
தூவானப் பயணம் 3
ஆரிஷும், சின்னுவும் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தங்களது பெற்றோரின் முன்பு நின்றிருந்தனர்.
இளா மற்றும் பூவிடம் மட்டுமே அதட்டும் பாவனை. பாரியும், பரிதியும் அவர்கள் அளவுக்கு கடுமை காட்டாது நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ளும் நிலையில் இலகுவாக இருந்தனர்.
மணியிடம் பேசிக்கொண்டிருந்த பார்வதி அலைப்பேசியை வைத்துவிட்டு என்னவென்று அவர்களிடம் வந்துவிட்டார்.
“சின்ன வயசில் இதெல்லாம் சகஜம் தான். ஏன் பாரி நீ செய்யாத சேட்டையா? உன்னை எதுக்கு ஸ்கூல் மாத்தினோம் நினைவிருக்கா?” என்று தில்லை கேட்டிட…
“அப்பா என்னை டேமேஜ் பண்ணாதீங்க. நான் நடந்தது என்னன்னு தான் கேட்கிறேன். உங்க மருமகள்ஸ் தான் மிரட்டிட்டு இருக்காங்க” என்றான்.
“அம்மா தான் கேட்கிறாங்களே என்னன்னு சொல்லுங்க? திட்டாம நான் பார்த்துக்கிறேன்” என்று பார்வதி சொல்லிட…
“லட்டு மேல மிஸ்டேக் இல்லை பாட்டி” என்று மெல்ல வாய் திறந்தாள் சின்னு.
“நீங்க விஷயத்தை சொல்லுங்க முதலில். தப்பு யார் மேலன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்” என்ற இளா, “ரெண்டும் திருட்டு கோட்டுங்க அத்தை நம்ப முடியாது. டென்த் படிக்கிற பையன் உயரம் கூட இருக்கமாட்டான் இவன். அவனை அடிச்சிருக்கான்” என்றாள். குரலில் கடுமையைக் காட்டி.
வீட்டில் அனைவருக்கும் பிள்ளைகள் இருவரும் அதீத செல்லம். அதுவும் தங்கம் பாட்டிக்கு கொள்ளு பேரன் பேத்தி என்றால் உயிரென்றே சொல்லலாம். இப்படி அனைவரும் செல்லம் கொடுத்தால் சரிவராது, யாராவது ஒருவருக்காவது பிள்ளைகள் பயப்பட வேண்டும்… அப்போதுதான் அவர்கள் செய்யும் தவற்றினை சுட்டிட முடியுமென்று இளா பிள்ளைகளிடம் அப்பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.
பிள்ளைகளுக்கும் இளா என்றால் கொஞ்சம் பயம் தான்.
“ம்ப்ச் விடு இளா” என்று பரிதி கூற…
“உங்களாலதான் எல்லாம். நீங்க கொடுக்கிற செல்லம் தான்” என்று பரிதியிடம் கோபம் கொண்ட இளா, “இன்னமும் இவளுக்கு கொடுக்கிற செல்லத்தால் தான் யார் பேச்சையும் கேட்காம… சாகசம் பண்ற, அக்யூஸ்ட்டை பிடிக்கிறேன்னு வாரத்துக்கு மூணு தடவை அடிபட்டு வர்றாள். இப்போ இவங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்சாச்சு. சொல் பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.
இளாவின் இந்த கோபம் அனைவருக்கும் புதிது. முதல் முறையாக இந்தளவிற்கு கோபம் கொள்கிறாள். ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆரிஷ் சின்னு வகுப்பு பையனை அடித்திருக்கிறான் என்பது தான் இளாவின் கோபத்திற்கு முக்கிய காரணம்.
பள்ளியில் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற வார்த்தைக்கு மாறாக, ஓரளவிற்கு விவரம் தெரிந்தது முதல் ஆரிஷ் தான் சின்னுவிற்கு காவலனாக இருக்கின்றான்.
இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே சின்னுவை அவளுடைய தோழி கிழே விழ வைத்துவிட்டாளென்று கல்லால் அடித்திருக்கிறான். அதனாலே இப்போது ஆரிஷ் அடித்திருக்கும் பையன் சின்னுவிடம் என்ன வம்பு செய்தானோ என்று தாயாகக் கொண்ட பயமே இளாவின் கோபத்திற்கான காரணம்.
பெண் பிள்ளைகள் பெற்றிருக்கும் அன்னைக்கு மட்டுமே உரித்தான பயம் அது.
