
தூவானம் 49 :
மருத்துவமனை நோக்கி அதிவேகத்தில் காரினை செலுத்திக் கொண்டிருந்தான் பாரி.
வேகமென்றால் அப்படியொரு வேகம்.
காற்றை கிழித்து சீறிப் பறந்தான் என்றே சொல்ல வேண்டும்.
அத்தனை வேகத்திலும் ஜென்னிற்கு விடாது அழைத்துக் கொண்டிருந்தான்.
இரவு பார்ட்டி முடித்து வீட்டிற்கு வந்து உறங்கிட மிகவும் தாமதமாகியதால், அலைபேசியின் ஒலியை மீறியும் ஜென் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவிதான் மூன்றாம் முறை ஒலிக்கும் போது எடுத்து செவிமடுத்தான்.
“என்ன பா…”
அவியை கேட்கவே பாரி விடாது, குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைச்சொல்லி ஜென்னை அங்கு விரைந்துவருமாறு கூறி வைத்திட்டான்.
மருத்துவமனை என்றதும், அதுவும் பாரியின் குரலிலிருந்த வேகமும் பதற்றமும் அவிக்கு பயத்தை உண்டாக்கியது. யாருக்கு என்னவானதென்று.
ஜென்னை எழுப்பி ஆடைமாற்ற கூறியவன், அவளை இழுத்துக்கொண்டு பாரி சொல்லிய மருத்துவமனைக்கு கிளம்பியிருந்தான்.
பூவைத்தேடி பாரி சென்றாலும், வழக்கோடு தொடர்புடையதாக இருக்கும் என்பதாலேயே ஜென்னை வரக்கூறினான்.
பாரியிடம் சொல்லிவிட்டு பூ கிளம்பி வந்த இடம் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
தவறிய மாதாந்திர வருகையும், அதீத உடல் சோர்வும், அப்பப்போ எட்டிபார்த்திட்ட மயக்கமுமென அனைத்து அறிகுறிகளும் அவள் தாய்மை அடைந்திருப்பதாக எடுத்துக்காட்ட, அதனை உறுதி செய்து கொள்வதற்காகவே மகப்பேறு மருத்துவரை பார்க்க மருத்துவமனைக்கு அத்தனை சீக்கிரம் கிளம்பி வந்திருந்தாள்.
காலை ஒன்பது மணியளவிலும் மருத்துவமனை மிகுந்த பரபரப்புடனே இயங்கிக் கொண்டிருந்தது.
வரவேற்பில் மகப்பேறு மருத்துவரை பார்க்க வேண்டுமென்று, அனுமதி வாங்கியவள், மருத்துவரின் அறைக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
சிறிது நேர காத்திருப்பிற்கு பின் மருத்துவர் அழைப்பதாக தாதிப்பெண் சொல்லிட உள்ளே சென்றாள்.
நடுத்தர வயதில் சாந்தமான முகத்துடன் காணப்பட்டார் மருத்துவர் கிரிஜா.
பூவை பார்த்ததும் அவர் அடையாளம் கண்டு கொண்டார்.
“நீங்க பார்வதி மருமகள் தானே?”
“எஸ் டாக்டர்” என்ற பூ, “உங்களுக்கு அத்தையை தெரியுமா?” என்று வினவினாள்.
“எனக்கிருக்கும் ஒரே பிரண்ட் அவள் தான். உங்க கல்யாணத்திற்கு கூட நான் வந்திருந்தனே” என்றவர் மறந்தும் அவளின் திருமணம் திடீரென நடந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.
“எப்படியிருக்கான் உன் வீட்டுக்காரன். போலீஸ் ஆனதும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாகிட்டான் போல… லாஸ்ட் வீக், ஒரு கேஸ் விஷயமா இங்கு வந்தான். அப்போ பார்த்தேன்” என கூடுதலாக பேசியவர், அவள் நின்றுகொண்டே இருப்பதை கவனித்து,
“உட்காரும்மா” என்றார் சிறு மன்னிப்போடு.
அடுத்து அவள் வந்ததற்கான காரணத்தை வினவினார்.
பூ தனக்குரிய அறிகுறிகளை சொல்லிட… அனுபவசாலியான அவருக்கு காரணம் உறுதியாக அதுவாகத்தான் இருக்குமென்று தெரிந்தும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பூவை அழைத்துச்சென்ற தாதிப்பெண் சிறிய கிட் ஒன்றை கையில் கொடுத்து அதனை எப்படி பரிசோதிக்க வேண்டுமென விளக்கம் கொடுத்து ஓய்வறைக்கு அனுப்பி வைத்தாள்.
அதில் இரண்டு சிவப்பு நிற கோடுகளை கண்டதும் பூவிடம் தோன்றிய மகிழ்ச்சியினை வார்த்தையால் வரையறுக்க முடியாது.
தன்னுடைய வயிற்றில் கை வைத்து கண்களை மூடிக்கொண்டவளுக்கு, அவளது உயிரான அவளின் வேந்தனே அவளுள் உருவான சிலிர்ப்பு.
ஆனந்தத்தில் நெஞ்சம் விம்மிட, கண்களில் நீர் கோர்த்தன. உடனே பாரியின் அணைப்பில் நின்றபடி இதனை சொல்ல வேண்டுமென தவித்தவள் வேகமாக ஓய்வறையிலிருந்து வெளியில்வர, அவளுக்காகக் காத்திருந்த செவிலி அவளின் கையிலிருந்த கிட்டை வாங்கி பார்த்துவிட்டு…
“பிளட் டெஸ்டும் முடிச்சிட்டு டாக்டர் பார்க்கலாம்” என ரத்த பரிசோதனைக்கு அழைத்துச் சென்றாள்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் கொடுப்பாங்க” என்ற செவிலி, ரத்தம் கொடுத்த பின்னர் பூவை அங்கிருக்கும் இருக்கையில் அமர வைத்தாள்.
ரத்த பரிசோதனை முடிவு வருவதற்குள், பாரியிடம் சொல்லலாமா வேண்டாமா, வீட்டிற்கு போய் நேராக சொல்லலாமா என தனக்குள்ளே சிந்தித்தபடி அலைபேசியை கையில் எடுப்பதும், பாரியின் எண்ணை திறப்பதாகவும் மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தாள்.
முடிவு வந்ததும் செவிலியே வந்து பூவை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார்.
