Loading

 

தூவானம் 44 :

பாரியின் முன் வைக்கப்பட்ட தேநீர் சில்லென்றாகி ஏடு படிந்து காணப்பட்டது.

பாரியோ இரு கைகளாலும் தலையை தாங்கிப்பிடித்தவாறு தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

எவ்வளவு யோசித்தும் ராயப்பன் ரேமண்டிற்கு அனுப்பிய மற்ற இரு வார்த்தைகளின் பொருள் பாரிக்கு பிடிபடவே இல்லை.

மூளையை கசக்கிக் கொண்டிருந்தான்.

எதையெதையோ உருப்போட்டு சிந்தித்தான்.

‘பாபிலோன்… அங்க வேற யாரும் ரேமண்ட் போல ஆள் இருப்பாங்களோ?’ விடையில்லை.

‘மூன்…?’

சுத்தமாக மண்டை குழம்பியிருந்தான். தெளிவாக சிந்திக்கவே முடியவில்லை அவனால்.

ரேமண்டிற்கு ராயப்பனிடமிருந்து தகவல் சென்றாகிவிட்டது. அவன் வேகமாக சிலையை எடுக்கத்தான் இப்போது முயன்று கொண்டிருப்பான். அவனுக்கு முன் பாரி சிலையை கைப்பற்றியிருந்தால் தான் அமோஸ் அல்லது ரேமண்டை இங்கு வரவழைக்க முடியும்.

அதனால் பாரி கொண்ட பதற்றமே அவனது நிதானத்தை இழக்கச்செய்தது. அதனால் பாரியால் தெளிவான கண்ணோட்டத்தில் ஆராய முடியவில்லை.

“வேந்தா…”

அவி அத்தனை முறை அழைத்தும் நிகழ் மீளாதவன், பூவின் ஒற்றை குரலுக்கு தன்னுடைய மொத்த குழப்பங்களையும் ஒதுக்கி வைத்தவனாக நிமிர்ந்து அமர்ந்து அவளை ஏறிட்டான்.

கணவனின் மடியில் அமர்ந்து அவனது கழுத்தைச்சுற்றி ஒரு கையை தோளில் படரவிட்டாள். மாற்றொரு கையால் அவனது முன்னுச்சு கேசத்தை ஒதுக்கியவாறு…

“என்னாச்சு… வந்து ரொம்ப நேரம் ஆகுதுன்னு அவி சொன்னான். நீயின்னும் காக்கியை மாத்தாம இருக்க?” என்று வினவினாள்.

“ம்ப்ச்…” என்று கண் சிமிட்டி ஒன்றுமில்லை என்றவன் தன் மடிமீது அமர்ந்திருப்பவளின் இடையினைக் கட்டிக்கொண்டவனாக தன்னுடன் நெருக்கினான்.

“அப்புறம் என்ன டீப் தி(ன்)ங்கிங்?” என்றவள் அவனுக்கு முன்னிருந்த டீபாயில் சற்று நேரத்திற்கு முன் அவன் கிறுக்கி வைத்திருந்ததை சுட்டிக்காட்டினாள்.

“பாபிலோன்…?” என்று இழுத்த பூ, “அங்கிருக்க கார்டனுக்கு ஹனிமூன் போறோமா?” என்று அவனை சகஜமாக்கிட கண்ணடித்து குறும்பாக வினவிட… பாரிக்கு இத்தனை நேரம் யோசித்தது பிடிபட்டது.

பாபிலோனில் மிகவும் புகழ் வாய்ந்தது அங்கிருக்கும் தொங்கும் தோட்டம். தோட்டம் என்பதனை மறைபொருளாகக் குறிப்பிடவே பாபிலோன் என்ற நகரத்தை ராயப்பன் அனுப்பியிருக்கிறார் என்பதை பூ சொல்லிய பிறகு பாரி கண்டுபிடித்தான்.

ஈசிஆரில் உள்ள விவாஷின் வீட்டுத் தோட்டத்தில் அந்த சிலை உள்ளது. ஆனால் அந்த மூன் அதற்கான அர்த்தம் அப்போதும் பிடிபடவில்லை.

‘ஓகே லீவ் இட். அந்த தோட்டத்தை ஆராய்ந்து சிலையை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய வேலையா இருக்காது’ என நினைத்த பாரி பூவின் மீது கவனம் வைத்தான்.

“தேன்க்ஸ் மலரே” என்றவன் அவளின் கன்னம் அழுந்துமளவிற்கு அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“உனக்கு ஹனிமூன் போகணுமா மலரே?” என்று பாரி கேட்க… “ஜஸ்ட் உன்னை டைவர்ட் பண்ண கேட்டேன்டா” என்றாள் அவள்.

“இப்போ சொன்ன தேன்க்ஸ் எதுக்கு?”

“சும்மா… சொல்ல தோணுச்சு.”

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்” என்றவள் “எப்போ பிளான் பண்ணியிருக்க. இப்போ லீயும் நம்மோட இருக்காள். அவளை எப்படி அவளிருக்க சூழலில் தனியா விடுறது?” எனக் கேட்டாள்.

இப்போதைக்கு லீலாவை பாதுகாப்பது மட்டுமே எண்ணமாகக் கொண்டிருந்தாள் பூ.

“நான் பார்த்துக்கிறேன் மலரே” என்றவன், “நாளைக்கு லெவனோ க்ளாக் எப்படியாவது அவியை கூட்டிட்டு வந்திடு. நான் ஜென்னை பார்த்துக்கிறேன்” என்றான் பாரி.

“வேந்தா…”

“ம்ம்ம்.”

“டேய்…”

“சொல்லு மலரே!”

“ம்ப்ச்… ஒன்னுமில்லை” என்றவள் பாரியின் மாடியிலிருந்து எழ… மீண்டும் இழுத்து அமர வைத்தவன்,

“என்னன்னு சொல்லுடி?” என்றான்.

அன்று ஜென் பாரிக்கு எப்படி கையில் அடிபட்டதென்று சொல்லியது முதல் இதுநாள் வரை அவனைப்பற்றி இல்லாத பயம் இந்த கொஞ்ச நாட்களாக பூவிற்கு வந்தது.

பூவின் தோளில் நாடி பதித்து அவள் சொல்வதற்காகக் காத்திருந்தவன்,

“அடிக்கடி என்னவோ சொல்லவர, ஆனால் சொல்லமாட்டேங்கிற!” என்றான்.

