தூவானம் 43 :
மாதம் ஒன்றிற்கு மேல் சென்றிருந்தது வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ரேமண்ட் அன்று விவாஷிடம் பேசியது, அதன் பிறகு அவனது அந்த எண்ணை வைத்தும் அடுத்தகட்ட நகர்வுக்கு அடி வைக்க முடியவில்லை.
இதில் வேகத்தை விட பொறுமை மிக அவசியம் என உணர்ந்த பாரி, ஆற்று நீரில் மீனுக்காக குறி வைத்து பல மணி நேரம் நின்றிருக்கும் கொக்கை போல், தன்னுடைய எதிரிகளுக்கு பொறி தூவி நிதானமாகக் காத்திருக்கிறான்.
அமோஸிற்கு வைரங்கள் வேண்டும். ஆனால் அதனை பதற்றம்கொண்டு விரைந்து ஏதேனும் செய்து ஆபத்தில் வலிய மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அதனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பாரியை பற்றி அவனின் சிறுசிறு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
அவன் பொறுமை காக்கலாம். ஆனால் அவனுக்கு மேல் ஒருவன், அதாவது அமோசிடம் வைரத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சும்மா இருந்திடுவார்களா? அவர்கள் கொடுத்த அழுத்தத்தில் தன்னுடைய காத்திருப்பை உடைத்துவிட்டு செயலில் கால் வைத்த அமோஸ் பாரியின் அதிரடியில் தேவையானதை இழந்து நின்றான்.
தமிழ் சென்னை திரும்பியது முதல் அவியுடன் அலுவலகத்திற்கு செல்கிறாள். அவி பாரியுடன் இருப்பதால் இப்போதும் பூ ஜென்னுடன் தான் இருக்கின்றாள்.
“இன்னமும் எதுக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்க? அங்க நம்ம வீட்டுக்கு வந்துடுங்க” என இளா முதல் பார்வதி வரை அனைவரும் அழைத்தும், நடக்கும் வழக்கின் தீவிரம் உணர்ந்தவன் “இப்போதைக்கு முடியாது” என்று நேரடியாகவே மறுத்துவிட்டான்.
பரிதிதான் பாரியை புரிந்துகொண்டவனாக பார்வதியை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறான்.
“இப்படியே காலம் முழுக்க இவனுக்கு கேஸ் இருக்கும். நம்மளை விட்டு தனியாவே இருந்திடுவானாமா? போலீஸ் வேலையில் இருக்க யாரும் குடும்பத்தோட இல்லையாமா?” என்று அப்போதும் புலம்பத்தான் செய்தார். ஆனால் அதற்காகவெல்லாம் பாரி மனம் இலகவில்லை.
“இன்னும் கொஞ்சநாள் போகட்டும்” என்று சொல்லிவிட்டான்.
பாரியின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்கும் பூ இந்த விடயத்திலும் அவனை மீறி எதுவும் சொல்லாது அவனுக்கு துணை நின்றாள்.
அதற்கும் பார்வதி, “நல்லாதான் ஜோடி சேர்ந்திருக்கீங்க!” என பொறுமினார்.
“நாங்க எங்க சேர்ந்தோம். நீங்க தான் சேர்த்து வச்சீங்க” என்று பாரி குறும்புடன் சொல்ல… பார்வதிக்கு அவனுக்கு உண்மை தெரிந்திருக்கிறது என்பதில் அசடு வழிந்தார்.
அன்று பூவும் அவியும் அலுவலகத்தில் உட்கார்ந்து தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். இதுவரை அவர்கள் வடிவமைத்திருக்கும் மென்பொருளில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர முடியுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளே வந்த மேனஜர் தீபன்…
“எச்.ஆர் போஸ்ட் இன்டர்வியூவ் பைனல் ரவுண்ட் செலக்டட் பெர்சன்ஸ் மட்டும் வெயிட் பன்றாங்க அவினாஷ். க்ரூப் டிஸ்கஷன் நீங்க வரன்னு சொன்னீங்களே!” என்று தான் வந்ததற்கான காரணத்தைக் கூறினான்.
“ஓகே தீபன் நீங்க போங்க டூ மினிட்ஸில் வர்றேன். இல்லைன்னா நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. நான் இங்கிருந்தே பார்த்துக்கிறேன்” என்றவன் மீண்டும் தன்னுடைய வேலையில் கவனமானான்.
“நாம அப்போவே செலக்ட் பண்ணியிருந்தோமே அவி?” என்று பூ தன்னுடைய சந்தேகத்தை வினவினாள்.
“அவங்க வொர்க் சாடிஸ்ஃபை ஆகல தமிழ்” என்றவன், “நீ போய் அட்டெண்ட் பண்ணேன்” என்றான்.
“இருக்குற வேலையே தலைக்கு மேலிருக்கு. போடா” என்றவள் கணினியில் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
“ஓகே, நான் போயிட்டுவரேன் இது பன்க்ஷன் ஆகுதா பாரு” என்று இருக்கையிலிருந்து எழுந்தவன், “நீ வீடியோ அப்செர்வ் கனெக்ட்டில் இரேன்” என்றவனாக நேர்முகத்தேர்வு நடைபெறும் அறையின் சிசிடிவியை ஆன் செய்தான்.
அவ்வறையில் இருப்பவர்களில் ஒருவரை கணினி திரையில் கண்டு அங்கு செல்லாது மீண்டும் அமர்ந்துவிட்டான்.
“என்னடா போகல?”
“தமிழ் இது…”
அவி திரையை காண்பித்து இழுக்க, எழுந்து வந்து அவன் காட்டும் நபரை பார்த்த பூ…
“லீலா” என்றாள்.
“அவளோட நீ டச்சில் இல்லையா?”
“காலேஜ் டேசோடு முடிஞ்சிடுச்சு. பரிதி மாமா மேரேஜ் அப்போ காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணேன். பட் நோ ரெஸ்பான்ஸ்” என்றவளுக்கு லீலாவின் முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அறையில் இணைபிரியா தோழியாக அவளுடன் இருந்த பூவால் லீலாவிடம் உள்ள மாற்றங்களை நொடியில் கண்டுகொள்ள முடிந்தது.
“ஏன் இப்படியிருக்கா?”
எப்போதும் பளிச்சென்று புது மலராய் இருப்பவள், இன்று வெளுத்த நிறத்தில் ஆடை, பெயருக்கு முடியை சிறு கிளிப்பில் அடக்கியிருந்தாள். முகத்தில் பொட்டில்லை. காதில் சிறு ஸ்டட். வெற்று கழுத்து.
