அத்தியாயம் 14 :
பாரி அவனது பூவை பார்த்து பேசி கிட்டத்தட்ட இரண்டு மாத காலங்கள் ஓடிவிட்டன.
பூவிடம் பேசாது பாரியால் எப்படி இருக்க முடியவில்லையோ அதே நிலையில் தான் பாரியிடம் பேசாது பூவும் இருந்தாள்.
அவனுடன் உண்டே பழக்கப்பட்டவளுக்கு அவன் உண்டு விட்டானா என்பது கூட தெரியாது உணவு உண்பதே பெரும் பாடாக இருந்தது.
மதிப்பெண் பட்டியல் சான்றிதழ் என அனைத்தும் பள்ளியிலிருந்து வாங்கி வந்தாயிற்று. மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது.
“அப்ளிகேஷன் எல்லாம் போடுற டைம் முடியப்போவுது தமிழு. நீ மாட்டிக்கு எப்பவும் விட்டத்தை பார்த்தே உட்கார்ந்திருக்க. என்ன படிக்கணும் யோசிச்சியா?” பூவின் அக்கா இளமதி கேட்டுக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்தாள்.
“பாரி என்ன படிக்கப்போறான் தெரியலக்கா. அவன்கிட்ட ஒருவாட்டி பேசிகிடட்டுமா?”
பூ அப்படி கேட்டதும் இளாவின் கண்கள் அச்சத்தில் விரிந்தன.
“ஆத்தி நீ எம்படிப்புக்கு உலை வச்சிபுடுவமாட்டிக்கு. நான் கடைசி வருசமட்டி. வூடு அமைதியா இருக்கிறது புடிக்கலியோ” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள் இளா.
“அக்கா ப்ளீஸ். வேணுன்னா நான் பேசுல. நீ பேசு” என்றாள். அதில் இளாவிற்கு பாதி உயிர் போயேவிட்டது.
“அந்த பொன்னு பத்தி தெரிஞ்சும் என்னைய கோத்துவிடுதியே ஆத்தா. உன் சங்காத்தமே வேண்டாம்” என்று ஓடிவிட்டாள் இளா.
பூ யோசனையோடு முற்றம் தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அந்நேரம் தோப்பில் வேலை முடித்து வந்த அரசு… மகளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த கவலையில் வருத்தம் கொண்டார். அதனை போக்கும் முனைப்பு அவரிடம்.
மகள் சிரித்தே பல நாட்கள் ஆகிவிட்டன. எப்படியாவது மகளை சிரிக்க வைத்துவிட வேண்டுமென்று ஆசை கொண்டார்.
“என்னத்தா கவலை?”
அரசு பூவின் தலையை பரிவுடன் வருடியபடி வினவ, தன் தொண்டையை செருமியபடி பொன்னு வந்தார். அங்கிருந்த சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்தவர் தன் மனைவியை அழைத்தார்.
கணவனின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தார் தங்கம்.
“கூப்பிட்டியலாக்கும்.”
“உம் பேத்தி மேற்கொண்டு என்ன படிக்கிதாலாம்?”
அரசு மற்றும் பூவிற்கு கேட்குமாறே வினவினார்.
“அவுக கிட்டக்கத்தான் நீங்க கேட்டுக்கிடனும். படிப்பு பத்தி எனக்கு என்னத்த தெரியும். அவுக சொன்னாலும் எம் வாயில நுழையுமா அது” என்று சொல்லிவிட்டு தன் முந்தானையை உதறி சொருகியபடி மகனுக்கு கண்ணையும் காட்டிவிட்டு தங்கம் சென்றுவிட்டார்.
“என்னத்தை வந்துட்டீக. அங்கன அவுகளுக்குள்ள வாக்குவாதம் வரப்போவுது.” மாமியார் அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டதும் மணிக்கு பயந்து வந்தது.
“அவங்களுக்குள்ள என்னமோ முட்டி மோதிக்கட்டும்.” தங்கம் அடுக்களையில் அமர்ந்துவிட்டார்.
அன்று பூவை பொன்னு அடித்ததற்காக அரசு எதிர்த்து பேசியது தான். அன்றே மகனிடம் தன் பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்தியிருந்தார் பொன்னு. ஆனால் அரசு தன்னுடைய தந்தை பேசினாலும் பேசாவிட்டாலும் அவர் பேசிக்கொண்டிருந்தார். தோப்பு கணக்கு வழக்கு, தொழில் விவகாரம், வீட்டு நடப்பு என அனைத்தயும் தினமும் இரவு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது சொல்லிவிடுவார்.
பொன்னு பதில் சொல்லாவிட்டாலும், கேட்டுக்கொள்வதே போதுமென்று நினைத்தார் அரசு.
வயதானவரின் வீம்பிற்காக, வளரும் மகளின் ஆசையை குலைக்க அரசு விரும்பவில்லை.
பூ தன்னுடைய படிப்பைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாளோ? ஆனால் அரசு பூ என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டுமென அனைத்தையும் முடிவு செய்துவிட்டார். அதனை இன்னும் மகளிடமே சொல்லவில்லை. அவரின் முடிவிற்கு தங்கமும் கூட்டு.
பொன்னு பூவை கூர்ந்து பார்த்திட…
“நான் போலீஸ் ஆகட்டுமா தாத்தா” எனத் திக்கித்திணறி சொல்ல…
“அப்போ நீ படிக்கவேத் தேவையில்லை. பொம்பள புள்ளைக்கு என்னத்துக்கு அந்த வேலை” என்று அதட்டலுடன் சொல்லியிருந்தார்.
பூவிற்கு சின்ன வயதிலிருந்தே காக்கி மனிதர் காக்கி உடையென்றால் அலாதி பிரியம். அதற்கு காரணமென்றெல்லாம் அவளிடம் எதுவுமில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் ஈடுபாடு இருப்பதைப்போல் அவளுக்கு காவல்துறை மீது ஈர்ப்பு.
அதனாலேயே பூ கேட்டிருந்தாள்.
அவளின் இந்த விருப்பம் தெரிந்ததாலேயே பாரியும் அதில் விருப்பம் கொண்டான்.
பொன்னுவின் அதட்டலில் பூவின் கண்கள் நிறைந்துவிட்டன.
தந்தை தன்னிடம் கேட்காவிட்டாலும் கேள்வி தனக்கானது என்று அறிந்த அரசு,
பூவை அறைக்குள் போகச்சொன்னார்.
அன்று பொன்னிவிடம் அடி வாங்கியதிலிருந்தே பூவிற்கு அவரென்றால் அதிக பயம். அதனால் அவரை பார்க்க அஞ்சியே தந்தை சொன்னதும் வேகமாக ஓடிவிட்டாள்.
