Loading

தழல் – 4

தினமும் சென்று வரும் வழித்தடம் என்பதால் இலகுவாய் அவளின் கரங்கள் அந்த பாதையில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க, சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருத்தான் வெற்றி.

நிராகரிக்க பட்டதற்கான வலி அந்த கண்களில் துளியும் இல்லை. ஏன் என்ற கேள்வியும் அறிந்துக் கொள்ளும் சிறு ஆர்வமும் மட்டும் தான். அதையும் மீறி தீர்மானமாய் ஒளிர்ந்த அந்த கண்கள் அவளுக்கு சொன்னதென்ன? உன்னை அத்தனை இலகுவாய் விட்டுவிட போவதில்லை என்றா? அந்த கண்களைப் பார்த்தபின், நிச்சயம் அவள் சொன்னதை கேட்டு விலகிக் கொள்ளும் ரகம் அவனில்லை என்று தான் உறுதியாய்  தோன்றியது அவளுக்கு. அப்படி விலகவில்லை என்றால், அடுத்து எப்படி இதை கையாளுவது என்ற தீவிர சிந்தனை மட்டும் தான் இப்போது அவளுக்கு. நூற்றில் ஒரு பங்காய் கூட அவனை திருமணம் செய்துக் கொண்டால் தான் என்ன என்ற கோணத்தில் அவள் மனம் சிந்திக்கவே இல்லை. சிந்திக்க போவதும் இல்லை.

அவளின் வாகனம் பிரதான சாலையிலிருந்து விலகி குறுகலான சாலை ஒன்றுக்குள் நுழைந்தது. அதன் வழியே நுழைந்த மறுநொடி அவளின் மனநிலை முற்றிலும் மாறிப் போயிருந்தது.

இருபுறமும் சரக்கொன்றை மரங்களும் மயில்கொன்றை மரங்களும் அடர்ந்து படர்ந்து பாதையில் நிழலை பரப்பிக் கொண்டிருந்தது. சிவப்பு வண்ண மலர்களும் மஞ்சள் மலர்களும் இணைந்து அழகானதொரு மலர் படுக்கையை விரித்திருந்தது. இளம் வெயிலைக் கூட உணர முடியாத வகையில் நிழலும் குளுமையும் இயற்கையும் அங்கே ஆட்சி செய்தது.

விழிகளில் விரியும் ரசனையுடன் ஒவ்வொரு நொடியையும் உள்வாங்கி அனுபவித்தபடி பொறுமையாய் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

நீண்ட நெடிய அந்த சாலையில், கண்ணுக்கு எட்டிய தொலைவில் புள்ளியாய் ஒரு மகிழுந்து. நொடிக்கு நொடி விஸ்வரூபம் எடுக்கும் அதன் அளவைக் கொண்டே, வேகத்தை கணிக்க முடிந்தது அவளால். சுறுசுறுவென அதன் ஓட்டுனரின் மீது எழுந்த கோபத்தையும் தாண்டி வேகமாய் அந்த நுழைவுக் கேட்டில் பார்வை பதிந்தது அவளுக்கு.

“ஆரும்மா…” ஆர்பாட்டமாய் கத்தி அழைத்தபடியே கேட்டை தாண்டி வெளியே ஓடி வந்துக் கொண்டிருந்தான் ஒரு பதின்ம வயது பாலகன். ஒருநொடி உள்ளம் நடுநடுங்கிப் போனது அவளுக்கு. அந்த நடுக்கம் அவளின் கரங்களிலும் பரவி, வண்டியிலும் ஒரு தள்ளாட்டத்தை கொண்டு வந்திருந்தது.

“யுவா தள்ளிப்போ… பின்னால கார் வருது பாரு…” அவளை மீறிய உச்ச ஸ்ரூதியில் கத்திக் கொண்டிருந்தாள் ஆரா. இவள் குரல் கேட்டதும் தான் நின்று எதிர்புறம் திரும்பிப் பார்க்கிறான் அவன்.

காற்றை கிழித்துக் கொண்டு அதி விரைவாய் அவனை நெருங்கிவிட்ட அந்த மகிழுந்தைக் கண்டு சம்பித்து போனது அவன் மூளை. அப்படியே உறைந்துப் போனவனின் கை கால்களெல்லாம் மெல்ல உதற துவங்கி இருந்தது. மெல்ல ஆட்டம் கண்ட கைகளிரண்டையும் ஒன்றோடு ஒன்று இறுக்கி பிடித்தபடி, விழி விரித்து தன்னை நோக்கி வரும் வாகனத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“யுவா உன்னதான் சொல்லறேன்… தள்ளி வா முதல… கார் வருது பாரு…” முன்பைவிட அதிகமாய் பதற்றம் கூடியிருந்தது அவளின் குரலில்.

