அத்தியாயம் 29
அன்னையின் மரண செய்தியை நம்ப முடியாது… இதயம் ஏற்க மறுத்திட… மயங்கி சரிந்த அவியை மருத்துவமனையிலிருந்த செவிலியர் தான் முகத்தில் தண்ணீர் தெளித்து கண் விழிக்கச் செய்தார்.
இமை திறந்தவன் மலங்க மலங்க விழித்தபடி…
“அம்மா… அம்மா…” என்று அரற்ற…
“உங்களோட யாரும் வரலையா சார். யாராவது இருந்தா வர சொல்லுங்க” என்றுவிட்டு செவிலி அகன்றார்.
அப்போதுதான் அவனுக்கு ஜென்னின் நினைவே வந்தது. சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் துழாவி பார்த்துவிட்டு அலைபேசி இல்லை என்றதும், வரவேற்பு பகுதிக்கு ஓடிவந்தவன் அங்கிருக்கும் தொலைபேசி வழியாக இரண்டு மூன்று முறை ஜென்னிற்கு அழைத்தான் அவளோ கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்கவில்லை.
அதன் பின்னர் மருத்துவமனை செய்முறை முடித்து அதிகாலையில் தன் அன்னையின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தான்.
நடுவீட்டில் அன்னையின் உடலை படுக்க வைத்தவனுக்கு அடுத்து என்னவென்றே தெரியவில்லை. சொந்தமென்று யாருமில்லாததால் யாருக்கு சொல்ல வேண்டுமென்று கூட தெரியாது அன்னையின் முகம் பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு, ஆம்புலன்ஸில் கொண்டு வந்ததால் விடயமறிந்து அக்கம் பக்கத்திலிருப்போர் வந்திருப்பதையும் உணராது பிரம்மை பிடித்தார் போலிருந்தான்.
“யாருக்கும் தகவல் சொல்லலையா அவி?”
மேகலையிடம் சற்று நெருக்கமாக இருக்கும் பக்கத்து பிளாட் பாட்டி கேட்க… அவர் என்ன கேட்டாரென்றே தெரியாது உணர்வற்று பார்த்தான்.
அப்பாட்டி மீண்டுமொரு முறை சொல்லிட… ஜென்னிற்கு தன்னுடைய அலைபேசியிலிருந்து முயற்சித்தான்.
முதல் இரண்டு முறை எடுக்கப்படவில்லை. அடுத்த இருமுறை துண்டிக்கப்பட்டது. அவளின் கோபம் எதற்காக என்று அக்கணம் புரிந்தவன் மீண்டும் முயற்சித்தான். தற்போது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வரவும், அவியிடம் ஒரு விரக்தி சிரிப்பு.
அப்படியே அவனது விரல்கள் திரையை உயர்த்த… கண்ணில் பாரியின் எண்கள் பட அழைத்தான். அவன் தான் அலைபேசி உபயோகிப்பதையே மறந்திருந்திருந்தானே. பாரியிடம் சொல்ல முடியாத வருத்தம். பாரிக்கு தெரிந்தால் இப்படி அவனை தனியாக அழ விட்டிருப்பானா என்ன?
பூவிற்கும் முயற்சித்தான், அவள் தான் யாருடனும் பேசுவதில்லையே. பார்வதி தினமும் அழைத்து அழுது புலம்புவது வாடிக்கையாக இருந்த சமயம் அது. அன்றும் அழுது புலம்பியதோடு என்னால் தான் உன் வாழ்வு வீணாகிவிட்டதென்று வருந்த, பூ அலைபேசியை அணைத்து போட்டதோடு பார்வதியிடம் பேசுவதையும் விட்டிருந்தாள். அதனால் பூவிற்கு அழைத்ததும் வீண் ஆனது.
இறுதியாக பரிதிக்கு மனமில்லாமல் தான் அழைத்தான்.
“என்னடா அவி திடீர்னு அண்ணன் ஞாபகம். பாரியில்லைன்னா வீட்டுக்கு வரமாட்டியா” என்று எடுத்ததும் வினவிய பரிதி… அவியின் விசும்பல் கேட்டு,
“அவி அழறியா? என்னாச்சுடா?” என்று வினவினான்.
“பரிதிண்ணா… அம்மா… அம்மா…” என்றவன் அவர் இறந்துவிட்டார் என்ற வார்த்தையை சொல்ல முடியாது, “என்ன பண்றதுன்னே தெரியலண்ணா” என்று வெடித்து கதறினான்.
எப்போதும் சிரித்த முகத்தோடு வலம் வரும் அவியை கண்டு பழகியிருந்த பரிதிக்கு அவனது கதறல் மனதை பிசைந்தது.
அடுத்த நொடி பார்வதி மற்றும் தில்லையிடம் விடயத்தைக்கூறி, பத்தாவது நிமிடம் அவியை மடி தாங்கியிருந்தான்.
அடுத்து நடக்க வேண்டிய அனைத்தையும் தில்லை தான் முன்னின்று செய்தார்.
அன்றிரவு மட்டுமில்லாது அவி சற்று தேறும் வரை பரிதி அவனுடனேயே தங்கியிருந்தான்.
இளா வளைகாப்பு முடித்து தாய்வீடு சென்றிருந்ததால் அவளுக்கு இவ்விடயம் தெரியவில்லை. அத்தோடு இந்நேரத்தில் இந்த மாதிரி விடயம் சொல்ல வேண்டாமென்று பார்வதி தடுத்துவிட்டார்.
பரிதியுடனும் எப்போவாவது ஓரிரு வார்த்தைகள் பேசும் பூவிடம்… பரிதிக்கு இதனை சொல்ல வேண்டுமென்றே நினைவில் இல்லாமல் போக… பூவிற்கு அவியின் அன்னை இறந்த விடயம் நிகழில் ஜென் சொல்லும் வரை தெரியாமல் போனது.
மேகலை இறந்து இரண்டு மாதங்கள் சென்றிருந்தது.
முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு நடப்பிற்கு பழகியிருந்தான் அவி.