இரண்டு சோதனை முடிவுகளையும் ஆராய்ந்த மருத்துவர்,
“உனக்கே இந்நேரம் தெரிந்திருக்குமே பூந்தமிழ்” என்றதோடு, “யூ ஆர் பிரக்னென்ட். பிக்கம் அ மதர்” என்று சொல்லி தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தார்.
பூவிற்கு அந்த தருணம் எப்படியிருக்கிறாதாம்? உடனடியாக அவளது வேந்தனிற்குள் சிறைபட துடித்தாள்.
“உன் புருஷன் வரலையா உன்னோட?, பார்வதி எப்படி உன்னை தனியா விட்டாள்?” எனக் கேட்டவர், “இளமதிக்கு நான்தான் பிரசவம் பார்த்தேன்” என்றார்.
“யார்கிட்டவும் நான் சொல்லல டாக்டர். கான்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லலாம் நினைச்சேன்” என்ற பூ, “நீங்க அத்தைகிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ்” என்று கண்களை சுருக்கி கேட்டிட…
“இட்ஸ் யுவர் ஸ்பெஷல் மொமெண்ட். நீயே சொல்லிக்கோம்மா. நான் என் ஃபிரண்ட்டிடம் சொல்லமாட்டேன்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, பூ நன்றி கூறினாள்.
அதன் பின்னர் அவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டினை பெற்றுக்கொண்டு மருத்துவமனையின் உள்ளே இருக்கும் மருந்தகம் சென்றாள்.
மருந்தகத்தில் பெரிய வரிசை நிற்க, மருந்து சீட்டினை கொடுத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தவள் பாரிக்கு அழைத்திட வேறொரு தொடர்பில் இருப்பதாக வந்தது.
அப்போதுதான் பாரி பரிதியிடம் பேசிவிட்டு, இரண்டாவதாக வந்த அழைப்பினை ஏற்றிருந்தான்.
“ஹாய் மிஸ்டர்.பாரிவேந்தன்.”
உடைந்த தமிழில் அட்டகாசமாய் அவனின் பெயரை உச்சரித்த நபர் யாரென்று நொடியில் கண்டுகொண்டான் பாரி.
“ஹெலோ மிஸ்டர்.அமோஸ். வெல்கம் டூ சிங்காரச் சென்னை” என்று ஆர்ப்பாட்டமாக பேச்சைத் துவங்கிய பாரி, “அப்புறம் எப்படியிருக்கு எங்க ஊரு, எல்லாம் சுத்தி பார்த்துட்டிங்களா?” என்று எள்ளல் தொனியில் வினவினான்.
“வாவ்.. சூப்பர் மிஸ்டர். பாரி சூப்பர். யூ ஆர் வாட்சிங் மீ” என்ற அமோஸ் “அம் ஆல்சோ வாட்சிங் யூ… யூ அண்ட் யுவர் வைஃப்” என்றிட நொடியில் பாரியின் காதுகள் கூர்மை பெற்றன.
“உனக்கு உன் வைஃப் ரொம்ப பிடிக்குமோ? உன்னை பார்த்தா எனக்கே இந்த வயசில் லவ் பண்ணனும் தோணுது மேன்” என்றான்.
அவனது பேச்சிலிருந்தே அவன் எந்தளவிற்கு தன்னை கண்காணித்திருக்கிறான் என்பதை பாரி அறிந்துகொண்டான்.
“உன் வைஃப் விட்டு உன்னால இருக்க முடியாதுல? அப்புறம் ஏன் மேன் அவளை தனியா ஹாஸ்பிட்டல் அனுப்பின?”
“வாட்?”
அமோஸ் சொல்லிய பின்னர் தான் பாரிக்கு பூ அத்தனை அவசரமாக மருத்துவமனை சென்றிருக்கிறாள் என்பதே தெரிந்தது. தெரிந்ததும் அவளின் நலன் குறித்து என்னவோ என்று அதிர்ந்தான்.
“இப்போ உன் வைஃப் **** அங்க தான் இருக்காள்” என்று மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்ட அமோஸ், “உன் பார்வையில் தான் இருப்பாள், முடிஞ்சா காப்பாத்திக்கோ” என்று கூறிய கணம் இணைப்பைத் துண்டித்திருந்தான்.
சடுதியில் தன்னுடைய மொபைலில் இணைத்திருக்கும் பூவின் ஜிபிஎஸ் வைத்து அவளிருக்கும் இடத்தினை உறுதி செய்தவன், அவளுக்கு அழைத்திருந்தான்.
அழைத்தது பாரி தான். ஆனால் பேசியது பூ மட்டுமே!
அவளுக்கு என்னவோ? என்னிடம் சொல்லாது செல்லுமளவிற்கு ஏதேனும் ஆபத்தான நோய் இருக்குமோ என்று பயந்தவனுக்கு பூ அழைப்பை ஏற்றதும் எப்படி கேட்க வேண்டுமென தெரியாது பேச்சே வரவில்லை.
ஆனால் அவனது பதற்றத்திற்கும் பயத்திற்கும் மாறாக அவளின் குரல் அத்தனை மகிழ்வாய் ஒலித்தது.
“வேந்தா…” என்றவள், “உன்னை இப்போவே இந்த செகண்டே பார்க்கணும். ஸ்டேஷன் போகலையே?” எனக் கேட்டாள்.
பூவிடம் தன்னுடைய படபடப்பை மறைத்தவன், முயன்று வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில்,
“எங்க வரணும் சொல்லுடா வரேன்?” எனக் கேட்டவன் ஏற்கனவே அவளிருக்கும் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“சீக்கிரம் வா வேந்தா. உனக்கு ஒரு கிஃப்ட் இருக்கு” என்றவள் வைத்துவிட சில நிமிடங்களில் மருத்துவமனைக்குள் புயல் போல் நுழைந்திருந்தான் பாரி.
அவ்விடத்தையே நொடியில் பார்வையால் அலசியவன், வரவேற்பில் சென்று “பூந்தமிழ் பாரிவேந்தன்?” என்று பெயர் மட்டும் சொல்லி வினவினான்.
“அவங்க டாக்டர் கிரிஜாவை பார்க்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருந்தாங்க சார். கன்சல்டிங் முடிச்சிட்டாங்களா தெரியல.” பாரியின் காக்கி உடை அவனுக்கு வேண்டிய பதிலை பெற்றுத் தந்திருந்தது.
