தூவானம் 48 :
ப்ரொஜெக்ட் கிடைத்ததை கொண்டாடும் வகையில் அலுவலகத்திலேயே சிறியளவில் கேளிக்கை விருந்து ஒன்றை அவியும் பூவும் அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
“பாரி வருவானா மாட்டானா?” என்று அவி கேட்டுக் கொண்டிருக்கும்போதே பாரி தன்னுடைய காக்கி உடையில் வேக எட்டுக்கள் வைத்து அந்த ஹாலிற்குள் நுழைந்திருந்தான்.
“வாங்க சார்… இதான் நீங்க பார்ட்டிக்கு வர லட்சணமா?” என்று அவி முறைப்புடன் கேட்க,
“நான் போடுற ட்ரெஸ் என் பொண்டாட்டிக்கு பிடிக்கணுமே அவி. அவளுக்கு என்னை இந்த ட்ரெஸ்ஸில் தான் ரொம்ப பிடிக்கும், அதான். வேணுன்னா அவளை பாரு என்னை எப்படி சைட் அடிக்கிறா(ள்)ன்னு” என்று பாரி பூவை சுட்டிக்காட்டும்போதே அவனருகில் வந்த பூ, முன்னுச்சி கேசம் கலைத்து, “ஸ்டேஷனிலிருந்து நேரா இங்க வர்றியா வேந்தா?” என்று அக்கறையாக வினவினாள்.
“வீட்டுக்கு போயிட்டு வரணும் தான் இருந்தேன் பூ. பட் டைம் இல்லை.” தோள்களைக் குலுக்கியவன் அவி மற்றும் பூவை ஒன்றாக அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்திட, ஜென்னும் லீயும் அவர்களின் அணைப்பில் இணைய, அவியும் பாரியும் தள்ளி நின்றிருந்த தீபனை தங்களது அணைப்பில் இணைத்துக்கொண்டனர்.
அங்கு கைத்தட்டல்களும் உற்சாக சத்தமும் இடத்தை அதிர வைத்தன.
“நேத்தே நேரில் மீட் பண்ணனும் நினைத்தேன். டைம் கிடைக்கல” என்ற பாரியின் வயிற்றிலேயே அவி குத்தினான்.
“நீயில்லாம ஆர்மி சீக்ரெட் மெயின்ட்டனென்ஸ் பற்றி ஒன்னும் தெரிந்திருக்காது பாரி. அதை இன்க்ளூட் பண்ணதாலதான் நம்ம டிசைன்க்கு எக்ஸ்ட்ரா வேல்யூ” என்று அவி சொல்லிட…
“சொன்னது மட்டும் தான் நான், பண்ணதெல்லாம் நீங்கதான்” என்று பாரி அவியின் வாயினை அடைத்தான்.
“நீ அச்செப்ட் பண்ண மாட்டியே” என்ற அவி, பழச்சாறு அடங்கிய தம்ளரை பாரியின் கையில் கொடுத்திட “ஹார்ட் ட்ரிங்க்ஸ் இல்லாம இது பேரு பார்ட்டியாடா” என கலாய்த்தான் பாரி.
“டிசி சார் ட்ரிங்க் பண்றேன் சொல்லுங்க, பைவ் மினிட்ஸில் அரேன்ஞ் பண்ணிடலாம்” என்ற தீபனிடம் இரு கைகளையும் மேலே தூக்கி சரண்டர் என்பது போல் பாவனை செய்தான் பாரி.
“குடிக்கிறவன் கூட இப்படி வெளிப்படையாக் கேட்கமாட்டான்” என்று பூ கூறிட அங்கே சிரிப்பலை எழுந்து அடங்கியது.
“உங்கக்கிட்டலாம் அந்த பழக்கம் எப்படியோ இல்லை” என்று ஜென் ஒருவித நிம்மதியில் உரைக்க, “வேணுன்னா ட்ரை பண்ணி பார்க்கவா ஜென்” எனக்கேட்டு அவளிடம் கொட்டு வாங்கிக்கொண்டான் அவி.
அதன் பின் அனைவரும் ஆளுக்கொரு இடமாக அமர்ந்து சக பணியாளர்கள் செய்யும் கேளிக்கைகளை கண்டு மகிழ்ந்தனர்.
“என்னடி முகத்தில் ஏதோ கம்மியா இருக்கு. வேறென்னவோ அதிகமா இருக்கு?” என்ற பாரியின் தோள் மீதே சாய்ந்துக் கொண்டாள் பூ.
“என்ன பண்ணுது மலரே?”
“தெரியலடா… ரெண்டு நாளாவே இப்படித்தான் இருக்கு” என்ற பூவின் முகத்தை நிமிர்த்தி கூர்ந்து பார்த்தவன், “இன்னைக்கு நைட் ஒழுங்கா தூங்கவிடுறேன். சரியாகிடும்” என்று விஷமமாகக் கூறிட அவனை நன்கு மொத்தினாள் அவள்.
இருட்டில் இவர்களின் விளையாட்டு யார் கண்ணிலும் படவில்லை.
தீபன் மற்றும் லீக்கு இடையேயான விவகாரத்தை பூ நேற்றே பாரியிடம் சொல்லியிருந்ததால்,
“லீ கிட்ட பேசு வேந்தா… இன்னைக்கு ஈவ்னிங் சீனியரை அவங்க அம்மா பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயிட்டு வந்துட்டாங்க” என்றாள் வருத்தமாக.
“நீ பேசியே கேட்கல, நான் பேசினால் கேட்பாளா?”
“எங்க பங்குக்கு நாங்க எல்லாரும் பேசி பார்த்துட்டோம். ஜென் கூட நிறைய டயலாக் விட்டு பார்த்தால், ம்ஹூம் அவள் மசியவே மாட்டேங்குறா(ள்) வேந்தா. ரொம்ப அழுத்தமா இருக்காள். இப்போ கொஞ்சம் நல்ல மூடில் இருக்க மாதிரி தெரியுது. போய் பேசுடா” என்று பாரியை விரட்டினாள்.
எப்படியாவது லீக்கு நல்லதென்று ஒன்று நடந்துவிடாதா என்று எண்ணினாள்.
“காதல் ஒருத்தர் எடுத்து சொல்வதாலோ, விளக்கம் கொடுத்து பேசுவதாலோ வராது மலரே” என்றவன் தன்னவளிடம் முறைப்பினை நன்றாக வாங்கிக்கொண்டான்.
