Loading

அத்தியாயம் 13

அன்று மாலையே தமிழின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட…  “நைட் கண்டிஷன் பார்த்துட்டு, மார்னிங் டிஸ்சார்ஜ் ஆகலாம்” என்று மருத்துவர் சொல்லியதை கேட்காது, “வீட்டுக்கு போகலாம்” என்று அடம் பிடித்தவள் பாரியின் ஒற்றை பார்வையில் அமைதியாகிப்போனாள்.

“சொல்றவங்க கேட்டால் தான் கேட்குறாங்க.” சொல்லிய ஜென்னைத் தொடர்ந்து தமிழுக்கும் சிரிப்பு வந்தது.

படுக்கைக்கு எதிரே இருந்த இருக்கையில் விறைப்பாக பாரி அமர்ந்திருக்க… வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

மாலை கடந்து இரவு தொடங்கியிருந்தது.

பாரி இருந்ததாலோ என்னவோ அவ்வறையில் அதிகம் பேச்சில்லை. பாரி இல்லாமல் இருந்திருந்தால், காய்ச்சல் என்பதையும் மறந்து தமிழ் வாயடித்திருப்பாள். அவன் வேறு என்றுமில்லாத திருநாளாக இன்று அவளையே நேர்கொண்டு பார்த்து அமர்ந்திருக்க… தமிழுக்கு உள்ளுக்குள் நடுக்கம் தான்.

எங்கே தன்னை இலக வைத்திட வேண்டுமென்றே காய்ச்சலை வரவழைத்துக் கொண்டதாக எண்ணி, தன்னிடம் மனம் நோகும்படி ஏதேனும் கேட்டுவிடுவானோ என்கிற அச்சமே பாரியை எதிர்கொள்ள விடவில்லை.

கண்களை மூடி படுத்திருந்தாலும் அவள் உறங்கவில்லை என்பது பாரிக்கு நன்றாகத் தெரிந்தது.

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நைட் நான் இருக்கேன்.”

அமைதியை கிழித்துக்கொண்டு கேட்ட பாரியின் குரலில்… அவியும், ஜென்னும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு… பாரி சொல்லியதன் திகைப்பில் அவனை ஒரு சேர அதிர்ந்து பார்த்தனர்.

தூங்குவது போலிருந்த தமிழுக்கு கை காலெல்லாம் நடுங்கும் உணர்வு.

தான் கண் விழித்ததும் வேகமாக வெளியேறியவன் சிறிது நேரம் சென்று மீண்டும் அவியுடன் வந்ததையே நம்ப முடியாது இருந்தவளுக்கு, அவன் சொன்னதைக் கேட்டு கலக்கம் உண்டானது.

‘போச்சு… தனியா சிக்கினால் சிக்கன் ஆக்கிடுவானே.’ மனதோடு புலம்பினாள் தமிழ்.

“என்ன அப்படி பாக்குறீங்க… நைட் யாராவது ஒருத்தர் இருக்கணுமே! நீங்க கிளம்புங்க.”

பாரி கொடுத்த அழுத்தமே அவி மற்றும் ஜென்னை மேற்கொண்டு எதுவும் பேசவிடாது வெளியேற வைத்தது.

செல்வதற்கு முன் தமிழின் கையில் அழுத்தம் கொடுத்த ஜென்… “எந்த சேதாரமும் ஆகாம பார்த்துக்கோ தமிழ்” என்று அவளுக்கு மட்டும் கூறினாள்.

அவிக்கு ஜென் போல் பாரி தமிழிடம் எப்படி நடந்துகொள்வானோ என்கிற பயமெல்லாம் கிடையாது.

அவியால் நண்பனிடம் சடுதியில் தோன்றிய மாற்றத்தை உணர முடிந்தது. அதனைக்கொண்டு சிறு தலையாட்டால் மட்டுமே அவியிடம்.

“உனக்கு ட்ரெஸ்…” இன்னமும் பாரி காக்கி உடையில் இருக்க அவி செல்வதற்குமுன் வினவினான்.

“நான் பார்த்துகிறேன்” என்றான்.