“அது… வேந்தா நீ இந்த வேலையை விட்டுடேன்.” பட்டென்று சொல்லியவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ரீஸன் தெரிஞ்சிக்கலாமா?”

பூ பாரியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அவளின் பார்வை பதிந்த தன்னுடைய கையை வைத்து அவனே காரணத்தை கண்டுகொண்டான்.

காயம் சரியாகிவிட்டது. ஆனால் அதன் அடையாளம் இன்னும் மிச்சமிருந்தது.

“ஒருமுறை அசால்ட்டா இருந்துட்டேன். எல்லா முறையும் அப்படியே நடக்குமா என்ன? எந்த வேலையில் தான் ஆபத்து இல்லை. சமையல் செய்வதில் கூடத்தான் காயங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுக்காக சமையலே செய்யக்கூடாதுன்னு இருந்தா எப்படி சாப்பிடுறதாம்?”

அவனின் இத்தகைய பேச்சிற்கு பூவிடம் பதிலில்லை. இப்படியொரு கோணத்தில் பார்த்து, இப்படியொரு விளக்கம் கொடுப்பானென்று பூ எதிர்பார்க்கவில்லை.

“எனக்காக கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்.”

“சான்ஸே இல்லை மலரே!” என்றவன், “உனக்காகன்னு நான் ரொம்ப விரும்பி செய்தது. இதை மட்டும் விடவே முடியாது.” அவனின் பதில் அவளுக்கு நெகிழ்வாய் இருந்தது. இருப்பினும் அவனைவிட இதுவொன்றும் பெரியதாக அவளுக்குத் தெரியவில்லை.

“ப்ளீஸ் வேந்தா…”

“எனக்கு பிடிக்காததை கம்பள் பண்ணாத மலரே!”

“நீயும் எனக்கு பிடிக்காததை செய்யாத!”

இதென்ன விதண்டாவாதம் என்று தான் பாரிக்குத் தோன்றியது.

“நான் உன்னை போலீஸ் ஆக சொன்னா, நீ என்னை வேலையை விடுன்னு சொல்றியா?” எதைக்கேட்டால் பூ ஆஃப் ஆவாளோ அதை சரியாகக் கேட்டான் பாரி.

“அதான் இந்த டிசைன் ஓகே ஆனதும் செய்றேன் சொன்னனே. நீயும் அவிக்கு ஹெல்ப் பண்ண டூ மன்த்ஸ் டைம் கொடுத்ததானே” என்றவள் மேற்கொண்டு எங்கு இதைப்பற்றி பேசுவானோ என்று வேகமாக அவன் மீதிருந்து எழுந்து செல்ல…

“இன்னைக்கு நைட் டெரஸ் வர முடியாது பூ. வேலையிருக்கு” என்றான் பாரி.

“உனக்கு எப்போதான் வேலை இருந்தது இல்லை. இப்போ மட்டும் இருக்கிறதுக்கு” என்றவள் “எல்லாம் அவி, ஜென் கல்யாணம் ஆகிற வரை தான்” என்று அர்த்தமாகக் கூறிச்சென்றாள்.

“வாலு…” என்று சொல்லிக்கொண்டவனின் இதழ்கடையில் அவள் சொல்லிச் சென்றதின் பொருளினால் உண்டானது மந்தகாசமான புன்னகை.

அதன் பின்னர் ஐவரும் ஜென்னின் வீட்டில் ஒன்றாக அமர்ந்து கதைகள் பேசியபடி உணவு உண்டு முடிக்க… ஜென்னை தனியாக அழைத்த பாரி மற்றவர்களின் கேள்வியான பார்வைக்கு “அபிசியல் மேட்டர்” என்று ஜென்னுடன் தள்ளிச்சென்றான்.

இதுவரை சத்யாவின் உதவியுடன் கண்டறிந்ததை ஜென்னிடம் பகிர்ந்துகொண்டவன், “நைட் நாங்க வைக்கப்போற ஸ்டெப் கொஞ்சம் ரிஸ்க் தான். சிலையை கண்டுபிடிச்சிட்டா நாம ரொம்ப கவனமாக இருக்கணும்” என்றான்.

இதனை பாரி ஜென்னிடம் சொல்லமலே சென்றிருக்கலாம். ஆனால் அவனுள் தானில்லாத நேரத்தில் இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றுவிடுமோ என்று உள்ளுக்குள் ஒரு ஓலம். அதனை அவனால் புறம் ஒதுக்க முடியவில்லை. இது அவனின் வேலை சம்மந்தப்பட்டது. அவியிடம் விளக்கமாக சொல்லிட முடியாது. அதனாலேயே ஜென்னிடம் சொல்லி மற்றவர்களை அவளின் பொறுப்பில் பாதுகாக்குமாறு கூறினான்.

“நான் பார்த்துக்கிறேன் பாரி” என்ற ஜென்னிற்கும் கூட பாரி சொல்லியதைக் கேட்டு பயம் தான்.

நாடுவிட்டு நாடு கடத்தல் செய்பவர்கள், அதுவும் சிறையில் இருந்துகொண்டு இதனை செய்பவர்கள் எதையும் செய்ய துணிந்தவர்களாக இருப்பார்கள் என்பதால் ஜென்னிற்கு அந்த பயம்.

எப்போது ரேமண்டை பாரி கண்காணிக்க ஆரம்பித்தானோ… பாரி தான் தங்களது கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றானென்று அமோஸிற்கு தெரிந்ததோ… அப்போது முதல் தான் அமோசால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது பாரிக்கு திண்ணம்.

இப்போது கூட, தான் செய்யவிருக்கும் செயல் அவனுக்கு தெரிந்திருக்கலாம். அதனாலேயே இங்கு ஜென்னை அலர்ட் செய்தான்.

நண்பர்கள் அனைவரும் தூங்க செல்வதாக இல்லை. அவர்களுக்குள் பேச நிறைய இருந்தது. துன்பமான பக்கங்களை விடுத்து, மற்றவைகளை பகிர்ந்தபடி பேச்சும் சிரிப்புமாய் அவர்களுக்கான நேரம் நகர்ந்து கொண்டிருக்க… பாரி அடிக்கடி நேரத்தை கவனித்தபடி இருந்தான்.

சத்யாவிடமிருந்து தகவல் வந்ததும் “ஓகே காய்ஸ் மார்னிங் பார்க்கலாம்” என்று எழும்பினான்.