ஜென் விடயத்தில் தன்மீது தவறு இருப்பதால் அவி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
இந்த இரண்டு மாதத்தில் சாமுவேல் ஜென்னிற்கு மாப்பிள்ளையென அத்தனை வரன்களை காமித்துவிட்டார். ஜென்னின் பதில் மௌனம் மட்டுமே. அதற்கெல்லாம் அசரும் ஆளில்லையே சாமுவேல். வீட்டிற்க்கே இரு பையன்களை பெண் பார்க்க அழைத்துவர, தான் ஒருவனை காதலிப்பதாக அனைவரின் முன்பும் வெளிப்படையாக சொல்லிவிட்டாள். இராண்டவது பெண் பார்க்கும் படலம் அன்று தான் நடந்திருக்க, சாமுவேல் மகளை அடி வெளுத்துவிட்டார். தன் மொத்த ஆத்திரத்தையும் பெல்ட் அடியில் காண்பித்துவிட்டார்.
அந்த நேரம் தான் அவி ஜென்னிற்கு அழைத்திருந்தான்.
அழுது கொண்டிருந்தவள் அழைப்பை ஏற்று மொத்த கோபத்தையும் வார்த்தையில் காட்டிவிட்டாள்.
“இப்போதான் போன் பண்ண ஞாபகம் வந்துச்சா?” எனக் கேட்டவள், “ஏமாத்திட்டோமேன்னு குற்றவுணர்வில் பண்ணியா இல்லை… இப்பவும் உன் அம்மா ஒத்துக்கிட்டாங்கன்னு பொய் சொல்லப்போறியா?” என்று கத்தினாள்.
“ஜென் அம்மா…”
“உன்னை, நீ சொன்னதை நம்பி ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ண நான் தான் பைத்தியக்காரி. முடியாதுன்னா, முடியாது சொல்ல வேண்டியது தானே உன் அம்மா. எதுக்கு ஒத்துகிட்டு அப்புறம் வராமல் ஏமாத்தனும்.”
“ஜென் நான் சொல்றதை கேளு, அம்மா…”
“என்ன அவங்களுக்கு, ஓ உன்கிட்ட ஒத்துக்குற மாதிரி ஒத்துகிட்டு அப்புறம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதைத்தானே சொல்லப்போற.”
அவியை பேசவே விடாது பேசினாள். அத்தனை அழுத்தம் அவளுக்கு.
“ஜென் என்னை பேசவிடேன்…”
“என்ன நீ பேசணும். நீ வராமல் இருந்ததுக்கு காரணம் சொல்லப்போற அதானே…”
“ஜென் அம்மா…”
“என்னடா உன் அம்மாக்கு… ஹான், உன் அம்மா என்ன செத்து போயிட்டாங்களா… சொல்லுடா சொல்லு செத்தா போயிட்டாங்க, அதான் வரலையா? சந்தோஷம். அவங்க செத்தாக்கூட எனக்கு சொல்லாத” என்றவள் எல்லை தாண்டிய கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
அவியிடம் மௌனம்.
அந்த அமைதி ஜென்னை நிதானத்திற்கு கொண்டு வந்தது.
“சரி சொல்லு. என்ன தான் காரணம் சொல்லுறன்னு நானும் பார்க்கிறேன்” என்றாள்.
“ஆமாம் ஜென், என் அம்மா செத்துதான் போயிட்டாங்க… நீ வந்துடாத!” என ஒருவித மரத்த குரலில் சொல்லியவன் வைத்துவிட்டான்.
அடுத்து கோபத்தை பிடித்துக்கொண்டு நிற்பது அவியின் முறையானது.
ஜென் செத்துட்டாங்களா என கேட்டது கூட அவனுக்கு வலிக்கவில்லை. ஆனால் அவங்க செத்தாலும் என்கிட்ட சொல்லாதே என்று சொல்லியது அவியை வெகுவாக பாதித்திருந்தது. மேகலை இறந்த நிலையில் அவ்வார்த்தை அவனை அதிகம் தாக்கியது. காயப்படுத்தியிருந்தது.
அவி மேகலை இறந்துவிட்டார் என்று சொல்லியபின்னர் தான் அன்று அவன் அத்தனை முறை அழைத்தும் தான் எடுக்காமல் விட்டோமே என்று அதிகம் வருந்தினாள். உடனடியாக அவியை பார்க்க சென்றாள். ஆனால் அவனோ அவளின் முகம் கூட காணபிடிக்காது வீட்டின் கதவினை கூட திறக்காது மறுத்துவிட்டான்.
அடுத்த பத்தாவது நாள்,
ஒரு ரவுடி கும்பலை என்கவுண்டர் செய்யப்போன காவல்துறை குழுவில் சாமுவேலும் இருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு பேருக்கும் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குண்டடிப்பட்டு அவர் இறந்துவிட, விடயமறிந்த அவி ஜென்னிற்கு அனைத்திலும் உதவியாக இருந்தான்.
அப்போதுதான் யாருமற்ற நிலையில் அவியும் உடனில்லாது போயிருந்தால், இறந்த தந்தையின் உடலை வைத்துக்கொண்டு தான் என்ன செய்திருப்போம் என்று யோசித்தவளுக்கு அவியும் இம்மாதிரி ஒரு சூழலில் தானே அன்று இருந்திருப்பான். எத்தனை வேதனையை அக்கணம் அனுபவித்திருப்பான் என நினைத்து பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் சொல்லிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. அவி எத்தனை காயப்பட்டிருப்பானென்றும் உணர்ந்தாள்.
அவியிடம் மன்னிப்பு வேண்டிட…
“நான் அனுபவிச்சதை நீ அனுபவிக்கக்கூடாது, அதுகாகத்தான் இந்த நிலையில உனக்கு துணையா வந்தேன். ஆனால் நீ சொன்னது இங்க இருக்கு” இதயத்தை தொட்டு காண்பித்ததோடு, “வரன்னு சொன்னவன் வரலையே, அவன் பக்கம் வலுவான ரீஸன் இருக்குன்னு கூட புரிஞ்சிக்க முடியாதது என்ன லவ்வா இருக்கும்?” எனக் கேட்டு “என்னால உன் வார்த்தை… அதை மறக்க முடியும் தோணல, அத்தோட என் மேல நம்பிக்கையில்லாத உன் மேல கோபமா வருது, அதனால் விலகியே இருப்போம். அதுதான் உனக்கு நல்லது” என்றவன் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைத்துவிட்டான்.
எப்போதாவது பார்க்க நேர்ந்தாலும், அவியிடம் அந்நியப்பார்வையே. அவனின் மனம் இறங்க இன்றும் மன்னிப்பு வேண்டி அவன் முன் நிற்கின்றாள் ஜென்சி.
