அத்தியாயம் 33 :
ஆணையர் குமாரின் வீட்டில் அமர்ந்திருந்த பாரியின் எண்ணம் முழுக்க… பூ காட்டிய அந்த லிங்கத்தினுள் அடங்கியிருந்த விடயத்திலேயே சுழன்றது.
பாரியால் அதனை நம்பவே முடியவில்லை. கண் முன்னே கண்ட காட்சியை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
மாடியிலிருந்த குமார் பாரியின் வருகை அறிந்து கீழே வந்து அவன் முன் அமர்ந்தார்.
வேலையாள் கொடுத்துவிட்டுச் சென்ற பழச்சாறு பருகாது அப்படியே இருக்க…
“என்ன யோசனை பாரி?” என்று வினவினார்.
“நத்திங் சார்” என்றவன் தன்னை சந்திக்க வந்ததற்கான காரணத்தை கேட்டான்.
“மினிஸ்டர்.ராயப்பன் என்னை நேர்ல கூப்பிட்டு டீல் பேசுறார்.”
“அவனுக்கென்ன மரியாதை” என்று பல்லைக் கடித்தான் பாரி. ராயப்பனின் மீது அத்தனை கோபம் எழுந்தது உள்ளுக்குள். எப்படி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அவனுக்கேத் தெரியவில்லை.
ஒருவேளை அந்த லிங்கத்தினை பூ எடுக்காதிருந்தாலும், அதில் என்ன இருக்கு என்பது தெரியாமலேயே போயிருக்கும்.
அதிலிருந்ததை பார்த்த கணம் பூவிற்கு அத்தனை நன்றி கூறியிருந்தான் பாரி. அவன் தேடிய ஒன்று. இனி ராயப்பனே இல்லையென்று சொன்னாலும் அவனது பொய் உண்மையாகிவிடாதே! அத்தோடு அதிலிருந்து பார்த்த விடயம் ராயப்பனின் தரத்தை முற்றிலும் பாரியிடமிருந்து இறக்கியிருந்தது.
“இது அவரோட பதவிக்கு உண்டான மரியாதை பாரி” என்று குமார் சொல்லிட… பாரியிடம் இதழ் சுளிப்பு.
“என்ன பாரி?”
“கேஸ் முடிஞ்சிருச்சு சார்.”
“பாரி… ராயப்பனுக்கு எதிரான ஆதாரங்கள் ரொம்ப வலுவானதா இருக்கணும்.” ராயப்பனின் உயரம் அறிந்து குமார் பேசினார்.
“இதைவிட ஸ்ட்ராங்கா ஒரு ஆதாரம் இருக்கவே முடியாது சார்” என்ற பாரி, “இந்த கொலைக்கான காரணமும் கண்டுபிடிச்சிட்டேன். அதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்காங்கன்னு கண்டுபிடிக்கணும். அதையும் முடிச்சிட்டு மொத்தமா உங்கக்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைக்கிறேன்” என்றான்.
“ராயப்பன் என்கிட்ட டீல் பேசினதுமே அவர்தான் குற்றவாளின்னு கணிச்சுட்டேன். தைரியமா டீல் பேசுறார்ன்னா அவருக்கு பயமில்லை. இதிலிருந்து தப்பிச்சிடலான்னு மாற்று வழி அவருக்கு ஏதோ இருக்கு. அதையும் நீ கண்டுபிடிச்சாகனும் பாரி” என்ற குமாருக்கு அர்த்தமான புன்னகை ஒன்றை சிந்திய பாரி…
“இது என்னோட கேம் சார். இங்க நான் சொல்றது தான் ரூல்ஸ். எதிராளி வெற்றியை தீர்மானிக்க சான்ஸே இல்லை” என்றவன் அவரிடமிருந்து விடைபெற… “கூடுதல் கவனமா இருக்கணும் பாரி” என்றார் குமார்.
“அல்ரெடி ஆள் அனுப்பியாச்சு சார். இப்போ அவனுங்க என் கஸ்டடியில் தான் இருக்காங்க” என்ற பாரியிடம்…
“நல்லவேளை உனக்கு குடும்பமுன்னு ஒன்னில்லை. இருந்திருந்தா அவரோட முதல் குறி உன் குடும்பமாத்தான் இருந்திருக்கும்” என்று சற்று ஆசுவாசமாகக் கூறினார்.
செக்ரி பாரிக்கு குடும்பம் இல்லையென்று சொல்லியிருந்ததால் அதைப்பற்றி அவனிடம் கேட்காது அவரும் செக்ரி சொல்லியதையே நம்பியிருந்தார்.
அவருக்கு சிரிப்பையே பதிலாகக் கொடுத்தவன் அங்கிருந்து சென்றான்.
அன்று மதியம் பூ கேட்கும் வரையிலுமே… பாரிக்கு அந்த சந்தேகம் எழவில்லை.
“உன்னை எந்நேரமும் கண்காணிக்க ராயப்பன் ஆள் வைக்கலையா வேந்தா?”
முன்பு ஸ்டேஷனுக்கு வெளியில் கண்காணித்தவர்களை கைது செய்ததற்கு பின்னர்… அப்படி யாரும் இல்லையென்றே நினைத்திருந்தான் பாரி. அவர்கள் தன்னிடம் மாட்டிய பின்னர், ராயப்பன் மீண்டும் அதை செய்திட மாட்டாரென்று எண்ணியிருக்க… ஆனால் அவரோ எந்நேரமும் பாரியை கண்காணிக்க ஒரு ஆளை வைத்திருப்பதையே பூ கேட்ட பின்னரே கண்டறிந்தான். அவனும் இப்போது பாரியின் பிடியில். இன்னும் எத்தனை பேரென்று பாரிக்கு ராயப்பனுடன் ஆடும் ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருந்தது.
******
பரிதி வீட்டிற்குள் புயல் போல் நுழைந்தான். அப்போதுதான் ராஜஸ்தானிலிருந்து வந்தான். விமான நிலையம் வந்து அலைபேசியை உயிர்ப்பித்ததும் வந்து குதித்த தகவலில் ரூத்ர மூர்த்தியாக மாறியிருந்தான்.
அவனின் கோப முகம் வீட்டினர் அனைவருக்குமே புதிது. பரிதியென்றால் அமைதி. எப்போதும் புன்னகை தவழும் முகமாக இருப்பவன் இன்று இறுகி நின்றான்.
