Loading

அத்தியாயம் 10 :

“பாரி ஆர் யூ சீரியஸ்?”

“எஸ் ஜென்” என்ற பாரி, “நாளைக்கு ரித்தேஷ்வரன் வீட்டுக்கு போகணும்” என்றான்.

“அனுமதி இல்லாம எளிதா அங்க போக முடியாது பாரி.”

“ஐ க்னோவ் ஜென். பட் நான் வந்தது… ஐ மீன் வரவழைக்கப்பட்டது அவங்க சம்மந்தப்பட்ட வழக்குக்காகத்தான. அப்போ எனக்கு முழு ஒத்துழைப்பும் அவங்க தரத்தானே வேணும்” என்ற பாரி…

“அந்த ரித்தேஷ் அவுட்டிங் எங்கையும் போகல ஜென். வீட்டிலேதான் இருக்கான். எதுக்காக வீட்ல இருந்துட்டே இல்லைன்னு அவன் சொல்லணும். எங்கயோ இடிக்குது ஜென்” என்ற பாரியின் நெற்றியில் சிந்தனை கோடுகள்.

வழக்கம்போல் கேண்டியை சுவைக்க ஆரம்பித்திருந்தான்.

“நாம நேரடியா அந்த நபரை விசாரித்தால், அவருக்கு ஏதும் ஆபத்து வந்துடாதா பாரி?” ஜென் தன்னுடைய சந்தேகத்தை முன் வைத்தாள்.

“அவங்க யாருக்கோ பயந்து தான்… அந்த மூன்றாம் நபருக்குத் தெரியாது என்னை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்ன்னு நல்லாத் தெரியுது. மூன்றாம் நபர் அதாவது கொலையாளி யாருன்னு தெரியாம யாரை சந்தேகப்படுறது ஜென். நமக்குத் தெரிந்தவரிடமிருந்து கிடைக்கும் சின்ன தகவலும் நமக்கு உதவுமில்லையா? தெரிஞ்சே அந்த வழியை இழக்க முடியாது. பேசி பார்ப்போம்.”

பாரி சொல்வதும் சரியெனப்பட “நீ உன் வழியிலே போ பாரி” என்றிருந்தாள் ஜென்.

“எனக்கு யார்கிட்டயும் நான் செய்யப்போறதை சொல்லும் பழக்கம் சுத்தமாக் கிடையாது ஜென்” என்று சொல்லியவனை அர்த்தமாக பார்த்தாள் ஜென்.

அவளின் பார்வையின் பொருள் அறிந்தவன்… “அதெல்லாம் பூவோட நின்னுப்போச்சு. ஆனால் இப்போ சொன்னது….” என நிறுத்தினான்.

“நான் சொல்லறது புரியுதா ஜென்?” எனக் கேட்டு “எந்தவொரு தடயமும் என்னைத்தாண்டி இன்னொருத்தனுக்கு தெரியுறதை நான் விரும்பமாட்டேன். அவங்க மூலம் இன்னொருத்தருக்கு தெரிஞ்சிடும். இது என்னோட எண்ணம். ஆனால் இந்த வழக்கில் நான் உன்னை முழுசா நம்புறேன். ஒரு வழக்கை டீல் செய்றது எப்படின்னு கத்துக்க நினைக்கும் உன் ஆர்வம் நல்லாத் தெரியுது. அதனாலதான் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணி உனக்கு விளக்கம் கொடுக்குறேன்” என்றான்.

ஜென்னின் தந்தை காவல்துறை பணியில் இருக்கும்போதே இறந்ததால் அவரின் பணியிடம் மகள் என்ற அடிப்படையில் ஜென்னிற்கு கிடைத்தது. யாருமில்லா நிலையில் நிலையான வேலை மிக முக்கியம். அதுவும் அரசு வெலையாக இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு என்று நினைத்தவள் யாருமற்ற தனிமையில் தன்னுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே காவல் துறையில் சேர்ந்தாள். நாளடைவில் அவ்வேலையில் அவளுக்கு விருப்பம் தானாகவே வந்திருந்தது. ஆனால் பலவற்றை கற்றுக்கொள்ள அவளுக்கு சரியான வழக்குகளோ… திறமையுள்ள மேலதிகாரியோ வாய்க்கவில்லை. அதனை இப்போது பாரியின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ள அவள் நினைக்க… அதனை உணர்ந்த பாரியும் அவளுக்கு வழக்கின் நுனி முதல் தான் செய்வதை எல்லா வகையிலும் தெரியப்படுத்தினான்.

அதாவது நான் உன்னை நம்புகிறேன். அதனாலேயே வழக்கைப்பற்றி அனைத்தும் உன்னிடம் சொல்கிறேன். உன்னிடம் சொல்லும் விடயம் யாவும் நம்மைத்தாண்டி யாருக்கும் தெரியக்கூடாது என்று கிட்டத்தட்ட நேரடியாகவே சொல்லியிருந்தான்.

“புரியுது சார்.”

ஜென்னின் திடீர் சார் என்ற விளிப்பில் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

“ஆல்வேஸ் யூ ஆர் மை ஃபிரண்ட் ஜென்” என்ற பாரி “இதை சொல்லி உன்னை அலர்ட் செய்றேன் அவ்வளவுதான். உனக்குத் தெரியாம கூட நாம் பேசுறது இன்னொருத்தர் காதுக்கு போகுங்கிறதை உனக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துறேன்” என்று விளக்கினான்.

தான் அவனை நண்பனாக மட்டுமே பார்த்திருக்க… அவன் தன்னை உடன் வேலை செய்யும் சக பணியாளராக மட்டுமே பார்க்கின்றான். அதனாலேயே தன்னிடம் இவ்வாறு கூறுகிறானென்று தவறாக நினைத்தே ஜென்னும் அவன் தனக்கு மேலதிகாரி எனும் எண்ணத்தில் சார் என்று குறிப்பிட்டு தள்ளி நின்றாள்.

ஆனால் உன் கணிப்பு தவறென்று உடனடியாக அதனை வேறு விதமாக சொல்லியுமிருந்தான் பாரி.

இச்செயலே அவன் எப்போதும் தங்கள் பாரியாகத்தான் இருக்கின்றான். தமிழ் விடயத்தில் மட்டுமே பாரி மாறியிருக்கிறான் என்பதை ஜென்னிற்கு உணர்த்தியது.

