தூவானம் 47 :
தீபன் லீயை தேடாத இடமில்லை.
ஆன் சைட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு தான் வந்திருந்தான். இங்கு வந்தது முதல் லீயைப்பற்றி சின்ன விடயமாவது தெரிந்துவிடாதாயென தேடிக்கொண்டிருந்தான்.
லீக்காக அவளின் நண்பர்களைப்பற்றித் தகவல்களை கூட அறிய முயன்று மேலோட்டமாக அனைவரைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தான்.
எப்படியும் என்றாவது ஒருநாள் லீ தன்னுடைய நண்பர்களைத் தேடி வருவாளென்று நினைத்த தீபன், பாரி எங்கிருக்கின்றான் என்பதே தெரியாததாலும், பெண்ணை பின்தொடர்ந்து கண்காணிப்பது தவறு என்று ஜென் மற்றும் பூவை தவிர்த்து மிட்சமருக்கும் அவியை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்.
அப்படித்தான் அவி அவனது நண்பர்கள் மூலம் ஸ்டார்ட்டப் தொடங்குவது தெரிந்து, தானிருந்த உயர் பதவி வேலையை விட்டு இங்கு வந்து சேர்ந்தான்.
தீபனை நேர்முகத்தேர்வில் கண்டபோது அவி மற்றும் பூவிற்கு ஆச்சர்யம் தான்.
பார்த்ததும்…
“ஹாய் சீனியர்” என்று பூ உற்சாகமாக பேசிட… அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
தீபனின் முந்தைய பணி பற்றி அறிந்த அவி யோசனையாக…
ஏற்கனவே ஓரளவிற்கு தீபனை அறிந்திருந்த பூவிற்கு, தற்போதைய அவனின் நோக்கம் புரிந்து அவியிடம் பேசிட, அவனும் தீபன் இங்கு வேலை செய்வதற்கு ஒப்புதல் அளித்தான்.
தீபன் வேலையில் ஆர்வமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் லீலாவைப்பற்றி ஏதேனும் தெரிந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தான்.
தீபனின் ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லீலாவே அங்கு வந்து சேர்ந்திட… அன்று போல் இன்றும் அவளிடம் காதலை சொல்லிடத் தடுமாறி தவித்து நிற்கின்றான்.
நண்பர்களை அனுப்பிவிட்டு திரும்பி வந்த அவி, யோசனையில் நின்று கொண்டிருந்த தீபனை தட்டி நிகழ் மீட்டான்.
“என்ன சீனியர் உங்க ஆள் போனபிறகும் நின்னுட்டே கனவா?” என்ற அவியின் கேலியில் அசடு வழிந்த தீபன், சில மணித்துளிகளுக்கு பின்னரே அவனது கிண்டல் புரிந்து அதிர்வாய் அவனை ஏறிட்டான்.
“என்ன சீனியர் அப்படி பாக்குறீங்க?”
“அது வந்து அவி…”
“நீங்க லீக்காகத்தான் வந்திருக்கீங்கன்னு வந்த அன்னைக்கே தெரியும்” என்றான் அவி.
“தமிழ்…?”
“எங்க எல்லாருக்குமே தெரியும் சீனியர். ஆனால் தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியுமான்னு தான் தெரியல” என்ற அவி தன்னுடைய பையினை எடுத்துக்கொண்டு அலுவலகம் விட்டு வெளியில் செல்ல… தீபன் அவியின் பின்னால் ஓடினான்.
“எப்படி சொல்லுறது தெரியல அவி.” தீபன் வருத்தமாகக் கூறினான்.
“இப்போ லீயிருக்கும் நிலையில நீங்க சொன்னாலும் ஏத்துக்குவாளா சந்தேகம் தான் தீபன்” என்ற அவி, “பட் நடந்தா நல்லாயிருக்கும்” என்றான்.
“லீக்கு என்ன?”
“நான் அவளோட ஃபிரண்டா இருந்தாலும், அவளோட பெர்சனல் அவதான் சொல்லணும் சீனியர்” என்றவன், “எதுவுமே முயற்சி செய்தாதான் நடக்குமா நடக்காதா தெரியும். நீங்க முதலில் சொல்லுங்க” எனக்கூறி விடைபெற்றான்.
தீபன் தான் குழம்பி நின்றான்.
இத்தனை வருடங்களாகக் காத்திருப்பவனுக்கு இன்னும் காதலை சொல்லும் தைரியம் மட்டும் வரவில்லை.
“உன்பாடு திண்டாட்டம் தாண்டா தீபன்” என்று புலம்பலோடு வீடு சென்றான். அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.
****
“என்னடா டிசைன் சென்ட் பண்ணியாச்சா?”
வீட்டிற்கு வந்த அவியிடம் ஜென் கேட்டிட, அவளுக்கான பதில் வழங்கிய அவி குளியலறை சென்றிட… அவனுக்கான உணவினை எடுத்து வைத்தாள் ஜென்சி.
அவி வந்ததும் அவளே ஊட்டிவிட… இன்று அலுவலகத்தில் நடந்ததையெல்லாம் அவி ஜென்னுடன் பகிர்ந்து கொண்டான்.
“நானும் வந்திருப்பேன் நீதான் விட்டுட்டு போயிட்ட” என்ற ஜென்னை குறும்பு பார்வை பார்த்தான்.
“என்னடா அப்படி பாக்குற?”
“அல்ரெடி நீ ரொம்ப டயர்ட். இதில் ஆபீஸ் வந்து எனக்கான நேரத்தில் ஆப்பு வச்சிட்டன்னா? நான் பாவம் தானே! அதான் உன்னை ரெஸ்ட் எடுன்னு வீட்லே இருக்க சொன்னேன்” என்றவனின் வார்த்தையின் பொருள் புரிந்தவள், அவனின் தலையிலேயே நன்கு கொட்டினாள்.
“நமக்கு கல்யாணம் ஆன பிறகாவது கொட்டுறதை நிறுத்துவன்னு பார்த்தேன்” என்றவன் அவள் கொட்டிய இடத்தை தேய்த்தான்.
“இப்போ தான் இன்னும் நல்லா கொட்டுவிழும். லைசன்ஸ் இருக்கே!” என்று சொல்லிட… “கொட்டுறதுக்கு மட்டுமில்லை” என்ற அவி, அவள் திமிர திமிர படுக்கையறை நோக்கி தூக்கிச்சென்றான்.
