பதம் பார்த்திருந்தார்.

“அப்பா சின்னப்பொண்ணு. உங்க அடி தாங்க மாட்டா(ள்)” என்று குறுக்கே வந்த மகனை தள்ளி நிறுத்தினார்.

தங்களுக்குள் இருக்கும் நட்பிற்கு அவரது பேச்சால் எங்கே கலங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சியே வேகமாக விளக்கினாள். ஆனால் பூவின் பேச்சு அவருக்கு திமிராகத்தான் தெரிந்தது.

“என்னையே எதிர்த்து… எனக்கே பாடம் எடுக்குதியோ!” என்றவர், “எப்போ என்னையவே எதிர்த்து பேசினாளோ இனி இவ(ள்) விசயத்தில் என்னமாட்டிக்கும் நான் தலையிட மாட்டேன்” என்றவர் “புத்தி சொல்லி அனுப்பி வை” என்று மகனை எச்சரித்ததோடு உள்ளே சென்று விட்டார்.

பின்னர் பூவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தது அவளது அப்பத்தா தான்.

“அந்த கெழம் இன்னும் அருவதிலேயே நின்னுகிடட்டும். நீ என்னத்துக்கு வெசனப்பட்டு வெம்புற ராசாத்தி. உன்னை பத்தி எங்களுக்குத் தெரியாதா! அது பேசலன்னு சொல்லிபுட்டா சோறு சங்குக்குள்ள இறங்காமலா போவுது. நீ பள்ளிக்கூடத்துக்கு கெளம்புத்தா” என்று ஒருவாறு தேற்றி, பூவின் அன்னைக்கும் ஆறுதல் அளித்து ட்ரைவருடன் அனுப்பி வைத்தார்.

காரில் ஏறி அமர்ந்த பூ மீண்டும் நினைவு வந்தவளாக இறங்கி வீட்டிற்குள் சென்று நோம்பு கயிறை வேந்தனுக்காக எடுத்துக்கொண்டு வந்தாள்.

கார் மறையும் வரை நின்று பார்த்திருந்த அப்பத்தா கலங்கிய கண்களை துடைத்தபடி உள்ளே சென்றார்.

“எப்பவோ, எவளோ பண்ணிப்புட்டு போனதுக்கு எம் பேத்தி என்ன பண்ணுவா(ள்). என்னத்துக்கு அவளை அம்புட்டு அடி அடிச்சி வச்சிருக்கிறீரு” என்று கணவரிடம் வரிந்துக் கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்றார்.

“போனவ நல்லா வாழ்ந்திருந்தாலும் பரவாயில்லையே. திரும்பி பொணமாத்தானே வந்தா(ள்). அது திரும்ப நடக்குமாட்டிருக்கே” என்ற பொன்னு தன் செல்ல பேத்தியை அடித்த கையை வெறித்தவாறு கண் கலங்கினார்.

“நாம பெத்ததும் நம்ம பையன் பெத்ததும் ஒண்ணுயில்லை. தப்பு பண்ணுறவ(ள்)தேன் அப்பன் ஆத்தாளுக்கிட்டே எனக்கு சிநேகிதன் இருக்கான்னு காட்டிக்கிட்டு செய்வாலாக்கும். இது இன்னைக்கு மொளச்சது கிடையாது. அறியாத வயசுல உண்டானது. அஞ்சு வருசமா கள்ளமில்லாம பழகுதுவ, நாமளே என்னத்தையும் பேசி தப்பான நினைப்பை உண்டு பண்ணிட வேணாம்.”

“இன்னொரு அவமானத்தை என்னால ஏத்துக்கிடவோ தாங்கிக்கிடவோ காணாது.”

பொன்னுவேலுவிற்கு ஒரு ஆண் ஒரு பெண். படிக்க வெளியூர் சென்று வரும் அவரது மகள், ஒரு நாள் நண்பனென்று  வீட்டிற்கு அழைத்து வந்த அவனையே மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தது அக்கால மனிதாரான அவருக்கு அத்தனை பேரதிர்ச்சி.

அண்ணன், அம்மா என்று யார் பேசியும் கேட்காத அவள், அவர்கள் பார்க்கவே அவனுடன் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

ஒரு வருடம் எப்படி போனதென்றே தெரியாது அக்குடும்பம் சோகத்தில் கழித்தது. அதிலிருந்து மீண்டுவர, அடுத்த அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது வீட்டை விட்டுச் சென்றவளின் இறப்புச் செய்தி.

அந்நாளில் அவரின் அவமானத்தின் மிச்சம் இன்றும் அவரது முகத்தில் தெரிந்தது.

இவ்விடயத்தில் கணவர் எளிதில் இறங்கி வரமாட்டார் என நினைத்த மூத்த பெண்மணியும் பூவின் பேச்சை அத்தோடு நிறுத்திக்கொண்டார்.

நடந்ததை அழுகையோடு சொல்லி முடித்த பூ…

“தாத்தாவுக்கு உன்னை தெரியாதுல வேந்தா அதான். தெரிஞ்சா சரியாப்போகும்” என்றாள். ஆனால் அந்த நம்பிக்கை அவளுக்குத் துளியும் இல்லை.

“ரொம்ப வலிக்குதாடா?” என்று கேட்டவனுக்கு இரு கண்களையும் சிமிட்டி இல்லையென தோளை குலுக்கினாள்.

அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது இந்த சமாளிப்பு அவனுக்கானதென்று.

மறுநாள் வீட்டிற்கு அழைக்கும் நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு அழைக்காது பூவின் தந்தைக்கு அழைத்தவன் தன் மொத்த மனத்தாங்கலையும் அவரிடம் காட்டிவிட்டான்.

“என்ன அங்கிள் இப்படி அடிச்சிருக்காரு. அவர் அடிக்கும் போது நீங்க வேடிக்கை பார்த்திட்டு இருந்திங்களா அங்கிள். பூவுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். கன்னம் அப்படி வீங்கியிருக்கு. உங்க அப்பா என்ன செய்தாலும் பார்த்திக்கிட்டு சும்மா இருக்கிறதுதான் மரியாதையா. நாளைக்கு பூவை கொலை செய்தா, அப்பவும் அப்பாதானேன்னு இன்னைக்கு மாதிரி வேடிக்கைத்தான் பார்ப்பீங்களா?” என்று வெடித்துவிட்டான்.