பூவிற்கும் அவிக்கும் லீலாவை அந்நிலையில் பார்க்க என்னவோ போலிருந்தது.
“சரி, வா… நாம போய் பார்க்கலாம்.” பூ அவியின் கையை பிடித்து இழுத்தான்.
“தமிழ் வெயிட்” என்ற அவி, “இன்டர்வியூவ் முடியட்டும். இப்போ நாம போனால் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவாள் தெரியாது” என்றான்.
பூவிற்கும் அவியின் பேச்சு சரியெனப்பட, அமர்ந்துவிட்டாள். ஆனால் அவளுள் ஒரு பரபரப்பு. எப்போடா முடியும் லீலாவை சென்று நேரில் பார்ப்போம் என்று தவித்தாள். கை விரல்களை ஒருவழி செய்து கொண்டிருந்தாள்.
“தமிழ் ரிலாக்ஸ். அவளுக்கு என்ன ப்ராப்ளம் இருந்தாலும் நாம சரி பண்ணலாம்” என்றான் அவி.
ஆம் உண்மையில் பார்த்ததும் பரிதாபப்படும் நிலையில் தான் லீலா இருந்தாள். இத்தனை நாள் ஒரு தகவலுமின்றி இருந்தவளை இன்று இந்நிலையில் இப்படி அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
“நான்தான் யாரோடவும் பேசல. நீங்க எப்படிடா லீலாவை விட்டீங்க?” என ஆற்றாமையாகக் கேட்டாள் பூ.
“தமிழ்…” என்றழைத்த அவிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
நடந்த பல நிகழ்வுகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அல்லவா வைத்திருந்தது.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடந்த குழு உரையாடல் முடிவுக்கு வர, இருவர் தேர்வாகி இருப்பதாக தீபன் வந்தான்.
அவ்விருவரில் லீலாவும் ஒருத்தி.
அவி யோசிக்கவெல்லாம் இல்லை உடனடியாக லீலாவை தேர்வு செய்திருந்தான்.
தீபனுக்கும் அவனது தேர்வில் மகிழ்வே. அவனது மகிழ்விற்கு காரணம் அவன் மட்டுமே அறிந்தது. சந்தோஷமாக அவன் செல்ல…
“தீபன் அவங்களை நான் மீட் பண்ணனும். வரசொல்லுங்க!” என்றான் அவி.
லீலா மிகுந்த தயக்கத்துடன் தான் அறையின் கதவினை தட்டி அனுமதிக்காக நின்றிருந்தாள்.
வேகமாகச்சென்ற பூ கதவினை திறக்க… லீலாவிற்கு அங்கு பூவை காண்போமென்ற எண்ணம் இல்லாதிருந்ததால் அதிர்ந்து பார்த்தாள்.
“லீ” என்ற பூவின் ஒற்றை அழைப்பில், முகத்தை கரம் கொண்டு மூடி கண்ணீர் சிந்தினாள்.
“லீ என்னாச்சு?” பூ பதறினாள்.
“தமிழ் உள்ள கூட்டிட்டு வா” என்ற அவியின் குரலில், லீலாவை அணைத்தபடி உள்சென்ற பூ அவளை இருக்கையில் அமர்த்தி அவளின் கையை பிடித்தபடி தானும் அமர்ந்துகொண்டாள்.
நேரம் கடந்தும் லீலாவின் அழுகை நின்றபாடில்லை.
அவி தான் லீலாவின் மற்றைய பக்கம் அமர்ந்து அவளுக்கு பருக நீர் கொடுத்து அமைதி படுத்தினான்.
“தேன்க்ஸ் அவி” என்ற லீலா, “இது?” என்று பார்வையால் அவர்களது அறையை காட்டி வினவினாள்.
“நம்முடையது தான் லீ. இப்போதான் ஸ்டார்ட் பண்ணோம்” என்றாள் பூ.
“ஹோ” என்ற லீலா மீண்டும் அமைதியாகிப்போனாள்.
நீ ஏன் இப்படி இருக்கின்றாய் என்று கேட்க வாய் திறந்த பூவை பார்வையாலேயே வேண்டாமென்று தடுத்தான் அவி. எதற்காக என்று தெரியாத போதும், பூ அவி சொல்லியதற்காக எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
“சாரி… திடீர்னு இத்தனை வருஷம் கழித்து பார்த்ததும் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்று அங்கு நிலவிய சிறுநேர அமைதியை லீலாவே உடைத்தாள்.
அவள் சொல்லியது பொய்யென்று தெரிந்தும் அவளாக சொல்லும்போது சொல்லட்டுமென்று இருவரும் மேலே கேட்டுக்கொள்ளவில்லை.
“நான் செலக்ட்டடா?”
“அஃப்கோர்ஸ்” என்ற அவி, “திரும்பவும் நம்ம கேங் ஒண்ணாகியாச்சு” என்று சூழ்நிலையை மாற்ற உற்சாகமாக பேசினான்.
லீலாவிடம் அமைதியான இதழ் விரிப்பு.
இந்த லீலா முற்றிலும் புதிது.
எப்போதும் திடமாக, தான் மனம் சுணங்கினால் தன்னை வார்த்தையால் தேற்றிடும் தைரியமான லீலாவைத்தான் பூவுக்கு தெரியும். ஏன் எந்தவொரு சூழலிலும் லீலா அழுது பூ பார்த்ததில்லை. அப்படிப்பட்டவளுக்கு ஏன் இந்த கோலமென்று தான் நினைக்க வைத்தது.
“எங்க ஸ்டே பண்ணியிருக்க லீ. எப்போ சென்னை வந்த?”
….
பதில் சொல்லாது அமைதியாக இருந்த லீலா… “நீயெங்க தங்கியிருக்க தமிழ், பாரி வீட்டிலா?” எனக் கேட்டாள்.
அவியை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்த பூ…
“பாரிக்கும் எனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு” என்றாள்.
அப்போதுதான் பூவின் நெற்றியிலிருந்த குங்குமத்தை லீலா கவனித்து பார்த்தாள்.
“சரி தமிழ் அப்போ நான் கிளம்பட்டுமா? டைம் ஆகிருச்சு” என்று சுரத்தே இல்லாமல் கேட்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் இரு லீ. பாரியையும், ஜென்னையும் வர சொல்றேன்” என்ற அவி அலைபேசியை எடுக்க அதனை தடுத்தாள் லீலா.
