தூவானம் 45 :
தடியனின் பிடியில் கத்தி முனையில் அவி இருப்பதால், எதுவும் செய்ய முடியாது தவித்து நின்றாள் ஜென்.
லீ ஜென்னின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
இதெல்லாம் அவளுக்கு புதிது. அதனால் அந்நேரத்தில் என்ன செய்யவேண்டும் எப்படி சிந்திக்க வேண்டுமென்பதெல்லாம் லீக்கு தெரியவில்லை. ஏன் ஜென்னிற்கே கூட பயத்தில் சரியாக சிந்திக்க முடியவில்லை.
வந்திருப்பவர்கள் பூவைத்தேடி வந்திருக்க… சமையலறைச் சென்றால் பூ மாட்டிக்கொள்வாள். அங்கு செல்பவனை தடுக்க, திசை திருப்ப வேண்டும்.
என்ன என்று யோசித்த அவி தாமதிக்காது… தன் பலம் மொத்தத்தையும் திரட்டி தன்னை பின்னிருந்து பிடித்திருப்பவனின் இரு கால்களுக்கு நடுவில் பின்பக்கமாக தன்னுடைய காலினை இழுத்து உதைத்திருந்தான்.
வலியில் அலறியவனின் சத்தத்தில் சமையலறை பக்கம் சென்றவன் திரும்பி பார்க்க…
அவிக்கு கீழே கிடந்தான் அவன்.
அவனை கட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான் அவி.
அவியை தாக்கிட தன் இடுப்பிலிருந்து கத்தியை உருவிகொண்டு அவன் முன்னேறினான்.
மற்ற பெண்களின் கவனமும் அவியின் பக்கமே இருந்திட, அவியை பின்னிருந்து தாக்க முயன்றான் மற்றொருவன்.
எங்கே அவன் உள்ளே வந்திடுவானோ என்று பயந்து ஒடுங்கி நின்ற பூ, அவன் அவியை தாக்கவிருக்கிறான் என்பதை கிரகித்து, அவி தலைவலி என்று சொன்னதால் சுக்கு காஃபி கலப்பதற்காக சுக்கு இடிக்க எடுத்த எடை கூடிய சிறு குழவி கல் கையிலிருக்க அவனை நோக்கி குறி பார்த்து எறிந்தாள்.
சிறியதாக இருந்தாலும் கருங்கல்லால் செய்யப்பட்ட கனமான குழவி அது. பூ எறிந்த வேகத்திற்கும், அவளது கையின் விசையின் அழுத்தத்திற்கும் சரியாக அவனின் பின் மண்டையில் தாக்கிய அடிக்கு ரத்தம் வெளியேற கீழே சுருண்டிருந்தான். அவன் கத்துவதற்கு கூட நேரமின்றி சரிந்திருந்தான்.
அவனும் அந்த கல்லும் கீழே விழுந்த ஓசையில் கவனத்தை திருப்பிய பெண்கள் மருண்ட விழிகளுடன் கைகள் நடுங்க நின்றிருந்த பூவை அதிர்ந்து நோக்கினர்.
தன் பிடியிலிருந்தவனை, அப்போதைக்கு இருக்கையில் கிடந்த துப்பட்டாவை கொண்டு கை கால்களை மடக்கி ஒருசேர கட்டி முடித்து நிமிர்ந்த அவிக்கும் அதிர்ச்சி.
“தமிழ்…” அவிக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
“அவ்வி… அவி… நான்… அவன் உன்னை… தாக்க வந்தான். தடுக்க என்ன பண்றது தெரியாம தூக்கிப்போட்டேன். இப்படியாகும் நினைக்கல” என்றவள் அப்படியே மடக்கி அமர்ந்து கைகளால் முகம் மூடி அழ, ஜென்னும் லீயும் அவளைத் தேற்ற அவளின் இருபக்கமும் அமர்ந்தனர்.
அவிக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாது… அவனால் கீழே அசைவின்றி கிடப்பவனைக் கண்டு பூவின் பக்கம் கூட செல்ல முடியாத அதிர்வில் உறைந்து நின்றான்.
“பாரிக்கு ஃபோன் போடு அவி” என்று ஜென் சொல்லிய பின்னரே, உடல் அதிர சுயம் மீண்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து பாரிக்கு அழைத்தான்.
பாரி அழைப்பை ஏற்றது உணராது அழும் பூவையே அவி பார்த்திருக்க, பாரி பலமுறை ஹலோ சொல்லிவிட்டான்.
பூவை உயிரோடு கொண்டு வர வேண்டுமென்பது தான் வந்திருந்த தடியன்களுக்கு கட்டளை.
‘பாரி வந்தால் முடியாது’ என கட்டிகிடந்தவன் நினைக்க, அவன் உடலை ஒரு பக்கமாக திருப்பி கட்டப்பட்ட கால்களை கொண்டு அருகில் நின்றிருந்த அவியின் காலினை உதைத்தான்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த அவி நிலையாக நிற்பதற்குள் அவனது கையிலிருந்து கீழே விழுந்த அலைபேசி உயிரை விட்டிருந்தது.
“கட்டிபோட்டும் நீ அடங்கலையா?” என்ற அவி அவனின் வயிற்றிலே ஓங்கி மிதித்தான்.
“அய்யோ அவி என்ன பன்ற? அவனுக்கும் எதாவது ஆகிடப்போகுது” என்று லீ பயந்து கத்த, அவளின் வாயை பொத்திய ஜென் “சத்தம் போடாத லீ. இது போலீஸ் குவாட்டர்ஸ். வீடுகளுக்கு இடையில் இடைவெளி இருந்தாலும், நைட் நேரம் நல்லாவே கேட்கும். யாரவது வந்தா மாட்டுவோம்” என்று தங்களுக்கு முன் உணர்வற்று கிடைந்தவனை பார்த்தபடி சொல்ல பூவின் அழுகை அதிகமாகியது.
“ஜென்… ஜென் நான் கொலை பண்ணிட்டேனா. நான் கொலைகாரியா?” என்ற பூவின் அரட்டலை அவர்களால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
“இல்லைடா… இல்லை” என்ற ஜென்னுக்கும் கூட தைரியமாக அவனின் உடலில் தொட்டு பார்த்து உயிருக்கா என்பதை பரிசோதிக்க பயமாக இருந்தது.
