Loading

அத்தியாயம் 30 :

காரிருள் பூசிய நிசப்த நேரத்தில் இருவரிடையேயும் ஆழ்ந்த மௌனம்.

பாரியின் அமைதி பூவை பயம் கொள்ளச்செய்தது.

கேட்கக்கூடாததைக் கேட்டு மீண்டும் அவனின் கோபத்தை தூண்டி விட்டுவிட்டதாக நினைத்து வருந்தினாள்.

“சா…ச…சாரி வேந்தா. உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்” என்றாள். பாரியின் புஜத்தினை தன்னிரு கைகளாலும் இறுக்கி பிடித்தவளாக.

“ஹேய் மலரே… அம் ஓகே” என்றவன்… “நான் அம்மாகிட்ட ரொம்ப இம்மெச்சூர்டா பிஹேவ் பண்ணிருக்கேன்ல?” எனக் கேட்டான்.

பூ பாரியையே பார்த்திருக்க அவனே பேசினான்.

“அம்மா எத்தனை முறை கால் பண்ணாங்க தெரியுமா? அவங்களே இல்லைன்னு சொன்னாலும் நான் அவங்க மகனில்லைன்னு ஆகிடுமா என்ன? பத்து மாதம் சுமக்கிறது தான் அம்மா அப்படின்னா, என் அம்மா என்னை இந்த நொடியையும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பது வருசமா அவங்க நெஞ்சில் சுமந்துட்டு இருக்காங்க. ஆனால் நான், அன்னைக்கு அவங்க சொன்னதுக்காக அவங்களை இத்தனை வருஷம் தள்ளி வைத்து, பார்க்காம, பேசாம… அவங்ககிட்ட பேசக்கூடாதுன்னு தான் அப்போ மொபைல் யூஸ் பண்றதையே தவிர்த்தேன். இப்போ தப்பு பண்ணிட்டனோ தோணுதுடா.

என்னோட சந்தோஷம் உன்கிட்டதான் இருக்குன்னு அம்மாவுக்கு அப்போவே தெரிஞ்சிருக்கு. அதான் அத்தனை கஷ்டப்பட்டு என்னை உனக்கு தாலி கட்ட வச்சிருக்காங்க.

என்னைத்தவிர எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு… என் மனசு உன்னை மட்டும் தான் நேசிக்குதுன்னு. நான்தான் என்னையே ஆராயாம எல்லோரையும் அதிகமா கஷ்டப்படுத்திட்டேன்.”

அத்தனை வருத்தம் பாரியிடம். அன்று பார்வதி சொல்லிய வார்த்தைகளில் எந்தளவிற்கு வலியை அனுபவித்தானோ அதற்கு இணையாக இருந்தது இந்த வருத்தம்.

பாரியின் கவலை இழையோடும் முகத்தை காண சகியாது… பேச்சை மாற்றினாள்.

“உனக்கு இந்த முகம் செட் ஆகல காக்கி…” என்று அவனின் முன்னுச்சி கேசத்தை கலைத்து விட்டாள்.

அவள் செய்கையை ரசித்தவன்…

“வேறெந்த முகம் செட்டாகுமாம்?” அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி வினவினான்.

இருவிரல் கொண்டு பாரியின் மூக்கினை பிடித்து இடவலமாக ஆட்டி… “பெங்களூர் காக்ஸ் டவுன் (cox town) ரோட்ல ஒருத்தனை விரட்டி பிடித்து அவன் நெத்தியில கன் (துப்பாக்கி) வச்சு நீ நின்னப்போ… தெரிஞ்சுது பாரு ஒரு கெத்து… அந்த முகம் தான் மாஸ்” என்று சிலிர்த்துக் கூறினாள்.

“அப்போ மேடம் அன்னைக்கு என்னை பார்த்திருக்கீங்க?” ஒரு மாதிரி வினவினான்.

“ஆமா… நான் உன்னை பார்க்கலான்னு வந்தால், மிஸ்டர்.காக்கி ஒருத்தனை விரட்டி விரட்டி அடிச்சிட்டு இருக்கீங்க. அன்னைக்கு தான் உன்னை ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப அதிகமா சைட் அடிச்சேன்” என பேச்சுவாக்கில் மற்றதையும் சொல்லிவிட்டாள். சொல்லிய பின்பு என்ன சொன்னோமென உணர்ந்து அவள் நாக்கை கடித்தாள்.

“ஹாஹா…” பாரி சத்தமிட்டு சிரித்தான்.

“எதுக்குடா இப்படி சிரிக்குற?” பாரி சிரித்ததில் தான் சொன்னது மறந்து அவனை அதட்டினாள்.

“நார்மலாவே உனக்கு போலீஸ் மேல ஒரு கிரேஸ். உனக்கு பிடிக்காத ஹீரோ படமா இருந்தாலும், போலீஸ் ரோல் அப்படின்னா… பக்கத்தில் பாம் வெடிச்சாலும் அசையாம பார்த்துட்டு இருப்ப. அப்படியிருக்கும் நீ என்னை சைட் அடிக்கலன்னா தான் ஆச்சர்யம்” என்று வேண்டுமென்றே அவளை வாறினான்.

“அப்படிலாம் இல்லை. உண்மையாவே உன்னை நான் அப்படித்தான் பார்த்தேன். மத்தவங்களை பாக்குறதுக்கும் உன்னை பாக்குறதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் வேந்தா.” அவளே அவனின் சீண்டலில் வாய்விட்டாள்.

“வேற எப்போலாம் சைட் அடிச்சிருக்க பூ…?” முன்பு தெரிந்துகொள்ளாமல் விட்டதையெல்லாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டுமென அவனின் காதல் மனம் ஆர்வம் கொண்டது.

ஆழ்ந்த மென்குரலில் அவன் கேட்ட பின்னரே பாரியின் கேள்விகளின் வித்தியாசத்தை உணர்ந்து மௌனமாக தலை கவிழ்ந்தாள்.

“சொல்லு மலரே…”

“என்ன சொல்லணும்?” அவளின் குரல் அவளுக்கே கேட்டிருக்காது.

“இட்ஸ் ஓகே. பர்ஸ்ட் எப்போன்னு சொல்லு, அது மட்டும் போதும்.”

“முடியாது.” வேகமான தலையாட்டால்.

“நான் சொல்லட்டா?”

உனக்கு எப்படித் தெரியும் என்பதைப் போன்ற பார்வை அவளிடம்.

