அத்தியாயம் 4 :
பாரி குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்ததன் காரணமே தன் கட்டுப்பாட்டில் வரப்போகும் இடத்தின் தற்போதைய நிலவரத்தை அறிவதற்கே.
பணியில் சேர்வதற்கு முன் அதனை தன் விரல் நுனியில் கொண்டு வந்திருந்தான்.
பாரி இங்கு வரவழைக்கப்பட்டதற்கான காரணம் வேறொரு வழக்காக இருந்தாலும்… அவனின் பணியிடத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அவன் தானே பொறுப்பு ஆதலால் இந்த முன் நடவடிக்கை.
நகரத்தின் குற்றங்கள், முக்கிய மற்றும் பெரிய குற்றவாளிகள் எங்கு எப்போது என்ன எதனால் நடக்குமென்று நன்கு அறிந்துகொண்ட அடுத்த நொடி தன்னுடைய உயர் அதிகாரியை சந்தித்து பணியிட மாற்றத்திற்கான காகிதத்தை அளித்து, அவரளித்த குறிப்பேட்டில் கையெழுத்திட்டு நகரத்தின் துணை ஆணையராக பதவி ஏற்றிருந்தான்.
காக்கி உடையின்றி காவல் நிலையத்தில் அடி வைத்தான். அவனது கண்கள் இன்ச் பை இன்ஞ்சாக அவ்வளாகத்தையே படம் பிடித்து மூளைக்குள் பதித்தது.
பாரியை பார்த்ததும் வாயிலில் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்ற போலீஸ் என்னவென்று விசாரித்தார்.
பாரி அமைதியாக இருக்க… அவன் சொல்லட்டுமென்ற பொறுமை கூட இல்லாதவர்,
“போ… அங்க போட்டிருக்க பென்ஞ்சில் உட்காரு. இன்ஸ்பெக்டர் வர நேரம் தான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சாலையை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டார். கையில் புகைச்சுருள் வேறு.
நேற்று பார்த்த பெண் இன்றும் அந்த பென்ஞ்சில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தார்.
அப்பெண்ணிற்கு எதிர் புறம் சென்று அமர்ந்தவன், ஆராயும் பார்வை மட்டும் நிற்கவில்லை.
“நீ யாரையாவது வக்கீல் கூட்டி வந்து பாரும்மா. இங்க அழுதுகிட்டு இருக்கிறதால பிரயோஜனமில்லை” என்று அப்பெண்ணிடம் தன்மையாக பேசிய ஏட்டு கணபதி, பாரியிடம் திரும்பி, “என்ன கேஸ் சார்?” என்று கேட்டார்.
“எஸ்.ஐ மீட் பண்ணனும்.”
“என்ன விசயம் சார்?”
“தெரிஞ்சவங்க.”
“ஹ்ம்ம்… நீங்களும் போலீஸா சார்?” அத்துறையில் அனுபவசாலியான அவர் அவனின் தோற்றம் கண்டு வினவினார்.
அவனிடம் அர்த்தமான பார்வை.
அதிலேயே அவனுக்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தவர், “அவங்க கோர்ட்டுக்கு போயிருக்காங்க. வெயிட் பன்றதுனா பண்ணுங்க” என்று சொல்லிச்சென்றார்.
பாரி வந்த போதே நேரம் ஒன்பது… இப்போது பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. அதுவரையிலுமே புதிதாக ஒருவன் உட்கார்ந்திருக்கிறானென்று வந்து என்ன ஏதென்று கணபதியைத் தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை.
“சார் இன்ஸ்பெக்டர் எப்போதான் வருவாங்க?”
அழுது கொண்டிருந்த பெண் இதோடு பத்தாவது முறையாகக் கேட்டுவிட்டாள். சரியான பதில் தான் கிட்டவில்லை.
பதில் சொல்ல முன் வந்த கணபதியையும்…
“இவரு ஒருத்தரு கடமைன்னு” என்று முணுமுணுத்து அவரை கேலி செய்து இரு காவலர்கள் சிரித்தனர்.
பதினோரு மணிக்கு மேல் வந்து சேர்ந்த ஆய்வாளர்…
“புது டிசி எப்போதான் வராரு ஏட்டு? நீர்தான் சின்சியர் சிகாமணியாச்சே. இந்நேரம் அவரைப்பற்றி தெரிஞ்சு வச்சிருப்பீரே?” எனக் கேட்க,
கணபதியோ “அவர் பெயர் பாரி வேந்தன். அதைத்தவிர எதுவும் தெரியாது சார்” எனக்கூறி தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தார்.
“இருக்க கேஸ் எல்லாம் என் உயிரை வாங்குது” என்று சொல்லிக்கொண்டே சட்டையை கழட்டிவிட்டு தன்னிருக்கையில் சென்று அமர்ந்தார் ஆய்வாளர்.
“இவரு இப்போ என்ன கேஸ் பார்த்து கிழிச்சிட்டாரு.” பெண் காவலர் இருவர் கணபதியிடம் கிசுகிசுத்தது பாரியின் நுண்ணிய செவியை சரியாகச் சென்று சேர்ந்தது.
ஒவ்வொருவரும் எப்படியென்று அவதானித்தபடி தான் இருந்தான் பாரி. வாயில் வழக்கமான கேண்டி. நாவில் சுவையை கூட்டிக்கொண்டு இருந்தது.
“யோவ் ஏட்டு.”
அவரின் குரல் கேட்டதும், கடையில் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்தார் கணபதி.
சாப்பிடுவது ஒன்று தான் தற்போது தனக்கிருக்கும் பிரச்சினை என்று உணவில் மூழ்கிப்போனவர், உண்ட களைப்புத் தீர்வதற்காக இருக்கையில் உட்கார்ந்த நிலையிலேயே உறங்க ஆரம்பித்தார்.
எவ்வளவு நேரம் தான் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது எழுந்து போர்டிக்கோவில் மெல்ல நடக்க ஆரம்பித்தான் பாரி.
அச்சமயம் வேகமாக காவல் நிலையத்திற்குள் பள்ளி சீருடையில் ஓடி வந்த மாணவன், பாரியின் அருகில் மூச்சிரைத்து நின்றான்.
“சார் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ரவுடிங்க புகுந்து கலாட்டா பன்றாங்க சார்” என்று நடுக்கத்துடன் கூறினான்.
“யாருடா நீ. போலீஸ் நாங்க இங்கிருக்கோம். அங்க எவன்கிட்டடா சொல்லிட்டு இருக்க” என்று பனியனோடு வெளியில் வந்த ஆய்வாளரை மேலும் கீழும் பார்த்தான் சிறுவன்.
“கேட்கிறேன் இல்ல சொல்லுடா.” விட்டால் அடித்து விடுவார் போல். சிறுவன் மிரண்டு பாரியின் பின்னால் ஒளிந்தான்.
