
தூவானம் 53 :
பற்றியிருந்த கையினை பாரி விடுக்கவில்லை. அமர்ந்தது அமர்ந்தபடி, தன்னவளை பார்த்தது பார்த்தபடி இமை சிமிட்டிடவும் மறந்தவனாக சிலையென இருந்தான்.
செவிலி சரியான நேரத்திற்கு பூவிற்கு வேண்டிய மருந்துகளை ஐவி’யில் செலுத்தியது… மாற்றியது என எதுவும் பாரியின் கருத்தில் பதியவில்லை.
தன்னவளின் பூ விழிகள் மலர்ந்திட தவம் கிடந்தான்.
நடுவில் அவி வந்து அவனது கையில் ஆடை அடங்கிய பையை கொடுத்ததோ, சிறிது நேரம் அவனுடன் நின்றிருந்தவன் அறைக்கு வெளியில் காத்திருப்பதோ எதுவும் அறியான்.
அவன் எண்ணம், சிந்தனை, நினைவு, அனைத்தும் அவனின் பூ மட்டுமே நிறைந்திருந்தாள்.
உள்ளத்தில் தன் பேதையிடம் பிதற்றிக் கொண்டிருந்தான். மன்னிப்பை யாசித்தான். காக்க தவறியதற்கு தன்னையே நிந்தித்தான்.
பூ என்ற ஒற்றை எழுத்தை ஓராயிரம் முறை கடந்தும் இதயத்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.
விடிந்தும் சில மணி நேரங்கள் கடந்திருந்தன.
பாரி இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. ஒருவித உறைந்த நிலையில் அவன்.
“பாரி…”
தோள் தொட்ட அவி, “கொஞ்சம் எழுந்து நடக்கவாவது செய்டா… கிட்டத்தட்ட ஆறேழு மணிநேரமா ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்க” என்று சொல்லிட,
“பூ கண் திறந்து என்னை பார்க்கட்டும் அவி” என்றான் பாரி.
அடுத்த நொடியே, “என்னை பார்க்க சொல்லுடா, அட்லீஸ்ட் என்னைத் திட்டவாவது சொல்லு அவி” என்று தனக்கு அருகில் நின்றிருந்த அவியின் வயிற்றில் முகத்தினை பதித்து வெளியேறும் கண்ணீரை மறைத்தான்.
“பாரி… இவ்வளவு நேரமிருந்த பாரி எங்கடா. இன்னும் கொஞ்ச நேரத்தில் தமிழ் நினைவு திரும்பி எழுந்ததும் உன்னை இப்படி பார்த்தால் ஃபீல் பண்ணுவா(ள்)டா” என்ற அவியின் பேச்சில் துளிர்த்த கண்களை துடைத்து நிமிர்ந்து அமர்ந்தான்.
“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணுடா!”
அப்போதுதான் பாரிக்கு அவியிடம் ஆடை கேட்ட விடயமே நினைவில் உதித்தது.
“நீயெப்போட வந்த?”
“ட்ரெஸ் கொடுத்திட்டு வெளியில் தான் இருந்தேன்” என்ற அவி, பாரியின் கை பூவின் கையுடன் இணைந்திருப்பதை பார்த்தபடியே, “நீயிரு வர்றேன்” என்று வெளியில் சென்றான்.
பரிதி வந்தான். அவி அமர்ந்திருப்பதைக் கண்டு அவனுடன் வெளி இருக்கியிலேயே அமர்ந்தான்.
“தமிழ் நினைவு திரும்பிட்டாளா அவி?”
“இன்னும் இல்லை பரிதிண்ணா” என்றவன், “எனக்கு தமிழை விட, பாரியை நினைத்துதான் கவலை அதிகமாகுது பரிதிண்ணா” என்றான்.
பரிதி ஏனென்று காரணம் கேட்டிட,
“கிட்டத்தட்ட எட்டு மணிநேரமா தமிழ் கையை பிடிச்சுக்கிட்டு அப்படியே உட்கார்ந்திருக்கான் பரிதிண்ணா. பாரி தமிழுக்கு அடிக்ட் ஆகிட்டான். அவளை வேண்டான்னு விட்டுபோனவனா இவன்னு இப்போ நம்பக்கூட முடியல” என்றான்.
பரிதியிடம் மென் புன்னகை.
“டாக்டர் என்ன சொல்றாங்க?”
“மார்னிங் செக் பண்ணப்போ, இனி எப்போ வேனாலும் கான்ஷியஸ் திரும்பிடும் சொன்னார்” என்றவன், “வீட்டிலிருந்து யாரும் வரலயா?” எனக் கேட்டான்.
“எல்லாரும் வந்தா இங்க கூட்டம் சேர்ந்தது போலிருக்கும். தமிழுக்கு கான்ஷியஸ் வந்ததும் வரலான்னு சமாளித்து நான் மட்டும் வந்தேன்” என்ற பரிதி கதவை திறந்து பார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டான்.
“என்னண்ணா?”
“பாரியிடம் பேச முடியும் தோணல அவி” என்ற பரிதிக்கு அறைக்குள் தன் தம்பி இருக்கும் தோற்றம் நெஞ்சத்தை கனக்க வைத்தது.
“பூ எழுந்திருடா?” என்ற பாரியின் கெஞ்சல் பரிதியின் காதில் எதிரொலித்தது.
“இவனுக்காகவாவது தமிழ் சீக்கிரம் கண் விழிக்கணும் அவி.” சொல்லிய பரிதியின் கையினை அவி தட்டிக் கொடுத்தான்.
“அவரை தண்ணியாவது குடிக்க வைங்க. இப்படியே இருந்தா, பக்கத்திலேயே அவருக்கும் ஒரு பெட் ரெடி பண்ண வேண்டியது தான்.”
செவிலி பாரியைப்பற்றி சொல்லிச்செல்ல…
பரிதி மற்றும் அவி இருவருக்குமே தாங்கள் சொன்னாலும் தற்போது அது சாத்தியமில்லை என்றே தோன்றியது.
மேலும் இரண்டு மணி நேரம் கடக்க…
பாரி பிடித்து வைத்திருந்த பூவின் கையில் மெல்லிய அசைவு.
பாரியின் தேகம் முழுக்க சிலிர்ப்பு ஓடி பரவியது.
“பூ…” அவனின் இதழ்கள் மென்மையாய் முணுமுணுத்தது.
பூவின் மூடிய விழிகளுக்குள் கருவிழி உருண்டு நின்றது. நெற்றி சுருங்கிட, இமை திறக்க முடியாது தலையை இட வலம் மெதுவாக அசைத்தாள்.
கையில் அழுத்தம் கொடுத்தவன்,
பூவின் புருவத்தை மெல்ல நீவிவிட்டான்.
அவனின் தொடுகையை அந்நிலையிலும் உணர்ந்தாளோ…
“வேந்தா” என அவளின் வறண்ட இதழ்கள் பிரிந்தன.
“பூ…” பாரியின் குரல் கரகரப்பாக ஒலித்தது.
கண்களை திறந்திட முயற்சிக்கின்றாள். ஆனால் முடியவில்லை.
“பூ… பூ… உன் வேந்தனை தவிக்க விட்டது போதும்டி. எழுந்திரு. உன்னை இப்படி என்னால பார்க்க முடியலடி.” அவளின் முகம் அருகே பிதற்றினான்.
பாரியின் வலியை உணர்ந்தவளின் கண்கள் கண்ணீரை சொறிந்திட, செவி தொட்டன.
பெருவிரல் கொண்டு கண்ணீரை தடுத்தவன்,
“என்னை நிறைய அழவச்சிட்ட மலரே. இதுக்கு மேல முடியாது” என்றவனின் பிடிக்குள்ளிருந்த கையினை திருப்பி அவனின் கையை அழுத்தி பிடித்தாள்.
“பூ… கண்ணை திறம்மா. எனக்கு உன்னை கட்டிக்கணும். உன் மடியில் முகம் புதைத்து அழணும்” என்று தன்னுடைய தவிப்பை தன்னவளிடம் கடத்தினான்.
தன்னவனின் தவிப்பை உணர்ந்தவள் இமை பிரித்திட வெகுவாக முயன்றாள்.
அவளின் நிலையை உள்வாங்கிய பாரி, அறையில் செவிலி இல்லாததால்,
“அவி…” என்று சத்தமிட்டான்.
பாரியின் அழைப்பு கேட்டு அவியும் பரிதியும் உள்ளே வந்திட,
“பரிதிண்ணா… பரிதிண்ணா… பூ, கண் திறக்க ட்ரை பன்றாள். பட் முடியல” என்று துடிப்பாய் கூறிட, அவி மருத்துவரை அழைத்துவர ஓடினான்.
“பாரி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. இதோ டாக்டர் வந்திடுவாங்க” என்று பரிதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவியுடன் மருத்துவர் விரைந்தார்.
பூவின் உடலை பரிசோதித்தவர்…
“அவங்க கான்ஷியஸ் வந்திருச்சு. பட் மயக்கத்தில் இருக்காங்க. கொஞ்ச நேரம் போனால் கண் திறந்திடுவாங்க” என்றவர், மருந்து ஒன்றினை அவளின் உடலுக்குள் செலுத்திவிட்டு “இனி பயப்பட ஒன்றுமில்லை. அவங்ககிட்ட உங்க இருப்பை பேச்சின் மூலம் உணர்த்திக்கிட்டே இருங்க” எனக் கூறிச் சென்றார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் பூவின் அப்பா, அம்மா, அப்பத்தாவுடன், பாரியின் வீட்டினர் வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் ஜென்னுடன் செக்ரி மற்றும் கோதையும் வந்திட, தீபனும் லீயின் மூலம் விடயமறிந்து வந்து சேர்ந்தான்.
இரவு வீட்டிற்கு சென்றதுமே பார்வதி அரசுவிற்கு அழைத்து சொல்லியிருக்க, வேகமாக கிளம்பி வந்திருந்தனர்.
அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்தாலும், அனைவரினுள்ளும் முழுமையடையாத உணர்வு. வெற்றிடத்தை நிரப்பும் இடத்தில் பூ.
“ஐயோ எம்பேத்திய இந்த நிலையிலா நான் பார்க்கணும்.” கண்ணாடி வழி பூவை பார்த்த தங்கம் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்.
அரசு நிலை குலைந்து நின்றிட தில்லை அவருடன் ஆதரவாய் நின்று கொண்டார்.