அவனின் பின்னோடு வந்த பூ, அவன் அணிந்திருந்த ஆடைகளை கலைந்து இரவு நேரத்திற்கு, அதுவும் தான் போகும் செயலுக்கு ஏற்றதாக முழு கருமை நிற ஆடையை மாற்றுவதை கண்டு…

“என்னடா கொள்ளையடிக்க போறவன் மாதிரி ட்ரெஸ் பன்ற?” என்று விளையாட்டாகக் கேட்டாள்.

அவளிடம் அழுத்தமாக பார்வையை வீசியவன் “கிட்டத்தட்ட” என்றான்.

“ஜாக்கிரதை மலரே” என்றவன் அவளது கையில் மிக மெல்லிய அளவிலான ஜிபிஸ் பொருத்தப்பட்ட ஸ்ட்ராப்பை மாட்டிவிட்டான்.

“இது எப்பவும் உன் கையை விட்டு கழட்டக்கூடாது” என்றவன் அவளின் நெற்றியில் இதழ் பற்றி விலக… அவனது சட்டை காலரை இரு கைகளாலும் பற்றி தன் முகம் நோக்கி இழுத்தவள், அவன் உணரும் முன்னமே அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து விடுவித்தாள்.

“இது போதல மலரே!” என்றவன் இம்முறை நீண்ட நெடிய முத்தத்தை பதித்து மூச்சுக்குழல் சுவாசத்திற்கு தவித்த போதுதான் விடுவித்தான்.

“பை’டி பொண்டாட்டி” என்றவன் சென்றுவிட… அவனின் இந்நேர பணி என்னவென்று தெரியாத போதும், முந்தைய நிகழ்வுகள் அவளை அலைப்புறச் செய்தது.

திரும்பி பாரி வீடு வந்து சேரும் வரை மனம் இப்படித்தான் படப்படப்பாக இருக்குமென்று நினைத்தவள் நெஞ்சை அழுந்த நீவிக்கொண்டு ஜென்னின் வீட்டிற்குள் சென்றாள்.

பேச்சு முடிந்து ஜென்னும், லீயும் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருக்க, அவி நீண்ட இருக்கையில் கால் குறுக்கி படுத்திருந்தான்.

“அவி…” தோள் தொட்டு அவனை எழுப்பியவள், “பாரி போயிட்டான், நீ அங்க போய் தூங்கு” என்றாள்.

“இருக்கட்டும் தமிழ். பாரி கவனமா இருக்க சொல்லியிருக்கான். நான் இங்கவே” என்றவன் தான் படுத்திருக்கும் இடத்தை கண் காட்டினான்.

“ஓகே, அப்போ உள்ள போயிட்டு படு. நான் அவங்களோட படுத்துக்கிறேன்” என தான் பயன்படுத்தும் அறையை காண்பித்தாள்.

அவி மறுக்காது எழுந்து சென்றான்.

தோழிகளை எட்டிபார்த்தாள் அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

பாரி வராது பூவிற்கு உறக்கம் வரும்போல் தெரியவில்லை. மடிகணினியை எடுத்துக்கொண்டு வரவேற்பறையிலேயே அமர்ந்துவிட்டாள்.

****

ஈசிஆர் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாரி…

எதையோ தவற விடுவதாக எண்ணினான்.

உடனடியாக தாமஸிற்கு அழைத்தவன், “ராயப்பன், விவாஷ் ரெண்டு பேர்க்கிட்டவும் இருக்க மொபைலை வாங்கி வச்சுக்கோங்க. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாம வாங்குங்க” என்றான்.

தனக்கு எதாவது தடயம் வேண்டுமென்பதற்காக மட்டுமே அவர்களிடம் அலைபேசியை விட்டுவைத்தான் பாரி.

இப்போது வேண்டுமானது கிடைத்துவிட்டது. இதை வைத்து அந்த அமோசை பிடித்துவிடலாம். இனி அமோஸோ, ரேமண்டோ, ராயப்பன் மற்றும் விவாஷை தொடர்புகொள்ள கூடாது. அப்படி ஏதேனும் நடந்தால் இன்னும் சிக்கலாகிவிடுமென நினைத்தே தாமஸை அலைபேசியை வாங்கிக்கொள்ளக் கூறினான்.

இரவு பணியிலிருந்த தாமஸும் உடனடியாக பாரி சொல்லியதை செயல்படுத்தி இருந்ததோடு, மேற்கொண்டு ஏதேனும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வைத்திருக்கிறார்களா என்றும் சல்லடையிட்டு ஆராய்ந்து இல்லையென்ற பின்பே அவர்களை உறங்க விட்டான்.

காரியத்தை முடித்ததும் பாரிக்கு தகவல் அனுப்பிவிட்டான்.

விவாஷ் சிறையில் அடைப்பட்டதுமே அவனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் யாவும் நீதிமன்றத்தின் வாயிலாக ப்ரீஸ் செய்யப்பட்டுவிட்டன. அதனால் இப்போது அவனது அந்த பங்களாவில் காவலுக்கு இருக்க ஒரேயொரு ஆள் தவிர்த்து வேறு யாருமில்லை.

அப்படியே இருந்தாலும் பாரி அதற்காகவெல்லாம் பின்வாங்க போவதில்லை.

பாரிக்கு முன்னதாகவே சத்யா அங்கு வந்து இருட்டில் மறைந்திருந்தான். சத்யாவை கண்டுகொண்டு அவனது அருகில் சென்ற பாரி…

“ஆல் ஓகே” என்க,

காவலுக்கு இருக்கும் ஆளின் உறக்கத்தை சத்யா உறுதி செய்திட… சத்தமில்லாது இருவரும் உள்ளே குதித்தனர்.

“மத்த டூ வோர்ட்ஸ் மீனிங் கண்டுபிடிக்க முடிந்ததா பாரி?”

“தேர்ட் வோர்ட் முடியல சத்யா” என்ற பாரிக்கு அவ்வீட்டைச்சுற்றி காணப்பட்ட தோட்டத்தை பார்த்து அவ்விருட்டில் மலைப்பாக இருந்தது. அத்தனை பெரிதாக பரந்து விரிந்திருந்தது.

பங்களா என்றபோதே தோட்டம் எப்படியும் பெரியதாக இருக்குமென்று நினைத்து வந்த பாரி இத்தனை பெரிதாக எதிர்பார்க்கவில்லை.