சிறு பையன் இவ்வளவு தன்னை கேட்கிறானென்ற கோபமோ வருத்தமோ அவருக்கு துளியும் அவன்மீது எழவில்லை.

மாறாக தன் மகளின் மீது எந்தளவிற்கு நட்பு இருந்திருந்தால் அவளின் தந்தையையே அவளுக்காக எதிர்த்து கேள்வி கேட்பான்.

“பூ அழுது ஃபர்ஸ்ட் டைம் அங்கிள், பாக்குறேன். இன்னொரு முறை அவர் இது மாதிரி செய்தா நான் சும்மா இருக்கமாட்டேன். யார் தடுத்தாலும் பூவை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன். உங்களைவிட என் பேரண்ட்ஸ் அவளை நல்லாவே பார்த்துப்பாங்க. பூவை தங்கச்சியா கையில் தாங்க என் அண்ணா இருக்காங்க. அவளுக்கு எல்லாமுமா ஃபிரண்ட் நான் இருப்பேன்” என்றவன் சொல்லாது வைத்துவிட்டான்.

உலகத்தில் எளிதில் சம்பாதிக்க முடியாதது ஆழமான அன்பும் நட்பும்.

அதனை எளிதில் கொண்ட பாரியையும் பூவையும் பிரித்து விடாதே என அந்நொடி பூவின் தந்தை மனமார வேண்டிக் கொண்டார். காலம் நிகழ்த்தவிருக்கும் மாற்றம் அறியாது.

பூவிற்காக அவளின் தந்தையிடமே கோபம் கொண்டவன் தான் இன்று அவளை முற்றும் முதலும் தவிர்த்தவனாக தனியாக இருக்கின்றான்.

பூ பாரியின் நட்பிற்கு இடையில் தமிழ் பாரியின் திருமணப்பந்தம் வந்ததாலே இப்பிரிவு.

நெருங்கி வரும் மனதை விலக்கி வைப்பதே பல மனங்களின் நிதர்சனம் போலும்.

***********

ஸ்டேஷனுக்கு எதிரிலிருக்கும் தேநீர் கடையில் பாரி.

பாரியை காக்கி உடையில் பார்த்ததும் கடைக்காரர் கந்தன் முதலில் அதிரத்தான் செய்தார்.

“சார் நீங்க தான் புது டிசி’யா?”

மென் புன்னகையை பதிலாகத் தந்தவன், “ஹாஃப் டீ ண்ணா” என்றான்.

“தேநீர் கொடுத்தவர், உங்களுக்கு எந்த நேரத்துக்கு வேணும் சொல்லிட்டா அப்படியே ரெகுலரா ஸ்டேஷனுக்கு அனுப்பிடுறேன் சார்.” அவர் பவ்வியமாகக் கூறினார்.

“எனக்கு வேணுன்னா இங்க வந்து குடிச்சிக்கிறேண்ணா. அப்படியில்லையா, சன்னல் வழியா குரல் கொடுக்கிறேன் கொடுத்துவிடுங்க” என்றவன் குடித்த தேநீருக்கான பணத்தை நீட்டிட, அன்று யாரென்று தெரியாததால் பணம் வாங்கிக்கொண்டாரோ என்னவோ… இன்று வாங்கிட மறுத்தார்.

“இந்த லைனில் வேறு டீ ஷாப் ஏதும் இருக்கா?” என்று அவன் கேட்க,

ஏனென்று தெரியாத போதும்… “அந்த சந்து முனையில் இருக்குது சார்” என்று கந்தன் கை காண்பித்தார்.

“அப்போ நாளையிலிருந்து நான் அங்கவே குடிச்சிக்கிறேன்.” அவன் சொல்லி முடிப்பதற்குள் கையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டார்.

“டீக்கு காசு கொடுக்குற முதல் போலீஸ் நீங்க தான் சார்” என்ற கந்தன், “கணபதி சார் வந்தால் பழம் மட்டும் சாப்பிடுவார். வாரா வாரம் பணம் கொடுத்திடுவார். எஸ்.ஐ மேடம் வந்தா(ல்) பிஸ்கெட். அப்பவே காசு கொடுத்திடும். அப்புறம் யாரும் வந்தா(ல்) இதைத்தான் சாப்பிடுறாங்கன்னு கணக்கு வச்சிக்க முடியாதளவுக்கு சாப்பிட்டு பணம் கொடுக்காமலே போயிடுவாங்க.” கவலையாகக் கூறினார்.

“போலீஸ்ன்னா பணம் கொடுக்கக்கூடாதான்னு சட்டம் இருக்கா கேளுங்க. அப்படி கேட்க சொன்னது நான்தான்னும் சொல்லுங்க” என்ற பாரி அங்கிருந்து நகர்ந்து மீண்டும் அவரிடம் சென்று, சுட்டு விரல் கொண்டு புருவத்தை கீரியவாறே, “கடைக்கு யாரும் புதிதாவோ, சந்தேகப்படும்படியோ வந்தால் உடனே எனக்கு தகவல் கொடுங்கண்ணா” என்று தன்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்தான்.

உயர் அதிகாரி காரணமின்றி எதுவும் செய்யமாட்டார் என்ற எண்ணத்தில் கந்தன் சரியெனக் கூறினார்.

ஸ்டேஷனிற்குள் வந்த பாரி…

“என்ட்ரென்ஸில் ஏன் யாரும் நிக்கல?”

மற்றவர்கள் வைத்த சல்யூட்டையெல்லாம் அசட்டை செய்தவனாக தன் கேள்வியை கேட்டான்.

“அவங்க சஸ்பென்ஷனில் இருக்காங்க சார்.”

“சோ வாட்?”

பாரியின் குரலில் பதில் சொல்லிய பெண் டாணாக்காரர் இரண்டடி பின் சென்றிருந்தார் தன்னைப்போல்.

“அவர் ஜாயின் பண்ற வரை வேற யாராவது மாற்றி மாற்றி நில்லுங்க” என்றவன், “எல்லாம் ட்ரெயினிங் முடிச்சிட்டுத்தானே வந்தீங்க… ஒவ்வொண்ணும் சொல்லி உங்களைத் திருத்த நான் வரல. எனக்கு பெர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம்” என்று அனைவரையும் ஒட்டு மொத்தமாகக் கடிந்து கொண்டான்.