சில அடி தூரத்தில் அவனை அந்த மகிழுந்து நெருங்கி விட்ட பின்பும் கூட, அவன் திகைத்துப் போய் அப்படியே தான் நின்றிருந்தான். ஒரு வலிய கரம் ஒன்று அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும், அந்த வண்டிக்காரன் ஒடித்து வளைத்து திருப்பிக் கொண்டே இவர்களை கெட்ட வார்த்தைகள் அர்ச்சித்தபடி நகரவும் சரியாக இருந்தது.

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்தவள் வேகமாய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அதைவிட வேகமாய் யுவாவை நெருங்கி இருந்தாள். அந்த புதியவனிடமிருந்து சட்டென்று அவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டவள், “யுவா…” என்றாள் அதட்டலும் கண்டிப்பும் கலந்த குரலில்.

கண்கள் இரண்டும் சிவந்திருக்க, அவனின் உடல் கொண்ட உதறல் இன்னும் நின்றபாடில்லை. அவளைப் பார்த்தவனின் விழிகளில் அவளவுக்கு அதிகமான மிரட்சியும் பயமும். அவன் ஒன்றாய் பிணைத்து பிடித்திருந்த கைகளிலிருந்து துளி துளியாய் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் நகங்களே அவன் கரத்தை காயப்படுத்திக் கொண்டிருந்தது.

“என்ன பண்ணற யுவா நீ..? கையில ரத்தம் வருது பாரு… கை விடு யுவா… சொல்றேன் இல்ல கையை விடுடா…” அவனின் இரு கரங்களையும் பிரித்தெடுக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் அவள். அப்படியும் அவன் கரங்கள் இரண்டையும் விலக்கிக் கொள்வதாய் இல்லை.

வேகமாய் அவளின் கையை தன்னிடமிருந்து விலக்கி தள்ளியவன், மீண்டும் உள்ளே ஓடி இருந்தான். அவனின் பின்னோடு செல்ல அடியெடுத்து வைத்தவளை அந்த புதியவனின் கேள்வி நிறுத்தி இருந்தது.

“நீங்க தான் ஆரல்மொழியா…” கோபத்தின் உச்சியில் இருக்கிறான் என்று கட்டியம் கூறியது அந்த குரல்.

“ம்ம்ம்… நான் தான்…” சொல்லிக் கொண்டே ஆம் என்னும் விதமாய் தலையாட்டியவளிடம் அடுத்த நொடி பொறிய துவங்கி இருந்தான் அவன்.

“இதான் நீங்க வேலைக்கு வர டையமா… பஞ்சுவாலிட்டி… பஞ்சுவாலிட்டுனு ஒன்னு இருக்கு… அதுக்கு என்ன ஸ்பெல்லிங்னாவது உங்களுக்கு தெரியுமா..?” படபடத்துக் கொண்டே போனவனை, “சார்… ப்ளீஸ் சார்… மேடம் மேல தப்பில்லை…” என இடையில் புகுந்து தடுத்து, விளக்க முயன்ற இரண்டு  ஊழியர்களையும் கண்டுக் கொள்ளவே இல்லை அவன்.

“நீங்க போய் யுவாவ பாருங்க…” என்றாள் அவர்கள் புறம் திரும்பி அழுத்தமாய் ஆரா.

அவர்கள் இவளை திரும்பி திரும்பி பார்த்தபடி செல்லவும், அவனின் பக்கம் திரும்பி நின்றவள், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு, “என்னமோ சொன்னீங்க… எனக்கு சரியா கேக்கல… திரும்ப சொல்லுங்களேன்… கேட்போம்…” என்றாள் வெகு சதாரண குரலில்.

“என்ன நக்கலா… என்ன பாத்த எப்படி தெரியுது உங்களுக்கு…” உண்மையில் அவன் சொன்ன பிறகு தான் அவனைப் பார்க்க தோன்றுகிறது அவளுக்கு.

