Loading

அத்தியாயம் 36 :

கோபம் கோபம்… அவளுள் இதுநாள் வரை வந்திடாத அளவுக்கான கோபம். அவன் விட்டுச்சென்ற போது வராத கோபம். திட்டி கன்னத்தில் அறைந்த போது வந்திடாத கோபம். இப்போ அவன் போ… தனியாக அங்கு சென்று படி என்று சொன்னதில் வந்தது.

அவன் சாதாரணமாக, போ… என்று சொல்லியதையே அவளால் தாங்க இயலாது போனது.

மொத்தமும் அவனாகிப் போனவளுக்கு அவனின்றி இமை பொழுதுதான் கடந்திடுமா?

அவன் விலகியிருந்த போதே அவனின்றி இருந்திடாது… தேடிச்சென்று பார்த்து வருபவளுக்கு, அவன் காதலால் கசிந்துருகிக் கொண்டிருக்கும் இப்போது பிரிந்திருக்க எப்படி முடியுமாம்.

எனக்குள்ளிருக்கும் இந்த வேதனை அவனுக்கு இருக்காதா? என்ற அவளின் கேள்வியே அவளின் கோபத்திற்கான காரணம்.

கோபம்… இதுவரை அவள் அறிந்திடாத ஓர் உணர்வு. முதல் கோபம், எப்படி கட்டுப்படுத்தவென்று தெரியாது கண்ணீராய் கன்னம் இறங்கியது.

ஜென் சொல்வதைக்கூட கேட்டிராது துணிகளை அடுக்குவதிலேயே கண்ணாக இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

அந்நேரம் தெரியாது அவளுக்கு அழைத்து பரிதி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான்.

“தமிழ் கிளம்பிட்டியா?”

“என்ன உங்களுக்கு… எதுக்கு இவ்வளவு வேகம். ரொம்ப அவசரமா இருந்தா நீங்க போங்க, எனக்கு பஸ்ஸிலோ ட்ரெயினிலோ வரத் தெரியும். என்னவோ இத்தனை வருஷம் கூடவே இருந்த மாதிரி” என்று பட்டாசாய் வெடித்தவள் அலைபேசியை அணைத்து கட்டிலில் தூக்கிப்போட்டாள்.

‘போன் தப்பிச்சிது.’ ஜென்னின் மனகுரல்.

“இப்போ என் மேலிருக்கும் கோவத்தை எதுக்கு பரிதிண்ணாகிட்ட காமிக்கிற?” அவி பாரியை அழைத்து வந்திருந்தான்.

“உங்க மேல எனக்கென்ன கோபம். அதெல்லாம் உரிமை இருக்கவங்களுக்கு வரது. எனக்கு ஏன் வரப்போவுது” என்றவள் துணியை பையில் திணிக்க…

“அது என்னோட டி-ஷர்ட்” என்றான்.

பாரி அறைக்குள் நுழைந்ததுமே அவி ஜென்னை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றுவிட்டான்.

அன்று மழை இரவில் அவளுக்கு அவன் கொடுத்த உடை அது. இத்தனை நாளும் இரவில் அவனது அந்த உடையின்றி அவள் உறங்கியதில்லை. அந்த நினைவிலேயே அதனையும் எடுத்து பைக்குள் வைத்தாள். அத்தனை கோபத்திற்கு நடுவிலும்.

“உங்க ட்ரெஸ் எனக்கெதுக்கு” என்றவள், அதனை எடுத்து அவன் மீதே வீசினாள்.

அது அவனின் தோளில் சென்று தங்கியது.

“என்னையே தூக்கி வீசுற மாதிரி இருக்கு.” கையில் எடுத்தவன் கூறினான்.

அவனது வார்த்தையில் அழுத்தமாக ஏறிட்டவள் அவனருகே வந்து… அவனது கையிலிருந்த ஆடையை வேகமாக பிடுங்கி மீண்டும் பைக்குள் வைத்தாள்.

“நானே உனக்குன்னு இருக்கும்போது என்னோட ட்ரெஸ் எதுக்கு?”

“இந்த ட்ரெஸ்ஸை பைக்குள்ள் அடைச்சு வைக்கிற மாதிரி உன்னை என் இதயத்துக்குள்ள அடைச்சு பூட்டி வைக்கத் தெரியலயே” என்றவளின் நின்ற கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்திருந்தது.

பூவின் பின்னால் சென்று அணைத்தவன் அவளின் திமிரல்களை எல்லாம் தூசிபோல் தட்டிவிட்டு தனக்குள் இறுக்கிக்கொண்டான்.

“ஏற்கனவே உன் காலடியிலதான் அடைஞ்சுக்கிடக்கிறேன். இன்னும் என்ன வேணுமாம்?” என்று அவளின் காதுமடல் உரசி கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“என்னால படிக்க முடியாது. எனக்கு விருப்பமில்லை.”

“அதுதான் காரணமா?” அழுத்தமாகக் கேட்டான்.

“வெட்கத்தை விட்டு சொல்றேன்… என்னால் இனியும் உன்னை விட்டு தனியா இருக்க முடியாது. நினைச்சிக்கிட்டு மட்டுமே இருக்கிற வலி போதும் வேந்தா… ஒவ்வொரு நொடியும் உன்னோடவே கடக்கணும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன். நீயில்லாம முடியாதுடா. சும்மா போ போன்னு சொல்லுற… உன்னைவிட்டு போனா நான் வெறும் கூடுதான்னு உனக்கு ஏண்டா புரிய மாட்டேங்குது. முதல்ல நீ என்னை விட்டுப்போன. இப்போ என்னை உன்னைவிட்டு போகச் சொல்லுற. நான் போகமாட்டேன். இப்போ ஊருக்கு போகக்கூட எனக்கு பிடிக்கல. இத்தனை வருடமா என்னை பெத்து வளர்த்தவங்க கூட இல்லன்னாலும் இவ்வளவு கஷ்டப்படமாட்டேன். ஆனால் நீயில்லைன்னா… முடியல வேந்தா… எல்லாம் நல்லா போயிட்டு இருக்குன்னு சந்தோஷப்படுறதுக்குள்ள, திரும்ப உன்னைவிட்டு என்னை தள்ளி வைக்குற. வலியை விட அதிகமா கோபம் வருது” என்றவள் அவனை விலக்கிவிட்டு மெத்தையில் அமர்ந்து உடல் குலுங்க முகம் மூடி கதறினாள்.

