Loading

அத்தியாயம் 23 :

அமிர்தாவும் பாரியும் கடற்கரையில் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி நின்று கொண்டிருந்தனர்.

நிமிடங்கள் பல கடந்து… இருட்டத் துவங்கியிருந்தது.

“நீ ஏன் பாரி அப்பாகிட்ட எதுவுமே பேசல. நீயா நம்ம காதலை சொல்லியிருக்கலாமே.”

தலையை மட்டும் திருப்பி அமிர்தாவை ஏறிட்ட பாரி கூர்மையான பார்வையை அவள்மீது வீசினான்.

“என்ன பேசியிருக்கனும் அமிர்தா?”

பார்க்க சென்றவனை வரவேற்பிற்காகக் கூட வாவென்று அழைக்கவில்லை, வார்த்தைக்காகக்கூட உட்காரென்று சொல்லவில்லை, முகத்தைக்கூட சரியாக பார்க்காது ஏதோ அறிவிப்பு போல் அவர் முடிவை சொல்லிவிட்டு பதில் பேச்சினைக்கூட கேட்காது சென்றுவிட்டவரிடம் என்ன பேசியிருக்க வேண்டுமென்று உண்மையாகவே பாரிக்கு புரியவில்லை.

மனதில் நினைப்பதை அப்படியே கேட்காது கேட்க வேண்டியதை ஒற்றை வரியாகக் கேட்டிருந்தான்.

“நம்ம லவ். அதை பேசத்தான உன்னை கூட்டிட்டுப்போனேன்.” எரிச்சலாகக் கூறினாள். பாரி விடயத்தில் மட்டும் தான் நினைப்பது எதுவும் நடப்பதில்லையே என்கிற எரிச்சல் அது.

“அப்படியா?” அத்தனை நக்கல் பாரியிடம்.

“நான் ரித்தேஷ்கிட்ட நம்ம லவ் சொல்லிட்டேன். அவன் எல்லாம் பார்த்துப்பான். நாம போய் அப்பாவை மீட் பண்ணா போதும். இதைத்தான் நீ சொல்லி என்னை கூட்டிட்டுப் போனதா எனக்கு ஞாபகம். இதுல எங்கயும் நீ என்னை பேச சொல்லி சொல்லலயே!” பூ விடயத்தில் அவனிற்கு அமிர்தா மீதிருக்கும் கோபம் இப்போதெல்லாம் அவளை அலட்சியப்படுத்தத்தான் வைக்கின்றது.

“அப்போ நம்ம லவ்வுக்காக நீ பேசமாட்டியா?”

“உன் அப்பா பேச சான்ஸ் கொடுக்கவேயில்லையே. வேகமா போனவரை பிடிச்சு இழுத்து கட்டி வச்சு பேசியிருக்கனும் சொல்றியா?” பாரியின் கேள்வியில் அமிர்தாவின் முகம் சிறுத்துவிட்டது.

தன் தந்தை தனக்கு தெரியாமலேயே தன்னுடைய திருமணத்தைப்பற்றி எடுத்த முடிவு, அதனை அறிவிப்புபோல் சொல்லியது, அவரிடம் தன்னால் எதிர்த்துக்கூட பேச முடியவில்லையே என்கிற எல்லா கோபத்தையும் பாரியிடம் காட்டிக்கொண்டிருந்தவளை ஒரே கேள்வியில் வாய் மூடச் செய்திருந்தான்.

அந்நேரம் பூவிடமிருந்து பாரிக்கு அழைப்பு வர, சடுதியில் அவனது முகம் கனிவாக மாறியிருந்தது.

பாரியின் முக மாற்றமே அழைத்த நபர் யாரென்று அமிர்தாவிற்கு சொல்லியது.

