Loading

தூவானம் 46 :

கோதை ஆரத்தி எடுக்க…

அவியும் ஜென்னும் இணைந்து அவியின் வீட்டிற்குள் காலெடுத்து வைத்தனர்.

மற்றவர்கள் அனைவரும் தில்லையின் வீட்டிற்கு சென்றிருக்க… புது தம்பதியனரை வீட்டில் விடுவதற்காக பாரி, பூ ஜோடி உடன் வந்திருந்தனர்.

கோதை பால் பழம் கொடுக்க… பூவின் கேலிக்கு நடுவில் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

“இதுக்கு அப்புறம் என்ன செய்யணுமோ உங்களுக்குத் தெரியுமே மேம், பார்த்துக்கோங்க” என்று கோதையிடம் சொல்லிய பாரி பூவை போகலாம் என்பதைப்போல் பார்க்க… செக்ரி பாரியின் கைகளை பிடித்து கண்களில் வைத்துக்கொண்டார்.

“விபத்து ஏற்பட்ட அப்புறம் தான் பாரி புரிந்தது… வாழ்க்கையில் நமக்குன்னு சொந்தம் இருக்கிறது எவ்வளவு முக்கியம். என் தங்கை என்னைத்தேடி வரலையேன்னு நானும் அப்படியே விட்டிருக்கக்கூடாது. இப்போ எங்களுக்குன்னு மகனா அவி கிடைக்க நீதான் காரணம். ரொம்ப நன்றி பாரி” என்று நெகிழ்வாகக் கூறினார்.

பாரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவியை பார்த்தான்.

செக்ரியின் அருகில் வந்த அவி…

“இப்போவாவது என்னைத்தேடி வந்தீங்களேன்னு எனக்கு சந்தோஷமா இருக்கு மாமா. இனி யாருமில்லைன்னு நாம நினைக்கக்கூட வேண்டாம்” என்றிட அவனை தன் தோளோடு தோழனைப்போல் அணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே அவிக்கு யாருமில்லையென்று அறிந்திருந்த செக்ரிக்கு தன் தங்கை இப்போது இல்லையென்பது வருத்தத்தைக் கொடுத்த போதிலும், அதனை அவியை கேட்டு மீண்டும் அவனை வேதனைக்குள் மூழ்கடிக்க வேண்டாமென்று செக்ரி மேகலையை பற்றிய பேச்சினையே தவிர்த்துவிட்டார்.

“அப்போ கிளம்புறோம் அவி” என்று பாரி நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்திட… பூ ஜென்னை அணைத்து விடுவித்தாள்.

“எவ்வளவு டேஸ் லீவ் வேணுமோ எடுத்துக்கோ அவி. ஆர்டர் வாங்குறதை நானும் லீயும் பார்த்துக்கிறோம்” என்ற பூ இருவரையும் பார்த்து ஒற்றை கண்ணடித்து “என்ஜாய் யுவர் மொமெண்ட்ஸ்” என்றிட பாரி அவளின் வாயினை பொத்தியபடி வெளியே இழுத்துச்சென்றான்.

“உங்களோட நட்பு என்னை பிரம்பிக்க வைக்குது” என்று செக்ரி சொல்லிட, அவிக்கு கர்வமாகவே இருந்தது.

“ஏண்டி இப்படி கலாட்டா பன்ற? செக்ரி சார் என்ன நினைச்சிருப்பார்?” வண்டியின் பின்னால் அமர்ந்தவளின் தலையில் திரும்பி கொட்டு வைத்தான்.

“அதெல்லாம் என்ன நினைக்கப்போறார். அவரும் இதையெல்லாம் கடந்து வந்தவர் தான” என்றவளின் இதழை வலிக்க கிள்ளி வைத்தவன், “ரொம்ப பேசுற நீ!” என்றான்.

பாரி வண்டியை முடுக்கிட சாலையில் சீறியது.

“நீ பேசுறதவிட கம்மிதான்” என்று நேற்று அவன் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்து பூ பதில் அளித்திட… புரிந்த போதிலும் பாரி எதுவும் சொல்லவில்லை.

பாரி குவார்ட்டர்ஸ் செல்லும் வழியில் செல்லாது அவர்களது வீடிருக்கும் பக்கம் செல்ல…

“அங்க போகலையா வேந்தா?” எனக் கேட்டாள்.

“இல்லை.”

“நம்ம வீட்டுக்கா போறோம்?”

“ஆமா.”

“என்னடா இப்படி ஒரு வார்த்தையில் பதில் கொடுக்குற?”

“என்னோட சேர்ந்து போகணும் தான… இத்தனை வருஷம் போகாம இருந்த? ஃபர்ஸ்ட் அதை தீர்த்து வச்சிடுறேன். என்னாலதான் நீ உன் மாமியார் வீட்டுக்கு வரதில்லைன்னு பார்வதி ஒரே திட்டு” என்றான்.

“குவார்ட்டர்ஸ் போகலாமே வேந்தா?”

“ஏன்?”

பதில் சொல்ல முடியாது கைகளை பிசைந்தாள்.

“என்னன்னு சொல்லு மலரே?”

ஒன்றுமில்லையென சொல்லமுடியாது… அவளுக்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திட… அதுவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவனது செயலில் அங்கேயே அவனை கட்டிக்கொள்ளும் வேட்கை எழுந்தபோதும் இருக்கும் இடம் கருதி அமைதி காத்தவளுக்கு… இப்போது வரை அதற்கான வாய்ப்பு கிட்டாமல் இருந்திட… இதில் அங்கு போனால் மேலும் தாமதமாகுமென உள்ளத்து உணர்வை அவனைப்போல் அவளால் வெளிப்படையாக சொல்லிட முடியாது தவித்தாள்.

“ரொம்ப யோசிக்கிறது பார்த்தா…” பாரி விஷமமாக இழுத்து வைக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று வேகமாக முறுக்கிக்கொண்டாள் பூ.

“ஹா…” பாரி சத்தமாக சிரித்திட,

“ரோட்டை பார்த்து ஓட்டுடா” என்று அவனின் முதுகினில் அடி ஒன்று வைத்தாள்.