அவனுக்கு மட்டும் அவளைவிட்டு இருக்க ஆசையா என்ன? சூழல் அப்படி உள்ளதே.

பெற்ற மகளென்றும் பாராது கொலை செய்தவனுக்கு, தாமெல்லாம் எம்மாத்திரம். தன்னுடைய உறவுகள் விடயத்தில் அவன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

பூ அங்கிருந்து ஓடிவந்தபோதே தன்னை விட்டிருக்க முடியாது என்பதாலேயே இந்த கோபமென்று யூகித்திருந்தவனுக்கு,  அதனை அவள் ஒவ்வொன்றாக விவரித்து சொல்ல அவனுக்கு எப்படியிருக்கிறாதாம்?

அவளின் அழுகையும் இதம் தருமென்று அக்கணம் அறிந்தான்.

போகவேண்டாம் என்று சொல்லிட மனம் துடித்தாலும், அவனது மூளை சூழல் புரிந்து கட்டி வைத்தது.

பூவின் காலுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தவன்…

“டேய் மலரே… இப்போ எதுக்கு இந்த அழுகை” என்று அவளின் முகம் நிமிர்த்தி இரண்டு கைகளாலும் அழுந்த துடைத்தான்.

“ஜஸ்ட் ஃபோர் டேஸ்… நீ ஊர்ல போய் இரு. நானே வந்து கூட்டிவர்றேன்.”

பூ முடியாது எனும் விதமாக இடவலமாக தலையசைத்தாள்.

“ராயப்பன் ரொம்ப டேஞ்சர். சரியான கிறுக்கன். எப்போ என்ன பண்ணுவான் தெரியாது. உன் பாதுகாப்பு எனக்கு முக்கியம் மலரே.” சிறுப்பிள்ளைக்கு சொல்லுவதைப்போல் எடுத்துக்கூறினான்.

“அதான் நீயிருக்கியே வேந்தா. நீயிருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது.” என்றவளின் கண்கள் கலங்கிப்போக, தன்னுடைய பெருவிரல் கொண்டு அவளின் கண்ணீர் இமை தாண்டாது தடுத்திருந்தான்.

“நான் இருக்கேன் பூ… ஆனால் உன்னோடவே இருக்க முடியாதுடா மலரே. புரிஞ்சிக்கோ!”

பாரி அவ்வாறு சொல்லியதும் அதற்கு மேல் அவள் அவனிடம் வாதம் செய்யவில்லை. மெத்தையிலிருந்து பையையும், அலைபேசியையும் எடுத்துக்கொண்டவள், அவனைத் தாண்டி வெளியேற முயல… பாரி அவளது கையை இறுக்கி பிடித்தான்.

“எதாவது சொல்லிட்டு போ பூ. இப்படி போகாத!”

“அதான் சொன்னியே வேந்தா… என்னோடவே இருக்க முடியாதுன்னு.” கரகரப்பான குரலில் மொழிந்தாள்.

“ஹேய்… ஐ டிடின்ட் மீன் இட் மலரே. நான் சொன்னது, ஆபீஸ் போயிட்டா உன்னுடவே எப்படி இருக்க முடியும். உன்னை கூடவே வச்சிக்கிட்டும் என்னால வேலை பார்க்க முடியாது. அந்த அர்த்தத்தில் சொன்னது” என்று விளக்கம் கொடுத்தான்.

“புரியுது” என்றவள் கையை உறுவிக்கொண்டு வெளியேற,

பரிதியும் குடும்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்.

“பார்த்து கவனமா இரு பாரி.” தில்லையும் பார்வதியும் மகனின் நலன் குறித்து பேசிக்கொண்டிருக்க… பூ சென்று காரில் அமர்ந்துவிட்டாள்.

சில நிமிடங்களில் அவி மற்றும் ஜென்னுக்கு கூட அறிவுரை சொல்லிவிட்டு ஒருவர் பின் ஒருவர் காரில் சென்று ஏற பாரி பூவையே பார்த்திருந்தான்.

“என்னாச்சு பாரி.” பரிதி தம்பியின் தோள் தொட…

“நான்தான் எல்லான்னு இருக்கிறவளை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் பரிதிண்ணா.” சொல்லியவனுக்கு கண்கள் கலங்கி விட்டது.

“ச்சூ பாரி… பெரிய பெரிய எதிரியெல்லாம் உன்னை பார்த்து நடுங்குறான். நீயென்னன்னா பொண்டாட்டியை விட்டு இருக்கிறதுக்கு இப்படி கண் கலங்குற?” என்று அவனை மாற்றும் பொருட்டு பரிதி கிண்டல் செய்தான்.

“நீங்க வேணுன்னா இளா அக்காவை விட்டு ஒரு பத்துநாள் இருங்களேன்.” அவி பரிதியை வம்பிழுக்க…

“நான் இருந்ததில்லையா… வேலை விஷயமா மூணு மாதம் கூட அவளில்லாம இருந்திருக்கேன்” என்று பரிதி இதெல்லாம் ஒரு விடயமா என்று சாதாரணம் போல் சொல்லி சிரித்தான்.

“இளா அக்கா… உங்க வீட்டுக்காரருக்கு உங்களை விட்டு ஒரு வருஷம் பிரிந்திருந்தாலும் கவலையில்லையாம்” என்று அவி சரியாக நேரம் பார்த்து கொளுத்திப்போட்டான்.

“என்கூடத்தான் வாழ்க்கையை ஓட்டனும். சிக்குவீங்கல்ல அப்போ பார்த்துக்கிறேன்” என்று பரிதியை வேண்டுமென்றே மிரட்டியவள், ஜென்னுடன் இருந்த சின்னுவை தூக்கிக்கொண்டு காருக்கு சென்றாள்.

“உங்கக்கூட சேர்ந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா செஞ்சுட்டீங்கடா. இனி உங்களோட சங்காத்தாமே வேண்டாம்” என்று தலைக்குமேல் கும்பிட்டு பாரியிடம் சொல்லிவிட்டு பரிதி சென்று கார் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரினை இயக்கினான்.