“பூ நல்ல மார்க் எடுத்திருக்கா(ள்) ஐயா. அவளுக்கு படிப்பும் நல்லா வருது. அதனால எஞ்(ன்)ஜினியரிங் படிக்க வைக்கலாமுன்னு பிரியப்படுதேன். பாரம் (form) எல்லாம் கூட வாங்கியாந்துட்டேன். உங்கக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிபுட்டு நாளைக்குதேன் அனுப்பி வைக்கணும்” என்று முழுதாக சொல்லி முடித்தார்.
பொன்னு மீண்டும் தங்கத்தை அழைத்தார்.
தங்கம் வந்து இருவருக்கும் இடையில் நின்றதும்…
“இப்பவும் வெளியூர் தானா?”
தங்கம் அரசுவை பார்க்க…
“ஆமாங்க ஐயா. நம்ம வட்டத்துல இப்போதானே எல்லா காலேசும் புதுசு. அதேன் வெளியூரில் பாரம் வாங்கியிருக்கேன்” என்றார் அரசு.
“விடுதி தானா?”
“ஆமாங்க ஐயா. சீட்டு கெடச்சதும் ஒரு எட்டு நேருல போயி பார்த்துப்போட்டு வந்துடுதேனுங்க.”
பொன்னுவிற்கு தெரியும் பூ படிப்பில் படு கெட்டியென்று. அதனால் இவ்விடயத்தில் அரசுவின் எண்ணத்திற்கே விட்டுவிட்டார். ஆனால் அதற்கும் ஒரு க்கு வைத்தே ஒப்புதல் வழங்கினார்.
“இதுல பொம்பள புள்ளைங்க மட்டும் படிக்குத காலேசு இருந்தால் சேர்த்துபுடு” என்றார்.
அவர் எதற்காக அப்படி சொல்லுகின்றார் என்று புரிந்த அரசுவிற்கு கோபம் வந்தது. இன்னும் பூவை அவ்விடயத்தில் அவர் அப்படித்தான் பார்க்கின்றாரா என்ற கோபம் அது.
தங்கத்திற்கு அவரது நடு மண்டையிலேயே நாலு கொட்ட வேண்டும் போல் வந்தது.
“இந்த படிப்பு இருபாலருக்கும் ஒண்ணாத்தேன் இருக்குமுங்க.”
“நம்ம இளா படிக்குறது பொண்ணுங்க காலேசு தானே.”
“படிப்பு வேறங்க.” கோபத்தை அடக்கி தன்மையாகவேக் கூறினார்.
“என்னவோ” என்ற தந்தையின் தொனியில் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாது…
“எம் பொண்ணு எப்பவும் நான் தலை குனியுற செயலை செய்யமாட்டாப்பா” என்றவர் பொன்னுவின் முன்னிருந்து சென்றுவிட்டார்.
மேற்கொண்டு அவரேதும் பதில் கொடுத்து தானேதும் திருப்பி பேசிவிடுவோமோ என்றே நகர்ந்திருந்தார்.
அடுத்த நாள் பூவிடம் விண்ணப்ப படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி அனுப்பியும் வைத்தார்.
கையெழுத்து இடும்போது கூட… பூ அதனை என்ன படிப்பிற்கானது, எந்தவூர் கல்லூரி என்று ஆராயாது. தந்தை காட்டிய இடத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தாள்.
அடுத்த சில நாட்களில் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக தகவல் வர… அரசு கொண்ட மகிழ்விற்கு அளவே இல்லை. உடன் தங்கமும். மணி இனிப்பு செய்து தன் மகிழ்வை காட்டினார்.
அடுத்த பத்து நாட்களில் பூவிற்கு விடுதியில் தேவைப்படும் அனைத்தையும் வாங்கி வந்தார் அரசு. அவள் மறுக்க மறுக்க ஆடைகள் பலதும் வாங்கி கொடுத்தார்.
“எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கோ கண்ணு. பொறவு அங்கன போயி அலையாதே” என்ற மணி, “புள்ளைக்கு ஒத்தாச பண்ணு இளா” என்றார்.
ஏற்கனவே பூ வேண்டா வெறுப்பாக இருக்க இளா தான் தங்கைக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“என்ஜினியரிங் படிக்கப்போற ஓகே. என்ன பிராஞ்ச் தெரியுமாட்டி?”
இளாவின் கேள்விக்கு தெரியாதென்று உதடு மட்டும் அசைத்தாள் பூ.
“சரி காலேஜ் எந்த வூரு?”
“தெரியாதுக்கா.” சலிப்பாகக் கூறினாள்.
“ஃபார்ம் ஃபில் பண்ணப்போ நான் இல்லாமல் போயிட்டேன். அப்பத்தாகிட்ட கேட்டா அது சொல்லுறதே விளங்கல. அப்பாகிட்ட கேட்டா சொல்லுவாருதேன் என்னவோ அவருக்கிட்ட கேக்க தோணல” என்ற இளா பூ கேட்ட கேள்வியில் ஓடிச்சென்று அறையை சாற்றிவிட்டு வந்தாள்.
“பாரி காலேஜ் சேர்ந்திருப்பா(ன்)லக்கா?”
“வாப்பெட்டிய சாத்தட்டி. அந்த பொன்னு இங்கன வராண்டாவில் தான் உட்கார்ந்திருக்கு” என்ற இளா தங்கையின் வாயினை கை கொண்டு அடைத்தாள்.
தமக்கையின் கையை விலக்கியவள்,
“என்ன கோர்ஸ்க்கா ஜாயின் பண்ணியிருப்பான்?” என்று மீண்டும் மீண்டும் பாரியைப்பற்றி மட்டுமே பூ கேட்டுக்கொண்டிருக்க… இளா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“அக்கா பாரிக்கு ஒரு ஃபோன்…”
“வாயிலே நாலு போடுதேம்(ன்) பாரு” என்ற இளா, “அப்பா உனக்கு புது ஃபோனு வாங்கியிருக்காரட்டி. நீ அங்கன போனப்பின்னாடி பாரிக்கிட்ட தினமும் பேசிக்கிடு” என்று இளா சொல்ல பூவின் முகத்தில் ஒளி.
“நெசமாவாக்கா?”
“ஆமாட்டி. நானும் அப்பாருந்தேன் நேத்து வாங்கியாந்தோம். அதுக்கே பொன்னுகிட்ட ஏகபோகப்பேச்சு. அப்பத்தாதேன், எம் பேத்திக்கிட்ட நித்தம் பேசலன்னா எனக்கு ரா பொழுது முடியாது. வெளியூருல புது மனுஷகக்கிட்ட எங்கன போயி போனு கே(ட்)கும். அதேன் நானு போனு வாங்கி கொடுக்கச்சொன்னேன் அப்படின்னு அவரு வாயை மூட வச்சுது” என்ற அக்காவை அணைத்துக் கொண்டாள் பூ.