“வீடு நினைவு இருக்கா வேந்தா?”

சில நிமிடங்கள் மௌனமாக கழிய, அவனை சீண்டவென்றே கேட்டாள்.

“சில விஷயமெல்லாம் செத்தாலும் நினைவிலிருந்து மறக்காது.”

“ம்ம்…ம்ம்ம்…”

இருசக்கர வாகனம் சாலையில் காற்றாய் பறந்திட…

அவனை இடையோடு கையிட்டு கட்டிக்கொண்டவள், அவனது முதுகில் கன்னம் அழுந்த முகம் வைத்துக்கொண்டாள்.

ஹோட்டலில் இருக்கும்போது பார்வதி அவர்களை தங்களுடனே வந்து இருக்குமாறு அழைத்தபோது பாரி சொல்லிய பதில் அவளின் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. பாரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்க… அவனை அணைத்திருந்த அவளின் கையில் இறுக்கம் கூடியது.

சட்டென்று சாலையோரம் வண்டியை பாரி நிறுத்தியதைக்கூட உணராது கண்மூடி அவன்மீது சாய்ந்திருந்தாள்.

“பூ… யூ ஆர் ட்ரைவிங் மீ” என்றவனின் வார்த்தைகளில் “ம்” என்ற முனகல் மட்டுமே அவளிடம்.

“குவார்ட்டர்ஸ் போயிடலாமா?”

அவனது அக்கேள்வியில் வேகமாக அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள், சுற்றுப்புறம் உணர்ந்து நெற்றியில் தட்டிக்கொண்டாள்.

“பதில் சொல்லு பூ?”

“ச்சூ… போடா” என்றவள் அவனின் முதுகில் மீண்டும் முகம் மறைத்தாள்.

“இது ரோடு…”

“தெரியுது… ஆனால், சொல்லத்தெரியல வேந்தா. டீப்லி மேட் ஆன் யூ” என்றவளின் முகத்தை கண்ணாடி வழி பார்த்தவன், உற்சாகமாக சீட்டி அடித்தான்.

அவனின் விசிலில் தன்னை மீட்டு திடமாக அமர்ந்தவள், “அம் ஓகே வேந்தா. போகலாம்” என்றிட, அடுத்த அரை மணியில் வீட்டிற்கு முன்னிருந்தனர்.

நான்கு வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய வீட்டில் அடி வைக்கின்றான். மொத்த பேரும் அவர்களின் வருகைக்காக கேட்டினை கடந்த உள் வாயிலிலேயே காத்திருந்தனர்.

பாரிக்கு அந்த வீடு… தோட்டம், அனைத்தும் ஏதோ சுழலுக்குள் இட்டுச்செல்லுவதை போலிருந்தது.

அருகிலிருந்த பூவின் கையை இறுகப்பற்றிக்கொண்டான்.

“ரிலாக்ஸ் வேந்தா” என்ற பூவிடம் தன்னுடைய உணர்வை மறைத்தவனாக “அம் ஆல்ரைட் மலரே” என்று சாதாரணமாகக் கூறியவன், வேகமாகச்சென்று தன்னுடைய அன்னையை அணைத்துக்கொண்டு அவரின் தோளில் முகம் பதித்து கலங்கும் கண்களை மறைத்துக்கொண்டான்.

மகனின் கண்ணீரின் ஈரம் உணர்ந்தபோதும் பார்வதி அவனின் முதுகினை வருடியவாறு அப்படியே நின்றிருந்தார்.

“ம்மா…” என்ற பாரியின் கரகரத்த அழைப்பு பார்வதியை சில நொடி உலுக்கிச் சென்றது.

“அதான் வந்துட்டியே கண்ணா. எதுக்கு இந்த அழுகை” என்ற பார்வதிக்கு மகனின் நீண்ட நாட்களுக்கு பின்னான அணைப்பில் கண்கள் பனிக்கு போல் தானிருந்தது.

“ஊரே உன்னை பார்த்து நடுங்குது. நீயென்னன்னா அம்மா பிள்ளைன்னு அழுதிட்டு இருக்க?” என்று பரிதி கேலி செய்த பின்னரே பாரி சகஜ நிலைக்குத் திரும்பினான்.

இங்கு வரும் வரையிலுமே பாரி, தான் இப்படி எமோஷனிலி ரியாக்ட் ஆவோம் என்று நினைத்திருக்கவில்லை. என்ன தான் வேலையின் பொருட்டு வெளியில் திடமாக இருந்தாலும், அவனும் சராசரி மனிதன் தானே. குடும்பம் என்று வரும்போது அனைவருக்கும் உள்ளுக்குள் உணர்வுகள் பிரவாகம் எடுப்பது உண்மை தானே. அதற்கு பாரி மட்டும் விதிவிலக்கா என்ன?

“சடன்லி அம் ப்ரோக்ட் பரிதிண்ணா” என்ற பாரியின் கையை பற்றிய பரிதி… “நீ இங்கயே இருக்கலாமே?” என்று கேட்டிட… “அல்ரெடி சொன்ன பதில் தான் பரிதிண்ணா” என்றான்.

“சரி… சரி… அவன் வரப்போ வரட்டும். கொஞ்சநாள் போகட்டும், அவன் இங்க வரலைன்னா என்ன? நாம அங்க போயிடலாம்” என்று தில்லை சொல்லிட,

“அப்பா யூ டூ” என்றவன் அவரின் கன்னத்தை இருபக்கமும் பிடித்து ஆட்டிட… “விடுடா படவா” என்று அவனின் புஜத்தில் அடித்தார்.

“சரி எம்புட்டு நேரம் வெளியவே நிக்க வைக்கிறது. இளா ஆரத்தி எடும்மா” என்று தங்கம் குரல் கொடுக்க…

“எப்பவோ நடக்க வேண்டியது” என்று பார்வதி பெருமூச்செறிந்தார்.

“அதான் இப்போ எல்லாம் நல்லபடியா நடக்குதே அண்ணி” என்று, இனி நடப்பவையை மட்டும் மனதில் கொள்வோமென மறைமுகமாக வலியுறுத்தினார் மணி.