“வேண்டாம் அவி, பாரி டி.சி’ல. ராயப்பன் நீயூஸில் அவன் போட்டோ பார்த்தேன். அவனுக்கு வொர்க் இருக்கும். இன்னொரு நாள் பார்த்துக்கிறேன்” என்றாள்.
பூவும் அவியும் அவளையே பார்த்திருக்க…
“எப்போலிருந்து ஆபீஸ் வரணும்?” எனக்கேட்டாள்.
“இப்போ ஒகேனாலும் ஓகே தான். தமிழ் உனக்கு கைட் பண்ணுவாள்.” சொல்லிய அவியிடம் நாளையிலிருந்து வருவதாக தெரிவித்து கிளம்பிவிட்டாள்.
“உனக்கு எதாவது புரியுதா தமிழ்.”
“இல்லை” என்ற பூ அவியின் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
அப்போதுதான் லீலா அலுவலகக் கேட்டினைத் தாண்டினாள். வேகமாக காரினை எடுத்துக்கொண்டு லீலாவை அடைந்த பூ அவளின் அருகில் நிறுத்தினாள்.
“ஏறு லீ!” லீலாவின் பக்கம் கதவை திறந்து கூறினாள்.
“இருக்கட்டும் தமிழ். பஸ் வரும் நான் போய்க்குவேன்” என்று மறுத்தாள் லீலா.
பூ பிடிவாதமாக இருக்க லீலா தான் இறங்கி வருவதாக இருந்தது.
“எங்கயாவது வெளிய போலாமா லீ?”
ஏனோ லீலாவிற்கு மறுக்கத் தோன்றவில்லை.
“கோவிலுக்கு போலாம் தமிழ்” என்ற லீ இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
கோவில் வந்ததும் பூ தான் லீலாவை தொட்டு நிகழ் மீட்டாள்.
“நீ உள்ள போ லீ. நான் அர்ச்சனை கூடை வாங்கிட்டு வர்றேன்” என்ற பூவிடம், “நீயும் வா போலாம்” என்று அங்கேயே நின்றுகொண்டாள் லீ.
இருவரும் கடவுளை வணங்கிவிட்டு, ஒன்றாக இணைந்து பிராகரத்தை சுற்றி வந்து, கோவில் குளத்தின் படியில் அமர்ந்தனர்.
“என்ன லீ பிரசாதம் வச்சிக்கலையா?” என்ற பூ, தானே தன் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைக்கச்செல்ல… வேகமாகத் தட்டிவிட்டிருந்தாள் லீலா.
பூ அதிர்வாக நோக்க…
தன் வாழ்வில் நடந்து முடிந்த நிகழ்வுகளை முழுவதுமாக சொல்லி முடித்திருந்தாள் லீலா.
அதுவரை இருந்த சோகம் நீங்க லீலாவின் முகத்தில் தற்போது ஒரு தெளிவு.
இதுவரை மனதை அழுத்திக்கொண்டிருந்த விடயத்தை தோழியுடன் பகிர்ந்துகொண்டதால் வந்த தெளிவு அது.
ஆனால் கேட்ட பூவுக்கு மனதில் பாரமேறிய உணர்வு.
“எனக்கு தனியா இருக்க பிடிக்கல தமிழ். கஷ்டமா இருக்கு. யாருமே இல்லாத மாதிரி இருக்கு” என்ற லீலாவின் கண்ணிலிருந்து நீர் இறங்கியது.
வேகமாக அதனை துடைத்துவிட்ட பூ…
“உனக்கு நிறைய சொந்தமிருக்கு லீ. இப்போ நீ சொன்ன வார்த்தையை மட்டும் அவி, பாரி, ஜென் கேட்டிருந்தாங்கன்னா ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்க. அதுவும் அவி உன்னை அவன் தங்கச்சியா நினைச்சிட்டிருக்கான். நான் இல்லாத லாஸ்ட் செம் எனக்கு பதிலா அவன் தான உன்னோட துணையா இருந்திருக்கான். உன்னை நான் இல்லன்னு அவங்க தனியா விட்டுடலையே” என்றாள் பூ.
கல்லூரி நாட்களில் அண்ணன் தங்கை என்று வாய் வார்த்தையாக சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், அவி மற்றும் லீ தங்களுக்கிடையேயான அவ்வுணர்வை உணர்ந்தே இருந்தனர். லீக்கு ஒன்றென்றால், அதுவும் இறுதி பருவத்தில் பூவும் இல்லாத நிலையில் லீலாவுக்கு துணையாக இருந்தது மற்ற மூவர் தான். மூவரில் அவி மிகவும் நெருக்கமாகியிருந்தான். இப்போது பூவின் வார்த்தையில் அதனை நினைத்து பார்த்த லீலாவிடம் ஒரு விரக்தி புன்னகை.
“அதெல்லாம் காலேஜோட முடிஞ்சிருச்சு தமிழ். அப்படியிருந்திருந்தா, இத்தனை வருஷத்தில் ஒருமுறையாவது என்னைத் தேடி வந்திருப்பீங்க தான?” கேட்க வேண்டுமென லீலா நினைக்கவில்லை. ஆனால் இத்தனை நாள் அவளை அச்சுறுத்திய தனிமை அப்படி கேட்க வைத்தது. இவர்களில் யாரவது ஒருவரேனும் தனக்கென உடனிருந்திருந்தால் பல அசாம்பாவிதங்களில் இருந்து மீண்டிருக்கலாமே என்ற அவளின் வருத்தம் அப்படி கேட்க வைத்தது.
“இருந்திருக்கணும் தான்” என்ற பூ, “யாருக்கும் உன் நினைவே இல்லைன்னு சொல்லிட முடியாது லீ… அடுத்தவரை நினைத்து பார்க்கும் சூழலில் நாங்களும் இல்லை” என்றதோடு தங்கள் நால்வரின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மறைக்காது கூறினாள்.
“நாங்களும் இப்போ டூ த்ரீ மன்த்ஸா தான் சேர்ந்திருக்கோம் லீ” என்றவள், “கல்யாணத்துக்கு முன்ன உன்னை ரீச் பண்ண நிறைய ட்ரை பண்ணேன். பட் நீ எங்கிருக்கன்னே தெரியல. உன் ஊருக்கு கூட வந்தேன், யாரோ ஒரு குட்டி பையன் வந்து உன் பேர்ல யாருமே இல்லைன்னு சொல்லிட்டு ஓடிட்டான்” என்றாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய நண்பர்களும் ஒன்றும் மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்திடவில்லை என்பதை அறிந்த லீலாவுக்கு தான் கூறிய வார்த்தைகள் குற்றவுணர்வை கொடுத்தது.