“சில்… சில் மலரே” என்றவன், “பேசுறேன்” என்று எழுந்தான்.
“அவளும் சீனியரை லவ் பன்றா(ள்) வேந்தா!”
“ம்ம்ம்.”
பாரி அந்த வண்ண விளக்குகள் ஒளியில் பார்வையை சுழற்றி லீயைத் தேடினான்.
“லீ வெளிய போனாள் பாரி.”
ஜென் கூறிட, அவ்வறையை விட்டு வெளியில் சென்றான் பாரி.
அலுவலக கேபின்கள் இருக்கும் இடத்திற்கு எதிரில் இருக்கும் சிறிய பவுன்ட்டெயின் அருகில் லீ அமர்ந்திருக்க, தீபன் அவளிடம் முகம் கடுக்க பேசிக்கொண்டிருந்தான்.
சத்தமெல்லாம் பார்ட்டி நடக்கும் இடத்தில் மட்டும் தான். அந்த அறையின் கதவு மூடியிருக்கும் நிலையில் அலுவலகமே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது.
அவர்களின் அருகில் செல்லலாமா வேண்டாமா என்று தயங்கிய பாரி அங்கேயே சற்று தள்ளி நின்றிட, தீபனின் பேச்சு நன்றாகவே அவனுக்கு கேட்டது.
“ப்ளீஸ்டி புரிஞ்சிக்கோ. நீயில்லாம வாழ முடியாதுன்னு இங்க சொல்லுதுடி” என்று தன் இதயத்தை சுட்டிக்காட்டிய தீபன், “அம்மா எனக்கு கல்யாணம் செய்யணும் ரொம்ப தீவிரமா இறங்கிட்டாங்க. நான் சொல்லுறதை கேட்கவே அவங்க தயாராயில்லை. எனக்கு கொடுத்த டைம் எல்லாம் முடிஞ்சிப்போச்சுன்னு கார்னர் பன்றாங்க. எனக்கு நீ வேணும்டி” என்று அவளிடம் மன்றாடினான்.
“கோபத்தை காட்டுனீங்க… இப்போ கெஞ்சுறீங்க, நீங்க எப்படி கேட்டாலும் என் பதில் நோ தான். ஏன் திரும்பத்திரும்ப டார்ச்சர் பண்றீங்க?”
லீ சொல்லி முடிப்பதற்குள் அவளின் இருபக்க கன்னத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தவன்,
“இப்போ சொல்லுறேண்டி நீ எனக்கு வேண்டாம். இதுக்குமேல உன்னை எப்படி ஒத்துக்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியலடி. உனக்கு நான் வேணான்னா, எனக்கு நீயும் வேணாம். என் காதல் இனி உனக்கு தொல்லையா இருக்காது” என்றவன் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அவளிடமிருந்து விலகிச்சென்றான்.
தீபன் சென்றதும் கைகளில் முகம் புதைத்து சத்தம் வராது அழுதவள், தனக்கு முன் தெரிந்த பூட்ஸ் காலில் தலையை உயர்த்தி பார்த்தாள்.
பாரி அவள் முன் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“பாரி…”
“நீயெதுக்கு லீ அழற?” எனக் கேட்டவன் அவளின் அருகில் அமர்ந்தான்.
“நம்மள ஒருத்தவங்க காதலிக்குறாங்க அப்டிங்கிற பீல் கொடுக்குற சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது லீ. உனக்காக உன்னை மட்டுமே கேட்டு கிடைக்கும் உறவு ரொம்பவே ரேர். அத்தனை ஈசியா யாருக்கும் கிடைக்காது. உன்னை மட்டுமே நினைத்து, உனக்காக இத்தனை வருஷம் அவன் குடும்பத்தை எதிர்த்து காத்திருக்கான் அப்படின்னா எந்தளவுக்கு உன்னை நேசித்திருப்பான். அவனையே வேணாம் சொல்லுற நீ அழக்கூடாது லீ. உண்மையான அன்பை புரிஞ்சிக்கத் தெரியாதவளை இத்தனை லவ் பண்ணிட்டோமேன்னு தீபன் தான் அழணும்” என்ற பாரியின் வார்த்தையில் விலுக்கென அவனை ஏறிட்டாள்.
“உனக்கென்ன ப்ராப்ளம் லீ?”
“தெரிஞ்சிகிட்டே கேட்கிறியே?”
“அதை தவிர்த்து?”
“பாரி…!”
“சொல்லு லீ? உனக்கு ஏற்கனவே ஒருத்தன் தாலி கட்டிட்டான். அதுதான் உன் பிரச்சனை அப்படின்னா அதைத்தூக்கி குப்பையில போடு” என்று குரலை உயர்த்தாது கடுமையகாக் கூறினான்.
“முடியல பாரி.” அவளின் கண்ணீர் கன்னம் தாண்டியது.
“அவன் கட்டினதை தாலியாவே நீ பார்க்கல. அப்படி தாலியா பார்த்திருந்தா உன்னால அதை கழட்டி போட்டிருக்க முடியாது.”
பாரியின் கூற்றை நிச்சயம் அவள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பாரியை அதிர்ந்து நோக்கினாள்.
“அது கல்யாணமே இல்லைன்னு நீ நினைக்கும்போதே, அதை காரணமாக வச்சு, உன்னை விரும்புற ஒருத்தனை ஒதுக்குறது ரொம்ப தப்புடா” என்ற பாரி, தன்னை விழித்து உருத்த லீயின் தலையை பரிவுடன் வருடினான்.
“உன் கண்ணீர் சொல்லுது தீபனை நீயும் விரும்புறேன்னு, அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம் லீ?”
பாரியின் தோளில் முகம் பதித்து உடல் குலுங்க அழுதாள்.
