Loading

தழல் – 6

 

காவலாளியை அனுப்பிவிட்டு மீண்டும் ஆராவின் அறைக்கு திரும்பி வந்த வேந்தன் கண்டது, மேசையின் மீது மயங்கி கிடந்தவளை தான். சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது அவனை. வேகமாய் அவளை நெருங்கியவன், முதல் வேலையாய் அவளின் நாடி துடிப்பையும் உடல் வெப்பத்தையும் சரிப் பார்த்தான். இன்னுமே அவளின் இதயத்துடிப்பு சமன்பட்டிருக்கவில்லை. வழக்கத்தை விட அதிக எண்ணிக்கை காட்டியது நாடி. அவளுக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றதும் தான் அவனின் முகம் மீண்டும் இயல்புக்கு திரும்பியது.

 

யோசனையாய் புருவம் நெரிபட அவளைப் பார்த்திருந்தவன் விழிகளில், அவளின் நெற்றியில் முத்து முத்தாய் கோர்த்து நின்ற வியர்வை துளிகள் தான் விழுந்தது. அனிச்சை செயலாய் அதை துடைக்க உயர்ந்துவிட்ட கரத்தினை வேகமாய் பின்னிழுத்துக் கொண்டான் அவன். ஒரு நொடி நின்று துடித்தது அவனின் இதயம். ஆழ மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

 

அதிக பதற்றத்தினால் பயத்தினால் உண்டான மயக்கம் என்று யாரும் சொல்லாமலேயே அவனுக்கு புரிந்தது. ஆனால், மயக்கம் உண்டாகும் அளவிற்கான பதற்றம், பயம் ஏனென்று தான் புரியவில்லை. அவன் அறிந்த வரையில் ஆரா இப்படியில்லையே! எங்கோ, ஏதோ ஒன்று உள்ளுக்குள் இடறியது.

 

அந்த அறையெங்கும் கண்களை அலை பாயவிட்டு மீண்டும் மேசையில் நிலைக்கவிட, அங்கே பிரிக்கபட்டு கிடந்த பளபள பரிசு தாளும் ஒழுங்கற்று கிடந்த கைக்கடிகாரமும் தப்பாமல் அவன் விழிகளில் விழுந்தது. தன்னால் அவன் கரங்கள் அந்த கைக்கடிகாரத்தை கையகப்படுத்திக் கொண்டது. அதனை பார்த்த மாத்திரத்தில், தரத்தையும் விலையையும் அவனால் மதிப்பிட முடிந்தது.

 

எதிரே கிடந்த நாற்காலியை அவளுக்கு மிக அருகில் இழுத்துப் போட்டு அதில் அமர்ந்தவன், நிதானமாய் அவளே தெளிந்து கண் விழிக்கும் நொடிக்காக காத்திருக்க தொடங்கியிருந்தான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் சுயம் திரும்பி, இமை பிரிக்க விழிக்குள் விழுந்தது, கரத்தால் கன்னத்தை தாங்கியபடி மிக அருகில் தெரிந்த அவனின் முகம் தான். பதறி பயந்து வேகமாய் விலக முயன்று, தடுமாறி, நாற்காலியோடு சேர்ந்து கவிழப் போனாள் அவள். நொடிக்குள் சுதாரித்து ஒற்றை கரத்தால் நாற்காலியின் ஒரு கைப்பிடியை அழுந்த பற்றி அதனை அவன் நிலைநிறுத்தி இருக்க, கீழே விழாமல் தப்பித்தாள் அவள். மேசையை அழுத்தமாய் பிடித்தபடி தன்னை நிலைப்படுத்த முயன்றவள், முடிந்த மட்டும் அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் ஒருகால், அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் காலோடு உரசிக் கொண்டு பாதி உள்ளே நிற்க, அவன் நகர்ந்தால் அன்றி இவளால் நகர முடியாத நிலை. வேண்டுமென்றே அவள் எழுந்து சென்றுவிட கூடாது என்பதால் அப்படி போட்டிருப்பான் போல.

 

“நீங்க இங்க என்ன பண்ணறீங்க..? தள்ளுங்க முதல…” குரலை உயர்த்தவில்லை என்றாலும் எரிச்சல் கொட்டிக் கிடந்தது அதில்.