மருத்துவமனை விட்டு வெளியில் வந்த ஜென் ‘இவனுடன் செல்லலாமா இல்லை என்னை அம்போன்னு விட்டுட்டு போய்டுவானா’ என்று யோசித்துக்கொண்டு கலக்கமாக அவன் கார் எடுக்க சென்ற திசையையே பார்த்து நிற்க… அவளை இடித்து கீழே தள்ளிவிடும் நெருக்கத்தில் கொண்டு வந்து காரினை நிறுத்தினான்.

“ஏறு.”

யாரிடமோ சொல்வதைப்போல் இருந்தது. முகத்தில் அத்தனை இறுக்கம்.

முன்னிருக்கையில் அமர்ந்தவள் அவியின் முகத்தையே ஏக்கத்தோடு திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தாள்.

“என்ன என் முகத்தில் எதாவது இருக்கா?”

இல்லையென்று தலையசைத்தவள், அவன் கேட்ட சத்தத்திலேயே மிரண்டு இருந்தாள்.

‘அச்சோ ஜென் நீ போலீஸ். இவனோட அதட்டலுக்கெல்லாம் பயப்படலாமா’ எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும் அவனிடம் அவளுக்கு பயம் இருந்தது என்னவோ நிஜம்.

அவி சாலையில் மட்டுமே கண்ணாக இருக்க… சில நொடிகளில் ஜென் உறங்கிப்போனாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த அவி, வண்டியை நிறுத்திய பின்னரும் ஜென்னின் உறக்கம் கலையவில்லை.

அவளை எழுப்புவதற்கு அவள் பக்கம் திரும்பியவன், அப்போது தான் பல நாட்களுக்குப் பின்னர் அவளை அருகில் காக்கி உடையில் காண்கிறான்.

அவனின் பார்வை எப்போது ரசனையாக மாறியதோ!

‘பரவாயில்லை இந்த ட்ரெஸ்ஸில் நல்லாவே இருக்காள்.’ அவனின் மனம் அவளிடம் வழிந்தது. பார்த்துக்கொண்டே இருந்தான். விரும்பும் பெண்ணை பார்த்துக்கொண்டே இருப்பதைவிட வேறு இன்பம் இருந்திடுமா என்ன? அக்கணம் இல்லையென்றே அவி சொல்லியிருப்பான்.

சாலையில் இருக்கிறோம். காரிலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்ல வேண்டுமென்கிற எண்ணம் சிறிதுமின்றி தன்னவளை ரசித்தபடி அமர்ந்துவிட்டான்.

அந்நொடி அவள் சொன்ன வார்த்தை அவனது கோபமெல்லாம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

யரோ உற்று பார்க்கும் உள்ளுணர்வு உந்த மெல்ல உறக்கம் கலைந்து எழுந்தவள் அவியை ஏறிட…

அவன் தன்னை சடுதியில் நிலைப்படுத்தியிருந்தான்.

“சீக்கிரம் இறங்கு” என்று காய்ந்தான். தன் கோபம் மறந்து அவளிடம் வழிந்ததை நினைத்து தன்னையே உள்ளுக்குள் திட்டிக்கொண்டான்.

அவளை இறங்க சொன்னவன், தான் இறங்க முயல…

“அவி” என்று அழைத்திருந்தாள் ஜென்.

அவன் காது கேட்காததைப்போல் கதவினை திறந்து காலினை கீழே வைக்க…

“அவி ப்ளீஸ். உன்கிட்ட பேசணும்.” ஜென்னின் குரல் தழுதழுத்தது. ஜென்னிற்கு தெரியும் அவள் கேட்ட வார்த்தையின் வீரியம். அவள்மீது தவறிருக்கும் போது இறங்கி செல்வதில் தவறில்லை என்று தோன்றிட… அவளுக்கும் அவனைவிட்டால் உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை என்பதால் அனைத்தும் பேசிவிட வேண்டுமென துணிந்து விட்டாள்.

அவி திட்டினாலும், ஏன் அடித்தாலும் கூட அமைதியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் ஜென்சி இருந்தாள்.

அவளின் கலங்கிய குரலை அவனால்
கடக்க முடியவில்லை. மீண்டும் இருக்கையில் சரியாக அமர்ந்து கதவினை சாற்றியிருந்தான்.

“என்னை மன்னிக்கவே மாட்டியா அவி?”

அவிக்கு உடல் விறைத்தது.