“இவரை பார்த்தாதான் போலீஸ் மாதிரி தெரியுது.” ஆய்வாளரிடம் பயத்துடனே கூறினான்.
அதில் ஆய்வாளருக்கு பாரியின் மீது கோபம் எழுந்தது.
“எத்தனை பேர்? எப்போ வந்தாங்க?”
பாரி சிறுவனிடம் வினவினான்.
“ஹேய்… இந்த விசாரணையெல்லாம் செய்ய நீ யாருடா?” என்று கொதித்த ஆய்வாளரை பாரி கண்டுகொள்ளவேயில்லை.
சிறுவன் சொல்லிய தகவல்களை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருக்கும் சார். ஆறேழு பேர். என் கிளாஸ் மேம்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணாங்க. கேட்க வந்த சாரையும் அடிச்சிட்டாங்க. இன்னொரு சார் தான் என்னை அவனுங்களுக்குத் தெரியாமா அனுப்பி போலீஸ் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று நீண்டு விளக்கமாகக் கூறினான்.
“மிஸ்டர்.கணபதி.”
பாரியின் கம்பீரமான அழைப்பில் கணபதி ஓடிவந்தார்.
என்னவென்பதைப்போல் அவர் பாரியை குழப்பமாக ஏறிட…
“ஹேய் யாருடா நீ?” என்று ஆய்வாளர் கேட்டதையே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரை ஒரு ஆளாகவே பாரி கருத்தில் கொள்ளவில்லை.
“ஸ்கூல் எங்கயிருக்கு?”
கணபதியிடம் வினவ, அவரோ ஆய்வாளரை பார்த்தார்.
“கேள்வி கேட்டது நான்.” பாரியிடம் அப்படியொரு அழுத்தம்.
“சார் நீங்க…?” என்று பாரியிடம் வினவிய கணபதி… தன்னை முறைக்கும் ஆய்வாளரிடம், “ஜென்சி மேடமுக்கு தெரிஞ்சவர்ன்னு சொன்னார் சார்” என்றார்.
சரியாக அந்நேரம் கோர்டிற்கு அழைத்துச் சென்றிருந்த ஒரு கைதியுடன் வந்தியிறங்கிய ஜென்சி…
“மிஸ்டர். பாரி வேந்தன். டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ். அவர் (our) சென்னை சிட்டி” என்று பாரியை கண்டதும்… கணபதியின் கேள்வியை கேட்டதும் அழுத்தமாகச் சொல்லி விறைப்பாக பாரிக்கு முன்வந்து சல்யூட் வைத்தாள்.
ஜென்சியைத் தொடர்ந்து அனைவரும்… அதிர்ந்தாலும், அதிர்வை அப்பட்டமாக முகத்தில் காட்டியவாறு பாரிக்கு அடுத்தடுத்து சல்யூட் வைத்தனர்.
ஆய்வாளரோ பேய் அறைந்த நிலையில் சிலையாகி நின்றார்.
“நான் வரும்போது இவருக்கான மெமோ ரெடியா இருக்கணும்” என்று ஆய்வாளரை சுட்டிக்காட்டி ஜென்சியிடம் கூறிய பாரி, கணபதி மற்றும் பெண் காவலர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அந்த மாணவனோடு பள்ளிக்குச் சென்றான்.
இரண்டு கட்டிடங்களுக்கு அடுத்து பள்ளி வளாகம் இருந்தது.
பாரி உள்ளே நுழைந்த போது ஒருவன் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தான். அப்பெண் அவனின் பிடியிலிருந்து போராட பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.
அப்பெண்ணை பார்த்து அச்சிறுவன்…
“இவங்க எங்க இங்கிலீஷ் மிஸ் சார்” என்றான்.
“இவன் கவுன்சிலர் தானே!” வலது பக்க புருவத்தை சுட்டு விரல் கொண்டு கீறிக்கொண்டவன், கணபதியிடம் கேட்க அவர் ஆமென்று கூறினார்.
“அரசியல் பலம் கொடுக்கும் திமிரு இதெல்லாம்” என்ற பாரி ஆசிரியையின் கையை பிடித்திருந்த அவனின் கையை பிடித்தான்.
பாரியை யாரென்று முறைத்தவன், அவனுக்கு பின்னால் நின்ற கணபதியையும், கான்ஸ்டபிள் ராதாவையும் பார்த்து… “ஓ போலீஸா” என்றான். அவனிடம் அலட்சியம்.
பாரி கையின் பிடியில் கொடுத்த அழுத்தத்திற்கே அவன் கை தானாக ஆசிரியையின் கையை விடுவித்தது.
அவனின் இரு கைகளையும் தன்னுடைய ஒற்றை பிடியில் அடக்கிய பாரி அவனின் கன்னத்தில் திரும்ப திரும்ப விடாது அறைந்தான்.
“ஏண்டா நா*… அரசியல்வாதின்னா ரவுடித்தனம் செய்யனும்
சொல்லுதா?” என்று கேட்ட பாரி அடியை மட்டும் நிறுத்தவேயில்லை.
“வேண்டாம் என் பவர் தெரியாமல் மோதுற!”
“அங்கிள் இவனை நான் மோதுறனா, அடிக்கிறனா? அவனுக்கு கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்க” என கணபதியிடம் அவனைத்தள்ளிய பாரி… “நம்ம இடத்துக்கு கூப்ட்டுப்போங்க” என்றான்.
அவனுடன் வந்திருந்த தடியர்கள் எல்லாம் பாரி அவன்மீது கை வைத்ததும் அடங்கியிருக்க அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார் கணபதி.
பெண் காவலர் ராதாவிடம் பாரி கண் காட்டிட… ராதா ஆசிரியை விசாரித்தார்.
திருமணம் செய்துகொள்ள சொல்லி கவுன்சிலர் தொடர்ந்து தொல்லை செய்ததோடு ஆசிரியையின் மறுப்பை ஏற்காது இன்று தூக்கிச்சென்று திருமணம் செய்துகொள்ள முயன்றதாக அவர் சொல்ல… முறையாக ஸ்டேஷன் வந்து எழுத்து வடிவில் புகார் கொடுத்துவிட்டு செல்லுமாறு சொல்லிய பாரி அங்கிருந்து புறப்பட்டான்.
காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாரி… வாயிலில் நின்றிருக்கும் காவலர், இப்போது தன்னை பார்த்ததும் விறைப்பாக வணக்கம் வைத்திட அவரை மேலும் கீழுமாக பார்த்தவாறு உள் சென்றான்.
அங்கு அந்த கவுன்சிலர் ஒருபக்கம் கத்திக்கொண்டிருந்தான்.
தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று இருக்கையில் அமர்ந்த பாரி…
“மிஸ்.ஜென்சி” என்று அழைத்து,
“Everyone should be in front of me in a few seconds” என்றான்.
அடுத்த சில நொடிகளில் பாரிக்கு கீழ் வேலை செய்யும் அனைவரும் அவன் முன் நின்றிருந்தனர்.
இருக்கையிலிருந்து மேசைக்கு முன் வந்து கால் மேல் காலிட்டவாறு மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவன் ஒவ்வொருவரையும் சில கணங்கள் ஆழ்ந்து நோக்கினான்.
“காக்கிச்சட்டை நாம போட்டது மக்களுக்கு பாதுகாப்பா, உதவியா இருப்பதற்கு. குற்றத்தை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிப்பது மட்டும் நம்ம வேலையில்ல. குற்றமே நடக்காம தடுப்பது தான் முக்கியம். அப்படி செய்பவன் தான் உண்மையான காவலாளி.
இது உங்களுடைய வீடோ அல்லது பூங்காவோ இல்லை. ஹாயா உங்களுடைய தனிப்பட்ட வேலைகளை செய்வதற்கும், பொழுதுபோக்காக பேசி சிரித்து கொள்வதற்கும்.
போலீஸ்காரன் தவறை திருத்துபவனாக இருக்க வேண்டும். தவறு செய்பவனாக இருக்கக்கூடாது.
ஆனா இங்க பலருக்கு அது தெரியவில்லை போலிருக்கே!” என்றவன் ஜென்சியை ஒரு பார்வை பார்க்க அவள் சில காகிதங்களை பாரியிடம் நீட்டினாள்.
அதனை வாங்காமல் “நீங்களே கொடுத்திடுங்க” என்றவன் கேண்டியை பிரித்து வாயில் போட்டுக்கொண்டான்.
வாயில் காவலருக்கும், கணபதியை கேலி செய்து சிரித்த இரு காவலர்களுக்கும் மெமோ அளித்தவன், ஆய்வாளருக்கு மெமோவுடன் சேர்த்து இரண்டு வார கால பணியிடை நீக்கமும் அளித்தான். அதற்கான அதிகாரமும் பாரிக்கு இருந்தது. தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் குற்றங்களை சரிசெய்வதும் அவனது பணி தானே. அதைத்தான் பாரியும் செய்தான்.
ஆய்வாளரை தவிர்த்து மற்ற மூவரும் தங்களுடைய தவறுக்காக மன்னிப்பு கேட்டு பாரி அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ள ஆய்வாளர் மட்டும் வாதம் செய்தார்.
“ஹீரோயிசம் காட்ட இதெல்லாம் பண்றீங்களா? நான் கமிஷனர் கிட்ட போவேன்.”
ஆய்வாளர் தான் செய்ததெல்லாம் சரியெனும் விதத்தில் பேசினார்.
“போங்களேன்” என்ற பாரி அடுத்து அவரை பார்க்கவேயில்லை மற்ற காவலர்களிடம் திரும்பிவிட்டான்.
“நான் இப்படித்தான்னு ஒரு வரையறைக்குள் இருக்க மாட்டேன். என்னை கணிக்க முயற்சி செய்ய வேண்டாம். எனக்கு தப்புன்னு பட்டால் கட்டாயம் என்கிட்ட எதிர்வினை இருக்கும். என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையங்களும் அதில் பணிபுரிபவர்களும் அணிந்திருக்கும் காக்கி உடைக்கு உண்மையாவும், நேர்மையாவும் இருக்கணும் என்பதில் நான் கவனமாக இருப்பேன். இனி இந்த மாதிரி இங்க நடக்கக்கூடாது” என்று அழுத்தமாகக் கூறியவன் ராதாவிடம் திரும்பி, “ரெண்டு நாளா ஒரு பெண் வெளியில் நிக்குறாங்களே அவங்க கணவரை அனுப்பி விடுங்க” என்றான்.
ராதா, இன்னும் பாரியை முறைத்தபடி நிற்கும் ஆய்வாளரை பார்த்தார்.
“பெர்சனல் வெஞ்சன்ஸ்க்கு தன் அதிகாரத்தை பயன்படுத்தியதற்காகத்தான் அவருக்கு இந்த சஸ்பென்ஷனல் ஆர்டரே” என்ற பாரி… “தவறு என்று தெரிந்தும் மௌனமாக இருந்ததுக்கே உங்க எல்லாரையும் சஸ்பென்ட் பண்ணியிருக்கணும்” என்றான். ஜென்சியின் மீது ஒரு நொடிப்பார்வை ஆழமாகப் பதிந்தது.
“அவர் எங்களுக்கு மேலதிகாரி சார்.” சத்தமில்லாமல் ஜென்சி சொல்லிட,
“நானா இருந்தாலும் தவறு எனும் பட்சத்தில் தட்டிகேட்கணும். அப்போதான் போட்டிருக்கும் உடைக்கும் செய்யும் பணிக்குமே மரியாதை” என கர்ஜனையாக மொழிந்தான்.
பாரி சொன்னதை வைத்தே சற்று நேரத்திற்கு முன்பு, தான் நடந்து கொண்ட முறைக்கு மட்டுமல்ல இந்த பணியிடை நீக்கமென்று ஆய்வாளருக்கு புரிந்தது.
வெளியில் அழுது கொண்டிருக்கும் பெண்ணின் கணவன் ஆய்வாளரின் உறவுக்காரன். குடும்ப விசேடத்தில் எழுந்த சலசலப்பில் அவன் ஆய்வாளரை மரியாதை குறைவாக பேசிவிட… அத்தனை பேரின் முன்பும் ஆய்வாளருக்கு அவமானமாகிவிட்டது. அதற்காகவே இல்லாத வழக்கில் அவனை பிடித்து வைத்து பார்க்கக்கூட விடமாட்டேனென்று இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் வைத்து அடித்து துவைத்துவிட்டார்.
ஆய்வாளரின் பணியிடை நீக்கத்திற்கு முக்கிய காரணமே இதுதான்.
விடுவிக்கப்பட்ட ஆணும், அவனது மனைவியும் பாரிக்கு நன்றி தெரிவித்துச் செல்ல… ஆணையர் திரு.சிவக்குமார் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.
“வந்ததும் உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட போலிருக்கே. உன்னைப்பற்றி செக்ரி நிறைய சொன்னார். ஆனா, வந்த அன்னைக்கே நாலு பேருக்கு மெமோ. ஆளுங்கட்சி அரசியல் ஆள் மீது கை வைப்பு. இதை நான் எதிர்பார்க்கல” என்று வெளிப்படையாகவே தன் அதிருப்தியைக் காட்டினார். அவரின் நிலை அது. பாரி செய்தது சரியானது, அவனின் வேலை அது என்றபோதும், மேலிடம் கொடுக்கும் அழுத்தத்தில் அங்கு வந்து அந்த கவுன்சிலருக்காகப் பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு.
