அத்தியாயம் 31 :
ஆணையர் அலுவலகம்.
நேரம் காலை பத்து மணி.
அந்த நீண்ட அறையில் ஐவர் மட்டுமே இருந்தனர்.
துணை ஆணையர் பாரி வேந்தன் நடுநாயகமாக அமர்ந்திருக்க… வலது பக்கம் ஜென்சி, இடது பக்கம் கணபதி, எதிரே முன்னால் அமைச்சர் சங்கரன் மற்றும் மாநிலத்தின் ஹோம் மினிஸ்டர் ராயப்பன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அவ்வறையில் ஆழ்ந்த அமைதி. தண்ணீர் சொட்டும் இடியாய் எதிரொலிக்கும் நிசப்தம்.
ஒரு காலை அமர்ந்திருக்கும் இருக்கைக்கு கீழே மடித்தவாறு வைத்து மற்றொரு காலை தனக்கு முன்னிருந்த மேசைக்கு கீழே நீட்டி விட்டு இருக்கையில் உடலை நன்கு சரித்து… வலது கை முட்டியை இருக்கையின் கைப்பிடியில் ஊன்றி முகத்தை தாங்கியபடி கண்களில் கூர்மையை ஏந்தி பாரி அமர்ந்திருந்த தோரணையே எதிரே அமர்ந்திருந்த ராயப்பனுக்கு அச்சத்தை கொடுத்தது.
அவர்மீது தவறில்லை என்ற நிலையில் பயம் தேவையில்லை தான். ஆனால் எதிராளிக்கு பாரி அளிக்கும் அதிகபட்ச தண்டனை பயம். பார்வையாலேயே பயத்தை விளைவித்து உண்மைகளை வாங்கிவிடுவான். அதையே ராயப்பனிடமும் கையாண்டான். அவரைப்பற்றி முழுதாக தெரிந்து கொண்டதால்.
“உங்க பக்கத்திலிருந்து தெரிஞ்சதை சொல்லுங்க ராயப்பன்?”
ராயப்பனின் முகத்தில் வேதனை. மகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பை அவரின் கண்கள் பிரதிபலித்தன.
“பிறப்புங்கிறது எந்தளவுக்கு சந்தோஷமோ… இறப்புங்கிறது அந்தளவுக்கு துக்கம். அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். வருத்தப்பட்டுட்டே இருந்தால் குற்றவாளி தானா வந்து பிடிபடுவானா? நீங்க சொல்லும் ஒரு சின்ன வார்த்தைக்கூட எங்க விசாரணைக்கு மிக உதவியா இருக்கலாம்.”
ராயப்பனை பேச வைப்பதற்காக தூண்டினான்.
“அன்னைக்கு சங்கரன் மூலமா தெரிஞ்சிக்கிட்ட விஷயத்திலிருந்தே நான் இன்னும் மீளல” என்று சோகம் இழையோடும் குரலில் ஆரம்பித்த ராயப்பன்,
“என் மகளை சின்ன வயசிலிருந்தே விரும்புறேன்னு சொன்னான். எந்தளவுக்கு விரும்புறான்னு அவனோட அறையை திறந்து காட்டினான்” என்று அவர் நிறுத்த…
அதுதான் பாரிக்கும் தெரியுமே! நேற்று இரவு தானே ரித்தேஷின் அறையை இன்ச் பை இன்ச்சாக சோதனையிட்டுருந்தானே!
தனக்கும் அமிர்தா மீதான ரித்தேஷின் காதல் தெரியுமென்பதால் பாரி அர்த்தமான புன்னகையை அந்நொடி தன் உதட்டில் படரவிட்டான். அதன் பொருள் அவன் மட்டுமே அறிந்தது.
மேலே சொல்லுங்க என்று பாரி பார்வையை காட்டிட ராயப்பன் தொடர்ந்தார்.
“ரித்தேஷ் வளர்ச்சியை நான் அவன் கூட இருந்தே பார்த்திட்டு இருந்ததால், எனக்கு உங்களைவிட அவன் பெஸ்ட்டா தெரிஞ்சான். அதான் கண்ணை…”
இவ்விடத்தில் கை காண்பித்து அவரின் பேச்சை தடை செய்தான் பாரி.
“நான் என்னை ஆப்ஷனில் வைக்கும் உரிமையை உங்களுக்கு கொடுக்கவேயில்லையே. அவனோட என்னை கம்பேர் பண்ணும் ரைட்ஸ் உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று அடக்கப்பட்ட சினத்தோடு கேட்ட பாரியின் முகம் கண்டு கணபதியே ஆடிபோய்விட்டார்.
“என்ன மேடம் இவ்வளவு கோபம் சாருக்கு…”
“இதுலாம் ரொம்ப கம்மி சார்” என்ற ஜென், “கோபத்தில் சும்மா மாஸ்ஸா இருக்கான்ல சார்” எனக் கேட்டவளை கணபதி ஒரு மார்க்கமாக பார்த்திட…
“அவன்… என்னோட காலேஜ் க்ரஷ் கணபதி சார்” என்று அசடு வழிந்தாள்.
மீண்டும் பாரி பேசிட… இருவரின் கவனமும் அங்கு சென்றது.
“நீங்க சம்மதிச்சிருந்தாலும் நிச்சயம் நான் உங்க மகளை திருமணம் செய்திருக்கமாட்டேன் ராயப்பன்” என்று அழுத்தமாகக் கூறிய பாரி, “காதலிக்கிறேங்கிறதை வேணும்னா நான் யோசிக்காம அக்செப்ட் பண்ணியிருக்கலாம். மேரேஜ் அப்படிங்கிறப்போ நிச்சயம் நான் யோசித்திருப்பேன்… நிச்சயம் உங்க மகளை மறுத்திருப்பேன்” என்று பாரி சொல்லியதில் ராயப்பனின் முகம் கருத்து சிறுத்தது.
அன்று அமிர்தாவுடன் வீட்டிற்கு வந்தவனை உட்காரென்று கூட சொல்லாது முகத்திலடித்தார் போல் நடந்துகொண்ட தன் செயலுக்கு இன்று பாரி திருப்பி அடித்துவிட்டான் என்றே அவருக்குத் தோன்றியதே.