‘இதை தெளிவாவே சொல்லியிருக்கலாம். உன்னைத்தாண்டி எந்தவொரு தகவலும் கசிய கூடாதுன்னு.’ அவளால் அப்படி நினைக்காது இருக்க முடியவில்லை.

“கணபதி அங்கிளை வண்டி எடுக்க சொல்லு ஜென்… செம சீன் இருக்கு” என்று வேலை விடயத்திற்கு தாவிய பாரி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான்.

*******

அறைநிலைத்துறை அமைச்சர் ரித்தேஷ்வரன் இல்லம்.

பாரி வந்த வண்டி வீட்டிற்கு முன்னிருந்த கேட்டில் நிற்க… காவலாளி அவர்கள் உள்ளே செல்ல அனுமதியளிக்க மறுத்தார்.

“அமைச்சர் சாரோட அப்பாயின்ட்மெண்ட் இல்லாம வந்தவங்களை உள்ளவிட்டா என் வேலை போயிடும் சார்.” காவலாளி தன் நிலையைக் கூறினான்.

“இவரு சிட்டிக்கு வந்திருக்கும் புது டிசி’ப்பா.” கணபதி பாரி யார் என்பதை கூறிட… சற்று யோசித்த காவலாளி… “அவர்கிட்ட கேட்டு சொல்றேன்” என கேட்டிற்கு உள்ளே உள்ள அவருக்கான இருப்பிடம் சென்று இண்டர்காம் வழியாக பேசியவர் இரண்டு நிமிடங்களில் அவர்களை உள்ளே அனுமதித்தார்.

“வாங்க டிசி சார்.” ரித்தேஷ்வரன் வாயிலுக்கு வந்தே வரவேற்றான்.

ஜென்சியும் கணபதியும் ரித்தேஷிற்கு வணக்கம் வைத்திட… பாரியோ அதனை அசட்டை செய்தான்.

ரித்தேஷ் அவர்களை நேராக தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

“அமிர்தா வழக்கில் என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பும் தரேன்” என்றான்.

பாரி எதுவுமே பேசாது சொல்லாது கேட்காது… எடுத்ததும் ரித்தேஷ் அவ்வாறு சொல்லியது பாரிக்கு நெருடலாக இருந்தது.

‘வான்ட்டடா வாய் கொடுக்கிறானே!’

“நீங்க ஆளுங்கட்சி அமைச்சர். உங்களை விசாரிக்க முடியுமா சார்? நீங்களா பார்த்து உங்களுக்குத் தெரிந்ததை சொன்னா அதுவே போதும்.”

பாரி கூறியதில் கணபதியும் ஜென்சியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“நோ நோ மிஸ்டர்.பாரி. நான் அமைச்சர், அரசியல்வாதி அதுக்காக எந்த சலுகையும் வேண்டாம். உங்க விசாரணை எப்படியோ அப்படியே என்கிட்ட நடந்துக்கலாம்.”

“இவனை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு அங்கிள்.” பாரியின் குணமறிந்த ஜென்சிக்கு… பாரி நினைப்பதை அவன் கேட்காமலேயே ரித்தேஷ் பாரிக்கு வேண்டியதை செயல்படுத்துகிறானே என்று தான் தோன்றியது.

“அதுக்கு… நீங்களும் மத்தவங்களும் ஒண்ணா சார். மத்தவங்ககிட்ட காட்டும் விசாரணையை உங்ககிட்ட காட்ட முடியுமா?” என்றான் பாரி.

“இது உலகமகா நடிப்புடா சாமி.” கணபதியிடம் முணுமுணுத்த ஜென்சி கண்களை மூடி தலையை உலுக்கி பாரியின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்க முயற்சித்தாள்.

“இதற்கு முன் விசாரித்த இன்ஸ்பெக்டர் உங்க ஆளுன்னு தெரிஞ்சுது. அவர் இதை பாதியில் விட்டதிலே தெரியுது. எதுக்கு நான் வீணா உங்களை மாதிரியான பெரிய ஆட்களை பகைச்சுக்கணும். இந்த கேசுக்காக வந்ததால கொஞ்ச நாளுக்கு அதைப்பற்றி விசாரிக்கிறப்போல சுத்திட்டு லாஸ்ட்டா தற்கொலைன்னு மூடிடுறேன்” என்றான்.

இப்போது பாரியை நம்புவதா வேண்டாமா எனும் குழப்பத்தில் யோசனையோடு அவனை ஏறிட்டான் ரித்தேஷ்.

பாரியின் முகத்திலோ வரவழைக்கப்பட்ட பவ்யம். ரித்தேஷ் கூர்ந்து நோக்கியதும். வராத புன்னகையை உதட்டினை இழுத்து வைத்து, கொண்டு வந்தான்.

பாரியின் அந்த பாவனைகளில் ரித்தேஷ் சற்று ஏமாந்து தான் போனான்.

ஏதோ பாரியிடம் ரித்தேஷ் சொல்லவர,

பாரி ஜென்சிக்கு கண் காட்டினான்.

புரிந்துகொண்ட ஜென்சி ரித்தேஷ் பேசுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தாள்.

“இது கொலையாக இருக்க சான்ஸ் இல்லை மிஸ்டர்.பாரி. நூறு சதவீதம் தற்கொலை தான். அதனால இந்த கேசை நீங்க இன்னைக்கே கூட க்ளோஸ் பண்ணிடலாம்.”

ரித்தேஷின் பேச்சில் மனைவி இறந்துவிட்டாள் என்று துளி வருத்தமும் தென்படவில்லை.

மூன்றாம் மனிதர் இறந்துவிட்டார் என்ற  மனிதாபிமான வருத்தமும் இல்லை.

“ஓகே சார். அப்போ எனக்கு இந்த வழக்கில் வேலையில்லை” என்ற பாரி…

“அப்புறம் யார் சார் என்னை இங்க வரவழைச்சிருப்பா?” என்று விடையறிந்துகொண்டே வினவினான்.

அதில் ரித்தேஷின் கருவிழிகள் ஒரு நொடி அலைப்புற்றன.

பாரியின் கழுகு விழிகள் அதனை கவனமாகக் குறித்துக்கொண்டது.

“ஏன் கேட்கிறேன்னா பெங்களூரிலிருந்து இங்க எனக்கு தேவையில்லாத அலைச்சல் பாருங்க” என்றான்.