“அவி… நான் அப்படி பேசுனது தப்பு தான். அப்படி பேசியிருக்கக்கூடாது. அதைவிட உன்னை நான் நம்பியிருக்கணும்… நம்பாம விட்டது என் தவறு. மன்னிச்சிடேன் ப்ளீஸ்.” அவன் முன் மண்டியிட்டு இரு கரம் ஒன்றுக்குள் ஒன்று மடக்கி வைத்து அவள் கேட்டிட… வேகமாக அவளுக்கு இணையாக மண்டியிட்டவன் அவளின் கரங்களை தன் கைக்குள் பொத்திக்கொண்டான்.
மூன்று நாட்களுக்கு முன்னர்… அவி இரவில் உறங்காது எதையோ நினைத்தபடி இருக்க…
“உன் வருத்தம் என்னவோ அதை மனசு விட்டு ஷேர் பண்ணிக்கோ அவி. உள்ளுக்குள்ளே வச்சிருந்தா உன்மேலயே கோபம் வரும் உனக்கு” என்ற பாரியின் தோளில் முகம் புதைத்த அவி, “அம்மாவை ரொம்ப மிஸ் பன்றேன் பாரி” என்றான்.
“அம்மா உன்னோட தான் இருக்காங்க அவி. நீ சந்தோஷமா இரு… அதைவிட்டு அழுதுகிட்டு இருந்தா அவங்க ஆத்மா அவங்களையே மன்னிக்காது. இப்படி உன்னை தனியா விட்டு போயிட்டாங்களேன்னு பீல் பண்ணுவாங்க” என்று பாரி தேற்றிட…
“இவ்வளவு நாள் எங்கடா போயிருந்த நீ. அன்னைக்கு உன்னை எவ்வளவு தேடுனேன் தெரியுமா?” என்றவன் சின்ன குழந்தை மாதிரி தேம்பியபடி… “பரிதிண்ணா மட்டும் இல்லைன்னா என்னால அந்த நாளெல்லாம் சமாளிச்சிருக்கவே முடியாது” என்றவன் மேகலையின் இறப்போடு தனக்கும் ஜென்னுக்கும் இடையிலான பிரச்சினை என அனைத்தையும் பாரியிடம் பகிர்ந்து கொண்டான்.
அப்போது பாரி சொல்லியதை இப்போது ஜென்னின் கையை தனக்குள் பிடித்திருக்கும் இந்நொடி நினைத்து பார்த்தான்.
“ஜென் மேல இந்த கோபம் எதுக்காக அவி? அன்னைக்கு நீ வரேன் சொல்லிட்டு வராம இருந்ததுக்கு உன் பக்கம் வேலிட் ரீஸன் இருக்கும்ன்னு அவள் உன்னை நம்பாததாலா… இல்லை அம்மாவை அப்படி சொல்லிட்டான்னா… இல்லை அந்த நேரத்தில் உனக்கு துணையா இருக்க வேண்டியவள் கோபமா இருந்ததாலா?” எனக் கேட்டவன்…
“மூன்றுமே காரணமாக இருக்கலாம். அதை நீ அவள் இடத்திலிருந்து யோசிச்சுப் பாரேன் அவி. நான் பூ பக்கமிருந்து யோசிக்காம விட்டதாலதான் இப்போ அவளை பார்த்து பேசவே தயக்கமா இருக்கு. எங்களுக்குள்ள என்ன நடந்தாலும் என் பூ அப்படின்னு நான் கொஞ்சம் இறங்கி போயிருந்தா எங்களுக்குள்ள பிரிவே வந்திருக்காது. நானும் உங்களையெல்லாம் விட்டு வனவாசம் போனமாதிரி எங்கையோ ஒரு இடத்தில் தனியா இருந்திருக்க வேண்டாம்.
தனியா இருப்பதைவிட ஒரு பெரிய கொடுமை இந்தவுலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது அவி. அதை உனக்கு நான் சொல்லணும் அவசியமில்ல.
யாருடா அவள்… உன் ஜென் தான! கோபத்தில் பேசிட்டாள். பேசினது தப்பு தான். அப்படி சொல்லியிருக்கவே கூடாது தான். ஆனால் சொல்லிட்டா… உனக்காக நீ கிடைக்க மாட்டியோங்கிற பயத்தில்தான பேசிட்டாள். சொல்லப்போனா அவளை அப்படி பேச வைத்ததே அன்றைய சூழல் தான். உன்னை நம்பலங்கிறது அவளோட வார்த்தையை வைத்தோ, அவளோட கோபத்தை வைத்தோ தீர்மானிக்காத அவி. அவள் மனசார அப்படி சொல்லணும் யோசிச்சிருக்கக்கூட மாட்டாள். இப்போ உன்னை பார்க்கிறப்போலாம் அவள் கண்ணுல உனக்காக வருதே ஒரு ஏக்கம் அதைவிடவா அவி உனக்கு உன் கோபம் பெருசு.
அந்த ஏக்கம் ஒன்னு போதாதாடா ஜென் உன்னை எவ்வளவு லவ் பண்றான்னு, நீ வேண்டான்னு சொன்னபிறகும் உனக்காக காத்திருக்கும்போது அதிலிருக்கும் உன்மேலான நம்பிக்கை தெரியலையா… இது போதுமே அவி. மொத்த வாழ்க்கையும் அவளோட நீ சந்தோஷமா வாழ!
அதிகம் யோசிக்காதே அவி. ரிலாக்ஸ்டா இரு. ஜென் பேச வந்தா நார்மலா பேசு… அப்படியே எல்லாம் தன்னால சரியாகிடும்” என்று பாரி எடுத்துக் கூறியதாலேயே அன்றைய இரவு இருவரும் ஒன்றாக காரில் வந்தபோது ஜென் பேசியதற்கு முதலில் கோபம் கொண்டாலும் பின்னர் அவளை ஏற்க முயற்சித்தான். அதன் பலனே இப்போது ஜென்னிடம் சாதாரணமாகப் பேசியுமிருந்தான்.
ஆனால் பூ தனிமை கொடுத்து சென்றதும் ஜென் இப்படி நேரடியாக மன்னிப்பை வேண்டுவாளென்று அவி எதிர்பார்க்கவில்லை.
தடுமாறினான்.