அதற்காக மன்னிப்பு வேண்டிய தன்னுடைய தோழியை அணைத்துக்கொண்டாள் பூ.
“இனி நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு, இருக்கிற வாழ்க்கையை கஷ்டப்படுத்திக்காத லீ” என்ற பூ தோழியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் வந்தாள்.
“வீட்டில் பேசிக்கொள்ளலாம் அவி” என்று என்னவானதென்று கேட்க வந்த அவியை தடுத்துவிட்டாள் பூ.
“அவள் மீதிருந்த பாசமெல்லாம் காலேஜ் டேசோட மறந்திருச்சா அவி?”
பூவின் அக்கேள்வியில் அவிக்கு அடிவாங்கிய உணர்வு.
பூவால் லீலாவின் வாழ்வில் நடந்தவகளை எண்ணி பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது. அதனால் தன்னுடைய வார்த்தைகள் அவியை காயப்படுத்தும் என்று அறிந்தும் அப்படி கேட்டிருந்தாள். உயிர் தோழியென்று சொல்லிக்கொண்டு அவளுடனே இருந்த தானும் ஒருமுறை தேடிவிட்டு அவளை விட்டுவிட்டோமோ என்கிற தன்மீதான கோபத்தையும் தற்போது உடனிருக்கும் அவியிடம் காட்டிவிட்டாள்.
பூவின் கோபமே விடயம் பெரியதென அவியை யூகிக்க வைத்தது.
“தமிழ் என்னன்னு சொல்லேன். எனக்கு பயமா இருக்கு” என்றான்.
“இப்போ வந்து கேளு. நீயும் அப்படியொருத்தி இருக்காங்கிறதையே மறந்துட்ட தான?” எனக் கேட்டாள்.
“நான் போனேன் தமிழ். லீயைத்தேடி நான் போனேன்” என்ற அவியின் பார்வை எங்கோ வெறித்திருந்தது.
பூ ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.
“பரிதிண்ணா இப்படியே இருந்தா சரியாபோச்சான்னு என்னை தேற்றியதும்… நான் லீலாவைத் தேடித்தான் போனேன். பாரி எங்கிருக்கான்னே தெரியல. நீ? என் கஷ்டம் உனக்கு மேலும் கஷ்டம். ஜென்கிட்ட போகணும் தோணவேயில்லை. அடுத்து நமக்குன்னு யாருன்னு யோசிக்கும்போது நம்ம கேங்கில் இருந்தது லீ தான். தனியா இருக்கிறதுக்கு ஃபிரண்டுன்னு அவளோடவாவது இருக்கலாம் நினைத்தேன். பரிதிண்ணா கூடவே இருந்து பார்த்துகிட்டாலும், அவர் மேலிருந்த மரியாதை எதையும் ஷேர் பண்ணிக்க விடல. மனசுல நினைக்கிறதையெல்லாம் சொல்றதுக்காவது ஃபிரண்டுன்னு ஒருத்தவங்க உடனிருக்கணும் தமிழ். அதுக்காக லீயைத்தேடி போனேன். அவள் ஊர் மட்டும் தான் தெரியும். நம்ம காலேஜ் ஆபீஸ் பியூனிடம் அட்ரெஸ் வாங்கிட்டு போனேன்.
அவள் கல்யாணமாகி போயிட்டதா சொன்னாங்க. அட்ரெஸ், மொபைல் நெம்பர் எதுவும் அவளோட அண்ணா கொடுக்க முடியாது சொல்லிட்டாங்க. ஒரு பையன் பிரண்டுன்னு போய் நின்னா அவளோட மாமியார் வீட்டில் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல, அதனால் சொல்ல முடியாது சொன்னாரு. நானும் வந்துட்டேன்” என்ற நண்பனை தோளோடு அணைத்திருந்தாள் பூ.
அவி அப்போதிருந்த நிலையிலும் தங்களைப்பற்றி நினைத்திருக்கிறானே அவனை நண்பனாக அடைய தாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று அவளின் மனம் நினைத்தது.
“சாரிடா…”
“நமக்குள்ள என்னடா” என்ற அவி,
“ஆமா, லீ இங்க எப்படி? ஏன் இப்படியிருக்கா? அவளோட ஹஸ்பெண்ட் எங்க?” என கேள்விகள் பல கேட்டான்.
“வீட்டுக்கு போனதும் சொல்றேன் அவி. தனித்தனியா இதை சொல்ல முடியாது. ஒருமுறை கேட்டதுக்கே கஷ்டமாயிருக்கு” என்றாள் பூ.
“லீ நல்லாதான இருக்காள் தமிழ்.” தவறாக எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற எதிர்பார்ப்போடு தான் வினவினான்.
“இல்லை அவி” என்ற பூ, “நீயும், நானும் அவளைத் தேடி போனப்பவே எப்படியாவது சந்திச்சிருக்கனும்” என்ற பூவிற்கு லீ சொல்லியதெல்லாம் இப்போதும் காதில் எதிரொலிப்பது போலவே இருந்தது.
“லீயை நம்மளோடவே வச்சிக்கணும் அவி. அவளோட அண்ணா அவளை தேடிட்டு இருக்காங்க” என்றாள்.
வீட்டிற்கு சென்று மூவரிடமும் லீலாவைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்றிருந்த பூவிற்கு அத்தனை பொறுமை இல்லை. அவளால் லீ சொல்லியதை மனதோடு வைத்திருக்கவும் முடியவில்லை. அவ்வளவு கனத்த நிகழ்வை மூவரிடமும் தனித்தனியாக ஒவ்வொரு முறையாக சொல்லவும் முடியாது. அதனால் அப்போதே பாரிக்கும், ஜென்னிற்கும் அழைத்தவள்… தீபனிடம் அலுவலகத்தை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
_______________________________
“பூ…”
வீட்டிற்கு அத்தனை பதற்றத்துடன் வந்திருந்தான் பாரி.
அப்போதுதான் சத்யா ஒரு ரகசியம் தெரிய வந்திருக்கிறதென்று பாரியை நேரில் வரச்சொல்லியிருந்தான்.
