Loading

அத்தியாயம் 58 :

கந்தன் பரபரப்பாக தேநீர் வார்த்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் கட்டிட வேலை செய்யும் இடத்திற்கு வழக்கமாக தினமும் இந்நேரத்தில் கடையில் வேலை செய்யும் நபரிடம் தேநீர் கொடுத்து அனுப்புவார். கொஞ்சம் தாமதமாகி விட்டதால் சற்று வேகமாக செய்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் இருவர் அங்கு வந்து அமர்ந்தனர். அவர்கள் வந்ததும் தேநீருக்கு சொல்லிவிட்டு, காவல் நிலையத்தைதான் நோட்டம் விட்டனர்.

கந்தன் இருந்த பரபரப்பில் முதலில் அவர்களை கவனிக்கவில்லை.

வேலை செய்யும் நபரிடம் ஒரு டின்னில் டீ’யை ஊற்றி கொடுத்து அனுப்பிய பின்னர் தான், அங்கு பெஞ்சில் அமர்ந்திருக்கும் இருவரை கவனித்தார்.

அவ்விருவரும் ஏற்கனவே டீ’க்கு சொல்லியது நினைவிலெழ, அவசரமாக போட்டுகொண்டு சென்று கொடுத்தார்.

“கொஞ்சம் மனிச்சிக்குங்க… வேலையில மறந்துட்டேன்.” கந்தன் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்க அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

அதுதான் கந்தனுக்கு அவர்களின் மீது சந்தேகம் எழ காரணமாக இருந்தது. சாதாரணமாக ஐந்து நிமிடங்கள் தாமதமானாலே கத்துபவர்களை கண்டிருந்தவருக்கு அவர்களின் இந்த அமைதி புதிது. மிகவும் வித்தியாசமாக தெரிந்தார்கள். தோற்றத்திலும் கூட. அதனால் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் பேச்சினையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்களாக அவர்கள் அங்கேயே இருக்க… கந்தன் சென்று அவர்களிடம் விசாரித்தார்.

“என்னப்பா ரொம்ப நேரமா இங்கேயே உட்கார்ந்திருக்கீங்க?”

அவர் கேட்டதில் ஒருவன் தடுமாறினாலும் மற்றொருவன் அவனை அடக்கி பதில் கூறினான்.

“தெரிஞ்சவங்க ஒருத்தவங்க வந்திட்டு இருக்காங்க, அவங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் தான் அடையாளம் சொன்னாங்க. அதான் இங்கேயே வெயிட் பண்றோம். நாங்க ஊருக்கு புதுசு, எங்கையும் மாறிபோயிடக்கூடாதே!” என்றவன், செய்தித்தாளில் மூழ்கியதைப்போல் பாவனை செய்து மேற்கொண்டு கந்தன் எதுவும் கேட்டிடாது தடுத்துவிட்டான்.

அவன் சொல்லியதில்… ‘மூன்று மணிநேரமாவா வராங்க’ என்று கேட்க நினைத்த கந்தன் அவர்களின் பதட்டம் கண்டு அமைதியாக சென்றாலும், அவர்களின் பேச்சு கேட்கும் வகையில் அமர்ந்தார்.

“இந்த கடைக்காரருக்கு டவுட் வந்திருச்சு நினைக்கிறேன்.”

“வந்தா வரட்டும். அதுக்காக வந்த வேலையை முடிக்காம போகக்கூடாது” என்ற மற்றொருவன், “அந்த போலீஸ் வந்ததும், பின்னாலேயே போறோம்… கழுத்தில் ஒரே சீவு, போட்டுதள்ளிட்டு போயிட்டே இருக்கோம். அவ்வளவு தான்” என்று சொல்ல, காதில் விழுந்த செய்தியில் கந்தன் ஆடிபோய்விட்டார்.

‘போலீஸா யாரா இருக்கும்?’ கந்தன் யோசிக்கும் போதே அதற்கான விடையும் அவர்களே கொடுத்தனர்.

“அவன் யாருன்னு தெரியுமா? ஆளை மாத்தி போட்டுடப்போறோம்” என்று அவர்களில் ஒருவன் கேட்க, மற்றொருவன் அலைபேசியில் அந்த போலீஸின் படத்தைக் காட்டினான்.

அவர்களுக்குத் தெரியாமல் எட்டி பார்த்த கந்தன், அது பாரியென்றதும் உறைந்து நின்றுவிட்டார்.

அந்நேரம் தான், ஜென் வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்திலிருந்து வெளியேறினாள். அவள் செல்வதை பார்த்த கந்தன் இன்னும் சிறிது நேரத்தில் பாரியும் கிளம்பிவிடுவானென்று இத்தனை நாளுக்குள் அங்கு பணிபுரியும் காவல் அதிகாரிகள் வந்து போகும் நேரத்தை தெரிந்து வைத்திருந்தவர், தேநீரை போட்டுகொண்டு பாரியை பார்க்க கிளம்பினார்.

“தம்பி கடையில ஆளில்லை. கொஞ்சம் பார்த்துக்கோங்க. டிசி சாருக்கு இந்த டீ’யை கொடுத்திட்டு வந்துடுறேன். லேட்டானா கத்துவாரு” என்று அந்த இருவரின் முகத்தையும் கவனித்து கூறியவர், அதில் தெரிந்த மாறுதல்களைக் குறித்துக்கொண்டு பாரியிடம் வந்தார்.

வந்தவர் விடயத்தை சொல்லி முடிக்க…

பாரி சன்னல் வழியே டீ கடையை ஆராய்ந்தான்.

பரட்ட தலையும் முகம் முழுக்க தாடியுமாக இரண்டு முரட்டு தடியர்கள் அமர்ந்திருப்பது நன்கு தெரிந்தது. முகம் மட்டும் தெளிவாக தெரியவில்லை.

“முதுகுல பெரிய அரிவாள் வச்சிருக்கானுங்க நினைக்கிறேன் சார். சட்டை காலருக்கு மேல் கைப்பிடி தெரியுது” என்றார் கந்தன்.

அவர் சொன்னதை கேட்டுக்கொண்டதற்கு காரணமாக தலையாட்டினான்.

‘எத்தனை நேரம் காத்திருக்கின்றனர் பார்ப்போம்’ என நினைத்த பாரி, கந்தனை அனுப்பி வைத்துவிட்டு, அந்த தடியர்களை மறந்தவனாக வேலையில் ஆழ்ந்தான்.