கிரிஜாவின் அறையை நோக்கி பாரி செல்ல, மருத்துவமனைக்குள் நுழைந்த அவியும், ஜென்னும் அவனை பின் தொடர்ந்து சென்றனர்.
“பூந்தமிழ் அவங்க ரிப்போர்ட் விட்டுட்டு போயிட்டாங்க, வெளியில் இருக்காங்களா பாருங்க.” சில நிமிடங்களுக்கு முன் பூ விட்டுச்சென்ற மருத்துவ கோப்பினை மேசையில் கண்டு செவிலியை அழைத்து கிரிஜா கொடுத்திட, கோப்பினை வாங்கிக்கொண்டு செவிலி வெளியில்வர, அவரை எதிர்கொண்டான் பாரி.
“டாக்டர்.கிரிஜா?”
போன வாரம் பாரி இங்கு வந்திருந்த போது, கிரிஜா அவனுடன் உரிமையாக பேசி சிரித்த ஞாபகம் பாரியை கண்டதும் செவிலிக்கு நினைவில் வந்தது.
“இருக்காங்க சார்” என்ற அப்பெண் உடனிருந்த ஜென்னை கவனித்து “நீங்க பார்க்கணுமா மேம்?” என்று வினவினார்.
“இல்லை” என ஜென் சொல்லும்போதே,
“பூந்தமிழுன்னு யாராவது டாக்டர் பார்க்க வந்திருந்தங்களா?” என்று வேகமாகக் கேட்டிருந்தான் பாரி.
“ஆமாம் சார். இப்போ தான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க” என்று அவனுக்கு வேண்டிய தகவலை சொல்லியவர் “நீங்க அவங்களுக்கு?” என்று இழுக்க… “ஹஸ்பெண்ட்” என்றான் நொடியில்.
“ஹோ… அப்போ இந்தாங்க சார்” என்று அவரின் கையிலிருந்த கோப்பினை பாரியிடம் நீட்டி, “விட்டுட்டு போயிட்டாங்க” என்றபடி நகர்ந்தார்.
“என்னடா… தமிழுக்கு என்னாச்சு?” அவியும் ஜென்னும் ஒன்றாகக் கேட்டனர்.
“அதான் எனக்கும் தெரியல” என்ற பாரி கோப்பினை திறக்க, அதிலிருந்து பிரெக்னென்சி கிட் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்தவனுக்கு முன்பு, அதென்ன என்று ஜென்னிற்கு புரிந்தது.
“இது என்ன ஜென்?” என்றவனுக்கு உண்மையிலேயே அது என்னவென்று தெரிந்திருக்கவில்லை.
ஜென் அதனை பார்த்தபடியே பாரியின் கையிலிருந்து வாங்கியவளுக்கு பேச்சே வரவில்லை.
ஜென் அப்படியே சிலையென நின்றிருக்க…
பாரி கோப்பிலிருந்த காகிதங்களை பார்வையிட்டான்.
பூவின் கர்பத்தை உறுதி செய்த சோதனைகளின் முடிவுகள் அக்காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
படித்து அதிலிருந்த தகவலை தெரிந்து கொண்டவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. அதீத சந்தோஷம் அவனை திக்குமுக்காட வைத்தது.
இருவரின் அசையாத நிலையையும் பார்த்த அவி,
“என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்” என்று காய்ந்தான்.
“அவி… பாரி…” என்று உவகையில் சொல்ல முடியாது ஜென் திணற,
“நான், நான் அப்பா ஆகப்போறேன் அவி” என்ற பாரியின் கண்ணிலிருந்து நீர் திரண்டு உருண்டது. அவனின் கன்னம் வழி.
“மச்சான்” என்ற கூவலோடு அவி பாரியை தூக்கி சுற்றிட, அவனின் ஆர்ப்பரிப்பின் சத்தம் கேட்டு தன்னுடைய அறையிலிருந்து மருத்துவர் கிரிஜா வெளியில் வந்தார்.
“இங்கெல்லாம் இப்படி சத்தம் போடக்கூடாது” என்றவர் பாரியை பார்த்து, “வாடா பாரி. என்ன உன் பொண்டாட்டி குட் நியூஸ் சொல்லிட்டாளா?” எனக் கேட்டார்.
“ஆண்ட்டி இது… இது நிஜமா?” என கோப்பினை காண்பித்து உறுதிபடுத்திக்கொள்ள அவன் வினவ,
“என்னடா நம்ப முடியலையா? நீ அப்பா ஆகிட்ட பாரி” என்றார் சிரிப்பினூடே.
“ஆமா எங்க அவளை காணோம். இப்போதானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன மருந்து எழுதி கொடுத்தேன்” என்றவர் “டேக் கேர் ஹெர்” என்று சொல்லிவிட்டு அடுத்த நோயாளிகளை பார்வையிட சென்றிட, அதுவரை இருந்த மொத்த சந்தோஷமும் பாரிக்கு வடிந்தது.
“ஜென் பூ இங்கிருக்காளா தேடு” என்றவன் தன்னுடைய அலைபேசியில் பூவின் ஜிபிஎஸ் ஐ கவனிக்க, அது வேறெங்கோ அவளிருப்பதாகக் காண்பித்தது.
“அவி… அவி, பூவை காப்பத்தனும் டா” என்ற பாரி மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தான்.
பூ அங்கிருக்கின்றாளா என தேடிச்சென்ற ஜென், மருந்தகத்தில் ஒலித்த பூந்தமிழ் என்ற பெயரில் அவர்களிடம் சென்று விவரம் கேட்டாள்.
டோக்கன் எண்ணை அழைத்தும் மருந்து வாங்க வராததால், மருந்துச் சீட்டிலிருந்த பெயரை அழைத்தாகக்கூறி பூவுக்கு உண்டான மருந்துகளை ஜென்னிடம் கொடுத்தனர்.
மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த பாரி, சாலையின் இருமங்கிலும் தன் கண்களை சுழல விட்டான்.
“பாரி யாரைத் தேடுற, தமிழ் எங்க?”
பாரியின் தேடுதல் மட்டும் நிற்கவில்லை.
பூவின் ஜிபிஎஸ் நொடிக்கு ஒரு இடம் காண்பிக்க எங்குசென்று எப்படி அவளை மீட்பதென்று தெரியாது, தன்னிரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து எல்லாம் தொலைத்தவனாக சாலையில் நின்றிருந்தான்.
