Loading

தூவானப் பயணம்

தூவனம் தடத்தின் எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி கதையை வாசியுங்கள். சிறிய கதை தான் விரைந்து முடிந்து விடும்.

# The Explorer 

#Murder

#Adventure 

#Action 

#Friendship 

#Love

(தூவானம்_ 2)

அத்தியாயம் 1

காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம்… (Director general of police _ DGP)

‘டிஜிபி. திரு.பாரிவேந்தன் ஐபிஸ்.’

பெயர்பலகை தாங்கி நின்ற கதவினை ஒரு திகிலோடு பார்த்து நின்றாள் பூந்தமிழ் ஐபிஎஸ். பூந்தமிழ் இருப்பத்தியோரு காவல் நிலையங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதவி ஆணையர்.

தன் கையிலிருக்கும் சிறு கட்டினையும், பாரிவேந்தன் பெயர் பதிந்திருக்கும் கதவினையும் மாற்றி மாற்றி பார்த்தபடி நின்றிருந்தவளுக்கு உள்ளே செல்ல சற்றும் துணிவில்லை.

அந்நேரம் அங்கு வந்த ஜென்சி பூவின் கையில் கட்டினை பார்த்ததும் பதறி அருகில் வந்தாள்.

ஜென் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு (civil defence and home guards) பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கின்றாள்.

“வாட் ஹெப்பன்ட் தமிழ்?” பூவின் கையினை ஆராய்ந்தாள். வலது கை மணிகட்டிற்கு மேல் கட்டிட்டிருந்தாள்.

“அடியேய் கத்தாதடி” என்று ஜென்னின் வாயினை பொத்தியவள், அங்கிருந்து தள்ளி ஜென்னை நகர்த்தி வந்திருந்தாள்.

“என்னாச்சுன்னு கேட்டா என் வாய் மூடுற…” என்ற ஜென்னிடம்,

“அக்யூஸ்ட் பிடிக்க போனப்பா அரிவாளால் கிழிச்சிட்டான். சின்ன காயம் தான். டாக்டர் பெருசா கட்டு போட்டுட்டார்” என்று சோகமாக மொழிந்தாள்.

“அக்யூஸ்ட் தப்பிச்சிட்டானா?” ஜென் கேட்டிட…

“பிடிச்சிட்டேன்” என்றாள். சுரத்தே இல்லாது.

“அப்புறம் ஏன் சோகமா இருக்க?”

“வேந்தன்” என்ற பூ தன் கையினை பார்த்திட, ஜென்னுக்கு புரிந்தது. உடன் சிரிப்பும் வந்தது.

பாரிக்கும், பூவிற்கும் திருமணம் முடிந்து பதினான்கு வருடங்கள் சென்ற பின்பும், பூ விடயத்தில் மட்டும் பாரி இன்னும் நொடியில் தன்னுடைய சுயம் தொலைத்திடுபவன் தான். அவளுக்கும் அவளது அன்பிற்கும் அவன் என்று அடிக்கட்டட் என சொல்லப்படும் வரையறைக்குள் அடங்குபவன் தான். அவளுக்கு ஒன்றென்றால் அவனின் துடிப்பு அன்றும் இன்றும் ஒரே மாதிரி தான்.

“அப்போ இன்னைக்கு வீட்ல பஞ்சாயத்து இருக்கு. நான் அவியை கூட்டிட்டு வந்திடுறேன்” என்று ஜென் கிண்டல் செய்து சிரித்திட…

“அடியேய்… கிண்டலா பண்ற? உன்னை கொல்லப்போறேன் பாரு” என்று ஜென்னின் கழுத்தை நெறிப்பதைப்போல் கையினை கொண்டு சென்ற பூ வலியில் முகம் சுளித்தாள்.

“சின்ன காயம் சொன்ன?” ஜென் கேள்வியாய் நோக்கிட…

“நீ வேற படுத்தாத ஜென்” என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த பூ, “நீயென்ன இந்நேரம் இங்க?” என்று வினவினாள்.

“இந்த வீக் ரிப்போர்ட் பாரிகிட்ட சப்மிட் பண்ணனும்” என்ற ஜென், “நான் பார்த்திட்டு வந்துடுறேன்” என்று சென்றவள் அனுமதி கேட்டு பாரியின் அறைக்குள் நுழைந்தாள்.