அதன் பின் யார் கொட்டினார்கள், யார் கொட்டு வாங்கினார்கள் என்பதெல்லாம் அவர்கள் மட்டுமே அறிந்தது.
தங்களுக்கான நேரம் கடந்து ஒருவர் அணைப்பில் மற்றொருவர் இருந்திட…
“நாளையிலிருந்து நான் ஸ்டேஷன் போறேன் அவி. வீட்டில் வேலையில்லாம இருக்க போர் அடிக்குது” என்றாள் ஜென்.
“ஒரு நாளுக்கேவா” என்றவன் “உனக்கு ஓகேன்னா போ” என்றான்.
“குவார்ட்டர்ஸில் நானிருந்த வீட்டை பாரி காலி செய்து தின்க்ஸ் எல்லாம் அனுப்பிட்டான் அவி. அவனுடைய வீட்டிலிருந்த உன்னுடைய தின்க்சும் வந்தாச்சு” என்றாள் ஜென்.
“ஹ்ம்ம்…”
“எல்லாத்திலும் கவனமா, அவனை சேர்ந்தவர்களுக்காக அனைத்திலும் அக்கறையா இருக்க அவனால் மட்டும் தான் முடியும்” என்ற ஜென், “லீ விஷயத்தில் அவன் இப்படி ஒரு முடிவெடுப்பான்னு எதிர்பார்க்கல அவி” என்றாள்.
“ஏதோவொரு வகையில் நாம ஒரு குடும்பமாகிட்டோம். நமக்கும் பெரியவங்க அடிப்படையில் மாமா அத்தை இருக்காங்க. இப்போ நமக்கே நமக்குன்னு குடும்பம். என்ன தான் லீ வெளிப்படையா சொல்லல அப்படின்னாலும், அவளுக்கும் குடும்ப சூழல் ஏக்கம் இருக்கும் தான? அதை யோசிச்சுதான் பாரி இதை செய்திருக்கான்” என்று பாரியின் எண்ணம் அறிந்தவனாக அவி கூறினான்.
சில நிமிடங்கள் நிசப்தமாக கழிந்தது.
பல வருடங்களாக காத்திருந்து கிட்டிய நெருக்கம். பிரியவே மனமின்றி அந்நேரத்தை மனதால் ரசித்தபடி இருந்தனர்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜென். பாரி… ஜஸ்ட் வாவ் தான். அவனை மாதிரி ஒரு பிரண்ட் சான்ஸே இல்லை” என்றவன் உள்ளம் உணர்ந்து கூறினான்.
அதனை ஜென்னும் ஆமோதித்தாள்.
“பாரிக்காக அவனுடைய பிரண்ட்ஸையும் உறவா பார்க்கிற அவனுடைய பேரண்ட்ஸ், அதிலும் பரிதிண்ணாலாம் வேற லெவல்டா” என்றவள், “இந்த நட்பு எல்லா ஜென்மமும் தொடரனும் அவி” என்றாள்.
இருவரும் தங்களது நட்பை நினைத்து நெகிழ்ந்தனர்.
உறவாய் வாய்த்திடும் நட்பு வரத்திற்கும் மேலானது. இறைவனுக்கும் எளிதில் கிட்டிடாத வரமது.
*****
“சாப்பிட்டியா வேந்தா?”
“இல்லையே பூ” என்றவன் அறைக்குள் சென்றிட…
பத்து நிமிடங்களில் உணவு ரெடியென பாரியை அழைத்தாள் பூ.
“இவ்வளவு நேரம் ஏன் சாப்பிடாம இருந்த?”
வேலையில் பசியென்ற ஒன்றையே மறந்திருந்தான் பாரி.
அமோஸ் இங்கு வருகிறான் என்று தகவல் அறிந்ததுமே அவனைப்பற்றி அடி முதல் நுனி வரை தெரிந்துகொள்ள நினைத்த பாரி, அதிலேயே மூழ்கியவனாக நேரம் மறந்து அவனைப்பற்றி கிடைக்கும் சிறு சிறு துணுக்கு தகவல்களையும் தன் மூளையில் பதித்து ஆராய்ந்தவனாக இருந்திட… கணபதி சென்று இரவு நேரம் ஆனதை சொல்லும்வரை வெளியுலகமே அவனது நினைவில் இல்லை.
அதனை பூவிடம் சொல்ல முடியாது…
“கொஞ்சம் சீரியஸ் கேஸ்” என்று சொல்லிட, பூவின் முகத்தில் அப்பட்டமான பயம்.
அதனைக் கண்டு தன்னையே மனதால் நிந்தித்தவன்,
‘போச்சு திரும்ப வேலையை விடுன்னு சொல்லப்போறாள்’ என அவன் நினைத்து முடிக்கும் முன்னர்…
“எவ்வளவு சீரியஸான கேஸா இருந்தாலும். ரொம்ப கவனமா இரு வேந்தா” என்றாள் பூ.
அவளிடம் இதனை பாரி நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
“பூ…” பாரி அவளை ஆச்சரியமாக விளித்திட…
“நான் சொல்லுறதை இந்த விஷயத்தில் நீ கேட்கப் போவதில்லைன்னு ஆகிப்போச்சு. அப்புறம் அதையே பேசி உன்னை டென்ஷன் பண்ண எனக்கு விருப்பமில்லை வேந்தா” என அப்பேச்சை முடித்துக்கொண்டாள்.
அவளின் புரிதலான பேச்சில் அவள் மீதான காதல் எம்பி குதிக்க… “முத்தா மலரே” என்றவன் அவளை அணைத்து விடுவித்து உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.
“என்ன டிஃபன்?” எனக் கேட்டவனின் முகம் அவள் வைத்த நூடுல்ஸை கண்டதும் அஷ்டகோணலானது.
“என்னடி இது?”
“நூடுல்ஸ் டா!”
“இதெல்லாம் சாப்பாடாடி? இதை மனுஷன் சாப்பிடுவானா?” என்று கேட்ட பாரி, “நான் தனியா இருந்தப்போவே ஒருநாளும் இதை சாப்பிட்டதில்லை” என்று தட்டை நகர்த்தி வைத்தான்.