“அங்கிள்” என்றவன், “அமிர்தா கேஸ் ஃபைல் அண்ட் இதுவரை கேதர் பண்ண டீடெயில்ஸ்” என்று கணபதியிடம் கொண்டுவரச் சொல்லி தன்னிருக்கைச் சென்றான்.

இந்த இரண்டு நாட்களில் பாரியின் கோபமும், எவருக்கும் அஞ்சாத அவனின் தைரியமும், நிமிர்ந்த குணமும் ஓரளவிற்கு கண்டுகொண்ட கணபதிக்கு அவனிடம் சற்று உதறலாகவே இருந்தாலும், இத்தனை வருட பணிக்காலங்களில் பாரி மாதிரியான நேர்கொண்ட அதிகாரிகளுடன் பணி புரிந்தது மிகவும் சொற்பமே என்பதால் அவனுடன் இணைந்து வேலை செய்வதில் ஆர்வமாகவே இருந்தார்.

தயங்கித்தான் பாரியின் முன் சென்று நின்றிருந்தார்.

பணியில் இங்கு சேர்வதற்கு முன்பே அங்கிருப்பவர்களைப்பற்றி ஓரளவு அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டே வந்திருந்தான்.

கணபதியின் நேர்மையை அறிந்தவனுக்கு அவரின் வயதிற்கு தன்னைப்போல் மரியாதை வழங்கினான். அதனாலேயே அந்த அங்கிள் என்கிற விளிப்பு.

“ஃபைல்.” அவர் முன் கை நீட்டினான்.

“ஜென்சி மேடம் வச்சிருக்காங்க சார். அவங்க வர நேரம் தான்” என்று அவர் சொல்ல, பாரி நேரத்தை பார்த்தான்.

அப்போதுதான் காவல் நிலையம் வந்த ஜென்சியிடம் பாரி அமிர்தா கேஸ் டீடெயில்ஸ் கேட்டதாக ராதா சொல்ல, வேகமாக கோப்புகளை எடுத்துக்கொண்டு பாரியிடம் அனுமதி கேட்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.

விறைப்பாக சல்யூட் அடித்தவள் அவன் கேட்பதற்கு முன் கோப்புகளை அவன் முன் மேசையில் வைத்தாள்.

இதுவரை பாரி ஜென்சியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவில்லை. பார்த்தால் தமிழைப்பற்றி தானாகக் கேட்டுவிடுவோமோ என்கிற சிறு அச்சம் அவனுள்.

பாரி கோப்பினை ஆராய்ந்தான்.

“சார் உங்களுக்குத் தெரிந்தவரா மேடம்?”

கணபதி மென் குரலில் கேட்டிட ஜென்சி ஏன் என்பதைப்போல் பார்த்தாள்.

நேற்று பாரி வந்ததற்கான காரணம் கேட்டபோது ஜென்சியை பார்க்க வந்ததாக அவன் கூறியதை கூறினார்.

“ஃபிரண்ட்.”

“ஹம்… ஆனால் பார்த்தா அப்படித் தெரியல!”

“எனக்கே அந்த டவுட் வருது.”

“ரொம்ப முக்கியமான விசயம்னா ரெண்டு பேரும் வெளியப்போய் பேசிட்டு வாங்க.” கோப்புக்குள் குனிந்தபடியே பாரி சொல்லிட, இருவரும் ஒரு சேர மன்னிப்பு வேண்டினர்.

“சாரி சார்.”

சில நிமிடங்களில் கோப்பினை மூடி வைத்தவன்,

“இதை முன்ன ஹேண்டில் பண்ணது யார்?” எனக் கேட்டு தன் விசாரணையைத் துவங்கினான்.

“அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சரவணன் சார்.”

“ம்ம்” என்றவன் எழுந்து நடந்தபடி…

“அமிர்தா எப்படி இறந்து இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க. எனி கெஸ்?” என்றான் இருவரிடமும்.

“அவங்க வெறும் அமிர்தா இல்லை சார். Mrs.அமிர்தா ரித்தேஷ்வரன்.”

சட்டென்று நடையை நிறுத்தி ஜென்சியை கூர் பார்வையால் நோக்கியவன், “ஐ க்னோவ்” என்றான். அழுத்தமாய்.

பாரியின் மனதில் அமிர்தாவிற்கு என்ன இடம் என்பதோடு, அவனுக்காக ஒருத்தி நான்கு வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதையும் மறைமுகமாக உணர்த்தவே ஜென்சி அவ்வாறு கூறினாள்.

“பட் ஒவ்வொரு முறையும் அப்படி நீட்டி முழக்கி சொல்ல முடியாதே மிஸ்.ஜென்சி” என்ற பாரி, “வேற எப்படி சொல்லலாம், அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்” என்றான்.

ஒரு கணம் அவன் தன்னை கிண்டல் செய்கிறானோ என்று தான் ஜென்சிக்குத் தோன்றியது.

ஆனால் பாரியின் முகம் சாதரணமாகத்தான் இருந்தது.

“சாரி சார்.”

“நோ நீட்.”

கணபதிக்குத்தான் புரியாத படம் பார்ப்பது போலிருந்தது.

“நான் கேட்டதுக்கு இன்னும் ஆன்சர் வரல?”

“நோ ஐடியா சார்?”

“ஒய்?”

“எங்க ஆரம்பித்து நகர்த்தினாலும் முதல் புள்ளியிலேயே தான் வந்து நிக்குது. தற்கொலை என்பதற்கான ஆதாரங்கள் தான் வலுவா இருக்கு.”

“ம்ம்…”

சில நொடி அமைதி.

கேண்டியை பிரித்து வாயில் போட்டுக்கொண்டான்.

‘இன்னும் இந்த பழக்கத்தை விடல போல.’

ஜென்சி முணுமுணுத்தது அமைதியான அவ்வறையில் அருகிலிருந்த இருவருக்குமே நன்கு கேட்டது.

ஜென்சியை பாரி முறைத்தானோ? அவளுக்கு அப்படித்தான் தெரிந்தது.

