தூவானம் 42 :
கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து போட்ட அரிசி நீருடன் கலந்து சில நிமிடங்களில் பொங்கி வழிய…
“பொங்கி வழியுற பானையை போல… எம்பிள்ளைங்க சந்தோஷம் பொங்கி ததும்பனும் ஆத்தா” என்று வணங்கினார் தங்கம்.
“இப்போ என்ன அப்பத்தா செய்யணும்?”
பூ கேட்டிட, தங்கம் தன்னுடைய மருமகள் மணியை முறைத்தார்.
“இதுக்குத்தேன் அவளுக்கு சமைக்க சொல்லி குடுன்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். ஒரு சக்கரை பொங்கல் வைக்கத் தெரியல” என்றார்.
“இப்போ என்ன உங்களுக்கு சக்கரை பொங்கல் வைக்கணும் அவ்வளவுதானே! இதுக்கெதுக்கு கத்திட்டு இருக்கீங்க. அப்படி ஓரமா போய் உட்காருங்க. இல்லையா ஐயர் பூஜைக்கெல்லாம் தயார் பண்ணிட்டாரா போய் பாருங்க” என்று அங்கிருந்தவர்களை எல்லாம் விரட்டினான் பாரி.
“அவ உனக்கு சமைச்சிப்போட வேணாமா?” அப்போதும் தங்கம் வாய் மூடாது கேட்க…
“என் பொண்டாட்டிக்கு நான் சமைச்சிப் போட்டுக்கிறேன். இப்போ நீங்க போங்க. எப்போபாரு அவகிட்ட வம்பு பண்ணிக்கிட்டே” என்று அவரை அங்கிருந்து துரத்திவிட்டே ஓய்ந்தான்.
“இனி அந்த தாய் கிழவியிடம் பேச்சு வச்சுக்காதே மலரே” என்று பூவுக்கு அறிவுரை வேறு வழங்கினான்.
“பாரி இவ்வளவு இடம் கொடுக்காதே. அப்புறம் நீ சொல்லுறதை கேட்கவே மாட்டாள்” என்று தங்கையை பற்றி நன்கு அறிந்து சின்ன சிரிப்புடன் இளா கூறிட…
“நீங்களுமா இளா” என்று பாரி பார்க்க…
“இதோ நான் போயிட்டேன்” என்று இளா பரிதியிடம் ஓடியே விட்டாள்.
பூவின் பக்கம் திரும்பியவன் “ரொம்ப சைட் அடிக்காதடி” என்றான்.
“என் புருஷன் நான் பார்க்கிறேன்” என்றவளின் பார்வையில் மாற்றம் என்பதே இல்லை.
“அதுக்குன்னு இப்படியா எல்லார் முன்னாடியும்?” எனக் கேட்டான்.
“முன்ன சொன்னதேதான்” என்றவள் “கட்டிக்கணும் போல இருக்குடா” என்றாள்.
சுற்றி பார்வையை அலசியவன், எல்லோரும் அம்மனுக்கு செய்யும் அபிடேகத்தில் கவனமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு,
“கட்டிக்கோடி” என்று கைகளை விரித்தான்.
விரிந்திருந்த அவனது இரு கைகளின் விரல்களோடும் தன்னுடைய விரல்களை கோர்த்து இறுக்கியவள், அவன் மார்பில் நெற்றி முட்டி நின்றாள்.
“அவ்வளவுதானா?” பாரி குறும்புடன் வினவ…
“மத்ததெல்லாம் வீட்ல தான்” என்று விலகினாள்.
“போடி” என்றவன் பொங்கலில் கவனமானான்.
பொங்கலில் சேர்க்க வேண்டியதையெல்லாம் சரியான அளவில் சேர்த்து சடுதியில் தயார் செய்தவன், அதனை படையலுக்குரிய பாத்திரத்தில் இட்டு ஐயரிடம் கொண்டு சென்று கொடுத்தான்.
அம்மனுக்கு அலங்காரம் முடிய…
தன்னிடம் பாரி நேற்று கொடுத்ததை ஐயரிடம் கொடுத்த பார்வதி அம்மனின் பாதத்தில் வைத்து தரும்படி கூறினார்.
அது தாலிச்சரடு. நேற்று இதனை வாங்கத்தான் பூவிடம் கூட சொல்லாது பாரி வெளியில் சென்றிருந்தான்.
சங்கிலியின் முகப்பு அழகிய வேலைப்பாடு கொண்ட பூக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை வடிவமைப்பில் வைர கற்கள் பதித்து மின்னியது. அந்த பூ வடிவமைப்பே அது யார் வாங்கியதென்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.
பூ பாரியை பார்த்தாள். அவன் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
எப்போதுமே பாரி ஒன்று வாங்கினால் அதில் பூ, மலர் போன்றவற்றை குறிப்பதாக பார்த்துதான் வாங்குவான். அதுவே அவர்களுக்கு பாரி வாங்கியதென்று காட்டிக்கொடுத்தது.
“டிசைன் நல்லாயிருக்கு அத்தை” என்று இளா சொல்ல… “நேத்துதான் பாரி வாங்கி வந்தான்” என்று அனைவருக்கும் தெரிந்த பதிலையே பார்வதியும் கூறினார்.
“என்னை ஓவர் டேக் பண்ணிடுவ போலிருக்கேடா தம்பி. நீ தமிழை லவ் பண்றன்னு, என்னை இளாவிடம் கோர்த்துவிட்டுடாதேடா” என்று பரிதி பாரியின் காதில் கிசுகிசுத்தான்.
“நீங்க மட்டும் என்ன குறைச்சலாவா லவ் பண்றீங்க?” என்ற பாரி விஷமமாக பரிதியை பார்த்தான்.
“எங்க லவ் வெளியில் தெரியுற மாதிரி உங்களோடது தெரியல. அவ்வளவு தான் வித்தியாசம்” என்றான் பாரி.
“அப்படி சொல்லு பாரி. என் ரெண்டு பேரனுவலும் அவங்கவங்க பொண்டாட்டியை தாங்குறதுல ஒருத்தரை ஒருத்தர் மிஞ்ச ஆளில்லை” என்று அவர்களின் பேச்சு தனக்கு கேட்டது என்பதைப்போல் பதில் வழங்கினார் தங்கம்.
“தாய் கிழவி…”
“போடா…”
அங்கே மகிழ்விற்கு பஞ்சமில்லை.