“பர்ஸ்ட் இயர்… ஸ்டார்ட் ஆகி ஒன் வீக்ல… கோல்டன் ஷவர் ட்ரீ கீழ நானும் அவியும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது… ஜென் உன்கிட்ட ஏதோ கேட்டும் அவளுக்கு நீ பதில் சொல்லாம என்னையே பார்த்துட்டு இருந்த. ஜென் உன்னை பிடிச்சு உலுக்குற வரை. நான் கவனிச்சு என்னன்னு கேட்குற வரை என்னையே கண் சிமிட்டாம பார்த்திட்டு இருந்த.” இப்போது பாரி அன்று அவள் செய்ததை செய்தபடி கூறினான்.

“வேந்தா…” பூ ஆச்சரியமாக அவனின் பெயரை உச்சரித்திருந்தாள்.

“எனக்கும் அன்னைக்கு அந்த பார்வைக்கு பொருள் சுத்தமா புரியல. பட் இன்னைக்கு இந்த செக் நீ என்னை பார்க்குற பார்வையும், அன்னைக்கு பார்த்த பார்வையும் ஒண்ணுன்னு நல்லாவே புரியுது” என்றவன், “நமக்குள்ளான ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு பொக்கிஷம் மலரே. அது இன்னும் எத்தனை ஜென்மமானாலும் இங்கிருக்கும்” என்று தன்னுடைய நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டினான்.

பூ பாரியை வேகமாக அணைத்திருந்தாள்.

“அப்போவேவா மலரே… நீ சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தா மறுத்திருக்க மாட்டேனோ என்னவோ” என்றவனின் குரலில் நிச்சயம் வருத்தம் இருந்தது.

“எனக்குத் தெரியும்… ஃபிரண்ட்… ஃபிரண்ட்ஷிப் அப்படின்னு சொல்லி சொல்லியே நானும் உணரல. உன்னையும் சொல்ல விடவில. அப்போ இருந்த சூழலுக்கு நீ நினைச்சிருந்தாலும் நான் சொல்லவிட்டிருக்கமாட்டேன்” என்று தன்பக்கமிருந்து சிந்தித்து பேசினான். பூவின் அணைப்பு இறுகியது.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லையா பூ…?”

நிமிர்ந்து தன்னவனின் முகம் பார்த்தவள்… “இல்லைன்னு சொல்ல மாட்டேன்” என உண்மையை கூறினாள்.

“எனக்காகவாவது அப்படிலாம் இல்லைன்னு சொல்லியிருக்கலாம்.” சுருங்கிய முகத்தோடு கூறினான்.

“இன்னொரு முறை கேளு… இல்லைன்னு சொல்றேன்” என்றவளை முறைத்தவன்… “நிறைய மிஸ் பண்ணிட்டேன்டி” என்று அவளை தனக்குள் இறுக்கினான்.

தற்போது பாரியின் மனம் அமைதியாக இருக்க… முன்பு கேட்டதை மீண்டும் கேட்டாள் பூ.

“நம்ம வீட்டுக்கு நாளைக்கு போலாமா வேந்தா? அத்தை, மாமா எல்லாம் நாம் சேர்ந்துட்டோம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றாள். அவனின் அணைப்பில் இருந்தபடியே.

பாரி முன்பு காட்டிய வருத்தம் கூட இப்போது அவனிடமில்லை. எதிர்வினை காட்டாது, தன்னவளின் நெருக்கத்தில் மூழ்கியிருந்தான்.

“ப்ளீஸ் எனக்காக” என்றவள் அவனின் மௌனத்தை கலைப்பதற்காக “பெருசுங்கயெல்லாம் பிளான் பண்ணி நமக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு, ஒன்னா வாழலன்னு அவ்வளவு கவலையில் இருக்காங்க. இப்போ நாம சேர்ந்தது தெரிஞ்சா நிம்மதியா பீல் பண்ணுவாங்க வேந்தா… வீட்டுக்கு போயிட்டு அங்கேயே இருக்கணும் இல்லை. திரும்பி வந்துடலாம்” என அவனை எப்படியாவது ஒப்புக்கொள்ள வைக்க வேண்டுமென பேசினாள். அதற்குமேல் வேறென்ன சொல்லி பாரியை சம்மதிக்க வைக்க என்று அவளுக்குத் தெரியவில்லை.

சில கணங்கள் அவ்விடத்தில் அமைதி மட்டுமே.

பூ பேசிய எல்லாத்தையும் விட்டவன்…

“என்ன பிளான் அது?” என்று அவளை தன்னிலிருந்து விலக்கி வினவினான்.

இதற்கு மேலும் அவனிடம் மறைக்கக்கூடாதெனக் கூறினாள்.

“நான் சொல்லுவேன். ஆனால் நீ திரும்ப கோபப்படக் கூடாது” என விரல் நீட்டி எச்சரித்தால்.

“உன்னோட… இந்த லவ்வோட… இந்த ஒரு நாளே அப்படியொரு சந்தோஷமா இருக்கு மலரே. இதை இழக்க முடியும் எனக்குத் தோணல. கோபம் வராது. வந்தா… ஒன் டீப் ஹக், ஒன் லாங் பிரஸ் கிஸ், நீ குடுத்தாலே நான் டோட்டல் பிளாட்.” புன்னகையோடு தன் மனதை வெளிப்படையாகக் கூறினான். அவனது பூவிடம் மறைக்க ஒன்றுமில்லை. அப்போது போல் இப்போதும் அவளிடம் திறந்த புத்தகமாகவே இருக்க நினைத்தான். அதனால் தான் உணர்வுகளை கூட அழகாய் கூறியிருந்தான்.

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவனின் பலமும் பலவீனமும் அவள் மட்டுமே என்கிற மறைபொருள் அவனது வார்த்தையில் அடங்கியிருக்கிறது. புரிய வேண்டியவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“வேந்தா…”

“இந்த மலரு பொண்ணு என்னை மொத்தமா சாய்ச்சிட்டாள்…” பூ நெற்றியோடு நெற்றி முட்டி விரிந்த இதழ்களோடு கூறினான்.

அவனை இடையோடு கட்டிக்கொண்டவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கிடைக்காது என்றிருந்தவனின் காதல் இந்தளவிற்கு மூச்சுமுட்டிட கிடைக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லையே. எதிர்பார்த்திருக்க வேண்டுமோ.

அந்த நொடி… தான் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டுமோ என்கிற எண்ணம் முன்னெப்போதும்விட அதிகமாகத் தோன்றியது.

“லவ் யூ வேந்தா… நிறைய… நிறைய… லவ் யூ… நான் சொல்லியிருக்கணும் அப்பவே” என்று அவனுள் புதைந்து அரற்றினாள்.