 

வார்த்தைகளின்றி மேசை மீதிருந்த நீரை அவள் பக்கம் தள்ளி வைத்தவன், பார்வையால் அவளை அளவிட துவங்கியிருந்தான். அந்த பதற்றத்தின் மிச்ச சொச்சம் இன்னும் கொஞ்சம் அவளின் முகத்தில் ஒட்டிக் கிடந்தது.

 

அவனின் அலட்டிக் கொள்ளாத பாவனையில், அவன் மீதான கோபம் நொடிக்கு நொடி சுறுசுறுவென தலைக்கு ஏறியது. அவன் நகர்த்தி வைத்த தண்ணீர் குவளையை அவள் பற்றிய அழுத்ததில் அந்த கோபம் தெரிந்தது. பார்வையை அவனிடம் பதித்தபடியே ஒரே மூச்சாய் நீரை அருந்தியிருந்தாள் அவள். அந்த வேகத்தில் சிந்தி சிதறிய நீர்துளிகளில் படிந்திருந்தது அவனின் பார்வை. குளிர்ந்த நீர், அவளின் உள்ளம் மொத்தத்தையும் ஆசுவாசப் படுத்தியதோடு மட்டுமின்றி கோபத்தையும் தணித்து நிதானத்திற்குக் கொண்டு வந்திருந்தது.

 

“நீங்க இங்க என்ன பண்ணறீங்கனு கேட்டதா நியாபகம்…” இப்போது அலட்டிக் கொள்ளாத பாவனை அவனிடமிருந்து அவளுக்கு தாவியிருந்தது.

 

“நீங்க கேக்கற எல்லா கேள்விக்குப் நான் பதில் சொல்லறேனு சொன்னதா எனக்கு நியாபகம் இல்லையே…” என்றவனின் குரலில் கேலியும் குறும்பும் கூத்தாடியது.

 

ஒருசில நொடிகள் அவனின் முகத்தை கூர்ந்துக் கவனித்தவள், தோளைக் குலுக்கிக் கொண்டாள். “எனக்கு வேலையிருக்கு…” என்றாள் யாருக்கோ அறிவிக்கும் தொனியில்.

 

“அப்போ நான் வேலைவெட்டி இல்லாமா உங்களை வேடிக்கை பாத்துட்டு இருக்கேனு சொல்லறீங்க… அப்படிதானே…” என்றான், மீண்டும் கன்னத்தை கை தாங்கியபடி அவளை மட்டுமே கண்களுக்குள் நிறைத்துக் கொண்டே.

 

அவன் கேள்விக்கு நேரடியாய் இல்லையென்றும் அவள் சொல்லி விடவில்லை. அதே நேரம், ‘ஆமானம், வெட்டியாக தான் இருக்கிறாய்…’ என்றும் சொல்லி விடவில்லை.

 

“நீங்க கிளம்புனா தான் என்னால என் வேலைய பாக்க முடியும்..?” என்றாள் அவன் அமர்ந்திருந்த நிலையை கண்களால் குறிப்புக் காட்டி.

 

“இந்த தீடிர் மயக்கத்துக்கு என்ன காரணம் மேடம்…” மற்றதெல்லாம் ஒதுக்கி வைத்து, தனக்கு மிக தேவையான கேள்வியை மட்டும் அவளிடம் வினவினான்.

 

“அவசியம் உங்ககிட்ட சொல்லீயே ஆகணுமா என்ன..?”

 

“இல்லை தான்… ஆனா, அவசியம் எனக்கு கேட்டே ஆகணும்னு இருக்கே..!” என்றவன் பார்வை அணு அணுவாய் அவளின் ஒவ்வொரு அசைவையும் முக மாறுதல்களையும் அளவெடுத்துக் கொண்டிருந்தது. அவளின் முகம் கொஞ்சமே கொஞ்சம் எரிச்சலை காண்பித்தது.

 

“மிஸ்டர். வேந்தன்… ஏந்திரிச்சு போறீங்களா..? எனக்கு வேலை இருக்கு…” என்றாள் அவனின் பெயரை அழுத்தி உச்சரித்து, பார்வையால் வாசலை தொட்டு. அதுவே அவளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்று கட்டியம் கூறியது.