அங்கிருந்த மற்ற காவலர்களை பாரி ஏறிட அனைவரும் கலைந்து தத்தம் இருக்கைக்கு சென்றதோடு தங்களது பணியில் ஆழ்ந்தனர்.
“என் வேலை. நான் செய்தேன்.” தோள் குலுக்களுடன் தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான்.
வந்தவருக்கு வணக்கமும் வைக்கவில்லை. அவரை அமர சொல்லவுமில்லை. அடுத்து என்னவென்று பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
“அவன் கொஞ்சமில்லை நிறையவே திமிரு பிடிச்சவன் குமார். அவன் செய்றது எதுவா இருந்தாலும் அது சரி தான். சரியாகத்தான் இருக்கும். எதுக்கும் அவன்கிட்ட ஜாக்கிரதையாவே இருந்துக்கோ. நீ செய்றது தவறுன்னு தெரிஞ்சா உன் வேலைக்கே ஆப்பு வச்சாலும் வைப்பான்” என்று சொல்லிய செக்ரியின் வார்த்தைகள் அவரின் காதில் அந்நொடி எதிரொலித்தது.
ஆணையரை கெஞ்சலாக பார்த்த ஆய்வாளரிடம்… “தன்னால் எதுவும் செய்ய முடியாது. உன் மீது தான் தவறு” என்று அனுப்பி வைத்தார்.
தலையை குனிந்தவாறு ஆய்வாளர் அங்கிருந்து அகல…
“இரண்டு வார சஸ்பென்ஷனுக்கு பிறகு… வேறொரு மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக உங்களுக்கு போஸ்டிங். ஆர்டர் வீட்டுக்கே வரும். தயாராக இருங்க” என்ற பாரியின் குரல் ஆய்வாளரின் நடையை ஒரு நொடி நிறுத்தி பின்னர் தொடரச் செய்தது.
“சஸ்பென்ஷன், டிரான்ஸ்பர்லாம் ஓகே. பட் பதவியிறக்கம்?” குமார் பாரியை கேள்வியாக இழுத்தார்.
“அப்போதான் செய்யுற வேலை மேல மதிப்பு இருக்கும். தேவையில்லாம அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது நினைவிலிருக்கும்” என்றான் பாரி.
“அந்த கவுன்சிலர்…” தயக்கமாகத்தான் கேட்டார்.
பாரிக்கு உயர் அதிகாரியாக இருந்த போதும்… அவனின் கண்களில் தெரிந்த நேர்மையும், தோற்றத்தில் உள்ள கம்பீரமும் அவனுக்கு அடங்கிபோகவேச் செய்தது.
“வெறும் கவுன்சிலர்.” அவனது குரலில் என்ன உணர்வென்று அவருக்கு புரியவில்லை.
“மேலிருந்து எனக்கு பிரஷர் பாரி.” உண்மையை ஒப்புக்கொண்டார்.
ஒரு கேண்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டவன். சுட்டுவிரல் கொண்டு தன் புருவம் நீவினான்.
“உங்களுக்கு பொண்ணு இருக்கா சார்?”
பாரியின் அக்கேள்வியில் அடுத்து என்ன கேட்பானென்று யூகித்தவர்…
“நீ இங்க வந்ததற்கான… ஐ மீன் வரவழைக்கப்பட்டதற்கான காரணமே வேறு பாரி” என்றார்.
“அந்த ஒரு வழக்குக்காக மட்டும் தான் நான் இங்க வரவழைக்கப்பட்டேன் அப்படின்னா அம் வெரி சாரி சார் என்னால் அப்படி இருக்க முடியாது.
நான் வந்த வேலையை மட்டும் பார்த்தா என் பதவிக்கான மற்ற வேலைகளுக்கு வேறொருத்தரை அமர்த்துவீங்களா?” அழுத்தமாகக் கேட்டான்.
பாரியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது பாவம் ஆணையர் திணறித்தான் போனார்.
சில நிமிட அமைதிக்குப் பின்னர்…
“அவன் பார்வைக்குத்தான் கவுன்சிலர் பாரி. மத்தபடி அக்கட்சியோட இருட்டில் நடக்கிற எல்லா நிகழ்வுக்கும் இவன் தான் முதன்மை. பொறுமையா எதையும் ஹேண்டில் பண்ணு” என்றார்.
“எதையும் பொறுமையா செய்யும் பழக்கம் எனக்கில்லை.”
சொல்லியவன்… ரைட்டரை அழைத்து, ஆணையர் முன்பே,
“அந்த பொ*** அரசியல்வாதி மீது FIR போட்டாச்சா” எனக் கேட்டான்.
“சார்” என்று அவன் முன்பு அதற்கான பதிவேட்டை அவர் வைத்திட… ஆணையரை பார்த்துக்கொண்டே அதில் கையெழுத்திட்டான் பாரி வேந்தன்.
“கோர்ட்டில் பார்த்துக்க சொல்லுங்க. லாயர் வேணும்னா நான் ஏற்பாடு செய்றேன்” என்றான். அப்பட்டமான கிண்டல் தொனி.
“உன் வயதுக்கான வேகம் எனக்கு புரியுது பாரி. வேகத்தோட விவேகமும் வேணும்.”
“என்னோட விவேகமும் உங்களுக்கு சீக்கிரமே புரியும்” என்றவன் ஜென்சியிடம்,
“அமைச்சர்.ரித்தேஷ்வரனை மீட் பண்ணனும். அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமா பாருங்க” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
செல்லும்போது “யார் வந்தாலும் அந்த கவுன்சிலரை வெளியில் விடக்கூடாது” என்று ஆணையர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழுத்தமாக உச்சரித்துச் சென்றான்.
____________________
பாரியின் முதல் நாளை விவரித்த ஜென்சி…
“பாரி இன்னும் இறுக்கமாகிட்டான் தோணுது தமிழ்” என்க தமிழிடமிருந்து மௌனமே பதிலாக.
“என்னையே யாரோ மாதிரி தான் பார்க்கிறான்” என்ற ஜென்சிக்கு கல்லூரி நாட்கள் நினைவு வந்தது. கூடவே பாரி அடிக்கும் கொட்டங்களும்.
“காலேஜ் டைமில் எப்படி ஜாலியா இருந்தவன் தமிழ் அவன். இப்போ என்னவோ உதட்டை கம் போட்டு ஒட்டிகிட்டவனாட்டாம் என்ன அழுத்தம் தெரியுமா?” என்றவள், “ஆனால் முன்னைக்கு இப்போ இன்னும் நல்ல ஹேன்சம்மா இருக்கான்” என்றிட…
“ஹேய்… அவன் என் புருஷன்” என்று தமிழ் ஒரு விரலால் பத்திரம் காட்டினாள்.