அதன் பின்னர் பூவையும் பாரியையும் ஒன்றாக அமர வைத்து புது சங்கிலியில் மாங்கல்யம் மற்றும் அதன் உருப்படிகள் சிலதை இளா, பார்வதி, மணி என மூவரும் சேர்ந்து கோர்த்து பாரியிடம் கொடுத்தனர்.
பாரியிடம் சங்கிலியை கொடுக்கும்போது… “நல்ல வைரமா பார்த்துதான் வாங்கியிருக்கீங்க மாப்பிள்ளை” என்றார் மணி.
அப்போது பாரியின் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல். அதனை புறம் ஒதுக்கி நடப்பதில் கவனம் செலுத்தினான்.
முதல்முறையை போன்று இல்லாமல்… மனம் முழுக்க நிரம்பி ததும்பும் பூவின் மீதான காதலை கண்களில் நிறைத்து, அவளை நேருக்கு நேர் சந்தித்து அவளின் கழுத்தில் தாலியை அணிவித்தான்.
சுற்றியிருந்த குடும்பத்தார் பூத்தூவி ஆசீர்வதிக்க… ஐயர் கொடுத்த அம்மனின் குங்குமத்தை தாலியிலும் தன்னவளின் நெற்றியிலும் அவனே வைத்துவிட்டான்.
“மெட்டி வாங்கியிருந்தால் அதையும் போட்டிருக்கலாம். கல்யாணத்தப்போவே பாரி தமிழுக்கு மெட்டி போடல” என்று இளா வருத்தமாக சொல்ல… “இந்த நெனப்பு நமக்கு இல்லாம போச்சுதே” என்றார் தங்கம்.
“வீட்டிலே சொல்லியிருக்கலாமே இளா” என்று மணி குறைப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அவர்களின் வருத்தம் குறை இதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பதைப்போல், தன்னுடைய சட்டை பையிலிருந்து சிறு பெட்டியை எடுத்தவன், பூவை எழுந்து நிற்கக்கூறினான்.
பூவும் என்னவென்று புரியாது அவன் சொன்னததற்காக எழுந்து நின்றாள்.
அனைவரும் என்னவென்று ஆர்வமாக பார்த்திருக்க…
அந்த பெட்டியை திறந்து அதில் தான் வாங்கி வைத்திருந்ததை கையிலெடுத்தான்.
வெள்ளியில் பூ வடிவமைப்பில் கெம்புகல் பதித்த மெட்டி பளீரென ஒளிர்ந்தது.
எவ்வித தயக்கமுமின்றி தனது பூவின் மலர் பாத்தினை எடுத்து தன்னுடைய மடியில் வைத்தவன் இரு பாத விரலிலும் மெட்டியை அணிவித்தான்.
கண்களில் கரைபுரண்ட காதலோடு அவன் தாலி அணிவித்தபோதே நெகிழ்ந்திருந்த பூ இப்போது முழுவதும் உடைந்து நெக்குறுகி இருக்க… அவளின் ஒரு துளி கண்ணீர் அவளது பாதத்தை பற்றியிருந்த அவனது கையில் பட்டு தெறித்தது.
விழி உயர்த்தி பார்த்தவன் கண்களை மூடி திறந்தான்.
அவனின் அந்த செயல் சொல்லியது இனி எல்லாம் உனக்கு நான் தானென்று. இதைவிட வேறென்ன அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திட போகுது. பாரி மீது இன்னும் இன்னும் நிறைய காதல் ஊற்றெடுத்தது அவளுள். காதலின் தொடக்கம் அவளாக இருப்பினும், காதலை வஞ்சனையின்றி வாரி வழங்குபவன் அவனாக இருந்தான்.
அதன் பின்னர் பொங்கல் உண்டு முடித்து… சிறிது நேரம் கோவிலில் தங்கி பேசி சிரித்து… இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமென அம்மனிடம் ஒன்றாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
வேனில் பின்னிருக்கையில் பாரியுடன் பூ அமர்ந்துகொண்டாள். அவனின் புஜத்தோடு கைகளை கட்டிக்கொண்டவள் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அவனின் முன்னுச்சி முடியை கலைத்து விட்டாள். தோள்பட்டையில் கடித்து வைத்தாள். கன்னத்தில் இதழ் தேய்த்தாள். மீசையை பிடித்து இழுத்தாள்.
“ஹேய் மலரே… என்ன பண்ற நீ?”
“என்ன பன்றாங்கலாம்?” எனக் கேட்டவளிடம் முன்னிருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களை சுட்டிக் காட்டினான்.
எல்லோரும் களைப்பில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்.
“உனக்கு டயர்ட் இல்லையா?”
“ஏன் உன்னை தொல்லை பண்றனா?” எனக் கேட்டவள் அவன் பதில் சொல்லுவதற்கு முன்பே, “அப்படித்தான் நிறைய பண்ணுவேன். தாங்கிக்கோ. பழகிக்கோ” என்றதோடு அவனது கன்னத்தில் கடித்தும் வைத்தாள்.
“ஷ்ஷ்… ராட்சசி” என்றவன் கன்னம் தேய்க்க… அவனின் கையை தட்டிவிட்டவள் தன் இதழ் கொண்டு ஊர்வலம் நடத்தினாள்.
“மலரே… யாரவது எழுந்து பார்க்கப்போறாங்க” என்றவனின் மறுப்பில் உறுதி இல்லையோ. கன்னத்தை வாகாக தன்னவளுக்கு காட்டிக்கொண்டிருந்தான்.
“டெம்ட் பன்ற மலரே!” மயக்கமாகக் கூறினான்.
“நிஜமாவா?”
“இப்போலாம் உன்னை தூரத்தில் பார்த்தாலே உள்ளுக்குள் எல்லாம் உடையுதுடி” என்றான். மூடியிருந்த அவனது கண்களில் இதழ் பதித்தவள், அவனின் மூக்கின் நுனியை விரலால் பிடித்து ஆட்டினாள்.
“காக்கிக்கு வெறப்பா சுத்த மட்டும் தான் தெரியும் நினைச்சிருந்தேன். ஆனால் நீயொரு காதல் மன்னன் வேந்தா” என்றவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு மேலும் பலவற்றை பேசிக்கொண்டு வர, அவளின் தலையை நகர்த்தியவன் அவளது தோளில் தலை சாய்த்தான்.
அவள் பேசுவதை நிறுத்திவிட்டு அவனின் கேசம் வருட… சிறிது நேரத்திற்கெல்லாம் உறங்கிவிட்டான்.