சத்யாவை பார்க்க பாரி பாதிவழி சென்றிருக்கும்போதுதான் பூ அவனை அழைத்து விடயம் இன்னதென்று சொல்லாது வீட்டிற்கு வா என்று சொல்லிவிட்டு அவன் பதில் பேசுமுன் வைத்திருந்தாள்.
பூ ஒருநாளும் இதுபோல் செய்யாததால் பாரிக்கு அவளுக்கு என்னவோ என்று வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
பாரிக்கு முன்பே ஜென் வந்திருந்தாள்.
பாரி… அவி, ஜென் இருப்பதை கண்டுகொள்ளாது,
“ஆர் யூ ஓகே மலரே?” என அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளின் உருவத்தை மேலிருந்து கீழ் கைகளாலும் பார்வையாலும் வருடினான்.
“எனக்கு ஒன்னுமில்லை வேந்தா” என்ற பூ… “பயம்காட்டிட்டனா?” என்று தப்பு செய்துவிட்ட பாவனையில் வினவினாள்.
“உனக்கு ஒண்ணுன்னா இவன் இப்படி ரியாக்ட் பண்ணலன்னா தான் ஆச்சரியம் தமிழ்” என்ற ஜென், “அவன்கிட்டவாது காரணம் சொல்லி கூப்பிட்டிருக்கலாம்” என்றாள்.
“சாரி வேந்தா. லீயை பார்த்த…” பூ வாக்கியத்தை முடிக்கவில்லை.
“லீலாவா… ஹவ் இஸ் ஷீ?” என்று மிகுந்த சந்தோஷத்தோடு வினவினான். கல்லூரி காலங்களில் விடுதியில் பூ தனித்து இருக்கிறாள் என்கிற பயமில்லாது பாரி இருந்ததற்கான காரணம் லீலா. வேறு துறையாக இருந்தாலும் அவளில்லாமல் அவர்களது குழு முழுமையடையாதே! அதன் வெளிப்பாடு தான் பாரியிடம் இத்தகைய மகிழ்வு.
“சொல்ற அளவுக்கு அவள் நல்லாயில்லை வேந்தா” என்ற பூ, “அவளைப்பற்றி பேசத்தான் உங்களை வரசொன்னேன்” என்றாள்.
அவி இன்று லீ அலுவலகத்திற்கு வந்த காரணத்தையும் அவளது தோற்றத்தையும் கூறிட, லீ கோவிலில் சொல்லியதை பூ கூறினாள்.
படிப்பு முடிந்து ஊருக்கு சென்ற லீயை வரவேற்க அவளது வீட்டில் யாருமில்லை. அவளுக்கென்று இருந்தது தந்தை மட்டும் தான். லீலா பள்ளி படிப்பு முடித்த சமயம் அவளின் அன்னை இயற்கை எய்தியிருந்தார். லீலாவுடைய குடும்பம் வசதி வாய்ந்தது தான்.
லீலாவிற்கு அவளது அண்ணன் பிரேமுடன் ஒட்டுதல் கிடையாது. இவளாக நெருக்கம் காட்டினாலும் அவன் விலகியே தான் இருந்தான். தனக்கொரு தங்கை இருக்கின்றாள் என்ற நினைவுகூட அவனுக்கு இருந்ததில்லை. அவனுக்கு திருமணம் ஆகும்வரை லீலாவுடன் ஓரிரு வார்த்தைகளாவது பேசிக்கொண்டிருந்தவன், மனைவியென்று ஒருத்தி வந்த பின்னர் தந்தையையும் சேர்த்து மறந்தான்.
லீலாவின் தந்தை ஊரில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அந்தந்த பருவத்திற்கு ஏற்ற பயிர்களை விளைச்சல் செய்வார். வருமானம் சொல்லிக்கொள்ளுமளவிற்கு அதிகம். மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிடலாமென்றாலும் பிரேமின் தான்தோன்றித்தனமாக சுற்றும் பழக்கம் அவரை அதனை செய்யவிடவில்லை.
ஒருநாள் அவனே வந்து இனி வயல்களை தான் பார்த்துக்கொள்வதாக கேட்டிட… கொடுத்து பார்த்தால் தானே அவனது திறமை தெரியும். வாய்ப்பு கொடுத்து பார்ப்போம், சரிவரவில்லையென்றால் மீண்டும் தாமே ஏற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தில் பிரேமிடம் பண்ணையை ஒப்படைத்தார்.
வீட்டிற்கு வட்டிக்காரன் வந்து கேட்கும் வரை அவருக்கு பிரேமின் கடன்பற்றி ஒன்றும் தெரியாது.
“இப்போது வயலெல்லாம் நாந்தான் பார்த்துக்கிறேன். உங்க பணத்தை தரமுடியலன்னா வயலை எழுதி தர்றேன்” என்று ஊரைச்சுற்றி பல லட்சங்கள் கடன் வாங்கி வைத்திருந்தான்.
“இனியும் உன் பையன் வாங்குன கடனை கொடுப்பான் நம்பிக்கையில்லை. ஒழுங்கா பணத்தைக்கொடு இல்லைன்னா பண்ணையை எங்ககிட்ட வித்துடு” என்று பிரேமிற்கு கடன்கொடுத்தவர்கள் வீட்டு வாயிலில் நின்று சத்தமிட… கையிருப்பிலும் வங்கியில் வைத்திருந்த பணத்தையும் எடுத்து மகன் வாங்கிய கடனை முழுதும் கணக்கு தீர்த்தார்.
அன்றிரவு,
“நிலத்தை வச்சு கடன் வாங்குறதை இனி நிறுத்திக்கோ. இதே மாதிரி ஒவ்வொரு முறையும் நானே நீ வாங்கும் கடன் எல்லாத்தையும் அடைப்பேன்னு எதிர்பார்க்காத” என்று அழுத்தமாகக் கூறினார்.
“நீங்க கொடுக்காம வேற யார் கொடுப்பா?” பிரேமின் மனைவி முந்தானையை உதறியபடி அவரிடம் எகிறினாள்.
“உங்க பொம்பள பிள்ளையை லட்சம் லட்சமா கொட்டி படிக்க வைக்குறீங்களே அப்படி எங்களுக்கு என்ன செஞ்சிட்டிங்க?”
“அதுவும் இதுவும் ஒன்னாம்மா?” என்றவருக்கு வாக்குவாதம் செய்ய விருப்பமில்லை. அமைதியாக திரும்பி செல்ல முயல…
“ஒருவேளை என் புருஷன் உங்களுக்கு பிறக்கலையோ. அதான் அவருக்கு செலவு செய்ய யோசிக்கிறீங்களோ?” என்று அவள் நீட்டி முழக்கி கேட்டிட, அந்நொடியே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் எழவேயில்லை.
