Loading

அத்தியாயம் 20 :

தன் காதலை சொல்ல வந்த அமிர்தாவுக்கு சொல்லவிடாது தடை செய்தது பாரியின் கோபம். அந்த கோபத்திற்கு, தான் அவனை அவசரப்படுத்தியதும் ஒரு காரணமென்று உணர்ந்தவள் அமைதியாக இருந்துக்கொண்டாள்.

பாரிக்கு பூ ஜென்னிடம் கேட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த சின்ன விடயத்திற்கே மிகவும் உடைந்து போனான். இதிலாவது பூ தனக்கு நட்பையும் தாண்டிய உறவென்று அவன் யோசித்திருக்க வேண்டுமோ? அவன் தான் நட்பு என்ற ஒன்றை மட்டுமே பிடித்து தொங்குகிறானே!

பூ வகுப்பிற்கு வந்தபோது பாரி அவளையே பார்த்திருந்தான். பாரிக்கு அருகில் அமர்ந்தவள், அன்றைய வகுப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்க பாரியிடம் அமைதி. பாரிக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் அவியுடன் கூட பூவின் பேச்சு இருந்தது. பாரி ஒரு வார்த்தை பேசவில்லை.

வகுப்பின் போதும் பாரி அமைதியாகவே இருக்க…

“நோட்ஸ் எடுக்கலையா வேந்தா?” எனக் கேட்ட பூ… அவனிடம் பதிலில்லாமல் போக… வகுப்பில் ஆசிரியரும் இருக்க பின்னர் கேட்டுக்கொள்ளலாம் என்று அவனது குறிப்பேட்டை எடுத்து அவனுக்கும் தானே எழுதினாள்.

வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றதும்…

“என்னாச்சு வேந்தா? சைலண்ட்டா இருக்க?” என்றவளுக்கு அதே மௌனம் தான் பதிலாகக் கொடுத்தான்.

“பேசு வேந்தா… ஏன் இப்படியிருக்க?” எனக் கேட்டவள் தனக்கு அடுத்த பக்கம் அமர்ந்திருக்கும் அமிர்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உனக்கும் அமிர்தாவுக்கும் ப்ராப்ளமா?” என்று அவன் காதில் மெல்ல வினவினாள்.

அதில் பாரிக்கு கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

‘போச்சு… ஏதோ கேட்கக்கூடாதது கேட்டுட்டோம் போலவே’ என மனதிற்குள் நொந்தவள்…

“நீ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க நினைக்கிறேன்… இந்தா இதை சாப்பிடு” என்று ஒரு கேண்டியை பிரித்து பாரியிடம் நீட்டினாள். அவனும் அமைதியாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.

பாரியை சமாளிக்க முடியாத நேரங்களில் பூ அவனை அமைதிபடுத்த கையாளும் யுக்தி இது. கேண்டியை அவனது வாயில் திணிப்பது. அதை சுவைத்து முடிக்கும் நேரத்தில் அவனது மனம் சமன் அடைந்துவிடும் அல்லது அமைதியாகிவிடுவான். இது பாரிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உதவும். கோபத்திலோ குழப்பத்திலோ எடுக்கும் முடிவுகளும், பேசும் பேச்சுக்களும் சரி வராது. அந்நேரங்களில் மனதை திருப்பும் வகையில் இதனை உபயோகிக்கலாம். இப்போது பூவும் அதைத்தான் செய்தாள். இந்த பழக்கமே பாரிக்கு இன்றுவரை தொடர்கிறது.

“இந்த கிளாஸ் கட் பண்ணிடலாமா பூ?”

பாரி சொல்லியதை கேட்டதும் பூ சரியென யோசனையோடு தலையசைக்க… அவி “ஜாலி” என கத்தினான்.

அவனை பக்கவாட்டில் திரும்பி முறைத்த பாரி…

“நானும் பூவும் மட்டும் தான்” என்றான்.

அதிலேயே பாரி பூவிடம் தனித்து பேசயிருக்கிறான் என புரிந்துகொண்ட அவி மேற்கொண்டு அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

“நீ வா ஜென் நாம அப்படி ஓரமா போய் கிளாஸ் கட் பண்ணுவோம்” என்று சொல்லியவன், ஜென்னை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு முன்பு வகுப்பிலிருந்து வெளியேறினான்.

“இவனில்லாம நாம மட்டும் கிளாசில் என்ன பன்றது. அதுவும் அந்த வுடான்ஸ் நோட்ஸ் எழுத வைச்சே கையை உடைச்சிடும்” என்று ஜென்னிடம் பேசிக்கொண்டே அவி சென்றான். செல்லும் முன் ஜென் அமிர்தாவை அழைக்க அவள் மறுத்து விட்டாள்.

பாரி பூவை பார்த்தான்.

“போகலாம் வேந்தா” என்ற பூவுக்கு உள்ளுக்குள் புயலடித்தது. அவன் அமிர்தாவை பற்றி மட்டும் பேசிவிடக் கூடாதென.

இருவரும் பெஞ்சிலிருந்து எழ,

“நானும் வரட்டும்மா?” என்று அமிர்தா கேட்டிட…

“நான், பூ… தனியா பேசணும் அமிர்தா” என்றான். அத்தனை அழுத்தம்.

பாரி பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்லியது பூவிற்கே என்னவோபோல் ஆனது.

“தப்பா எடுத்துக்காத அமிர்தா. அவன் ஏதோ டென்ஸ்டா இருக்கான்” என்று பூ வருந்தும் குரலில் சொல்ல…

“ஹேய் தமிழ்… எக்ஸ்பிலைன் பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு புரியுது” என்று புன்னகையோடு சொல்லிய அமிர்தாவை ஏறிட்ட பாரி சில நொடிகள் பார்வையை அவள்மீதே நிலைக்கச் செய்தான்.

அமிர்தா பேசியது அவள் தங்களிடம் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடென பாரி நினைக்க… பாரியை தன் பக்கம் சாய்த்திட அமிர்தா  கையாளும் வழியென பூவிற்கு புரிந்தது.

“தேன்க்ஸ் அமிர்தா” என்று அவளின் புரிதலுக்கு நன்றி கூறிய பாரி பூவை அழைத்துக்கொண்டு சரக்கொன்றை மரத்திற்கு கீழ் வந்து அமர்ந்தான்.

