
தூவானப் பயணம் 6
பாரியும் சத்யாவும் என்ன பேசினார்கள் என்று அவர்கள் மட்டுமே அறிந்தது. அறைக்குள் சென்ற இருவரும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்தே வந்திருந்தனர்.
மதிய உணவிற்கு பூவும் வந்திருக்க…
இருவரும் ஒன்றாக வருவதை விழிகள் இடுங்க நோட்டமிட்டாள்.
“ரெண்டும் ஒண்ணா போயி ரெண்டு மணி நேரமாகுது” என்றான் பரிதி.
“மாமா!”
“ரொம்ப பெரிய பிளான் போல தமிழ்.”
“வேந்தா பார்த்துப்பான் மாமா” என்ற பூவுக்கும் உள்ளுக்குள் கலக்கமாகத்தான் இருந்தது.
அவி ஜென்னிற்கு அழைத்து பாரி வீட்டிற்கு வருமாறு சொல்லியிருக்க, அவளும் மதிய இடைவேளைக்கு அங்கு தான் அப்போது வந்தாள்.
“எதாவது நடந்தாதான் வீட்டுக்கு வரணும் ஆகிப்போச்சுல?” தில்லை கேட்டிட, யாவரிடமும் அமைதியே!
“இனி ஒவ்வொரு வீக்கெண்டும் இங்க ஆஜர் ஆகிடுறோம் ப்பா” என்றிருந்தாள் ஜென்.
“கேட்டா வேலைன்னு காரணம் காட்டிட வேண்டியது” என்ற பார்வதி,
“என்னடா திருட்டு வேலை பாக்குறீங்க? எப்போபாரு தனியா மீட்டிங் போடுறீங்க?” என்றார் பாரி மற்றும் சத்யாவிடம்.
“அம்மா எதுவுமில்லை.” சத்யா பதறிட,
“ரிலாக்ஸ் பண்ண போட்ட லீவை வேஸ்ட் பண்ண வேணான்னு நானும் சத்யாவும் ஜாலியா ஒரு ட்ரிப் போகலான்னு பிளான் போட்டோம்மா” என்றான் பாரி.
பரிதியும், பூவும் பாரியை நம்பாது பார்த்தனர்.
“நீ ரிலாக்ஸ் பண்ணத்தான் லீவ் போட்டியா பாரி… ஹோல் க்ரைம் டிப்பார்ட்மெண்டே நீ ரகசியமா ஏதோ கேஸ் டீல் பண்ற, அதுக்காகத்தான் ஒருநாள் கூட லீவ் போடாதவன் ரெண்டு மாதம் லீவ் போட்டிருக்கன்னு பேசிக்கிறாங்க” என்றாள் ஜென்.
“ஆத்தீ…” என்று பொய்யாக அதிர்வை காட்டிய பாரி, “ஏண்டா போலீஸ்காரனுக்கெல்லாம் லீவ் எடுக்க வேற காரணமே இருக்காதாடா?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
“அது மத்த போலீசுக்கு மச்சி. உன்னை நம்பவே முடியாது. அமோஸ் கையால் என்னை போட்டுத்தள்ள பார்த்த ஆளு தானே நீ. அதுவும் அன்னைக்கு அந்த ஹல்க் கொடுத்த ஒத்த அடியை என்னால எந்த காலத்திலும் மறக்க முடியாது” என்றான் அவி.
“விடுடா இதெல்லாம் சாதாரணம்” என்று சத்யா அவியின் தோளினை தட்டிக்கொடுக்க…
“நீங்க கொலைகாரனை பிடிங்க… இல்லை அவன்கிட்ட அடிதான் வாங்குங்க. என்னை ஏன் கோர்த்துவிடுறீங்க. வைய் மீ?” என்று அவி கேட்ட பாவனையில் அனைவரும் வெடித்து சிரித்தனர்.
“என்ன பூ பார்த்துட்டே இருக்க?”
“எங்க ட்ரிப் போறீங்க?” பாரி பூவிடம் கேட்ட கேள்விக்கு பரிதி எதிர் கேள்வி கேட்டிருந்தான்.
“இந்தியா முழுக்க… பை ரோட்… பைக் ட்ராவல்… பரிதிண்ணா.
