
தூவானப் பயணம் 2
வேலுநாதனை சந்தித்துவிட்டு நேராக தன்னுடைய அலுவலகம் வந்து சேர்ந்தான் பாரி.
“அழகப்பன்.”
பாரியின் குரல் கர்ஜனையாக ஒலிக்க, ஒருவித நடுக்கத்துடன் ஓடி வந்தார் அவர்.
“சார்.” அழகப்பன் சல்யூட் வைத்திட,
“சாய் நாதன் கேஸ் பைல்ஸ் கொண்டு வாங்க” என்ற பாரி, “அவன் பேக்ரவுண்டில் வேற ஏதும் கேஸ் இருக்கா செக் பண்ணுங்க. அவன் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் ரிப்போர்ட் கலெக்ட் பண்ணுங்க” என்று உத்தரவிட்டான்.
“இன்னைக்குள்ள வேணும் அழகப்பன்.”
அவனின் குரலே அவசரத்தைக் காட்டிட…
அழகப்பனும் தன் நடையில் வேகத்தை காண்பித்தார்.
அடுத்து யாருக்கோ அழைத்த பாரி… எதிர் முனையில் எடுப்பதற்காகக் காத்திருந்தான்.
அழைப்பு ஏற்கப்பட…
“எங்க இருக்க சத்யா?” என்று கேட்டிருந்தான்.
சத்யா பாரியின் க்ரைம் பார்ட்னர். பல வழக்குகளில் பாரிக்கு பின்னிருக்கும் சக்தி சத்யா.
“ஆபிஸில் தான் பாரி” என்று சத்யா சொல்லிய அடுத்த கணம் அழைப்பைத் துண்டித்து சத்யாவின் துப்பறியும் நிறுவனத்திற்கு கிளம்பியிருந்தான்.
பாரி அழைப்பு விடுத்து எதுவும் பேசாது வைத்ததுமே தன்னை காண வருவான் என்பதை யூகித்த சத்யா, அவனது அலவலகத்திற்கு வெளியில் வந்து நின்றான்.
சத்யாவின் நிறுவனம் இப்போது பல மடங்கு வளர்ந்திருந்தது. அனைத்து விதமான வழக்குகளையும் ஆராய்கிறான். அவனுக்கு கீழ் நிறைய பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு பாரி சத்யாவின் நண்பன் என்பது இன்றுவரை தெரியாது. வெளியுலகிற்கு அவர்களின் நட்பு, அமோஸின் இறப்பிற்கு பின்பும் தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இருவரின் நட்பும் மறைமுகமாக இருப்பதால் தான் பல வழக்குகளில் பாரிக்கு ஆதாரம் திரட்டுவதில் சத்யாவால் உதவிட முடிகிறது.
“சார்…?” சத்யா வாயிலில் நிற்கவும் அவனது உதவியாளர் வேகமாக அவனருகில் ஓடி வந்தான்.
“நத்திங்” என்ற சத்யா பின்னால் திரும்பி பார்த்திட, ஊழியர்கள் யாவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“வீட்டுக்கு கிளம்பிட்டேன். எதுவும் அவசரம்ன்னா கால் பண்ணுங்க” என்றவன், பாரியின் வண்டியை கண்டதும் கேட்டிற்கு வந்து, வண்டியில் ஏறிட அடுத்த நொடி வண்டி வேகம் பெற்றது.
“என்னடா எப்படி இருக்க?”
சத்யா கேட்டிட அவனின் தோளிலே அடித்த பாரி…
“வெளியில் தான் நம்ம பிரண்ட்ஷிப் தெரிய வேண்டாம் சொன்னேன். அதுக்குன்னு வீட்டுக்கு கூட வரமாட்டியா நீ. அம்மா நீ வந்து ரொம்ப நாளாகுதுன்னு என்னைத் திட்றாங்க” என்றான்.
“கொஞ்சம் பிஸி பாரி” என்ற சத்யா, சிறிது நேர அமைதிக்கு பின்… “அமைச்சர் பதவியிலிருந்து ரீசண்ட்டா ரிசைன்ட் பண்ணினாரே வேலுநாதன், அது அவருடைய கட்சியே பேசி எடுத்த முடிவு. இப்போ அந்த காட்சியில் கூட அவரில்லை. ஆனால் டெல்லியில் ஃபுல் பவர் அவருக்கு. திடீர் பதவி நீக்கத்துற்கு காரணம் என்னவா இருக்கும்ன்னு அவருக்கு போட்டியா எதிர்க்கட்சியில் இருக்கும் மகேந்திரன் எதுக்கோ தெரிஞ்சிக்க நினைக்கிறார் போல… யாருக்கும் தெரியாமல் என்னை அப்ரோச் பண்ணியிருக்கிறார்” எனக்கூறினான்.
