Loading

அத்தியாயம் 63 :

சிறு தொலைவிலிருந்த பூங்காவிற்குள் பாரி நுழைந்ததும் சத்யாவும் சிறு இடைவெளியில் பாரியைத் தொடர்ந்து உள் சென்றான்.

மாலை வேளை என்பதால் ஆங்காங்கே சிறியவர்கள் விளையாடிக் கொண்டிருக்க… பெரியவர்கள் நடந்து கொண்டும் உடற்பயிற்சி செய்தபடியும்… சிலர் அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். மொத்தத்தில் பூங்கா ஒரு பரபரப்புடனே காணப்பட்டது.

பாரி சற்று அமைதியான இடமாக பார்த்து கால்மேடையின் ஒரு முனையில் அமர… இரண்டு சுற்று முடித்து எதார்த்தமாக பாரி அமர்ந்த இருக்கையிலேயே மற்றொரு முனையில் சத்யா அமர்ந்தான்.

பாரி தன்னுடைய அலைபேசியை முகத்திற்கு நேரே பிடித்து… காணொளி அழைப்பு பேசுவதைப்போல் காட்டிக்கொள்ள… சத்யா காதிலிருந்த ப்ளூடூத்தை அடிக்கடி தொட்டு அதில் பேசுவது போல் பாவனை செய்தான்.

ஆனால் பேசிக்கொண்டது அவர்கள் இருவருமே. பார்ப்பவரின் கண்களுக்கு அவ்விருவர் தான் பேசிக்கொள்கின்றனர் என்பது தெரியாதளவிற்கு தங்களை அந்நியர்களாகக் காட்டிக்கொண்டனர்.

“அவங்க உடன் பிறந்த தங்கை கிடையாது. சித்தப்பா மகள். அவர் வேலை கிடைத்து போனப்போ… அவங்க தங்கை இங்க படிச்சிட்டிருந்தாங்க. அதனால போகும்போது அம்மாவை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார். படிப்பு முடிந்து தங்கையை அழைக்க வந்தப்போ அவங்க காதல் திருமணம் செய்துகொண்டது தெரிந்து கோபத்தில் சென்றவர்… மூன்று மாதம் கழித்து மீண்டும் வந்தபோது அவங்க தங்கையை பற்றி எந்த தகவலும் இல்லாமல் திரும்பி போய்ட்டார்.

உன் கெஸ் சரிதான் பாரி.”

“ஷ்யூர்?”

“எஸ்… செக்ரி தங்கை அவங்க தான்.”

“தேன்க்ஸ் சத்யா” என்ற பாரி “இன்னொரு விஷயத்திலும் ஹெல்ப் வேணுமே?” என்றான்.

“சொல்லுடா.”

பாரி சத்யாவின் பக்கம் ஒரு துண்டுச்சீட்டை நகர்த்தினான்.

அதில் பாரி எழுதியிருந்த குறிப்பை படித்ததும்…

“உனக்கே எல்லா பவரும் இருக்கு. நீ டிரெக்டா டீல் பண்ணலாமே?” என தன்னுடைய சந்தேகத்தை சத்யா வினவினான்.

“சிலதை இப்படித்தான் டீல் பண்ணனும் சத்யா. பட் செக்ரி சார் விஷயத்தில் நானா அலைய எனக்கு டைம் இல்லை. இந்த அமிர்தா கேஸ் ரொம்ப குடையது. அதுதான் உன்கிட்ட கொடுத்தேன்.

இப்போ இது… ராயப்பன் என்னை இன்ச் பை இன்ச் நோட் பண்ணலாம். அதான் உன்கிட்ட கேட்கிறேன்.” தன்னிலை புரிய வைத்தான் பாரி.

“ஓகே பாரி… டூ டேசில் ரிப்போர்ட் பன்றேன்.”

“ஃபைன்… ரொம்பவே கவனமா இரு சத்யா.”

“டிடெக்டிவ் வேலையில் எல்லா விதமான ஆபத்துகளும் பழகிப்போச்சு பாரி.” சத்யா புன்னகையுடனே கூறினான்.

அதனை பாரியும் தலையசைப்புடன் ஆமோதித்தான்.

“நீ என்னை கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ண வேணாம் சத்யா. நாளை மறுநாள் நைட் உன் இடத்துக்கு நானே வரேன்” என்ற பாரி… அலைபேசியில் உரையாடுவது போலவே சத்யாவிடம் விடைபெற்று சென்றுவிட… மேலும் சில பல நிமிடங்கள் அங்கு உலாவிவிட்டே சத்யா சென்றான்.

மீண்டும் தன்னுடைய அலுவலகம் செல்லாது தங்களுடைய அச்சீவர்ஸ்க்கு வந்த பாரி… தான் வந்தததையும் கவனிக்காது அவியும், பூவும் ஏதோ மும்முரமாக கணினியில் பார்த்துக்கொண்டிருக்க… அங்கிருந்த நீளிருக்கையில் அமைதியாக அமர்ந்தான்.

தன்னவளின் மீது பார்வையை அழுத்தமாக பதித்தவாறு.

சில நொடிகளில் குறுகுறுப்பை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க… எதிரே அசையாது தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்த பாரியை கண்டு புன்னகைத்தவள், பட்டென்று ஒற்றை கண்ணடித்து பறக்கும் முத்தம் ஒன்றை அவனை நோக்கி அனுப்பி வைத்தாள்.

அதில் அதிர்ந்து சுயம் மீண்டவன் அவியை பார்க்க… அவனோ கணினிக்குள் புதைந்திருந்தான்.

பாரியின் அருகில் வந்தமர்ந்த பூ…

“ஏதோ உனக்குள்ள ஓடிட்டு இருக்கு. என்னது அது?” எனக் கேட்டாள்.

“அவிக்கு தெரிய வரும்போது உனக்கும் தெரியும்” என்றவன்,

“அவி உன் வீடு சும்மா தான இருக்கு. எனக்கு அதோட கீ வேணும்?” என எவ்வித முகாந்திரமும் இல்லாது கேட்டான்.

பாரியின் குரலில் தான் அவன் வந்ததையே அவி உணர்ந்தான்.

கணினி திரையிலிருந்து பார்வையை விலக்கி பாரியை ஏறிட்டவன்… ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை.

“வீட்ல இருக்கு பாரி. நைட் தர்றேன்.”

“ஏன் எதுக்குன்னு கேட்கமாட்டியா அவி?”