ஆறடிக்கும் கொஞ்சம் அதிக உயரம். தலையில் சின்னதொரு பிளாஸ்திரி. இடதுக்கையிலும் ஒரு பெரிய கட்டு. மாநிறத்திற்கும் சற்றே மங்கிய நிறம். வெயில் அதனை கரீய நிறமாய் மாற்றி இருந்தது. நில்லாது அலைப்பாயும் கண்கள். அதில் வழியும் தீர்க்கம். கோபத்தில் சுருங்கியிருந்த நெற்றி. அதில் விழுந்திருந்த இரு கோடுகள். சுழித்துக் கொண்ட புருவம், துடிக்கும் முறுக்கு மிசை. சற்றே நீண்ட இதழ்கள். அதற்கு கீழே முகவாயின் மத்தியில் சிறியதாய் ஒரு பள்ளம். கோபத்தில் ஏறி இறங்கும் தொண்டைக்குழி, தினமும் உடற்பயிற்சி செய்வதால் வலுவேறியிருந்த உடல். அதனால் தான் யுவாவை ஒற்றைக் கையால் இழுத்து தள்ளி நிறுத்த முடிந்திருக்கிறது என்றும் அவளுக்கு புரிந்தது. இத்தனை நிதானமாய் யாரையும் அவள் விழிகள் அளவெடுத்தில்லை. அவனின் உருவம் அப்படியே வேறொருவரை அவளின் கண்முன் நிறுத்தி இருந்தது.

“நாட் பேட்… பாக்கற மாதிரி தான் இருக்கீங்க…” அவனை அளந்தபடியே அலட்டிக் கொள்ளாமல் சொன்னவளைக் கண்டு சுறுசுறுவென கோபம் உச்சந்தலைக்கு ஏறியது அவனுக்கு.

“ஆர் யூ மேட்… என்ன காமெடி பண்ணறதா நினைப்பா… நான் என்ன கேட்டா… நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க… நான்சென்ஸ்…” கடுப்பில் இரைந்தான் அவன். அலட்சியமாய் தோள்களை குலுக்கிக் கொண்டாள் அவள்.

“என்ன ஆட்டியூட் காட்டறீங்களா..? இதெல்லாம் என்கிட்ட வேண்டாம் சொல்லிட்டேன்… அப்பறம் நான் யாருனு உங்களுக்கு காட்ட வேண்டியது இருக்கும்… எத்தனை மணிக்கு ஆபிஸ் இன்டைம்… இப்போ மணி என்ன..? எத்தன மணிக்கு வேணா வந்துட்டு எத்தன மணிக்கு வேணா போகலாங்க இதென்ன பீச்சா… பார்க்கா… இல்ல உங்க வீடா… நாம செய்யற வேலைக்கு கொஞ்சமாது மதிப்புக் குடுத்து பொறுப்பா நடந்துக்கணும்…  அப்படி இருக்க முடியலைனா அந்த வேலையவே செய்ய கூடாது…” படபடவென்று பொறிந்தவனையே விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அந்த கோபத்திலும் படபடப்பிலும் அவளுக்கு அபிமான மிக நெருக்கமான ஒரு நபரின் சாயல். அதில் சின்னதாய் மிக மெல்லியதாய் ஒரு புன்னகை அரும்பியது அவளின் இதழ்களில்.

“நான் பேசிட்டே இருக்கேன்… நீங்க அமைதியா சிரிச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்..?” என்றான் இன்னும் காட்டமாய். கூர்ந்துக் கவனித்தால் அன்றி அவளின் அந்த புன்னகையை கண்டுக் கொள்ளவே முடியாது. ஆனால், எவ்வித மெனக்கெடல்களும் இன்றி சர்வ சதாரணமாய் அதை கண்டுக் கொண்டான் அவன்.

‘இப்படி தான் உங்க ஊர்ல எல்லாம் பேசிட்டு இருப்பீங்களோ..? ஆனா பாருங்க… எங்க ஊர்ல இதுக்கு பேரு திட்டறது…’ மனதில் கோர்த்து நின்ற வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கவில்லை அவள்.

“உங்களால தான்… உங்கள தேடிதான் அந்த பையன் வெளிய வந்தது… அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் ரெஸ்பான்ஸிப்பிள்… ரொம்ப வருஷமா இங்க வேலைல இருக்கீங்கனு சொல்லறாங்க… இந்தளவுக்கு கூடவா உங்களுக்கு பொறுப்பில்ல…” இன்னும் என்னவோ சொல்லப் போனவனை அவளின் அழுத்தமான குரல் இடையிட்டு நிறுத்தியது.

“மிஸ்டர். வேந்தன்…” என்றவள் அவனை கேள்வியாய் சின்ன புருவ சுழிப்போடு நோக்க, வியப்பில் விரிந்த விழிகளை சட்டென்று மறைத்துக் கொண்டவன், அவளின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவனாய், “முத்தமிழ் வேந்தன்…” என்றான் அவளைவிட இன்னும் அழுத்தமாய். அதில் வெளிப்பட்ட சிறுபிள்ளை தனத்தில் இன்னும் அப்பட்டமாகவே அவளின் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.