“அவனை நீயே கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்” என்று வேகமாக சொல்லிய ஜென்சியின் கண்முன் ஒரு முகம் தோன்றி மறைய… இமை மூடி திறந்தாள்.
ஜென்சியின் முகபாவனைகளை கவனிக்கத் தவறி “ஒரு காலத்தில் அவனை உன் கிரஷ் சொல்லி சுத்தியதெல்லாம் மறந்துப்போச்சா” எனக் கேட்டு “நான் ஏன் கொடுக்கப்போறேன்” என்ற தமிழ்… “கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்” எனக்கூறினாள்.
“அந்த கோணலை நீயே வச்சிக்கோ. ரொம்பத்தான் விறைப்பா இருக்கான். எல்லார் முன்னாடியும் பதவிக்காக பேசலன்னு நினைத்து தனியா பார்க்கும்போது… எப்படி பாரி இருக்கன்னு கேட்டதுக்கு முறைச்சான் பாரு ஒரு முறை, அல்லு விட்ருச்சு” என்று இப்போதும் அந்நொடி உணர்வுகளுடன் பகிர்ந்தாள்.
காவல் நிலையம் செல்ல சீருடையில் கிளம்பியபடி தமிழிடம் பேசிய ஜென்சி வேகமாக உணவினை உட்கொள்ள…
“என்னத்துக்கு இம்புட்டு அவசரம். பொறுமையா உண்குடி” என்று கடிந்து கொண்டாள் தமிழ்.
“இன்னமும் அப்பப்போ பேசுற உங்க ஊர் பேச்சை நீ மாத்திக்கலையா தமிழ்?” எனக் கேட்டாள்.
“எதுக்கட்டி மாத்தணும். நான் பேசுறது உனக்கு விளங்குதுல்ல, அது போதுமாட்டிக்கு.”
“ம்ம்… உன் ஊரை, பாஷையை நீ விட்டுத்தருவியா?” என்ற ஜென்சி, “இன்னைய பொழுது பாரியுடன் தான் தமிழ். எப்போ விடுவாங்க தெரியல. பத்திரமா இருந்துக்கோ. சாப்பாடு மதியத்துக்கு செய்துட்டேன். நைட் வர லேட்டானா மாவு இருக்கு தோசை ஊத்திக்கோ. இல்லைன்னா ஆன்லைனில் ஆர்டர் பண்ணிக்கோ” என்று நீண்டு சொல்லிக்கொண்டே வெளியில் சென்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தை உயிர்பித்த ஜென்சி… தன்னை வழியனுப்ப கையசைத்து நின்றவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கி… பின் தடுமாறி மெல்லத் தயங்கிக் கூறினாள்.
“பாரி வந்ததே அமிர்தா கேசுக்காகத்தான்” என்று.
தெரியும் என்பதைப்போல் கண்களை மூடித்திறந்த தமிழின் இதழ் மென் புன்னகையில் விரிந்திருந்தது. ஆனால் மனம் பல எண்ணங்களில் நினைவுகளின் போராட்டத்தில் மூழ்கி எழுந்தது.
நண்பனுக்கு காதலி இருந்தால் ஆர்ப்பரிக்கும் மனம்… கணவனுக்கு காதலி இருந்தால் என்பதில் சுருண்டு விடுகிறது.
“ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா.”
தமிழின் குரல் பாரிக்கு கேட்குமா?
*****
அந்த வருடம் தீபாவளி செவ்வாய் கிழமையில் வந்ததால் திங்களன்றும் புதனன்றும் விடுமுறை அளித்தது பள்ளி நிர்வாகம்.
எல்லோரும் சந்தோஷமாக வீட்டிற்கு கிளம்ப… பூவும், பாரியும் மட்டும்… “யார் இப்போ லீவ் கேட்டா” என்று கடுப்புடன் கிளம்பி காத்திருப்பு பகுதிக்கு வந்திருந்தனர்.
“ஃபோர் டேய்ஸ் பூ. எப்படி உன்கிட்ட பேசாம இருக்க போறேன்னு தெரியல. நான் கால் பன்றேன்.”
“அச்சோ தாத்தாக்கு தெரிஞ்சது தொலைச்சிப்புடும். தாத்தாக்கு தெரியாம நானே பன்றேன்.”
பாரி சொல்லி முடித்ததும் வேகமாக மறுத்து பதில் சொல்லியிருந்தாள்.
“ஆனாலும் ரொம்பத்தான் பூ உன் தாத்தாக்கு நீ பயப்படுற.” சன்னமாக சிரித்துக்கொண்டான்.
பூவின் வாலுத்தனங்கள் தெரிந்த அவனுக்கு இந்த பயம் சிரிப்பாகத்தான் தோன்றியது.
“நீ அவரை பயம் காட்டாம இருந்தா போதும்.”
“சிரிக்காத வேந்தா. அப்பாவே இன்னும் தாத்தாக்கு பயப்படுவாங்க” என்றவள், “அவருக்கு பொம்பளை பிள்ளைங்க பசங்ககிட்ட பழகுறது பேசுறது பிடிக்காது. என்னை இந்த ஸ்கூலில் சேர்க்கும்போது அவர் சொன்ன ஒண்ணே ஒண்ணு நான் பசங்க பிரண்ட் வச்சிக்கக்கூடாதுன்னு தான்.
ஆனால் பாட்டி ரொம்ப சுவீட் தெரியுமா. மத்தவங்க கண்ணை உறுத்தாத எதுவும் தப்பு இல்லை. உனக்கு பிடிச்சிருந்தா யார்கிட்டவேணாலும் பேசு பழகு. உன் எல்லை அறிஞ்சு நிறுத்திக்கோன்னு சொல்லுவாங்க.
தாத்தா தவிர வீட்டில் எல்லோருக்கும் நம்ம பிரண்ட்ஷிப் தெரியும். பிடிக்கும் வேந்தா.”
வேந்தனிடம் எல்லா பக்கமும் சேர்ந்த தலையாட்டால்.
அவனின் தோளில் அடித்தவள், “அத்தை, மாமா மாதிரி தாத்தா பிரண்ட்லி டைப் இல்லை வேந்தா” என்று அவனின் பெற்றோருடன் ஒப்பிட்டு கூறினாள்.
“அண்டெர்ஸ்டாண்ட் பூ” என்றவன், “எப்படியாவது தீபாவளிக்கு எனக்கு கால் பண்ணிடு பூ. இல்லைன்னா அம்மா என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க. அத்தோட என் அண்ணன் இருக்கிறானே படுத்தி எடுத்திடுவான்” என்றான்.