அலைபேசி சிணுங்கிட செவி மடுத்தான்.

“வரலையா வேந்தா?” நேரம் காலமின்றியது அவனது வேலையென தெரிந்த போதும், வீட்டில் ஜென்னை பார்த்த பிறகு, பாரி இன்னும் வரவில்லையேயென மனதில் எழும் அவனின் நினைவை ஒதுக்க முடியாது அழைத்து அவன் வருகையை அறிந்திட வினவினாள்.

நேரத்தை பார்த்தவன் “வரேன் பூ… கொஞ்ச நேரத்தில்” என்றான்.

“எக்சாக்ட் டைம் சொல்லுடா” என்றாள்.

“ஒருத்தன் என்னை போட்டுத்தள்ள கையில அரிவாளோடு காத்திட்டு இருக்கான். அவனை முடிச்சிட்டு வரேன்” என்று சாதாரணமாக சொல்லிய பாரி வைத்துவிட்டான். ஆனால் கேட்ட பூவிற்கு தலை சுத்தியது.

“இப்போ இவன் என்ன சொன்னான்?” என்று அதிர்ந்தவள், பாரி சொல்லியதை கிரகிக்க முயன்றாள்.

உடலில் நடுக்கம் ஏற்படுவதை பூவால் உணர முடிந்தது.

கையினால் ஆடிய அலைபேசியை இறுகப்பற்றியவள், தன்னை நிலைப்படுத்த போராடியபடி மெத்தையில் தொப்பென்று அமர்ந்தாள்.

பூவிடம் எதைப்பற்றியும் யோசியாது சொல்லிய பாரி, அலைபேசியை வைத்த பின்னர் தான் என்ன சொன்னோம் என உணர்ந்து பூவின் மனநிலை தற்போது என்னவாக இருக்குமென்று யூகித்து திரும்ப அழைத்தான்.

ஒருவித படப்படப்போடு அழைப்பை ஏற்றவள்… மூச்சு விடவே சிரமம் கொண்டவள் போல் திக்கி திணறினாள்.

“வேந்தா… என்ன சொன்ன… என்னவோ சொன்னியே! உண்மை இல்லை தானே?”

அவளின் குரல் தடுமாற்றத்திலேயே தான் சொல்லியதில் பயந்துவிட்டாள் என கண்டறிந்த பாரி…

“ரிலாக்ஸ் மலரே… எனக்கு ஒண்ணுமில்ல. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”

பாரி சொல்லி முடித்தது தான் அவன் மீது பட்டாசாய் வெடித்தாள்.

“யூ இடியட். அறிவிருக்காடா எருமை? எதெது விளையாட்டுன்னு தெரியாதா உனக்கு? ஒன் செக்… உயிரே போயிடுச்சுடா” என்றவள் வேகமாக மூச்சினை வெளியிட்டாள். அதனை பாரியால் உணர முடிந்தது.

“சாரிடி… என் ஜாப் பற்றி தெரியும் தான அப்புறம் என்ன?” தான் அடங்கிப்போனால் அவள் இன்னும் கோபம் கொள்வாள் என்று அறிந்திருந்த பாரி சற்று குரலுயர்த்தினான்.

“புரியுது வேந்தா… பட் இந்த மாதிரி, இனி உனக்கு ஏதோன்னு வச்சு விளையாடாத” என்றவளின் குரல் இப்போது அடங்கியிருந்தது.

“ம்ம்..”

“என்ன கோபமா?” எனக் கேட்டவள், “சரி எப்போ வர?” என்று ஹஸ்கி குரலில் வினவ, அக்குரல் பாரியின் செவி நுழைந்து இதயத்தை அசைத்து பார்த்தது.

“வரேன் வைடி” என்று பட்டென்று வைத்தவன் மூச்சினை உதடு குவித்து உஃப் என்று வெளியேற்றி தன்னை நிலைப்படுத்தினான்.

“வரவர இவக்கிட்ட ரொம்பத்தான் கன்ட்ரோல் மிஸ் ஆகுது பாரி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் ஒரு கேண்டியை பிரித்து வாயில் போட்டான்.

“சார் நைட் டூட்டி ஆபீசர்ஸ் வந்துட்டாங்க. நான் கிளம்பட்டுமா?” கணபதி கேட்கவும் நேரத்தை பார்த்தவன்,

“ஓகே அங்கிள்” என்றதோடு “டே டூட்டி முடிந்த மத்த எல்லாரும் கிளம்பிட்டாங்களா அங்கிள்?” என்று கேட்டான்.

“போயிட்டாங்க சார்” என்ற கணபதியிடம் பாரி அர்த்தமாக தலையசைக்க அவரும் சென்றுவிட்டார்.

பாரிக்கு வெளியேறி அந்த தடியர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவனுக்கு அவர்கள் வேண்டும். இப்போதிருக்கும் சூழலில் அவர்களை யார் அனுப்பியிருப்பா என்று ஆராயாமலே பாரியால் சொல்லிட முடியும். அது ராயப்பனென்று.

அந்த தடியர்களை சேதாரம் இல்லாமல் பிடித்தால் ராயப்பனுக்கு எதிரான சாட்சியாக நிறுத்தலாம் என்றே பாரி அமைதியாக இருக்கின்றான். ஊரடங்கும் நேரத்திற்காக. சாலையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் சமயமென்றால் அவ்விருவரும் எளிதில் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் ஆளரவம் குறைய காத்திருக்கிறான்.

“சார் ரோந்து போற நேரமாகிடுச்சே… நீங்க மதியத்துக்கு அப்புறமும் போகல” என்று டாணாக்காரர் ஒருவர் வந்து சொல்லிட… வழக்கில் உழன்று கொண்டிருந்த பாரி…

“நேரமாகிடுச்சா” எனக்கேட்டு, “நீங்க வரவேண்டாம். நான் மட்டும் போறேன். என் வண்டியில, அப்படியே வீட்டுக்கு போயிடுறேன்” என்று அலுவலகம் விட்டு வெளியில் வந்த பாரி வண்டியில் அமர்ந்து, கூலர்ஸை அணிந்து… எதிரே கடை அடைத்த பின்னரும் அங்கு அமர்ந்திருந்த இருவரையும் கூர்ந்து நோக்கி… மெல்ல வண்டியை உயிர்ப்பித்து சாலையில் மெதுவாக பயணித்தான்.

