தூவானம் 41 :
காலை அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசும்போது பூ பாரியை பார்த்தது. அதன் பின்னர் எங்கு போனான் என்று ஒன்றும் தெரியவில்லை. மதிய உணவின் போதும் வரவில்லை. கால் செய்து கேட்டபோது வர தாமதமாகும் என்று சொன்னானேத் தவிர காரணம் சொல்லவில்லை.
மூன்று மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தவன், பார்வதி இருக்கும் அறைக்குத்தான் நேராகச் சென்றான்.
“எங்கடா போயிருந்த… தமிழ் உன்னை காணோமுன்னு வீட்டுக்கும் வாசலுக்குமா நடந்திட்டு இருந்தாள். இதுவரை நீ தனியா உன் இஷ்டத்துக்கு இருந்த சரி… இனிமேல் அப்படி இருக்க முடியாது. வெளிய போறதுக்கு முன்ன பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு போகணும். என்ன பண்ணாலும் அவளுக்கு தெரியணும். எதையும் மறைக்கக்கூடாது” என்று பார்வதி அறிவுரை வழங்க சின்ன புன்னகையுடன் கேட்டுக்கொண்டான்.
மனைவி மகனுக்கு சொல்லும் போதனையை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த தில்லை…
“அம்மா சொல்லுறதை நல்லா கேட்டுக்கோ பாரி… வாழ்க்கை நல்லாயிருக்கும்” என்று சொன்னதோடு அட்டகாசமாக சிரித்தும் வைத்தார்.
“அனுபவமா அப்பா?”
“ஆமாம்… ஆமாம்… அவரப்படியே பொண்டாட்டி சொல்லுறதைத்தான் கேட்டு செய்றார்?” என்ற பார்வதி தில்லையை பார்த்து உதடு சுளித்தார்.
“அப்போ நான் கேட்கல சொல்லுறியா பாரு?” மனைவியின் இரு பக்க தோளிலும் கை வைத்து கேட்டார்.
“இல்லைன்னு தான் சொல்லுவேன்” என்று பதில் சொல்லிய பார்வதி முகம் கவிழ்ந்து சிரித்தார்.
“பாரு…” என்ற தில்லை “உன்கிட்ட இந்த வெட்கத்தை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு” என்று சொல்ல அக்காட்சி அழகாய் பாரியின் அலைபேசியில் சிக்கிக்கொண்டது.
“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்ற பார்வதி தில்லையின் பிடியிலிருந்து விலகி… பாரியின் செயலைக்கண்டு,
“என்னடா பண்ற நீ? முதலில் எடுத்ததை டெலிட் பண்ணு” என்றார்.
“இதெல்லாம் காவியம்மா” என்ற பாரி அலைபேசியை சட்டை பைக்குள் போட்டுக்கொண்டான்.
“அப்புறமா அதை எனக்கு சென்ட் பண்ணு பாரி” என்று தில்லை சொல்ல… பார்வதி கணவனை முறைத்தார்.
“அவன் ஏதோ பேச வந்திருக்கான். அதை என்னன்னு கேளு” என்று பார்வதியின் கவனத்தை திசை திருப்பி தப்பித்துக்கொண்டார் தில்லை.
“என்ன விஷயம் பாரி?”
பார்வதியிடம் சிறு பையினை கொடுத்தான். நகைக்கடை பை என்பது பார்த்ததும் தெரிந்தது.
“என்னடா இது. நகை வாங்குனியா?” கேட்ட பார்வதி அதனை பிரித்து அதிலிருந்த பெட்டியை எடுத்து திறந்தார்.
தில்லையும் பார்வதியின் அருகில் வந்து என்னவென்று பார்த்தார்.
பார்த்ததும் இருவரும் ஒரே குரலில்…
“அழகா இருக்கு பாரி” என்று கூறினர்.
“இந்த ஸ்டோன்ஸ் வைரமாடா?”
பார்வதியின் கேள்விக்கு ஆமென்று கண் சிமிட்டினான்.
“எத்தனை சவரன் பாரி?”
“செவன்.”
“இன்னும் கொஞ்சம் கூட எடுத்திருக்கலாமே!” என்றார் பார்வதி.
“அது ஏதோ வடம் பிடிக்குற சைசுக்கு தடியா இருக்கும்மா. அவளுக்கு உறுத்தும்” என்ற பாரியின் வார்த்தையில் அவன் பூவின் மீது சிறு விடயத்திலும் கொண்டிருக்கும் அக்கறை தான் அவர்கள் இருவருக்கும் தெரிந்தது.
“இதை வாங்கத்தான் போனீயா?”
“ஹ்ம்ம்…” என்றவன், “எப்படியும் நீங்க வாங்கியிருப்பீங்க… ஆனால் நாளைக்கு இதை போடலாம்மா” என்றான்.
பார்வதியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
இதுவரை எப்படியோ. இனி பூவை பாரி அப்படி பார்த்துக்கொள்வான் என்பது அவளுக்கான அவனின் ஒவ்வொவொரு செயல்களிலும் அவர்கள் உணர்ந்தனர்.
“சரிப்பா” என்ற பார்வதி அவனின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார்.
“என்ன பாரு நீ, அவனை செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்க. இந்நேரம் ஒரு மாமியாரா மகனை மருமக கைக்குள்ள போட்டுகிட்டான்னு சண்டை போட வேண்டாமா? உனக்குன்னு இதுவரை எதாவது வாங்கிக்கொடுத்திருப்பானா?” என்று பார்வதிக்கு இல்லாத எண்ணத்தை கேலியாகக் கூறினார்.
“உங்கப்பா என்னை மாமியாரா மாத்த ட்ரை பன்றாரு பாரி” என்ற பார்வதி…
“என் மருமகள் சந்தோஷமா இருந்தாதாங்க என் பிள்ளை நிம்மதியா இருக்க முடியும். இனி என் பையனோட மொத்தமும் அவள் தான். அவளை பாரியோட இன்னொரு பிம்பமாத்தான் என்னால் பார்க்க முடியும். மாமியார் மருமகள் சண்டை பார்க்கணும் ஆசைப்பட்டா எதாவது சீரியல் பாருங்க” என்ற அன்னையின் கன்னம் கிள்ளிய பாரி,
“ச்சோ… சுவீட்” என்று வெளியேறினான்.
“பாரிகிட்ட இப்படியொரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கல பாரு.” செல்லும் மகனை பார்த்தபடி தில்லை கூறினார்.