மணி கேவி வரும் அழுகையை சேலை தலைப்பில் மறைத்து விசும்பிட, பார்வதியும், இளாவும் அவருக்கு தேற்றுதலாக இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
“சுட்டவன் நல்லாயிருக்க மாட்டான்” என்று ஆரம்பித்த தங்கம் வாயில் வந்த சாப வார்த்தைகளை எல்லாம் இலவசமாக அவனுக்கு வாரி வழங்கிட…
“அவன் அல்ரெடி செத்துட்டான் பாட்டி. பாரி ஷூட் பண்ணிட்டான்” என்று ஜென் சொல்லியும் தங்கம் தன்னுடைய குமுறலை நிறுத்தவில்லை.
செவிலி வந்து அதட்டியும் தங்கம் தன்பாட்டிற்கு புலம்பியபடி அழுது கொண்டிருக்க, கதவினை திறந்து வேகமாக வெளியில் வந்த பாரி…
“இப்படி கத்திட்டு இருக்கிறதுன்னா வீட்டுக்கு கிளம்புங்க” என்று கடிந்துவிட்டு செல்ல, அவன் உடையலிருந்த ரத்த கரையை கண்டு தங்கம் ஸ்தம்பித்து வாயினை மூடிக்கொண்டார்.
அரசு மற்றும் மணிக்கு கூட அதே நிலை தான்.
“அம்புட்டும் எம்புள்ள ரத்தந்தேனா” என்ற மணி தலையில் அடித்துக்கொள்ள…
“அய்யோ அம்மா நிறுத்து. இப்போ அவள் நல்லாத்தான் இருக்காள்” என்று இளா அவரை வாய் மூட வைப்பதற்குள் விழி பிதுங்கினாள்.
அரசு தான் பொறுமையாக இளாவிடம் வந்து…
“தமிழு வாயும் வயிறுமா இருந்தது நெசந்தேனா கண்ணு” என்று கேட்டிட, அதற்கு அவள் ஆமென்றதும், தன்னுடைய வயதையும் மீறி தோளில் கிடந்த துண்டால் வாய் பொத்தி அழுகையை அடக்கினார்.
பரிதி தான் அவரை தோள் தாங்கினான்.
“எம்புள்ள எம்புட்டு வலியை அனுபவிச்சதோ” என்றவர், “கண்ணு முழிச்சு இந்த வேதனையை எப்படி சம்மந்தி தாங்குவாள்?” என்று தில்லையிடம் வினவ,
“நீங்க கேட்டுட்டிங்க… நாங்க கேட்கலை. அவ்வளவு தான் வித்தியாசம்” என்று பதில் வழங்கிய தில்லை கூட அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த வேதனையை கண்களில் கசிய விட்டார்.
“நீங்களே இப்படி உடைஞ்சிட்டா, இருப்பவங்களை யார் சமாளிப்பது” என்று அந்த இடத்தில் திடமாக இருந்தது பார்வதி மட்டும் தான்.
அவருக்கும் வேதனை வருத்தம் எல்லாம் இருக்கிறது தான். உடைந்து நிற்கும் தன் சொந்தங்களை தேற்றுவதற்காகவே தன்னை திடப்படுத்திக்கொண்டார்.
ஓரளவிற்கு அனைவரும் தங்களை தேற்றிக்கொண்டு பூ கண் விழிப்பதற்காக அமைதியாகக் காத்திருந்தனர்.
அவர்களை மேலும் காத்திருக்கச்செய்து…
பாரியின் தவிப்பை நொடிக்கு நொடி அதிகப்படுத்திய பின்னரே மெல்ல இமை திறந்தாள் பூ.
பூவின் முகத்தின் மீதே பார்வையை நிலைத்திருந்த பாரி காண்பது கனவோ, இமை சிமிட்டினாள் பொய்யாகிவிடுமோ என்று அஞ்சியே அசைவற்று அவளின் திறந்த விழி பார்த்திருந்தான்.
பாரியின் கைக்குள் தன்னுடைய கை இருப்பதை உணர்ந்தவள், அவனின் கண்களோடு தன் கண்களை கோர்த்து கொக்கிட்டு பார்வையை உறைய வைத்தாள்.
விழி மொழியில் சில நிமிடங்கள் கடந்திட,
பாரியின் கசங்கிய நலுங்கியத் தோற்றம் கண்டு, தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்தவளின் மற்றைய கை அவளின் வயிற்றை வருடியது.
சூல் கொண்ட வயிற்றின் கனம் தாய் அறியாததா, நொடியில் தன் மகவு தன்னிடம் இல்லை என்பதை கிரகித்து விட்டாள்.
அவளின் கையில் உணர்ந்த அசைவை வைத்து சுயம் பெற்ற பாரி, பூவின் மலர்ந்த விழியில் தான் சீராகினான். சுவாசத்தினை இயல்பாக்கினான்.
“பூ” என்றழைத்தவனின் கருவிழி அவளின் கை இருக்கும் இடம் நிலைக்க,
“நம்ம குழந்தை… என்னால காப்பாத்த முடியல” என்று கண்ணீரை கசியவிட்டான்.
கண்களை அழுந்த மூடியவள், அவனின் வேதனை குறையட்டுமென்று மௌனமாக இருந்தாள்.
பாரியின் துளி நீர் அவளின் கையில் பட்டுத்தெறிக்க… வேகமாக அவனை ஏறிட்டாள்.
அவளுக்கும் இழப்புத்தான். தன்னுடைய பொக்கிஷத்தை தன்னவனிடம் பகிர்ந்துக்கும் முன்னரே கை நழுவ விட்டுவிட்டாளே. கொஞ்சம் எச்சரிக்கையாக நிதானித்திருந்தாள் தற்போது இந்நிலை இல்லையே.
வந்ததை முழுதாய் அனுபவிக்கும் முன்னே மறைந்திருந்ததே.
நெஞ்சம் முட்டிக்கொண்டு வரத்துடித்த கேவலை தன்னவனுக்காக உள்ளுக்குள்ளேயே மறைத்தாள்.
கம்பீரமாக எதற்கும் கலங்கிடாத பாரியை இரண்டாம் முறையாக ஓய்ந்து போனத் தோற்றத்தில், இதயம் வலிக்க காண்கிறாள். இரண்டிற்கும் காரணம் அவளே.
பாரியைத் தாண்டிக்கொண்டு அவள் குறுக்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
எதிராளி நேருக்கு நேராக குறி வைத்து நின்றிருந்தாலும் பாரி எளிதாக அதனை முறியடித்திருப்பான். இப்போது புரிந்தது அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஏற்கனவே இருந்த பயம், அழுத்தம் எல்லாம், பாரியை நோக்கி அமோஸ் துப்பாக்கியை உயர்த்திய கணம் அவளை நிதானம் தவற வைத்திருந்தது.
அந்நேரம் தன்னுடைய வேந்தனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்பதே அவளின் எண்ணமாக இருந்திட, எதையும் பொறுமையாய் யோசிக்கும் நிலையில் அவளின் மூளை, மனம், இரண்டுமே இல்லை.
இப்போது நினைக்கும் போது தன்னுடைய முட்டாள் தனம் புரிந்தது.
‘தன்னால், தன்னுடைய அவசரத்தால் தான் இத்தனையும்’ என்று கருதியவள், தன் கணவனின் வேதனையை காண சகியாது, அவனின் கையை இறுக்கமாகப் பற்றினாள்.
“பூ…” அவளின் பெயருக்கும் நோகுமோ எனும் விதத்தில் அழைத்திருந்தான்.
பாரியின் கண்ணீரை அடிபடாத பக்க கையினால் துடைத்தவள்,
“இப்போ எதுக்கு அழற?” என்று சத்தமே வராத குரலில் கேட்டிருந்தாள்.
பாரியின் பார்வை அவளின் வயிற்றில் படிந்து முகத்தில் நிலைத்தது.
“நான் சொல்லவே இல்லையே?” என்று கேட்டவளுக்கு, சிகிச்சையின் போது மருத்துவர் தெரிவித்திருப்பார் என்ற யூகம்.
அவளின் கேள்விக்கு பாரிக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. அதற்கு பதிலாக, “நம்ம குழந்தைடா” என்று மொத்தமாக உடைந்தான்.
“இப்போ எதுக்கு அழற?” மீண்டும் அவளிடம் அதே கேள்வி.
“பூ…” இவள் என்ன கேட்கிறாள், ‘குழந்தை விடயத்தை மறந்துவிட்டாளா?’ என்று பாரி குழப்பத்திற்கு சென்றிட,
“நமக்கு இனி குழந்தையே பிறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்களா?” என்று தன்னுடைய அடுத்த கேள்வியை கேட்டாள்.
பாரி அதிர்வாக வேகமாக இல்லையென்று தலையசைத்திட…
“அப்புறம் என்ன? நான் நல்லாத்தான் இருக்கேன். உனக்கு எத்தனை குழந்தை வேணும். ஒரு பத்து குழந்தை போதுமா? நான் பெத்து தர்றேன். நீ மொத உன் மூஞ்சியை மாத்துடா. பார்க்க சகிக்கல” என்றாள்.
தன்னுடைய ஒட்டுமொத்த வேதனையையும் மனதோடு புதைத்தவளாக. ஆம் புதைத்து தான் கொண்டாள். தன்னவனுக்காக. அவனின் கலங்கிய முகம் கண்டு. தன் சோகம் மேலும் அவனை வருத்தத்தில் மூழ்கச் செய்திடுமென்று, தன்னை இயல்பாய் காட்டிக்கொண்டாள்.
“பூ…”
“உன் பூ தாண்டா…” என்றவள், “என்ன பத்து குழந்தை போதாதா. இன்னும் வேணுன்னாலும் எனக்கு ஓகே தான். நோ அப்ஜெக்ஷன்” என்றிட…
அவளின் பேச்சில் பாரி மட்டுமல்ல, அவள் கண் விழித்ததுமே… செவிலி சென்று அனைவரிடமும் சொல்லியிருக்க, அவளை பார்க்க உள்ளே வந்திருந்த அனைவருமே விழி விரித்து நின்றனர்.
அவளின் பேச்சில் தனக்காகத்தான் தன்னவள் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்கிறாள் என்பது புரிந்திட, பாரி தன் உயிரானவளின் அன்பில் நெக்குருகியவனாக தாவி அணைத்திருந்தான்.