“எல்லாம் சரியாகும் லீ. அதுக்கு நீ ஒரு அடி இறங்கி வரணும். தீபனை மட்டும் மனசில் நிறுத்தி கொஞ்சம் யோசிம்மா” என்றவன்,
“பிரேமை நினைச்சு நீ பயந்தா அது அவசியமில்லாதது. அவன் இனி உன் விஷயத்தில் குறுக்கிடவே மாட்டான். உனக்கு பிரேமுன்னு ஒரு அண்ணன் இருந்ததையே மறந்திடு. எல்லாம் தெரிஞ்ச அடுத்தநாளே பிரேம் உன் வாழ்க்கையிலேயே இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நானே நேர்ல போய் எல்லாம் பேசி முடிச்சிட்டேன். உன் அப்பா உனக்காக விட்டுப்போன சொத்துக்கள் உனக்கு வேணும்னா, நீயெப்போ கேட்குறியோ அப்போ எந்த இடைஞ்சலும் பண்ணாம பிரேம் உனக்கானதை உன்கிட்ட கொடுத்துடுவான்” என, உன் வாழ்வை என்னால் முடிந்தளவுக்கு சரி செய்திட்டேன். அதனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது இனி உன் கையில் தானென்று சொல்லாமல் சொல்லியவன், அவளுக்கு யோசிக்க தனிமை கொடுத்து அங்கிருந்து சென்றிருந்தான்.
எதையெல்லாம் நினைத்து மருகினாளோ அதையெல்லாம் பாரி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டான்.
உனக்கு துணையாக நாங்கள் இருக்கின்றோம் என்று வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாது செயலிலும் செய்து காண்பித்துவிட்டான். இதைவிட நட்பில் வேறென்ன வேண்டுமாம்.
நட்பிற்காக ஒருவனால் இத்தனை செய்ய முடியுமா?
பாரியை நண்பன் என்று சொல்லிக் கொள்ளவதையே கர்வமாக நினைத்தாள்.
இதையெல்லாம் அவன் செய்தது தன்னுடைய மகிழ்ச்சிக்காகத்தானே என எண்ணியவள் முதல் முறையாக தனக்காக என்று தன் மனதை அமைதிப்படுத்தி அமிழ்ந்து போனதென்று நிலைத்திருக்கும் காதலை வெளிக்கொண்டுவர முயன்றாள்.
கல்லூரி நாட்களில் தீபனின் பார்வையே அவனது காதலை சொல்லிட… ஆரம்பத்தில் அவனை ஒதுக்கியவளால் தொடர்ந்து முடியாமல் போக, அவளும் அவனை காதலிக்கத் துவங்கியிருந்தாள்.
லீலாவின் கடைசி தேர்வின் போது தீபன் அவளை வந்து பார்த்து செல்ல…
‘இன்றும் அவன் காதலை சொல்லவில்லையே’ என்று ஏமாற்றம் அடைந்தவள்,
அவனாக சொல்லும்வரை காத்திருந்தால் கிழவியாக வேண்டியது தான் என்று எண்ணி ஊருக்கு போனதும் தந்தையிடம் சொல்லி, அவர் சம்மதத்தோடு தானே காதலை சொல்லலாம் என்று உற்சாகமாக ஊருக்கு சென்றவளின் வாழ்வில் நடந்ததெல்லாம் அவள் கனவிலும் நினைத்து பார்த்திடாதவை.
தன்னை துரத்தும் பிரச்சினை எங்கு தீபனையும் பாதித்து விடுமோ என்று அஞ்சியே அவன் இத்தனை தூரம் கெஞ்சியும் மறுத்தாள்.
இப்போது தன் மறுப்பு அவசியமற்றதென்று தோன்றிய கணம் அவளின் விழிகள் அந்த இருட்டில் தீபனைத் தேடியது.
‘நான் வேணான்னு போயிட்டான். இப்போ நான் காதலை சொன்னால் ஏத்துக்குவானா?’
தனக்குள் சிந்தித்தவளாக அந்த தளத்தையே பார்வையால் அலசியவளுக்கு அவன் உருவம் கண்ணிலே சிக்கவில்லை.
அவன் பார்ட்டி ஹாலிற்குள் சென்ற மாதிரியும் தெரியவில்லை…
இரண்டடி முன் சென்று மீண்டும் தேடியவளின் பின்னால்,
“யாரை தேடுற, என்னையவா?” என்ற தீபனின் குரலில் வேகமாக திரும்பியவள் அவன்மீதே மோதி தடுமாற, அவள் கீழே விழாது தாங்கி பிடித்தான்.
தன்னவனின் முதல் தீண்டல் தேகம் முழுக்க ஒருவித அவஸ்தையான நடுக்கத்தை உணர்ந்தவள் மெல்ல அவனது பிடியிலிருந்து விலகி நின்றாள்.
காதலை சொல்ல நினைத்தவள் அவனின் அருகாமையில் வார்த்தை வற்றிப்போக திணறினாள்.
லீயிடம் பேசிவிட்டு பாரி சென்றது தீபனிடம் தான்.
பாரி தான் என்ன பேசினேன் என்பதையெல்லாம் தீபனிடம் சொல்லவில்லை.
“உன் ஆளு உன்னைத் தேடுறாள்.” அவ்வளவு தான்.
பாரி ஏதோ செய்திருக்கிறான் என்று மட்டும் புரிந்துகொண்ட தீபன் மீண்டும் லீயிருக்கும் இடம் வந்தான்.
அவள் தன்னை தேடுகிறாள் என்பதே அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.
லீயின் அலைப்புறும் விழிகளையே பார்த்தவன்,
“எதாவது சொல்லணுமா?” எனக் கேட்டான்.
“ஆங்.. அது..”
…..
“நான் வேணாமா?” இதை கேட்பதற்குள் அவளுக்கு உயிர் போய் வந்தது.
“உனக்குத்தான் நான் வேணாம்.” அவன் பட்டென்று கூறியிருந்தான்.
அவனை நிமிர்ந்து கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள்,
“எனக்கும் உங்களை பிடிக்கும்” என்று ஒருவழியாக சொல்லியிருந்தாள்.
“எல்லாருக்கும் எல்லாரையும் தான் பிடிக்கும்” என்று அசராது அவன் கூறியதில் அவள் தான் அசந்து போனாள்.
“பிடிக்கும் அப்படின்னு… உங்களை…”
“என்னை?”
“போங்க வேணுன்னே புரியாத மாதிரி நடிக்குறீங்க?” அவள் சுணங்கினாள்.
“ரொம்ப வருசமா இதுக்காகத்தான் காத்திருக்கேன். அதை கொஞ்சம் தெளிவா சொன்னா நான் சந்தோஷப்படுவேனே!” அவனின் பேச்சு அவளுக்கு நியாயமாகப்பட்டது.
“உங்களுக்கு என்மேல கோபமே இல்லையா?” சற்று நேரத்திற்கு முன்பு கோபம் கொண்டு நகர்ந்தவன் இவனா என்ற சந்தேகத்தில் வினவினாள்.