“நான் கோபத்தில்… என்ன பேசணும் தெரியாம,”

“நிறுத்துடி.” கத்தியிருந்தான். அத்தனை சத்தம். ஜென் அதிர்ந்து சீராகினாள்.

“எது தெரியாம… ஹாங்” என்றவன் பின்னந்தலையை அழுந்த கோதி இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

“ப்ளீஸ் ஜென். நீ போயிடு. நான் எதாவது வார்த்தையை விட்டுடுவனோன்னு பயமா இருக்கு” என்றான்.

“அவி…”

“இப்பவும் உன்னை அவ்வளவு லவ் பன்றேன். அதை இல்லாமல செய்துடாத!”

“திட்டனுமுன்னா திட்டிக்கோ அவி. அடிக்கக்கூட,” அவள் சொல்லி முடிக்கும் முன் அறைந்திருந்தான்.

அறைந்த வேகத்தில் அவளை தன் நெஞ்சில் அழுத்தியிருந்தான்.

“ஏண்டி… ஏன் படுத்துற? இதுக்குத்தான் போ’ன்னு சொன்னேன். உன்னை பார்த்தாலே கோபம் தாண்டி வருது. அன்னைக்கு உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” எனக் கேட்டவன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்து அவளை தன்னிலிருந்து பிரித்தான்.

“சாரி அவி… என்னால சாரி மட்டும் தான் கேட்க முடியும். உன் கோபம் போக நான் செய்யனும் சொல்லு செய்றேன். ஆனால் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத அவி. நீயுமில்லன்னா நான் அனாதைடா” என்றவள் சிதறி கதறினாள் அவன் மீது சரிந்து.

ஜென் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தை அவியை சுக்கு நூறாக உடைத்திருந்தது.

‘நான் இருக்கும்போது என் ஜென் அநாதையா?’ தனக்குள்ளே கேட்டுக்கொண்டவனின் மனம் கனத்துப்போக, “இல்லடி… அப்படிலாம் சொல்லாத. எனக்கு என்னவோ மாதிரியிருக்கு” என்று கரகரத்தான்.

“மறக்கத்தான் நினைக்கிறேன். ஆனால் முடியலடி.”

மனதில் உள்ளதை அவி வெளிப்படையாக சொல்ல… அவனை விட்டு விலகி பார்த்தவள்,

“என்னை மன்னிச்சிட்டியா அவி” எனக்கேட்டாள்.

“உன்னை மன்னிக்காம எப்படி. எனக்கும் உன்னைவிட்டா யாருமில்லதான!” அவனிடம் விரக்தி புன்னகை.

“நமக்குள் நடந்த நல்ல நிகழ்வை மட்டும் நினைத்து பார்ப்போம் அவி” என்றாள். கெஞ்சுதலாக.

“முயற்சி செய்றேன்” என்றவன் ஜென்னின் கையுடன் தன் கை கோர்த்து மீண்டும் கண்களை மூடிட… அவனது சோக அலை முகத்தில் மோதியது.

ஜென்னிடமும் அதன் தாக்கம்.

*********

அவியும் ஜென்னும் சென்று,

சில நிமிடங்கள் கடந்திருக்கும்…

செவிலி ஒருத்தரை தமிழுடன் இருக்க வைத்த பாரி, வெளியில் சென்று இருபது நிமிடங்களில் திரும்பியிருந்தான்.

பாரி கேஷுவல் உடையில் ஒரு கையில் பையோடு இருந்தான். பக்கத்தில் ஏதோ துணிக்கடைக்கு சென்று வந்திருப்பான் போலும். அதில் அவனது காக்கி உடை இருக்க வேண்டும். மற்றொரு கையில் சிறு பாலித்தீன் பை.

அப்போதுதான் தமிழுக்கு ஊசி போட்டிருக்க… முகத்தை சுருக்கிக்கொண்டு கையை தேய்த்துக் கொண்டிருந்தாள்.

அதனை பார்த்தபடி வந்தவன் கையிலிருந்ததை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியில் சென்று ஹாட் பேக்குடன் வந்தான்.

செவிலியிடம் கேட்டு வாங்கி வந்திருப்பானென்று தமிழாக யூகித்துக்கொண்டாள்.