“வாவ்… செம மச்சி. எத்தனை முறை பிளான் பண்ணி கேன்சல் ஆகியிருக்கு. இந்த முறை நாங்களும் வர்றோம்.” அவி உற்சாகமாகக் கூறிட, சத்யா மறுத்து கூற வருமுன் பாரி வேண்டாமென கண் காட்டியிருந்தான்.
“ஆமாம் பாரி நாமளும் ஒண்ணா சுத்தி பல நாளாகுதே” என்ற ஜென் பூவை பார்த்து “நீயும் சொல்லு தமிழ்” என்றாள்.
“நாம இல்லைன்னு வேந்தன் சொல்லவேயில்லையே ஜென். அவனும் சத்யாண்ணாவும் பிளான் பண்ணியிருக்கிறதா தான் சொன்னான். நாமளும் தான்” என்று பாரியையே மடக்கியிருந்தாள் பூ.
புருவம் உயர்த்தி மெச்சுதலாக பார்த்த பாரி…
“எல்லாரும் உங்க கமிட்மெண்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க… டே பிக்ஸ் பண்ணிக்கலாம். ஸ்டார்ட் பண்ற டே மட்டும் தான் சொல்ல முடியும். எப்போ ரிட்டர்ன் அப்படிலாம் அக்யூரட்டா சொல்ல முடியாது. பத்து நாள்… அதுக்கு அதிகமாகவும் ஆகலாம்” என்றான்.
“லீ வர முடியாது. சோ, நானும் வரல. அவி வரதால… ஆபீஸ் பார்த்துக்க நானாவது இருந்தே ஆகணும்” என்றான் தீபன். உடனடியாக.
“லீயை பார்த்துக்க நானிருக்கேன். நீ போயிட்டு வா தீபன்.” பார்வதி சொல்லிட…
“த்ரீ ஆர் போர் டேஸ்ன்னா ஓகேங்க அத்தை. மோர் தென் டென் டேஸ் முடியாது” என்றுவிட்டான்.
‘ரெண்டு டிக்கெட் காலி.’ சத்யா மனதில் நினைக்க பாரி பார்வையால் அவனுக்கு ஹைபை அடித்தான்.
“சின்னுக்கு போர்ட் எக்ஸாம்ஸ் இருக்கு. என்னால முடியாது. நீங்க போயிட்டு வாங்க” என்று பரிதியிடம் தெரிவித்தாள் இளா.
பரிதி தன் தம்பியை கூர்மையாக ஆராய்ந்தபடி… “நான் வரேன்” என்றிருந்தான்.
“போச்சு.” பாரி மானசீகமாக தலையில் கை வைத்துக்கொண்டான்.
“அபிக்கும் தானே எக்ஸாம். காவ்யா வரமாட்டாள். நதியாவுக்கு க்ளைமேட் சேஞ்சஸ் செட் ஆகாது. அவளும் வரமாட்டாள்” என்ற சத்யா,
“தமிழ், ஜென் உங்க முடிவு என்ன? லாங் லீவ் போட முடியுமா? இப்போ உனக்கு கேஸ் எதுவுமில்லையா தமிழ்?” எனக்கேட்டான்.
“அதென்ன அவகிட்ட மட்டும் கேட்குறீங்க?” ஜென் சத்யாவிடம் சண்டைக்கு வந்தாள்.
“நீ சிவில் டிப்பார்ட்மெண்ட்டில் இருக்கியே… உனக்கு என்ன கேஸ் அதிகமா இருக்குபோகுதுன்னு நினைச்சிட்டேன். சாரிம்மா” என்ற சத்யா, “உனக்கு எதும் கேஸ் இருக்காம்மா?” எனக் கேட்டான்.
“அது… ஆனாலும் சிவில் குற்றங்கள் தான் நாட்டுல அதிகம்” என்ற ஜென், “கேஸ் இருந்தாலும் பரவாயில்லை. நாங்க வர்றோம்” என்றாள்.
“பூ நீதான் சொல்லணும்.”
“நாயில்லாம நீயெப்படி போவ வேந்தா? நான் உன் பக்கத்துல இல்லைன்னா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவியே” என்ற பூ, “டேட் பிக்ஸ் பண்ணுங்க. லீவ் அப்ளை பண்ணனும்” என்றவளாக ட்யூட்டிக்கு கிளம்பிவிட்டாள்.