“லட்டு குட்டி அம்மாகிட்ட வாங்க” என்றழைத்த இளா அவனின் கரம் பிடித்து தன் முன்னே இழுத்து, அவனின் இருபக்க தோளிலும் கை வைத்தவளாக…
“அம்மாகிட்ட எதையும் மறைக்கமாட்டிங்களே குட்டி. என்ன நடந்தது?” என தன்மையாகக் கேட்டாள்.
ஆரிஷ் பாரியை பார்த்தான். அவன் சொல்லுமாறு கண்கள் மூடி திறக்க ஆரிஷ் நடந்ததைக் கூறினான்.
“பிரேக்கில் அக்கா கிளாஸ் போனேன். அப்போ அந்த அண்ணா அக்காகிட்ட பேசிட்டு இருந்தாங்க. அக்காவுக்கு சாக்லேட் கொடுத்தாங்க. அக்கா வேண்டாம் சொன்னாங்க. பட் அந்த அண்ணா, அக்கா கையை பிடிச்சு வாங்கிக்கோன்னு கம்பல் பண்ணாங்க. அக்கா வேண்டாம் சொல்லவே ரொம்ப ஹார்ஷா பிஹேவ் பண்ணாங்க. நான் கையை விடுங்கண்ணா சொன்னதுக்கு… அண்ணா இல்லை மாமா சொல்லு சொன்னாங்க. திஸ் இஸ் டூ மச் அக்கா சொன்னதுக்கு, ரிலேஷன்ஷிப் சரியா சொல்ல வேண்டாமான்னு அந்த அண்ணா சொன்னதில் அக்கா பேஸ் சரியில்லை. அந்த அண்ணா ஏதோ மிஸ் பிஹேவ் பன்றாங்கன்னு தோணுச்சு அதான் அக்கா கையை இழுத்து, அந்த அண்ணாவை தள்ளினேன். கீழே விழுந்துட்டாங்க” என்று கையை விரித்து ஆட்டியென ஆரிஷ் சொல்லி முடிக்க இளா சின்னுவை முறைத்தாள்.
“அவளை ஏன் முறைக்கிற இளா?”
“சும்மா இருங்க” என்று பரிதியை அடக்கிய இளா, “இதை மறைக்கணும் நினைச்சது தப்பு ஆர்னா” என்றாள்.
“மறைக்கணும் நினைக்கல மாம். லட்டு அடிச்சிட்டான்னு சொன்னா அவனை திட்டுவீங்கன்னு தான் சொல்லல” என்ற சின்னு ஓடிச்சென்று பாரியை கட்டிக்கொண்டாள்.
“அவன்கிட்ட நான் பேசியதே இல்லை சித்தா. இந்த இயர் தான் ஜாயின்ட் பண்ணான். நேத்து தான் அவனா வந்து பேசினான். எப்படி அவாய்ட் பண்றதுன்னு தெரியுமா நின்னுட்டு இருந்தப்போ, சாக்லேட் கொடுக்கிறான். சித்தி அவுட்சைடர் யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது சொன்னதால வாங்கல… பட் லட்டுகிட்ட அப்படி சொல்லுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல” என்ற சின்னு பாரியின் தோளில் முகம் மறைத்தவளாக அழுதுகொண்டே சொல்லிட…
பரிதி அப்போதே சின்னுவின் வகுப்பாசிரியைக்கு அழைத்து நடந்ததை தெரிவிக்க… அவரோ “தங்களிடம் இவ்வளவு விளக்கமாக உங்க பசங்க சொல்லலையே சார்” என்றார்.
“நீங்க கேட்கலன்னு சொல்லுங்க” என்று பரிதியிடமிருந்து அலைப்பேசியை வாங்கிய பாரி கூறிட, ஆசிரியருக்கு பாரியின் குரலே உதறலை கொடுத்தது.
“சாரி சார். அந்த பையன் வந்து ஆரிஷ் தள்ளியதால கையில் அடிபட்டு ரத்தம் வருது சொன்னான்…” என்று அவர் இழுத்திட…
“இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சே… ஆக்ஷன் எடுங்க. பொண்ணுங்க கிட்ட பேசக்கூடாது, பழக்கூடாது நினைக்கிற டைப் இல்லை. பட், இப்படித்தான் நடந்துப்பாங்களா? டென்த் படிக்கிற சின்னப்பையன் மாதிரியா பேசியிருக்கான்” என்று பாரி கோபத்தின் உச்சத்தில் இருந்திட, அவனின் அணைப்பிலிருந்த சின்னு அவனை மருண்டு பார்த்தாள்.
ஆரிஷ் இளாவை கட்டிக்கொண்டான்.
எப்போதுமே பிள்ளைகளிடம் அவன் கோப முகம் காட்டியதில்லை.
“வேந்தா காம் டவுன். பசங்க பயப்படுறாங்க.” பூ சின்னுவை தன்னிடம் இழுத்துக்கொண்டாள்.