இளா ஆரத்தி எடுத்து வரவேற்ற பின்னரே இருவரையும் பார்வதி உள்ளே அனுமதித்தார்.

அதன் பின்னர் அங்கே கொண்டாட்டம் தான்.

பேச்சிற்கும் சிரிப்பிற்கும் பஞ்சமில்லை.

மாலை நெருங்கிட பலகாரம் செய்வதற்காக பெண்கள் கிச்சன் பக்கம் சென்றிட, தில்லை அரசுவுடன் தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

தூக்கத்திலிருந்த சின்னு எழுந்து அப்பாவைத்தேட பரிதி மகளிடம் ஓடினான்.

கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்த பாரி…

மணி செய்யும் பலகாரத்தை ஆர்வமாக கற்றுக்கொண்டிருந்த பூவை ஒரு பார்வை பார்த்திட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

அவன் காவல்துறை பயிற்சிக்கு சென்ற அன்று எப்படி வைத்துவிட்டு சென்றிருந்தானோ அப்படியே இருந்தது.

ஒவ்வொன்றாக தொட்டு வருடியவனுள் அவன் தொலைத்த பல நிகழ்வுகள் நெஞ்சை முட்டி நின்றன.

தன்னுடைய மெத்தையில் அமர்ந்தவன் கண்களை மூடிட… அவனின் அருகில் ஆள் உட்காரும் அரவம். அவரின் வாசனையை வைத்தே தன்னுடைய அன்னையென கண்டு கொண்டவன் அவரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் மகனின் தலையை கோதியவர்…

“அம்மா அன்னைக்கு எங்களை உன் குடும்பமா நினைச்சா அப்படின்னு சொல்லி கார்னர் செய்ததை மனசுல வச்சு இங்கு வரமாட்டேன் சொல்றியா பாரி” எனக் கேட்டிட, அவரின் ஒரு துளி கண்ணீர் அவனின் கன்னம் தொட்டது.

“ம்மா” என வேகமாக எழுந்து அவரின் கண்களை துடைத்தவன்,

“நான் அப்படி யோசிக்கவேயில்லைம்மா. உண்மையிலே என்னுடைய வேலை தான் காரணம்” என்றவன் அமோஸைப்பற்றி அவனின் உயரம் பற்றி சொல்லி, அவனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எடுத்துக்கூறிட, அவரும் பூவைப்போலவே “இப்படி உயிரை பணயம் வைக்கும் வேலை எதுக்கு” என்று கேட்டிட பாரி நொந்தே போனான்.

மகனின் முகத்தில் என்ன கண்டாரோ…

“என்ன செய்தாலும் கவனமா இரு கண்ணா” என்று பார்வதி அவனின் கன்னம் வழித்து “எங்க உலகமே நீதான் பாரி” என்றிட…

“அவங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் என் தம்பி தான் எல்லாம்” என்றபடி அவர்களின் பேச்சை நானும் கேட்டேன் என்றவாறு பரிதி வந்து பாரியின் மற்ற பக்கம் அமர்ந்தான்.

“சின்னு?”

“இளாகிட்ட இருக்காள்.”

“பரிதிண்ணா…”

“சொல்லுடா தம்பி?”

“இப்போ நீங்க சொன்னதை இளா கேட்டிருக்கணும்” என்றவன் கண்ணடித்து சிரிக்க…

“நான் சொல்லணும் அவசியமில்லை. அவளுக்கே தெரியும்” என்ற பரிதிக்கு உண்மையிலேயே இளா தனக்கு மனைவியாக கிடைத்ததை எண்ணி முகத்தில் அத்தனை பூரிப்பு.

“ப்பா… என்ன ஒரு பிரகாசம்” என்று பாரி பரிதியை வம்பிழுக்க…

“என்னடா என்னைவிட்டு ரகசியம் பேசுறீங்க?” என்ற தில்லையும் அவர்களுடன் இணைய, அங்கே நால்வரும் மட்டும் தங்களின் பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர்.

“சீக்கிரம் இங்க வந்திடு பாரி. நீயில்லாம நம்ம குடும்பம் முழுமையடையாது” என்று தில்லை கரகரப்பாக மொழிந்திட அவரின் இரு பக்கமும் அவரது இரு மகன்கள் தாங்கி நின்றனர்.

“வந்திடுவேன் ப்பா. நீங்கயில்லாம நான் மட்டும் இருந்திடுவேனா?” என்ற பாரி… பேச்சினை வேறு திசைக்கு மாற்றிட, “நாம மட்டும் இங்கிருந்தா அண்ணா அண்ணி என்ன நினைப்பாங்க” என்று பார்வதி எழுந்து செல்ல முற்பட, “ஒண்ணும் நினைக்க மாட்டாங்க, நீங்க உங்க பையனை கொஞ்சுங்க” என்றபடி கையில் சிற்றுண்டி அடங்கிய தட்டுடன் பூ வந்தாள்.

அதன் பின்னர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மேலே பாரியின் அறைக்கு வந்திட நேரம் ஆர்ப்பரிப்பாக விரைந்தோடியது.

இரவு உணவை அனைவரும் சேர்ந்து முடித்திட… அரசு தன் குடும்பத்துடன் ஊருக்கு செல்ல கிளம்பினார்.

“அங்க வந்திட்டு போலாமேப்பா” என்று பூ கேட்டிட, இருக்கும் வேலைகளை காரணம் காட்டியவர் பிறகு வருவதாக ஆறுதல் செய்தார்.

பரிதி அவர்களை ரயில் நிலையம் அழைத்துச்செல்ல,

பாரியும் பூவுடன் கிளம்பிவிட்டான்.

“நாளைக்கு போகலாமே பாரி” என இளா சொல்லிட…

“கொஞ்சநாள் இளா” என்றவன், வாகனங்கள் தருப்பிக்கும் இடத்தை நோட்டமிட்டவாறே…

“அம்மா என்னோட பைக் எங்க?” எனக் கேட்டிட அனைவரும் பூவை பார்த்தனர்.

“என்னம்மா, ஏன் அவளை பாக்குறீங்க?”