“ஓகே பாரி நீயும் சத்யாவும் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க” என்று பரிதியும் எழுந்துகொண்டான்.
அவரவர் தத்தம் வேலை பார்த்திட சென்றிட… சத்யாவும், பாரியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து அமர்ந்திருந்தனர்.
“எந்தெந்த இடம்ன்னு நமக்கே தெரியாது. இதில் இவங்களையும் கூட்டிட்டு எப்படிடா?” எனக் கேட்டான் சத்யா.
“அவங்க வரதே நம்ம ஃசேப்டியை மைண்டில் வைத்து தான். நீ பரிதிண்ணா பார்வையை நோட் பண்ணலையா?” என்ற பாரி, “அமோஸ் கேஸ் எப்படி பேமிலியா டீல் பண்ணமோ இதுவும் அப்படித்தான் போல” என்றான்.
“நாம எல்லாருமே அங்கிருக்கும்போது… இங்க ஏதும் பண்ணிட்டால் என்ன பண்றது?”
“நாம அவனை நெருங்கிட்டோம் தெரியுற வரை நம்ம பக்கம் திரும்பமாட்டான். இப்போ அந்த வேலு நாதனுக்கு இருக்க ஒரே கவலை கையிலிருப்பதை காலி பண்ணனும். இல்லைன்னா அவன் காலியாகிடுவான். அவனோட அவசரம் நமக்கு சாதகமாகப்போகுது” என்ற பாரி, “இங்க அப்பா, தீபன் இருக்காங்களே! உன் ஏஜென்சி மூலமா செக்யூரிட்டிக்கு அரேஞ் பண்ணிடலாம். ட்ரிப் ஸ்கிப் பண்ண முடியாது சத்யா. கண்டிப்பா அவனை பிடிச்சே ஆகணும்” என்றான்.
சத்யா தலையை மட்டுமே ஆட்டினான்.
காவல் நிலையம் சென்று கொண்டிருந்த பூ பரிதிக்கு அழைத்தாள்.
“இது ரிலாக்ஸுக்காக போற ட்ரிப் மாதிரி தெரியல மாமா. நாம போனா அவனுக்கு இன்னும் கூடுதல் வொர்க் தான். நம்மை பற்றி எக்ஸ்ட்ரா யோசிக்கணும். அவன் பிளான்படி போயிட்டு வரட்டுமே!” என்று வேந்தனுக்காக யோசித்து பேசினாள்.
“புரியுதுடா… புரியாமலில்லை. அவன் நம் கண் பார்வையால் இருந்து செய்தால் சரின்னு இருக்கலாம். பத்து நாளுக்கு மேல ட்ரிப்புன்னு இந்தியா முழுக்க சுத்தப்போறன்னு சொல்றவனை எப்படிடா தனியா விட? அவனோட போறோம். அவனை அனுப்பிட்டு இங்க உட்கார்ந்திருக்க முடியாது” என்ற பரிதியின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க பூவும் சரியென்றாள்.
“கிளம்புற வரை அவன்கிட்ட உஷாரா இரு. உன் வாயாலே வரலன்னு சொல்ல வச்சிடுவான்” என்று பரிதி கூற பூ சிரித்துவிட்டாள்.
“அப்படியேதும் ஆச்சு அடி வாங்குவ நீ” என்ற பரிதி, “வீட்ல பார்க்கலாம்” எனக்கூறி வைத்துவிட்டான்.
அலுவலகம் சென்ற பரிதி வேலைகளை முடித்துவிட்டு தீம் பார்க் செல்வதற்காக இளாவிற்கு காத்திருந்த தருணம் காவ்யா பதற்றத்துடன் அவனுக்கு அழைத்திருந்தாள்.
“அண்ணா… அபியையும் சின்னுவையும் காணோம்!” என்று அவள் சொல்ல இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்திருந்தான் பரிதி. அடுத்த நொடியே பதற்றம் தணிந்து சீராகியிருந்தான்.
“என்னம்மா என்ன சொல்ற? நல்லா பாருங்க” என்றான்.