அந்நேரம் அவரின் மன்னிப்பு வேண்டும் பார்வையையெல்லாம் பாரி கருத்தில் கொள்ளவில்லை.
“அப்புறம்” என்று சாதாரணமாகக் கேட்டிருந்தான்.
“அவனே அவளுக்கு எமனாவான்னு நினைக்கல” என்ற ராயப்பன்…
“சங்கரன் அமிர்தாவை என் வீட்ல விட்டுப்போன அப்புறம், அவள் ஏதோ என்கிட்ட சொல்ல வந்து தயங்கினாள். அவளோட முகம் ரொம்ப சோர்வா, கவலையா இருந்ததால, எதுவும் கேட்காம ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வச்சிட்டேன். மறுநாள் காலையிலேயே, கேரளாவுக்கு பிரதமர் வர்றாருன்னு… அந்த நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்ததால் நான் கேரளா போயிட்டேன். அங்கிருந்து அடுத்த நாள் மதியம் தான் வீட்டுக்கு வந்தேன். அப்போ அமிர்தா என்கிட்ட பேச வந்த சமயம் ரித்தேஷ் வீட்டிற்கு வந்தான். அமிர்தாகிட்ட பேசணும் சொல்லி அவளை அறைக்குள்ள கூட்டிட்டுப்போய் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து தான் வெளியில் வந்தான். அவள் என்னோட வாழ முடியாது சொல்றான்னு வருத்தமா சொன்னான். பேசி சமாதானம் செய்து வைத்து அனுப்புறதா சொல்லி அவனை அனுப்பி வச்சேன்.
அவன் வந்து போன அப்புறம் அமிர்தா ஏதோ மாதிரி தான் இருந்தாள். சாப்பிட கூப்பிட்டும் வரல. அவளை அதிலிருந்து வெளிய வர வைக்க நள்ளிரவு வரை பேசிட்டு இருந்தேன்.
அப்போ ஏதோ சொல்லணும் சொன்னியே என்னன்னு கேட்டதுக்கு அப்புறம் சொல்றதா சொல்லிட்டாள். நானும் தூங்கப் போயிட்டேன்.
காலையில ரொம்ப நேரமாகியும் அவள் வெளிய வரல.
அவளா எழும்புற வரை எழுப்ப வேண்டான்னு வேலையாளிடம் சொல்லிட்டு நான் அலுவலகம் போயிட்டேன்.
பதினோரு மணி இருக்கும், இன்னும் அமிர்தா எழுந்து வரல, சாப்பாடும் சாப்பிடலன்னு சமையல்கார பெண் எனக்கு போன் செய்து சொன்னதால, நான் அவசரமா வந்து அமிர்தா அறை கதவை தட்டினேன். அது உள்பக்கமா பூட்டியிருந்தது. ரொம்ப நேரம் தட்டியும் பலனில்ல… அதனால கதவை உடைத்து தான் உள்ள போனோம்.
அங்கு பார்த்தால்…” சொல்லிக்கொண்டிருந்தவர் உடல் குலுங்க முகத்தை மூடி அழுதார்.
சங்கரன் நண்பனின் தோளில் கைபோட்டு தட்டிக்கொடுத்தார்.
“என் மகள் இறந்து கிடந்தாள்” என்றவர் மேசையிலிருந்த நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
“அவ்வளவு தானா?”
பாரியின் கூர்மையான கேள்விக்கு ஆமென்று தலையசைத்தார் ராயப்பன்.
“ஓகே வெல்…” என்று இருக்கையிலிருந்து எழுந்து இரு கரம் உயர்த்தி சோம்பல் முறித்த பாரி மேசையை சுற்றிக்கொண்டு ராயப்பனின் அருகில் சென்று, மேசையின் மீது கை ஊன்றி அவரின் முகத்திற்கு அருகே குனிந்து…
“சொல்லுங்க ராயப்பன்… எதுக்காக அமிர்தாவை கொலை செய்தீங்க?” என்று ஊன்றிய கையை எடுத்து வேகமாக மேசையை தட்டினான்.
சங்கரனுக்கு அதிர்ச்சி. கணபதி மற்றும் ஜென்னிற்கு ஆச்சர்யம்.
ராயப்பனின் மீது போட்டிருந்த கையை சங்கரன் எடுத்துக்கொண்டார்.
“நான்… நானெதுக்கு என் மகளை கொல்லப்போறேன் பாரி?” அத்தனை நேரம் உடல் தளர்ந்து சோகமாக அழுகையில் குலுங்கியவர்… அக்கணம் திடமாக நிமிர்ந்து பார்த்து வினவினார்.
“அதுதான் தெரியல…? ஆனால் கண்டுபிடிச்சிடுவேன்.” பாரியின் அவ்வார்த்தைகள் கொடுத்த அழுத்தம் ராயப்பனிற்குள் குளிர் பரவச்செய்தது.
“போன விசாரணை அப்போவே நீங்கதான்… நான் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை எனும் ரீதியில் பேசுனீங்க!” ராயப்பன் பாரியிடம் வாதம் செய்தார்.
“அஃப்கோர்ஸ்… நான் தான் சொன்னேன். இப்பவும் நான் தான் சொல்றேன். எதுக்காக அமிர்தாவை ஐ மீன் உங்களுடைய மகளை கொலை செய்தீங்க? என்ன மோட்டிவ்?” ராயப்பனை பாரி பார்வையால் குத்தி கிழித்தான்.
“நான் ஏன் பண்ணனும்?” என்று கோபமாக இருக்கையை தள்ளிவிட்டு எழுந்த ராயப்பன்…
“உங்களால குற்றவாளியை கண்டுபிடிக்க முடியலனா… கேஸை சிபிஐ’க்கு மாற்றிட வேண்டியது தானே. அதைவிட்டு குற்றம் செய்யாதவங்களை குற்றவாளி ஆக்குவீங்களா?” என்று கொதித்து வினவினார்.
“என்னோட பதவியையும் மறந்து உன் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த என்னையே பதம் பார்ப்பியா நீ? உனக்கெல்லாம் என்னை பார்ப்பதற்கே அனுமதி கொடுத்திருக்கக்கூடாது” என்றவர் தன்னுடைய கட்சி துண்டை தோளில் உதறி போட்டபடி…
“இதுக்குத்தான்… இவன் வந்து என்னை கொலையாளி ஆக்குவதற்கு தான், இவன் தான் வேணுன்னு இங்கு கொண்டு வர சொன்னியா? வா போவோம். இனி இவன் என்கிட்ட விசாரணைன்னு சொல்லிக்கிட்டு வரட்டும். அப்புறம் வச்சிக்கிறேன்” என்ற ராயப்பன் சங்கரன் கையை பிடித்து இழுத்துச் சென்றார்.