‘ஒருவேளை இறந்திருந்தால்?’ அந்த நினைவே இதயத்தை நடுங்க வைத்திட…
“பாரிக்கு கால் பண்ணுடா?” என்று சீறினாள் ஜென்.
“மொபைல் வொர்க் ஆகல ஜென்” என்று அவி பாவமாக உரைக்க,
டீபாயின் மீதிருந்த தன்னுடைய அலைபேசியை வேகமாக எடுத்து பூவே பாரிக்கு அழைத்திருந்தாள். கூப்பிட்டுவிட்டாள், என்ன பேசவென்று தெரியவில்லை. செய்திருக்கும் செயல் கொடுத்த பயம் அழுகையைத்தான் கொடுத்தது.
பூவின் அந்த அழுகை கொடுத்த அச்சம் வீட்டிற்கு வந்து நடந்ததை தெரிந்து கொண்ட பின்னர் தான் பாரியிடமிருந்து விலகியது.
“ரிலாக்ஸ் மலரே!” என்றவன் தான் அடித்த கன்னத்தில் பட்டென்று இதழொற்றி எடுத்திருந்தான்.
தன்னிடமிருந்து பூவை விலக்கி லீயின் கையில் ஒப்படைத்தவன், ஆம்புலன்ஸிற்கு அழைத்தான்.
“ஜென் நீ யூனிஃபார்ம் சேன்ஞ் பண்ணு” என்றவன்
“இவனுங்க ரெண்டு பேரும் ஒரு கேஸ் விஷயமா ஜென்னை தாக்க வந்தானுங்க. தற்காப்பிற்காக அவனை அவள் அடிச்சிட்டாள். அவ்வளவு தான் புரியுதா?” என்று மற்ற மூவரையும் பார்த்து அழுத்தமாக பாரி சொல்லிட பூவைத்தவிர மற்ற இருவரின் தலையும் சரியென ஆடியது.
“வேந்தா… இது நா… நான் தான் செய்தேன். ஜென்னை மாட்டிவிட…”
“ஹேய் தமிழ், இதனால எனக்கு ஒன்னும் ஆகாது. நான் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன். போலீஸை குற்றவாளி தாக்க வந்தான் அப்டின்னா அதோட பேச்சு நின்னுடும். உன்னை சொன்னா ஏன் எதுக்குன்னு ஆரம்பிச்சு… இப்போ பாரி ரகசியமா டீல் செய்ற கேஸ் வரை இழுத்து பேசுவாங்க” என்று துரித நிலையில் உடைமாற்றி வந்த ஜென் விளக்கிக் கூற ஏற்றுக்கொண்டதாக தயக்கமாக சரியென்றாள் பூ.
“இவனை கூட்டிட்டு நீ ஸ்டேஷன் போயிடு ஜென்” என்று கட்டப்பட்டிருந்தவனை பாரி காட்டிட, ஜென்னும் அவனை அவியின் காரில் அப்படியே தூக்கிப்போட்டு காவல்நிலையம் சென்றாள்.
ஆம்புலன்ஸ் வர, நண்பர்கள் மூவரையும் அறைக்குள் அனுப்பி வைத்தவன், மற்றொருவனை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
“நீங்க போங்க, ஸ்டேஷனிலிருந்து ஆள் அனுப்புறேன்.”
பாரி காக்கி உடையில் இல்லாதபோதும், அவனின் தோற்றமும், அவனிருப்பது காவலர் குடியிருப்பு பகுதி என்பதாலும் ஆம்புலன்ஸ் ஆட்கள் எவ்வித கேள்வியுமின்றி அவனை தூக்கிச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் சென்றுவிட்ட ஒலி கேட்டு அறையிலிருந்து வெளியில் வந்த பூ…
“இதுக்குத்தான் சொன்னேன் இந்த வேலை வேண்டான்னு. கேட்டியா? இப்போ என்னாச்சு பார்த்தியா? அவன் உண்மையா செத்து போயிருந்தா?” என்று வெடித்து கத்திய பூ…
“இந்த வேலை வேண்டாம் வேந்தா. இத்தனை ஆபத்து இதிலிருக்கும் தெரியாம நீ போலீஸாகனும் ஆசைப்பட்டுட்டேன். அவியை குத்த கத்தியை எடுக்கிறான். அவன் குத்தியிருந்தா? இப்போ நம்ம அவி?” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாது பாரியின்மீதே சரிந்து கதறினாள்.
“வேண்டாம் வேந்தா… விட்டுடு. இதனால யாருக்கு என்ன ஆகுமோ பயந்து பயந்து இருக்க முடியாது. உனக்கே ஒன்னு ஆனாலும் என்னை நினைத்து பார்த்தியா… ஒவ்வொரு முறையும் குடும்பத்தோட ஒளிய முடியாது. ப்ளீஸ் வேந்தா வேணாம்.”
பூவின் அழுகை பாரியின் மனதை சற்றும் கரைக்கவில்லை.
இரும்பாய் இறுகி நின்றான். அவனின் உடல் விரைப்புத் தன்மையே அவனது பதிலை பூவுக்கு சொல்லிவிட்டது.
என்னதான் பூவிற்காக என்று இந்த பணியில் பாரி அமர்ந்திருந்தாலும், இதற்காக படிக்க ஆரம்பித்த காலம் தொட்டே மிகவும் நேசித்து தான் ஒவ்வொன்றையும் முழுமூச்சாக செய்தான். இந்த வேலை அவனது மூச்சாய் மாறியிருப்பதை அவன் மட்டுமே அறிவான். தவறு செய்பவர்களுக்கு அவனால் தண்டனை கிட்டும்போது அவனுக்கு கிடைக்கின்ற சந்தோஷம் நிம்மதி அவனுள் போதையாகிப்போனது. எந்த போதையையும் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாதே. தீமையான போதையையே விட முடியாது எனும்போது, பாரியின் போதையால் பல நல்லது நடக்கிறதே. அத்தனை எளிதில் விட்டுவிடுவானா. பூ அவன் சுவாசிக்கும் காற்று என்றால், காவல்துறை பணி அவனது ரத்தம். ரத்தத்தில் என்றோ கலந்து அவனின் உயிர் துடிப்பாய் மாறி நிற்கும் வேலையை விட சொன்னால் அவனால் எப்படி முடியும்.
“முடியாது.” பூவின் விழிகளை தீர்க்கமாக சந்தித்து உறுதியுடன் அழுத்தமாய் கூறினான்.