“உன் மேல நம்பிக்கை இல்லாம நீ ஏமாத்திட்டன்னு பேசல அவி… அப்பா அடுத்தடுத்து பையன் பார்க்கிறேன்னு பயங்கர பிரஷர் குடுத்திட்டார். ரெண்டு பேரை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டார். என்ன விஷயம்ன்னு எனக்கு முழுசா தெரியாத நிலையில, நீயும் கிட்டத்தட்ட ரெண்டு மாசம் என்கிட்ட பேசணும் போன் பண்ணவே இல்லை! அதெல்லாம் சேர்ந்து மெண்டல் பிளாக் மாதிரி ஆகிருச்சு. அதுதான் அன்னைக்கு எப்படி என் கோபத்தை காட்டுறதுன்னு தெரியாம ரொம்ப அதிகமாவே பேசிட்டேன். பேசினது தப்பு தான். ஆனால் மனசுல இருந்த எதுவும் பேசல அவி.
சாரிடா… அம் ரியலி சாரி. மன்னிச்சிடேன் ப்ளீஸ்.”
மன்றாடும் குரல் அவளிடம்.
“நீயில்லாம, யாருமேயில்லாம முடியலடா. எனக்குன்னு இந்த உலகத்தில் உறவா இருக்க உன்னை என் கைக்குள்ள வச்சிக்கணும் அவி” என்றவள் இணைந்திருந்த இருவரின் கை மீதே தலை கவிழ்த்து கண்ணீர் வடித்தாள்.
அதற்கு மேலும் அவி தன் கோபத்தை பிடித்து வைத்திருப்பானா என்ன? தன்மீது உயிராய் இருக்கும் பெண்ணின் கண்ணீரை கண்டும் மனம் இறங்காது வெறுத்து செல்ல அவி பாரியல்லவே!
அழும் ஜென்னை இழுத்து தனக்குள் வைத்துக்கொண்டான். அவளின் கண்ணீர் அவனின் தேகம் நனைத்தது. நடந்தவை பேசியவை யாவும் மழையில் அடித்துச் செல்லும் இலையாய் கடந்திருந்தது.
“நடந்ததையே மறந்துட்டேன்” என்றவன் ஜென்னின் முகத்தை நிமிர்த்தி… “நானும் சாரி” என்றான்.
“லவ் யூ அவி” என்றவள் அவனை கட்டிக்கொள்ள… அவி நானும் என்று சொல்ல… இரண்டாவதாக ஒரு நானும் கேட்க… யாரென்று பார்த்த அவி தன் முதுகில் சாய்ந்திருக்கும் பூவை கண்டு ஜென்னிடமிருந்து வேகமாக விலகினான்.
அவியின் முதுகில் ஒன்று வைத்து… ஓடும் ஜென்னின் கையை பிடித்து நிறுத்திய பூ… “எங்க ஒடுறீங்க ரெண்டு பேரும்” எனக் கேட்க… இருவரும் நாணம் எழும் முகத்தை காட்ட மறுத்தவர்களாக வேறுவேறு பக்கம் பார்த்து நின்றனர்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று பூ நெகிழ்ந்து சொல்ல…
“நாங்க லவ் பண்றது உனக்கும் பாரிக்கும் எப்படி தெரிஞ்சுது?” அவிதான் தெரிந்துகொண்டே ஆக வேண்டுமென்று கேட்டான்.
“பாரி தான் சொன்னான்.”
“நீங்க ரெண்டு பேரும் நேத்து தான் பேசவே ஆரம்பிச்சிங்க… பட் நீ என்கிட்ட அதுக்கு முன்னவே தெரியுங்குற மாதிரி பேசுனியே!” ஜென் சந்தேகமாகக் கேட்டாள்.
“காலேஜ் டேஸ்லே தெரியும்.”
“அப்போவேவா?” இருவரும் ஒன்றாக கேட்டு ஆச்சர்யம் கொண்டனர்.
“பாரி எப்படியோ ஸ்மெல் பண்ணிட்டான். அவங்களா சொல்றவரை நாம தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேணாம் சொன்னான்” என்று தோள் குலுக்கினாள் பூ.
“சொல்லக்கூடாதுன்னு இல்லை தமிழ். மேடம் எனக்கு டூ இயர்ஸ் அப்புறம் தான் ஓகேவே சொன்னாங்க” என்று சடைத்துக்கொண்டான் அவி.
“திஸ் இஸ் டூ மச் ஜென்.” பூ அவிக்கு பரிந்து வந்தாள்.
“அவன் முதலில் எப்போ எப்படி ப்ரோபோஸ் பண்ணான் கேளு தமிழ்” என்ற ஜென்… “பாரியை என் க்ரஷ் சொன்னதுக்கு… க்ரஷ், லவ், எதுவாயிருந்தாலும் நானா தான் இருக்கணும் சொல்லிட்டு போயிட்டான். இதுல எங்க அவன் என் பதில் கேட்ட மாதிரி இருக்கு” என்று பூவிடம் கேட்டு “சொல்லுடா நீ பண்ணதுக்கு பேர் ப்ரொபோசலா?… ஆங்க்… சொல்லுடா” என்று கேட்டபடியே அவியின் தலையில் கொட்டியிருந்தாள்.
“போடி டெவில்… இந்த கொட்டுக்காகவே உன்மேல கோபமாக இருந்திருக்கலாம் போல” என்று அவி வலித்த இடத்தை தேய்க்க… ஜென்னின் முகம் அவன் சொல்லியதில் சுருங்கிவிட்டது.
“ச்சூ… அவன் விளையாட்டா சொல்லுறதுக்கெல்லாம் பீல் பண்ணுவாங்களா” என்று ஜென்னை தட்டிய பூ, “பாரு அவன் முகம் உடனே பியூஸ் போச்சு” என்று சொல்ல… ஜென் அவியை பார்த்து சும்மாயென்று அளவம் காண்பித்தாள்.
அதில் அவி ஜென்னை அடிக்க செல்ல, அவளோ அவனுக்கு போக்குக்காட்டி ஓடினாள்.
“இப்படியே ஓடிட்டு இருக்காமல் சீக்கிரம் வாங்க பசிக்குது” என்று பூ கீழே செல்ல… அப்போதுதான் மணி என்ன என்பதை கவனித்த அவி, “தமிழ் டேப்லெட் போடணும், இன்னும் குக் பண்ணவேயில்லையே” என்று ஜென்னை இழுத்துக்கொண்டு வேகமாகக் கீழிறங்கினான்.
________________________________
நள்ளிரவு…
அறநிலையத்துறை அமைச்சர் ரித்தேஷின் இல்லம்.