“ஹேய் மலரே… ரிலாக்ஸ்” என்றவன்,

“என்ன பிளான் அது?” எனக் கேட்டான்.

முதலில் தயங்கினாள்.

“அது… வேந்தா…!” தடுமாற்றம்.

கண்களை மூடியவள் ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றி வேகமாகக் கூறினாள்.

“உண்மையிலே அன்னைக்கு அப்பத்தா உடம்புக்கு எதுவுமில்லை. உடம்பு சரியில்லைங்கிற மாதிரி அந்த நைட் ஆக்ட் பண்ணாங்க. அமிர்தா விஷயத்துல நீ உறுதியா இருந்து வேற கல்யாணம் செய்துக்க மாட்டியோ, இல்லன்னா இன்னொரு பொண்ணு உன் வாழ்க்கையில் வந்தா என்னை இழக்கணுமேன்னு திருமணமே வேண்டான்னு இருந்துடுவியோன்னு அத்தை நினைச்சிருக்காங்க. அத்தோட அன்னைக்கு நீயும் நானும் ஒன்னா அவங்க முன்னால போய் நிற்கவும், ரொம்ப நாள் அப்புறம் அன்னைக்குத்தான் உன் முகத்துல அதிக சந்தோஷத்தை பார்த்து… நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாதான் நாம சந்தோஷமா இருப்போன்னு எல்லாரும் சேர்ந்து, நாம இனி பிரியவேக்கூடாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி பிளான் பண்ணி நமக்கு கல்யாணம் செய்து வச்சுட்டாங்க” என்று படபடவென சொல்லி முடித்தாள். கண்கள் திறந்தால் சொல்லியதை கேட்டதில் உண்டான அவனின் கோபமான முகத்தை மீண்டும் காண நேரிடுமோ என்று அஞ்சி கண்களை மேலும் இறுக மூடினாள்.

பூவின் மூடிய இமையில் தன் இதழ் ஒற்றியவன்…

“அவ்வளவு தானே மலரே” என மென் குரலில் வினவினான்.

விழி திறந்து அவனை ஏறிட்டவள்…

“உனக்கு கோபம் வரலையா வேந்தா?” என்று அதிர்வாய் வினவினாள்.

“உனக்கு வந்துச்சா?”

“இல்லையே.” இவ்விடயம் அன்றே தெரிந்த போதும் பாரியிடம் எதற்கு இந்த டிராமா என யோசித்தாளே தவிர அவளுக்கு அவர்களின் செயல் மீது கோபம் வரவில்லையே.

“இது எப்போ உனக்குத் தெரியும்?”

தெளிவில்லாத அவளின் முகத்தில் தெளிவை கண்டுவிட மேலும் கேட்டான்.

“கல்யாணத்துக்கு முன்னாடியே” என்று மெல்லக்கூறியவள், இதில் தனக்கும் பங்கிருக்கென்று எங்கே நினைத்துவிடுவானோ என அஞ்சி… “நீ சம்மதம் சொன்ன பிறகு தான், மேடைக்கு வரதுக்கு கொஞ்சம் முன்ன தெரிஞ்சுது” என வேகமாக சொல்லியிருந்தாள். அதில் பாரியிடம் விரிந்திடாத இளநகை.

“டிராமான்னு தெரிஞ்சும் நீ ஏன் கோபப்படல?” அமைதியாகவே கேட்டான்.

“நான்… நா…” பட்டென்று சொல்ல முடியாது வார்த்தையை விழுங்கினாள்.

“நீ…?” அழுத்தமாக இழுத்தான்.

“நான் உன்னை லவ் பண்ணேன். அதான்… அதனால் இப்படியாவது உன்னோட சேர்ந்தா போதுமேன்னு, சான்ஸ் மிஸ் பண்ண வேணாம் நினைச்சேன்.” பாரியின் கோபம் அறிந்தவள் பயத்தோடு தான் கூறினாள்.

கல்லூரி நாட்களிலிருந்த வேந்தனாக இருந்தால் அவன் தன்னை ஒன்றும் செய்திட மாட்டானென்று எவ்வித தயக்கமுமின்றி சொல்லியிருப்பாள். ஆனால் இப்போதிருப்பவன்… அன்று அவளை அடித்திருந்தான். கையாலும், வார்த்தையாலும். அவளுக்கு வலிக்குமென்று தெரிந்தே வலிக்க வலியை கொடுத்தவனாயிற்றே. அவன் தன்னை காயப்படுத்தவே மாட்டானென்று நினைத்திருந்தவளின் எண்ணத்தை பொய்யாக்கி இருந்தவனாயிற்றே! அதனாலே அவளிடம் தடுமாற்றம். ஆனால் இதெல்லாம் தேவையில்லாத ஒன்றென்று தன் பேச்சால் உணர்த்தியிருந்தான்.

“எனக்கும் அதேதான் பூ.”

அவனின் பதிலில் புரியாது பார்த்தாள்.

“இதே விஷயத்தை முன்னாடி சொல்லியிருந்தா கோபம் வந்திருக்குமோ என்னவோ! ஆனால் இப்போ வரல…” என்றான் அவளின் கண்களை சந்தித்து.

“ஏன்?” அதற்குமேல் எப்படி கேட்பதென்று பூவிற்கு தெரியவில்லை.

“நீ சொன்னதேதான் மலரே!” என்றான்.

புரியாது குழம்பினாள்.

“நானும் உன்னை லவ் பன்றேன். அவ்வளவு தான். அதனால் இப்போ கோபம் வரல.”

“ஒருமுறை கூட சொல்லல. சொன்னாதான தெரியும்.”

“சொல்லணும் அவசியமில்லை பூ. இப்போ இந்த நொடி என் லவ்… உன்னால உணர முடியுதுல… இதுக்குமேல வேறெப்படி சொல்லணும். சொன்னா அது வெறும் வார்த்தை தான். ஜஸ்ட் பீல்… என் காதலோட சேர்ந்து நானும் உனக்குள்ள தெரிவேன்” என்றான் காதலாக. இத்தனை அழகாக பாரி தன் காதலை சொல்லுவான் என்று பூ எதிர்பார்க்கவில்லை.

“வாவ் வேந்தா…” என்று கண்கள் அகல விரித்து அதிசயித்தவள்… “இட்ஸ் இம்ப்ரெஸ்ட்” என்றாள்.