“உன் பைக் பாபநாசத்தில் இருக்கு வேந்தா. நான் கேட்டேன்னு பரிதி மாமா தான் கொண்டு வந்தாங்கா” என்று பூ பதில் கொடுக்க…

தோள் குலுக்களுடன், பூவுடன் விடைபெற்றான்.

செல்வதற்கு முன் லீயின் அருகில் வந்த பாரி… “இது உன் வீடு. உன் விருப்பம் போலிருக்கலாம். தள்ளி ஒதுங்கியிருந்தா வேற்றுமையாத்தான் தெரியும். உன்னை யாரும் இங்க மூன்றாம் நபராக பார்க்கமாட்டாங்க. உன்னை நாங்க ஏத்துக்கல லீ, உன்னைத்தான் எங்களை உன் உறவா ஏத்துக்கச் சொல்றோம்” என்ற பாரியின் பேச்சை பார்வதி அமோதித்தவராக,

“எங்களை உன் குடும்பமா ஏத்துக்குவியாடா?” என்று இரு கரம் விரிக்க, அதில் தாயின் சேயாய் அடங்கிப்போனாள் லீலா.

****

அறைக்குள் சென்றிடவே ஜென்னிற்கு அத்தனை தயக்கமாக இருந்தது.

என்ன தான் காதல் திருமணமென்றாலும், அவியைப்பற்றி ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் தெரியுமென்றாலும், பல வருடங்கள் ஒன்றாகவே சுற்றியவர்கள் என்றாலும் இந்நொடியை அவளால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை.

இரவு உணவிற்கு பின் செக்ரி அவரது அறைக்குள் சென்றிட…

அவியை அவனது அறைக்கு செல்ல பணித்த கோதை, ஜென்னை இலகுவான புடவை உடுத்தக்கூறி தானே மிதமாக ஒப்பனை செய்து, அவளின் கையில் சூடான பால் அடங்கிய பிளாஸ்க் மற்றும் தம்பளரை கொடுத்து, அவியின் அறைக்கு முன்னால் விட்டுவிட்டுச் சென்றார்.

செல்வதற்கு முன் ஒரு தாயாக மகளுக்கு சொல்ல வேண்டியதை அறிவுரையாக இல்லாது, தோழமையின் பேச்சாக எடுத்துக்கூறிட, அன்னையில்லா ஏக்கம் ஜென்னிற்கு தீர்ந்தது.

அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகிச்சென்றார்.

கோதை சென்று பல நிமிடங்கள் கடந்தும் ஜென் கைகள் நடுங்க அறை வாயிலிலேயே நின்றிருந்தாள்.

கடிகாரம் நேரம் பத்தென ஒலிக்க… ‘இனியும் இங்க நிற்க முடியாது’ என கதவினை திறந்துகொண்டு ஜென் உள்ளே நுழைந்திட பார்த்த காட்சியில் அதுவரை இருந்த படபடப்பு பயமென எல்லாம் நீங்கியவளாக, கையிலிருந்ததை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அவியின் முன் சென்று இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள்.

மடிகணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவி, தனக்கு முன் நிழலாடுவதை உணர்ந்து முகம் நிமிர்த்தி பார்த்தவன்,

“வா ஜென். தூக்கம் வந்தா தூங்கு” எனக்கூறி மீண்டும் கணினியில் மூழ்கிட…

“இன்னைக்கு என்ன?” எனக் கேட்டாள்.

“என்ன ஜென்” என்றவன் “நமக்கு மேரேஜ் நடந்தது” என்றான்.

“அவ்வளவு தானா?” என்று ஒரு மாதிரி கேட்டவள், “இந்த நைட் நினைச்சு நான் பயந்து பயந்து உள்ள வந்தா, நீ உன் வேலையை கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்க” என்று முறைத்தாள்.

“ஏன் பயப்படனும்” என்று கேட்டபிறகே ஜென் சொல்ல வருவதன் பொருள் புரிந்தவன், புரியாததைப்போல் “உன்னை கட்டிக்கலன்னு கோபமா?” என்றான்.

அவனது சீண்டலான பேச்சில் மீண்டும் ஜென்னிடம் பதற்றம் குடியேறியது.

அவளின் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தவன், மடிகணினியை மூடி ஓரம் வைத்துவிட்டு, அவளின் கைப்பற்றி தன்னருகில் அமர வைத்தான்.

ஜென் கணவனின் முகத்தை பார்த்திட முடியாது தலை கவிழ்ந்தவாறு இருக்க…

“அத்தனை வேகமா வந்த, இப்போ என்னாச்சு?” எனக்கேட்டு புறங்கையால் அவளின் கன்னம் வருடினான்.

கணவனின் தொடுகையில் உடல் கூசி சிலிர்த்தவள் கண்களை மூடிட… அவளின் முகம் நெருங்கியவன் மெல்ல ஊதினான்.

கிறக்கமாக அவள் முகம் உயர்த்தி தன் துடிக்கும் அதரங்களை அவனுக்கு வாகாகக் காட்டிட… பெருவிரல் கொண்டு அவளின் கீழ் உதட்டை மென்மையாக தடவி, இருவிரல் கொண்டு தன் பக்கம் இழுத்தவன்… அவளின் உதட்டோடு தன் உதடு உரசிட…

“கட்டிக்கவா?” என்று மயக்கும் குரலில் மனைவியின் சம்மதம் வேண்டினான்.

அவி கேட்டதை செயல்முறை படுத்தி தன்னுடைய சம்மதம் வழங்கியவள் அவனை தன் பிடியில் திக்குமுக்காட செய்தாள்.

பொக்கிஷமான தருணம் இருவரையும் ஒருவருக்கொருவருள் சுருட்டிக்கொள்ள மீள மனமின்றி கரை சேர்ந்திடாத படகாய் தத்தளித்தனர்.

துவக்கம் பெண்ணவளாக இருந்திட… காதல் அலையில் சுகமாக நீந்தி, மொத்தமாக கரை சேர்த்திட்டது முழுதும் அவனாகிப்போனான்.