பாரியின் தோற்றமே அவிக்கு பயத்தை ஏற்படுத்தியது.
“பாரி என்னடா… ஏன் இப்படியிருக்க? சந்தோஷமான நேரமிது. தமிழ் வீட்டிற்குத்தான் போயிருப்பாள்” என்று பாரியை தேற்ற அவி கூறிய வார்த்தைகள் யாவும் வீணென அடுத்த நொடி ஜென் வந்து சொல்லியதில் அவனுக்கு தெரிந்தது.
“பாரி தமிழோட மெடிசன். பார்மசியில் பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்திருக்கா(ள்) ஆனால், மெடிசன்ஸ் வாங்கல.”
ஜென் கொடுத்த மருந்துகள் அடங்கிய கவரை கையில் வாங்கிய பாரி,
“இந்த சந்தோஷத்தை அனுபவிக்க கூட முடியாத நிலையில் நானிருக்கேன் ஜென்” என்று ஒற்றை கையால் முகத்தை மூடினான்.
“என்னாச்சு பாரி. தமிழ் எங்கதான் போயிருப்பாள்?”
“தெரியல ஜென்” என்ற பாரி அடுத்து என்ன என்று தெரியாது ஸ்தம்பித்து உறைந்து நின்றதெல்லாம் அந்த நேரம் மட்டுமே!
“அமோஸ் பூவை கடத்திட்டான் ஜென். சீக்கிரம் கண்டுபிடிக்கணும்” என்றவன் சத்யாவிற்கு அலைபேசியில் அழைத்துக்கொண்டே மருத்துவமனையின் டெக்னிக்கல் அறை எங்கிருக்கிறதென கேட்டு அங்கு விரைந்தான்.
“அமோஸ் யாரு ஜென்?”
அவி கேட்ட கேள்விக்கு ஜென் பதிலளிக்க, அவிக்கு உலகமே நின்று சுழன்றது.
பாரி மருத்துவமனையின் வெளி வாயில் சிசிடிவி காமிரா பதிவினை பார்வையிட்டபடி இருக்க, அவனிடம் வந்த அவி,
“நீயெப்படி பாரி தமிழ் விஷயத்தில் இவ்வளவு அசால்ட்டா இருந்த?
எப்படிடா அவளை நீ தனியா அனுப்பலாம். அதுவும் எல்லாம் தெரிந்தும்” என்று கோபமாக வினவிய அவி, “உன்னாலதான் இது. எனக்கு என் தமிழும், என் தமிழ் வயித்திலிருக்கும் குழந்தையும் எந்த சேதாரமும் ஆகாம வரணும்” என்றான்.
அவியின் முகத்தை ஏறிட்ட பாரி என்ன கண்டானோ,
“இவனை வீட்டுக்கு போகச்சொல்லு ஜென்” என்று தன்மையாகவேக் கூறினான்.
“தமிழுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நானெங்கும் போகமாட்டேன்.” அவி அடமாக நின்றான்.
“அடிச்சிடப்போறேன் அவி. இங்கிருந்து போ. நீ எமோஷனலாகி என்னையும் பிரேக் பண்ணாத” என்ற பாரியின் கத்தலில் ஜென் அவியை இழுத்துக்கொண்டு வெளியில் சென்று அவனை அனுப்பி வைத்த பின்னரே பாரியின் அருகில் வந்தாள்.
“என்ன பாரி எதாவது தெரிந்ததா?”
“ஒரு பொண்ணோட ஆட்டோவில் ஏறி போயிருக்காள் ஜென். பார்க்கும்போது பூவே ஏறின போலத்தான் இருக்கு” என்றவன், “ஆட்டோ நெம்பர் தெரியுதா பார்க்கிறேன்” என்றான்.
ஓரளவிற்கு தெரிந்த ஆட்டோவின் எண்ணை குறித்து கன்ட்ரோல் ரூமிற்கு அழைத்து, அந்த ஆட்டோ உரிமையாளர் யாரென்ற தகவலை கண்டறியக் கூறினான்.
“தமிழ் கையில் ஜிபிஎஸ் ஸ்டராப் இருக்கே பாரி?”
“அதை அவள் ஆன் பண்ணல ஜென்.” ஆயாசமாகக் கூறினான்.
“அப்போ நீ செக் பண்ண ஜிபிஎஸ்?”
“அவள் மொபைலோடது.”
“நீயே இப்படியிருந்தா எப்படி பாரி. கொஞ்சம் நிதானமா அடுத்து என்னன்னு யோசி” என்று ஜென் கூறிட,
“சத்யா ஆபிஸ் போகணும். அவன் மொபைல் ரீச் ஆகல” என்ற பாரி அதற்குள் மிகவும் ஓய்ந்து போனான்.
அவனின் உள்ளம் பூ பூ என்று அரற்றியபடியே இருந்தது. அவளை பாதுகாப்பாய் தன்னுடைய கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொள்ள துடித்தான்.
கத்தி அழ வேண்டும் போலிருந்தது அவனது மனநிலை. ஆனால் அதற்கும் தடையாக அமைந்தது அவன் அணிந்திருந்த காக்கி உடை.
“அவி சொல்லிய மாதிரி எல்லாம் தெரிந்தும் நான் அவளை தனியா அனுப்பியிருக்கக்கூடாது ஜென்” என்றவன் கைகளால் முகம் மூடி உடல் குலுங்கினான்.
அவன் அழுகிறான் என்பதையே ஜென்னால் நம்ப முடியவில்லை.
எங்கே அவனின் திடம் தன்னால் தொலைந்துவிடுமோ என்று உணர்வுகளை அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த ஜென்னிற்கும் பாரியின் கண்ணீர் அழுகையை கொடுத்தது.
ஜென்னின் விசும்பலில் தன்னை மீட்ட பாரி,
“இது அழற நேரமில்லை ஜென்” என்று அவனுக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டான்.
என்ன தான் ஜென்னிடம் தன்னை நிலையாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் முற்றும் முழுதாய் உடைந்து போயிருந்தான்.
____________________
“உன்னாலதான்… உன் வேலையாலதான். தமிழுக்கு இந்த நிலை.”
ஏதோவொரு வேகத்தில் தமிழ் காணவில்லை, எவனோ ஒருவனால் கடத்தப்பட்டிருக்கிறாள், இப்போது அவள் எந்நிலையில் இருக்கின்றாளோ என்ற பயமே அவியை பாரியிடம் அப்படி சொல்ல வைத்திருந்தது.