“கோபம் எல்லா நேரத்திலும் கேடயமா இருந்து தப்பிக்க உதவி செய்திடாது ராயப்பன்” என்ற பாரியின் வார்த்தையில் அறையின் வாயிலில் வெளியேற அடி வைத்த ராயப்பன் அதிர்ந்து நிற்க…
“கொலையாளி நீங்க தான். இல்லைன்னு கத்துறதால இல்லைன்னு ஆகிடாது. இப்போவே உங்களுக்கு எதிரான சாட்சியங்களை ஒப்படைத்து வழக்கை கொலைன்னு என்னால மூட முடியும்.
ஆனால், பெற்ற ஒரே மகளையே கொலை செய்யுற அளவுக்கு என்ன காரணம் இருக்கும். அதை தெரிஞ்சிக்க ரொம்ப எக்ஸைட்டா இருக்கு.
தெரிஞ்சிக்குவேன். அப்போ உங்களால இப்போ மாதிரி கோபத்தில் கத்திட்டு உண்மையை மறைக்க முடியாது” என்றவனின் குரல் கர்ஜனையாக ஒலித்து அடங்கியது.
ராயப்பன் சென்றதும் பாரியின் அருகில் சென்ற ஜென்…
“பாரி… ராயப்பன் தான் குற்றவாளியா?” என அதிர்வாகக் கேட்டவள், “ஆனால் அன்னைக்கு வேறென்னவோ சொன்னியே?” என்றாள்.
“எஸ்…” என்ற பாரி… “விசாரணையின் போது எல்லா நேரத்திலும் உண்மையையே பேசணும், சொல்லணும் என்றில்லை ஜென். உண்மையை வரவழைக்க பொய்யும் சொல்லலாம்” என்றான்.
ஜென்னுடன் கணபதியும் அவனின் பதில் புரியாது குழம்பி நின்றனர்.
*****
புது ப்ரொஜெக்ட்டிற்கான வேலையில் அவி தீவிரமாக ஆழ்ந்திருந்தான். அவனுடன் அவனது குழுவும். பணியில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர். குழு தலைவராக இருந்தவனை ப்ரொஜெக்ட் ஹெட்டாக உயர்த்தியிருந்தனர்.
ப்ரொஜெக்ட் அளிக்கவிருக்கும் நிறுவனத்திற்கு பல நிறுவனங்களிலிருந்து அறிக்கை தயார் செய்து வரும். அதில் சிறப்பான ஒன்றிற்கு அந்நிறுவனம் ப்ரொஜெக்ட் செய்ய அனுமதி வழங்கும்.
இது இந்திய ராணுவ பாதுகாப்பிற்கு உதவும் வகையில் செயலி ஒன்றை வடிவமைக்கும் ப்ரொஜெக்ட்.
சிறிய ஸ்டார்ட்டப் நிறுவனம் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை தங்களது அறிக்கையை சமர்பிக்கலாமென இந்திய அரசு விளம்பரம் செய்திருந்தது.
அரசாங்க ப்ரொஜெக்ட் என்றால் அதற்கு தனி மதிப்பு தானே. அதனை எப்படியாவது கைப்பற்றிட வேண்டுமென முனைப்பாக அவி மற்றும் அவனது குழு வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நன் மதிப்பு கிட்டும் என்ற நோக்கத்தோடு வேலையில் மூழ்கியிருந்தனர்.
அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு மாத கால அவகாசம் உள்ளது.
அறிக்கை என்பது செயலிக்கான மாதிரி வடிவத்தை இந்த இரண்டு மாதங்களில் தயார் செய்து அதனை சமர்ப்பிக்க வேண்டும். மாதிரி செயலி வடிவமைப்பது எளிதல்ல என்பதாலேயே இத்தனை நாட்கள் காலவகாசம்.
அவி இரண்டு மாதிரி வடிவமைப்பை உருவாக்க தன்னுடைய குழுவை வழி நடத்திக் கொண்டிருக்கிறான்.
இரண்டில் எது சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளதோ அதனை அனுப்பி வைத்து ப்ரொஜெக்ட் கிட்டும் பட்சத்தில் முழு வடிவம் கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்தான்.
அதனை அவனுக்கு மேலுள்ள அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள பணி வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தது.
மற்றொரு யோசனையும் அவிக்கு இருந்தது. அதனை அவி பூவுடன் பகிர்ந்துகொள்ள…
“சூப்பர் அவி” என்று பூ அவனின் தோள் தட்டினாள். அனைவரின் முன்னிலையிலும் அவளது செயல் யாருக்கும் தவறாக தெரிந்திடாத நிலையில்… நீபா மட்டும் உள்ளுக்குள் குமைந்தாள்.
அன்று பூ பேசிய யாவும் நீபாவிற்கு தன்னை அவள் மிரட்டியதாகவேத் தோன்றிட… அவர்களின் நெருக்கம் அவளுக்கு ஒருவித குரோதத்தை அவளுக்குள் தோற்றுவித்தது.
நீபா தங்களையே பார்ப்பதை கவனித்த பூ…
“இங்கென்ன பார்வை… கண்ணை நோண்டிடுவேன்” என்று செய்கை செய்திட… நீபா முறைத்துவிட்டு தன் வேலையை கவனித்தாள்.
“அவளை நீ கண்டுக்காத தமிழ். நாம நோட் பண்ணுறோம் தெரிந்தாலே அவளுக்கு அது சாதகமான எண்ணத்தைக் கொடுக்கும்” என்ற அவியின் பார்வை முழுவதும் தனக்கு முன்னிருந்த கணினி திரையிலேயே இருந்தது.
“ரொம்ப யோசிக்கிற அவி…”
“யோசித்து தான் ஆகணும் தமிழ். இதெல்லாம் சொன்னா புரிஞ்சிக்காத ஜென்மம்” என்றான் அவி.