வெகு நாட்களுக்குப் பின்னான தங்கையின் மகிழ்ச்சியில் இளாவிற்கு கண்கள் கலங்கும் போலிருந்தது.
“எல்லாம் சரியா போவும் தமிழு” என்று பூவின் முதுகை தடவிக் கொடுத்தாள்.
“கெளம்புதப்ப பொன்னுகிட்ட ஒரு வா சொல்லிக்கிடு. இல்லாட்டி அதுக்கும் எதாவது மோடி வைக்கப்போவுது” என்று இளா சொல்ல பூ சரியென்றாள்.
“இனியாவது என்ன படிக்கப்போவுதன்னு அப்பாருக்கிட்ட கேளட்டி?”
“வேண்டாக்கா.”
“ஏ(ன்)ட்டி?”
“நான் அங்கன போயே தெரிஞ்சிக்கிறேன். அப்போ தான் சஸ்பென்ஸா இருக்கும்.”
“மக்கும். பாரி என்ன படிக்க போவுதான்னு தெரியாம, நீயி படிக்க போவுத படிப்பை தெரிஞ்சிக்க வேண்டாமாட்டிக்கு உன் நினைப்பு. அதுக்கு சஸ்பென்ஸ், த்ரில்லுன்னு பேரு வைக்காத” என்று பூவின் தலையில் கொட்டிய இளா “எப்படியும் நாளைக்கு அப்பா உன்னை விட்டுபோட்டு வரும் போது எல்லாத்தையும் சொல்லிபுட்டு தானே வருவாங்க. அப்போ தெரியத்தானே போவுது” என்றாள்.
“என்னவோ இன்ட்ரஸ்டே வரலக்கா.”
“நீயி மொத பாரியிலிருந்து வெளிய வா தமிழு” என்ற இளா, “பாரி பிரண்ட்ஷிப் போச்சேங்கிற கவலையில படிப்புல கோட்டை விட்டுப்புடாதட்டி. அப்பாரு ரொம்ப மெனக்கெட்டு பொன்னுவை சமாளிச்சு உன்னை வெளியூர் அனுப்புறாரு” என்றாள்.
“ம்” என்ற பூவிற்கு பாரியின் நினைவிலிருந்து வெளி வர முடியுமா என்பதே சந்தேகமாகத்தான் இருந்தது.
அன்று இரவே ஓட்டுநர் வைத்து தங்கள் காரிலேயே கிளம்பினார்கள். ஏறியதும் பூ அரசுவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.
கிளம்பும் முன் வீட்டில் நடந்தது அவளின் எண்ணத்தில் ஊர்வலம் போயின.
அன்னை, அப்பத்தா, அக்கா என அனைவரிடமும் சொல்லிவிட்டு பொன்னுவின் அருகில் வந்த பூ…
“போய் வாரேன் ஐயா” என்க,
அரசுவை பார்த்தபடி தொண்டையை செருமி…
“என்னத்துக்கு அங்கன போவுதோமோ அந்த சோலிய மட்டும் பார்த்தா போதுமாட்டிக்கு. உம் அப்பன் போனு வேற வாங்கி கொடுத்துப்புட்டான்னு திரும்ப எதுனா ஆரம்பிச்ச நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
பூவின் விழிகள் கலங்கிவிட்டது.
“அந்த கெழம் கடக்கு. அது சொல்லுறதை கேட்டாக்கா நாம மட்டும் ஒத்தையில நிக்க வேண்டிதேன். என்னத்துக்கு நீயி கண்ணுல தண்ணி விடுத” என்ற தங்கம்… “நீ அங்கன போனதும் மொத வேலையா பாரிக்கு போன போட்டு பேசு. அங்கன அந்த புள்ளையும் உன்னை நெனச்சு வெசனத்துலதேன் இருக்காம்” என்று சொல்ல… அரசு “அம்மா” என அவரின் பேச்சை அடக்கினார்.
“இருக்கானா… அப்போ நீங்க பாரிகிட்ட பேசுனீங்களா அப்பத்தா?” ஆர்வமாகக் கேட்டாள் பூ.
‘இப்போ என்னத்த சொல்லி சமாளிக்கன்னு தெரியலயேட்டி” தங்கம் தன் மருமகள் மணி காதில் கிசுகிசுக்க…
‘இந்த பெருசுங்களாம் சேர்ந்து ஏதோ செய்ஞ்சிருக்கமாட்டிக்கு’ என அர்த்த பார்வை பார்த்தாள் இளமதி.
“இருக்கும் சொல்லுறதுக்கு… வாய் கொழறி இருக்கும். வெரசா கெளம்புத்தா. நேரமாவப்போவுது” என்று மணி பூவின் கேள்வியை சமாளித்தார்.
மகளை வைத்துக்கொண்டு அரசுவிற்கு உறக்கம் வரவில்லை. படிப்பிற்காகத்தான் என்றாலும் மகளுடன் மீண்டும் ஒரு பிரிவு. மனம் கலங்கத்தான் செய்தது. ஆனால், ஏதோவொன்றை நினைத்து தன்னை சமாதானம் செய்து கொண்டார். தங்களை போலவே பூவை பார்த்துக்கொள்ள செல்லுமிடத்திலும் ஆளிருக்கும் போது அவருக்கு என்ன கவலை. மடியில் படுத்திருப்பவளை. தட்டிக்கொடுத்தபடியே இருந்தார்.
காலை எட்டு மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார்கள், ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து… குளித்து முடித்து, மகளை சாப்பிட வைத்து, ஊரில் வாங்கியது போதாது மீதி என்னென்ன தேவைப்படுமோ அனைத்தையும் வாங்கிக்கொடுத்து சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்.
கல்லூரி அலுவலகத்தில்… பூவிற்கான சேர்க்கை படிவத்தை கொடுத்து, கல்லூரி விடுதியில் அவளுக்கான அனுமதி படிவத்தை வாங்கிக்கொண்டு கல்லூரி வளாகத்திலேயே நன்கு தள்ளி உள்ளுக்குள் ஓராமாக இருந்த விடுதியை நோக்கிச் சென்றனர்.
“அந்தா தெரியுத கட்டிடந்தேன் காலேசு பூவு. விடுதியிலிருந்து மூனு நிமிசம் நடக்குற மாதிரி இருக்கும். கம்ப்யூட்டர் எஞ்சினியருக்குத்தேன் சீட்டு கிடைச்சிருக்கு. நாளைக்கு காலேசு மொத நாளு போவும்போது உன் வகுப்பு விசாரிச்சு போயிக்கிடு. அதுக்கு முன்ன மொத வருச மாணவர்களுக்கு கூட்டம் நடக்குமாம்.” என்று அவளுக்கு தெரிய வேண்டியதை சொல்லிக்கொண்டே வந்தார்.