 

“எதுக்கு இவ்வளவு டென்ஷன் மிஸ். ஆரா.” அவளைப் போலவே அவனும் அவள் பெயருக்கு அழுத்தம் கொடுத்து உச்சரித்தான். இப்போது வெளிப்படையாய் அவளின் முகத்தில் எரிச்சல் அப்பிக் கிடந்தது.

 

“யுவா கார்ல விழ போகும் போது கூட டென்ஷன்ல உங்களுக்கு மயக்கம் வரலையே… ஆனா இந்த கிப்ட் பார்த்து வருதுனா… இது அதவிட ஆபத்தான விசயமோ..?” அவன் ஒற்றை விரலால் நாடியை தட்டியபடியே யோசனையாய் வினவ, ஒரே ஒரு நொடி அவளின் பார்வை அவன் கரத்திலிருந்த அந்த கைக்கடிகாரத்தில் பதிந்து சட்டென்று திரும்பிக் கொண்டது. அந்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் முகத்தில் வந்துப் போன பய உணர்வை துல்லியமாய் படம் பிடித்துக் கொண்டது அவனின்  கண்கள்.

 

“நான் ஒன்னும் உங்க கஸ்டடியில இருக்க ஆக்யூஸ்ட் கிடையாது துருவி துருவி கேள்வி கேட்க… உங்ங போலீஸ் வேலைய உங்க ஸ்டேஷனோட நிறுத்திக்கோங்க… இப்ப கிளம்புங்க…” குரல் உயரவில்லை என்றாலும் அவளின் கோபத்தை அவனால் உணர முடிந்தது. அதில் துளிர்த்து நின்ற ஒரு துளி பதற்றத்தையும் அவனால் உணர முடிந்தது.

 

‘மயங்கி கிடந்தவளை எழுப்ப துப்பில்லை… வந்துட்டாரு கன்னத்துக்கு முட்டு குடுத்துட்டு கேள்வி மேல கேள்வி கேட்க… என்ன பார்த்த எப்படி இருக்கான் இவருக்கு… போனா போகுது… ஏற்கனவே உடம்பு சரியில்லையேனு பாக்கறேன்… இல்லைனா…?’ சத்தமே இல்லாது இதழ்களை மட்டும் கொஞ்சமாய் அசைத்து முணுமுணுத்தாள் அவள்.

 

“இல்லைனா என்ன பண்ணி இருப்பீங்க மேடம்..?” துல்லியமாய் அவளின் வார்த்தைகளை கணித்திருந்தான் அவன்.

 

‘பச்… மூக்குலையே வார்த்தைய மோப்பம் பிடிப்பாரு போல…” மனதிற்குள் நினைத்தாளே தவிர தவறிக்கூட சின்னதாகவும் வாயசைக்கவில்லை.

 

“இங்க பாருங்க…” அவன் முகத்துக்கு நேரே விரல் நீட்டி அவள் ஆரம்பிக்க, “பாத்துட்டு தான் இருக்கேன்… சொல்லுங்க…” என்றான் இன்னும் அவளை ஆழ ஊடுருவி நோக்கியபடியே.

 

“என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு தெரியுதா உங்களுக்கு… தள்ளுங்க முதல…”

 

“ஏன்… என்ன பண்ணிட்டேன் நான்… ஜெஸ்ட் உக்காந்து இருக்கேன்… அவ்வளவு தானே… உக்காரது கூடாவ உங்க அகாராதியில குத்தம்…”

 

“உக்காரது குத்தமில்ல… ஆனா இப்படி உக்காரது மகாகுத்தம்…”  என்றாள் அவன் அமர்ந்திருந்த நிலை காட்டி.

 

“ஆராம்மா…” அவளை சத்தமிட்டு அழைத்தபடியே உள்ளே வந்துக் கொண்டிருந்த அனுராதாவின்  குரலில் மெல்லிய பதற்றம்.

 

அரசு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் அவர். பணி முடிந்த நேரம் தான் இங்கே வருவார். மற்றபடி அறக்கட்டளையின் மொத்த பொறுப்பும் ஆராவினுடையது. காலையில் இங்கே நடந்தது, காவலாளியை ஆரா வேலையை விட்டு அனுப்பியது என எல்லாம் அவரின் காதை அடைந்திருந்தது. விடுப்பு எடுத்துக் கொண்டு அவசரமாய் வந்தவர், இருவரும் இப்படி அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்து, வாசலிலேயே தேங்கி நின்றுவிட்டார்.