பாரி வேகமாக அணைத்ததில், அறுவை சிகிச்சை செய்த இடது மார்பு பக்கம் வலித்திட “ஷ்” என்று முகம் சுருக்கினாள்.
தனக்கே வலித்தது போல் உணர்ந்தவன், பதறி விலகியவனாக…
“சாரி… சாரிடாம்மா!” என்று வலியின் சாயல் அவளது முகத்தில் தென்படுகிறதா என்று ஆராய்ந்தான்.
பாரியிடம் தென்படும் இந்த பதற்றம், அச்சமெல்லாம் பூவிற்கு புதிது.
அருகில் வருமாறு கையால் அழைத்தவள்,
பாரி அருகில் வரவும், இன்னும் வா என்பதைப்போல் அழைத்தாள்.
மிக நெருக்கமாக நின்றவனின் முகத்தை தன் முகத்திற்கு நேராக அவனின் பின் கழுத்தில் கை வைத்து இழுத்தவளின் செய்கையில், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவர்கள் அவர்களின் தற்போதைய நிலையில் கூச்சம் கொண்டவர்களாக அறையை விட்டு வெளியேறினர்.
முதலாக உதித்த கரு இல்லையென்ற வருத்தம் இருந்தபோதும், பூ மீண்டு வந்ததே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது. விளையும் இடம் நன்றாக இருந்தால் தானே விதைக்க முடியும். அதனை கொண்டே தங்களை தேற்றியபடி, தங்கள் பிள்ளைகளின் அன்பு ஒன்று போதும் எல்லாம் சரியாகிவிடுமென்ற எண்ணத்தில் இருக்கையில் ஆங்காங்கே அமர்ந்தனர்.
“ஹேய் பூ… என்ன பன்ற?”
பூ முகம் பற்றி இழுத்ததில், அனைவரும் வெளியேறுவதை கண்டு வினவினான்.
“இதென்ன வேந்தா?”
அவன் கேட்டதற்கு சம்மந்தமில்லாது அவள் கேட்டிருந்தாள்.
“என்னதுடா?”
“உன் முகத்தில்… எதுவோ புதுசா இருக்கே?”
பாரிக்கு அவள் எதை சொல்கிறாள் என்றே புரியவில்லை.
“ஒரு பதட்டம், பயம்… யாருக்காக?” சிறு இடைவெளி விட்டு “எனக்காகவா?” எனக் கேட்டாள்.
அவளுக்கே இதற்கான பதில் தெரியுமெனும் போது அவன் என்ன சொல்வான்.
“நீ உயிரோடதான இருக்க?” என்றவள், “அப்போ எனக்கு எதுவும் ஆகாது. உன் மூச்சு இல்லாமப் போனாதான் என் மூச்சும் நின்னுப்போகும்” என்று முடிக்கையில் வெகுவாக சிரமப்பட்டாள்.
என்ன மாதிரியான அன்பு இது. பாரியால் என்ன முயன்றும் நெகிழும் கண்களை கட்டுப்படுத்திட முடியவில்லை.
மேற்கொண்டு பேசவே தடுமாறினாள். மெல்லிய குரலில் தான் அவளால் பேச முடிந்தது. அதனை உணர்ந்து பாரி பிறகு பேசிக்கொள்ளலாம் என்க, அவனின் சட்டையின் கழுத்து பட்டையை பற்றி இன்னும் நெருக்கமாக இழுத்திருந்தாள்.
இருவரின் தலையும் முட்டி நிற்க…
“ஹாப்பி அனிவெர்சரி மச்சி” என குறும்புடன் அவள் கூற, அவனுக்கே அப்போதுதான் தங்களின் திருமண நாள் நினைவு வந்தது. ஒரு இரவில் மொத்தமாக அவனை அனைத்தும் மறக்கச் செய்து, அவளை மட்டுமே சுவாசிக்க வைத்துவிட்டாளே!
எப்டியெல்லாம் இந்த நாளை எல்லோரும் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக எல்லாம் நடந்து முடிந்திருக்க, அவளின் வாழ்த்தில் இருந்த குறும்பை கண்டு கொண்டான்.
கல்லூரி நாட்களில் மற்ற பெண்கள் தங்களுக்குள்ளே ஆண் பிள்ளைகள் போன்று மச்சி என்று அழைப்பதை கவனித்து, பூ ஒருநாள் விளையாட்டாய் பாரியை அழைத்திட… அன்று அவன் அவளை “அப்படி கூப்பிடாத” என மைதானம் முழுக்க துரத்திக்கொண்டு ஓடிய நினைவு மேலுழும்பிட… அவளை முறைத்த போதும் முகம் மென்மையாகத்தான் இருந்தது.
“இப்போ என்னைத் துரத்து வேந்தா…” என்றவள் அவனின் இதழில் ஆழமாக இதழ் புதைத்தாள். மார்பில் வலி கொடுக்க சட்டென்று விலகிவிட்டவளுக்கு கண்களெல்லாம் கலங்கியிருந்தது.
அவளின் வலியை உணர்ந்து பாரி துடி துடித்தான்.
அப்போதுதான் தன் கையிருக்கும் அவனிடத்தை கவனித்தாள். அவளின் செங்குருதி. கண்கள் பனிக்கும் போலிருக்க இமை தட்டி சரிசெய்தாள்.
“ட்ரெஸ் மாத்தலையாடா?” அவள் குரல் என்ன உணர்வில் வெளிவந்ததென்று பாரியாலேயே பிரித்தறிய முடியவில்லை.
“உயிரே இல்லடி” என்றவன், “நீ இப்படி என்னை பிடிச்சி இழுத்து வச்சிக்கத்தான் காத்திருந்தேன்” என்றதோடு, “என்னை நிறைய அழ வச்சிட்டடி” என்று அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி அக்கணத்தை கண்கள் மூடி உயிருக்குள் கடத்தினான்.
கம்பீரமான ஆண் தன் சுயம் தொலைப்பது காதலில் மட்டுமே சாத்தியம்.
மிடுக்கான காக்கியும் தன் சுயம் தொலைந்து கண்ணீர் சிந்தியது தன் காதல் மங்கைக்காக.
தன்னவனின் காதலில் கர்வம் கொண்டவள், தன்னுடைய வலியையும் மீறி கணவனை ஆரத் தழுவியிருந்தாள்.
***********************
மருத்துவமனை வாசம் முடித்து வீட்டிற்கு வருவதற்கு முழுதாக ஒரு வாரம் கடந்திருந்தது.
இந்த ஒரு வாரமும் பாரி தன்னுடைய பூ பெண்ணவளை மலரை போன்று இதயத்தில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்.
பூவை பார்த்துக்கொள்ள ஒருவர் மாற்றி ஒருவர் உடனிருந்தாலும், தன்னவளுக்கு வேண்டிய அனைத்தையும் தானே செய்தான். யாரையும் பூவின் அருகில் அனுமதிக்கவேயில்லை. ஒவ்வொரு நொடியும் அவளை நெஞ்சில் வைத்து பாதுகாத்தான்.
மருந்து கொடுக்கும் நேரத்தினை செவிலியே மறந்தாலும் தானாக நினைவு கூர்ந்தான். இரவு நேரங்களில் உறங்கும் செவிலியை எழுப்புவது பாரியாகத்தான் இருக்கும்.
முதல் நாள் பூ கண் விழித்ததும், ஆணையர் அலுவலகம் சென்று முடிக்க வேண்டிய பார்மாலிட்டிஸ்ஸ் அனைத்தையும் அரை மணியில் முடித்து, குமாரின் உதவியுடன் முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அமோஸ் என்ற ஒருவன் இருந்ததற்கான, இங்கு வந்ததற்கான அடையாளத்தையே இல்லாமல் செய்து இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு திரும்பி வந்தவன் தான், அதன் பின்னர் வெலியுலகையே மறந்தவனாக பூவுடனே தங்கிவிட்டான்.
யார் சொல்லியும் கேட்கவில்லை.
“பூ மருத்துவமனை விட்டு செல்லும்போது தான் நானும் வருவேன்” என்று எல்லோர் வாயையும் அடைத்துவிட்டான்.
இந்த ஒரு வாரமும் தான் உயிராய் நேசிக்கும் வேலையையே ம(து)றந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று பூ ஆறுதலாக பேசிய பின்னர், இனியொரு நொடி தான் கலங்கி நிற்கக்கூடாதென்று நினைத்து திடமாக இருக்கவும் செய்தவனால், என்ன முயன்றும் மனதில் ததும்பி நிற்கும் வருத்தத்தை மட்டும் குறைக்க முடியவில்லை.
பூவே தனக்காக சோகம் மறைத்து நடந்து கொள்ளும்போது, தான் சோகத்தை இழுத்து பிடித்துக்கொண்டு இருப்பது சரியில்லையென்று பூ மறந்ததாய் காட்டிக்கொள்வதைப்போல் பாரியும் தன்னை சாதாரணமாகக் காட்டிக்கொண்டான்.
என்ன தான் பூ ஆயிரம் சமாதானங்கள் பேசி அவனை தேற்றியிருந்தாலும், தங்களுக்கு என்று உதித்த முதல் சொந்தம் இல்லையென்ற ஏக்கம், சோகம், இழப்பின் வலி இருவருக்குமே இருக்கத்தான் செய்தது. இருப்பினும் ஒருவருக்காக மற்றவர் மறைத்து நடமாடினர்.
இதில் பாரிக்கு கூடுதல் வலி…
பூ இல்லையென்ற நினைவே அவனக்கு கசந்தது. பூவிற்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரமெல்லாம் இந்த நினைப்பே அவனை கொன்று தின்றது.
அந்த வலி அவனை பூவை விட்டு நகரவிடாது அவளுடனே இருக்கச் செய்தது.
இந்த ஒரு வாரமும் உடன் அருகருகே இருந்தாலும், கண் திறந்ததும் பேசியது. அதன் பின்னர் தங்களையும் மீறி முடிந்த நிகழ்விற்காக ஆறுதல் வேண்டி காதறிவிடுவோமோ என்று அஞ்சியே முயன்றளவிற்கு பேச்சினை தவிர்த்து விழி மொழியில் நாட்களை கடத்தினர்.
கண்ணாடி பாத்திரம் போன்றுதான் அவளை அவன் தாங்கினான்.