“இளா…” வீடே அதிர விளித்தான்.
“பரிதி… என்னடா என்னாச்சு? எதுக்கு நடுவீட்ல நின்னுட்டு இப்படி கத்துற?” என்று கேட்ட பார்வதியை பார்வையாலேயே எரித்தான். அதற்குமேல் அவனிடம் கேட்காது அதிலேயே பார்வதி ஓரமாக சென்று நின்றுகொண்டார்.
பரிதியின் கோபமான கத்தலில் எவ்வித அலட்டலின்றி மெதுவாக அறைக்குள்ளிருந்து வெளியில் வந்தாள் இளா.
“எதுக்கு இப்படி கத்துறீங்க? இப்போ தான் உங்க பொண்ணை தூங்க வச்சேன். எழுப்பி விட்டுடாதீங்க” என்றவள், “உங்களுக்கு என்ன வேணுமோ அதை மெதுவா பொறுமையா கேளுங்க” என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.
“விவா ஃபுட் பேக்டரிக்கு நீயெதுக்கு போன?” கூர்மையாக விழுந்தன அவனது வார்த்தைகள்.
விவா அவர்களது போட்டி கம்பெனி.
தில்லை தொழில் தொடங்கியது முதல் ஆரம்பித்த போட்டி இது. நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, குறைந்தது இல்லை.
புதுப்புது உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் இருவருக்கும் போட்டிகள் அதிரடியாக இருக்கும்.
சந்தைக்கு வருவதற்கு முன் மக்களின் ஆர்வத்தை தூண்டவும், எதிராளிக்கு போட்டிக்கு சவால் விடும் வகையிலும் புதிய புராடக்டினை தொடர்புப்படுத்தும் விதமாக புதிர் வடிவில் விளம்பரம் வெளியிடுவது பரிதியின் வழக்கம்.
இப்போதும் புதிதாக தயாரித்திருக்கும் உணவுப்பொருளுக்கு அப்படியொரு விளம்பரத்தை பரிதி, ராஜஸ்தான் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெளியிட்டிருந்தான்.
பத்து நாட்களுக்கு பின்னர் அந்த புராடக்டினை வெளியிடத் திட்டமிட்டிருந்தான். ஆனால், அவன் சென்னை திரும்புவதற்குள்ளேயே அது என்ன உணவுப்பொருள் என்பதை அறிந்து விவா புட் கம்பெனி நேரடியான விளம்பரத்தை இன்று வெளியிட்டிருந்தது.
‘எப்படி இது நடந்தது என்ற குழப்பத்துடனேயே, கிடைத்த விமானத்தில் ஏறி கிளம்பி வந்திருந்தான்.’
பரிதி வந்திறங்கியது தான்… விவா கம்பெனியின் எம்டி விவாஷிடமிருந்து பரிதிக்கு ஒரு காணொளி வந்திருந்தது.
அதில் இளா விவாவின் அலுவலகத்தில் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்தாள்.
விவாவிடம் ஊதா நிற கோப்பையை இளா நீட்டியபடி அந்த காணொளி இருந்தது.
அந்த கோப்பினை கண்டதும் பரிதி அதிர்ந்தான். அது அந்த உணவுப்பொருளுக்கான மூலக்கூறுகள் அடங்கிய கோப்பு. அதை பரிதி பத்திரமாக வீட்டில் தன்னுடைய ரகசிய கப்போர்டில் வைத்திருந்தான்.
‘அதெப்படி இளா கையில்?’ இளாவின் மீது பரிதிக்கு சந்தேகமெல்லாம் இல்லை. ஆனால் தனியாக அவனிடம் மாட்டிக்கொண்டால் என்னவென்ற பயமே. அவன் ஏதேனும் வைத்து மிரட்டியிருப்பானோ என்கிற பயம். உணவுப்பொருளின் ரகசியம் போனதைவிட இளாவை எண்ணிய பயம் அது.
எதுவாகயிருந்தாலும் தன்னிடம் சொல்லியிருக்கலாமே என்கிற கோபமே அவனது கத்தலுக்கான காரணம்.
“பர்ஸ்ட் நீங்க இப்படி உட்காருங்க” என்ற இளா முறைத்துக்கொண்டு நின்றிருந்த பரிதியின் கையை பிடித்து தனக்கு அருகில் அமர வைத்தாள்.
“விவா புராடக்ட் அட்வர்டைஸ் பார்த்த நீங்க நம்ம புராடக்ட் அட்வர்டைஸ் பார்க்கலங்கிறது உங்க கோபத்திலே தெரியுது” என்ற இளா… “அவனுடைய அட்வர்டைஸ் வரதுக்கு முன்னவே… நம்முடைய ப்ரோடெக்ட் ரிலீஸ் செய்தாச்சு. அதர் கன்ட்ரி எக்ஸ்போர்ட் அண்ட் நம்ம நாட்டில் உள்ள முக்கிய முக்கிய அங்காடியிலும் நம்மோடது அதோட இடத்தை அதிகமாவே பிடிச்சாச்சு” என்றாள்.
“வேணுன்னா நம்ம ப்ரோடெக்ட் மார்க்கெட்டிங் ரேட்டிங் செக் பண்ணி பாருங்க. நம்ம தான் டாப். அவனோடது இன்னும் ரிலீஸ் ஆகல. ஆகவும் ஆகாது. அவனோடது வெறும் விளம்பரம் மட்டும் தான்.”
“ஏன் எதனால்?” என்கிற வினா அவனிடம்.
“எல்லாம் உங்க மேனஜரால் வந்தது.” கடுகடுப்பாக மொழிந்தாள்.
“என் மேனேஜரா?” பரிதி அதிர்ந்தான் இளாவின் பேச்சில். அந்த மேனேஜர் இளம் பெண்ணல்லவா. வேறு யாராவது இந்த வார்த்தையை கேட்டிருந்தால் மற்றொரு பொருள் கண்டல்லவா ஆராய்வார்கள். அந்த அதிர்வு அவனிடம்.