“நான் எதிர்பார்த்தேங்க… பூ ஃபிரண்டா இருக்கும்போதே அப்படி தாங்குவான். இப்போ சொல்லவா வேணும். மனசு நிறைஞ்சு போச்சுங்க. என் ரெண்டு பையனும் வாழுற வாழ்க்கை அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது.” பார்வதி நெகிழ்வாய் கணவனின் தோள் சாய்ந்தார்.
பெற்றவர்களுக்கு இதைவிட வேறு சந்தோஷம் என்ன இருந்துவிடப்போகிறது.
*****
பாரி அறைக்குள் வரும்போது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உர்ரென மெத்தையில் அமர்ந்திருந்தாள் அவனது மனைவி.
நேராக அவளிடம் சென்று மடியில் தலை வைத்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
“என்ன வேந்தா என்ன பண்ணுது?”
அவனின் சோர்ந்த தோற்றம், சொல்லாது எங்கோ சென்ற அவன் மீதான அவளது கோபத்தை நொடியில் தூக்கிப்போட்டு கணவனின் நலன் விசாரித்தாள்.
பூவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளது கையை எடுத்து தனது சிகைக்குள் விட்டவன்… அவள் கோதி கொடுக்கத் துவங்கியதும், அவளின் வயிற்றில் முகம் பதித்தவனாக திரும்பி இடையோடு கட்டிக்கொண்டான்.
“தலை வலிக்குதாடா?” என்றவள் நாக்கை கடித்தவளாக “வலிக்குதா… வலிக்குதா…” என டா’வை தவிர்த்தவளாக படபடவென வேகமாக வினவினாள்.
அவனிருந்த மனநிலையில் அதனை கவனிக்கவில்லை போலும்.
“பூ…”
“என்னடாம்மா?” கணவனின் முன்னுச்சி முடியை ஒதுக்கி இதழொற்றி நிமிர்ந்தாள்.
“உனக்கான சின்ன சின்ன நியாயமான விடயத்தைக்கூட நான் செய்யலை இல்லையா?” அவனின் குரலின் வருத்தமே தனக்காக யோசிக்கிறான் என்று அவளுக்கு உணர்த்தியது.
“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது வேந்தா” என்று பட்டென்று மறுத்து அவனுக்கு சாதகமாக மொழிந்தவள், “நடந்ததை விட்டு நடக்கப்போவதை பார்ப்போன்னு நீதான சொன்ன. இப்போ இந்த செகண்ட், எனக்காக நீ யோசிக்கிறியே… இதைவிட வேறென்ன வேணும்?” என்றாள்.
“உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்னு உனக்கு காண்பிடெண்ட் இருக்கா?”
“இப்போ என்னடா பிரச்சனை உனக்கு?” எனக்கேட்டவள் ‘இந்த டா விடாது போலிருக்கே’ என்று மனதில் சலித்துக்கொண்டாள்.
“நமக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சா மலரே?”
“உனக்கு எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?” என்ற பூ, “உனக்கு டவுட் இருந்தா நாம வேணும்னா நீ சொன்ன மாதிரி முள்ளை முள்ளால் எடுப்போமா?” எனக் கேட்டாள்.
“நான் ரெடி” என்று சட்டென்று குதூகலித்த பாரி, “அதுக்குமுன்ன ஒன்னு கேட்கணும்?” என்றான்.
அவள் என்ன என்பதைப்போல பார்க்க…
“அன்னைக்கு நான் உன்னை மழையில் பார்த்தும் பார்க்காம போனது உனக்கும் கோபம் இல்லையா?”
“இல்லையே!”
“ஏன்?”
“தெரியல… உன் கோபத்தோட அளவு புரிஞ்சதால இருக்கலாம்” என்றாள்.
“ஆனா எனக்கு இருக்கு. என்ன சொன்னாலும் அது சரின்னு என்னாலே அச்செப்ட் பண்ணிக்க முடியாது” என்ற பாரி, “அன்னைக்கு தெரிஞ்சு வேணும்னு தான் விட்டுப் போனேன். நீ என் பூவா இல்லாம என்னோட மனைவியா தெரிஞ்ச… அந்த கோபத்துல தான் விட்டுப்போனேன்” என்றவன், “உனக்கு நான் அன்னைக்கு சொன்ன விளக்கம் போதுமானதா இருக்கலாம். ஆனா எனக்கு போதல… ஒரு போலீசா இருந்துகிட்டு நான் அப்படி பண்ணது எப்பவும் தப்பு தான்” என்றான்.
“சரி…”
“ஆனா நார்மல் ஹியூமனா என் கோபம் சரிதான்.”
“அச்செப்ட் இட்.”
“அவ்ளோதானா?”
“வேறென்ன?”
“உன்னை எனக்குள்ள பொத்தி பொத்தி வச்சிக்கணும் தோணுது மலரே!”
“வச்சிக்கோ!”
“உன்னை எதுக்கும் தவிக்கவிடக்கூடாதுன்னு என் மனசு தவிக்குது!”
“சரி…”
“நீ நினைக்குறதுக்கு முன்னவே உனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யணும்!”
“செய்…”
“உன்னைவிட்டு எப்படி இருக்கப்போறேன்னு தெரியல?”
“வாட்?”
அதுவரை அவன் சொல்வதற்கெல்லாம் அவனுக்கு இணையாக இயல்பாக பதில் சொல்லிக்கொண்டே வந்தவள், இறுதியில் அவன் சொல்லியதில் அதிர்ந்து அவனை தன் மடியிலிருந்து எழுப்பிவிட்டாள்.
“நீயேன் என்னை விட்டு இருக்கணும் வேந்தா?” இப்போ என்ன புது பூதமோ என்கிற பயம் அவளிடம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ரிலாக்ஸ் மலரே! எதுக்கு டென்ஸ்ட் ஆகுற. எப்படியும் சென்னை போனதும் ஒரு ஒன் வீக். அப்புறம் நீ டெல்லி போய்டுவ. சிக்ஸ் மந்த்ஸ் கோச்சிங். நெக்ஸ்ட் எக்ஸாம். கண்டிப்பா உன்னால் பர்ஸ்ட் அட்டெம்டிலே பாஸ் பண்ண முடியும். அப்புறம் டூ இயர்ஸ் ட்ரெயினிங். நீ அங்க. நான் இங்க. பிரிந்து இருந்துதானே ஆகணும்” என்று சாதாரணமாக சொல்லுவதைப்போல் சொன்னான். அவளை பிரியும் வருத்தம் மலையளவும், எப்படி இவளின்றி இருக்கப்போகிறோம் என்கிற பயம் கடலளவும் உள்ளுக்குள் இருக்க அதனை மறைத்தவனாக பேசினான்.