இருக்கையில் அமர்ந்தான்.

“கொலைன்னு யார் கம்ப்ளெயின்ட் கொடுத்தது?”

கணபதி மற்றும் ஜென்சி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“அது ஃபைலில் குறிப்பிடல. கம்ப்ளெயின்ட் காப்பி அதிலில்லை சார்.” என்றார் கணபதி.

“வெல்” என்றவன், “முந்தைய விசாரணை எப்படி இருந்திருக்கும் நல்லாவேத் தெரியுது” என்றான்.

“சாரி சார். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட தான் விசாரிக்கணும். கேஸ் டீடெயில்ஸ் எல்லாம் நேற்று தான் என் கைக்கு வந்தது” என்ற ஜென்சியின் காரணம் ஏற்க முடிந்ததாக இருக்க பாரி மேற்கொண்டு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை.

“மினிஸ்டர் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருந்தனே?” கேள்வியாய் இழுத்தான்.

“அவர் ஊரில் இல்லை சார். வர நாலு நாள் ஆகுமாம். பட் ஹோம் மினிஸ்டர் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருக்கேன் சார். அவரே உங்களை மீட் பண்ணனும் கால் செய்திருந்தார்” என்று ஜென்சி பதில் வழங்கிட பாரியின் உடல் இறுக்கம் பெற்றது.

கை விரல்களை மடக்கியவன் தொடையில் தட்டி மேலெழும்பும் தன் கோபத்தை குறைக்க முயன்றான்.

பாரியின் பாவனைகளுக்கான அர்த்தம் விளங்கிய ஜென்சி அவனை வருந்தி ஏறிட்டாள்.

அன்று வேண்டாதவன் இன்று வேண்டுமென்ற நிலையில் அவரின் கண்ணுக்குத் தெரியும் விந்தையை எண்ணி ஜென்சிக்கு சிரிப்புக்கூட வந்தது.

மேசை மீதிருந்த நீரெடுத்து பருகினான்.

‘பாரி கம்மான். வாட் ஹேப்பன்ஸ் டூ யூ? இதையெல்லாம் எதிர்பார்த்துதானே வந்த’ என தனக்குத்தானே தன்னை தேற்றிக்கொண்டவன்,

“டைம்?” என்றான்.

“ஈவ்னிங் ஃபோர் ஓ க்ளாக் சார்.”

“ம்ம்” என்றவன் இருவரையும் அனுப்பி வைத்தான்.

அமைதியாகக் கண்களை மூடியபடி இருக்கையின் பின் சாய்ந்து கொண்டான்.

“இல்லாதவங்களுக்காக உன்கிட்ட தோன்றும் வருத்தம் கூட உனக்காக மட்டுமே வாழும் உயிருக்கு இல்லையில்லையா?”

திடீரென ஒலித்த குரலில் கண் திறந்த பாரி… தன்னெதிரே நின்றிருந்த ஜென்சியிடம் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தான்.

“மௌனமா இருந்துட்டா நீ செய்றதெல்லாம் சரின்னு ஆகிடாது பாரி.”

“என் மௌனம்… புரிய வேண்டியவளுக்கு நல்லாவே புரியும். அவளைத் தவிர யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டாம். அவளுக்கு நான் வாய் வார்த்தையாத்தான் சொல்லணும் கூட அவசியமில்லை” என்றவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

“இதெல்லாம் நல்லா பேசு. அவளோட நினைப்பு இருந்தா சரிதான்” என்ற ஜென்சி அங்கிருந்து நகர்ந்திட… “என் பூவை உங்களால் திருப்பித்தர முடியுமா?” எனக் கண்களை திறவாமலேயே கேட்டிருந்தான்.

“அது உன் கையில் தான் இருக்கு பாரி.” சொல்லியவள் அங்கு நிற்கவில்லை.

அவளை வெறுத்தாலும் அவள் மீதான பாரியின் புரிதல் எப்போதும் போல் இப்போதும் ஜென்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்நொடி பூவின் முகம் இதயத்தின் மேலெழும்பிட அவனுக்கு அவனின் பூவிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்திடத் தோன்றியது.

காதலின் வலி நிச்சயம் அவனுக்கில்லை. அமிர்தா என்ற பெயர் அவனுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுவே உணர்த்தியது அவனுள் காதலின் நினைவு சிறுதுளியும் இல்லையென.

ஆனால் இங்கு வந்தது முதல் ஒவ்வொன்றும் அவனின் நட்பை நினைவு கூறுகிறதே.

“பூ… பேட்லி மிஸ் யூடா.”

அலைபேசி திரை விளக்கி பூவின் முகத்தை பார்த்தவனின் இறுக்கம் சடுதியில் இளகியது. தானாக முகம் மென்மைக்கு மாறியது. இதழ் கூட சன்னமாக விரிந்தது.

பூவின் நினைவுகளை அவனின் மனம் மீட்க நினைத்த வேளை…

வெளியில் கேட்ட கலவர சத்தத்தில் கம்பீரமாய் சடுதியில் தன்னை மாற்றியவன் என்னவென்று பார்க்கச் சென்றான்.

___________________

கவுன்சிலரின் அல்லக்கைகள் கட்டைகள் கற்களுடன் காவல் நிலையத்திற்கு வெளியில் நின்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

வரம்பற்ற வார்த்தைகளை கூச்சலிட்டு கவுன்சிலரை வெளியில் விடுவிக்குமாறு கத்திக் கொண்டிருந்தனர்.

தாங்கள் தடுக்க முயற்சித்தால் இவ்விடத்தையே கலவர பூமியாக மாற்றிவிடுவார்கள் என்று அங்கிருந்த காவலர்கள் அமைதியாக பேச முயன்றனர்.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. இது போலீஸ் ஸ்டேஷன். சந்தை கடை கிடையாது. எதுவா இருந்தாலும், பொறுமையா உட்கார்ந்து பேசுவோம்” என்று ஜென்சி அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் பாரி வெளியில் வந்தான்.

இடுப்பில் கை வைத்து தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து கால் சற்று அகட்டி நின்றவன்… தன் துப்பாக்கியை அதன் உறையிலிருந்து வெளியில் எடுத்து அதன் முனையை உதட்டிற்கு நேராக வைத்து ஊதிட…

“ஹேய் இன்னா லந்தா?”