“என்ன விஷயம் வேந்தா?”

“இப்போலாம் என் முகம் பார்த்து உன்னால புரிஞ்சிக்க முடியல இல்லையா பூ?”

“அது… நான் என்ன புரிஞ்சிக்கல வேந்தா?” தட்டுத்தடுமாறித்தான் கேட்டாள்.

“நீ வந்ததிலிருந்தே நான் உன்கிட்ட பேசல. நீ ஏன் என்னாச்சுன்னு ஒரு வார்த்தை கேட்கல” என்று பாரி சொல்லியதும்…

“நான் கேட்டனே வேந்தா.” அவன் பார்த்த பார்வையில் பூவின் தலை கவிழ்ந்து.

“நான் சொல்லாமலே இதுதான் காரணமுன்னு சொல்ற உனக்கு இப்போ நானா சொல்லித்தான் தெரியணுமா பூ?” எனக் கேட்டவனின் முகத்தில் அப்பட்டமான வருத்தம்.

“நான் கால் பண்ணேன் வேந்தா… லீலா ரொம்ப ஆசைப்பட்டு கேட்டாள். அதான் ஜென்கிட்ட சொன்னேன்.”

“நீ சொன்னது, புரியுது பூ. ஆனால் என்னால் அக்செப்ட் பண்ண முடியல. உனக்கு எல்லாம் நான் மட்டும் தான் செய்யனும். எதுவாயிருந்தாலும் என்கிட்ட தான் நீ கேட்கணும். சின்னதோ பெருசோ என்னவாவேணாலும் இருக்கட்டும். என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியலடா. நீ எனக்கே எனக்குன்னு இருக்கணும். உன் விஷயத்தில் நான் ரொம்ப அடிக்ட்டா இருக்கேன்னு எனக்கேத் தெரியுது. பட் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.

யூ ஆர் மை சோல் ஃபிரண்ட் டா” என்றவன் குரல் வெகுவாக உடைந்திருந்தது.

“நாளைக்கு நமக்கு நடுவில் யார் வந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன்.

நீ பரிதிண்ணாகிட்ட கொஞ்சம் நெருங்கி பேசினாலே எனக்கு அவ்வளவு பொஸஸிவ் ஆகுது. உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாதுடா!”

“நமக்கான ஸ்பேஸ் எந்தவொரு புது உறவு வந்தாலும் இப்படித்தான் இருக்கும். இருக்கணும்” என்றவன்,

“ஃபிரண்ட்ஷிப் சொல்லி உன்னை ரொம்ப ரூல் பன்றனாடா” எனக் கேட்டதோடு… “அப்படித்தான் பண்ணுவேன். நீ என்னோட பூ” என்றான்.

பூவிற்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

ஒவ்வொரு முறையும் அவள் விலக நினைக்க மனதால் அவன் மேலும் மேலும் அடி ஆழம் செல்கின்றான்.

இந்நொடி அவனை அணைத்து காதலை சொல்லிட அவளின் உள்ளமும் உடலும் அத்தனை பரபரத்தன.

ஆனால்?

சொல்ல முடியாத… சொல்லக்கூடாத நிலையில் அவள்.

தன்னுடைய வேந்தனின் எண்ணம், விருப்பம் எதுவென்று அறிந்த பின்னரும் அவளால் சொல்லிவிட முடியுமா என்ன? வாய் வரை வரும் வார்த்தையை மனதோடு பதுக்கிக்கொண்டாள்.

பாரியின் கைகளை அழுத்தமாக பற்றியவள்…

“சில் வேந்தா” என்றவள் மீண்டும் ஒரு கேண்டியை எடுத்து அவன் முன் நீட்டிட… பாரியிடம் புன்னகை.

எப்போதும் பாரி தான் சில் மலரே என்பான். இன்று பூ அதே தோரணையில் சொல்ல அவனுள் உண்மையிலேயே சில்லென்ற இதம் தான்.

பூ நீட்டிய கேண்டியை பாரி வாங்க முற்படுகையில்…

“எங்களுக்கு” என்று அவர்கள் முன் குதித்தனர் அவி மற்றும் ஜென்.

அவி கேண்டியை பறித்துக்கொள்ள…

“நான் உனக்கு வேற வாங்கித் தர்றேன். பூ கொடுத்தது எனக்குத்தான்” என்ற பாரி நொடியில் அவியிடமிருந்து பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டான்.

“உங்களுக்குள் சண்டை ஓவரா?” என்று ஜென் கேட்டிட…

“சண்டையா… நாங்களா… எப்போ போட்டோம்?” என்று ஒன்றாகக் கேட்டு பாரியும் பூவும் ஜென்னின் முறைப்பிற்கு ஆளாகினர்.

அன்றிலிருந்து பாரி பூவிடம் மேலும் நெருக்கம் காட்டிட… அமிர்தா உள்ளுக்குள் புகைந்தபடியே இருந்தாள்.

பாரி அவளை கண்டுகொண்டதை போல் காட்டிக்கொள்ளவே இல்லை. அமிர்தாவிடம் அவி, ஜென்னிடம் பேசுவதைப்போல் பழகுவதைப்போல் இருந்தானேத் தவிர தனக்கும் உன்மீது விருப்பம் உள்ளது என்பதை சிறு பார்வையிலும் உணர்த்தவே இல்லை. அதுவே அமிர்தாவிற்கு மன உளைச்சலாக இருந்தது. தான் சொல்லி அவன் நிராகரித்து விடுவானோ என்று அச்சமாக இருந்தது. அதற்காக சொல்லாமல் இருந்திட முடியாதே.

எப்படியாவது பாரியிடம் காதலை சொன்னால் மட்டுமே தன்னால் இலகுவாக இருக்க முடியுமென்று நினைத்த அமிர்தாவிற்கு நாட்கள் மெல்ல நகர… மற்றவர்களுக்கு வேகமாக கரைந்தது.

சொல்ல முயன்று முயன்று முடியாது தான் போனது.

அமிர்தா பாரியிடம் காதலை சொல்வது விதிக்கும் பிடிக்கவில்லையோ ஏதோவொரு தடை அவ்விடயத்தில் இருந்துகொண்டே இருந்தது.