“நானும் அண்ணியும் எல்லா பிளே சோனும் தேடிட்டோம். எங்கையும் இல்லை. ரெண்டு பேரோட டிக்கெட்ஸ் பேண்ட் கூட என்கிட்ட தான் உள்ளது” என்றவளின் குரலே தழுதழுப்பாக இருக்க… “அழாதம்மா… பாரிகிட்ட சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
“சத்யா அண்ணாக்கு சொன்னேன். அவங்க பாரிண்ணாவோட வர்றேன் சொல்லியிருக்காங்க” என்றாள்.
“ஓகே… ஓகே… ரிலாக்ஸ். பயப்படாத. பாரி பார்த்துப்பான். சின்னுக்கு இது மாதிரி டூ த்ரீ டைம்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. பாரியை பணிய வைக்க யாராவது இப்படி பண்ணுவாங்க. அவள் மேனேஜ் பண்ணிப்பாள். நானும் வர்றேன்” என்று வைத்தவன் இளாவுக்கு அழைக்க…
“இப்போ தான் பாரி கிளம்புனாங்க. நான் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்று அவனுக்கு முன் அவள் திடமாக பேசினாள்.
“அங்க பிள்ளையை காணோன்னு காவ்யா அழறா. உனக்கு அப்படியேதும் இல்லையாடி?” என்று பரிதி கேட்க, இளா சிரித்துவிட்டாள்.
“பர்ஸ்ட் டைம் சின்னு காணுங்கிறப்போ எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு. பாரி இருக்கும்போது என்ன கவலை” என்று கேட்ட இளா, “சின்னு கேர்ள் பேபிங்கிறது தான் கொஞ்சம்…” என்று கமறிய தொண்டையை சரிசெய்து தன்னை சமாளித்து திடமாகவே பேசினாள்.
பரிதியால் புரிந்துகொள்ள முடிந்தது.
“அதெல்லாம் சின்னு சமாளிச்சிடுவா இளா” என்ற பரிதி தீம் பார்க் நோக்கி சென்றான்.
அங்கு பரிதி செல்லும் முன்பே பாரியும் சத்யாவும் வந்திருந்தனர்.
“ஏதும் க்ளூ? கண்டுபிடிக்க முடிந்ததா பாரி?” பரிதி கேட்க, இல்லையென தலையசைத்த பாரி இடையில் கை குற்றியவனாக தான் நின்றிருந்த இடத்திலிருந்து அந்த பரந்த பரப்பை விழிகளால் அலசினான்.
“செக் பண்ணிட்டேன் பாரி எண்ட்ரன்ஸ் போகலை அவங்க. இந்த சைட் இருக்க காமிரா மட்டும் ரிப்பேர் ஆகியிருக்கு சொன்னாங்க” என்ற சத்யா “போய் பார்க்கலாம் பாரி” என்றான்.
“இல்லை சத்யா… இங்க, இங்க தான் நம்ம பக்கத்தில தான் இருக்காங்க” என்ற பாரி தன்னுடைய அலைபேசியை எடுத்து ஆராய்ந்தபடி அங்கு குழந்தைகளுடன் பல்வேறு வித கார்ட்டூன் கதாபாத்திர உடையணிந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் சென்றவன், மிக்கி மவுஸ் உடையில் இருந்தவனின் வயிற்றிலே ஓங்கி குத்தியிருந்தான்.
இரண்டு சிறிய பொம்மை உருவங்களை பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த மற்ற பெரிய இரு உருவங்கள் ஸ்தம்பித்து நிற்க,
“சத்யா” என்றழைத்தான் பாரி.
அவர்கள் அருகில் வரவும், சிறிய உருவங்கள் இருவரின் ஆடையை கழற்றிட ஒன்றின் உள்ளே சின்னுவும், மற்றொன்றில் அபியும் வாயினை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
மூன்று பேரையும் பாரி நொடியில் தரையில் சுருண்டு விழ வைத்திருந்தான்.
“அபியை கடத்த சொன்னவனிடம் போய் சொல்லு… பிள்ளை மேல முளைச்ச திடீர் பாசத்துக்கு காரணம் தெரியும்னு!” வார்த்தையில் அத்தனை கர்ஜனை.
அருகிலிருந்த சத்யாவும், பெண்கள் இருவரும் குழந்தைகளுடன் அரண்டு விட்டனர்.