‘பூ பாரு… என்னை பாரு. பாருடி.’ மனதிற்குள் அரற்றினான்.

அவனது கூக்குரல் அவளுக்கும் கேட்டதோ. விழித்திரையை நீர் மறைத்திட பாரியின் பக்கம் திரும்பினாள்.

பாரி கழுத்தைச் சுற்றி இரு கைகொண்டு செய்கை செய்து சங்கிலியை குறிப்பிட்டான்.

அது புரிந்தும் புரியாததைப்போல் பூ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஒருநாள் இரவில் பாரி கேட்டது பூவிற்கு நினைவு வந்தது.

மொட்டை மாடியில் இருவரும் அருகருகே அமர்ந்திருக்க…

“அந்த செயின் எங்க பூ?” என்று கேட்டிருந்தான் பாரி.

பாரி எந்த சங்கிலியை கேட்கிறான் என்பது அவளுக்கு தெரிந்தே இருந்தபோதும்… புரியாததைப்போல் பார்த்தாள்.

“ஏதோவொரு கோபத்துல தெரிஞ்சே தான் கழட்டி கொடுத்தேன். ஆனால், அந்த செயின் இல்லாதது… வார்த்தையில சொல்ல முடியாது பூ. அப்போ உன்மேல கோபம், வருத்தம் எல்லாம் இருந்தது தான். ஆனால் அந்த செயின் இல்லாதது… நீ இனி என் வாழ்க்கையில இல்லைங்கிறதை அப்பப்போ நினைவுபடுத்தி கொல்லாம கொல்லும். நீ இல்லாத அப்பவும் என்னோடதான் இருக்கன்னு ஒரு உணர்வை கொடுத்தது அந்த செயின். ஏண்டா அதை கழட்டி கொடுத்தோம்ன்னு நினைத்து வருந்தாத நாளில்லை. அதே மாதிரி வேற செய்து போட்டிருக்கலாம். ஆனால் அதெல்லாம் என் பூவோடதாகிடாதே. சோ, ப்ளீஸ் அதை கொடுத்துடேன் மலரே!”

அவன் அந்த சங்கிலி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பேசிக்கொண்டே அதை கேட்க அப்போதும் பூவிடம் பதிலில்லை.

“நான் கேட்டுட்டே இருக்கேன். நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” பாரியிடம் சிறு கோபம் எட்டிப்பார்த்தது.

“பூ…”

“என்கிட்ட தான் இருக்கு. பட் உனக்கு கொடுக்க முடியாது வேந்தா.” மென்குரலில் வலியோடு கூறினாள்.

“ஏன்?”

“உனக்கு வேணான்னு… அதை அறுத்து என் கையில் கொடுத்தப்போ, என்னையே நீ தூக்கிப்போட்ட மாதிரி இருந்துச்சு. தெரிஞ்சுதான தூக்கிப்போட்ட. அது என்கிட்டவே இருக்கட்டும்.” ஒருவித மரத்த நிலை.

“இப்பவும் நான் தான் கேட்கிறேன் பூ.”

“தோணும் போது தர்றேன்” என்றவள் அவன் எத்தனையோ முறை கேட்டும் இன்றுவரை கொடுக்கவில்லை.

இப்போதும் பாரி அதனை கேட்டும் மறுத்துவிட்டாள்.

கார் சென்று மறையும் வரை பார்த்திருந்த பாரி… நொடியில் காவலனாக மாறியிருந்தான்.

“ஜென் உனக்கு நைட் ட்யூட்டி அலார்ட் பண்ணியிருக்கேன். நீ ஆபீஸ் போயிடு” என்றான்.

“எனக்கு நைட் ட்யூட்டி…” ஜென் கேள்வியாக இழுத்தாள்.

“இன்னைக்கு இங்க ஒரு சம்பவம் நடக்கப்போகுது ஜென். நீ தனியா இருக்க வேணாம். ஸ்டேஷனில் இருக்கிறதுதான் உனக்கு சேஃப்” என்று அப்போதே அவளை கிளப்பி ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்துவிட்டுதான் தன் வீட்டிற்குள் சென்றான்.

“பாரி நீ ரொம்ப பயப்படுற மாதிரி தோணுது எனக்கு?”

உன்னுடைய பயம் தேவையில்லாத ஒன்றென எனும் விதமாக அவி கூறினான்.

“அந்த ராயப்பனை அவ்வளவு எளிதா நினைத்திடக் கூடாது அவி” என்ற பாரி… “அவன் இன்னைக்கு எனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டான். நைட் நம்ம வீட்டில் ஆள் இறங்க போறானுங்க” என சாதராணமாகக் கூறினான்.

“பாரி…” அவி அதிர்ந்து விளித்தான்.

“இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு அவி” என்ற பாரி… “நீயும் கிளம்பு” என்றான்.

“எங்க?”

“உன் வீட்ல போயிரு. இல்லைன்னா ஆபீஸில் தங்கிக்கோ” என்றான்.

“அப்புறம்?” அவி கோபமாக வினவினானோ.

“எல்லாரையும் அனுப்பி வச்சிட்டு… நீ தனியா அவன்கிட்ட என்னை வந்து போட்டுத்தள்ளுன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நிக்கப்போறீயா?” என்று சீறினான்.

“நான் இல்லைன்னா என்னை பணிய வைக்க அவன் என் குடும்பத்தை தாண்டா தூக்குவான். அதுக்கு நான் இங்க இருந்தே ஆகணும்.”

“அதான் எல்லாரையும் அனுப்பி வச்சிட்டியே!”

“நீயும் இங்கிருந்து போ அவி.” கிட்டத்தட்ட பாரி கெஞ்சினான்.

“முடியாது பாரி. உனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் என்னால எப்படிடா தனியா விட்டுப்போக முடியும்?”

“முதலில் பூ. இப்போ நீயா?” என்ற பாரி “எனக்குன்னு நல்லா வந்து வாய்ச்சிங்கடா!” என்ற பாரி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

நேரம் அதன் பணியை செவ்வனவே செய்திட…

“பசிக்குது அவி” என்றான் பாரி.