பாரிக்கு சந்தேகம் எழுந்திடாத வகையில் இருக்க வேண்டுமென்று சில அடிகள் இடைவெளியில் அவ்விருவரும் அவனை பின்தொடர்ந்தனர்.

“ரொம்ப நேரமா காக்க வச்சிட்டான்டா… போடும் போது நல்லா வேகமா போடுடா… எவ்வளவு நேரம் இவனை போட காத்திருக்கிறது” என்றான் வண்டியை ஓட்டுபவன்.

“அவசரபடக்கூடாதுடா… கொஞ்சம் மிஸ் ஆனாலும் நாம மட்டிப்போம்” என்றான் அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தவன்.

சாலையே வெறிச்சோடி இருந்தது.

“இவனுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா? இவ்வளவு மெதுவா போறான்.” தடியரில் ஒருவன் சொல்லி முடிக்க… ஒரு திருப்பத்தில் திரும்பிய பாரி காற்றாய் மறைந்திருந்தான்.

அதே திருப்பத்தில் திரும்பிய அவர்களின் கண்ணிற்கு எட்டும் தூரம் வரையிலுமே பாரியின் அரவம் தென்படவில்லை.

“எப்படிடா எப்படி அதுக்குள்ள மறைஞ்சு போயிட்டான்” என்று வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தவன் கீழேயிறங்கி அவ்விடத்தை அலசினான்.

“டேய் இது முட்டு சந்துடா.” வண்டியிலிருந்தவன் கத்தினான்.

“அப்போ அவன் எங்க எப்படிடா போனான்?” என்று மற்றொருவன் கேட்க… “இப்படித்தான்” என்று அவர்களுக்கு பின்னால் வண்டியை நிறுத்தி அதில் ஒய்யாரமாக சாய்ந்து நின்றிருந்த பாரி தனக்கு வலக்கமிருந்த இரு வீட்டிற்கு இடையேயான குட்டி சந்தை கை காண்பித்தான்.

“என்னதான போட வந்தீங்க, வாங்க உங்க முன்னால தான் இருக்கேன்” என்றான் அசைட்டையாக.

“வேணாம்! எங்ககிட்ட வச்சிக்காத?”

அதில் வெடி சிரிப்பு சிரித்தான் பாரி.

“போட வந்தா பொட்டுன்னு போடணும். இப்படி” என்ற பாரி நின்று கொண்டிருந்தவனின் காலிலேயே முட்டிக்கு கீழே சரியாக துப்பாக்கியால் சுட்டிருந்தான்.

அவன் வலியில் துடித்து ரத்தம் வடியும் காலை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திட…

வண்டியிலிருந்தவன் வேகமாக இறங்கி பாரியை நோக்கி வந்து, சட்டைக்கு பின்னாலிருந்த நீண்ட அரிவாளை எடுத்து பாரியின் கழுத்தில் வைத்தான்.

அதில் பாரியிடம் கிஞ்சித்துக்கும் பயமில்லை.

“அறிவிருக்காடா உனக்கு?”என்ற பாரி, “என் கையில் துப்பாக்கி இருக்கு. அதை கூட மறந்துட்டு இப்படி வீரமா என் முன்னால வந்து நிக்குற” என்றபடி துப்பாக்கியை அவனின் நெற்றி பொட்டில் பாரி வைத்திட… அந்த தடியனோ பயத்தில் அரண்டு பாரியின் கழுத்தில் வைத்திருந்த அரிவாளை நகர்த்தியிருந்தான்.

மற்றொரு கையால் அரிவாளை வாங்கிய பாரி…

“ரொம்ப ஷார்ப்பா தான் இருக்கு. உன் கை வெட்டி செக் பண்ணுவோமா?” என்று அவனின் கையை நீட்டி பிடித்து பாரி அரிவாளை ஓங்கிட… ரவுடியோ அவ்விடமே அதிர பயத்தில் கண்களை மூடிக்கொண்டு அலறினான்.

சில நிமிடங்களில் தன் கைக்கு ஒன்றுமாகிவில்லையென கண் திறந்தவன் பாரியையும் அவனின் கையிலிருந்த அரிவாளையும் மாற்றி மாற்றி பீதியாக பார்த்தான்.

அவனின் கண்ணிற்கு அந்த அய்யனாரே காக்கி உடையில் வந்து புல்லட்டில் சாய்ந்து நிற்பதாகத் தெரிந்தது.

“இவ்வளவு பயத்தை வச்சிக்கிட்டு என்னை போட வந்தது தப்பாச்சே” என்று பாரி சொல்லும் போது… கீழே சுருண்டிருந்தவன், மண்ணை அள்ளி பாரியின் கண்களில் விசிறிட… கூலர்ஸை கழட்டி மெதுவாக ஊதினான் பாரி.

“அறிவுதான் இலைன்னா கண்ணு கூடவாடா தெரியல உனக்கு. கண்ணாடி போட்டிருக்கேனே மண்ணு எப்படிடா என் கண்ணுல படும்” என்ற பாரி, “என்னை போட்டுத்தள்ள எவ்வளவு வாங்குனீங்க?” என சம்மந்தமில்லாமல் வினவினான்.

“என்னடா அப்படி பாக்குற?”

நின்று கொண்டிருந்தவனின் திருட்டு முழியில் பாரி அவனிடம் கேட்டான்.

“நியாயமா உங்களை போட சொன்னது யாருன்னுதான நீங்க கேட்டிருக்கணும்?” என்று தன் சந்தேகத்தைக் கூறினான் அவன்.

“அதுதான் எனக்குத் தெரியுமே?” என்ற பாரி மீண்டும் தான் முன்னர் கேட்டத்தையே கேட்டான்.

“அது… அது வந்து ஐந்து லட்சம் சார்” என்றான் அவன்.

“என்னாது… ஐந்து தானா!” என அதிர்வதை போல் பாவனை செய்த பாரி… “ஏண்டா என் உயிர் உங்களுக்கு வெறும் ஐந்து தானா?” என்று வினவினான்.

“மொத்தமா…”

நின்று கொண்டிருந்தவன் சொல்ல முற்படுகையில்… கீழே கிடந்தவன் வலியில் முணகுவதுபோல் சத்தமிட்டு அவனை தடுத்தான்.

அதை பாரியும் கவனித்தான்.

“சரி விசாரணையை அப்புறம் வச்சிக்கலாம். இப்போ வாங்க நம்ம இடத்துக்கு போவோம்” என்ற பாரி “அங்கிள்” என்று அழைத்திட… அந்த திருப்பத்திற்கு எதிர் பக்கமிருந்து காவல்துறை வண்டியின் இருபக்க விளக்குகளும் ஒளிர்ந்தன.