“நீ இதை விடமாட்டியாடா?” எவ்வளவு முயன்றும் தன்மையாகக் கேட்க முடியாது போனது.
“ம்ப்ச்… எதுக்கு இந்த விடயத்தில் இவ்வளவு அடமெண்ட்டா இருக்க பூ?”
“யாரு நானா? நீதாண்டா… எப்போ பாரு என்னை துரத்தி விடுறதுலேயே இருக்க!” என்றாள் கடுப்பாக.
“பொண்டாட்டி ஆனதும் என் பேச்சை கேட்டக்கூடாதுன்னு இருக்கியா?”
“நீதான்… நீதான், புருஷன் ஆனதும் எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துற. முன்னலாம் எனக்கு பிடிக்கலன்னு கண்ணை காட்டினாலே இக்னோர் பண்ணிடுவ. இப்போ ரொம்ப பன்ற!”
“நானா?”
“இல்லையா பின்ன!” என்றவள், “நான் ஓப்பனா சொல்லட்டுமா?” எனக் கேட்டு, “சத்தியமா நீயில்லாம என்னால் இருக்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட மூணு வருசம். நோ சான்ஸ். இப்போ ரெண்டு நாளா உன் கை வளைவுக்குள்ள தூங்குற சுகம் அங்கு போனால் கிடைக்குமா? பூ பூ அப்படின்னு மூச்சுக்கு முன்னூறு முறை கூப்பிடுற உன் குரலை ஏதோ ஒரு நேரம் போனில் மட்டும் கேட்டு இருக்க முடியாது. நீ சொல்ற மாதிரி போனால், உன்னை இவ்வளவு கிட்டக்க பார்க்க முடியுமா? உன் விரல் பிடிக்க முடியுமா? உன்னை இப்படி கிஸ் பண்ண முடியுமா? ஹக் பண்ண முடியுமா?” முடியுமா முடியுமா எனக்கேட்டு கேட்டதையெல்லாம் செய்யவும் செய்தாள்.
“தினம் தினம் நீ எனக்கு வேணும். உன்னை விட்டு போனால் எப்படி? உன்னால இருக்க முடியுமா இருந்துக்கோ. என்னால முடியாது. டாட்.”
அவள் தன்னை அளவுக்கு அதிகமாகவே காதலிக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போது வாய் வார்த்தையாக அவளே சொல்ல சொல்ல அவனுக்கு எப்படி இருக்கிறதாம். அவளை வாரி அணைக்கத் துடித்த கரங்களை கடினப்பட்டு அடக்கிக்கொண்டான். இப்போது இலகினாள் அவளை ஒப்புக்கொள்ள வைக்க முடியாதென தன் உணர்வுகளை இழுத்து பிடித்தான்.
“நீ ஆசைப்பட்டது தானே!”
தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிட்டவள்,
“யெப்பா சாமி… தெரியாம ஆசைப்பட்டுட்டேன்” என்றவள், “இப்போ உன்னோட ஆர்க்யூ பண்ண என்னால முடியாது வேந்தா, இங்க இருக்க ரெண்டு நாள் நமக்காகன்னு மட்டும் யோசி. இப்போ ஆளை விடு” என்றவள் வேகமாக அங்கிருந்து ஓடினாள்.
“பூ நான் சொல்றதை கொஞ்சம் கேளுடி…”
“முடியாது போடா” என்றவள்” சென்னை போய் பேசிக்கலாம்” என்றாள். அவளின் குரல் மட்டுமே அவனுக்கு கேட்டது.
“மனுசனை கொலையா கொல்லுறாளே!” கவிழ்ந்து படுத்து முணுமுணுத்தான்.
****
தென்னாப்பிரிக்கா…
(சுலு மற்றும் ஆங்கில உரையாடல்கள் யாவும் தமிழில்…)
தற்போது 96 சதவிகித வைரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து தான் கிடைக்கிறது.
பழங்காலத்தில் வைரங்கள் இந்தியாவில் தான் கிடைத்ததாக வரலாறு. அதனாலேயே நம் நாட்டின் பழங்கால வைரங்கள் இன்றளவில் பெரும் மதிப்பு வாய்ந்தவை.
இன்றளவிலும் சம்பல்பூர், நிஜாம், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. அவை சுரங்கங்களில் இல்லாது, ஆற்றுப்படுகையில் உள்ள மணலிலும் கிடைக்கிறது. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். அதனால் இங்கு கிடைக்கும் வைரங்களை நாடு கடத்த பல வகையில் பலர் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர்களுக்கு எளிதாக கிடைக்கப்பெற உதவியவன் தான் விவாஷ்.
இதில் பல கோடிகள் கைமாறியுள்ளன.
“அந்த மரகதமும், வைரமும் பதித்த சிலை வருமா வராதா. அத்தோடு சம்பல்பூர் வைரம் என் கைக்கு வந்தே ஆகணும். கொஞ்சமில்லை பல மில்லியன் இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன் இதில்” என்று தன்னுடைய ஆட்களிடம் அமோஸ் கத்திக்கொண்டிருந்தான்.
“நமக்கு சப்ளை செய்து கொண்டிருந்த விவாஷ் மொத்த டீமோடு பிடிபட்டு சிறையில் இருக்கான்” என்ற தகவல்களை தன்னுடைய முதலாளியிடம் வெகுவான தயக்கத்திற்கு பிறகு ரேமண்ட் கூறினான்.
“எப்படி… எப்படி இது நடந்தது?” அமோஸ் படபடத்தான்.
“நான் அந்த விவாஷ் கிட்ட பேசணும்.” அவனின் வார்த்தையிலிருந்த அழுத்தமே மறுக்க காரணம் எதுவும் சொல்லக்கூடாதென எச்சரித்தது.
“ஏற்பாடு செய்றேன்” என்ற ரேமண்ட் அடுத்த சில மணி நேரங்களில் விவாஷை எப்படி தொடர்புகொள்ளலாம் என பல வழிகளில் முயற்சித்து பார்த்துவிட்டான். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
என்ன தான் பாரி வழக்கு முடிந்ததும் தன் வேலை முடிந்ததென ஒதுங்கிக்கொண்டாலும், நடக்கும் எதையும் தன் பார்வையிலிருந்து அவன் விலக்கவில்லை. அதன்படி யாரோ விவாஷை தொடர்புகொள்ள முயல்கிறார்கள் என்பதை சடுதியில் தெரிந்து கொண்டான் பாரி.