“சொல்லணுமுன்னா நீயே சொல்லுவ!”

அதற்கு பாரியிடம் பதிலில்லை. மௌனம் மட்டுமே.

“அமிர்தா கேஸ் இன்னும் ரெண்டு நாள்ல முடித்து கமிஷ்னர்கிட்ட ஃபுல் ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுவேன்.”

அவியும் பூவும் பாரி என்ன சொல்ல வருகிறானென்று பார்த்தனர்.

“அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஃபிரீ தான். நானும் ஐடியாஸ் கொடுக்கிறேன்” என்றான்.

இப்போதுதான் பாரி என்ன சொல்ல வருகிறானென்றே இருவருக்கும் புரிந்தது.

“உன்னோட ஹெல்ப் அவசியம் தேவை பாரி. நானே கேட்கணும் இருந்தேன்” என்ற அவி “ஆர்மி சேப்ட்டிக்காகன்னு பார்க்கும்போது உனக்கு நிறைய தகவல்கள் தெரிந்திருக்குமே” என்றான்.

“ம்ம்ம்… பண்ணிடலாம்” என்ற பாரி பூவின் பக்கம் திரும்பி…

“நீ யூபிஎஸ்சி ட்ரை பண்ணு… இன்னும் ரெண்டு நாள்ல நீ டெல்லி போகணும். நான் எல்லாம் அரேன்ஞ் பண்ணிட்டேன்” என்று சொல்லிட… அவனை அதிர்வோடு முறைத்து பார்த்தாள் பூ.

“பூவோட ஜாப் நானே சேர்த்து பார்க்கிறேன்” என்று அவியிடமும் கூறினான்.

பூவின் தோற்றத்தைக் கண்டு அவி சிரிக்க… அதில் கலைந்தவள்,

“என்னால முடியாது. திரும்ப படிக்கிறதெல்லாம் எனக்கு செட் ஆகாது. அதுவும் டெல்லி போய் தனியாலாம், என்னால முடியவே முடியாது” என்று மறுத்தாள்.

“நீ படிக்கிற அவ்வளவு தான்.” பாரியின் இந்த குரலை எப்பொதுமே மீறும் துணிவு அவளுக்கு இருந்ததில்லை.

“அவிக்கு யார் ஹெல்ப் பண்ணுவா?”

“அதைத்தான் நான் சொன்னனே. நான் இருக்கேன். ஜென் இருக்காள். பார்த்துப்போம்.”

“உங்க ஜாப் இது இல்லை.”

“ஹலோ… நாங்க படிச்சது இதைத்தான். நாங்க ரெண்டு பேருமே படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலையைத்தான் பார்த்திட்டு இருக்கோம்” என்றான்.

பூ என்ன கூறினாலும் அதற்கு தகுந்த பதிலை பாரி வைத்திருந்தான்.

“ஏஜ் பார் ஆகிடுச்சு வேந்தா!”

இருவரின் விவாதத்தையும் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த அவி… பூ சொல்லியதில்,

“எதே” என்றிட…

“ஆமாம் தானே அவி. நமக்கெல்லாம் வயசாகிப்போச்சு தானே” என்று சொல்லி மேலும் அவனை அதிர்ச்சியடையச் செய்தாள்.

“தமிழ் எனக்கு இன்னும் மேரேஜ் கூட ஆகல. அதுக்குள்ள வயசாகிப்போச்சு சொல்லாத பயந்து வருது” என்றான். வராத கண்ணீரை துடைத்தவாறு.

அதில் பாரி அட்டகாசமாக சிரித்தான்.

“டேய் சிரிக்காதடா” என்று அவி பாவம்போல் கூறினான்.

“நீ சொன்னாலும் அதுதான் உண்மை அவி.” மேலும் அவியை பாரி சீண்டினான்.

“டேய் நிறுத்துங்கடா… நான் எக்ஸாம் எழுத ஏஜ் பார் ஆகிடுச்சுன்னு தான் சொன்னேன்” என்று இருவரையும் அதட்டினாள் பூ.

“முப்பத்தி ரெண்டு தான் ஐபிஸ் லிமிட். உனக்கு இன்னும் நாலு வருஷம் இருக்கே” என்றான் பாரி.

பாரி விடமாட்டானென்று பூவிற்கு நன்றாகத் தெரிந்தது. இருப்பினும் அவளுக்கு அவனைவிட்டு செல்ல முடியாதே. அதற்காகவே மறுத்தாள்.

“என்னால முடியாது வேந்தா.”

“நீ ஆசைப்பட்ட தானே பூ. உனக்கு எல்லா ஹெல்ப்பும் நான் பன்றேன்.”

“ப்ளீஸ் வேந்தா என்னால இப்போ முடியாது.”

“பர்ஸ்ட் தான் பொன்னுக்கு பயந்து வேண்டான்னு இருந்த. இப்போதான் உனக்கு தடை இல்லையே பூ. எதுக்கு இவ்வளவு அடமெண்டா இருக்க?”

“நீதான் பிடிவாதம் பிடிக்குற வேந்தா.”

இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது வாதம் செய்தனர்.

“உனக்காகத்தானே தமிழ் அவன் சொல்றான். உன்னோட விருப்பம் கூட போலீஸ் தான. இப்போ அதுக்கு சான்ஸ் கிடைக்குது. ஏன் வேண்டாம் சொல்ற?” அவியும் அவளுக்கு எடுத்துக்கூறி புரிய வைக்க முயன்றான்.

“அவள் டெல்லி போவாள் அவி.” பாரி அழுத்தமாகக் கூறினான்.

“என்னால போக முடியாது வேந்தா. இதுக்கு மேல என்னை போகச்சொல்லி கம்பள் பண்ணாத” என்றவள் ” நான் வீட்டுக்கு போறேன் அவி” என்று பாரியை திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.

“என்னடா பாரி இதெல்லாம். அவளுக்கு இப்போ என்ன விருப்பமோ அதை செய்யட்டுமே!” பூ வெளியேறும்போது அவள் கண்கள் கலங்கியிருந்தது. அதனாலே பூவுக்கு சாதகமாக அவி பாரியிடம் பேசினான்.

“அவள் ஆசைப்பட்டதுதான அவி.”

“இப்போ அந்த ஆசை இல்லையோ என்னவோ!”

“இல்லைன்னு அவளை நேரா என் கண்ணை பார்த்து சொல்லச்சொல்லு” என்ற பாரி இருக்கையின் பின் தலையை சாய்த்தவாறு கண்களை மூடிக்கொண்டான்.