“எங்கடா இருக்க? இன்னும் வீட்டுக்கு போகலையா? அத்தை கால் பண்ணாங்க? போனது என்னாச்சு?” பூ கேள்விகளாகக் கேட்க…

“ரிலாக்ஸ் மலரே. வீட்டுக்கு கிளம்பிட்டேன், போயிட்டு கால் பன்றேன்” என்றவன் அலைபேசியை பாக்கெட்டில் வைத்திட்டு அமிர்தாவின் பக்கம் திரும்பினான்.

அமிர்தா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.

‘எவ்வளவு நடந்தாலும் இவள் எங்களுக்குள்ளிருக்கும் நட்பை புரிந்துகொள்ள போவதில்லை’ என நினைத்தவன் லட்சமாவது முறையாக ‘அவசரப்பட்டுவிட்டோமோ’ என்று சொல்லிக்கொண்டான்.

“டைம் ஆகிருச்சு. இப்போ வீட்டுக்கு போ அமிர்தா. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ் இருக்கு. அதுக்குள்ள உன் அப்பாவை சம்மதிக்க வைப்போம்” என்று தன்மையாகவேக் கூறினான்.

“அந்த பூ விஷயத்தில் காட்டும் அக்கறையை நம்ம லவ்லையும் காட்டலாம். தப்பில்லை.”

அமிர்தாவின் வார்த்தையில் பாரிக்கு ஆயாசமாக வந்தது.

“லவ். அதை சொல்லும்போது மட்டும் தான் இருக்கு” என்று அவளுக்கு கேட்கும்படியே சொல்லியவன் அவள் செல்கிறாளா இல்லையா என்ற எண்ணம் இல்லாது அவன் சென்றுவிட்டான். அமிர்தாவிற்கு கோபமாக வந்தது. காட்டும் வழிதான் தெரியவில்லை.

பூவின் மீது காழ்ப்புணர்ச்சி காட்டும் நேரம் பாரியின் மீது காதலை காட்டியிருந்தால் அவனுக்கும் அவள் மீதான காதலும், அன்பும் நிலைத்திருக்குமோ?

ஆரம்பத்தில் அமிர்தா மீதிருந்த பிடித்தமும் காதலும் இப்போது பாரியிடம் இருக்கிறதா என்றால், கேள்விதான். இல்லையென பதில் அவனிடம் நிச்சயம். அவன்கொண்ட காதலையெல்லாம் அமிர்தாவே இல்லையென ஆக்கியிருந்தாள். தற்போது அவன் மனதிலிருக்கும் ஒரே எண்ணம் தான் காதலித்த பெண், தன்மேல் காதலென்று சுற்றும் பெண். அவ்வளவே. ஒருமுறை தான் காதலென்று இருப்பவனால் ஏனோ இல்லையென்று விலக முடியவில்லை. அவளின் காதலுக்கு சரியென்று சொல்லிவிட்ட ஒரு காரணத்திற்காகவே பொறுத்து போகிறான்.

பொறுத்து போவது காதலில் சாத்தியமா. அன்பு என்ற ஒன்று மட்டுமே இருவரை பிணைத்து வைக்கும்.

நடப்பது நடக்கட்டும் என்ற முடிவில் பாரி.

ஆனால் அமிர்தாவின் மனதில் கோபம் கோபம் கோபம் மட்டுமே. இப்போது பாரி அவளை தனியாக விடுத்துச் சென்ற கோபம் கூட பூவின் மீதுதான் அவளுக்கு.

எங்கு சென்றாலும், என்ன நடந்தாலும் அமிர்தா பூவை மட்டுமே தன் எதிரியாக பாவித்தாள். அதன் விளைவு காதலை மறந்து பாரியிடமிருந்து பூவை எப்படி பிரிப்பது என்று மட்டுமே அவளின் சிந்தனைகளை மூழ்கச் செய்தாள். அதுவே அவளின் காதலுக்கு எமனாகிப்போனது.

பூ மீது அமிர்தாவுக்கு இருக்கும் அன்பை பார்த்து தான் பாரி அமிர்தா மேல் கொண்ட ஈர்ப்பை நேசமென்ற வரையறைக்குள் கொண்டுச் சென்றான். ஆனால் அதனை காத்துக்கொள்ள அமிர்தா ஏனோ தவறிவிட்டாள்.