மூன்றாம் வருட இரண்டாம் பருவம் கூட முடிந்து விடுமுறை ஆரம்பித்துவிட்டது. இன்னமும் சொல்ல முடியாமல் தவித்த அமிர்தா விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் எப்படியாவது சொல்லிட வேண்டுமென நினைத்தவளுக்கு… பூ வந்துவிட்டால் நிச்சயம் நடக்காதென எண்ணம் தோன்றியது.

எப்போதும் பூவுடனே சுற்றும் பாரியை தனியாக பிடித்து வைத்து சொல்வதென்பது சாத்தியமில்லாத ஒன்றென்று கருதியவள்… கல்லூரி தொடங்குவதற்கு இரு நாட்கள் முன்பு பாரிக்கு காலையிலேயே அழைத்திருந்தாள்.

“சொல்லு அமிர்தா.”

பாரி இருமுறை கேட்டும் அமிர்தா தயங்கி மௌனமாகவே இருந்தாள்.

“அமிர்தா ஆர் யூ ஹியர்?”

“பாரி உன்னை நேரில் சந்தித்து பேசணுமே?” என்று கேட்டாள்.

“இன்னும் டூ டேசில் காலேஜில் மீட் பண்ணலாமே அமிர்தா.” பாரி ஏதோ அவசரத்தில் பேசுவதாக அவளுக்கு புலப்பட்டது.

“மீட் பண்ண முடியாதா பாரி?”

“அப்போ நீ ரயில்வே ஸ்டேஷன் வந்திடு அமிர்தா” என்றவன் அவள் பேசுமுன் வைத்துவிட்டான்.

அன்று பூ வருகிறாள்.

கல்லூரிக்கு செல்ல இன்னும் இரு தினங்கள் இருக்கிறதே என்று அரசு தோட்டத்தில் வாழை வைக்கும் பணியை செய்ய திட்டமிட்டிருக்க… பூவிற்கு, ‘நீயில்லாம முடியல பூ சீக்கிரம் வா’ என்று பாரி குறுந்தகவல் பல அனுப்பிவிட்டான். கிட்டத்தட்ட அவளை வந்தே ஆகவேண்டும் என்று படுத்தி வைத்திட்டான்.

அரசுவிற்கும் மணிக்கும் ஒருமுறை அழைத்து “அனுப்பி வையுங்க மாமா, அத்தி” என்று கேட்க… அவரும் “வேலை இருக்கிறது இப்போது அழைத்து வர முடியாது” என்றதை அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அவனிடம் அவர் தான் இறங்கி வரும்படியானது.

பூ ஊரிலிருப்பதால் பொன்னுவிற்கு பயந்து அவள் பாரியிடம் பேசுவதில்லை. அதுவே பாரியின் இந்த அடத்திற்கு காரணமானது. அதன் பலன் இரண்டு நாட்களுக்கு முன்பே அரசு பொன்னுவிடம் விடுமுறை முடிந்ததென தனக்கு வேலையிருப்பதை சொல்லி பூவை ரயிலில் அனுப்பி வைத்தார்.

இப்போது பூவை அழைத்து வருவதற்காகவே பாரி அவியுடன் ரயில் நிலையம் செல்கிறான்.

செல்லும் வழியில்…

“அமிர்தா ஏதோ பேசணும் கால் பண்ணாடா, நான் ஸ்டேஷன் வர சொல்லிட்டேன்” என்றான் பாரி.

“அப்போ ஜென்னையும் வர சொல்லலாம் பாரி. அப்படியே எல்லோரும் ஒரு லாங் ட்ரைவ் போகலாம்” என்று அவி சொல்ல…

“லாங் ட்ரைவ் வேண்டாம் வேற பிளான் இருக்கு” என்றான்.

அன்றைய தினத்தின் தேதியை நினைவு கூர்ந்த அவி… ‘ஒண்ணும் பெருசா இல்லையே’ என சிந்தித்தபடியே “அப்படியென்னடா ஸ்பெஷல்?” எனக் கேட்டிருந்தான்.

“அதுக்குத்தான் கெஸ்ட் ஹவுஸில் பூவிற்கு சர்ப்ரைஸ் பிளான் பண்ணியிருக்கேன். அதை அங்கு வந்து சொல்றேன். நான் அமிர்தாவும் வர்றான்னதும் ஜென்னுக்கும் சொல்லிட்டேன். இந்நேரம் அவள் இங்கு இருப்பாள்” என்ற பாரி காரினை நிறுத்த இருவரும் ரயில் நிலையம் உள் சென்றனர்.

அங்கு பூ இறங்கவிருக்கும் பிளாட்பாரமில் ஜென் அமர்ந்திருந்தாள்.

“என்ன லூசு உங்க அப்பாவுக்கு பயப்படாம வந்திருக்க?” என்று ஜென்னின் அருகில் அவி அமர… “இருடா அவருக்கிட்ட சொல்லி… உன்னை அரெஸ்ட் பண்ண வைக்கிறேன்” என்றவள் வழக்கம்போல் அவன் தலையில் கொட்டியும் இருந்தாள்.

“அவ(ள்)கிட்ட கொட்டு வாங்கலைன்னா உனக்கு நாள் முடியாதாடா?” என்ற பாரி தன்னுடைய அலைபேசி அழைப்பில் அதனை ஏற்றான்.

அமிர்தா தான்.

“பாரி நான் வந்துட்டேன்.”

பிளாட்பாரம் எண் சொல்லி வரசொல்லியவன் வைத்துவிட்டான்.

“அமிர்தா வந்துட்டாளாம்” என்ற பாரி, “என்னடா ட்ரெயின் இன்னும் வரல?” என்று சலிப்படைந்தான்.

“உன் அவசரம் ட்ரெயினுக்கு தெரியுமா மச்சான்” என்ற அவி பாரியின் முறைப்பில் அடங்கினான்.

“என்ன ஸ்பெஷல் பாரி.” கேட்ட ஜென்னிற்கும் பாரி பதில் சொல்லவில்லை.

பாரி சொல்லிய தடத்திற்கு வந்த அமிர்தா அங்கு அவனுடன் இருக்கும் அவி மற்றும் ஜென்னை குழப்பத்தோடு பார்த்து வைத்தாள்.