“இது ரொம்ப பெரிய தப்பா சித்தி?” நடந்ததில் உள்ள அர்த்தம் விளங்காது சின்னு பூவிடம் வினவினாள்.
பூவிற்கு இன்னும் பூபெய்திடாத சின்னுவிடம் இதற்கு எப்படி விளக்கம் கொடுப்பதென்றே தெரியவில்லை.
“உனக்கு அவன் சாக்லேட் கொடுத்தது பிடிக்கலதான?” என்று பூ கேட்டிட சின்னு ஆமென்றாள்.
“உனக்கு பிடிக்காதப்போ, வாங்கிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றது தப்பு தான்” என்ற பூ, “உனக்கு ஒன்னு பிடிக்கலையா நல்லா ஸ்ட்ராங்கா நோ சொல்லு. நோ சின்ன வார்த்தை தான். பட் இட்ஸ் மீன்ஸ் அ லாட்” என்றாள்.
“குட் அண்ட் பேட் டச் மாதிரியா சித்தி.”
சின்னு புரிந்தது எனும் விதமாகக் கேட்டிட பூ தலையசைத்தாள்.
“இப்போ நீங்க ஆக்ஷன் எடுக்குறீங்களா இல்லை நான் பிரின்ஸ்பாலிடம் பேசட்டுமா மேம்?” பாரியை, அவன் கேட்கும் கேள்விகளை ஆசிரியரால் சமாளிக்க முடியவில்லை.
“அந்த பையனுக்கு சின்ன காயம் தான் சார். அதனால ஆரிஷ் கிளாஸ் மேமிடம் இன்ஃபார்ம் பண்ணிட்டு விட்டுட்டேன். பிரின்சிக்கு இது தெரியாது சார்” என்றார் அவர்.
“எப்படி மேம் இவ்ளோ இர்ரெஸ்பான்ஸ்பில்லா இருக்கீங்க? நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன். ஃபோனை வைங்க” என்றான் எரிச்சல் மிகுதியால்.
“அச்சோ சார் வேண்டாம். பிரின்சிக்கு தெரிந்தா அப்போவே சொல்லலன்னு திட்டுவாங்க” என்ற ஆசிரியை, “அந்த பையன் எக்ஸ் மினிஸ்டர் கிராண்ட் சன் சார்” என்றிட…?
“சோ, வாட்” என்று அழுத்தமாகக் கேட்டிருந்தான் பாரி.
“பாரி ஹைப் ஆகாதடா. அவனும் சின்னப்பையன் தான” என்ற பரிதி, “நாம கொடுக்கிற பிரஷர் அந்த பையனோட ஸ்டடிஸ்க்கு பிராப்ளம் ஆகப்போகுது” என்று பாரியை கட்டுப்படுத்தி, அவனிடமிருந்து அலைப்பேசியை பெற்று…
“இதை நாங்க எதிர்பார்க்கல மேம். பசங்களோட பாதுகாப்புக்கும் நீங்க தானே பொறுப்பு. அந்த பையனை வார்ன் பண்ணி விடுங்க. ரிப்பீட் ஆச்சுன்னா நாங்க பிரின்ஸ்பால் மீட் பண்ண வேண்டியிருக்கும்” என்ற பரிதி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
“பரிதிண்ணா திஸ் இஸ் நாட் ஃபேர்” என்று இருக்கையை விட்டு எழுந்த பாரி, “சின்னு கிட்டவா” என்று அழைத்தான்.
“பாரி எதுக்கு இவ்ளோ எமோஷன்?” பார்வதி கேட்டிட…
“எதாவது நடந்தால், முதலில் மறைக்கணும் தான் ட்ரை பண்றீங்க? அதென்ன பழக்கம்?” என்று பூவை அழுத்தமாக பார்த்தபடி கூறியவன் சின்னுவின் இரண்டு கரங்களையும் பற்றி…
“சித்தாகிட்ட எதையும் மறைக்க மாட்டீங்கதான! அப்புறம் இதென்ன?” என்றான்.
கல்லூரி காலத்தில் ராக்கேஷ் விடயத்தை பூ மறைக்க நினைத்ததை இப்போது நினைவு கூறுகிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது. இன்று அன்று கொண்ட கோபத்திற்கு இணையாக இருந்தான்.
சின்னு “சாரி பாரி” என்க…
“எதுவா இருந்தாலும் எதையும் மறைக்கணும் நினைக்கக்கூடாது. மறைக்கணும் தோணுற விஷயம் நிச்சயம் தவறானதாத்தான் இருக்கும். அதை உடனே நம்ம வீட்டில் யார்கிட்டவாவது சொல்லிடணும்” என்றான் அடர்த்தியாய்.