ஒருவர் இடத்திற்கு நாம் ஆசைப்பட்டால் இருக்கும் இடமும் இல்லாமல் போய்விடும்.

********

அந்த பருவத்தின் இறுதி தேர்வு முடித்துவிட்டு வெளியில் வந்த பூ தன்னுடைய நண்பர்களுக்காக சரக்கொன்றை மரத்தின் கீழ் காத்திருந்தாள்.

அன்று மாலை பூ ஊருக்கு செல்லவிருக்கிறாள். அரசு அவளை அழைத்துச்செல்ல வந்து கொண்டிருக்கிறார்.

தனியாக வந்துவிடுகிறேன் என்று அவள் சொல்லியதை கேட்கவில்லை.

“உன்னைத் தனியா வரவிட்டு… நீ வூடு வந்து சேர்ற வரை பதைப்போட என்னால இங்க காத்துக்கிடக்க முடியாது” என்ற தந்தையிடம் அதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது போனது.

பாரி வருவானென்று பூ எதிர்பார்த்திருக்க… அமிர்தா அங்கு வந்தாள்.

தேர்வு முடித்து வெளியில் வந்த பாரியை அவரது துறை தலைமை பேராசிரியர் அழைத்திருக்க… அவன் வருவதற்கு தாமதமாகும் என்பதை தெரிந்துகொண்ட அமிர்தா பூவிடம் பேசிவிட வேண்டுமென்ற நோக்கத்தில் அவளிடம் வந்தாள்.

அமிர்தாவை எதிர்பார்த்திடாத பூ…

“எக்ஸாம் எப்படி பண்ண அமிர்தா?” என்று வினவினாள்.

அதற்கு பதில் சொல்லாது பூவையே அழுத்தமாக பார்த்திருந்தாள்.

“என்ன அமிர்தா, எதாவது பேசணுமா?”

“ஆமாம்” என்ற அமிர்தா பூ நினைத்து பார்த்திடாததையெல்லாம் பேசினாள்.

“எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல” என ஆரம்பித்தவள், “உன்மேல தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கோபமும் எனக்கில்லை. ஆனால் உன்னை பாரியோட முதமுதலா பார்த்தது முதல் உன்மேல அப்படியொரு கோபம். உன்னை பார்த்தாலே எரியுது. அதுவும் பாரி உன் பின்னாடியே சுத்தும் போதெல்லாம் உன்னை கட்டிவச்சு அடிக்கணும் தோணுது.

இது நானில்ல. யார் மேலயும் எனக்கு இவ்ளோ வன்மம் வந்ததே இல்லை. ஆனால் உனக்கு எதாவதொரு கெட்டது நடந்தா எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு.

பாரிக்கும் உனக்கும் நடுவிலிருக்கும் பாண்டிங் பார்க்கும் போதெல்லாம் அப்படியே ஜெலஸ் ஆகுது. உள்ளுக்குள்ள எரியும்.

உங்களோட நெருக்கத்தை பார்க்கும் போது ரெண்டு பேருக்கும் நடுவில் சண்டை வந்து நீங்க பிரிஞ்சிடமாட்டிங்களான்னு இருக்கு.

எனக்கும் பாரிக்கும் நடுவுல இருந்துகிட்டு என்னை ஏன் இப்படி சித்திரைவதை செய்ற?” என்று கோபத்தில் கொந்தளித்த அமிர்தாவிற்கு தெரிந்திருக்கவில்லை. பாரிக்கும் தனக்கும் இடையில் பூ வரவில்லை, அவர்களுக்கு நடுவில் தான் தான் வந்திருக்கிறோமென்று.

அவியும், ஜென்னும் அமிர்தா ஆரம்பிக்கும் போதே அங்கு வந்திருந்தனர்.