“என்னாச்சு ரேமண்ட்?” அமோஸ் கேட்க அவனோ பதிலின்றி நடுங்கினான்.
தான் சொன்னது நினைப்பது எல்லாம் நொடியில் நடக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் அமோஸிடம் விளைவுகள் பெரியதாக இருக்கும்.
உயிரை எடுக்கவும் அஞ்சமாட்டான்.
“என்னடா அப்படியே நிக்குற? பார்ட்டிக்கு இப்போ என்ன பதில் சொல்வேன் நான். வைரங்களும், அந்த சிலைகளும் வரலன்னா மொத்தமா அழிந்துடுவோம். அவ்வளவு பணம் இதில் வாங்கியிருக்கோம்.” என்ற அமோஸ் “இனி உங்களையெல்லாம் நம்பி பயனில்லை. நானே முயற்சிக்கிறேன்” என்று கூறினான்.
“நான் எல்லா விதத்திலும் முயன்று பார்த்துட்டேன் பாஸ். ஒருத்தன் மட்டும் தான் தடையா இருக்கான்” என்றான் ரேமண்ட்.
“யாரவன்?”
“சென்னை காப்.”
“ஒரு சின்ன காப்?”
“எஸ் பாஸ். டிசி. அவன் தான் பிடிச்சிருக்கான்.”
“அவனை வழிக்கு கொண்டுவர முடியாதா?” பணத்தை வைத்து எடைபோட நினைத்தான். பாரி அந்த ரகமில்லையே.
“அவன் ரொம்ப நேர்மையானவனாம்!”
ரேமண்டின் பதிலில் சிரித்த அமோஸ்…
“இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பணத்தை தூக்கிப்போடுடா… வாலாட்டுவான்” என்றான். பாரியை பற்றி முழுதாக தெரிந்துகொள்ள அவனக்கும் நேரம் வரவேண்டுமே! அதையும் அவனே உருவாக்கப்போகிறான்.
“ட்ரை பண்ணிட்டேன்.”
இப்போது ரேமண்டின் மேல் அமோஸிற்கு அத்தனை கோபம் எழுந்தது.
“என்ன மேன் நீ என்ன சொன்னாலும் அப்போஸ்ஸாவே பதில் சொல்லிட்டு இருக்க? அப்படியென்ன பெரிய அப்பாடக்கர் அவன்” என்ற அமோஸ், “நான் நேரடியாவே விவாஷை மீட் பண்ணனும் அதுக்கு ஏற்பாடு செய்” என்றான்.
“நீங்களா… அது ஆபத்து?” ரேமண்ட் பதற்றமாகக் கூறினான்.
….
“நீங்க போனால் யார்? என்ன? எதுக்கு? பல கேள்விகள் வருமே! திரும்ப முயன்று பார்க்கிறேன்” என்ற ரேமண்ட் தங்களுடைய இருட்டுலக பலத்தை வைத்து கண்டம் விட்டு கண்டமிருந்த விவாஷை அலைபேசியில் பிடித்தான்.
முன்பும் இதையேத்தான் செய்தான். ஆனால் அப்போது கிடைக்காத உதவி இப்போது மட்டும் எப்படியென்று ரேமண்ட் யோசிக்க மறந்திருந்தான்.
முதல் முறை விவாஷிடம் ஒருவன் பேச விரும்புவதாக அவனிருக்கும் சிறையின் கண்காணிப்பாளர் தாமஸிற்கு தொடர்புகொள்ள… அவர் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.
“கோர்ட் அனுமதி இருந்தால் மட்டுமே சாத்தியம். அதுவும் நேரில் சந்தித்து மட்டுமே பேச முடியும்” என்று கூறியிருந்தார்.
பெரிய பெரிய ஆட்களின் பெயரை சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர் பாரியின் ஆளாயிற்றே வளைந்து கொடுப்பாரா என்ன?
உடனடியாக பாரியிடம் இவ்விடயத்தை சொல்லியுமிருக்க…
பாரியினுள் புதிதான குழப்பம்.
‘முடிந்துவிட்டதென நினைத்தது முற்றுபெறவில்லையோ?’
சிந்தித்தவன்… “திரும்ப கால் வந்தா சைபர் கிரைமில் உங்க எண்ணை கண்காணிக்க சொல்லிட்டு விவாஷிடம் பேச அனுமதி கொடுங்க” என்று யோசனை வழங்கியிருந்தான்.
‘வெளிநாட்டில் இருப்பவன் ஜெயிலுக்குள்ளிருக்கும் விவாஷிடம் இவ்வளவு கடினப்பட்டு ஏன் பேச வேண்டும்?’ என்ற கேள்வி பரிதியின் மூளையை வண்டாய் குடைந்தது.
பாரி அனுமதி அளித்ததாலேயே ரேமண்ட் விவாஷை தொடர்புகொள்ள முடிந்தது.
அவர்கள் பேசுவது பாரி பதிவு செய்ய கூறியிருந்தான்.
“எப்படியிருக்க விவாஷ்?”
“நல்லாயிருக்கேன்.”
அவ்வளவு தான் இரண்டே வார்த்தை கேள்வி, ஒரு வார்த்தை பதில். வைத்துவிட்டனர்.
தனக்கு அனுப்பி வைத்திருந்த அந்த குரல் பதிவை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு கேட்ட பாரிக்கு… ஏதோ கோட் வோர்டில் பேசியிருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகியது.
பாரி முன்பே நினைத்தது தான்…
நேரடியாக போலீஸை தொடர்புகொண்டே விவாஷிடம் பேசுபவன் அத்தனை வெளிப்படையாகக் எதையும் காட்டிக்கொள்ள மாட்டானென்று. ஆனால் இத்தனை சுருக்கமாக முடித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
ஜெயிலரை அழைத்தவன், “என்ன ரீஸன் சொல்லி கேட்டாங்க?” என்று வினவினான்.
“ரேமண்ட் விவாஷோட நண்பனாம். அவன் ஜெயிலுக்கு சென்றது இப்போதுதான் தெரிந்ததாம். வெளிநாட்டிலிருப்பதால் நேரில் வந்து பார்க்க முடியாது, போன் மூலமாக பேச அனுமதி வேண்டும் என்றான்” எனக் கூறினார்.