‘இதுங்க எங்க இங்க?’ என்று கடுகடுத்தவள் பாரியை கண்டதும் உதட்டினை இழுத்து சிரித்து வைத்தாள். பொதுவாக மூவருக்கும் ஹாய் சொல்லினாள்.

ரயில் வர பத்து நிமிடங்கள் தாமதமாகுமென்று அறிவிப்பு வர… அதுவரை பூவை எதிர்பார்த்து பரபரப்பாக நின்றிருந்த பாரி ஜென்னின் அருகில் இடமிருக்க சென்றமர்ந்தான்.

அவர்களுக்கு அடுத்திருந்த பக்கத்து மேடையில் உட்கார்ந்த அமிர்தாவிற்கு எரிச்சலாக வந்தது.

‘எப்பவுமே ஒட்டிக்கிட்டே தான் சுத்துங்க போல’ என நினைத்தவள் நெற்றியில் தட்டிக்கொண்டாள்.

“என்ன அமிர்தா ஏதோ சொல்லணும் சொன்னியே?” என்ற பாரியின் குரலில் பதறி அவன் புறம் திரும்பியவள்,

“ஆங்… சொல்லுறேன் பாரி” என்றிட… ரயில் வரும் அறிவிப்பு ஒலித்தது.

பாரி வேகமாக எழுந்து நின்றான்.

ரயில் நிற்பதற்குள் பூவிருக்கும் பெட்டியில் ஏறியவன்… பூவை கண்டதும் அணைத்து விடுத்தான்.

“என்னடா சரியா சாப்பிடலையா?” என்று கேட்ட பாரி… பூ பார்த்த பார்வையில் மென் புன்னகை சிந்தினான்.

“என்னை பார்த்தா சாப்பிடாத மாதிரியா தெரியுது. உங்க அத்தை சமைச்சுப்போட்டே சாகடிச்சிட்டாங்க. எப்படியும் ஐந்தாறு கிலோவாவது ஏறியிருப்பேன்” என்று பூ சொல்ல… “ஆமாம் காத்தடிச்சா பட்டம் மாதிரி பறந்திடலாம்” என்று கேலி செய்தவன் “என் முன்னால ரொம்ப குட்டியா இருக்க மலரே” என்றான்.

இப்போது பாரி வயதிற்கேற்ற தோற்றம் கொண்டிருந்தான். பார்ப்பவர் ஆணழகன் என்று நிச்சயம் சொல்வர்.

ஆறடியில் அசரடிக்கும் உயரம். அதற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்பு. புஜங்கள் உருண்டு திரண்டிருந்தன. மீசை நன்கு வளர்ந்திருந்தது. நெற்றியில் புரளும் முன்னுச்சி கேசம் அவனின் முகத்திற்கு மேலும் அழகூட்டியது. விழிகளில் ஒரு தீர்க்கம். பார்வையில் ஒரு தெளிவு. மொத்தத்தில் கம்பீரமான வேங்கையென இருந்தான்.

தன்னை மறந்து அவனை ரசித்திருந்த பூ…

அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு “இறங்கு பூ” என்றவன் குரலில் கலைந்தாள்.

என்ன தான் மறைத்து வைத்தாலும் அவளையும் மீறி சில நேரங்களில் அவளது காதல் மனம் அவனை ரசிக்கவே செய்கிறது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

தன்னைப்போல் அவனை விழியகலாது பார்த்திருந்த பூ…

“ரொம்ப அழகாயிருக்க வேந்தா” என்று அவனுக்கு கேட்கும்படி சொல்லிவிட்டாள்.

சொல்லிய பின்னரே தன் வார்த்தையை உணர்ந்தவள் பாரியை அதிர்ந்து நோக்க…

“நீ சொன்னா அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும் மலரே” என்று பதில் சொல்லியவனுக்கு பூ சொல்லியதில் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை. அதனால் அதனை இலகுவாகவே எடுத்துக்கொண்டான்.

அதன்பின் தான் பூவின் மூச்சு சீரானது.

‘விட்டா தூக்கிட்டு போவான் போலிருக்கு.’

பூவின் கரம் பற்றி அவள் இறங்க பாரி உதவிட… அமிர்தா பொறுமினாள்.

அங்கு மற்ற மூன்று நண்பர்களும் இருந்திட… அவர்களுக்கு உற்சாகமாக சிரித்த முகத்துடன் ஹாய் சொல்லிய பூ, “என்ன நீங்களாம் வந்திருக்கீங்க?” என்று பொதுவாகக் கேட்டாள்.

“ஏதோ ஸ்பெஷல் அப்படின்னு பாரி தான் வர சொன்னான்” என்று ஜென் சொல்லிட, பூ என்னவென்று பாரியை பார்த்தாள்.

“சொல்றண்டா” என்றவன் மற்றவர்களுடன் வந்து காரில் ஏறினான்.

“அமிர்தா நீ எங்ககூட வர்றியா?” கேட்ட பாரியிடம் “ஃபாலோ பன்றேன் பாரி” என மறுத்துவிட்டாள்.

‘இதுங்கக்கூட போய் யாரிந்த சென்டிமென்ட் சீனெல்லாம் பார்ப்பது’ என்று புல்ம்பிக்கொண்டே அவர்களை பின்தொடர்ந்தாள்.

பாரி செல்லும் வழியை வைத்து…

“கெஸ்ட் ஹவுஸ் போறோமா வேந்தா?” என்று கேட்ட பூவிடம் துள்ளல்.

அவளின் துள்ளலுக்கான காரணம் அறிந்த பாரி…

“அப்பா, அம்மா, பரிதிண்ணாலாம் வரல பூ. நாம மட்டும் தான்” என்றான்.

அங்கு இவர்கள் குடும்பமாக சென்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதனை நினைத்தே பூ துள்ளினாள். இப்போது பாரி இல்லையென்றதும்,

“அதான் நீயிருக்கியே வேந்தா, நாம என்ஜாய் பண்ணுவோம்” என்றாள் அதே உற்சாகத்தோடு.