“பாரிவேந்தன் இஸ் பேக். உன்னை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு பாரிப்பா” என்ற சின்னு பாரியின் கை பிடித்து துள்ளி குதிக்க… அபிக்கு முதல் முறை பாரியின் இத்தோற்றம் பிரம்மிப்பாக இருந்தது.
அபி மற்றும் ஆர்னாவை கடத்த முயன்ற தடியர்களை கைது செய்யாது பாரி விட்டுவிட்டான்.
ஏனென்று நினைத்தாலும். பரிதி அதனை கேட்கவில்லை.
குழந்தைகள் அனைவரும் அரண்டு போயிருந்தனர். காவ்யாவுக்கு அதுவரை வந்து கொண்டிருந்த கண்ணீர் இந்த கடத்தலுக்கு பின்பு சாய் நாதன் இருக்கின்றான் என்று தெரிந்ததும் நின்றுபோனது.
நதியா பிள்ளைகளை தேற்றிக் கொண்டிருந்தாள். அடுத்து என்ன செய்வது? நாளினை அங்கு தொடங்குவதா இல்லை வீட்டிற்கு கிளம்புவதா? பிள்ளைகள் ஒருவர் முகம் ஒருவர் ஏக்கத்தோடு பார்த்து நின்றனர். பாதி ரைட் கூட சரியாக விளையாடவில்லை. அந்த ஏமாற்றம் அவர்களிடம்.
ஆரிஷ் பாரியை பார்த்து கண்கள் சுருக்கி… “ப்ளீஸ் ப்பா” என்று சத்தமின்றி உதட்டினை மட்டும் அசைக்க…
“என்ஜாய் பண்ணத்தானே வந்தீங்க? அப்புறம் ஏன் நின்னுட்டே இருக்கீங்க… லெட்ஸ் கோ அண்ட் என்ஜாய் யுவர் டே” என்றிருந்தான் பாரி. ஆரிஷ் ஓடி வந்து பாரியின் கால்களை கட்டிக்கொண்டான்.
“தேன்க்ஸ் டாட். லவ் யூ” என்றவன், ஷைனியை கூட்டிக்கொண்டு ஓடினான்.
“வேணாமே பாரி. வீட்டுக்கு போகலாம்” நதியா சொல்ல…
“நானிருக்கேன்” என்று அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்துகொண்டான்.
நதியாவும் காவ்யாவும் அதற்கு மேல் ஏதும் சொல்லாது பிள்ளைகள் பக்கம் செல்ல…
“காவ்யா” என்று அவளை அழைத்திருந்தான்.
காவ்யா பாரியின் அருகில் வரவும் பரிதியும் சத்யாவும் அங்கிருந்து சென்றனர்.
“உங்களுக்கு என்னவோ தெரியும்?”
பாரியின் அந்த குரலுக்கு தனக்குத் தெரிந்த அந்த ஒன்றை காவ்யா பாரியிடம் சொல்லிட… பாரியின் புருவம் உச்சியை தொட்டது.
அவனது வேலையே முடிந்துவிட்டதே!
வேலு நாதனின் செயல் என்னவாக இருக்குமென்று பலவற்றை யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தவனுக்கு, சாய் நாதன் அந்த பெண்ணை கொலை செய்தற்கான காரணத்தையும் காவ்யா சொல்லியதை வைத்து யூகிக்க முடிந்தது.
“லவ் பண்ணும் போது தெரியாதா? சாய் பற்றி எதுவும் தெரியாமலா மேரேஜ் நடந்தது?” எனக் கேட்டான்.
“எல்லாரும் போலத்தான் எனக்கும் காதலிக்கும் போது கண்ணு தெரியாமப்போச்சு” என்ற காவ்யா, “பதினைந்து வருடத்துக்கு முன்பே இதுக்கு நான் ஒரு முடிவு கொண்டு வந்திருக்கலாம்ன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் எனக்கு அப்போ இருந்த சூழல், நான் அந்த வீட்டிலிருந்து தப்பித்ததே பெரிய விசயம்” என்று கடந்த காலத்தை கூறினாள்.