பெயருக்கு ஏதோ செய்து இருவரும் உண்டு முடிக்க…

“உனக்கெப்படி தெரியும் பாரி?” என வீட்டிற்கு ராயப்பன் ஆள் அனுப்பியிருப்பது எப்படி அவனுக்குத் தெரியுமென்பதை தெரிந்துகொள்ள அவி வினவினான்.

“அவன் இடத்துல ஸ்பை வச்சிருக்கேன் அவி.” அடக்கப்பட்ட சிரிப்பு பாரியிடம்.

“என்ன விளையாட்டா?”

“பின்ன என்னடா…” என்ற பாரி “ஏற்கனவே என்னை போட ஆள் அனுப்பி ஏமாந்துபோயிருக்கான். இன்னும் ஒருநாள் நான் உயிரோட இருந்தாலும் அவனுக்கு ஆபத்து அப்போ என்னை திரும்ப போடத்தானே முயற்சி செய்வான். ஒரு போலீஸா இதையெல்லாம் கெஸ் பண்ணனும் அவி” என்று அவனை சமாளித்தான்.

அப்போதுதான் அவிக்கு மூச்சே வந்தது.

“போடாங்… வாயில நல்லா வருது” என்று பாரியை திட்டிய அவி, “நீ சொன்னதை கேட்டு நானும் பயந்துட்டேன். உண்மையாவே வரானுங்களோன்னு. இது உன் கெஸ் தானா” என்று கேட்டுவிட்டு “எனக்கு தூக்கம் வருது நான் ரூமுக்கு போறேன்” என்று சென்றான்.

பாரி வேகமாக இருக்கையிலிருந்து எழ…

அவியும் வேகமாக திரும்பி வந்து, பாரியை அர்த்தமாக பார்த்தான்.

“எதுவும் பொய் சொல்லலையே?”

“இல்லையே” என்ற பாரிக்கு சற்று நேரம் முன் தான் கன்ட்ரோல் ரூமிலிருந்து தகவல் வந்திருந்தது. பாரி ஏற்கனவே அவனது சந்தேகத்திற்குள் இருக்கும் அனைத்து நபர்களின் எண்களையும் டிராக் செய்ய சொல்லியிருந்தான்.

அந்த வகையில் தான்… ராயப்பனின் காரியதரிசி பாரி அரெஸ்ட் செய்த கவுன்சிலர் மூலமாக பாரியை கொலை செய்ய வீட்டிற்கே இன்று இரவு ஆள் அனுப்புவதாக செய்தி கிடைத்தது.

அதனை அவியிடம் ஏதோ சிந்தனையில் சொல்லிவிட்டான் தான். ஆனால் அதன் பின்னர் அவியின் பயத்தை உணர்ந்து அவனை சகஜமாக்கவே தன்னுடைய யூகம் என்று சொல்லியிருந்தான்.

இப்போதும் பாரிக்கு அவி இங்கிருப்பதில் உடன்பாடில்லை. எத்தனை பேர் வருவார்கள். என்ன மாதிரி ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்பது தெரியாதே. தனியாக இருந்து சமாளித்தாலும், ஏதேனும் ஆகினாலும் அவையெல்லாம் அவனோடு மட்டும் முடிந்துவிடுமே என்று நினைத்துதான் அவியையும் அங்கிருந்து அனுப்ப பார்த்தான்.

ஆனால் அவி பிடிவாதமாக உடனிருந்திட… அவன் அறைக்குள் நுழைந்ததும் வெளிபக்கமாக தாழிட்டு வெளிவராது தடுக்கவே அத்தனை வேகமாக பாரி எழுந்திருந்தான்.

“நாளைக்கு யாரையோ பிக்கப் பண்ண போகணும் சொன்னியே பாரி… அதை கேட்கத்தான் வந்தேன்.”

“போனதும் தெரிஞ்சிடும். நீ போய் தூங்குடா” என்ற பாரி அவிக்கு முன் தன்னுடைய அறைக்குள் நுழைந்திருந்தான்.

பாரி உறங்கிவிட்டான் என்று தெரியும் வரை அவி ஹாலிலேயே அவனது அறையை பார்த்தவாறு அமர்ந்துவிட்டான்.

பாரி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டான் என்பதை அவனின் சீரான மூச்சில் உறுதிபடுத்துக்கொண்டே தன்னுடைய அறைக்குச் சென்று படுத்தான்.

அவி சென்றதும் பட்டென்று கண் விழித்த பாரி… சில கணம் அப்படியே படுத்திருந்தான்.

நேரம் ஒன்றை நெருங்கிட… மொட்டை மாடியில் காலடி தடத்தடக்கும் ஓசை கேட்டு மெல்ல எழுந்து வந்த பாரி உறங்கும் அவியை எட்டிபார்த்துவிட்டு அவ்வறையை வெளிபக்கமாக தாழிட்டு விட்டான். வரவேற்பறையின் நடுவில் நீளிருக்கையை இழுத்துப்போட்டு அதில் படுத்து, மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, கால் மேல் காலிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

எழும் சிறு சிறு ஓசையையும் அவதானித்தபடி இருந்தான் பாரி.

மாடி படி வீட்டிற்குள்ளேயே இருப்பதால்… மேலிருக்கும் மாடி கதவினை உட்பக்கமாக பாரி பூட்டியிருந்தான்.

கீழேயும் வாயில் கதவை உடைக்கும் சத்தம் கேட்க… மேலிருந்தும் சத்தம் வந்தது.

‘எந்தப்பக்கம் முதலில் உடைச்சிட்டு வறானுங்கன்னு பார்ப்போம்.’

பாரி அவர்களை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறான் என்பது அறியாமலேயே அவனை தாக்க ஆயுதத்தோடு வந்திருப்பவர்களின் நிலை பாரியின் கையில் என்னவாகப்போகிறதோ!

பாரியின் நிலையில் மாற்றமில்லை.

கால் மேல் காலிட்டு படுத்திருந்தவன் ஒரு கையால் குத்திட்டு இருந்த காலின் தொடையில் தட்டியபடி… மேலிருந்த காலினை ஆட்டிக்கொண்டிருந்தான்.

‘ஒரு கதவை உடைக்க இவனுங்களுக்கு எவ்வளவு நேரம்.’ சலிப்படைந்தான்.

