
தூவானப் பயணம் 8
அச்சீவர்ஸ்.
வரவேற்பில் இருக்கும் பெண் காவ்யாவுக்கு அழைக்க, அதனை தீபன் தான் ஏற்றான்.
“சார் காவ்யாவை பார்க்க அவங்க ஹஸ்பெண்ட் வந்திருக்காங்க” என்று சொல்லிய பெண், தீபனின் ம் என்ற பதிலில் வைத்திட… சில நிமிடங்களில் சாய் முன் தீபனும், அவியும் நின்றனர்.
“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” அவி தான் கேட்டிருந்தான்.
அன்று அபியின் பிறந்தநாளின் போது சாய் வந்து சண்டையிட்டு சென்ற பின்னர், அவனை பிரிந்ததற்கான காரணத்தை காவ்யா அனைவரிடமும் மேலோட்டமாக சொல்லியிருந்தாள்.
காதலித்து கல்யாணம் செய்த மனைவி இருக்கும்போதே, இன்னொரு பெண்ணை மணப்பதற்கு… அதற்கு உண்டான காரணத்தை நினைத்த அவிக்கு சாய்’யினை ஒரு மனிதனாகக் கூட மதிக்கத் தோன்றவில்லை.
“நான் என் வைஃப் பார்க்க வந்திருக்கேன். நடுவில் நீங்க யாரு?” சட்டமாக இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தவனாகக் கேட்டான் சாய்.
“போலீசுக்கு போன் பண்ணுங்க சீனியர்” என்று அவி தீபனிடம் சொல்ல…
“உங்க குடும்பத்துலே மூணு போலீஸ் இருக்குல?” என்றான். நக்கலாக.
“பிரச்சினை வேண்டாம் சாய். நீங்க கிளம்புங்க. காவ்யாவுக்கு உங்களை பார்க்க விருப்பமில்லை” என்று தீபன் தன்மையாகக் கூறினான்.
“அவளை வந்து சொல்ல சொல்லுங்க” என்ற சாய் அங்கிருந்து செல்வதாக இல்லை.
“இது வொர்க் பிளஸ். இங்க இப்படி பண்றது சரியில்லை சாய்” என்று மீண்டும் தீபன் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இயல்பாகவே பேசிட…
“செக்யூரிட்டி கூப்பிட்டு கழுத்தை பிடித்து தள்ளாம இவன்கிட்ட என்ன தீபன் கெஞ்சிக்கிட்டு” என்ற அவி, அலுவலக காவலாளிகளை அழைத்திட மூவர் அங்கு விரைந்து வந்தனர்.
“நீயா போயிட்டனா உனக்கு மரியாதை!” அவி சுட்டுவிரல் நீட்டி கூறினான்.
“நான் யாருன்னு தெரியாம ரொம்ப துள்ளுற” என்று சாய் இருக்கையை விட்டு எழுந்திருக்க…
“நல்லாவே தெரியும்… மனைவிக்கு துரோகம் செய்கிறவனுக்கு இந்த சமூகம் வைக்கும் பெயரே வேற” என்று அவி வேகமாக சொல்ல சாய் அவியின் சட்டையை பிடித்திருந்தான்.
“ஏய்!”
“யார் மேல கை வைக்கிற?” அவி சாயின் மூக்கிலே ஒரு குத்து வைக்க, காவலாளிகள் இருவரையும் பிரித்து நிறுத்தி தங்கள் பிடிக்குள் வைத்து நின்றனர்.
சாய் அவி தன்னை அத்தனை பேரின் முன்பும் அடித்ததை அவமானமாக எண்ணி அவியை தீயாய் முறைத்திட…
“என்னடா முறைக்கிற? கேட்க ஆளில்லைன்னுதான அன்னைக்கு அந்த ஆட்டம் போட்ட, கன்சீவ்வா இருக்க பொண்ணுன்னு கூட பார்க்கமா…” என்ற அவி, “இப்போ நாங்க இருக்கோம். எங்க நெருங்கு பார்ப்போம்” என்றான் அவி.
அப்போது அங்கு வந்த காவ்யா…
“தீபன் அண்ணா என்னாச்சு?” என்று கேட்டவள் அவர்களுக்கு முன்னே கொலைவெறியுடன் நின்றிருக்கும் சாய்’யை கண்டு அடிகள் பின் வைத்தாள்.