அரசியல் விஷயமாக ரித்தேஷ் டெல்லி பயணமாகியிருந்தான். வீட்டில் சங்கரன் மட்டுமே… வயோதிகத்தின் காரணமாக இந்நேரம் ஆழ்ந்த நித்திரையில் சயனித்திருந்தார். திடீரென கோட்டை போன்ற வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. மாத்திரையின் உபயத்தால் அவரின் தூக்கம் கலையவில்லை. அத்தோடு அறையில் திறந்திருந்த சன்னலின் வழி, சில்லென்ற காற்று அறையை நிரப்பிக் கொண்டிருந்ததால் மின்சாரம் தடைப்பட்டதோ… மின்விசிறி தன் இயக்கத்தை நிறுத்தியதோ அவர் உணரவில்லை.
மதில் சுவற்றை சுற்றி காவலுக்கு நடந்து கொண்டிருந்த காவலர்கள் நால்வரும் தங்களது பார்வை அலசலை இருட்டுக்கு பழக்கப்படுத்த எடுத்துக்கொண்ட சில நிமிடங்களில்… எட்டடி மதில் சுவற்றை வெளியிலிருந்து தாவி ஏறி உள்ளே குதித்திருந்தான் பாரி வேந்தன்.
பாரி தான் அவ்வீட்டிற்கு செல்லும் மின்கம்பியினை அறுத்து மின்சாரத்தை தடை செய்திருந்தான்.
டார்ச் ஒளியுடன் கேட்டின் பக்கமிருந்த காவலாளி வீட்டிற்கு பின்பக்கம் இருக்கும் ஜெனரேட்டர் அறைக்கு செல்ல… அந்நேரத்தை பயன்படுத்தி பாரி வீட்டிற்கு முன்னிருந்த புதரில் ஒளிந்து, போர்டிக்கோவின் தூண் வழியாக ஏறி மேலேயிருக்கும் சுவற்றை பிடித்து சன்னல் வழியாக வீட்டின் முதல் தளத்திற்கு சென்றிருந்தான்.
காவலாளியின் உபயத்தால் வீட்டினுள் இரவு விளக்குகள் ஒளிர, பாரி நேராக ரித்தேஷின் அறையின் முன்பு சென்று நின்றான்.
ரித்தேஷை விசாரிப்பதற்காக வீட்டிற்குள் வந்த அன்றே பார்வையால் மொத்த வீட்டையும் அலசியிருந்தான் பாரி. அதனால் எவ்வித தேடலுமின்றி தனக்கு தேவையான இடத்திற்கு சரியாக வந்திருந்தான்.
அறையின் கதவு பூட்டியிருந்தது. நொடிக்கு குறைவாக யோசித்தவன் திறந்திருந்த பக்கத்து அறையினுள் சென்று அவ்வறையின் பால்கனியின் வழியாக ரித்தேஷின் அறை பால்கனிக்கு தாவினான்.
பால்கனியின் கண்ணாடி கதவு அறையின் உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவிற்கு அருகிலிருந்த சன்னலின் பிரெஞ்சு விண்டோவை தள்ளிட அது எளிதாக நகர்ந்து அவனுக்கு வழி விட்டது. அதன் வழியாக கையை உள்ளே விட்டவன் தாழ்ப்பாளை லாவகமாக திறந்து உள்ளே நுழைந்தான்.
அறையில் இரவு விளக்கனை போட யோசித்தவன்… இருட்டில் சிறு பொறியும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதால், இருட்டிற்கு தன் கண்களை பழக்கினான். சன்னலின் திரை விளக்கி நிலவின் ஒளியை உள்ளேவர வழி செய்தான்.
அறையை நோட்டமிட்ட பாரிக்கு முதலில் கண்ணில் பட்டது அவ்வறையின் ஆடம்பரம். பாரியின் புருவம் உச்சி தொட்டு மீண்டது.
அடுத்து… ஒரு பக்க சுவரை முழுமையாக ஆக்கிரமித்திருந்த அமிர்தாவின் நிழலுருவம். சுவரொட்டியின் அமைப்பைக் கொண்டு அவ்விடத்தில் புகைப்படமாக நிரம்பியிருந்தாள்.
அவளை கண்டதும் பாரியின் மனதில் சிறு சலனமோ அல்லது நெருங்கிய ஒருவரை பார்க்கும் பார்வையோ துளியும் இல்லை. யாரோ மூன்றாம் மனிதரை புதிதாக பார்க்கும் பாவனை.
அது சொல்லியது… அமிர்தாவிடமிருந்தது ஒருவகை ஈர்ப்பு என்று. அதுவும் பூவின் வழியில் கொண்ட பிடித்தம் மட்டும் என்று.
பூவை நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கும்போது அவனது இதயம் தடம் பெயர்ந்தது. வெளியே எம்பி குதித்தது. அவளின் பிம்பத்தை அவனின் கண்கள் அத்தனை ஆழமாக உள்வாங்கின. உடலில் சில்லென்ற தூவான ஈரம்.
இதிலொன்று கூட அமிர்தாவை காணும் இக்கணம் அவனுள் ஏற்படவில்லை. அதைவிட அந்நியத்தன்மையே அவனது கவனத்தை திருப்பியது.
காதலென்றாலும் அவனின் பூ என்றே அவனது ஆழ்மனம் அந்நேரத்தில் கூட பூவின் பிம்பத்தை திறந்து காட்டி ரசிக்க வைத்தது.
‘என்னை என்னடி பண்ற. நான் வேலையை பார்க்க வேண்டாமா?’
என்னவோ பூ அவனின் அருகில் நின்று அவன் செய்யவிருக்கும் செயலை செய்யவிடாது கையை பிடித்துக்கொண்டு தடுப்பதை போல்… பக்கத்தில் இல்லாதவளிடம் கேட்டான்.
இத்தனை நாள் இல்லாத உணர்வுகள் எல்லாம் பூவின் மீது பாரிக்கு… அவளை நேரில் கண்ட பிறகு தன்னையறியாது மேலெழும்புகிறது.
அமிர்தாவின் மீது காதலென்று சொல்லிக் கொண்டிருந்தபோது கூட அவள்மீது ஒருநாளும் இப்படிப்பட்ட உணர்வுகள் பாரிக்கு தோன்றியதில்லை. சிறு செயலில் வெளிப்படும் உரிமை உணர்வுகூட உரிமையாக அமிர்தா மீது அக்காலத்தில் எழவில்லை. இப்போது தான் அது பாரிக்கு புரிந்தது.