“சுட்டுடுவியா நீயீ…”

“கை வைச்சு பாரு… பாரு…”

“அவரை முதலில் வெளியில விடு.”

அவர்கள் பாரியின் துப்பாக்கியை கண்டதும் எகிற ஆரம்பித்திருந்தனர்.

“சார் ஆக்ஷன் எதுவும் வேண்டாம். எல்லாம் ரவுடி பசங்க. கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணுங்க” என்று பாரியின் கோபம் அறிந்து அவனிடம் ஜென்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“எங்க அண்ணாத்தக்காக உசுரையே குடுப்போம்” என கூட்டத்தில் ஒருத்தன் சத்தமிட…

“ஆஹான்” என்று ஜென்சியை பார்த்தவாறே அவனை துப்பாக்கியால் சுட… குண்டு அவனது தோள்பட்டையை பதம் பார்த்தது.

அடுத்த நொடி சத்தம் கேட்டால் சிதறும் பறவைகளாய் பலர் தெறித்து ஓடியிருந்தனர்.

எஞ்சியிருந்த ஒரு சிலரை பார்வையால் அலசியவன்,

“அவங்க அண்ணாத்த மேல போட்டிருக்க… ரேப் , கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி கேசிலெல்லாம் இவனுங்களுக்கும் பங்கு இருக்குன்னு FIRல் மாத்தி எழுதிட்டு இவனுங்களையும் பிடிச்சு உள்ள போடுங்க அங்கிள்” என்று கூறிட… எஞ்சியிருந்தவர்களும் ஓடியிருந்தனர்.

அடிபட்டு விழுந்து கிடந்தவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.

உள்ளே வந்த பாரியிடம்… செல்லுக்குள் இருந்த கவுன்சிலர்,

“நீ ரொம்ப ஓவரா போற சாரே. என் தலைவன் ஊரிலிருந்து வந்ததும் உனக்கிருக்கு” என்றவன் மேற்கொண்டு தன்னுடைய வீரதீர செயல்களையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க… அப்போதே அவனை இழுத்து கணபதியிடம் ஒப்படைத்தவன், கைகளில் சில கட்டு கோப்புகளைக் கொடுத்தான்.

“இதில் இவன் செய்த, செய்யும், செய்யப்போற அனைத்துக்குமான ஆதாரங்கள் இருக்கு. இவனுக்கு ஜாமீனே கிடைக்கக் கூடாது” என்றவன் உடன் இரு காவலர்களையும் சேர்த்து கோர்ட்டிற்கு அனுப்பி வைத்தான்.

கவுன்சிலரின் அரசியல் பின்புலம் அறிந்த பாரி ஒரு நாளில் அவனைப்பற்றிய அனைத்தையும் ஆராய்ந்து அரசியல் பலத்தால் அவன் செய்து கொண்டிருந்த அனைத்து குற்றச் செயல்களையும் கண்டுபிடித்ததோடு அதற்கான ஆதாரங்களையும் ஒரு இரவில் சேகரித்திருந்தான்.

ஆசிரியர் மீது கை வைத்ததெல்லாம் கவுன்சிலரை பொறுத்தவரை ஒரு வழக்கேயில்லை. அதில் எப்படியும் அவன் வெளியில் வந்திடுவான் என்று கணித்தே… அத்தோடு அப்பெண் ஆசிரியர் பெயர் வெளியில் வருவதை விரும்பாததால் அவ்வழக்கை விடுத்து மற்ற வழக்குகளில் அவனை சிக்க வைத்தான்.

“அவனுடைய பதவி தான் சின்னது. ஆனால் பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு இவன் தான் ரைட் ஹேண்ட். இவ்வளவு வேகம் வேண்டாம் பா… சார்.” பெயரை சொல்ல வந்தவள் சாரென்று மாற்றிக்கொண்டாள் ஜென்சி.

“அக்கறைக்கு தேன்க்ஸ்.”

சொல்லியவன் விடுவிடுவென வெளியேறி தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து தலைக்கவசம் அணிந்து, உயிர்பித்து சாலையில் சீறினான்.

எதிலும் வேகமென்று இருப்பவனை நினைத்தால் ஜென்சிக்கு கலக்கமாகத்தான் இருந்தது.

ஆனாலும் பாரியின் அதிரடி அட்டகாசமாகவே இருந்து.

******

வீட்டிற்கு வெளியில் இருசக்கர வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்க… சன்னல் வழியே யாரென பார்த்த தமிழ் இமைக்கவும் மறந்து உறைந்து நின்றாள்.

அடிக்கடி தன்னவனை பார்க்க பெங்களூர் சென்று அவனறியாது தூரத்திலிருந்து பார்த்து வந்திருந்தாலும்… மூன்று மாதங்களுக்கு பின்னர் அருகில் பார்ப்பதில் தன்வசம் இழந்திருந்தாள்.

வெகுவாக உள்ளுக்குள் உடைந்தாள்.

‘வெளியில் செல்லலாமா?’ நினைத்தாளே தவிர அவளால் அது முடியவில்லை.

அவளது பாரி. அவனிடமிருந்து வரும் அந்நியபார்வை. அதனை எதிர்கொள்ளும் துணிவு சற்றும் அவளுக்கில்லை.

விழித்திரையை நீர் நிறைத்தது. கலங்கிய பிம்பமாக அவளவன். கன்னம் உருண்ட நீரை துடைக்கவும் மறந்து தன்னவனை வெறித்திருந்தாள்.

வீராப்பாக இனியும் அவனை விடமுடியாதென்று கிளம்பி வந்துவிட்டாள். இப்போது அவனை காணும் போது அந்த திடம் கொஞ்சமும் இல்லை.

‘வேந்தா…’ அவளின் மனம் கூக்குரலிட்ட அதே வேளை,

“என்னை அப்படி கூப்பிடாத. அந்த உரிமை என் பூவுக்கு மட்டும் தான்.” அன்று அவன் கத்தியது இன்றும் அவளது காதுகளில் எதிரொலித்தது.

‘எனக்கு உரிமை இல்லையா?’