பிரேம் அவரின் அருகில்கூட செல்லவில்லை. அவரின் அறைக்குச்சென்று வயல் மற்றும் வீட்டு பத்திரங்கள் எங்கிருக்கு என்றுதான் முதலில் பார்த்தான்.
அவருக்கு தனக்கு இப்படித்தான் நடக்குமென்று ஏற்கனவே அறிந்திருந்தாரோ என்னவோ, அனைத்தையும் லீலாவின் பெயரில் என்றோ எழுதி வைத்திருந்தார். பத்திரத்தில் லீலாவாக பிரேமிற்கு கொடுக்க நினைத்தாலும் முடியாது. எனக்கு விருப்பமில்லை என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதனை கண்டதும் பிரேம் கோபத்தின் உச்சத்திற்கு சென்றான். அவர் செய்ததற்கு தண்டனை லீலாவிற்கு கொடுத்தான்.
தந்தை இறந்ததை லீலாவிடம் அவன் சொல்லவில்லை. அப்போது அவளுக்கு இறுதி வருட தேர்வு நடைபெற்று கொண்டிருந்ததால், வழக்கமாக தேர்வு நேரங்களில் மகளை தொல்லை செய்யக்கூடாதென்று அவர் அழைக்கமாட்டார். இப்போதும் அதையே காரணமாக நினைத்திருந்தவளுக்கு உண்மை தெரியாது போனது.
“ஊர்மக்கள் லீலாவை அழைக்கவில்லையா?” என்று கேட்டதற்கு, லீலா கல்லூரியில் சுற்றுலாவிற்கு வெளிமாநிலம் சென்றிருப்பதாகவும், அலைபேசியில் அவளை பிடிக்க முடியவில்லை என்றும் பொய் சொல்லி சமாளித்தான்.
தற்போது வீட்டிற்கு வந்த லீலா உண்மை அறிந்து பிரேமிடம், “அப்பாவின் இறந்ததை ஏன் என்கிட்ட சொல்லல” என்று கத்தி அழுது கதறி கேட்க அதற்கு பதில் சொல்லியது என்னவோ பிரேமின் மனைவி உமா.
“நீ அங்க காலேஜ்ல எவனோட சுத்திக்கிட்டு இருந்தியோ! உன்னை பார்க்கவந்த மனுஷன், வீட்டுக்கு வந்ததும் இனி நீ அவரு பொண்ணே இல்லைன்னு குடத்து தண்ணியை அப்படியே தலையில் கொட்டிக்கிட்டு சரிஞ்சவர் தான், எழவேயில்லையே” என்று பழியை லீலாவின் பக்கம் போட்டாள்.
லீலாவிற்கு அவ்வார்த்தைகள் அவளது உலகத்தை நிறுத்தி வைத்தது.
நிச்சயம் ஒருநாளும் தன் தந்தை தன்னை அப்படி நினைத்திருக்கமாட்டார் என்பதில் லீலாவிற்கு அத்தனை நம்பிக்கை.
‘இதற்கு மேலும் தான் எதாவது கேட்டால், இல்லாததை சொல்லி தன்னைத்தான் அசிங்கப்படுத்துவார்கள்’ என எண்ணிய லீலா அமைதியாக பிரேமை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தை தங்கியிருந்த அறைக்குள் சென்றுவிட்டாள்.
அடுத்தநாள் இன்னுமொரு இடி லீலாவின் தலையில் இறக்கினான் பிரேம்.
“இந்தா இதை கட்டிக்க, இதையெல்லாம் போட்டுக்க” என்று உமா புடவையும் நகைகளும் கொண்டுவந்து கொடுக்க.
எதற்கு என்று கேட்ட லீலாவுக்கு
“கோவிலுக்கு போகணும்” என்ற பதில் பிரேமிடமிருந்து வந்தது.
இப்போதிருக்கும் மனநிலைக்கு கோவிலுக்கு சென்றாலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென்று எண்ணிய லீலா, நகைகளை தவிர்த்து புடவையை மட்டும் உடுத்தி அவர்களுடன் சென்றாள்.
தந்தை எப்படி இறந்தார்? இவர்களிடம் தன்னை ஏன் விட்டுச்சென்றார் என்ற கேள்விகளுக்கு இறைவனின் முன்பு கைகூப்பி கண்களை மூடி விடை தேடிக்கொண்டிருந்தவள் கழுத்தில் ஏதோ ஊறும் உணர்வில் இமை திறந்து பார்க்க… தடியாக வயதில் முதிர்ந்த தோற்றத்தில் ஒருவன் தாலி கட்டிக்கொண்டிருந்தான்.
அதிர்ந்தவள் தனக்கு முன்னாலிருந்தவனை கடந்து பார்வையை செலுத்த வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தான் பிரேம். உடன் உமா.
“நான் கொடுத்த பணத்துக்கு உன் தங்கச்சி வொர்த்துதான்யா. என்னம்மா இருக்காள்.” சுற்றி அவனது குடும்பத்தார் இருக்கும் போதும் இப்படி பேசுபவனை அருவருக்க பார்த்தவள் அந்நொடியே தாலியை அறுத்து பிரேமின் முகத்தில் விட்டெறிந்தாள்.
“நீ என்ன செஞ்சாலும் அதை அப்படியே கேட்டு நடப்பேன் நினைச்சிட்டியா? இப்படி வாங்குன கடனுக்காக உன் தங்கச்சியையே அவளுக்குத் தெரியாமலே விக்குறியே நீயெல்லாம் மனுஷனா” எனக் கேட்டவள் அந்த தடியனை புழுவை போல் பார்த்து நின்றாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தா நான் கட்டுன தாலியை அறுத்திருப்ப. நீ முடியாதுன்னா உன்னை நான் விட்டுடுவேனா” என்றவன், “தாலி இல்லாமலே குடும்ப நடத்தலாம் வா” என்று லீலாவை பிரேமின் முன்பே தோளில் தூக்கிச்சென்றான்.
பார்த்துக்கொண்டிருந்த யாரும் அவனை தடுக்கவில்லை.