“எனக்கு இதுதான் செய்ய தெரியும் வேந்தா. தோசை தான் நல்லா வரும். அது செய்ய மாவு இல்லையே” என பூ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினாள்.
“எதே… சுடு தண்ணியில் போட்டு எடுக்கிறதெல்லாம் செய்றதா?” என்றவனின் கிண்டலில் மேலும் அவளின் முகம் சுருங்கியது.
“முகத்தை அப்படி வைக்காதடி” என்றவன் நகர்த்தி வைத்த தட்டை மீண்டும் கையிலெடுத்து உண்ண ஆரம்பித்தான்.
“அவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணும் சாப்பிட வேண்டாம்.”
“அப்போ செய்ததை என்ன பண்றதாம்” என்றவன், “எனக்காக என் பொண்டாட்டி செய்திருக்கா(ள்), சாப்பிட்டுதானே ஆகணும்” என்றவன், அவளுக்கும் ஊட்டிவிட்டபடி சாப்பிட்டான்.
“உனக்கு சமைக்கத் தெரியாதுன்னு தெரியும். ஆனால் இந்தளவுக்கு எதிர்பார்க்கல” என்ற அவனின் கேலியில் சிலிர்த்தவள், “காஃபி, ஆம்லெட், தோசை எல்லாம் செய்ய தெரியும்” என்று மிதப்பாக சொல்லிட…
பொங்கி வரும் சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி…
“ஆமாம்… ஆமாம்… இதெல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய டிஷ்ஷஸ் தான்” என்றவன் என்ன முயன்றும் சத்தமாகா சிரித்திட “போடா” என்று கோபமாக அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அதற்குமேல் அவனாலும் அந்த நூடுல்ஸினை உண்ண முடியுமென்று தோன்றவில்லை, அதற்காக உணவினை வீணடிக்கவும் மனமின்றி எப்படியோ விழுங்கி காலி செய்தவன் பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டே தங்களது அறைக்குள் சென்றான்.
பாரி அறைக்குள் வந்த அரவம் தெரிந்தும் உடல் குறுக்கி படுத்திருந்தவள் தன்னிலையில் மாற்றமின்றி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“தூங்கலன்னு தெரியும். ரொம்ப பண்ணாத மலரே!” என்றவன் அவளை நெருங்கி படுத்தான்.
வேகமாக எழுந்து அமர்ந்தவள், “அப்படி என்ன பண்றாங்கலாம்?” என்றிட,
அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டவன் அவள் பண்ணுவதையெல்லாம் கிசுகிசுப்பாக அவளுக்கு மட்டும் காதில் மொழிந்திட,
மொத்த நாணத்தையும் முகத்தில் கொண்டுவந்து அவன் மீதே தன்னை மறைத்துக்கொண்டாள்.
“இதுக்கேவா” என்றவன் மேலும் ரகசியமாக பேசிட… பெண்ணவள் அவனுள் பாந்தமாய் அடங்கினாள்.
“இன்னும் நிறைய இருக்கு மலரே” என்றவன் மனைவியை வார்த்தையாலேயே தவிக்க வைத்தான். சிலிர்க்கச் செய்தான். மொத்தமாக ஆட்டுவித்தான்.
“போதும்… போதும்…” என்றவள் அவனின் வார்த்தைகளை தனக்குள் விழுங்கிக்கொண்டாள்.
அவன் எதிர்பார்த்தது கிட்டிட சந்தோஷமாகவே தன்னவளுள் அடங்கி ஆர்பரிப்பாய் தனக்குள் பொத்திக்கொண்டான்.
“லவ் யூ வேந்தா…”
“நானும் மலரே!”
அவர்களின் வாழ்வு மட்டுமல்ல அவர்களைச் சார்ந்த உறவுகளின் வாழ்வும் அழகாய் நதியென சென்றது. மகிழ்வை மறந்திருந்தவர்களின் நாட்கள் ஒவ்வொன்றும் நொடிக்கு நொடி ஆரவாரமான மகிழ்வோடு கடந்து கொண்டிருந்தது.
இந்த இன்பம் போதுமென நினைத்ததோ காலம்.
எதற்கும் கலங்கி நின்றிடாத பாரி வேந்தனை இரண்டாம் முறையாக கலங்கி நிற்க வைத்தது.
*****
அன்று வேலை முடித்து வீட்டிற்கு வந்த பாரி யோசனை படிந்த முகத்துடன் அமர்ந்துகொண்டான்.
அவனின் வருகை உணர்ந்து உடை மாற்ற சொல்லி கிச்சனில் வேலையாக இருந்த பூ அவனில் மாற்றமில்லை என்றதும் அருகில் வந்து அமர்ந்தாள்.
இப்போதெல்லாம் பூ எளிமையான உணவு வகைகளை சமைக்க பழகியிருந்தாள். எல்லாம் பாரியின் உபயம்.
தான் சமைக்கும்போது அவளுக்கும் கற்றுக்கொடுத்தான். எதை கற்பித்தான், அவள் எதை கற்றாள் என்பதை அவர்கள் அறிந்ததாகவே இருக்கட்டும்.
பாரிக்கு பிடித்த உணவாக தினமும் ஒன்றை செய்து அவனுக்கு ஊட்டிவிட்டி மகிழ்வாள்.
இன்றும் அப்படி சிற்றுண்டி வகையை செய்து கொண்டிருந்தவள் அவனின் அமைதி உறுத்த, அடுப்பை அணைத்துவிட்டு வந்தாள்.
கணவனின் முன்னெற்றி கேசம் ஒதுக்கி…
“என்னாச்சுடா?” என்று அவள் வினவிட,
பாரி பூவின் கையை அழுத்தமாக, இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.
அமோஸ் வந்துவிட்டான். வந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. இருப்பினும் அவனது திட்டம் என்னவென்று பாரியால் கண்டறிய முடியவில்லை. எப்டியெப்படியோ பல கோணங்களில் அமோசின் நகர்வு இப்படித்தான் இருக்குமென்று ஆராய்ந்து பார்த்துவிட்டான். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு அமைதியை ஆயுதமாகக் கொண்டு அவனிருக்க பாரியால் எதையும் சரியாகக் கணிக்க முடியவில்லை.