அவி இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்பதென்று தெரியாது குழம்பியிருந்தான்.

கனத்த அமைதி.

பாரியே அதனை கலைத்தான்.

“இன்டர்வியூவ் ஓவரா அவி?”

“ஆல்மோஸ்ட் டா. பரிதிண்ணா ஹெல்ப் பண்ணாங்க. இன்னும் எச்.ஆர் செலெக்ஷன் மட்டும் இருக்கு. நாளைக்கு முடிஞ்சிடும்.”

“நைஸ்.”

“என்கிட்ட எதாவது கேட்கணுமா பாரி?”

பாரி யோசித்து யோசித்து ஒவ்வொரு கேள்வியையும் கேட்டிட… அவன் ஏதோ தன்னிடம் கேட்க முடியாது தயங்குகிறான் என்பதை புரிந்து அவி கேட்டிருந்தான்.

“இஃப் யூ டோன்ட் மைண்ட்…” அதற்கு மேல் எப்படியென்று வார்த்தையை இழுத்தான்.

“அப்படியே ஒன்னு வைச்சேன்னா தெரியும் பார்த்துக்கோ” என்ற அவி “என்னன்னு சொல்லுடா” என்று கடுப்பாக மொழிந்தான்.

சின்ன வயதிலிருந்தே எதுவாக இருந்தாலும் பட்டென்று உரிமையாக சொல்லும், கேட்கும் பாரியைத்தான் அவனுக்குத் தெரியும். இன்று புதிதாக தயங்கி நிற்கும் பாரி அவிக்கு பழக்கமற்றவன். அதனாலே கடுகடுவென பேசினான்.

“நாளைக்கு ஏர்போர்ட் போகணும் அவி. உனக்கு ஒரு ஷாக், சர்ப்ரைஸ் எதுவா வேணாலும் இருக்கலாம். அதுக்கு தகுந்த மாதிரி பிரிப்பேர் ஆகிக்கோ” என்றவன் பரிதியிடமிருந்து அழைப்பு வர அதனை ஏற்றவனாக வெளியேறிவிட்டான்.

“பாரி எங்கடா இருக்க?”

“வீட்டுக்கு போகணும் பரிதிண்ணா.”

“சரி இங்க வீட்டுக்கு வா.”

“இல்லை வேண்டாம் பரிதிண்ணா.” உடனடியாக மறுத்தான்.

“இப்பவும் இங்கவர என்னடா பிரச்சினை?” எல்லாம் சரியாகிவிட்டதென்று நினைத்திருக்க… அப்படியெல்லாம் இல்லையென பாரியின் மறுப்பு உணர்த்தியது.

“அச்சோ பரிதிண்ணா… நான் மட்டும் எப்படி வரது. என்னோட சேர்ந்து வரணும் தான உங்க குட்டிம்மா நாலு வருஷமா அங்க வராமலே இருக்காள். இப்போ நான் மட்டும் அவளை விட்டு எப்படி வரதாம்!” பாரியின் அப்பேச்சில் பரிதிக்கு மனம் நிறைந்த போனது.

“நான் இப்போ உன்னை பார்க்கணுமே பாரி. மார்னிங் எல்லாரும் இருந்ததால பேச முடியல” என்றான்.

“குவார்ட்டரஸ் வந்திடுங்க பரிதிண்ணா.”

******

பரிதி வந்து பத்து நிமிடங்கள் ஆகியும் பூ அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பரிதியும் பல்வேறு விதமாக பல கோணங்களில் கேட்டு பார்த்துவிட்டான். அவள் வாய் திறப்பதாக இல்லை.

“ஜென் எங்க?”

“அவள் இன்னும் வரல.”

“அப்படியே நீயேன் இப்படியிருக்க அதுக்கும் பதில் சொல்லிடு.”

மீண்டும் வாயினை கப்பென மூடிக்கொண்டாள்.

வெளியில் பாரியின் வண்டி சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த பரிதி…

“பாரி இங்க வாடா?” என்று ஜென் வீட்டிற்கு வரச்செய்திருந்தான்.

பாரியை பார்த்ததும் ஹாலில் இருந்த பூ வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.

“நீதான் காரணமா?”

“இப்படி மொட்டையா கேட்டால் நான் எதைன்னு சொல்றது?”

“உன் பொண்டாட்டி ஏண்டா உம்முன்னு இருக்காள்?”

“அதை அப்புறம் பேசுவோம். நீங்க எதுக்கு என்னை பார்க்கணும் சொன்னீங்க? அதை சொல்லுங்க?” என பேச்சை மாற்றினான் பாரி.

இளா செய்யவிருந்ததை தடுத்து விவாஷினால் ஏற்படவிருந்த பல கோடி மதிப்புள்ள இழப்பை தடுத்ததற்கு பரிதி தேன்க்ஸ் சொல்லி தன் தம்பியை அணைத்துக்கொண்டான்.

“தேன்க்ஸ் சொல்லி பிரிக்கிறீங்களா பரிதிண்ணா?”

பாரியின் முகத்தை நேருக்கு நேர் ஏறிட்ட பரிதி… “அப்படியெல்லாம் இல்லைடா” என்றிட… பாரி முறுக்கிக்கொண்டான்.

“டேய் இதெல்லாம் ஓவர்டா” என்று பரிதி தன் தம்பியின் வயிற்றிலேயே குத்திட…

பாரி ஒன்று கூறினான்.

அதனை கேட்ட பரிதி தன் தம்பியை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“உனக்குள்ள இப்படியொரு காதல் மன்னன் இருக்கிறது தெரியாமப் போச்சே பாரி” என்று பரிதி அவனை கேலி செய்திட…

“உங்க குட்டிம்மா பாசத்துல இதை அவகிட்ட சொல்லிடாதீங்க” என்றான் பாரி.

பரிதியும் ஒப்புக்கொண்டான்.

பின்னர் பாரி பூவை அறைக்குள் எட்டிப்பார்த்து… அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு… பரிதியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“பரிதிண்ணா அந்த விவாஷ் பற்றி உங்களுக்கு என்னத்தெரியும். அதையெல்லாம் சொல்லுங்க?”

“ஏன் பாரி?”

“சொல்லுங்க பரிதிண்ணா” என்று அவன் அழுத்தமாகக் கேட்டதிலேயே விடயமிருக்கும் என்று உணர்ந்த பரிதி விவாஷ் பற்றி கூறினான்.