“அவள் அந்த விவாவோட பிஏ ஆளு போலிருக்கு… இவள் உண்மையாத்தான் அவனுக்கு இருந்திருக்காள். ஆனால் அவன் இவளை யூஸ் பண்ணிக்கிட்டான். போன முறை கூட, புட் பிரிசர்வேட்டிவ்ஸ் பேக் ஆகாம ஸ்டோர் ஆனதுக்கு இவள் தான் காரணம். எப்படியோ கடைசி நேரத்தில் நீங்க பார்த்து அதை சரி செய்தீங்க. பட் இப்போ மேட்டர் அதில்லை” என்ற இளா சற்று தள்ளி நின்றிருந்த தன் மாமியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு…
“அவள் அந்த பிஏ’வோடு நெருக்கமா இருந்திருப்பாள் போல். விவா அந்த ஃபோட்டோஸ் வச்சு இவளை மிரட்டியிருக்கான். பார்முலாஸ் பைல் நீங்க ஆபிசில் வச்சிருந்தா மேடம் யாரும் அறியாம எடுத்துட்டு போய் கொடுத்திருப்பாள். ஆனால் வீட்ல இருக்கவும் முடியாதுன்னு சொல்லியிருக்காள்.
அவளோட லவ்வரும் விவா சொல்றதை கேளுன்னு இவளை கை விட்டுட்டான் போல. அதான் என்கிட்ட வந்து உதவி கேட்டாள், தப்பு செய்தவளாவே இருந்தாலும், இந்த விஷயத்தில் அவளை விட்டுட மனமில்லை.
அதான் நம்மளோட ப்ரோடெக்ட் லான்ச் பண்ண மாமாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, ப்ரோடெக்ட் எல்லாம் சேர வேண்டிய இடங்களை நெருங்கிய சமயம் விவாவை அவனோட இடத்தில் வச்சே மீட் பண்ணேன்” என்று மூச்சு விடாது பேசிய மனைவியின் முன் தண்ணீரை நீட்டியிருந்தான் பரிதி.
தண்ணீரை வாங்கி குடித்தவள்,
“நீங்க என்னை சந்தேகப்பட்டு கேட்டிங்களா?” என்றாள் ஒருவித வருத்தத்தோடு.
“இல்லை” என்ற பரிதி… “என்னோட கோபம் அந்த இடத்துக்கு நீ தனியா போனது தான்” என்றான்.
“நான் போறதுக்கு முன்னாடி பாரிக்கு லொகேஷன் ஷேர் பண்ணிட்டு, மேக்சிமம் தர்ட்டி மினிட்ஸில் வரலைன்னா அங்க வான்னு மெசேஜ் பண்ணிட்டு தான் கிளம்பினேன்” என்றாள்.
“ரொம்பத்தான் அறிவு” என்றவன் “பாரி தெரிஞ்சுமா உன்னை தனியா விட்டான்?” என்று அடுத்து கேட்டான்.
“என்ன இளா… எதுக்கு நீ இங்க வந்திருக்க? பரிதிண்ணா ஏதும் சொன்னாங்களா?” என்ற பாரியின் கேள்வியில் இளா அனைத்தையும் சொல்ல…
“இது அப்பட்டமான மிரட்டல் இளா. இதுக்காக நீ பரிதிண்ணாவுடைய உழைப்பை தூக்கி கொடுப்பியா? கொஞ்சமும் யோசிக்க மாட்டியா? இப்படித்தான் எடுத்துக்கோன்னு வந்து கொடுப்பியா? போலீஸ்லாம் எதுக்கு இருக்காங்க?” என்று தன்னுடைய அண்ணனின் மனைவி என்பதையும் மறந்து இளாவை பிடி பிடியென்று வார்த்தையால் பிடித்து விட்டான்.
பாரி இப்டியெல்லாம் பேசுவானென்று இளா எதிர்பார்க்கவே இல்லை.
ஒரு பெண்ணுடைய மானம் என்ற வகையில் யோசித்தாளே தவிர, இதில் பரிதி மட்டுமல்லாது தொழிற்சாலையில் வேலை செய்யும் பலரோட உழைப்பு இருக்கிறது என்பதை யோசிக்கவில்லை.
‘அய்யோ என்ன செய்யவிருந்தோம்’ என்று இளா அதிர, அப்போது அங்கு வேகமாக ஓடி வந்தாள் பரிதியின் மேனேஜர் பெண். அவளின் கவனம் முழுக்க இளா மீதே இருந்தது. பாரியை கவனிக்கவேயில்லை.
“மேடம் வந்துட்டீங்களா… காப்பாத்துங்க மேடம். என் வாழ்க்கையே உங்க கையில் தான் இருக்கு. விவாவிடம் இதை கொடுத்தாதான் என்னுடைய போட்டோஸை அவன் கொடுப்பான். இல்லைன்னா அதை என் வீட்டுக்கு அனுப்பிவிடுறதா மிரட்டுறான்” என்று கண்ணீர் சிந்தினாள்.
பாரி அவளையேதான் ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நிஜமாவே உன் வாழ்க்கை அந்த ஃபைலில் தான் இருக்கா?”
பாரியின் கூர்மையான கேள்வியில் அவன் பக்கம் திரும்பிய அப்பெண் அவனின் காக்கி உடை கண்டு கைகள் நடுங்க பார்க்க… அவளின் உடல்மொழி வைத்தே பாரி ஏதோ கண்டுகொண்டான்.
“ஓகே அண்ணி… நீங்க போய் அவன்கிட்ட இந்த ஃபைலை கொடுத்துட்டு வாங்க” என்ற பாரி, அதிலிருந்த பேப்பர்ஸை எடுத்துக்கொண்டு வெறும் கோப்பினை அவளிடம் நீட்டினான்.
பாரி அண்ணி என்றது ஒரு அதிர்வென்றால், அவளை அவன் பன்மையில் விளித்தது மற்றொரு அதிர்வு இளாவுக்கு.
மூன்றாம் நபர் முன்னால் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததோடு… அவளுக்கு தான் என்ன உறவு என்பதையும் எதிரில் நிற்பவளுக்கு உணர்த்தியிருந்தான் பாரி. அதனை இளாவும் புரிந்துகொண்டு தலையசைக்க… அப்பெண்ணிற்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.
“சார் இந்த பேப்பர்ஸ் இருந்தாதான் என் போட்டோஸ் கிடைக்கும்” என்று அப்பெண் கண்ணீரோடு கூறினாள்.
“நீங்க போங்க அண்ணி” என்று இளாவை உள் அனுப்பி வைத்த பாரி, அப்பெண்ணை பிடித்துக் கொண்டான்.