காவ்யாவின் தந்தை ஹைதராபாத்தில் பெரும் புள்ளி. பல தொழில்களை செய்து வந்தவருக்கு சத்யாவின் துப்பறியும் துறை பற்றிய படிப்பில் பிடித்தமின்மை ஏற்பட, அதில் உண்டான வாக்குவாதத்தில் சத்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். தங்கை மீது சத்யாவிற்கு பாசமிருந்தாலும், அவனின் தந்தை கெங்காராவ் மீறி அவனால் காவ்யாவை நெருங்கிட முடியாது போனது. அதனால் முற்றிலும் தொடர்பின்றி இருந்த சமயம் அது.
காவ்யா கல்லூரி படிப்பை சென்னையில் படித்திட, அங்கு தான் சாய்நாதன் பழக்கம். பார்த்ததும் காவ்யாவுக்கு அவன் மீது காதல். மறைக்காது சொல்லவும் செய்தாள். மறுக்க காரணமின்றி சாய் காவ்யாவின் காதலை ஏற்க, அவளின் காதலில் இவனும் உண்மையான நேசத்தோடு காவ்யாவை விரும்பத் துவங்கினான்.
காவ்யாவின் குடும்பம் பற்றி சாய் கேட்டுக்கொண்டதில்லை. அவள் அப்பா பெரிய கோடீஸ்வரர் என்றும் ஹைதராபாத் சொந்த ஊர் என்பதையும் தவிர்த்து அவனுக்கு வேறெதுவும் தெரியாது.
இளங்கலை முடிந்ததும் காவ்யா சாயினை விட்டு பிரிய மனமின்றி திருமணம் செய்துகொள்ளும்படி கேட்க, சாயும் அவள் மீது வைத்திருந்த காதலினால் மறுக்காது ஒப்புக்கொண்டான்.
“உன் வீட்ல யாரும் வர வேண்டாமா?” சாய் கேட்டிட,
“நான் இப்போ ஊருக்கு போனா என் அப்பா என்னைத் திருப்பி அனுப்பவே மாட்டார். அதுவும் நம்ம லவ் தெரிஞ்சா அவ்வளவு தான்” என்றவள், ஹைதராபாத் செல்லவே மாட்டேனென்று திடமாக சொல்லிட வேலுநாதனை வைத்து பதிவு திருமணம் செய்துகொண்டனர். சத்யாவின் மூலமாக கெங்காராவுக்கு தெரிந்துவிடுமோயென நினைத்து அவனுக்கும் காவ்யா திருமணம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
“படிப்பு முடிந்தும் ஏன் வரவில்லை?” கெங்காராவ் கேட்டிட, மேற்படிப்பு இங்கேயே தொடர்வதாக சொல்லிவிட்டாள்.
பெரிய பெரிய இடத்தில் இப்படித்தான் போலும். தகவலாக மட்டுமே அனைத்தும் பரிமாரிக் கொள்ளப்படும்.
சாய் காவ்யாவுடன் உண்மையான அன்பு அக்கறையுடன் தான் வாழ்ந்தான். ஒரு வருடம் எப்படி சென்றதென்றே தெரியாது வேகமாக அத்தனை சந்தோஷமாக காவ்யாவுக்கு ஓடியது.
ஒரு நாள் வேலுநாதன்,
“உனக்கும் மெலினாவுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்” என்று காவ்யா உடனிருக்கும் போதே சாயிடம் சொல்லிட, அவனோ அதற்கு சரியென்றது காவ்யாவுக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
அவள் வயிற்றில் அபி அப்போது இரண்டு மாதம்.
“சாய்!?”
அவனது சம்மதத்தை ஏற்க முடியாது அதிர்ச்சியும் குழப்பமுமாக அவள் விளிக்க…
“இட்ஸ் ஜஸ்ட் அ பிஸ்னெஸ் டீலிங் பேபி” என்று சாதராணமாக தோள் குலுக்கினான்.
காவ்யா அழுகையோடு உறைந்து நிற்க…
“உன்மேல நான் வைச்சிருக்கும் லவ் உண்மை பேபி” என்றவன் அவளின் கன்னம் தட்டிட…
“அப்படியென்ன பிஸ்னெஸ் சாய்?” எனக் கேட்டிருந்தாள்.
“இத்தனை நாள் நீ இதை கேட்டதில்லையே?” சற்று திமிராகவே இருந்தது அவனது பேச்சு.