“உன்மேல என்னால் கோபப்பட முடியாது லீ” என்றவன், “நீ சொல்லப்போகும் மூன்று வார்த்தை என் கோபத்தையெல்லாம் போக்கிடும்” என்றான்.
“அப்போ கண்ணை மூடுங்க!”
“முடியாது” என்றவன் அவளை ஒட்டி நின்றான்.
சொல்லாமல் விடப்போவதில்லை என்பதை அறிந்தவள்,
“ஐ லவ் யூ” என வேகமாக சொல்லிவிட்டு அவனின் மீதே முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“ஏதோ ஜென்மசாகல்பம் அடைந்த மாதிரி இருக்கு லீ” என்றவனின் குரலில் அத்தனை நிம்மதி.
வேண்டி விரும்பி காத்திருந்தது கை சேர்ந்திட்ட நிறைவு.
தன்னவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து, அக்கணத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
“உங்களுக்கு நான் நிறைய விளக்கம் கொடுக்கணும்.”
அவளின் வாயில் கை வைத்து தடுத்தவன்,
“உன்னோட வாழப்போற வாழ்க்கை மட்டும் போதும்டா. நடந்தது எதுவா இருந்தாலும், அதெல்லாம் முடிந்துபோனது. முடிந்ததாவே இருக்கட்டும்” என்றவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
“ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு சந்தோஷமா இருக்கு தீபன்.”
“எனக்கும் தான்.”
“எங்களுக்கும் தான்.”
இருவரது குரலையும் தொடர்ந்து மூன்றாவதாக பல குரல்கள் சேர்ந்து ஒலிக்க இருவரும் பதறி விலகினர். நண்பர்கள் அவர்களை சூழ்ந்து நின்றிருந்தனர்.
“ஒருவழியா சீனியர் லவ்வு சக்சஸ் ஆகிடுச்சு” என்று பூ சொல்ல, அனைவருக்கும் நன்றி தெரிவித்த தீபன் பாரியை அணைத்து விடுத்தான்.
*கண்கள் சிந்தும் நீரை சுண்டி எரிந்து ஆறுதல் படுத்துவது நட்பல்ல… மீண்டுமொருமுறை கண்களை கண்ணீரில் நீந்த விடாமல் தடுப்பதே உண்மையான நட்பு.*
****
அந்த இடமே அங்கிலப் பாடலின் இசையில் அதிர்ந்து கொண்டிருந்தது.
புகை சூழ்ந்து காணப்பட்டது.
இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த அமோஸின் கையில் ஆறாம் விரல் வீற்றிருந்தது.
அதன் புகையின் நெடியே அது சாதரணமானது அல்ல என்பதை பறைசாற்றியது.
அமோசின் இந்த அமைதி ரேமண்டிற்கு முற்றிலும் புதிது.
எதையும் அதிரடியாக நினைத்ததும் செய்து முடிப்பது தான் அவனின் வழக்கம். அதுவும் ஒருவனை தீர்த்துக்கட்ட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், அவனை கொன்றுவிட்டு தான் அடுத்த வேலையே செய்வான்.
ஆனால் பாரி விடயத்தில் அவன் அதீத பொறுமையாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
அதனை அமோசிடம் கேட்கவும் செய்தான்.
“இந்த போலீஸ் விஷயத்தில் மட்டும் ஏன் பாஸ் இவ்வளவு பொறுமை?”
“அவனை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் ரேமண்ட். அவன் விஷயத்தில் ஒருமுறை அவசரப்பட்டதால பல மில்லியன் எனக்கு நஷ்டம். திரும்ப அதை செய்ய எனக்கு விருப்பமில்லை” என்ற அமோஸ் “அவனை இப்போதான் முழுசா ஸ்டெடி செய்திருக்கேன். அவனுக்கு குடும்பன்னு இருந்தாலும், அவன் மனைவி மேல உயிரே வச்சிருக்கான். அவளுக்காக எதையும் செய்வான். அவளை தூக்கணும். அதுதான் என் பிளான்.”
“அவளை தூக்கி, அந்த போலீஸை என் காலில் விழ வைக்கணும். கைவிட்டு போன சிலையில் இருக்கும் ரத்தினங்கள் என் கைக்கு வரணும்.”
அதீத பழிவெறி அவன் கண்களில் ஒளிர்ந்தது.
“அவன் பணிவான்னு நம்பிக்கை இருக்கா பாஸ்?”
“கண்டிப்பா… பொண்டாட்டியை அந்தளவுக்கு அவன் லவ் பண்றான். அவனோட லவ் தான் அவன் வீக்னெஸ்” என்ற அமோஸ், “நாளை மறுநாள் அவனுக்கு அனிவெர்சரி. அன்னைக்குத்தான் அவளை தூக்குறோம். அவனை கதறவிடுறோம்” என்ற அமோஸ் அந்நொடிக்காக ஆவலாகக் காத்திருக்கிறான் என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது.
“ஆள் ரெடியா பாஸ்?”
“எல்லாம் நான் பக்காவா பிளான் பண்ணிட்டேன் ரேமண்ட். இந்த முறை அவன் தப்பிக்கவே முடியாது” என்ற அமோஸ் தன்னுடைய ஆறாம் விரலை தரையில் போட்டு காலால் நசுக்கினான்.
தன்னை எதிர்த்து, தன் திட்டத்தை தவிடுபொடியாக்கி தன் சாம்ராஜ்யத்தையே அசைத்து பார்த்த பாரியையே தன் காலால் மிதிக்கும் திருப்தி அவனுள்.
அவனுடைய திட்டம் ஈடேறுமா. பாரி அவனுக்கு அடிபணிந்திடுவானா?
______________________
இரவு நேர விருந்து கொண்டாட்டத்தோடு லீலா, தீபன் காதல் கைகூடிய மகிழ்வையும் பகிர்ந்துகொண்டு அவரவர் இல்லம் சென்றிட ஆயத்தமாகினர்.
முந்தைக்கு இப்போது இன்னும் சோர்வாக உணர்ந்தாள் பூ.
“என்னால பைக்கில் வரமுடியும் தோணல வேந்தா?” அவன் மீதே சரிந்து நின்றாள்.