“அப்போ ஏன் நம்ம டீமில் வச்சிருக்க?”
“எம்.டி அவளோட ரிலேட்டிவ்… என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லுறார் அவர்” என்ற அவி, “அவரே அவளை அக்செப்ட் பண்ணிக்க சொல்லி தூது வந்தார்” என்று கசப்பாக மொழிந்தான்.
“உன்னோட டேலண்டுக்கு உனக்கு இதைவிட பெரிய கம்பெனியில் எல்லாம் ஆஃபர் கிடைக்கும். அப்புறம் ஏன் இவ்வளவு தொல்லைக்கு மத்தியில இங்கிருக்க அவி. பத்தாத குறைக்கு எனக்கும் இங்கயே வேலை வாங்கி கொடுத்திருக்க” என்று குறைப்பட்ட பூவிடம்…
“எனக்கு வேறொரு ஐடியா இருக்கு தமிழ்” என்றவன் அதனை கூறிட… பூ அவனை மானமாற வாழ்த்தினாள்.
“நான்னா அதில் நான் மட்டுமில்லை… நம்ம நாலு பேரும்” என்றான் அவன்.
இது அவர்கள் நால்வரும் கல்லூரி காலத்தில் போட்ட திட்டம். காலத்தின் மாற்றத்தால் ஆளுக்கு ஒரு திசையில் பயணித்து இப்போதுதான் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்.
கல்லூரியில் தாங்கள் பேசியதை அவி உண்மையாக்கும் நோக்கில் முதல் அடியை எடுத்து வைத்திருந்தான்.
அதனை அறிந்த பூ சக பணியாளர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து அவியை “ஹேய்” என்ற உற்சாக கூவலோடு அணைத்து ஆர்ப்பரித்தாள்.
பூ இங்கு சேர்ந்ததுமே அவியும் அவளும் உயிர் தோழர்கள் என்ற செய்தி அங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருக்க… அவர்களின் அணைப்பை மற்றவர்கள் தவறாக சித்தரிக்கவில்லை.
மாறாக, “என்ன விஷயம் சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம்” என்று ஒருவர் கேட்க…
தங்களை பார்வையாலேயே எரிக்குமளவிற்கு பார்க்கும் நீபாவின் மீது கண் வைத்தவளாக…
“அதுவா வெங்கட்… நம்ம அவிக்கு நெக்ஸ்ட் மன்த் மேரேஜ். அதுக்குத்தான் இந்த குஷி” என்று பூ சொல்லிட அனைவரும் அவியை வாழ்த்தினர்.
‘எனக்கே என் கல்யாண விஷயம் இப்போதாண்டா தெரியும்’ என்று அவி மனதிற்குள் கதறினாலும், வெளியில் சிரித்தபடி அனைவருக்கும் தலையாட்டி வைத்தான்.
“என்ன தமிழ் இப்படி கோர்த்துவிட்டுட?”
அவி கேட்டிட… பூ கண் அடித்து நீபாவை சுட்டிக்காட்டினாள்.
நீபாவின் முகம் அப்பட்டமாக அதிர்ச்சி மற்றும் எரிச்சலான முகபாவத்தை காட்டியபடி அவியை உருத்து விழித்தபடி இருக்க…
“விட்டா அவள் உன்னை கடத்திக்கிட்டு போயிடுவாள் அவி” என்று அவியை பூ கேலி செய்தாள்.
“வேலை நேரத்தில் அவளோட பேச்சு நமகெதுக்கு தமிழ்” என அவி கேட்டாலும், “பட் அவளை நீ வச்சு செய்யுறது ஜாலியா இருக்கு” என்றான்.
“இவ்வளவு நாள் உன்னை டார்ச்சர் பண்ணா(ள்) தானே, இப்போ அவளோட டர்ன்” என்று பூ சிரிக்க…
நீபா எழுந்து வந்து,
“அவி நான் உன்கிட்ட பேசணும்” என்றாள்.
“அதெல்லாம் வர முடியாது.” பூ பதில் கூறினாள்.
“நான் உன்னை கூப்பிடல?”
“அவி வரமாட்டான்” என்று பூ நீபாவிடம் மல்லுக்கு பாய்ந்தாள்.
“நான் அவிகிட்ட தானே பேசணும் சொல்றேன். நீயெதுக்கு நடுவில் வர?” நீபா சுள்ளென்று காய்ந்தாள்.
“அவன் என் பிரண்ட். நான் அவனுக்காக பேசுவேன்.” பூ நீபாவை விடுவதாக இல்லை.
“அவி வர்றீங்களா?”
“அவி போகக்கூடாது.”
இருவருக்கும் நடுவில் அவியின் தலை உருண்டது.
“தமிழ் விடு… நான் பேசிட்டு வரேன்.” அவனுக்குத் தெரியும். தன்பேச்சை நீபா கேட்கமாட்டாளென்று அதனால் தான் தமிழை அடக்கினான். கண்களில் இரைஞ்சலோடு.
“என்ன பேசணும்?”
“தனியா…”
“தனியா பேச நமக்குள்ள ஒண்ணுமில்ல.”
“ப்ளீஸ் அவி… இப்போ பிரேக் டைம் தான!” நீபா மிகவும் இறங்கி கேட்டதால் அவியால் அதற்கு மேல் மறுக்க முடியாதுபோக பூவை என்ன செய்வது என்பதைப்போல் பார்த்தான்.
பூ கண்களால் சம்மதம் வழங்கிட…
“பேசலாம்” என்று அவ்வறையிலிருந்து வெளியேறிட… நீபா பூவை மிதப்பாக பார்த்துச் சென்றாள்.
நீபாவின் அறியாமையை எண்ணி பூ தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவி என்ன பேசுவான் என்பதையும் நினைத்து பார்த்த பூவிற்கு சிரிப்பு அதிகரித்தது. அதனை முயன்று அடக்கினாள்.
பூ எண்ணியதை போல் தான் அவி நீபாவின் மூக்கை உடைக்கும் விதமாக பேசியிருந்தான்.
மீட்டிங் ஹாலிற்குள் இருக்கும் பால்கனியில் அவியும் நீபாவும் நின்றிருந்தனர்.
அவியின் கையில் தேநீர் கோப்பை இடம்பெற்றிருந்தது. அவன் வெளியில் தெரியும் காட்சிகளில் பார்வையை பதித்து தேநீரை சுவைத்தபடி இருந்தான்.