“லட்டு பார்த்துப்பான் சித்து.”
“ஆமாம்… ஆமாம்… லட்டு ரொம்ப பெரிய ஆள் தான்” என்ற இளா தன் மடியில் அமர்ந்திருந்த ஆரிஷின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்திட…
“நான் அக்காவை சேஃபா பார்த்துப்பேன் டாட். நீங்க உங்க ஃபிரண்ட் பூவை ஸ்கூல் டேசில் பார்த்துகிட்ட மாதிரி” என்றான்.
சட்டென்று பாரியின் முகம் கனிவாகியது.
பூ அவனை முறைத்து வைத்தாள்.
பூ பாரியின் மனைவியாக இருந்தாலும், பாரியின் மனதில் அவனது தோழி பூவிற்கு தனி இடம் தான்.
பார்வதியும், தில்லையும் பிள்ளைகளுக்கு புராணம், வரலாற்று கதைகளைக் கூறினால், பாரி சொல்லும் கதை அவனுடைய பூவின் மீதான நட்பு கதைத்தான். அதனை தன் மகன் தெரிந்து கொள்வதில் பாரிக்கு அத்தனை விருப்பம். தங்களது நட்புபோல் கிடைப்பது எளிதல்ல எனும் கர்வம்.
பூ வேகமாக எழுந்து அங்கிருந்து சென்றிட…
மேற்கொண்டு சில நிமிடங்கள் பாரி பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லிட தில்லையும், பார்வதியும் நேரமாவதை உணர்ந்து சின்னு மற்றும் ஆரிஷை தங்களது அறைக்கு கூட்டிச்சென்றனர்.
ஆரிஷ் இளா மடியிலேயே உறங்கியிருக்க… தில்லை அவனை தூக்கிக்கொண்டார்.
பாரி செல்லாது அங்கேயே இருக்க, ஏதோ தன்னிடம் தனித்து பேச நினைக்கிறான் என்பதை யூகித்த பரிதி…
“இளா” என்று விழி மொழி பேசிட, அவள் புரிந்தது எனும் விதமாக அங்கிருந்து சென்றாள்.
“என்னாச்சு பாரி?”
பாரியின் தொடையில் பரிதி கை வைத்திட, அவனின் கை மீது தன் கை வைத்த பாரி,
“சின்னு மேம் எக்ஸ் மினிஸ்டர் சொன்னது வேலுநாதனா?” எனக் கேட்டான்.
“ம்ம்ம் பாரி.”
“இப்போ அவன் தான் காவல்துறைக்கு பெரும் குடைச்சல் கொடுத்திட்டு இருக்கான்” என்ற பாரி,
“நான் ஒரு பிளான் பண்ணியிருக்கேன்” என்று தன் திட்டத்தைக் கூற, பரிதி வேகமாக மறுக்கவே செய்தான்.
“நீ செய்யுறது எல்லா நேரமும் சரியா இருக்கணும் அவசியமில்லை பாரி. இத்தனை சீக்கிரம் உனக்கு இந்த பதவி கிடைச்சிட்டதால ஈஸியா போச்சா?” என்ற பரிதி முதல் முறையாக தன்னுடைய தம்பியிடம் கோபம் கொள்கிறான்.
“எப்பவும் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றவன் எழுந்து சென்றிருந்தான்.
“பரிதிண்ணா…” பாரியின் அழைப்பு கேட்டும் நிற்காது சென்று மறைந்தான் பரிதி.
பரிதி முதல் முறையாக பாரியின் மீது கடிந்து கொள்கிறான்.
தான் அழைத்தும் நிற்காது செல்லும் வேகமே பரிதியின் கோபத்தை பாரிக்கு காட்டிக்கொடுத்தது.
‘தான் எடுத்த முடிவு தவறோ?’ நினைத்த பாரி “வேறு பிளான் பண்ணனும்” என்று சத்யாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு மாடியேறினான்.
அரை வெளிச்சத்தில் உம்மென்று படுக்கையில் அமர்ந்திருந்தாள் பூ.
கதவினை சாற்றிவிட்டு வந்த பாரி அவளின் அருகே தலையணை எடுத்து போட்டவனாக படுத்தவாறு தன் தலைமுடியை கோதிட… பூ நகர்ந்து அமர்ந்தாள்.
“என்னடி கோபம்?” எனக் கேட்டவன் அவளின் கையை பிடித்து இழுக்க, பூ அவனின் மார்பிலே விழுந்தாள்.
எழ முடியாதவாறு கையிட்டு அணைத்துக்கொண்டான்.