“மதியம் சாப்பிடலையா பூ. இப்போ ஜூஸ் அண்ட் ஸ்னாக்ஸ் சாப்பிட்டதான!” என்றவன் “சரியான தூக்கம் இல்லாததால் இருக்கும்” என்று தானே யூகித்துக் கூறினான்.
வேலை விடயமாக பல இரவுகள் தூங்காமலிருக்கும் பாரி, வேலை முடிந்த பின்னர் தான் தன்னுடைய சோர்வை உணர்வான். அதுபோல் எண்ணிவிட்டான்.
“ஹாஸ்பிட்டல் போகலாமாடா?”
“இல்லை வேண்டாம் வேந்தா” என்றவள், “தூங்கி எழுந்தா சரியாகிடும்” என்க, அவியிடம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை கொடுத்துவிட்டு அவனின் காரை வாங்கிக்கொண்டு பூவை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
லீலாவை தீபன் விட்டுவிடுவதாக சொல்ல அவியும், ஜென்னும் விடைபெற்றனர்.
வீட்டிற்கு செல்லும் வழியில் பூவிற்கு பார்வதியிடமிருந்து அழைப்பு வர, அலைபேசி ஒலித்துக் கொண்டிருக்கும்போதே அணைந்து போனது.
இந்நேரத்தில் அவசியமில்லாது அழைக்கமாட்டார் என்பதால்,
“அத்தை கால் தான் வேந்தா. மொபைல் ஆஃப். உன் மொபைல் கொடு” என்று பூ கேட்டதும் ட்ரைவ் செய்து கொண்டிருந்தவன் தன்னுடைய சட்டை பையிலிருந்து அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அலைபேசியை வாங்கியவள் கடவுச்சொல் முறை மாறியிருக்க,
“என்னடா பேட்டர்ன் லாக் மாத்தியிருக்க. பின் நெம்பர் என்ன?” எனக் கேட்க, அவன் சொல்லிய எண்கள் அவர்களது திருமண நாளை குறிப்பிட விழி விரித்து அதிசயித்து கணவனை பார்த்தாள்.
‘அப்போ இவனுக்கு கல்யாண நாள் நினைவிருக்கா?’ உள்ளுக்குள் பொங்கும் உணர்வை கடந்து மீள முடியாது, பாரியின் பக்கம் நகர்ந்து அவனின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்து விலகினாள்.
“ஹேய் மலரே!” என்றவன், கையில் தடுமாறிய வண்டியை சடுதியில் சீர்ப்படுத்தி செலுத்தினான்.
“சொல்லிட்டு பண்ணமாட்டியாடி?”
“எனக்கு தோணுச்சு. சொல்லிட்டு உன் பெர்மிஷன் கிடைத்து பண்றளவுக்கு பொறுமை இல்லை” என்றவள் மீண்டும் முத்தம் வைத்திட, அவன் காரினை சாலையோரம் நிறுத்திவிட்டான்.
“நீ மொத்தமா கொடுத்து முடி. கிளம்பலாம்” என்றான் சட்டமாக.
“அவ்வளவுதான். கிளம்பு நீ!”
“என்ன விளையாடுறியா? நல்ல பிள்ளையா ட்ரைவ் பண்ணிட்டு இருந்தவனை சீண்டிவிட்டுட்டு, இப்போ ஒண்ணுமில்லைன்னு சொல்லுற” என்று தன்னிலையில் அடம் பிடித்தான்.
“தூக்கம் வருதுடா?”
“அது மேடம் முத்தம் கொடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” என்றவன் தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்ட பின்னரே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான்.
பூவிற்கு முயற்சி செய்து பார்த்துவிட்டு பாரிக்கே அழைத்துவிட்டார் பார்வதி.
“சொல்லுங்க அத்தை?”
“லீ பொண்ணு இன்னும் வரலையே தமிழ்.”
“தீபன் டிராப் பண்ணிடுவாரு அத்தை” என்றவள் பரிதி சொல்லியது நினைவு வந்தவளாக “எந்த அரேன்ஞ்மெண்ட்ஸும் வேண்டாம் அத்தை. எனக்கு அந்தநாள் முழுக்க வேந்தனோட தனியா இருக்கணும்” என்று அருகிலிருக்கும் பாரிக்கு கேட்டுவிடாது மெல்ல கிசுகிசுத்தாள்.
பூவின் மனம் புரிந்த பார்வதியும் அவளின் விருப்பத்திற்கு சந்தோஷமாகவே சம்மதம் வழங்கினார்.
பார்வதிக்கு மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே தீபனைப்பற்றி தெரியும் என்பதால் அவனுடன் லீ வருவதை அவர் தவறாக எண்ணவில்லை.
“ஓகே பை அத்தை. குட் நைட்.”
அழைப்பை துண்டித்து அலைபேசியை அவனது சட்டை பைக்குள் வைத்தவள், இருக்கையில் சரிந்து அமர்ந்தாள்.
“முடியலையாடா? உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா?”
பூவின் முறைப்பில் கேட்டதையே மறந்துபோனான்.
“அப்படியென்ன மாமியார் மருமகளுக்குள்ள ரகசியம்?” என அவள் மெதுவாக பேசியதை குறித்துக் கேட்டான்.
“அதான் ரகசியம் அப்படின்னு நீயே சொல்லிட்டியே வேந்தா! அப்புறம் ஏன் கேட்குற?”
“ரொம்பத்தான்” என்றவன் “போடி” என வாயசைத்தான்.
அதில் வாய்விட்டு சிரித்தவளின் புன்னகை முகம் அவனை ரசிக்கத் தூண்டியது.
சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்துசேர்ந்தனர்.
பாரி தன்னை சுத்தப்படுத்தி ஆடைமாற்றி வருவதற்குள் பூ உறங்கியிருந்தாள்.
‘ரொம்ப படுத்துறனோ!’ என ஆழமாக தன்னவளின் முகத்தையே பார்த்திருந்தவன், அவளின் நெற்றி கேசம் ஒதுக்கிவிட்டு ஓசை எழுப்பாது அறை கதவினை திறந்து சமையலறை சென்றான்.
தனக்கு பால் கலந்து குடித்தவன், பூவிற்கும் ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
அசந்து உறங்குபவளை எழுப்ப மனமின்றி அவளின் அருகில் அமர்ந்து தூங்கும் தன்னவளின் மலர் முகத்தையே ரசித்தபடி இருந்தவன், பார்ட்டியிலும் அவள் சரியாக உண்ணாததை நினைத்து மெல்ல எழுப்பினான்.