பூவிற்கு தன்னையே அடித்துக்கொள்ளும் எண்ணம் எழுந்தது.
“என்னாலதான்… எல்லாம் என்னாலதான்” என்று புலம்பியவள் சுவற்றில் தலையை முட்டிக்கொள்ள சென்ற நொடி சுவற்றிற்கும் அவளது தலைக்கும் இடையே தன்னுடைய உள்ளங்கையை வைத்து தடுத்திருந்தான் பாரி.
பார்த்துக்கொண்டிருந்த அவிக்கும் லீக்கும் எப்போதும் பூவிடயத்தில் மட்டும் பாரியால் எப்படித்தான் இப்படி அதீத கவனத்துடன் இருக்க முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருந்தது.
“ப்ளீஸ் வேந்தா புரிஞ்சிக்கோ. விட்டுடு.” அழுது கூறியவள் இப்போது கெஞ்சி கேட்டாள்.
“நீ விட சொல்லுறது என்னோட உயிரை. இந்த வேலையை விட்டா நடபிணமாத்தான் திரிவேன்.” கத்தவில்லை, சத்தத்தை கூட்டவில்லை… ஆனால், வார்த்தையில் இருந்த திடம் பூவின் வாயை மூடச்செய்தது.
பாரி சொல்லிய வார்த்தையில் பூ மட்டுமல்லாது அவி மற்றும் லீக்குமே அதிர்வாகத்தான் இருந்தது.
தனக்காக என்ன வேண்டுமென்றாலும் நொடியும் யோசிக்காது, கடக்காது செய்பவன் இன்று அவள் இத்தனை மன்றாடியும் பேச்சுக்கேனும் தனக்காக தன்னை சமாதானபடுத்துவதற்காவது சரியென சொல்வானென்று எதிர்பார்த்த பூவிற்கு ஏமாற்றமே!
மனமெல்லாம் கனத்தது.
மொத்த சக்தியும் வடித்தார் போல் நொடியில் ஓய்ந்து போனாள்.
கண்களை புறங்கை கொண்டு துடைத்தவள் எதுவும் பேசாது அறைக்குள் சென்று கதவினை சாற்றிக்கொண்டாள்.
“லீ அவளோடவே இரு” என்ற பாரி கிளம்பிவிட்டான்.
“என்னடா அப்படியே கிளம்பிட்ட… தமிழிடம் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம். இப்படி வார்த்தையை முகத்துக்கு நேரா சொல்லியிருக்க வேண்டாம். அமைதியா புரிய வைத்திருக்கலாம்” என தன்னுடைய மனத்தாங்கலை வெளிப்படுத்தினான் அவி.
அதற்கு பாரியிடம் சோபையான புன்னகை மட்டுமே. சென்றுவிட்டான்.
எத்தனை முறை சொல்வது. ஒவ்வொரு முறையும் அவளை வருத்திவிடக் கூடாது என்பதற்காகவேத்தான் பூ வேலையை பற்றி பேசினாலே வேறேதேனும் கூறி மழுப்பிக் கொண்டிருந்தான். பாரி எத்தனை சமாதானங்கள் சொன்னாலும் அந்நொடி அதனை ஏற்று அமைதியாக இருப்பவள், அடுத்து மீண்டும் ஆரம்பிப்பாள். கடந்த ஒரு மாதமாக இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று நடந்த நிகழ்விற்கு பிறகு பூ இதனை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டாளென்றே சற்றும் இளக்கம் காட்டாது தன் பணி தனக்கு எத்தனை முக்கியமென்று வார்த்தையால் கத்தியிருந்தான்.
பாரிக்கே தெரியும் பூ தான் அவனிற்கு முதலும் முடிவும். அவளென்று வந்தால் அவன் நேசிக்கும் காக்கியும் இரண்டாம் நிலை தான். ஆனால் இப்போது வேலைக்கு அடுத்தது தான் நீ எனும் விதத்தில் பேசிவிட்டு வந்துவிட்டான். நினைக்க நினைக்க அவனுக்கே வலி கொடுத்தது.
தன்னுடைய வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவன் தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டான்.
“சாரிடி…” அந்நொடி பூ எத்தனை வலியை தாங்கியிருப்பாளென்று நினைத்தவன் மானசீகமாக தன்னவளிடம் மன்னிப்பை வேண்டினான்.
அவியும் லீயும் பூவின் அறைக்கு முன்னின்று எத்தனை ஆறுதல், சமாதான வார்த்தைகள் சொல்லியும் பூ கதவினை திறக்கவில்லை. தன் சத்தமும் காட்டவில்லை.
“இப்போ நீ கதவை திறக்கலன்னா நான் உடைச்சிட்டு வருவேன்” என்று அவி சத்தமிட்ட பின்னரே குரல் கொடுத்தாள்.
“கொஞ்சம் தனியா விடு அவி பிளீஸ். நானே நார்மல் ஆகிடுவேன்.” அவி சென்று இருக்கையில் அமர்ந்திட, லீ வீடிருக்கும் நிலையை கண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
முடிக்கும்போது பொழுது நன்கு புலர்ந்திருந்தது.
ஜென்னுடன் சேர்ந்து ஆணையரை சந்தித்த பாரி இரவு நடந்தவற்றை அனைத்தயும் ஒரு குறிப்பாக கோப்பில் அடக்கி கொடுத்தான்.
ஆணையருடன் சென்று அறைநிலைத் துறை அதிகாரிகளை சந்தித்தவன் நடந்த நிகழ்வுகளை விளக்கி, “இன்னும் சில நாட்களுக்கு சிலை உங்க பொறுப்பில் இருக்கட்டும். முதலமைச்சர் மூலமா அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அமோஸ், ரேமண்ட் பிடிபட்டதும் சிலையை கோவிலில் வைக்கலாம்” என்று யோசனையாக தன் கருத்தை முன் வைத்தான்.
பாரி சொல்வது அவர்களுக்கும் சரியெனப்பட சிலை தங்களிடம் பத்திரமாக இருக்கும். சரியான தருணத்தில் கோவிலில் இடமாற்றி விடுவதாகக் கூற பாரியும், ஆணையரும் நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.
அன்றே ஆணையரை முன்வைத்து முதலமைச்சர் வழி சம்பல்பூர் அரசாங்கத்திடம் அவர்களுக்கு சொந்தமான வைரங்களை ஒப்படைத்திருந்தான்.