வண்டியிலிருந்து இறங்கிய கணபதியுடன் மற்றொரு காவலரும் வந்து, இருவரையும் இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றிட…

“அவனுக்கு ட்ரீட்மெண்ட் செய்து கூட்டிபோங்க அங்கிள். நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று பாரி வீடு வந்து சேர்ந்தான்.

அப்பகுதியே நிசப்தமாக இருந்தது.

“ரொம்ப லேட்டா வந்துட்டோம் போலயே” என்று சொல்லிக்கொண்டே இரு வீட்டையும் பார்க்க… கும்மிருட்டில் இருந்தது.

“தூங்கிட்டாங்கலோ” என்ற யோசனையோடு பாரி தன் வீட்டின் கதவில் சாவியை நுழைக்க…

மேலிருந்து அவன் மீது கல்லொன்று விழுந்தது.

கல்லை கையில் எடுத்தவன் அதனை தூக்கிபோட்டுவிட்டு,

யாரென்று சுற்றி பார்த்து மேலே தலை உயர்த்தி பார்க்க… அவன் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எட்டி பார்த்தபடி சத்தமின்றி சிரித்துக்கொண்டிருந்தாள் பூந்தமிழ்.

“உன் வேலை தானா?” என்று பாரி கேட்டிட…

“மேல வா வேந்தா” என்றாள் அவள்.

வீட்டிற்குள் சென்றவன் அடுத்த இரண்டு நிமிடங்களில் மாடியில் அவளின் இறுகிய அணைப்பில் இருந்தான்.

“ஹேய் பூ என்னடா, என்னம்மா?” கேட்டவன் அவளின் பின்னந்தலையை வருடியபடி இருந்தான்.

“உன் ஜாப் ரொம்ப ரிஸ்க்ல வேந்தா…”

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.” உண்மையை ஒப்புக்கொண்டான்.

“என்னால் தான!” தன்னால் தன்னுடைய ஆசைக்காகத்தான் பாரி காவல்துறையை தேர்ந்தெடுத்தான் என்கிற அத்தனை நாள் கர்வம் சந்தோஷம் இன்று வருத்தமாக வெளிவந்தது.

“உனக்காகத்தான்… நிச்சயம் என் விருப்பமில்லாமல் இல்லை.”

தலை கொண்டு அவனின் நெஞ்சில் முட்டியவள்…

“நீ அப்போ சொன்னது பொய்யில்லை தான?” என பயத்தோடு வினவினாள்.

“ஹா… ஹா… ஹா…”

“இப்படி சிரிச்சா என்னடா அர்த்தம்… ஹான்.” அவனிலிருந்து விலகி இடுப்பில் கை குற்றி முறைத்துக்கொண்டு கேட்டாள்.

“இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சுடி” என்றவன் மீண்டும் அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”

“என் புருஷனுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” பட்டென்று கூறியிருந்தாள்.

அவளின் புருஷன் என்கிற வார்த்தை தூவானச் சாரலாய் அவனின் நெஞ்சத்தை குளிர்வித்தது. சத்தமில்லாமல் இதயத்தை இடம் பெயர்த்தது.

அக்கணம் அவனுக்கு எப்படியிருக்கிறாதாம்? வார்த்தையால் விவரிக்க முடியாத சுகம் மனமெங்கும் பரவுவதை உணர்ந்தே ஏற்றான்.

அவள் சொல்லிய வார்த்தையை அவளே உணரவில்லை.

அவள் பாட்டிற்கு இன்று அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாது பாரியிடம் அவனின் நெஞ்சில் சாய்ந்தபடி கைகளை விரித்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவளின் நெருக்கம் இன்று புதிதாய் அவனுள் எதையோ கிளர்ந்தெழச் செய்தது. உடல் வெம்மையை உணர… மனம் ஆர்ப்பரித்தது. ஆனால் வாய் மட்டும் அவளின் பேச்சிற்கு ம் கொட்டிக் கொண்டிருந்தது.

“என்னடா நான் பேசிட்டிருக்கேன் நீ அமைதியா இருக்க?” என்றவள் அப்போதுதான் அவனின் முக மாற்றத்தை கவனித்து… அதில் வஞ்சனையில்லாமல் தெரியும் காதலில் நாணம் படர அவனிடமே தன்னை ஒளித்துக்கொண்டாள்.

தனது அணைப்பை இறுக்கிய பாரி…

“இட்ஸ் நைஸ் மலரே” என்று சொல்லிட,

“நானா?” எனக் கேட்டிருந்தாள் பெண்ணவள்.

“ஆமாம்… இந்த மலரு பொண்ணும், அவளோட நெருக்கமும்” என்றான்.

அவன் காதோரம் சொல்லியதில், அவனது உதடு உரசிட கூசி சிலிர்த்தவள்… அவனின் சட்டை பொத்தானை திருகிட, அப்போதுதான் அவனது காக்கி உடையை கவனித்தவளாக விலகி அமர்ந்தாள்.

“யூனிஃபார்ம் மாத்தலையா வேந்தா?”

“மேடம் தான் அதுக்கு விடலையே” என்றவன் அவளின் விலகில் தெளிந்திருந்தான்.

“வெயிட் பன்றேன். சேஞ்ச் பண்ணிட்டு வா வேந்தா” என்றாள்.

“அல்ரெடி ரொம்ப லேட்டாச்சு. நீ போ தூங்கு பூ. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு” என்றவன் எழுந்துகொள்ள…

எதை சொல்ல அவனுக்காக காத்திருந்தாளோ அதை பாரியிடம் சொன்னாள் பூ. சம்மதம் கேட்டு.

இது ஏற்கனவே அவன் யோசித்து வைத்தது தான். செய்யவும் ஆரம்பித்திருந்தான், அதனால் பூவிடம் உடனே ஒப்புக்கொண்டான்.

“அவங்ககிட்ட சொல்லிட்டு செய்யலாமா வேந்தா?”

“வேண்டாம்… சஸ்பென்ஸா இருக்கட்டும் மலரே. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து அவளை தூக்கியபடி பக்கத்து மாடிக்கு தாவியிருந்தான்.