‘இவனுங்களை ஸ்டேஷனுக்கு பார்சல் பண்ணிட்டு தூங்கனும். செம டயர்ட்.’

ஜென்னுக்கு அழைத்தவன் மிக மென்மையான குரலில்…

“ரெண்டு கான்ஸ்டபிள் கூட்டிட்டு போலீஸ் வண்டி எடுத்துக்கிட்டு வா ஜென். சைரன் போடாம வா” என்று சொல்லியவன், அவள் கேட்ட ஏன் எதற்கு என்பதை காதில் வாங்காதவனாக அழைப்பை துண்டித்திருந்தான்.

“பாரி…”

ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டு கண் விழித்த அவி, கதவினை திறக்க திறக்கவில்லை.

நொடியில் யூகித்துவிட்டான். பாரி வெளியில் பூட்டியிருக்கின்றான் என்று.

பாரியை இரண்டு முறை மெதுவாக அழைத்தவன், அவனிடமிருந்து பதிலின்றி போக… மூன்றாவது முறை சற்று உரக்க அவனது பெயரை விளித்திட… சரியாக இரு பக்கமும் கதவினை உடைத்துக்கொண்டு தடி தடியாக அக்மார்க் ரவுடி தோற்றத்தில் பத்து பேர் திபுதிபுவென உள்ளுக்குள் வந்தனர்.

பாரி படுத்திருந்த நீளிருக்கையைச் சுற்றி வட்டமிட்டவாறு கைகளில் பெரிய பெரிய அரிவாள், கத்தியுடன் நின்றனர்.

சாவகாசமாக இரு கையையும் தலைக்கு மேல் கோர்த்து உயர்த்தி சோம்பல் முறித்தவனாக எழுந்து குதித்தபடி நின்ற பாரி… தன்னுடைய டி-ஷர்ட்டை கீழே இழுத்து விட்டவனாக,

“எவ்வளவு நேரம்டா வெயிட் பண்ணுறது?” எனக் கேட்டான்.

பாரியின் குரல் தெளிவாக அவிக்கு கேட்டிட…

“பாரி… பாரி… யாருடா, யாரு வந்திருக்கா? கதவை திற பாரி” என்று கத்தினான்.

“நான் கதவை திறக்குற வரை உன்கிட்டயிருந்து எந்த சத்தமும் வரக்கூடாது.” பாரியின் இந்த அதட்டலில் அவி அமைதியானாளும், கதவினை திறக்க வழியிருக்கா என்று ஆராய்ந்தான்.

“ஒரு கதவை ஒரே உதையில் உடைக்க வேண்டாமா? நீங்களெல்லாம் என்னடா ரவுடி… உங்களையெல்லாம் நம்பி நான் எப்படிடா என் வித்தையை காட்டுறது.” பாரியின் கேலியில் ஒவ்வொருத்தனும் பற்களை கடித்தனர்.

“சரி ஆரம்பிக்கலாமா?” என்று கேட்ட பாரி இரு கை விரல்களையும் கோர்த்து தனக்கு முன்னால் நீட்டி நெட்டி முறித்தான்.

“பொருங்க டிசி சார்…” என்று உள்ளே வந்தான் அந்த கவுன்சிலர்.

“அடடா நீங்களா?” ஆச்சர்ய பாவனைக்காட்டிய பாரி, “உங்களை நான் இங்க எதிர்பார்க்களைங்களே” என்றான்.

“என்ன நக்கலா?” என்ற கவுன்சிலர், “அமிர்தா கேஸ் என்னால பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டு, உன்கிட்ட இருக்க என் ஆளுங்க… இந்த கேஸ் சம்பந்தப்பட்ட ஆதாரம் எல்லாம் எங்ககிட்ட ஒப்படடைக்கிறன்னு சொன்னினா… உன்னை இப்படியே விட்டுட்டு நாங்க போயிடுவோம். இல்லை நான் நேர்மையின் சிகரம்… ரொம்ப பெரிய பருப்புன்னு காட்ட நினைச்சா உனக்குத்தான் சேதாரமகிப்போவும். அப்புறம் அய்யோ அம்மான்னு கத்த நீ உயிரோடு இருக்கமாட்ட” என்றான்.

“அய்யோ… செமண்ணா… செமயா மிரட்டுறீங்க” என்ற பாரி இருக்கையில் தோரணையாக அமர்ந்தான்.

“நான் இன்னும் மிரட்டவே இல்லை டிசி…”

“அச்சோ… பயந்துட்டங்க கவுன்சிலர் ஐயா” என்று போலி பணிவு காட்டினான்.

அதில் சூடாகிய கவுன்சிலர்…

“இவன்கிட்ட பேசியெல்லாம் பலனில்லைடா, போட்டு தள்ளுங்கடா” என்று தன்னுடைய அடியாட்களுக்கு உத்தரவிட்டான்.

“நான் ரெடி” என்ற பாரி…

“எப்படி ஒவ்வொருத்தரா வறீங்களா இல்லை மொத்தமா வறீங்களா?” என்று கேட்கும்போது பத்து தடியன்களும் மொத்தமாக தாக்க… உட்கார்ந்திருந்த நிலையிலேயே கோச்சிற்கு கீழே குனிந்து மறைத்து வைத்திருந்த வீடு துடைக்கும் குச்சியை எடுத்து தலைக்கு மேல் வைத்து மொத்தமாக தடுத்தவன்,

“வீட்ல இதுதான் இருக்கு. அவசரத்துக்கு உருட்டு கட்டை ரெடி பண்ண முடியல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றவாறு தனக்கு முன்னிருந்த இருவரின் வயிற்றிலேயே இரு கால்களாலும் உதைத்தவன் அவர்கள் கீழே தள்ளிச்சென்று விழவும், அடுத்தடுத்து நால்வரை அம்முறையிலேயே விழச் செய்தவன்… மேலே தடுத்து பிடித்திருந்தவர்களை, மாப்பினை சுற்றி சுழன்றடித்தான்.

தரையில் பட்டுத் தெறிக்கும் நீர் துளிகளாக சிதறினர்.