சத்யா கூறியதை குறுக்கீடு இல்லாமல் கேட்ட பாரியிடம் ஆழ்ந்த அமைதி.
“நீயென்ன நினைக்கிற பாரி… என்ன காரணமா இருக்கும்?” எனக் கேட்டான் சத்யா.
கார் சன்னலில் கை வைத்து விரலால் தாடையை தேய்த்தபடி தன்னுடைய சிந்தையின் பிடியிலிருந்த பாரி…
“நான் உன்னை பார்க்க வந்ததே இந்த விஷயத்துக்காகத்தான்” என்றான்.
“புரியல?”
“பதவியிலே இல்லை. ஆனால் ஆளுநர் அந்த வேலுநாதனுக்கு சப்போர்ட் பண்ணி” என்று சில நேரத்துக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வை சத்யாவிடம் விவரித்தான் பாரி.
“எனக்கென்னவோ இந்த வேலுநாதனோட மகன் சாய்நாதன் வேறெதோ டீல் பன்றான் தோணுது சத்யா. பெற்ற மகனை வெளிக்கொண்டுவரனும் அப்படிங்கிற வேகத்தை விட, வேறெதுவோ ஒன்னு வேலுநாதனை ரொம்ப தீவிரமா நடக்க வைக்குது அது என்னன்னு கண்டுபிடிக்கணும்” என்றான்.
சத்யாவின் முகத்தில் சிந்தனை ரேகை.
“நான் கலெக்ட் பண்ணதுல ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது பாரி” என்ற சத்யா, “வேலுநாதன் எதிர்க்கட்சி ஆளா இருந்தாலும், ஆளுங்கட்சி ஆளுங்களோடும் அவருக்கு சேர்க்கை இருக்கு” என்றான்.
பாரி சத்யாவை ஆச்சரியமாக ஏறிட்டான்.
“ஆரம்பகாலத்தில் தற்போதைய ஆளுங்கட்சியில் இருந்திருப்பாரோ?” பாரியிடம் சந்தேகம் வலுத்தது.
“அவர் அரசியலில் சேர்ந்தது முதல் ஒரே கட்சியில் தான் இருக்கிறார்.”
சத்யா சொல்லிட பாரியின் புருவம் உயர்ந்தது.
“ஹவ் இஸ் இட் பாசிபில் சத்யா?” என்ற பாரி, “அவர் தர்ட்டி இயர்ஸா பால்டிக்சில் இருக்கார்… அம் அ ரைட்?” என்றான்.
“ம்ம்ம்ம்…” என்ற சத்யா அடுத்து கூறியதில் பாரியின் உடல் இறுக்கம் கொண்டது.
“பெரிய ஆள் தான் போல” என்ற பாரி, “மகேந்திரனிடம் கலெக்ட் பண்ண இன்பெர்மேஷன் கொடுத்துட்டியா?” எனக் கேட்டான்.
“இது ரொம்ப பெரிய மேட்டரா இருக்கே… உன்கிட்ட சொல்லிட்டு அடுத்து என்னன்னு இருந்தேன்” என்றான்.
“ஹ்ம்ம்… பொலிடிக்களில் பெரிய ஆளுங்கிறதால இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண முடியலன்னு சொல்லு… நம்ப மாட்டாங்கதான்! பட், நம்ப வைத்துதான் ஆகணும்” என்ற பாரி “மகேந்திரன் பின்னணியும் விசாரி சத்யா” என்றான்.
“ஏன் பாரி?”
“ஒரு திருடனுக்குத்தான் இன்னொரு திருடனை அராயத் தோணும்” என்றான்.
சத்யாவிற்கு பாரி சொன்னது புரிந்திட சரியென்றான்.
“பல வருஷத்துக்கு அப்புறம் இண்ட்ரெஸ்ட்டிங் கேஸ்…” என்ற பாரியின் மனதில் பல திட்டங்கள் அணிவகுத்து நின்றது.
இருவரும் பேச வேண்டியதை பேசிக்கொண்டே நகரத்தை வலம் வந்து, இறுதியாக சத்யாவின் அலுவலகம் முன்பு வண்டியை நிறுத்தியிருந்தான் பாரி.
“கேர்ஃபுல் சத்யா…”
பாரியின் அக்கறையில் சத்யாவின் முகத்தில் சிறிய அளவிலான புன்னகை.