 

“வேந்தா… இங்க என்ன பண்ணற நீ… காலையில கூட போக மாட்டேனு சொல்லிட்டு இருந்த…” என்றவரின் குரலில் சிறு ஆச்சரியமும் கண்டிப்பும்.

 

வேந்தன், அவரின் தமக்கை வள்ளியம்மையின் ஒரே மைந்தன். வள்ளியம்மையை விட அனுராதாவிற்கு தான் இவன் அதிக செல்லம். அனுராதா – முத்துக்கிருஷ்ணன் தம்பதிக்கு ஒரே ஒரு பிள்ளை தான். பிள்ளைக்கு ஒரு வயதிருக்கும் போதே மதியிறுக்கத்தால் பாதிக்கப்படிப்பதை கண்டுக் கொண்டார் அனு. அதன் பின்னே அவரின் உலகமே அந்த பிள்ளை தான் என்றாகிப் போனது அவருக்கு. எங்கே அவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்திலேயே அடுத்த குழந்தைப் பேற்றைகூட தள்ளிப் போட்டிருந்தார் அவர். ஆனால், அந்த பிள்ளை அவருக்கு நிலைத்தது என்னவோ வெறும் நான்கு வருடங்கள் தான். நோயின் தீவிரத்தால் இறந்துப் போயிருந்தான் பிள்ளை. அந்த இழப்பின் வலி தான் இப்படியொரு அரக்கட்டளையை நிறுவி அவரை சேவையும் ஆராய்ச்சியும் செய்ய வைத்திருந்தது.

 

அந்த இழப்பிலிருந்து முழுக்க முழுக்க அவரை வெளியே கொண்டு வந்தவன் வேந்தன் தான். மகனை முழுவதுமாய் தங்கைக்கே தாரைவார்த்துக் கொடுத்திருந்தார் வள்ளியம்மை. அதன் பின்னான வேந்தனின் பள்ளிக் காலம் முழுமையும் இங்கே தான் கழிந்தது. பள்ளி படிப்பு முடிந்து சென்றவன், இதோ பதினைந்து ஆண்டுகள் கடந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் காவல் உதவி ஆணையராக (ACP – Assistant Commissioner of Police) தான் இங்கே திரும்பி வந்திருக்கிறான். அதுவும் கட்டாய ஓய்வின் பெயரில். கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க சென்று மார்பில் குண்டடி பட்டதால், இரண்டு மாத கட்டாய ஓய்வு வழங்கப்பட்டிருந்தது அவனுக்கு. அனுராதாவிற்கு மகனென்றால் கொள்ளை பிரியம். வேப்தான் என்று வந்துவிட்டால் மட்டும் அவரின் மூளை மற்ற எதையும் சிந்திக்காது. பின்னே, காலம் தாழ்ந்து தாவமிருந்த பெற்ற பனிரெண்டு வயது மகள் கூட அவனென்று வரும்போது பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பாளே!

 

முதல் ஒரு வாரத்தை அன்னை தந்தையுடன் நெட்டி தள்ளியவன், முடியாமல் தான் இங்கே வந்திருந்தான். இதோ இங்கே வந்தும் நான்கு நாட்கள் ஓடிவிட்டது. இருந்து இருந்து பார்த்தவன், வீட்டிலேயே அடைந்துக் கிடக்க முடியாமல் தான், பிடிக்காமல் இங்கே கிளம்பி வந்திருந்தான். வருகிறேன் என அனுவிற்கும் சொல்லியிருக்கவில்லை.

 

“நான் பண்ணறது இருக்கட்டும்… முதல உங்க சிஷ்ய புள்ளைய என்னனு கேளுங்க… காலையில இருந்து மயங்கி மயங்கி விழங்கறாங்க… எனக்கு தெரிஞ்சு அநேகமா மசக்கையா தான் இருக்கணும்… எதுக்கும் நீங்களும் ஒருதடவ செக் பண்ணி பாத்துட்டு… நல்ல சத்து டானிக்கா எழுதி குடுங்க…” கதையளந்துக் கொண்டே போனவனை, “வேந்தா…” என்ற அனுவின் அதட்டல் குரலும், “மிஸ்டர்.வேந்தன் வில் யூ ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…” என்ற ஆராவின் இரைச்சலும் கப்பென்று வாயை மூட வைத்தது.