“பட் ஹோம் மினிஸ்டர் இன்ப்ளூயன்ஸ் இதில் இருந்ததா…” பாரி தன் புருவம் கீறீனான்.

ரித்தேஷின் பற்கள் அரைபடும் சத்தம் பாரிக்கு நன்கு கேட்டது.

“ஓகே சார் நான் கிளம்புறேன்” என்று இருக்கையிலிருந்து எழுந்துகொண்ட பாரி… “இனி வீட்டிலிருந்து கொண்டே ஊருக்கு போயிருப்பதா சொல்ல வேண்டாம் மிஸ்டர்.ரித்தேஷ்” எனக்கூறி தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

பாரியின் தோரணையில் ரித்தேஷின் முகத்தில் முடிச்சு.

“என்னடா வந்ததும் ஒரு மாதிரி இருந்த என்கிட்ட இப்போ வேற மாதிரியான தொனி தெரியுதா?” எனக் கேட்டவன்… “நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நீங்களா வாய் கொடுத்தீங்களா சோ, நான் போட்டு வாங்க முயற்சி பண்ணேன்” என்று சர்வசாதாரணமாக தோளை குலுக்கினான்.

பாரியின் இந்த திமிர் பேச்சு ரித்தேஷை சீண்டி பார்த்தது.

“அப்படியே இது தற்கொலையாவே இருந்தாலும்… ஒரு கணவனா மனைவி தற்கொலை செய்துகொள்ள என்ன காரணமிருக்கும் அப்படின்னு தெரிஞ்சிக்கத்தான் நீங்க நினைச்சிருக்கணும். அதைவிட்டு வழக்கை மூட சொல்லி என்கிட்டவே சொல்றீங்க. இதுவே எனக்கு பெரிய லீட் தான். இதை வச்சே என்னால அமிர்தாவின் இறப்புக்கு யார் காரணம்ன்னு தொண்ணூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியும். ஆனால் பாருங்க சட்டத்துக்கு மீதமிருக்கும் பத்து சதவீத ஆதாரம் தேவைப்படுது” என்றான்.

பாரியின் முன் ரித்தேஷின் முகம் கறுத்து சிறுத்தது.

பாரியை ஒரு நொடியாவது ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டுமென நினைத்தான்.

“அமிர்தா உங்களோட எக்ஸ் தானே பாரி. அந்த காதல் தான இந்த வழக்கு மேலிருக்கும் ஆர்வத்துக்கு காரணம்?”

பாரியிடம் ரித்தேஷ் எதிர்பார்த்த எவ்வித உணர்வுமில்லை. சத்தமாக சிரித்தான்.

ஆனால் ஜென்சியின் உடலில் இதற்கான பாரியின் எதிர்வினையை எண்ணி சிறு நடுக்கம் பரவி ஓடியது.

கணபதி கண்களை அகல விரித்திருந்தார்.

“எக்ஸ்ஸா?” என்ற பாரி, “அய்யோ நாம நினைத்தது கிடைக்கலயேங்கிற ஏக்கம் மனசோட ஓரத்தில் எங்கையாவது கொஞ்சமாவது இருந்தாதான அந்த எக்ஸ் என்கிற சொல்லுக்கே அர்த்தம். அப்படி பார்த்தா அவங்க, ஐ மீன் உங்களோட வைஃப் என் எக்ஸ் கிடையாது” என்று சொல்லி ரித்தேஷை அதிர வைத்தான்.

ரித்தேஷ் அதற்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியாது உறைந்து நின்றிருந்தான்.

“அப்புறம் ரித்தேஷ்… இதுவே ஓகே தான உங்களுக்கு. மிஸ்டர் சொல்ல கஷ்டமா இருக்கு” என்றவன் இனி விசாரணைக்கு இங்க அடிக்கடி வருவேன். நிறைய சந்திக்கலாம். வரட்டா?” என்று அவனை கேலி செய்துவிட்டு அறையின் வாயில்வரை வந்தவன்…

“அமிர்தா உங்களுக்கு ஒன் சைட் லவ் தான?” எனக்கேட்டு மீண்டும் ரித்தேஷை அதிரச் செய்துவிட்டே அங்கிருந்து சென்றான்.

ரித்தேஷ் அமிர்தாவை ஒரு தலையாக காதலித்தது அமிர்தா இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அமிர்தாவிற்கே தெரியும். ரித்தேஷ் எங்கும் எப்போதும் அவனின் காதலை வெளிப்படுத்தியதில்லை. அப்படியிருக்க பாரிக்கு எப்படித் தெரிந்தது. இதன் மூலம் அவன் என்னவெல்லாம் தெரிந்து கொண்டிருப்பான்.

ரித்தேஷிற்கு ஒரே பீதியாக இருந்தது.

*****

தமிழ் அப்படி பேசுவாளென்று நீபா சற்றும் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டாள்.

காதல் ஒருவரின் சிபாரிசில் வருமா? அத்தோடு காதல் ஒருவர் மீதிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தொல்லையாக இருந்திடத்தான் தோன்றுமா?

காதலின் அடிப்படையில் விட்டு கொடுத்தல் மிக முக்கியமானது. அந்த விட்டுக்கொடுத்தல் அவர்களுக்காக அவர்களையே விட்டுக்கொடுக்க வைக்கும்.

அவியின் மீதான நீபாவின் காதலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை பிறர் சொல்லிடாது தானகவே அவளால் உணர்ந்திருக்க முடியும்.

தன்னை வேண்டாமென்று சொல்லியவனை தன் பின்னால் சுற்ற வைத்திட வேண்டுமென்கிற பழிவாங்கல் மட்டுமே அவளிடம். அந்த எண்ணமே பிறரிடம் கேட்டோ அல்லது பிறர் சொல்லியோ காதலை பெற முடியாது என்பதை நீபாவை உணர விடவில்லை.

இதில் தான் கேட்டது மற்றும் கேட்டமுறை தவறில்லை. தனக்கு திமிராக பதிலளித்த தமிழ் பேசியவையே தவறு என்று கருதிய நீபா தமிழின் மீது கட்டுகடங்கா கோபம் பெறுக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமளவிற்கு அமர்ந்திருந்தாள்.