விடுதியில் காப்பாளரை சந்தித்து பூவிற்கான அறையை கேட்டு அறிந்து, அறைக்கே ஒருமுறை காப்பாளரிடம் அனுமதி கேட்டுச்சென்று பார்த்த பின்னரே அரசுவிற்கு திருப்தி ஆனது.
மூவர் தங்கும் அறையாக இருக்க… அதில் மகளுக்கு வசதியாக இருக்குமென்று நினைத்து ஒரு கட்டிலை தேர்வு செய்து… அதில் வாங்கி வந்த படுக்கை விரிப்பு தலையணை என அனைத்தையும் தானே போட்டு சரி பார்த்து… அக்கட்டிலிற்கு அருகிலிருந்த கப்போர்டில் அவளின் உடைமைகளை அனைத்தையும் தானே அடுக்கி வைத்து… அவ்வறைக்கு மற்றொரு ஆள் வந்த பின்னரே, அவர்களிடமும் அறிமுகப்படுத்திகொண்டு பூவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.
செல்லுமுன் சிறு தொகை பணத்துடன், அவளுக்காக வாங்கிய அலைபேசியை கொடுத்தவர்…
“உன்னையும் பாரியையும் நல்லாவே தெரியும் கண்ணு. நீ பேசிக்கிடு. ஐயாவை நினைச்சு தயங்கி நிக்காத. ரத்தம் சம்மந்தம் இல்லாம நம்ம நலனுல அக்கறை காட்டுற உறவெல்லாம் சுலுவா அமைஞ்சிடாது. பத்திரம் கண்ணு. பார்த்து சூதானமா இரு. விடுதி வாழ்க்கை புதுசு கிடையாதுன்னாலும் இடம் வேற பாரு. அதனால என்ன பண்ணாலும் கவனம் தேவை கண்ணு” என்று பூவின் தலையில் கை வைத்து ஆட்டியவர் கன்னம் வருடிச் சென்றார்.
தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு அறைக்குள் வந்த பூ முதலில் செய்த வேலை பார்வதியின் எண்ணிற்கு அழைத்தது தான்.
ஆனால் அழைப்புதான் செல்லவில்லை. அடுத்த முறை அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வர துவண்டு போனாள்.
கவலையில் ஆழ்ந்தவள்…
‘நாம இப்போ சென்னையிலதான இருக்கோம். பாரி அட்ரெஸ் தெரியுமே, இந்த வாரம் சன்டே வீட்டுக்கே போயிடலாம்’ என்று யோசனை செய்து முடிவெடுத்த பின்னரே அவளிடம் பழைய துள்ளல் மீண்டிருந்தது.
அதன் பின்னரே தன்னுடன் அறையில் தங்கும் பெண்ணிடம் தன்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்தாள்.
பூவிடம் விடைபெற்று மீண்டும் ஒருமுறை விடுதி காப்பாளரை சந்தித்து மகளை பார்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி விட்டு அரசு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் வர அவருக்காகவே இரண்டு ஜீவன்கள் காத்து நின்றன.
தாய் மற்றும் தனயன்.
“எல்லாம் ஓகே தான மாமா.”
“விடுதி சுத்தபத்தமா நல்லாதேன் இருக்குப்பா” என்ற அரசு, “உங்களை நம்பித்தேன் இம்புட்டு தொலைவுல புள்ளைய ஒத்தயில விட்டுப்புட்டு போவுதேன்” என்றார்.
“என்னண்ணா… இதுக்கு கண்ணுலாம் கலங்கிட்டு, நம்ம வீட்டுல இருந்தே போகட்டும் சொன்னேன். அதுக்கு நீங்க தான் ஒத்துக்கல. தமிழ் எனக்கு மகள் மாதிரின்னா, நான் பார்த்துகிறேன்” என்று அப்பெண்மணி வாக்கு கொடுக்க அரசு நிம்மதியானார்.
“எங்களையெல்லாம் விட குட்டிம்மாவை பார்த்துக்க ட்வென்டிஃபோர் ஹவ்ர்ஸ் பாடிகார்டு சர்வீஸ் இருக்கு மாமா. அதனால நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க” என்று அவனும் ஆறுதல் கூறினான்.
“கார்டியன் இடத்துல உன் பேரும் மச்சான் பேரும் தாம்மா கொடுத்திருக்கு. பார்த்துக்கிடுங்க. உங்களைவிட்டால் இங்கன யாரையும் தெரியாது. தொழில் விடயமான பேச்சுவாரத்தைதேன் இங்கன உள்ள ஆளுங்ககிட்ட. அதுவும் போனுலே முடிஞ்சுப்போவும்.” அரசு சொல்ல கேட்டுக்கொண்டனர்.
“வீட்டுக்கு வந்துட்டு போங்கண்ணா.”
“ம்மா… மாமா வீட்டுக்கு வந்தா அவனுக்குத் தெரிஞ்சிடாதாம்மா.”
“அதுக்குன்னு வீட்டுக்கு வராமலே அனுப்ப சொல்றீயாடா?”
“இருக்கட்டும்மா. இன்னொரு முறை வரும்போது வந்து தங்கிட்டே போறேன்” என்றார் அரசு.
“உண்மைதானா நம்பலாமா” என்று அப்பெண் கேட்க… அரசுவும் சிரிப்புடன் தலையாட்டினார்.
“சரிம்மா… நான் அப்படியே கெளம்புதேன். அப்போதேன் ராவுக்குள்ள வீடு சேருவேன்” என்றவர், வழக்கம்போல் தன்னுடைய காரிலிருந்து இரண்டு கூடைகளை இறக்கி கீழே வைத்தார்.
“இதுல…”
“நம்ம தோட்டத்து காய் பழமெல்லாம் இருக்கு. அதுதானே மாமா” என்று அவருக்கு முன் கூறியவன் அதனை எடுத்து தங்கள் காரில் வைத்தான்.
“இதை ரொம்ப மிஸ் பண்ணேன் அண்ணா” என்று அப்பெண் நெகிழ்ந்து கூற… வாஞ்சையாக தலையசைத்து அவர்களிடமிருந்து கிளம்பினார் அரசு.
_____________________________
சென்னையில் வசதி படைத்தவர்கள் வாழுமிடம். அனைத்தும் தனித்தனி பங்களாக்கலாகக் காட்சியளித்திட… அத்தெருவினில் நுழைந்த கார், இரண்டாவதாக இருந்த பெரிய கேட்டின் முன் ஒலிப்பானை ஒலிக்கவிட… கேட் திறந்தது.
காரினை அதனிடத்தில் தருப்பித்து அதிலிருந்து இறங்கினர் இளம்பரிதி, பார்வதி.