இவை யாவும் ஊடங்களுக்கு சிறியதாகக்கூட கசியவிடாது ரகசியமாகவே செய்து முடித்தான்.
நம் நாட்டு பொக்கிஷங்களை கூட பாதுக்காக்க முடியாத நிலையில் நம் அரசாங்கம் உள்ளதென்று கிழித்து தொங்கவிட்டுவிடுவார்களே. அவர்களுக்கு உண்மை தெரியாது, கற்பனை வளமையைத்தானே சித்தரித்து செய்திகளாக மக்களுக்கிடையே பரப்புகின்றனர். தேவையில்லாத பரபரப்பு வேண்டாமென்பதோடு ராயப்பன் கைதான போதே முடிந்த வழக்கு முடிந்ததாகவே இருக்கட்டுமென்று ரகசியமாக அனைத்தையும் செய்து முடித்தான்.
“ஒருவழியாக சிலையை மீட்டாச்சு… அடுத்து என்ன பாரி?” என்ற ஆணையரிடம்,
“அமோஸ், ரேமண்ட் இங்க வருவாங்களா தெரியாது. அவர்களைத் தேடிக்கொண்டிருக்கம் அவர்கள் நாட்டு போலீஸிடமே மாட்டிக்கொண்டாலும் நமக்கு வேலை மிச்சம் தான். இருந்தாலும் அவர்கள் பிடிபடும்வரை இது முடியாது சார். நாம கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்” என்ற பாரி, “நைட் என் வைஃபை கடத்த அவன் ஆள் அனுப்பியிருக்கான் அப்படின்னா, அவனுக்கு அந்த சிலை ரொம்ப முக்கியம் தெரியுது. நிறைய பணம் இதில் விளையாடியிருக்கும்போல, நம்மை பொறுத்தவரை ராயப்பன் டீமை அரெஸ்ட் பண்ண அப்பவே இந்த வழக்கு முடிஞ்சிடுச்சு. அதனால இனி நாம அடுத்த வேலையை பார்ப்போம். அந்த அமோஸ் திரும்ப என்னை சீண்டாதவரை அவனுக்கு நல்லது” என்றான் பாரி.
“அமோஸ் அங்க செய்யாத அண்ட்ர்கிரவுண்ட் வேலையே கிடையாது. அந்த நாட்டு போலீஸ் எத்தனை முயற்சி செய்தும் அவனுங்க இருக்க இடம் ட்ராக் பண்ண முடியலையே! எப்படி பிடிப்பாங்க?”
“அவன் என் கையிலதான் மாட்டுவான்னு விதியிருந்தா கடல் கடந்து இருந்தாலும், அவனே நினைச்சாலும் யாராலும் மாத்த முடியாது சார்” என்ற பாரி தோரணையாக ரேபானை கண்ணுக்கு அணிவித்தான்.
“திரும்ப என்னை தொடாத வரை தான் அவன் சேஃப்” என்ற பாரி தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
பாரி அவரின் கண்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக தெரிந்தான்.
“ஹீ இஸ் அன்பிரடிக்ட்டபுள்” என்று சொல்லிக்கொண்ட குமாருக்கு பாரியை நினைத்து பெருமையாக இருந்தது.
பாரி வீட்டிற்கு வந்தபோது அவி அலுவலகம் சென்றிருந்தான்.
பாரி முதலமைச்சரை சந்திக்க சென்றபோதே ஜென்னை வீட்டிற்கு அனுப்பியிருந்தான்.
வண்டியை நிறுத்திவிட்டு திறந்திருந்த ஜென்னின் வீட்டை எட்டிபார்த்தவன் அரவம் ஒன்றுமில்லாது இருக்க தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான்.
நேரத்தை பார்த்தவன் செய்யவிருக்கும் நிகழ்விற்கு இன்னும் நேரம் இருப்பது தெரிந்து மெத்தையில் வீழ்ந்தான். முழுதாக இரண்டு நாள் ஆயிற்று அவன் உறங்கி. சிறிதும் ஓய்வின்றி வேலைகள் சூழ்ந்து கிடந்தன. அடுத்தடுத்து ஓட்டம் ஓட்டமென ஓடியவன் இப்போது இந்தநொடி தான் ஓய்வாக கண் மூடினான். இரண்டு நாளாக உடலுக்கும் மூளைக்கும் அவன் கொடுத்த வேலைகள் அதிகம். அவை இரண்டும் சோர்ந்திருக்க படுத்ததும் நித்திரையில் வீழ்ந்திருந்தான்.
சரியாக இரண்டு மணி நேரம் கழித்து அவன் வைத்த அலாரம் சத்தமிட்டு அவனை எழுப்பியது.
செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல அரை மணிநேரம் மட்டுமே இருப்பதை அறிந்து… சில நிமிடங்களில் கிளம்பியிருந்தான்.
பூவின் அலைபேசிக்கு அழைக்க, அவளோ எடுக்கவே இல்லை.
கோபமாக இருப்பாளென்று நினைத்தவன் ஒரு பையோடு ஜென்னின் வீட்டிற்குள் சென்றான்.
அழுது முடித்து ஓரளவு தன்னை தேற்றிக்கொண்டு அப்போதுதான் அறையிலிருந்து வெளிவந்து லீ கொடுத்த காஃபியை அருந்திக்கொண்டிருந்தாள் பூ.
அவளின் முன்னிருந்த டீபாயில் பையை வைத்தவன்,
“உங்க மூணு பேருக்கும் ட்ரெஸ் இருக்கு. ஜென்னுக்கு மட்டும்ன்னா டவுட் வரும் அதான். கரெக்ட் டைம் வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு மற்றொரு சிறு கவருடன் பாரி வெளியேறிவிட்டான்.
“இவனால மட்டும் எப்படி முடியுது? என்ன நடந்தாலும் அதிலே தேங்காமல் அடுத்து அடுத்துன்னு” என்று முணுமுணுத்த பூ, தன்னால் ஜென்னிற்காக ஏற்பாடு செய்தது தடையாக வேண்டாமென்று எழுந்து கிளம்ப ஆயத்தமானவள் ஜென் மற்றும் லீயையும் கிளப்பியிருந்தாள்.
பூ தங்களை அழைத்துச்சென்ற இடத்தை பார்த்து… இங்கெதற்கென்று தெரியாது குழப்பமாக பூவை ஏறிட்டாள் ஜென்.