“எப்படி பழக்கமாம்?”
“ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் ஆப்பிரிக்காவில் பிரபலமான நகை கடையில் வேலை செய்தார்களாம்” என்றார்.
தாமஸ் சொல்லியதை மனதில் குறித்துக்கொண்ட பாரிக்கு கண்கள் கட்டி காட்டில்விட்டது போலிருந்தது.
‘அடுத்து என்ன?’
பதிலின்றி நின்றான்.
__________________________
புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையிலேயே கோவிலுக்கு செல்ல அனைவரும் கிளம்பியிருந்தனர்.
முன்தின இரவே புடவை தான் கட்ட வேண்டுமென்று தங்கம் கட்டளையாக சொல்லியிருக்க பூ புடவையுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
பூஜைக்குத் தேவையான அனைத்தையும் மணி எடுத்து வைக்க இளா அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள். தங்கம் சரிபார்த்தபடி இருந்தார்.
பரிதி சின்னுவைக் கிளப்பிக் கொண்டிருந்தான். அரசு பண்ணைக்கு சென்று இன்றைய வேலையை மட்டும் ஆட்களிடம் பிரித்து கொடுத்துவிட்டு வருவதாக சென்றிருந்தார்.
தில்லையுடன், பார்வதி தங்கள் பக்கமிருந்து கோவிலுக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன ராசா நீ மட்டும் வந்து உட்கார்ந்திருக்க. உன் பொண்டாட்டி எங்க?” செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் வைத்தவாறே கூடத்தில் கிளம்பி தயாராக அமர்ந்திருந்த பாரியிடம் வினவினார் தங்கம்.
“ரெடியாகிட்டு இருக்காள் பாட்டி” என்ற பாரியின் யோசனை முழுக்க புதிதாக முளைத்திருக்கும் குழப்பத்திலேயே உழன்றது.
இன்றும் வேலையின் யோசனையோடு இருந்தால் சரிவராது என நினைத்தவன், “நான் எதாவது செய்யட்டுமா பாட்டி” எனக் கேட்டான்.
அந்நேரம் அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்திலிருந்த இளாவின் அலைபேசி ஒலித்தது.
“அதை எடுத்து யாருன்னு பாரு பாரி” என்று இளா சொல்ல அதனை எடுத்தான்.
“பூ தான் இளா” என்றவன் அழைப்பை ஏற்றான்.
“இந்த புடவை கட்டவே வரமாட்டேங்குதுக்கா. நீ என் ரூமுக்கு வா” என்றவள் எதிர்முனையில் யார் எடுத்தது என்றுகூட அறியாது வைத்துவிட்டாள்.
“என்னவாம் பாரி?”
பூ எதற்காக தன்னை அழைத்தாளென்று தெரிந்துகொள்ள இளா வினவினாள்.
“எல்லாரும் கிளம்பியாச்சா கேட்டாள்” என்ற பாரி மற்றவரின் கவனத்தை ஈர்க்காது மாடியேறிச் சென்றான்.
முதுகுக்காட்டி புடவையுடன் மல்லுகிட்டிக்கொண்டிருந்த பூ கதவு திறக்கும் சத்தத்தில் இளா வந்துவிட்டதாக நினைத்து…
“பாருக்கா இந்த பல்லு மடிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் ஃபிலிட்ஸ் இன்னும் சுத்தம்… இந்த பட்டு புடவையெல்லாம் யார் கண்டுபிடிச்சா” என்று புலம்பியபடி திரும்பியவள் மார்பிற்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு தன்னை பார்த்திருந்த கணவனின் வருகையில் தானிருக்கும் நிலை அறிந்து சிவந்தவளாக… கீழே விழுந்து கிடக்கும் புடவையை மொத்தமாக வாரி சுருட்டி நெஞ்சோடு சேர்த்து பிடித்தாள்.
“அக்கா… அக்கா வரலையா?” அவனுக்கு பின்னால் பார்த்தபடி அவளின் நா தந்தியடித்தது. கதவு சாற்றி தாழிடப்பட்டிருந்தது.
‘கேடி…’ மனதிற்குள் செல்லமாக அவனை திட்டிக்கொண்டாள்.
“போன் பண்ணா யார் பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசணும்” என்றவனின் பார்வை மனைவி நின்றிருந்த கோலம் கண்டு மொத்தமாக மாறிப்போயிருந்தது.
மெல்ல அடியெடுத்து வைத்தான் அவளை நோக்கி.
பாரியின் ஒவ்வொரு அடிக்கும் அவள் பின்னால் சென்றாள்.
“வேந்தா… வேண்டாம்.” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“எனக்கு வேணும்.”
“கோவிலுக்கு போகணும்.”
“சோ, வாட்?”
ட்ரெஸ்ஸிங் டேபிள் இடித்து நின்றாள்.
பூவை நெருக்கியவன் அவளின் கைகளில் சுருண்டிருந்த புடவையை உருவினான்.
“ப்ளீஸ் வேந்தா…” வெட்கம் பிடுங்கியது. முகத்தை எங்கு மறைப்பதென்று தெரியாது அவன்முன் தவித்து நின்றாள்.
“புதுசா பார்க்க எதாவது இருக்கா மலரே?”
அவன் பட்டென்று அப்படி கேட்பானென்று நினைக்காதவள் பொங்கும் உணர்வு குவியலை அவனுக்கு காட்டிட மறுத்து முகத்தை இரு கைகொண்டு மூடினாள்.
சில நிமிடங்கள் கடந்தும் அவனிடமிருந்து எவ்வித தொடுகையும் இல்லாதுபோக மெல்ல கை விலக்கி பார்க்க… அவனோ கர்ம சிரத்தையாக புடவையின் முந்தி மடிப்பை எடுத்துக்கொண்டிருந்தான்.
“உனக்கு புடவை கட்டத் தெரியுமா?” அவளின் குரலில் அப்பட்டமான ஏமாற்றம்.
“பொண்டாட்டிக்கு தெரியலன்னா புருஷன் தெரிஞ்சு வைச்சிருக்கணுமே!” என்றவன் பல்லுவை அவளின் தோளில் வைத்து பின் குத்தினான்.
“ஹ்ம்ம்…”
“உன் குரலில் எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி தெரியுதே?”