“என்ன நீபா… நம்ம டி.எல் புதுசா வந்த பொண்ணுகிட்ட ரொம்பத்தான் ஒட்டிக்கிட்டு சுத்துறாரு. அப்போ நீ அவ்வளவு தானா? கடைசிவர அவர் உன்னோட காதலை ஏத்துக்குபோறது இல்லை போலிருக்கே!” நீபாவிற்காக வருத்தப்படுவதைப்போல் அவளை டிரகர் செய்து கொண்டிருந்தாள் அவளின் நண்பி சுனிஷா.

“ஹேய் அவளே ஏதோ கோபத்திலிருக்கா, இதுல நீ வேற ஏண்டி ஏத்தி விடுற மாதிரி பேசுற” என்றாள், நீபாவின் உண்மை குணமறிந்து நல்ல தோழியாக அதனை மாற்ற முடியாது அவளுக்காக வருந்தும் சாரு.

“ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்திட்டு உங்க வேலையப் பாருங்க.” கோபத்தில் கத்தியிருந்தாள் நீபா.

“புதிதாக வந்த அந்த பொண்ணு உன்னை அவ்ளோ பேசிவிட்டான்னு உனக்காக வந்தா ரொம்பத்தான்” என்று சுளிப்புடன் சுனிஷா தன் இருக்கையை நகர்த்திக் கொண்டாள்.

ஆனால் சாருவால் நீபாவை அப்படியே விட்டுவிட முடியாதே. நீபா நல்லவளோ கெட்டவளோ சாருவிற்கு அவள் உண்மையான நட்பு.

“என்னாச்சு நீபா?” கனிவான அக்கறையுடன் வினவினாள் சாரு.

நீபாவும் நடந்ததை சொல்ல… சாருவிற்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. நீபா மீதெழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டு அவளுக்காக பேசினாள்.

“அவங்க பேசியதில் தப்பேதும் இல்லையே நீபா” என்ற சாருவை அவள் அர்த்தமாக ஏறிட…

“இப்படி முன்ன பின்னத் தெரியாதவங்க எடுத்ததும் நான் உன் ஃபிரண்டை லவ் பண்ணுறேன் அவனையும் என்னை லவ் பண்ண சொல்லுன்னு சொல்றதெல்லாம் அபத்தமில்லையா?” எனக்கூறி…

“இதே மாதிரி ஒரு பையன் வந்து என்கிட்ட உன் ஃபிரண்டை அதாவது உன்னை லவ் பண்ண வைக்க முடியுமான்னு கேட்டால் அறைஞ்சு கூட இருப்பேன். ஏன் நீயும் அதைத்தான செய்திருப்ப… பசங்க பண்ணா மட்டும் தான் தப்புன்னு இங்க எதுவுமில்லை நீபா. நீ கேட்டது சரியாக்கூட இருக்கலாம். ஆனால் கேட்ட முறை… ரொம்ப தப்பு” என்று முடித்தாள்.

“நான் தன்மையாத்தான் கேட்டேன் சாரு.”

சாருவிற்கு அய்யோ என்று வந்தது.

“ஓகே. நீ தன்மையாத்தான் கேட்டேன்னே இருக்கட்டும், எந்த நம்பிக்கையில் அந்த பொண்ணுகிட்ட போய்ட்டு உன் லவ்வுக்கு நீ ஹெல்ப் செய்யகேட்ட… அவங்களையே நீ இன்னைக்குத்தான பார்க்கிற. அப்போ இது தப்பில்லையா?” என்று அழுத்தமாக சொல்லிய சாரு…

“விருப்பமில்லாம எப்படி லவ் பண்ண முடியும் நீபா? அவி உனக்கு ஆரம்பத்தில் மென்மையாத்தான மறுப்பு தெரிவித்தார். அவர் உன்னுடைய காதலுக்கு கொடுத்த மரியாதையைக்கூட நீ கொடுக்கல.

ஆரம்பத்தில் உன்னுடையது காதல் தான். ஆனால் இப்பவும் அவி சார் மேல உனக்கு காதல் மட்டும் தான் இருக்கா?” என்று கேட்டு,

“எனக்கு அப்படித் தோணல!” என தன் பேச்சை முடித்துக்கொண்டாள்.

எவ்வளவு தான் நல்லதை எடுத்துக் கூறினாலும் ஒரு சிலர் படும்வரை திருந்துவதில்லை.

அடித்து பழுக்க வைக்க முடியாது என்பது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.

அதனை ஏனோ நீபா அறிந்திருக்கவில்லை.

தன் மீதான தவறினை இப்போதுக்கூட உணர்ந்துகொள்ளாமல் தேவையில்லாது தமிழ் மீது வன்மத்தை வளர்த்துக்கொண்டாள்.

இந்த சின்ன விடயத்திற்கெல்லாம் பழிவாங்கும் எண்ணம் வருமா என்றால், பக்கத்து வீட்டிலிருந்து காற்றில் வரும் குப்பைகளுக்கே சண்டையிடும் சாதாரண மனிதர்கள் தானே நாம்.

நீபாவிற்கு தமிழைப்பற்றி முழுதாக தெரியவில்லை. தெரிந்துகொள்ளாது தமிழிடம் வாலாட்ட நினைக்கிறாள்.

இன்னும் நன்றாக தமிழிடம் வாங்கிகட்டிக் கொள்ளப்போகிறாள் என்று தெரிந்திருந்தால் தமிழை விட்டு தூரம் இருந்திருப்பாளோ.

தமிழை ஏதேனும் செய்தாக வேண்டுமென்ற எண்ணத்தில் அவியின் மீது தான் கொண்டுள்ளது காதலென்று நினைக்கும் அவளின் அந்த காதல் கூட பின்னுக்கு சென்றிருந்தது.

தமிழை வருத்த நினைத்து மேலும் மேலும் அவியின் வெறுப்பை சம்பாதிக்க இருக்கிறாள் பாவம்.

_____________________

ரித்தேஷின் வீட்டிலிருந்து பாரி வெளியேறுவதற்கு முன் அவனது கண்கள் வரவேற்பறையில் இருந்த ஒருவரின் மீது படிந்து விலகியது.

பாரியை கண்டதும் அவ்வுடலில் தென்பட்ட மெல்லிய பதற்றம்… சட்டென்று முகத்தில் அரும்பிவிட்ட வியர்வை என எதுவும் பாரியின் அளவெடுக்கும் கண்ணிலிருந்து தப்பவில்லை.