அமிர்தா பேசியதைக்கேட்ட அவி ஏதோ பேச முயல்கையில் பூ கண்காட்டி வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

“உங்களை பிரிக்க என்னென்னவோ பண்ணேன்… ஆனால் முடியல. அதனாலே உங்களை பிரிச்சிடனும் அப்படிங்கிற எண்ணம் எனக்குள்ள அதிகமா வளர்ந்தது.

பாரிக்கு எப்பவும் நான்தான் முதல்ல இருக்கணும் நினைச்சேன். அதுக்கு தடையா இருக்க உன்னை விலக்கனும் நினைச்சேன். அப்போ தான் மாதேஷ் உன் பின்னால் சுத்துறது தெரிஞ்சுது.

உனக்கு லவ்வுன்னு ஒன்னு வந்துட்டால், நீ அவனோட சுத்துவ… அப்போ பாரிக்கும் உனக்கும் இடையே கேப் வந்துடும் நினைச்சேன். ஆனால் அதுலயும் நான் நினைச்சது நடக்கல. நீ அந்த மாதேஷ் பக்கம் திரும்பக்கூட இல்லை.

அப்போதான் அவனோட சேர்ந்து நாங்க ஒரு திட்டம் போட்டோம்” என்றவள், “உன்னை மாதேஷோட சேர்த்து அன்னைக்கு அந்த போட்டோ எடுத்ததே நான் தான்” என்று ஆங்காரமாகக் கத்தினாள்.

கேட்டுக்கொண்டிருந்த அவிக்கும் ஜென்னிற்கும் கூட அமிர்தாவின் இச்செயலை ஏற்க முடியாது… அவளை அடிக்கத் துடிக்கும் கைகளை பூவின் ஒற்றை பார்வைக்காக அடக்கிக்கொண்டு நின்றனர்.

பூவிற்கு மனம் விட்டுப்போனது. அதுவும் மாதேஷ் விடயத்தில் அவனுக்கு உடந்தையாக அமிர்தா இருந்தாளென்று அவள் சொல்லியே கேட்டதும், ஒற்றை கண்ணிலிருந்து நீர் திரண்டு கன்னத்தில் உருண்டது. எந்த பெண்ணும் மற்றொரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் செய்யத் துணிந்திடாத செயலல்லவா அமிர்தா செய்தது.

சட்டென்று கண்ணீரை உள்ளிழுத்து அழுந்த துடைத்தவள் ‘அவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா நீ பேசுறதுக்கு, சொல்றதக்கு’ என்ற ரீதியில் அமிர்தாவை பார்த்து நிமிர்ந்து நின்றாள்.

“நான் இந்தளவுக்கு இறங்க காரணமே நீதான். உன்னாலதான் நான் செய்யக்கூடாததை எல்லாம் செய்றேன். நீ போய்டு. பாரியை விட்டு நிரந்தரமா போய்டு. நீயில்லைன்னா, பாரி எனக்கு மட்டுமே சொந்தமா இருப்பான். அவனை நான் எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா உனக்கு? ஆனால் உன்னால அந்த காதலைக்கூட என்னால அவன்கிட்ட காட்ட முடியல. எப்போ பாரு பூ பூ பூ… இது மட்டும் தான் அவன் வாயிலிருந்து வருது. நாங்க தனியா பேசிக்கும் போதும் நீ மட்டும் தான் இருக்க. மொத்தமா எங்க ரெண்டு பேருடைய காதலிலும் நீ மட்டும் தான் நிறைஞ்சிருக்க. இங்கிருந்து என்னை இன்னும் கெட்டவளாக்கிடாத” என்ற அமிர்தாவிடம் ஆரம்பித்த போதிருந்த கோபமில்லை. போய்விடு எனும் ஒருவிதமான கட்டளையுடன் கூடிய இறைஞ்சல்.

அக்கணம் பூவின் மனதில் நிறைந்திருந்தது பாரி ஒருவன் மட்டுமே.

அமிர்தாவின் காதலிற்கு ஒப்புதல் வழங்கியவன்… இன்று வரை நிம்மதியாக அக்காதலில் சந்தோஷிக்கவில்லை என்று பூவிற்குத் தெரியும்.