____________________________
பாரி கொடுத்துவிட்டுச் சென்ற புடவையில் கிளம்பித் தயாராக வந்த ஜென்னும் லீயும் ஒரே குரலில் எங்கென்று வினவினர்.
தோளினை குலுக்கிய பூ, “போனா தெரியப் போவுது” என்று வெளியேறினாள்.
ஏற்கனவே புக் செய்திருந்த கேப் வீட்டு வாசலில் தயார் நிலையில் நின்றிருக்க… மூவரும் சென்று அமர்ந்தனர்.
அடுத்த பத்து நிமிடங்கள் பேச்சின்றி அமைதியில் கழிந்திட… காரிலிருந்த மியூசிக் பிளேயர் தன் வேலையை செய்து கொண்டிருந்தது.
“கோவிலுக்கு போறோமா தமிழ்?” ஜென் தான் கேட்டிருந்தாள்.
“ஏன் கேட்குற? கோவிலுக்குலாம் வரமாட்டியா?” ஜென் கல்லூரி நாட்களிலே அவர்களுடன் பல கோவில்கள் ஒன்றாக சுற்றியிருந்த போதும்… தற்போது தன்னால் அவளுக்கான ஆச்சரியத்தை உடைத்து விடக்கூடாதென வேண்டுமென்றே ஒரு மாதிரியாக வினவினாள்.
“ஹேய் தமிழ்… அப்படியில்லை. சாரீ’லாம் புதுசா வாங்கி கொடுத்து கூட்டிட்டுப்போறியேன்னு கேட்டேன்” என்று வேகமாக மொழிந்தாள் ஜென்.
“ஹோ… சாரீ வியர் பண்ணா கோவிலுக்குத்தான் போகணுமா?” எனக் கேட்ட தமிழ், “பாரு லீ எவ்வளவு அமைதியா வர்றாள். நான் கூப்பிட்டா அடுத்த பிளானெட்க்கு கூட லீ எதுவும் கேட்காமலே வருவாள்” என்று சொல்லிட, சென்று சேரும் வரை ஜென் வாயேத் திறக்கவில்லை.
சேர வேண்டிய இடத்தினை இவர்கள் அடைந்த போது… அங்கு பாரியும், அவியும் அவர்களுக்கு முன் வந்திருந்தனர்.
சார்பதிவாளர் அலுவலகம்.
“ரிஜிஸ்டர் ஆபிசுக்கு எதுக்கு பாரி?”
வேஷ்டி சட்டையில் அலுவலகம் வந்த பாரியின் தோற்றம் அவிக்கு புதிது என்றால், அவன் தன்னிடமும் அதேபோல் ஆடையை கொடுத்து அணிந்து வர சொல்லியது யோசனையைக் கொடுத்தது. இருப்பினும் பாரி ஒன்றை கூறினால் அதனை ஏன் எதற்கு என்று ஆராயாமல் செய்பவனுக்கு இவ்விடயத்திலும் எவ்வித கேள்விகளையும் கேட்கத் தோன்றாது பாரி கொடுத்த உடையை மாற்றிக்கொண்டு அவனுடன் கிளம்பிவிட்டான் அவி.
இங்கு வந்த பிறகு தான் எதற்கு என்று வினவினான்.
“கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிடும் அவி” என்ற பாரி அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றிட அங்கு ஏற்கனவே பாரியின் மொத்த குடும்பம் அமர்ந்திருந்தனர். உடன் செக்ரி மற்றும் கோதையும் இருந்தனர்.
பாரியின் குடும்பம் அனைவரும் இருப்பதைக் கண்ட அவி,
“ப்ரொபெர்டி ரிஜிஸ்ட்ரேஷனா பாரி?” என்று வினவினான்.
“இப்போ உனக்கு உடனே காரணம் தெரியணுமா?” என்ற பாரியின் கேள்வியில் அமைதியாக தில்லையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்.
“எல்லாம் ஓகேவா பரிதிண்ணா?”
“பக்கவா ரெடி பண்ணிட்டேன் பாரி. வரவேண்டியவங்க வந்துட்டா வேலை முடிஞ்சுது” என்று பரிதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மூன்று பெண்களும் வந்து சேர்ந்தனர்.
“ஹ்ம்ம்.. வந்தாச்சு” என்று மூவரையும் பார்த்து இளா எழுந்துவர,
“இவங்களை கூட்டிட்டுவர உனக்கு இவ்வளவு நேரமா?” என்று பூவிடம் கடிந்துகொண்டான் பாரி.
பாரியை முறைத்து பார்த்தவளுக்கு நேரங்காலம் இல்லாமல் அவன் முடியாது என்று சொல்லிய அவனின் அழுத்தமான குரல் காதில் எதிரொலிக்க பதிலேதும் சொல்லாது தன்னுடைய கணவனை கடந்து பார்வதியிடம் செல்ல நகர்ந்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவளது அன்னை, தந்தை மற்றும் தங்கமும் கூட அங்கிருப்பதை.
“அப்பா” என்று அரசுவின் அருகில் உற்சாகமாக சென்று நின்றவள், இவர்கள் எதற்கு எனும் விதமாக பாரியை ஏறிட, அவன் அவளது பார்வையை ஒதுக்கி வேறு பக்கம் திரும்பினான்.
‘நான் கேட்டதுக்கு பேசமாட்டாள். ஆனால் இவங்க பார்வையால பேசுறதுக்கு நாங்க பதில் சொல்லணுமாம்’ என்று மனதிற்குள் முருக்கிக்கொண்டவனுக்கு கணவனாக மனைவியிடம் சீண்டலாக போடும் இந்த சிறுபிள்ளை சண்டை சுவாரஸ்யமாகவே இருந்தது.
“தமிழ்…” என்ற குரலில் அரசுவிடமிருந்து நகர்ந்து பார்த்த பூ அங்கு சற்றும் செக்ரியை எதிர்பார்க்கவில்லை.
“ஹாய் அங்கிள், ஆண்ட்டி” என்று சிறு ஆர்ப்பரிப்போடு செக்ரி மற்றும் கோதையின் அருகில் ஓடியவள், “நீங்க எங்க இங்க? எப்போ சென்னை வந்தீங்க? நல்லாயிருக்கீங்களா?” என்று கேள்வி கேட்டாள்.
பாரி மூவரையும் புருவத்தூக்கலுடன் பார்த்தான்.