அவிக்கும் தெரியுமே…
பூ விடயத்தில் பாரி எப்படியென்று. இது அவனையும் மீறி நடந்த ஒன்றென்று இப்போது தனிமையில் யோசிக்கும்போது அவிக்கு புரிந்தது.
‘தான் சற்று அதிகப்படியாக பேசிவிட்டோமோ?’ நேரம் கடந்து தன் வார்த்தையின் வீரியம் உணர்ந்தான்.
என்ன தான் பாரி தவறாக எடுத்துக்கொள்ள மாட்டானென்றாலும், பூவின் சிறு சிறு செயலிலும் பாரியின் கவனம் எத்தகையதாக இருக்குமென்று தெரிந்த அவிக்கு வருத்தமாக இருந்தது.
ஜென் அனுப்பி வைத்த பின்னர் நேராக அவி வந்தது அலுவலகத்திற்குத்தான்.
கசங்கியத் தோற்றத்தில் அலுவலகம் வந்தவனை பணியாளர்கள் எல்லோரும் கேள்வியாய் பார்த்ததை உணரும் நிலையில் அவனில்லை.
அவனை நோக்கி வந்த லீயிடம்,
“என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் லீ. ப்ரொஜெக்ட் வொர்க் தீபனிடம் சொல்லி ஸ்டார்ட் பண்ணிடுங்க” என்றவன் தன்னுடைய அறைக்குள் வந்து அங்கிருந்த கோச்சில் அமர்ந்தவன் கண்களை மூடிக் கொண்டான்.
பூ காணவில்லை என்பதைவிட, பாரியை வார்த்தையால் நோகடித்துவிட்டோம் என்பதே அவியை வதைத்தது.
பாரி எப்படியும் பூவை கண்டுபிடித்துவிடுவான் என்பது திண்ணம். அதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. பதற்றத்தில் சிதறவிட்ட வார்த்தைகளை எண்ணியே இப்போது மருகுகிறான்.
அவி சொல்லியவாறு அந்தந்த பிரிவுக்கு ஏற்ற பணியை விளக்கிக் கூறிய தீபன், லீயுடன் அவியின் அறைக்குள் நுழைந்தான்.
“அவி…!”
அருகில் வந்து தோளில் கை வைத்த தீபனை இடையோடு கட்டிக்கொண்டு கதறிவிட்டான் அவினாஷ்.
அவன் அழுததும் அவனுக்கு காலுக்கு கீழே அமர்ந்த லீ,
“அவி என்னடா ஏன் அழுவுற?” என்று தீபனின் வயிற்றில் புதைந்திருந்த அவியின் முகத்தை நிமிர்த்தியவளாக வினவினாள்.
“லீ… தமிழ்…” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
இப்போது லீயிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“அவி தமிழுக்கு என்னாச்சு?”
அவியின் தோள் குலுக்கல் அவனின் அழுகையை பறைசாற்றியது.
லீயிடம் எதையும் கேட்காதே என்று மறுப்பாக கண்காட்டிய தீபன், அவியின் முதுகை மெல்ல தட்டிக்கொடுத்தான்.
“ரிலாக்ஸ் அவி… ரிலாக்ஸ். தமிழுக்கு ஒண்ணுமாகாது” என்று தீபன் சொல்லிக்கொண்டே இருக்க… அவனின் வார்த்தைகள் திடம் கொடுத்திட தன்னை நிலைப்படுத்தி கண்களை துடைத்து விலகி அமர்ந்தான் அவி.
தீபனும், லீலாவும் அவி என்ன சொல்லப்போகிறான் என்று அவனின் முகத்தையே இருவரும் பார்த்திருக்க,
“தமிழ்… தமிழுக்கு ஒண்ணுமாகாது சீனியர். எனக்கும் தெரியும்” என்று பார்வையை எங்கோ வெறித்தபடி கூறினான்.
“முதலில் தமிழுக்கு என்னாச்சு சொல்லுடா?” லீ அவியின் அரற்றலில் கோபம் வரபெற்றவளாகக் கத்தியிருந்தாள்.
“தமிழை எவனோ கடத்திட்டானாம்!” அவி சொல்லியதில் தீபனுக்கும் அத்தனை அதிர்வு.
“என்னடா சொல்லுற?” லீ அவியை உளுக்கினாள்.
அவி நடந்ததை சொல்லிட,
லீ ஜென்னிற்கு அழைத்தாள்.
எப்படியும் அவியின் மூலம் விடயமறிந்துதான் அழைக்கிறாள் என்று தட்டாது ஏற்றாள்.
காணாமல் போன பூவை தேடிக்கொண்டிருக்கும் தனக்கே தவிப்பாக இருக்கும்போது, அவளைப்பற்றி ஒன்றுமே தெரிந்திடாது எதுவும் செய்ய முடியாது அமைதியின்றி தவிக்கும் அவர்களுக்கு எப்படியிருக்கும் என்று உணர்ந்திருந்த ஜென் பொறுமையகவே பேசினாள்.
“இன்னும் ஒரு தகவலும் இல்லை லீ. பாரி எப்படியும் கண்டுபிடிச்சிடுவான் என்கிற நம்பிக்கையில் தான் நானே இருக்கேன்” என்ற ஜென், “தமிழிருக்கும் இடம் தெரிந்ததும் நானே கால் பன்றேன் லீ” என்றவளுக்கு மேற்கொண்டு சமாளிக்க முடியுமென்று தோணாததால் எதுவும் சொல்லாமலே வைத்துவிட்டாள்.
‘நண்பர்களுக்குத் தெரிந்த விடயம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்னாகுமோ?’
ஜென் லீயிடம் பேசுவதை அறிந்த பாரியின் எண்ணவோட்டம் இதுவாகத்தான் இருந்தது.
“பூ…” தொடையில் இறுகிய முஷ்டியை தட்டியபடி கத்தியவனின் கத்தலில் அரண்டு அவனருகில் ஓடிவந்தாள் ஜென்.
“பாரி…”
“முடியல ஜென். முடியல… அவள் என்னோட இல்லைங்கிற இந்த அரை மணிநேரமே என்னால முடியல ஜென்” என கலங்கியவன், “என் பூ மேல கை வச்சவனுக்கு என் கையால் தான் சாவு” என்று கம்பீரமாக எழுந்து நின்றான்.