மனதோடு போராடிக்கொண்டிருந்தவள் அவன் மீதான தன் பார்வையை மட்டும் அகற்றவில்லை.

வீட்டில் தனித்திருப்பதாலோ என்னவோ காலையிலேயே கிளம்பி அலுவலகம் சென்றிருந்தவன் கொஞ்சம் ஃபிரியாக இருக்கவும் வீட்டில் சமைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

கேட்டிற்கு வெளியே வண்டியை நிறுத்தியவன், கேட்டை திறந்து… வண்டியின் பின்னால் வைத்திருந்த பொருட்களை கொண்டு சென்று வீட்டிற்குள் வைத்துவிட்டு வந்தான்.

அவனுக்கு பின்னாலேயே டெம்போ ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பெரிய சைஸ் மர கட்டிலும், நீள் இருக்கை ஒன்றும், ஒற்றை இருக்கை இரண்டு, சிறு டீபாய், தொலைக்காட்சி என இருவர் இறக்கி வைத்திட.

உள் சென்று வைக்குமாறு கூறியவன், டெம்போவிற்கான பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்க… யாரோ தன்னை உற்று நோக்கும் உள்ளுணர்வை உணர்ந்தான்.

சுற்றி பார்க்க யாருமில்லை என்றதும் அவனது போலீஸ் மூளை விழித்துக் கொண்டது.

‘யாரோ பார்க்குறாங்க!’ சொல்லிக்கொண்டான்.

ஆனால் அப்பார்வையின் ஏக்கம் அவனால் உணர முடிந்தது.

‘யாரா இருக்கும்?’

டெம்போ சென்ற பிறகும் வெளியவே நின்றவனின் பார்வை அதீத கூர்மை பெற்றது.

இப்போது பார்வை அவனின் முதுகைத் துளைத்திட மெல்ல திரும்பியவன்,

‘இது ஜென்சி குவார்ட்டர்ஸ். அவளுக்கு அப்பா மட்டும் தான். அவரும் இப்போ உயிரோடில்லை. அப்போ வீட்டுக்குள் யாரா இருக்கும்.’ யோசித்தவனுக்கு பார்வை உணர்வு பரிட்சியமானதாகவேத் தோன்றியது.

‘ஒருவேளை அவளா இருக்குமோ?’

நினைத்த நொடி அவ்வீட்டின் நான்கடி சுற்று சுவரை கடந்து அவனின் பார்வை உள்ளுக்குள் பயணித்தது.

அடர்ந்த செடிகளுக்கு நடுவில் சன்னல் கம்பிகளும், அதனை பிடித்திருந்த இரு கைகளும் மட்டுமே சரியாகத் தெரிந்தன.

‘நிச்சயம் இது அவளே தான்.’

இதயம் அடித்துக் கூறியது.

ஒரு மனம் அவளை கண்டுவிட பரபரத்தது. அதேவேளை மற்றொரு மனம் அவளை கண்டுவிடாதே என தடை விதித்தது.

இரண்டுக்கும் நடுவில் சிக்கி உழன்றவன் தன்னிலையில் மாற்றமில்லாது சன்னலிலேயே விழி பதித்து நிற்க… சன்னலை மறைத்திருந்த செடிகள் காற்றில் அசைந்து விலகியது.

சன்னல் கம்பிகளைத் தாண்டி தெரிந்த உருவம் அவனை நிலை குலைத்தது.

மூச்சு முட்டும் உணர்வு. கண்களின் பார்வை ஒளி பெற்றது. இதயம் தாறுமாறாகத் துடித்தது. ரத்த ஓட்டம் வேகமெடுத்தது. அவளை அணைத்திட கைகள் பரபரத்தன. கால்கள் அவளிடம் ஓடச்சொல்லி உந்தித் தள்ளியது.

பெரும் பிரயத்தனம் கொண்டு அசையாது விறைத்து நின்றான்.

அவன் தன்னை பார்த்துவிட்டான் என்றதுமே தமிழின் மனம் லேசானது. தவிப்பு அடங்கியது. இயக்கம் சாதாரணமாகியது.

பாரியால் கண் முன் நிற்பவளை ஏற்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் இயலவில்லை.

தமிழை ஏற்றால் அவனின் பூ காணாமல் போய்விடுவாளே! பூவுடனான நட்பு அவனின் சுவசமாயிற்றே! அதனை அவனால் இழக்க முடியாதே! இழந்தால் அவன் ஜீவனற்றவனாகிப் போவானே!

இந்நிலைக்குத்தானே… இதற்கு அஞ்சித்தானே நான்கு வருடங்கள் பார்க்கத் தவித்த போதும் தேடி வராது தூரமிருந்தான். விலகி நின்றான். விலக்கி வைத்தான்.

ஒரு புறம் கனிய… மறுபுறம் கொந்தளித்தான்.

நட்பின் நினைவுகளுடனாவது மகிழ்ந்திருக்கலாம் என்றல்லவா… இனி அம்முகத்தை காணவே கூடாதென்று இருந்தான்.

ஆனால் இன்று கண்முன் நிற்பவளை வெறுக்க முடியவில்லையே. ஏன் அவளிலிருந்து பார்வையை அகற்ற கூட இயலவில்லையே.

‘வேண்டாம் வேண்டாமென்று வெறுத்துக்கொண்டே நினைத்த நினைப்பெல்லாம் நேசமாகிப்போனதோ.’ மனம் இடித்துரைத்தது.

தன்னை கண்டதும் யாரெனக் கேட்பானோ அல்லது மூன்றாம் மனித பார்வை பார்த்து வைப்பானோ என்ற அவளின் அச்சமெல்லாம் அவனின் அசையாத கருவிழி கண்டு எங்கோ போனது.

ஓடிச்சென்று ஆரதழுவ மனதால் துடித்தாள்.

“வேந்தா…” காற்றாகிப்போனத் தமிழின் குரல் அவளுக்கே கேட்காதபோது, அவனது செவி தீண்டியது.

அடுத்த கணம்… கண்களில் செம்மை படர, ருத்ர மூர்த்தியாக அவளை முறைத்தவன் விடுவிடுவென வீட்டிற்குள் புகுந்து கொண்டான்.