“ஆஹான்” என்றவன் “அல்ரெடி நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணியிருக்கேன் பூ. அதான் மேடம் என்னை டென் இயர்ஸா லவ் பண்ணிட்டு இருக்கீங்களே” என்றான்.

“அவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுதுல காக்கிச்சட்டைக்கு, அது போதும்” என்றவள் “சரி வீட்டுக்கு போலாமா?” என மீண்டும் கேட்டாள்.

“என்னை என் மனசை எனக்கு முன்னாடியே அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க. அதான் அன்னைக்கு அவ்வளவு கஷ்டப்படுத்தி என்னை சம்மதிக்க வச்சிருக்காங்க. பட் நான், எனக்கு எப்பவுமே நல்லது மட்டுமே செய்தவங்களை… எத்தனை கஷ்டப்படுத்தியிருக்கேன்” என்றான் ஆற்றாமையுடன்.

“அந்த கஷ்டமெல்லாம் இப்போ நீ அவங்களை போய் பார்த்தா சரியாகிடும் வேந்தா…” எப்படியாவது அவன் வர வேண்டுமேயென பேசினாள்.

“அது உன் வீடுடா…”

“ஹேய் பூ… இதை சொல்லணும் அவசியமில்லை” என்றவன் “இந்த கேஸ் முடியட்டும்” என்றான்.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”

“ஃப்ரீயா செய்ய முடியாதுடி” என்றான். அதற்கு மேல் அவனால் விளக்கமாக அவளிடம் சொல்ல முடியவில்லை.

அன்று மதியம் பாரிக்கு பிரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு. சாதாரணமாக இதுபோன்ற மிரட்டலுக்கெல்லாம் அஞ்சும் ஆளில்லை பாரி வேந்தன். ஆனால் இம்முறை அந்த குரலில் அவனுள் தன் குடும்பத்திற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று சிறு அச்சம் எட்டி பார்ப்பதை அவனால் ஓரம்கட்ட முடியவில்லை.

பேசியவன்… பாரியின் வரலாற்றையே சொல்லியிருந்தான். அவனின் திருமணம் எப்படி நடந்து முடிந்தது முதற்கொண்டு. அதனால் அவனை பாரியால் அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.

அத்தோடு அவன் இறுதியாக சொல்லியது…

“உனக்குன்னு ஒரு பெரிய குடும்பமே இருந்தாலும் அவங்களை நீ ஒதுக்கி வச்சிருக்க. அவங்களை வைத்து உன்னை கார்னர் செய்தாலும், இந்த நிலையில அவங்களுக்காக நீ பணிஞ்சு போவங்கிறது கேள்விக்குறி! அதனால மட்டும் தான் அவங்க மீது கை வைக்காம இருக்கேன்” என்றான்.

“உன்னை வழிக்கு கொண்டுவர எனக்குத் தெரியும். என்கிட்ட கொஞ்சம் பார்த்து கவனமா இருந்துக்கோ” என சொல்லிவிட்டே வைத்திருந்தான்.

இதுபோல் எத்தனை மிரட்டல்களை இந்த மூன்று வருட சர்வீஸில் அவன் பார்திருப்பான். ஆனால் அப்பொதெல்லம் அவன் தனித்து இருந்தானே! இப்போது அப்படியில்லையே!

அதனாலேயே அவியிடமும் கவனமாக இருக்கக்கூறினான்.

இப்போ இதனை சொன்னால் பூ எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியாது… மேலும் அவளை கலவரப்படுத்த விருப்பமில்லாமல் சொல்லாது மறைத்தான்.

பாரி சரியான காரணம் சொல்லாமல் தவிர்க்கும்போதே அவனுக்கு சொல்ல விருப்பமில்லை என்பதை யூகித்த பூ…

“ஓகே ஃபைன்… எப்போ தான் முடியும் இந்த கேஸ்?” என்றாள்.

“வெரி சூன்.”

“சரி.. நீ முடிக்கிற அப்போ முடி. இப்போ வா ஒரு செல்ஃபி” என்று அவனை இன்னும் ஒட்டி அமர்ந்தாள்.

“இந்த இருட்ல செல்ஃபி…” பாரி அவளின் கன்னத்தில் கிள்ளினான்.

“செல்ஃபி எடுக்க நேரம் காலமெல்லாம் இல்லை” என்றவள், முன்பக்க பிளாஷ் வைத்து சுயமி எடுத்திருந்தாள்.

பாரி பூவை பார்த்திருக்க… பூ அவனின் தோளில் சாய்ந்தபடி படம் இயல்பாக வந்திருந்தது.

“நல்லாயிருக்கு” என்றவள் அவன் என்ன செய்கிறாள் என கவனிக்கும் முன் புலனம் வழி குடும்ப உறுப்பினர்கள் இணைந்திருக்கும் குழுவில் ‘அவனும் நானும்’ எனும் வார்த்தைகளுடன் பதிவேற்றம் செய்திருந்தாள்.

“என்ன பண்ண பூ, யாருக்கு சென்ட் பண்ண?” பாரி பூவின் கையிலிருந்த அலைபேசியை பறிக்க முயன்றவனாக வினவினான்.

“நம்ம ஃபேமிலி குரூப்” என்றவள் “அட்மின் அப்பத்தா” என்றாள்.

“அந்த கெழவி வாட்ஸப்லாம் யூஸ் பண்ணுதா?” என்றவன், “இதென்ன விளையாட்டு மலரே?” எனக் கேட்டான்.

“வீட்டுக்கு கூப்பிட்டா வரமாட்டேங்குற. நான் சொன்னாலும் அவங்க நம்பணுமே. அதுக்குத்தான் பக்கா எவிடென்ஸ் அனுப்பியிருக்கேன்” என்றாள்.

“அறிவு தான்” என்றவன், மணியை பார்த்துவிட்டு… “டைம் ஃபோர் ஆகிருச்சு, நீ போ” எனக் கூறினான்.

முடியாது என்று மறுத்து அடம் பிடித்தவளை தூக்கிக்கொண்டு இமைக்கும் நொடியில் அவர்களிருந்த மாடியிலிருந்து ஜென் வீட்டு மாடிக்கு தாவியிருந்தான்.

கைகளில் கண்களை மூடி தவழ்ந்திருந்த மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தவன்… “கீழ போ” என சொல்லி தன் வீட்டு மாடிக்குத் தாவினான்.

“நாளைக்கும் வரணும்” என்று பூ கூவ…

“கத்தாதடி” என்றவன் “பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அங்கேயே நின்றான்.