________________________

அலுவலகத்தில் பாரி தன்னுடைய அறையில் இருக்கும் போர்டிற்கு முன் நின்றிருந்தான். அவன் வலது கை பலவற்றை அவனுக்கு புரியும் வகையில் மட்டும் அதில் கிறுக்கிக் கொண்டிருந்தது.

அமிர்தாவின் கொலை வழக்கு முடிந்து… அது வேறொரு வழக்கிற்குள் நுழைவது பாரிக்கு தெரிந்தது.

ராயப்பனும் ரித்தேஷும் நாட்டிற்கு விரோதமான ஏதோ ஒன்றை செய்கின்றனர். அது அமிர்தாவிற்கு தெரிந்ததாலேயே இன்று அவள் உயிரோடில்லை என்பது வரை வந்துவிட்டான்.

ஆனால் அதற்கடுத்து அவனால் ஒரு அடி முன்னால் வைக்க முடியவில்லை. அன்று ரித்தேஷின் அறையில் பார்த்தது தான் காரணமென்று அவனால் அடித்து சொல்லிட முடியும். இப்போது அவனது குழப்பமே, அது மட்டும் தான் காரணமா என்பது தான்.

‘சொந்தம், உறவு, பாசம், அன்பு இதைவிட பெரியதா பதவியும் பணமும்.’ நினைக்க நினைக்க பாரிக்கு ஆத்திரமாக வந்தது.

‘ரித்தேஷிற்கு தெரிந்து நடந்ததா அல்லது ராயப்பன் இதில் அவனை கூட்டு சேர்க்கவில்லையா?’

எங்கு ஆரம்பித்தாலும் அதன் தொடக்கம் ரித்தேஷின் அறையில் அவன் பார்த்ததில் வந்து நின்றது. இந்த வழக்கின் முக்கிய மூலமே அதுதான்… ஆனால் அதனை நிரூபிக்க அவனிடம் ஒரு ஆதாரமும் இல்லையே!

முடித்துவிடலாம்… மொத்தமாக இந்த வழக்கை முடித்துவிடலாம். ஆதாரம், ராயப்பனை குற்றம் சாட்டும் அந்த ஆதாரம் சிக்க வேண்டுமே! சிக்குமா?

‘ரித்தேஷ் வீட்டிற்குள் நுழைந்தது போல் ராயப்பனின் வீட்டிற்குள்ளும் நுழைந்திடலாமா?’ என்கிற யோசனை அவனுள் ஓடும் போதே…

‘உன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவன், உனக்கான ஆதாரங்களை இன்னமுமா அவனின் பக்கத்தில் வைத்திருப்பான்’ என்ற கேள்வியும் எழுந்தது.

‘ராயப்பனிடமே நேரடியாக நீதான் கொலையாளி என்று சொல்லியாயிற்று… இனி தான் கண்டுபிடித்ததை சாட்சியங்களாக காட்ட வேண்டும். அதுவே சட்டம். சட்டத்திற்கு சாட்சியங்களே முக்கியம்.’

அடுத்து என்ன… அடுத்து என்ன… என்பதே பாரியின் மனதிலும், மூளையிலும் ஓடிக்கொண்டிருந்தது.

ஏதோவொன்று… கையிலிருக்கும் ஒன்றை தவறவிடுவதாக அவனின் உள்ளுணர்வு உந்தியது. அது என்னவென்று தெரியாது… அந்த வழக்கின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இன்றைய நிகழ்வுகள் வரை அனைத்தையும் ஒன்றிற்கு இரு முறையாக தனக்கே தெளிவு வேண்டி குறிப்பாக எழுதி பார்த்துவிட்டான்… ஆனால் அது என்னவென்று தான் சிக்கவில்லை. வெகுவாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது.

‘அமிர்தாவின் மரணம்… அதை கண்டுபிடிக்கத்தான் வந்தோம், கண்டுபிடித்தாயிற்று. அத்தோடு முடித்திடலாமா?’ யோசித்தான். வெறும் யோசனை மட்டுமே. அந்த யோசனையிலும் பல கேள்விகள் முளைத்தது அவனது மூளையில்.

சொந்த மகளையே தந்தை கொலை செய்திருக்கும் நிலையில் நிச்சயம் ஏன் எதற்கு என்ற கேள்விகள் வரும். அதற்கு தகுந்த ஆதாரங்களும் வேண்டும். அதனை ராயப்பனே ஒப்புக்கொண்டால் தான் ஆயிற்று.

ராயப்பனின் மீது பாரிக்கு வந்த முதல் நாளே சந்தேகம் எழுந்தது என்னவோ உண்மை தான். அமிர்தாவின் மரணத்திற்கு ராயப்பன் ஏதோவொரு வகையில் காரணமாக இருப்பாரென்று நினைத்தானே தவிர… கொலையாளியே ராயப்பன் தான் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

ராயப்பனின் அதிகப்படியான பயம், சுற்ற வைக்கும் பேச்சு, கவனம் முழுவதையும் ரித்தேஷின் புறம் திருப்பிவிடும் முயற்சி… அத்தோடு கேட்டதும் அமிர்தாவின் அலைபேசியென வேறொன்றை தயார் செய்து கொண்டுவந்து கொடுத்தது. குமார் அளித்த எண். பிடிபட்ட ஆட்டோவிலிருந்து அவன் எடுத்த ராயப்பனின் முகவரி அட்டை. இவையெல்லாம் சந்தேகம் எனும் வட்டத்திற்குள் ராயப்பனை சிக்க வைத்தது.

ஆனால் வலுவாக அமைந்தது… ஆணையர் குமார் அன்றொரு நாள் பாரியிடம் கொடுத்த ஒரு அலைபேசி எண்.

அதனை ஆராய்ந்ததில் அது ராயப்பனின் காரியதரிசியின் எண் என்று அறிந்ததும்… ராயப்பன் தான் கொலையாளி என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கே, அவரின் முன்பே சங்கரனை ரித்தேஷ் மற்றும் அமிர்தாவுக்கு இடையே என்ன நடந்தது என்பதை சொல்ல வைத்தான்.

ராயப்பனின் எவ்வித சலனமுமின்றிய நிர்மலமான முகமே அவரை பாரியிடம் காட்டிக்கொடுத்தது.

அதிலும் இறுதியாக அவர் காட்டிய அதிகப்படியான உணர்வு வெளிப்பாடு…

அதனாலேயே நேற்றைய விசாரணையின் போது ராயப்பன் என்ன கதை கூறுகிறார் என்று தெரிந்துகொள்ளவே அமைதியாக கேட்டவன்… இறுதியில் எதுக்கு கொலை செய்தீர்கள் என்று வினவி அவரை ஆழம் பார்த்தான்.