“அவன் காட்டின போட்டோஸ் காட்டு பார்ப்போம்.” சாதாரணமாகக் கேட்ட பாரி அவளின் திருட்டு முழியில் அனைத்தும் அவர்களின் நாடகமென்று கண்டு பிடித்துவிட்டான்.
“இப்போ நாம உள்ள போவோமா?” என்ற பாரி உள் நுழையும் போது… இளா விவாவின் கையில் கோப்பினை கொடுத்திருந்தாள்.
அதை பிரித்து பார்த்த விவாஷ்…
“என்ன என்னை ஏமாத்த பாக்குறியா?” என்று இளாவிடம் சீற…
“உன் அளவுக்கு எல்லாம் ஏமாத்த வராது” என்று பதில் கொடுத்தான் பாரி.
“நீ போலீஸை கூட்டிட்டு வந்துட்டா நான் விட்டுடுவேன் நினைச்சியா?” என்ற விவா, “அவளுடைய போட்டோஸ் என் கையில்” அலைபேசியை ஆட்டி காண்பித்தான்.
“என் முன்னாலே மிரட்டுரியா?” என்ற பாரி அவனை ஓங்கி அறைந்திருந்தான்.
“இது எவ்வளவு பெரிய க்ரைம் தெரியுமா?” என்ற பாரி, “அந்த போட்டோஸ் நான் பார்க்கணுமே காட்டு பார்ப்போம்” என்று ஒரு காலை மற்றொரு கால் தொடையில் வைத்தது போல் அங்கிருந்த மேசையில் அமர்ந்தான்.
விவா திருத்திருக்க…
“போட்டோஸ் இருந்தால் தான காட்டுவ…” என்று பாரி சொல்ல இளா அதிர்ந்தாள்.
“ஷாக் ஆகாதீங்க அண்ணி” என்றவன், “பரிதிண்ணா ஃபைலை வீட்ல வச்சதால இதுங்க உங்களை மடக்க இப்படியொரு பிளான் போட்டிருக்குங்க. பொண்ணுன்னா பேயும் இறங்கும் சொல்லுவாங்களே அந்த கான்செப்ட். பட் இப்போ என்னன்னா அவங்க கான்செப்ட் அவங்களுக்கே ரிவஞ்ச் ஆகிப்போச்சு” என்றதோடு தன் அலைபேசியில் ஒரு காணொளியை ஓட்டி காண்பித்தான்.
அது அவர்கள் உள்ளே வருவதற்கு முன் அப்பெண் இளாவிடம் பேசியது. பாரி இளாவிற்கு கூடத் தெரியாது வீடியோ எடுத்திருந்தான். அதில் விவாவின் பெயரையும் அப்பெண் குறிப்பிட்டிருக்க…
‘இது வெளியில் கசிந்தால் நிச்சயம் தன் மானம் போவது உறுதி’ என பயந்த விவா,
“உனக்கு எவ்வளவு வேணும்” என்று பாரியைப்பற்றி தெரியாது தெனாவட்டாக வினவினான்.
அதில் சத்தமாக சிரித்த பாரி…
“நீ எதை முந்தனும் நினைத்து போட்டி போடுறியோ அந்த கிங் புட் ஓனர்டா நான். உன் பேக்டரிவிட நாலு மடங்கு பெரிய பேக்டரி என்னோடது. எனக்கு நீ விலை பேசுறியா?” என்று அவன் மூக்கிலே ஓங்கி ஒரு குத்து குத்தினான் பாரி.
“அவுச்.” விவா வலியில் முகத்தை சுருக்கிட…
“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இனி என் அண்ணாவை குறுக்கு வழியில் ஜெயிக்கணும் நினைத்தாலே உன்னை காலி பண்ணிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்து… “உண்மையாவே இந்தப் பொண்ணை போட்டோஸ் வைத்து மிரட்டியிருந்தா இத்தனை பொறுமையா உன்கிட்ட பேசியிருக்க மாட்டேன். வார்னிங் கொடுக்காம நேரா அரேஸ்ட் பண்ணியிருப்பேன். நேர் வழியில ஜெயிக்க பாரு. இந்த வீடியோ பத்திரமா என்கிட்ட இருக்கும்.
நீ செய்த தப்புக்கு தண்டனை என்ன தெரியுமா? இவள் சொல்லிய, நாங்க வெளியிடும் ப்ரோடெக்ட் நேம் மட்டும் வச்சு நீ கொடுத்திருக்க அட்வர்டைஸ்மெண்ட் தான். இப்போ அந்த ப்ரோடெக்ட் வெளிவரப்போறதில்லை. வெளிவரலைன்னா உன் கம்பெனியோட ரெபிடேஷன் காலி…” என்றவன் இளாவை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
“எவ்வளவு பெரிய தப்பு பண்ண இருந்தேன். இந்த டிராமாவை நிச்சயம் நான் எதிர்பார்க்கல பாரி” என்ற இளா பாரிக்கு நன்றி சொல்லிட…
“எதையும் செய்றதுக்கு முன்ன கொஞ்சம் யோசி இளா… அண்ணா இல்லாதப்போ நீதானே எல்லாத்தையும் பார்த்துக்கணும்” என்றான் தன்மையாகவே.
“இந்த விஷயத்தில் ஒரு பொண்ணு பொய் சொல்ல மாட்டான்னு நினைச்சிட்டேன் பாரி.” இளா மிகவும் வருந்தினாள்.
“சரி விடு. அதான் தவறா ஒண்ணும் நடக்கலையே” என்ற பாரி இளாவை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டே தன் வேலையை பார்க்கச் சென்றான்.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் தான் விவா பரிதியின் குடும்ப வாழ்விலாவது சிக்கல் வரட்டுமென்று, இளா கோப்பினை கொடுத்தவரை மட்டும் வீடியோவை சிசிடிவி புட்டேஜிலிருந்து வெட்டி பரிதிக்கு அனுப்பி வைத்தான். ஆனால் அதிலும் அவனது தோல்வி அவனுக்கே தெரியாது போனது.
நடந்ததை முழுவதும் சொல்லிய இளா…
“பாரிக்குத்தான் தேன்க்ஸ் சொல்லணும்” என்றிட… இளாவை நினைத்து பயந்து ஓடிவந்த பரிதிக்கு அப்போதுதான் மூச்சு சீரானது.