“அவன் குடும்பம் பற்றியெல்லாம் தெரியாது பாரி. அவன் மட்டும் தான் தனியா இருக்கான். நம்ம அப்பா பீல்டில் இருந்தப்போ, அப்போ போட்டியா இருந்தவர்கிட்ட பேக்டரியை டேக்கோவர் பண்ணியிருக்கான். அதுக்கு அப்புறம் தான் பிராண்ட் நேம் சேன்ஞ் பண்ணி…  என்கிட்ட போட்டி போட்டுட்டு இருக்கான். அவனுக்கு சொந்தம் யாரும் இருக்கிறதா தெரியல. அவன் இறங்கி செய்வதை பார்த்தால்… அவனுக்கு பின்னால பெரிய பலமா யாரோ இருக்காங்கன்னு மட்டும் தெரியுது பாரி. ஆனால் அது யாருன்னு தான் தெரியல” என்று பரிதி தனக்கு தெரிந்த எல்லாம் சொல்ல… பாரி யோசனைக்குச் சென்றான்.

“என்ன பாரி டீப் திங்க்கிங்?”

“அவன் ஒரு விஷயத்தில் என்கிட்ட மாட்டியிருக்கான் பரிதிண்ணா. இனி உங்களோட போட்டிபோட அவனிருக்க மாட்டான்.”

முதல் நாள் இரவு நால்வரும் ஹோட்டலிலிருந்து வெளியேறிய பின்னர் பாரி மீண்டும் உள் சென்றது நீபாவுடன் இருப்பது அவன்தானா என்பதை உறுதி செய்துகொள்வதற்குத்தான்.

நீபாவுடன் இருந்தது விவாஷ்.

இன்னும் எவ்வளவு நேரம் அவனிருப்பான் என்பதை தெரிந்துகொண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்த பாரி அவியிடம் மட்டும் வேலையிருப்பதாகக் கூறி பெண்கள் இருவருக்கும் தெரியாது மீண்டும் அதே ஹோட்டலிற்கு வந்தான்.

அப்போதுதான் விவாவும், நீபாவும் வெளியில் வந்தனர். அவர்களை பின்தொடர்ந்த பாரிக்கு, நீபா விவாவின் காதலி இல்லை என்பது தெளிவாகியது.

நீபாவைப்பற்றி ஜென்னிடம் பூ சொல்லிக் கொண்டிருக்கும் போது, பாரி அவர்களை திரும்பி திரும்பி பார்த்தற்கான காரணம், நீபா அலைபேசியில் விவாவிடம் காட்டியது. அவர்களுக்கு பின்னால் பாரி இருந்ததால் நீபா அலைபேசியில் காட்டியது அந்த இருட்டில் அவனால் அங்கு மட்டும் ஒளிர்ந்த வெளிச்சத்தால் தெளிவாக பார்க்க முடிந்தது.

அந்நொடி பாரிக்கு தோன்றியது…

‘இன்னும் எவ்வளவு தூரம் அமிர்தா வழக்கு இழுக்கும்’ என்பது தான்.

நீபாவும், விவாவும் பார்த்துக் கொண்டிருந்தது பாரிக்கு வேறெங்கோ பார்த்த நினைவு. சில நிமிட யோசனைகளில் கண்டும் கொண்டான்.

அதனால் பாரியின் சந்தேக வளையில் நீபாவும் விழுந்தாள். முன்னரே அந்த லிங்க வடிவ பென்ட்ரைவில் கண்ட காணொளியில் விவாஷும் பாரியிடம் சிக்கியிருந்தான்.

இருவரையும் பின் தொடர்ந்த பாரி, விவாஷ் நீபாவை அவளது வீட்டில் விடும்வரை கண்காணித்துவிட்டு திரும்பவும் ஹோட்டலிற்கு வந்தான்.

சர்வரின் உதவியோடு விவாஷ் மற்றும் நீபா உணவருந்திய மேசையில் பாரி வைத்த ரெக்கார்டரை அந்த சர்வரை சந்தித்து பெற்றுக்கொண்டதோடு வீட்டிற்கு வந்திருந்தான்.

பாரி சிந்தனையில் உழன்று கொண்டிருக்க…

“ஒருமுறை அந்த விவாஷ் நம்ம புட் பிரசர்வேட்டிவ்ஸில் கெமிக்கல் மிக்ஸ் பண்ண ஆள் ஏற்பாடு செய்திருந்தான். அதை கையும் களவுமா பிடித்து அந்த ஆள் மூலமா அவன் மாட்டிக்கிட்டான். அந்த விஷயத்தில் விவாஷிற்கு உதவி செய்தது மினிஸ்டர் ராயப்பன்” என்றி பரிதி தனக்குத் தெரிந்ததை கூறினான்.

“அவனுக்கும் ராயப்பனுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு பரிதிண்ணா” என்ற பாரி…

“அமிர்தாவை கொலை செய்தது…” என்று சொல்ல வர, யாரோ வரும் அரவம் கேட்டு தன் பேச்சை நிறுத்தினான்.

வந்தது யாருமல்ல ரித்தேஷுடன் ராயப்பன்.

“அடடே உங்க குடும்பம் ஒன்னு சேர்ந்துட்டிங்களா?” பாரியுடன் பரிதியை கண்டதும் ராயப்பன் கேட்ட கேள்வி இதுதான்.

அக்கேள்வியே அவருக்கு எதிராக அமைந்தது.

“எனக்கு கால் பண்ணி என் பேமிலி வைத்து மிரட்டியது நீங்க தான?” பாரியின் நேரடி கேள்வியில் நொடி தடுமாற்றம் ராயப்பனிடம் வந்து போனது. ஆனால் அதனை வெளிக்கட்டிக்கொண்டால் அவரென்ன அரசியல்வாதி.

“இனி மறுக்கவோ மறைக்கவோ ஒன்னுமில்லை பாரி வேந்தன்” என்ற ராயப்பன்,

“கொலை செய்தது நான் தான். உன்கிட்ட இருக்கும் ஆதாரமெல்லாம் எனக்கு வேணும். நீ என்ன எதிர்பார்க்குற?”

‘பெற்ற மகளையே கொலை செய்திருக்கும் இவர் மிருக இனத்தில் கூட சேர்த்திட முடியாதே! என்ன மனிதர் இவர்.’ பரிதி இப்படித்தான் நினைத்தான்.