கூலர்ஸை ஒற்றை விரலால் கீழிறக்கி அடி கண்களால் பார்த்தவன்… நொடியில் கண்ணாடியை மேலேற்றி வெளியேறியிருந்தான்.

அந்த நபருக்குத்தான் அவஸ்தையாக இருந்தது.

இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. முடிந்தளவு விரைவாகவே பாரியை நேரில் சந்தித்திட வேண்டுமென முடிவெடுத்து தன் அலைபேசியை எடுத்தவரிடமிருந்து அது பறிக்கப்பட்டது.

“அதான் லேண்ட்லைன் இருக்கே அப்புறம் எதுக்கு உங்களுக்கு மொபைல். நானே வச்சிக்கிறேன்” என்று தன்னுடைய சட்டை பையில் போட்டுக்கொண்டான் ரித்தேஷ்வரன்.

பாரி வந்து சென்றதிலிருந்தே ரித்தேஷிற்க்கு பயம் எட்டிபார்க்கத் துவங்கியிருந்தது.

பாரியின் பேச்சு மற்றும் தோற்றத்திலிருந்தே மற்ற காவலர்களிலிருந்து அவனை தனியாகக் காட்டியது. மற்றவர்களிலிருந்து பாரி வித்தியாசமாக இருந்தான்.

தன் மூலமாகவே விடயத்தை அறிந்துகொள்வான் என ரித்தேஷ் நினைத்து பார்க்கவில்லை.

இந்த வழக்கிற்காக பாரியை நியமித்துள்ளார்கள் என அறிந்தது முதல்… பாரியின் பணி பற்றி அனைத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டவன்… பாரி வரக்கூடாது என்பதற்காக செய்யாத தகிடுதத்தம் இல்லை. இருப்பினும் அவனுக்கும் மேலான ஒருவரின் மூலம் பாரி வருவது உறுதியான பின்பு ரித்தேஷ்க்கு தூக்கம் தொலைந்தது என்பது உண்மை.

பாரியின் அதிரடியை விசாரித்து தெரிந்து கொண்ட ரித்தேஷ்க்கு அவனை நேரில் சந்திப்பது சற்று கலவரமாகத்தான் இருந்தது. அதனால் தான் ஜென்சி சந்திப்பிற்கு அனுமதி கேட்ட போது பொய் கூறி மறுத்தான்.

அவனானால் இப்படி திடீரென்று நேரில் வந்து நிற்பானென்று எதிர்பார்க்கவில்லை. அத்தோடு, அவனை கணிக்க முடியாது அவனது பல்வேறு வகையான பேச்சில் குழம்பிப்போய் இருக்கின்றான்.

தன்னுடைய வக்கீலுக்கு அழைத்தவன், அவரின் வருகைக்காகக் காத்திருக்கிறான்.

வந்தவரோ…

“உங்க மனைவி தற்கொலைக்கு நீங்க காரணமா இல்லாதப்போ எதுக்கு சார் பயப்படுகிறீங்க. உங்க பயம் உங்க மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்” என்றிட… உண்மையை அவரிடமும் சொல்ல முடியாது மருகினான் ரித்தேஷ்வரன்.

உண்மை தனக்குள் தன் ஒருவனிடம் இருக்கும்வரை மட்டும் தான் தனக்கு பாதுகாப்பு என்பதில் தெளிவாக இருந்தவன் தன்னுடைய வக்கீலிடம் கூட நிஜம் என்ன என்பதை சொல்லியிருக்கவில்லை.

அமிர்தாவின் கணவன் எனும் முறையில் என் மீது விசாரணை ஆரம்பித்தால் பார்த்துக்கொள்ளும்படி மட்டுமே சொல்லியிருந்தான்.

“நீங்களும் இதனை கொலைன்னு சந்தேகிக்கிறீங்களா சார்?”

“ஹாங்…”

வக்கீலின் கேள்விக்குத் தடுமாறிய ரித்தேஷுக்கு… தற்கொலை எனும் நிலையிலிருந்த இவ்வழக்கினை கொலை எனும் நிலைக்கு சந்தேகிக்க வைத்து… இன்று அது பாரியின் கைக்கு கொண்டு செல்ல காரணமாக இருந்த அந்த நபரின் மீது கொலைவெறி எழுந்தது அவனுக்கு.

ஆனால் இப்போதிருக்கும் சூழலில் அவரையும் ஒன்றும் செய்ய முடியாதே. அடுத்தடுத்து அசம்பாவிதம் என்றால் தான் கண்காணிக்கப்படுவோம் என்கிற யூகமே ரித்தேஷை பொறுமையாக இருக்க வைத்துள்ளது.

காவல் நிலையத்தில்…

“அமிர்தா மொபைல் பத்தி ஒண்ணுமே ஒன்றுமே கேட்கலையே?”

“ராயப்பன் கொண்டுவந்து கொடுப்பார்.”

பாரியின் பதிலை ஜென்சியால் ஏற்க முடியவில்லை.

“அவர் தான் கொலைக்கு காரணமே. அவர் எப்படி?”

பாரி சிரித்து விட்டான்.

“கணபதி அங்கிள் உங்களுக்கு யாருன்னு எனி கெஸ்?”

அங்கிருந்த போர்டில் ராயப்பனின் பெயரை எழுதிய பாரி… ரித்தேஷின் வீட்டிலுள்ள அந்நபரின் பெயரையும் எழுதி வட்டமிட்டான்.

“இந்த கேஸ் என் கைக்கு வர காரணம் இவர்தான்” என்று அந்த மூன்றாம் மனிதரை சுட்டிக்காட்டிய பாரி… “நான் ட்ரெயினிங் பீரியடில் இருக்கும் போது இவர்தான் காவல்துறை அமைச்சர்” என்றான்.

“இவர் ஒன்றரை வருஷம் முன்பு, தானே பதவியை ரிசைன் செய்துட்டு அரசியலிலிருந்து முழுசா ஓய்வு பெற்றார்.” கணபதி முன் வந்து கூறினார்.

“எனக்கும் தெரியும். ஒரு மீட்டிங்கில் இவரிடம் பேசியிருக்கேன். ரொம்ப கைண்ட்.” சொல்லிய ஜென்சிக்கு ஒப்புதலாக தலையசைத்தான் பாரி.