_________________________________
மொட்டை மாடியில்…
பார்வையை தூரத்தில் எங்கோ பதித்தபடி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவி நின்றிருந்தான்.
‘எதிர்பாராதது எதிர்பாராமல் நடப்பது தான் வாழ்க்கையா?’ சில மணி நேரங்களாகவே இந்த கேள்வி தான் அவனது மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று நடந்த ஒன்றை நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் என்பதே உண்மை.
“வேந்தனும் இன்னும் வரல போல. வீட்டை திறந்து போட்டுட்டு நீ இங்க வந்து நின்னுட்டு இருக்க?” என்றபடி அவனுக்கு அருகில் வந்து நின்றாள் பூ.
பூவிற்கு பதில் சொல்லாது திரும்பிய அவி… அப்படியே சுவற்றில் சாய்ந்தபடி அவளின் முகம் பார்த்தான்.
“நீயென்ன ஆபிசிலிருந்து திடீர்னு காணாமப் போயிட்ட?” எனக் கேட்டான்.
தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாது தன்னையே திருப்பி கேள்விகேட்ட அவியை மேலும் கீழும் ஆராய்ந்தாள் பூ.
“என்னாச்சு டல்லடிக்கிற?”
“நான் கேட்டதுக்கு நீ ஆன்சர் பண்ணல?”
“நீ கூடத்தான்…”
“ம்ப்ச்.”
“நான் என் ஆளோட வெளிய போனேன்.” பூ அப்படி சொல்லியதில் அவி சிரித்துவிட்டான்.
“எது வீட்ல டிராப் பண்றதா? அதுவும் பாரி லவ் மூட்ல உன்னோட சுத்துறான்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே?” அவி சந்தேகமாக இழுத்தான்.
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மேலும் அவியை நெருங்கி நின்ற பூ, அவனின் காதில் கிசுகிசுப்பாக…
“நீ நம்புலனாலும் அதான் நெசம்(நிஜம்) அவி” என்று அவளின் தலைவர் பட வசனத்தை சொல்லியதோடு… “சும்மாயில்லலே… வேந்தன் லவ்வுல அப்படியே பிச்சு உதறுறான். நானே எதிர்பார்க்கல. என்னென்னவோ சொல்றாண்டா. அப்போலாம் ஒரே கூஸ் பம்ஸ் தான் போ” என்று சிலாகித்துக் கூறினாள்.
சொல்லும்போதே அவளின் கண்களில் தெரிந்த ஒளியில் அவிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.
பாரிக்காக… அவனின் காதலுக்காக அவள் ஏங்கிய நாட்களை அருகிலிருந்து பார்த்தவனாயிற்றே. அவளின் காதல் கைகூடிட அவளைவிட அதிகம் ஆசை கொண்டவன் அவனல்லவா. சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்.
விரிந்த சிரிப்புனூடே பூவை பார்த்திருந்தான்.
“என்னலே அப்படி பாக்குத?” அவனின் தோளிலேயே இடித்தாள்.
“உன்னோட இந்த சந்தோஷத்துக்கு பின்னால நிறைய வலி இருந்தது இல்லையா தமிழ்.”
அவி கேட்பது உண்மை தானே… ஆமென்று ஒப்புக்கொண்டாள்.
“வலிக்கு அப்புறம் வர மகிழ்ச்சிக்கு மதிப்பு அதிகம் அவி” என்றவள், “அப்படியே பேச்சை மாத்தாத. நீயேன் இப்படியிருக்க… முதல்ல காரணம் சொல்லு?” என்றாள்.
“ஜாப் ரிசைனிங் மெயில் பண்ணிட்டேன் தமிழ்.”
அவி சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் பூ அதிர்ந்தாள்.
“ஹேய் தமிழ்… அதுதான் நாம ஏற்கனவே வேற ஒன்னு டிசைட் பண்ணியிருந்தோமே. இதுக்கெதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற?” என்றான் அவி.
“நீ வேலையை விட்டதுக்கு நான் ஷாக் ஆகல. என்னை விட்டுட்டு மெயில் பண்ணிட்டியேன்னு தான் ஷாக் ஆனேன்” என்று தமிழ் சோகமாகச் சொல்ல…
“அதெல்லாம் உன் மெயிலிலிருந்து நானே பண்ணிட்டேன். நாளையிலிருந்து நமக்கு நம்ம இடத்தில் தான் வேலை” உற்சாகமாகக் கூறினான் அவி.
“நோட்டீஸ் பீரியட்?”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு” என்று அவி அசால்ட்டாக சொன்னான்.
“என்னாச்சு அவி. உண்மையை சொல்லு?”
இன்று அலுவலகத்திலிருந்து பூ பாரியுடன் கிளம்பியதும், எம்.டி அழைப்பதாக தகவல் வர அவி அவரின் அறைக்குச் சென்றான்.
அனுமது கேட்டுவிட்டு உள் நுழைந்தவன் அவ்விருக்கையில் அமர்ந்திருந்த நீபாவை பார்த்து எவ்வித முகபாவமும் காட்டவில்லை. ஆனால் உள்ளுக்குள் இவளெப்படி இதில் என்று எண்ணினான்.
உண்மையில் அந்த நிறுவனம் நீபாவினுடையது தான். அவளது அண்ணன் அவளுக்காக தொடங்கி கொடுத்தது. படிப்பை முடித்ததும் அவளிடம் கொடுத்திட… பயிற்சி பெற்றுக்கொண்டு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று பணியாளராக அதிலேயே பணிபுரிய… அவளது மாமா அந்நிறுவனத்தின் எம்டி பொறுப்பினை ஏற்றிருந்தார்.
பயிற்சிக்காக ஆறு மாதங்கள் மட்டும் என நினைத்து சேர்ந்தவள், அவிக்காக இரண்டு வருடங்களாக தன் அடையாளத்தை மறைத்து பணியாளராக மட்டுமே அங்கிருந்தாள்.
அன்று அவி அவளை முகத்திற்கு நேரே எப்பவும் என் பதில் நோ தான் என்று சொல்லியதும்… ஒருவேளை தான் யாரென்று தெரிந்தால், தனக்கு இடமில்லாத அவனிடத்தில் தன் பணத்திற்கான இடமிருக்குமென்று நினைத்தே இன்று தன்னுடைய பொறுப்பை ஏற்று அவன் முன் திமிராக தன்னைக் காட்டிக்கொண்டாள்.