குற்றவுணர்வு சிறிதுமின்றி உண்மையை தைரியமாக சொல்லிய ராயப்பன் அடுத்து பாரி கேட்டதில் சர்வமும் ஆடிப்போனார்.

ராயப்பனிற்கு… தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. பாரி கேட்டதில் உள்ளுக்குள் ஓடும் நடுக்கத்தை மறைத்து தன்னை விறைப்பாகக் காட்டிக்கொண்டவரின் உள்ளே பந்தயக் குதிரையின் வேகம். மனம் படபடத்தது.

சட்டென்று உலகமே அவருக்கு தட்டாமாலை சுற்றியது.

‘அவ்வளவு தான். ராயப்பன் க்ளோஸ்.’ ரித்தேஷ் அகம் மகிழ்ந்தான்.

“என்ன ராயப்பன் கொலையை நீங்கதான் செய்தீங்கன்னு சொன்னப்போ கூட இவ்வளவு பதட்டப்படலையே! அப்போ அவங்க உங்க மகளைவிட உங்களுக்கு ரொம்ப வேண்டபட்டவங்களோ?” பாரி அவரை சீண்டினான். வெறுப்பேற்றி அவர் வாயாலே உண்மையை உளற வைத்திட நினைத்தான்.

“என்னை எவ்வளவு சீண்டினாலும் என்கிட்ட நீ எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது.”

“ஆஹான்…”

“இந்த நக்கல் எல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்ற ராயப்பன், “உனக்கு என்ன வேணுமோ கேளு” என்றார் மிதப்பாக.

“நான் கேட்கிறதை உங்களால கொடுக்க முடியாதே ராயப்பன்” என்ற பாரி, “பேசாம நீங்க சரண்டர் ஆகிடுங்களேன்” என்று கேலி செய்தான்.

“அது முடியாது… நீ என்ன கேட்டாலும் செய்றேன். இந்த கேஸை விட்டுடு.”

“இது என்னாலும் முடியாதே ராயப்பன்” என்ற பாரி, “நான் முன்பு சொல்லியது தான்” என ராயப்பனின் அதிர்வுக்கு காரணமானதை மீண்டும் கூறினான்.

“கொலையை வேடிக்கை பார்த்தவங்கலாம் கொலையாளி ஆகிட முடியாது. அதை யார் செய்ததுன்னும் எனக்குத் தெரியும்.”

“வேண்டாம் பாரி…” அடிக்குரலில் சீறினார்.

“ச்சூ… இப்படி கத்தினா உங்களுக்குத்தான் டேஞ்சர். வயசான காலத்துல ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆகப்போகுது ராயப்பன்” என்று பாரி சிரிக்காது சொல்லியதில் பரிதி சத்தமாக சிரித்துவிட்டான்.

“உன்னை கொலையாளின்னு சொன்னப்போ வராத பதட்டம் அவனை சொல்லும்போது வருதே… ரொம்ப வேண்டபட்டவனோ” என்று கீழ்கண்ணால் ராய்ப்பனை நோக்கியவாறு பாரி வினவ அவரின் கைகளில் நடுக்கம்.

இவன் சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்த ராயப்பன்…

“உன் சாவு என் கையில் தாண்டா. உன் மொத்த குடும்பத்தையும் தூக்குறேன்” என விரல் நீட்டி எச்சரித்துச் சென்றார்.

“ரெண்டு நாளுக்கு முன் சப்பையா ரெண்டு பேத்தை அனுப்புனியே அந்த மாதிரி இல்லாம கொஞ்சம் திடமான ஆளா அனுப்பு” என்ற பாரியின் கிண்டல் பேச்சு ராயப்பனின் செவியைத் தீண்டி அவரின் பற்களை நரநரக்க வைத்தது.

“பாரி இந்த கொலைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. என்னை மட்டும் விட்டுடு.” ராயப்பன் சென்ற பின்பு பின்தங்கிய ரித்தேஷ் பாரியிடம் மண்டியிட்டான்.

கொலையை தவிர வேறொன்றில் அவன் வசமாக சிக்கியிருப்பதை அவன் அறியவில்லை. அதனை அறிந்திருந்த பாரியின் இதழில் விஷமப்புன்னகை.

பாரி பதில் சொல்லும் முன்னே ரித்தேஷ் ஓடிவிட்டான்.

“என்னடா பாரி இது வீடு தேடி வந்து மிரட்டிட்டுப் போறாங்க. பதவியில் இருந்தா என்ன வேணாலும் செய்யுவானுங்க போல…”

கேட்ட பரிதிக்கு அர்த்தமான பார்வையையே பதிலாகக் கொடுத்தான்.

“பரிதிண்ணா நீங்க எல்லாரும் ஒரு நாலு நாளைக்கு பாபநாசம் போயிடுங்களேன்.” எதையோ நினைத்தவனாகக் கூறினான்.

“ஏன் பாரி…?”

“இவ்வளவு நாள் நான் நம்ம குடும்பத்தை விட்டு விலகியிருந்ததாலதான் ராயப்பன் உங்க பக்கம் திரும்பல… ஆனால் இப்போ, நீங்க என்னோட இருக்கிறதை பார்த்துட்டு போயிருக்கான். ரெண்டு நாள்ல நான் எல்லாத்தையும் முடிச்சிடுவேன். அதுவரை நீங்க எல்லாரும் சேஃபா இருக்கணும்” என்றவன் “முடிஞ்சா இப்போவே கிளம்பிடுங்க” என்றான்.

சரியென்ற பரிதி இளாவிற்கு அழைத்து ஊருக்கு கிளம்புவது பற்றி பேசியவாறே பாரியிடம் விடைபெற,

“உங்க குட்டிம்மாவையும் கூட்டிட்டு போங்க” என்றான்.

காரிலேறிய பரிதி பாரி சொல்லியதில் சரியென தலையாட்டி, இறங்கி ஜென்னின் வீட்டிற்குள் சென்றான்.

ஜென் வந்திருக்க…

“இன்னும் தமிழ் எழுந்துக்கலையா ஜென்?” என்றவன் ஹால் இருக்கையிலேயே அமர்ந்தான்.

“நானும் இப்போதான் அண்ணா வந்தேன். இன்னும் அவளை பார்க்கல” என்றவாறே பூவின் அறைக்குச் சென்றவள், இரண்டு நிமிடங்களில் அவளை எழுப்பி கூட்டி வந்திருந்தாள்.