தாம் எத்தகைய பலம் கொண்டவனாக இருப்பினும்… எதிரி ஒரு அடியாவது எடுத்து வைத்தால் தான், நாம் நம்முடைய பலத்தை காட்டிட முடியும்.
அவன் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்ப்பவனாக இருந்துவிட்டால் நமக்கு வேலையில்லாமல் போய்விடும்.
எதிராளியின் அமைதியே நம்மை நிதானம் இழக்கச் செய்திடும்.
இப்போது பாரியும் நிதானம் இழந்து தான் நிற்கின்றான்.
சத்யாவின் மூலம் அமோஸ், ரேமண்ட் உடன் சென்னை வந்துவிட்டான் என்று அறிந்த பாரி… தன்னைச்சுற்றி இருப்பவர்களின் மீது அதீத கவனம் வைத்தவனாக, அமோசின் அதிரடியை எதிர்பார்த்திருக்க… அவனோ சுற்றுலா வந்தவனைப்போல் நாள் ஒன்றிற்கு ஒரு இடமென ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
எந்தவொரு அமைதிக்குப் பின்னும் நிகழும் நிகழ்வுகளின் தாக்கங்கள் யாவும் எழுந்து மீண்டுவர முடியாதளவிற்கு நம்மில் தாக்கத்தை உண்டு செய்திடும். அதிலிருந்து மீள்வது அத்தனை சுலபமானதாக இருக்காது.
அதை எண்ணியே பாரியிடம் யோசனை.
இப்படி தாக்குவானோ, அப்படி செய்வானோ என்று தினமும் ஒரு யூகத்தில் அமோஸ் பற்றி சிந்தித்தே பாரி மீள முடியாத யோசனையில் உழன்று கொண்டிருக்கிறான்.
பூ என்னவென்று கேட்டதும், அமர்ந்திருந்த நீளிருக்கையிலேயே அவள் மடிமீது தலை வைத்து கண்களை மூடிக்கொண்டான்.
“என்ன பண்ணுது வேந்தா?”
பூவின் குரலில் கலக்கத்தை உணர்ந்தவன்,
“நத்திங் ஹேப்பண்ட் மலரே!” என்றிட அதை நம்பாது ஏறிட்டாள்.
“ஜஸ்ட் வொர்க் டென்சன் டா” என்றவனின் கைகளை தன்னுடைய கைகளுக்குள் வைத்துக்கொண்டாள்.
“உனக்கு வொர்க் டென்சனா வேந்தா. பெரிய பெரிய கேஸெல்லாம் ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணிருக்க. நீ இப்படி சொன்னா அதை நான் நம்புவேனா?” எனக் கேட்டு, “எதுவாயிருந்தாலும் நிதானமா கூல் மைண்ட் செட்டா டீல் பண்ணுவியே, அப்படியே பண்ணு. உன்னை மீறி எதுவும் நடக்காது. நடக்கவும் விடமாட்ட” என்றிட, தன்னவள் தன்மீது கொண்ட நம்பிக்கையான பேச்சில் அதுவரை மனதிலிருந்த குழப்பமான யோசனைகளை எல்லாம் கலைந்து தூர எறிந்தான்.
“இது இப்படி இருக்குமோ, அது அப்படி இருக்குமோன்னு யோசிக்கிறதெல்லாம் உன் ஸ்டைல் கிடையாது. போறபோக்குல என்ன நடக்குதோ, அதோட வழியில முடிச்சிட்டு போய்டுவ. இப்பவும் அப்படியே இரு. நீ எதிர்பார்க்கிறது நடக்கலன்னா அந்த விஷயத்தில் எதிர்பார்க்கிறதையே விட்டுடு வேந்தா. நடக்கும்போது நடக்கட்டும். நிச்சயம் உன்னைத்தாண்டி நடக்கப்போவதில்லை” என்று மேலும் அவனின் மனம் தெளியும்படி பேசியவள், “என்னோட காக்கிக்கு இந்த சீரியஸ் முகம் செட்டாகல” என்று அவனின் காதுமடல் உரச குனிந்து பேசிட… தன்னவளின் முகத்தை அவளின் மடியில் படுத்தவாறே தன் முகம் நோக்கி வளைத்து இழுத்தவன் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.
நீண்ட நெடிய முத்தம் வன்மையின்றி மென்மையாய்.
யார் கொடுத்தார்கள் பெற்றார்கள் என்பதெல்லாம் அவர்களே அறிந்திடாத கணம்.
தன் இணையை விலக மனமின்றி சேர்ந்தே இருந்தன.
நிலையில்லாமல் தவித்த அவன் மனதினை குளிர்விக்கும் வேலையை அவளது அதரம் செவ்வனவே செய்தது.
அவள் மூச்சுக்காற்றிற்கு தவித்தபோதும், தன் சுவாசம் கொண்டு தாங்கியவன் தன்னவளின் வதனத்தை மட்டும் விடுவதாக இல்லை.
அவனின் அமைதி, நிம்மதி, இன்பம் எல்லாம் அவளிடம் மட்டுமே என தன்னை மொத்தமாய் ஒப்புக்கொடுக்க படுக்கையறை நோக்கிச் சென்றான்.
கரையோர கடலின் ஆர்ப்பரிப்பாய் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த அவனின் மனம் அவளிடத்தில் ஆழ்கடலின் அமைதியாய் சுருண்டது.
அவளைவிட்டு நீங்கினால், தூரம் சென்ற அழுத்தம், யோசனை யாவும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ என அஞ்சி மீண்டும் மீண்டும் அவளிடம் மூழ்கி தன்னை முழுதாய் தொலைத்து முக்குளித்தான்.
கைகளில் துவண்டு சரியும் போதெல்லாம் தன்னுடைய இரு கரங்களில் மலர் பொதியென தாங்கி நெஞ்சம் சேர்த்து மஞ்சம் கொண்டாடினான்.
இரவு உணவையே மறந்தவனாக தன் பேதையை நீளா இரவில் அனிச்சையாய் மலர்ந்திடும் மலரவளை வண்டாய் குடைந்து தேனாய் சுவைத்தான்.
தன்னவனின் மனம் அறிந்தவளோ அவனுக்கு இணையாக அவன் சேர்ப்பித்திட்ட அனைத்தையும் அவனுக்கே மீண்டும் கடத்தினாள்.