தமிழ் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்க… அவளின் அருகில் சென்றவன், அவளது வலது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க… தானாகவே அவளின் இடது கை ஆடையை மேலேற்றி ஊசியின் தடம் பதிந்த இடத்தில் ஹாட் பேக்கை வைத்து வைத்து எடுத்தான்.

பாரியையும் அவனது செயலையும் நம்ப முடியாது விழி விரித்தாள் தமிழ்.

“கண்ணை கொஞ்சம் சுருக்கலாம். ஐ பால்ஸ் வெளிய தெறிச்சிடப்போகுது” என்று சொல்லியவன் தன் காரியமே கண்ணாக இருந்தான்.

‘இவனா பேசினான் இப்போ’ என்றிருந்தது தமிழுக்கு.

“ஏன் நான் பேச மாட்டனா?”

‘மனசுல நினைக்கிறதுலாம் கேட்குதா?’

“ம்.”

……

“ஆர் யூ பெட்டர் நவ்?”

“ஆங்க்…”

“ஆல் ஓகே?” பாரி அவளது கையை கண் காட்டினான்.

“ம்… ம்… ” வேகமாக தலையாட்டியவள் “ஓகே… ஓகே…” என்றாள்.

பாரி மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டான்.

பாரி அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்க… தமிழின் பார்வை முழுக்க முழுக்க அவன் மீதே பதிந்திருந்தது.

அவளால் பாரி தன் கண் முன்னே தனக்காக அமர்ந்திருப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“எனக்காகவா?”

ஒற்றை வார்த்தையாக அவள் கேள்வி வந்தது.

தமிழை நிமிர்ந்து ஏறிட்டவன்,

“இருக்கலாம்” என்று தோளை குலுக்கிவிட்டு மீண்டும் தாழ்ந்து கொண்டான். ஆனால் தமிழின் பார்வையில் மாற்றமில்லை.

“என்னையே பார்த்தது போதும்.”

‘ஏனாம்?’

அவள் வாய்விட்டு கேட்கவில்லை ஆனால் பாரி பதில் சொல்லியிருந்தான்.

“என்னை சைட் அடிக்கிறன்னு அப்பட்டமா தெரியுது.”

இப்போது தமிழுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

அவளை பொறுத்தவரை பாரி இப்படியெல்லாம் பேசுவான் என்பதே ஆச்சரியம். மற்ற நண்பர்களிடம் கொட்டம் அடிக்கும் பாரியையும் தெரியும். அவளிடம் அவன் எப்படியென்றும் தெரியும். பாரி அவளிடம் இம்மாதிரி பேச்சுக்களை எல்லாம் பேசமாட்டான்.

எந்தளவிற்கு பாரி அவளிடம் அன்பு அக்கறை கொண்டிருந்தானோ அதேயளவு வார்த்தைகளிலும் கண்ணியம் கொண்டிருந்தான்.

அவள் உடனிருக்கிறாள் என்றாலே அனைத்திலும் அத்தனை கவனமாக இருப்பான்.

அதனால் தானோ என்னவோ அவளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க தவறி அவளின் காதலையும் அறிந்து கொள்ளாமல் இருந்துவிட்டான்.

தமிழ் அசையாது பாரியின் தற்போதைய பேச்சு மற்றும் செயல்களை கணிக்க முடியாது மூடா விழிகளுடன் அவன் மீதே நிலைத்துவிட்ட பார்வையுடன் இருக்க…

“இப்படியே பார்த்துட்டே இரு. இதோ வர்றேன்.”

பத்து நிமிடங்களில் உணவுடன் திரும்பியும் வந்தான்.

இரண்டு இட்லிகளை எடுத்து வைத்து அவள் அறியும் முன்பே ஊட்டியும் இருந்தான்.

தமிழ் உறைந்தே போனாள்.

நடப்பது எதையும் அவளால் நம்ப முடியவில்லை.

இத்தனை நாட்கள்… நீ வெறுக்கும் ஆள் யாரென்றால் தமிழ் என்று யோசியாது சொல்லிக் கொண்டிருந்தவன் இன்று எதுவுமே நடக்காததைப்போல் நடந்துகொண்டால் அவளால் எப்படி நம்ப முடியும்?