அவனது பதவிக்காக விறைப்பாக சல்யூட் வைத்த ஜென் தன்னுடைய கையிலிருந்த கோப்பினை பாரியிடம் ஒப்படைத்தாள்.

வாங்கியவன், ஜென்னை இருக்கையில் அமர கைகாட்டினான்.

“எனித்திங் சீரியஸ் ரிப்போர்ட்?”

“டாஸ்மாக் மூட சொல்லி போராட்டம் நடத்த மகளிர் அமைப்பு அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்காங்க சார்” என்றவள், “நீங்க கையெழுத்து போட்டுட்டா… மேற்கொண்டு பாதுகாப்புக்கு நான் அரேஞ் பண்ணிடுவேன்” என்றாள்.

“என்னைக்கு?” எனக் கேட்டவன், ஜென் சொல்வதற்கு முன்பே கோப்பில் குறிப்பிடப்பட்டிருந்த திகதியினை பார்த்துவிட்டு, “அந்தநாள் மத்திய மந்திரி சென்னை வர்றார். ஏதும் பிரச்சினை வந்தா சமாளிக்க முடியாது. சிஎம்’க்கு பதில் சொல்லவேண்டி இருக்கும்” என்றதோடு… “முதல் நாள் அனுமதி கொடுங்க” என்று கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தான்.

“மத்திய மந்திரி வரதால் தான்… டெல்லி வரை கவனம் ஈர்க்க அன்னைக்கு அனுமதி கேட்டிருக்காங்க. நாம மாற்றி கொடுத்தா ஏற்பாங்களா சார்?” ஜென் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.

“இதுவரை எத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்காங்க. ஏதும் மாற்றம் வந்திருக்கா? அரசாங்கமே நடத்தும் போது எப்படி மூடுவாங்க? சொல்லி புரிய வைய்யுங்க. அதுக்குத்தான் பதவியில் இருக்கீங்க” என்று அழுத்தமாகக் கூறியவனிடம் அடுத்து ஏதும் பேச முடியாது சல்யூட் வைத்து வெளியேறினாள்.

வெளியில் வந்து மூச்சினை இழுத்து வெளியேற்றி ஆசுவாசம் கொண்டவளுக்கு, சிங்கத்தின் குகைக்குள் சென்று சேதாரமில்லாது வெளி வந்த நிம்மதி.

வெளிநாட்டில் மிகப்பெரிய கடத்தல் மன்னனான அமோசினை என்கவுண்டர் செய்த பிறகான பத்து வருடங்களில் பாரியின் உயரம் அதிகம் சென்றது. அவனது குறுகிய கால உயர் பதவிக்கு முழுக்காரணம் அவனது நேர்மை, கடமை தவறாமையும்.

காவல்துறையில் அவன் வைத்த பற்றின் காரணமாகவே தமிழ்நாட்டின் அமைச்சகத்தின் தேர்வால், ஆளுநரின் ஒப்புதலால்… நான்கு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் ஐந்தாவது பெரிய காவல்துறையான தமிழகத்தின் மொத்த காவல்துறைக்கும் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்றான். இதற்கு அவனை முதலில் பரிந்துரை செய்து பதிவு ஏற்று வைத்ததும் அமோஸ் வழக்கில் அவனது பணித்திறனைக் கண்டு வியந்து பாராட்டிய முதலமைச்சர் நிலவேந்தன் தான்.

பாரியின் கம்பீரமும், வளர்ச்சியும், அவனது பதவியும் அவனைச் சார்ந்தவர்களுக்கே அவனிடம் மரியாதையையும் பயத்தையும் தன்னைப்போல் தோற்றுவித்திருந்தது.

பாரி காக்கி உடையில் இருக்கும் தருணங்களில் அவனது பூவே அவனிடம் பேசிட அருகில் சென்றிட பதட்டம் கொள்வாள்.

ஆனால் பாரி எப்போதும் தன்னுடைய அன்பிற்குரியவர்களிடம் ஒரே மாதிரிதான் இருக்கின்றான். மற்றவர்களால் தான் அவனது பதவியை சாதாரணமாக பார்க்க முடியவில்லை.

“பாரி எப்படியிருக்கான் ஜென்?” வெளியில் வந்தவளிடம் வேகமாக வினவினாள் பூ.

“அவனுக்கென்ன நல்லாதான் இருக்கான்” என்று ஜென் சொல்லிட, நெற்றியில் தட்டிக்கொண்ட பூ, “அவனோட மூட் எப்படியிருக்கு கேட்டேன் ஜென்” என்றாள்.