பாரியின் எண்ணப்படி ராயப்பன் அதிர்ந்துவிடவெல்லாம் இல்லை. மாறாக திடமாக நிமிர்ந்து “நானெதுக்கு கொல்லப்போறேன்?” என்று வினவினாரேத் தவிர… நான் கொலை செய்யவில்லையென ஒருமுறை கூட மறுத்து கூறவில்லை.

அத்தோடு கோபம் கொண்டு பாதியிலேயே அவர் வெளியேறியது அதுவே அவர்தான் கொலையாளி என்று உறுதிப்படுத்தியது.

ராயப்பன் குற்றவாளி எனும் பட்சத்தில் அதனை கண்டறிந்த தன்னை நிச்சயம் ஏதேனும் செய்து இவ்வழக்கிலிருந்து விலக்க முயற்சிப்பாரென்று எதிர்பார்த்த பாரியின் கணிப்பை பொய்யாக்காது அவனை கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பி வைத்து பாரியின் வலையில் தானாக வந்து சிக்கிக்கொண்டார் ராயப்பன்.

இதில் தெரியாத இரண்டு விடயம்…

‘அமிர்தாவின் அறையில் பால்கனி இல்லாத பட்சத்தில், உட்பக்கமாக பூட்டியிருந்த அறைக்குள் ராயப்பன் எப்படி உள் சென்றார்?’

‘எதற்காக அமிர்தாவை கொலை செய்ய வேண்டும்?’

இவ்விரண்டுக்கும் விடை தெரியாது… போர்டில் தன் சந்தேகத்தை வட்டமிட்டிருந்தவன் அதனையே வெறித்தபடி இருக்க அனுமதி கேட்டு உள் நுழைந்த ஜென் தன்னுடைய அலைபேசியை பாரியிடம் நீட்டினாள்.

“என்ன ஜென் யாரு?”

“உன் ஆளு தான் பாரி” என்று ஜென் சொல்லியதும், அத்தனை நேரம் தீவிர யோசனையில் கடுகடுத்து இருந்த பாரியின் முகம் இறுக்கம் தளர்ந்து இலகியது.

“பாருடா சார் முகத்தில் சடனா தேஜஸ்” என்று கேலி செய்த ஜென்… “உன் மொபைல் என்னாச்சு பாரி? ரெண்டு தடவை கால் பண்ணியும் நீ எடுக்கலன்னு எனக்கு பண்ணினாள்” என்று சொல்லிவிட்டு ஜென் சென்றுவிட, அவள் கொடுத்துச்சென்ற அலைபேசியை காதில் ஏற்றவன் நொடியில் தன்னவளின் பகற்றத்தை உள்வாங்கினான்.

“பூ என்னடா… என்னாச்சு?”

“வேந்தா நீ வரியா?” அத்தனை பதட்டத்திலும் அவளின் பயம் தெளிவாகத் தெரிந்தது.

“எனித்திங் சீரியஸ் மலரே?”

“இல்லைன்னா நான் உன் ஸ்டேஷன் வர்றேன்” என்றவள் அழைப்பைத் துண்டிக்கப்போக…

“வேர் ஆர் யூ?” என வேகமாகக் கேட்டவாறே, வெளியில் வந்து தன்னுடைய வாகனத்தை உயிர்பித்திருந்தான்.

“ஆபிசில் தான் வேந்தா இருக்கேன்” என்றவளிடம், “அவி இல்லையா?” எனக் கேட்டவன் அவள் பதில் சொல்லிடும் முன்னமே, “நான் வந்திட்டு இருக்கேன். பயப்படாம இரு” என்று சொல்லி சாலையில் அதிவேகத்தில் பறந்தவன் பத்து நிமிடங்களில் அவளின் அலுவலக கட்டிடத்தின் முன்பு நின்றிருந்தான்.

பூவிற்கு அழைத்தவன்… “நான் வந்துட்டேன் டா” என்று சொல்லியது தான், அதுவரை இருக்கையில் தான் பார்த்ததை எண்ணி நடுங்கிக்கொண்டு இருந்தவள்… மின்னலென அவனிடம் ஓடியிருந்தாள்.

“ஹேய் மலரே பார்த்து… என்னடா ஏன் இப்படி ஓடிவர?” என்று கடிந்தவன், அவளின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளில் அவளது பயம் உணர்ந்து… “என்னாச்சு?” என்றான்.

“வீ…வ்..வீட்டுக்கு போலாமா வேந்தா” என்றவளின் குரலே நடுங்கியபடி தான் ஒலித்தது.

“ஆபீசில் ஏதும்…”

அவன் கேட்டு முடிக்குமுன் வேகமாக இல்லையென தலையாட்டியிருந்தாள்.

“உனக்கு ஒன்னுமில்லையே?”

“இல்லைடா” என்று கத்தியவள் “உன் விசாரணையை வீட்டுக்கு போய் வச்சிக்கோ. இப்போ கிளம்பு” என்று வண்டியில் அவனுக்கு பின்னால் அமர்ந்து அவனை விரட்டினாள்.

“அவிகிட்ட சொல்லிட்டியா?”

“அச்சோ” என்றவள் “போகும்போது சொல்லிக்கலாம். நீ போ” என அவனின் முதுகில் தட்டி வண்டியை கிளப்பச்சொன்னால்.

செல்லும்போதே அவிக்கு “நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். ஆபிசில் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று தகவல் அனுப்பியவள் மூச்சினை வேகமாக வெளியேற்றி பாரியின் முதுகில் தலை கவிழ்த்து , அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.

“ஹேய் என்னடி பண்ற?” என்று நெளிந்து நிமிர்ந்தவன், “நான் யூனிஃபார்மில் இருக்கேன் மலரே. கையை எடு. ரோட்ல யாராவது பார்க்கப்போறாங்க” என்றான்.

“ரொம்ப பண்ணாதடா” என்று சொல்லியவளிடம் மாற்றமில்லை.

“வீட்டுக்குத்தான் போகணுமா பூ? இப்படியே எங்காவது பார்க்கில் உட்கார்ந்து பேசுவோமா? நான் திரும்ப ஆபீஸ் போகணும்” என்று பாரி கேட்க…

“உன்னை எந்த நேரமும் கண்காணிக்க ராயப்பன் ஆள் வைக்கலையா வேந்தா?” என்றவளின் வினாவில் வண்டியை சட்டென்று நிறுத்தி பூவை திரும்பி பார்த்தான்.