“அதான் இப்போ கேட்கிறனே?”
“சொல்ல முடியாது” என்றான். பட்டென்று.
“தப்பு சாய்.”
“இருக்கட்டும் பேபி. எல்லாம் பணம் தான். அதுக்காக என்னவும் செய்வேன். செய்வோம்” என்று வேலுநாதனை பார்த்தான்.
“ஜஸ்ட் லிவ்விங் காண்டராக்ட் காவ்யா. மும்பையில் நம்மோட பிஸ்னெஸ் பண்றவரோட பொண்ணுக்கு சாயை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கக் கேட்டாங்க. இவன் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டான். ஆனால் பாரு, அந்த பொண்ணுக்கு சாய் கூட வாழ்ந்தே ஆகணுமாம். ஒண்ணா இருக்கலாம் கேட்கிறாள். நமக்கும் தொழிலில் அவர் மூலமா நிறைய லாபம் வரும்” என்றவர், “தாலி கட்டாம நமக்கு ஒத்து வராதே! நமக்கு அசிங்கம் பாரு அது. அதுக்காகத்தான் இந்த தாலி, கல்யாண டிராமா எல்லாம். சாய் உனக்குத்தான். மெல்வினா உடன் அப்பப்போ. அவ்வளவுதான்” என்றார்.
காவ்யா அருவருப்பாக முகத்தை சுளித்தாள்.
“ரெண்டாவது கல்யாணமே தப்பில்லையே?” சாய்.
“அதுக்கு நான் செத்து போயிருக்கணும்.” வெறி கொண்டு கத்தியிருந்தாள். அவளது காதல் பொய்த்துப்போன வலி அவளின் கத்தலில் வெளிப்பட்டது.
“நம்ம குழந்தையை யோசிக்கலையா சாய் நீ?” விம்பலோடு கேட்டிருந்தாள்.
“குழந்தை பிறந்து ஒரு வயசு ஆவரதுக்குள்ள அவளுக்கே என்மேல ஆசை முடிஞ்சிடும் பேபி” என்றான்.
அவனது பதிலில் அவன் மீதான மொத்த காதலும் அவளிடம் காணாமல் போனது.
“நானும் இதே மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” அவள் ஆத்திரத்தோடு கத்திக் கேட்க, சாய் முதல் முறையாக அவளை அடித்திருந்தான்.
“உனக்கு நான் மட்டும் தாண்டி. உன்னை அவ்ளோ லவ் பன்றேன்” என்றவன், “நீ என்கூட இருந்துதான் ஆகணும். என்ன நடந்தாலும்” என்றிருந்தான்.
அந்த வாக்குவாதத்திற்கு பின் காவ்யா சாயுடன் ஒரே அறையிலிருந்தாலும் அவனது முகம் பார்ப்பது, பேசுவதென முற்றிலும் தவிர்த்தாள்.
அவள் அவ்வீட்டை விட்டு வெளியேறவே சாய் கட்டுப்பாடுகள் விதித்திருந்தான்.
ஒருமுறை அவள் வீட்டை விட்டு வெளியேற முயன்றது தெரிந்து,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீயில்லாம என்னால இருக்க முடியாது தெரியும் தான பேபி. அப்புறம் எதுக்கு போக முயற்சி செய்யுற?” எனக் கேட்டு, இரவு முழுக்க உறங்கவிடாது, வயிற்றில் குழந்தை இருப்பதையும் அசட்டையாகக் கொண்டு, அவளின் விருப்பமின்றி தனக்குள் அடக்கி உணர்வுகளால் வதைத்தான்.
காவ்யாவிற்கு அந்த ஒரு இரவில் வாழ்வே வெறுத்துவிட்டது.
அடுத்த இரு தினங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள… அதற்கு மேலும் அங்கிருக்கக் கூடாதென இரு நாதன்களுக்கும் உணவில் தூக்க மாத்திரை கொடுத்து, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் உதவியோடு இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளி வந்து ஹைதராபாத் சென்றுவிட்டாள்.
சாய் தன் ஆட்களை வைத்து ஹைதராபாத் முழுக்க தேடிவிட்டான். அவளைப்பற்றி தகவல் இல்லை. அவள் பெரும் இடத்தை சேர்ந்தவள் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை.