அவியை பேசுவதற்கென்று அழைத்து வந்துவிட்டாள். ஆனால் என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை.
அவிக்கு திருமணம் என்று பூ சொல்லியது… நீபாவை அவியிடம் பேசத்தூண்டியது. ஆனால் இத்தனை வருடம் பலவிதமாக சொல்லிய காதலை அதற்கு மேலும் அவனிடம் எப்படி சொல்வதென்று தெரியாது வார்த்தையற்று நின்றாள்.
கண்ணாடி கதவின் வூடே அவர்களை கண்ட பூ… நீபாவின் பக்கம் கூட திரும்பி நின்றிடாத அவியின் செயலில் அவனின் எண்ணப்போக்கை அறிந்து சிரித்துக் கொண்டாள்.
கோப்பை காலியானதும் அங்கிருந்த டீபாயின் மீது வைத்த அவி…
“என்ன பேசணும்?” என்று அவளை பார்த்திடாது குரல் மட்டும் காட்டினான்.
“ஐ ல…”
நீபாவை சொல்லவிடாது கை காட்டினான்.
“அந்த டாபிக் வேண்டாம். நோ சொன்னதை எஸ் சொல்ல வைக்க ட்ரை பண்ணாத. எப்பவும் நோ தான்.” அவி இத்தனை உறுதியாக சொல்வானென்று நீபா எதிர்பார்க்கவில்லை போலும். அதிர்ந்து நின்றாள்.
“அவி ப்ளீஸ்…”
“காதல்… கெஞ்சுறதால வருமா நீபா?”
அவியின் கேள்வியில் நீபாவின் மனம் பலமாக அடிவாங்கியது.
“ஆரம்பத்திலிருந்தே… நீ என்னை வேறொரு கண்ணோட்டத்துல பார்க்க ஆரம்பிச்ச அப்போலேர்ந்தே பல முறை மறைமுகமாவோ நேரடியாவோ என்னோட மறுப்பை சொல்லிட்டேன். நீ ஏற்க மறுத்தா நான் ஒன்னும் பண்ண முடியாது.”
கால்களை அகட்டி வைத்து கைகளை பின்னால் கட்டி வான் வெளியே வெறித்தவனாக அவளுக்கு முதுகுகாட்டி நின்றான்.
“அவி… ஒன் டைம் கன்சிடர் பண்ணலாமே!”
“கன்சிடர்…” இதழ் சுளித்த அவி… “அல்ரெடி அம் இன் லவ்” என்றான்.
ஏதோ தன்னை தவிர்ப்பதற்காக பூவுடன் சேர்ந்து அவி பொய் சொல்வதாக நினைத்திருந்த நீபாவிற்கு தற்போது அவனின் முகத்தில் தெரியும் காதல் பொய்யில்லையென்று உண்மையை பட்டவர்த்தனமாக அவளுக்கு உணர்த்தியது.
“அப்போ நிஜமா உங்களுக்கு மேரேஜா?”
“இதில் பொய் சொல்ல என்னயிருக்கு?” என்ற அவி… “லுக் நீபா… உன் விஷயத்தில் நீ ஹர்ட் ஆகக்கூடாதுன்னு நான் ரொம்ப பொறுமையா ஒவ்வொரு முறையும் உனக்கு எடுத்து சொல்லிட்டு இருக்கேன். நீ கேட்பதாவே தெரியல. இதுக்கு மேலும் என்னால முடியாது. இதோடு இதை முடிச்சிக்கலாம் நினைக்கிறேன். இனி நீ என்கிட்ட ஜாப் விஷயமாகக்கூட எதுவும் பேச வேண்டாம். முடிஞ்சா டீம் மாறிக்கோ இல்லையா நான் என் வேலையை விட்டுடுறேன். இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் நீ உன் நிலையில் பிடிவாதமா இருக்கிறது இருவருக்குமே நல்லதில்லை. இதை இத்தோட முடிசசிக்குவோம். நாம பேசுறதும் இதுதான் கடைசி” என்ற அவி நீபாவின் பதில் அடுத்து என்னவாக இருக்கும் என்பதைக்கூட தெரிந்துகொள்ள விருப்பமற்று சென்றுவிட்டான்.
அவி வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்ததும்…
“என்ன அவி ஓவரா?” எனக் கேட்டாள் பூ.
“நான் முடிச்சிக்கிட்டேன் தமிழ்” என்ற அவிக்கு நீபாவின் அடுத்த செயல் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
******
“பாரி ஆர் யூ சீரியஸ்?”
“எஸ் ஜென். அம் மீன் இட்” என்றான் பாரி. உறுதியாக ராயப்பன் தான் கொலையாளி என்பதில் பாரிக்கு துளியும் சந்தேகம் இல்லை.
“அன்னைக்கு வேறென்னவோ சொன்னியே பாரி?” என்ற ஜென்னிடம் தான் ராயப்பனை கையாண்ட விதத்தைப்பற்றி கூறினான்.
வழக்கை திசை திருப்புவதற்காகவே ராயப்பன் தன்மீது குற்றம் இருப்பதாகக் காட்டிக்கொள்வதாக பாரி நினைத்திருந்தான். அதையே தான் நம்புவதாகவும் ஜென் உட்பட, ராயப்பனிடமும் காட்டிக்கொண்டான்.
சங்கரன் தன்னுடைய மருமகளின் மரணம் கொலையென வழக்கு தொடுக்கவிருக்க… அதனை அவரது மகன் ரித்தேஷ் தடை செய்திட்டான். அவனும் ஒரு காரணமல்லவா.
அப்போது மறைமுகமாக சங்கரன் ராயப்பனிடம் உதவி கேட்க… அவரும் செய்தார். தன்மீது சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராயப்பன் அவ்விடயத்தில் சங்கரனுக்கு உதவி செய்தார்.
ராயப்பன் செய்த பெரிய தவறு பாரியை இங்கு வரவழைத்தது அத்தோடு… தான் தான் குற்றவாளி என்று வெளிப்படையாகக் பயத்தை முன்வைத்து தன்னை காட்டிக்கொண்டது.
பாரியையே அந்த விடயத்தில் சுற்றிவிட பார்த்தது.