“நீ கேர்ஃபுல் சொன்னாவே அமோஸ், விவாஷ் கேஸ் தான் நினைவு வருதுடா… அது விடாது கருப்பு போல” என்று சத்யா சொல்லிட பாரியிடம் அட்டகாசமான சிரிப்பு. கூடவே அவனை நிலைகுலைந்து நிற்க வைத்த அந்த கணங்கள் கண்முன் தோன்றி சில நொடிகளே ஆயினும் உயிர்வதை தந்து மறைந்தது.
புள்ளியாய் உருவாகும் முன்பே சிதைந்திருந்ததே! மறக்கக்கூடியதா அது. அவ்விடயத்தில் பாரியும் சரி… பூவும் சரி… வலியை ஏற்க பழகிக்கொண்டனர். இருப்பினும் நினைவின் தாக்கங்களை அத்தனை எளிதாக கடந்திட முடிந்ததில்லை.
இன்னமும் அவர்களுக்கு தங்கள் கை சேர்ந்திடாத அம்மலரின் இழப்பு தீரா தாகம் தான்.
காலங்கள் சென்றாலும் மறையா அவ்வலியை தங்களின் அன்பினால் மட்டுமே ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர்.
“பாரி… பாரி…”
தான் இறங்கியும் பாரி அப்படியே இருக்க, தன் பக்க சன்னல் வழி குனிந்து இருமுறைக்கு மேல் சத்யா அழைத்தும் அவனிடம் அசைவில்லை.
காரினை சுற்றிக்கொண்டு பாரியின் பக்கம் வந்த சத்யா, அவனின் தோள் தொட சுயம் பெற்றான் பாரி.
“ஆர் யூ ஓகேடா? நான் ட்ரைவ் பண்ணட்டுமா? வீட்டுக்கா போற?” சத்யாவின் எந்த கேள்விக்கும் பதில் வழங்காது வாகனத்தை சாலையில் சீற விட்டான் பாரி வேந்தன்.
மனம் பூ பூ என்று ஓலமிட்டது.
அவளின் அணைப்பில் அடங்கினால் மட்டுமே அவனின் தவிப்புகள் அடங்கிடும்.
நேரம் மாலை கவிழ்ந்திருந்தது.
வீட்டிற்குள் நுழைந்த பாரி கூடத்தில் அமர்ந்திருந்த ஒருவரையும் கருத்தில் கொள்ளவில்லை. விடுவிடுவென மாடியேறி தன்னறை சென்றுவிட்டான்.
சில நிமிடங்களுக்கு முன்பு தான் பூ வந்திருக்க, பாரி அறைக்குள் நுழைந்த நொடி, பூ குளியலறைக்குள்ளிருந்து வெளி வந்திருந்தாள்.
தாய் பசுவை கண்டதும் தாவி ஓடிடும் கன்றாய் இரண்டெட்டில் பூவை அடைந்தவன் தாவி அணைத்திருந்தான். அவனுள் பாந்தமாய் அடங்கி நின்ற பூவிற்கு தன் கை காயத்திற்கு வருந்துகிறான் என்றே எண்ணமாக இருந்தது.
எத்தனை ஆறுதல் அளித்தாலும் தன் விடயத்தில் அவன் சமாதானம் ஆவப்போவதில்லை என்பதை அறிந்திருந்ததால் கணவனின் முதுகினை தட்டிக்கொடுத்தவளாக நின்றிருந்தாள்.
தன் வெற்றுத்தோளில் ஈரம் உணர்ந்தவள் பதறி… தன்னிலிருந்து பிரிக்க முயல… பாரியின் பிடி இரும்பென இறுகியிருந்தது.
“வேந்தா அம் ஓகே. சின்ன காயம் தான். எனக்கு வலிக்கக்கூட இல்லை” என்று பூ அவனுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க, பாரியின் ஒரு கை இறங்கி அவளின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.
நொடியில் கிரகித்துவிட்டாள்.
சட்டென்று கண்ணீர் இமைகளை முட்டிட…
“ஆரிஷ்க்கு சிபிலிங் இருந்தா நல்லாயிருக்கும்ல வேந்தா?” என்று அவள் கேட்டது தான் தாமதம் விலகி நின்றவன் அவளை தீயாய் முறைத்தான்.
நொடியில் பாரியை கேட்க வேண்டியதை கேட்டு மீட்டிருந்தாள் அவனின் பூ.