நட்பென்ற வரையறை தாண்டிட நினைத்திடாத அவனது மூளைக்கு எதிராக அவனின் அனைத்தும் பூ தானென்று மனம் என்றோ அவனுள் பூந்தமிழின் மீது காதலை விதைத்திருந்தது.
இத்தனை வருட கோபம் இந்நொடி அவனை கேலி செய்தது. சற்று ஆராய்ந்து பார்த்திருந்தாலும் அவனின் இதயம்… அந்த இதயத்தில் சிம்மாசனமிட்டு அவனது இயற்கை இளமை உணர்வுகளின் ராணியாக யார் அமர்ந்திருக்கிறாள் என்பது அப்போதே தெரிந்திருக்கும், புரிந்திருக்கும்.
‘இனி யோசிப்பதில் பலனில்லை. இழந்ததை ஈடு செய்வோம். முதலில் வந்த வேலையை பார்ப்போம்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் அவ்வறையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் இண்டு இடுக்கையும் அலசினான்.
நாற்பது நிமிடங்களுக்கு மேல் பொறுமையாகத் தேடியும் ஒன்றும் இவ்வழக்கிற்கு சம்மந்தமாக அவனுக்கு கிட்டவில்லை.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன்… அறையை முழுக்க பார்வையை ஓட்டினான். அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் இழுவையை சற்று நேரத்திற்கு முன்பு திறந்து ஆராய்ந்தபோது கண்ட ஏதோ ஒன்று அவனின் சிந்தனையை தற்போது நெருட மீண்டும் அவ்விழுவையை இழுத்து அதனை எடுத்தான். கையளவே இருக்கும் சிறு மரத்தாலான பெட்டி.
‘இதில் என்ன இருக்கும்?’ அதனை திறக்க முயற்சித்தான். முடியவில்லை.
நன்கு பார்க்கும்போது அப்பெட்டிக்கு அடியில் சாவி நுழையும் துவாரம் தென்பட்டது.
‘இதன் சாவி எங்கே இருக்கும்?’ மீண்டும் அவ்விழுவையை மொத்தமாக இழுத்து மெத்தையின் மீது வைத்து அதிலிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான்.
அதில்… அன்று அமிர்தாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற சில கலைநயமிக்க சிலைகளின் புகைப்படங்கள் இருந்தது.
அவற்றை தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டவன்… இழுவையை அதனிடத்தில் பொருத்திவிட்டு மீண்டும் அப்பெட்டியை ஆராய்ந்தான்.
பெட்டியின் பக்கவாட்டில் குச்சி போன்று இருந்தது. அதனை உருவ முயற்சிக்க அவனின் கையோடு வந்தது. அதனை அப்பெட்டியில் இருந்த துவாரத்தில் விட அது திறந்து கொண்டது. அதனுள் சிறிய பை இருந்தது. என்னவாக இருக்கும் என்கிற யோசனையோடு பாரி அதனை கவனமாக பிரித்து பார்க்க அதில் உலகத்தினால் ஆன மிகச்சிறிய அளிவிலான லிங்கம் ஒன்று இருந்தது.
பாரி அதனை கையில் எடுத்து பார்க்க… லிங்கம் லிங்மாகத்தான் தெரிந்தது. அதில் ஒன்றும் அவனுக்கு புலப்படவில்லை.
முதல்நாள் இங்கு வந்த அன்றே பாரி பார்த்திருந்தான்… மிகப்பெரிய அளவிலான பூஜை அறையினை. அத்தனை வசதிகளுடனான பூஜை அறை இருக்கும்போது இதனை இங்கு ஏன் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமென நினைத்த பாரி அந்த லிங்கத்தை எடுத்த பெட்டியினுள்ளேயே வைத்து மூடி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்தான்.
மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை ஆராய்ந்து… அதற்குமேல் அங்கு ஒன்றுமில்லையென பாரி நினைக்கும் தருணம், அமிர்தாவின் வால்போஸ்டர் இருந்த சுவரில் சிறு வித்தியாசம் அவன் கண்ணில் பட்டது. முதல் முறையே கூர்ந்து பார்த்திருந்தால் அப்போதே அவனுக்கு புலப்பட்டிருக்கும். அமிர்தாவின் முகத்தை கவனித்து பார்க்கும் அளவிற்கு கூட அவனது மனதில் அவளுக்கு இடமில்லை எனும் நிலையில் அவளை பார்ப்பதையே தவிர்த்தவனால்… மீண்டும் மீண்டும் அறையை நோட்டமிட்டதில் இம்முறை தான் கருத்தில் பதிந்தது.
அமிர்தாவின் உருவத்தில் செவ்வக வடிவ கோடு. சுவரோடு ஒட்டிய கதவு. பார்க்கும் போது எளிதில் கண்ணில் படாதளவிற்கு… போஸ்டரின் கட் பேஸ்ட் லைன் போல் தெரியும். நன்கு ஊன்றி பார்த்திட்டாலும் அத்தனை எளிதில் அது கதவென்று யூகிக்க முடியாது.
சுவற்றின் அருகில் சென்ற பாரி கை வைக்க அசைவில்லை. அது திறக்கும் வழி எங்கென்று தேடினான். அகப்படவில்லை.
சுவற்றை முழுவதுமாக நிறைத்திருந்த அமிர்தாவையே அசையாது கண்ணின் கூர்மையோடு நோக்கினான். சில நிமிட முடிவில் கதவு திறப்பிற்கான வழியை கண்டறிந்தான்.
படத்திலிருந்த அமிர்தாவின் கண்ணில் கருவிழியாய் காட்சியளித்தது அந்த கரு நிற சிறு பொத்தான்.
பாரியின் உயரத்திற்கு டஃப் கொடுப்பது போலிருந்த அளவை நின்றுகொண்டே கையினை உயர்த்தி ஈடு செய்தான். பொத்தானில் அவனது விரல் நுனி பட்டதும் தானாக சுவரு மேல் சுவரோடு உள்ளுக்குள் புதைந்து அவனுக்கு வழிவிட்டது.
அவ்வறை கும்மிருட்டாக இருந்திட… இதிலிருந்து ஒளி ஒலி சிதறல் வெளியேறாது என்பதால் தன்னுடைய அலைபேசியை எடுத்து வெளிச்சத்தை படரவிட்டான்.