“கோபமா இல்லை. பட், நான் கோபப்படுத்திட்டேன் நினைக்கிறேன்” என்றாள் ஜென்.

“போச்சு” என்று பூ அலற…

“பேசாம உன் அசிஸ்ட் யாரிடமாவது கொடுத்து பாரியிடம் ரிப்போர்ட் சப்மிட் பண்ண சொல்லு” என்று யோசனை வழங்கினாள் ஜென்.

“அது முடியாது. அப்புறம் நீங்க எதுக்கு இருக்கீங்கன்னு அதுக்கும் காய்வான்” என்ற பூ, இனியும் நேரத்தை தாமதிக்க முடியாதென அப்பாவியாக முகம் சுருக்கி பாரியின் அறைக்குள் செல்ல முயல…

“எப்படியும் பாரி இங்க எந்த அலப்பறையும் செய்ய மாட்டான். தைரியமா போ தமிழ்” என்று திடப்படுத்தி அனுப்பி வைத்த ஜென் தன் பணிக்காண விரைந்தாள்.

பூவிற்கான பயம் பாரி திட்டுவான் என்பதை நினைத்தல்ல… தனக்கு ஒன்றென்றால் இந்த வயதிலும் நிதானம் இழந்து அவன் கொள்ளும் வலியும், தவிப்புமே அவளை கவலைக்கொள்ள வைக்கிறது.

பாரிக்காகவே அவளது பாதுகாப்பில் எப்போதும் மிகுந்த கவனமுடன் இருப்பாள். இன்று அது தவறிவிட்டது.

கட்சி கூட்டம் நடைபெற்ற இடத்தில், திடீரென எதிர்க்கட்சி புகை குண்டினை வீசிட, இரு கட்சி மோதலாக மாற்றம் கொண்டது. அதனை கட்டுப்படுத்தி, குண்டு வீசியவனை துரத்தி பிடிக்க முயன்ற சமயம்… அவனை காப்பற்ற குறுக்க வந்த ஒருவன் பூவின் கையினை கிழித்திருந்தான்.

அரசியல் விவகாரம் என்பதால், பாரியிடம் இதனை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வந்திருக்கிறாள்.

“மே ஐ கமின் சார்?” குரலை வைத்தே வந்திருப்பது பூவென்று அறிந்தவனின் இதயம் எப்போதும் போல இப்போதும் தன் துடிப்பை அவனுள் அதிகரித்தது.

காலங்கள் பல சென்று நரை எட்டிப்பார்த்த பின்னரும் பூவின் மீதான பாரியின் இந்த காதல் மட்டும் என்றும் குறைந்திடாது.

பாரியின் தடுமாற்றம் ஒரு நொடியே! சட்டென்று தன் பதவிக்கு ஏற்றவாறு நிமிர்ந்து அமர்ந்து, கம்பீரமாக “கெட்டின்” என்று சொல்லியிருந்தான்.

பாரியின் இந்த அதிகார குரலில் பூவிற்கு எப்போதுமே தனி பிடித்தம். சிலாகித்து உள் நுழைந்த நொடியே பூவின் கையினை கவனித்துவிட்ட பாரி இருக்கையிலிருந்து பதறி எழுந்திருந்தான்.

அக்கணம் மற்றொரு காவல்துறை அதிகாரி கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைய சடுதியில் தன்னை மீட்டவனாக அமர்ந்திருந்தான்.

அப்போதும் பாரியின் கண்கள் தன் அலைப்புறுதலை காட்டிக்கொண்டிருக்க… பூ உள்ளுக்குள் கவலை கொண்டவளாக வந்த வேலையை பார்த்தாள்.

மற்றொரு அதிகாரியும் அங்கிருக்க பூ தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.

“என்ன அழகப்பன்?”

“சார் அமைச்சர் பிஏ, அமைச்சர் உங்களை பார்க்கணுமுன்னு அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறார்” என்றார்.

“எந்த அமைச்சர் அழகப்பன்?”