“என்னண்ணா ராயப்பனோட வண்டி பாரி வீட்டுக்கு முன்னால நின்னுது?” ஜென் தெரிந்துகொள்ள வினவினாள்.

“வந்து மிரட்டிட்டுப் போறான்.”

“வேந்தனையா மாமா” என்று பதறிய பூ அவன் பதில் சொல்வதற்கு முன் பாரியிடம் ஓடியிருந்தாள்.

“தமிழ் வந்ததும் கிளம்பி இருக்க சொல்லும்மா. பாரி ஊருக்கு கூட்டிட்டுப்போகச் சொன்னான்” என்று ஜென்னிடம் சொல்லிவிட்டு பரிதி கிளம்பிவிட்டான்.

“வேந்தா… வேந்தா…”

பூ கத்திக்கொண்டே வர… அப்போதுதான் ஆடை மாற்றுவதற்காக தன்னுடைய காக்கி சட்டையை கழட்டிவன் அவனது பூவின் அழைப்பில் வெண்மை நிற பனியனுமாய், காக்கி பேண்டுடன் அறையிலிருந்து வேகமாக வந்தான்.

பாரி திடீரென முன்னே வர ஓடிவந்தவள் அவனின் மீதே மோதி தடுமாற… அவளின் இடையோடு கையிட்டு தன் கையணைப்பில் நிலை நிறுத்தினான்.

“எதுக்கு இப்போ இப்படி கத்திக்கிட்டே வேகமா ஓடிவர… கீழே விழுந்தா என்னாகுறது?” அக்கறையாகக் கடிந்து கொண்டவனுக்கு பதில் சொல்லாது… வேக வேகமாக மூச்சு வாங்கினாள்.

“உனக்கு ஒன்னுமில்லையே?” மூச்சு வாங்கியவாறு வினவினாள்.

“உன் முன்னாடி நல்லாதான நிக்கிறேன்,” என்றவன்

“இந்த நாலடி ஓடிவரவே இப்படி மூச்சு வாங்குது. நீயெப்படி போலீஸ் ட்ரெயினிங் சமாளிக்கப்போற?” என்றான்.

அவனை முறைத்தவள் மூச்சு சீரானதும்…

“சும்மா அதையே சொல்லிட்டு இருக்காத வேந்தா… என்னால படிக்க முடியாது. டெல்லி போக முடியாது” என்றாள். அத்தனை உறுதியை அவன் விடயத்தை தவிர வேறெதற்கும் பூ காட்டியதில்லை.

“ஓகே…” சாதாரணமாக தோள் குலுக்கினான்.

“ஆமாவா? நிஜமாவா?”

பாரி வேண்டாமென சொல்லிவிட்டானென்று உற்சாகத்துடன் அவனது கையணைப்பில் இருந்தவாறே அவள் துள்ளி குதித்து கேட்க… அவனுக்கோ இதயத்தின் தாள நயங்கள் எல்லாம் எக்குத்தப்பாக துடித்தது.

“குதிக்கமா கேளுடி” என்று பூவின் இரு தோள் பற்றி அழுத்தி பிடித்தவாறு கூறியவன், அவளின் பார்வையில்… “கன்ட்ரோல் மிஸ் ஆகுது மலரே” என பார்வையை தாழ்த்தி தன் புருவத்தை ஒற்றை விரலால் நீவினான்.

பாரியின் குரல் அத்தனை மென்மையாக ஒலித்திட அவனவளும் அவனிடம் தடுமாறி நின்றாள். அவனது மேனரிசம் அவளை அந்நொடி மொத்தமாக அவனிடம் தடம் புரண்டிடத் தூண்டியது.

இருவரும் ஒருவரின் உணர்வுக்குள் மற்றொருவர் கட்டுண்ட நிலை. இன்னதென்று பிரித்தரிய முடியா மாய சூழலுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இருவருக்குமே என்ன பேசவென்று தெரியவில்லை.

நெருக்கம் கூடிக்கொண்டே போக… அவனின் நெஞ்சத்திலேயே தலை கவிழ்ந்தாள்.

“இப்படியே இருக்கணும் தோணுதுடி.”

“எனக்கும்.”

“நீயெப்படி இந்தளவுக்கு எனக்குள்ள. விடையே தெரியல. ஆனால் இந்த ஃபீல் ரொம்ப ரொம்ப பிடிக்குது மலரே!” அவள் சொல்லாமல் விட்ட உணர்வுகக்கு எல்லாம் அவன் வார்த்தை வடிவம் கொடுத்தான்.

அவளை மிகவும் வருத்திவிட்டோம் என்பதாலோ என்னவோ… அவளிடம் காதலினால் உணரும் ஒவ்வொன்றையும் வார்த்தையாக சொல்ல அவன் தயக்கம் காட்டவில்லை.

சொல்லாமல் உணரும் காதல் ஒருவகை என்றால் உணர்ந்து சொல்லப்படும் காதல் மற்றொரு வகை. அதன் சுவை அலாதியானது. அதனை தன்னுடைய பூவிற்கு வஞ்சனை இல்லாது கொடுத்து மகிழ்ந்தான். அவளையும் மகிழ்வித்தான். காதலின் பித்துநிலையில் இருவருமே தங்களை மறந்து தங்களது துணைக்கான மகிழ்ச்சியை தேடினர். கொடுத்தனர். திரும்ப பெற்றனர்.

“வேந்தா…”

“என்ன மலரே?”

அணைப்பில் அழுத்தத்தை கூட்டியவள் அவனின் மார்பிலே இதழ் பதித்தாள்.

சில்லென்ற கூறிய அம்பு இதயத்தை துளைத்ததாய் உணர்ந்தான்.

“லவ் இப்படித்தான் இருக்குமா?” காதலை ஒவ்வொரு கணமும் அவனிடமிருந்து பெற்றுக்கொண்டே அதன் அனுபவத்தை வினவினாள்.

“நானும் இப்போதான் மலரே தெரிஞ்சிக்கிறேன்” என்றவன், “நீயில்லாம நானில்லை. இதை என்னால தெளிவா உணர முடியுது. இதுதான் காதல் அப்படின்னா அப்போ இது அது தான்.” தத்துவமோ அனுபவமோ அவனவள் கேட்ட கேள்விக்கு அவனை விளக்கம் கொடுக்க வைத்தது.

“டூ யூ லவ் மீ?” தெரிந்துகொண்டே கேட்டாள்.

“இப்படி இருக்கும்போதும் டவுட்டா மலரே” என்றவன் அவள் தலையிலேயே முட்டினான்.