மருத்துவர் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னதும்,
“இனி எங்களோடதான். இதுக்கு அப்புறம் ரெண்டு பேரையும் தனித்துவிட முடியாது” என்று உறுதியாக பிடிவாதமாக சொல்லிவிட, பாரியும் தன் அன்னையின் பேச்சினை மறுத்துக் கூறவில்லை.
‘தனியாக சென்றால் நடந்த நிகழ்விலிருந்து இருவருமே மீண்டு வரமாட்டோம். அத்தோடு பூவிற்கு துணையாக அங்கு நிறைய பேர் இருப்பார்கள்’ என பூவின் நலன் வேண்டியே தன்னுடைய இல்லம் செல்ல ஒப்புக்கொண்டான்.
மருத்துவமனையிலிருந்து பார்வதி நேராகவே இருவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
எல்லோரும் அங்கு தான் இருந்தனர்.
பரிதி இரண்டு நாட்களுக்கு முன்னர், பாரியின் குவாட்டர்ஸை காலி செய்து உடைமைகளை இங்கு கொண்டு வந்திருந்தான்.
பூ வீட்டிற்கு வந்து மேலும் மூன்று நாட்கள் சென்ற பின்னரே… அரசு தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பியிருந்தார்.
தங்கம் இன்னும் கொஞ்ச நாட்கள் தன் பேத்தியுடன் இருந்துவிட்டு வருகிறேனென்று அங்கேயே தங்கிவிட்டார்.
அன்று மதிய உணவிற்கு பின் அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்க தத்தம் அறைக்குள் சென்றிட, பாரியும் தங்களது அறைக்குள் சென்றான்.
பூ அறைக்குள் வரும் பாரியை பார்த்தபடியே மெத்தையில் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவனுக்காகவே காத்திருந்தாள் என்று சொல்ல வேண்டுமோ!
இன்னும் இருவருக்குள் இயல்பான பேச்சில்லை. அவரவர் தங்களது வருத்தத்திலேயே மூழ்கியிருந்தனர். என்ன மற்றவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. தன் வருத்தம் தன் இணையை காயப்படுத்திவிடுமென ஒன்றாக இருந்தபோதும் விலகியே இருந்தனர்.
பூ உறங்கியிருப்பாள் என்று வந்தவன், பூவின் அழுத்தமான பார்வையில் தடுமாறினான்.
“தூங்கலையாடா?”
“தூக்கம் வரல.”
பாரி செல்லும் திசைக்கெல்லாம் பூவின் விழிகள் நகர்ந்தன.
“வேந்தா…”
“என்னம்மா?” என்றவன் புத்தக அலமாரியில் இல்லாத புத்தகத்தை தேடியபடி வினவினான்.
“கிட்ட வா வேந்தா. என் பக்கத்தில்” என்று தன்னருகில் மெத்தையை கையால் தட்டி, அங்கு அமருமாறு சைகை செய்தாள்.
பாரியும் அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான். அந்த இடைவெளியை அவளே நிரப்பினாள், அவன் பக்கம் நன்கு நெருங்கி அமர்ந்து.
“இன்னும் எத்தனை நாளுக்கு வேந்தா, என்கிட்ட பேசாம தவிர்ப்ப?”
“தவிர்க்கவெல்லாம் இல்லைடா. ஆனால் ஏனோ என்னால முடியல. ரொம்ப அழுத்தமா இருக்கு” என்று அவன் சொல்லிட,
“எனக்கில்லையா அழுத்தம். எனக்கில்லையா வருத்தம்” என்ற பூ அப்போதும், அவளின் வருத்தமான குரலில் அலைப்புறுதலை அவனது கண்களில் கண்டு கொண்டவள் பொங்கி வரும் அழுகையை அடக்கி அவனது நெஞ்சில் புதைந்தாள்.
அவனுக்கா புரியாது அவளின் மனம்.
“இத்தனை நாளும் எனக்காக இருந்தது போதும். உன்னால முடியலன்னு எனக்குத் தெரியும்” என்றவன், அவளை தன்னிலிருந்து பிரித்து, அவளது இரு கன்னங்களையும் கைகளில் தாங்கி தன் முகம் பார்க்கச் செய்தவன்…
“அழுதிடு மலரே!” என்றிட, மொத்தமாக உடைந்து வெடித்து கதறினாள். சிதறினாள். அத்தனை நாட்கள் பொத்தி வைக்கப்பட்ட வருத்தம், பொங்கி கரை உடைத்து சீறியது.
பாரி அவளிடம் இத்தனை அழுகை, கண்ணீரை எதிர்பார்த்தான் போலும், அவள் அழும் வரை கண்களை மூடியபடி, தன்னவளை அணைத்து அவளின் முதுகை நீவியவாறே அமர்ந்திருந்தான்.
மெல்ல மெல்ல அழுகை விசும்பலாக மாறியது.
“என்னாலதான்” என்றவள் தன் வயிற்றை பிடித்துக்கொண்டு மீண்டும் உடைந்து அழ, இம்முறை அவனாலும் தாக்குப்பிடிக்க முடியாது தன்னவளுக்கு இணையாக அவளை கட்டிக்கொண்டு அழுதிருந்தான்.
எப்போதுமே தன்னுடைய வேந்தனுக்கு என்று பார்ப்பவள், இப்போதும் அவனுக்காகவே தன் அழுகையை மெல்ல குறைத்து அவனை தேற்றினாள்.
எத்தனை நேரம் ஒருவரின் அணைப்பில் ஒருவர் சோகத்தை கரைத்தபடி இருந்தனரோ, பூவே அவர்களுகிடையேயான அமைதியை மௌனத்தை கலைத்தாள்.
“வேந்தா… ஆபீஸ் போகலையா? எப்பவும் என் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்க” எனக் கேட்டவள் அவனிடமிருந்து நகர்ந்து அமர்ந்தாள்.
அவள் உண்டாக்கிய இடைவெளியை ஏன் என்பதைப்போல் பார்த்தான்.
“இந்த பக்கமாவே சாய்ந்திருந்தது வலிக்குதுடா” என்றவள் தன்னுடைய இடது பக்கம் தோளுக்கு கீழ் கை வைத்து மெல்ல தேய்த்தாள்.
“உள்ள காயமெல்லாம் ஆறிடுச்சுன்னு டாக்டர் சொன்னாரே. எதுக்கும் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாமாடா” என்றவன் மெல்ல அவள் அணிந்திருந்த தன்னுடைய சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை விடுவித்தான்.
அவளது ஆடை அனைத்தும் உடலோடு ஒட்டி சரியானளவில் இருப்பதால் காயம்பட்ட இடம் உராய்ந்து வலி கொடுக்கிறது என்று காரணம் சொல்லியே பாரியின் சட்டையைத்தான் தினமும் அணிந்துகொள்கிறாள்.
தன் சட்டையின் மூலம் தான் அளிக்கும் பாதுகாப்பில் தன் சோகம் மறக்கின்றாள் என்று அவன் அறிந்தே இருந்தான்.
தையலிட்ட இடம் வறண்டு சிவந்து காணப்பட… தானே மருந்தினை எடுத்து தடவி விட்டான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு வேந்தா? வேலைக்கு போகலையா? ஏன் இப்படியிருக்க” என்று கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக மழிக்கப்படாத அவனின் தாடியை காட்டி வினவினாள்.
பாரி மௌனமாகவே இருக்க…
“இப்படியே இருந்தா சரியாகிடுமா வேந்தா. நம்மளைவிட நம்ம குழந்தையை கடவுள் நல்லா பார்த்துக்கணுமுன்னு தான் அவரே கொடுத்து இத்தனை சீக்கிரம் எடுத்துகிட்டாரு” என்றவள், “அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்” என்று “உனக்கு எத்தனை குழந்தை வேண்…” என ஆரம்பித்தவளின் வாயினை கை வைத்து மூடியவன்…
“வாய்… வாய்… அன்னைக்கும் அத்தனை பேர் முன்னாடியும் இதைத்தான் சொன்ன” என்று சொல்லியவனின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மகிழ்ச்சியின் சாயல்.
“இப்படியே இரு வேந்தா” என்று அவனின் விரிந்த இதழை பிடித்து இழுத்தவள்,
“முதல்ல இந்த தாடியை எடு” என்றதோடு, “போலீஸ் லுக் தான் உனக்கு அழகே” என்றிட…
“அப்போ உனக்கு நான் இந்த வேலையில் இருக்கிறது பிடிக்காம இல்லையே?” என்று தயங்கி வினவினான்.
“நான் தான் சின்னப்பிள்ளை மாதிரி, உன்னை வேலையை விட சொல்லி நிறைய தொல்லை பண்ணிட்டேன்” என்றாள் முகம் சுருக்கி.
“இப்போ நமக்கு நடந்த மாதிரி நிறைய பேருக்கு நடக்கும் தான. எல்லார் வீட்டிலும் உன்னை மாதிரி ஒருத்தன் இருக்க முடியாதுல. ஆனால் அவங்க எல்லோருக்கும் போலீஸ் அப்படிங்கிற அடிப்படையில் நீ பாதுகாவலானா இருக்க முடியும் தான… என் புருஷனால இந்த சிட்டியே பாதுகாப்பா இருக்கும் எனும்போது எனக்கு பெருமை தான் காக்கி” என்றவள், அவனின் முகத்தில் அடர்ந்திருந்த முடிக்குள் தேடி பிடித்து அவனது மீசையை முறுக்கி விட்டாள்.
எப்போதும் தனக்காக மட்டுமே யோசிக்கும் அவளின் காதலில் என்றும் போல் இன்றும் உருகினான். மென்மையாக அணைத்துக்கொண்டான்.
மீண்டும் பாரி வேந்தன் தன்னுடைய காக்கியை அணிந்து சிகை கோதியபடி கண்ணாடி முன் நின்றிருந்தான்.
அவன் தொலைத்த கம்பீரம் மீண்டும் அவன் வசம்.
பூ சொல்லியதைப்போல் காக்கி உடை தனக்கு தனியானதொரு அழகை கொடுக்கிறதென்று, கண்ணாடியில் பிரதிபலிக்கும் அவனின் பிம்பம் சொல்லியது.
“கிளம்பிட்டியா வேந்தா?” என்றவாறு அவனுக்கும் கண்ணாடிக்கும் இடையில் நின்றவள், தானே அவனின் சிகை கோதிவிட்டு, இரண்டு பக்கமும் மீசையை பிடுத்து முறுக்கியவள்,
“செமயா இருக்கடா” என்று அவனை ரசித்தவாறே கூறிட,
“யூ மேக் மீ மேட் மலரே” என்றவன் அவளை இடையோடு கையிட்டு கட்டிக்கொண்டான்.