“அதான் சார்… இப்போ பரபரப்பா போயிட்டு இருக்கே ஒரு கொலை வழக்கு. அதில் இந்த அமைச்சரோட பையன் தான் முதல் குற்றவாளி” என்ற அழகப்பனிடம்,

“அவர் தான் இப்போ பதவியில் இல்லையே? அப்புறம் என்ன அமைச்சர்” என்று காட்டமாகக் கேட்ட பாரி, “எதுக்கு பார்க்கனுமாம் விவரம் கேளுங்க. இன்னொரு முறை கால் செய்தால்” என்றவன் அவர் வெளியில் செல்வதற்காக காத்திருந்தவனாக பூவிற்கு அழைத்துவிட்டான்.

முதல் ரிங்கிலே அழைப்பினை ஏற்றவள், பாரிக்கு முன் முந்தியவளாக…

“சின்ன காயம் தான் வேந்தா.எனக்கு வலிக்கவே இல்லை. ஒரு கேஸ் விஷயமா சிட்டிக்கு வெளிய போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு வந்து பேசிப்போம்” என்று பாரியை பேசவே விடாது, அவன் “ஹேய்… பூ… பூ…” என்று அழைப்பதையும் காதில் வாங்காதவளாக வைத்துவிட்டாள்.

அவன் திட்டினால் கூட வாங்கிக்கொள்ளலாம். கலங்கி அவன் பேசுவதை கேட்க முடியாது என்பதாலேயே ஏதேதோ சொல்லி வைத்திருந்தாள்.

உடனடியாக பரிதிக்கு அழைத்துவிட்டான். பரிதியின் அலைப்பேசியை அவி ஏற்றிருந்தான்.

“பரிதிண்ணா…” பாரியின் இந்த கலங்கிய குரல் அவனது குடும்பத்தார் அனைவருக்கும் பரிச்சயமாயிற்றே!

“தமிழுக்கு என்னடா?” என்று நொடியில் யூகித்தவனாக அவி வினவினான்.

“கையில் கட்டு போட்டிருக்காள் அவி. என்கிட்ட எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டாள். எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு. பரிதிண்ணாவை என்னன்னு பார்க்க சொல்லலாம் நினைத்தேன். அவர் தானே ஓவர் செல்லம் கொடுக்கிறார்” என்று உர்ரென்று பேசியவன், “நீயென்ன அண்ணா போன் வச்சியிருக்க?” என்று கேட்டான்.

“ஸ்கூல்ல பிடிஏ பாரி. மறந்துட்டியா? இளா அண்ணி சின்னு கிளாஸ் போயிருக்காங்க. பரிதிண்ணா ஆரிஷ் கிளாஸ் போயிருக்காங்க. நான் இப்போதான் ஷைனிக்கு முடிச்சிட்டு வந்தேன். அண்ணா போன் என்கிட்ட கொடுத்துட்டு போனார்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“ம்” என்ற பாரி “லீ வரலையா?” எனக் கேட்டான்.

“தீபன் வந்திருக்கார் பாரி. ரெண்டும் அவரை ஓடவிடுதுங்க. பயந்துட்டே உள்ள போயிருக்கார்” என்று அவி சிரித்தபடி சொல்லிட, “பரிதிண்ணா வந்ததும் பூ’விடம் என்னன்னு கேட்டுட்டு எனக்கு கால் பண்ண சொல்லு அவி. நான் அட்டெண்ட் பண்ணலன்னா மெசேஜ் அனுப்ப சொல்லு” என்றவன் வைத்துவிட்டான்.

சின்னு யாருன்னு நமக்கு நன்றாகவே தெரியும். இளா, பரிதியின் மகள். சின்னுவின் பெயர் ஆர்னா. பத்தாம் வகுப்பு படிக்கின்றாள். ஆரிஷ் வேந்தன், பூ மற்றும் வேந்தனின் பத்து வயது மகன். ஆர்னா, ஆரிஷ் இடையே ஐந்தரை ஆண்டுகள் வயது வித்தியாசம். ஷைனி, அவி மற்றும் ஜென்னின் மகள். வயது ஆறு. லீ மற்றும் தீபனுக்கு இரட்டையர்கள். மிதுன் மித்ரா. வயது எட்டு.

நண்பர்கள் அனைவருக்கும் இருப்பிடம் மட்டுமே வேறு வேறு. மனதால் அதே நட்புடன் இணைந்தே இருக்கின்றனர்.

பூவுக்கு என்ன ஆனதென்று தெரியாது எதிலும் கவனம் செலுத்த முடியாவிட்டாலும், கடமை அழைத்திட தன் பணிக்கு விரைந்த பாரியின் மனமும் சிந்தையும் அவனது பூவைச் சுற்றியே.