“இப்போ சொல்லுவியா என் காதலுக்கு ஓக்கேன்னு” என்று தன் உயரம் தெரிந்து அவன் நிச்சயம் மறுப்பு சொல்லமாட்டானென்று தெனாவட்டாக கேட்டாள் நீபா.
அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்பது அவிக்கு நன்றாகவே புரிந்தது.
“இந்த கம்பெனி உன்னுடையதாவே இருக்கலாம்… நீ பெரிய கோடீஸ்வரியாவேக்கூட இருக்கலாம்… பட், இதுக்கெல்லாம் கவிழும் ஆள் நானில்லை. வேற யாரையாவது பாரு” என்று அவளுக்கு சற்றும் குறையாத திமிருடன் சொல்லியவன் திரும்பி செல்ல அடி வைத்திட…
“என்ன வேலையைவிட்டு போறியா எனக்கு பயந்து?” இப்போது அவி அதைத்தான் செய்வானென்று நினைத்த நீபா, தான் சீண்டினால் அவன் எதிராக நடப்பானென்று எண்ணிப்பேச… அவியோ அதை ஒப்புக்கொண்டான்.
அவளொன்று நினைக்க அவன் வேறொன்று நினைத்தான்.
“எப்படி கரெக்டா சொல்லிட்ட… ஆமாம் நான் ஜாப் ரிசைன் தான் பண்ணப்போறேன்” என்று நீபாவின் மூக்கை உடைத்தவன், “உன் சீண்டலுக்கு ஜாப் விட்டு போகமாட்டேன்னு சொல்லுவன்னு நினைச்சியா?” என்று நக்கல் செய்தவன்… அடுத்த ஐந்து நிமிடத்தில் தனக்கும் பூவிற்கும் தத்தம் மெயிலிலிருந்து மெயில் செய்திருந்தான்.
“நோட்டீஸ் பீரியட் மறந்துட்டீங்க போல?” அவியை எப்படியாவது தடுக்க வேண்டுமென நினைத்து அதைப்பற்றி நீபா கேட்க…
“நீங்க மெயில் டேட் செக் பண்ணல நினைக்கிறேன்” என்று சொல்லிய அவி, இதழ் சுளித்த புன்னகையோடு “கம்ப்யூட்டரில் அடிவரை புகுந்து வேலை பார்க்கும் என்னால இதைக்கூடவா செய்ய முடியாது” என்றதோடு… “தமிழ் ஜாப் ஜாயினிங் பார்மாலிட்டிஸே இன்னும் சரியா முடியல… சோ, அவளுக்கு நோட்டிஸ் பீரியடே கிடையாது” என்று சொல்லிவிட்டு மொத்தமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
“நீபா… எம்டி’யாடா?” அவி நடந்ததை கூறியதும் ஆச்சரியமாகக் கேட்டாள் பூ.
“ஆமா… ஆமா… கம்ப்யூட்டர் ஒழுங்கா ஆப்ரேட் பண்ண தெரியாததுலாம் சாப்ட்வேர் கம்பெனி ஓனர்” என்று சடைத்தான் அவி.
“விடுடா… நாம அங்கிருந்து வெளியில் வரணும் தானே பிளான் பண்ணோம். இப்போ தானா அந்த வாய்ப்பு வந்திருச்சு.” பூ அவியை சாமாதானம் செய்தாள்.
“இப்போ தான் பயமா இருக்கு தமிழ்” என்றவன் பூவின் கையை இறுகப்பற்றி… “இவ்வளவு நாள் எப்படியோ ஆனால் இனி ஒவ்வொரு அடியும் ரொம்ப கவனாமா வைக்கணும்” என்று சொல்லிய அவிக்கு முன்தினம் பூ அவனிடம் கூறியது அந்நேரம் நினைவிலாடியது.
புதிய ப்ரொஜெக்ட் விடயமாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், அதைப்பற்றிய நுணுக்கங்களை தன் குழுவிற்கு அவி விவரித்து முடித்த பின்னர்…
“உனக்கு தனியா ஸ்டார்ட்டப் தொடங்க ஆசை தானே அவி. இது கவர்மெண்ட் ப்ரொஜெக்ட்… நீ தனியா ட்ரை பண்ணலாமே!” பூ சொல்லியது அவிக்கும் தொன்றியது.
“அல்ரெடி ஸ்டார்ட்டப் ஸ்டார்ட் பண்ண எல்லா பார்மாலிட்டிசும் முடிஞ்சுது தமிழ்… கம்பெனி ரிஜிஸ்டர் வொர்க் கூட ஆல்மோஸ்ட் ஓவர்” என்ற அவி,
“லாஸ்டா ஒன் ப்ரொஜெக்ட்… இத்தனை வருஷம் நான் எல்லாம் கற்றுக்கொண்டது இங்கதான். அதனால் என்னால ஒரு நல்ல நேம்… இங்க கொடுத்துட்டு அப்புறம் நம்முடைய ட்ரீம்” என்றான்.
“ரொம்ப நல்லவனா இருக்கடா நீ” என்ற பூ… “பேசாமல் உன் கம்பெனி மூலமாவும் ரெண்டு டிசைன் அனுப்பி வை அவி… இந்த கம்பெனிக்கு கிடைத்தால் ஓகே, அதுவே உன் கம்பெனிக்கு கிடைத்தால் நமக்கு ஆரம்பத்திலே நல்ல நேம் தான. தன்னால நல்ல ரீச் கிடைக்கும்” என்று பூ யோசனை வழங்கிட…
“இதை நானும் யோசித்தேன் தமிழ். பட் இங்க வேலை பார்த்துக்கிட்டே நமக்கு லாபமா யோசிக்கிறது ஜாப் எத்திக்ஸ் கிடையாது” என்றவனை தலையிலேயே கொட்ட வேண்டும் போலிருந்தது பூவிற்கு.
“பட் நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாத அவி” என்றாள் பூ.
அன்றைய பேச்சினை நினைவு கூர்ந்த அவி “கடைசியில நீ சொன்னது நடக்கப்போகுது தமிழ்” என்றான். முகம் கொள்ளா மகிழ்வுடன்.
“அப்படியென்ன நடக்கப்போகுது?” என்று கேட்டபடி அவர்களிடம் வந்தான் பாரி.
“எப்போ வந்தீங்க காக்கி…”
“இப்போ தான் மேடம்.”