“மலரே சொல்ல காக்கிக்கு இத்தனை நாள் தேவைப்பட்டிருக்கு” என்று கேட்டவளுக்கு தன்னவன் வேதனையிலிருந்து மீண்டுவிட்டான் என்று நிம்மதியாக இருந்தது.
“இந்த மலரு பொண்ணு இத்தனை நாளில் இப்போதான என்னை நெருங்கி வர்றாள்” என்றவன், அவளின் நெற்றி முட்டி நின்று, “ஆர் யூ ஓகே மலரே” என அவளின் இதழ் வருட… பூவிற்குள் முதல்முறை தோன்றும் படபடப்பு.
இத்தனை நாள் அவளே அவனை ஈர்த்தாலும், அவளின் உடல் நலனில் அக்கறை கொண்டு விலகியே இருந்தவன் இன்று தன் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம் இறங்கி வந்திருந்தான்.
பாரியின் கழுத்து பட்டையை பிடித்து அவளே அவனின் முகம் நெருங்கையில்…
“சித்தா…” என்று சின்னு அவர்களின் அறைக்குள் ஓடிவர, அவனின் மார்பில் கை வைத்து தள்ளியவளாக வேகமாக பிரிந்து வந்தவள், உள்ளே ஓடிவந்த சின்னுவைத் தூக்கி சுற்றி இறக்கினாள்.
பாரி தான் தன்னை நிலைப்படுத்த தடுமாறினான்.
சின்னுவின் பின்னே உணவு கிண்ணத்துடன் வந்த இளா…
“இப்போதான் உடம்பு நல்லாயிருக்கு. அவளை தூக்காதேன்னு எத்தனை முறை சொல்றது தமிழ்” என்று கடிந்தவளாக, சின்னுவின் வாயில் உணவை வைத்தாள்.
“அதான் உடனே இறக்கிட்டேனேக்கா. இப்போ நான் ஒகே தான்” என்றாள்.
“அதை உன் பரிதி மாமாகிட்ட சொல்லு. நீ வேகமா நடந்து வந்தாலே, என்ன பார்த்துக்குறீங்கன்னு கத்துறான்” என்று இளா பரிதியை பற்றி குற்றம் வாசிக்க பரிதியே அங்கு வந்தான்.
“என்ன என்னைப்பற்றி பேச்சு போகுதுபோல” என்றபடி உள்ளே வந்தவன், பாரி சீருடை அணிந்து நிற்பதைக் கண்டு… “டிசி பாரி வேந்தன் பேக் டூ ஃபார்ம்” என்றிட, பாரியிடம் மென் முறுவல்.
பூவின் அருகில் சென்ற பரிதி,
“வாடா சாப்பிடலாம்” என்று அவளை கை பிடித்து கீழே அழைத்துச் செல்ல…
இளாவும் பாரியும் கனிவோடு பார்த்தனர்.
“சின்னு வளர்ந்து வந்து அண்ணாகிட்ட சண்டை போடப்போறாள்” என்று பாரி விளையாட்டாய் சொல்ல…
“நோ.. நோ சித்தா. சித்தி அப்பாக்கு பெரிய சின்னு.” என்ன புரிந்து வைத்திருக்கிறாளோ, உடனடியாக பதில் மொழிந்தாள் அவர்களைச்சுற்றி ஓடிக்கொண்டிருந்த சின்னு.
“அப்பா பொண்ணு. அப்படியே அவனுக்கு ஏத்த மாதிரி வளக்குறான்” என்று பரிதியை திட்டிய இளாவின் முகம் அதற்கு நேர்மாறாக இருந்தது.
“நீ மட்டும் பூகிட்ட காட்டும் அன்பில் குறைச்சலா என்ன” என்று பாரி இளாவை வாரினான்.
காலை நேர உணவு வேளை அனைவருக்கும் அத்தனை சந்தோஷமாக நகர்ந்தது.
ஒரே குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க…
“தீபனுடைய அம்மா கால் பண்ணியிருந்தாங்க. ஈவ்னிங் வீட்டுக்கு வராங்கலாம்” என்று பார்வதி அனைவருக்கும் பொதுவாகக் கூறிட, எல்லோரின் பார்வையும் லீயின் மீது பதிந்தது.
“ரொம்ப நாளுக்கு பிறகு ஆபிஸ் போறேன்… ஈவ்னிங் எப்படின்னு தெரியல. நீங்க பார்த்துக்கோங்கம்மா. முடிஞ்சா வர்றேன்” என்ற பாரி, “பூ பார்த்து கவனமா இருக்கனும்” என்று சொல்லி வெளியேறினான்.
மீண்டும் உள்ளே வந்தவன் எல்லோரும் என்ன என்பதைப்போல் பார்த்திட…
“பூ இருந்துப்பதான?” என்று தவிப்பாய் வினவிட,
“டேய் நீயிப்போ போறீயா, இல்லையா?” என்று பரிதி அதட்டினான் என்றால், “என்னவோ அத்துவானக் காட்டுக்குள்ள பொண்டாட்டியை விட்டுபோட்டு போவுறமாட்டிக்குத்தேன்” என்று ஜாடை பேசினார் தங்கம்.
“தாய் கெழவி நான் என் பொண்டாட்டிகிட்ட பேசுறேன்” என்று பாரி எகிறிக்கொண்டு செல்ல…
“அட போடா, என்னவோ ஊரில் இல்லாத புருஷன் பொண்டாட்டி” என்று நீட்டி முழக்கி அவனை வெறுப்பேற்றினார்.
“அப்பத்தா… ” என்று பூ அழைத்திட,
“ரொம்பத்தான் பண்ணிக்கிறான். ஏன் வூட்டுல இருக்க எங்களை பார்த்தாக்கா உம் புருஷனுக்கு மனுஷங்களா தெரியலையா? நாங்க உன்னைய பார்த்துகிட மாட்டோமா?” என்று தங்கம் கேட்டார்.
“அதுதானே… நாங்க பார்த்துக்கிறோம் பாரி. நீ போயிட்டு வா” என்று பார்வதி சொல்ல…
பார்வையாலேயே தன்னவளிடம் ஆயிரம் பத்திரங்கள் உரைத்துச் சென்றான்.
பாரியின் பின்னாலே வெளியில் சென்ற பூ… பாரி வண்டியை உயிர்பிப்பதைக் கண்டு வேகமாக ஓடி அவனின் அருகில் நின்றாள்.
“ஹேய் பூ என்ன?” என்றவன், “கூப்பிட வேண்டியது தான எதுக்கு ஓடிவர” என்று கடிந்துகொண்டான். அவளின் நெஞ்சத்தை நீவி விட்டான்.
“என்னடா?”
அவள் எதற்காக வந்தாள் என்ற காரணம் கூறிடாது அவனையே பார்த்திருக்க…
“இதுக்குத்தான் வந்தியா?” எனக் கேட்டான்.
“எதுக்கு?”
“சைட் அடிக்க.” அவன் கண் சிமிட்டிட, ஒரு கையால் அவனின் முகம் பற்றி திருப்பியவள், அவனது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.
கேட்டின் அருகில் நின்றிருந்த காவலாளி சட்டென்று வேறு பக்கம் திரும்பிட… செடிகளுக்கு நீர் பாய்த்துக் கொண்டிருந்த தோட்டகாரப்பெண் ஆவென்று வாய் பிளந்து நின்றாள்.
அவர்களின் நிலையறிந்து…
“ஹேய் மலரே!” என்று அதிர்ந்தவன், அவளின் முத்தத்தை ரசிக்க மறக்கவில்லை.
“ஒழுங்கா ஈவ்னிங் வந்து சேரு. எல்லாம் ஜோடி ஜோடியா சுத்துங்க. என்னால என் ஜோடி இல்லாம சோலோவா வேடிக்கை பார்க்க முடியாது” என்றவள், “உன் வேலை உனக்கு முக்கியம் தான். ஆனால் எனக்கான இடம் எப்பவும் குறையக்கூடாது” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
முகத்திற்கு முன்னால் நீட்டிய விரல் நுனியில் முத்தம் வைத்தவன்,
“பொண்டாட்டி உத்தரவை தட்டாம செய்றதுதான புருஷனுக்கு அழகு. வந்துடுறேன்” என்று சென்றுவிட்டான்.
அவனின் முதுகை வெறித்தபடி அவள்.
உண்மையில் அன்றைய நிகழ்விற்கு பின் பூவிற்குள் அவனது வேலை குறித்து இருந்த பயம் முற்றும் முதலாக விலகியிருந்தது.
எதில் தான் ஆபத்தில்லை. நன்மை என்ற ஒன்று இருப்பின், அதில் தீமையும் அடங்கியிருக்கும் என்பது காலத்தின் நியதி.
கெட்டது நடந்துவிடும் என்று விலகியே இருந்தால், நன்மை பயக்கும் நிகழ்வுகள் எதையும் முனமுவந்து செய்திட முடியாது.
அன்று அவர்கள் இழந்த இழப்பின் அளவு மிகப்பெரியது தான். ஆனால் அதனால் விளைந்த பலன், அவர்களுக்கு மட்டுமல்ல… நாட்டிற்கே நன்மையில் அல்லவா முடிந்திருக்கிறது. பல நாடுகள் தேடும் குற்றவாளி பாரியின் கையில் இல்லாமல் ஆகியிருந்தான். எத்தனை பேரால் நாட்டிற்கு நன்மை கிட்டிடும். அவனது கணவனால் அது கிடைக்கும் எனும்போது அதற்கு துணையாக இல்லாவிட்டாலும், தடுக்காது இருக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தாள். அதனால் தன்னுடைய பயம் அனைத்தையும் கணவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் புதைத்துவிட்டாள்.
தன்னுடைய கணவன் இந்நாட்டின் காவலன் என்பதில் பெருமையைவிட அவளுள் கர்வமே ஓங்கியிருந்தது.
*************************
எபிலாக் :
சில வருடங்களுக்குப் பின்னர்…
அடர்ந்த கானகம்.
அவ்விடமே இருளில் மூழ்கியிருந்தது.
உதிர்ந்து கிடக்கும் சருகுகளை பறக்கச் செய்தபடி, இருசக்கர புரவி சீறி வந்து நின்றது.