‘ஹோ… மேடமுக்கு என்னைப்பற்றிய தகவல் நாலு வருஷமா இவர்கிட்ட இருந்து தான் போயிருக்கா!’ நீண்ட நாள் விடை தெரியாமலிருந்த பாரியின் கேள்விக்கு இன்று பதில் தெரிந்தது.
“பாரி சொல்லலையா? நாங்க வந்து மாதம் ஒண்ணுக்கு மேலாகுது” என்று கோதை சொல்ல… “நான் உங்களைப்பற்றி அவன்கிட்ட எதுவும் சொல்லலை அங்கிள்” என்றாள்.
அப்போது பூவின் அருகில் வந்த ஜென்… “இவங்களை உனக்குத் தெரியுமா தமிழ். அவி வீட்டில் பாரி தங்க வைத்திருப்பது இவங்களைத்தான்” என்றாள்.
“இவர் பெங்களூர் கமிஷனர் அவி.” பூ சொல்லிட, “இதையேத்தான் அவனும் சொன்னான். ஆனால் வேறென்னமோ இருக்கு” என்ற அவியின் தலையில் கொட்டிய பாரி “அதை நானே சொல்றேன். நீ இல்லாத மூளையை உருக்கிடாதே” என்றான்.
“சார் வாங்க” என்று பாரியிடம் ஒருவர் அழைக்க…
“அவி, ஜென் வாங்க” என அவர்களை பாரி முன் அழைத்துச்செல்ல குடும்பத்தினர் பின் சென்று பதிவாளர் முன்பு நின்றனர்.
“இவங்க தான் பொண்ணு மாப்பிள்ளையா?” என்று அவி மற்றும் ஜென்னை பார்த்து பதிவாளர் பாரியிடம் வினவ, “எஸ்” என்றான் பாரி.
அவியும் ஜென்னும் ஒருவரையொருவர் ஆச்சரியமாக பார்த்துக்கொள்ள…
“வீட்டில் போய் சைட் அடிச்சிக்கோங்க, இப்போ மாலையை போட்டுக்கோங்க” என்று பரிதி இருவரிடமும் மாலையை கையில் கொடுக்க… அவி நெகிழ்வானக் குரலில் “பரிதிண்ணா” என்று விளிக்க… ஜென்னின் கண்களில் நீர் குளம் கட்டி நின்றது.
“எல்லாம் உன் பிரண்ட் பண்ண ஏற்பாடு தான்” என்று பரிதி பாரியை கைகாட்டிட… அவி பாரியை அணைத்துக்கொண்டான்.
அவியின் முதுகை தட்டிக்கொடுத்து பாரி பிரிக்க… ஜென் பாரியை அணைத்துக்கொண்டாள்.
“ஹேய் ஜென்” என்ற பாரி, அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து ஆதரவாய் அழுத்த… “தேன்க்ஸ் பாரி” என்றவளுக்கு கண்ணீர் கன்னம் தாண்டியது.
“இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்படி இருந்தன்னு வை… என் பொண்டாட்டி பார்வையாலே நம்மள எரிச்சிடுவாள். அத்தோட உன் ஆளுக்கு வயிறு எரியுறது கண்ணில் தெரியுது” என்று ஜென்னின் நிலையை சகஜமாக்க பாரி கேலி பேசினான்.
“எனக்கொன்னுமில்லை” என்ற பூ ஜென்னின் கண்ணீரைத் துடைக்க…
“நாங்கெல்லாம் அப்படியே விட்டுடுவோமா என்ன… எதுக்கு இப்போ இத்தனை எமோஷ்னல்? செய்யுறதையே செய்யுறோம் கிராண்டா செய்வோமுன்னு சொன்னேன். இவன் எங்க கேட்டான்!” என்று பாரியின் தோளில் தட்டிய பார்வதி, “உங்க ரெண்டு பேர் முறையில் யார் முறை செய்யுறது தெரியமத்தான் இவன் இங்க வச்சிக்கலாம் சொன்னதுக்கு ஒத்துகிட்டேன்” என்று அவி மற்றும் ஜென் இருவரது கையிலும் மோதிரத்தைக் கொடுத்து மாற்றிக்கொள்ளக் கூறினார்.
“அம்மா” என்ற அவியின் கன்னம் வழித்து முத்தம் வைத்த பார்வதி, “சந்தோஷமான நேரம் சிரிக்கத்தான் செய்யணும்” என்றார்.
“அப்புறம் பேசிக்கலாம் முதல்ல நடப்பதை கவனிங்க” என்று தில்லை சொல்லிய சமயம், பதிவாளர் இருவரையும் கையெழுத்திட சொல்லி பதிவேட்டினை முன் வைத்தார்.
பார்வதி அளித்த மோதிரத்தினை மாற்றிக்கொண்ட…
அவியும் ஜென்னும் உணர்வுபூர்வமாக ஒருவரது கையை மற்றொருவர் பிடியில் வைத்து இணைந்தே கையெழுத்திட… அங்கே கைத்தட்டல் இடத்தை அதிர வைத்தது.
சாட்சி கையெழுத்திட அழைக்க…
ஜென்னின் சார்பாக, தில்லையும் பார்வதியும் கையெழுத்திட்டனர்.
தனக்கு பரிதியும் இளாவும் போடுவார்களென்று அவி நினைத்திருக்க…
“சார் அண்ட் மேம் வாங்க” என்று செக்ரியையும் கோதையையும் அழைத்தான் பாரி.
தன்னை யாரென்றே சரியாக தெரியாத இவர்களுக்கு மத்தியில் எதற்காக அழைத்து வந்து அமர வைத்திருக்கிறான் என்று நினைத்திருந்த செக்ரிக்கு… இங்கு அவியின் உறவென்று இத்தனை பேர் இருக்கும்போது தன்னை எதற்காக கூப்பிடுகிறான் என்று யோசனையாக பாரியின் அருகில் வந்தவர்,
“நான் எதுக்கு பாரி. அவிக்கு நெருக்கமானவங்களை போடச்சொல்லு. அவியும் அதைத்தான் விரும்புவார்” என்று செக்ரி தன்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினான்.
செக்ரியை அர்த்தமாக பார்த்த பாரி…
“உங்க தங்கச்சி மகன் நல்லாயிருக்கணும் நீங்கதான ஆசீர்வதிக்கணும் சார். நீங்க கையெழுத்து போடுறதுதான் சரியாவும் இருக்கும்” என்று சொல்லிட… செக்ரிக்கு வார்த்தைகள் வரவில்லை.