கேள்வி கேட்ட பூவிற்கு பதில் சொல்லியவாறு பூவின் அருகில் வந்து உரசி நின்றான் பாரி.
பாரிக்கு பதில் சொல்லாது கீழே சென்ற அவி சில பேப்பர்ஸ் கொண்டு வந்து பாரியின் கையில் கொடுத்தான். பூவும் அதனை அப்போதுதான் காண்கிறாள்.
“லாஸ்ட் வீக் தான் கன்ஃபார்ம் ஆச்சு.”
படித்து பார்த்த பாரி அவியை அணைத்துக் கொண்டான்.
“சூப்பர்டா மச்சான். காலேஜ் டேசில் விளையாட்டா பேசியதை உண்மையாக்கி இருக்க” என்ற பாரி…
“பட் இது உன்னோட முயற்சி… இதை எங்களோட பெயரில்…” என்று இழுத்தான்.
தொழில் தொடங்குவதற்கான பத்திரம் அது. அதில் நண்பர்கள் நான்கு பேருக்கும் சம உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை சுட்டியே பாரி அவ்வாறு வினவினான். பாரியின் கேள்வியை பூவும் ஆமோதித்தாள்.
“நாம நாலு பேரும் சேர்ந்து தான ஆரம்பிக்கணும் பேசினோம்… நீங்கயில்லாம எப்படி?” என்று நண்பர்களை முறைத்தான் அவி.
“பட் இதுல எங்களோட கான்டரிபூட் எதுவுமே இல்லையே அவி” என்றவாறு வந்த ஜென்னும் பாரி மற்றும் பூவிற்கு துணையாகக் கேட்க… அவியின் முகத்தில் அப்பட்டமான கோபம்.
“அப்போ என்னை வேற யாரோவாத்தான் பாக்குறீங்க” என்ற அவி, “இதுல பாதிக்கு மேல பரிதிண்ணாவுடைய ஷேர்ஸ் இருக்கு” என்றான் அவி.
“ஸ்டார்ட்டப் தொடங்கனும் ஆசை இருந்தது. ஆனால் போதுமான அளவு பணமில்லை. பரிதிண்ணாகிட்ட சொன்னேன், கடனா தரமாட்டேன் சொன்னாரு. எனக்கு ஃபிரியா வாங்க மனசில்லை. அதை அண்ணாகிட்டவே ஓப்பனா சொன்னேன். அண்ணா தான், நாலு பேரும் சேர்ந்து ரன் பண்ணனுங்கிறது தான உன் விருப்பம்… அதனால மத்த மூணு பேரோட பெயரில் என்னோட ஷேர்ஸ் இருக்கட்டும் சொல்லி ஹெல்ப் பண்ணார்” என்று விளக்கமளித்த அவி… “பரிதிண்ணா பணம் கொடுத்ததுக்காக மட்டுமில்லை பாரி… உண்மையிலே நீங்க மட்டும் தான் எனக்கு” என்று அவி உணர்ச்சிவசத்தில் கூறிட… மூவரும் அவனை ஒன்றாக அணைத்திருந்தனர்.
அக்கணம் நண்பர்கள் தங்கள் நட்பால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக தங்களை உணர்ந்தனர். நால்வருக்குள்ளும் வேறொரு உறவு பந்தம் இருப்பினும் அவர்களின் ஆரம்பம் நட்பெனும் புள்ளியில் தானே… எப்போதும் அத்தகைய அழுத்தமான ஆழமான நட்பு அவர்களை பிணைத்தே வைத்திருக்கும்.
அந்நொடி நால்வருமே பரிதிக்கு தங்களது நன்றியை உளப்பூரவமாக சொல்லியிருந்தனர்.
யாருமற்ற நிலையில் அவிக்கு அனைத்துமாக இருந்தது தன்னுடைய அண்ணன் என்பதில் பாரிக்கு அத்தனை நிறைவாக இருந்தது.
“ஓகே லெட்ஸ் செலெப்ரெட்…” ஜென் உற்சாகமாகக் கூவ…
“நாலு பேரும் ஒண்ணா வெளியில போய் எவ்வளவு நாளாகுது” என்று பூவும் சொல்லிட… அடுத்த அரை மணி நேரத்தில் நால்வரும் கடற்கரையில் இருந்தனர்.
இரவு வெகு நேரம் கடந்திருந்ததால் ஆளரவமின்றி அலைகளின் ஆர்ப்பரிப்போடு அவர்கள் நால்வரின் துள்ளலோடு அவ்விடம் இரவின் கருமை துறந்த வர்ணமாய் காட்சியளித்தது.
வெகு நாட்களுக்கு பின்னர் எல்லாம் மறந்து சிறு பிள்ளைகளாக அலைகளில் ஓடியும் ஒருவரையொருவர் கீழே தள்ளியும் விளையாடி மகிழ்ந்தனர்.
நால்வரின் கையிலும் சுட்ட சோளம் இடம்பிடித்திருக்க…
மற்றொரு கையில் பாதுகைகளை பிடித்தவாறு… மணலில் கால்கள் புதைந்து இணையாக நடந்தனர்.
வெகு தூரம் கண்ணுக்குத் தெரியும் தொலைவை தொட்டுவிட எண்ணி கால்கள் வலிக்க நடந்தனர்.
மனம்விட்டு பல கதைகள் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
“இதுக்குமேல முடியாது” என்று பூ அமர்ந்துவிட… அவ்விடத்திலேயே மற்றவர்களும் அமர்ந்தனர்.
“கால் வலிக்குதா பூ” என்று கேட்ட பாரி… அவி, ஜென் பார்க்கவே பூவின் காலை தன் மடியில் எடுத்து வைத்து பிடித்துவிட்டான்.
பூ மற்ற இருவரையும் கண் காட்டி காலை இழுத்திட முயற்சிக்க… பாரி அழுத்தமாக பிடித்து அவளது முயற்சியை வீணாக்கினான்.
“நாங்க எதையும் கண்டுக்கலப்பா” என்று அவி சொல்ல… “நீ சொன்னதுலேயே தெரியுது” என்று ஜென் அவியின் தலையிலேயே கொட்டினாள்.
“ரொம்ப நாளா இதுதான் இல்லாம இருந்துச்சு. திரும்ப மாட்டிக்கிட்டேன்” என்று தலையை தேய்த்தபடி சொல்லிய அவி… ஜென்னின் முறைப்பிற்கு ஆளானான்.