தன்மீது சாய்ந்து தூங்கும் கணவனின் முகத்தையே விழி அகற்றாது பார்த்திருந்தவள் அவனை தனது மடியில் சரித்து அவன் மீது தலை கவிழ்ந்து உறங்கிப்போனாள்.
வீடு வந்து சேர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வண்டியில் கேட்ட பேச்சு சத்தத்தில் இருவரும் கண் மலர்ந்தனர். அனைவரும் விழித்திருந்தனர். இளா மட்டும் பரிதியின் மீது தலை சாய்த்து இன்னும் கண் மூடியிருந்தாள். பரிதி அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.
“ஊர் வந்திடுச்சு வேந்தா” என்றாள் பூ.
“நைட் சென்னை கிளம்பணும் பூ” என்றான் பாரி.
ஏனென்றெல்லாம் அவள் கேட்கவில்லை. சரியென தலையசைத்தாள்.
இரவு உணவிற்கு பின் அனைவரிடமும் கிளம்புவதைப்பற்றி பாரி கூறிட… இன்னும் இரண்டு நாட்கள் இருந்து செல்லலாம் என்ற அரசுவிடம் வேலையை காரணம் காட்டினான்.
புறப்படுவதற்கு முன்பு பரிதியிடம் தனியாக பேசிய பாரி ஏற்கனவே அவனிடம் சொல்லியிருந்த திட்டத்தைக் கூறி அதற்கேற்றவாறு கிளம்பி வருமாறு கூறினான். பரிதியும் ஒப்புதல் அளித்தான்.
அறைக்கு வந்தவன் பூ தயாராக எடுத்து வைத்த பைகளை எடுத்துக்கொண்டு கீழிறங்கினான். பூ அனைவரிடமும் போய்வருவதாக சொல்லிக்கொண்டிருந்தாள்.
“இனி அடிக்கடி வர்றோம் மாமா” என்ற பாரி, “நீங்களும் அங்க வாங்க” என சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான். பூவும் ஏறிட அவர்களுக்கு தலையசைத்து காரினை இயக்கினான்.
சிறிது தூரம் வரை இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது. அதனை பாரியே உடைத்தான்.
“என்ன மேடம் ரொம்ப அமைதியா வறீங்க?”
அவனின் மேல் சாய்ந்து கொண்டவள்,
“என்னை டெல்லி அனுப்பிடுவியா வேந்தா?” எனக் கேட்டாள். காரின் ஹெட்லைட் அடிக்கும் தூர வெளிச்சத்தை சாலையில் பார்த்தபடி.
“என்னைவிட்டு இருக்க முடியாதுங்குற ரீஸன் தவிர்த்து வேறு எதாவது இருந்தா சொல்லு?” என்றான் அவனும் விடாது.
“உன் ஆசைக்கு நான் கூட தடையா இருந்திடக்கூடாது” என்றான்.
“என் மொத்த ஆசையும் நீதான். உன்னோட இருக்கிறதுதான்னு நான் சொன்னா?” பட்டென்று கேட்டாள். அத்தனை வேகம்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.
காரினை சாலையோரம் நிறுத்தியவன், அவள் அமர்ந்திருந்த இருக்கையை நன்கு சரித்து அவள் படுக்க ஏதுவாக வைத்து, “தூங்கு மலரே, சீக்கிரம் ஒரு முடிவெடுக்கலாம்” என்று சொல்லியவனுக்கு அவனது எண்ணம் நடக்கப்போவதில்லை என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.
அவன் சொன்னதற்காக இருக்கையில் நன்கு வசதியாக அவன் பக்கம் திரும்பி சாய்ந்தவள் கண்களை மூடிடாது அவனையே ரசித்தபடி இருந்தாள். அவனுக்குத்தான் உள்ளுக்குள் போராட்டமாக இருந்தது. அவளின் பார்வை என்னவோ செய்தது. எப்போதும் புதிது போலவே ஒற்றை பார்வையில் தன்னை வாரிச்சுருட்டிக்கொள்ள அவளால் மட்டுமே முடியும் என்பதை அக்கணம் உணர்ந்தான்.
“ம்ப்ச்… தூங்குடி. உன் பார்வை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. ரோட்டில் கவனம் வைக்க முடியல” என்றவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க போராடியவனாக கார் ஸ்டியரிங்கில் விரல்களால் தாளமிட்டபடி வாகனத்தை செலுத்தினான்.
“பார்க்கக்கூட விடாம ரொம்ப பன்றடா” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரத்திற்கு மட்டும். மீண்டும் அவளது துளைக்கும் பார்வையை உணர்ந்தவன்…
“என்னடி… என்ன தான் வேணும்?” என்றான்.
“நீதான் வேணும். மொத்தமா!” உரிமையாய் தயக்கிமின்றி மொழிந்தாள்.
“உனக்குத்தாண்டி. அதான் உனக்குள்ள கட்டி வச்சிக்கிட்டியே” என்றவன், “நாளைக்கு நான் ஆபீஸ் போயே ஆகணும் மலரே. நீயிப்படி பண்ணா நானெப்படி ட்ரைவ் பண்ணுறது. கான்சன்ட்ரேட் மிஸ் ஆகுதுடா” என்றான் கெஞ்சலாக, கொஞ்சலாக.
“ஓகே ஓகே ஒன்னும் பண்ணல” என்றவள் இம்முறை அழுந்த இமைகளை மூடிக்கொண்டாள். சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள்.
பூவின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டவன், பின்னிருக்கையில் இளா வைத்த பிளாங்கெட்டை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன், அவளின் தலையை சரி செய்து நேராக வைத்து… தன்னவளின் உறக்கம் கலைந்திடாது சீரான வேகத்திலேயே வண்டியை செலுத்தினான்.
அதிகாலை நேரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் வந்தடைந்தான்.
பாரி வண்டியை நிறுத்தியதுமே விழித்துக்கொண்டவள், பாரி வீட்டின் கதவை திறந்ததும் அவனது அறைக்குள் நுழைந்து படுத்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
அறைக்குள் வந்தவன் உடல் குறுக்கி படித்திருந்தவளை சன்னமான சிரிப்புடன் பார்வையால் கடந்தான்.
நேரத்தை பார்த்தான். அதிகாலை ஐந்து முப்பதெனக் காட்டியது.