திமிறியவளின் விலகலை எளிதாக முறியடித்தவன், “என்னன்னு சொல்லு பூ?” என்றான்.
“இப்பவும் உன் ஃபிரண்ட் பூ’ன்னா வாயெல்லாம் பல்லாகுது உனக்கு. அப்போ நான் யாருடா?” என்றவள் அவனை சரமாரியாக அடித்தாள்.
சத்தமிட்டு சிரித்த பாரி அவளின் அடிகளை சுகமாக ஏற்றான்.
“உன்மீதே உனக்கு பொறாமையா பூ?” என சிரிப்புனூடே வினவியவன், “என் பொண்டாட்டி பூவை எவ்வளவு பிடிக்கும் உனக்கு தெரியாதா மலரே!” என்று அப்பட்டமான காதல் குரலில் கேட்டிட, பூ உணர்வு குவியலாக மாறி அவனது கைகளில் நெகிழ்ந்தாள்.
யார் யாருக்குள் அடங்கிப் போயினர் என்பது அவர்கள் மட்டுமே அறிந்தது.
“நான் உன்மேல கோபமா இருந்தேன்” என்று கூறியவளிடம் அதன் துளி கொஞ்சமும் இல்லை.
“நாளைக்கு சாய்நாதன் கேஸ் ஹியரிங் பூ… நிறைய வேலையிருக்கு. தூங்க விடு” என்றவனை முறைத்தவள்,
“நானா வேந்தா உன்னை தூங்காவிடல… நீதான் என்னை தூங்கவிடாம… என்ன பண்ணி வச்சிருக்க பாரு?” என்றாள்.
“என்ன பண்ணியிருக்காங்க?” என்று மந்தகாசமாகக் கேட்டவன், அவளின் காதில் கிசுகிசுக்க… பூ தன்னை மீண்டும் அவனிடமே ஒப்படைத்தாள்.
மறுநாள் காலை காக்கி உடை தவிர்த்து வந்தவனிடம்,
“கோர்ட் போகணும் சொன்னியே வேந்தா?” என்று பூ கேட்டிட…
“அதைவிட முக்கியமான வேலை ஒன்னு இருக்கு” என்றான்.
இருவரும் கீழே வரும்போது சின்னுவும், ஆரிஷும் பள்ளி செல்ல கிளம்பியிருந்தனர்.
“என்ன பாரி காலையில ஜாக்கிங் கூட வரலையே?” என்ற தில்லையிடம், பூவை பார்த்துக்கொண்டே “தூங்கிட்டேன் ப்பா” என்றான்.
பாரியின் பார்வையில் பொருள் உணர்ந்து நெளிந்த பூ, அவனின் விலாவிலே இடித்தாள்.
உண்டு கொண்டிருந்த பரிதி தன் தம்பியை கவனியாதவனாக எழுந்து சென்றிட…
“பரிதிண்ணா பசங்களை இன்னைக்கு நான் டிராப் பண்ணிடுறேன்” என்றான் பாரி.
பாரி முக்கிய வேலையென குறிப்பிட்டது எதென்று பூவிற்கு புரிந்தது.
“நைட்டே சின்னு கிளாஸ் டீச்சரிடம் பேசியாச்சே வேந்தா. இப்போ நேரில் போகனுமா?” பூ கேட்டதும் தில்லையும் பார்வதியும் கூட “இதனை இத்தோடு விட்டுவிடலாம். திரும்ப வம்பு செய்தால் பார்த்துக்கலாம்” என்று சொல்ல பாரி யாரின் பேச்சினையும் கேட்பதாக இல்லை.
“விடுங்களேன். அவர் மனசுக்கு ஒருமுறை நேரில் பேசிட்டு வரட்டுமே!” என்று இளா பாரியின் பக்கம் பேசிட… பரிதி எதுவும் சொல்லாது பிள்ளைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
நேரத்தை பார்த்த பாரி,
“ஸ்கூலில் விட்டுட்டு வந்து ஆபீஸ் போகும்போது சாப்பிட்டுக்கிறேன்” என்றதோடு, “ஸ்டேஷன் போயிட்டு மெசேஜ் பண்ணு பூ. கவனமா இருக்கணும்” என்று அழுத்திக் கூறினான்.
பூ எல்லா பக்கமும் மண்டையை உருட்டிட…
“இன்னொரு முறை கேர்லெஸ்ஸா ஏதும் பண்ண… கண்டிப்பா பிரான்ச் மாத்திடுவேன்” என்றான்.
அதில் பூ அடக்கமாக இதழ் விரித்து சரியென்றாள்.
“டாட் டைம் ஆகுது.” ஆரிஷின் குரலில் பூவிடம் தலையசைத்து வெளியேறிய பாரி பிள்ளைகள் இருவரையும் ஏற்றிக்கொண்டு காரினை செலுத்திட… சின்னு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு வந்தாள்.