வீட்டிற்குள் சென்ற பார்வதி, அங்கு சமையல் வேலைக்கு இருக்கும் பெண்ணிடம்,
“பாரி சாப்பிட்டானா?” எனக் கேட்டுக்கொண்டே முதல் தளத்திற்கு செல்லும் படிகளில் ஏற, அவர் இல்லையென சொன்னதும் ஒரு நொடி நின்று… “இவனோட இதே வேலையாப் போச்சுடா” என்று தன்னுடைய மூத்த மகனிடம் அலுத்துக்கொண்டார்.
“எல்லாம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும்’ம்மா” என்ற பரிதியின் அர்த்தமானப் புன்னகை அவரையும் தொற்றிக்கொண்டது.
எப்படியும் அம்மா சென்று சொன்னாலும் கேட்கமாட்டானென்று தம்பியை சரியாக கணித்த பரிதி, வேகமாக உடை மாற்றி… கொய்யா, சப்போட்டா, மாம்பழம், என்று சுத்தம் செய்து நறுக்கி தட்டில் எடுத்துக்கொண்டு பாரியின் அறைக்கு விரைந்தான்.
“சொன்னா கேளு பாரி. இதென்ன சின்ன பிள்ளையாட்டம் இவ்வளவு அடம்.” பரிதி அறைக்குள் நுழையும்போது பார்வதி பாரியிடம் கடிந்து கொண்டிருந்தார்.
“ரொம்ப பன்ற பாரி. நேர்ல போய் பார்த்து பேசிவரலான்னு சொன்னாலும், தமிழோட அக்கா அன்னைக்கு என்னவோ சொன்னான்னு அவங்க தாத்தாவுக்கு பயந்து வேண்டான்னு சொல்லுற. இதுக்கு மேல வேறென்ன பண்ண முடியும்.
அட்மிஷன் போட்டாச்சு… நாளைக்கு காலேஜ் பர்ஸ்ட் டே. ஒழுங்கா அதுக்கு பிரிப்பேர் ஆகிக்கோ.
முதலில் எதாவது சாப்பிடு. ரெண்டு மாசமா, ஒவ்வொண்ணுக்கும் படுத்தி வைக்குற.”
பாரியிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாதென்று சற்று அதட்டலாகவே பேசினார் பார்வதி.
“நான் தான் ஐபிஎஸ் ஆகணும் சொன்னனே!”
“அதுக்கு முதலில் எதாவது டிகிரி முடிக்கணும்.”
முறைத்த பார்வதியை, தான் பார்த்துக்கொள்வதாகக்கூறி அனுப்பி வைத்தான் பரிதி.
பாரியின் முன் மெத்தையில் அமர்ந்தவன், தட்டிலிருந்து ஒரு துண்டு பழத்தை எடுத்து பாரியின் வாய்க்கு முன் நீட்டினான்.
“பூ கூட இப்படித்தான் செய்வாள்.”
பாரியின் முகம் கூம்பிக் காணப்பட்டது.
“முகத்தை இப்படி வைக்காதடா. பார்க்க முடியல.”
“நாயென்ன பண்ணட்டும் பரிதிண்ணா. இப்போலாம் முகமே அப்படித்தான் இருக்க வருது.”
“அதெல்லாம் நாளைக்கு சரியாப்போகும்” என்ற பரிதி பேச்சுவாக்கில் பழங்களை பாரிக்கு ஊட்டி முடித்திருந்தான்.
“பூ வீட்டிலிருந்து கொண்டுவர ப்ரூட்ஸ் கூட இதே டேஸ்டில் தான் பரிதிண்ணா இருக்கும்.”
‘அய்யோ பயபுள்ள கண்டுபிடிச்சிடுச்சோ!’ பரிதிக்கு சிறு பதட்டம் வந்தாலும் அதனை மறைத்தவனாக, “அந்தந்த பழம் அந்தந்த ருசியில தான் இருக்கும்” என்றவனாக அடுத்து பேச்சினை திசை மாற்றினான்.
“அவியும் உன் காலேஜ் தான். க்ரூப் கூட உன்னோடது தான்.”
பாரி ஆறாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் அவனின் உற்றத்தோழன் அவினாஷ். பாரி பள்ளி மாறி விடுதி சென்ற பின்னும் கூட அவர்களின் நட்பு தொடர்கிறது.
“அவன் சொல்லவேயில்லை?”
“பர்ஸ்ட் நீ பேசினாதான பாரி” எனக்கேட்ட பரிதி, “என்ன கோர்ஸ் ஜாயின் பண்ணியிருக்கன்னாவது நினைவிருக்கா?” என்று கேட்டான்.
“அய்யோ அண்ணா ரொம்ப தான் கிண்டல் பன்றீங்க” என்றவன், “பூ என்ன படிக்கப்போறா(ள்) தெரியலையே!” என்றான் கவலையாக.
‘ரெண்டும் ஒரே மாதிரி புலம்புதுங்க’ என எதையோ நினைத்து சொல்லிக்கொண்டான் பரிதி.
“விடுடா… எப்படியும் எதாவது படிப்பாள் தானே” என்ற பரிதி, “அம்மா மொபைல் கிச்சன் சிங்கில் விழுந்துடுச்சு” என்றான்.
“அச்சச்சோ.” பரிதியின் பதற்றம் சத்தமாக வெளிவந்தது.
“எதுக்குடா இப்படி அதிருற?”
“பரிதிண்ணா… பூவுக்கு தெரிஞ்சது அம்மா நெம்பர் மட்டும் தான்.” பாரியின் கவலை பரிதிக்கும் புரிந்தது.
“இனி பூ கால் பண்ணாக்கூட தெரியப்போறதில்லை” என்று கன்னத்தில் கை வைத்திட்டான்.
“நாளைக்கு அம்மாக்கு மொபைல் வாங்கிடலாம் பாரி. அந்த நெம்பர் சிம் சேஃப் தான்.” பரிதி அவ்வாறு சொன்னதும் தான் பாரிக்கு மூச்சே வந்தது.
“பூ இன்னைக்கு ட்ரை பண்ணியிருந்தால்?”
‘நிச்சயம் பண்ணியிருப்பாள்.’ பரிதி திருத்திருத்தான். ஆனால் பாரி கவனிக்கத் தவறியிருந்தான்.
“ஓகேடா… நான் பேக்ட்ரி கிளம்புறேன்.” இன்னும் கொஞ்ச நேரம் தம்பியுடன் இருந்தாலும் தானே உளறி வைத்திடுவோமென்று அங்கிருந்து செல்ல முனைந்தான். ஆனால் பரிதி அவனை விட்டால் தானே.
“அண்ணா… நான் எப்படியும் ஐபிஎஸ் தான் பண்ணப்போறேன். அப்புறம் எதுக்கு பிஈ? ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பன்றனே!”