‘உறங்க நேரமில்லை’ என நினைத்தவன் குளித்து முடித்து காக்கி உடைக்கு மாறியிருந்தான்.
நேற்று கோவில் பயணம்… அத்தோடு இரவு முழுக்க ட்ரைவ் செய்திருக்கிறான். அந்த சோர்வு சிறிதுமின்றி மிடுக்குடன் கிளம்பி நின்றவன், கண்களை மூடி ஒவ்வொன்றாக மனதில் வரிசைப்படுத்தினான்.
அடுத்த நொடி ஜென்னிற்கு அழைத்திருந்தான்.
“ஜென் வேர் ஆர் யூ?”
“நைட் ட்யூட்டி டா. இப்போ தான் வீட்டிக்கு கிளம்புறேன்” என்றாள்.
“ஓகே ஃபைன். நீ அங்கேயே இரு. ஜஸ்ட் டென் மினிட்ஸ்” என வைத்துவிட்டான்.
“பூ எழுந்திரு. டோர் லாக் பண்ணிக்கோ.” பாரி அவளின் கன்னம் தட்டி எழுப்பினான்.
“கிளம்பிட்டியா வேந்தா?” என்றவள் நேரத்தை கவனித்து, “இவ்வளவு சீக்கிரமா, தூங்கவேயில்லையா?” எனக் கேட்டபடி எழுந்து அமர்ந்தாள்.
“பத்திரமா இரு பூ” என்றவன் அவளின் நெற்றியில் அவசரமாக இதழ் பதித்து வெளியேறினான்.
தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவன், பூ வந்து கதவினை தாழ் போட்டபின்னரே வண்டியை முடுக்கியிருந்தான்.
வேக எட்டுக்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தவன், சில கோப்புகளை எடுத்துக்கொண்டு என்னவென்று கேட்ட ஜென்னிடம் எதுவும் சொல்லாது அவளைக் கூட்டிக்கொண்டு குமாரின் வீட்டிற்கே சென்றான்.
இத்தனை காலை வேளையில் அவர் பாரியை எதிர்பார்க்கவில்லை.
வரவேற்று அமர வைத்தவரிடம் நேரடியா விடயத்திற்கு வந்தான்.
“சார் இதுவரை நடந்த கடத்தல் யாவும் சிலைகளுக்காக நடந்தது இல்லை.”
“வாட்…?”
குமாரின் அதே அதிர்வு ஜென்னிடமும்.
தன்னிடமிருந்த கோப்புகளை திறந்து, அதில் இதுவரை கடத்தப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை அவர் முன் பரவலாக வைத்தான்.
“இந்த போட்டோஸ் எல்லாம் பாருங்க” என்றவன், “உங்களுக்கு எதாவது தெரியுதா?” எனக் கேட்டான்.
இல்லை என்பதாக தலையசைத்தார்.
“இதில் எல்லாத்திலுமே வைரம் இருக்கு. வைரத்துக்காக சிலை கடத்துராங்க” என்றவன்,
“இதெல்லாம் நம்ம நாட்டோட பழங்கால வைரங்கள். இப்போ இந்த வகை வைரங்கள் கிடைப்பதில்லை. அப்போல்லாம் நம்ம நாட்டில் தான் வைரங்கள் அதிகமாக கிடைத்தது” என்றான்.
கோவிலில் மணி வைரத்தை பற்றி பேசிய போதுதான் பாரிக்கும் இதுவாக இருக்குமோயென்ற எண்ணம் உதித்தது. அதன்படி அவன் ஆராய்ந்து பார்க்க… அனைத்திலும் வைரங்கள் இருப்பது தெரிய வந்தது.
“அப்போ இந்த கேஸ் இன்னும் முடியலையா?”
“இல்லை?”
“பாரி…”
“எஸ் சார் முடியல. இப்போ நாம் மீட்ட சிலை ஒரிஜினல் கிடையாது” என்றவனின் செய்தியில் குமார் இருக்கையை விட்டே எழுந்துவிட்டார்.
“விவாஷுக்கும் மேல் ஒருத்தன் இருக்கான் சார். பட் அவன் இங்கில்லை அவனை இங்கு வரவழைக்கணும். அதற்கு முதலில் அவன் பதுக்கி வைத்திருக்கும் சிலைகள் நம்ம கைக்கு வரணும்” என்றான்.
“இது ஒரிஜினல் இல்லைன்னு எப்படி சொல்ற பாரி?” அன்று சிலை கைமாறும் நேரத்தில் தான் கையும் களவுமாக விவாஷ் மற்றும் நீபாவை பிடித்தனர். பரிமாற்றம் செய்யும்போது போலியை எப்படி கொடுப்பார்கள் என்பது அவளின் எண்ணம்.
“சிலை வாங்குறவனை ஏமாத்த ட்ரை பண்ணியிருக்கனும். இல்லையா நாம அங்க வரது எப்படியோ அவனுக்கு தகவல் கிடைத்திருக்கணும்” என்ற பாரி ரேமண்ட் விவாஷிடம் பேசியதை கூறினான்.
எந்தவொரு முகாந்திரமும் இன்றி ஒருவரின் நலனை இரண்டே வார்த்தையில் தெரிந்துகொள்ள முடியுமா? பாரியின் சந்தேகம் அங்கே தொடங்கியது.
ரேமண்ட் விசாரித்து விவாஷ் கூறியது அவனது நலனல்லா… சிலையின் நலன். இக்கணம் பாரிக்கு புரிந்தது.
ஆணையர் குமாருக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. குழம்பிய நிலையில் பாரி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“எனக்கென்னவோ அவன் விவாஷின் நலம் விசாரித்த மாதிரி தெரியல” என்ற பாரி… “காணாமல் போன சிலை வைரங்கள் மட்டும் நிறைந்தது அல்ல. நவரத்தின சிலை. ஐம்பது சதவிகிதம் அரிய வகை வைரங்கள் நிறைந்ததோடு, ரூபி, மரகதம் என இப்படி மற்ற ரத்தினங்கள் அனைத்தும் அதுல இருக்கு. சாதாரண சிலைக்கே மதிப்பு அதிகமாக இருக்கும் போது இதற்கு சொல்லவா வேண்டும். நிச்சயம் பல மில்லியனில் பணம் விளையாடியிருக்கும்.