பூவை முதலில் போகக் கூறியவன் அவள் படிகளில் இறங்கி மறைந்த பின்னரே அவனும் இறங்கினான்.

_________________________

பூவுடன் இருந்த இரவு நேர தனிமை பாரியின் மனதை மொத்தமாக காதலில் மூழ்கச் செய்திருந்தது.

வேறெப்போதும் அனுபவித்திடாத புதுவித உணர்வின் பிடியில் சிக்கி சுழன்றவன் மந்தகாசமான புன்னகையுடனே அறைக்குள் நுழைந்து மெத்தையில் விழுந்தான்.

இன்னமும் பூ அவனின் தோளில் சாய்ந்திருக்கும் இதம் அவனுள்.

“மொத்தமா அடிச்சு வீழ்த்திட்டாள்.” உணர்ந்து சொல்லிக்கொண்டான்.

அவளுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதில் எதிரொலிக்க சுகமாய் கரைந்தான்.

அனைத்தும் மறந்து அவளுள் தொலைந்து போனவன்… அவனறியாது உறங்கிப்போனான்.

ஆனால் அவனின் நிம்மதியான உறக்கத்திற்கு காரணமானவளோ… அவனின் காதலை பொக்கிஷமாக மனப்பெட்டகத்தில் சேமித்து ஒவ்வொரு பக்கங்களாக திறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவனின்றி அவளை முழுதாக நெருங்கிடாத உறக்கம்… இன்று அவன் காட்டும் அன்பில் மொத்தமாக விலகி ஓடியிருந்தது.

“ஒரே நாள்ல பித்து பிடிக்க வச்சிட்டான்.” வாய்விட்டே புலம்பினாள்.

கல்யாணம் தான் ஆகிவிட்டதே என்று ஒன்றாக இருந்திருந்தாலும் இந்த இன்பம் கிட்டியிருக்காது போல். அவனும் அவளும் தனிமையில் ஒருவரையொருவர் நினைத்து காதலில் காதலின் தடம் தேடினர். ஒருவரையொருவர் மனதால் மற்றவரை வருடினர்.

படுக்கையில் கவிழ்ந்து படுத்தவள்…

“லவ் யூ வேந்தா” என்ற மனக்குரலோடு உறங்கிப்போக… அதிகாலை 5.30 மணியளவில் அவளின் உறக்கத்தை பறக்க வைத்தது அலைபேசியின் ஒலி.

“ஏட்டி… என்னட்டி உனக்கு உறக்கம். எழுந்திரட்டி…”

அரை உறக்கத்தில் ஹலோ சொல்லிய பேத்தியை அலைபேசியின் வாயிலாகவே விரட்டினார் தங்கம்.

அதிகாலை கண் விழிக்கும் பழக்கம் கொண்ட தங்கம்… எழுந்து மணி கொடுத்த காலை நேர தேநீரை சுவைத்தபடி அலைபேசியில் புலனத்தில் கடவுள் பாடலை ஸ்டேட்டஸ் வைப்பதற்காக எடுத்தவர்… அதில் கண்ட புகைப்படத்தில் ஆச்சர்யத்தில் வீடே அதிர தன் மருமகளின் பெயரை கத்தி அழைத்தார்.

“மணி… மணி… வாயேன். வெரசா ஓடியாயேன்” என்று கூவியவர், மருமகள் வந்ததும் அவரின் முன் பூ அனுப்பிய படத்தை காண்பித்து…

“இது நெசந்தானா எங்கப்பன் சிவன் எம்பேத்தி வாழ்வை சிறக்க வச்சிட்டானா?” என்று ஆரவாரம் செய்தார்.

“இது எப்போ எடுத்த போட்டோன்னு அம்புடலையே அத்தை… அவள் அறை முச்சூடும் இப்புடி ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காப்ல தானே போட்டோ மாட்டிக்கிடக்கு” என்று சொல்லி தங்கத்தின் மகிழ்வில் மண்ணை போட்டார் மணி.

“யேய் யாருட்டி இவ… செத்த சந்தோஷக்கிட வுடமாட்டியே” என்ற தங்கம் படத்தையே உற்று பார்த்தார்.

“நாமளா ஒன்னும் நினைக்கமாட்டாம அவளுக்கே போன போட்டு கேளுங்க அத்தை” என்றார் மணி.

“அரசு தோட்டத்துக்கு போயிட்டானா?”

“செத்த முன்னுக்கத்தேன் போனாரு.”

“ஓ” என்றவர் பூ அனுப்பிய புகைப்படம் உண்மையாக இருக்க வேண்டுமென்கிற வேண்டுதலோடு பரபரப்பாக அவளுக்கு அழைக்க… அவளோ உறக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டபடி பேசிட… தங்கத்துக்கு எரிச்சலாக வந்தது.

“இப்போ இம்புட்டு வெள்ளென போன போட்டு எதுக்கு வெரட்டுத அப்பத்தா?” கண்களை திறக்காது… எழுந்தபடி வினவினாள்.

“செய்யுறது செஞ்சுபோட்டு உனக்கு என்னட்டி தூக்கம்” என்றவர், “நீ அனுப்புன போட்டோ நெசந்தானா?” எனக் கேட்டார். ஆமாமென்று சொல்லிட வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு.

“இல்ல பழசு என்னத்தையாவது அனுப்பியிருக்கியா?”

“அப்போ நீ நம்பள அப்படித்தானே அப்பத்தா” என்ற பூ தூங்கி வழியும் முகத்தோடு எழுந்து கதவினை திறந்துகொண்டு பாரி இருக்கும் வீட்டிற்கு சென்று கதவினை தட்டினாள்.

மிகவும் தாமதமாக தூங்கியதால்… காலை நேர ஓட்டத்திற்கு செல்லும் நேரம் கடந்தும் பாரி தூங்கிக்கொண்டிருக்க… அப்போதுதான் எழுந்த அவி கண்களை தேய்த்தபடி வந்து கதவினை திறந்தான்.

பூ நின்ற நிலை கண்டு…

“என்ன தமிழ் நாய் ஏதும் துரத்துதா?” எனக் கேட்டான்.

கை முட்டி வைத்து அவனின் வயிற்றிலேயே குத்தியவள் “தள்ளுடா” என ஒரே தள்ளில் அவியை தள்ளிவிட்டு பாரியின் அறைக்குள் நுழைந்து அவனை உலுக்கி எழுப்பினாள்.