காற்றின் சலசலக்கும் ஓசையை கிழித்தபடி அதிலிருந்து இறங்கிய ஒருவனின் பூட்ஸ் காலடி சத்தம், அவனின் வருகையை எண்ணி ஒளிந்து மறைந்திருந்தவர்களின் நெஞ்சில் நீர் வற்றிப்போகும் பயத்தை உண்டாக்கியது.
இருளிலும் அவன் கண்களின் பளபளப்பு, வேட்டையாடத் துடிக்கும் வேங்கையின் கூர் விழிகளை ஒத்திருந்தது.
கையிலிருந்த காப்பினை சுழற்றி மேலேற்றியவனின் கழுகுப் பார்வை, கருமைக்குள் வெண்ணிற ஒளியாய் அடவியை அலசியது.
பருத்த தடித்த மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தவர்கள் ஒவ்வொருவரையும் தனது பார்வையின் வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.
அங்கிருந்த பாறை ஒன்றில் குதித்து ஒய்யாரமாக அமர்ந்தான்.
“என்னண்ணே இவனுக்கு பயந்துக்குன்னு நம்ம தலையே ஒளிஞ்சிக்கினு இக்கிது.”
நிசப்தத்தில் அவன் அத்தனை பொறுமையாக பேசியும்… தன் உடலின் ஒவ்வொரு செல்லினையும் காவல்துறைக்காக என்றே பட்டைத்தீட்டி வைத்திருப்பவனின் செவியில் தப்பாது சேர்ந்தது.
அவனின் முகத்தில் விஷமப் புன்னகை. அந்த புன்னகையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது.
கயவர்களை வேட்டையாடுவதற்கு முன்பு அவனிடம் தோன்றும் வெறி நிறைந்த புன்னகை.
“அவன் இவன் பேசாதடா… அவர் பெயர் பாரி வேந்தன். சென்னை கமிஷனர்.”
இப்போது பாரி நகரத்தின் ஆணையராக பதவி உயர்வு பெற்றிருந்தான். அதற்கு அவனின் நேர்மையும், கடமை தவறாத வேகமும் முக்கிய காரணமென சொல்லலாம். கையிலெடுத்த அனைத்து வழக்குகளும் வெற்றி தான். அவை தந்த பலனே சிறிய வயதில் உயரிய பதவி.
“நேருக்கு நேர் நின்னன்னு வைய்யீ, பார்வையிலே அரண்டு விழுந்துடுவ. பல போலீஸே இந்த போலீஸ பார்த்து பயந்துக்குவாங்க.”
அவனுக்கு பதில் சொல்லியவன் ஏற்கனவே ஒரு குற்றத்தில் பாரியிடம் மாட்டி சிக்கி சின்னா பிண்ணமாகியிருந்தான். அதன் வெளிப்பாடே இப்போது பாரியைப்பற்றி அவன் சொல்லியவை.
“ஒரு சின்ன பையனை கடத்துனதுக்கு எதுக்குண்ணே இவரே வந்திருக்காரு?”
“இவரு வருவாருன்னு தெரிஞ்சிருந்தாக்கா ஆயா சத்தியமா நான் இந்த ஆட்டத்தில் கூட்டு சேர்ந்திருக்க மாட்டேன்டா” என்றவனுக்கு பாரியின் அடியை நினைத்து அடிவயிறு கலங்கியது.
“ஏண்ணே இவ்ளோ பயம்?”
“ஏண்டா நீவேற நேரங்காலம் தெரியாமல் கேள்வி கேட்டு குடையுற?” என்று சன்னமாக முனகியவன், “பார்வையாலேயே பறக்க விடுவாருடா” என்றான்.
அதற்கு மேலும் ஒளிந்திருந்தால் பாரியின் கையால் மரணம் நிச்சயம் என்று அறிந்து, உண்மையை ஒப்புக்கொண்டால் மட்டுமே பாரியிடமிருந்து தப்பிக்க முடியுமென அவ்விருட்டில் மரத்திற்கு பின்னால் மறைந்து நின்றவன் வெளியில் வந்தான்.
“சார்… சார்.. என்னை மன்னிச்சிடுங்க சார். தெரியாம இவனுவ கூடால வந்துபுட்டேன். எனக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்மந்தமில்ல சார்” என்றவன் பாரியின் முன்பு பவ்யமாக… எடுத்ததும் கெஞ்சலில் இறங்கினான்.
புருவத்தை நீவிய பாரி… வாயில் கேண்டியை சுவைத்தான்.
பாரியின் மேனரிசம் அறிந்தவன், அடுத்து அவன் செய்யப்போவது என்னவாக இருக்குமென யூகித்து, பாரியின் காலிலே விழுந்துவிட்டான்.
“நான் வேணுன்னாக்கா பையனை விட்டுடச் சொல்லிடுறேன் சார். எங்களை விட்டுப்புடுங்க” என்று மன்றாடினான்.
“நீங்க கடத்துனது பெண் பிள்ளை.”
பாரி சொல்லியதில் அவனின் கண்கள் மிரட்சியாய் விரிந்தது.
“அய்யோ சார் சத்தியமா பொம்பள புள்ள தெரிஞ்சிருந்தாக்கா, இவனுவக்கூடால வந்திருக்க மாட்டேன் சார்” என்றவன் இப்போது அழவேத் தொடங்கியிருந்தான்.
“சார் கிராப்பெல்லாம் வெட்டி… பேண்டு சட்டை போட்டிருந்ததும் எனக்கு வித்தியாசம் தெரியல சார்.”
அங்கு பாரிக்கு பயந்து ஒளிந்திருப்பவனுக்கு எல்லாம், இவனின் அதீத கெஞ்சலில் பாரியின் மீது பயம் கூடிக்கொண்டே சென்றது.
“இவயென்ன அவ்வளவு பெரிய அப்பட்டக்காரா?” சிறுமியை கடத்திய கும்பல், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஊரினைப்பற்றி தெரிந்தவன் ஒருவன் உடன் இருப்பது நல்லதென எண்ணியே பாரியிடம் கெஞ்சிக் கொண்டிருப்பவனை உடன் வைத்தனர். அவனோ பாரியிடம் அழுது கொண்டிருப்பதை பார்ப்பவர்களுக்கு, உள்ளே நடுங்கத்தான் செய்தது.
“அப்போ பையனா இருந்தால் கடத்தலாமோ?”
பாரி கேட்டதில் என்ன பதில் சொல்வதென்று தெரியாது விழித்தான் மயங்கும் நிலைக்கு சென்றான். தலை சுற்றுவதைப்போல் உணர்ந்தான்.
இதற்கு பாரி தன்னை அடித்து உதைத்திருக்கலாம் என்றே எண்ணினான்.
“நீ இப்படி வந்து ஓரமா நில்லு” என்ற பாரி, அவன் தனக்கு பக்கவாட்டாய் நின்றதும்… “இந்த கூட்டத்துக்கு மூத்த எருமை யாரு? அவனை வரச்சொல்லு?” என்றான்.
“டேய் பூட் இங்க அய்யா கிட்டக்க வாடா?”
அவன் சத்தம் கொடுக்க… பூட் என்றவனிடம் பதிலுக்கு பதிலாக பாரியை நோக்கி தோட்டா ஒன்று சீறி வந்தது.
அருகே குண்டு நெருங்கிய நொடி, அசராது அமர்ந்திருந்த பாரி சற்று உடலை சாய்க்க, அக்குண்டு பாறையில் மோதி விழுந்தது.
“என்னடா குறி வைக்குறான் அவன்” என்று அருகில் நின்றிருந்தவனிடம் கேட்ட பாரி எக்கணம் துப்பாக்கியை கையில் எடுத்திருந்தான் எப்படி ஏழு பேரை சுட்டிருந்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
“குறி வச்சா தப்பக்கூடாது” என்ற பாரி, வாய் பிளந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவனின் தோளைத் தட்டி, “போய் குழந்தையை கூட்டிட்டு வா” என்றான்.
அவனும் பயந்தபடியே கொஞ்சம் முன்னால் சென்று பாறைக்கு பின்னால் கட்டி வைத்திருந்த சிறுமியை அழைத்து வந்தான்.
“சின்னு…” என்ற விளிப்போடு தன் மகளை கண்டதும் பாறையிலிருந்து குதித்து இறங்கிய பாரி… இரண்டே எட்டில் மகளை அள்ளித் தூக்கியிருந்தான்.
“சித்தா” என்று ஓடிவந்த மகவு தனது சித்தபனின் மார்பில் வாகாகத் தன்னை பொறுத்திக் கொண்டாள்.
சின்னு ஏழு வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள்.
“இந்த பொண்ணுக்கு இவரு சித்தப்பாவா?” என்று அதிர்ந்தவனுக்கு உயிரே அவனின் கையில் இல்லை.
“பட்டு பேபி ரொம்ப பயந்துட்டிங்களா?”
“இல்லையே” என்ற பெண், “நீங்க தான் சூப்பர்மேன் மாதிரி வந்து சேவ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியுமே” என்றதோடு, “நான் அந்தப்பக்கம் இருந்ததால ஆக்ஷன் சீன்ஸ் மிஸ் பண்ணிட்டேன்” என்று முகம் சுருக்கிக் கூறினாள்.
“இதோ இவன் இருக்கானே! பேபிக்கு ஆக்ஷன் காட்டிடுவோம்” என்ற பாரி மகளின் முகத்தை தன் மார்பில் அழுத்திக்கொண்டு, தங்களையே பார்த்தபடி பயத்தோடு நின்றிருந்தவனை தன் துப்பாக்கிக்கு இரையாக்கியிருந்தான்.
“உன்னை ஏற்கனவே வார்ன் பண்ணி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்தா, வெளி மாநிலக்காரனுங்களோட கூட்டு சேர்ந்து என் பொண்ணையே கடத்துரியா?” என்று இறந்தவனின் உடலை எத்திய பாரி, சின்னுவுடன் வீடு வந்து சேரும்போது நேரம் இரவு ஒன்பது.
அந்நேரம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த யாரிடமும் சின்னுவை காணவில்லை என்கிற பயமோ, பதற்றமோ சிறிதுமில்லை. மாறாக மகிழ்வோடு வெளியில் செல்லும் தோற்றத்தில் கிளம்பி தயாராக அமர்ந்திருந்தனர்.