பணம் கொடுத்தவன் சும்மா இருப்பானா பணத்தை திரும்ப வாங்க நினைப்பான் இல்லையா பொருள் வேணும் சொல்லுவான். அதுக்காக தான் தற்போதைய நிலையை தெரிஞ்சுக்க விவாஷ் சிறையில் இருக்கிறது தெரிஞ்சும் அவன் கிட்ட பேசுறதுக்கு முயற்சி பண்ணி இருக்கான்.
அநேகமா அவன் விசாரித்தது சிலையைப்பற்றித்தான் இருக்க வேண்டும்.
விவாஷ் சிறையில் இருந்துட்டு நல்லா இருக்கேன் சொல்றது நிச்சயம் அது அவனை குறித்து அல்ல. அந்த வெளிநாட்டுக்காரன் எதிர்பார்க்கும் ஒண்ணாகத்தான் இருக்கும்” என்ற பாரி சில மாதங்களுக்கு முன்பு இப்போது கடத்தப்பட்ட சிலையிருந்த கோவிலில் ஏதோ பூஜை நடந்ததாக செய்தித்தாளில் வந்த படத்தையும், விவாஷிடமிருந்து மீட்ட சிலையின் படத்தையும் ஒன்றாக எடுத்து வைத்தான்.
“இதுல உங்களுக்கு ஏதேனும் வித்தியாசம் தெரியுதா?”
இருவருடமும் பதிலில்லை.
“நல்லா பாருங்க… இந்த படத்தில் சிலை முகத்தில் மரகத கல் பதித்த மூக்குத்தி இருக்கு. ஆனால் இதுல பவள நிறத்தில் இருக்கு. மரகத கல் இருப்பது தான் ஒரிஜினல். போலி சிலையை செய்தவன் மரகதம் பச்சை நிறம்ங்கிறதை கவனிக்காம பவள நிறத்தில் அதாவது சிவப்பு நிறத்தில் மாத்தி வச்சுட்டான். என்ன தான் உண்மைக்கும் போலிக்கும் சிறிதும் வித்தியாசமின்றி சிலை செய்திருந்தாலும் சின்ன கலர் விஷயத்தில் கோட்டை விட்டு நமக்கு க்ளூ கொடுத்துட்டான்” என்ற பாரி, “இதனாலதான் நாம கைப்பற்றியது உண்மையான சிலையில்லைன்னு உறுதியா சொல்றேன்” என்றான்.
“அப்போ உண்மையான சிலையை எப்படி கண்டுபிடிக்கப்போறோம் பாரி?”
“விவாஷிடம் கேட்டால் நிச்சயம் சொல்ல மாட்டான். சிறையில் இருப்பவனை திரும்பவும் விசாரணையென கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரது அத்தனை ஈசியில்லை. கோர்ட் ப்ரோசீஜெர் நிறைய இருக்கு. அதற்குள் அந்த கண்ணுக்கு தெரியாத குற்றவாளி காரியத்தை முடித்திருப்பான்” என்ற பாரிக்கும் இதனை தொடங்கும் புள்ளி புலப்படவில்லை.
“அவன் ஏதோ அப்ராடிலிருந்து பேசுறான் சொன்ன. பார்த்தால் இது இரு நாட்டு பிரச்சனையா மாறிடும் போலவே பாரி. இதை நாம மட்டும் ஆராய்வது சரியா இருக்காது. நிச்சயம் சிஎம் வரை கொண்டு செல்ல வேண்டும். அவரோட அனுமதி கட்டாயம் தேவைப்படும்” என்றார் குமார்.
“அவன் நாட்டுக்கு போய் பிடிச்சாதான இந்த முறை. அவனை இங்க வரவழைப்போம். அவனுக்கு தேவையானதை அடைய கண்டிப்பா வருவான். அப்போ பிடித்து, அவன் நாட்டு போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடுவோம். இட்ஸ் சிம்பிள்” என்று தோளை குலுக்கினான் பாரி.
“இது ரொம்ப சீரியஸ் மேட்டர் பாரி.”
“புரியுது சார். பட் அதுக்காக எல்லாம் என்னால என் கடமையை செய்ய இன்னொருத்தரோட உத்தரவை எதிர்பார்த்து காத்திட்டு இருக்க முடியாது” என்றான்.
“நம்ம சிஎம் ரொம்ப நல்லவர் பாரி. நீ இங்க இப்போதான் வந்திருக்கிறதால அவரை உனக்கு சரியாத் தெரியல” என்றான்.
“இனி தெரிஞ்சிக்கிறேன் சார்” என்ற பாரி, “இந்த விஷயம் உங்களைத்தாண்டி போகாதுன்னு நம்புறேன்” என்றவனாக ஜென்னை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
குமார் தான் பாரியின் இந்த பரிமாணத்தில் திகைத்து நின்றார். எல்லாம் சரியாக நடந்தால் ஒன்றுமில்லை. ஆனால் எங்கேனும் சிறு பிழை நேரந்தாலும், பதில் சொல்லும் நிலையில் அவரல்லவா இருக்கின்றார். அதனாலேயே சற்று தயங்கினார். இருப்பினும் பாரி இதனை சரியாக முடித்துவிடுவானென்கிற நம்பிக்கையும் சற்று கூடுதலாகவே அவரிடம் இருந்தது. அதனால் பாரியின் பேச்சை கேட்பதாக இப்படியொரு பேச்சு வார்த்தை தங்களுக்குள் நடந்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.
“பாரி ரொம்ப ரிஸ்க் எடுக்குறியோ தோணுதுடா!”
“போலீஸ் வேலையில் ரிஸ்க் இல்லாமலா” என்றவன், “வச்ச மிச்சத்தை முடிக்க வேண்டாமா?” என்றான்.
“ஆனால் எப்படி?”
“அவனுங்களே நமக்கு வழியை காட்டுவானுங்க” என்ற பாரி ஜென்னுடன் தன்னுடைய அலுவலகம் புறப்பட்டான்.
“எப்போடா வந்த?”
“ஒன் ஹவர் பிஃபோர்.”
“ஹோ… தமிழ்?”
“என் பொண்டாட்டி இல்லாமலா?” மனைவியின் பெயரை கேட்ட மாத்திரம் அவனின் முகம் மத்தாப்பாய் ஜொலித்தது.
“பாருடா முகத்தில் தனி தேஜஸ்” என்ற ஜென்னின் கேலியில் அவனிடம் விரிந்த புன்னகை.
“அவி வீட்ல இருக்கும் அங்கிள் ஆண்ட்டி யார் பாரி?”