இன்று விசாரணைக்காக தனக்கு முன்பாக அமர்ந்திருந்த…
ராயப்பனை கூர் விழிகளில் அளந்து கொண்டிருந்த பாரியின் உள்ளுக்குள் அன்றொரு நாள் ராயப்பன் குற்றவாளியாக இருக்க முடியாதென்று ஜென் மற்றும் கணபதியிடம் தான் பேசியதை அவ்வறைக்குள் வந்தது முதல் கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்துவிட்டான்.
“ராயப்பனை பொறுத்தவரை எனக்கு அவர் எதிரி. அவர் மேலிருக்கும் கோபத்தில் எங்க அவர் மகள் வழக்கில் அசட்டையா இருந்துடுவேனோ… அதனால குற்றவாளி தப்பிடுவானோன்கிற எண்ணத்தால் என்னை டிரகர் செய்து முடுக்கிவிடப் பார்க்கிறார். அதற்குத்தான் அந்த இல்லாத பயம்.
அவர் பயத்தை வச்சு… அவர் தான் குற்றவாளின்னு நான் முடிவு செய்துட்டால் அவருக்கு எதிரா ஆதாரங்களை திரட்டுவதற்கு முயல்வேன்… அப்படி அந்த வழியில் செல்லும்போது ராயப்பன் மீது குற்றமில்லை என்ற நிலையில் உண்மை குற்றவாளி பிடிபடுவான் இல்லையா? அதற்குத்தான் அவரின் தந்திரம் இந்த பயம். என்னிடம் வேண்டாத பேச்சுக்களை எல்லாம் பேசியது.”
அன்று பாரி பேசியது அனைத்தும் வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே. அது ராயப்பனின் மீது விழுந்த சந்தேகத்திற்காக… அவர்மீது எனக்கு சந்தேகமில்லை என்பதை அவர் நம்புவதற்காக அவன் தெரிந்தே பேசிய பொய் அது.
சுவற்றிற்கு கூட காதிருக்கும் என்ற நிலையில் எப்படியும் அலுவலகத்தில் தன்னால் விவாதிக்கப்படும் அனைத்தும் ராயப்பனுக்கு தகவலாக சென்றுவிடுமென கணித்தே அன்று அவன் ராயப்பன் குற்றம் செய்ய வாய்பில்லையென அழுத்தமாகக் கூறினான்.
அது அவன் நினைத்தது போல் ராயப்பனிடம் தப்பாமல் சென்று சேர்ந்திருக்க… பாரியின் மொத்த சந்தேகமும் ராயப்பனின் மீது மட்டுமே!
அன்று சங்கரன் விசாரணையின் போது தனக்கு தெரிந்த அனைத்தையும் அவர் சொல்ல கேட்ட ராயப்பனுக்கு எவ்வித அதிர்வுமில்லை. மூன்றாம் மனிதரின் கதையை கேட்கும் பாவனை அவரிடம். நிர்மலமான எவ்வித பதட்டமுமில்லாத முகம். அதனை மறைப்பதற்கே தலை கவிழ்ந்திருந்தார்.
ஜென்னும் கணபதியும்… சங்கரன் கூட அவரின் வருத்தமாகவே அத்தோற்றத்தை கருதினார்.
ஆனால் பாரி அவரின் ஒவ்வொரு அசைவையும் சற்றும் பிழறாது கவனித்தான்.
சங்கரன் சொல்லி முடித்த பின்னரே தன்னுடைய மகளை நினைத்து வருந்துவதைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டார்.
அந்நொடி பாரியின் எண்ணம்…
‘நடிப்பில் மனுஷன் பிச்சு உதறுறார்’ என்பதாகத்தான் இருந்தது.
இப்போது சங்கரன் சொல்லியிருப்பதற்கு ஏதுவாக ராயப்பன் கதை அமைக்க வேண்டும். அதனை பாரியும் உணர்ந்ததாலேயே அவருக்கு நேரம் கொடுத்து விசாரணையை சற்று தள்ளி வைத்தவனாக அவ்வறையை விட்டு வெளியில் சென்றான்.
அதனை தன்னுடைய கவலைக்கு மதிப்பளித்து தன்னை மீட்டுக்கொள்ள நேரம் கொடுத்து பாரி வெளியேறியதாக ராயப்பன் நினைத்துக் கொண்டார்.
ராயப்பன் பாரியை முழுமையாக நம்ப வேண்டும். தன்மீது அவனுக்கு சந்தேகமில்லையென்று. அதற்காக பாரியும் சில பொய்களை சொல்ல வேண்டியதாகவும், ஜென்னிடமே கூட அப்பொய்யிற்கு ஏற்றவாறு நடிக்க வேண்டியதாகவும் இருந்தது.
வெளியில் சென்ற பாரி ராயப்பன் அளித்த அமிர்தாவின் அலைபேசியை ஆராய்ந்து பார்த்தான். அவன் எண்ணியது போல் அதில் ஒரு தகவலும் அவனுக்கு சாதகமாக இல்லை. அமிர்தா, ரித்தேஷின் சில புகைப்படங்களைத் தவிர அதில் வேறொன்றுமில்லை.
தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகள் கூட சுத்தமாக துடைக்கப்பட்டிருக்க… அதிலேயே பாரிக்கு உறுதியானது, ராயப்பன் அமிர்தாவின் அலைபேசியின் தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக துடைத்து கொடுத்திருக்கிறார் என்பது.
தகவல்களை திரும்ப பெற முயற்சித்தும் பலனில்லை.
அப்போதுதான் பாரி கண்டறிந்தான்… அது அமிர்தாவின் அலைபேசியே இல்லையென்று.
சர்வீஸ் கடையில் இரு தினங்களுக்கு முன்னர் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்த அலைபேசி என்று தெரிவிக்க… ராயப்பனின் மீது சந்தேகமகா இருந்த ஒன்று வலுவானது.
ஓரளவிற்கு எல்லாவற்றையும் சொல்லிய பாரி…
“இதில் எனக்கு இன்னும் பல கோணம் இருக்கு. அந்தவகையில் ஆராய்ந்தாலும் ராயப்பன் தான் கொலையாளி.
ஒரு வழக்கின் தொடக்கம் பல புள்ளிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் முடிவு ஒரே புள்ளியா மட்டும் தான் இருக்கும்” என்றான்.