கேட்டினைத் தாண்டி உள்ளே பரந்து விரிந்திருந்த தோட்டத்தினை கடந்து குட்டி பங்களா போலிருந்த வீட்டிற்கு முன்பு காரினை நிறுத்திய பாரி பூவின் கண்களை கைகளைக் கொண்டு மூடினான்.

பார்த்திருந்த மூவருக்கும் பூவோடு சேர்த்து என்ன ஸ்பெஷல் என ஆர்வம் அதிகரித்தது.

பூவின் கண்களை கைகளை கொண்டு மூடிய பாரி காவலாளியை அழைக்க, அவரோ வீட்டின் கதவினை வேகமாகத் திறந்தார்… பார்த்தவர்களின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

வீட்டின் உள் அமைப்பு முழுக்க பலூன்கள், வண்ண காகிதங்கள், தோரணங்கள் என்று பல வண்ணங்களில் கண்களை கவர்ந்தன. ஆங்காங்கே பூவும் பாரியும் இதுநாள்வரை ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் யாவும் கையடக்க அளவில் தோரணமாகத் தொங்கிக்கொண்டிருந்தன.

“வாவ்…” அவியும் ஜென்னும் ஒரு சேர குதுகலத்தோடு மொழிய அமிர்தாவின் காதில் புகை வெளிவந்தது.

மையத்தில் அலங்கரிக்கப்பட்ட டீபாயின் மீது வட்ட வடிவில் கேக் வீற்றிருக்க…

“A journey of sweet friendship in the tenth year” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

கேக்கிற்கு முன் பூவை கொண்டு வந்து நிறுத்திய பாரி தன்னுடைய கைகளை விலக்க… உணர்வுக்குவியலாக நின்றாள் பூந்தமிழ். வேந்தனின் பூ. பாரியின் மலரவள்.

“வேந்தா…” என்று உணர்ச்சி பெருக்கில் விளித்தவள் அவனை இடையோடு கட்டிக்கொள்ள, பூவின் தோளில் கையிட்டு சேர்த்தணைத்த பாரி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அவை அனைத்தும் பாரி ஏற்பாட்டின்படி  காமிராவில் பதிவாகிக் கொண்டிருந்தது. போததற்கு அவியும் ஜென்னும் மாற்றி மாற்றி தங்களுடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்தபடி இருந்தனர்.

அமிர்தாவிற்கு உள்ளுக்குள் வெடித்து சிதறும் எரிமலையின் சீற்றம். ஆக்ரோஷமாக விழிகளில் கனலைக் கக்கியபடி இருவரையும் வெறித்திருந்தாள். அத்தோடு பூவின் முகத்தில் தென்படும் மகிழ்ச்சி அவளை என்னவோ செய்தது. இந்த நொடியே பூவின் இதழில் பளிச்சிடும் புன்னகையை உறையச்செய்திட வேண்டுமெனக் குமுறினாள்.

அமிர்தாவை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. தங்களின் மகிழ்வை ஒருவருக்கொருவர் அழகாய் பகிர்ந்தபடி நால்வரும்.

“Am always be with you poo. You should always be with me. Our friendship should last till the end of life. you are mine… my soul friend.” (நான் எப்பவும் உன்னோடு இருப்பேன். நீயும் என்னோடு இருக்கணும். நம் நட்பு வாழ்வின் இறுதிவரை நீண்டுகொண்டே செல்ல வேண்டும்.)

பூவின் மகிழ்ந்த முகம் கண்டு பாரி வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தான். அதில் தன் மனதில் உள்ள உணர்வுகளை வார்த்தைகளாகக் கோர்த்திருந்தான்.

“பேசிக்கிட்டே இருக்காம கேக் கட் பண்ணுங்கடா.” கேக்கினை பார்த்தவாறு நாவை சுழற்றி அவி கூற, அவன் தலையில் கொட்டிய ஜென்…

“அவங்களை ஃபீல் பண்ண விடுடா. எப்போ பாரு சாப்பிடறதுலே இருக்க” என்று கிண்டல் செய்தாள்.

“இப்போலாம் நீ கொட்டுறது ரொம்ப வலிக்குது லூசு” என்றவன், “டேய் பாரி இவளை இனி கொட்ட வேணாம் சொல்லுடா” என்று புகார் வாசித்தான்.

“இவனுக்கு வயசு மட்டும் தான் ஆகுது தமிழ். இன்னும் பர்ஸ்ட் டே காலேஜில் பார்த்த மாதிரியே இருக்கான்” என்று ஜென் மேலும் அவளை கேலி செய்திட… கால்களை உதறி அவி சிணுங்கினான்.

அவனின் தலையில் தட்டிய பாரி…

“அவள் சொல்லுற மாதிரிதான் நீயும் நடந்துக்குற” என்று கூறினான்.

“என்னை வாரினது போதும் கேக் கட் பண்ணுங்கடா!” என்று அவி அவர்களின் கவனத்தை மாற்றினான்.

“Don’t miss even a single moment to take a candid avi” என்ற

பாரியும் பூவும் ஒன்றாக கேக்கினை வெட்ட… அவியும், ஜென்னும் கைத்தட்டி ஆர்பரித்தனர். வேண்டா வெறுப்பாக அமிர்தா தன் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டு பெரும் முயற்சியாக அவர்களுடன் இயல்பாக கலந்துகொண்டாள்.

பாரியும் பூவும் ஒருவருக்கொருவர் கேக்கினை ஊட்டிக்கொள்ள, அவியும் ஜென்னும் கூட தங்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டனர். பூ அமிர்தாவிடம் கேக்கினை நீட்டிட மறுத்து கூறமுடியாது அதனை வாங்கிக்கொண்ட அமிர்தா ஒரு முகச்சுளிப்போடு அதனை விழுங்கி வைத்தாள்.

அதன் பின்னர் கேக் அவர்களின் முகத்தில் தான் ஒய்யாரமாக வீற்றிருந்தது.

“என்னடா அவ்வளவு தானா. கேக் மட்டும் தானா?” என்று பூ பாரியிடம் கேட்டிட… அவனோ ஒரு புன்சிரிப்போடு, தன்னுடைய பாக்கெட்டிலிருந்த இருவரது பெயரின் முதல் எழுத்தான ஆங்கில எழுத்து P சிறிய அளவில் தொங்குமாறு தங்க சங்கிலி ஒன்றை எடுத்து அவள்முன் ஆட்டி காண்பித்தான்.