இரண்டு நாட்களாக அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்தும் அவர்களைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவிக்கும் தெரியவில்லை. அதனால் பாரியிடமே விசாரித்தாள்.
“அவர் பெங்களூர் கமிஷ்னரா இருந்தவர்.” அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதைப்போல் பாரி வாயினை மூடிக்கொண்டான்.
“நான் இன்னைக்கு குவார்ட்டர்ஸ் வந்திடட்டுமா பாரி?”
“ம்ம்ம்.”
“அவி?”
“அவனுக்கென்ன அவன் வீட்டில் அவனிருக்கட்டுமே!”
“ஹோ…” பாரி அவ்வாறு சொல்லியதும் ஜென்னிற்கு அடுத்து என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை.
அமைதியாக அவனுடன் சென்றாள்.
பாதி வழியில் அவளை இறக்கிவிட்டவன், “நீ வீட்டுக்கு போய்டுவ தானே ஜென்” எனக்கேட்டு, வேறு வேலை இருப்பதாக சென்றுவிட்டான்.
பாரி வந்தது சத்யாவின் டிடெக்டிவ் ஆபீஸ். சத்யாவின் வீடும் அதுதான்.
“என்ன பாரி அடுத்த கேஸா?”
ஏதேனும் விடயம் இருந்தால் மட்டுமே பாரி சத்யாவை தொடர்புகொள்வான். அதனாலேயே தற்போது ஒரு வழக்கு முடித்திருக்க… வேறொரு வழக்கா எனக் கேட்டிருந்தான்.
“அதே கேஸ் தான் சத்யா” என்ற பாரி தாமஸிடமிருந்து பெற்ற ரேமண்டின் எண்னை சத்யாவிடம் கொடுத்தான்.
“நெம்பர் பார்த்தால் ஃபாரின் மாதிரி இருக்கு.”
“எஸ்” என்ற பாரி குமாரிடம் கூறிய விளக்கம் அனைத்தையும் சத்யாவிடமும் கூறினான்.
“சிலை போலியானதுன்னு அந்தவூர் மக்கள் கண்டு பிடிக்கிறதுக்கு முன்ன நாம இதை முடித்திருக்கணும் சத்யா” என்றான்.
“கொஞ்சம் கஷ்டம் தான். நெம்பர் சர்ச் பண்ணுவோம்…” என்றவன் கணினியில் பாரி கொடுத்த எண்னை தட்டச்சு செய்து எதையோ ஆராய்ந்து “இது சவுத் ஆப்பிரிக்கா நெம்பர்” என்றான்.
“இங்கிருந்து அப்செர்வ் பண்ண முடியுமா?”
“ஹேக் பண்ணலாம். பட் எவ்வளவுக்கு பாசிபிள் தெரியல” என்ற சத்யாவிடம், “கொஞ்சம் சீக்கிரம் ட்ரை பண்ணு சத்யா. அவனுடைய கால்ஸ் எல்லாமே ட்ரேஸ் பண்ணு” என்றான்.
“எனக்கொரு டவுட் பாரி” என்ற சத்யா, “ஸ்மக்லிங் பண்றவன் இவ்வளவு அசால்டா தன்னுடைய நெம்பர் வெளியில் தெரியும்படி பேசுவானா?” எனக் கேட்டான்.
“எனக்கும் இந்த டவுட் இருந்துச்சு சத்யா. பட் இது அவன் நமக்காக பண்ண மிஸ்டேக்கா இருந்தா, நமக்கு யூஸ் தான” என்றான் பாரி.
“எதுக்கும் இது ஒரிஜினல் நெம்பரான்னு நான் செக் பண்ணிக்கிறேன்” என்ற சத்யா… “இந்த நெம்பர் அவன் அகெய்ன் யூஸ் பண்ணும்போது கண்டிப்பா மாட்டுவான்” என்றான்.
“நீ கொடுக்கப்போகும் தகவலில் தான் அடுத்து இந்த கேஸ் மூவாகும் சத்யா” என்ற பாரி அவனிடமிருந்து விடைபெற்றான்.
பாரி தன்னுடைய அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்திருப்பான். ஜெயிலர் தாமஸிடமிருந்து அழைப்பு வந்தது.
“சங்கரன் விவாஷை பார்க்க வந்திருந்தார் பாரி” என்ற அவரின் தகவலில் பாரியின் மூளை வேறொரு கோணத்தில் சிந்திக்கத் துவங்கியது.
சோர்வு சிறிதுமின்றி சங்கரனை காண அவரது வீட்டிற்குச் சென்றான். அவன் உள் செல்வதற்கு முன்பே சங்கரன் பாரியை அலைபேசியில் தொடர்புகொண்டார்.
“நான் உங்க வீட்டு வெளியதான் சார் இருக்கேன்” என்று பாரி சொல்ல… அவரே வெளியில் வந்து வரவேற்று உள் சென்றார்.
இருவரும் எதிரெதிர் அமர சங்கரன் பேச்சைத் துவங்கினார்.
“உங்களுக்கு நேர்ல நன்றி சொல்லணும் இருந்தேன்” என்றவர், “நான் கேட்டுக்கிட்டதுக்காக நீங்க இங்க வரலன்னு தெரியும். இருந்தாலும் நீங்க வந்ததால் மட்டும் தான் என் மருமகள் இறப்புக்கு நியாயம் கிடைச்சிருக்கு. ரொம்ப நன்றி பாரி” என்றார் உளமார.
“நோ நீட் . இட்ஸ் மை ட்யூட்டி” என்றான் தன்மையாகவே.
“இப்போ உங்களுக்கு கால் பண்ணது நன்றி சொல்ல மட்டுமில்லை பாரி” என்றவர் “விவாஷ் என்னை பார்க்க விரும்புவதா ஃபோன் செய்தான்.”
(‘ஃபோன் ஜெயிலுக்குள்… ம்க்கும் இப்போ இதெல்லாம் சாதாரணம்.’ பாரியின் மைண்ட்வாய்ஸ்.)
“அவன் ஏதோ ஏதோ சொல்லுறான்” என்று ஆரம்பித்தவர், “அவனோட டீலிங் சவுத் ஆப்பிரிக்காவில் இருக்க அமோஸ் அப்படிங்கிற அண்டர்கிரவுண்ட் ரவுடியிடம். அவன் கடத்தலில் ரொம்ப பெரிய ஆளு. அவன் டீலிங் செய்யாத கண்ட்ரியே கிடையதாம்” என்றதோடு “என் மூலமா அவனுக்கு எதையோ கைமாத்தனும் கூறினான். செய்த பாவத்துக்கு நீங்க அனுபவிப்பது போதாதா, நானும் சேர்ந்து அனுபவிக்கணுமான்னு கோபமாக் கேட்டு வந்துட்டேன்” என்றார்.