தமிழுக்கு கண்கள் கலங்கியது. அது அவனது செயலால். எத்தனை நாட்கள் உணவு உண்ணும் போது ஏங்கியிருப்பாள். பாரி கையால் ஊட்டிவிட்டு சாப்பிட்ட நிகழ்வுகள் எத்தனை முறை கண் முன் வந்து வதைத்திருக்கும்.

இனி கிடைக்கவே கிடைக்காது என்று இருந்த ஒன்று கிடைக்கும் நொடி மகிழ்வில் புன்னகைக்கு பதில் கண்களில் கண்ணீர் நிறையும் அத்தகைய தருணமாக அது தமிழுக்கு இருந்தது.

“சாம்பார் காரமா இருக்கா?”

அவளின் நிலை உணர்ந்து வேண்டுமென்றே கேட்டான். சகஜமாக்கும் பொருட்டு.

“என்னால நம்ப முடியல.”

“என்னையா?”

அவளின் மௌனமே ஆமென்றது.

“அப்போ நான் போகட்டுமா?”

“இல்லை… இல்லை… வேண்டாம்.” அத்தனை வேகத்தில் கூறியிருந்தாள்.

மேற்கொண்டு அவளும் எதுவும் கேட்கவில்லை அவனும் எதுவும் பேசவில்லை. அமைதியாக ஊட்டி முடித்தவன், இரவு போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்து விழுங்கச் செய்தான்.

“நீ சாப்பிடலையா?”

“நான் சாப்பிட்டுதான் உனக்கு வாங்கி வந்தேன்” என்றவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு அறையை விட்டுச் சென்றான்.

அவன் கேன்டினில் உண்டு கொண்டிருக்கும் போதே பரிதி அழைத்திருந்தான். அப்போது கட் செய்தவன், இப்போது அழைப்பு விடுத்தான்.

“சொல்லு பாரி. கால் பண்ணியிருக்க. நான் ராஐஸ்தான் வந்திருக்கேன்டா.”

“ஹோ” என்ற பாரி, பரிதிக்கு தமிழ் மேலிருக்கும் பாசம் தெரியுமாதலால் தொலைவில் இருப்பவனை கலக்கம் கொள்ளச் செய்ய வேண்டாமென்று நினைத்து,

“சும்மாதான் சின்னுகிட்ட பேசலான்னு கூப்பிட்டேன்” என்றான்.

“சரிடா… நான் வந்ததும் நேரில் மீட் பண்ணலாம்” என்ற பரிதி, “வேணும்னா வீட்டுக்கு போயிட்டு பாரேன்” என்றான்.

பாரியிடம் அமைதி.

“உடனே அப்ஸ்காண்ட் ஆகிடாத. நீ உன் கோபத்தை புடிச்கிட்டு தொங்கிட்டே இரு. அம்மா உன்னை நினைத்து கவலைப்படுறதெல்லாம் உனக்குத் தெரியவாப்போகுது. யாரோட கஷ்டம் தான் உனக்கு புரியுது” எனக்கூறி வைத்திட்டான்.

பரிதியின் வார்த்தைகள் பாரிக்கு குற்றவுணர்வைக் கொடுத்தது.

‘தான் கொஞ்சம் இறங்கி போனால்…’ என்ற நினைவே, ஒரு காலத்தில் குடும்பமாக அமர்ந்து மகிழ்ந்து பேசி சிரித்த நாட்கள் கண் முன் வந்து போயின.

ஏற்கனவே எடுத்த முடிவை திடப்படுத்தியவன்,

செவிலியை அழைத்து ஏறிக்கொண்டிருக்கும் ட்ரிப்சை நிறுத்தச் சொல்லி, அவளை அழைத்துக்கொண்டு அங்கேயே இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.

தனக்கு பின்னால் சற்று தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தவளை திரும்பி பார்த்தவன்,

“நடக்க முடியலயா?” என்றான்.

“படுத்தே இருந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு.”

“ஹோ…” என்றவன் அவளுடன் இணைந்து ஒன்றாக அவளுக்கு இணையாக மெல்ல நடந்தான்.

தமிழால் சுத்தமாக முடியவில்லை. அவன் அழைத்து மறுக்க முடியாததால் அவனுடன் வந்தவள் பூங்காவில் நுழைந்ததும் தென்பட்ட மேடையில் அமர்ந்துவிட்டாள்.