“இல்லையே” என்றவளின் அகன்ற விழிகள் அவனின் முகத்தை மிக அருகில் வஞ்சனையின்றி ரசித்தது.
“சைட் அடிச்சது போதும்டி பொண்டாட்டி” என்றவன் பிலீட்ஸை அவளது வயிற்று பகுதியில் சொருகியவனாக தன்னிடம் அவளை இழுத்து நெற்றியில் இதழ் பதித்து தள்ளி நின்றான்.
“வேந்தா…” அவனின் தொடுகையில் கூசி சிலிர்த்தவள்… கண்களின் இமைகள் மூடிட உணர்வு பிரவாகத்தில் தத்தளித்தாள்.
அவளை உச்சி முதல் பாதம் வரை வருடியவன்… அங்கிருந்த பொட்டை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து,
“பெர்ஃபெக்ட்” என்று சொல்லி, “போகலாம்” என நகர இமை திறந்து அவனை செல்ல விடாது கை பிடித்து இழுத்தவள் அவனது வதனத்தை தன்னிதழ் கொண்டு மூடினாள். அவனாக கொடுப்பதைவிட அவள் கொடுப்பது அதிக இன்பத்தை கொடுத்தது. அவளாக விடும்வரை தன்னை ஒப்புகொடுத்து இசைந்து நின்றான்.
கீழிருந்து தங்கம் குரல் கொடுத்த பின்னரே அவனை விடுவித்தாள்.
“என்னவாம் பூவுக்கு” என்றவன் அவளின் முகத்தை விரல் கொண்டு வருடினான்.
“இந்த காக்கிச்சட்டை சொக்க வைக்கிறான்” என்று வெளிப்படையாக பதில் கூறினாள்.
“ஆஹான்…” என்றவன், “இப்போ கீழே போலாமா இல்லைன்னா தாய் கிழவி மேல வந்தாலும் வந்திடும்” என்றான்.
“ம்.” தலையசைத்தவள் அவனுடன் இணைந்து கீழே செல்ல அவர்களின் பொருத்தத்தில் குடும்பத்தினர் அத்தனை பேரின் கண்களும் நிறைந்தன.
“சேலை கட்டதெரியாதுன்னு நேத்து ராத்திரி என்கிட்ட கதையளந்திட்டு இப்போ இம்புட்டு லட்சணமா கட்டியிருக்க” என்று தங்கம் கேட்க… பூ பாரியை பார்த்தாள். அவனோ தனக்கும் இந்த கேள்விக்கும் சம்மந்தமில்லையென பரிதியை நோக்கிச் சென்றான்.
“அது வந்து அப்பத்தா யூட்யூப் பார்த்து கட்டினேன்” என்றவள் அவர் அடுத்து எதாவது கேட்டக்கூடுமென வேகமாக வெளியேறினாள்.
குடும்பம் அனைவரும் ஒன்றாக செல்ல வேன் எடுத்திருந்தார் அரசு.
எல்லோரும் தன் இணையுடன் அமர தங்கம் முன்னிருக்கையில் சின்னுவை வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் வண்டியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு சின்னு குதித்துக்கொண்டு வர அனைவரும் பல கதைகள் பேசி ஒன்றாக இருக்கும் தருணத்தை மகிழ்வாக அனுபவித்தபடி பயணத்தை மேற்கொண்டனர்.
இருக்கையில் அமர்ந்ததும் பாரியின் கை விரல்களோடு தன்னுடைய விரல்களை நுழைத்துக் கோர்த்துக்கொண்ட பூ கோவில் வந்தும் விடவில்லை.
“என்னடா?”
“லவ் யூ வேந்தா” என்றவள் அனைவரும் இறங்கி விட்டதை உறுதி செய்துகொண்டு அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து அவன் கண்களை சந்தித்தாள்.
“காலையிலிருந்து ஒரு மார்க்கமாவே இருக்க மலரே” என்றான், அவள் தந்த முத்தத்தை ரசித்தவனாக.
“புருஷன் இவ்வளவு ஹேண்ட்ஸம்மா இருந்தா நானென்ன பண்றதாம்” என்றவள் அவனின் மீசையை முறுக்கிவிட்டு “வேஷ்டி சட்டையில் செமயா இருக்கடா வேந்தா” என்றாள்.
“இது கோவில் மலரே…” அவளின் கிறக்கம் அவனிடமும்.
நொடியில் இருக்கும் இடம் கருதி தன்னை மீட்ட பூ…
“அத்தை கூப்பிடுறாங்க வேந்தா” என அவனையும் நிகழ் மீட்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றாள்.
அந்த அம்மன் கோவில் ஒரு குன்றின் மீது இருந்தது. இரு பக்கம் மரங்கள் செடிகள் கொடிகளென்று அடர்ந்திருக்க, நடுவில் கோவிலுக்கு செல்லும் படிகளில் எல்லோரும் ஏறிக்கொண்டிருந்தனர்.
“எத்தனை ஸ்டெப்ஸ் இருக்கும் பூ?”
“செவண்டி த்ரீ…”
“ஹ்ம்ம்… சரி வா ஏறலாம்” என்றவன் அந்த இடத்தை சுற்றி பார்த்துவிட்டு “பியூட்டிபுள் சீனரி” என்று படி ஏறினான்.
“மாமாலாம் பர்ஸ்ட் டைம் இந்த கோவிலுக்கு வந்தப்போ அக்காவை தூக்கிட்டு ஏறினார்” என்று எங்கோ பார்த்தபடி பூ சொல்ல…
“உனக்கு தூக்கிட்டு போகணுன்னா அதை நேரா சொல்லேண்டி” என்று பூவின் அருகில் சென்றவன், அவள் எதிர்பாராத நேரம் தூக்கிக்கொண்டு ஏறத் துவங்கினான்.
பூவின் முகம் பாரியின் மார்பில் பதிந்து விழிகள் அவனின் முகத்தில் நிலைத்திருந்தது. அவளது கைகள் அவனது கழுத்தைச் சுற்றி மாலையாக கோர்த்திருந்தது.
கையில் கனம் இருப்பதால் அவன் நெற்றியில் வழிந்த வியர்வை துளிகள் அவளின் கன்னத்தில் பட்டு தெறித்தது.
பாதி தூரம் கடந்தவனுக்கு மனைவியை கையில் ஏந்தியிருப்பது அப்படியொன்றும் சிரமத்தை கொடுக்கவில்லை. அக்கணத்தை ரசித்தான். மனதில் பொக்கிஷமாக பதிய வைத்தான்.