எப்படி லீலாவால் முடிந்தது என்றே தெரியவில்லை, அவனது தோள் பட்டையில் அழுத்தமாக கடித்து வைத்தாள். வலியில் அவன் அசர, அவன் பிடி தளர்ந்தது. சட்டென்று அவனிலிருந்து இறங்கியவள் அருகில் கிடந்த கட்டையை எடுத்து நடுமண்டையில் நச்சென்று ஒன்று வைத்தாள். ரத்தம் வெளியேற கீழே விழுந்தவனை திரும்பியும் பாராது வீட்டிற்கு ஓடி வந்தவள் அவசர அவசரமாகத் தனக்கு வேண்டியதை மட்டும் ஒரு பைக்குள் திணித்துக்கொண்டு ஓடிவிட்டாள்.
அவள் பின்னாலேயே வந்தும் பிரேமால் அவளை பிடிக்க முடியவில்லை.
அந்த தடியனும், “என் பணத்தைக்கொடு இல்லைன்னா அவளை கொடு” என்று பிரேமை மிரட்ட, அவனோ இன்று வரை லீலாவைத் தேடிக்கொண்டிருக்கின்றான்.
அன்று முதல் லீலா மறைந்து ஒளிந்து தான் வாழ்கிறாள்.
லீலாவின் பெயரில் அனைத்து சொத்துக்களும் இருப்பதால் அவனால் அவற்றை விற்றும் கடன் கொடுக்க முடியாத நிலை.
அவனுக்கு இருக்கும் ஒரேவழி லீலாவை கண்டுபிடிப்பது.
அச்சமயம் தான் பூ வந்து லீலாவை விசாரித்தது. அவளை காணவில்லை என்று சொன்னால், தனக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமென்று நினைத்த பிரேம் தன்னுடைய மகன் வாயிலாக அப்படி யாருமில்லையென சொல்லி பூவை அனுப்பிவிட்டான்.
லீலா என்ன தான் கவனமாக தன்னுடைய அடையாளங்களை மறைத்து வாழ்ந்தாலும் அவளிருக்கும் இடத்தை பிரேம் கண்டுகொண்டு அங்கு செல்ல… அவனின் வரவை அறிந்த லீலா வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டாள்.
அந்நேரத்தில் தான் அவி லீலாவைத்தேடி வந்தான்.
இப்படி ஆள் மாற்றி ஆள் லீலாவை வந்து விசாரிப்பது சரியாக பிரேமிற்கு படவில்லை. அவள் இல்லையென்றால் தானே பிரச்சினை என எண்ணியவன், கல்யாணம் ஆகி கணவன் வீட்டிலிருக்கிறாள் என்று சொல்லி அவியை அனுப்பிவிட்டான்.
அதன்பின்னர் எங்கு தேடியும் லீலா கிடைக்காமல் போக… பிரேம் தன் தேடுதலை தீவிரமாக்கினான்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடித்து லீலாவை இழுத்துச் சென்றுவிட்டான்.
“இவள் இருந்தால் நமக்கு தொல்லை தான். இவ்வளவு சொத்து இருந்தும் நம்மால ஒன்னும் செய்யமுடியல. பேசாம இவளை போட்டுத்தள்ளிட்டு, எதையாவது வித்து அவனோட கடனை கொடுத்திட்டு மீதியை வச்சு நம்ம பொழப்பை பார்ப்போம்” என்று பிரேமும் உமாவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட அவர்களின் ஏழு வயது மகன், லீலா இருக்கும் அறைக்கு பூனை போல் நுழைந்தான்.
அழுது கொண்டிருந்த லீலாவை தொட்டு நிமிர்த்தியவன்,
“அத்தை இங்கிருந்து நீ போயிடு. இல்லைன்னா உன்னை கொன்னுடுவாங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டான்.
தன்னுடன் பிறந்தவன் இந்தளவிற்கு கீழ் இறங்குவான் என்று எதிர்பார்க்காத லீலா அன்றிரவே வெகு சிரமத்திற்கு பின்னர் பிரேமின் கண்ணில் மண்ணைத் தூவி சென்னை வந்து சேர்ந்தாள்.
கையிலிருக்கும் பணத்தை வைத்து பெண்கள் விடுதியில் தங்கிக்கொண்டாள்.
சென்னைவரை பிரேமால் தன்னைத்தேடி வரமுடியாது என்ற பயம் நீங்கிய பின்னரே வேலைத்தேட ஆரம்பித்தாள்.
அனைத்தையும் பூ சொல்லி முடிக்க நண்பர்களிடையே கனத்த அமைதி.
எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாழ்க்கை ஓட்டம் இருந்திருக்கிறது. ஆகமொத்தத்தில் யாருக்கும் நல்லதாக இல்லை.
“இப்போ என்ன செய்யலாம்?” பூ தான் கேட்டிருந்தாள்.
சிறிது நேரம் யோசித்த பாரி…
“நாளை ஒருநாள் போகட்டும் பூ” என்றான்.
பாரி அவ்வாறு சொல்லியதே லீ விடயத்தில் அவன் ஒரு முடிவெடுத்துவிட்டான் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது.
அப்போதே நண்பர்கள் நால்வரும் லீலாவின் விடுதிக்கு கிளம்பிச்சென்றனர்.
லீலாவை பார்த்ததும் ஜென் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.
அவி தான் அவளைத்தேடி வந்ததைப்பற்றி சொல்ல… லீலாவுக்கு தன்னை அக்கறையில் தேடவும் ஆட்கள் இருக்கின்றனர் என்ற சந்தோஷம் தோன்றியது.
“ரூம் காலி செய்ய என்ன பார்மலிட்டிஸ்? முடிச்சிட்டு வா. பூ, ஜென் அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்ற பாரி அவியை கூட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.
பாரி என்ன தான் நண்பனாக இருந்தாலும், அவனை முதன் முதலில் காக்கிச்சட்டையில் பார்க்க லீலாவிற்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அதனாலேயே அவனது பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்காமல், அமைதியாக அவன் சொல்லியதை செய்தாள்.
லீலாவிடம் அதிக பொருட்களென்று எதுவுமில்லாததால் அரைமணி நேரத்தில், விடுதியை காலி செய்து நண்பர்களுடன் கிளம்பிவிட்டாள்.
இனி எங்கும் யாருக்காகவும் பயந்து ஓடவேண்டாம் என்ற எண்ணம் தான் அக்கணம் முதலில் லீலாவுக்கு தோன்றியது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மனம் லேசானதைபோல் உணர்ந்தாள். ஆனால் முந்தைய நிகழ்வுகளின் தாக்கம் அவளின் இயல்பை முற்றிலும் மாற்றியிருந்ததால் எதிலும் ஒரு ஒத்துக்கத்துடனே இருந்தாள்.