“என்ன சின்னுக்குட்டி உம்முன்னு வராங்க. சித்தா மேல கோபமா?”
ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் சின்னுவும் ஆரிஷும் இணைந்து அமர்ந்திருக்க, அவர்கள் பக்கம் சரிந்து கேட்டான் பாரி.
“பாரிக்கு தான் சின்னு மேல கோபம்.” சின்னு சோகமாக சொல்லிட…
“இல்லையே… யார் சொன்னாங்க?” என்று எதுவும் நடவாததைப்போல் பாரி கேட்டிட…
“நைட் ரொம்ப கோபமா பேசுனீங்க. நானும் லட்டுவும் பயந்துட்டோம்” என்று சின்னு கண்களை விரித்துக் கூறினாள்.
“பாரி சாரி சொல்லட்டுமா?” என உடனடியாக இறங்கி வந்தவன், “ஹண்ட்ரட் டைம்ஸ் சாரி” என்றிட சின்னுவின் முகம் மலர்ந்தது.
“இனி கோபப்படக் கூடாது ஓகேவா?” என சின்னு வினவ, “ஆமாம் டாட் நீங்க கோபப்பட்டா நல்லாயில்லை. வேற யாரோ மாதிரி இருக்கு” என்றான் லட்டு.
“சித்தா எங்ககிட்ட எப்பவும் சிரிச்சிட்டே தான இருக்கணும்” என்று சின்னுவும் கேட்டிட…
பாரி தன் பிள்ளைகள் இருவரையும் ஒரு கையால் அணைத்து விடுத்தான். அதீத புன்னகையுடன்.
பள்ளி வந்திருக்க இரு பிள்ளைகளையும் தத்தம் வகுப்பிற்கு அனுப்பியவன் நேராக ஆசிரியர்களுக்கான அறைக்கு சென்று அனுமதி பெற்று சின்னுவின் வகுப்பு ஆசிரியையை சந்தித்தான்.
பாரி டிஜிபி ஆக இருந்தாலும் அவன் பள்ளி விழாக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு அவ்வவ்போது ஆரிஷ் மற்றும் சின்னுவிற்காக வருவதால் அவன் சின்னுவின் ஆசிரியையிடம் பேசுவதை மற்ற ஆசிரியர்கள் எதற்கென்று ஆராயவில்லை.
பாரி இரவே அத்தனை கடிந்திருக்க… இப்படி நேரில் வருவானென்று எதிர்பார்க்காத ஆசிரியர், அவனின் பதவி கண்டு அஞ்சியவராக சிறு பயத்துடனே பேசினார்.
“சாரி சார். இனி இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன். நான் ஸ்கூல் வந்ததுமே அந்த பையனை கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டேன் சார்” என்றார். படப்படப்பாக.
“ஓகே வெல். தேன்க் யூ” என்ற பாரி, “அந்த பையன் வந்துட்டானா? நான் பார்க்கணுமே?” என்றான்.
“சார்… அது அலோவ்ட் இல்லைங்களே” என்று அவர் திணற…
“இட்ஸ் ஓகே. நான் பிரின்ஸ்பாலிடம் பெர்மிஷன் கேட்டு பார்த்துக்கிறேன்” என்று சாதாரணமாகக் கூறி கூலர்ஸை அணிந்தவனாக பாரி திரும்பி நடந்திட…
“அச்சோ சார் வேண்டாம்” என்று பதறிய ஆசிரியர், அங்கு சென்று கொண்டிருந்த ஒரு மாணவனை அழைத்து தான் கூப்பிடுவதாக ஆர்னாவிடம் வம்பு செய்த மாணவனை கேண்டின் வர சொல்லெனக் கூறினார்.
அந்த மாணவனும் சரியென்று ஓட,
“நாம கேண்டின் போகலாம் சார்” என்றார் பாரியிடம்.
“ஓகே… போகலாமே” என்ற பாரி தன்னுடைய நீண்ட எட்டுக்களில் கேண்டின் சென்றிட அவனின் பின்னே அவர் ஓட்டமும் நடையுமாகத்தான் செல்ல வேண்டியிருந்தது.
அவர்கள் அங்கிருந்த இருக்கையில் அமரவும் சின்னுவிடம் வம்பிழுத்த மாணவன் வந்து சேர்ந்தான்.
“குட்மார்னிங் மேம்” என்றவன், பாரியை பார்த்ததும்… “ஹாய் அங்கிள்” என்று முக மலர்ச்சியோடு சொல்லிட பாரி அவனை ஆராய்ந்த போதும் சிறு சிரிப்புடன் “ஹாய்” என்றிருந்தான்.