ஆரிஷ் வயிற்றிலிருந்த ஒன்பது மாதங்களும் பூவிற்கு சிரமம் தான். பேறு காலம் அவளுக்கு அத்தனை கடினமாக இருந்தது. ஆரிஷ் பிறக்கும் சில நிமிடங்கள் முன்னர் வரை வாந்தி, மயக்கம் இருந்தது. உணவு உட்கொள்வதே அத்தனை கஷ்டமாக இருந்தது அவளுக்கு. அந்தளவிற்கு வயிற்றில் இருக்கும்போதே தாயை படுத்திவைத்திருந்தான் ஆரிஷ். பல இரவுகள் தூங்காவிடாது செய்து வலி கொடுத்திருக்கிறான். அந்நேரம் காவல்துறையில் சேர்வதற்கான தேர்விற்கு படித்துக்கொண்டு வேறு இருந்தாள். ஒன்பது மாதங்கள் அவள் பட்டபாட்டினை பார்த்த பின்பு பாரிக்கு இன்னொரு பிள்ளை என்கிற ஆசையே இல்லையென்றானது.
ஆரிஷ் பிறக்கும் வரை தான் அன்னையை படுத்தி வைத்தான். பிறந்த பின்னர் அத்தனை சமத்து. அன்னையின் மீது கொள்ளை அன்பு வைத்திருப்பதில் பாரிக்கு இணை அவன். தந்தையைப்போல் மகன்.
“இப்போ என்னத்துக்கு காக்கி பாசமா பாக்குதாம்?” என்றவளை இழுத்து கை வளைவில் வைத்தவன்,
“ஆரிஷ்க்கு பத்து வயசுடி… இப்போ எப்படி?” என மந்தகாசமான புன்னகையுடன் கண்ணடித்தான்.
“அதெல்லாம் பிரச்சினை இல்லைடா… அவனே பேபிய ரொம்ப நல்லா கேர் பண்ணிப்பான்” என்று பூ சொல்லிட…
“எங்க அந்த லத்தி” என்றிருந்தான் பாரி.
“அடிக்கப்போறியா?”
“ஆமாம்… உனக்கெல்லாம் வாய் தாண்டி” எனக்கூறி அவளின் இதழை கிள்ளி…
“ஒரு பிள்ளைக்கே உனக்கு தாங்கல… இதுல அன்னைக்கு பத்து பிள்ளை பெத்து தரட்டுமான்னு கேள்வி வேற” என்றவன்… “உனக்கு எப்படியிருந்துச்சோ… ஆனால் எனக்கு?” கேள்வியாக நிறுத்தி முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டு… இன்று தான் நடந்தைப்போல் “உன்னை லேபர் வார்டுக்கு அனுப்பிட்டு நான் அனுபவிச்ச வலி இருக்கே… அந்த நொடி எனக்குத் திரும்ப வேண்டாம். என்னால முடியாது. உன்னை திரும்ப கதறலோட பார்க்கும் துணிவு எனக்கில்லை” என்றவன் கோச்சில் சாய்ந்து அமர்ந்தான்.
“காக்கிச்சட்டையில் இருக்கும் போதே சாருக்கு பயமா?” எனக் கேட்டவள், “கொஞ்ச நேரத்துல நீ சம்மதிச்சிட்டன்னு நெனச்சு சந்தோஷப்பட்டுட்டேன்” என்று அவனருகில் அமர்ந்தாள்.
“காக்கின்னு இல்லை… உன் விடயத்தில் பயம் இருக்கத்தான் செய்யுது. அது எனக்கு பிடிச்சிருக்கு மலரே… உன்கிட்ட நான் நானா இருக்கேன்” என்றவன் அவளின் அடிபட்ட கையின் கட்டில் வருடினான்.
“எப்பவுமே உனக்கு ஒன்னுன்னா என்கிட்ட மறைக்கத்தான் ட்ரை பண்ற மலரே!” என்றான்.
“இதை கவனிக்கலையோன்னு நினைத்தேன்” என்றவள் அவன் அறைக்குள் வரும்போதிருந்த அவனது மனநிலையை தற்போது முற்றிலும் மாற்றி தன் பக்கம் மட்டுமே வைத்திருந்தாள்.
அவளுக்கும் இழப்பின் வலி இருக்கிறது. அதன் நினைவில் அவளும் இப்படித்தான் பாரியை நாடிடுவாள். அவனும் பூவைப்போலவே அதைப்பற்றியே பேசாது திசை திருப்பிடுவான்.
“எப்படி ஆச்சு? கொஞ்சம் முன்னாடி தான் பரிதிண்ணா பெருசா ஒண்ணுமில்லை. ஷீ இஸ் நார்மல்’ன்னு மெசேஜ் பண்ணியிருந்தார். அதை பார்த்த பிறகு தான் ஓகே ஆச்சு. அப்பவும் உன்னை பார்க்கணும் தோனிட்டே இருந்தது… சின்ன வேலை. முடிச்சிட்டு வரும்போது” என்று அடுத்து சொல்லிட முடியாது தடுமாற… பாரியின் முகத்தை தன் கையில் ஏந்திய பூ… “ஆரிஷ் இருக்கான் வேந்தா” என்று அவனின் நெற்றியில் இதழ் ஒற்றினாள்.