லீலாவை பூ மற்றும் ஜென்னுடன் தங்கிக்கொள்ள செய்த பாரி வேலையிருப்பதாக பூவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
பாரி சத்யாவை காண்பதற்குத்தான் வந்திருந்தான்.
தாமஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ராயப்பன் சிறையில் திருட்டுத்தனமாக பயன்படுத்தும் அலைபேசியின் எண்ணை கண்டறிந்து பாரியிடம் தெரிவித்திருந்தான்.
அந்த எண்ணை பாரி சத்யாவிடம் கொடுத்திருந்தான்.
ஏற்கனவே ஒருநாள் புதிய எண்ணிலிருந்து விவாஷிற்கு அழைப்பு வர அதனை விவாஷ் ஏற்கவில்லை. இருந்தபோதிலும், வந்த எண்ணை சத்யா குறித்து வைத்து கண்காணிக்கும்போது அது ரேமண்டின் ரகசிய எண் என்பது தெரியவந்தது.
மீண்டும் ரேமண்ட் விவாஷிற்கு அழைக்க… ராயப்பன் எண்ணிலிருந்து ரேமண்டிற்கு ‘ஹீ இஸ் வாட்சிங் ஆஃப் விவாஷ்’ என்ற தகவல் சென்றது.
அதன் பின்னர் ரேமண்டிடமிருந்து ராயப்பனுக்கோ, விவாஷிற்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.
இன்று வேறொரு எண்ணிலிருந்து ராயப்பனுக்கு ‘where?’ என்று ஒற்றை வார்த்தை வினாவாக குறுந்தகவல் வந்தது.
மீண்டும் ரேமண்ட் எண்ணை மாற்றி உபயோகிக்கிறான் என்பதை சத்யா கண்டுகொண்டான்.
அடுத்த சில நிமிட இடைவெளிகளில் ராயப்பன் ‘5+3+18, பாபிலோன், மூன்’ என்று மூன்று தகவல்களை அனுப்பியிருந்தார்.
இப்போது அதனையே சத்யா பாரியிடம் கூறினான்.
“யாருக்கும் புரியக்கூடாது என்பதற்காகவே ஒன் வோர்டில் டெக்ஸ்ட் பண்ணிக்கிறானுங்க” என்ற பாரியின் கூற்றை சத்யாவும் ஆமோதித்தான்.
“இது என்னவா இருக்கும் பாரி?”
“தெரியல சத்யா. பட் எதுவும் டிரெக்ட் மீனிங் கிடையாது” என்ற பாரி அந்த எண்களை மட்டும் ஆங்கில எழுத்துகளோடு தொடர்புபடுத்தி ஈசிஆர் என்பதை அடுத்த நிமிடமே கண்டுபிடித்திருந்தான்.
“மற்ற இரண்டும் என்னவா இருக்கும்?”
“யோசிப்போம் சத்யா. கண்டிப்பா சிக்கும்” என்ற பாரிக்கு ஒருநாள் இரவு விவாஷ் மற்றும் நீபாவை பின்தொடர்ந்தபோது விவாஷ் ஈசிஆரில் உள்ள ஒரு பங்களாவிற்குள் நுழைந்தது நினைவு வந்தது.
“சத்யா இப்போ அவனுங்களுக்கு வேண்டியது அந்த சிலை. அது எங்கேயிருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான் அவன் நினைப்பான்” என்ற பாரி “ரேமண்ட் அனுப்பிய where அந்த சிலை எங்கே என்பதா இருக்குமோ?” என்றதோடு “விவாஷிற்கு அங்க ஒரு பங்களா இருக்கு. அதனை சோதனை செய்து பார்த்தால் தெரிந்துடும்” என்றான்.
“ஆனா இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு அபிசியலா அங்க சென்று தேட முடியாது” என்ற பாரி “நைட் விவாஷின் ஈசிஆர் பங்களாவில் மீட் பண்ணுவோம் சத்யா” எனக்கூறி வீட்டிற்கு வந்தான்.
வரவேற்பறையிலேயே அமர்ந்த பாரி சீருடையை கூட மாற்றாது மற்ற இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன பொருளாக இருக்கும் என்பதிலேயே உழன்று கொண்டிருந்தான்.
பாரியின் வருகை உணர்ந்து அவி தேநீர் கொண்டுவந்து அவன் முன் வைத்துச் சென்றும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. பாரியின் நிலையில் மாற்றமில்லை.
“என்னடா யோசனை. வச்ச டீ அப்படியே இருக்கு?”
….
“யூனிஃபார்ம் சேன்ஞ் பண்ணலையாடா?”
கேட்ட அவிக்கு பாரியிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.
இது வேலைக்காகாது என நினைத்த அவி ஜென்னின் வீட்டிற்குச் சென்றான்.
வெகுநாட்களுக்குப் பின்னர் தோழிகள் சந்தித்துக்கொண்டதால் அரட்டை அடித்தபடி இரவு உணவு செய்து கொண்டிருந்தனர். அதனால் பூவிற்கு பாரியின் வண்டி சத்தம் கருத்தில் விழவில்லை. இப்போது அவி வந்து அவர்களின் பின் நின்று என்ன செய்கிறார்கள் என்று எட்டிபார்த்ததும் தெரியவில்லை.
“சாப்பிடற மாதிரி இருக்குமா?”
அருகில் கேட்ட அவியின் குரலில் மூவரும் ஒன்றாகத் திரும்பிட…
“நீங்க தனித்தனியா குக் பண்ணாலே சாப்பிடமுடியாது. இதில் மூணு பேரும் சேர்ந்து… அந்த டிஷ்ஷை ஒருவழி பண்ணிடாதீங்க” என்று கலாய்த்தான்.
மூன்று பெண்களும் அவியை கொலைவெறியுடன் நோக்க…
“உன் புருஷன் என்னவோ மாதிரி உட்கார்ந்திருக்கான். போய் பாரு… ஓடு ஓடு” என்று அவி சொல்லியது தான்,
“வேந்தா வந்துட்டானா? அவன் வண்டி சத்தம் கேட்கலையே” என சந்தேகமாகக் கேட்டாள் பூ.
“அவன் வந்து ஒருமணி நேரமாச்சு” என்று அவி சொல்லியது தான் பூ மின்னலென விரைந்திருந்தாள்.