‘இருக்கும் நேரத்தில் எப்படி கண்டுபிடிக்கப்போகிறோம்’ என எண்ணிய நொடி… ‘மலைத்து நிற்பதைவிட முயன்று பார்த்திட வேண்டும்’ என சத்யாவுடன் சில அடிகள் வைத்த பாரி வேகமாக சத்யாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்த புதருக்குள் ஒளிந்தான்.

“என்னாச்சு பாரி?”

பாரி கைகாட்டிய திசையில் முரட்டு தோற்றத்தில் இருவர் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அமோஸ் அனுப்பிய ஆளாக இருக்குமென்று நினைத்தான் பாரி.

அவனுக்கு வேண்டியதை அடைய இத்தனை வேகம்கூட அவன் காட்டவில்லை என்றால் அவனென்ன ஸ்மக்லர். பாரி எண்ணிய நொடி புருவத்தை நீவிக்கொண்டான்.

சட்டை பையிலிருந்து ஒரு கேண்டியை பிரித்து வாயிலிட்டவன் மெல்ல சுவைக்க ஆரம்பித்தான்.

“எப்படித்தான் உன்னால இந்த மாதிரி நேரத்தில் மிட்டாய் சாப்பிட முடியுதோ? அதுவும் இப்படி ரசிச்சு” என்ற சத்யா, “நமக்கு முன்ன அவங்க எடுத்துட்டா மொத்தமா எல்லாம் சொதப்பிடும்” என்றான்.

“அவனுங்க எடுத்தாலும் இந்த கேட்டைத் தாண்டி போக விட்டுடுவேனா?” என்ற பாரி… அந்த மூன் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவாக இருக்குமென்று யோசிக்க ஆரம்பித்தான்.

சத்யா அந்த இருவரையே பார்வையால் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் அந்த இருவரில் ஒருவரின் அலைபேசி ஒலித்தது.

பாரி மற்றும் சத்யாவின் செவிகள் கூர்மை பெற்றன.

“…..”

இன்னும் இல்லை பாஸ்.”

“….”

“நிலா வடிவில் இங்கு எந்த பொருளும் இல்லை பாஸ்.”

“….”

“திட்டுறார்டா… இன்னும் நல்லா தேடுவோம்.” அலைபேசியில் உரையாடியவன், உடனிருந்தவனுடன் கூறினான்.

அந்தப்பக்கம் யார் பேசியது, என்ன கேட்டார்கள் என்பதெல்லாம் பாரிக்கு தெரியவில்லை. ஆனால் இந்த தடியர்கள் பேசியது நன்கு கேட்டது.

அதிலிருந்து பாரி தெரிந்துகொண்டது, ‘இவர்களுக்கும் மூன் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது.’

“இப்போ என்ன பன்றது பாரி. இவனுங்களுக்கும் தெரியல போல?” என்ற சத்யாவிடம், “அவனுங்களுக்கு தெரியலன்னா என்ன, எனக்கு தெரிஞ்சிடுச்சு” என்றான் பாரி.

சத்யா புரியாது பார்க்க…

“அவனுங்க பேசினது வச்சு அந்த மூனுக்கு மீனிங்… மூன் வடிவில் இந்த கார்டனில் ஏதோ இருக்கு. அங்கதான் அந்த சிலையும் இருக்கு” என்றான் பாரி.

“இந்த இருட்டில் அந்த தடிமாடுகளே ஏதோ வரிவடிமாத்தான் தெரியிறானுவ, இதுல எங்க அந்த நிலாவை தேடுறது?” என்ற சத்யாவின் கண்களும் பாரியின் கண்களுக்கு போட்டியாக இருந்த இடத்திலிருந்தே தோட்டத்தை அலசியது.

மீண்டும் அந்த தடியர்களின் அலைபேசி சத்தம் எழுப்பியது.

இம்முறை எதிர்பக்கம் பேசுவதற்கு முன்பே,

“பாஸ் தேடிட்டு இருக்கோம். கிடைச்சதும் கால் பன்றோம்” என அழைப்பை வைத்திருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில்…

“ராயப்பனின் எண்ணிற்கு மூன் என்ற வார்த்தை கேள்வி குறியுடன் வந்திருப்பதாக” தாமஸிடமிருந்து பாரிக்கு தகவல் வந்தது.

இதற்காகத்தானே பாரி அவர்களிடமிருந்து அலைபேசியை பறிக்கச்செய்தது.

“ராயப்பனிடமிருந்து பதில் செல்லவில்லை என்றால், அமோஸ் உஷாராகிவிடுவான். இனியும் நேரத்தை வீணடிக்க முடியாது” என சத்யாவிடம் மென்குரலில் கூறிய பாரி,

தன்னுடைய இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்தான்.

“ஷூட் பண்ணப்போறியா பாரி? இருட்டில் குறி தவறி அவனுங்களுக்கு எதாவது ஆகிட்டா மேலிடத்திற்கு பதில் சொல்ல வேண்டி வருமே?” என்றான் சத்யா.

“அதெல்லாம் மிஸ்ஸே ஆகாது” என்ற பாரி நொடி நேரத்தில் அடுத்தடுத்து துப்பாக்கியின் ட்ரிகரை இரண்டு முறை அழுத்த அந்த தடியர்கள் இருவரும் தொப் தொப்பென தரையில் விழுந்தனர்.

“பாரி?” அவர்கள் உடனடியாக விழுந்ததும் உயிர் போய்விட்டதோ என்று சத்யா அதிர்ந்தான்.

“டேய் கத்தாதடா. சும்மா மயக்கம் தான் போட்டிருக்கானுங்க. இது புல்லட் இல்லை. மயங்குறதுக்கான இன்ஜெக்ஷன்” என்றான் பாரி.

“ப்ரீ பிளானாத்தான் வந்திருக்க” என்ற சத்யாவிடம் பாரியை நினைத்து மெச்சுதல்.

சத்யா கீழே விழுந்து கிடந்தவர்களின் அருகில் செல்ல…

பாரி யாருக்கோ அழைத்தான்.

“அங்கிள் வாட்ச்மேனுக்கு தெரியாது உள்ள வாங்க” என்று சொல்லி வைத்துவிட்டான்.

“யாரடா வர சொல்லுற?”

“கணபதி அங்கிள் டா. இங்க வரதுக்கு முன்பு அவருக்கு லொகேஷன் அனுப்பிட்டுத்தான் வந்தேன். இப்படி யாராவது மாட்டினா நல்லாயிருக்கும் நினைச்சேன்” என்றான் பாரி.