“அப்போ ஒரு சிக்கலான கேஸ். குற்றவாளி தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கு இடையில் தன் குற்றங்களை செய்துட்டிருந்தான். இரண்டு அரசுக்கும் பெரும் தொல்லையா இருந்ததால்… இரண்டு மாநில போலீஸில் சிலர் அண்டர்கிரவுண்டில் வேலை பார்த்து குற்றவாளியை பிடிச்சோம். அதுல ஒரு நபர் நான். அப்போ எனக்கு இவர் பழக்கம். அப்போ அவர் என்னை மெச்சுதலா பார்த்த ஒரு பார்வை அதை இப்பவும் மறக்க முடியாது.

அதுல என்மேல கொண்ட நம்பிக்கையாலதான் இந்த வழக்கை என் கைக்கு கொண்டு வந்திருக்கார்” என்றான்.

“நீ இங்க வந்ததுக்கு பின்னால இவ்வளவு இருக்கா?” ஜென்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெரிய இடத்தில் தும்மினால் கூட அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமென்று.

“அப்போ ஏன் நீ அவரை ரித்தேஷ் வீட்டில் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல.” ஜென் தன்னுடைய சந்தேகத்தை வினவினாள்.

“அவருக்கு அதில் விருப்பமில்லை.”

“அன்னைக்கு மாலில் கூட… நீ அவரை பார்க்கல. யாருன்னு தெரியாததைப்போல…”

“யாருன்னு தெரியாது தான் போனேன். பட், அவரா இருக்கும் எதிர்பார்க்கல. பிக்காஸ் அவர் ரித்தேஷின் அப்பாவா இருப்பாருன்னு…” தோளை உயர்த்தி இரு உள்ளங்கையையும் விரித்து உதடு சுளித்தான்.

“சரி இப்போ நாம விஷயத்துக்கு வருவோம்” என்றவன்,

“என்ன அங்கிள் நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலையே” எனக் கேட்டான்.

“யாருன்னு தெரியலங்க சார். ஆனால் ராயப்பன் நிச்சயம் குற்றவாளி கிடையாது.”

“எப்படி சொல்றீங்க அங்கிள்…” ஜென்னிடம் தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வம்.

“தப்பு செய்யுற யாரும் இப்படி வெளிப்படையா பயத்தை காட்டமாட்டாங்க.”

“குட் அங்கிள்…” பாரி.

“அப்புறம் எதுக்கு அவர் பயப்படனும் பாரி.” ஒவ்வொரு பதிலுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ஒளிந்திருக்கும் இதுபோன்ற வழக்குகளில்.

“ராயப்பன் எனக்கு யாரு ஜென்?” எனக் கேட்டவனே பதிலும் வழங்கினான்.

“அவரை பொறுத்தவரை எனக்கு அவர் எதிரி. அவர் மீதான கோபத்தில் எங்க அவர் மகள் வழக்கில் அசட்டையா இருந்துடுவேனோ… அதனால் குற்றவாளி தப்பி விடுவானோங்கிற எண்ணத்தால் என்னை டிரகர் செய்து முடுக்கிவிடப் பார்க்கிறார். அதுக்குத்தான் அந்த இல்லாத பயம்.

அவர் பயத்தை வைத்து… அவர் தான் குற்றவாளின்னு நான் முடிவு செய்துட்டா அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதற்கு முயல்வேன்… அப்படி அந்த வழியில் செல்லும்போது ராயப்பன் மீது குற்றமில்லை என்ற நிலையில் உண்மை குற்றவாளி பிடிபடுவான் இல்லையா? அதற்குத்தான் அவரின் தந்திரம் இந்த பயம். என்கிட்ட வேண்டாத பேச்சுக்களை எல்லாம் பேசியது” என்று துல்லியமாக ராயப்பனைப்பற்றி தான் கணித்ததைக் கூறினான்.

“அப்போ குற்றவாளி?”

“சந்தேகம் தான்… கண்டுபிடிச்சிடலாம்.”

“கேஸ் முடிஞ்சிடுச்சா?”

“மே பீ.”

“அதுக்குள்ளவா?”

“ஏன் இவ்வளவு ஷாக்?”

“இந்த கேஸ் முடிஞ்சா போயிடுவேன்னு சொன்னியே?”

“அமிர்தா தற்(கொலை)க்கு பின்னால பெருசா ஒன்னு இருக்கு ஜென். அதுவும் என்னன்னு தெரிந்தால் தான் கேஸ் க்ளோஸ் ஆகும்.”

பாரி இங்கு வந்ததே இந்த வழக்கிற்காகத்தானே என்றாலும்… அருகருகே இருக்கும்போது கோபம் குறைந்து தன் நண்பர்கள் இணைந்து விட வேண்டுமே என்ற அவளின் வேண்டுதல் பலித்திடும் முன்னே பாரி சென்றிடுவானோ என்கிற கவலை ஜென்சிக்கு.

“நான் இங்க வந்தது இந்த கேஸிற்காக மட்டும் தான் ஜென்.” என்னவொரு அழுத்தம் வார்த்தையில்.

ஜென்னின் எண்ணவோட்டம் புரிந்ததோ என்னவோ தன் மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணம் துளியும் இல்லை என்பதை வலுவாகக் கூறினான்.

அதற்கு ஜென்னிடம் முறைப்பு மட்டுமே.

தான் ஏதும் இதற்கு பதில் கொடுத்தால் மேற்கொண்டு அவன் வாதாடுவான் அல்லது அவனது பிடிவாதத்தின் அளவு கூடும் என்பதால் ஜென் எதுவும் கூறவில்லை.

கணபதி அவர்கள் இருவரும் வழக்கினைப் பற்றி பேசினால் மட்டுமே ஆழ்ந்து கவனிப்பார். ஏதேனும் தனிப்பட்ட விடயங்கள் பேசினால் மௌனமாக அங்கிருந்து அகன்றிடுவார். இப்போதும் அவர் சென்றிருக்கவே, ஜென் முடிந்த மட்டும் அவன் சொல்லியதன் மீதான கோபத்தை முறைப்பில் காட்டினாள்.

“நீ முறைச்சாலும் நான் வந்ததுக்கான காரணம் உன் ஃபிரண்டோட சேர்ந்து வாழன்னு ஆகிடாது ஜென்.”