பாரி இதனை பலமுறை கேட்டுவிட்டான். அதற்கு பரிதியும் எப்போதும் சொல்லும் பதிலையே இப்போதும் கூறினான்.
“ஒருவேளை உனக்கு இண்ட்ரெஸ்ட் மாறுச்சுன்னா… அல்ரெடி உனக்கு கம்ப்யூட்டர் பீல்டில் கொஞ்சம் இண்ட்ரெஸ்ட் இருக்கு. அப்போ சிஎஸ்சி உனக்கு ஹெல்பீங்கா இருக்கும். இப்பவும் ஒன்னுமில்லை இது ஒன் இயர் தானே எக்ஸ்ட்ரா. காலேஜ் லைஃப் வரை தான் ஜாலியா இருக்க முடியும். சோ, நீ கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அனுபவி” என்று சொல்லியவாறே மேற்கொண்டு பாரிக்கு எதுவும் பேச வாய்ப்பளிக்காது பரிதி அவனின் அறையிலிருந்து வெளியேறினான்.
“கஸ்டமர் மீட்டிங் இருக்கு பாரி. நைட் வர லேட்டாகும். மார்னிங் பார்ப்போம்.”
“பை’ண்ணா.”
*****
அன்றைய பொழுது பாரிக்கு பூவைப்பற்றி சிந்திப்பதிலேயே சென்றது.
மாலைவேளை…
“எப்பப்பாரு ஏண்டா இந்த ரூமுக்குள்ளே அடைஞ்சிருக்க. எங்கையாவது வெளிய போயிட்டு வாயேன் பாரி. கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கும்.”
சொன்ன அன்னையை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஊர் சுத்த சொல்றீங்களா?” என்று முகத்தை மிக தீவிரமாக வைத்துக்கொண்டு கேட்டான்.
“நான் எப்போடா அப்படி சொன்னேன்” என்று அவனருகில் சென்ற பார்வதி…
“காலையிலிருந்து பெட்டிலே உட்கார்ந்து எதையோ திங்க் பண்ணிக்கிட்டு மண்டையை உருட்டிட்டு இருக்கியேன்னு சொன்னால். ரொம்பத்தான் போடா” என்று அவனது கையில் மாலை நேர சிற்றுண்டி அடங்கிய தட்டினை திணித்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து… ‘எவ்வளவு நேரம் தான் ஒரேயிடத்தில் அமர்ந்திருப்பது’ என நினைத்தவன் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு அவியின் வீடு நோக்கிச் சென்றான்.
அவியின் வீடு பக்கத்து ஏரியா என்பதால் விரைவில் வந்தவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க… அவியின் அன்னை மேகலை கதவினை திறந்தார்.
அவி சிறு வயதில் இருக்கும்போதே அவனின் தந்தை இறந்து விட்டார். அவர்களுக்கு சொந்தமென்று இருந்ததெல்லாம் அவியின் தந்தைவழி பாட்டி மட்டுமே. அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார்.
மேகலை அரசு கல்லூரியில் பேராசியராக பணி புரிகிறார். அதனால் அவிக்கு எவ்வித குறையும் தெரியாமல் வளர்த்திருந்தாலும், குடும்ப சூழலை சொல்லிக் கொடுத்திருந்தார். அதனால் அவி சிறு வயதிலேயே பொறுப்பானவனாக இருந்தான். அன்னையிடம் கண்டிப்பும் அன்பும் சரிவிகிதம் இருக்க… இவனும் அதற்கேற்றவாறு படிப்பில் மட்டுமே குறியாக இருந்தான். அவனின் சேட்டைகள் எல்லாம் அறிந்த ஒருவன் பாரி மட்டுமே. மேகலையை பொறுத்தவரை அவி அதிர்ந்து கூட பேசிடாதவன்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாரியை பார்த்ததும் சந்தோஷமாக அவனை வரவேற்றார்.
“வா பாரி… போன விடுமுறையில் பார்த்தது. எப்படி இருக்க?” என்று நலம் விசாரித்தார்.
“குட் மேகிம்மா” என்றவன் அவரிடம் பொதுவாக பேசிவிட்டு அவி இருக்கும் அறைக்குச் சென்றான்.
அங்கு அவியோ இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தான்.
“அவி… டேய் அவி…” பாரி கத்தியும் அவனிடம் அசைவில்லை.
“என்னடா இப்படி தூங்குற…” என்ற பாரி அருகிலிருந்த பாட்டில் நீரை மொத்தமாக அவன் மீது கவிழ்த்தான்.
“அய்யோ மழை மழை…” எனக் கத்தியபடி அடித்து பிடித்து எழுந்த அவி தன் முன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்த பாரியை கண்டவன் முறைத்து வைத்தான்.
“எதுக்குடா மேல தண்ணி ஊத்துன?”
“பின்ன எவ்வளவு நேரம்டா எழுப்ப?”
“நாளையிலிருந்து காலேஜ் போகணும். இன்னைக்குத்தான் நல்லா தூங்கிக்கலாம். நாளையிலிருந்து அம்மா பேக் டூ ப்ரொஃபஸ்ஸர் ஆகிடுவாங்கடா” என பாவமாக சொல்லியவன்,
“என்ன சார் காத்து இந்தப்பக்கம் வீசுது” என்ற அவி, “எக்ஸாம் முடிஞ்சு வந்ததும் வருவன்னு நினைச்சேன்” என்றான்.
“பூ நினைவாவே இருந்துச்சுடா. வெளிய வரவே பிடிக்கல” என்ற பாரி, “நீ வர வேண்டியது தானேடா?” எனக் கேட்டான்.
“நான் டூர் போயிருந்தேன்டா. நான் , அம்மா. அப்புறம் காலேஜ் அட்மிஷன்ல கொஞ்சம் பிசி. அப்பவும் வீட்டுக்கு ரெண்டு முறை வந்தேன். நீ பூவோட பேசுறதில்லைன்னு அப்செட்டா இருக்கன்னு பரிதிண்ணா சொன்னாங்க. அப்புறம் நீ சேருற காலேஜ் தான் நானும் சூஸ் பண்ணேன். அண்ணா தான் ஹெல்ப் பண்ணாங்க” என்றவன்,
பாரியின் அமைதியில…
“என்னடா லவ்வா?” என்று கேட்டான்.
பாரி அவனை வயிற்றிலேயே குத்தியிருந்தான்.
“எதுக்குடா குத்துன. ஒரு பொண்ணு பேசலன்னு ரெண்டு மாசமா உட்கார்ந்து பீல் பன்றனா லவ் தானடா?” என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு கேட்டான்.
“நான் உன்கிட்ட பேசலன்னா ஃபீல் பண்ணுவியா மாட்டியாடா?” என்றான் பாரி.