“யார் ரெஸ்பான்ஸ்னு கேட்டா… கண்டிப்பா நீங்க தான் மிஸ்டர். முத்தமிழ் வேந்தன்…” என்றாள் அவனை பெயரை மட்டும் இன்னும் அழுத்தி உச்சரித்தது.

“பர்ஸ்ட்… இங்க நான் மட்டும் ஸ்டாப் கிடையாது… இரண்டாது இந்நேரம் டீயூட்டில இருக்க வேண்டிய வாட்மேன கேட்ட திறந்து வச்சுட்டு பொறுப்பில்லாம ஊர் சுத்தனா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது… நீங்க நிக்க வச்சு கேள்வி கேக்கறா இருந்தா அவங்கள தான் கேக்கணுமே தவிர… என்ன இல்ல…” பொறுமையாய் நிதானமாய் விளக்கிய அவளை, மறுமொழி சொல்லி வாயடைத்துவிட நினைத்தாலும், அவளின் நியாயமும் புரியதான் செய்தது.

இப்போது அவளைப் போலவே கேட்டின் மீது சாய்ந்து நின்றவன், “அப்போ நீங்க லேட்டா வந்தது தப்மில்லைனு சொல்லறீங்களா..?” என்றான் அவளை துளைக்கும் பார்வையுடன்.

“இங்க வேலை செய்யற யாரும் லீவோ… பர்மிஷனோ எடுக்க கூடாதுனு இன்னையில இருந்து நீங்க புது ரூல் எதுவும் போட்டு இருக்கீங்களா மிஸ்டர். முத்தமிழ் வேந்தன்.” என்றாள் அவளும் அவனைப் போலவே துளைக்கும் பார்வையுடன்.

“வாட் யூ மீன்…” என்றான் கடுப்பாய் புருவங்களை சுருக்கி.

“ஐ மீன்… நான் மேம் கிட்ட இன்ஃபார்ம் பண்ணீட்டேன்… ஒன் ஹவர் பர்மிஷன்… அந்த ஒன் ஹவர் முடிய…” என்றவள் கைக் கடிகாரத்தை திருப்பி பார்த்து, “இன்னும் மூணு நிமிஷம் இருக்கு… இப்போ நான் போய் என் வேலைய பாக்கலாமா..? ஏன்னா பர்மிஷன் முடிஞ்சும் இப்படி உங்கிட்ட வெட்டியா நின்னு பேசிட்டு இருந்தேனா… பொறுப்பிருக்கா… பஞ்சுவாலிட்டி இருக்கானு வேற யாரும் கேட்டுட்டு வந்துட கூடாது பாருங்க…” என்றவள் சிறு இடைவெளி விட்டு, “மிஸ்டர். முத்தமிழ் வேந்தன்…” என்றாள் அவனில் பார்வையை அழுத்தமாய் பதித்தபடி.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவளை கடுப்பாய் முறைத்தாலும் இன்னும் அந்த கண்களில் கோபப் கனல் குறைந்தபாடில்லை. அவன் அமைதியாய் நிற்கவும், தோள்களை அலட்சியமாய் குலுக்கிக் கொண்டவள் யுவா சென்ற திசையில் நடக்க துவங்கி இருந்தாள்.

“பர்ஷன் வாங்கி இருந்தா… பர்மிஷன் வாங்கி இருக்கேனு சொல்லறதுக்கு என்ன..? அரைமணி நேரம் என்ன கத்த விட்டுட்டு, அதுக்கு அப்பறம் நீட்டி முழக்கி இந்த விளக்கம் தேவையா..? எல்லாம் இந்த அனும்மாவால வரது… நிம்மதியா ரெஸ்ட்ல இருந்தவன… வம்படியா இங்க அனுப்பி வச்சாங்க இல்ல… வரட்டும்… இங்க வரட்டும்… நான் யாருனு காட்டறேன்…” சத்தமாய் அவள் காதில் விழும்படி அவன் முணுமுணுக்க, மீண்டும் அவன் சிறுப்பிள்ளை தனத்தில் மலர்ந்தது அவள் இதழ்கள். சற்றே திரும்பி அந்த புன்னகையை அவனுக்கும் வீசிச் சென்றாள் அவள். பக்கவாட்டில் தெரிந்த அந்த புன்னகை முகம் ஆழ அவன் மனதில் பதிந்தது. கொஞ்சமே கொஞ்சமாய் அவனின் இதழ்களும் விரிய துடித்தது.

     – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்