“வாவ்… வெரி நைஸ். ரொம்ப அழகா இருக்கு வேந்தா” என்று பூ துள்ளலோடு அவனிடமிருந்து வாங்க முயற்சிக்க… அவனோ கையினை தலைக்குமேல் உயர்த்தி பிடித்தான்.

“கொடு வேந்தா…” என்றவள் விரல் நுனியில் நின்று எக்கிப்பிடிக்க முயல… முடியாது போனது.

“போடா” என்றவள் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு உதடு குவித்து முகம் சுருக்கி திரும்பி நின்றுகொண்டாள்.

“அவளுக்குத்தானே வாங்கின பாரி. அப்புறம் இதென்ன விளையாட்டு” என்று ஜென் கேட்டிட… “ஜஸ்ட் கிட்டிங் ஜென்” என்றவன் முதுகுக்காட்டி நின்ற பூவின் அருகில் சென்று அவனே சங்கிலியை அவளின் கழுத்தில் அணிவித்திருந்தான். ஏற்கனவே அவள் போட்டிருந்த சங்கிலியை கழுட்டியிருந்தான்.

“தேன்க்ஸ் டா” என்றவள் மலர்ந்து சிரிக்க…

“இதுக்கு மணி பே பண்ணது பரிதிண்ணா தான் பூ” என்றவன், “நானே ஒருநாள் வாங்கித்தருவேன்” என்க, அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.

“அப்புறம் மச்சான் எங்களுக்குலாம் ஒன்னுமில்லையா?” என்று அவி கேட்க… “வா தலையில் நாலு கொடுக்கிறேன்” என்று ஜென் கொட்டுவதுபோல் காண்பித்தாள்.

“இதுங்க இப்படித்தான்” என்ற பாரி, கையிலிருந்த சங்கிலியை, பூவிடம் நீட்டினான். அப்போதுதான் கவனித்தான் அதில் பூ என்ற தமிழ் எழுத்து சிறிய அளவில் ஊஞ்சலாடியது.

“இட்ஸ் நைஸ் மலரே!” என்று பாரி சொல்ல…

“அப்பா அக்காக்கும் எனக்கும் வாங்கிக்கொடுத்தாங்க வேந்தா. ஃபுல் நேம் தனித்தனி லெட்டரா ரீமூவ் பண்ணி கோர்த்துகிற மாதிரி. எனக்கு நீ பூ கூப்பிடறது தான் பிடிக்கும். அதனால் மத்த லெட்டர்ஸ் ரிமூவ் பண்ணிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தாள்.

பூவின் உச்சியில் உள்ளங்கை வைத்து ஆட்டியவன்… அச்சங்கிலியை தன் கழுத்தில் போட்டுக்கொண்டான்.

“டேய் ரொம்ப பன்றீங்கடா!” என்ற அவி… “பட் லைட்டா பொறாமையாக்கூட இருக்குடா” என்றிட இருவரிடமும் விரிந்த புன்னகை.

பூவின் முகத்தில் புன்னகயை பார்க்க பார்க்க… அமிர்தாவிற்கு வயிறு பற்றி எரிந்தது. பாரியின் இத்தனை அன்பும் தனக்கானது என்று உள்ளுக்குள் குமைந்தாள். அவளின் இப்புன்னகையை இந்நொடியே இல்லாது செய்திட வேண்டுமென நினைத்தவள், அப்போதே அவர்களின் முன்பே பாரியிடம் காதலை சொல்ல முடிவெடுத்து பாரியின் முன்பு சென்று நின்றாள்.

நால்வரும் என்னவென்று பார்க்க…

“இந்த நாள் உனக்கு எவ்வளவு ஸ்பெஷல் அப்படின்னு உன் முகத்தில் இருக்க சந்தோஷமே சொல்லுது. இதே நாள் இன்னொன்னுக்கும் ஸ்பெஷலா இருக்கணும் நினைக்கிறேன். அடுத்த பத்தாவது வருஷம் உனக்கும் தமிழுக்கும் இந்த நாள் எவ்ளோ சந்தோஷம் கொடுக்குதோ அந்தளவு சந்தோஷம் நமக்கு நம் காதல் கொடுக்கணும் அசைப்படுறேன் பாரி. அக்செப்ட் பண்ணுவியா?”

அமிர்தாவின் வார்த்தைகளைக் கேட்ட பாரி என்ன மாதிரி உணர்ந்தான் என்று தெரியவில்லை… ஆனால் அவி “இப்படியும் லவ் ப்ரொப்போஸ் பண்ணலாம் போல” என்று ஜென்னின் காதில் கிசுகிசுத்தான்.

“பின்ன உன்னை மாதிரியா சொல்லுவாங்க” என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் காதலிப்பதாக சொல்லியதை நக்கல் செய்தாள் ஜென்.

“அதுக்குத்தான் இன்னைக்குவரை நீ பதில் சொல்லலையே!” என்று பாவமாகக் கூறினான் அவி.

“சொல்லலன்னா புரிஞ்சிக்க மாட்டியா? நீ லவ் சொல்லியும் உன்னோடதான சுத்திக்கிட்டு இருக்கேன். இதுலயே உனக்குத் தெரியலயா?” என்று ஜென் முணுமுணுக்க… அவி நிஜமாகவா என்று பார்வை விகசிக்க வினவினான்.

அவியின் கரம் கோர்த்து ஜென் தன்னுடைய நேசத்தை உறுதி செய்தாள்.

சில நிமிடங்கள் கடந்தும் அமிர்தாவுக்கு பதில் சொல்லாது பாரி நின்றிருக்க… அமிர்தா அவனை ஆர்வமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“என்னடா இவன் இப்படி நிக்கிறான். ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்ல வேண்டியதுதான” என்று அவியிடம் சொல்லிய ஜென்…

“ஒருவேளை நோ சொல்லப்போறானோ! அதுக்குத்தான் எப்படி சொல்றதுன்னு இவ்வளவு யோசிக்கிறானோ” என்றிட…

“அதெல்லாம் இல்லை. இப்போ அவன் தமிழை பார்ப்பான். தமிழ் சொல்றது தான் அமிர்தாவின் லவ்வுக்கு சிக்னல்” என்றான் அவி. அத்தோடு அவனின் பார்வை பூவின் மீது படிந்தது.