முழுதாக இமை திறக்காது யாரென்று பார்த்த பாரி… கண்கள் கொடுத்த எரிச்சலில் இறுக மூடி…

“பூ என்னடி. நைட்டும் தூங்க விடல… இப்பவும் இவ்வளவு காலையில வந்து இம்சை பண்ற. தூங்க விடுடி” என்று மறுபக்கம் திரும்பி படுத்தான்.

பூவின் பின்னோடு வந்த அவி பாரியின் வார்த்தைகளைக் கேட்டு…

“என்னது நைட் தூங்கவிடலையா?” என அதிர்ந்து நின்றான்.

பாரி சொல்லியது இணைப்பிலிருந்த தங்கத்திற்கும்… அலைபேசி ஸ்பீக்கரில் இருந்ததால் மணிக்குமே நன்றாக கேட்டிருக்க… மணி சிரிப்போடு நகர்ந்து சென்றிட… இது எந்தளவிற்கு உண்மையென தெரியாது விடக்கூடாதென தங்கம் அழைப்பிலேயே இருந்தார்.

அவியின் அதிர்வை கண்ட பூ தலையில் தட்டிக்கொண்டு…

“ஏம்லே இங்கன பராக்கு பார்த்துகிட்டு நிக்குதே… போய் வேலைய பாருல” என்று அவியை அறைக்கு வெளியில் தள்ளிவிட்டு பாரியை அடித்து எழுப்பினாள்.

“ஏண்டி இம்சை பண்ற. என் தூக்கத்தை கெடுக்கிறதே உன் வேலையாப்போச்சு” என்று உறக்கம் முழுதாக கலைந்த கடுப்பில் எழுந்தமர்ந்த பாரியின் கையில் அலைபேசியை வைத்த பூ “பேசு” என சொல்லிவிட்டு அவனின் மடியில் தலை வைத்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

“யாரு?” என்று பூவிடம் கேட்டவன், அவளிடம் பதிலின்றி போக அலைபேசியை காதில் வைத்தான்.

“ஹலோ” என்றவன் காதிலிருந்து எடுத்து திரையை பார்க்க… தங்கமென்று தெரிந்துகொண்டு,

“நான் பாரி. சொல்லுங்க பாட்டி?” என்றான்.

“ராசா…” என்றவரின் குரலே நெகிழ்வாய் கலங்கி ஒலித்தது.

“தமிழ்… என்னவோ போட்டோ”

“நேரம் கிடைச்சா பத்து நாள்ல ஊருக்கு வர்றோம் பாட்டி” என்று சொல்லி அவர் கேட்க நினைத்த கேள்விக்கு மறைமுகமாக பதில் வழங்கியிருந்தான்.

“சந்தோச(ம்)ய்யா… சந்தோசம். இதுக்குத்தேன் இம்புட்டு வருசம் காத்துக்கிடந்தேன்” என்றவர் சேலை தலைப்பால் கண்களை ஒற்றியபடி அழைப்பைத் துண்டித்தார்.

அதன் பின்பே பூ வந்து எழுப்பும் போது தான் உளறியதை நினைவு கூர்ந்தவன்…

“போச்சு… போச்சு… மானம் போச்சு. கெழவி என்னத்த நினைச்சுதோ” என்று உறங்கிக்கொண்டிருந்த பூவின் கன்னத்தை வலிக்காது கிள்ளி… “உன்னால தாண்டி” என்றான் மெல்ல.

தள்ளிச்சென்ற அவி, பூவை வீட்டில் காணோமென்று வந்து நின்ற ஜென்னுக்கு பூவை காட்டுவதற்காக திறந்திருந்த பாரியின் அறைக்கு வர, பாரியின் பேச்சு கேட்டது.

“தூக்கத்தில் உளர்னது நீ. அவளை ஏன் திட்டுற?” அறை வாயிலில் கேட்ட அவியின் குரலில் “நீயும் கேட்டியா?” என்று அவனிடம் வினவிய பாரி அவியின் ஆமென்ற தலையாட்டலில்  அசடு வழிந்தான்.

“நீ பன்றதெல்லாம் எனக்கு புதுசா இருக்குடா பாரி” என்ற அவி “ஆனால் உன்னை இப்படி பார்க்க ரொம்பவே நல்லாயிருக்கு” என்றான்.

“தமிழ் இங்க தான் இருக்காளா?” அவியின் தோள் வழி அறைக்குள் எட்டிப்பார்த்து ஜென் வினவிட…

தன் மடியிலிருந்த பூவின் தலையை மெல்ல எடுத்து படுக்கையில் வைத்தவன் அறையைவிட்டு வெளியில் வந்தான்.

“அவள் தூங்கட்டும் ஜென். ஆபீஸ் கிளம்பும்போது எழுப்பி அனுப்புறேன்” என்றான் பாரி.

“ஆமாம் ஜென், தமிழ் தூங்கட்டும். நைட் முழுக்க தூங்காம…”

அவியின் வாயை மூடிய பாரி…

“அது ஏதோ தூக்கத்தில் சொன்னதுடா” என்றான்.

“ம்ம்ம்… ம்ம்ம்…”

பாரி ஜென்னை கண் காட்டிட அவி அமைதியாகினான்.

“உங்களுக்கும் சேர்த்தே நான் குக் பண்ணிடுறேன் அவி” என்ற ஜென் இருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டுச் சென்றாள்.

“ஜென்னும் கேட்டிருப்பாளோ?” பாரி சந்தேகமாக வினவ…

“இருந்தாலும் இருக்கும்” என்று சொல்லி அவனை கலவரப்படுத்திச் சென்றான் அவி.

அறைக்குள் எட்டிபார்த்த பாரிக்கு… இதெல்லாம் புதிதாக இதமாக இருந்தது.

அந்நேரம் பாரியின் கையிலிருந்த பூவின் அலைபேசி மீண்டும் ஒலிக்க…

“அடுத்து யாரு?” எனக் கேட்டவனாக தொடு திரையை பார்த்தான்.

பரிதிதான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“பரிதிண்ணா…”

பூ அனுப்பியிருந்த புகைப்படம் உண்மையானதுதான் என்று நினைத்தாலும் பூவின் அலைபேசியில் பாரி பேசுவானென்று பரிதி எதிர்பார்க்கவில்லை.

அத்தோடு பரிதியின் இணைப்போடு கான்பிரன்ஸ் காலில் இருந்த மற்றொரு நபருக்கு பாரியின் குரல் கேட்டதும் கண்கள் சட்டென்று நனைந்தன.