“தப்பு பண்ணிட்டிங்களே சார்” என்ற பாரியின் முகத்தில் சிந்தனை ரேகை.
“என்ன பாரி, புரியலையே?”
பாரி சொல்ல வேண்டியதை மட்டும் சங்கரனிடம் கூறி… “அந்த அமோஸ், ரேமண்டை இங்க வரவழைக்கணும் சார். அது எப்படின்னு யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கு ஒரு சான்ஸ் உங்க மூலமா வந்தது. அதை இப்படி சொதப்பிட்டிங்களே சார்” என்றான்.
“வேணும்னா நான் திரும்ப விவாவை சந்திச்சு எனக்கு சம்மதம் சொல்லவா?” எனக் கேட்டார்.
“ம்ஹூம்… இப்போ உங்களை நம்ப மாட்டான்” என்ற பாரி, “இனி நீங்களா அவங்க யாரையும் பார்க்க போகாதீங்க. நான் வேற வழியில் பார்த்துக்கிறேன்” எனக்கூறி விடைபெற்றான்.
பாரி வெளியில் அமைதியாக தன்னை காட்டிக்கொண்டாலும், அவனின் மனம் எப்படி எப்படி என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தது.
சங்கரன் வீட்டிலிருந்து பாதிவழி வந்த பாரி மீண்டும் அவருக்கு அழைத்து, விவாஷ் பேசியதாக சொல்லிய அலைபேசி எண்னை வாங்கினான்.
அடுத்து பாரி சென்றது ஜெயிலுக்கு.
பாரியை எதிர்பார்க்காத தாமஸ்… “எதாவது சீரியஸ் மேட்டரா பாரி?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை தாமஸ்” என்ற பாரி, “விவாஷ் மொபைல் வச்சிருக்கான்” என்றான்.
“இருக்காதே பாரி. நல்லா செக் பண்ணித்தானே செல்லில் போட்டேன்” என்றவருக்கு சற்று அதிர்ச்சி தான்.
இவ்விடயத்தில் எல்லாம் தாமஸ் நேர்மையானவன். வேலையில் கவனமாக இருப்பான்.
“நான் உன்னை குற்றம் சொல்லல தாமஸ்” என்ற பாரி, “விவாஷிடமே மொபைல் இருக்கும்போது, அந்த ஸ்மக்லர் உன் மூலமா எதுக்கு அவனை தொடர்புகொள்ள வேண்டும்? எனக்கு அதுதான் கொஞ்சம் அதிகமாவே இடிக்குது” என்றான்.
“ஒருவேளை நம்ம கவனத்தை திசை திருப்புவதற்கா இருக்கலாமே!” தாமஸ் சொல்லியதும் பாரியின் முகத்தில் வெளிச்சம்.
“இல்லை… நம் கவனம் முழுவதும் விவாஷ் மேல மட்டுமே இருக்கணும். அது தான் அவர்களின் எண்ணம்.” சரியாகக் கண்டுபிடித்திருந்தான்.
“விவாஷ் மேல நம்ம கவனத்தை பதிய விட்டு ராயப்பன் மூலம் வேற எதையோ செய்யப்போறாங்க” என்று எதிராளியின் திட்டத்தை சரியாக கணித்த பாரி, “ராயப்பனிடமும் நிச்சயம் மொபைல் இருக்கும். எனக்கு அந்த நெம்பர் வேணுமே?” எனக் கேட்டான்.
“முயற்சி செய்றேன் பாரி” என்றவரிடம் கவனமாக இருக்க சொல்லிச் சென்றான்.
****
உறக்கம் நன்கு கலைந்து பூ எழுந்தபோது, பாரி பாதியில் இறக்கிவிட்ட ஜென் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
பூ இருப்பதால் நேராக பாரியின் இலலத்திற்கு தான் வந்தாள். கதவினை தட்டிவிட்டு ஜென் காத்திருக்க, இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னரே பூ வந்து திறந்தாள்.
“ஹாய் தமிழ்” என்ற ஜென்னை முறைத்த பூ எதுவும் பேசாது செல்ல…
“என் மேல என்ன கோபம் தமிழ்?” என ஜென் வினவினாள்.
“வேந்தாக்கு அவ்வளவு பெரிய அடிப்பட்டிருக்கு. ஆனால் நீ என்கிட்ட அதை சொல்லல” என்று சிறுபிள்ளையென கோபித்தாள்.
“உன் புருஷன் தாம்மா சொல்லக்கூடாது சொல்லிட்டான்” என்ற ஜென் பேச்சுவாக்கில் எப்படி காயம் பட்டது என்பதையும் சொல்லிவிட்டாள்.
“பாரி மட்டும் கத்தியை பிடிக்காம போயிருந்தா, இந்நேரம் அவி ஹாஸ்பிட்டல் பெட்டில் படுத்திருப்பான்.”
“என்னது கத்தியா?” என்று அதிர்ந்த பூ, “அவன் ஏதோ கம்பி கிழிச்சிதுன்னு சொன்னான்” என்று இழுத்தாள்.
“அச்சச்சோ உளறிட்டோமா?” என்ற ஜென், “பாரி அப்படியா சொன்னான். அப்போ கம்பி தான்” என்று மழுப்பினாள்.
“அவிக்கு என்னாச்சு? உண்மையை மட்டும் சொல்லு” என்றாள். அந்த அழுத்தம் ஜென்னை அனைத்தையும் சொல்ல வைத்தது.
“இந்த வேலையில இத்தனை ஆபத்து இருக்கா?” என்ற பூவிற்கு பாரி மீது கொண்ட கோபம் இப்போது அர்த்தமற்றதாகத் தோன்றியது. இதுநாள் வரை இல்லாத பயம் ஒன்று உள்ளூர எழுந்தது.
“அவி ஓகே தான?”
“ம்… நல்லா தான் இருக்கான்” என்று ஜென் சொல்லும்போதே அவி வந்து சேர்ந்தான்.
“ஹாய் தமிழ்.”
அருகில் கிடந்த பிலாபி பில்லோவை எடுத்து அவனை மொத்தினாள்.