பூ பாரியின் குடும்பத்தோடு நிறையவே ஒட்டிக்கொண்டாள். அதிலும் பாரியின் அண்ணனுக்கு அவள் அதிகச் செல்லம். பாரிக்கும் அவனுக்கும் ஐந்து ஆண்டு இடைவெளி. அந்த வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறையை பூ தீர்த்து வைத்துக்கொண்டிருந்தாள். எல்லாம் தொலைபேசியின் வாயிலாகத்தான். வீட்டிற்கு அழைக்க விடுதியில் கொடுக்கும் நேரத்தில், பாதி நேரம் பாரியின் வீட்டிற்கு அழைத்து பேசிக்கொள்வாள்.
இவ்விடயத்தில் பூவைபோல் பாரிக்கு இல்லை.
பாரியுடன் தாங்கள் பேசினால் மகளின் ஆண் நட்பு எங்கே பூவின் தாத்தா பொன்னுவேலுவுக்கு தெரிந்துவிடுமோ என்று தயங்கியே பூ வீட்டிற்கு வரும் நாட்களில் மட்டும் பாரியிடம் ஓரிரு வார்த்தைகள் சுருக்கமாக பேசி வைத்துவிடுவார்கள்.
அதனால் பாரியின் குடும்பத்தைப்பற்றி பூவிற்கு தெரிந்தளவிற்கு பாரிக்கு பூவின் குடும்பத்தைப்பற்றி அதிகம் தெரியாது. அதிக ஒட்டுதலும் கிடையாது. அரசு பேசுவார். மணி எப்போதாவது நல விசாரிப்பு மட்டுமே.
அரசு மட்டுமே பாரிக்கு அதிக பரிச்சயம்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே பூவின் தந்தை அவளை அழைத்துச்செல்ல வந்துவிட…
பாரியின் நலம் விசாரித்து பேசியவர், “இன்னும் வூட்டுல இருந்து யாரும் வரலையா கண்ணா?” என்றார்.
“டிரைவர் வராங்க அங்கிள். வந்திடுவார்” என்றான்.
“சரிப்பா” என்றவர் அவனைத் தனித்துவிட்டுச் செல்ல மனமில்லாது பூவை அழைத்துச் செல்வதற்கான பதிவேட்டில் கையொப்பமிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தார்.
“நீங்க கிளம்புங்க அங்கிள் நான் இருந்துப்பேன்” என்றவனின் பேச்சை அரசு ஏற்காது அவனுடன் பேசியபடியே இருந்தார்.
சில நிமிடங்களில் பாரியின் டிரைவரும் வந்து சேர,
“இதோ வந்திட்டார் அங்கிள்” என்ற பாரி, “அப்பா டிரைவரோட அனுப்பி வைக்க லெட்டர் கொடுத்திருப்பார். அதை வார்டனிடம் கொடுத்திட்டு வர்றேன்” என்று பாரி செல்ல அரசு தன்னுடைய காரிலிருந்து இரண்டு கூடைகளை எடுத்து பாரியின் காரில் வைத்தார்.
டிரைவருக்கும் இங்கு வரும் வேளையில் பூவைப்பற்றி தெரியுமாதலால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
“ஓகே அங்கிள் கிளம்பலாம்.” பாரி வந்தான்.
“காரில் காய்கறி, பழங், பலகாரம் எல்லாம் வச்சிருக்கேன் கண்ணா. எல்லாம் நம்ம தோட்டத்தில் விளைந்தது. பலகாரம் வீட்டம்மா தீபாவளிக்காக செய்தாங்க” என்றார்.
பாரி வேண்டாமென்று எதுவும் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியும், அவர் வரும்போதெல்லாம் பூவிற்கு வாங்கி வரும் எல்லாம் அவனுக்கும் சேர்த்தே வாங்கி வருவார். வேண்டாமென்று சொன்னால், அவருடன் சேர்ந்து பூவும் வருந்துவாளென்று சந்தோஷமாகவே வாங்கிக்கொள்வான்.
“அதிரசம் இருக்கா அங்கிள்.” அரசு பலகாரம் என்றதும் அவனுக்கு பூவின் அன்னை செய்யும் அதிரசம் தான் நினைவு வந்தது. இத்தனை வருடங்கள் உண்ட தித்திப்பு இப்போதும் அவனது நாவில்.
“அது தீபாவளி நோம்பு கும்புடுற நேரந்தேன் செய்யுவாங்க கண்ணா. நான் புள்ள(பூ) கையில கொடுத்துவிடுறேன்” என்றார் அரசு.
“பார்த்து சூதானமா ஓட்டுங்க டிரைவர். கண்ணா பத்திரம்” என்றவர் “வாடாம்மா போவோம்” என பூவை அழைத்தார்.
அந்த வெள்ளந்தியான கிராமத்து மனிதரின் அன்பும் அக்கறையும் பாரிக்கு நிரம்பவே பிடித்தது.
“அம்மா பாப்பாவுக்கு கொடுக்க சொன்னாங்க தம்பி” என்று டிரைவர் ஒரு கவரை பாரியிடம் கொடுக்க, அதனை என்னவென்று கூட பார்க்காது பாரி பூவிடம் கொடுத்தான்.
“என்னது வேந்தா?”
“உங்க அத்தை உனக்கு தீபாவளி ட்ரெஸ் அண்ட் க்ராக்கர்ஸ் கொடுத்திருக்காங்க” என்றான்.
“நீதான் பாக்கவேயில்லையே?”
“இந்த ஃபோர் இயர்ஸ் இது பழக்கம் தானே! அத்தோட அவங்களுக்கு சுவீட்ஸ்லாம் செய்யத் தெரியாது.”
“ம்ம்.”
“ஓகே பை டா.”
“பை பூ.”
இரண்டு கார்களும் இருவேறு திசையில் சென்றது.
~~~~~
பாபநாசம்.
அவர்களின் கார் ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது.
எங்கும் சில்லென்று காற்று. கண்ணுக்கு விருந்தாய் பச்சை. பார்க்கும் இடமெங்கும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தென்னைகள் சாலைகள் இரு மங்கிலும் அழகு சேர்த்தன.
“கண்ணு… தாத்தா கேட்டா, வரும்போது நான் வாங்கிக்கொடுத்தேன் சொல்லு.”
“சரிங்கப்பா.”
அரசுவிற்கு இந்த வயதிலும் தன் தந்தை என்றால் பயம் தான். பொன்னுவேலு இன்னமும் பல கட்டுப்பாடுகள் விதித்து வாழ்ந்து வருபவர். அவர் ஏற்றுக்கொண்ட ஒரே மாற்றம் பெண்கள் பேசுவதற்கும் படிப்பதற்கும். அதற்கும் கட்டுப்பாடுகள் பல விதித்தே அனுமதிப்பார்.
அதனாலேயே பார்வதி எடுத்துக்கொடுத்த ஆடையை தான் வாங்கிக்கொடுத்ததாகக் கூறச்சொன்னார்.