“பாரி…”

“அச்சோ பரிதிண்ணா நீங்க என்ன கேட்கப்போறீங்க தெரியுது” என்ற பாரி… “உங்க குட்டிம்மா அனுப்பிய பிக் நிஜம் தான். இப்போ அவள் பூவா மட்டுமில்ல என்னோட வைஃப் தான். நானே அக்செப்ட் பண்ணிக்கிறேன். போதுமா” என்றதோடு “இந்த வாலு பொண்ணோட முடியல பரிதிண்ணா. ஒரே ஒரு பிக். மொத்தமா என்னை அலற விட்டுட்டு இருக்காள்” என்றான் ஆனந்தமாகவே.

“சொல்லவேயில்லையே பாரி?”

பரிதி வருத்தமாகக் கேட்டிட… தன்னுடைய அறையின் கதவினை சத்தமில்லாது மெல்ல சாற்றிய பாரி, மாடிக்கு வந்திருந்தான்.

“பாரி ஆர் யூ தேர்?”

“ஆங்… இருக்கேன் பரிதிண்ணா” என்ற பாரி, வழக்கைப் பற்றி எந்தவொரு தகவலும் சொல்லாது, அவ்வழக்கினால் வரும் மிரட்டலை மட்டும் கூறினான்.

“அதனால் தான் பரிதிண்ணா இப்போ சொல்ல வேண்டாம். கேஸ் முடியட்டும் இருந்தேன். அதுக்குள்ள இப்படி மாட்டிவிட்டுட்டா(ள்)” என்றான் புன்னகையோடு.

“புரியுது பாரி” என்ற பரிதி… “இவ்வளவு ரிஸ்க்கான இந்த கேஸ் நீதான் டீல் பண்ணனுமா பாரி?” எனக் கேட்டான்.

“கையில் எடுத்த வழக்கை பாதியில கீழ வைக்குற பழக்கம் எனக்கில்லை பரிதிண்ணா.” காவல்துறை அதிகாரியாக அழுத்தமாக மொழிந்தான்.

“அப்போ தமிழ் உன்னோட இல்லையா?”

“ஜென் வீட்டில் தான் இப்போதைக்கு” என்றவன் குரலே உறுதியாக வந்தது. இதைப்பற்றி கேட்கும் கேள்விகள் போதுமென்று.

“ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் பரிதிண்ணா.”

“புரியுதுடா… இத்தனை வருஷம் காத்திருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் முடியாதா?” என்ற பரிதி… “எழுந்ததும் அந்த பிக் எவ்ளோ நிம்மதியையும் சந்தோஷத்தையும் எங்க எல்லாருக்கும் கொடுத்ததுன்னு வார்த்தையால சொல்ல முடியாதுடா” என்றான் கரகரப்பான ஒலியில்.

“சாரி பரிதிண்ணா.” வருந்தி கேட்டான் பாரி.

“உன் மேல தப்பில்லையே பாரி. உன் மனசு புரியாம நாங்க செய்ததுக்கு நீயென்ன செய்வ” என்ற பரிதி… தான் சென்னை வந்ததும் நேரில் சந்திப்பதாகக் கூற,

“அம்மா” என்று ஒற்றை வார்த்தையாக மௌனம் கொண்டான் பாரி.

“ம்ம்ம்… நல்லாயிருக்காங்க” என்ற பரிதிக்கு அப்போதுதான் பார்வதியும் இணைப்பில் இருப்பது நினைவில் வந்து… “அம்மாவும் லைனில் தான்” என்று சொல்லும்போதே பார்வதி அழைப்பைத் துண்டித்த ஒலி கேட்டு பேச்சை நிறுத்தினான்.

பரிதியின் வார்த்தையை கவனிக்காத பாரி…

“அம்மாக்கு என்னை இப்பவும் பிடிக்குமா பரிதிண்ணா?” எனக் கேட்டிருந்தான்.

“அவங்களுக்கு எப்பவும் நீதான் பாரி. அவங்ககிட்ட பேசுடா” என்று பரிதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அரசுவிடமிருந்து அழைப்பு வந்தது.

பரிதியிடம் சொல்லிவிட்டு… அரசுவிடம் பேசிய பாரிக்கு அடுத்த சில நிமிடங்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் மாற்றி மாற்றி பேசியதில் வேகமாக ஓடியிருந்தது. அதில் இளா, தில்லையும் அடக்கம். பார்வதி மட்டுமே இன்னும் அவனிடம் பேசவில்லை.

புகைப்படத்தை பார்த்த பார்வதி பூவிற்கு அழைத்திடத்தான் நினைத்தார். ஏற்கனவே அவளுக்கு தன்னால் கஷ்டம் இது உண்மையில்லை என்றால் தான் கேட்பது மேலும் கஷ்டமாகிவிட்டால் என்ன என்று எண்ணியே பரிதிக்கு அழைத்துக் கூறினார்.

பார்வதி சொல்லிய பின்னரே பரிதி பார்த்தான். பார்த்ததும் அது தற்போதைய படமென்று அவனுக்கு நன்கு தெரிந்தது.

அதனால் பார்வதியை இணைப்பில் வைத்துக்கொண்டே பூவிற்கு அழைத்தான்.

பாரியின் குரலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேட்ட பார்வதி எப்படி உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை.

நான்கு வருடங்களுக்கு பின்னர் கேட்ட மகனின் நலன் தெரியவில்லை என்றாலும், அவனின் வேலையில் இருக்கும் ஆபத்தை அவன் சொல்லவே கேட்டிட அதிகமாக வருந்தினார்.

அதோடு பாரியின் அம்மா என்ற உச்சரிப்பு அவரை உள்ளுக்குள் உடையச் செய்தது. பொங்கி வரும் கேவலை அடக்க முடியாது இணைப்பிலிருந்து விலகியிருந்தார்.

எல்லோரிடமும் பேசியதும் பாரிக்கு தன்னுடைய அம்மாவிடம் பேச வேண்டும் போல் அதிக ஆவலாக இருந்தது. இருப்பினும் எப்படி என்று தெரியாது தயங்கி நின்றான்.

“எவ்வளவு நேரம் பாரி போன் பேசிட்டு இருப்ப… நானும் தமிழும் கிளம்பிட்டோம். உன்னை ஜென் சீக்கிரம் வர சொன்னா” என்று மாடிக்கு வந்த அவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு பின்னால் வேகமாக வந்த பூ…

“அன்பு மழையில முழுசா நனைஞ்சு முடிச்சாச்சா?” என்று கேலி செய்தாள்.