 

அவன் அமர்ந்திருந்த நாற்காலியை தன் பலம் மொத்ததையும் திரட்டி, இவள் தூர தள்ள,  தடுமாறி சரிந்த நாற்காலியை அனுராதா வேகமாய் வந்து விழாமல் பிடித்துக் கொண்டார்.

 

“தள்ளுங்க முதல… போனா போகுது அடிப்பட்டு இருக்கேனு பாத்தா..  உங்க இஷ்டத்துக்கு அளந்து விட்டுட்டு இருக்கீங்களே… என்னங்கறேன்… இல்ல… தெரியாம தான் கேட்கறேன்… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல… எல்லாரையும் மாதிரி என்னையும் ட்ரீட் பண்ணா நல்லா இருக்காது சொல்லிட்டேன்… இப்ப மாதிரி எப்பவும் பொறுமையா இருக்க மாட்டேன்… சொல்லி வைங்க மேடம் உங்க அக்கா பையன்கிட்ட… உங்க முகத்துக்காக பாக்கறேன்… இல்ல… அவ்வளவு தான்…” அவனிடம் தொடங்கி அவரிடம் பொறிந்துக் கொட்டிவிட்டு விறுட்டென வெளியேறி இருந்தாள் அவள். சொல்லும் அவளிடமே ஆர்வமாய் படிந்திருந்தது இவன் பார்வை.

 

“ஏன்டா… ஏன்..?” என்றார் பாவமாய் அவனைப் பார்த்தபடி அனு.

 

“என்னம்மோ உங்க சிஷ்ய பிள்ளை பொறுமையில பூமாதேவி… வீரத்துல பூலாந்தேவினு டெய்லி கதை கதையா அளந்து விட்டுங்க… இவங்க என்னனா சதாரண விசயத்துக்கே தையதக்க தையதக்கனு இந்த குதி குதிக்கறாங்க…” என்றான் அவரிடம் கண்களை சுருக்கி கேலியாய்.

 

“பொறுமைனு சொன்னேன்… அதுக்குனு உன்ன அந்த பொறுமைய சோதிச்சு பாருனு சொன்னேனா..? ஏன்டா என்ன போட்டு இந்த பாடு படுத்தற… இன்னும் ரெண்டு நாளைக்காவது உன்னோடு சேத்து என்னையும் மூக்குல காத்தடிச்சுட்டே முறைச்சுட்டு போ… தேவையா இது எனக்கு…” என அலுத்துக் கொண்டார் அவர்.

 

முணுமுணுவென வேந்தனை தாளித்துக் கொட்டியபடியே நடந்து வந்தவளிடம், கைப்பேசியை மட்டும் நீட்டினாள் நித்யா.

 

“உனக்கென்ன இப்ப..?” வள்ளென்று எரிந்து விழுந்தவளை, மிரண்டுப் போய் தான் பார்த்தாள் அவள்.

 

“ஆத்தாடி ஆத்தா… உன்கிட்ட எனக்கென்ன வேண்டி கிடக்கு… உன்ன பெத்த ஆத்தா தான் லைன்ல… அவங்களுக்கு தான் ஏதோ பேசணுமான்… பேசுனா பேசு… பேசாட்டி போ… எனக்கென்ன வந்தது…” என்றாள் இன்னும் கைப்பேசியை நீட்டியபடியே.

 

“சாரி…” மெல்லமாய் முனங்கியவள், கைப்பேசியை வாங்கிக் கொள்ள, “திட்டுணும்னா மட்டும் வாய் கிழியும்… சாரி மட்டும் தொண்டகுழியை தாண்டாதே…” என்றாள் குணட்டியபடியே.

 

ஒற்றை விரலை உதட்டுக்கு இடையே பொறுத்தி, “ஸ்ஸ்ஸ்…” என தோழியிடம் சைகை காட்டியவள், “ஹலோ…” என்றாள் கைப்பேசியில்.