வீட்டிற்கு வந்த பூவை அவளது தமக்கை அணைத்து வரவேற்க… பொன்னு எதிரே வந்தார்.
“எப்படியிருக்கீங்க தாத்தா?”
“நங்காயெல்லாம் சவுக்கியம் தான். நீதான் எலச்ச மாதிரி இருக்க. உள்ள போ. நல்லா கறியும் காயுமா அம்மைய செய்யச்சொல்லி உண்கு.”
அவரின் அக்கறை கூட அதட்டலாகத்தான் வெளிவரும்.
“சரிங்க தாத்தா.”
தாய், அப்பத்தாவை சந்தித்து அவர்களிடம் பேசியவளிடம் பாரியை பற்றியும் விசாரித்து அவன் நலன் தெரிந்து கொண்டனர்.
“உன் தாத்தன் வெளி சோலிக்கு கிளம்புட்டும். தம்பிக்கிட்ட பேசிக்கிடுவோம்.” பாட்டியின் சொல்லுக்கு வேகமாக தலையாட்டினாள்.
“தங்கச்சியை உள்ளார கூட்டிபோடி” என்று பெரிய பேத்தியிடம் சொன்ன அப்பத்தா, “குளிச்சிட்டு வா. உன் அம்மை பலகாரம் பண்ணியிருக்கா(ள்), நாலு எடுத்து வயித்துக்கு போட்டுக்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அறைக்குள் தன் சகோதரியுடன் சென்ற பூ, பார்வதி கொடுத்த பையை காண்பித்து…
“அத்தை உனக்கும் ட்ரெஸ் வாங்கி கொடுத்திருக்காங்கக்கா” என்று அவள் முன் நீட்டினாள்.
ஆடையை பார்த்தவளுக்கு மிகவும் பிடித்து போனது.
“பொறவு ஃபோன் போட்டு நல்லாயிருக்கு நான் சொன்னதா சொல்லு. இப்போ நீ வெரசா வா” என்று பூவின் அக்கா அறையிலிருந்து வெளியேறினாள்.
இங்கு பாரியும் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.
பாரியின் அண்ணன் தம்பியை விடுத்து பூவைப்பற்றித்தான் முதலில் வினவினான். அதில் பாரிக்குமே சந்தோஷம் தான். தன் நட்பு குடும்பத்திற்கே மகிழ்வை கொடுக்குமென்று பூவை முதலில் சந்தித்த போது பாரி உணர்ந்திருக்க மாட்டான். வலிய வந்து தன்னை உண்ண வைத்து… இன்று வரை தனக்கு நல்ல தோழியாக அனைத்திலும் உடனிருக்கும் பூவின் பந்தம் வாழ்நாள் முழுமைக்கும் நட்பாகவேத் தொடர அக்கணம் பேராசை கொண்டான்.
பேராசை நிராசையைத் தானே கொடுக்கும். அதுவே பாரிக்கும் கிடைத்தது பின்னாளில். அவன் வாழ்வில் பூவின் இடம் தமிழால் நிரப்பட்ட போது.
“என்னண்ணா பூ மேல் தனிப்பாசம்?” அதில் சற்றும் பொறாமை இல்லை
“பூ மாதிரி ஒரு குட்டிப்பொண்ணு நமக்கிருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். பூக்கிட்ட பேசும் போதெல்லாம் அவள் நம்மக்கூடவே பிறந்திறக்கலாம் தோணுதுடா.”
பூவின் மீதான அண்ணனின் பாசம் பாரிக்கும் புரிந்தது.
அவன் வெகுவாக நெகிழ்ந்திருந்தான்.
“யூ மீன் தங்கச்சி?” எனக்கேட்ட பாரி… “நோ… நோ சான்ஸ். பூ எப்பவுமே என் ஃபிரண்டா இருக்கனும் தான் அவள் வேறெங்கோ பிறந்திருக்கா(ள்)” என்றான்.
“அப்புறம் ப்ரோ. அவள் என் பூ. என் ஃபிரண்ட். உங்க பாசத்தை கொஞ்சம் அடக்கியே வாசிங்க. நெஞ்சை நனைக்காதீங்க” என அண்ணனின் நிலை மாற்ற கேலியாகக் கூறினான்.
“என்னடா வந்ததும் பஞ்சாயத்தா?” எனக் கேட்டபடி பாரியை அணைத்து வரவேற்ற பார்வதி அவனின் நெற்றியில் இதழொற்றி அழைத்துச் சென்றார்.
“பூ அப்பா நிறைய வெஃஜ், ஃபிரூட்ஸ், ஸ்நாக்ஸ் கொடுத்திருக்காங்க” என்றான்.
“எனக்கு தான் இந்த மாதிரி பண்டிகைக்கு சீர் கொடுக்க குடும்பமுன்னு ஒன்னுயில்லை. ஆனால் இந்த நாலு அஞ்சு வருசமா அந்த குறைய பூ அப்பா அவரே அறியாம செஞ்சிட்டு இருக்காரு” என்ற பார்வதியின் கண்கள் கலங்கித்தான் போயின.
பார்வதிக்கோ… வைத்திக்கோ அம்மா, அப்பா என்றோ இதர சொந்தங்களென்றோ உறவுகள் எதுவுமில்லை. அவர்களுக்கு அவர்கள் மட்டுமே. அதனாலேயே பார்வதியிடம் இந்த நெகிழ்ச்சி.
வைத்திக்கு மட்டும் தூரத்து உறவில் அக்கா உள்ளார். ஆனால் அவரும் இப்போது தொடர்பில் இல்லை.
“ச்சூ மாம். டோன்ட் கெட் எமோஷனல்” தோளோடு பிடித்த மூத்த மகனின் கன்னம் வருடிய பார்வதி, இளைய மகனை கண்டு…
“நாம வேணும்னா பூ வீட்டுக்கு போயிட்டு வரலாமா?” என ஆசையாகக் கேட்டார்.
“வேற வினையே வேணாம். நீங்க உறவை ஆரம்பிக்கிறேன்னு எங்க பிரண்ட்ஷிப்புக்கு ஆப்பு வச்சிடுவீங்க போலிருக்கே” என்று வேகமாக மறுத்த பாரி பூவின் தாத்தாவைப்பற்றி சொல்ல…
“பூவும் சொல்லியிருக்கா(ள்)” என்று அப்பேச்சை நிறுத்தினார் பார்வதி.
“பூ இன்னும் பெரிய பொண்ணு ஆகிட்டா அவளே அவளோட தாத்தாவுக்கு எங்களோட பிரண்ட்ஷிப்பை புரிய வச்சிடுவாம்மா” என்ற பாரியை வாஞ்சையாக பார்த்தார் பார்வதி.