“ஹோ… என் ஃபிரண்டா? குட் ஜோக். பரவாயில்லையே உன் ஃபிரண்டை விட்டுலாம் கொடுக்குற. சூப்பர் பாரி. அவள் உனக்கு ஃபிரண்ட் இல்லையா?”

இதற்கு பாரியிடம் பதிலில்லை என்பதைவிட… வெறுப்பவளிடம் பேச்சின் மூலம் உரிமையை காட்டிட அவனுக்கு விருப்பமில்லை.

இதே வலுவோடும் உறுதியோடும் பாரி இருந்திடுவானா? அதற்கு தமிழ் விட்டுவிடுவாளா?

பாரியின் மௌனத்தை கண்டு எரிச்சலுற்ற ஜென்…

“போடா” என்று சென்றுவிட்டாள்.

பாரியிடம் சன்னமான சிரிப்பு.

நெடு நாட்களுக்குப் பின்னர் தமிழை பார்த்ததும் பழைய நினைவுகளினாலும், அவள் கழுத்தில் தாலி கட்டியவன் என்கிற நினைப்பிலும் சற்று இலகத்தான் செய்தான்.

ஆனால் பூ என்கிற ஒற்றை எழுத்து பெயர்… அவனை ஆட்டிப்படைகிறதே. அவனும் என்ன தான் செய்வான்.

ஒரே ஒரு முறை தமிழின் இடத்திலிருந்து யோசித்தால் பாரிக்கு அனைத்தும் விளங்கிடுமோ!

அதிலும்… அவி சொல்லிய தமிழுக்கு உன் மீது காதல் என்கிற வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக அவனை ஆட்டிப்படைகிறது.

எப்போதும் அவியின் அந்த வார்த்தைகள் அவனது செவிக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க… இறுக்கமான அவனது இதயத்தில் மெல்லிய அசைவு. தமிழுக்கு இசைந்து கொடுத்திடுமோ என்கிற அச்சம் அவனுள். பயம் என்பதை அறியாதவன் தன் வாழ்வில் வந்த பெண்ணால் மட்டுமே பயம் என்பதை அறிகிறான்.

நட்பு என்பதை கொஞ்சம் நகர்த்தி வைத்தால் அவனது வாழ்வு நேர்பட்டுவிடும். ஆனால் அதனை செய்திட அவனுக்கு ஏனோ மனமில்லை.

அப்படியே மெல்ல மெல்ல பூவின் நினைவில் அமிழ்ந்து போனான். இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

வெளியில் மென் சாரலாக மழை பொழியத் தொடங்கியிருந்தது.

இரவு பணியில் இருக்க வேண்டியவர்களைத் தவிர்த்து அனைவரும் கிளம்பியிருந்தனர்.

“சார்…”

கணபதியின் விளிப்பில் மெலிதாக இமை பிரித்தான்.

“மழை அதிகம் வரும் போலிருக்கு சார். கிளம்பலாமா?”

சன்னல் வழியாக வெளியில் பார்த்தான்.

இருட்டத் தொடங்கியிருந்தது.

சாலையோர மின் கம்பங்களின் வெளிச்சத்தில் சாரல் துளிகள் மின்னின.

“நீங்க கிளம்புங்க அங்கிள்” என்றவன் “ஜென்சி?” என கேள்வியாக இழுத்தான்.

“மேடம் அப்பவே போயிட்டாங்க சார்” என்றவர் சல்யூட் வைத்து விடை பெற்றார்.

இரண்டு மூன்று காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

அறையை விட்டு வெளியில் வந்தவன்…

“நான் வெளியில வரும்வரை யாரும் டிஸ்டர்ப் செய்யாதீங்க” எனக் கூறிவிட்டு மீண்டும் தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்.

அமிர்தா வழக்கின் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும், கோர்வையாக மனதில் கொண்டு வந்தவன் அதனை ஒவ்வொன்றாக அங்கிருந்த போர்டில் எழுதினான்.

இதுவரை அவன் கண்டறிந்தது, கேட்டறிந்தது, ராயப்பன் மற்றும் ரித்தேஷ் வீட்டில் தன் கண்ணில் சந்தேகமெனப்பட்டது என்று அனைத்தையும் எழுதி முடித்தவன்… இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றான்.

மார்பிற்க்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டவன் கால்களை அகட்டி வைத்தபடி, கேண்டியை பிரித்து வாயிலிட்டான்.

பாரியின் கூர்மையான பார்வை போர்டில் அசையாது பதிந்தது.

மனதிலுள்ள சந்தேகங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் மனதில் கொண்டு வந்தவன் தன்னுடைய யூகத்தின்படி அனைத்திற்கும் கோர்வையானவற்றை இணைத்து இப்படித்தான் நடந்திருக்கும் எனும் வகையில் நடந்த இறப்பிற்கு காரணமான நிகழ்வை வரையறுத்திருந்தான்.

அந்நிகழ்வு அப்படித்தான் நடந்திருக்குமென்று அவன் எண்ணவில்லை. அப்படியும் நடந்திருக்கலாம் என்பது அவனின் யூகம்.

ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்பு அக்கட்டுரையில் என்னென்னவற்றை கொண்டுவர வேண்டுமென சிறு தொகுப்பாக சிலவற்றை எழுதி வைப்போமே அதேபோல் தான் அமிர்தாவின் இறப்பு இப்படி நடந்திருக்கலாம் என்று பாரி வரையறுத்து வைத்திருக்கும் நிகழ்வும்.

ஓரளவு நெருங்கிவிட்டான். குற்றவாளி வசமாக பாரியின் கைகளில் சிக்கும் நாள் தொலைவில் இல்லை.

மொத்தமாக வழக்கில் மூழ்கிப்போனவன்… நேரத்தினை பார்த்திட

நேரம் இரவு உணவு வேளையை கடந்திருந்தது.

வெளியில் வந்தவன் கந்தனிடம் தேநீர் ஒன்றை வாங்கி பருகிவிட்டு மீண்டும் தன்னிருக்கையில் அமர்ந்துவிட்டான்.

மழையும் வலுக்கத் துவங்கவே… வீட்டிற்கு போனால் தமிழ் பற்றிய பேச்சோ அல்லது அவளோ கருத்திலோ அல்லது கண்ணிலோ படுமோ என்பதால் வீட்டிற்கு செல்லும் நினைப்பில்லாது காவல் நிலையத்திலேயே இருந்துவிட்டான்.