பூவின் உடல் உறை நிலையில் இருக்க… நீர்துளி இமை தாண்டியிருந்தது. சடுதியில் விழிநீரை கட்டுப்படுத்தி துடைத்தவள், முகத்தில் புன்னகையை படரச்செய்திருந்தாள். வலியின் சுவடறிந்த அவளிதயம் பாரமாகிக் கனத்தது. அதன் சாயலின் மிச்சம் அவளின் விழிகளின் ஓரம் மென் பிரதிபலிப்பாய்.

அவிக்கு பூவின் உணர்வு புரிவதாய். புரிந்தவை அவனின் மனதையும் வலிக்கச் செய்தது.

அக்கணம் பாரி பூவை என்ன சொல்லட்டும் எனும் விதமாக ஏறிட…

அவியின் மனம் ஓலமிட்டது பூவிற்காக.

‘சே, நோ… தமிழ்.’

அவியின் அரற்றல் எல்லாம் வீணானது பூவின் சரியெனும் மெல்லிய தலையசைப்பில்.

பாரிக்கு மனம் நிறைந்திட… அமிர்தாவிடம் தன் கரத்தை ஒப்புக்கொடுத்து, தன் காதலை உறுதி செய்தான்.

பாரி சரியென்றது அமிர்தாவிற்கு மகிழ்வை கொடுத்த போதிலும், அவன் அவளிடம் சொல்வதற்கு முன் பூவிடம் சம்மதம் கேட்டது அத்தனை இறக்கமாகத் தோன்றியது.

இருப்பினும் தற்போது காரியம் பெரிதென்று நினைத்தவள்… காதலை குறிக்கும் வார்த்தையாக காதலை கூறினாள்.

“லவ் யூ பாரி…”

பாரிக்கு பதிலுக்கு சொல்ல வேண்டுமென்றெல்லாம் தோன்றவில்லை. சிறு புன்னகையில் ஏற்றுக்கொண்டான். அவ்வளவே.

பாரி காதலை ஏற்றதும் அமிர்தா அவனின் கையை பிடித்தபடியே உடன் சுற்றிக்கொண்டிருந்தாள்.

பார்க்கும் அவிக்கு எரிச்சலாக வந்தது. அதனை முகத்தில் காட்டவும் செய்தான்.

“நீ ஏண்டா ஓவரா பொங்குற. அவங்க லவ் பன்றாங்க. அப்படித்தான் இருப்பாங்க. விடு.” ஜென் அவனை சமாதானப்படுத்த பேசியதெல்லாம் வீண் என்றானது.

“இந்த பாரிக்கு புத்தியே கிடையாது. அவளுக்கு போய் ஓகே சொல்லியிருக்கான் பாரு” என்று அந்த வீட்டு தோட்டத்தில் நின்று ஜென்னிடம் தன் கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

“எதுக்கு அவி இவ்வளவு கோபம். யாருக்கு யாரை பிடிக்கணும் நீயேன் முடிவு பன்ற?” ஜென் சற்று கோபமாகத்தான் கேட்டாள். அவனது காதல் அவனது முடிவு. இதில் மற்றவர் கோபப்பட என்னவுள்ளது என்பது ஜென்னின் எண்ணம்.

“ஹேய் லூசு… சுத்தி என்ன நடக்குதுன்னு பார்க்கமாட்டியா?” என்று ஜென்னின் தலையில் கொட்டியவன்,

“தமிழ் பாரியை லவ் பன்றா(ள்). அது தெரியாம இவனும் அவகிட்டவே கேட்டு இன்னொருத்திக்கு ஓகே சொல்றான். அவள் எவ்வளவு வலியை அந்த செக் ஃபீல் பண்ணியிருப்பாள்” என்று பூவின் நண்பனாக அவளுடைய வேதனை புரிந்தவனாக அவி பேசினான்.

அவி சொல்லியதை ஜென்னால் நம்ப முடியவில்லை.

“என்ன சொல்ற அவி?”

“சிக்கன்ல சில்லி இல்லை. மட்டன்ல மல்லி இல்லை. தெளிவாத்தானே சொல்றேன். அப்பவும் விளங்கலையா?” என்றான்.

“நிஜமாவாடா?” எனக்கேட்ட ஜென், தோட்டத்தில் தனிமையில் ஓர் மூலையில் அமர்ந்திருக்கும் பூவைத்தான் பார்த்தாள். அவளின் முகம் கசங்கியிருந்து. அதுவே அவளுக்கு சொல்லாமல் சொல்லியது அவி சொல்லியது உண்மையென.

“நான் போய் பேசட்டுமா அவி.”

“வேண்டாம்.” வேகமாக மறுத்தவனிடம் ஏன் என்று கேள்வி தொடுத்தாள் ஜென்.

“நமக்கு தெரியும் தெரிஞ்சா இன்னும் அதிகமா ஃபீல் பண்ணுவாள். அத்தோடு பாரிகிட்ட அவளுடைய காதலை சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. அவள் நினைச்சா சொல்லியிருப்பாள். பாரியோட விருப்பம் என்னன்னு தெரிஞ்சு விலகியிருக்கும்போதே நமக்கு புரிய வேண்டாமா?” எனக் கேட்டவன், “அவளுடைய காதல் யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கிறா. அதை நாம மெயின்டெய்ன் பண்ணுவோம்” என்றவன் பூவை நோக்கிச் சென்றான்.

“என்ன தமிழ் இங்க வந்துட்ட? பாரி எப்படி உன்னை விட்டான்?” கேட்டவாறு பூவின் அருகில் அமர்ந்தான்.

“அப்பா நான் வந்து சேர்ந்துட்டனான்னா கால் பண்ணாங்க அவி. பேசிக்கிட்டே இங்கு வந்துட்டேன்” என்றவள், “என்னை ஹாஸ்டலில் விடுறியா அவி. பட் பாரிக்கு நான் தான் உன்கிட்ட கேட்டன்னு தெரிய வேண்டாம்” என்றாள். மெல்லிய கெஞ்சல் அவளிடம்.