____________________________
காக்கி உடையில் கண்ணாடி முன்பு நின்று கைகளால் தலை முடியை சரி செய்து கொண்டிருந்தான் பாரி.
இரவு வானில் நீண்ட தூரம் சென்ற உலாவினால் கலைந்த மேகமாய் போர்வைக்குள் சுருண்டிருக்கும் தன் நிலவவளை கண்ணாடி வழி பார்த்தவனின் அதரங்கள் மென்மையாய் விரிந்தன.
படுக்கையின் அருகில் வந்தவன் பெண்ணவளை சில கணங்கள் ஆழ்ந்து ரசித்தவனாய் அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து விலகினான்.
கணவனின் முத்தத்தை ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்தவள்,
“லவ் யூ வேந்தா” என்று பிதற்றிட,
அவனும் அவளின் முகம் நோக்கி குனிந்து எப்போதும் போல் அந்த மூன்று வார்த்தையை சொல்லாது, “நானும் மலரே” என்றான். மொத்த காதலையும் அவளுக்கு மட்டுமே கொடுத்தவனாய்.
தன் முகம் மோதும் தன்னவனின் சூடான மூச்சுக்காற்றில் தேகம் சிலிர்த்து அரை கண் திறந்து பார்த்தவள், அவனின் வசீகர புன்னகையில் தன் நயனங்களை அகண்டு அவனை விழுங்கினாள்.
சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்து இதழ் விரித்தவள் எழுந்து அமர்ந்தவளாக,
“கிளம்பிட்டியா வேந்தா?” என்றிட…
“ம்ம்ம்… மலரே” என்றதோடு, “குக் பண்ணிட்டேன். ஒழுங்கா சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பு. அவி வருவான். ஈவ்னிங் நான் பிக்கப் பண்ணிக்கிறேன்” எனக்கூறி அவளிடம் ஆயிரம் பத்திரங்கள் வழங்கிச் சென்றான்.
“இன்னைக்கு ப்ரொஜெக்ட் ரிசல்ட் அனோன்ஸ் பன்றாங்க வேந்தா?”
அவளின் குரல் கேட்டதுபோல் மீண்டும் உள் வந்தவன்,
“கண்டிப்பா உங்களுக்குத்தான் கிடைக்கும். ஆல் தி பெஸ்ட் மலரே” என்று வாழ்த்தி, அருகில் மேசை மீதிருந்த ஸ்ட்ராப்பை அவளின் கையில் கட்டிவிட்டு வெளியேறினான்.
பாரி வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய…
“வேந்தா” என்று ஓடி வந்தாள் பூ.
“மெதுவா வா மலரே” என்றவன், “என்னடா?” எனக் கேட்டிட…
அவனின் கழுத்தில் பல நாட்களாக அவன் கேட்கும் பூ என்ற எழுத்து ஊஞ்சலாடும் சங்கிலியை தானே அணிவித்தாள்.
“ஒருவழியா மனசு வந்ததா” என்றவன், சங்கிலியில் தொங்கும் எழுத்தை மெல்ல வருடினான்.
“இட்ஸ் மீனிங் அ லாட் பூ” என்றான். குரல் மென்மையிலும் மென்மையாக ஒலித்தது.
தவிப்பான நேரங்களில் எல்லாம் பாரி எந்தளவிற்கு தன்னை தேடுகிறான் என்பதை நேற்றைய இரவில் பலமுறை அவளிடம் அவன் சரணடைந்த போதே அவள் கண்டுகொண்டாள்.
வேலை நேரங்களில் அவனுடன் இருந்திட முடியாதே! அதனாலேயே மீண்டும் சங்கிலியை அவனிடம் சேர்ப்பித்திட்டாள்.
“தேன்க்ஸ் மலரே” என்றவன், “நீ எப்பவும் என்கூட இருக்கும் பீல் இந்த செயின் கொடுக்கும்” என்க,
“அதுக்குத்தான்” என்றாள்.
“ஒகேடா பை” என்றவன் கிளம்பிவிட்டான்.
செல்லும் அவனையே பார்த்து நின்றவள், அவளது அலைபேசி ஒலியில் உள்ளே விரைந்தாள்.
“ஹாய் மாமா… என்ன இவ்வளவு காலையில?”
“இன்னும் ரெண்டு நாள்ல உங்க வெட்டிங் டே வருதேடா! நான் பிஸ்னெஸ் விஷயமா கொல்கத்தா கிளம்புறேன். நாளைக்கு நைட்டு தான் வருவேன். உனக்கு என்ன கிஃப்ட் வேணும் சொன்னா, வாங்கிட்டு வருவேன்” என்றவன், “உன் அத்தை… நீங்க சேர்ந்தவர முதல் வெட்டிங் டே’ன்னு கிராண்டா செலபிரேட் பண்ணணும் சொல்லிட்டு இருக்காங்க” என்று கூடுதல் தகவலையும் கொடுத்தான்.
“என்ன வேணும் கேட்டு வாங்கிக்கொடுத்தால் அதை எப்படி மாமா கிஃப்ட் ஆகும்?”
“எனக்கு பிடித்ததை விட உனக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கணும்டா. அதுதான் கொடுக்குற எனக்கும் சந்தோஷம், வாங்கிக்கிற உனக்கும் சந்தோஷம்” என்ற பரிதியின் கூற்றில்,
“அச்சோ மாமா… இன்னைக்கு என்ன இவ்வளவு அறிவாளியா பேசறீங்க” என்று கேலி செய்தாள்.
“வாலு…” என்றவன், “யோசிச்சு சொல்லுடா. பிலைட்டுக்கு டைம் ஆச்சு” என்று வைத்துவிட்டான்.
பூ கடந்த ஒரு மாதமாகவே அவர்களின் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாள். எத்தனை திருமண நாட்கள் சென்றிருந்தாலும், அவனுடன் இணைந்திருக்க… இதுவே முதல் திருமணநாள்.
மனம் முழுக்க தித்திப்பாய் மண வாழ்க்கை சென்றிட… இந்த நாள் கூடுதல் சுவையைக் கூட்டியது.
“வேந்தனுக்கு நான் என்ன கிஃப்ட் வாங்குறது?” என்று யோசித்தவளுக்கு, ‘அவனுக்கு வெட்டிங் டே நினைவிருக்குமா?’ என்று சிந்தை ஓடியது.