தீபன் சட்டென்று அவளின் கை பிடித்த நிறுத்தியிருந்தான்.
“எத்தனை நாளுக்கு பின்வாங்கி ஓடிக்கிட்டே இருப்ப?” என்று தீபன் கேட்டிட,
“ஒரு அடி முன்ன வச்சு பாரு” என்றிருந்தான் அவி.
காவ்யா நிமிர்ந்து நின்றாள்.
பணியாளர்கள் அனைவரும் விருந்தினர் அறைக்கு முன்பு கூடிவிட்டனர்.
அவி கண் காட்டிட அனைவரும் கலைந்து சென்றனர்.
“என்ன வேணும் உனக்கு?” ஆயாசமாக வினவினாள்.
“நீதான் பேபி. உன்னை இப்பவும் நான் லவ் பன்றேன்” என்று தன்னிரு கைகளையும் விரித்து காண்பித்தான்.
“ச்சீ… கல்யாணம் ஆன பின்னாடியும், இன்னொருத்தியோட குடும்பம் நடத்திட்டு இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்லை?” கோபமாகக் கேட்டிட முயன்றும் அவளால் முடியவில்லை. அவனுடைய காதல் எந்த வகை வேண்டுமாக இருக்கலாம். ஆனால், இவள் ஆத்மார்த்தமாக காதல் கொண்டிருந்தாளே! எளிதில் நீர்த்துப் போகுமா?
“அது பிஸ்னெஸ்காக ஒத்துகிட்ட டீல் பேபி… அவளோட நான் இருந்திருந்தாலும், உன்னோட இருந்த நேரமாதிரி கிடையாது. இத்தனை வருஷமும் உன்னை நினைச்சு தான் அவளோடு…” என்று அவன் முடிக்கும் முன்பு காவ்யா காளியாக மாறியிருந்தாள்.
அவனது பேச்சில் அவி மற்றும் தீபன் கூட அறுவருத்துப் போயினர்.
“நான் செரு*** அடிக்கும் முன்ன இங்கிருந்து போயிடு” என்ற காவ்யா காலிலிருந்த பாதுகையை கையில் எடுத்துமிருந்தாள்.
“அடி பேபி… அதாலே எவ்ளோ அடிக்கணுமோ அடி. அடிச்சிட்டு என்கூட வந்திடு பேபி” என்றான்.
“இவன் ஒரு முடிவோடு வந்திருக்கான் அவி. பாரிக்கு போன போடு” என்று தீபன் சொல்ல, அவி அழைப்பு விடுத்து எதுவும் பேசாது இருந்தான்.
“ச்சீய்… நீயெல்லாம் மனுஷனா?” என்ற காவ்யா… “உன் உறவே எனக்கு வேண்டாம். உன் முகத்தையே நான் பார்க்க விரும்பல” என்று சொல்லிட…
அவளின் பேச்சினைக் கேட்ட பாரி, தன்னுடன் சத்யாவும் இருந்திட, அவனையும் கூட்டிக்கொண்டு அச்சீவர்ஸ் நோக்கி வந்தான்.
“உனக்கும் என்மேல அதே லவ் இப்போவும் இருக்கு பேபி” என்றவன், “நான் ப்ரூவ் பண்ணட்டுமா?” என்று காவ்யாவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான்.
அங்கு இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட அவன் கண்டுகொள்ளவில்லை.
“உனக்கு நான் இப்படி அடி மேல் அடி வைத்து உன்னை நெருங்கிறது ரொம்ப பிடிக்குமே பேபி” என்க,
“திஸ் இஸ் டூ மச்” என்று அவி முன்வர,
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். இப்படியா வெட்கமே இல்லாம வேடிக்கை பார்ப்பீங்க?” என்றிருந்தான் சாய்.
அதற்கு காவ்யாவும் எதுவும் சொல்லாது அமைதியாக நிற்க, தீபன் அவியை இழுத்துக்கொண்டு வெளியில் வந்து நின்றான்.
கண்ணாடி சுவர் என்பதால் அவர்கள் பேசுவது கேட்காவிட்டாலும் பார்த்திட முடிந்தது.
சாயின் ஒவ்வொரு அடிக்கும் காவ்யா பின்னால் சென்றிட சுவற்றில் மோதி நின்றாள்.
அவளை நெருங்கிவிட்டவன் அவளின் இருபக்கமும் சுவற்றில் கை குற்றி தடுப்பாக நின்றிட…
“சாய் இது ஆபீஸ். ஒழுங்கா போயிடு” என்றாள்.
“இப்போ அடி பேபி” என்றவன் தன் மூச்சுக்காற்றை அவளின் முகம் மோத செய்ய…
“திஸ் இஸ் டூ மச் சீனியர்” என்று அவி பற்களை கடித்தான்.
“ஒழுங்கா போயிடு. உன்னை நான் மறந்தே பதினைந்து வருசம் ஆகிடுச்சு” என்றாள் காவ்யா.
“அப்புறமும் இன்னமும் எதுக்கு நான் கட்டின தாலியை உன் கழுத்தில் போட்டிருக்கியாம்?” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தம் வைத்திட முயல… அவனின் மார்பில் கை வைத்து வேகமாக தள்ளிவிட்டவள், கீழே விழுந்தவனின் முன் சென்று குனிந்து…
“இது இருக்கிறது தான் உன் பிரச்சினையா இப்போ?” என்றவள், “என் பையனோட பிறப்பு தப்பா பார்க்கப்பட்டுடக் கூடாதுன்னு தான், இதை கழுத்தில் மாட்டியிருந்தேன். இப்படி நீ வந்து திரும்ப உரிமை கொண்டாடுவன்னு தெரிந்திருந்தா எப்பவோ கழுட்டியிருப்பேன்” எனக்கூறியவள் நொடியும் தாமதியாது தன் கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி சாயின் முகத்திற்கு முன் தரையில் போட்டாள்.
காவ்யாவின் செயலில் அக்கணம் அங்கு வந்து சேர்ந்த சத்யா உட்பட அதிர்ச்சி அடைந்தனர்.
பாரி இதைத்தான் எதிர்பார்த்தேன் எனும் விதமாக அவளருகே வந்து நின்றான்.
ஆண்கள் பணிய வைக்க முயல்கிறார்கள் என்றால்… தெரிந்தும் அடிமைப்பட்டு போவதுதான் பெண்ணின் தோல்வி. இங்கு காவ்யா அதனை வென்றுவிட்டாள்.
“குட் டிசிஷன்” என்ற பாரி, “கம்ப்ளைய்ண்ட் கொடுக்கிறியா?” எனக் கேட்டான்.
“செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது” என்ற காவ்யாவின் வார்த்தையில், அவள் தாலியை கழட்டி வீசியதையே நம்ப முடியாதிருந்த சாயின் முகம் கருத்து சிறுத்தது.
“இப்போ போவியா இங்கிருந்து?” கேட்ட காவ்யா அங்கு நிற்காது வெளியேறினாள்.
“சாரி அவிண்ணா. அவன் அப்படி கேட்கும்போது மூஞ்சிலே குத்துவீங்க நினைச்சேன். இப்படி வெளிய போவீங்க எதிர்பார்க்கல” என்றாள். வருத்தம் மிகுதியில்.
“நீ அமைதியா நின்னியே!” என்ற அவியுடன் தீபனும்,
“இட்ஸ் ஓகே” என ஒன்றாகக் கூறினர்.
“பெருசா ஒண்ணுல என்கிட்ட மாட்டுவ… காத்திட்டு இருக்கேன். நீ சிக்கு… உன்னை சிதைச்சிடுறேன்” என்ற பாரி, “இதுக்கு மேலவும் நீ இங்க இருக்கியே… உன்னை பாராட்டியே ஆகணும்” என்று சிரித்திட… சாய் பாரியை முறைத்துக்கொண்டே வெளியேறினான்.
“காவ்யா, அபியை வைத்து தப்பிக்கலாம் நினைக்காத! உனக்கு தண்டனை என் மூலமாத்தான்” என்று எச்சரிகையாகக் கூறினான் பாரி.
சத்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன தான் கணவன் வேண்டாமென்றாலும், அவனால் தன் தங்கையின் செயலை ஏற்க முடியவில்லை.
நண்பனின் முகம் வைத்தே அவனின் மனம் புரிந்த பாரி…
“சில் சத்யா… சிலருக்கு இந்த மாதிரி செய்தால் தான் சரி” என்று அவனின் தோளில் தட்டினான்.
“அவனே எனக்கு வேணாங்கிறப்போ அவன் கட்டின தாலி மட்டும் எதுக்குண்ணா. கழுத்தை சுத்தின பாம்பு மாதிரி. இத்தனை நாள் நெருக்கிக்கிட்டு இருந்தது. இன்னைக்குத்தான் ஃபிரியா மூச்சுவிட முடியுது” என்றாள்.
காவ்யா ஏதோவொரு வகையில் நிம்மதி கொள்கிறாள் என்பதில் சத்யாவும் சமாதானம் அடைந்தான்.
“என்னடா ரொம்ப கோபமா இருக்க மாதிரி தெரியுது?”
சாய் சென்ற பின்னரும் கடுப்புடன் நின்று கொண்டிருந்த அவியிடம் கேட்டான் பாரி.
அக்கணம் ஒரு பெண் அவர்கள் அருகில் வந்து…
“பாரின் க்லைன்ட் வீடியோ மீட்டிங் கனெக்ட்டட் சார்” என்று சொல்ல…
“தீபன் பார்த்துக்கோங்க” என்று சொல்லி அவி தன்னுடைய அறைக்குள் செல்ல, பாரியும் அவன் பின்னால் சென்றான்.
கதவை சாற்றிய பாரி,
“என்னன்னு சொன்னால் தானே தெரியும் அவி?” எனக் கேட்க,
“நத்திங்டா பாரி” என்றான் அவி.
“ஷ்யூர்?”
“ம்ம்.”
“அப்புறம் ஏன் இப்படி இருக்க?”
“நாளைக்கு அம்மாவோட டெத் ஆன்வெர்சரி. காலையிலிருந்தே ரொம்ப ஹைப் ஆகுறேன்” என்றான்.
“ம்ப்ச்…” என்று அவியின் அருகில் சென்ற பாரி…
“இதுக்கு ஆறுதல் சொல்லிட முடியாது அவி. பழகிக்கோ. நிதர்சனம் இதுதான்” என்று தோள் மீது கை வைத்தவனை கட்டிக்கொண்டான் அவி.
“புரியுது” என்ற அவி, பாரியின் மென் தட்டலில் சில நிமிடங்கள் அடங்கி இருந்தவன், “அம் ஓகேடா” என்று பிரிந்து அமர்ந்தான்.
“இதுதான் லாஸ்ட். அவி’ன்னா எப்பவும் கலகலப்பா பார்த்து தான் பழக்கம். நீ இப்படி சோகத்தை வச்சிக்கிட்டு இருக்காத மச்சான். என்னவோ பண்ணுது” என்றான் பாரி.
“நீ என்னை ஓவரா லவ் பண்ற. அதான் உனக்கு அப்படி இருக்கு” என்று அவி சிரியாது சொல்ல…
“நான் உன்னை லவ் பண்றன்னு வெளியில் சொல்லு… நம்மளை வேற மாதிரி பார்ப்பாங்க” என்று பதிலுக்கு பேசிய பாரியிடம் நீண்ட புன்னகை. அது அவியையும் தொக்கி நின்றது.
நண்பனின் கண நேர வருத்தத்தைக் கூட ஏற்க முடியாத பாரி, அவனின் உயிர் போராட்டத்தை இன்னும் சில தினங்களில் காணவிருக்கிறான். அப்போது பாரியின் நிலை?
*****************
ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில்…
“நாளை ஈவ்வினிங் ட்ரிப் ஸ்டார்ட் பண்ணலாம் பரிதிண்ணா” என்றான் பாரி.
“என்ன ட்ரிப் டாட்?” அருகிலிருந்த ஆரிஷ் கேட்டிட,
“சும்மா… ஜாலியா ஒரு லாங் ட்ரிப்” என்றான் பாரி.
உடனே முகத்தை உம்மென்று வைத்துக்கொண்ட பிள்ளைகள்,
“நாங்களும் வர்றோம்” என்று ஒருசேர கூறிட…
“இது பெரியவங்க ட்ரிப் டா. நீங்களாம் முடியாது. எக்ஸாம்ஸ் முடியட்டும் சம்மர் ஹாலிடேஸ்க்கு எங்காவது போகலாம்” என்ற பாரியிடம் பிள்ளைகள் குதித்தபடி அடம் பிடித்தனர்.
பாரி அவர்களை சமாளிக்க முடியாது திணறினான்.
“பரிதிண்ணா ஹெல்ப் மீ!” என்றான் அப்பாவியாக.
“அம் ஹெல்ப்லஸ் மை பிரதர்” என்ற பரிதி சிரித்துக்கொண்டே எழுந்து சென்றிட… பாரியின் நிலை பிள்ளைகளிடம் பரிதாபமாகியது.
அவனின் நிலை கண்டு லீ சத்தமிட்டு சிரிக்க…
“யூ டூ லீ” என்றான் பாரி.
“என்ஜாய் பாரி” என்று லீ சொல்லிட,
“நீங்க எப்படி சமாளிச்சிட்டு போறீங்கன்னு நான் பார்க்கிறேன்” என்று கண்ணடித்தாள் இளா.
“நீயுமா இளா” என்ற பாரி முகம் சுருக்கி சின்னுவை பார்க்க…
அவள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதைப்போல் தலையை அசைத்து,
“மிதுன், மித்ரா… லட்டு குட்டி அக்கா பாருங்க. இப்போ போனால் நானும், அபியும் வர முடியாது. எங்களுக்கு ஸ்கூல் லீவ் போட முடியாது. எல்லாருக்கும் எக்சாம்ஸ் முடிந்ததும் போலாம். நான் வேணான்னா நீங்க மட்டும் போங்க” என்று மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு முகத்தை தூக்கியபடி சின்னு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
மூன்றும் அவளை சுற்றி நின்று,
“அக்கா வேணும். நாம லீவ் விட்டதுமே போகலாம். தங்கம் பாட்டி வீட்டுக்கு போகலாம். மணி பாட்டி, அரசு தாத்தா நிறைய பலகாரம் செய்து தருவாங்க. வெளியலாம் கூப்பிட்டு போவாங்க” என்று சின்னுவின் தாடை பிடித்து கூறிய ஆரிஷ்…
“நீங்க போங்க டாட். என்ஜாய் பண்ணிட்டு வாங்க. கிட்ஸ் கேங் தனியா போவோம். அப்போ நீங்கலாம் யாரும் வரக்கூடாது” என்று மிரட்டுவதை போல் கூறினான்.
“சரிங்க சார்” என்று ஆரிஷை தூக்கி சுற்றிய பாரி இறக்கிவிட்டவனாக, அவிக்கு போன் செய்து கிளம்பும் தகவலை கூறினான்.
“போய் தான் ஆகணுமா பாரி?”
தில்லை கேட்டிட…
“நான் கண்டிப்பா போகணும் ப்பா” என்றிருந்தான்.
அதிலே அவன் வேலை விடயமாக செல்கிறான் என்பது புரிந்தது.
“அப்போ மத்தவங்க எதுக்கு?” தில்லை ஆராய்ச்சியாகக் கேட்டிருந்தார்.
“என் வேலை விஷயத்தை எப்படியோ பரிதிண்ணா மோப்பம் பிடிச்சிட்டாங்க. எனக்கு எதுவும் ஆகிடுமோ பயம். அதனால் வராங்க” என்றான்.
“ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் பாரி. உன் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்றவரிடம்,
“நீங்க சொல்லாம இருந்தால் சரி” எனக் கூறி மேலேறி தன்னுடைய அறைக்கு சென்றான்.
பூ ஜென்னுடன் பால்கனியில் நின்று அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.
நேராக சென்று தமிழை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.
“இன்னும் என்கிட்ட சொல்லல ஜென்” என்ற பூ திரும்பி அவனின் மார்பில் நெற்றி முட்டியவளாக, “லீவ் எப்படி அரேஞ் பண்ண?” எனக் கேட்டாள்.
“டிஜிபி சார் மனசு வைத்தால் முடியாத என்ன? நாளைக்கு தான் மெயில் பண்ணனும்” என்றாள் ஜென்.
“ஆனால் பாரி இப்போ லீவில் இருக்கானே” என்றிட,
“அப்போ நானும் கையில் ஒரு கட்டை போட்டுக்க வேண்டியது தான்” என்று ஜென் சிரித்திட…
“எல்லாம் திருட்டு கோட்டுங்க… போலீஸ் ட்ரஸ்ஸில் திரியுது” என்று கேலி செய்தாள் பூ.
பூவும் ஜென்னுக்கு மேலும் பேசிக்கொண்டே செல்ல… பூவை அணைத்தவாறு கண் மூடி நின்றிருந்த பாரி… இப்போதைக்கு இவர்கள் பேச்சு நிற்காது என்பதை உணர்ந்து…
பூவின் கையிலிருந்து அலைபேசியை பறித்தெடுத்தான்.
“அவிகிட்ட பேச உனக்கு ஒண்ணும் இருக்காதா? எப்போ பாரு என் லைனில் குறுக்கவர நீ” என்று கேட்டிருந்தான் பாரி.
“இப்போ நீதான் எங்க லைனில் குறுக்க வந்திருக்க” என்று ஜென் கூற,
“நாளியிலிருந்து கூடவே வச்சிக்கிட்டு சுத்தினாலும், உங்க முன்னாடி ஒரு கிஸ் கூட கொடுக்க முடியாது ஜென். மனுஷன் நிலைமை புரியமா நேரத்தை வீணாக்குற” என்று பாரி சொன்னதன் அர்த்தத்தில் ஜென்னின் முகம் வியப்பைக் காட்டியது.
“அப்படியே எங்க முன்னாடி நீ ஒண்ணுமே பண்ணமாட்ட தான். இதை நான் நம்பணுமா? பூ பூன்னு சொல்லியே எங்க காதை பஞ்சர் ஆக்கிடுவ. உன்கிட்ட இருந்து தான் நாங்க தப்பிக்க வழி கண்டுபிடிக்கணும்” என்று ஜென் அவனை கலாய்த்துக் கொண்டிருக்க…
பூ பாரியை முறைத்தவளாக அவனின் மார்பிலே கடித்து வைத்தாள்.
“ஷ்ஷ்…” என்றவன், “பாரு இப்போவே என்னை கடிச்சு திங்குறா(ள்)” என்றவனின் விளையாட்டு புரிந்து…
“உங்களுக்கு நடுவில் நானில்லை” என்றவளாக அழைப்பைத் துண்டித்தாள்.
அலைப்பேசியை அங்கிருந்த இருக்கையில் வைத்தவன், பூவை சுற்றி வளைத்து திருப்பி கழுத்தோடு கையிட்டு நெருக்கி தன்னில் பதித்தவனாக அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“என்னவாம் டிஜிபி சாருக்கு… பேச்சு செயலெல்லாம் வேற மாதிரி இருக்கு” என்ற பூவின் வாசத்தை நாசி நுகர்ந்தவனாக…
“நத்திங் மலரே… டெம்ப்ட் பண்ற நீ” என்றான்.
“நிஜமா இதுதானா?”
“ஆமாம்… உனக்கு என்ன தோணுது?”
“எதுவுமில்லை” என்ற பூ விலக முயல…
“ம்ப்ச் கொஞ்ச நேரம் இப்படியே இரு மலரே” என்றவனின் அணைப்பு இறுகியது.
செல்லவிருக்கும் பயணத்தில் அவனுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் பூவுடனான ஒவ்வொரு நொடியையும் காதலால் மட்டுமே கடந்திட நினைத்தான்.
“வேந்தா…”
“என்னடி?”
“எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது. அத்தை தோட்டத்துக்கு பூ பறிக்க வருவாங்க. அங்கிருந்து பார்த்தால் நாம நிக்கிறது நல்லா தெரியும்” என்றாள்.
“அப்போ உள்ள போவோம்” என்றவன் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு படுக்கையை நோக்கிச் சென்றான்.
மெத்தையில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் இருத்திக்கொண்டான்.
பாரியிடம் ஆழ்ந்த அமைதி.
பூவின் அருகாமையை மிச்சமின்றி மனதில் சேமித்துக் கொண்டிருந்தான்.
“வேந்தா…”
“மலரே!”
“எவ்வளவு நேரம் இங்கயே இருக்கிறது? ஆரிஷ் தேடுவான்” என்றவள் எழ நினைக்க…
“ம்ப்ச்… என்னடி உனக்கு? மனுஷன் நிலைமை புரியாம” என்றவன், “இருடி ப்ளீஸ்” என்று கண்கள் சுருக்கினான்.
அவனின் கண்களில் இதழ் ஒற்றியவள்…
“என்னவாம்… வேந்தனுக்கு?” எனக்கேட்டு, “சொல்லமாட்ட ரைட்?” என்றாள்.
“தெரியுதுல? அப்புறம் என்ன?”
“ரொம்ப பயம்காட்டுற வேந்தா!”
“அப்படிலாம் இல்லை. நிறைய தாட்ஸ். மூவ் ஆகணும்” என்றவன், “அம் ஓகே. நீ போ” என்று தன்னுடைய கைகளை தளர்த்தினான்.
“இந்த ட்ரிப் என்ஜாய் பண்றதுக்கு இல்லைன்னு தெரியுது” என்றவள், “போய் தான் ஆகணுமா?” எனக் கேட்க…
“மிஸ் பண்ண முடியாதுடா! கண்டிப்பா போகணும். பக்காவா எவிடென்ஸ் க்லெட் பண்ணனும். இந்த சான்ஸ் விட்டால் வேற கிடைக்காது” என்ற பாரி,
“நீங்கலாம் நின்னுக்கோங்களேன்!” என்றான்.
“முடியாது.”
பாரி முடிப்பதற்குள் பூ மறுத்திருந்தாள்.
“நீ எங்களை வேண்டான்னு சொல்லும்போதே அங்க உன்னையும் மீறி என்ன வேணாலும் நடக்கலாம் தோணுது. சோ, கண்டிப்பா நான் வருவேன்” என்று அழுத்தமாகக் கூறியவள், அதே அழுத்தத்தோடு பாரி வேண்டாமென்றால் அவன் பேச்சுக்கு தான் உடன்பட்டுவிடுவோம் என்பதால் வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள்.
“கேடி.” சொல்லியவனின் அதரங்கள் அவளின் காதலில் எப்போதும் போல் உருகி கரைந்தது.
“மெல்ட் பண்ற மலரே!” என்று வாய்விட்டு கூறியவன் தரையில் கால்கள் ஊன்றிய நிலையில் மெத்தையில் மல்லாக்க படுக்க சத்யாவிடமிருந்து அழைப்பு.
“பிளேஸ் டீடெயில்ஸ் கிடைச்சிருக்கு பாரி… திவாகர்ங்கிறவனக்கு மெயில் பண்ணான். ஹேக் பண்ணிட்டேன். இந்த ஆர்டர் மாறக்கூடாதுன்னு சொல்லியிருக்கான். அத்தோடு எங்கெங்க தங்கனும், யார்கிட்ட என்ன ஷேர் பண்ணனும் எல்லாம் பக்காவா பிளான் போட்டு அனுப்பியிருக்கான். அனுப்பின கொஞ்ச நேரத்தில் டெலிட் பண்ணிட்டான். பட் நான் அவனோட ஐடியிலிருந்து மெயில் போயிருப்பதை ட்ராப்ட் பண்ணிட்டேன்” என்றான்.
சத்யா சொல்வதை அமைதியாகக் கேட்ட பாரி…
“இந்த செக்ல இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் ரொம்ப முக்கியமான எவிடென்ஸ் சத்யா. எதையும் விட்டுடக் கூடாது” என்ற பாரி, “மேப் டீடெயில்ஸ் எனக்கு அனுப்பு” எனக்கூறி அழைப்பை துண்டித்தான்.
சத்யாவிடமிருந்து தகவல் வர,
எழுந்து சென்று அறையின் கதவை தாழிட்டு வந்தவன், மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
நேரம் நீடித்தது.
இரவு உணவுக்கான நேரம் கடந்தும்… பூ, பரிதி, தீபன், பார்வதி என யார் வந்து கதவினை தட்டியும் அவன் வெளியில் வரவில்லை.
யோசனையாக பூ இன்டர்காமில் அழைத்திட…
“இம்பார்டண்ட் வொர்க் பூ. நானே வரேன்” என்று அவள் பேசுவதற்கு முன்பே தகவலாகக் கூறி வைத்திட்டான்.
கிட்டத்தட்ட பதினொரு மணியை நெருங்கும் நேரம் கதவினை திறந்து கீழே வந்தான்.
அவனை பார்த்ததும் கூடத்தில் அவனுக்காகவே காத்திருந்ததைப் போல் பூவை தவிர மற்றவர்கள் தத்தம் அறைக்கு சென்றனர்.
பூ பாரியிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் அவன் சொல்லப்போவதில்லை.
அமைதியாக அவனுக்கு உணவினை எடுத்து வைத்தாள்.
உணவில் கை வைத்தவன்,
“நீ சாப்பிட்டியா?” என்று கேட்க, அவளோ வாய் திறந்து காட்டினாள்.
“நினைச்சேன்” என்றவன் அவளுக்கும் உணவினை ஊட்டிக் கொண்டே உண்டு முடித்தான்.
“ஆரிஷ் எங்க?”
பூ பார்வதியின் அறையை கை காட்டினாள்.
அங்கு சென்று பாரி மெல்ல கதவினை தட்டிட… தில்லை வந்து கதவை திறந்தார்.
“என்னப்பா? தூங்கிட்டான்!” என்றார்.
“நாளைக்கு ட்ரிப் போறோம். இன்னைக்கு என்னோட” என்றவன் தில்லை பதில் பேசும் முன் உள்ளே நுழைந்து ஆரிஷை தூக்கியிருந்தான்.
“சின்னு இல்லையா?”
“படிக்கணும் சொல்லி இளாவுடன் இருந்தாள். அங்கேயே தூங்கிட்டாள் போல” என்றவர் என்ன நினைத்தாரோ…
“ஒட்டு மொத்த குடும்பத்தோட சந்தோஷமும் நீதான் பாரி” என்றிருந்தார்.
“சில் டாட்” என்று கண்கள் சிமிட்டியவன் ஆரிஷுடன் மேலேற, பூ யோசனையோடு பின் தொடர்ந்தாள்.
ஆரிஷை படுக்கையில் கிடத்தியவன்,
“வெயில், குளிர்… எல்லா க்ளைமேட்க்கும் ஏத்த மாதிரி ட்ரெஸெஸ் பேக் பண்ணிக்கோ பூ. ரொம்ப ஹெவியா வேண்டாம். போற இடங்களில் தேவைக்கானதை வாங்கிக்கலாம். எக்ஸ்ட்ரா லக்கேஜஸ் அவாய்ட் பண்ணிடலாம்” என்றான்.
பாரி சொல்லியதற்காக தலையை மட்டும் ஆட்டினாள். பாரி சென்று படுக்க அவனுக்கு மறுபுறம் வந்து படுத்துக்கொண்டாள்.
தங்களுக்கு நடுவிலிருந்த ஆரிஷை தூக்கி தன் மார்பில் போட்டுக்கொண்டவன், மெல்ல தட்டிக் கொடுத்தபடி அவனின் கன்னம், காது, தலை, கேசம் என வருடியபடி முத்தம் பதித்துக் கொண்டே இருந்தான்.
பாரியின் செயலில் விவரிக்க முடியாத பயம் உள்ளுக்குள் எழும்பினாலும், உடன் பாரியிருப்பான் என்கிற நம்பிக்கை அளித்த திடத்தில் பாரியை ஒட்டி படுத்து கண்கள் மூடினாள். சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
மகனை இறுகப்பற்றிக் கொண்ட பாரி தன் அணைவில் வைத்தபடியே தூக்கத்தை தழுவினான்.
நாளைய பயணம் அவர்களுக்கு (பாரிக்கு) என்ன வைத்து காத்திருக்கிறதோ?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                5        
	+1
	                                21        
	+1
	                                1        
	+1
	        	