வயிற்றில் பிள்ளையோடு வந்த மகளை கெங்காராவ் ஏற்கத்தான் செய்தார். மகள் பாசம் அது.
காவ்யா சாயினைப் பற்றி எந்தவொரு தகவலும் சொல்ல மறுத்துவிட்டாள். இறுதியாக அவள் சாய் மற்றும் வேலுவைப்பற்றி தெரிந்துகொண்ட விடயம் அப்படியானது. மீண்டும் அப்படியொரு கூட்டத்திடம் சிக்கிக்கொள்ள அவள் விரும்பவில்லை.
கெங்காராவ் மறுதிருமணம் செய்து வைக்க எவ்வளவோ முயன்றும் முடியாது போனது. காவ்யா பிடி கொடுக்கவே இல்லை.
தனக்கு பின்னர் காவ்யாவுக்கு துணை வேண்டுமென நினைத்தவர், ஏழு மாதங்களுக்கு முன்பு அதிரடியாக திருமண ஏற்பாடு செய்திட, காவ்யா சத்யாவிடம் வந்து விட்டாள்.
ஒருநாள் அபியை பள்ளியில் விட்டுவிட்டு காவ்யா வர, சாய் பார்த்துவிட்டு, காவலாளியிடம் விசாரிக்க, “அவங்க பையன் இங்கு படிக்கிறான்” என்று அவர் சொல்லிட, காவ்யா தற்போது எங்கு யாருடன் இருக்கிறாளென்று அறிந்துகொண்டான்.
அவள் சத்யாவின் தங்கை என்பது அவனுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை. சத்யா பாரியின் நெருங்கிய நட்பென்று அறிந்திருந்தவனுக்கு, காவ்யா அவர்களுடன் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
என்ன தான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பினும், அவனது காதல் காவ்யா மட்டுமே என்ற எண்ணம் அவனிடம். மீண்டும் காவ்யாவுடன் வாழ வழித்தேடிட, அப்போதுதான் அவனுக்கு தன்னுடைய மகனின் நினைவே வந்தது.
மெல்வினா இறப்பதற்கு முன் வரை அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் காவ்யாவை கண்டதும், அவளுடன் வாழ்ந்த காலத்திற்கு ஒன்றுமே இல்லையெனத் தோன்றியது. அபியை வைத்து மீண்டும் காவ்யாவை தன் பக்கம் ஈர்க்க நினைத்தான்.
காவ்யா சத்யாவின் தங்கையாக அவனுடன் இருக்கும்வரை ஆபத்து தான் என்று நினைத்தவன் அறிந்திருக்கவில்லை, காவ்யா அறியாத பலதும் அவனைப்பற்றி பாரி அறிந்திருக்கிறான் என்பது. காவ்யா எதுவும் சொல்ல வேண்டுமென்கிற அவசியமே பாரிக்கு கிடையாது.
இவன் தான் உண்மையான குற்றவாளி என்று ஊர்ஜிதமாக தெரிந்துவிட்டால் போதும், இல்லாத ஆதாரத்தைக்கூட பாரி நொடியில் உருவாக்கிவிடுவான்.
அபியின் பிறந்தநாள் இரவில் தான் காவ்யாவின் பேச்சினை வைத்து, அவளுக்கு தன்னைப்பற்றி ஏதோ ஒன்று தெரிந்திருக்கு என்று அறிந்து கொண்ட சாய்க்கு, காவ்யாவை தன் கை வளைவில் கொண்டு வந்திட அத்தனை வேகம் எழுந்தது.
அபியை தூக்கிவிட்டால் தன்னால் தன்னிடம் வந்திடுவாளென்று கணக்கிட்டு பிள்ளைகளை தூக்க முயற்சித்திட… அபியை கடத்தும்போது சின்னுவும் உடனிருந்ததால் அவளையும் கடத்த வேண்டியதாயிற்று. அத்தனை காமிராவிற்கு நடுவில் அவர்களை வெளியே கொண்டு செல்வது கடினமாக இருந்திட, அவர்கள் வழி யோசித்துக்கொண்டிருந்த நேரம் சரியாக பாரி வந்து சாயின் திட்டத்தில் ஆப்பு வைத்திருந்தான்.