“தெரியும் வேந்தா” என்ற பூ “இப்போ உனக்கு நான் சொல்லப்போற விஷயத்துக்கு வீட்டுக்கு போவதே பெஸ்ட்” என்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பூ தயங்கியபடியே தன் ஸ்லிங் பேக்கிலிருந்து மிகச்சிறிய அளவிலான லிங்கத்தை எடுத்தாள்.

“இது என்னோட டேபிளில் வச்சிருந்தேன்” என்ற பாரி தன்னறையில் உள்ள மேசையில் சென்று பார்க்க அந்த லிங்கம் இருந்த பெட்டி மட்டும் அங்கிருந்தது.

அப்போது தான் இரவு அதில் அப்படி என்ன இருக்கும். எதற்காக இதனை ரித்தேஷ் அத்தனை பாதுகாப்பாக வைத்திருந்தான் என்று பாரி எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அதிலிருந்து ஒன்றும் புலப்படவில்லை என்றதும் அப்படியே மேசை மீது வைத்துவிட்டு உறங்கிப்போனான்.

காலையிலும் அலுவலகம் செல்லும் பரபரப்பில் அதனை கவனிக்கவில்லை அவன். மேசையிலிருந்த அவனின் பெல்ட் மற்றும் தொப்பியை எடுக்கும்போது அந்த லிங்கம் கீழே விழுந்திருந்தது.

பாரி அலுவலகம் கிளம்பிய பின்னர், அவியுடன் அலுவலகம் செல்ல வீட்டிற்குள் வந்த பூ, அவி தயாராகிக் கொண்டிருப்பதை கண்டு பாரியின் அறைக்குள் சென்று அவனின் வாசத்தை தன் மனமெங்கும் நிரப்பிக்கொண்டிருந்தாள்.

அந்நேரம் தான் தரையில் மேசைக்கு கீழே கிடந்த லிங்கத்தை கையிலெடுத்தவள் அழகாக இருப்பதாக பார்த்துக்கொண்டிருக்க அவி அழைக்கவும், அலுவலகத்தில் தன்னுடைய மேசையில் வைத்துக்கொள்ளலாம் என்று பையில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள்.

அலுவலகம் சென்று சற்று ஓய்வாக இருந்த நேரம் பையிலிருந்து லிங்கத்தை எடுத்தவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

“இதெப்படி உன்கிட்ட?” என்று சற்று கடினமாக வினவிய பாரியின் முகம் அவர்களின் திருமணம் நாளின் போது கூட அவள் பார்த்திடாதது.

பாரியின் கடுமையில் முகம் சுருங்கிய போதும் அவனின் கேள்விக்கான விளக்கத்தை பூ அளித்தாள்.

“சாரி வேந்தா… அதுவந்து நல்லாயிருக்குன்னு…”

“நல்லாயிருந்தா அடுத்தவங்க பொருளை அவங்க கேட்காம எடுக்கலாமா?” பாரியின் வார்த்தையில் பூவின் கண்ணிலிருந்து மழையென கண்ணீர் பொழிந்தது.

“அந்த டேபிளில் இருப்பது எல்லாமே என்னுடைய கேஸ் சம்மந்தப்பட்ட திங்க்ஸ். அதுல நீயேன் கை வச்ச?” சற்று சூடாகவே கேட்டான்.

தன்னுடைய அலட்சியத்தின் மேல் உண்டான கோபத்தை பாரி பூவிடம் காட்டினான்.

தான் அலட்சியமாக விட்டதால் தானே பூ எதையோ தெரிந்துகொள்ள கூடாத ஒன்றை தெரிந்துகொண்டு பயந்திருக்கிறாள் என்று அவள் மீதான அக்கறையை கருத்தில் வைத்து பேசியவனுக்கு வார்த்தையை கவனத்துடன் கோர்க்க தெரியவில்லை.

பாரி அடுத்தவங்க என்று சொல்லியதிலேயே பூ உடைந்திருந்தாள்.

“சாரி வேந்தா. நீ கோபப்படாதே” என்று கண்ணீரோடு கூறியவள், “நீ எனக்கு அடுத்தவங்களா வேந்தா” என்று தழுதழுத்தாள்.

வேகமாக இழுத்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன்…

“ம்ப்ச்… நான் அப்படி மீன் பண்ணலடி. நீ கையில் வச்சிருக்கியே இது ரொம்ப முக்கியமானதுன்னு என் மனசு சொல்லுது. ஆனால் இது என் கண்ணுக்கு வெறும் லிங்கமா மட்டும் தான் தெரியுது. ஆனால் இந்த வழக்கே மொத்தமா இதில் தான் அடங்கியிருக்குன்னு எனக்கு தோனிட்டே இருக்கு. பட் இதுல எனக்கு ஒன்னும் தெரியல. அந்த டென்ஷனில் கத்திட்டேன். சாரிடி” என்றவன் அவளின் கண்களை துடைத்து அதன் மீதே தன் இதழை ஆழப் பதித்தான்.

“நான் அழல விடு” என்றவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்.

“மலரு பொண்ணுக்கு கோபமா?”

“ஆமாம்.” முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“இந்த கேஸ் ஆல்மோஸ்ட் முடிச்சிட்டேன் பூ. பட் ஏதோ ஒன்னு என்னை ரொம்ப சுத்த வைக்குது. அந்த டென்சன் உன்மேல் காட்டிட்டேன் சாரி” என்றான் இறங்கிய குரலில்.

“போடா.” அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை.

“ஹேய் இன்னும் என்னடி” என்றவன் “உன் காலை பிடிக்கவா?” என்று கேட்டபடி பூவின் காலை தூக்கி தன் மடியில் வைத்தவன் அவளின் பாதத்தில் அழுத்தம் கொடுக்க வேகமாக இழுத்துக்கொண்டாள்.

“என்ன வேந்தா இது?” என்று அவள் கடிய…

“நான் பிடிக்கக்கூடாதா? என் பொண்டாட்டி கால் இப்படி பிடிப்பேன்” என்று மீண்டும் பிடித்து தன் மடியில் வைத்ததோடு “இதோ இப்படி கிஸ் கூட வைப்பேன்” என்று சொல்லியதை செய்தும் காட்டிட பெண்ணவள் மொத்தமாக அவனுள் விழுந்தாள்.