“எவ்வளவு நேரம் பாரி… இவளை கிளப்புறதுக்குள்ள விடிந்துவிடும்” என்ற இளா மகளைப்பற்றி எதுவும் விசாரிக்காது பாரியின் கையிலிருந்த சின்னுவை வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.
“நீ சீக்கிரம் கிளம்பி வா பாரி” என்று அவனின் தோளில் தட்டிய தில்லை வாகனம் தயாராக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வெளியில் சென்றார்.
அப்போது செக்ரி மற்றும் கோதையுடன் உள் நுழைந்த அவியும் ஜென்னும் பாரி காக்கி உடையிலேயே நிற்பதைக் கண்டு…
“சீக்கிரம் கிளம்பி வாடா!” என்று விரட்டினர்.
“என்னலே ஒவ்வொருத்தரும் தனித்தனியா சொல்லணுமா? வெரசா கெளம்பு” என்று தங்கம் பாட்டி தன் பங்கிற்கு பாரியை சீண்டினார்.
“ஏன் தாய் கிழவி நிஜமாவே இங்கிருக்க யாருக்கும் சின்னுவை கடத்தியதை நினைத்து பயமில்லையா?” என்று வினவினான்.
“நீயிருக்கும்போது எதுக்குடா பயப்படனும்” என்று பார்வதி கேட்க…
“அதெல்லாம் நீங்க கூட்டியாந்திடுவீங்கன்னு தெரியும் தம்பி!” என்றார் மணி.
பாரியின் உயரம் செல்ல செல்ல அவன் தான் தங்களின் பாதுகாப்பு என்ற எண்ணத்தை தன் குடும்பத்தினர் ஒவ்வொருவர் மனதிலும் அழுத்தமாக பதிய வைத்திருந்தான் பாரி.
அவர்களும் எல்லாம் சாதாரணம் எனும் வகையில் அனைத்தையும் பழகிக்கொண்டனர்.
“லட்டு குட்டி எங்கேம்மா?”
பாரியின் கவனம் தான் பெற்ற மகவின் பக்கம் திரும்பியது.
“அவன் பரிதியோட இருக்கான் பாரி. நீ கிளம்பி வந்தா கிளம்பிடலாம்” என்று அவர் சொல்ல தன்னுடைய அறைக்கு விரைந்தவன் துரிதமாக தயாராகியிருந்தான்.
பாரி கண்ணாடி முன்பு நின்றிருக்க பரிதி பாரி ஈன்ற இரண்டரை வயது ஆண் மழலையோடு உள்ளே நுழைந்தான்.
தந்தையை கண்டதும் பெரியப்பனிடமிருந்து பிள்ளை கைகளை விரித்து தாவிட, அள்ளித் தூக்கியவன் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு, “லட்டு குட்டி எங்கே கிளம்பிட்டிங்க?” என்று வினவினான்.
“ம்மா… பாக்க… ம்மா… ம்மா” என்று மிழற்றியது குழந்தை.
“எல்லாம் ஓகே தான பாரி?”
“ஓகே பரிதிண்ணா. அவன் டீலை கேன்சல் பண்ணிடுங்க. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணையே கடத்த ஆள் வைத்திருப்பான்” என்ற பாரி கையிலிருக்கும் குழந்தையின் மருண்ட பார்வையில் தன்னை நிதானித்தான்.
சின்னுவை கடத்தியது பரிதியின் தொழில்முறை எதிரி. அதைப்பற்றித்தான் இருவரும் பேசிக்கொண்டனர்.
“இனி அவன் நம்ம பக்கமே வரமாட்டான்” என்ற பாரியை அணைத்து விடுத்தான் பரிதி.
இருவரும் கீழே வரும் நேரம் லீயும் தீபனும் வந்து சேர்ந்தனர்.
அச்சீவர்ஸில் தீபனும் இப்போது பங்குதாரர். ராணுவ செயலி அதிக வரவேற்பு பெற்றிட… அவர்களின் உயரமும் அதிகரித்தது. அதன் நிர்வாகி அவியாக இருப்பினும் நண்பர்கள் அனைவருக்கும் அதில் சம உரிமை உண்டு. அதனை அவி என்றுமே மறுத்தது இல்லை.
“எல்லாரும் வந்தாச்சா, வண்டி தயார்” என்று அரசு வந்து சொல்ல… வீட்டிற்கு முன் நின்றிருந்த கேரவன் போன்ற வசதி கொண்ட பிரைவேட் சொகுசு பேருந்தில் மொத்த குடும்பமும் ஏறியது.
குடும்பம் என்பது நண்பர்கள் அனைவரது சொந்தங்களும் அடங்கியது.
அந்த கேரவன் அவர்களுக்கு சொந்தமானது. எல்லோரும் ஒன்றாக சுற்றுவதற்காக பரிதி தான் வாங்கியிருந்தான்.
இப்போது அவர்கள் ஒன்றாக செல்வது பூவை பார்ப்பதற்கு. ஹைதராபாத் நோக்கிச் செல்கின்றனர்.
“யாரு ட்ரைவ் பண்ண போறது?” தில்லை கேட்டிட, “நானும் தீபனும் ப்பா. பரிதிண்ணா அப்பப்போ ட்ரைவ் பண்றேன் சொன்னாரு” என்று அவி சொல்லிட வாகனம் அவனது கையில் சீரான வேகத்தில் கிளம்பியிருந்தது.
விமானத்திலே செல்லலாம் என்று பாரி சொல்ல… எல்லோரும் ஒன்றாக இருக்கும் நேரத்தை மகிழ்வாய் கடக்கவே நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என தங்களது பஸ்ஸிலே செல்கின்றனர்.
பாரியின் மகனுக்கு பூவின் குலதெய்வ கோவிலில் முடி இறக்கும் விழாவிற்கு செல்ல, எல்லோரும் தனித்தனியாக சென்றால் நல்லாயிருக்காதென்று யோசித்து வாங்கியது அந்த கேரவன் பஸ்.
இப்போது எங்கு சென்றாலும் அதில் பயணிப்பதையே அனைவரும் விரும்பினர்.
பேச்சும் சிரிப்புமாக சென்று கொண்டிருந்தவர்கள் நடுநிசியில் உறங்கிட…
தன்னுடைய மார்பில் துயில் கொண்டிருந்த குழந்தையை தனக்கு பக்கத்தில் மெத்தையில் கிடத்தியவன் போர்வை போர்த்திவிட்டு, திரை விலக்கி அனைவரது மெத்தையையும் ஒரு பார்வை பார்த்தவன், தீபனுடன் பேசியபடி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த அவி வரை மெல்ல நடந்து சென்று வந்தான்.
தன் மெத்தையில் அமர்ந்தவன் திரையை நன்கு இழுத்து மூடினான்.
குழந்தையின் மார்பில் ஒரு கை வைத்து தட்டியவாறே தன்னுடைய அலைபேசியை எடுத்து…
“பூ” என புலனம் வழி தன்னவளை அழைத்திருந்தான்.
அடுத்த நொடி அவனவளிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
காதில் ப்ளூடூத் பொருத்தியவன் மென் குரலில் பேச ஆரம்பித்தான்.
“வேந்தா…”
“சொல்லுங்க ஆபீசர் மேடம்?”
“என்ன கமிஷனர் சார் கிண்டலா?”
“ஹேய் மலரே… நிச்சயம் இல்லைடி” என்றவனின் முகம் தன்னவளின் நிலை உணர்ந்து பூரிப்பில் திளைத்தது.
நாளையிலிருந்து அவள் வெறும் பூந்தமிழ் இல்லை.
‘மிஸ்ஸஸ். பூந்தமிழ் பாரிவேந்தன். ஐபிஎஸ்.’
அவர்கள் வாழ்வில் எதிர்பாராமல் நடந்த நிகழ்விற்கு பின்னர், உடல் தேறிய பூ, பாரியின் விருப்பப்படி ஐபிஎஸ் தேர்வு எழுத முனைப்பாக பயிற்சியில் இறங்கினாள். அவளின் பயம் அறிந்து அவனே வேண்டாமென்றிட அவள் தான் திடமாக அடம்பிடித்து சாதித்துக்கொண்டாள்.
என்னவொன்று அவள் டெல்லியெல்லாம் செல்லவில்லை.
“நீயே எல்லாம் சொல்லிக்கொடு” என்று பாரியின் மாணவியாகினாள்.
எழுத்து தேர்வின் போது அவள் நிறை மாதம். குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் பாரி பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கையில், தன் குடும்பத்தாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஹைதராபாத் காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்தாள்.
இரண்டு வருட பயிற்சி முடிந்து நாளை அவளுக்கு ஐபிஎஸ் என்ற பட்டம் அடையாளமாக மாறும் நாள்.
பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கமும், ஐபிஎஸ் என்ற அடையாளத்திற்கு நட்சத்திர பட்டையும் அனைவருக்கும் கொடுத்து சிறப்பிக்கும் நாள். அதற்கு பயிற்சி பெறுபவர்களின் குடும்பத்தார் வருகை தரலாம். அதன் அடிப்படையிலேயே அனைவரும் கிளம்பிவிட்டனர்.
“வேந்தா…”
“சொல்லு மலரே?”
“கிளம்பிட்டிங்களா?”
“த்ரீ ஹவ்ர்ஸ் ஆச்சு…”
“உன்னை எப்போ பார்ப்பேன்னு இருக்குடா!”
அட்டகாசமாக சிரித்தான் அவன்.
“என்னடா சிரிக்குற?” அவள் சிணுங்கினாள்.
“பத்து நாளுக்கு முன்னதான வந்து பார்த்துட்டு வந்தேன்” என்றான்.
“போடா…” என்றவள், “உன்னை கட்டிக்கணும் போலிருக்குடா” என்றாள் காதலாய்.
“நாளையிலிருந்து மேடம் என் கைக்குள்ளத்தான். அப்புறம் யார் உங்களை விட்டா(ல்). கட்டிக்கிட்டே இருடி.” அவளுக்கு சற்றும் குறைவில்லாத காதலில் கூறினான்.
இப்படி பேச்சும் காதலுமாய் அதிகாலையில் தான் அவளை விட்டான்.
ஹைதராபாத் வந்து சேர்ந்தவர்கள் ஹோட்டலில் அறையெடுத்து கிளம்பி, சரியான நேரத்திற்கு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் குடும்பத்தினருக்கென போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
பாரியை இனம் கண்டு அந்நகரத்தின் தலைமை காவலர் பாரியை மேடைக்கு அழைத்திட தன்மையாக நன்றியோடு மறுத்தான்.