“நாமதான் சண்டை போட்டுட்டு இருக்கோம். அதுங்க நல்ல லவ் மூடில் இருக்குங்க” என்ற அவி ஜென்னின் முகத்தை திருப்பி பாரி மற்றும் பூவின் பக்கம் திருப்ப… அவர்கள் இருவரும் ஒருவரது பார்வையை மற்றவர் தாங்கியபடி காதலில் கட்டுண்டிருந்தனர்.
“ம்க்கும்.” ஜென் தொண்டையை செருமிட…
“உன் ஆளு பக்கத்தில் தானே இருக்கான்” என்று தன்னிலையில் மாற்றமில்லாமல் பூ ஜென்னை அவியின் மேலே தள்ளிவிட்டாள்.
ஒன்றாக மணலில் சரிந்தவர்களில் யார் முதலில் ஒருவரில் ஒருவர் மூழ்கினரோ… இருவருமே தனியுலகில் பயணித்தனர்.
இருவருக்குமே முதல் ஸ்பரிசம்… மின்னல் வெட்டி தேகம் சிலிர்க்கும் உணர்வு.
அவி தன்னைப்போல் தன் மேல் கிடக்கும் ஜென்னை அணைத்திட கைகளை உயர்த்திட…
“பப்ளிக் பப்ளிக்…” என்ற பூவின் சிரிப்பில் இருவரும் பதறி விலகினர்.
“நாங்க எதையும் பார்க்கல” என்று பூவும், பாரியும் ஒருசேர கூற… மற்ற இருவரும் அவர்களை அடிக்க துரத்தினர். இப்படியே ஆட்டமும் ஆர்ப்பரிப்புமாக நேரம் கடக்க… இரவு உணவிற்கு ஹோட்டலிற்கு சென்றனர்.
“இந்த நேரத்தில் ஹோட்டலில் என்னடா இருக்கும். எதாவது ரோட் சைட் டிபன் வண்டியா பார்த்து போலாம்” என்று பூ சொல்லிட…
“உனக்கு அங்கெல்லாம் செட்டாகாது மலரே” என்று மறுத்து உயர்தர உணவு விடுதிக்கு அழைத்து வந்திருந்தான்.
“ஆர்டர் பண்ணா பசி போன அப்புறம் கொண்டு வருவான். போடா…” என்று சொல்லிய பூவை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் பாரி.
“இவனால மட்டும் எப்படிடா எப்பவும் தமிழ் மேல அக்கறையா இருக்க முடியுது.”
“வழக்கம் போல கண்ணு வைக்காதடி” என்று ஜென்னின் தலையில் கொட்டியிருந்தான் அவி.
“வாழ்க்கை முழுக்க இப்படியே கொட்டிக்கிட்டே தான் இருக்கப்போறீங்க. இப்போ வாங்க சாப்பிடலாம்” என்று பாரி அழைக்க நால்வரும் பேச்சும் சிரிப்புமாக தங்களின் உணவை முடித்தனர்.
ஜென் ஐஸ்கிரீம் கேட்க… பாரி பூவிற்கு வேண்டாமென்று மறுத்து, அவள் சாப்பிடவில்லையென அவனும் ஐஸ்கிரீம் உண்ணவில்லை.
ஜென்னும் அவியும் மட்டும் ஐஸ்கிரீம் உண்டுகொண்டிருக்க… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூ…
“ஹேய் அவி அங்க பாரேன். உன் ஆளு” என்று சொல்லிட… வாயிற்கு அருகே கொண்டுசென்ற அவனது கை அப்படியே நின்றது.
“யாரு பூ?” ஜென் அவியை முறைத்தபடி பூவிடம் வினவ, “அதோ அந்த பொண்ணு” என்று இரண்டு மேசைக்கு தாண்டி ஒரு ஆணுடன் அமர்ந்திருந்த நீபாவை பூ ஜென்னிற்கு காட்டினாள்.
அங்கு பார்த்த அவி, “இந்த மங்கலான வெளிச்சத்தில் எப்படி தமிழ் அவள் உன் கண்ணுக்கு தெரிஞ்சாள்” என்று வினவ,
“எல்லாம் உன்னை மாட்டிவிடத்தான்” என்று சொல்லிய பாரியின் பார்வை மட்டும் நீபாவுடன் இருந்த ஆணின் மீது சில கணங்கள் அழுத்தமாக படிந்து விலகியது.
“யாருடா அவள்?” முன்னிருந்த ஃபோர்க்கை எடுத்து அவியின் முகத்திற்கு நேரே நீட்டியபடி ஜென் வினவிட…
“நீயே சொல்லு” என்று பூவை மாட்டிவிட்டான் அவி.
பூ ஆரம்பத்திலிருந்து எல்லாம் சொல்லிய பின்னரே ஜென்னின் முகம் சாதாரணமானது.
“என்மேல எவ்வளவு நம்பிக்கை!”
நம்பிக்கை என்ற வார்த்தையில் அவி கொடுத்த அழுத்தம்… ஜென்னிற்கு பழையது யாவையும் நினைவூட்டி தன்னுடைய தவறை எடுத்துக்காட்டியது.
“நம்பிக்கை இல்லாம இல்லை அவி. தமிழ் உன் ஆளுன்னு சொன்னதும், நீ எனக்கு மட்டும் தான் அப்படிங்கிற பொஸஸிவ்… சத்தியமா நீ சொன்ன மாதிரி நம்பிக்கையில்லாமல் இல்லை” என்று கலங்கிய கண்ணீரோடு ஜென் விளக்கம் சொல்லிய பின்னரே, ‘தான் எதார்த்தமாகக் கூறிய வார்த்தை தன்னவளை காயப்படுத்திவிட்டது’ என்று அறிந்த அவி அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்தினான்.
பூ அவர்களையே சுவாரஸ்யமாக பார்த்திருக்க… பாரி மட்டும் நீபாவின் மேசையையே அடிக்கடி பார்த்திருந்தான்.
சில நிமிடங்களில் நால்வரும் ஹோட்டலிலிருந்து வெளிவர, பாரி மட்டும் பைக் கீயினை வைத்துவிட்டு வந்ததாக மீண்டும் உள்ளே நுழைந்து சிறிது நேரத்திற்கு பின்னரே வெளி வந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
45
+1
+1
1