அவர்களது வாழ்க்கையின் துவக்கம் முடிவு பெறாது விடியலை நோக்கி நகர, சோர்வுற்று தன்னவளை(னை) தனக்குள் கடத்தியவர்களாக உறக்கத்திற்குச் சென்றனர்.

___________________________

இரவு நீண்டிருக்கலாம் என்ற எண்ணம் இரு ஜோடிகளுக்கும்!

என்னதான் கடல்போல் வீடும், பளிங்காய் படுக்கையறையும் பாரிக்கு சொந்தமானதாக இருப்பினும் அவை யாவும் அவனால் உருவானது அல்லவே.

முதல் முறையாக அவனுக்கான உழைப்பில் அவனுக்கானதாக இருக்கும் வீட்டில், அவனுடைய அறை மெத்தையில் அவனது கையணைப்பில் அவனின் மனையாள். இரவின் இனிமை மனதிற்கு குளுமையாய்.

பாரிக்கு நினைக்கவே தேகம் சிலிர்த்தது.

இந்த வாழ்வு இப்படி இன்பமாய் இருக்குமென்று அவன் எதிர்பார்த்தது இல்லை.

பூவைத்தவிர வேறு யாரேனும் வந்திருந்தால் இத்தகைய வாழ்வு கேள்விக்குறியது தான்.

தன்னுடைய மார்பில் துயில் கொள்ளும் மனையாளை மெல்ல தலையணைக்கு இடம் மாற்றியவன், ஓய்வறைக்கு சென்று வந்து காலை நேர ஓட்டத்திற்கு கிளம்பினான்.

அந்நேரம் சத்யாவிடமிருந்து அழைப்பு.

“சொல்லு சத்யா. எனித்திங் சீரியஸ்?” இத்தனை காலையில் அவன் அழைத்திருக்கும் போதே விடயம் பெரியதென பாரி கேட்டிருந்தான்.

“அந்த அமோஸ் இங்க வரான் பாரி.”

“வாவ்… இது குட் நியூஸ் சத்யா. இதையேன் இவ்வளவு படபடபா சொல்ற?”

பாரிக்கு என்னதான் சிலையை மீட்டு வழக்கை முடித்திருந்தாலும், இதற்கெல்லாம் காரணமான அந்த அமோஸை ஒன்றும் செய்ய முடியாமல் போனதே என்கிற ஆதங்கம் உள்ளது. எத்தனை பொக்கிஷங்களை அவன் வசமாக்கியிருக்கின்றான். அவன் செய்யும் பல குற்றங்களுக்கு என்றாவது ஒருநாள் நிச்சயம் அவனது நாட்டு போலீஸிடம் மாட்டுவான் என்பது நடக்குமென்றாலும், தன் கையால் அவனை ஒருமுறையாவது பதம் பார்க்க வேண்டுமென்கிற வெறி பாரிக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடே அவனிடத்தில் இந்த உற்சாகம்.

“பாரி அவன் வர்றதே உன்னை…”

“ஹா… ஹா… அவன் என் இமையக்கூட தொட முடியாது சத்யா” என்ற பாரி தன்  திடம் தொலைந்து நிற்கப்போகிறான் என்பது விதி மட்டுமே அறிந்தது.

“எப்போ?”

“அது தெரியல பாரி. ஆனால் ரேமண்ட் ஏதோ டீலிங் விஷயமா மும்பை வந்திருக்கான். அவனுக்கு கால் பண்ண அமோஸ், நீ அங்கயே இரு அந்த தமிழ்நாட்டு போலீஸை நான் என் காலுக்கு கீழ போட்டு மிதிக்கணும் சொன்னான்.

இதுவே தொடர்ந்து ரேமண்ட்டின் பிரைவேட் எண்ணை ஹாக் பண்ணதாலதான் கிடைத்தது.”

சத்யா சொல்லியதை கேட்ட பாரியிடம் அமைதி.

“என்ன பாரி திங்க் பன்ற?”

“நத்திங்டா” என்ற பாரியின் அமைதி தான் சத்யாவிற்கு பயத்தை கொடுத்தது. பாரியின் அதிரடியை விட அவனது அமைதி எதிராளிக்கு பேராபத்தானது.

“பாரி…?”

“வெயிட்டிங் சத்யா” என்றவன் தன்னுடைய நடையை தொடர்ந்தான்.

குவார்ட்டர்ஸில் இருக்கும் பூங்காவில் அரை மணிநேரம் நடந்தவன் வீட்டிற்கு வரும்போது, டெம்போ வந்தது.

ஜென்னின் வீட்டை காலி செய்வதற்காக பாரி ஏற்பாடு செய்திருந்தான்.

வீட்டை திறந்து காட்டியவன், “சரியா பேக் பண்ணி டெலிவரி செய்திடணும்” என்றான்.

அங்கிருந்த பூவின் சிறிதளவானஉடைமைகளை தானே கொண்டுவந்து தன்னுடைய வீட்டில் வைத்தவன், அவர்கள் சரியாக செய்கிறார்களா என்பதை சிறிது நேரம்  சரிபார்த்துக் கொண்டிருக்க, அவனைத்தேடி பூ வந்தாள்.

நின்று கொண்டிருந்த பாரியின் புஜத்தை இரு கைகளால் கோர்த்து பிடித்தவள், தோளில் சாய்ந்து கண் மூடினாள்.

“தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தான மலரே!”

“நீயில்லையே” என்றவள், “ஜென் வீடு காலி பண்ணிட்டா, புதுசா யாராவது வருவாங்களா வேந்தா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… வரலாம். வராமலும் இருக்கலாம்” என்றவன், “இனி ஜென் அவியோடதான். சோ, கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் காலி பண்றதுதான் சரி” என்றவன் வேலை செய்பவர்களிடம் கவனமாக செய்ய சொல்லிவிட்டு பூவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

கிச்சனிற்குள் சென்றவன் பிளாக் காஃபி போடுவதற்கான பொருட்களை எடுத்து நீரில் கலந்து அடுப்பில் வைத்தான்.

அவனின் பின்னால் கட்டிக்கொண்டு அவனது முதுகில் முகம் வைத்து பூ இன்னும் அரை உறக்கத்தில் தான் இருந்தாள்.