பாரி சொல்லியது போலவே சத்தமில்லாது மற்றொரு காவலருடன் உள்ளே வந்த கணபதி பாரி காட்டிய இருவரையும் தூக்கிக்கொண்டு காவல் நிலையம் சென்றார்.

அந்த இருட்டிலும் பாரியின் கண்களில் பளபளப்பு. தீவிரமாக தோட்டத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

“முடியலன்னா நாளை வருவோம் பாரி.”

சோர்ந்துவிட்டவனாக சத்யா கூறினான்.

“இந்த சான்ஸ் திரும்ப கிடைக்காது சத்யா. அல்ரெடி அந்த அமோஸிற்கு ராயப்பனிடமிருந்து பதில் போயிருக்காது. இப்போ இந்த தடியன்களிடமிருந்தும் தகவல் கிடைத்திருக்காது. அவன் அலர்ட் ஆகியிருப்பான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வந்த ரெண்டு பேர் மாதிரி பலர் வரலாம். அதுக்குள்ள நாம கண்டுபிடித்திருக்கணும்” என்ற தன்னுடைய தேடுதலை மட்டும் நிறுத்தவில்லை.

நேரம் சென்று கொண்டே இருந்தது.

பாரி சொல்லியது போல் தான் அடுத்து நடந்தது.

தகவல் வரவேண்டிய இரண்டு இடத்திலிருந்தும் எவ்வித செய்தியும் இல்லாமல் போனதால் அமோஸ் யூகித்துவிட்டான். பாரியிடம் சிக்கிக்கொண்டார்கள் என்று.

“இன்று அவனா நானா பார்த்துடுறேன்” என்ற அமோஸ் “குறைந்தது முப்பது பேரையாவது அனுப்புடா” என்று ரேமண்டிற்கு உத்தரவிட்டான்.

குறைந்த நிமிடங்களுக்குள் அமோஸ் இட்ட கட்டளையை நிறைவேற்றியிருந்தான் ரேமண்ட்.

“அந்த வைரங்கள் என் கைக்கு வரல்லைன்னாலும் பரவாயில்லை. என்னை இத்தனை அலைகழிக்கிற அந்த போலீஸ் உயிரோட இருக்கக்கூடாது” என்றான் அமோஸ்.

ஒருகட்டத்தில் சத்யா இனியும் கண்டுபிடிக்க முடியாதென்று தரையில் அமர்ந்துவிட்டான்.

‘இதென்ன இப்படி தண்ணிகாட்டுது’ என நினைத்த பாரி இடையில் இருபக்கமும் கை குற்றி ஆயாசமாக தலையை உயர்த்தி பார்த்தான்.

பார்த்த கணம் அவனது கண்களில் மின்னல்.

“சீ தேர் சத்யா?” என்று பாரி கைகாட்டியதை பார்த்த சத்யா “அடங்கொக்கமக்கா… என்னம்மா யோசிக்கிறானுங்க. இந்த மூளையை நல்லதுக்கு பயன்படுத்துலாமே” என்றதோடு, “பணக்கார வீட்டிலெல்லாம் அழகுக்காக கட்டுறாங்களோ இல்லையோ மறைச்சு வைக்க கட்டுறாங்கய்யா” என்றான்.

தோட்டத்தின் ஒரு பகுதியில் மூன்று தூண்களுடன் கூடிய மண்டபம் இருந்தது. அதன் கீழ் சுற்றாய் சிமெண்ட் மேடை மூவர் அமரும் வகையில். நடுவில் மூன்று தூண்களை விட உயரமான தூண் ஒன்று. அதன் உச்சியில் இருந்த கூரை அரை வட்ட நிலவு வடிவில் அமைந்திருந்தது.

பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்த அந்த மண்டபத்தை மேலும் அழகாக்கியது அதனைச்சுற்றி அமைந்திருந்த பல வண்ண மலர் செடிகள்.

அந்த மண்டபத்தின் உள்ளே சென்ற இருவருக்கும், அதில் சிறு புள்ளி அளவு கூட சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை.

“இவ்வளவு தூரம் வந்து கோட்டை விட்டுடுவோமோன்னு இருக்கு சத்யா” என்ற பாரி அந்த மண்டபத்தை அலசியவனாக ஒரு மேடையில் அமர்ந்தான்.

“கீழையும் நோண்டி புதைத்த மாதிரி எதுவும் தெரியலையே பாரி” என்ற சத்யா அந்த மண்டபத்தை சுற்றி வந்தவனாக மற்றொரு மேடையில் அமர்ந்தான். இன்னொரு மேடை காலியாக இருக்க… பாரி தன் மனதின் உந்துதலினால் நல்ல கனமான பூந்தொட்டியை எடுத்து அதில் வைத்தான். பின்னர், தான் அமர்ந்திருந்த மேடையில் சென்று பாரி அமர, அவன் செய்வதை ஆராய்ச்சியாக பார்த்த சத்யா என்னயென்று தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருந்தான்.

“அங்கவே உட்கார் சத்யா” என்ற பாரியின் அதட்டலான குரலில் சத்யா வேகமாக தான் முன்னர் அமர்ந்த இடத்தில் அமர்ந்தான்.

இப்போது அந்த மண்டபத்தின் மூன்று மேடையிலும் கனம் இருக்க… நடுவிலிருந்த உயரமான தூண் நிலவு வடிவிலான கூரையும் சேர்ந்தவாறு சற்று நகர்ந்து நின்றது. அதன் அடியில் இறங்குவதற்கு படிகள் தென்பட்டது.

“ஹேய் பாரி… இதெல்லாம் நான் எம்ஜிஆர் படத்தில் தாண்டா பார்த்திருக்கேன்” என்று வாய்பிளந்தான் சத்யா.

தெரியும் படிகளில் இறங்கலாமென பாரி எழ… மீண்டும் அந்த தூண் பழைய நிலைக்கு வந்து படிகளை மூடியது.

“பயங்கரமான மூளக்காரனுங்கதான் பாரி.”

“உன்னோட மேடையில் நல்ல வெயிட்டா ஃபிளார் பாட் தூக்கி வை சத்யா” என்ற பாரி தான் அமர்ந்திருந்த மேடையிலும் அதனை செய்தான்.

இப்போது எளிதாக படிகளின் கீழே இறங்கினர்.

படிகள் முடிவடைய சுரங்கம் போல் சென்றது. பாரி தன்னுடைய அலைபேசியில் பிளாஷ் லைட் ஆன் செய்திருந்தான்.