ஆனால் அதற்குள் பூவின் நட்பு தெரிந்து பொன்னு ஒரு ஆட்டம் ஆடி விடுவாரென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தீபாவளியன்று…
காலை பலகாரத்திற்கு பின்னர் பொன்னுவேலு தேங்காய் தோப்பிற்கு கிளம்பிச் சென்றிட…
அவர் சென்றதை உறுதிபடுத்திக்கொண்ட பூ தன் தந்தையைத் தேடி ஓடினாள்.
வீட்டின் பின் கட்டில் ஏதோ வேலையாக இருந்தவரின் சட்டை பையில் கைவிட்டு கையடக்க அலைபேசியை எடுத்து பார்வதியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
அது அலைபேசி பரவலாக அனைத்து இடங்களிலும் பரவிய காலம்.
அழைப்பு ஏற்கப்பட்டதும்…
“அத்தை” என்று பூவின் குரலில் அத்தனை துள்ளல்.
“ஹேப்பி தீபாவளி அத்தை. நீங்க கொடுத்த ட்ரெஸ் தான் போட்டிருக்கேன். ரொம்ப பிடிச்சிருக்கு. அக்காக்கும் பிடிச்சிருக்கு சொல்ல சொன்னா(ள்)” என்று நிறுத்தாது பேசிக்கொண்டே பல விடயங்களை அவருடன் பகிர்ந்த பின்னரே அவரை பேச அனுமதித்தாள்.
அடுத்தது வேந்தனின் அண்ணனிடம் பேசியவள் அவன் கேட்ட அனைத்திற்கும் பொறுமையாக பதில் வழங்கினாள்.
அடுத்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு என்பதால்… அவளின் படிப்பு சம்மந்தமாகவும் பேசி, வைத்தியிடம் நலம் விசாரித்து, தீபாவளி பலகாரங்களுக்காக அவர் அரசுவிடம் நன்றி தெரிவித்து இறுதியாகவே பாரியின் கைக்கு அலைபேசி வந்தது.
“பூ.” பாரியின் குரலில் அத்தனை கனிவு.
“எப்படிடா இருக்க? டூ டேய்ஸ்ஸா உன் காலுக்காகத்தான் வெயிட்டிங்” என்று கூறியவன் அடுத்து அனைத்தும் கேட்பதாக மாறியிருந்தது.
பூ வீட்டிற்கு வந்தது முதல் அந்நொடி வரை நடந்த அனைத்தும் சொல்ல…
“கிராக்கர்ஸ் வெடிக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும் பூ” என்ற பாரியின் அக்கறையோடு உரையாடல் முடிவு பெற… “நாளையே வந்திடு பூ” என்று சொல்லியே அழைப்பைத் துண்டித்தான்.
விடுமுறை முடிந்து இருவரும் பள்ளி விடுதிக்கு திரும்பியிருந்தனர்.
மாலை வந்திருக்க இரவு உணவின் போதுதான் சந்திக்க முடியும் என்பதால் அந்நேரத்தை எதிர்பார்த்து இருவரும் ஆவலாகக் காத்திருந்தனர்.
பாரிக்கு முன்னரே பூ வந்து அவனுக்கான உணவையும் வாங்கி வைத்திருந்தாள்.
தங்களது வழக்கமான இருக்கையில் பூவை கண்டவன்… வேகமாக அருகில் வந்து “பூ” என்ற விளிப்புடன் அவளருகில் அமர்ந்தவன் தோளோடு அணைத்து விடுத்தான்.
பூவின் பார்வை தனக்கு முன்னிருந்த தட்டிலேயே இருந்தது.
“என்னடா… என்னை பார்க்க மாட்டியா? எதாவது கோபமா?” என்றிட, அவனை ஏறிடாது… அவனின் வலது கையை பற்றியவள், மணிக்கட்டில் நோம்பு கயிற்றை கட்டிவிட்டு… “பசிக்குது வேந்தா” என்க,
தன்னிடம் முகம் காட்ட மறுக்கும் அவனது பூவை ஆழ்ந்து ஆராய்ந்தவாறே “சாப்பிடுடா” என்றான்.
தானும் உண்டு முடித்தவன் கை கழுவிக்கொண்டு வர, பூ வெளியில் சென்றிருந்தாள்.
கார்டனில் பூவை தேடிட அவளோ இருட்டில் நின்று கொண்டிருந்தாள்.
“என்ன இங்க வந்து நின்னுட்ட? வா வாக் போலாம்.” வேந்தன் அழைத்திட மெல்ல திரும்பியவள் இருட்டில் நின்றபடியே, “அதிரசம்” என்று பாக்ஸை அவன் முன் நீட்டினாள்.
“வந்ததிலிருந்து நீ இன்னும் என் ஃபேஸ் பார்க்கல” என்றவன் அவளை வெளிச்சத்திற்கு இழுக்க வர மறுத்தாள்.
“பூ என்ன இது அடம்” என்றவன் அவளின் கையை பிடித்து அவள் எதிர்பாராது இழுத்தான்.
வெளிச்சத்தில் பூவின் முகம் நிமிர்த்தி பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.
முகம் ஒரு பக்கம் நன்கு வீங்கி சிவந்திருந்தது.
முகத்தை இடப்பக்கமாகத் திருப்பி, வலப்பக்க கன்னத்தை மெல்லத் தொட… வலியில் ஷ் என்று விலகினாள்.
விரல் பட்டதற்கே வலித்திட சுணங்கினான்.
“என்னடா இது. எப்படி?” அதிர்வாய் வினவினான்.
“உன்னோட நான் பேசக்கூடாதாம். பழகக்கூடாதாம்.” தலை குனிந்து சொல்லியவளின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தோடியது.
தன் பூவின் கண்ணீர் கண்டு பதறிவிட்டான்.
“சரிடா… பேச வேணாம். பழக வேணாம். நீ அழாத! எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அவன் சொல்லி முடிக்குமுன் அவனின் கன்னத்தில் அறைந்தவள், அடித்த பின்னரே தான் என்ன செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து, அவனுக்கு வலித்திருக்குமோ என பதறி… “சாரி சாரி சாரி வேந்தா” என்று அவனின் கன்னத்தை தேய்த்துக் கொடுத்தவள், “நீயேன் அப்படி சொன்ன. அதான் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. நான் அடி வாங்கினதை விட நீ சொன்னதுதான் வலிக்குது வேந்தா” என்றாள்.
“புரியுது.” ஒற்றையாகக் கூறியவனுக்கு பூவின் மீது துளி வருத்தமும் இல்லை.
“நடந்ததை சொல்லுடா” என்று கேட்டவனின் பார்வையெல்லாம் வீங்கியிருந்த அவளின் கன்னத்திலேயே!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
37
+1
+1
பூ வேந்தன் நட்பு சூப்பர்
நன்றி 😊