“எப்படியும் நினைவிருக்காது” என்று சொல்லிக்கொண்டவளுக்கு, “அவனுக்கு பிடிக்காது நடந்த திருமணம் தானே” என்ற எண்ணம் மனதை அனிச்சை மலராய் வாட வைத்தது.
‘அவனுக்கு நினைவில் இல்லையென்றால் என்ன? முன்பு எப்படியோ! இப்போது நான் கனவிலும் நினைத்திடாத காதலை அல்லவா காட்டிக்கொண்டிருக்கிறான். இது போதுமே’ என நிறைவடைந்தவள், கடிகார ஒலியில் அகத்தின் ஓட்டத்திற்கு அணையிட்டு அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழ உலகமே தட்டாமாலையாய் சுழற்றியது. கட்டிலின் விளிம்பை பிடித்து மெல்ல அமர்ந்தவள் தலை சுற்றலை நிலைப்படுத்த கண்களை அழுந்த மூடித்திறந்து, அருகிலிருந்த நீரினை எடுத்து பருகினாள்.
நேரம் பத்தாகியும் சாப்பிடாததால் உண்டான மயக்கமென புறம் தள்ளியவள் அலுவலகம் கிளம்பி தயாராக அவி வந்து சேர்ந்தான்.
“சாப்பிட்டியா தமிழ்?”
“ஆச்சுடா” என்றவளின் குரல் சோர்ந்து காணப்பட்டது.
“என்னாச்சு தமிழ், உடம்பு சரியில்லையா?” வேகமாக பூவின் அருகில் வந்தவன், அவளின் நெற்றி கன்னமென கை வைத்து பார்த்து காய்ச்சல் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை அவி” என்றவளுக்கு, ‘இரவின் நெருக்கத்தால் உண்டான சோர்வு’ என நினைத்துக்கொண்டாள்.
“ஆர் யூ ஷுயூர்?”
“யா… அம் ஒகேடா” என்றவள் தன்னுடைய மடிகணினி அடங்கிய பையினை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அவனுடன் அலுவலகம் புறப்பட்டாள்.
“உடம்பு முடியலன்னா சொல்லுடா. பாரிக்கு தெரிஞ்சா என்னை காய்ச்சி எடுத்திடுவான்” என்ற அவியின் வார்த்தையில், பாரி தன்மீது கொண்டுள்ள அக்கறையை உணர்ந்து குளிர்ந்தாள்.
“பாருடா… உன் ஆளை பற்றி பேசினாலே எப்படித்தான் இப்படி முகம் ஜொலிக்குதோ!” என்றவனின் சிரிப்பில், அவனின் தோளிலே நான்கு அடி வைத்தாள்.
“ப்ரொஜெக்ட் நமக்கு கிடைச்சிடும் தானே அவி?”
“அஃப்கோர்ஸ் தமிழ்.” அவிக்கும் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது.
“ஜென் எப்படியிருக்காள்? பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.”
“ரொம்ப போலீஸா இருக்கா(ள்) தமிழ்” என்ற அவி, “அவகிட்ட சீண்டலுக்கு கூட ஏமாத்தி விளையாட முடியல. கண்டுபிடிச்சிடுறாள். சோஷியல் மீடியா அக்கௌண்ட் பாஸ்வோர்ட் எல்லாம் கேட்டு டெய்லி செக் பண்ணி, எதாவது பொண்ணு என்னோட போஸ்டுக்கு லைக் பண்ணா, போட்டுதள்ளுற மாதிரியே முறைக்குறா(ள்). ஓவர் பொஸஸிவ்வில் என்னை கொலையா கொல்லுறாள் தமிழ்.” அவனது பேச்சில் சிறிதும் வருத்தமில்லை. ஜென் அவன் மீது வைத்துள்ள காதலை புரிந்துகொண்ட பக்குவமே வெளிப்பட்டது. அவனுடைய காதலின் ஆழம் அவனது புரிதலில் சிறப்பு பெற்றது.
சொல்லி முடித்த அவி, பூ ஒன்றும் கூறாமல் இருக்க… “உன் ஃபிரண்டை குறை சொல்லுறேன்னு சைலண்ட்டா இருக்கியா?” எனக் கேட்டான்.
“லவ்வர்ஸ்க்கு நடுவில் நாம போகவேக்கூடாது அவி. அதுவும் கணவன் மனைவிக்கு நடுவில்…” என்றவள் வாய் மேல் விரல் வைத்து “ம்ஹூம்…” என வேகமாக இடவலமாக தலை ஆட்டினாள்.
“நீ என்னை கிண்டல் பண்றன்னு நல்லாவே தெரியுது.”
“ச்ச… ச்ச…” என்ற பூ அவியின் திருதிரு பார்வையில் சிரித்துவிட்டாள்.
“உன்னை எப்படித்தான் பாரி சமாளிக்கிறானோ?”
“அவன்கிட்டவே கேட்டுக்கோ” என்றவள் அலுவலகம் வந்துவிட, காரிலிருந்து இறங்கிச் சென்றாள்.
பூ மற்றும் அவிக்கு ஒரே அறை தான்.
அறைக்குள் பூ நுழைவதற்கு முன் அவளை தடுத்திருந்தான் தீபன்.
“என்ன சீனியர்?”
“லீயை கல்யாணம் செய்துக்கணும் அப்படின்னா யாருக்கிட்ட கேட்கணும்?”
“சீனியர்?”
தீபனின் கேள்வி புரியாது பூ அதிர்ந்து நின்றாள்.
அவளின் பின்னோடு வந்த அவி,
‘இப்போவாவது இவருக்கு தைரியம் வந்துச்சே’ என நினைத்தவனாக,
“எங்க பிரண்ட்ஸ் நாலு பேர், இப்போ அவளுடைய அம்மா, அப்பா, அண்ணா, அண்ணின்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு சீனியர்” என்று சொல்லியவன், “ஏன் சீனியர் லீக்கு எதாவது பையன் பார்த்து இருக்கீங்களா?” என படு சீரியஸாக முகத்தை வைத்தபடி வினவினான்.
“நான் தான் பையன்னு சொன்னா வேண்டான்னு சொல்லுவீங்களா?” என தற்போது நேரடியாகவே தீபன் கேட்டிட…
“ஷப்பா… ஒருவழியா இப்போவாவது கேட்கணும் வாய் வந்துச்சே” என்ற பூ, “எப்போடான்னு காத்திருக்கோம் சீனியர்” என்றாள். துள்ளலோடு.
“அப்போ உங்களுக்கு ஓகேவா?”
“எனக்கெல்லாம் காலேஜ் டேஸ் அப்போவே ஓகே. நீங்க தான் லேட் பண்ணிட்டிங்க.”
பூவின் பேச்சை நம்ப முடியாது தீபன் பார்க்க…
“நீங்க லீக்காகத்தான என்கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிங்க?”
பூ அவனின் நோக்கத்தை வெளிப்படையாகக் கேட்டதில் தீபன் அசடு வழிந்தான்.
“ஆமா இப்போ மட்டும் எப்படி தைரியம் வந்தது?”
“இப்போக்கூட அவரு லீயிடம் சொல்லல தமிழ்” என்றான் அவி.
“ஹேய்… ஆமால… லீ ஓகே சொல்லிட்டாளா சீனியர்?”
“அவள் ஓகே சொல்லுவான்னு வெயிட் பண்ணா, இந்த ஜென்மம் போயிடும் போல” என்ற தீபனிடம் அத்தனை சலிப்பு.
அச்சமயம் பூ மற்றும் அவியைத்தேடி அங்கு வந்த லீ, உடன் தீபனும் இருந்திட வந்த வழியே திரும்பினாள்.
அதற்குள் அவளை கண்டுவிட்ட பூ , லீயை அழைத்திட தீபனிடம் காட்டிடும் பாரா முகத்தை பூவிடம் காட்ட இயலாது அவர்களுக்கு அருகில் சென்றாள்.
“இன்னும் உனக்கென்ன லீ? நீயும் சீனியரை லவ் பண்றன்னு காலேஜ் டைமிலே எனக்குத் தெரியும்” என பூ கேட்டிட,
“எல்லாம் தெரிந்தும்” என்று பூவிடம் ஆரம்பித்த லீ, “நான்தான் எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலன்னு சொல்லிட்டனே. திரும்ப திரும்ப எதுக்கு டார்ச்சர் பண்றீங்க” என தீபனிடம் கடிந்தாள்.
“என்னது டார்ச்சர் பண்றனா?” என்று அதிர்ந்து வினவிய தீபன்,
“படிக்கும் காலத்திலும் சரி, இங்க உன்னை பார்த்த பிறகும் சரி, எந்த விதத்திலும் என்னுடைய நிழல் கூட உனக்கு தொல்லையா தெரிந்திட கூடாதுன்னு பார்வையால மட்டுமே காதலை கேட்டு நிற்கும் என் காதல் உனக்கு தொல்லையா?” என்று இருக்கும் இடம் மறந்து வெடித்து சிதறினான்.
“தீபன் கூல்…”
“இல்லை அவி, எப்போ என்னை டார்ச்சர் பாண்ணாதீங்கன்னு சொன்னாளோ இனியும் அவளுக்கு என் காதல் புரியாது. இவளுக்காக இவளத்தேடி எங்கெங்கெல்லாம் அலைஞ்சிருப்பேன்” என்ற தீபன் “முடியல அவி, இப்போகூட இவளா மனமிறங்கி வரணும்னு இந்த ஆயுள் முழுக்க என்னால வெயிட் பண்ண முடியும். பண்ணியிருப்பேன். ஆனால் , என் வீட்டில்… இத்தனை வருடம் அவர்களை சமாளித்த என்னால் இதற்கு மேலும் சமாளிக்க முடியல. நான் ஒரு பெண்ணை விரும்புறேன் சொன்னா, அவளை கூட்டிட்டு வான்னு சொல்றாங்க. அதுக்காக மட்டும் தான், இதுவரை மறைமுகமா உணர்த்திக்கிட்டிருந்த என்னோட காதலை வார்த்தையால வெளிப்படுத்தி டூ வீக்ஸ்சா கெஞ்சிட்டு இருக்கேன். இதிலெல்லாம் இவளுக்கு என்னுடைய காதல் தெரியலையாம். டார்ச்சராத்தான் தெரியுதாம்” என்று நீளமாக மனதில் குமுறலை வெளிப்படுத்தினான்.
பூவிற்கு தீபனின் நிலை கவலையை கொடுத்திட, லீயிடம் ஒப்புக்கொள் எனும் விதமாக பார்வையாலேயே இரைஞ்சினாள்.
பூவின் பார்வையின் பொருள் உணர்ந்த லீ,
“என் கதை தெரிஞ்சா இந்த காதலெல்லாம் காணாமல் போயிடும் தமிழ்” என்று விரக்தியாகக் கூறிட, அதுநாள் வரை மனதளவில் கொண்டிருந்த அத்தனை பொறுமையையும் தீபன் கைவிட்டிருந்தான்.
“என்னடி தெரியணும்? எனக்கு எல்லாம் தெரியும். உன்னுடைய கடந்த காலம் எப்படி வேணாலும் இருக்கட்டும், அதைப்பற்றி எனக்கு கவலையில்லைன்னு சொல்றது கூட ஒருவிதத்தில் உன்னை வருத்துமோன்னு தான் அதைப்பற்றி பேசுறதையே தவிர்த்தேன்” என்ற தீபன்,
“எனக்கு நீ மட்டும் போதும். உன்னுடைய குறை நிறை எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சரி செய்வோம்” என்றான். அத்தனை நேரமிருந்த கோபத்தை குறைத்து, சத்தம் உயற்றாது மெல்லொலியில்.
தனக்கு நடந்தது திருமணமே இல்லையென்றாலும், மற்றவர்கள் பார்வைக்கு அது திருமணம் தானே! அது தீபனுக்கு தெரிந்தால் இந்த காதலெல்லாம் காணாமல் போய்விடும் என்ற லீயின் எண்ணத்தை தீபன் தவிடுபொடியாக்கியிருந்தான்.
“இதற்கு மேல் ஒருவன் தன் காதலுக்காக பட்டவர்த்தனமாக கெஞ்சிட முடியாது லீ. அதுவும் அவர் அவருக்காக கேட்கிறதா எனக்குத் தோன்றவில்லை. உன்னை உனக்காகவே கேட்கிறார்.” பூ சொல்வது அவளுக்கும் விளங்கியது. ஆனால் தன்னுடைய மனதிலிருக்கும் தடை மீறி லீயால் வேறொரு ஆணை ஏற்க முடியுமென்று தோன்றவில்லை.