“என்னங்கடா ஒரு அடிக்கே சுருண்டு விழுறீங்க?” என்ற பாரி இருக்கையிலிருந்து துள்ளி குதித்து எழ… இரண்டு தடியர்கள் அவன் மேல் பாய்ந்தனர். கை முஷ்டியை இறுக்கி, வலது கையால் ஒருவனின் மூக்கை உடைத்து ரத்தம் கொட்ட வைத்தவன், மற்றொரு கையால் இன்னொருவனின் வயிற்றில் ஓங்கி குத்தி ஒடுங்க வைத்தான்.

ஒருவன் அங்கிருந்த நாற்காலியை எடுத்து பாரியின் மீது தூக்கி எறிய… சரியாக பிடித்து கீழே அலுங்காமல் வைத்தான்.

“இதெல்லாம் நியாயமா சம்பாதிச்சு வாங்குன பொருள்… சின்ன டேமேஜ் கூட ஆகக்கூடாது” என்று எச்சரித்தான்.

ஒருவன் கோடாரி போன்ற ஒன்றை பாரியின் மண்டையை பார்த்து குறி வைத்திட… உடலை ஒரு பக்கமாக சாய்த்து பாரி அதிலிருந்து தப்பிக்க… சுவற்றில் சென்று அடித்தது அது.

சுவற்றில் கோடு விழுந்திட…

“டேய் இது கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ் டா… வீட்டுக்கு சேதாரம் ஆகாம அடி வாங்கிக்கோங்க” என்ற பாரி அடுத்து தன்னை நோக்கி அரிவாளோடு ஓடி வந்தவனின் கையை வளைத்து பிடித்து ஒடித்ததோடு அந்த அரிவாளை பிடிங்கி பின்னால் தாக்க வந்தவனின் கையிலேயே கிழித்திருந்தான்.

அந்நேரம் வெளியில் கேட்ட பல்வேறு வகையான அடிதடி சத்தத்தில் அவி கதவினை படபடவென தட்டினான்.

“உள்ள யாரோ இருக்காங்க கதவை திறந்து பிடிங்கடா… இவன் எப்படி நம்மளை அடிக்கிறான்னு பார்க்கிறேன்” என்று கவுன்சிலர் கூற… ஒருவன் வேகமாக ஓடிச்சென்று அவியின் அறை கதவை தொடுவதற்கு முன் குறுக்கே பாய்ந்து தடையாக நின்றிருந்தான் பாரி.

“இப்போ கை வைடா பார்க்கலாம்” என்றவன், அவனின் விரல்களை ஒன்றாக பிடித்து பின்னோக்கி அழுத்த அவன் நரம்பில் ஏற்பட்ட வலியால் துடித்து கீழே சரிந்தான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் ஒவ்வொரு விதமாக தன்னை தாக்க வந்த ஒவ்வொருவரையும் வலியால் கீழே உருண்டு புரள வைத்தான். ஒருவனும் எழும் நிலையில் இல்லை. வலியின் முனகளில் எழும் திராணியற்று விழுந்து கிடந்தனர்.

“என்னடா அதுக்குள்ள இப்படி சாய்ஞ்சிட்டிங்க… வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும் நினைக்கலையே” என்ற பாரி… “எங்கடா உங்க அண்ணாத்த அடியை பார்த்து மிரண்டு ஓடிட்டாரா” என்று சத்தமாக சிரித்தான்.

அவி கதவினை தட்டிக்கொண்டே இருக்க… அவனது தட்டலில் மெல்ல மெல்ல தாழ்ப்பாள் விலக ஆரம்பித்திருந்தது.

காவலர்களுடன் ஜென் வந்து சேர… வீடு இருந்த நிலையை கண்டு,

“ராயப்பன் ஆள் அனுப்பினானா?” என்று அர்த்தமாகக் கேட்டாள்.

“எல்லாம் மொக்கை பசங்க ஜென்” என்று சொல்லிய பாரி பார்வையை தாழ்த்தி தன்னுடைய ஆடையை உதற, அவனுக்கு பக்கவாட்டாக கையில் கத்தியோடு பாரியை குத்தும் நோக்கில் பாய்ந்து வந்தான் கவுன்சிலர்.

அவனிடமிருந்து குத்து வாங்காமல் இருக்க… பாரி சற்று நகர, அந்நேரம் அவனுக்கு பின்னாலிருந்த அறையின் கதவினை திறந்துகொண்டு வெளியில் வந்திருந்தான் அவி.

சடுதியில் கதவின் தாழ்ப்பாள் விலகி வெளியில் வந்த அவி… அதிக விசையுடன் தன்னை நெருங்கிய கத்தியின் கூர்முனையை எதிர்பார்க்கவில்லை.

பாரி நகர்வான் என்று எதிர்பார்த்திடாத கவுன்சிலர்… பின்னிழுத்து அழுத்தத்துடன் முன் செலுத்தியை கையின் விசையை நிறுத்த முடியாது கத்தியை சொருகியிருந்தான்.

“அவி…” என்ற ஜென்னின் அலறல் அவ்வீட்டை அதிர வைத்தது.

*****

அரை மணி நேரத்திற்கு பின்…

கலங்கிய கண்களோடு மருத்துவமனையில் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன். கண்கள் ரத்த நிறமாக மாற்றம் பெற்றிருந்தன. தான் ஆண் என்கிற ஒரு காரணத்திற்காகவே அழுகையை கட்டுபடுத்தியதன் தாக்கம் அது.

உடன் ஜென். அவனுக்கு நிகரான அதே வருத்தத்துடன் கலங்கிய விழிகளோடு அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு மருத்துவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

இருவருமே ஒருவித மரத்த நிலையில் இருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

சில நிமிடங்களில் உள்ளங்கையில் கட்டுடன் சிகிச்சை அறையிலிருந்து வெளியில் வந்தான் பாரி.