“இவனுங்கலாம் இங்கிருக்க வேண்டிய ஆளுங்களே இல்லை பாரி.” ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சத்யா புலம்பினான்.

அந்த சுரங்கம் முடியுமிடத்தில் அறை இருந்தது. அதில் டிஜிட்டல் லாக் பொருத்தப்பட்டிருக்க கடவுச்சொல் பாட்டர்ன் கேட்டது.

பாரி யோசித்தபடி நின்றிருக்க…

“இந்த மாதிரி ஆளுங்களெல்லாம் அவனுங்களைத் தவிர யாரையும் நம்ப மாட்டானுங்க பாரி. அதுவும் அந்த விவாஷ், அவனோட பர்ஸ்ட் லெட்டர் தான் வச்சிருப்பான்” என்று சொல்லிக்கொண்டே ஆங்கில எழுத்து ‘V’ வடிவத்தை வரைந்திட தவறென்றது.

“என்ன சத்யா?” என்ற பாரி…

அமிர்தாவை கொலை செய்தபோது அவள் ராயப்பனை அப்பா என்று சொன்னதற்காகவே விவாஷ் அவளை அடித்ததை நினைவு கூர்ந்து பார்க்க… ராயப்பனென்றால் அவனுக்கு அத்தனை பிடித்தம் என்பதை அந்நொடி உணர்ந்தான்.

அதனால் ராயப்பனின் ஆங்கில எழுத்து ‘R’ ஐ சற்று தயக்கத்தோடே வரைய கதவு திறந்து கொண்டது.

“எப்படி பாரி இப்படி யோசிக்குற?”

“நம்மளோட வேலையில் கண்ணில் படும் ஒவ்வொன்றையும் மிகுந்த கவனத்தோடு பார்க்கணும் சத்யா. நாம வேண்டான்னு ஒதுக்கும் ஒன்று தான் மிகப்பெரிய லீடா அமையும்” என்ற பாரி, “விவாஷுக்கு ராயப்பன் ரொம்ப பிடிக்கும். சோ, சின்ன கெஸ்ஸில் போட்டேன்” என்றான்.

பேசியபடி இருவரும் அறைக்குள் சென்று பார்க்க அலைபேசியின் வெளிச்சத்தில் அந்த சிலையில் பதிக்கப்பட்டிருந்தத் ரத்தினங்கள் கண்களை கூசச்செய்தது.

“சிலை இங்கதான் பாரி இருக்கு” என்று சொல்லிய சத்யா அதனை எடுக்க… சிலைக்கு அடியில் பெட்டி ஒன்று இருந்தது.

பாரி சென்று பெட்டியை எடுத்து திறக்க… முழுக்க முழுக்க ஆற்றுகரையோரம் நீலநிற மண்ணில் கண்டெடுக்கப்படும் அரியவகை வைரங்கள் மின்னின.

“பல பில்லியன் இருக்கும் போலவே பாரி.”

ஆமென்று பாரியின் தலை அசைந்தது.

அதன் பின் இருவரும் நேரம் தாழ்த்தாது வெளியில் வந்து, மண்டபத்தை பழைய நிலைக்கு மாற்றிவிட்டு திரும்ப இருபதுக்கும் மேற்பட்டோர் திபதிபுவென அவர்களை சுற்றி வளைத்தனர். அனைவரது கைகளிலும் துப்பாக்கி பளபளத்தது.

பாரி அவர்களை கடந்து எட்டிப்பார்க்க, கேட்டின் அருகில் காவலுக்கு இருந்தவர் மயங்கிக் கிடந்தார்.

“ஒழுங்கா நீங்க எடுத்ததை என்கிட்ட கொடுத்திடுங்க.” வந்திருந்தவர்களில் தலைமை போலிருந்தவன் இருவருக்கும் முன் துப்பாக்கியை நீட்டியவனாக மிரட்டினான்.

பாரி அதற்கெல்லாம் அசரவில்லை.

பாரியின் கையில் சிலை இருக்க… தனக்கு எதிரே துப்பாக்கி ஏந்தியபடி இருந்தவர்களை சுற்றி பார்வையை ஓடவிட்டவன், இறுதியில் தங்களை மிரட்டியவனிடம் நிலைபெறச்செய்தான்.

அவனையே பாரி நேர்கொண்டு பார்த்திருக்க…

“எதுவும் செய்து தப்பித்துவிடலான்னு கணக்கு பண்ணாத. சிலையை கொடுத்திடு. விட்டுடுறேன்” என்றான் அவன்.

அவனையே இமை சிமிட்டிடாது பார்த்துக் கொண்டிருந்த பாரி கீழே பார்வையை தாழ்த்த… அவனும் என்னவென்று விழி கவிழ்ந்தான். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாரி கையிலிருந்த சிலையாலேயே அவனின் மண்டையில் அடித்து கீழே சரித்து நெஞ்சில் கால் வைத்து, தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் முன் நீட்டியிருந்தான்.

“உனக்கெல்லாம் நான் பயப்படுவேன் நினைச்சியா?” என்ற பாரி, சுற்றியிருந்தவர்களை ஒரு பார்வை பார்க்க, தங்களுக்கு உத்தரவு போடுபவனே அவனது காலில் இருக்க, தாங்கள் தனித்து செய்ய ஒன்றுமில்லையென நினைத்தவர்கள் பாரியின் முன் துப்பாக்கிகளை போட்டுவிட்டு இரு கைகளை மேலே தூக்கி மண்டியிட்டனர்.

சொல்வதை கேட்டு செய்தே பழகியவர்களுக்கு, திடீரென தனியே சிந்தித்து அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

போரில் ஆயிரம் சேனைகளை கொன்று குவிப்பதைவிட, அவர்களுக்கு தலைமை நிற்கும் அரசனை சாய்த்துவிட்டால் போதும், சேனைகள் அடிபணிந்து விடும். அந்த போர் யுக்தி முறையைத்தான் பாரி இங்கு கையாண்டான்.

“என்ன தைரியமிருந்தா என்னையே மிரட்டி பார்ப்பான் இவன். என்ன செய்யலாம் இவனை? ஒரே அழுத்து, டப்புன்னு சுட்டா பொட்டுன்னு போய்டுவான். செய்திடலாமா சத்யா?” பாரி அவ்வாறு கேட்டதும், பாரியின் காலுக்கு கீழ் கிடந்தவனின் கண்களில் மிரட்சி.