“எல்லாம் உன்னாலதான்” என்று பூவின் காதை திருகியவனிடமிருந்து தன்னுடைய அலைபேசியை பறித்து, அவியையும் இழுத்துக்கொண்டு…

“எதுவா இருந்தாலும் நைட் பேசிக்கலாம். போய் வேலையை பாருங்க காக்கிச்சட்டை” என்று ஓடினாள்.

“எதே நைட் பேசிக்கலாமா? அதனால வந்தது தான் இது” என்று சொன்னாலும் நடந்த நிகழ்வில் அவனுக்கும் மகிழ்வே.

இத்தனை வருடங்கள் தன்னை நெருங்கியவர்கள் எல்லோரையும் வேண்டுமென்றே தவிர்த்தவனுக்கு திடீரென அவர்களிடம் சென்று எப்படி பேசுவதென்ற தயக்கம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் அதை உடைத்து தன்னுடைய குடும்பமே முதலில் பாரியிடம் பேச்சினை துவங்கும்படி செய்து… நிலைமையை சுமூகமாக்கி விட்டாளே!

அனைவரிடமும் பேசிய மகிழ்வுடனே கீழே வந்த பாரி, வீட்டின் வாயில் கதவினை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பினான்.

துரித கதியில் தயாராகியவன் ஜென் வைத்துவிட்டுச் சென்ற உணவை உண்ண அமரும் வேளை… வாயில் மணி ஒலித்தது.

யாரென்று திறந்த பாரி நிச்சயம் அக்கணம் அங்கு தன்னுடைய அன்னை பார்வதியை எதிர்பார்க்கவில்லை.

“அம்மா…”

கலங்கிய குரலில் அதிர்வோடு பாரி விளித்திட…

சப்பென்று அவனின் கன்னத்தில் அறைந்திருந்தார் பார்வதி.

“அம்மா…”

“என்னடா அம்மா, இப்போதான் ஞாபகம் வருதா?” என்றவர் அவனின் கன்னத்தை வருடியவாறே… “இந்த அம்மா மேல கோபம் போயிடுச்சா பாரி” என தழுதழுத்துக் கேட்டார்.

“சாரிம்மா” என்றவன் போட்டிருக்கும் உடையின் கம்பீரத்தை துறந்தவனாக, மழலையென அன்னையைக் கட்டிக்கொண்டான்.

“நீங்க எப்பவும் எனக்கு நல்லதுதான் செய்வீங்கன்னு அன்னைக்கு நம்பாம போயிட்டேன்… சாரிம்மா” என்றான்.

“அம்மாவும் அன்னைக்கு உன்னை வேணுன்னு காயப்படுத்தல பாரி” என்றவர் “நானே இல்லைன்னு சொன்னாலும் நீ என் மகன் பாரி” என்று அவனின் கன்னத்தில் முத்தம் வைத்தார்.

“பாட்டி எனக்கு எனக்கு” என்ற சின்னுவின் குரலில் விலகிய பாரி கலங்கிய கண்களை சரிசெய்து “சின்னு குட்டியும் வந்திருக்கீங்களா?” எனக்கேட்டு குழந்தையை தூக்கிக்கொண்டான். அவளின் குண்டு கன்னங்கள் இரண்டிலும் அழுந்த இதழ் பதித்தான்.

அப்போதுதான் இளாவும் உடன் வந்திருப்பதை கவனித்த பாரி…

“உள்ள வாங்க” என்று அன்னையையும் அண்ணியையும் வரவேற்றான்.

“நானும் வரலாமா?” என்று காரை நிறுத்திவிட்டு வந்த தில்லை கேட்க…

“அப்பா” என்று வேகமாக அவரருகில் சென்றவன் சின்னுவை வைத்துக்கொண்டே அவரை அணைத்து விடுத்தான்.

பாரியின் முதுகில் தட்டிக்கொடுத்த தில்லை… “உன்னை இந்த ட்ரெஸ்ஸில் பார்க்க பெருமையா இருக்குடா” என்று உளமார கூறினார்.

யாருமே நடந்ததை பற்றி பேசவில்லை.

வெளியூருக்கு சென்ற மகன் திரும்பி வந்ததைப்போல் சாதாரணமாக பேசி மகிழ்ந்தனர். அதுவே பாரிக்கு போதுமானதாக இருந்தது. ஏற்கனவே காயப்பட்டு இருந்தவனுக்கு பழைய நினைவுகள் காயத்தின் வலியை அதிகப்படுத்திவிடுமோ என்று அவர்கள் அப்பேச்சினைத் தவிர்த்திட… பாரியும் அதே எண்ணத்தில் அதனை ஒதுக்கியிருந்தான்.

கடிகாரத்தின் ஓசையில் நேரத்தை கவனித்த பாரி…

“முக்கியமான கேஸ் விசாரணை இருக்கு” என்று கூறி, அவர்களை அங்கேயே இருக்க சொல்லலாமா அல்லது கிளம்ப சொல்லலாமா என்று தயங்கினான்.

“இட்ஸ் ஓகே பாரி நீ கிளம்பு. நாங்களும் கிளம்புறோம்” என்ற தில்லை பார்வதியை ஏறிட…

“அப்போ நீ வீட்டுக்கு வரமாட்டியா பாரி” என அவன் பரிதியிடம் சொல்லிய காரணமறிந்தும் வினவினார்.

“அம்மா…”

“என்ன பிரச்சனை இருந்தாலும் குடும்பத்தோட இருக்கும்போது அதை இன்னும் அதிகமா எதிர்க்கும் துணிவு வரும் பாரி” என்ற பார்வதி, “உனக்கா தோணும் வரை வெயிட் பண்றோம் பாரி இல்லையா நாங்க எல்லாரும் இங்கு வந்துடுறோம். மகன் வீட்ல வந்து தங்குவதில் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை” என்றார்.

பார்வதியை அணைத்துக்கொண்ட பாரிக்கு அக்கணம் இழந்த யாவும் தன் கை சேர்ந்த உணர்வு.

இன்று இந்த மகிழ்விற்கு மொத்த காரணமும் அவனவள் அல்லவா. அக்கணம் அவளை தனக்குள் இறுக்கிக்கொண்டு ஆயிரம் முறை அவள் தன்னிடம் கேட்கும் காதல் வார்த்தையை சொல்லிட வேண்டுமென துடித்தான்.

அந்த துடிப்பு கொடுத்த உந்துதலில்…

“நேற்றும் நாளையும் மறந்து போக இன்றே என் மொத்தமும் உன்னில் உறைந்திட வேண்டுமடி!”

புலனம் வழி தன் உள்ளத்து உணர்வை தன்னவளுக்கு சேர்ப்பித்தவன் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
30
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்