திரும்பி அவர்களை பார்த்தவர்கள் பார்க்கததைப்போல் காட்டிக்கொண்டனர்.
“இறக்கி விடு வேந்தா. நானே வரேன்.” அவனுக்கு உடல் நோகுமோ என்ற எண்ணத்தில் கூறினாள்.
“மேடம் அப்படியொன்னும் வெயிட் இல்லை” என்றவன் கோவிலின் சமதள பரப்பிற்கு வந்த பின்னரே இறக்கிவிட்டான்.
“சூப்பர் பாரி” என்ற இளா, “பரிதியை தூக்கிட்டு ஏற சொன்னதுக்கு, என்னை போட்டுத்தள்ள பிளானா கேட்டு வைத்தான்” என சொல்லிச்செல்ல பாரி பூவை பார்த்தான்.
“அப்படி சொன்னதாலதான என்னை தூக்கிட்டு வந்தாய்!”
“பரிதிண்ணா இளாவை தூக்கிட்டு ஏறியிருப்பதா சொன்னதாலதான் நான் உன்னை தூக்கிட்டு வந்தேன்னு உனக்குத் தோணுதா மலரே!” அவனின் குரலும் பார்வையும் வேறு செய்தி சொல்ல விட்டால் போதுமென்று அவனிடமிருந்து ஓடிவிட்டாள்.
கோவிலில் அவர்கள் குடும்பம் மட்டும் தான் இருந்தனர். கோவிலுக்கு பக்கத்திலேயே அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அவ்விடமே சில்லென்று வீசும் காற்றுடன் இதமாக இருந்தது.
“மெல்ல வாயெட்டி” என்ற தங்கம்… “நீதேன் பொங்கல் வைக்கணும். அரிசியை உன் புருஷனை கூப்பிட்டு போடு” என்ற தங்கம் கோவில் மண்டபத்தில் சென்று அமர்ந்திருந்தார்.
ஆண்கள் அனைவரும் ஒரு பக்கமாக சென்று அவ்விடத்தை பார்த்தபடி பேச ஆரம்பித்துவிட்டனர்.
பூ பொங்கல் வைப்பதற்கான அனைத்தையும் ஏதுவாக எடுத்து வைத்த பார்வதியும் மணியும் சற்று தள்ளி இளாவுடன் அமர்ந்தனர்.
அரசுவும் தில்லையும் தொழில் பற்றி பேச ஆரம்பித்துவிட… பாரியும் பரிதியும் சின்னுவுடன் அருவிக்கு அருகில் சென்றனர்.
புது பானை வைத்து பூ நெருப்பை மூட்டிட… சில நிமிடங்களில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.
“அப்பத்தா தண்ணீ கொதிக்குது.”
“அதுக்கெதுக்கட்டி இந்த கத்து கத்துற… தண்ணீ கொதிச்சா உம் புருஷனை கூப்பிட்டு அரிசியை போடுன்னு சொல்லிட்டுதேனே வந்தேன்” என்ற தங்கம் அவளருகில் சென்று பாரி எங்கு எனத் தேடினார்.
“அதோ அங்கன இருக்காரு… கூப்பிடு” என்று அருவி பக்கம் கை காட்டினார்.
“வேந்…” என ஆரம்பித்தவள் தங்கத்தின் முறைப்பில் வாய் மூடிக்கொண்டாள்.
நேரம் தான் கடந்தது. அவள் அழைப்பதாக தெரியவில்லை.
“கூப்பிடட்டி.” பூவின் தோளில் இடித்தார்.
“வரல அப்பத்தா. பெயர் சொல்லியே கூப்பிடுறனே!” என்றாள் பாவமாக.
“அந்த கதையெல்லாம் வேணாம். உம் அப்பனும் அங்கனதேன் இருக்கான். கூப்பிடவா” என்று மிரட்டினார்.
பூ தயங்கி நிற்க…
பார்வதி கூட அவளுக்கு துணையாக பேசினார். தங்கம் தன் நிலையில் உறுதியாக நின்றார்.
“எதுக்குமே ஒரு ஆரம்பம் வேணுமே” என்று அனைவரையும் ஓரங்கட்டினார்.
“சரி அப்பத்தா கூப்பிடுறேன்” என்றவள் சத்தமில்லாது அன்று பாரி அழைத்ததைப்போல் கூப்பிட முற்பட… அவளின் வாயை பொத்திய தங்கம்…
“மனசால நீ நினைச்சாலே உம் புருஷன் பக்கத்துல வருவான்னு எங்களுக்குத் தெரியும். இங்க அந்த கதையே வேணாமாட்டிக்கு. வா தொறந்து கூப்பிடு” என்று அதட்டினார்.
இந்த கிழவி விடாதென ஒரு முடிவோடு கண்களை மூடியவள், இரு கை விரல்களையும் இறுக மூடியவள் “மாமா” என்று விளித்தாள்.
அருகிலிருந்த தில்லை “என்னடா தமிழ் கூப்பிட்டியா?” என்று அரசுவுடன் அருகில் வந்தார்.
இளா பக்கென்று சிரித்துவிட்டாள்.
“உன் முயற்சி வீணா போச்சுதே தமிழு.” இளாவிற்கு அப்படியொரு சிரிப்பு.
“ஏய்… நீயி செத்த சும்மா இருக்கமாட்ட…” என்று இளாவை அடக்கிய தங்கம், “நீயி சத்தமா உரக்கக் கூப்பிடட்டி” என்றார் தங்கம்.
“ப்ளீஸ் அப்பத்தா இதுக்கு மேல முடியாது” என்று பூ மறுத்தாள்.
“அப்புறம் எப்புடி வேண்டுதல் நிறுவேத்துறது” என்ற தங்கத்திடம், “சாமி புருஷனை இப்படித்தேன் கூப்பிடணும் சொல்லுச்சா” என்று துடுக்காக வினவினாள் பூ.
“தமிழு…” அதட்டிய அரசு, “நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்துதேன் பொங்கல் வைக்கணும்” என்றதோடு, “அவரை கூப்பிட்டு அரிசியை போடு. ஆனா ஒண்ணு பேரு சொல்லக்கூடாது இனி நீயி. மரியாதை கொடுக்க கத்துக்கோ தமிழு” என்றார்.
தங்கத்திடம் சத்தமிட்டதுபோல் அரசுவிடம் முடியவில்லை.