“தூக்கம் வருதுடா!” அத்தனை சோர்வு அவளிடம். அவளின் உடலுக்கு ஏதேனும் சுகமில்லையோ என்று பாரிக்கு லேசான பயம் கூட எட்டிபார்த்தது.
உடல் சூட்டை அதற்குரிய கருவியை வைத்து பரிசோதித்து சாதாரண நிலையில் தான் இருக்கிறதென்று தெரிந்த பின்னரே சீரானான்.
“பூ எழுந்திருடா! பால் குடிச்சிட்டு படுத்துக்கோ” என்று அவளை பிடித்து எழுப்பியவன் தன்மீது சாய்த்தபடி தானே பாலினை புகட்டி படுக்க வைத்தான்.
“வேந்தா” என்று பூ தன்னுடைய இரு கைகளையும் விரிக்க… தம்ளரை கீழே வைத்தவன் அவள் கைகளுக்குள் அடைந்து அவளுடன் உறங்கிப்போனான்.
சில நிமிடங்களில் பாரி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிட, உறக்கத்தில் அவஸ்த்தையாக நெளிந்த பூ, வேகமாக குளியலறை நோக்கி ஓடினாள்.
சற்று நேரத்திற்கு முன் குடித்த பால் முதல், மதியம் சாப்பிட்ட உணவு வரை ஓங்கரித்துக்கொண்டு வெளியேற்றியவள் முகத்தை குளிர்ந்த நீரால் அடித்து கழுவினாள்.
அருகில் பூ இல்லையென்ற அடுத்த நொடியே விழித்த பாரி, குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு மீண்டும் உறக்கத்திற்கு சென்றான்.
முகத்தை துடைத்தபடி மெத்தையில் பாரிக்கு அருகில் வந்தமர்ந்தவள்,
“ரெண்டு நாளா ஏன் இப்படியிருக்கு? டயர்ட்னெஸ் ஓகே. பட், வாமிட்?” யோசித்தவளுக்கு ஒன்றும் விளங்காநிலை.
‘எழுப்பி சொல்லலாமா?’ என பாரியை பார்த்தவள், ‘வேண்டாம் எனக்கு ஒண்ணுன்னா சின்ன விஷயத்தைக்கூட பூதகண்ணாடி வச்ச மாதிரி பெருசா பார்ப்பான்’ என்று புறம் ஒதுக்கினாள்.
“ஒருவேளை அன்னைக்கு நைட் நூடுல்ஸ் சாப்பிட்டது சேரலையோ” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், திடீரென நினைவு வந்தவளாக அருகிலிருந்த அலைபேசியை எடுத்து தேதியையும் மாதத்தையும் பார்த்தாள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தள்ளி போயிருந்தன.
‘இதெப்படி கவனிக்காம விட்டோம்’ என்றவளுக்கு கண்டிப்பாக அதுவாகத்தான் இருக்குமென்று மனம் அடித்துக் கூறியது.
மனதின் பூரிப்பில் விரல்கள் நடுக்கம் கொள்ள, கணவனின் விரல்களோடு இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
“வேந்தா…” பனித்த கண்களோடு, உதடு துடிக்க மனதோடு அரற்றினாள். பலமுறை அவனின் பெயரை முணுமுணுத்தாள்.
தன்னவனிடம் சொல்லிட நினைத்து அவனை எழுப்பியவள், ‘ஒருவேளை இல்லன்னா ஏமாந்துடுவான். நாளைக்கு கன்பார்ம் பண்ணிட்டு வெட்டிங் டே கிஃப்ட்டா, இதை சொல்வோம். இன்னும் ஒருநாள்’ என தனக்குள் அவள் உழன்று கொண்டிருந்தாள்.
பூ உலுக்கியதுமே எழுந்து அமர்ந்த பாரி அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்தவனுக்கு, அவளிடம் தோன்றி மறைந்த பல வர்ணஜாலங்களுக்கான காரணம் தெரியவில்லை.
“என்னடா, தூங்கலையா?”
பாரி கேட்டதற்கு பதிலேதும் சொல்லாதவள், அவனை கட்டிக்கொண்டு மார்பில் தலை வைத்து கண்களை மூடிக்கொண்டாள்.
“எதுக்கு எழுப்புன?”
“இதுக்குத்தான்” என்றவள் முகம் உயர்த்தி அவனின் தாடையில் இதழ் பதித்தாள்.
“ஏதோ பொய் சொல்லுற மாதிரி இருக்கே?”
“ஆஹான்… அப்போ உண்மையை கண்டுபிடிங்க காக்கி” என்றவள் அவனின் முகம் முழுக்க முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.
“ஹேய் மலரே!” என்று புன்னகையை பூசிக்கொண்டவன், “ரெண்டு நாளா ரொம்ப படுத்திட்டோமேன்னு கொஞ்சம் அமைதியா இருந்தா, ரொம்ப டெம்ப்ட் பன்ற மலரே!” என்றான்.
“நான் வேணான்னு சொல்லலையே!” என்று குறும்பாகக் கூறியவள்,
“அப்போ உனக்கு ஓகேவா பூ” என்று அணைப்பை இறுக்கியவனின் வேகத்தில் சுதாரித்தவள், ‘இந்நேரத்தில் இது சரியா’ என்ற எண்ணம் எழ, “நாட் ஓகே” என்றவளாக இமை மூடினாள்.
பாரியும் அவளின் அணைப்பே போதுமென நெற்றியில் இதழ் பதித்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
*****
இரவு வெகு தாமதமாக தூங்கியதால் காலை எட்டு மணியை கடந்த பின்னரே பாரி கண் விழித்தான்.
அதிசயத்திலும் அதிசயமாக அன்று அவனுக்கு முன்பாகவே எழுந்திருந்த பூ குளித்து முடித்து வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
“பூ…” ஆச்சரியமாக விளித்தான்.
“எழுந்துட்டியா வேந்தா?” எனக் கேட்டவள், “நான் போறதுக்குள்ள எழும்பாம போயிடுவியோன்னு நினைச்சேன்” என்றவளிடம் அதீத பரபரப்பு.
“காலையிலே இவ்வளவு வாசமா எங்க கிளம்பிட்ட?” என்றவன் எட்டி அவளின் கையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.
“போயிட்டு வந்து சொல்லவா?”