அன்று பூவாக குறுக்கே வந்திருந்தாலும், தான் தான் அவளை காக்கத் தவறிவிட்டேன். தன்னால் தான் தங்கள் உதிரத்தில் உதித்த முதல் மொட்டு மலராகமலே உதிர்ந்துபோனது என்கிற குற்றவுணர்வு பாரிக்கு. அதனை ஆரிஷின் பிறப்பு ஈடு செய்திருந்தாலும். என்றாவது இப்படித்தான் அன்றைய நிகழ்வின் தாக்கத்தில் மருகிவிடுவான்.
பாரி மனைவியின் இடையில் கையிட்டு கோர்க்க…
“மாம்” என்ற ஆரிஷின் குரலில் இருவருமே இயல்பாக தள்ளி அமர்ந்தனர்.
___________________
“மாம்” என்ற விளிப்போடு ஓடிவந்த ஆரிஷ் பாரிக்கும் பூவிற்கும் நடுவில் அமர, அவனைத் தொடர்ந்து “பாரிப்பா” என்று வந்த சின்னுவை தன் மடியில் இருத்திக் கொண்டான் பாரி.
“இப்போதான் வந்தீங்களா சித்தா? நானும் ஆரிஷும் கார்டனில் பிளே பண்ணிட்டு இருந்தோம்” என்ற சின்னு கை நீட்டிட, பாரி தன்னுடைய காக்கி பேண்ட்டிலிருந்து கேண்டி ஒன்றை எடுத்து சின்னுவின் கையில் வைத்தான்.
“நல்ல அப்பா… நல்ல பொண்ணு” என்று சொல்லிய பூ, “உன்னோட ஆங்கர்னெஸ் கண்ட்ரோல் பண்ண கேண்டி சாப்பிட பழக்கப்படுத்தினா, நீ அவளுக்கும் சொல்லிக்கொடுத்து கெடுக்கிற வேந்தா. தினமும் கேண்டி சாப்பிட்டா உடம்பு என்னாகும்?” என்று பூ பாரியைத் திட்டிட…
“எதுக்கு சித்தி பாரியை திட்றீங்க? டெய்லி வாங்கினாலும் சாப்பிடலாம் மாட்டேன். சித்தா கொடுத்து நான் வாங்கிறதுல ஒரு ஹேப்பினெஸ்” என்று பாரிக்காக பூவிடமே சண்டையிட்டாள் சின்னு.
“எதாவது ஒரு பேர் வைத்து கூப்பிடு சின்னு… பேசுற ரெண்டு வரியில ரெண்டு விதமா சொல்ற… சம்டைம்ஸ் கன்பியூஸ் ஆகுது” என்று பூ சொல்ல… வீட்டிலிருக்கும் அனைவரும் சொல்லியே பாரியை பலவிதமாக அழைப்பதை சின்னு மாற்றிக்கொள்ளவில்லை.
“எனக்கு அப்படி கூப்பிடத்தான் பிடிக்குது சித்தி. பாரிப்பான்னு கூப்பிட்டால் சந்தோஷமா இருக்கும். சித்தா சொன்னா நெருக்கமா இருக்கும். சித்தப்பு சொல்லும்போது எங்களுக்குள்ள டீலிங் இருக்குன்னு அர்த்தம். பாரி சொல்லும்போது பாரிப்பாக்கு ஒன்னுன்னா நான் இருக்கேன்னு அர்த்தம்” என்று சின்னு தனக்குள் பாரிக்கான இடத்தை பல அழைப்புகளில் வெளிப்படுத்துவதற்கான விளக்கம் கொடுக்க பாரி தான் பெறாத மகளை தன் மார்போடு அடைகாத்துக் கொண்டான்.
பூவுக்கும் பாரிக்கும் முதல் குழந்தையாயிற்றே அவள் அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்துவிடுவார்களா?
“சார் ஏன் வந்ததிலிருந்து எதுவும் பேசாம இருக்கீங்க?” பாரி ஆரிஷிடம் வினவினான்.
ஆரிஷ் பதில் சொல்லாது பூவின் கையையே தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
“இனி இவன் ஓவரா பண்ணுவாண்டா! வா நாம போவோம்” என்று பாரி சின்னுவிடம் சொல்ல…
“உங்களைவிட கம்மியாத்தான் பன்றாங்க டாட். உங்க கொஞ்சல் எல்லாம் முடிஞ்சதும் என்னை கிண்டல் பண்றீங்களா?” என முறைத்துக்கொண்டு பாரியை வினவிய ஆரிஷ்… பாரி பதில் பேசுவதற்கு முன்,
“எத்தனை தடவை மாம் சொல்றது… அக்யூஸ்ட் சேஸ் பண்ணா… கேர்ஃபுல்லா இருங்கன்னு. உங்களுக்கு அசிஸ்ட் இருக்காங்க தான?” என்று கோபமாக பூவின் பக்கம் திரும்பினான்.