“வேண்டாம் சார். நாங்க சொல்லுறதை செய்றவங்க. விட்டுடுங்க சார். எனக்கு நேத்துதான் குழந்தை பிறந்தது” என்று கெஞ்சினான்.

“அச்சச்சோ… பாப்பா பிறந்திருக்கா? அப்பா இல்லைன்னா பாப்பா பாவம்ல சத்யா” என்ற பாரி, “அப்போ என்ன செய்யலாம்?” என தன்னுடைய புருவத்தை கீறினான்.

“சரி பொழைச்சு போ. உன்னை விட்டுடுறேன்.”

பாரி சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை.

“நிஜமாத்தான் சொல்றேன். உங்க அத்தனை பேரையும் ஜெயிலில் போட இடமில்லை. அத்தோட கவர்ன்மென்டுக்கு தேவையில்லாத செலவு வேற” என்ற பாரி, “உயிர் மேல் ஆசையிருக்குல்ல… அப்புறம் எப்படி பயமேயில்லாம ஒரு உயிரை எடுக்குறீங்க?” எனக் கேட்டான்.

எல்லோரும் தலை கவிழ்ந்தனர்.

“உங்களுக்கு திருந்திவாழ ஒரு வாய்ப்புத் தரேன். இனி இந்த அடியாள் வேலை செய்யமாட்டோம் அப்படின்னு ஸ்டேஷன் வந்து ஒவ்வொருத்தரும் தனித்தனியா எழுதிகொடுத்துட்டுப் போங்க” என்றான்.

ஒவ்வொருத்தனும் ஒவ்வொருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தனர்.

“சரிங்க சார்.” சில நிமிடங்களில் ஒன்றாகக் கூறினார்.

“என்னை ஏமாத்த நினைக்காதீங்க. உங்களையெல்லாம் பிடித்து ஜெயிலில் போட எனக்கு இரண்டு நிமிடம் ஆகாது” என்று எச்சரித்தான் பாரி.

“இல்லை சார் ஏமாத்தமாட்டோம்.”

“ம்ம்ம்” என்ற பாரி “எதுல வந்திங்களோ அதிலே ஸ்டேஷனுக்கு வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு, அவர்களிடமிருந்த துப்பாக்கியையெல்லாம் எடுத்துக்கொண்டு சத்யாவுடன் அங்கிருந்து சென்றான் பாரி.

“அவனுங்க ஏமாத்திட்டா?” சத்யாவின் கேள்விக்கு அர்த்தமாக சிரித்த பாரி “நாம ஸ்டேஷனுக்கு போனதும் தெரிஞ்சிடும்” என்றான்.

பாரியும் சத்யாவும் ஸ்டேஷன் செல்வதற்கு முன்பு அந்த ரவுடி கும்பல் அங்கிருந்தது.

“அவனுங்க நினைத்திருந்தால் இங்க வராமலே எஸ்கேப் ஆகியிருக்கலாம். வந்ததிலே தெரியுதே ஏமாத்தமாட்டானுங்கன்னு” என்ற பாரி, “இவனுங்க வேணுன்னு இந்த தொழிலை செய்யறது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் மாறிப்போனவங்க. யாரோ ஒருத்தன் கொடுக்குற காசுக்காக பிடிக்காம அடியாள் வேலை பாக்குறானுங்க. இவனுங்களை உள்ள தூக்கிபோட்டு ஒரு பயனுமில்லை. இப்போ இவனுங்களை அனுப்பியது ரேமண்ட் அப்டிங்கிறது கூட அவனுங்களுக்கு தெரியாது” என்றான் பாரி.

“அப்போ பர்ஸ்ட் பிடித்த ரெண்டு பேரு?”

கணபதி தூக்கிச்சென்றவர்களை கேட்டான் சத்யா.

“அவனுங்க நேரா ரேமண்டிடமே பேசியிருக்கானுங்க. சோ, அவனுங்க கண்டிப்பா நமக்குத்தேவை” என்ற பாரி கணபதியிடம், “எல்லாரும் எழுதி கொடுத்துட்டாங்களா அங்கிள்?” என்று வினவினான்.

“ஆச்சு சார்.”

“ஹ்ம்ம்” என்ற பாரி, “இனியொருமுறை தப்பு செய்தீங்கன்னு உங்களை பார்த்தேன்” என்று மிரட்டியே அவர்களை அனுப்பி வைத்தான்.

“அவனுங்க எங்கிருக்கானுங்க அங்கிள்?”

கணபதி தாங்கள் குற்றவாளியை விசாரணைக்காக வைத்திருக்கும் அறையை கைகாட்டிட பாரி அங்கு சென்றான்.

“இன்னும் மயக்கம் தெளியில சார்.”

“ஹோ…” என்ற பாரி, “நாளைக்கு இருக்கு இவனுங்களுக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்க…

பாரிக்கு அவியிடமிருந்து அழைப்பு வந்தது.

அலைபேசியை ஏற்று காதில் வைத்தவனாக அவர்களை போகுமாறு கை காண்பித்தான்.

எதிர்பக்கமிருந்து அவி பேசாதிருக்க,

பட்டென்று ஒரு சத்தம். அடுத்த நொடி அழைப்பு கட் ஆகியிருந்தது. பாரி அவிக்கு முயற்சிக்க அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.

அதுவே ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கிறது என்பதை பாரிக்கு உணர்த்தினாலும், அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காதென்றும் ஒருமனம் சொல்லியது.

மனதை திடப்படுத்தி ஓரிரு கணங்கள் கண்களை மூடி நின்றான்.

“சத்யா நீ கிளம்பு” என்ற பாரி, வைரங்களையும் சிலையையும் பத்திரப்படுத்திவிட்டு வீட்டிற்கு செல்ல வண்டியை முடுக்கிய கணம் பூவிடமிருந்து அழைப்பு வந்தது.

“வேந்தா…” பூவின் குரல் அழுகையில் விசும்பியது.

ப்ளூடூத் கனெக்ட் செய்தவன் அவளிடம் பேசியபடி வீடு நோக்கி வண்டியில் காற்றாய் பறந்தான்.

“பூ… பூ… என்னடா? என்னாச்சு?” என்று பாரி கேட்கும்போதே அவளின் அழுகை அதிகரித்தது.

பாரி பயந்துவிட்டான்.

“பூ… பூ…” என்று பாரி கத்திக்கொண்டிருக்க, அவளின் அழுகையைத் தவிர ஒன்றும் கேட்கவில்லை.