பாரி சென்றதும்…

அப்படியே திரும்பி சுவற்றில் சாய்ந்து கீழே சரிந்தவள், இரு காலையும் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். பார்வை விட்டத்தை வெறித்தது.

“என்னை மன்னிக்க மாட்டியா… உன் கோபம் குறையாதா?” என்று கேட்டவள் வழக்கம்போல்,

“ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா” என்று இல்லாதவனிடம் இரைஞ்சினாள்.

‘அவனை பார்த்ததும் இப்படி அழுது அரற்றுவதற்கா அங்கிருந்து கிளம்பி வந்த… எதுவா இருந்தாலும் ஒரு கை பார்க்க வேண்டாமா… அவன் உன் ஹஸ்பன்ட்.’ அவளின் மனம் இடித்துரைக்க… கன்னம் நனைத்த கண்ணீரை அழுந்த துடைத்தாள்.

அவளுள் ஒரு வேகம் முளைத்தது.

“பார்த்திடலாம்… தமிழா? பூவா? நட்பா? மனைவியா?”

தெளிவாக ஒரு முடிவெடுத்த பின்னரே அவளால் திடமாக நிற்க முடிந்தது.

வீட்டிற்குள் நுழைந்த பாரி கூண்டு புலிபோல் நடை போட்டான். அறையின் நீள, அகலங்களை காலால் அளந்தான்.

“எதுக்கு வந்திருப்பா(ள்)?”

“என்னை பார்க்கவா?” நன்றாகத் தெரிந்தும் கேட்டுக்கொண்டான்.

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின்னர் அவளை காண்கிறான். மணம் முடித்த மணியில் அவளை விட்டுச் சென்றவன், இன்று தான் மனைவியை பார்க்கிறான். இதுநாள் வரை மனைவி என்று நினைத்திடாதவனின் மனம் அவளை பார்த்த நொடி முதல் மனைவியென்ற எண்ணம் மேலுழும்ப அதனை அவனுக்கு வலியுறுத்தியது.

அன்று மணம் என்று சொன்னதற்கே அந்த குதி குதித்தவன், இன்று மனைவி என்ற எண்ணத்திற்கு அமைதியாக இருப்பதை குறித்துக்கொண்டான்.

‘அப்போ, அவளை என் மனம் மனைவியா ஏத்துக்குதா?’ விடையறிய அவளுடன் வாழ்ந்திட வேண்டுமே. அது அவனால் முடியுமா? அவனின் பூவின் நினைவின்றி அவனது தமிழோடு அவனால் ஒன்றிட முடியுமா?

எதற்காக ஓடி ஒளிந்திருந்தானோ அவையெல்லாம் இந்நொடி அவசியமற்றதாகிப்போக இருதலைக்கொள்ளியாய் தவித்தான்.

உடனே அலைபேசியை எடுத்து அவினாஷிற்கு அழைத்தவன், அவன் ஏற்று ஹலோ சொல்வதற்கு முன் அவனது காதை தீட்டிவிட்டான்.

“எதுக்குடா அவள் வந்திருக்கா(ள்). அவளை இங்கிருந்து போகச்சொல்லு. பார்த்தாலே ரத்தம் ஜிவ்வுன்னு ஏறுது. என் முன்னாடி வந்து நின்னு கண்ணீர் வடிச்சா, எல்லாம் மறந்திடுவேன்னு கற்பனை பண்ண வேண்டாம் சொல்லு. என் முன்னாடி வந்து நின்னா நடக்குறதே வேற. சொல்லி வை” என்று தமிழை பார்த்ததும் வெட்கமே இல்லாது இளகிய தன்மீதான கோபத்தை அவியிடம் கொட்டிய பின்னரே சற்று நிதானம் பெற்றான்.

“நார்மலாகிட்டியா? அவள் ஏன் வந்திருக்கான்னு உனக்குத் தெரியும்னாலும் நான் சொல்றேன்” என்ற அவி, “அவளோட புருஷனுக்காக” எனக் கூறியதோடு…

“யாருன்னு தெரியலன்னா கண்ணாடியில் போய் பாரு” என்றான்.

“தமிழுடைய கணவன் பாரி தான். அதை யாராலும் மாத்த முடியாது. புரிஞ்சிக்கோடா. உனக்கு மட்டும் தான் வலியா? அவளோட இடத்திலிருந்து இனியாவது யோசி பாரி” என்ற அவி அலைபேசியை வைத்துவிட்டான்.

அவி பேசியதில் பாரிக்கு என்ன கேட்டதோ புரிந்ததோ… ஆனால் அவன் சொல்லிய தமிழின் கணவன் பாரி என்பது பாரியின் உள்ளே இதயத்தில் என்னவோ செய்தது.

இதுநாள் வரை இப்படி அவன் சிந்தித்ததே கிடையாது.

கதவை மூடிய பின்னரும்… அவளின் சோகம் நிறைந்த முகம் கண்களை நிறைக்க… ஒருமுறை அவளின் புன்னகை தவழும் முகம் கண்டிட ஏக்கம் கொண்டான்.

“வேணாம் வேந்தா அவளை பார்த்தா உன் கோபமெல்லாம் காணாமப் போய்டும். உன் திடம் குலைந்திடும்.” தனக்குத்தானே கூறி தமிழ் மீதான கோபத்தை குறையாது இழுத்து பிடித்து வைத்தான்.

‘இனி அவள் நேருக்கு நேர் வந்து நின்றாலும், திடமா இருந்திடணும்’ என மனதில் ஆயிரம் முறை உருபோட்டு பதிய வைத்த பின்னரே கிளம்பி வெளியில் வந்தான்.

பாரியின் வண்டி சத்தம் கேட்டதும் வெளியில் ஓடிவந்து கேட்டிற்கு அருகில் நின்றவளை நோக்கித் திரும்பிய கண்களை அடக்கி நேராக சாலையில் பதித்து விருட்டென்று பறந்திருந்தான்.

“மக்கும்… எம்புட்டு நாளைக்குன்னு பா(ர்)க்குதேன்.” தாடையை தோளில் இடித்து முகத்தை வெட்டினாள்.

*****

“நான் போகத்தான் போறேன்.”