“அவங்களை பிடிக்க சொல்லுங்க” என்று தொடர்ந்தவன் “இந்த க்ரைம்லாம் இல்லாத டிப்பார்ட்மெண்ட்க்கு பூவை மாத்திவிடுங்க டாட். நான் பிளே பண்ணி வாங்குற அடியைவிட அதிகமா வாங்கிட்டு வர்றாங்க” என்று தந்தைக்கே கட்டளையிட்டான்.
ஆரிஷ் பாரியின் மறுபதிப்பாக இருப்பதால் அவனுக்கும் பூ உறவுகளை கடந்து சுவாசம் போலாகியிருந்தாள்.
ஆரிஷ் சொல்ல சொல்ல பாரி பூவைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வந்திருந்த போதே… பாரி சொல்லி பார்த்துவிட்டான். வேறு துறைக்கு மாற்றிக்கொள் என்று பூ தான் குற்றப்பிரிவில் இருக்கும் திரில் வேறெதிலும் இல்லையென்று… பாரியை கெஞ்சிக்கொஞ்சி சரிகட்டியிருந்தாள்.
இப்படி பலமுறை நடந்துள்ளது. பூ அடிபட்டு வரும்போதெல்லாம் பாரி முதலில் சொல்வது இதைத்தான்.
“வேற பிராஞ்ச் மாறிக்கோ பூ.”
“உன்னை மாற சொன்னா மாறுவியா பாரி?” பூ தன்னையே திருப்பிக் கேட்பதால் இம்முறை அவன் சொல்லவில்லை. அவனுக்கு பதில் ஆரிஷ் சொல்லியிருந்தான்.
“அப்படியே உன்னை மாதிரியே வளர்த்து வச்சிருக்கடா நீ!” பூ கோபப்பட்டாலும் அதில் பெருமையே.
“சித்தி…” சின்னு அழுத்தமாக விளிக்க…
“உன் சித்தப்பாவை நான் ஒன்னும் சொல்லல. என்னை ஆளை விடுங்க” என்று எழுந்த பூவை கை பிடித்து மீண்டும் அமர வைத்த ஆரிஷ்…
“பிராமிஸ் பண்ணுங்க மாம்” என்று கை நீட்டினான். அவள் முன்.
“எதுக்காம்?”
“இன்னொரு முறை கேர்லெஸ்ஸா இருந்தீங்கன்னா… டாட்கிட்ட சொல்லி உங்களை டிஸ்மிஸ் பண்ண சொல்லிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
சிறு பிள்ளையின் மிரட்டலில் பாரி அட்டகாசமாக சிரிக்க… பூ அவனை தீயாக உறுத்தாள்.
“என்னோட ஜாப் அப்படி ஆரிக்குட்டி” என்று மகனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பூ சொல்ல…
“ரிஸ்க் அதிகம். எவ்ளோ கேர்ஃபுல்லா இருந்தாலும் இந்த மாதிரி ஆகும். பிளா… பிளா… இதானே மாம் சொல்லப்போறீங்க. நிறைய டைம் நீங்க சொல்லி நான் கேட்டாச்சு. இதுதான் லாஸ்ட்” என்ற ஆரிஷ், “வாங்கக்கா போலாம்” என்று பூவின் மடியிலிருந்து இறங்கியவனாக சின்னுவின் கை பிடிக்க… மகனை தூக்கி தனது மற்றொரு காலில் அமர்த்திக் கொண்டான் பாரி.
“நான் பேச வேண்டியதெல்லாம் இவன் பேசுறான். யாரு அம்மான்னே தெரியல” என்ற பூ பார்வதியின் விளிப்பில் கீழே சென்றாள்.
“குட்டி வேந்தனுக்கு என்னவாம்? ரொம்ப சேடா இருக்கீங்களே?” என்ற பாரி தன் தோளில் புதைந்திருந்த மகனின் முகத்தை பிரித்தெடுக்க…
“நீங்க ஓகேதான டாட்?” என்று கேட்டிருந்தான் மகன்.