“நீ ஒருமுறை கூட ஐ லவ் யூ சொன்னது இல்லையே?” ஒருமுறை சொல்லிவிடேன் எனும் எதிர்பார்ப்பு அவளிடம்.

“என்கிட்ட உன்னால் பீல் பண்ண முடியலன்னா சொல்லலாம்.” ஏனோ சட்டென்று அவனால் அதனை சொல்லிவிட முடியவில்லை.

அமிர்தாவை மனதின் ஆழத்தில் வைத்து நேசிக்காததால் அவளிடம் அவனால் சொல்ல முடியாது போனது.

மனதின் மொத்தமும் பூவாக இருப்பதால் எளிதில் அவளிடம் காதல் வார்த்தையை சொல்லிவிட முடியவில்லை.

“சொல்ல மாட்டியா?”

“நானா சொல்றேன்.”

“எப்போ?”

“தோணும்.”

“போடா… ரொம்பத்தான்” என்றவள் அவனிடமிருந்து விலக அப்போதுதான் அவன் சட்டையின்றி இருப்பதையே கவனித்தால்.

பட்டென்று அவனுக்கு முதுகுகாட்டி நின்றவள் முகத்தை மூடிக்கொள்ள…

“ரொம்ப பண்ணாதடி. அதான் பனியன் போட்டிருக்கனே” என்றவன், “பனியன் இல்லாம கூட நீ என்னை பார்த்திருக்க” என்றான். அவள் முன் அப்படியிருக்க அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் பெண்ணவள் தான் சிவந்து தவித்தாள்.

“அது அப்போ… அப்போ…”

“அப்போ?”

“ஃபிரண்ட் மட்டும் தான்.”

“சோ, வாட்?”

“இப்போ உன்னை வேற மாதிரி எண்ணமெல்லாம் வருதுடா” என்றவள் முகத்தை மூடியபடியே ஓடிவிட்டாள்.

அவள் கூறிச் சென்றதன்  பொருளுணர்ந்தவன் மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டான்.

ஓடிய வேகத்திலேயே மீண்டும் வந்தவள்…

“அங்க அவி… அவியும் ஜென்னும்…” அதற்கு மேல் அவளால் சொல்ல இயலாது போனது.

“நாம இங்க இப்படியிருந்தா, அவன் அங்க அப்படித்தான் இருப்பான்” என்று சொல்லியபடி பாரி அறைக்குள் நுழைய… அவனது பின்னாலே சென்றவள் அறை வாயிலிலேயே நின்றுகொண்டாள்.

‘வேணாம் தமிழ். ஏதேனும் சேதாரம் ஆகிடப்போகுது.’ மனதிற்குள்ளே கடிவாளமிட்டாள்.

“சேதாரம் ஆனாலும் தப்பில்லை.” பாரியின் பதிலில் அடித்துப்பிடித்து வரவேற்பு அறையில் வந்து அமர்ந்துகொண்டாள்.

“சும்மா உட்கார்ந்திருக்கிறதுக்கு டீ போடலாமே!” பாரி உள்ளிருந்து குரல் கொடுத்தான்.

“எனக்கு டீ பிடிக்காது.”

“எனக்கு காஃபியும் ஓகே தான்.”

பூ கிச்சனில் பால் காய்ச்சிக்கொண்டிருக்க, ஆடை மாற்றி வந்தவன், அவளை பின்னிருந்து அணைத்து நின்றான்.

அவளது தோளில் நாடி பதித்து கண் மூடி அக்கணத்தை ஆழ்ந்து ரசித்தான்.

“பூ…”

“ம்ம்ம்ம்…”

“நாம ஒண்ணா இருந்துகிட்டே லவ் பண்ணலாமே. அவியை ஜென்னோட பேக் பண்ணிடலாமா? என்னால இனியும் கன்ட்ரோல் மிஸ் ஆகாம இருக்க முடியும் தோணல. ரொம்ப டிஸ்டர்ப் பண்றடி. இந்த கேஸுக்காகத்தான் நீ லவ் பண்ணலாமா கேட்டதுக்கு ஓகே சொன்னேன். ஆனால் இப்போ சுத்தமா முடியலடி. ரொம்ப ரொம்ப டெம்ப்ட் பண்ற மலரே. இன்னும் டூ டேஸ்… இந்த கேஸ் மொத்தமா டாட் வச்சிடுவேன்.” இமை திறக்காது பாரி தன் உள்ளத்தை சொல்லிட… அவள் எப்படி மறுப்பதாம்.

சரியென தலையசைத்தாள்.

“பதில் சொல்லு மலரே!” அவளின் காதில் குறுகுறுப்பை மூட்டினான்.

“உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே.” அவளுக்கு குரலே எழும்பவில்லை. வெறும் காற்று தான் வந்தது. ஆனால் கேட்க வேண்டியவனுக்கு நன்றாகக் கேட்டது.

“அப்போ இப்போ பரிதிண்ணா கூட ஊருக்கு போயிட்டு வா. வந்து டெல்லி போறவரை என்னோடவே இரு” என்றவன், “நெக்ஸ்ட் வீக் அவி, ஜென் மேரேஜ்” என்றான்.

பாரி சொல்லியதில் வேகமாக அவனை தள்ளி நிறுத்தியவள்…

“அப்போ போகமாட்டேன் சொன்னதுக்கு ஓகே சொன்ன?” சந்தேகமாகக் கேட்டாள்.

“ரொம்ப சத்தமா பேசுன… அப்போதைக்கு உன்னை ஆஃப் பண்ண ஓகே சொன்னேன்.” சாதாரணமாகக் கூறிட அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.

“ஊருக்கு எதுக்கு?” மரத்த குரலில் வினவினாள்.

ராயப்பன் வந்தது அவன் மிரட்டியதை கூறியவன்,

“அவன் என்னை மிரட்டியிருந்தா பரவாயில்லை… உங்களுக்கெல்லாம் ஏதாவதுன்னா… அவனுக்கு எதுக்கு பயப்படனும் ஒருபக்கம் தோணுதுதான். இருந்தாலும் இப்போ கவனமா இருக்கிறது தான் ரொம்ப முக்கியம். அதான் நீங்கயெல்லாம் ஊருக்கு போறீங்க” என்றான்.

“முடிவு பண்ணிட்டியா?”