“அவருக்கு எதிரா ஆதாரம் இருக்கா பாரி?”
“இருக்கு… அது அவரோட பயம்.”
“அதெப்படி சாட்சியாகும் பாரி?”
“அவரோட அந்த பயம் நமக்கு சாட்சிகளை கொடுக்கும் ஜென்.” உண்மையில் அதுதான் நடந்தது.
ராயப்பனே தான் கொலை செய்ததை பாரி கண்டுபிடித்துவிட்டான் என்கிற அச்சத்தில் பதற்றம் அடைந்து பாரிக்கு எளிதான ஆதாரத்தை கொடுத்திருந்தார்.
“அமிர்தா அவர் பெற்ற மகள் தானே சார்.” தந்தையே மகளை கொலை செய்வாரா என்கிற அதிர்ச்சியில் கணபதி கேட்டிருந்தார்.
“இங்கு எல்லாத்துக்கும் உயர்ந்ததுன்னு ஒன்னு இருக்கு அங்கிள்” என்ற பாரி “ராயப்பனுக்கு அவருடைய மகளைவிட என்ன உயர்ந்ததுன்னு தெரியல. அதுதான் காரணமாகவும் இருக்கும்” என்ற பாரிக்கு ரித்தேஷின் அறையில் கண்டது மின்னலென மனதில் தோன்றி மறைந்தது.
‘அதுதான் காரணமெனில் ரித்தேஷுக்கு கொலையில் பங்குண்டா. இங்கு அன்பு என்றதை மிஞ்சிய ஒன்றும் உள்ளதோ.’ பாரியால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“நான் ரித்தேஷை விசாரிக்கணும் ஜென். அவன் வீட்டில் இல்லை. இங்க நம்ம இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்” என்று ஜென்னிடம் சொல்லிய பாரிக்கு, சங்கரன்… ரித்தேஷ், அமிர்தா மீது எந்தளவிற்கு அன்பு வைத்திருந்தான் என்று சொல்லியது நினைவிலாடியது.
‘அந்தளவிற்கு காதல் கொண்டவனுக்கு இதில் பங்கிருக்குமா?’ ஒரு விடையில் பல கேள்விகள் முளைத்தது அவனுள்.
சில நிமிடங்களில் பாரி மற்றொரு வழக்கில் மூழ்கிவிட…
செக்ரியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
“பாரி…” அவரின் அழைப்பில் இருக்கும் உண்மையான அன்பை பாரியால் உணர முடிந்தது.
“சொல்லுங்க சார். எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன் பாரி” என்றவர், “நான் சென்னைக்கு வந்துடலாம் இருக்கேன் பாரி. அங்க எனக்கு வீடு இருக்கிறது தான். ஆனால் திடீர்னு வாடகைக்கு இருப்பவங்களை எப்படி காலி செய்ய சொல்றது. நோட்டீஸ் கொடுத்திருக்கேன். அவங்க காலி பண்ண டைம் கேட்கிறாங்க. அதான் எனக்கொரு வீடு வேணுமே, மூன்று மாதத்துக்கு தங்குவதற்கு மட்டும் போதும். அதுக்குள்ள அவங்களை காலி பண்ணித்தர சொல்லிடலாம்” என்றார்.
“என்னாச்சு சார். எதாவது ப்ராப்ளமா?” அவனின் அக்கறை அவருக்கு புதிதாக இருந்தது.
பெங்களூரில் அவனிருந்த வரை, பிள்ளைகளற்ற அவர் பாரியைத்தான் தன் மகனாக நினைத்திருந்தார். ஆனால் பாரி எந்த உணர்வையும் காட்டிடாது அவரை தள்ளியே வைத்திருந்தான்.
செக்ரியின் மனைவி கோதையை காண நேர்கையில் மட்டும் அவனுக்கு சிரிக்கவும் தெரியும் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.
அதனாலேயே இப்போது பாரி அக்கறையாக வினவியது அவருக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
“பிரச்சினை அப்படின்னு எதுவுமில்லை பாரி. ஒரு விபத்தாகிப்போச்சு. வீட்டம்மா பயந்து ரிட்டையர்ட் ஆகத்தானே போறீங்கன்னு விருப்ப ஓய்வெடுங்க சொல்லியாச்சு. எனக்கும் ஓய்வா இருந்தால் போதும் தோணுது. அதான் வேலையை விட்டுட்டேன் பாரி” என்றவரின் குரலில் விரக்தி.
“யாருமேயில்லைன்னு வாழ்க்கை ரொம்ப வெறுமையா இருக்குடா. அதான் கடைசி காலத்தில் சொந்தவூரில் இருக்கலான்னு அங்க வர்றோம்” என்றார்.
“வீடு மட்டும் பார்த்தா போதுமா சார்?” அவர் அதற்கு மேலும் வேறென்னவோ சொல்ல வந்து தயங்குவதை பாரியால் உணர முடிந்தது. அதோடு அவரது நண்பர் ஆணையர் சிவக்குமார் இருக்கும்போது தன்னை வீடு பார்க்க சொல்வதே அவனுக்கு ஏதோ உள்ளதென்று காட்டியது. அதனாலேயே மேற்கொண்டு வினவினான்.
“எனக்கொரு தங்கை இருக்கா பாரி.” வெகுவாகத் தயங்கித்தான் கூறினார்.
பாரிக்கு அவர் சொன்னது புருவத்தை மேலுயர்த்தியது.
“அவள் சென்னையில் இருக்கான்னு மட்டும் தான் தெரியும். அங்க… எங்க எப்படி இருக்கா ஒன்னும் தெரியாது. கொஞ்சம் கண்டுபிடிக்க முடியுமா?” தவிப்பாக வினவினார்.
“இதை குமாரிடம் சொல்லலாம் தான். ஆனால் அதில் ஒரு சிக்கல். அதான் உன்கிட்ட சொல்றேன்” என்றார்.
“நீங்க எப்போ வர்றீங்க?”
“நெக்ஸ்ட் வீக்.”
“வாங்க… பார்த்துக்கலாம்” என்ற பாரி, “அவங்க டீடெயில் மெசேஜ் பண்ணுங்க” என்றான்.