“நீங்க போங்க மேம். நான் பேசிட்டு அனுப்பிடுறேன்” என்று பாரி சொல்லவும், ஆசிரியர் தயங்கவே செய்தார்.
“என்னுடைய பணியே மற்றவரின் பாதுகாப்பிற்காகத்தான் மேம். அம் ஷுயூர்… எதுவும் ஆகாது” என்று பாரி கூறிட வேறு வழியின்றி ஆசிரியர் அங்கிருந்து சென்றார்.
“ஆர்னாகிட்ட நான் அன்னைக்கு நடந்துக்கிட்டதைப்பற்றி பேச வந்திருக்கீங்களா அங்கிள்?” எனக் கேட்டவன் பாரியின் முன் இருக்கையில் அமர்ந்தான். அவனது தமிழ் பேச தெரியாதவர்கள் பேசியதைப்போல் இருந்தது.
“ம்ம்ம்ம்… ஸ்மார்ட்” என்ற பாரி இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவனாக மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு “நேம் என்ன?” எனக் கேட்டான்.
“அபிஜித்” என்றான்.
ஆர்னா அபி என்ற பெயரை தன்னுடைய பிரண்ட் என்று அடிக்கடி சொல்லியிருந்தது பாரிக்கு நினைவு வந்தது.
“நீ வம்பு செய்யுற பையனில்லை. உன் பார்வையில அது தெரியுது. ஒரு மெச்சூர்ட்” என்ற பாரி “உன் பக்கம் என்னன்னு சொல்லு?” என்றான்.
“நான் பக்கா ஆந்திரா பையன் அங்கிள். அம்மா நேட்டிவ். என் லைஃப் புல் அண்ட் புல் ஹைதராபாத் தான். லாஸ்ட் ஃபைவ் மன்த்ஸ் வரை நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன். நானாவை தல்லி லவ் பண்ணிதான் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ஆஃப்டர் மேரேஜ் அவங்களுக்குள்ள என்னன்னு எனக்கே தெரியாது. தல்லி தாத்தையா இல்லுக்கு வந்துட்டாங்க. அப்போ நான் அம்மா வயித்துக்குள்ளதான் இருந்தேனாம்” என்று அபிஜித் சொல்லிக்கொண்டே போக, கேட்டதை விட்டுவிட்டு இவனுடைய வரலாறை ஏன் சொல்கிறான் என்று தனக்கு தோன்றியபோதும் அவன் சொல்வதை எவ்வித இடையூறுமின்று கேட்டுக்கொண்டிருந்தான் பாரி.
“எதுக்கு என் ஹிஸ்டரின்னு தின்க் பண்றீங்க கரெக்ட்?” என்ற அபி, “ரீசன் இருக்கு அங்கிள். நான் நானாவை பார்த்ததே இல்லை. அம்மா அலோவ் பண்ணதும் இல்லை. ஆனால் சடனா திஸ் இயர் அம்மா என்னை கூட்டிட்டு இங்க வந்துட்டாங்க. இங்க என்னால் அடாப்ட் ஆகவே முடியல… அம்மா அடிக்கடி தமிழ் பேசுவாங்க, சோ லாங்வேஜ் மேனேஜ் பண்ணிக்க முடிஞ்சுது. பட் மத்தது?” என்றதோடு, “ஸ்கூலிலும், மத்த இடத்திலும் ரொம்ப லோன்லியா பீல் பண்ணேன். இங்கையும் யாரோடவும் எனக்கு பேச பிடிக்கல. அப்போதான் ஆர்னாவே வந்து என்கிட்ட பேசினாள். எனக்கு தமிழ் ஓரளவு எழுத படிக்க தெரியும். அப்பா தமிழ் அப்டிங்கிறதாலா தெரியல, அம்மா அங்க எனக்கு தனியா சொல்லிக்கொடுத்தாங்க. பட் இங்க தமிழ்… ரொம்ப கஷ்டம். ஆர்னா சொல்லிக்கொடுத்தாள். ஏற்கனவே எழுத படிக்க தெரியுங்கிறதால அவள் சொல்லிக்கொடுக்கும்போது பிக்கப் பண்ணிக்கிட்டேன். எனக்கு தலையில் தட்டி சொல்லிக்கொடுக்கும் ஆர்னாவை ரொம்ப பிடிக்கும் அங்கிள்” என்றான்.
“ஷீ இஸ் மை பர்ஸ்ட் பிரண்ட் இன் திஸ் சர்க்கிள்… அவளோட பிரண்ட்ஷிப் ரொம்ப பிடிச்சுது. க்ளோஸ் ஆனோம். சடனா டூ மன்த்ஸ் பேக் என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாள்.