‘நிஜமாவா?’ என்று கண்களாலே வினவினார்.
அவியும் பாரி என்ன சொல்கிறான் என்று தான் குழம்பிய நிலையில் நின்றிருந்தான்.
“மேகலை அம்மாவுடைய பையன் தான் அவினாஷ்” என்று செக்ரியிடம் சொல்லிய பாரி, அவியிடம் திரும்பி… “இவர் உன்னோட மாமா. உன் அம்மாவுடைய அண்ணா” என்றான்.
அவிக்கு சிறு வயதில் என்றோ மேகலை சொல்லியது நினைவிற்கு வந்தது.
“நான் இப்போ இந்த நிலையில படித்து ஒரு வேலையில் இருக்கக்காரணம் என் அண்ணா தான். ஆனால் அவருக்கு தெரியாம திருமணம் செய்து… அவர் என்மேல வச்ச நம்பிக்கையை ஏமாத்திட்டு எப்படி அவர் முன்னால போய் நிக்கிறது?” என்றோ கண்ணீரோடு தன் அன்னை புலம்பியது கலங்களாகத் தெரிந்தது.
பாரி, செக்ரி அனுப்பி வைத்த சிறு வயது மேகலையின் புகைப்படத்தை அவியிடம் காட்டினான். அதில் அவருடன் இருப்பது செக்ரி என்று பார்த்ததும் தெரிந்தது.
“மாமா…” என்று குரலே எழும்பாது அவி அழைத்திட…
“தேன்க் யூ சோ மச் பாரி” என்று அவனின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தவர்… “அவி” என அவனின் முகம் வருடியவர் அவனை அணைத்துக்கொண்டார்.
கோதையும் மறுபுறம் வந்து அவியை அணைத்து, ஜென்னின் நெற்றியில் இதழ் பதித்து அணைத்துக்கொள்ள…
தனக்கும் ரத்த சொந்தம் உள்ளதென்று சொல்ல முடியாத உணர்வின் பிடியில் சந்தோஷமாக சிக்கித்தவித்தான் அவி.
அங்கிருந்த அனைவருக்குமே இந்த விடயம் புதிது. அதனால் ஒவ்வொருவரும் அவியின் மகிழ்வில் மகிழ்வு கொண்டு அவர்களைத் தேற்றினர்.
‘என்கிட்ட கூட சொல்லல?’ என்ற கேள்வியை பூ பாரியை நோக்கி விசீட… “போடி” என்று அவன் உதடசைத்தான்.
“போடா” என்று அவனைப்போலவே கூறியவள், ‘இவன் பேசினதுக்கு நான்தான் கோபமா இருக்கணும். இவன் என்னவோ ரொம்ப பன்றான்’ என்று மனதில் முணுமுணுத்தாள்.
செக்ரியும் கோதையும் மன நிறைவோடு அவியின் சார்பாக கையெழுத்திட்டு முடிய, “ஜென் உனக்கு விருப்பமிருந்தா” என்று இழுத்த இளா அவியின் கையில் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியை கொடுக்க, “எனக்கு ஓகேக்கா” என்று ஜென் சம்மதம் சொல்லிட… ‘என்னோட ஜென்… எனக்குன்னு வர இவளை நான் எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணும்’ என்ற வேண்டுதலோடு ஜென்னின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து மூன்று முடிச்சிட்டான் அவினாஷ்.
இப்போது சம்பிரதாமாகவும், சட்டப்பூர்வமாகவும், சற்று முன்னரே மோதிரம் மாற்றிக்கொண்டதன் வகையில் அவர்களது இரு மத முறையிலும் தங்களது வாழ்க்கையின் முக்கிய அத்தியாத்திற்குள் கணவன் மனைவியாக நுழைந்திருந்தனர் திரு மற்றும் திருமதி.அவினாஷ்.
பெரியவர்கள் அனைவரிடமும் தம்பதியினர் ஆசீர்வாதம் பெற்றனர். அனைத்து தருணத்தையும் புகைப்படம் எடுக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தாள் லீலா.
“அடுத்து உங்களுக்குத்தான்” என்று பரிதி பூவிடம் சொல்ல அவள் புரியாது பார்த்தாள்.
இப்போது பதிவாளர் முன்பு சென்று நின்ற பாரி… பூவை திரும்பி பார்த்து வாவென்று கண்களாலேயே அழைத்தான்.
இன்ப அதிர்ச்சியில் பூ உறைந்து நிற்க…
“உன் புருஷன் கூப்பிடுதான் போயெட்டி” என்று தங்கம் பூவை பாரியின் மீதே தள்ளிவிட்டார்.
“உங்க மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணணுமே தமிழ். அதுக்குத்தான்” என்று தங்கையின் மனமறிந்து இளா பதில் வழங்கினாள்.
“அதெல்லாம் அவங்களுக்கு சொன்ன காரணம். நம்ம கல்யாணத்தப்போ நான் நானாவே இல்லை. அந்த மொமண்ட்டை நான் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். அதுக்குத்தான் இப்போ அபிசியலா என் பொண்டாட்டியை இன்னொருமுறை கல்யாணம் செய்துக்கப்போறேன்” என்று தன்னவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் மெல்லக் கூறினான்.
பாரியின் காரணத்தால் பூ விழிவிரித்தாள்.
“இப்படி பார்த்து சுருட்டிக்காத மலரே. இருக்குமிடம் மறந்து என்னவும் செய்திடுவேன்” என்றவன் சட்டென்று பார்வையை வேறு பக்கம் மாற்றிக்கொண்டான்.
“கையெழுத்து போடுங்க” என்று பதிவாளர் கூறிட…
பூவின் கரம் பற்றி அருகில் இழுத்தான் பாரி.
கையெழுத்திட்ட பாரி, தன்னுடைய முகத்தையே இமை சிமிட்டாது பார்த்திருந்தவளின் தான் பிடித்திருந்த உள்ளங்கையை விரல் கொண்டு சுரண்டி… மற்றொரு கையில் பேனாவை கொடுத்தான்.
அப்போதும் அவனிடம் நிலைத்துவிட்ட பார்வையை மாற்றாது, அவன் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டவள்,
“லவ் யூ வேந்தா” என இதழ் பிரிக்காது உச்சரித்த போதிலும் கேட்க வேண்டியவனுக்கு நன்றாகவே கேட்டது.