 

“ஆரும்மா… அம்மா பேசறேன்ம்மா…” என்றார் அந்த பக்கம் பர்வதம்.

 

“ம்ம்ம் சொல்லுங்கம்மா…”

 

“உனக்கு கூப்பிட்டு கூப்பிட்டு பாத்தேன் எடுக்கலையேனு தான்…” என்றார் தயக்கத்துடன் அவர். இதுவரை அவர் நித்யாவிற்கு அழைத்ததும் இல்லை. அவர் அழைத்து இவள் எடுக்காமல் இருந்ததும் இல்லை.

 

“வேலையா இருந்தேன்… அதான் கவனிக்கல… பரவாயில்ல… சொல்லுங்கம்மா…”

 

“நாலு மணிக்கு அவங்க எல்லாம் வரேனு சொல்லி இருக்காங்க ஆரும்மா… நீ ஒரு மூணு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டா சரியா இருக்கும்..?”

 

“யாரும்மா..?” என்றவளுக்கு சட்டென்று யாரென பிடிபடவில்லை.

 

“என்னம்மா இப்படி கேக்கற… நேத்து நைட் சொல்லி இருந்தேனே… உன்ன பொண்ணு பாக்க வராங்கனு… நீ கூட வர சொன்னீயேம்மா…” என்றார் அவர் வருத்தம் தோய்ந்த குரலில்.

 

“சாரிம்மா… மறந்துட்டேன்… மூணு மணிக்கு முடியாது… ஆனா சீக்கரமே வரப் பாக்கறேன்…” என்றவளுக்கு தலை வலிப்பதை போல் இருந்தது. வேந்தன் படுத்தியபாட்டில், வெற்றி என்ற ஒருவனையே சுத்தமாய் மறந்திருந்தாள் அவள்.

 

“சரிம்மா… வரும் போது கொஞ்சமா ஸ்வீட் வாங்கிட்டு வந்துடு…”

 

“சரிம்மா…”

 

“அப்பறம்…” என்றவர் தயங்கி நிறுத்த,

 

“என்னனு சொல்லுங்கம்மா…”

 

“கனியையும் மாப்பிள்ளையும் வர சொல்லி இருக்கேன் ஆரும்மா… நம்ம பக்கம் யாராவது இருக்கணும் இல்ல… உனக்கு பிடிக்கலைனா வர வேண்டானு சொல்லிடவா…” என்றார், அப்படி சொல்லி விடாதேயேன் என்ற கெஞ்சல் குரலில்.

 

“ஏன்ம்மா… வர சொல்லிட்டு வேண்டானு சொன்னா… கனி வீட்டுல என்ன நினைப்பாங்க…” என்றாள் ஆதங்கமாய் இவள்.

 

“இல்ல ஆரும்மா… கனிகிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன்… உன்கிட்ட கேட்டுட்டு…”

 

“அதான் நீங்களே வர சொல்லிட்டீங்களே… அப்பறம் நான் சொல்ல என்ன இருக்கு… வச்சுடறேன்ம்மா… எனக்கு வேலையிருக்கு…” என்றவள் வைத்தும் விட, அந்த குரலைக் கொண்டு அவளுக்கு அதில் விருப்பமா இல்லையா என்பதை அவரால் கண்டுக்கொள்ள முடியவில்லை.

 

“இந்த நாள் இதவிட மோசமா போக வாய்ப்பே இல்லையில்ல…” அருகில் கேட்ட தோழியின் கேலி குரலில், யோசனையில் நின்றிருந்தவள் முகம் பூவாய் மலர்ந்தது.

 

“எனக்கு என்னமோ இன்னும் டெவலப் ஆகுமோனு தோணுது…” என்றாள் ஆராவும் அதே கேலி இழைந்தோடும் குரலில்.

 

“அப்ப… சேச்சிக்கு ஒரு கட்டன் சாயா…” என அவள் அபிநயம் பிடித்து சொல்ல, “டெபனட்லி…” என்றவள், அவளின் கைப் பற்றி இழுத்துக் கொண்டு, அங்கேயே இயங்கிக் கொண்டிருக்கும் உணவுக்கூடம் நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.

 

 – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்