அப்போது தான் கவனித்தான் அவளது பூவிடமிருந்து புலனம் வழி செய்தி வந்திருந்தது.
“காக்கிச்சட்டைக்கு டைம் பார்க்கும் பழக்கமில்லையா? எந்த பேயோட எந்த ரோட்டில் உலா போயிட்டு இருக்க?” எனக் கேட்டு அனுப்பியிருந்தாள். இரண்டு மணி நேரத்திற்கு முன்பே.
பூ அனுப்பிய நேரத்தை பார்க்காதவன்… “மேடம் இன்னும் தூங்காம என்ன பண்றீங்க? தூங்குங்க காலையில் பார்க்கலாம்” என்று பதில் அனுப்பினான். சிங்கில் டிக் விழ, அப்போது தான் அவள் அனுப்பிய நேரத்தை கவனித்து தூங்கியிருப்பாளென்று தன் வேலையை தொடர்ந்தான்.
‘இப்போலாம் இவளை நினைச்சாலே கான்செண்ட்ரேட் மிஸ் ஆகுது. உள்ளுக்குள்ள புகுந்து என்னவோ பண்றாள்’ என்றவன் அங்கிருந்து உள் நுழைய அவ்வறையில் நிறைந்திருந்தவையை பார்த்ததும் முதலில் பாரிக்குள் ஏற்பட்ட உணர்வு அதிர்வு.
அப்பட்டமான ஆச்சர்யம். கண்கள் விரிந்தன.
******
அவி உறங்கியிருப்பானென்று அவனை தொல்லை செய்யாது தன்னிடமிருந்த மற்றொரு சாவி கொண்டு கதவினை திறந்து வீட்டிற்குள் சென்றான் பாரி.
அவனது அறையில் இருப்பானென்று நினைத்து பாரி மின்விளக்கை உயிர்பித்தான். ஹாலின் நீளிருக்கையில் பாரியின் வருகைக்காகக் காத்திருந்த அவி அப்படியே அதிலேயே உறங்கியிருக்க திடீரென பரவிய வெளிச்சத்தில் கண்கள் கூசிட எழுந்தமர்ந்தான்.
“ரூம்ல தூங்க வேண்டியதுதான அவி?” எனக் கேட்ட பாரி… “நான் வர நேரம் கான்ஸ்டண்டா இருக்காதுடா. சம்டைம்ஸ் ஏர்லி மார்னிங் ஆர் நெக்ஸ் டே கூட வருவேன். சோ, எனக்காக வெயிட் பண்ணலாம் வேண்டாம். நீ கரெக்ட்டா சாப்பிட்டு தூங்கிடு. நான் வர நேரத்துக்கு என்கிட்ட இருக்கும் கீ வச்சு உள்ள வந்துடுவேன்” என்றான்.
அவன் பேசியதையெல்லாம் அவி சரியாக கேட்டானோ இல்லையோ…
“சாப்பிட்டியா நீ?” என பாரியை கேட்டிருந்தான்.
“ஹம்… வெளியில் சாப்பிட்டேன்.”
பாரி சொன்னதும் இரவு வணக்கத்தோடு தன்னறைக்குள் நுழைய போன அவி…
“ஜென் கிட்ட நார்மல் ஆகிட்டேன் பாரி” என்றவனுக்கு பாரி புன்னகை முகம் காட்ட…
“இட்ஸ் பிகாஸ் ஆஃப் யூ… அண்ட் தமிழ்” எனக்கூறிச் சென்றான்.
நேரத்தை பார்த்த பாரிக்கு பூவை பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளுடன் இருந்த நாட்களில் அவனது பொழுதுகள் அவளின்றி கழிந்தது இல்லையே. இப்போதும் அந்நிலையிலேயே பாரி வேந்தன்.
கடிகாரம் இரண்டை கடந்து ஒடிக் கொண்டிருக்க…
‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ என நினைத்து அவளை அழைப்பதற்காக எடுத்த கைபேசியை மேசை மீது வைத்துவிட்டு…
ரித்தேஷின் வீட்டிலிருந்து எடுத்த சிறு பெட்டியை பத்திரபடுத்தினான். அதனை வெறும் பூஜை அறையில் வைக்கும் லிங்கமாக அவனுக்குத் தோன்றவில்லை.
குளியலறைக்குள் புகுந்தவன் அன்றைய நாளின் அலைச்சல் போக குளித்து வெளியில் வந்ததும் தான் சோர்வு நீங்கியதாக உணர்ந்தான்.
‘மூன்று மணிநேரமாவது தூங்குவோம்’ என நினைத்தவன்… கட்டிலுக்கு அருகிலிருந்த மேசையின் மீது வீற்றிருந்த அவன் மற்றும் அவனது பூவிருக்கும் பள்ளி வயது புகைப்படத்தினை வழக்கம்போல் பூவிற்கு இரவு வணக்கம் சொல்ல கையில் எடுக்கப்போனவன்… மாற்றி அன்று பூ வைத்துவிட்டுச்சென்ற அவர்களது திருமண புகைப்படத்தை எடுத்தான்.
முகம் பார்த்திடாது பாரி அவளின் கழுத்தில் தாலி கட்டிட… பூ அவனையேதான் காதல் பொங்கும் கண்களில் கண்ணீரோடு பார்த்திருந்தாள்.
முன்னெப்போதும் அவன் அறிந்திடாத அவனது பூவின் காதலை அப்பட்டமாக அந்த நிழலிருவில் கண்டான்.
‘ப்பா… என்ன உணர்வுடா இது’ சொல்லிக்கொண்டவன் தலையை அழுந்த நீவிக்கொண்டான்.
சட்டென்று மனதின் உந்துதலில் படத்திலிருக்கும் பூவிற்கு முத்தம் வைத்தவன் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தான். அந்நொடி மின்னல் தெறித்தது உடலில்.
இதற்குமேல் முடியாது என படுக்கையில் குப்புற விழுந்தவன் புகைப்படத்தை அணைத்தபடி உறங்க முயன்றான். பூவின் காதலில் மூழ்கியவன் வெற்றியும் கண்டான். ஆனால் அவனது உறக்கம் நீடித்தது சில நிமிடங்கள் தான்.
பாரியின் அலைபேசி இசைத்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாததால் படுக்கையிலிருந்தவாறே அழைப்பை ஏற்றான்.
“தூங்கலையா நீ?” திரையை பார்க்காமலே அழைத்தது யாரென்று அறிந்து வினவினான்.