அவள் அவ்வாறு கேட்கவும் அவனால் சொல்லித்தான் ஆகவேண்டுமென வற்புறுத்த முடியவில்லை. அவள் அவனிடம் மறைக்க நினைக்கவில்லை. வேறு ஒன்றை பொய்யாகவும் சொல்லவில்லை. அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. புரிதல் உள்ள உள்ளங்களுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொன்றிற்கும் விளக்கங்கள் தேவைப்படாது.
“ம்” என்றவன் அவள் கையில் கட்டுவதற்காக எடுத்த ஸ்ட்ராப்பை அவனே கட்டிவிட்டான்.
“எங்க போனாலும் ரொம்ப கவனமா இருக்கணும். தெரியாதவங்க யாரோடவும் பேசக்கூடாது. யாராவது வந்து பேச்சுக்கொடுத்தாலும் ஒதுங்கி போயிடணும். உனக்கு எதாவது தவறா மனசில் பட்டால் உடனடியா எனக்கு கால் பண்ணிடனும்.” தன் மகவிற்கு அறிவுரை சொல்வதைப்போல் எடுத்துக் கூறினான்.
“என்னடா சின்ன பிள்ளைக்கிட்ட சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்க!” பூ அவனை கேலி செய்து சிரித்தாள்.
“பீ சீரியஸ் மலரே” என்றவனின் அதட்டலில் சரியென அவனுக்கு தலையாட்டினாள்.
“நான் கவனமா இருக்கேன் வேந்தா” என்றவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“எனக்காக மலரே! நானிருக்க வரை நீயும் இருக்கணும். உன்னோட இந்த சேஃப்டி எனக்காகன்னு நினைச்சிக்கோ!” இப்படி அவன் சொல்லும்போது அவளுக்கு எப்படி இருக்கிறதாம். அவனுக்காக அவள் வேண்டுமெனும் போது அசட்டையாக இருந்திட முடியுமா என்ன? அவனின் உயிர் அவளென்று இதைவிட அர்த்தமாக சொல்லிட முடியுமா?
தன் முகத்திற்கு மிக அருகிலிருக்கும் அவனது முகத்தை கூர்ந்து இமை சிமிட்டாது பார்த்தவள், அவனின் மீசையின் நுனி திருகி முத்தம் வைத்தாள்.
“என்னடா?”
கண் சிமிட்டி தோள் உயர்த்தி இறக்கியவள், “லவ் யூ டா காக்கி” என்று மொழிந்தாள்.
பலமுறை… ஒரு நாளில் இரு முறையாவது இவ்வார்த்தைகளை பூ பாரியிடம் காதலாய் சொல்லிவிடுவாள். ஆனால் கேட்கும் அவனுக்கு ஒவ்வொரு முறையும் புதிதாய் தோன்றும். தேகம் சிலிர்த்து அடங்கும். இதயம் எம்பி குதிக்கும். மனதின் ஓசை அதிகரிக்கும். மூச்சுக்குழல் தவிக்கும். இப்போதும் அவ்வுணர்வுகளில் சிக்கியவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு அவளின் வெற்றுத்தோளில் நாடி பதித்து அக்கணம் கொடுக்கும் சுகத்தை உள்ளூர ரசித்தான்.
அவளுக்கு காதலை காட்டிடத் தெரிந்தது இவ்வார்த்தைகளை மொழிவது தான். அது அவனுக்கும் பிடித்தே இருந்தது.
“வேந்தா…”
அவனுடன் அந்நிலையில் அப்படியே இருந்திட அவளுக்கும் ஆசைதான். ஆனால் யூகிக்கும் எண்ணத்தை நிஜமென உறுதி செய்திட அவள் மனம் அடித்துக்கொள்கிறதே. அவ்விடயம் உண்மையென்றால் இதைவிட பலமடங்கு மகிழ்வைத் தருமல்லவா!
அதனால் அவனின் மோன நிலையை மனமேயின்றி தானே கலைத்தாள்.
“ஹோ சாரிடா. நீ அவசரமா போக கிளம்பிட்டிருந்தல?” என்றவன், அவளை இறுக்கமாக அணைத்து விடுவித்தான்.
“எதுல போற?”
“கேப் புக் பண்ணிருக்கேன் வேந்தா” என்றவள் அவனிடம் சொல்லிவிட்டு வெளியில் வர, கேப் தயாராக இருந்தது.
வேகமாக வெளியில் ஓடி வந்த பாரி,
“நான் டிராப் பண்ணவா பூ?” எனக் கேட்டிருந்தான்.
“பாருடா காக்கிக்கு என்னை டிராப் செய்யுற அளவுக்கு ஃபிரீ டைம் இருக்கா?” என்று கேட்டவள், “நான் பத்திரமா போயிட்டு வருவேன் வேந்தா, உனக்கு எவ்ரி ஹால்ப் ஹவர் கால் பன்றேன் ஓகேவா” என்றவள் அவன் அப்போதும் அவளை தனித்துவிட யோசிக்கும் முக பாவம் கண்டு, ‘உண்மையை சொல்லலாமா?’ என்று நினைக்கும்போதே, ‘அப்படியில்லைன்னா?’ என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது.
“மூஞ்சி அப்படி வச்சிக்காதடா, வேணுன்னா நான் போகல” என்றவள் அவனின் அருகில்வர…
“அம் ஓகேடா! நீ போயிட்டு வா” என்றவன், அவளின் முகத்தில் பார்வை ஊர்ந்து கையில் நிலைக்கவிட்டு “பத்திரம்” என்றான்.
“ம்ம்ம்” என்றவள், “டிஃபன் நானே செஞ்சிட்டேன்” எனக்கூறி கேபில் ஏறி சென்றுவிட்டாள்.
என்னவோ என்றுமில்லா உணர்வு பாரியை அலைகழித்தது. பூ சென்ற திசையையே பார்த்து நின்றவன், தன் இதயப்பகுதியை நீவி விட்டுக்கொண்டான்.
‘நானே கூட்டிட்டு போயிருக்கலாமோ?’ என நினைத்தவன் வீட்டிற்குள் செல்ல, டீபாயில் சிறிய காகிதம் படபடத்தது.
“நீயே என்னை கூட்டிட்டு போயிருக்கலாமோன்னு யோசிக்காம ட்யூட்டிக்கு கிளம்புடா!” என்று பூ அதில் எழுதியிருந்ததை படித்தவனின் இதழ் மெல்லியதாக விரிந்தது.