அவசரப்பட்டுவிட்டோமோ என்கிற அவனின் உள்ளத்து குமுறலும் பூ அறிவாள். அதிலிருந்து வெளிவர முடியாதவனாக தவிக்கின்றான் என்பதும் தெரியும். அமிர்தா தன்னை பார்த்து பாரியிடம் காதலை மற(று)க்கின்றாள் என்பது அமிர்தாவின் பேச்சில் புரிந்தது.

பலவற்றை சில நிமிடங்களில் யோசித்து முடித்திருந்தாள் பூ.

அமிர்தாவின் காதலை பாரி ஏற்றதுக்கூட ஒருவிதத்தில் பூவிற்காகத்தான்.

வாழ்வின் முக்கிய பக்கத்தைக்கூட தனக்காக என்று யோசித்தவனுக்காக அந்நொடி தீர்க்கமான முடிவு ஒன்றை பூ எடுத்திட்டாள்.

ஒருவித திடத்தை கண்மூடி இதயத்திற்குள் சேர்ப்பித்தவள், அமிர்தாவையே சில கணங்கள் ஆழ்ந்து நோக்கினாள்.

“என்னால யாரும் வில்லியாக வேணாம்” என்று சுருக்கமாக அமிர்தாவிற்கு வேண்டியதை மொழிந்தவள்,

“உண்மையான அன்புக்கு பொறாமைப்படத் தெரியாது அமிர்தா. விட்டுக்கொடுக்கத்தான் தெரியும். எந்தளவுக்குன்னா, அவங்களுக்காக அவங்களையே விட்டுக்கொடுக்கும் அளவுக்கு” என்றவள் அடுத்த நொடி அமிர்தாவின் கண்ணிலிருந்து தூரம் சென்றிருந்தாள்.

அவியும் ஜென்னும் பார்த்த பார்வையில் மற்றவர்கள் என்றால் தான் செய்திருக்கும் செயலின் வீரியத்தை உணர்ந்திருப்பர். ஆனால் இவள் அமிர்தாவாயிற்றே, தூசிபோல் அவர்களை கடந்திருந்தாள்.

விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பூவை நோக்கி அவியும், ஜென்னும் ஓடினார்கள்.

“எதுக்குல இம்புட்டு வேகமா ஓடியாதிக. கூப்பிடிருந்தா நின்னிருக்க போறேன்” என்ற பூ “என்னல சேதி” எனக் கேட்டிருந்தாள்.

பூ அவளது ஊர் மொழி பேசவுமே, அவள் தன்னை இயல்பாய் காட்டிக்கொள்ள முயல்கிறாள் என்பது இருவருக்கும் புரிந்தது.

“அமிர்தாகிட்ட கடைசியா சொன்னதைத்தான தமிழ் இப்போ நீ செய்யப்போற?” அவி உன்னை நான் கண்டுகொண்டேன் எனும் விதமாகக் கேட்டான்.

“நான் அவளுக்காக இந்த முடிவை எடுக்கல அவி.”

“அது தெரியுது. நீ பாரிக்காகத்தான் எடுத்தன்னு. அதை அவள் சொல்லி நீயேன் செய்யனும்.” ஜென்னிற்கு கூட கோபம் வந்தது.

“யாருக்காக செய்தா என்ன? வேந்தன் நிம்மதியா இருப்பான்? என்னாலதான் அமிர்தா அவனை வதைக்கிறா. நான் ஒதுங்கிட்டா, அவள் அவனை நல்லா பார்த்துக்குவாள்” என்ற பூவின் பிடிவாதம் குறைவதாக இல்லை.

“இப்போ உன் முடிவு தான் என்ன தமிழ்?”

“தெரியல அவி. அவகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். ஆனால், இனி தான் யோசிக்கணும்.” பூ தன் முடிவை தெரியப்படுத்த விரும்பவில்லை. அதனாலேயே அவியிடம் உண்மையை சொல்லவில்லை. அமிர்தா பேசும்போதே தன் முடிவை பூ எடுத்துவிட்டாள்.