கன்ட்ரோல் ரூமிற்கு அழைத்தவன்,
“வாட் அபௌட் தட் ஆட்டோ நெம்பர்?” என்று அழுத்தமாக வினவினான்.
பாரியின் அந்த குரலே எதிரில் இருப்பவரை அரள வைத்தது.
“எடுத்துட்டேன் சார். உங்களுக்கு தான் கால் பண்ண வந்தேன்” என்று திக்கித்திணறி ஆட்டோவின் டீடெயில்ஸ் கொடுத்திட…
அதனை ஜென்னிடம் தெரிவித்த பாரி,
“நீ அந்த ஆட்டோவை விசாரி ஜென். நான் சத்யா ஆபீஸ் போறேன்” என்று பாரி சென்ற திசைக்கு எதிர் திசையில் ஜென் சென்றாள்.
பாரி சத்யாவின் அலுவலகம் வந்த போது, அலுவலகமே சிதைந்து கிடந்தது.
அங்கிருந்த டெக்னிக்கல் மெட்டிரியல் அனைத்தும் வேண்டுமென்றே உடைக்கப்பட்டு அறை முழுவதும் சிதறி கிடந்தது.
சத்யா தனிப்பட்ட முறையில் கையாளும் அவனது மடிக்கணினி எரிக்கப்பட்டிருந்தது.
பாரிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.
கண்ணை கட்டி அடர்ந்த காட்டில் இருட்டில் நிற்கும் நிலை.
ஆரம்பம் எதுவென தெரியாத பாரிக்கு முடிவு அமோஸ் என்று அத்தனை திண்ணமாக தெரிந்திருந்தது.
சத்யாவை அமோஸ் தான் ஏதோ செய்திருக்கிறான் என்பது பாரிக்கு புரிந்தது.
சத்யா மாதிரி ஒரு ஹேக்கர் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. அதுவுமில்லாமல் சத்யா டிடெக்டிவ். அவனால் பாரிக்கு இணையாக ஒரு விடயத்தை ஆராய முடியும். பாரிக்கு சிக்கலான பல வழக்குகளில் சத்யா உதவியாக இருந்திருக்கிறான். இங்கு மட்டுமல்ல முன் வேலை செய்த இடத்திலும்.
பாரியை பற்றி அனைத்தும் தெரிந்த அமோஸிற்கு அவன் உதவியென வரும் நபர் சத்யா என்பது தெரிந்திருக்காதா என்ன?
அடுத்து என்ற நிலையில் தொழில்நுட்பத்தின் வாயிலாக தாங்கள் இருக்கும் இடத்தினை கண்டறிய பாரி சத்யாவைத்தான் நாடுவான் என்று அறிந்த அமோஸ் சத்யாவையும் தூக்கியிருந்தான்.
பாரிக்கு தனக்கிருந்த ஒரு வழியும் அடைபட்ட உணர்வு.
மற்ற வழக்கென்றால் நிதானம் தவறாது சிந்திப்பவனின் மூளை தன்னவள் என்ற நிலையில் மரத்து போனது.
அவனுக்கு ஆறுதலுக்கு ஒரு தோள் வேண்டுமென அவனின் மனம் தவித்தது. அந்நொடி அவனுக்கு பரிதியின் நினைவு மேலெழும்பியது.
ரொம்ப தூரத்தில் இருப்பவனை தவிக்க வைக்க வேண்டாமென நினைத்தவன் மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியேற்றி கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருக்கும் தன் திடம் மீட்டான்.
அதன் பின்னர் அங்கேயே நிற்காது காவல்துறை பிரிவில் இருக்கும் சைபர் கிரைம் நோக்கிச் சென்றான்.
அங்கு சென்று அமோஸ் மற்றும் ரேமண்டின் அலைபேசி எண்ணை கொடுத்தவன் அதனை ட்ராப் பண்ண சொல்லிக் கூறினான்.
“இப்படி ஒரு நெம்பரே இல்லை சார்.” சில வினாடிகளில் கிடைத்த பதிலில் பாரிக்கு மூளை சூடானது.
“வேறு எண்… இலைன்னா மொபைல் ஐ.எம்.ஐ நெம்பர் இருந்தா கண்டுபிடிப்பது எளிதா இருக்கும் சார்” என்றிட, அவனுடைய மொபைலுக்கு பாரி எங்கு செல்வான்.
இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.
“பூ ஸ்டராப் ஆன் பண்ணும்மா ப்ளீஸ்” என்று மானசீகமாகக் கூறியவனுக்கு அனைத்து வழிகளும் அடைப்பட்டதைப்போல் இருந்தது.
அதற்கும் மேல் தனியாக சமாளிக்க முடியுமென்று பாரிக்குத் தோன்றவில்லை.
எதைப்பற்றியும் யோசிக்காது பரிதிக்கு அழைத்துவிட்டான்.
“பரிதிண்ணா எனக்கு இப்போ நீங்க வேணும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வாங்க” என்றவன் மேற்கொண்டு எதையும் சொல்லாது வைத்துவிட்டான்.
பாரியின் பேச்சில் அங்கு பரிதி குழம்பி நின்றது சில கணங்கள் தான்,
சிறு வயது முதலே பாரிக்கு தன்னால் ஒன்றை செய்ய முடியவில்லை என்று தளர்ந்து அமரும் போதெல்லாம் அவன் நாடுவது பரிதியைத்தான். பரிதியின் ஒரு நிமிட ஆறுதல் அத்தனை திடத்தைக் கொடுத்திடும்.
இதனை அறிந்திருந்த பரிதி, என்னவென்று திரும்பி அழைத்து அவனை குடையாது, தான் செய்து கொண்டிருந்த வேலையை தன்னுடன் வந்திருந்த காரியதரிசியிடம் ஒப்படைத்துவிட்டு கிடைத்த பிலைட்டில் கிளம்பியிருந்தான்.
அடுத்து பாரி சென்றது இங்கு வந்தது முதல் அமோஸ் தங்கியிருந்த வீட்டிற்கு.
அமோஸ் தானிங்கு இருக்கும்வரை வேண்டுமென அனைத்து வசதிகளும் அடங்கிய மிகப்பெரிய வீட்டையே விலைக்கு வாங்கியிருந்தான்.
அந்த வீடே இப்போது அமைதியாக காட்சியளித்தது.
வீட்டை பலமுறை சுற்றி வந்துவிட்டான். தடயம் என்று எதுவும் கிட்டவில்லை.