அலைபேசியை வைத்த அடுத்த நொடி அவர் அனுப்பிய தகவல்கள் புலனம் வழி பாரியின் அலைபேசியில் எம்பி குதித்தது.
செக்ரி அனுப்பிய புகைப்படம் சம்பந்தப்பட்டவரின் இளமை காலத்தோற்றத்தில் இருந்தது.
தற்போதைய புகைப்படம் தன்னிடம் இல்லையென படத்திற்கு கீழே அனுப்பியிருந்தார்.
படத்தை பார்க்கும்போதே நன்றாகத் தெரிந்தது. அது பழைய கருப்பு வெள்ளை படத்திலிருந்து எடுத்து வெட்டி அனுப்பப்பட்டது என்று.
படத்திலிருப்பவரையே சில கணங்கள் ஆழ்ந்து நோக்கிய பாரிக்கு… அவரின் முகம் வெகுவாக பரிட்சயமானதாகவே இருந்தது.
‘யாரு… யாரு?’ சிந்தனைக்குள் அவரே ஓடினார்.
அதற்கு பின்னரே பெயரை கவனித்தான். பட்டென்று அவனுள் ஒரு பொறி.
‘இது உண்மையா?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு பதில் தான் இல்லை.
சம்மந்தப்பட்டவரிடமே நேரடியாகக் கேட்கலாம். ஆனால் குடும்ப பிரச்சினை அறிந்திடாது நேரடியாக கேட்பது எந்தளவிற்கு சரிவருமென்று தெரியாததால்… தானாக கண்டுபிடிக்க வேண்டுமென நினைத்தான்.
அந்நேரம் அவனின் அறைக்குள் வந்த ஜென்…
“ரித்தேஷ் டெல்லி போயிட்டு இப்போதான் வந்திருக்கான் போல பாரி… நாளைக்கு விசாரணைக்கு வரதா சொல்லியிருக்கான்” என்றாள்.
“அவன் அவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லியிருக்க மாட்டானே!” பாரி சந்தேகமாக வினவினான்.
“கமிஷனர் சார் மூலமா ஜட்ஜ் கிட்ட பேப்பர் வாங்கிட்டு போனேன் பாரி. ஜட்ஜ் ஆர்டர் காப்பி பார்த்த பிறகு தான் சரி சொன்னான்” என்றாள்.
“குட் ஜாப் ஜென்” என்ற பாரி…
“ஒரு வீடு வாடகைக்கு வேணும் ஜென். த்ரீ மந்த்ஸ்க்கு.”
“வீடு வாடகைக்கு ஓகே. கணபதி சாரிடம் சொன்னால் புரோக்கர் யாராவது அரேஞ் பண்ணுவார். பட் மூணு மாசத்துக்கு யார் பாரி தருவா?”
ஜென் கேட்பதும் பாரிக்கு சரியாகத்தான் பட்டது.
“எதுக்கு பாரி?”
“வேண்டபட்டவர் ஒருத்தருக்காக” என்றவன் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
அவனுள் யோசனையாகவே இருந்தான்.
“என்னாச்சு பாரி? ஏதோ டீப்பா யோசிக்கிற போல?” என்று ஜென் பாரியிடம் வினவ, அதற்கு அவன் ஒன்றுமில்லையென மறுப்பாக தலையசைத்தான்.
முக்கியமான விடயமென்றால் அவனே சொல்வான் என எண்ணிய ஜென்… தன்னுடைய பணிநேரம் முடிந்ததென அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
பாரி மணியை பார்க்க… தனக்கு இன்னும் வேறு சில வேலைகள் இருக்கின்றன என அதில் மூழ்கிப்போனான்.
அந்நேரம் கணபதி மறுக்க மறுக்க அவரை முந்திக்கொண்டு கையில் தேநீரோடு பாரியின் அறைக்குள் பதற்றமாக நுழைந்தார் கந்தன்.
“என்ன கந்தன் அண்ணா, நான் டீ கேட்கலயே?” என்ற பாரி கணபதியை ஏறிட்டான்.
“நான் சொல்ல சொல்ல கேட்காம வந்துட்டார் சார்” என்ற கணபதியை கந்தனின் பார்வையின் பொருளுணர்ந்து… “இட்ஸ் ஓகே அங்கிள் நான் பார்த்துக்கிறேன்” என அறையிலிருந்து அனுப்பினான்.
“என்ன விஷயம்ண்ணா, சொல்லுங்க?”
“சார் உங்களை போட்டு தள்ள ரெண்டு பேரு வெளியவே வெயிட் பண்ணிட்டு இருக்கானுங்க சார்” என்று சொல்லியவரின் கையிலிருந்த தம்பளரில் அவரின் நடுக்கம் தெரிந்தது.
“யாரு? என்ன? தெளிவா சொல்லுங்க?”
“அது வந்து சார்…” கந்தன் நடந்ததைக் கூறினார்.
கந்தன் சொல்லிய நேரம் ராயப்பன் இங்கிருந்து விசாரணையை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறிய சில நிமிடங்களில் இருந்தது.
‘ரொம்ப ஃபாஸ்ட் தான்’ என சொல்லிக்கொண்ட பாரி கந்தன் சொல்வதை கவனிக்கலானான்.
இருவர் தேநீர் குடிக்க வந்தது போல் கடையின் மரபெஞ்சில் அமர்ந்து பாரியின் அலுவலகத்தை நோட்டமிட்டனர்.
பாரி மாலை நேரம் அவனது பகுதியில் ரவுண்ட்ஸ் செல்வதை அறிந்து வைத்திருந்தவர்கள் அதற்காக காத்திருக்க… செக்ரியிடமிருந்து வந்த அழைப்பால் அந்நினைவால் பாரி மாலை நேர ரோந்து பணியை மறந்தவனாக அலுவலகத்திலேயே தங்கிவிட்டான்.
அதற்குள் அந்த இருவரும் மூன்று முறை தேநீர் பருகியிருந்தனர்.
அவர்களின் பார்வை அடிக்கடி பாரியின் அறையிருக்கும் சன்னலை தொட்டு மீள… கந்தன் அவ்விருவரின் மீது தன்னுடைய பார்வையை பதித்தார்.
அவர்கள் பேசுவதை கேட்ட கந்தனுக்கு மொத்த உடலும் நடுங்கியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
20
+1
+1
1