‘எப்படித்தான் என் மைண்ட் தின்க் பண்ணுறதையெல்லாம் கண்டுபிடிப்பாளோ!’ என்றவன் தன்னுடைய காலை நேர வேலைகளை செய்யலானான்.
எப்போதுமே காக்கி உடையில் பாரியின் தோற்றம் தனி அழகு தான். மிடுக்குடன் ஒருங்கே இணைந்த கம்பீரம். அதிலும் கூரிய பார்வையோடு, உதட்டில் லேசான புன்னகையோடு புருவத்தை ஒரு விரலால் அவன் கீறிவிடும் தருணம் பார்ப்பவர் ஒரு கணம் ஸ்தம்பித்து மீள்வர்.
இப்போதும் கண்ணாடி முன்பு அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.
“எல்லார் முன்னாடியும் இதை செய்யாத வேந்தா… சைட் அடிக்கப்போறாங்க!” என்றோ ஓர் நாள் அவனின் மனைவி சொன்னது நினைவில் எழுந்து வெட்கம் கொள்ளச்செய்தது. அந்த வெட்கம் அவனை மேலும் வசீகரமாகக் காட்டியது.
மனைவி என்றாலே பாரியிடம் தனி பொலிவு தான்.
“மேடம் இவ்வளவு சீக்கிரம் எழுந்து குக்லாம் பண்ணிட்டு போயிருக்காங்க. ஒருவேளை பொறுப்பாகிட்டாளோ!” பாரி தனக்குத்தானே கேட்கும் போதே, ‘உன் விடயத்தில் அவள் எப்பவுமே பொறுப்புத்தான்’ என்று அவனின் மனம் கொட்டியது.
உணவு மேசை மீதிருந்த கிண்ணத்தை திறக்க…
தேய்ங்காய் பாலில் மினி இட்லி வடிவலான இடியாப்பம் மிதந்து கொண்டிருந்தது.
பார்க்கும்போதே நாவில் சுவை ஊறியது.
அவனுக்கு மிகவும் பிடித்த உணவாயிற்றே, உண்ணுவதற்கு ஆர்வம் அதிகரித்தது.
“ம்ம்ம்… சமையலில் ரொம்பத்தான் தேறிட்டாள்” என்று அவன் நினைக்கும்போதே, அவளிடமிருந்து குறுந்தகவல் வந்தது.
“சாப்பிட்டு போ வேந்தா!”
‘இவள் சாப்பிட்டாளா தெரியலையே?’ அவளின் தகவலை படித்தவன், கிச்சனிற்குள் சென்று அவள் சாப்பிட்டதிற்கு சான்றாக தடயத்தை சோதித்தான்.
தான் நினைப்பது நிஜமாக இருக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் விரைந்து செல்ல வேண்டுமென அவசரமாக உண்டவள், தான் சாப்பிட பயன்படுத்திய கிண்ணம் மற்றும் ஸ்பூனை கழுவிடாது சிங்கில் போட்டுச் சென்றிருந்தாள்.
“ம்ம்ம்… சாப்பிட்டிருக்காள்.” அவன் எண்ணும் போதே, பூவிடமிருந்து மற்றொரு தகவல்.
“நான் சாப்பிட்டு தான் வந்தேன். சிங்கில் நான் சாப்பிட்ட பவுல் இருக்கான்னு செக் பண்ணாத!”
அதை படித்ததும் சத்தமாக சிரித்துவிட்டான்.
கடந்து சென்ற வருடங்களில் சிரிப்பென்ற ஒன்றையே மறந்திருந்தவனை இப்போது நொடிக்கு ஒருதரம் சிரிப்பில் திளைக்க வைத்தாள்.
“பூ… பூ… அம் கிரேசி அபௌட் யூ.”
சற்று நேரம் வரை இருந்த அலைகழிப்பு நீங்கி, அந்த காலைவேளை அத்தனை இனிமையாய் இருந்தது அவனுக்கு. அதன் இதத்தோடே உணவு உண்டவன், அவள் விட்டுச்சென்ற பாத்திரத்தையும் சேர்த்து கழுவி வைத்தான்.
வரவேற்பறை வந்தவன் நேரத்தை பார்த்தான்.
அவன் கிளம்பலாம் என வீட்டு சாவியை கையில் எடுக்க அலைபேசி ஒலித்தது.
பரிதி அழைத்திருந்தான்.
“வந்துட்டிங்களா பரிதிண்ணா?”
பரிதி வேலை விடயமாக கொல்கத்தா சென்றிருப்பது பாரிக்கும் தெரியும். அதனாலே அவன் வந்துவிட்டதாகக் கேட்டான்.
“ஈவ்னிங் பிளைட் வேந்தா. இன்னைக்கே வந்துடுவேன்” என்ற பரிதி,
“நாளைக்கு டே உனக்கு நினைவிருக்கா வேந்தா?” என தயக்கமாகத்தான் வினவினான்.
நினைத்து பார்க்குமளவிற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர், நாளைய தினம் அத்தனை மகிழ்வாய் கடக்கவில்லையே!
“நாளைக்கு என்ன?” என்ற பாரி, “உங்க ஃபிஃப்த் அன்வர்சரி தான?” என வேண்டுமென்றே வம்பு செய்தான்.
“அப்போ உனக்கு நினைவிருக்கு. நாளைக்குத்தான் உன்னுடைய வெட்டிங் டேவும் கூட, அதை நான் உனக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை இல்லையா?”
“அஃப்கோர்ஸ் பரிதிண்ணா… முன்னாடி சந்தோஷத்தில் நினைத்து பார்த்ததில்லைன்னாலும், இப்போ…” பேச்சினை நிறுத்தியவன், சிறு இடைவெளிக்கு பின் “சொல்ல தெரியல பரிதிண்ணா. இந்த டே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தோணுது” என்றவனின் இந்த வார்த்தையே தன் தம்பியின் மகிழ்வை அறிவதற்கு பரிதிக்கு போதுமானதாக இருந்தது.
“ஓகேடா… உனக்கு நினைவுபடுத்தலான்னு தான் கால் பண்ணேன்” என்ற பரிதி விடைபெற, அடுத்த நொடி மீண்டும் பாரியின் அலைபேசி ஒலித்து அவனை நடுங்கச் செய்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
25
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.
பாரி பூ