“வாக் போலாம் நினைச்சேன்” என்றவாறு பாரியும் அவளின் அருகில் அமர்ந்தான். அவளது சோர்வு உணர்ந்து.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படி இருவரும் ஒன்றாக நடந்து, அமர்ந்து.

“ஏதோ கனவு மாதிரி இருக்கு. இப்போ தூங்கி எழுந்தா என் பக்கத்துல உட்கார்ந்திருக்க நீ காணாம போய்டுவியோன்னு பயமா இருக்கு.”

தமிழின் வருத்தம் அவனுக்கும் உள்ளதே. என்ன அவளைப்போல் அவனால் காட்டிக்கொள்ள முடியவில்லை. அதைவிட இதை பற்றி பேசினால் எங்கே மறந்து மறைந்து போன அவனது கோபம் மீண்டும் வந்துவிடுமோ, அதனால் மீண்டும் விலகி சென்றிடுவேனோ என்று அஞ்சியே பழையதை தள்ளி வைத்தான்.

“நேத்து நீ நடந்துக்கிட்டதுக்கு… இப்போ நீ என் பக்கத்தில், சுத்தமா நம்ப முடியல” என்றவள் முகத்தை கைகளால் மூடி உடைந்து அழுது விட்டாள்.

“நான் நிறைய பேருக்கு வலியை கொடுத்துட்டேன்னு புரியுது. அதுவும் உனக்கு… ரொம்பவே.

என் பக்கமிருந்து பார்த்தா என் நியாயம் புரியும். பட் பழசு இப்போன்னு இல்லை எப்பவுமே பேச வேணாம். திரும்ப அந்த கோபம் வந்து நான் தூரம் போயி, தனிமையை அனுபவிக்கனும் நினைச்சாலே என்னவோ போலிருக்கு.

சோ, இதை அப்படியே விட்டுடலாம்” என்றான்.

பாரியின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியவில்லை என்றாலும், அவன் இத்தனை இறங்கி வந்ததே போதுமென தமிழ் அவன் சொல்லியதுக்கு வேகமாக சரியெனத் தலையாட்டினாள்.

ஆனால் அவளுக்கு புரிந்த ஒன்று… ‘தனிமை அவனை வெகுவாக பாதித்திருக்கிறது.’

“நான் இங்க ஏன் வந்தேன் தெரியும் தான?”

“அமிர்தா கேஸ்.”

“எஸ்” என்றவன், “அதை க்ளோஸ் பண்ணனும்.”

“நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் வேந்தா!”

அவளின் வேந்தா என்கிற விளிப்பு  அவனின் நெஞ்சம் சேர்ந்தது. சுகமாய்.

அதனை அனுபவித்தபடியே… “என்னால நீயில்லாம இருக்க முடியாதுன்னு தெரியும். ஆனால் உன்னை மனைவியா? எனக்குத் தெரியல பூ” என தன் புருவத்தைக் கீறியவாறு கூறினான்.

பாரி ‘பூ’ என்று விளித்ததில் பூ என்று பாரியாலும் தமிழ் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட ‘பூந்தமிழ்’ என்கிற பேதைக்கு கண்கள் நிறைந்துவிட்டன. உதட்டில் புன்னகை விரிந்தது. இதயத்தில் சில்லென்ற சாரல். தேகம் முழுவதும் தூவனத்தில் நனையும் இதம்.

“நீ என்னை லவ் பன்றன்னு அவி சொன்னான். அதை என்னால அவன் சொன்னப்போ நம்ப முடியல. ஆனால் நடந்த எல்லாத்தையும் நினைத்து பார்க்கும்போது அப்படியும் இருக்குமோ தோணுது.”

பூவின் முகத்திலேயே நிலைத்துவிட்ட பார்வையுடன்,

பாரியின் நினைவு அவன் மீது அவனது பூ கொண்ட காதலை நிகழ் காலத்தில் அறிந்திட கடந்த காலம் நோக்கி பயணித்தது. உடன் வேந்தனின் பூ(ந்தமிழ்).

அவை யாவும் இப்போது நடந்ததைப்போல் அவனுக்கும் பூவுக்குமான ஒவ்வொரு நிகழ்வுகளும் பசுமரத்து ஆணியாய் நெஞ்சில் ஆழமாக பதிந்து இறங்கியிருந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
36
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment