Loading

அத்தியாயம் 7

அன்றைய பொழுதை தீம் பார்க்கில் கழித்தவர்கள் மாலை கவிழ்ந்த பின்னரே தத்தம் இல்லம் திரும்பினர்.

காவ்யா, நதியா தங்கள் பிள்ளைகளை கூட்டிச்சென்றிட, சத்யா அவியின் மகளை அழைத்துச் சென்றான்.

தீபன் மற்றும் லீ பாரியின் வீட்டில் தான் இனி என்பதால், மிதுன், மித்ராவை, ஆரிஷ், அர்னாவுடன் பாரி மற்றும் பரிதியே அழைத்து வந்துவிட்டனர்.

பிள்ளைகளை கண்டதும் தான் இளாவிற்கு நிம்மதியாக இருந்தது.

“பயமில்லாத மாதிரி பேசுன?”

சின்னுவை காணவில்லையென போனில் சொல்லியபோது சாதாரணமாக பேசிய இளாவின் நிம்மதி முகம் கண்டு பரிதி வினவினான்.

“என்னோட பயம் சின்னு பொண்ணுங்கிறதால” என்றாள்.

“பொண்ணு தான்… ஆனால், எவனும் என் பொண்ணுகிட்ட வாலாட்ட முடியாது” என்றான் பாரி.

“தமிழ் வந்ததும் மேல போனவ இன்னும் வரல. என்னன்னு போய் பாருடா” என்று அவனை அனுப்பி வைத்தார் பார்வதி.

“எப்போ வந்தாள்?” கேட்டுக்கொண்டே படியேறினான்.

“ஒரு மணி நேரமிருக்கும்” என்றாள் லீ.

பாரி கதவினை திறந்து உள்ளே வர, அறையே இருட்டில் மூழ்கி இருந்தது.

“பூ” என்றழைத்தவன் மின்விளக்கை ஒளிரச் செய்தான்.

தமிழ் கட்டிலில் படுத்திருந்தாள். பாரியின் குரல் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள். உறங்குவதைப்போல்.

அருகில் வந்தவன் அவள் தூங்கவில்லை என்பதை அறிந்தும், அறையின் குளுமையை மிதமாக வைத்துவிட்டு அவளுக்கு போர்வை போர்த்தி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

பாரி நகர்ந்ததும் பட்டென்று இமை திறந்த பூவின் விழிகளில் கண்ணீர் வடிந்தது.

பூ… பாரியின் பூ அழுகிறாள். அவள் இறுதியாக அழுதது ஆரிஷின் பிறப்பிற்கான உண்டான பிரசவ வலியின் போது. அதன் பின்னர் பாரி எங்கும் அவளை அழவிட்டதில்லை.

பாரி துடித்திடுவான் என்பதற்காகவே இவளும் அழுததில்லை.

குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

மெத்தையில் அவளருகில் வந்து அமர்ந்தவன், அவளையே பார்த்திருந்தான். கன்னம் கிடந்த காதோர கேசத்தை ஒதுக்கியவன், பால்கனிக்கு சென்று அதன் கண்ணாடி கதவினை மூடி, தன்னுடைய அலைப்பேசியை எடுத்து ஸ்டீபன் என்று பதிந்து வைத்திருந்த எண்ணிற்கு அழைத்தான்.

“என்ன நடந்துச்சு?”

“அது…” ஸ்டீபன் சொல்வதா வேண்டாமா எனத் தெரியாது இழுக்க…

“உங்க மேடம் சொல்லக்கூடாது சொன்னாங்களா?” எனக் கேட்டான்.

“ஆமாம் சார்.”

“ஓகே” என்ற பாரி, “நான் இப்போ உங்க உயர் அதிகாரிங்கிற முறையில் கேட்கிறேன். உங்க ஸ்டேஷனில்… ஐ மீன் உங்க மேடம் கண்ட்ரோலில் இருக்கும் உங்க ஸ்டேஷனில் என்ன நடந்தது?” என்று அதிகாரமாய் வினவினான்.

“சார்… மேடம்?”

“என்ன நடந்ததுன்னு என்கிட்ட ரிப்போர்ட் பண்ணணுங்கிற பேசிக் நாலேஜ் கூட இல்லாம எப்படி எஸ்.ஐ ஆனீங்க மிஸ்டர்.ஸ்டீபன்?” சிங்கத்தின் கர்ஜனையை கேட்டது போலிருந்தது ஸ்டீபனுக்கு.

“ஐஜி ரங்கநாதன் வந்திருந்தார் சார்” என்ற ஸ்டீபன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை கூறலானான்.

மதியம் போல் தமிழின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து பெயர் சொல்லாது ஒரு நபர் காவல் நிலையத்திற்கு அழைத்து தகவல் கொடுக்க… அங்கு தமிழும் ஸ்டீபனும் விரைந்தனர்.

வந்த தகவல் இதுதான்…

“பள்ளி சீருடையில் உள்ள ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் மிரட்டியபடி அறை எண் 112 க்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த ரூமில் யார் இருக்காங்கன்னு தெரியல. ஆனால், அது விஐபி’க்கள் தங்கும் பகுதி” என்று சொல்லி விசாரிக்கும் முன் வைத்திருந்தார்.

“இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாம நாமெப்படி போறது மேம்?” ஸ்டீபன் கேட்டிட, அவனை முறைத்து பார்த்த தமிழ்,

“அது பொய் நியூஸாவே இருந்தாலும் அங்க போய் தெரிஞ்சிக்கலாம் ஸ்டீபன். சப்போஸ் உண்மைன்னா? தகவல் கிடைத்தும் காப்பாத்தாம அந்த பொண்ணுக்கு ஏதும் தப்பா நடந்தா? நீங்க பதில் சொல்வீங்களா?” என அத்தனை காட்டத்துடன் கேட்டிருந்தாள்.

ஸ்டீபன் பதில் சொல்லாது வாகனத்தில் ஏறி உயிர்ப்பித்திருந்தான்.

இருவரும் காவல் உடை தவிர்த்து சென்றனர்.

ஓட்டலிற்குள் நுழைந்தவர்கள் யாரிடமும் எதுவும் கேட்காது… எங்கும் நிற்காது, குறிப்பிட்ட எண்ணை வைத்து சரியான அறை இருக்கும் தளம் வந்தனர்.

அந்த எண்ணுக்குரிய அறைக்கு முன் இரண்டு மாமிச மலைகள் கருப்பு உடையில் காவலுக்கு நின்றிருந்தனர்.

அவர்களை கண்டதுமே வந்த தகவல் உண்மை என்பது புரிந்தது.

“நான் போறேன் மேம்” என்று ஸ்டீபன் முன் செல்ல…

“ஸ்டாப் ஸ்டீபன்” என்றவள், தன்னுடைய பாக்கெட்டில் முன் யோசனையாக கொண்டு வந்திருந்த லைட்டரை எடுத்து ஸ்லீங்கில் பொறுத்தப்பட்டிருந்த ஃபயர் டிடெக்டர் மீது காட்டியிருந்தாள். சட்டென்று அத்தளம் முழுக்க நெருப்பிற்கான அலாரம் அடிக்க, அங்கிருந்த அறைகளுக்குள்ளிருந்து அனைவரும் பதறியபடி வெளியே ஓடி வந்தனர்.

காவலுக்கு நின்றிருந்த இரு பாடிகார்ட்ஸும் அறையின் கதவினை வேகமாகத் தட்டிட, சட்டையின்றி பேண்ட் மட்டும் அணிந்து பின் நாற்பது வயதில் ஒருவர் வெளிவந்தார்.

தமிழும், ஸ்டீபனும் தங்களை மறைத்துக் கொண்டனர்.

“இவர்… *****?” குறிப்பிட்ட பள்ளியின் பெயரை சொல்லி, “அப்பள்ளி கரெஸ்பாண்டன்ட் தான?” என அதிர்ச்சி விலகாது கேட்டான் ஸ்டீபன். தமிழும் அந்த நபரை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி தான். அவனது பள்ளியில் அவளது குடும்பத்தின் மொத்த பிள்ளைகளும் படிக்கின்றனர்.

“என் அக்கா பொண்ணு அந்த ஸ்கூலில் தான் மேம் படிக்கிறாள்” என்ற ஸ்டீபனுக்கு உள்ளிருக்கும் சிறுமியை பார்க்கும் வேகம். தமிழுக்குமே!

யாரோ ஒரு பெண்ணாக இருந்தாலும் நடந்து கொண்டிருப்பது பெரும் தவறு. அதீத பதற்றம் தான் இருவருக்கும். தங்களின் பிள்ளைகளாவோ தங்களுக்குத் தெரிந்த பிள்ளைகளாகவோ இருந்திடக் கூடாதென்கிற அச்சம்.

“என்னங்கடா? இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லை” என்று அவசரமாக சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே செல்ல அடி வைத்திட அப்போது தான் உணர்ந்தான் அவன். அத்தளம் களேபரமாக காட்சியளிப்பதை.

“அந்த ஆளு இப்படி நிக்கிறதோட ஒரு போட்டோ எடுங்க ஸ்டீபன்?” என்ற தமிழ், “நான் போறேன். நீங்க ஷர்ட் பாக்கெட்டில் மொபைல் மறைத்து வைத்தமாதிரி வீடியோ ரெக்கார்ட் பண்ணுங்க” என்றவள் அங்கிருந்து செல்ல அலைமோதி கொண்டிருந்த நபர்களை விலக்கிக்கொண்டு அவன் முன் சென்று நின்றாள்.

அக்கணம் தான் அவன் தன் அடியாட்களிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு?”

“இந்த ப்ளோரில் தீபிடிச்சிருக்காம் சார். வாங்க போயிடலாம்” என்றான் ஒருவன். சுற்றி பார்த்துக்கொண்டே. ஹோட்டல் பணியாளர் எங்கிருந்து சத்தம் வந்தது. தீ பிடித்திருக்கும் பகுதி எதுவென்று ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“இப்படியே எப்படிடா வெளிவரது? அந்த பொண்ணு வேற உள்ள மயங்கியிருக்கு டா” என்றான் அவன்.

“ஸ்டார்ட் பண்ணலன்னு சொன்னீங்க?” தடியர்களில் ஒருவன் சந்தேகமாகக் கேட்டான்.

“ரொம்ப ஆட்டம் காட்டுச்சு. சின்னபிள்ளை இல்லையா ஓடிட்டே இருந்தாள். ஒரு அறை விட்டேன். மயங்கிடுச்சு. தண்ணி தெளிச்சு எழுப்ப நினைச்சேன். நீ கூப்பிட்டுட்ட” என்று அவன் நெற்றியில் கை வைக்க…

“இது பொறுமையா பேசுற நேரமில்லை சார். எல்லாரும் ஓடுறங்க. வாங்க நாமும் போவோம். அந்த பொண்ணே மயக்கம் தெளிஞ்சு வீட்டுக்கு போனா போவட்டும்” என்று அடியாள் சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் தான் தமிழ், ஸ்டீபன் அவர்கள் முன் வந்தது.

“ஹாய் சார்… நீங்க?” ஒன்றும் தெரியாததைப்போல் தமிழ் முகமன் விசாரித்தாள்.

“ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ண வந்தேன் மிசஸ்.பாரி” என்றவரின் பார்வை அறைக்குள்ளே சென்று சென்று வந்தது.

“ஃபயர் போல… இங்கிருக்கிறது ரிஸ்க். வாங்க சார் போகலாம்” என்று தமிழ் அழைக்க,

“நீங்க போங்க… நான் ஷர்ட் வியர் பண்ணனும்” என்றவன் உள்ளே செல்ல முனையை…

“உயிரைவிட சர்ட் முக்கியமா சார்?” எனக் கேட்டான் ஸ்டீபன்.

“மானம் முக்கியமாச்சே தம்பி” என்று நின்று சிரித்தவனிடம்,

“ஸ்கூல் பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டா அந்த மானம் போகாதா மிஸ்டர்.வெங்கட்?” என்று தீயாய் உருத்தபடி கேட்டாள் தமிழ்.

“என்ன உளருறீங்க?” பற்களை கடித்தான் வெங்கட்.

“நான் உளறலன்னு உள்ளே வந்து சொல்லட்டுமா?” என்ற தமிழ் துப்பாக்கியை எடுத்து வெங்கட்டின் நெற்றி பொட்டில் வைத்தவளாக உள்ளே தள்ளிக்கொண்டு செல்ல… சுவரின் மறைவு கடந்து உள்ளே சென்ற தமிழ் படுக்கையில் கிடந்த மாணவியை கண்டதும்…

“ஸ்டே தேர் ஸ்டீபன். டோன்ட் மூவ்” என்றிருந்தாள்.

தமிழ் தடுமாறிய கணத்தில் வெங்கட் தமிழிடமிருந்து நழுவி, ஸ்டீபனை தள்ளிவிட்டு வெளியில் வந்திருந்தான்.

“இன்னும் அரை மணி நேரத்தில் உன்னை இந்த வேலையை விட்டே தூக்குறேன்” என்றவன் தன் அடியாட்களுடன் கூட்டத்தில் மறைந்து ஓடியிருந்தான்.

“மேம் அவன் ஓடுறான்” என்ற ஸ்டீபனின் பேச்சை காதில் வாங்காதவளாக, “அவன் இந்த ரூமிலிருந்து ஒடினதை வீடியோவில் காப்ட்சர் பண்ணியா?” எனக் கேட்டாள்.

ஸ்டீபன் ஆமென்று தலையசைக்க…

கட்டிலுக்கு அருகில் சென்ற தமிழ், ஆடை அவிழ்ந்து ஆங்காங்கே உடல் அங்கங்கள் தெரிய, முடி கலைந்து கிடந்த சிறுமியின் உடையை சரி செய்து முகத்தில் நீர் தெளித்து எழுப்பி அமர வைத்தாள்.

“அந்த அங்கிள் இல்லையா?” என்று பயத்தோடு கேட்ட பெண், “ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போயிடுங்க. நீங்க ஆர்னா சித்தி தான?” என்று தமிழிடம் பெரும் அச்சத்தோடு ஒண்டினாள்.

அப்பெண் ஆர்னாவின் வகுப்பு என்று அறிந்த தமிழ், அவளின் வயதை கணக்கிட்டு மனம் கனத்து போனாள்.

“உங்களுக்கு ஒன்னுமாகல சரியா? இப்போ நாம வீட்டுக்கு போயிடலாம்” என்று பலவாறு பேசி அவளை தேற்றிய பின்னரே ஸ்டீபனை அருகில் அனுமதித்தாள் தமிழ்.

“ஒன்றுமாகல ஸ்டீபன். ஃசேப் தான்” என்றவள், “அவனை பார்த்ததும் சுட்டிருக்கணும்” என்று பற்களை கடித்தாள்.

சிறுமியோடு ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்.

அப்பெண்ணிடம் அலைப்பேசி எண் வாங்கி அவளது பெற்றோருக்கு அழைத்து காவல் நிலையம் வரக்கூறியவள்.

அவர்கள் வந்ததும், நடந்ததை விவரித்துக் கொண்டிருக்கும்போது ஐஜி ரங்கநாதன் வந்தார்.

“என்ன தமிழ் தேவையில்லாத வேலை நிறைய பாக்குறீங்க?” என்று வந்ததும் முன் தகவல் எதுவுமின்றி கேட்டதோடு, “புருஷனும் பொண்டாட்டியும் சும்மாவே இருக்கமாட்டிங்க போல. எதுக்கு பெரிய இடமா பார்த்து மோதுறீங்க?” என்றவாறு இருக்கையில் அமர்ந்தார்.

“சார்… அவன்” என்று தமிழ் சொல்லவர கைகாட்டி தடுத்த ரங்கநாதன்,

“நீங்கதான் அந்த பொண்ணோட பேரண்ட்டா? அதான் பொண்ணுக்கு ஒண்ணுமாகலையே! இத்தோட இதை விட்டுடுங்க. பெரிய இடம். உங்க மானம் தான் போகும். உங்க பொண்ணு வெளியவே வர விடாம பண்ணிடுவாங்க. உயிரோட வாழணும்ல?” என்றார்.

“சார்…”

“நான் உங்களை அமைதியா இருக்க சொன்னேன்.” தமிழை அதட்டி அடக்கினார்.

அந்த தம்பதியர் அழுதுகொண்டே தங்கள் மகளை அழைத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருந்தனர்.

இப்படி காவல்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் நபரே மிரட்டுவதைப்போல் பேசினால் எளியோரான அவர்கள் என்ன செய்வர்?

கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் தன் இயலாமையில் நொந்து போனாள் தமிழ்.

“நான் டிஜிபி’கிட்ட கம்ப்ளைய்ண்ட் பண்ணுவேன் சார்.”

“உன் புருஷன் தான்’ல? பண்ணிக்கோ! அவனே கை கால் உடைஞ்சிதானே வீட்டில் உட்கார்ந்திருக்கான்?” என்ற ரங்கநாதன், “உன்னைய விட்டு பய இருக்கமாட்டான் போல. அதான் உன்னையும் போலீஸாக்கி கூடவே வச்சுக்கிட்டு சுத்துறான். நினைத்த நேரம் அவன் ஆபீஸ் போறியாம்? அங்கவே எல்லாம் நடக்குதோ?” என்றவரின் கன்னத்திலே அறைந்திருந்தாள் தமிழ்.

“ஏய்!” என்று கத்திய ரங்கநாதன் எதிர்பார்த்ததும் இதைத்தான்.

“உன் கட்டுப்பாட்டில் இருந்த கைதி தப்பித்த குற்றத்திற்காக உன்னை ஒரு மாதம் சஸ்பெண்ட் பன்றேன்” என்று ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த காகிதத்தை தமிழிடம் நீட்டினார்.

“சார் அப்படி எதுவும் நடக்கலையே?” ஸ்டீபன் தமிழுக்கு ஆதரவாக முன் வர,

“உன்னை பிளாக் மார்க் பண்ணனுமா?” எனக் கேட்டவர், தானே செல்லில் இருந்த கைதி ஒருவனை “ஓடிப்போ” என்று வெளியேற்றியிருந்தார்.

“இப்போ நடந்திருச்சுல?!”

ரங்கநாதனை முறைத்துக்கொண்டு அவர் நீட்டிய காகிதத்தை வெடுக்கென பறித்த தமிழ் கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்தை வீடு வந்து அழுகையாக வெளியேற்றினாள்.

ஸ்டீபன் சொல்லி முடிக்க பாரியின் கை முஷ்டி இறுகியது. நரம்புகள் புடைத்து கிளம்ப, பால்கனி கம்பியினை இறுக்கி பிடித்தான்.

“சார்…

“சார் இருக்கீங்களா?”

பாரி தன் கோபத்தை அடக்கிட முயன்ற சில மணித்துளிகளில் ஸ்டீபன் பலமுறை அழைத்திருந்தான்.

“நீங்க எடுத்த வீடியோ எனக்கு சென்ட் பண்ணுங்க” என்றவன், ஸ்டீபன் அனுப்பிய மறுகணம்… தற்போது தான் பணியில் இல்லாததால் அவ்வீடியோவை நேரடியாக முதல்வருக்கு அனுப்பியவன் அடுத்த சில நிமிடங்களில் உரியவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தான்.

பள்ளியில் கூட்டு நிர்வாகம் என்பதால், மற்ற நிர்வாகிகளின் செயல்பாட்டில் தடை இருந்திடக்கூடாது மற்றும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி வெளியில் தெரியாதபடி, மற்ற நிர்வாகிகளின் உதவியோடு வெங்கட்டின் நிர்வாக பொறுப்பை பறித்ததோடு அவனை கைதும் செய்திருந்தான்.

பெரும் உயரத்தில் இருப்பவனின் கைது அத்தனை எளிதல்லவே! அதற்கும் தகுந்த பதில் வைத்திருந்தான் பாரி.

பள்ளி நிர்வாகப் பொறுப்பில் மற்ற நிர்வாகிகளுக்கு தெரியாது மோசடி செய்துள்ளதாக வெங்கட்டிற்கு எதிராகவே சொல்ல வைத்திருந்தான்.

உண்மை தெரிந்தும் ஒரு குற்றவாளிக்கு துணை நின்றதற்காக ஐஜியை பணியிடை நீக்கம் செய்தான். அந்த கடிதத்தை தானே அவரிடம் கொடுத்தான்.

“உங்களைவிட சின்னவன் உங்களுக்கு உயர் அதிகாரியாக இருப்பதில் அத்தனை காழ்புணர்ச்சியா?” என்றவன் தன்னுடைய ஒற்றை பார்வையில் அவரை கூனிக்குறுகச் செய்திருந்தான்.

“மொத்தமா உங்களை வேலையிலிருந்து தூக்க முடியும். அப்படி செய்ய நான் ஒன்றும் நீங்களில்லையே!” என்று வார்த்தையாலே வலிக்க அடித்திருந்தான்.

தமிழின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, இருபது நாட்களுக்கு விடுப்பு அளிப்பதாக மாற்றியிருந்தான்.

இரண்டு மணி நேரத்தில் பம்பரமாக சுழன்றடித்திருந்தான்.

பாரி வீட்டிற்கு வந்த போது பரிதி மட்டும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.

“என்ன நடக்குது பாரி?”

“என் பூ’கிட்ட வாலாட்டுனவனை சும்மா விட்டுடுவனா?” என சற்றும் கோபம் குறையாது கூறியவன், “வயசுல பெரிய ஆளா போயிட்டாரு. அதனால இதோட விட்டேன்” என்று நடந்ததைக் கூறியானான்.

“அந்த பொண்ணு இப்போ?” பரிதி கேள்வியாக இழுத்தான்.

“அவங்க வீட்டுக்கு போயிட்டுதான் வர்றேன் பரிதிண்ணா. நமக்கும் பொண்ணு இருக்கே. எப்படி சும்மா விட முடியும்?” என்ற பாரி, “சில காரணங்களுக்காக அவனை வெளிப்படையா இதில் குற்றம் சுமத்தவில்லை. நம்ம பிள்ளையோட வருங்காலத்தை பார்க்கணுமே! ஆனால் அவனுக்கு தண்டனை அவன் செய்ய துணிந்த காரியத்துக்குத்தான் கொடுத்தேன். பொண்ணை தைரியம் உள்ளவளா வளருங்க” என்று மாணவியின் பெற்றோரிடம் சொல்லியதை பரிதியிடம் தெரிவித்தான்.

“யூ ஆர் ஆல்வேஸ் கரெக்ட் பாரி” என்ற பரிதி… அவனின் இருபக்க புஜத்தையும் பற்றியவனாக,

“தமிழ் விடயத்தில் மெச்சூர்ட் ஆகிட்டன்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனால் நீ இன்னும் அப்படியேதான் இருக்க” என்றான்.

“இதுக்கு நான் பதில் சொன்னாதான் உங்களுக்கு தெரியுமா பரிதிண்ணா?” எனக் கேட்டவன், “நான் வெளிய போகும்போது தூங்கிட்டு இருந்தாள். சாப்பிட வந்தாளா?” என்று கேட்டான்.

“கீழ வரவே இல்லை. இளா கூப்பிட்டு பார்த்தால் தூக்கம் வருதுன்னு சொல்லிட்டாளாம். எப்படியும் நீ வந்தால் பார்த்துப்பன்னு விட்டுட்டாள்” என்றான் பரிதி.

“நீங்க கூப்பிடலையா?”

அக்கேள்விக்கு பரிதியிடம் சிரிப்பு.

“என்ன பரிதிண்ணா?” அவனிடம் கேட்டுக்கொண்டே, தனக்கும் தமிழுக்கும் தட்டில் உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தான் பாரி.

“நீங்க போயி மாமாவை அனுப்பாதீங்க ப்ளீஸ்… அவர்கிட்ட முடியாதுன்னு இளாவிடமே சொல்லி அனுப்பியிருந்தாள். ம் அப்புறம் நான் எங்க போய் கூப்பிடறது” என்றான் பரிதி.

“உங்களை நல்லா தெரிஞ்சி வச்சிருக்காள்” என்ற பாரி,

“பசங்க எங்க?” என்று வினவிட,

“அம்மா, அப்பா ரூமில். நாலும் அங்கதான் ஆட்டம். இப்போ தான் சவுண்ட் இல்லாமல் இருக்கு. தூங்கியிருப்பாங்க” என பதில் வழங்கினான் பரிதி.

“பரிதிண்ணா…!”

பாரியின் குரலில் என்னவோ இருந்தது. அவன் நிலைகுலைந்து நிற்கும் தருணங்களில் மட்டும் வெளிவரும் அக்குரல்.

பாரியினால் தான் ஓடும் வழக்கு குறித்து பரிதியிடம் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அறிய நேரிடும் ஒவ்வொன்றும் அவனின் மனதின் திடத்தை தடுமாற வைத்துக் கொண்டிருந்தன.

பரிதி என்னவென்று கேட்டு ஆராயவில்லை.

சட்டென்று தன் தம்பியை கட்டி அணைத்திருந்தான். முதுகில் தட்டிக்கொடுத்த கையோடு அணைப்பை இறுக்கியிருந்தான். எந்நிலையிலும் உனக்கு நானிருப்பேன். தன்னிருப்பை அணைப்பில் உணர்த்தினான்.

எப்போதும் பாரி பரிதியிடம் வேண்டும் ஆறுதல் இதுதானே.

“லவ் யூ பரிதிண்ணா” என்று பிரிந்த பாரி… பரிதியிடம் குட்நைட் சொல்லிவிட்டு உணவுடன் தன்னறைக்கு வர, தமிழ் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

பாரி ஸ்டீபனிடம் பேசிவிட்டு வெளியேறும் முன்பே அழுதுகொண்டே உறங்கியிருந்தாள். இடையில் இளா எழுப்பியும் பாதி தூக்கத்தில் பதில் அளித்தவள் மீண்டும் உறக்கத்திற்குள் சென்றிருந்தாள்.

விழித்துக்கொண்டு நடந்ததை எண்ணி அழுவதைவிட உறங்குவது மேலென்று எண்ணிவிட்டாள் போலும்.

ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு விளக்கை அணைத்தவன், மின்விளக்கை உயிர்ப்பித்து… உணவு அடங்கிய தட்டினை மேசையின் மீதி வைத்தவனாக குளியலறைக்குள் புகுந்து வெளிவந்தான்.

கண்ணீர் தடம் படிந்த முகம் அழுததினால் நன்கு வீங்கியிருந்தது.

பாரிக்கு உள்ளம் துடித்தது. அவளுக்கு சிறு தும்மல் என்றாலும் மருகிடுவானே. இப்போதும் அவன் அதே பாரிதான்.

“பூ…” பாரியின் மெல்லிய அழைப்பு. அதற்கே கண் திறந்திருந்தாள்.

“எங்க போயிருந்த?”

“அப்புறம் சொல்றேன். ரொம்ப பசி. முதலில் சாப்பிடுவோம்” என்று உணவினை எடுத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். மறுக்கவில்லை. வாங்கிக்கொண்டாள். இடையிடையே தானும் உண்டான்.

கை கழுவி வந்தவன், பூவின் எதிரே கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து அவளின் கைகளை பற்றினான்.

அதிலே அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதென்று புரிந்து கொண்டவள்,

“சாரி வேந்தா” என்றாள். காற்றாகிய குரலில்.

“உன்கிட்ட மறைக்கணும் இல்லை. சொல்லியிருப்பேன். அந்த நேரம் கடந்து வர முடியல. அதான்” என்றாள்.

“உன் மேல தப்பில்லைன்னா பணிந்து போகணும் அவசியமில்லை பூ. அந்த ஆள அடிச்ச உன்னால, அவரை எதிர்த்து அந்த வெங்கட்டை அரேஸ்ட் பண்ணியிருக்க முடியாது நினைக்கிறியா?” எனக் கேட்டவன், “எந்த இடத்தில் தடுமாறுற நீ?” என்று வினவினான்.

“பொண்ணோட பேரண்ட்ஸே கேஸ் வேண்டான்னு போகும்போது… அந்த இடத்தில் ஸ்டக் ஆகிட்டேன் வேந்தா” என்றவள், “நம்ம சின்னு கிளாஸ் தான். எப்படி இவனுங்களால முடியுது?” எனக் கேட்டிருந்தாள்.

“தப்பு செய்றவங்களே அதிலிருந்து தப்பிக்க ஆயிரம் வழி யோசிக்கும்போது, அவங்களை பிடிக்க போலீஸான நாம எந்த வழியிலும் போகலாம். வழியில்லையா புதுசா உருவாக்கு. தப்பிக்க மட்டும் விட்டுடக் கூடாது” என்ற பாரியிடம், தன்னுடைய மாணவிக்கு தன் தொழிலைப்பற்றி சொல்லித்தரும் ஆசிரியரின் பாவனை.

“அந்த நேரம்… அவர் அப்படி பேசினதும் என்ன பண்றதுன்னே புரியலடா” என்றாள். முகத்தை பாவம் போல் வைத்து.

“பொண்ணுங்க மனசளவில் ரொம்ப ஸ்ட்ராங் பூ. அவங்களை பலவீனபடுத்தும் ஒரே ஆயுதம், ஆண்களால் எறியப்படும் வார்த்தைகள் தான். உன் மேல தப்பில்லையா… யாருக்கும் நான் அடங்கிப் போகணும் அவசியமில்லை. சரிதான் போடான்னு போயிட்டே இருக்கணும்” என்றான்.

“புரியுது” என்றவளின் முகம் இப்போது நன்கு தெளிந்திருந்தது.

“தட்ஸ் மை பூ” என்று அவளின் கன்னம் தட்டியவன் “படுத்துக்கோ” என்று தானும் படுத்து கண்களை மூடிக்கொள்ள…

“தூக்கம் வருதா வேந்தா?” எனக் கேட்டிருந்தாள்.

“பேசணும் அப்படின்னா பேசலாமே” என்றவன் கண்களை திறக்க…

அலைப்பேசியின் ஒலியில் அதனை எடுத்து திறந்து பார்த்தாள்.

ஸ்டீபன் தான் தகவல் அனுப்பியிருந்தான்.

“சார் எப்பவும் போல மாஸ் மேம். கலக்கிட்டாரு” என்று அனுப்பியிருந்தான். அவளுக்கு புரியவில்லை.

அலைபேசியின் திரையை பாரியிடம் காட்டியவள்,

“என்னடா பண்ண?” எனக் கேட்டாள்.

“என்ன பண்ணாங்க? ஒன்னுமில்லையே!” என்று பாரி சாதாரணமாக தோள்களை உயர்த்தி இறக்கினான்.

“எனக்காக நீ பண்ணதா இருக்கக்கூடாதுன்னு தான் உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு யோசித்தேன். இப்போ… ம்ப்ச்… ஏண்டா?” என்றவள், “எனக்காகவா?” என்றாள்.

“அப்படியும் வைச்சுக்கலாம்” என்ற பாரி, “என் பொசிஷனில் நான் என்ன பண்ணனுமோ அதான் பண்ணேன்” என்று தான் செய்ததை தெரிவித்தான்.

தாவி தன்னவனை கழுத்தோடு கட்டிக்கொண்டவள், அவன் கன்னத்தில் இதழ் ஒற்றிட…

“மெல்ட் பண்ற பூ!” என்றவன் தன் கைகளுக்குள் அவளை அடக்கியிருந்தான்.

பாந்தமாய் அவனுள் பொருந்தியவள் அவனுக்கானவற்றை அளித்து… தனக்கானதை பெற்றே துயில் கொண்டனர்.

******

“என்ன பண்ணலான்னு இருக்க சாய் நீ?” என்று ஆத்திரத்தில் உச்சத்தில் கேட்ட வேலு நாதன், “உன் பழைய காதலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு… நம்ம வேலையில் கொஞ்சம் கவனம் வை” என்றார். கிட்டத்தட்ட மகனை கடிந்து கொண்டார்.

“பழைய காதல் இல்லை. எப்பவும் என் காதல் காவ்யா மட்டும் தான். இத்தனை வருஷமா அவள் எங்கிருக்கான்னு கண்டுபிடிக்க முடியாமத்தான் அமைதியா இருந்தேன். இப்போ என் கண்ணு முன்னாடியே இருக்காள். ஆனால் அவள் கண்ணுக்கு நான் தெரியவே இல்லை. தெரிய வைக்கிறேன். எனக்கு அவள் வேணும். என்னை எவ்வளவு லவ் பண்ணாள் தெரியுமா உங்களுக்கு?” என்று கொதித்தான்.

“மெல்வினா கூட நீ இருந்ததுக்கு இதை நம்ப முடியலையே?” என்று வேலு தன் தாடையை நீவினார். சந்தேகத்துடன்.

“ஒரு ஆணா… ஐ நீட் அ பிசிக்கெல் ரிலேஷன்ஷிப். அதுக்கு மெல்வினாவை யூஸ் பண்ணிக்கிட்டேன். அவளும் அத்துக்காகத்தானே என்னோட இருந்தாள். ஏன் இப்பவும்…” என்று வாக்கியத்தை தொடராது விட்டவன், “உங்களுக்குத் தெரியாதா என்ன?” என்றிருந்தான்.

உண்மையாக ஒரு பெண்ணை நேசிப்பவனுக்கு மற்றைய பெண்ணின் விரலினைக்கூட தீண்டிட மனம் அனுமதித்திடாது என்று தெரியாதவனுக்கு, அவனது உடல் நாடும் தேவைக்கும், மனம் நாடும் நேசத்திற்கும் வித்தியாசம் தெரியாது பேசினான்.

“எனக்கு அவள் வேணும். சாய் சாய்ன்னு என் பின்னால சுத்தியவளை திரும்பவும் சுத்த வைக்கிறேன். அவன் என்னையே சுத்தி வந்தப்போ எனக்குள்ள ஒரு போதை. அந்த போதை அந்த மெல்வினாவிடம் ஒருநாள் கூட கிடைத்தது இல்லை” என்றான். அவனுக்கு காவ்யாவுடனான பழைய நினைவில் கண்கள் சொருகியது.

“உன் ஆசையை கொஞ்சம் ஒத்தி வை. நாம் முடிக்க வேண்டிய விசயம் பல இருக்கு. எத்தனை நாளைக்கு கையில் வைத்திருக்க முடியும்? சீக்கிரம் டிஸ்போஸ் பண்ணனும். இப்போ இருக்கும் சூழலில், டெக்னாலஜி யூஸ் பண்ண முடியாது. நேராத்தான் செல்ல வேண்டும். அதற்கான ஆளுங்களை ஏற்பாடு பண்ணு. வெளி ஆளுங்களா இருக்கணும். அதே சமயம் கொடுக்கிற வேலைக்கு உண்மையா இருக்கணும். இன்னும் ரெண்டு நாளில் வேலையை தொடங்கியிருக்கணும். இல்லை… நம்ம உயிர் நம்மிடம் இல்லை” என்று கையின் விரல்களை விரித்து காண்பித்தார் வேலுநாதன்.

“ஆரம்பிச்சிடலாம்” என்ற சாய், “அந்த பாரி உண்மையாவே லீவ் போட்டிருக்கான். பேமிலியா ட்ரிப் போறான். இதை நாம யூஸ் பண்ணிக்கணும். அவன் திரும்பி வரதுக்குள்ள வேலையை முடிச்சிடனும்” என்று தன் திட்டத்தை கூறினான் சாய்.

பாரியின் நகர்வினை வைத்து திட்டமிடுவதாக சாய் நினைத்திருக்க, பாரி சாய்’யின் அடியை வைத்துதான் பெரும் பாதையையே உருவாக்கியிருக்கிறான்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
27
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்