ஆரிஷ்க்கு மட்டுமல்ல, ஷைனி, மிதுன், மித்ரா என அனைவருக்கும் தெரியும். பூவுக்கு ஒன்றென்றால் பாரியின் பிரதிபலிப்பு எப்படியிருக்குமென்று. பூவுக்கு சிறு காய்ச்சல் என்றாலும், குடும்பத்தார் கவனித்து பார்த்துக்கொள்வது பாரியைத்தான். அந்த அளவிற்கு பாரி துவண்டு விடுவான். பனிரெண்டு வயதில் உருவாகிய பாசமாயிற்றே… அப்போதே அப்படி, இப்போது? பல வருடங்கள் வேர்விட்ட விருச்சமாயிற்றே! எளிதாக இருந்திடுவானா என்ன?
“பாரிப்பா ஓகே தான் லட்டு. நாம வரதுக்கு முன்பே சரியாகிட்டாங்க. சித்தி சமாதானம் செய்திருப்பாங்க. இல்லைன்னா இங்க பூ பூ பூ’ன்னு சித்தா குரல் இன்னும் கேட்டுட்டே இருந்திருக்கும்” என்று சின்னு தன் தம்பியை ஆறுதல் படுத்த மொழிய… அது பாரியை கேலி செய்வதைப்போல் அமைந்துவிட்டது.
“சின்னும்மா… யூ டூ?” என்று பாரி போலியாக முகத்தை சோகமாக வைத்திட…
“சித்தா… நோ… நோ… நான் லட்டுக்காக சொன்னேன்” என்று சின்னு பாரியின் கன்னத்தை பிடித்து ஆட்டிட…
பாரியின் பாவனையிலும், சின்னுவின் விழி பிதுங்களிலும் ஆரிஷ் சிரித்திடவே இருவரும் சகஜமாகினர்.
“பிடிஏ… என்ன சொன்னாங்க?” பாரி அடுத்து அவர்களின் பள்ளியில் இன்று நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தினைப் பற்றி கேட்க, ஆரிஷும் சின்னுவும் ஒருவரையொருவர் திருட்டு முழி பார்த்தனர்.
“என்ன சேட்டை பண்ணீங்க?” பாரி தன் பிள்ளைகளை கண்டு கொண்டவனாக வினவிட,
பாரியின் மடியிலிருந்து கீழிறங்கிய இருவரும்… “அப்பா வந்து சொல்லுவாங்க” என்று ஒரு சேர சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியில் வர, கீழே பரிதியின் குரல்.
மீண்டும் பாரியிடம் ஓடிய குழந்தைகள்,
“அப்பா என்ன சொன்னாலும் நீங்க எங்களைத் திட்டக்கூடாது. சரியா!” என்று சொல்லிவிட்டு, பாரி பதில் சொல்வதற்கு முன்பே ஓடிவிட்டனர்.
“பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போலவே!” என்ற பாரியிடம் பிள்ளைகளை குறித்து எப்போதும் கவலை இருந்ததில்லை. ஆரிஷ் முழு பொறுப்பும் இளா, பரிதி தான். ஆரிஷ் இருவரையுமே அம்மா, அப்பா என்றுதான் அழைப்பான்.
பாரியின் சொல்லுக்காக பூ காவல்துறை பயிற்சியில் சேரும் போது ஆரிஷ் நான்கு மாத குழந்தை. அன்று முதல் இளா தான் அவனுக்கு அன்னையாகியிருந்தால். பிள்ளைகள் விடயத்தில் யாருமே வேற்றுமை கொண்டதில்லை.
பாரி ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் போது அவனது அலைப்பேசி ஒலித்தது.
அவன் மாற்றி வருவதற்குள் இருமுறை அழைப்பு வந்திருந்தது.
யாரென்று எடுத்து பார்த்திட… ‘பிரைவேட் நெம்பர்.’
பாரியின் நெற்றி சுருங்கியது யோசனையாக.
“போகும் ரூட் கரெக்ட்” என்று சத்யாவுக்கு தகவல் அனுப்பியவன் கீழே சென்றான்.
இளா கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருக்க… அவளுக்கு எதிரில் கதிரையில் பூவின் கையை பிடித்தபடி பரிதி அவளிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த்தான்.
உள்ளே பிள்ளைகளின் அறையை எட்டிப்பார்க்க… தில்லையின் முன் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
நேராக சமையலறை சென்றவன், அங்கு பார்வதி குழந்தைகளுக்கு இரவு உணவை தட்டில் எடுத்துக் கொண்டிருக்க…
“எனக்கும் கொடுங்கம்மா. மதியமே சாப்பிடல” என்றான்.
“எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. நேரத்துக்கு சாப்பிட்டாதான பாரி உன் வேலையில் கவனமா இருக்க முடியும்” என்று பாரியை கடிந்தவர் கிண்ணத்தில் பழ கலவையை ஸ்பூன் வைத்து கொடுத்தார்.