நொடிக்கு ஒரு தரம் அலைபேசியை எடுத்து பூவின் கையிலிருக்கும் ஜிபிஎஸ் அலைவரிசை தெரிகிறதா என்று பார்வையிட்டான். ஏமாற்றமே!
அந்நேரம் ராயப்பனும், விவாஷும் சிறையிலிருந்து தப்பிவிட்டதாக தாமஸிடமிருந்து தகவல் வர பாரி முற்றிலும் தன் சுயமிழந்தான்.
ஆணையர் குமார் பாரியை அலுவலகம் அழைக்க விரைந்து சென்றான்.
காலையிலிருந்து அவியின் காரில் தான் பாரி சுற்றிக் கொண்டிருக்கிறான். ட்ராஷ் போர்டின் மேல் வைக்கப்பட்டிருந்த பூவின் மருத்துவ கோப்பு, உடைந்தவனை மேலும் உடையச்செய்தது.
பாரியின் மூலம் அனைத்தும் அறிந்த ஆணையர் குமார்,
“என்ன செய்ய முடியுமோ செய் பாரி. உனக்கு என் அதிகாரத்தை வைத்து உனக்கு முழு சுதந்திரமும் கொடுக்கிறேன்” என்றவர், “அவனுங்களை பிடி பாரி, உயிரோடோ அல்லது உயிரற்றோ… பின்னால் வரதை பின்னால் பார்ப்போம்” என்றார்.
பாரிக்கு இது போதுமே சுழன்று அடிக்கத் தயாராகினான்.
நிதானம் இல்லாமல் வேகம் மட்டும் இருந்தால் எதிராளியை வீழ்த்த முடியாது. அதனை தெளிவாக அறிந்திருந்த பாரி தன்னை சமன் செய்ய முனைந்தான்.
அரை நாள் ஓடியிருந்தது.
ஆணையர் அலுவலகம் விட்டு பாரி வெளியில் வரும்போது,
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கால் மேல் கால் வைத்து பரிதி நின்றிருந்தான்.
இத்தனை சீக்கிரம் பரிதி எப்படி வந்தான் என்றெல்லாம் பாரிக்கு தெரியவில்லை. ஆனால் தான் கலங்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும் தனக்காக அவ்வளவு தூரத்திலிருந்து ஓடி வந்திருக்கும் பரிதியின் அன்பில் சிறு பிள்ளையாய் மாறியிருந்தான்.
“பரிதிண்ணா…”
நான்கே எட்டில் பரிதியை நெருங்கியிருந்தவன், இறுக்கி அணைத்திருந்தான்.
சிறு வயதில் தன் விரல் பிடித்து நடந்த ஐந்து வயது பாரியை அந்நொடி பரிதி கண்டான்.
“பாரி… ஒண்ணுமில்லைடா. அதான் அண்ணா வந்திட்டேன்ல. எதுவாயிருந்தாலும் சரி செய்திடலாம்” என்ற பரிதி தானும் அணைத்து அவனின் முதுகை தட்டிக்கொடுத்தான்.
“பூவை கடத்திட்டாங்க பரிதிண்ணா.”
பாரி சொல்லியதில் உண்டான அதிர்வை பாரிக்காகவே மறைத்துக் கொண்டான்.
ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவனை மேலும் வருந்தச்செய்ய மனமில்லாமல் தனக்குள் எழும் வருத்தத்தை உள்ளுக்குள் புதைத்தான்.
“யாருன்னு தெரிந்ததா பாரி?” பரிதியினுள் அடக்கப்பட்ட கோபம்.
“அமோஸ், ராயப்பனுடன் சம்மந்தப்பட்டவன்” என்ற பாரி “அரை நாள் முடிஞ்சிருச்சு பரிதிண்ணா. இன்னும் ஒரு அடி என்னால முன்னாடி செல்ல முடியல. சத்யாவையும் கடத்திட்டானுங்க” என்றதோடு பரிதியின் அணைப்பிலிருந்து பிரிந்து நின்றான்.
“ரிலாக்ஸ் பாரி. நீ முன்னாடி ஓடணும் நினைக்காதே. இப்போ நீ தெளிவா நிதானமா இருக்க வேண்டிய நேரம். நீயே தடுமாறி நின்னா நாங்க என்ன பண்ணுவோம். தமிழை உன்னால் மட்டும் தான் காப்பாத்த முடியும். எங்கையோ எதையோ மிஸ் பண்ணியிருப்ப. அது என்னன்னு யோசி, இல்லையா எப்படி அவனை நெருங்கலான்னு உன் ஸ்டைலில் புதுசா வழியை உண்டாக்கு. ஏற்கனவே இருக்கும் பாதையில் போறவனுக்கெல்லாம் எளிதில் வெற்றி கிட்டுவதில்லை. உனக்குன்னு ஒரு பாதையை உண்டாக்கு, அது உன்னை தமிழிடம் கூட்டிட்டுப் போகும்.”
பரிதி பேச பேச… அதுவரை இருந்த அலைப்புறுதல் எல்லாம் காணமல் போகும் மாயம் பாரியினுள்.
அத்தனை நேரம் சமன்பட மறுத்த அவனது மனம் நொடியில் லேசான உணர்வு.
“மைண்ட் ஃப்ரியா வச்சிக்கோ பாரி.”
“லவ் யூ பரிதிண்ணா” என்ற பாரி பரிதியின் கழுத்தைச்சுற்றி அணைத்து, கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
“பேக் டூ ஃபார்ம்” என்ற பரிதி, “யூ கேன் பாரி” என்றான்.
“வீட்டில் யாருக்கும் தெரியாதா பாரி?”
“பூ கிடைக்கட்டும் பரிதிண்ணா. சொல்லிக்கலாம்” என்ற பாரி, “நீங்க அச்சீவர்ஸ் போறீங்களா பரிதிண்ணா?” எனக் கேட்டிருந்தான்.
அச்சீவர்ஸ் என்று சொல்லிய பின்னர் தான் பாரிக்கு ஏதேதோ மூளையில் அலை மோதின.
ஆட்டோ ஓட்டுநரை விசாரிக்கச்சென்ற ஜென்னிடமிருந்து எந்தவொரு தகவலும் இல்லை என்பது அப்போதுதான் நினைவு வந்தவனாக, ஜென்னின் எண்ணிற்கு முயற்சிக்க அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.