அந்நேரத்தில் அவியின் அழைப்பு பாரிக்கு.

“வரலையாடா?”

“ம்… வர்றேன்” என்ற பாரி, “ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வரேன். நீ தூங்குடா. என்கிட்ட ஒரு கீ இருக்கு” என்றான்.

“இந்த மழையில் ரவுண்ட்ஸா… டைம் லெவன் டா.”

“மழை விட்றுச்சு அவி.”

“என்னமோ பண்ணு. பைக் வேண்டாம். ஸ்டேஷன் கார் எடுத்துக்கோ.”

“ரொம்பத்தான் அக்கறை. போடா… போ தூங்கு” என்ற பாரி வைத்துவிட, வெளியில் கதவு தட்டும் சத்தம்.

‘இந்நேரத்தில் யார்? தமிழாக இருக்குமோ’ என்ற யோசனையோடு அவி கதவினைத் திறக்க ஜென்சி நின்றிருந்தாள்.

“ஹான்… சொல்லுங்க?”

அவியின் அந்நியத்தன்மையில் அவனை தூக்கிப்போட்டு மிதிக்கும் வேகம் அவளுள்.

ஜென்சி எதுவும் சொல்லாது அவனையே பார்த்திருக்க…

“எதுமில்லைன்னா கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு அவன் கதவினை சாற்றிட… மீண்டும் தட்டினாள்.

“இப்போ உங்களுக்கு என்னதாங்க வேணும்?” வேகமாக கதவை திறந்தவன் அதே வேகத்தோடு கேட்டிருந்தான்.

‘நீதான் வேணும்.’ அவியின் கேள்விக்கு மனதில் சொல்லிக்கொண்டவளுக்கு அவனது கேள்வியில் தான், எதற்கு தான் வந்தோம் என்கிற நினைவே வந்தது.

“தமிழ் ஏதும் சொன்னாளா?” அவி.

தலையில் தட்டிக்கொண்டாள்.

“தமிழுக்கும் உங்க ஷிஃப்ட் தான. அவள் எங்க? இன்னும் வரலையே!” என்றாள்.

“இன்னும் வரலையா?” என்றவன் உள்ளே சென்று அலைபேசியை எடுத்து தமிழுக்கு அழைக்க… அழைப்பு செல்லவில்லை. அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒலித்தது.

“ஓ ஷிட்” என்றவன், வெளியில் சென்று… “ஸ்விட்ச் ஆஃப் வருது” என்றான்.

“எனக்கும் தெரியும். அதனால தான் உன்கிட்ட கேட்டேன்” என்றாள் கடுப்பாக.

“ஹோ… தமிழ் அவள் பேமிலி கோவிலுக்கு வர சொல்லியதால்… ஈவ்னிங் ஆபீஸ் விட்டு கோவிலுக்கு போறேன் சொன்னதால நான் கேப்பில் வந்துட்டேன். அவள் கோவிலுக்கு போன அப்புறம் எனக்குக்கூட மெசேஜ் பண்ணியிருந்தா.

பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்ச நேரம் அவங்களோட இருந்துட்டு வரதா” என்றான்.

“என்கிட்ட சொல்லலயே” என்ற ஜென் தன்னுடைய புலனத்தை திறந்து பார்க்க… அவிக்கு அனுப்பிய அதே தகவல் அவளுக்கும் அனுப்பியிருந்தாள் தமிழ்.

“பட் இவ்வளவு நேரம் ஆகிருச்சே!”

“வீட்டுக்கு போயிருப்பாள்.”

“மாட்டாள்.” தமிழ் பாரியின் வீட்டிற்கு அவனில்லாமல் செல்ல மாட்டாள் என்கிற உறுதியில் ஜென் கூறியிருந்தாள்.

அது அவிக்குமே தெரிந்திருந்த போதும்… பார்வதி வற்புறுத்தி அழைத்து இவள் உடன் சென்றிருந்தால் என்கிற எண்ணத்தாலேயே அவி கூறினான்.

“எந்த கோவிலுக்குன்னு சொன்னாளா?”

“நோ.”

“இப்போ என்ன பன்றது?” என்ற ஜென் பரிதிக்கு அழைத்தாள்.

பரிதி வேலை விடயமாக மும்பைக்கு  விமானத்தில் பறந்து கொண்டிருந்ததால் அலைபேசி அணைத்து வைத்திருந்தான்.

“அண்ணா மொபைலும் ஸ்விட்ச்டு ஆஃப்” என்றவள் நின்ற தூறல் மீண்டும் ஆரம்பிக்கவும், மழை நீர் உடலில் படாமலிருக்க வாயில் நிலைப்படியின் மீதே உள்ளே செல்வதை மறிப்பதை போல் நின்றிருந்த அவியின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் வீட்டிற்குள் நுழைந்து மேலே பட்டுவிட்ட மழை நீரை கைகளால் துடைத்தபடி இருக்க… ஜென்னின் தீண்டலில் எங்கோ மிதக்க ஆரம்பித்த அவி தன்னை இழுத்து பிடித்து நிலை படுத்தினான்.

“ஹேய் எதுக்கு உள்ள வந்த? முதலில் வெளியப்போ” என வாயிலை நோக்கி கை காண்பித்தான்.

அவியின் கத்தலையெல்லாம் அவள் காதிலே வாங்கவில்லை.

“இளா அக்கா நெம்பர் இருக்கா?”

“உன் வீடு பக்கத்தில் தான. போ முதலில்.”

“போறதுக்குள்ள நானைஞ்சிடுவேன்.”

“ச்சைய்… தொல்லை.” சத்தமாகவே கூறி அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

அவியின் தொல்லை என்கிற வார்த்தையில் முனுக்கென துளிர்த்த நீரை வெளியேற்றிடாது வருந்திய மனதை சமன் செய்ய மூச்சினை இழுத்து ஆழ்ந்து வெளியேற்றினாள்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் கோபமாகவாவது இவர்களை பேச வைத்திட்ட தமிழை இருவரும் மறந்தே போயினர்.

அவி அறைக்குள்ளும்… ஜென்சி ஹாலிலும் அமர்ந்து தங்களது வாழ்வில் நடந்துவிட்ட அபத்தத்தை நினைத்து உழன்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
35
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. தமிழ் என்னாச்சு?.