“ஸ்ட்ராப் கட்டியிருக்கியா பூ?”

“இல்லைடா” என்றவள் பாரியின் அதிருப்தியான “ம்ப்ச்” என்ற ஒலியில், “நீதான் கூடவே இருந்தியே வேந்தா” என்றாள் அசைட்டையாக.

“கொஞ்சம் சீரியஸ்னெஸ்சோட இரு பூ” என்ற பாரிக்கு தேவையில்லாமல் அமோஸின் நினைவு தோன்றி மறைந்தது.

“எப்பவும் அதை கழட்டக்கூடாது சொன்னனா இல்லையா?”

“எதுக்கு டென்ஷன் ஆகற. இனி கழட்டவே மாட்டேன் போதுமா” என்றவள், அவனின் புஜத்திலேயே கடித்து வைத்தாள்.

“நைட் கடிச்சது பத்தலையாடி” என்றவன் அவளின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தான்.

“ஆபீஸ் போகணுமா?” என்றவளின் கையில் தம்ளரை திணித்தவன், “அவியும் வரமாட்டான். நீ போய்த்தான் ஆகணும். கிளம்பு ஓடு. நானே டிராப் பண்ணிட்டு போறேன்” என்ற பாரியை முறைத்து வைத்தவள்,

“உனக்கு என்னை எப்போ பாரு துரத்திக்கிட்டே இருக்கணும்?” என்றவாறு வரவேற்பறை இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

“இந்த ப்ரொஜெக்ட் எவ்வளவு இம்பார்டன்ட் உனக்கு தெரியுமே பூ. அவியும் இல்லைன்னா நீதானே பொறுப்பா பார்த்துக்கணும்.” பாரி அமைதியாகவேக் கூறினான்.

“அதெல்லாம் தீபன் நல்லாவே பார்த்துப்பான்.”

“ம்ம்ம்…ம்ம்ம்… அவன் பாவம். உன்னை எப்படி நம்புறான்னு தெரியல. நீ சொல்றதெல்லாம் கேள்வியே கேட்காம செய்றான்” என்ற பாரியின் வயிற்றில் குத்தியவள்,

“ஹீ இஸ் மை ஃபிரண்ட்டா” என்றாள்.

“தெரியுது” என்ற பாரிக்கு பூ அவனை பிரண்ட் என்று சொல்லியது சற்று பொறாமையாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவனுக்கான இடம் அவளிடம் வெறும் நண்பன் மட்டும் இல்லையே. யாராலும் ஈடுசெய்திட முடியாத ஒரு உறவல்லவா அவன்.

நீயெனக்கு இந்த உறவு மாதிரியென்று எந்த உறவோடும் ஒருவரை ஒப்பிட்டு கூற முடியும். ஆனால், கணவன் என்ற உறவு தனித்துவமானதல்லவா. வாய் வார்த்தைக்கு மாதிரியென சொல்லிட முடியாதே.

அத்தகைய பலம் வாய்ந்த உறவில் இருக்கும்போது, அவனுக்கு வேறென்ன வேண்டுமாம்.

பூ கூறுவதை சிறு புன்னகையோடு கேட்டுக்கொண்டான்.

“தீபன் மேல உனக்கு கோபம் வரலையா வேந்தா?”

“எதுக்கு?”

“ம்ப்ச்…”

“உனக்கு நெருக்கமா யார் வந்தாலும், உனக்கு நான் யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுவும் தீபன், அவன் காலேஜ் டேசில் ஜுனியர் ஜுனியர்ன்னு உன் பின்னால் சுத்தியவன். இப்போ நீங்க க்ளோஸா இருக்கிறதுல எனக்கென்ன ஆச்சர்யம்” எனக் கேட்டு பூவை ஆச்சர்யம் கொள்ள செய்தான்.

தன் விடயத்தில் எப்போதும் தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது கோபம் கொள்ளும் பாரியைத்தான் பூவிற்கு தெரியும். இந்த நிதானமான பாரி… வியப்பையேக் கொடுத்தான்.

“ரொம்ப தேறிட்டடா வேந்தா” என்றவள், “தீபு பையன் இப்பவும் அப்படியே தாண்டா இருக்கான்” என்றாள்.

தீபன் அவர்கள் துறையே கல்லூரியில். அவர்களுக்கு முந்தைய பேட்ச். ஒரு வருடம் சீனியர் அவன்.

“அவன் என் பிரண்ட்ஷிப்க்காகா என் பின்னால வரல” என்று முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு கூறினாள்.

“அப்புறம் எதுக்காம்?”

“அந்த டவுட் அப்பவே இருந்துச்சு. இப்போ கண்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்” என்றவள், “நான் அபீசிக்கு கிளம்புறேன் வேந்தா. சொன்ன மாதிரியே டிராப் பண்ணிடு” என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

பூ குளித்து முடித்து வெளியில்வர பாரி உள் சென்றான்.

அவன் தயாராகி வருவதற்குள் பிரெட் ஆம்லெட் செய்தவள் உணவு மேசையில் வைத்துவிட்டு, அலுவலகம் செல்லக் கிளம்பினாள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிவிடப்படி உண்டு முடித்து வெளியேறினர்.

ஓரளவு வீட்டை காலி செய்து அனைத்தையும் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

“டெலிவரி முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்றவன் பூவுடன் அச்சீவர்ஸ் நோக்கிச் சென்றான்.

“அவியிடம் சொல்லிட்டியா?”

“செக்ரி சாருக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்” என்றான்.

“என் பைக் எதுக்கு ஊருக்கு கொண்டு போயிருக்க?”

“உனக்கு எனக்கு அடுத்து அந்த பைக் தான ரொம்ப பிடிக்கும். அதான் நீதான் கூடயில்லை, அந்த பைக்காவது இருக்கட்டுமேன்னு கொண்டுபோயிட்டேன்” என்றாள்.

“நான் இப்போ அங்க வந்தப்போ பார்க்கலையே!”

“அது பண்ணை வீட்டிலிருக்கு. அதில் தான் பைக் ட்ரைவ் கத்துக்கிட்டேன்.” பூ சற்று பெருமையாகவே சொன்னாள்.

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…”

இப்படியே பேசியபடி பூவை அலுவலகத்தில் விட்ட பாரி காவல் நிலையம் சென்றான்.

அங்கு பூவிற்கு முன்பே தீபன் வந்திருந்தான்.

அவனது கண்கள் பூவைத் தொடர்ந்து அவளின் பின்னால் சென்றது. அதனை பூவும் கவனித்தாள்.

“யாரை தேடுறீங்க சீனியர்?”

“நான் யாரையும் தேடுலையே” என்ற தீபன் அங்கிருந்து நகர,

“ஆமாம் நீங்க ஏன் சீனியர் அவ்வளவு பெரிய வேலையை விட்டுட்டு இங்க வந்து ஜாயின் பண்ணீங்க?” பதில் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தாலும், அவனிடம் வினவினாள்.

“அது… சும்மா, நம்ம ஜுனியர் பசங்களாச்சே ஹெல்ப் பண்ணலான்னு” என்று கூறியவனை ஒரு மாதிரி பார்த்த பூ, “நம்பிட்டேன்” என்க தீபன் அசடு வழிந்தான்.

“நீங்களா சொல்லுவீங்க சீனியர். அப்போ பார்த்துக்கிறேன் உங்களை” என்ற பூவிற்கு சிரிப்பையே பதிலாகக் கொடுத்த தீபன் தன் வேலையை கவனிக்கச் சென்றான்.

எல்லோரும் வரும் நேரத்திற்கு லீலா வர, தீபன் கண்ணில் ஒளி.

முதல் நாளே லீ தீபனை தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. இப்போதும் ஒரு அந்நியப் பார்வையில் கடந்துவிட்டாள்.

லீ தன்னுடைய வேலை குறித்து பூவிடம் கேட்க, அவளோ தீபனை கைகாட்டினாள்.

“சீனியர் சொல்றதை செய் லீ.”

தயக்கத்துடன் தான் லீ தீபனின் அறைக்குச் சென்றாள்.

வேலை விஷயமாக வந்த லீயிடம் தீபன் வேலையைத் தவிர்த்து வேறெதுவும் பேசவில்லை. அதுவே லீக்கு நிம்மதியாக இருந்தது. அதேநேரம் அவனின் மூன்றாம் மனிதர் பேச்சு உள்ளுக்குள் சிறு வதையாகவும் இருந்தது.

தான் என்ன அவனிடம் எதிர்பார்க்கிறோமென்றே லீலாவிற்கு விளங்கவில்லை.

மதியத்துக்கு மேல் அவி வர,

சிறிது நேரம் பூவும் லீயும் அவனை கேலி செய்தே ஒரு வழியாக்கினர்.

அவியின் திருமண விடயம் அறிந்த தீபன் மனமார வாழ்த்துக் கூறினான்.

செயலிக்கான மாதிரி வடிவமைப்பை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், அந்த அலுவலகமே பரபரப்பாக வேலையில் மூழ்கியிருந்தது.

இரவு ஏழு மணிக்கு வேலையை முடித்தவர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் மாதிரி அமைப்பை சரிபார்த்தனர்.

புதிதாக இதை செய்யலாம் அதை செய்யலாமென பிறரால் சொல்லப்படும் கருத்துக்கள் ஏற்கக்கூடியதாக இருக்கும் நிலையில் அதனை அப்போதே அதில் இணைத்து, இறுதியாக அவி சரிபார்த்தது மட்டுமில்லாமல் பூவும், தீபனும் சரிபார்த்து முழு திருப்தி ஏற்பட்ட பின்னர் நொடியும் தாமதிக்காது, அரசாங்க ராணுவ பாதுகாப்புத்துறைக்கு மாதிரி வடிவமைப்பு அனுப்பி வைத்தனர்.

“எங்க இன்னைக்கு நீ வராம நான் மட்டும் முடிக்க முடியுமான்னு பயந்திட்டு இருந்தேன்” என்ற பூவிடம், “நான் வரலைன்னாலும் நீங்க முடிச்சிருப்பீங்க பூ” என்றான் அவி.

மணியை பார்த்தால் பதினொன்றை கடந்து சென்று கொண்டிருந்தது.

“போச்சு போச்சு காக்கி என்னைத் திட்டப்போறான்” என்ற பூ திரும்பிட “அவன் உன்னை திட்டிட்டாலும். நீ அப்படியே அவனுக்கு ரொம்ப பயந்தவள் தான்” என்றவாறு அங்கிருந்த நீள்விருக்கையிலிருந்து எழுந்தான் பரிதி.

“மாமா நீங்க எப்போ வந்தீங்க?”

“நான் வந்து டூ ஹவர்ஸ் ஆச்சு. வேலையில தீவிரமா இருந்தீங்களா, டிஸ்டப் பண்ண வேண்டான்னு உட்கார்ந்திட்டேன்” என்றான்.

“இந்நேரத்தில் என்ன பரிதிண்ணா?” பரிதி இதுமாதிரி நேரங்களில் வந்ததில்லை என்பதால் அவி கேள்வியாக பார்த்தான்.

“லீ இன்னும் வரலன்னு இளா புலம்ப ஆரம்பிச்சிட்டாள். அம்மா கால் பண்ணாங்க, இங்க வேலையா இருந்ததால லீ அட்டெண்ட் பண்ணல நினைக்கிறேன். பயந்துட்டாங்க. அதான் நான் கூட்டிட்டுப்போகலான்னு வந்துட்டேன்” என்று பரிதி சொல்லி முடிக்கவும் நீர் வழியும் கண்களுடன் லீ வேகமாகச்சென்று பரிதியை அணைத்துக்கொண்டாள்.

யாருமற்றவர்களுக்கே மற்றவரின் சிறு அரவணைப்பில் கிட்டும் ஆறுதலின் உயரம் தெரியும்.

அதுவே லீயின் தடைகளை தகர்த்து அவளை பரிதியை தன் சகோதரனாக அணைக்கச் செய்தது.