“சரிடா” என்றவன், “நீ ஓகே தானே தமிழ்?” என வினவினான்.

எதற்காகக் கேட்கிறான் என்று பூ பதில் சொல்லாது விழித்தாள்.

“நைட் டிராவல். இப்போ வரை ரெஸ்ட் இல்லை, அதான் கேட்கிறான் தமிழ்?” என்று சமாளித்தவாறு அவர்களிடம் வந்தாள் ஜென்.

ஜென்னுக்கும் இப்போது பூவின் முகத்திலிருக்கும் வாட்டம் புரிந்தது.

இந்நிலையில், இன்னும் விடுதிக்கு யாரும் வந்திருக்காத பட்சத்தில் பூவை அங்குவிடுவது சரியில்லை என நினைத்த ஜென்,

“எங்க வீட்டுக்கு வர்றியா தமிழ்?” என கேட்டிருந்தாள்.

“உன் அப்பா போலீஸ், பர்ஸ்ட் எங்களை அலோவ் பண்ணுவாரா?” அவி தான் கேட்டு கொட்டும் வாங்கிக்கொண்டான்.

“பூ எங்கையும் வரமாட்டா. டூ டேஸ் என்னோடதான்” என்றபடி அங்கு வந்தான் பாரி.

“என்னடா எல்லாரும் இங்க வந்துட்டிங்க?” என்றும் கேட்டான்.

“லவ் பேர்ட்ஸ்க்கு நடுவில் நாங்க எதுக்குப்பா? அதான் இங்க வந்துட்டோம்” என்று அவி சொல்ல, பாரி அவனை முறைத்தான்.

“ரொம்ப ஓட்டதடா. பின்னால என்கிட்ட வாங்கிக்கட்டிப்ப…”

“அமிர்தா இன்னைக்கு சின்னதா அவுட்டிங் மாதிரி எங்கையாவது போகலாமா கேட்கிறாள். போகலாமா பூ?” மூவரிடம் சொல்லியவன் முடிவை பூவிடம் கேட்டான்.

“லாங் டிராவல். ரொம்ப டயர்டா இருக்கு வேந்தா” என்று சொல்லிக்கொண்டே அருகிலிருந்த அவியின் தோள் மீது தலை சாய்த்துக்கொண்டாள் பூ.

உடனே பூவின் மற்றைய பக்கம் அமர்ந்த பாரி… பூவின் தலையை தன்மீது சாய்த்துக்கொண்டான்.

அவி ஜென்னை அர்த்தமாக பார்த்தான்.

‘இதையே இவனால் பூ விஷயத்தில் விட்டுக்கொடுக்க முடியல. இவன் எப்படி மொத்தமா விலகியிருக்கப்போறான். இனி தான் இவனுக்கு இருக்கு’ என்று அமிர்தாவை வைத்து மனதில் பேசினான் அவி.

“சரிடா… அப்போ இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்ற பாரி அமிர்தவிடமும் அதையே சொல்லிவிட்டான்.

எழும் கோபம் அனைத்தையும் பூவின் மீது வன்மமாக சேமித்தாள் அமிர்தா.

“அப்போ கிளம்புங்க. வீட்டுக்கு போகலாம்” என்ற பாரி அமிர்தாவை முதலில் அவளது காரில் அனுப்பி வைத்துவிட்டு, அவியையும், ஜென்னையும் அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, விடுதிக்கு செல்கிறேன் என்றவளிடம் மறுத்து தன் இல்லம் வந்து சேர்ந்தான்.

அவர்கள் வீடு வந்தபோது பரிதி வீட்டிலில்லை.

பார்வதியிடமும், தில்லையிடமும் சிறிது நேரம் அமர்ந்து பேசியவள், ஓய்வெடுப்பதாகக்கூறி அறைக்குள் சென்று கதவினை சாற்றி அதன்மீதே சரிந்து தரையில் அமர்ந்தாள்.

எப்போது கிட்டும் தனிமையென காத்திருந்தவள், கால்களைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்து சத்தம் வெளிவராது கண்ணீர் உகுத்தாள்.

நெஞ்செல்லாம் ரணம் ரணம் ரணம். அத்தனை வலித்தது. இனியொரு காதல் ஜென்மத்திற்கும் வேண்டாமென்று எண்ணும் அளவிற்கு அவ்வலியின் வேதனை இருந்தது. துடிக்க வைத்து வதைத்தது. கண்முன் உயிர் பிரியும் வலியது.

நீர் அருவியாய் கண்ணீர் கன்னம் தாண்டி கொட்டிட… தேறும் வழியின்றி அப்படியே தரையில் சுருண்டிருந்தாள்.

மனம் முழுக்க வேந்தா வேந்தா என்று அரற்றியது.

தெரிந்தே விட்டுக்கொடுத்தது அத்தனை துன்பமாக இருந்தது.

ஒருமுறை… ஒரே ஒருமுறை ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும், தனக்காக தன்னுடைய பூவிற்காகவென்று அவனும் அவனுள் தன் பூவின் மீது காதல் வளர்த்திருப்பானோ. சிறு பார்வை காட்டியிருந்தாலும் யோசித்திருப்பானோ. ஆனால் அவள் செய்யவில்லையே.

அவளது வேந்தனின் விருப்பம் நிறைவேறிட ஆசை கொண்டவள் தன் விருப்பத்தை துறந்து வலி சுமக்கின்றாள்.

உனக்காக உன்னையே விட்டுக்கொடுப்பேன் என்பதிலும் சுகம் நிறைந்துள்ளது. அத்தகைய சுகம் எத்தனை வலிகளின் மொத்தம் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

‘உனக்கு ஏன் வேந்தா என்மேல காதல் வரல. என்கிட்ட நீ உணரலயா?’ முன் இல்லாதவனிடம் பதிலிருக்காது என்று அறிந்தும் வினவினாள்.

அறைக்குள் அழுகையில் கரைந்தவள்… கதவினை தட்டும் சத்தம் கேட்டு தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள்.

“தமிழ்… குட்டிம்மா.”

பரிதியின் குரல் ஒலிக்க… அவசரமாக குளியலறைக்குள் புகுந்து, முகம் கழுவி ஆடைமாற்றி வந்தவள், வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கதவினை திறந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
25
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்