பாரியின் உலகம் பூவின்றி சுழன்றிடாதே!

ஆளுநர் முன்பு பாரி அமர்ந்திருந்தான்.

தற்போது நகரத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் குற்றவாளியாக இருந்திட… அவனை மீட்க அமைச்சர் பல வழியில் முயன்றும், பாரி தன் காவல்துறை பணியாளர்கள் மூலம் உண்மையை கண்டறிந்து அமைச்சரின் மகனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் சேர்த்திருக்க.. அவனுக்கு தண்டனை உறுதி எனும் நிலை.

பாரியை பணிய வைத்திட அமைச்சர் என்னென்னவோ செய்தும் பாரியிடம் ஒரு வார்த்தைகூட அவரால் பேசிட முடியவில்லை.

இறுதியாக ஆளுநர் மூலமாக பாரியை காண ஏற்பாடு செய்துவிட்டார்.

ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்த பாரி… அங்கு ஆளுநருடன் அமர்ந்திருந்த அமைச்சர் வேலுநாதனை கண்டதும்… தான் வரவழைக்கப்பட்டதற்கான காரணத்தை சரியாக யூகித்தவனாக, ஆளுநர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

“ஹியரிங் எப்போ பாரி?” ஆளுநர் கேட்டிட,

அவர் எதை கேட்கிறார் என்பது தெரிந்தும்…

“எந்த கேஸ் சார்?” என்று வினவினான்.

பாரியைப்பற்றி நன்கு அறிந்திருந்த ஆளுநர், அமைச்சரிடம் குற்றத்திற்கு துணையாக என்னால் பேசிட முடியாதென்று மறுக்கவே செய்தார். நாதன் பதவியில் இல்லாத போதும், தன்னுடைய செல்வாக்கை டெல்லி வரை பயன்படுத்தி ஆளுநரின் மூலம் பாரியை வரவழைத்துவிட்டார்.

“சாரி பாரி. இதில் எனக்கு விருப்பமில்லை. மேலிடத்து வார்த்தையை மீற முடியாமலே உங்களை வரவழைத்துவிட்டேன்” என்றவருக்கு பதவியிலே இல்லாதவனுக்கு தான் பணிந்து விட்டோமே என்ற தன்னிறக்கத்தில் அங்கிருக்க பிடிக்காது பாரியிடம் மட்டும் சொல்லிக்கொண்டு வெளியேறிவிட்டார்.

ஆளுநர் சென்றதும் கால் மேல் காலிட்ட பாரி…

“என்ன பேசணும்?” என்று நாதனிடம் நேரடியாகவே கேட்டிருந்தான்.

“தெரிஞ்சிகிட்டே கேட்குற நீ!”

“நீங்களும் நான் என்ன சொல்லுவன்னு தெரிந்தே திரும்பத்திரும்ப கேட்குறீங்க!” என்றான். சற்றும் அசராத பதில்.

“அவன் என் ஒரே மகன். அவனை ஜெயிலுக்கு என்னால அனுப்பிட முடியாது. என்னுடைய மொத்த அரசியல் வாழ்வே ஸ்தம்பித்துடும்” என்றார்.

“பதவியில் இருக்க யாரும் கேட்டாலே முடியாதுன்னு தான் சொல்வேன். இப்போ…” தோள் உயர்த்தி இறக்கிய பாரி… “எனக்கு நிறைய வேலை இருக்கு. உங்க வேலைன்னு தெரிந்திருந்தா, நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்” என்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.

அவ்வறையிலிருந்து வெளியேறிட அடி வைத்தான்.

“இதுலாம் ஒரு கேஸ்… சுப்ரீம் கோர்ட்டில் ரெண்டே நாளில் முடிஞ்சிடும். என் பையனை வெளியில் கொண்டுவரேன் பார்க்கிறியா?” என்று ஆவேசமாகக் கத்தினார்.

தன் நடையை நிறுத்தி நிதனமாக திரும்பி அவரை ஏறிட்ட பாரி, தலைசாய்த்து அணிந்திருந்த கூலர்ஸை சற்று கீழிறக்கி…

“ஆஹான்… எங்க வேணாலும் போங்க. ஆனால் நாளைக்கு உங்க மகன் ஜெயிலுக்கு போறான்” என்று சொல்லிவிட்டு தன் நீண்ட எட்டுக்களால் அங்கிருந்து சென்றிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
39
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்