“இன்னும் கொஞ்ச நேரம் நீ அழுதாலும், உன்னை நான்தான் அழ வச்சேன்னு உன் பிரண்ட்ஸ் என்னை மொத்தப்போறாங்க” என்று வேடிக்கையாக பேசி லீயை உணர்வின் பிடியிலிருந்து மீட்டான்.

“உன்னையும் நானே டிராப் பண்ணிடுறேன் தமிழ்” என்ற பரிதியிடம் மறுத்தவள் வேகமாக தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியில்வர பாரி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“ஹேய் பூ மெதுவா” என்றவன், “எதுக்கு இத்தனை வேகம்?” எனக் கேட்டான்.

“டைம் ஆச்சு. உன்கிட்ட இருந்து ஃபோனுமில்லை” என்றவள், “கொஞ்சமாவது பொண்டாட்டி மேல அக்கறை இருக்காடா. இவ்வளவு நேரமாச்சேன்னு ஒரு கால் பண்ணியா?” என்றவள் அவனை முறைத்து நிற்க…

அவளின் முன்னெற்றியில் தட்டியவன், அவளது கையில் அணிந்திருந்த ஸ்ட்ராப்பை விரல் வைத்துக் காட்டினான்.

“இதில் ஜிபிஎஸ் இருக்கு தெரியும் தான? இதை வைத்து எங்கிருக்கன்னு கவனிச்சிட்டுதான் இருந்தேன். இப்போதான் எனக்கு வேலை முடிஞ்சுது. நேரா இங்க வர்றேன்” என்றான்.

“ம்ம்… நீ ரொம்ப போலீஸா இருக்கடா” என்றவள் பாரியின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்திட…

“நாங்களும் இங்கதான் இருக்கோம்” என்று அவியும் பரிதியும், லீ மற்றும் தீபனுடன் அங்கு வந்தனர்.

“இருந்தா இருந்துகோங்க” என்ற பூ, “உங்களுக்குத்தான் ஆளு இருக்காங்களே! வீட்டுக்கு போய் கொஞ்சுங்க” என்றிட “வாலு” என பரிதி அவளின் காதை பிடித்து திருகினான்.

நேரமாவதை உணர்ந்து அனைவரும் அலுவலகம் விட்டு வெளியில் செல்ல, பரிதி சற்று பின் தங்கி, இறுதியாக வந்த தீபனிடம்…

“என் மேல உங்களுக்கென்ன ப்ரோ கோபம். விட்டா நீங்க முறைச்சதில் நான் பொசுங்கி போயிருப்பேன்” என்று சிரிப்பினூடே சொல்ல, தீபன் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினான்.

லீயின் மீதான அக்கறையில் பரிதி அவளைத்தேடி வந்தது அவனுக்கு பிடித்திருந்தாலும், லீ பரிதியை ஆறுதல் தேடி அணைத்தது பொறாமையை உண்டாக்க அக்கணம் தீபன் பரிதியை முறைத்து வைத்தான்.

மற்றவர் யாரும் அதனை கவனிக்கவில்லையென தீபன் நினைத்திருக்க பார்க்க வேண்டிய ஆள் பார்த்து இப்போது அவனிடம் பதில் கேட்டும் நிற்கிறது.

“சாரி ப்ரோ” என்ற தீபன் பேச்சுவராது திணற…

“சொல்லியாச்சா?” எனக் கேட்டான் பரிதி.

இல்லையென தீபன் இடவலமாக தலையசைக்க…

“ஃபர்ஸ்ட் சொல்லுங்க” என்ற பரிதி “உங்களைப்பற்றி தமிழ் சொல்லியிருக்காள். உங்கமேல எனக்கு நம்பிக்கையிருக்கு” என தீபனின் தோளில் தட்டிச்சென்றான் பரிதி.

தீபனுக்கு கல்லூரி நாட்களிலேயே இந்த ஐவரின் நட்பும் அன்பும் பிரமிக்க வைக்கும். இப்போது இன்னும் வியப்பாக இருந்தது. இத்தனை வருடங்கள் கடந்தும் எப்படி இப்படி சேர்ந்து இன்றியமையாத நெருக்கத்தில் இருக்க முடிகிறதென. இப்போது இவர்களுடன் சேர்ந்து பரிதியும் அதிசயக்க வைத்தான்.

இந்த கூட்டிற்குள் தானும் ஒரு ஆளாகிட வேண்டுமென ஆசை கொண்டான்.

அதற்கு முதலில் இதுவரை சொல்லாத தன்னுடைய காதலை லீயிடம் சொல்லிட வேண்டுமென முடிவு செய்தான்.

தீபனுக்கு பூவுடன் லீயை முதன் முதலாக பார்த்தது முதலே ஒருவித ஈர்ப்பு. பார்த்ததும் காதல் என்றும் சொல்லலாம்.

லீயை பூவுடன் நிறைய முறை பார்த்ததால் அவளும் தங்களது துறையென நினைத்தவன், லீக்காக பூவின் வகுப்பிற்கு அடிக்கடி சென்று…

லீக்காகவே சீனியர் என்ற கெத்தை விட்டுக்கொடுத்து பூவிடம் நட்பாக முயற்சி செய்தான்.

அப்போதுதான் லீ வேறொரு துறை என்பது தெரிந்து பூவின் மூலமாகவே லீயை நெருங்கிட நினைத்தான்.

ஆனால் அப்போது அவர்களுக்கே பல பிரச்சனைகள் இருந்ததோடு அமிர்தாவை சமாளிப்பதற்கே பூவிற்கு நேரம் சரியாக இருந்திட தீபனை பார்த்தால் சிரிப்பது, பேசினால் பதில் வழங்குவதென்ற நிலையோடு பூ நின்றுவிட்டாள்.

எப்போதும் பூவுடன் லீ இருக்கும் நேரம் சரியாக ஆஜராகிவிடும் தீபனுக்கு கடைசிவரை லீயிடம் பேசுவதற்கு மட்டும் தைரியமின்றி போனது.

கல்லூரி முடிந்து வேலைக்கு சென்ற பின்னரும் கூட லீக்காக அடிக்கடி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தவன் வேலை காரணமாக வெளிநாடு சென்று திரும்பிய போது லீயைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போனது.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
55
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்