“ஜென்னையும் தூக்கிட்டானுங்க நினைக்கிறேன் பரிதிண்ணா” என்ற பாரி, அவி மற்றும் தீபன் எண்ணிற்கும் முயற்சிக்க பலனில்லை.
‘காலையில் அவ்வளவு தூரம் கத்திச்சென்ற அவி, அதன்பின் எப்படி இவ்வளவு நேரம் தகவல் ஒன்றும் அறிந்துகொள்ளாது அமைதியாக இருக்கின்றான்’ என சிந்தித்த பாரிக்கு,
“உன் பார்வை படுமிடத்தில் தான் இருப்பாள். முடிஞ்சா காப்பாத்திக்கோ” என்று காலை அமோஸ் சொல்லியது பாரியின் காதில் எதிரொலித்தது.
“நான் லீக்கு ட்ரை பன்றேன் பாரி.”
பரிதி அலைபேசியை கையில் எடுக்க,
“நோ யூஸ் பரிதிண்ணா” என்றவன் பரிதியை இழுத்துக்கொண்டு காருக்குள் சென்றான்.
“பாரி என்னடா?”
“பரிதிண்ணா அவனுங்க நம்ம அச்சீவர்ஸில் தான் இருக்கானுங்க.”
“எப்படி சொல்லுற?”
“எனக்கு தோணுது பரிதிண்ணா. அமைதியா எல்லாத்தையும் யோசிக்கும்போது அங்க தான் இருக்கணும் அப்படின்னு ஒரு இண்டியூஷன்.” பாரி இத்தனை உறுதியாக சொல்லும்போது பரிதிக்கும் அப்படியிருக்குமோ என்றுதான் தோன்றியது.
அப்போது ஜென்னின் அலைபேசியிலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது.
“சிலையை கொண்டு வந்து கொடுத்திட்டு உன் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு போ.”
அடுத்த செக் தன்னுடைய மொபைலில் உள்ள பிரெண்ட்ஸ் கனெக்ட்டிங் செயலி மூலம் இருக்கும் இடம் ட்ராப் செய்ய முயல தோல்வியே கிட்டியது.
“என்னாச்சு பாரி?”
“பரிதிண்ணா நீங்க சாதாரணமா எப்பவும் போற மாதிரி போங்க, கண்டிப்பா உங்களையும் அவனுங்க கட்டுப்பாட்டில் வச்சிப்பானுங்க. அங்க என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியணும்” என்ற பாரி, “பீ சேஃப் பரிதிண்ணா” என்றிட கண்சிமிட்டி புன்னகைத்தான் பரிதி.
“பரிதிண்ணா உங்க ரெண்டு மொபைலும் உங்கக்கிட்ட இருக்கா?”
“ம்ம்ம் பாரி.”
“எப்படியும் நீங்க போனதும் உங்க மொபைல் வாங்கிப்பானுங்க. பெர்சனல் மொபைல் மட்டும் அவனுங்க கண்ணில் படுமாறு பார்த்துக்கோங்க. அபிசியல் மொபைல் எப்படியாவது மறைச்சு வச்சுக்கோங்க” என்றவன் ஆயிரம் பத்திரம் கூறினான்.
பரிதியை கண்டதும் தாயை தேடி ஓடும் கன்றாய் தாவியிருந்தவன், இப்போது தகப்பன்சுவாமியாய் மாறி பத்திரம் வாசித்தான்.
“நான் பார்த்துக்கிறேன் பாரி” என்ற பரிதி விமான நிலையத்திலிருந்து கேப் பிடித்து வந்ததால் இப்போதும் கேப் பிடித்து அச்சீவர்ஸ் செல்ல காத்திருக்க,
“பூ பிரக்னென்ட்டா இருக்காள் பரிதிண்ணா” என்று பாரி ஒருவித மரத்த நிலையில் சொல்லிட,
“பாரி…” என நொடியில் தோன்றிவிட்ட மகிழ்வில் விழி விரித்தான் பரிதி.
“இன்னும் உங்க குட்டிம்மா எக்னிட்டவே சொல்லல” என்றவன் “ஜாக்கிரதை பரிதிண்ணா” என அவனுக்காக வந்து நிற்கும் கேபினை கை காண்பித்தான்.
பரிதி சென்று கொண்டிருக்கும்போதே அவனுக்கு அதிக சிரமம் இல்லாது அமோஸின் ஆட்கள் இருவர் பரிதியை சுற்றி வளைத்து கடத்தியிருந்தனர்.
பரிதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததும் முதலில் அவர்கள் செய்தது பரிதியின் அலைபேசியை கைப்பற்றியது தான்.
அலுவலகத்தில் எவ்வித மாற்றமுமின்றி பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்க பரிதிக்கு ஆச்சர்யம்.
அவியின் அறைக்குள் பரிதியை தள்ளிய இருவர் அறைக்கு வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
அறையில் ஆளுக்கு ஒரு மூலையில் அவி, ஜென், தீபன், லீ கவலை சுமந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
பரிதியை கண்டதும்,
“உங்களையும் கடத்திட்டாங்களா?” என்ற அவி, “தமிழை வைத்து எங்களை கார்னர் செய்திட்டாங்க பரிதிண்ணா” என்றான்.
“அப்போ தமிழ் இங்கில்லையா?” என்று உச்சகட்ட அதிர்ச்சியில் பரிதி வினவ,
“இல்லை பரிதிண்ணா” என்றனர் அவியும், லீயும் ஒன்றாக.
“உங்க மொபைல், லேப்லாம் என்னடா ஆச்சு. எதையாவது சிக்னல் இருக்க மாதிரி ஆன் பண்ணியிருக்கலாமே! பாரி தலையை உடைச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்” என்ற பரிதி அபபோதுதான் கவனித்தான் இருக்கைகள் தவிர்த்து அவ்வறையே காலியாக இருப்பதை.
“ஹைஜாக் பண்ண மாதிரி இருக்குடா” என்ற பரிதிக்கு அவர்களின் முகங்களை பார்க்கும்போது சிரிப்பு தான் வந்தது.
“ஆபீஸ்…?”
“அது யாருக்கும் டவுட் வந்திடக்கூடாதாம். வெளியிலிருக்கும் ரெண்டு தடியனும் அவி பிரண்ட்ஸாம்.” சொன்ன தீபனுக்கும் இப்போது சிரிப்பு வந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
33
+1
+1
1