“எதுக்கு தமிழ் அடிக்குற? சொல்லிட்டு அடி. வலிக்குது” என்று அவன் வீட்டுக்குள்ளே சுற்றி ஓட பூ அவனைத் துரத்தினாள்.
“வேந்தாவை அடிபட்ட கையோட லாங் ட்ரைவ் பண்ண வச்சதுக்கு” என்றாள்.
“அவன் பண்ணதுக்கு என்னை ஏன் தமிழ் இப்படி ஓடவிடுற?” என்ற அவி அதற்குமேல் முடியாதென நின்றுவிட… பூவும் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள்.
“என்னடா ஆபீஸ் போகலையா?”
பூ அவ்வாறு கேட்டதும் ஜென் நொடித்தாள்.
“நீங்க வந்துட்டிங்கன்னு ஜென் சொன்னா. அதான் வந்தேன். இப்போ போகணும்” என்றான் அவி.
“போய்தானே ஆகணும். இல்லைன்னா பலபேருக்கு கஷ்டம்” என்று ஜென் மறைபொருளாக பேச, பூவிற்கு புரியவில்லை. அந்நேரம் அவியின் அலைபேசி ஒலித்தது.
“யா… யா… வித் இன் ஃபிப்ட்டின் மினிட்ஸ்” என்ற அவி தான் கிளம்புவதாகச் சொல்ல…
“எவ்வளவு வேகம். பார்த்து” என்றாள் ஜென்.
“ஹேய் என்னடி உன் பிரச்சனை?”
“எனக்கா? எனக்கென்ன ஒன்னுமில்லை?”
“அப்புறம் எதுக்கு இப்படி ஜாடையா பேசிட்டிருக்க?”
“இப்போ நீ ஆபீஸிலிருந்து தான வர? வந்து பைவ் மினிட்ஸ் ஆகல, அதுக்குள்ள அவளுக்கு மூக்கு வேர்த்திருச்சு” என்ற ஜென்னின் பேச்சு இப்போதுதான் அவிக்கு புரிந்தது. அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
“என் மேல நம்பிக்கையே இல்லையாடி?” அப்படி கேட்ட அவிக்கு ஆயாசமாக இருந்தது. ஏற்கனவே நம்பிக்கை என்பதை வைத்துதான் அவர்களுக்குள் ஒருமுறை பிரிவு வந்தது. இப்போது மீண்டும் அதே காரணமா? இவள் தன்னை நம்பவே மாட்டாளா என்ற ஆற்றாமை.
“உன்னை நம்பாம இல்லை அவி” என்ற ஜென் பூ அவர்களுடன் இருந்தபோதும், அவியின் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவனின் கையை தனது கைகளுக்குள் அடக்கி, “உன்னை வேறொருத்தி பார்க்கிறா(ள்)ங்கிற கோபம். எனக்கு பிடிக்கலடா. உன்னை நான் மட்டும் தான் பார்க்கணும். உனக்குன்னு நான் மட்டும் தான் இருக்கணும். அப்படியே உன்னை கடிச்சு திங்குற மாதிரி பார்க்குறாள். அது கடுப்பாகுது. அதைவிட உன்னை ஒரு பத்து நிமிஷம் கூடவிடாம வேலை வேலைன்னு காரணம்காட்டி ரொம்பத்தான் ஓவரா அட்வான்டேஜ் எடுத்து மணிக்கணக்கில் பேசுறாள். எரிச்சலா வருது” என்று சொல்லிட பூ அட்டகாசமாக சிரித்தாள்.
அனைத்தையும் கேட்டபடி வந்த பாரி…
“இப்போதாண்டா ஜென் பக்கா லவ்வர் மெட்டீரியலா மாறியிருக்காள்” என்றான்.
“ம்” என்ற அவி “உண்மையாவே அவள் பார்க்குறதெல்லாம் என்னை ஒண்ணுமே செய்யலடி. சின்ன குறுகுறுப்பு கூட இல்லை. எல்லார் பார்வையும் உன்னோடது ஆகிடாதுடி. அதோட எனக்கு நல்லாத்தெரியும் என்னை பார்க்குற பொண்ணெல்லாம் என் ஜென் ஆகிடமாட்டான்னு” என்றிட ஜென்னின் கண்கள் கலங்கியது.
“ஜென்னுக்கே உரிமை உணர்வை தூண்டிவிட்ட அந்த பொண்ணு யாருடா அவி? மூணு நாள் ஆளில்லை, என்னென்னவோ நடந்திருக்கும்போலயே” என்று பூ கேட்க,
“அந்த டி.எல் தமிழ்” என்றான் அவி.
“ஆமாம்… ஆமாம்… ஆபீஸிலிருந்து இவன் வீட்டுக்கு வந்துட்டா போதும், வேலையில் இல்லாத டவுட்டெல்லாம் கேட்டுட்டு கால் பண்ணிடுவாள். நேத்து வேலையை முடிச்சிட்டு இவனை பார்க்கலான்னு ஆபீஸ் போனால், மேடம் அப்படியொரு சைட். சாருக்கும் பிடிச்சிருந்துச்சு போல, அவள் பார்க்குறான்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி கம்ப்யூட்டர் தட்டிட்டு இருக்கான்.”
“நிஜமாவே எனக்கு தெரியாது ஜென்.”
“என்கிட்டவே வந்து, அவி சாருக்கு ஆளிருக்கான்னு கேட்கிறாள்” என்ற ஜென் புசுபுசுவென மூச்சுக்காற்றை வெளியேற்றினாள்.
“ஹேய்… இது எனக்கு தெரியாதே” என்று அவி சொல்ல…
“இப்போ தெரிஞ்சிடுச்சுல்ல என்ன பண்ணப்போற?” என்றாள் ஜென்.
பூவும் பாரியும் அவியின் திருத்திருத்த முழியில் பக்கென சிரித்துவிட்டனர்.
“இனியும் இவனை மத்த பொண்ணுங்க சைட் அடிக்கட்டும் என்னால இருக்க முடியாது. ஒழுங்கா அவனை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க” என்று தன்னுடைய நண்பர்கள் இவரிடமும் முறையிட்டாள் ஜென்.
“இந்த ப்ரொஜெக்ட் முடியட்டும்” என்று அவி சொல்ல… அவனின் தலையிலேயே ஓங்கி கொட்டியிருந்தாள் ஜென்சி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
31
+1
1
+1
1