வேகமாக அவனிடம் ஓடிய அவி… பாரியின் கையிலிருந்த கட்டினை பார்த்தவாறே,

“சாரி… சாரி பாரி. நான் குறுக்க வராம இருந்திருந்தா இப்படி ஆகியிருக்காது. நான் தான் காரணம். நீயா கதவை திறக்கும் வரை நான் வெயிட் பண்ணியிருக்கனும். சாரிடா… வெளியில் சத்தம் அதிகமா இருக்கவும் உனக்கு எதாவது ஆகிடுமோன்னு தான் அவசரமாக கதவை திறந்து வெளிய வந்தேன். கடைசியில நானே உனக்கு அடிபட காரணமாகிட்டேன்” என்று விடாது மன்னிப்புடன் சேர்ந்து புலம்பியபடி இருந்த அவியை அடக்கும் வழி தெரியாது பாரி ஜென்னை பார்க்க…

“அவி ரிலாக்ஸ் டா… பாரியை முதலில் உட்கார வைடா. அவன் பாரு டயர்டா தெரியுறான்” என்று சொல்ல அதன் பிறகே தன் வாயினை மூடி பாரியை இருக்கையில் அமர விட்டான் அவி.

அவி ஒருவித குற்றவுணர்வோடு பாரியின் முகத்தையும் அவனது கட்டிட்ட கையையும் மாற்றி மாற்றி பார்க்க… அதில் பாரிக்கு எரிச்சல் தான் வந்தது.

“அவி அம் ஓகே டா. இந்த வலியை கூட தாங்கிக்க முடியலன்னா நானெல்லாம் என்ன போலீஸ்” என்று அதட்டினான்.

“ஏன் போலீசுக்கெல்லாம் வலிக்காதா” என்ற அவி… “என்னால தான்” என மீண்டும் முகத்தை சுருக்கி ஆரம்பிக்க…

“டேய் போதும்டா… உனக்கு இந்த வலியே தேவலாம் போல” எனக்கூறி… “எனக்கு கையோட போச்சேன்னு இருக்கு. நான் கத்தியை பிடிக்காம இருந்திருந்தா… உன்னை…” அதனை சொல்லக்கூட பிடிக்காமல் பாரி நிறுத்திக்கொண்டான்.

“நான் வெளிய வராம இருந்திருந்தா உன்னை குத்த வந்தவன் என்மீது கத்தியை இறக்க பார்த்திருக்க மாட்டான். நீ என்னை காப்பாத்த கத்தி முனையை அவசரமா உள்ளங்கையால அழுத்தி பிடிச்சிருக்கமாட்ட” என்றான்.

கவுன்சிலர் கத்தியை பாரியை நோக்கி குறி வைத்திட… பாரி சற்று நகர கவுன்சிலரின் குறி தப்பி அச்சமயம் பாரிக்கு பின்னாலிருந்த அறையின் கதவினை திறந்து கொண்டு வெளியில் வந்த அவியின் மீது கத்தி சொருகயிருக்க… நொடியில் சுதாரித்த பாரி கத்தியின் கூர்முனை அவியின் வயிற்றியில் இறங்கும் முன் அழுத்தி பிடித்திருந்தான். பாரி பிடித்த அழுத்தத்திற்கு அவனது கையிலிருந்த கத்தியை கவுன்சிலர் உருவ… அது ஆழமாக பாரியின் உள்ளங்கையை பதம் பார்த்தது. கவுன்சிலரை ஒரு உதையில் சாய்த்திருந்தான்.

பாரியின் கையில் ரத்தத்தை பார்த்த அவி… நடந்ததை கிரகித்து “பாரி” என்று  பயத்தில் கத்தியிருந்தான்.

ரவுடிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த ஜென் அவியின் சத்தத்தில் “அவி” என்ற கூவலோடு வந்து பார்க்க… பாரி கையில் ரத்தம் சொட்ட நின்றிருந்தான்.

அந்நிலையிலும்… உதிரம் கண்டு பயந்து நிற்கும் அவியை பாரி எனக்கு ஒன்றுமில்லையெனத் தேற்றிக்கொண்டிருக்க… ஜென் தான் மற்ற காவலர்களுடன் கவுன்சிலர் உட்பட அவரது அடியாட்களை காவல்நிலையம் அனுப்பி வைத்துவிட்டு… அவியை அதட்டி அமைதிப்படுத்தி பாரியை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள்.

“சாரி பாரி…” அவி மீண்டும் மீண்டும் மன்னிப்பை கேட்டுக்கொண்டிருக்க…

“நீ இப்படியே கேட்டுகிட்டே இரு. நான் போறேன்” என்று பாரி இருக்கையிலிருந்து எழுந்தான்.

“என்ன பாரி சார் சொல்ல சொல்ல கேட்காம வீட்டுக்கு கிளம்பிட்டிங்க. ஒருநாள் இங்க ரெஸ்ட் எடுக்குற மாதிரி இருந்துட்டு நாளை போகலாம்” என்றபடி பாரிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அங்கு வந்தார்.

பாரியின் முகபாவமே அவனுக்கு மருத்துவமனையில் இருக்க விருப்பமில்லை என்பதை மருத்துவருக்கு உணர்த்திட… அதற்குமேல் அவன் அங்கு தங்குவதைப்பற்றி அவர் பேசவில்லை.

மருந்து சீட்டினை ஜென்னிடம் கொடுத்தவர்… “பெயின்கில்லர், அண்ட் ஆன்டிபயாடிக் எழுதியிருக்கேன். மறக்காம போட வைங்க. ஒன்பது தையல் போட்டிருக்கு. ஐந்து நாள்லஅதுவா உதிர்ந்திடும். அதற்கு பிறகு வூண்டில் ஆயின்ட்மெண்ட் அப்ளை பண்ணா சீக்கிரம் சரியாகிடும். டெய்லி வந்து ட்ரெஸ்ஸிங் பண்ணிக்கோங்க” என்றவர், “தண்ணீ படமா கவனமா பார்த்துக்கோங்க” என்றுவிட்டு செல்ல… “எல்லாம் என்னால தான்” என்று அவி ஆரம்பித்துவிட்டான்.

ஜென்னிற்கு அய்யோ என்றானது.

தலையில் கை வைத்த பாரி… “இப்போ உன்னை கொல்லப்போறேன் பாரேன்” என்று அவியின் கழுத்தை நெறிப்பது போல் சைகைக்காட்டிட…

“கொல்லு மச்சான் கொல்லு” என்று அவி அவனுக்கு வாகாக தன் கழுத்தை காட்டினான்.