“ரீசன் கேட்டதுக்கு… உன் அப்பா அக்யூஸ்ட். என் சித்தா தான் அரேஸ்ட் பண்ணார். நமக்குள்ள செட் ஆகாது சொல்றாள்” என்று எட்டிப்பார்த்த கோபத்தோடு சொல்லிய அபி, “பேக்கிரவுண்ட் பார்த்து பிரண்ட்ஷிப் வச்சிக்க முடியுமா அங்கிள்?” என்று பாரியிடமே கேட்டான்.
“தப்பு பண்ணது அவர். இன்பேக்ட் அவரை நான் பார்த்ததே டிவியில் தான். நீங்க அரேஸ்ட் பண்ண வீடியோவில் தான்” என்றான்.
“உங்களுக்கு பிடிக்காதுன்னு என்னை அவாய்ட் பண்ணியிருக்காள். உங்களை மீட் பண்ணனும், எப்படின்னு தெரியல. சோ, வம்பு பண்ணேன். என் ஃபிரண்ட் எனக்கு வேணும்” என்றான். அத்தனை அடமாக.
பாரி தனக்குள் சிரித்துக்கொண்டான். அவனும் பூவின் மீது நட்பு என்கிற பெயரில் அத்தனை உரிமையாக நடந்து கொண்டவன் தானே.
“புரியுது” என்ற பாரிக்கு அபி தான் செய்த வம்பினை கூட நேர்கொண்டு மறைக்காது எதற்காக செய்தேன் என்பதை தெளிவாகச் சொல்லியதில் அபியை பிடிக்கவே செய்தது.
அபி… சாய்நாதன், வேலுநாதன் போலில்லை என்று உறுதியாகத் தோன்றியது.
“காயம் பெருசா பட்டுடுச்சா?”
“இல்லை அங்கிள். சின்னது தான். ஆரிஷ் வருவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. ஆர்னா என்கிட்ட பேசிட்டு இருந்தவரை அவனும் அண்ணா அண்ணான்னு என்னோடவே சுத்திட்டு இருந்துட்டு. இப்போ அவனோட அக்கா பேசலன்னு அவனும் ஓவரா பண்ணான். அதான் அன்னைக்கு அவன் அண்ணா சொல்லவும், கோவத்துல அப்படி சொல்லுன்னு சொல்லிட்டேன். பட் அது வேற மாதிரி போட்ரே ஆக சான்ஸ் இருக்குன்னு அப்புறம் தான் புரிஞ்சுது. லாங்வேஜ் பிராப்ளம், யூ நோ?” என்றான்.
ஆர்னாவும், ஆரிஷும் அபிஜித்தின் பெயரையே சொல்லாது நடந்தவற்றை சொல்லியதால் தான் பாரிக்கு அபி மீது கோபம் வந்தது. அதுவும் அவன் வேலுநாதனின் பேரனென்று தெரிந்ததும், அவர் தன்னை மடக்கிட தன் பிள்ளைகளிடம் காய் நகர்த்துகிறாரோ என்று. அபியின் பெயர் தெரிந்திருந்தால் பாரிக்கு ஆர்னாவின் பிரண்ட் என்றதோடு அவன் ஏன் அப்படி நடந்துகொள்ள வேண்டுமென்கிற சிறு யோசனையாவது நேற்றே வந்திருக்கும்.
“ஆரிஷ் தள்ளியதை நான் மிஸ்கிட்ட சொல்லல அங்கிள். மேம் பிளட் பார்த்துட்டு கேட்கவும், என் பிரண்ட் சொல்லிட்டான்” என்றான்.
“இட்ஸ் ஓகே. தட்ஸ் நாட் ஆன் அ இஸ்யூஸ்” என்ற பாரிக்கு அபியை நிரம்ப பிடிக்கவே செய்தது.
“ஓகே… நான் ஆர்னாகிட்ட பேசுறேன்” என்ற பாரி அபியின் கன்னம் தட்டிட…
“உங்க பிக் எங்க வீட்டில் இருக்கு. நீங்க என் மாவையா ஃபிரண்டா? உங்களைப்பற்றி நிறைய சொல்லுவாங்க. உங்க ஆக்ஷன்ஸ்” என்றான்.
“யாரு உன் மாமா?” பாரி புருவத்தூக்கலுடன் கேட்டான்.
“சத்யா… சத்யராவ். டிடெக்டிவ்” என்று அபிஜித் சொல்லவும் பாரியின் நெற்றிச் சுருங்கியது யோசனையாக.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                4        
	+1
	                                21        
	+1
	        	+1
	                                1        
	