எப்போது அவள் இதனை கூறினாலும் அவன் இதழோரம் தோன்றும் அதே குட்டி புன்னகை அவனிடம் இப்போதும்.
“ரொமான்ஸெல்லாம் வீட்ல வச்சிக்கோங்கடா” என்று பரிதி சத்தமாகவே சொல்லிட அங்கு அனைவரின் முகமும் புன்னகையில் விரிந்தது.
அப்போதும் இருவரையும் தள்ளிவிட்டே முன் சென்று கையெழுதிட்டான் பரிதி.
அனைவரும் அங்கிருந்தபடியே கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, ஹோட்டல் சென்று பேச்சும் சிரிப்புமாக மதிய உணவை முடித்தனர்.
“அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதே! நீ எங்களோடவே வந்திடு பாரி” என்று பார்வதி அழைக்க…
அன்று வீடு தேடி தன்னை தாக்க வந்தபோதுகூட திடமாக இருந்த பாரிக்கு… முந்தைய நாள் பூவை தாக்க வந்ததை ஏற்கவே முடியவில்லை. தன்னுடைய மனைவி என்பதற்காகவே அவள்மீதான தாக்குதல் என நினைத்தவனுக்கு… நாளை குடும்பமென்று தான் அவர்களுடன் சென்றால் அவர்களுக்கும் ஆபத்து வருமென்று உறுதியாக நம்பியவன்…
“ஏற்கனவே சொன்னதுதாம்மா. என் வேலையால என்னை சார்ந்தவங்களுக்கு நிச்சயம் ஆபத்து தான். அதுக்கு நான் கொஞ்சம் தள்ளி இருப்பதுதான் நல்லது” என்று அழுத்தமாக முடித்துவிட்டான்.
மேற்கொண்டு ஆள் மாற்றி ஒருவர் அவனை வற்புறுத்த…
“நான் வேறெங்காவது டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகணுமா? அதுக்கு இது பெட்டர்தான?” எனக் கேட்டு அனைவரின் வாயையும் மூடிவிட்டான்.
“அப்போ உன் வேலையால் உன் பொண்டாட்டிக்கு ஆபத்தில்லையா. அவளை மட்டும் பக்கத்துல வச்சிக்கிற?” பார்வதி வேண்டுமென்றே கேட்டார்.
“அவள் இலைன்னா நான் இல்லைன்னு உங்களுக்கு நல்லாவேத் தெரியும்மா, அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?” என்ற பாரி “நிச்சயம் நானிருக்கும் இடத்தில் அவளோட சுவாசம் இருக்கணும்மா. அவளில்லாம என்னால முடியாது. என்னைமீறி என் பூவை நெருங்கினா அவனுக்கு நான்தான் எமன்” என்றான்.
அங்கிருந்தோர் யாருமே பாரியிடம் இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.
பூவின் வாழ்க்கையை கண்டு பயந்திருந்த அனைவருக்கும் அவளுடைய தற்போதைய மண வாழ்க்கை அத்தனை நிறைவை கொடுத்தது.
“நான் உங்களைவிட்டு இப்படியே தனியா இருந்திடமாட்டேம்மா. அது என்னால முடியவும் முடியாது. கொஞ்ச நாளுக்கு” என்றவன் “வேணும்னா இப்படி வச்சுக்கோங்க, என்னதான் கல்யாணமாகி நாலு வருஷமாகியிருந்தாலும், இப்போ தான சேர்ந்து வாழ ஆரம்பிச்சிருக்கோம்… சோ, நாங்க தனியா உங்க தொல்லையெல்லாம் இல்லாம ஜாலியா இருந்துக்கிறோமே!” என்றிட அங்கே சிரிப்பலை பரந்து விரிந்தது.
பூ பாரியை காதலாய் விழுங்கிட…
“மொத்தமா விழுந்துகிடக்குற என்னை எழவே விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா மலரே!” என்று தனக்கருகில் அமர்ந்திருந்த மனைவியின் பார்வை உணர்ந்து அவள் பக்கம் சரிந்து மெல்ல வினவிய பாரியை இதழ் சுளித்து தனக்குள் வாரிக்கொள்ள முனைந்தாள்.
“என்ன பன்ற மலரே?” என்ற பாரி “யூ ஆர் வெரி டேஞ்சரஸ் கேர்ள்” என்று தன்னுடைய கவனத்தை திருப்பினான்.
அனைவரும் வேறு கதை பேசிக்கொண்டிருக்க…
“அவி… இனி நீயும் ஜென்னும் உன் வீட்ல செக்ரி சாரோட தான் இருக்கப்போறீங்க. உன்னை குடும்ப சூழலில் பார்க்கிறதுதான் எங்க விருப்பம், சந்தோஷம்” என்றான்.
அவி சம்மதமாக தலையசைக்க… செக்ரி தனக்கென்று இறுதிகாலத்தில் ஒரு சொந்தம் உள்ளதென்று அவியின் தலையை ஆதுரமாய் தடவினார்.
“அப்புறம் அம்மா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் ” என்ற பாரி…
“லீலா இனி உங்களோட நம்ம வீட்டில் தான் இருக்கப்போறாள்” என்றான்.
“அதான் முன்னவே சொல்லிட்டியேடா” என்று பார்வதி சொல்ல… “லீக்கு தெரியணுமேம்மா. அதான் இப்போ திரும்பச் சொல்றேன்” என்றான் பாரி.
“என்ன லீ நம்ம வீட்டுக்கு வர உனக்கு சம்மதம் தான?” தில்லையும் பார்வதியும் ஒன்றாக வினவ… “நானெப்படி” என்று லீ தயங்கினாள்.
அவளின் தயக்கம் உணர்ந்த பரிதி லீயின் அருகில் சென்று…
“உன் குடும்பமா… உனக்கு அம்மா, அப்பா, அண்ணா, அண்ணியெல்லாம் இருக்காங்கன்னு நினைச்சு வா லீலா” என்றான்.
லீ அவியை ஒரு கணம் பார்க்க…
“எங்களோட இருக்கட்டுமே பாரி” என்றான் அவி.
“அது ஒத்துவராது அவி” என பாரி உடனடியாக மறுத்தான்.
பாரி மறுத்தால் அதில் ஏதேனும் காரணமிருக்குமென்று எண்ணிய அவி பாரியின் பேச்சினை ஆமோதித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
44
+1
1
+1