“தொல்லை விட்டுச்சுன்னு நிம்மதியா இருப்பேன்” என்ற அவி பாரி முறைத்த முறைப்பில், “ஃபீல் பண்ணுவேண்டா. விட்டா நாய் ஒன்னு கூடவே வச்சிக்கிட்டு தேவதாஸ் எஃபெக்ட் கொடுப்பேன். போதுமா?” என்றான்.
“ஹான்… அதே மாதிரி தான் இதும். பூ பொண்ணுங்கிறதுக்காக நீ லவ் சொல்லுறது தப்பு அவி. அவள் என்னோட பிரண்ட்.” அழுத்தமாக பாரி சொல்ல… அவி இரு கைகளையும் தலைக்குமேல் குவித்து கும்பிட்டான்.
“போதும்டா உன் பூ புராணம். ஒவ்வொரு லீவுலையும் அவளை பற்றி பேசியே என் காது ஜவ்வு கிழிச்சது பத்தாதா?” என்றான்.
“ஷீ இஸ் மை ஃபிரண்ட் அவி. ஷீ இஸ் நோவ்ஸ் எவ்ரித்திங் அபௌட் மீ. ஸச் அ சுவீட் கேர்ள் தெரியுமா?” என்றான் அத்தனை மென்மையாக.
“எங்க தெரியுறது. அவள் போட்டோ கூட நீ காட்டினது கிடையாது” என்றான் அவி.
“ஸ்கூல் க்ரூப் ஃபோட்டோவில் இருப்பாள். வீட்டுக்கு வா காட்டுறேன்” என பாரி அப்போதே அவியை அழைக்க…
“அதுக்காக இப்போவேயெல்லாம் வர முடியாது. வரப்போ பார்த்துகிறேன்” என்ற அவி வீடியோ கேம்மினை ஆன் செய்திட இருவருக்கும் அதில் நேரம் போனது.
*****
நேரம் இரவைத் தொட்டு நீண்டிருந்தது.
வீடு வந்து சேர்ந்த அரசு… தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அமர்ந்ததும்… அழைத்தது பூவிற்குத்தான்.
“ப்பா…”
“கண்ணு… எல்லாம் சௌரியமாடா. சாப்பாடெல்லாம் நல்லாயிருக்கா?” எனக் கேட்டார்.
“எல்லாம் ஓகேப்பா” என்றவள், சற்று தயக்கத்தோடு… “நான் அங்கனவே உங்களோட இருந்தே படிக்குதேன் ப்பா” என்றாள் சுரத்தே இல்லாமல்.
“என்னாச்சுது கண்ணு?”
சிறு வயதிலேயே தனித்து விடுதியில் இருந்த மகள் இன்று இப்படி கேட்டதும் பதறிவிட்டார் அரசு.
“ஒன்னுமில்லைப்பா. ஏதோ தனியா இருக்குத்தாப்புல இருக்கு” என்றாள்.
“பள்ளிக்கூடம் படிக்கும் போதும் தனியாத்தான கண்ணு இருந்த… படிக்க ஆரம்பிச்சிட்டா சரியாப்போகும்” என்றவரிடம், “அங்கன கூட பாரி இருந்தா(ன்)ப்பா” என்று சொல்லியவளின் குரல் கலங்கிவிட்டது.
பார்வதியின் எண்ணுக்கு அழைத்ததும் தான் நினைத்தையும் சொல்லியவள், “இங்கன தனியா இருக்க முடியுமுன்னு தோணுலப்பா” என்றாள்.
“சரிடா… சரி. வெசனப்படாத, நாளைக்கு ஒரு நா(ள்) மட்டும் போயிட்டு வா கண்ணு. பொறவும் உனக்கு வேண்டாமுன்னா அப்பா வந்து கூட்டியாந்துதேன்.”
“சரிப்பா” என்று வெறுப்பாகக் கூறியவள், “அப்போ நான் பாரி வீட்டுக்கு போகட்டுமாப்பா. தாத்தாக்கு தெரிஞ்சா எதுனா சொல்லுவாங்களா?” எனக் கேட்டாள்.
“தனியா வேணாம் கண்ணு. நீயி போவணுமுன்னு பிரியப்பட்டா பரிதி தம்பியை உன்னைய வந்து பாக்க சொல்லுதேன்” என்று அரசு சொல்லும்போதே,
“அப்பா நான் பேசுதேன்” என இளா அலைபேசியை பிடிங்கியிருந்தாள்.
“தமிழு…”
“அக்கா.”
“என்னட்டி பாரிகிட்ட பேசுனியா?”
“இல்லக்கா. நெம்பர் ஆஃப் வருதுக்கா.”
அதிலேயே தங்கையின் வருத்தம் புரிந்திட மேற்கொண்டு பாரியைப்பற்றி பேசுவதை விடுத்து கல்லூரி மற்றும் விடுதி, எந்தவூர் என்கிற விவரமெல்லாம் கேட்டு முடித்து தங்கையை சற்று கலகலப்பாக மாற்றிய பின்னரே மணியிடம் அலைபேசியை நீட்டியிருந்தாள்.
மணியும், தங்கமும் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தமிழிடம் பேசிக்கொண்டிருக்க…
இளா தந்தையை குறுகுறுவென பார்த்தாள்.
“என்ன பாப்பா… அப்படி பாக்குத?”
“எனக்கு ஒன்னு தோணுது. அதைத்தேன் நீங்க செஞ்சிருக்கீங்களாப்பா?” என்று இளா கேட்க… “நீ இம்புட்டு அறிவாளியா இருந்திருக்க வேண்டாம் பாப்பா” என்று சன்னமாக சிரித்தார்.
“அப்போ நிஜமாப்பா… பாரியும் அங்கன தான் படிக்கப்போறானாப்பா?” என்று துள்ளலோடு கேட்டவள், அரசுவின் ஆமென்ற பதிலில் அவரைக் கட்டிக்கொண்டாள்.
‘தங்கள் பகுதியிலேயே கல்லூரிகள் இருக்கும்போது அவ்வளவு தூரம் எதற்கு?’ என்றிருந்த இளாவுக்கு தற்போது தமிழ் ஊரின் பெயரை சொல்லியதும் தான் பாரியின் ஊரில் சேர்க்க காரணம் அதுவாக இருக்குமோ என்று மனத்திற்குள்ளே கணக்கிட்டு அவள் கேட்டிட அதுவே சரியாகவும் இருந்தது.
‘இதனை தமிழிடம் சொல்லியிருந்தா சந்தோஷமா போயிருப்பாளே’ என நினைத்தவள் தந்தையிடம் அதனை கேட்கவும் செய்தாள்.