“என்னாச்சுடி? சொன்னாதான எனக்குத் தெரியும்?”

அழுகை, அழுகையென்றால் அப்படியொரு அழுகை.

“அழாம சொல்லு.”

“…..” அழுகை நின்றபாடில்லை.

“பூ…” அதட்டலான அவனின் குரலில், அழுகையை நிறுத்தியவள்,

“வேந்தா… நான்… நான் ஒருத்தனை கொன்னுட்டேன்” என்று திக்கித்திணறி கூறியவள் வெடித்து கதறினாள்.

பாரிக்கு உலகமே ஸ்தம்பித்தது. அப்படியே வண்டியை பிரேக்கிட்டு நடு சாலையில் நின்றுவிட்டான்.

“பூ…” பாரி அதிர்ந்து அவளது பெயரை உச்சரிக்க…

“பாரி நீ பர்ஸ்ட் வீட்டுக்கு வாடா” என்று அவியின் குரல் கேட்டது. பயத்தில் அவனது குரல் நடுங்கியது போலிருந்தது.

வீட்டிற்கு மின்னலென வந்து சேர்ந்திருந்தான்.

தன்னுடைய வீடு பூட்டியிருக்க ஜென்னின் வீட்டிற்கு சென்றான்.

கதவு திறந்திருக்க நிலைப்படிக்கு நேராக உள்ளே தள்ளி ஒருவன் விழுந்து கிடந்தான். அவனது தலைக்கு அடியில் தரை முழுவதும் ரத்தம் படர்ந்திருந்தது. அருகே இஞ்சிப்பூண்டு இடிக்கும் குழவி கல் ரத்தம் தோய்ந்து கிடந்தது.

பாரி கீழே குனிந்து அவனின் மூக்கிற்கு கீழ் விரல் வைத்து பார்த்தான். கையில் நாடி பிடித்தான்.

மேலும் உள்ளே செல்ல பூ நடுங்கிக்கொண்டிருக்க அவளின் இருபக்கமும் ஜென்னும், லீயும் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அங்கே நடு கூடத்தில் அவியின் அலைபேசி உடைந்து சிதறியிருந்தது.

அவி கைகளை பிசைந்துகொண்டு நின்றிருக்க… அவனுக்கு அருகில் ஒருவன் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தான்.

“என்னாச்சு அவி?”

பாரியின் குரல் கேட்டதும் சரேலென துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாவாக, அவனை நோக்கி பாய்ந்திருந்தாள் பூ.

“வேந்தா… வேந்தா… நான், நான் அவனை கொன்னுட்டேன். கொன்னுட்டேன் வேந்தா” என்று அவனின் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள்.

“இல்லை பூ. இல்லைடா நீ கொலை செய்யல. இங்க பாரு பூ… நீ கொலை செய்யல” என்று பாரி எவ்வளவோ சொல்லியும் பூ தன் அரற்றலை நிறுத்துவதாக இல்லை. தலையில் அடித்துக்கொண்டு அழத் துவங்கினாள்.

பாரியின் அதட்டலும் பூவிடம் வேலை செய்யாமல் போக…

அவளின் கன்னம் தீப்பற்றி எரிந்ததைப்போல் ஓங்கி அறைந்திருந்தான்.

அதில் வாய்மூடி மலங்க மலங்க விழித்தவளின் பின்னந்தலையில் கையிட்டு தன் நெஞ்சில் அவளின் முகத்தை அழுத்திக்கொண்டவன்,

“அவன் சாகலடா… மயக்கமாகியிருக்கான். அவ்வளவு தான்” என்றான் பாரி.

அதன்பின்பே அவியும் அவனது மூச்சை கவனித்து, “ஆமா தமிழ்” என்றிட மற்றவர்களிடமிருந்து ஆசுவாசமாக பெருமூச்சு வந்தது.

“கொஞ்ச நேரத்தில் உயிர் போயிருச்சு பாரி” என்ற அவி பொத்தென்று இருக்கையில் சரிந்தான்.

அத்தனை நேரம் தான் கொலை செய்துவிட்டதாக எண்ணிய பயம் நீங்க, பாரியை இறுக அணைத்துக்கொண்டாள் பூ.

“என்ன நடந்தது ஜென்?”

பாரி கேட்கவும் ஜென் விளக்கினாள்.

உறக்கம் வராது பாரியை எதிர்பார்த்தவாறு பூ மடிகணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

உறக்கத்திலிருந்த அவிக்கு திடீரென உறக்கம் கலையை எழுந்து கூடத்திற்கு வர, அங்கு பூ மட்டும் அமர்ந்திருப்பதை கண்டு அருகில் சென்று அமர்ந்தான்.

“தூங்கலையா தமிழ்?”

“இல்லை அவி. என்னவோ தூக்கம் வரல.”

“ஹ்ம்ம்” என்றவன் அப்படியே இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிட…

“என்ன அவி?” எனக் கேட்டாள் பூ.

“தலைவலிக்குது தமிழ்” என்றான்.

“இரு காஃபி போட்டுத்தறேன். குடிச்சிட்டு டேப்லெட் போட்டு படு. சரியாகிடும்” என்றவள் கிச்சனிற்குள் செல்ல… இரண்டு தடியர்கள் கதவினை உடைத்துக்கொண்டு உள் வந்திருந்தனர்.

அந்த சத்தத்தில் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த ஜென் மற்றும் லீயும் கூடத்திற்கு வர, அங்கு ஒருவனின் பிடியில் அவி நின்றிருக்க, அவன் அவியின் கழுத்தில் கத்தி வைத்திருந்தான்.

இரு பெண்களும் அதிர்ந்து சிலையாக நின்றிட…

“ஹேய் உங்க ரெண்டு பேருல அந்த டிசி பொண்டாட்டி யாரு?” என்று ஒருவன் கேட்டிட இரு பெண்களும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்தனர்.

சத்தம் கேட்டு கிச்சனிலிருந்து பூ எட்டிப்பார்க்க… அவளுக்கு நேரெதிர் தெரிந்த அவி வராதே எனும் விதமாக கண்களால் சமிக்கை செய்தான்.

“என்னடா பார்வை அங்க போகுது?” என்று அவியை பிடித்திருந்தவன் கேட்க…

“உள்ள யாருடா இருக்கா?” என்றபடி மற்றொருவன் சமையலறை பக்கம் சென்றிருந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
42
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்