பாதத்தில் அழுந்த இதழ் பதித்தவனின்  மீசை உரசி உடலில் குறுகுறுப்பை உண்டாக்கிட மொத்த தேகமும் அவனுள் சிலிர்த்து அடங்கியது.

“வேந்தா” என்று காதலாக அழைத்தவள் அவனால் சட்டென்று கிளர்ந்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவரும் மார்க்கமின்றி அவனின் முகம் நோக்கி தன் முகம் கொண்டு சென்றாள். அவளின் கண்களில் தெரிந்த காதலில் ஆணவன் முழுவதும் கட்டுப்பட்டு சிலையாகினான்.

அவளாக அவனுக்கு கொடுத்திடும் முதல் முத்தம். அவனது கன்னம் அவளின் இரு உள்ளங்கையிலும் சிறை கொண்டிருக்க… அவனது இதழோ அவள் இதழ் வசம். அவனது அழுத்தமான உதடுகளுக்கு தன் பூவிதழ் கொண்டு வர்ணம் தீட்டினாள். பாரி பூவின் இத்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்களை அகல விரித்து முற்றிலும் உறைந்து அவளுக்கு இசைந்தான்.

தேனூறும் சுவையை புதிதாக அறிந்தவன் விட மனமின்றி அவளது செயலை தன்னுடையதாக்கியிருந்தான். ஒருவரின் சுவாசப்பையில் மற்றொருவரின் சுவாசம் சுகமாய் இன்பமாய் நிரம்பிக் கொண்டிருந்தது.

ஆணவனின் கைகள் பெண்ணவளின் தேகத்தை உணரத் துடித்திட… அவளோ அவனின் கைகளில் நெகிழ்ந்த தருணம் கரடியாய் அவர்களை கலைத்து பிரித்தது அவனது அலைபேசி.

“பாரி எங்கபோயிட்ட…?” ஜென் தான் அழைத்து கேட்டிருந்தாள்.

“ஆங்… கரடி பிடிக்க.” எரிச்சலோடு மொழிந்தான்.

அவனது பதிலில் பூ பக்கென்று சிரித்துவிட… நீண்டு விரிந்த அவளின் இதழில் பாரியின் பார்வை அழுத்தமாக நிலைத்தது. சற்று நேரத்திற்கு முன்பு அவனால் சிவந்து தடித்த அவளது மெல்லிதழ் அவனை தடுமாறச் செய்திட… தன்னவனின் மாற்றம் புரிந்தவள் வேகமாக அங்கிருந்த அறைக்குள் புகுந்துகொண்டாள்.

“என்னடா சொல்ற?”

“நீ போன் பண்ண ரீஸன் சொல்லு.”

“என் போனும் சேர்த்து கொண்டு போயிட்டடா, எப்போ ஆபீஸ் வருவ? உன்னைத்தேடி கமிஷனர் வந்திருக்கார்” என்று அழைத்ததற்கான காரணம் எல்லாவற்றையும் ஒன்றாக சொல்லி முடித்தாள்.

“அவரை நான் அவரோட வீட்டில் மீட் பண்றதா சொல்லி அனுப்பி வை ஜென். நான் வர லேட்டாகும்” என்றவன் ஜென் மேற்கொண்டு எதுவும் சொல்லுமுன்னர் வைத்திட்டான்.

பாரி பேசி முடிப்பதற்குள் தன்னை நிலைப்படுத்திய பூ சாதாரணமாக அவன் முன்பு வந்து அமர்ந்தாள்.

“பேசிட்டியா வேந்தா?” என்று கேட்டவள் அவனின் பார்வையில் தடுமாறினாள்.

அவனது பார்வை வீச்சோடு அதில் வழியும் காதல் வேட்கையை தாங்க இயலாது அவள் தலை கவிழ்ந்திட…

“என்னை என்ன பண்ற மலரே!” மனதை பனிச்சாரலாய் உறைய வைக்கும் இதமான குரலில் வினவினான்.

“வேந்தா…”

“என்னை உனக்கு அடிமையாக்குறடி” என்றவன் வேகமாக எழுந்து தன்னுடைய பின்னந்தலையில் இரு கைகளையும் கோர்த்து வைத்து அழுத்தியவனாக மேல்நோக்கி தலையை உயர்த்தி காற்றினை ஊப் என வெளியேற்றி… நின்ற இடத்திலேயே சுற்றி சுற்றி நடந்தான்.

“இங்க… இங்க புகுந்து என்னவோ பண்றடி” என்றவனின் ஒற்றை கை விரல்கள் மொட்டாக குவிந்து அவனது இதயப்பகுதியை குத்திக் காட்டியது.

“இமைக்கிற நேரத்தில் என்னை உனக்குள்ள மொத்தமா சாய்ச்சிடுறடி” என்றவன்…

“இந்த கேஸ் முடியுற வரை நான் தனியாத்தான் இருக்கணும் பூ. என்னால உனக்கு எதுவும் ஆகிடக் கூடாது. ஆனால்  உன்னை பக்கத்திலேயே வச்சிக்கிட்டு என்னால் தனியா இருக்க முடியலடி. சத்தியமா ஏன்னு தெரியல…

உன்னை பார்த்தாலே… என் ஹார்ட் ஓவரா எம்பி குதிக்குது. காரணம் புரியமா இல்லை. ஆனால் இப்போ… இல்லை அது முடியாது” என்று தன் மனதில் இருப்பதை ஏதேதுவாக உளரியவன் இறுதியில் தன் தலையை உலுக்கி தன்னை சமன் செய்திருந்தான்.

அவனையே சுவாசமாக கொண்டிருப்பவளுக்கா அவனது செய்கை பேச்சுக்கான காரணம் விளங்காது. அவள் அவனையேத்தான் இமை மூடாது பார்த்திருந்தாள். தனக்கான தன்னவனின் காதல் பிதற்றல்களை ஆழ்ந்து ரசித்திருந்தாள்.

“பிடிச்சிருக்கு… ரொம்ப!”

“நான் இப்படி புலம்புறதா?”

“இல்லை… நீ, உன்னோட காதல்” என்றவளின் பார்வையில்… மீண்டும் தன்னை மூழ்கடித்துக்கொள்ள விருப்பம் கொண்டு விழைந்த போதும், அவளிடம் தாவும் மனதை பிடித்து இழுத்து ஒருநிலைப்படுத்தி நின்றான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
22
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்