“இதை முன்னவே அவ(ள்)கிட்ட சொல்லியிருக்கலாமேப்பா?”
“அவங்களுக்கு ஏதோ சர்ப்ரைஸ் அப்படின்னு பரிதி தம்பி சொல்லுச்சு பாப்பா.” தான் மறைத்ததற்கான காரணத்தை அரசு சொல்ல…
“பரிதி” என்று இளா இழுத்தாள்.
“பாரி உடன் பொறந்தவன்” என்ற அரசு, “ரொம்ப பொறுப்பான பையன். படிச்சு முடிச்சதும் அப்பாவுக்கு துணையா தொழிலை பார்த்துக்கிடுது” என்று அவனைப்பற்றி பெருமையாக சொல்லிச்செல்ல… பரிதியின் அப்பேச்சு ஏனோ இளாவின் மனதில் அழுத்தமாக ஒட்டிக்கொண்டது.
வீட்டு ஆட்களிடம் பேசி முடித்த தமிழ்… நாளை தனக்கிருக்கும் ஆச்சர்யம் தெரியாது வேண்டா வெறுப்பாக மெஸ்ஸிற்கு சென்று உணவு முடித்து அறைக்கு வந்தவள் மீண்டும் ஒருமுறை பார்வதியின் எண்ணிற்கு முயற்சித்து தோல்வியுற்று பாரியை நினைத்துக் கொண்டே உறங்கியும் போனாள்.
*****
பாரியிடமிருந்து தப்பி ஓடும் பரிதியின் இதழ் புன்னகையில் நெளிந்தது. தாங்கள் நிகழ்த்திய செயல் குறித்து.
அவர்களை பொறுத்தவரை பாரியும் பூவும் பிரியக்கூடாது. இரு குடும்பமுமே அதனை நினைத்தே அனைத்தும் செய்கிறது. பொன்னுவைத் தவிர.
பிள்ளைகளின் விருப்பம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் தடை விதிக்காது துணை நிற்பது தானே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சாந்தோஷம்.
பின்னாளில் எப்போதும் உங்களால் தான் எங்கள் நட்பு நீடிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே பாரி மட்டும் பூவை சேர்க்க பெரியவர்கள் முயற்சி செய்தனர்.
காலை அரசுவை கல்லூரி வளாகத்தில் சந்தித்த தாய் மற்றும் தனயன், பார்வதியும் பரிதியுமே.
வாடியிருக்கும் மகளின் முகத்தில் பொலிவை கண்டுவிடவே அரசு தன் தந்தைக்குத் தெரியாது அம்முடிவை எடுத்தார்.
அரசு கல்லூரி படிப்பு படித்ததில்லை என்றாலும், எழுத படிக்கத் தெரியும். பள்ளி படிப்பை முழுமையாக முடித்தவர். படிப்பில் நாட்டமில்லாததால் தந்தையுடன் தொழிலில் இறங்கிவிட்டார். ஆனால் தன் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்கிற ஆசை அவருக்கு அதிகம். இரண்டு பெண்பிள்ளைகளில் ஒன்றை மருத்துவம் ஒன்றை பொறியியல் படிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் இளா தனக்கு கணக்கு பாடத்தில் தான் விருப்பம் அதிகமென்று சொல்லி இளங்கலை கணிதம் எடுக்க… மகளின் விருப்பத்திற்கு தன் ஆசையை விட்டுக்கொடுத்தார். ஆனால் பூவிடயத்தில் அப்படியில்லை, அவள் என்ன படிக்க வேண்டுமென்கிற எண்ணம் கூட இல்லாமல் இருந்ததால், தனது ஒரு ஆசையை அவள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள பொறியியல் சேர்த்தார்.
ஆனால் அதில் அவர் பூவிற்காக செய்தது பாரியின் ஊரான சென்னையில் சேர்த்தது.
அதுவும் சேர்ப்பதற்கு முன் பார்வதிக்கு அழைத்தவர், பூவின் நிலையை கூறிட… பார்வதி, “பாரியும் அப்படித்தான் இருக்கான்” என்று வருத்தம் கொண்டார்.
“எங்க ஐயா பேசக்கூடாதுன்னு சொன்ன வார்த்தைக்கு புள்ளைங்க மதிப்பு கொடுக்கும்போது, அதுங்க நட்புக்கு நாம மதிப்பு கொடுக்கணுமே” என்றவர், “பூவை எஞ்(ன்)சினியர் சேர்க்கலாமுன்னு பிரியப்படுதேன், பாரிய என்ன படிக்க வைக்கலாமுன்னு இருக்குதீக?” எனக் கேட்டார்.
அதற்கு பார்வதி பதில் சொல்லும் முன்னவே,
“பள்ளியில ஒன்னா இருந்தது போலவே, காலேசுலையும் ஒண்ணா இருக்கட்டும் நினைக்குதேன். அதேன் உங்கக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப்புட்டு பாரி படிக்கப்போற எடத்துலேயே பூவையும் சேர்க்கலாமுன்னு” என்று தன் எண்ணத்தைக் கூறினார்.
அரசு பேசுவதை பரிதியும் பார்வதியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“மாமா நான் பரிதி” என்றவன், “அவன் பூவுக்கு போலீஸ் பிடிக்கும்னு போலீஸ் ஆகணும் சொல்லிக்கிட்டு இருக்கான். அதுக்கு அவன் எதாவது டிகிரி முடிச்சுதான ஆகணும். நீங்க குட்டிம்மாவை என்ன படிக்க வைக்க நினைக்கிறீங்களோ படிக்க வைங்க, பாரியும் அதையே படிப்பான். அவங்க ரெண்டு பேரையும் ஒரே காலேஜில் ஒரே குரூப் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. நான் ஃபார்ம் வாங்கி அனுப்பி வைக்கிறேன். நீங்க குட்டிம்மாகிட்ட எதுவும் சொல்லாம கையெழுத்து மட்டும் வாங்கி அனுப்பி வையுங்க. அவங்களுக்கு ஒரு சுவீட் சர்ப்ரைஸ் தருவோம்” என்றிட… பரிதியின் அன்பிலும் அரசுக்கு மனம் நிறைந்து விட்டது.
பரிதியின் திட்டத்திற்கு அரசு மற்றும் பார்வதியும் ஒப்புக்கொள்ள, இருவரையும் கல்லூரியில் சேர்க்கும் பணி வேகமாக நடைபெற்று… இன்று பூவும் சென்னை வந்துவிட்டாள்.
இனி அவர்களின் பாடு. நட்பு நட்பாகத் தொடருமோ அல்லது காதலாகுமோ. காதல் யார் யார் மீது எப்படி என்பதெல்லாம் அவர்கள் அறிந்தவை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
37
+1
1
+1
1
பரிதி அரசு தங்கம் மணி பார்வதி கியூட்.