“அவி ப்ளீஸ்டா… சத்தியமா முடியல. இத்தோட நிறுத்திக்கோ.” பாரி வெளிப்படையாக கெஞ்சிய பின்னரே அவி தன் புலம்பலை நிறுத்தினான்.

“ஜென் அவன் ட்ரைவ் பண்ண வேண்டாம்.”

காரின் ஓட்டுநர் இருக்கையில் அவி உட்கார… அதனை தடுத்தான் பாரி.

முறைத்துக்கொண்டு ஜென்னிற்கு ஓட்டுநர் இருக்கையை கொடுத்த அவி மாற்றி உட்கார… ஜென் வண்டியை சாலையில் செலுத்தினாள்.

“ஜென் ஸ்டேஷன் போ.” சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

“இப்போ எதுக்கு பாரி ஸ்டேஷன். வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமே” என்ற அவி பாரியின் முறைப்பில் வாயினை மூடிக்கொண்டான்.

ஜென்னின் அலைபேசிக்கு பூ அழைத்திருந்தாள்.

“ஜென் எங்கிருக்க? வேந்தனும், அவியும் கால் அட்டெண்ட் பண்ணல?” ஜென் லவுட்ஸ்பீக்கரில் போட்டிருக்க, பூவின் பதற்றமான குரல் பாரிக்கும் ஒலித்தது.

நடந்த களேபரத்தில் உண்டான நிகழ்வால் அவியும் பாரியும் மருத்துவமனைக்கு வரும் அவசரத்தில் அலைபேசியை எடுக்க மறந்திருந்தனர்.

“அது வந்து தமிழ்… பாரிக்கு…”

பட்டென்று அலைபேசியை எட்டி பறித்த பாரி…

“நான் ஸ்டேஷனில் இருக்கேன் பூ. நைட் ட்யூட்டி. இங்க சஸ்பெக்ட் இன்வெஸ்டிகேஷனில் இருந்தேன் அதான் அட்டெண்ட் பண்ண முடியல. அவி தூங்கிட்டு இருப்பான்” என்று கோர்வையாக பொய் கூறினான்.

“ஜென் ஏதோ சொல்ல வந்தாளே வேந்தா…”

“நான் சொல்லுறதை நம்ப மாட்டியாடி நீ.”

“ஹேய்… இதென்ன கேள்வி வேந்தா. நீயேன் டென்ஸ்டு ஆகுற” என்றவள், “உன்மேலிருக்க கோபத்தையும் மீறி உனக்கென்னவோன்னு ஃபீல் ஆனதும் பயந்து கால் பண்ணேன் பாரு… அப்படியே என் தலையை இந்த கார் கண்ணாடியிலே முட்டிக்கணும்” என்றவளின் குரல் அழுகைக்கு மாறியிருந்தது.

“ஓ காட்… ஸ்டாப் இட் பூ. இதென்ன எதுக்கெடுத்தாலும் இப்படி அழறது. இட்ஸ் இரிட்டேட்டிங்.” ஏற்கனவே பூ செல்லும்போது அவளின் அழுகை, உணர்வுகள் அடங்கிய அவளின் வார்த்தைகள் கொடுத்த தாக்கம்…  ஆட்களை பந்தாடியது… இடையில் அவி செய்து வைத்த குழப்பம்… அதனால் நேரந்த விபத்து… அது கொடுக்கும் வலி… அவியின் புலம்பல்கள் என வரிசையாக அழுத்தத்தின் பிடியில் இருந்தவனுக்கு பூவின் அழுகை கட்டுப்படுத்த முடியாத எரிச்சலை கொடுக்க கத்தி விட்டான்.

“போடா இனி நீயா கூப்பிடாம பேசவும் மாட்டேன். உன்கிட்ட வரவும் மாட்டேன். நானா உன்னைத்தேடி வர்றதாலதான் உனக்கு நான் அவ்வளவு ஈஸியா போயிட்டேன்ல… போடா…” என்றவள் பட்டென்று வைத்துவிட்டாள்.

அவியும் ஜென்னும் ஏன் இப்படி எனும் விதமாக ஏறிட…

“செம காண்டாகுது… சீக்கிரம் இந்த கேஸை முடிச்சு ஹேண்ட் ஓவர் பண்ணனும்” என்றான்.

காவல் நிலையம் வந்த பாரி கணபதியிடம் சென்று…

“ஒருத்தனையும் விடாதீங்க அங்கிள். எல்லாருடைய பெயரையும் சரியா மென்ஷன் பண்ணுங்க. முக்கியமா இந்த கவுன்சிலர் பெயரை. எவ்வளவு தைரியமிருந்தா, நான் விலகியதும் என் அவியை குத்த பார்த்திருப்பான்” என்று அவனை காலினால் நன்கு உதைத்தான்.

ஜென்னுடன் உள்ளே வந்த அவிக்கு பாரியின் வார்த்தை அத்தனை நேரமிருந்த அவனது தவிப்பை போக்கி… அந்நிலையிலும் மகிழ வைத்தது.

“ஜென் ராயப்பனுக்கு ரெண்டு நாள் டைம் கொடுக்கலாம் நினைத்தேன். இப்போ அது வேணாம். நாளைக்கு மதியம் கமிஷனரை பார்த்து இந்த கேஸை மொத்தமா முடிச்சு ஒவ்வொருத்தனையும் தனித்தனியா அலற விடுறேன்” என்றவன்… “ஏற்கனவே அரேஸ்ட் ஆகியிருக்க அந்த நாலு பேரோட இவனுங்களையும் அந்த இருட்டு அறையிலேயே அடைச்சு வைங்க அங்கிள்” என்றான். தன்னுடைய கோபத்தை சற்றும் குறைத்துக்கொள்ளாது.

“டேய் வேணாம் நான் யாருன்னு தெரியாம மோதுற…” கவுன்சிலர் துள்ளினான்.

“நீ போன கேஸில் எப்படி வேணுன்னாலும் வெளிய வந்திருக்கலாம். ஆனால் இப்போ அது முடியாது… பக்காவா உன்னை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கேன். உன் வாழ்க்கை முழுக்க ஜெயில் தான்” என்ற பாரி அவனின் அதிர்ந்த முகம் கண்டு திருப்தி அடைந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
40
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்