அவர் அவனின் சாதனைகளை நினைத்து மீண்டும் வற்புறுத்திட,
“நான் வந்தது என் மனைவியின் கணவனா, இங்கு அமர்வது தான் சரி” என நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.
அதிலேயே அவரது கண்களுக்கு பாரி பலபடி உயர்ந்து தெரிந்தான்.
காவலர்களின் பரேட் என்று சொல்லப்படும் அணிவகுப்புகள் மற்றும் அவர்கள் தயார் செய்திருந்த நிகழ்ச்சி நிரல்கள் யாவும் முடிந்ததும் பதக்கம் வழங்கும் தருணம் ஆரம்பமாகியது.
பெண்கள் பிரிவில் அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கியதற்காக பூவிற்கு அம்மாநில கவர்னர் பதக்கம் அணிவிக்க,
தான் இதுபோன்ற மேடையில் பதக்கம் பெற்ற நாளைவிட இன்று அதீத மகிழ்வு கொண்டான் பாரி.
தனக்குரிய நட்சத்திர பட்டையையும் வாங்கியவளின் கண்கள் கூட்டத்தில் தன்னவனை தேடியது.
மேடையில் பூவை கண்டுவிட்ட குழந்தை “ம்மா…மா” என்று கைத்தட்டி ஆர்பரித்திட, அவள் பதக்கம் வாங்கியதற்காக குடும்ப உறுப்பினர் அனைவரும் கைத்தட்டிக் கொண்டிருந்தனர்.
மேடையிலிருந்து கீழிறங்கிய பூ பாரியிடம் தான் நேராக சென்றாள்.
கணவனின் முன் காக்கி சீருடையில் நிமிர்ந்து நின்றவள், விறைப்பாக சல்யூட் அடித்தாள். இதனை பாரியே எதிர்பார்க்கவில்லை.
பாரி இனிய அதிர்வாய் எழுந்து நின்றதும், தன் கழுத்திலிருந்த பதக்கத்தை தன்னவனின் கழுத்தில் அணிவித்தாள்.
இதைவிட ஒரு கணவனாக அவனுக்கு வேறென்ன வேண்டுமாம்.
இருக்கும் இடம் சூழல் மறந்து…
“டேய் மலரே… யூ மேக் மீ மேட் ஆன் யூ” என்று மொத்த காதலையும் கண்களில் தேக்கிக் கூறியிருந்தான்.
நண்பர்கள் பட்டாளம் ஓவென்று ஒலியெழுப்பி மகிழ்வினை பகிர்ந்தது.
அன்றைய தினம் சந்தோஷமாய் முடிய… இரவு உணவிற்கு பின் அனைவரும் சென்னை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர்.
கேரவனில் ஏறியது முதல் பூ அனைவரது பாசத்திலும் மிதந்து கொண்டிருந்தாள். அவளின் மனம் பாரியுடன் இருக்கும் கணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திட அவளை யாரும் விடுவதாகத் தெரியவில்லை.
அவியின் ஒரு வயது பெண் மகவை கொஞ்சியவள், கொஞ்சமே கொஞ்சம் மேடிட்ட வயிற்றுடன் இருந்த லீயிடம் “சொல்லவே இல்லை” என பொய் கோபம் கொண்டாள்.
அரசு இறுதியாக பாரியின் கழுத்தில் பூ பதக்கத்தை அணிவித்தை எண்ணி பெருமையாக உணர்ந்தார். அதனை பூவிடமும் பகிர்ந்து தன் மகளை உச்சி நுகர்ந்தார்.
பார்வதி, மணி தங்கள் அணைப்பின் மூலம் மகிழ்வை வெளிப்படுத்திட… அவியும், பரிதியும் பூவை ஒன்றாக தூக்கி ஆர்ப்பரித்து கொண்டாடினர்.
“இனியாவது வூட்டுல அடங்கி உட்காரு” என்று அப்போதும் தங்கம் தன் பேத்தியிடம் வம்பு பேசிட,
“அடங்கி உட்காரவா கெழவி இம்புட்டு கஷ்டப்பட்டேன்” என்று அவரின் கொமட்டில் இடித்தாள்.
பதிலுக்கு அவரும் பூவின் தாடையில் இடிக்க கையை உயர்த்திட…
“தாய் கிழவி” என்ற பாரியின் குரலில் முகத்தை வெட்டியவாரகத் திரும்பிக் கொண்டார்.
இளா தங்கையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தன் மகிழ்வை வெளிப்படுத்திட…
லீயும், ஜென்னும் அவளை கட்டிக்கொண்டனர்.
தீபன் பாரியின் முன்னிலையில் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றிட அவளை தோளோடு அணைத்தான்.
அதில் பாரி அட்டகாசமாய் சிரிக்க…
“இப்போலாம் அவன் பொறாமையில் பொங்குறதில்லை தீபன். யார் வந்தாலும் அவன் இடம் ஸ்பெஷல் அப்படின்னு எப்பவோ தெரிஞ்சிக்கிட்டான்” என்று பரிதி சொல்லியதில் அங்கு சிரிப்பலை பரவி அடங்கியது.
சிறிது நேரத்திலேயே அனைவரும் உறக்கத்திற்கு சென்றிட…
பெரும் மூச்சோடு கணவனின் அருகில் வந்தவள், அவர்களின் மெத்தை பகுதியை திரை கொண்டு மூடினாள்.
உறங்கிக்கொண்டிருந்த பிள்ளையின் நெற்றியில் இதழ் பதித்து விலகியவள், தனக்கு எல்லாமுமாகிய கணவனுக்கும் நெற்றியில் இதழ் பதித்தாள்.
“குடும்பமாடா இது?” என்று சந்தோஷமாக அலுத்துக்கொண்டவள், “பாசம் அப்படிங்கிற பெயரில் கொலை பன்றாங்கடா… முடியல. முதல் வேலையா எல்லாரையும் ஜெயிலில் பிடித்து போடணும். அப்போதான் நான் என் புருஷன்கிட்ட பேசவே முடியும் போலிருக்கு” என்று அவள் தன்போக்கில் பாரியிடம் சொல்லிக்கொண்டிருக்க…
திரைக்கு பின்னால் தெரிந்த நிழலில் பாரியின் தோள் சிரிப்பில் குலுங்கியது.
பூ என்னவென்று திரையை விலக்கிட மொத்த பேரும் அவள் பேசியதை கேட்டபடி இடுப்பில் கைக்குற்றி முறைத்து நின்றனர்.
“எங்களை ஜெயிலில் போடப்போறியா?” என்று பார்வதி கூறிட பூ அசடு வழிந்தாள்.
“உம் புருஷன்கிட்ட பேச வேணாமுன்னு நாங்களா சொன்னோம். உனக்கு வேணுன்னா நீ போவ வேண்டியது தானடி. யாரு உன்னைய பிடிச்சு வச்சா. புருஷனும் பொண்டாட்டியும் ரொம்பத்தேன் பண்ணுறீங்க” என்று தங்கம் பாட்டி கூறிட அங்கே சிரிப்பிற்கு பஞ்சமில்லாது போனது.
“வாய்… வாய்…” என்று மணி பூவின் காதினை திருக முயல,
பாரி வேகமாக தன்னவளை தன்பக்கம் இழுத்து அணைத்திருந்தான்.
“இனி நம்மால் அவளை ஒன்னும் சொல்ல முடியாது” என கலைந்து சென்ற அனைவரின் மனமும் மகிழ்வில் நிம்மதியில் நிறைந்து காணப்பட்டது.
கணவனின் கையணைப்பிற்குள் சுருண்டிருந்தவள், தலையை உயர்த்தி காதலாய் பார்த்திட… அவனும் தன் காதல் பார்வையை தன்னவளின் விழிகளோடு கலக்கவிட்டான்.
அங்கே பார்வை காதல் மொழி பேசிட… நேசம் கொண்ட இரு நெஞ்சங்களும் ஒன்றையொன்று தொட்டு இணைந்து துடித்தது.
அவர்களின் இந்த ஒற்றுமை, புரிதல், அன்பு, பாசம், தன் இணையிடம் கொண்ட காதல் யாவும், பூமிக்கு மணம் சேர்த்திடும் தூவானமாய் அவர்களது வாழ்வில் என்றும் இதம் பரப்பிடும்.
மேகங்களின் தூவானத் தூரல், அதன் நகர்வில் நீண்டு கொண்டே பரந்து விரிவதைப்போல்…
பாரி வேந்தன், பூந்தமிழ் அவர்களின் தூவானம்(ப்) (நினைவு, காதல், நட்பு) பயணம் இன்று போல் என்றும் நீண்டு கொண்டே செல்ல வாழ்த்தி விடைபெறுவோம்.
உன்னோடு இப்படி வாழ்ந்திட ஆசை…
பாரி வேந்தன்,
என் உலகமே நீயென்றாகிட…
ஒவ்வொரு நாளும்
உன் விழியில் தொடங்கி
உன்னுள் முடிந்திட ஆசை.
பூந்தமிழ்,
மொத்தமும் நீயாகிட…
ஒவ்வொரு நாளும்
சுயம் தொலைத்து
உன்னுள் உருகிக் கரைந்திட ஆசை.
*சுபம்.*
“FRIENDSHIP OF TWO GIRLS/BOYS IS THE BEST RELATIONSHIP. BUT, THE FRIENDSHIP OF A BOY AND GIRL… IT’S WORLD MOST BEAUTIFUL & BELOVED RELATIONSHIP.”
***
கதை படிச்ச சைலண்ட் ரீடர்ஸ் எல்லாரும் இப்போவாவது உங்க கருத்தை சொல்லிட்டு போங்க இல்லைன்னா ரேட்டிங் கொடுங்க😁😁😁😁😁😁😁.
கதையோடு பயணித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வாசகத் தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏.
அன்புடன்💞
பிரியதர்ஷினி.S❤️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
29
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

sema super story. enkala apadiye katdi potduruchu
Wow… Very super story sis.. sweet ending… Poo IPS anathu super sis..
Parithi carecter super sis…
Going to miss paru and poo
Daily mrng yepo ud poduvinganu site la vanthu vanthu pathutu povey sis …
Unga stories na romba pudikum sis…
தூவானம் book ah release panuvingala ah sis….
Yenaku romba pudicha story sis…