“சரிப்பா” என்றவள் “மாமா” என்று இம்முறை சத்தமாகவே அழைத்தாள். ஆனால் திரும்பி பார்த்து என்னவென்று கேட்டதோ பரிதி. பூ நொந்தே போனாள்.
“உங்களையில்லை” என்று இளா பதில் கொடுக்க, “பாரி தமிழ் உன்னை கூப்பிடுறா(ள்)” என்றான்.
“அவள் கூப்பிட்டதை கவனிக்கலையா பரிதிண்ணா. மாமா சொன்னாள். என்னையில்லை. நீங்களாத்தான் இருக்கும்” என்ற பாரி சின்னுவுடன் தண்ணியில் விளையாடிக்கொண்டே இருந்தான்.
“முன்ன பின்ன மரியாதை கொடுத்து விளிச்சிருந்தா தானே” என்று தங்கம் நொடிக்க…
“ம்ஹூம், இது வேலைக்கு ஆவுறதில்லை” என்ற பூ,
“என்னங்க… இங்க கொஞ்சம் வாங்களேன்” என்று அழுத்தமாக சத்தமிட்டு அழைக்க திரும்பி பார்த்த பாரி “என்னையவா பூ?” என்று கேட்டான்.
“ஆமாங்க… உங்களைத்தான். கொஞ்சம் இங்க வாங்களேன்” என்றாள். அருவி கொட்டும் சத்தத்தை மிஞ்சியது பூவின் ஒலி.
அவளின் புதிதான அழைப்பை நம்ப முடியாது என்பதைவிட ஏற்க முடியாது விழி விரித்து நின்றவனின் தோளை தொட்டு சுயம் மீட்ட பரிதி…
“தாய் கெழவி தான் ஏதோ பண்ணுது நினைக்கிறேன். இளாவை கூட என்னை பெயர் சொல்லக்கூடாது, மாமா சொல்லணுன்னு ஆரம்பத்தில அத்தனை அட்டகாசம். இளாவிடம் பண்ணதை இப்போ தமிழிடம் பண்ணுது போல” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.
“ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிட்டேன் பரிதிண்ணா” என்ற பாரி, “அப்போ மாமா சொன்னதும் என்னைத்தானா உங்களை இல்லையா” என்று அதிர்ந்தபடி கேட்டான்.
பரிதியின் தலை மேலும் கீழும் ஆடியது.
“தமிழ் முகம் கோபத்தில் இருக்குற மாதிரி தெரியுது. சீக்கிரம் போடா” என்று பரிதி பாரியை அனுப்பி வைத்தான்.
“என்ன பூ, எதுக்கு கூப்பிட்ட” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தான் பாரி.
“பொங்கல் பானையில அரிசி போடணும் போடுங்க” என்றவள் அவனது கையில் அரிசியை கொடுத்தாள்.
“ரெண்டு பேரும் சேர்ந்தே போடுங்க” என்று பார்வதி சொல்ல…
“வாங்க” என்றாள் தமிழ்.
“ஒன் செக் பூ” என்றவன், அவள் என்னவென்று பார்க்க… “என்ன சொல்லிக் கூப்பிட்ட?” என வினவினான்.
….
பூவுக்கு அவனருகில் சுத்தமாக அந்த வார்த்தை வரவில்லை.
“நான் அங்கிருக்கும்போது என்னை என்ன சொல்லி கூப்பிட்ட?” இப்போது அழுத்தமாக வினவினான்.
“அது வந்து…” பூ தங்கத்தை பார்த்தாள்.
“அதெல்லாம் வழக்கத்தில் இருக்கிறதுதேன் பாரி. பொண்டாட்டி புருஷனை அப்படி கூப்பிடுறதுதேன் முறை” என்றார் தங்கம்.
“நீ சும்மா இரு தாய் கெழவி. என் பூ என்னை வேந்தான்னு கூப்பிடறது தான் எனக்கு பிடிக்கும். அப்போ தான் ஒரு நெருக்கம் தெரியும். இப்போ சொன்னது என்னவோ மாதிரியிருக்கு. ரெண்டடி தள்ளி நிக்குற மாதிரி. என் பூவா மட்டும் அவளிருந்தால் போதும். இனியொருமுறை மரியாதை கொடு, மாமா சொல்லுன்னு அவளை அதட்டி உருட்டுன… உன்னை இந்த மலையிலிருந்து உருட்டி விட்டுடுவேன். என் பொண்டாட்டி எனக்கு மரியாதை கொடுக்கிறதைவிட, நிறைய அன்பை கொடுக்கணும் நினைக்கிறேன். அது நிறையவே எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கு. மத்தவங்களுக்காக இயல்பை தொலைச்சிட்டு இருக்க முடியாது. என் பொண்டாட்டி சொல்லி கூப்பிடாததுக்கு எதுக்கு அந்த பெயர். அவளுக்கு என்ன விருப்பமோ அதைத்தான் அவள் சொல்லுவாள். என்னை என் பொண்டாட்டி திட்டக்கூட செய்வாள் உனக்கென்ன தாய்கிழவி” என்றவன் “உனக்கு பொறாமை, பொன்னுவை உன்னால பெயர் சொல்லி அழைக்க முடியாத கோபத்தை இங்க காட்டுற” என்றான்.
அவனின் இறுதி பேச்சில் “ஆத்தே” என்று நெஞ்சில் கை வைத்தார் தங்கம்.
“எல்லோருக்கும் இதான்” என்றான்.
பாரி பேசியதில் தங்கத்திற்கோ மற்றவர்களுக்கோ துளி வருத்தமில்லை. மாறாக சந்தோஷம் தான். மனைவியை அவளது இயல்பு போலவே ஏற்றுக்கொள்ளும் கணவன் கிடைப்பது எளிதல்லவே!
“நல்லாவே உம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிகிட்டத்தா” என்ற தங்கத்தின் முகத்தில் சந்தோஷமே விரவியிருந்தது. தங்கத்தின் வார்த்தையில் அனைவரிடமும் விரிந்த புன்னகை.
“வாடா” என்று பூவின் கையை பிடித்து பானைக்கு அருகில் சென்றவன், அவளின் கைக்கு அடியில் தன் கை வைத்து பச்சரிசியை அள்ளி கொதிக்கும் நீரில் பாசிப்பருப்புடன் சேர்த்து போட்டான்.
பூவின் மலர்ந்த விழி… சிந்தாமல் சிதறாமல் அவனின் முக வடிவை தனக்குள் விழுங்கியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
27
+1
1
+1