“அம்மா… ப்ளீஸ் சொல்லுறதை கேளுங்க.” பரிதி அவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

தமிழ் வந்திருக்கிறாள் எனத் தெரிந்தது முதல் அவளை பார்க்க வேண்டுமென பிடிவாதம் பிடிப்பவர், அவளை ஏன் வீட்டிற்கு அழைத்து வரவில்லையென தன்னுடைய மகனிடம் சண்டையும் பிடித்தார்.

“ஹேய் இளா என்னடி பார்த்திட்டு இருக்க. கொஞ்சம் சொல்லேன்.” மனைவியை துணைக்கு அழைத்தான்.

“என்கிட்ட கூட சொல்லல தானே” என்றவள் “அனுபவிங்க” என்று தன் அத்தை பக்கம் நின்று கணவன் முழிப்பதை சுவாரஸ்யமாக பார்த்திருந்தாள்.

“அப்பா நீங்களாவது” என்று பரிதி முடிக்கும் முன்னர்…

மனைவியின் அருகில் சென்ற வைத்தி…

“உனக்கு இன்னொன்னும் சொல்றேன் பாரு” என்றவர், “பாரி வந்துட்டான். சிட்டி புது டிசி அவன் தான். இது தெரிஞ்சு தான் உன் மருமகள் இங்கு வந்திருக்காள். இது பரிதிக்கும் தெரியும்” என்று மகனை மேலும் மாட்டிவிட்டார். அத்தோடு கையிலிருந்த செய்தித்தாளையும் மனைவியிடம் காண்பித்தார்.

“நீங்கல்லாம் ஒரு அப்பாவா?” பரிதி பற்களை நரநரத்தான்.

பாரி புதிய துணை ஆணையராக பதவி ஏற்றதோடு, முதல் நாளே அந்த ஏரியா கவுன்சிலரை அரெஸ்ட செய்து அவர் செய்த அரசுக்கு புறம்பான குற்றங்களை கண்டறிந்து சிறைதண்டனை பெற்று தந்ததை பற்றி மாலை நேர செய்தித்தாளில் விரிவாக வந்திருந்தது.

அதனை படித்துவிட்டு… பரிதியிடம் “அப்படியா” என பார்வதி கேட்க ஆமென்று தலையசைத்தான்.

“அவன் இங்க மாற்றலானதே இன்னைக்குத்தான் பேப்பரில் வருது. ஆனால் உனக்கும் உன் செல்ல மச்சினிச்சிக்கும் முன்னமே தெரிஞ்சிருக்கு. அப்போ இதுக்கு முன்ன அவன் எங்கிருந்தான்னும் உங்களுக்குத் தெரியும் அப்படித்தானே?” பார்வதி குரலை உயர்த்தாது அழுத்தமாக வினவினார்.

“தமிழுக்குத் தெரியும். நான் ஆரம்பத்தில் பாரியை தேடிய அப்போ… அவன் இருக்குமிடம் எனக்குத் தெரியும். அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும். தேடிப்போய் தொல்லை தர வேண்டாம். எனக்காகன்னு கூட அவனைத்தேட வேண்டாம். எனக்கு அவனோட இருக்கணும் தோணுச்சுன்னா, நானே அவன்கிட்ட போயிடுவேன்னு தமிழ் சொன்ன அப்புறம் பின்னர் நான் பாரியைப்பற்றி விசாரிக்கல” என்று விளக்கமளித்தான்.

“அவன் இருக்குற இடம் தெரிந்தே வாழ்க்கையை வீணடிச்சிட்டு இருந்திருக்கா” என்ற பார்வதிக்கு மகனும் மருமகளும் திருமணம் ஆன பின்னரும் சேர்ந்து வாழாது பிரிந்திருக்கின்றனரே என்ற வருத்தம் அந்நொடி அதிகமாகியது.

நிற்க முடியாது தள்ளாடியவரை இளா தாங்கிக்கொண்டாள்.

இருக்கையில் அமர வைத்தவள், பருக நீர் கொடுத்து அவரை ஆசுவாசம் செய்தாள்.

“ம்மா டென்சன் ஆகாதீங்க. தமிழுக்கு அவளோட வாழ்க்கையை எப்படி காப்பாத்திக்கணும் தெரியும். அவங்களுக்கு நடுவில் நாம தலையிட வேண்டாம்” என்று பரிதி சொல்ல…

“ஒருமுறை தலையிட்டு அவர்கள் பிரிவுக்கு காரணமாக இருந்தது போதும்” என வாக்கியத்தை வைத்தி முடித்தார்.

“தமிழ் பாரியை விட்டுட மாட்டாள் அத்தை. நீங்க சொன்னதுக்காக தமிழ் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருந்தாலும், பாரி மீது விருப்பம் இல்லாம உங்க பேச்சுக்கு சம்மதம் சொல்லியிருக்கமாட்டாள். அவளுடைய விருப்பமின்றி அவள் எதுவும் செய்யமாட்டாள். நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா ஒன்னா இருப்பாங்க” என்ற இளாவின் பேச்சு மனதிற்கு இதமாக இருக்க பார்வதி சேலை தலைப்பால் தன் கண்ணை துடைத்துக்கொண்டார்.

“பாரிக்காக மட்டும் தா(ன்)ம்மா தமிழ் விலகியிருக்காள். அவனுக்காக அவள் கொடுத்த நேரம் முடிஞ்சிருச்சு. அதான் அவளே அவனைத்தேடி போயிட்டாள். இனி அவன் தான் இறங்கி வரணும். இல்லை தமிழ் பாரியை இறங்க வச்சிடுவாள்” என்ற பரிதிக்குமே தன் தம்பியின் மீது கோபம் எழத்தான் செய்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
36
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. So poo and tamil same character.may be odi pona ponnu paari oda ammava kooda irukalam..paari amirthava love panirkalam…poo frnd irnthutu mrg panavum frnd ah miss panirupan pola paari

      1. Author

        Oh… ஓடிப்போன பொண்ணு சில வரிகளில் சொன்னதே, பொன்னு ஆண்கள் கூட பழகக் கூடாதுன்னு ஏன் சொல்றாருங்கிறதுக்கான காரணம் மட்டும் தான் சிஸ்… ஓடிப்போன பொண்ணு பாரிக்கு யாருமில்லை… நன்றி.