“நீ மாடிக்கு வா!”
“முடியாது… தூக்கம் வருது. நீயும் தூங்கு.”
“எனக்கு இப்போ உன்னை லவ் பண்ணனும் தோணுது.” சிணுங்கலான குரலில் ஆணவனின் தேகம் சிலிர்த்து அடங்கியது.
“இந்த நேரத்துல யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க பூ. போலீஸ்காரன் என்னை யாராவது தப்பா பேசலாமா?” என்றான். இன்னும் அவன் கண்களை திறக்கவில்லை.
“ஹாலோ காக்கி நான் உங்க வைஃப். யாரது தப்பா பேசறது?” என்றவள், “இந்த நேரத்தில் யாரும் மாடிக்கு வந்து அடுத்த வீட்டு மாடியில் என்ன நடக்குதுன்னு பார்க்கமாட்டாங்க… நீ மேல வா.” சட்டமாக அழைத்தாள்.
“முடியாது போடி.”
“என்னது… நீ இப்போ வரல, நான் கதவை உடைச்சிட்டு உள்ள வந்திடுவேன்” என்ற அவளின் மிரட்டலில் பயம் கொள்ளாதபோதும், எழுந்து சென்றான்.
“வரேன் வை” என்றவன் வீட்டிற்குள்ளே இருக்கும் படிகளின் வழி ஏறி மொட்டை மாடியை அடைந்தான்.
பாரி வந்ததை பார்த்ததும் தண்ணீர் தொட்டிக்கு பின்பக்கம் இருந்து வெளியில் வந்தாள் பூ.
“பயந்து வந்துட்ட போல!” அவனை நோக்கி நடந்தபடி வினவினாள்.
அவள் நெருங்கும் முன் வேகமாக அவளின் அருகில் சென்றவன், காதினை பிடித்து வலிக்காது திருகினான்.
“அவி இருக்கான். தூங்கிட்டாலும் இந்த நேரத்தில் நீ வரது சரியிருக்காது. அதான் வந்தேன். இனி இப்படியெல்லாம் பண்ணக்கூடாது” என்றான்.
“நீ கிள்றது வலிக்கவேயில்லை” என்று பாரியின் கையை விலக்கியவள் மொட்டைமாடி சுவற்றில் ஏறி அமர்ந்தாள். அவன் இனி செய்யக்கூடாது என்பதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“ஆமா நீயெப்படி இந்த மாடிக்கு வந்த?”
“தாவி தான்.”
“வாட்” என்ற பாரி இரு மாடிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை பார்த்து அவளை முறைத்தான். அத்தோடு கீழே குனிந்து உயரத்தை பார்த்தவன் “கொஞ்சம் ஸ்லிப்பானாலும் என்னாவது பூ” என்று சற்று குரலை உயர்த்தி வினவியவன்… “இனி எது செய்தாலும் என்னை மனசில் வச்சு செய்” என்றான்.
அத்தோடு சுவற்றின் மீது அமர்ந்திருந்தவளை கீழே இறக்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன் அவளையும் தன்னை ஒட்டி அமர வைத்தான்.
பூ அவனின் தோளில் தலை சாய்த்து தனது கையை அவனின் கையோடு விரல்கள் பிணைய கோர்த்துக்கொண்டாள்.
“செமயா இருக்குடா…”
“எது… இப்படி தூங்காம இருக்கிறதா?”
“இந்த இருட்டு… சில்லுன்னு காத்து… உன் விரல் இடுக்குல என் விரல்… உன் தோள் மேல் என் தலை… நமக்குள்ள இருக்க இந்த சின்ன கேப்… இதெல்லாம் தான்” என்றவளிடம் சொல்லியதை ஆழ்ந்து ரசிக்கும் சிலிர்ப்பு.
“ம்ம்ம்… நல்லாயிருக்கு.” மென்னகையோடு அவள் முகத்தை காதலோடு பார்த்துக் கூறினான்.
“இப்படி இருக்கிறதா?” என்றாள். அவன் பார்வையின் பொருள் உணர்ந்தும்.
இல்லையென அவளின் கண்களை பார்த்தவாறே இடவலமாக தலையசைத்து… அவளின் முகத்தை சுட்டுவிரல் கொண்டு வட்டமிட்டு காண்பித்து… “உன் முகம்… உன் ரசனை… இதில் தெரியும் காதல்” என்றான் சிலாகித்து.
தன்னவனின் கண்களில் கரைபுரளும் அவளுக்கான காதல்… அவளை ரசிக்கும் அவனின் வார்த்தைகள் பெண்ணவளின் இமை குடையை தாழச்செய்தது.
“இந்த வெட்கம்… இதுவும் நல்லாயிருக்கு மலரே!”
“போடா…” என்று சிணுங்கியவள், “நான் போறேன்” என்று எழுந்திட அவளின் கையை பிடித்து இழுத்தான். தடுமாறி அவனின் மேலே சரிந்தாள்.
“இது இன்னும்…” வேகமாக அவனின் வாயினை கரம் கொண்டு மூடினாள்.
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்று கண்களை உருட்டி மிரட்டினாள்.
தன்னுடைய உதட்டின் மேலிருக்கும் பூவின் உள்ளங்கையில் முத்தம் வைத்தவன், அவள் பட்டென்று கையை எடுத்ததும் “சில் மை மலரே” என்று அணைத்துக் கொண்டான்.
தன்னுடைய நெருக்கத்தில் அவள் இயல்பாக இல்லையென்பதை அவளது தேகத்தில் உணர்ந்தவன்,
“சரி சொல்லு எதுக்கு வர சொன்ன?”
இந்நேரத்தில் அழைத்ததற்கான காரணத்தை வினவினான்.
“ஒன்னுமில்லையே” என்றவள் அவனிலிருந்து விலகி முன்பு போல் அமர்ந்து அவன் முகம் காணாது இருளை நோட்டமிட்டாள்.
“ம்ஹூம்… என்னவோ இருக்கு, ஸ்பீக் அவுட் மலரே!”
“வேந்தா… நாளைக்கு நீ ஃபிரீயா இருந்தா…” சொல்லாது தன் விரல்களை ஆராய்ந்தாள்.
“ஃப்ரீ தான் சொல்லு…” வேலைகள் குவிந்திருந்த போதும் அவளுக்காக இல்லை என்று கூறியவன், அவள் சொல்வதை செய்வானா?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
36
+1
+1