“இனி கரெக்ட்டா சாப்பிடுறேன்” என்று கிண்ணத்தோடு வெளியேறியவன் இளாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
“இன்னுமா முடியல?” எனக் கேட்டுக்கொண்டே பழங்களை சுவைத்திட… அவனிடமிருந்து ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்து கடித்த இளா…
“சத்தியமா முடியல பாரி” என்றாள்.
“வழக்கமானது தான!”
“இருந்தாலும் அநியாயம் பன்றான் பாரி. ஸ்கூல் மீட்டிங் முடிஞ்சதும், அவி நீ சொன்னன்னு சொன்னதுதான், எங்களை அவியோட அனுப்பிட்டு நேரா தமிழை பார்க்கத்தான் போனான். போயிட்டு ஒண்ணுமில்லை பயப்பட வேண்டான்னு எங்ககிட்ட சொன்னவன், இப்போ வந்து பண்றதை பாரு” என்றாள்.
“கேட்டா எம் பொண்ணுடா அவன்னு பரிதிண்ணா குதிப்பாங்க. விடு” என்றவன் பரிதுக்கு மேல் பூவிற்கு கிளாஸ் எடுத்திருப்பானென்று இளா சிரித்திட…
“நானும் மேல இதைத்தான் பண்ணேன்னு தெரியும் தான! அப்புறம் என்ன?” என்றான்.
“அப்புறம் எப்படி பாரி பரிதியை உன்னால கிண்டல் பண்ண முடியுது?” என்று இளா கேட்டிட இருவரும் பார்த்தது பார்த்தபடி பக்கென்று சிரித்துவிட்டனர்.
அவர்களின் சிரிப்பில் தான் பரிதி பாரி வந்து அங்கு அமர்ந்திருப்பதையே கவனித்தான்.
“எப்போடா வந்த?”
பரிதியின் கேள்வியில் அவர்களின் சிரிப்பு அதிகமாகியது.
“உங்களைத்தான் கிண்டல் பண்ணி சிரிக்கிறாங்க” என்று பூ சொல்லிட…
“கண்டுபிடிச்சிட்டாங்க பாரி” என இளா அதற்கும் சிரித்தாள்.
பரிதி அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் பூவிடம் திரும்பி ஆயிரம் பத்திர அறிவுரைகளை வழங்கிய பின்னரே எழுந்து சென்று புத்துணர்வு பெற்று இரவு உணவிற்கு வந்தான்.
பிள்ளைகளுடனே மூத்தவர்கள் உண்டிருக்க…
அவர்களை விடுத்து நால்வரும் உணவு உண்டனர்.
தில்லை பிள்ளைகளுக்கு ஹாலில் கதை சொல்லிக்கொண்டிருக்க, பார்வதி… பூ மற்றும் இளாவின் அன்னை மணியிடம் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
“ஸ்கூல்ல என்ன சொன்னாங்க பரிதிண்ணா?”
“மறந்துட்டேன் டா” என்ற பரிதி…
“சின்னு கிளாஸ் பையனை லட்டு அடிச்சிருக்கான். கேட்டதுக்கு அப்படி தான் அடிப்பன்னு ரூடா பேசினானாம். நேத்து தான் நடந்திருக்கு. அதனால இன்னைக்கு மீட்டிங்கில் சொல்லிக்கலான்னு நேத்து நமக்கு இன்ஃபார்ம் பண்ணலையாம். டிஜிபி பையன்கிறதால சும்மா விடுறோம் அப்படின்னாங்க” என்றான்.
“எதுக்கு அடிச்சானாம்?”
“நான் கேட்டதுக்கு சின்ன பசங்க அடிச்சிக்க காரணமா தேவைன்னு சொல்லி அதுக்கு மேல ஒன்னும் சொல்லல” என்ற பரிதி, “வெளியவந்து லட்டுகிட்ட கேட்கணும் இருந்தேன். தமிழை பார்க்க போனதில் மறந்துட்டேன்” என்றான்.
“சின்னு என்கிட்ட மறைக்காமாட்டாளே. பட் எதுவும் சொல்லல” என்ற பாரியிடம்,
“அவ தம்பிக்காக சொல்லாம விட்டிருப்பாள்” என்றாள் பூ.
அதற்குள் இளா… சின்னு மற்றும் ஆரிஷை அருகில் அழைத்திருந்தாள்.
அக்கணம் மீண்டும் பாரிக்கு பிரைவேட் நெம்பரிலிருந்து அழைப்பு வர, ஏற்காமல் விட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                4        
	+1
	                                23        
	+1
	        	+1
	                                1        
	