“இதிலென்ன முடிவு பூ… இங்க முடிச்சிட்டு நானும் ஊருக்கு வரேன். நான் வந்தே உன்னை கூட்டிட்டு வர்றேன்” என்றவனை…

“போடா” என தள்ளிவிட்டு கன்னம் இறங்கும் கண்ணீரை அவனுக்கு காட்ட பிடிக்காது ஓடி வந்துவிட்டாள்.

பாரி தான் அவளுக்கு சட்டென என்னவானதென்று புரியாது குழம்பி நின்றான்.

முன்னர் பூ வந்த போது அவியும் ஜென்னும் எந்நிலையில் இருந்தனரோ இப்போதும் அதே நிலையில் தான் இருந்தனர்.

அவியின் மடியில் ஜென் அமர்ந்திருந்தாள்.

வேலை முடித்து அவி வீட்டிற்கு வந்தபோது தான், பூ பாரியை கத்தி அழைத்தபடி ஓடிவந்தாள். அதனை பார்த்தே அவி அவர்களுக்குள் இந்நேரம் நாமெதற்கு நந்தியென நினைத்து ஜென்னின் வீட்டிற்குள் சென்று அமர்ந்தான்.

இத்தனை நாட்கள் அவி கோபமாக இருந்ததால்… அவனுடன் தனித்து இருந்தாலும் ஜென்னுக்கு அவன் கோபம் போகவேண்டும் என்பதே சிந்தனையாக இருக்கும்.

ஆனால் இப்போது அவியை தனிமையில் கண்டுவிட்டாலே தன்வசம் இழந்து விடுகிறாள்.

அதற்கு பயந்தே வீட்டிற்குள் வந்தவனை…

“எதுக்குடா வந்த?” என்று கைகளை பிசைந்தவாறு வினவினாள்.

அவளின் உடல்மொழி அவனுக்கு வேறு கதை கூறிட… அவளின் அவஸ்தையை ரசித்தவனாக அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“கேள்வி கேட்காம தண்ணி கொண்டுவாடி” என்றவன் டீபாயின் மீது காலை நீட்டியவாறு சட்டையின் கையை மடக்கி விட்டு நெஞ்சின் இரு பொத்தான்களை நீக்கி, சட்டையை மேலேற்றி நன்கு வசதியாகி சரிந்து அமர்ந்தான்.

அவனின் ஓய்ந்த தோற்றத்தை அவனது செயல்களோடு இமைக்க மறந்து ரசித்தவள்… அவியின் செருமலில் தன்னை மீட்டாள்.

“இந்த தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறது… டீ போட்டு தரதெல்லாம் மேரேஜுக்கு அப்புறம் தான்” என்று திக்கித்திணறி மொழிந்தவள்… “ப்ளீஸ் நீ போயேன்” என்றாள் அவனின் முகம் காணாது.

“போலீஸ் மேடம் முகம் பார்த்து பேச மாட்டிங்களோ?” ஜென்னின் அவஸ்தையை பார்க்க பார்க்கத்தான் மேலும் மேலும் சீண்டினான். அவளை சீண்டுவது அத்தனை பிடித்தது அவனுக்கு.

எப்போதும் ஜென் உதார் விட்டபடி அடாவடியாக இருந்திட அவிதான் அவளிடம் அடங்கி போவான். ஆனால் இப்போது அவனுக்குள் அடங்கிபோகத் தவிக்கும் இந்த ஜென்னை ரொம்பவே பிடித்தது அவனுக்கு.

“வெளிய வா முகம் பார்த்து பேசுறேன்” என்றவள் வெளியே செல்ல முயல்க… எட்டி அவளின் கையை பற்றி இழுத்தான்.

இப்படி அவன் இழுப்பானென்று நினைத்திடாத ஜென் தடுமாறி அவனின் மடியிலே சரிய… அவனோ சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகாக தன் மடியில் அமர்த்தி அழுத்திக்கொண்டான்.

முதலில் நெளிந்தவள் பின்னர் அவனுள் அடக்கம் அடைந்தாள்.

காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இருவரும் தொட்டு பேசியது கூட கிடையாது. ஜென் மட்டுமே அவனின் தலையில் கொட்டுவதற்காக அவனைத் தீண்டியிருக்கிறாள்.

எப்போதும் தன் தந்தைக்கு பயந்தே அவியின் மீது அதீத காதல் இருப்பினும் ஜென் விலகியே இருந்தாள். அவிக்கும் அவளது காதலொன்றே போதுமானதாக இருக்க… தொடுதலில் நாட்டமில்லாமல் மனதால் நெருங்கியிருக்கவே விருப்பம் கொண்டான்.

இதுவே அவர்களின் முதல் நெருக்கம். எப்படி கையாள்வதென்று தெரியாது இருவருமே தடுமாறினர். அப்போதுதான் பூ வந்ததும் போனதும் தெரியாமல் ஓடியிருந்தாள்.

கடந்தகால நினைவிலிருந்து வெளிவந்த போது அணைத்திருந்தாலும் அதில் ஒருவருக்கொருவர் துணையென்ற ஆறுதலே இருந்தது.

ஆதலால் இதுவே இருவருக்கும் முதல் ஸ்பரிசம். வார்த்தைகளற்று மனதிற்குள்ளிருக்கும் காதலை உணர்ந்தபடி அணைப்பில் ஆழ்ந்தவர்களுக்கு எத்தனை நேரம் கடந்ததோ… மீண்டும் பூ வந்த போதுதான் வேகமாக விலகியிருந்தனர்.

ஆனால் பூவோ அவர்களை இம்முறை கண்டதாகவே தெரியவில்லை.

“என்னாச்சு… அவள் அழற மாதிரி இருக்கு” என்று ஜென் சொல்ல…

“நீ போய் பாரு. நான் பாரியை கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

“அவள் வந்ததே அங்கிருந்துதான். அவனுக்கு இவளை அழ வைக்கிறதே வேலையாப்போச்சு” என்று அவியிடம் பாரியின் மீதான கோபத்தை காட்டியவளாக ஜென் பூவைத்தேடி உள் சென்றாள்.

பூவோ அழும் விழிகளை புறங்கை கொண்டு மாற்றி மாற்றி துடைத்தவளாக பையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு இப்போ அழற தமிழ்?”

……

“பரிதிண்ணா சொல்லிட்டு தான் போனாங்க தமிழ். உன்னை கிளம்பி இருக்கச்சொல்லி…” என்று ஜென் சொல்லும்போதே பூவிற்கு பரிதியிடமிருந்து அழைப்பு வந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
43
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்