“பாரியை விட்டு விலகியிருக்கணும் மட்டும் நினைக்காத. அவன் உடைஞ்சிபோய்டுவான் தமிழ்.” கூறிய ஜென்னிற்கு சிரிப்பையே பதிலாகக் கொடுத்தாள்.

“வேந்தாகிட்ட அமிர்தா பேசியதை ரெண்டுபேரும் மூச்சுக்கூட விடக்கூடாது. புரியுதா?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாரி அங்கு வந்தான்.

“மரத்துகிட்ட இருப்பீங்க நினைச்சேன்.” பாரி.

“பேக் பண்ணலாம் வந்தேன்.” பூ.

“சரிடா. பேக் பண்ணிட்டு வா. கிளம்பலாம்” என்ற பாரி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

பூ விடுதியின் உள்ளே சென்றிட… லீலாவும் ஊருக்கு செல்வதற்காக தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

மொத்த சக்தியும் வடிந்தவளாக மெத்தையில் அமர்ந்த பூ…

துரித கதியில் தன்னுடைய மொத்த பொருட்களையும் எடுத்து அடுக்கி வைத்தாள்.

“என்ன தமிழ்… பதினைந்து நாள் லீவ் தான. இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கே! இப்போவே என்னவோ ஹாஸ்டல் வெக்கெட் பண்ணிட்டு போற மாதிரி எல்லாத்தையும் மூட்டைக்கட்டிட்ட” என்று லீலா கேட்டிட… அதுவரையிருந்த திடம் தொலைத்து லீலாவின் மீதே சாய்ந்து கதறினாள்.

லீலாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

“இப்போலாம் அதிகம் அழற தமிழ்.” லீலா அவளின் கண்களைத் துடைத்து விட்டாள்.

“முடியல லீ. ரொம்ப வலிக்குது.”

“என்னாச்சுடா?”

“தெரியலையே” என்று சிறுபிள்ளையென மொழிந்தவள்,

“சொல்லக் கூடாதுன்னு நினைக்குற” என்ற லீலா… “நிச்சயம் பாரி விஷயமாத்தான் இருக்கும்” என்றதோடு, “இப்போ உன் வருத்தத்துக்கு எல்லாம் சேர்த்து வச்சு பின்னாடி அதிக சந்தோஷத்தை அனுபவிப்ப தமிழ்” என்றிட லீலாவை அணைத்து விடுத்தாள் பூ.

“வீட்டுக்கு போயிட்டு கால் பன்றேன் லீ” என்றவள் விடைபெற லீலாவும் பூவுடன் கீழே வந்தாள்.

“நீ கிளம்பலயா லீ?” வினவிய பாரிக்கு, “நைட் ட்ரெயின் பாரி” என பதிலளித்தாள்.

“அம்மா கால் பண்ணாங்க பூ. மாமா வந்துட்டாராம்” என்று சொல்லிய பாரி பைக் எடுக்கச் சென்றான்.

அவியையும், ஜென்னையும் அணைத்து விடுவித்த பூ…

“வேந்தனை நீங்க தான் பார்த்துக்கணும்” என்றிட… அவி புரியாது பார்த்தான்.

“லீவ் முடிஞ்சு வரப்போற. அப்புறம் என்ன?” என்ற ஜென், “ஒழுங்கா வந்து சேரு” என்றாள்.

“அதெல்லாம் பாரி வரவச்சிடுவான்” என்ற அவிக்கு மட்டுமல்ல பாரிக்குமே அது முடியாத காரியமென்று அப்போது அறிந்திருக்கவில்லை.

பூவின் முடிவு தெரிந்திருந்தால் அவளை இங்கிருந்து செல்லவே அனுமதித்திருக்க மாட்டானோ?