“இன்னுமா லீ தீபனுடைய லவ் உனக்கு புரியல?”
“ப்ளீஸ் அவி போதும். யாரோட லவ்வும் எனக்கு புரிய வேண்டாம். யாரும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம்” என்று தன்னுடைய கண்ணீரை மூவருக்கும் மறைத்தவள் வேகமாக ஓடிவிட்டாள்.
அவியும் பூவும் தீபனிடம் ஆறுதலாக பேச முயல…
“என்ன நடக்கணும் இருக்கோ அதுதான் நடக்கும் தமிழ்” என்ற தீபனும், “இனியும் என் அம்மாவை என்னால பிடித்து வைக்க முடியாது. இவளை அவங்க முன்னாடி நிறுத்தி அவங்க சம்மதம் வாங்கலாம் நினைத்தேன். ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால், என் ஆசை நிறைவேறாது போல. அட்லீஸ்ட் இத்தனை வருஷமா என் பேச்சுக்காகக் காத்திருந்த என் அம்மாவுடைய ஆசையையாவது நிறைவேத்துறேன்” என்று சொல்லியவனின் மனம் கனத்து கிடந்தது.
“என்னவோ… வலிக்குது தமிழ்” என்றவனின் முகம் அவனது உள்ளத்து வலியை பலிங்காய் காட்டிக்கொடுத்தது.
“என் அம்மா பார்த்திருக்கும் பெண் தான் எனக்குன்னா அதை மாத்தவா முடியும்?” என்றவன் கசங்கிய முகத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
லீயை நினைத்து இருவருக்கும் ஆயாசமாக வந்தது.
“இந்த லீக்கு இப்போ என்னதான் பிரச்சினை தமிழ்.” தீபனின் கெஞ்சல், கதறல், இரைஞ்சல், வலி என அனைத்து உணர்வுகளையும் அருகில் பார்த்த அவிக்கு லீலாவின் மீது கோபமாக வந்தது.
“அவளோட இடத்திலிருந்து பார்த்தாதான் அவி… அவளோட மனநிலை என்னன்னு தெரியும்” என்ற பூ, “நாம சீனியரோட அம்மாகிட்ட அத்தை மாமாவை பேச வைப்போமா?” என யோசனையாக வினவினாள்.
“பேச சொல்லி… என்ன பன்றது தமிழ். லீ ஒத்துக்காம நாம பேசுறது சரிவராது” என்ற உண்மை நிலையை அவி எடுத்து சொல்ல பூவிற்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“வேந்தாவிடம் சொல்லி லீயிடம் பேச சொல்லலாமா அவி. நாமெல்லாம் சந்தோஷமா இருக்கும்போது லீ மட்டும் தனியா நிக்குற மாதிரி வருத்தமா இருக்குடா?” என்ற பூவிற்கு அதற்கு மேலும் உடல் சோர்வை மறைத்து அமர்ந்திருக்க முடியுமென்ற திடமில்லை.
அப்படியே அங்கிருந்த நீண்ட கோச்சில் சென்று படுத்துக்கொண்டாள்.
அவி தமிழை நோக்கி என்னவென்று கேட்க, தீபன் அறைக்குள் வந்தான்.
“என்ன அவி மெயில் செக் பண்ணலையா?” என்று கேட்டவாறு தீபனே அவியின் கணினியில் ஆபிஸ் அபிசியல் மெயிலை திறந்து பார்த்தான்.
அப்போதுதான் அவிக்கும் ப்ரொஜெக்ட் விடயம் நினைவுவர,
“டைம் ஆனதே தெரியல தீபன்” என்ற அவியும் ஆர்வமாக தீபனுடன் இணைந்து கொண்டான்.
அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தபடி செயலியை வடிவமைக்கும் திட்டத்தை அரசு அவர்களது நிறுவனத்திற்கே கொடுத்திருப்பதாக மின்னஞ்சல் வந்திருந்தது.
அவியும் தீபனும் சந்தோஷத்தில் அணைத்துக் கொண்டனர்.
அடுத்த நொடி பூவும் தன்னுடைய களைப்பினை விரட்டி உற்சாகமாக அவர்களின் துள்ளலில் இணைந்துகொண்டாள்.
விடயமறிந்து பரிதி அலைபேசியில் அழைத்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தான்.
பாரி வேலை விடயமாக வெளியில் இருக்க… விடயம் கேள்விப்பட்டு ஜென் மட்டும் அலுவலகம் வந்தாள்.
அலுவலகமே மகிழ்ச்சியில் பரபரப்பாக இருந்தது.
அவியும், தீபனும் அனைவருக்கும் இனிப்பினை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அவி சரியாக அன்று ஜென் பூவிடம் சொல்லிய டி.எல்’க்கு இனிப்பு வழங்கும் நேரம்… ஜென் உள்ளே நுழைந்திட அவியை தீயாய் முறைத்தாள்.
“போச்சு… என்ன வச்சு செய்யப்போறாள்” என்ற அவியின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த தீபன்,
“என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றுகூறி நகர்ந்தான்.
“எடுத்துக்கோங்க மஞ்சு” என்று அவியின் அருகில் காக்கி உடையில் வந்து நின்ற ஜென்னை பார்த்ததுமே மஞ்சுவிற்கு நடுக்கமாக இருந்தது.
“சாரி மேம். அது நீங்களும் அவி சாரும் மேரேஜ் பண்ணிக்கப்போறது தெரியாம, அன்னைக்கு ஏதோ…” என்று அவள் தடுமாற,
“லீவ் இட் மஞ்சு. உங்க அவி சார் என்னைத்தவிர வேற யாரையும் நிமிர்ந்துக்கூட பார்க்கமாட்டாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவிக்கும் சேர்த்து பதில் சொல்லிய ஜென்…
“காங்கிராட்ஸ்டா” என்று அவியின் வாயில் இனிப்பை திணித்தாள்.
இந்த புரிதல் தானே காதலை குறையாவிடாது அவர்களின் வாழ்க்கையை நதிபோல் ஓடச்செய்கிறது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
43
+1
+1
1