பாரி வந்ததும் பூ அவனுடன் கிளம்பிவிட்டாள். இறுதியாக மூவருக்கும் ஒரு தலையாட்டால். சன்னமான புன்னகை. கேட்டினைத் தாண்டும் வரை பார்த்திருந்தாள். தூய்மையான நட்பு கிடைக்கப்பெறுவது அரிதல்லவா. தெரிந்தே தள்ளிச் செல்கிறாள்.

பூவும், பாரியும் வீட்டிற்கு வரும் போது அரசு தில்லையுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“என்ன மாமா பொண்ணு வந்ததைக்கூட கவனிக்காம இண்ட்ரெஸ்டா பேசிட்டு இருக்கீங்க?” என்ற பாரி அரசுவின் பக்கத்தில் அமர்ந்தான்.

அவனின் தலை கோதியவர்… “எப்படியிருக்க கண்ணா?” என்றிட, “சூப்பரா இருக்கேன் மாமா” என பதில் வழங்கியவன்…

“பதினைந்து நாளும் பூவை அங்க வச்சிருக்கணும் அவசியமில்லை மாமா. நாலு நாளில் அனுப்பிடலாம்” என்றான்.

“பொண்ணை பெத்தவருக்கு நாலு நாள் போதுமா பாரி” என்ற தில்லையிடம், “அப்பாங்கிறதால் தான் நாலு நாள் கொடுத்திருக்கேன்” என்ற பாரி, “விட்டால் லைஃப் லாங் பூவை என்னோடவே பத்திரமா வச்சுக்குவேன்” என்றான்.

பாரியின் வார்த்தைகளைக் கேட்ட பூ உள்ளுக்குள் துடித்திட்டாள். சத்தமின்றி கதறினாள். கண்ணீர் இன்றி கரைந்தாள். இதயத்தின் ஓலம் வதைத்தது.

“பூ பத்திரம் மாமா. இப்போ எப்படி உங்களோட அனுப்புறனோ, அப்படியே இங்க வரணும். உங்க அப்பா எதுவும் வம்பு பண்ணா அவ்ளோதான்” என்றவன் அதன் பின்னர் அவர்கள் கிளம்பும் வரை பூவுடனே சுற்றிக் கொண்டிருந்தான்.

“அப்பா மட்டும் இவங்க ஃபிரண்ட்ஷிப்பை ஏத்துகிட்டாருன்னா, ரெண்டு குடும்பமும் வரப்போக இருக்கலாம்” என்று பொன்னுவை நினைத்து வருத்தப்பட்ட பார்வதியிடம், “சீக்கிரம் ரெண்டு குடும்பமும் அப்படியிருக்க நேரம் வரும்மா” என்று ஆறுதல் அளித்தார் அரசு.

“ஆமா… ஆமா… சீக்கிரம் வரும்” என்ற பரிதிக்கு தெரிந்திருக்கவில்லை அந்த நிகழ்வு தன்னால் நடக்குமென்று.

ஒவ்வொரு முறை பூ ஊருக்கு செல்லும்போதும் திரும்பி வந்துவிடுவாள் என்று இயல்பாக இருக்கும் பாரிக்கு அன்று ஏனோ அந்த இயல்பு இல்லை.

உள்ளுக்குள் ஒரு உருத்தல். அவனின் மனம் சொல்வது அவனுக்கு கேட்கவில்லை.

பூ காரில் ஏறும் முன்… அவளின் கையை இறுகப்பற்றியவன், “சீக்கிரம் வந்திடு பூ” என்றான்.

மௌனமான தலையாட்டால் மட்டுமே அவளிடம்.

கார் கிளம்பியதும், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டவள் பாரியின் பிம்பம் புள்ளியாகும் வரை பார்த்திருந்தாள். இனி பார்க்க கிடைக்காத தன்னவனின் முகத்தை தன்னுடைய காதலை போலவே இதயத்தின் அடி ஆழத்தில் சேமித்தவளாக பாரியின் கண்ணிலிருந்தும் மறைந்திருந்தாள்.

 

   

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
37
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment