Loading

ஆராவின் வாகனம் கண்ணைவிட்டு மறையும் வரை இமை கொட்டாது பார்த்திருந்தவளின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. அவளின் இந்த தோற்றம் பெற்ற தாயாய் பர்வதத்தையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது தான். இருந்தும் இருவருக்கும் இடையே அவர் செய்வதற்கும் சொல்வதற்கும்  என்ன இருக்கிறது? இல்லை, என்பதை விடவும் சொல்லவும் செய்யவும் அவர் பிரியப்படவில்லை என்பதே நூறு சதவீதம் உண்மை. திருமணத்தை தவிர வேறு எதற்காகவும் ஆரா விரும்பாததைச் செய்யத் தூண்டியதில்லை அவர்.

அன்னை தன்னருகில் வருவதை உணர்ந்தவள் வேகமாய் உருண்டு திரண்டு வழியத் தயாராய் இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“ஏன் வாசலையே  நிக்கற கனிம்மா… உள்ள வரது தானே…” என்றார் பர்வதம் துள்ளும் பேரனைக் கீழே இறக்கி விட்டபடி.

“என்னவாம் உங்க பெரிய மவளுக்கு… வந்தவள வானு ஒரு வார்த்த சொன்னா கலெக்டரம்மா பவுசு குறைஞ்சுப் போய்டும்மாக்கும்..? ரொம்ப தான்ம்மா பண்ணறா அவ…” கோபமும் ஆதங்கமுமாய் வெடித்த சின்ன மகளை தான் வழக்கம் போல் இன்றும் சமாதானப் படுத்த முயன்றார் அவர்.

“விடு கனிம்மா… அவளப் பத்தி உனக்கு தெரியாதா..?” என்றார் ஆறுதலாய் புன்னகைத்தபடி.

“தெரிஞ்சதால தான்ம்மா இன்னும் அவ பின்னாடி தொங்கிட்டு திரியறேன்… இல்லைனா சரிதான் போடினு என்னைக்கோ எனக்கென்னனு போய்ட்டு இருப்பேன்… எப்படிம்மா..? எப்படிம்மா அவளால இத்தன வருஷம் என் முகத்த பார்க்காம, என்னோட பேசாம இருக்க முடியுது..? என்னால முடியலையேம்மா…” என்றாள் விசும்பும் குரலில். என்ன முயன்றும் ஒரு துளிக் கண்ணீர்  கண்கள் தாண்டி கன்னத்தில் கோடாய் வழிந்திருந்தது.

“வாசல நின்னுட்டு இதென்ன பேச்சுக் கனிம்மா… பாரு புள்ள பாத்துட்டு இருக்கான்… முதல உள்ள வா நீ…” என அன்னை அதட்டிக் கடிந்து கொள்ளவும் தான் இருக்கும் சூழல் உரைத்தது அவளுக்கு.

வேகமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், அவசரமாய் உள்ளே சென்றுவிட்டாள். உணர்வுகள் மேலெழுந்து நெஞ்சை முட்டும் உணர்வு. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த தண்டனையாம் அவளுக்கு. ஒன்றா இரண்டா நான்கு ஆண்டுகளாய் உயிரின் ஆழம் வரை நேசித்த ஒருவரை ஒதுக்கி வைக்க முடியுமென்பதை ஆராவிடமிருந்து தான் தெரிந்து கொண்டிருக்கிறாள் அவள். அதுவும் தேடித் தேடி வந்தும் நிமிர்ந்து முகம் கூட காண விரும்பாத ஒரு ஒதுக்கம், அடம். அவள் செயல்களில் அப்படியே இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறைந்து உலுக்கி, பேச வைத்துவிடும் வேகம் எழுந்தாலும் மிகவும் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள்.

‘அப்படி என்ன பெரிதாய் தவறு செய்து விட்டாளாம் அவள்..? சரி தவறென்றே வைத்துக் கொள்வோமே..? அதற்கு மன்னிப்பே இல்லையாமா..?’ நினைக்க நினைக்க பொறுபொறுவென்று வந்தது அவளுக்கு.

இதற்குப் பயந்து தானே ஆரா இருக்கும் நேரம் இந்த வீட்டுப் பக்கமே வருவதில்லை அவள். ஆராவை போல் அத்தனை எளிதாய் அவளை வெறுத்து ஒதுக்கிவிடவும் முடியவில்லை. சிறுப்பிள்ளை போல் அவளின் அன்பிற்கு ஏங்கும் மனதை கட்டுப்படுத்தவும் தெரியவில்லை.

ஆராவை விட கிட்டத்தட்ட ஒரு வயது தான் இளையவள் அவள். பிறந்ததில் இருந்து அவளை அக்காவென்று அழைத்ததாய் நினைவில் இல்லை. பன்மைத் தன்மையில் மரியாதையாகவெல்லாம் அழைத்ததே கிடையாது. அவளும் எதிர்பார்த்ததில்லை. பெற்றவர்களைப் போல இவளுக்கும் எப்போதும் அவள்  ‘ஆரும்மா’ தான். இன்றும் கூட அதே ‘ஆரூம்மா…’ என ஐந்து வயது சிறுமியாய் அவள் காலைக் கட்டிக் கொள்ளத் தான் தோன்றியது. அன்னையை விட அவள் அதிகம் ஒன்றியது அவளிடம் தானே!

அவளுக்கு நடக்கப் பழக்கியது அவள்; பேசப் பழக்கியது அவள்; படிக்கப் பழக்கியது அவள்; எழுதப் பழக்கியது அவள்; மிதிவண்டி ஓட்டப் பழக்கியது அவள்; இருசக்கர வாகறம் ஓட்டப் பழக்கியது அவள்; ரகுமானைப் பழக்கியது அவள்; இப்படி அவளின் அசைவிலெல்லாம் ஆராதான் இருந்தாள், இருக்கிறாள். அப்படி இருக்க இந்த ஒதுக்கத்தை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியுமாம்?

மகளின் மனநிலை உணர்ந்தவராய், அமைதியாய் அவளிடம் தண்ணீரை எடுத்து நீட்டினார் பர்வதம். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் சின்னவள். குளிர்ந்த நீர் தொண்டைக்குள் இறங்கி வயிற்றை நிறைக்கவும் தான் உள்ளம் கொண்ட வெம்மை கொஞ்சம் மட்டுப்பட்ட உணர்வு.

“அப்படி என்ன அவளுக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேன்… புள்ள எவ்வளவு ஆசையா அவகிட்ட போறான்… தொட்டு தூக்குனா  மகாராணி கீரிடம் கொட சாஞ்சிடுமோ..? சொல்லி வைம்மா அவகிட்ட… இந்த கனி ஒருநாள் மாதிரி ஒருநாள் இருக்க மாட்டா…” என்றதோடு நிறுத்தாமல் இன்னும் முணுமுணுத்துக் கொண்டே இருக்க, சிரிப்பு தான் வந்தது பர்வதத்திற்கு.

“சின்னதுல இருந்து நீ இன்னும் மாறவே இல்ல கனிம்மா… அப்ப எல்லாம் விடிஞ்சும் விடியறதுக்கு முன்னவே ஒரு பெரிய லிஸ்ட் ரெடி பண்ணிட்டு நிப்ப… அவ அத பண்ணா இத பண்ணானு எங்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண… இப்பவும் அதான் பண்ணற… என்ன ஒன்னு… அப்ப டெய்லி பண்ணுவ… இப்ப எப்பவாவது பண்ணற…” என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

“உனக்கு நக்கலா இருக்கு இல்லம்மா… அம்மாவும் பொண்ணும் சேர்ந்து ரொம்ப தான் பண்ணறீங்க…”

“சரி அத விடு… என்ன சொல்லாம கொள்ளமா இன்னைக்கு சீக்கரம் கிளம்பி வந்துட்ட…” என்றார் பர்வதம் பேச்சின் திசையை வேறு விசயங்களுக்கு மாற்ற எண்ணி.

“ஏன் சொல்லி… நா வரதுக்கு முன்னாடியே அவ பிச்சுகிட்டு  ஓடவா… அவள பாக்கணும் போல இருந்துச்சு… அதான் வந்தேன்…” என்றாள் நொடித்துக் கொண்டு.

எதனால் அப்படிச் சொல்கிறாள் என அவருக்கும் தெரியுமே! கனி முன்பே சீக்கிரம் வருவதாய் சொல்லி இருந்தால், ஆராவின் இத்தகைய தவிப்பைக் காண முடியாமல் எதையாவது சொல்லி இவரே அவளை வெளியில் அனுப்பி வைத்திருப்பார்.

“ஆனாலும் இவ்வளவு ஓர வஞ்சன ஆகாதும்மா உனக்கு… உண்மைக்குமே என்னையும் நீதான் பெத்தீயா..? இல்ல, குப்பத் தொட்டியில இருந்து தூக்கிட்டு வந்தீயானு எனக்கே அப்பப்ப சந்தேகமா இருக்கு..?” அவளின் கடைசி வார்த்தைகளில் அவரின் மென்னகை விரிந்தது.

இதே கேள்வியை ஒரு காலகட்டத்தில் நாளைக்கு ஒரு தடவையாவது அவரிடம் கேட்கவில்லை என்றால் அவளுக்குத் தூக்கமே வராது. அதற்கு ‘அடியே பம்பிளிமாஸ்… அந்தளவுக்கு உன்ன கவுரவமா நினைச்சுக்காதே… கர்பரேஷன் கக்கூஸ் பக்கத்துல கிடந்தடி நீ… நான் தான் போனாப் போது பாக்க பாவமாக இருக்கேனு தூக்கிட்டு வந்து அம்மாகிட்ட குடுத்து வளக்க சொன்னேன்… தெரிஞ்சுக்க…’ என்ற ஆராவின் பதிலுக்கு அடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு குடுமிப்பிடி சண்டேயே நடக்கும். பர்வதம் வந்து ஆளுக்கு இரண்டு வைத்துப் பிரித்து அமர வைத்துவிட்டு போனால், அடுத்த அரைமணி நேரத்தில் கன்னத்தோடு கன்னம் இழைந்து கொண்டு தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பர் இருவரும். நில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மட்டும் தான் சந்தோஷப்பட முடிகிறது.

கனியும் கூட அதே நினைவுகளில் தான் முழ்கிக் கிடந்தாள் போல. “நான் சாகற வரைக்கும் என்ன மன்னிக்கவே மாட்டாளாம்மா அவ… இப்படியே என்கூட பேசாமலே இருந்துடுவாளோனு பயமா இருக்கும்மா எனக்கு…” என்றவளின் குரல் உடைந்து கண்ணீர் தேங்கி நின்றது.

பதிலொன்றும் சொல்லவில்லை அவர். சட்டென்று முகம் கூம்பிவிட்டது. கனிக்குப் புரியவில்லை என்பதற்காக அவருக்கும் புரியாமல் இருந்துவிடுமா? இவளை ஒவ்வொரு முறை ஒதுக்கும் போதும் இவளைவிட வெகுவாய் தவித்துப்  போவது அவள் தானே! தாவும் அமுதனை தூக்க முடியாது அவள் விரல்கள் நடுங்குவதையும், அதை மறைக்க அழுந்த உள்ளங்கைகளை அவள் மூடிக் கொண்டு நிற்பதையும், முட்டிக் கொண்டு நிற்கும் கண்ணீரை அவரிடமிருந்து மறைப்பதற்காகத் தலை குனிந்தபடியே அவசரமாய் ஓடும் மகளைத் தெரியாதா அவருக்கு. அவள் கனியை ஒதுக்குவதற்கு அவள் மீதான கோபத்தையும் தாண்டிய வலுவான காரணம் ஒன்று இருக்கும் என்று தான் அவருக்குத் தோன்றுகிறது.

“சரி விடும்மா… உடனே மூஞ்ச தூக்காத நீ… சாப்பிட்டாளா அவ…”

“எங்க இப்ப தான் மதியத்துக்கு சமைச்சு வச்சுட்டு ப்ரெஸ் ஆக உள்ள போனா…” என்றவரின் குரலில் வருத்தத்தின் சாயல்.

“அதுக்குள்ள நா வந்து அவ சாப்பிடறத கெடுத்துட்டேனாக்கும்…” நொடித்துக் கொண்டாள் சின்னவள்.

“நா எப்போடி அப்படி சொன்னேன்…” சலிப்பாய் சொன்னார் பர்வதம்.

“அதான் சொல்ல வரேனு எனக்கு தெரியாதாக்கும்… அப்படியே உன் அரும மகவொன்னும் பட்டினி கிடந்து மயங்கி விழுந்துட மாட்டா… மூஞ்ச அப்படி வைக்கதம்மா… பசிக்குது எனக்கு… நானும் அமுதனும் இன்னும் சாப்பிடவே இல்ல… என்ன சமைச்சுருக்கா இன்னைக்கு…” என்றபடியே அடுக்களைக்குள் நுழைந்துக் கொண்டாள் கனி.

ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தவள், அன்னைக்கும் மகனுக்கும் இட்லியும் சட்னி, பொடியும் வைத்து கொடுத்தாள். தனக்கு ஒரு தட்டில் சாதம் வைத்து தயிர் விட்டுக் கொண்டவள், ஆரா செய்து வைத்திருந்த உருளைக்கிழங்கு வறுவலையும்
வைத்துக் கொண்டாள்.

“என்னம்மா வறுவல் இவ்வளவு கம்மியா இருக்கு… இன்னும் ஒரு கிலோ போட்டு செய்ய வேண்டியது தானே…” என்றாள் கடுப்பாய்.

“கனிம்மா…” பாவமாய் அவர் விழிக்க,

“என்ன கனிம்மா… நொனிம்மா… ஒரு ஆளுக்கு எதுக்கு இவ்வளவு செய்யறாளாம் அவ… வந்தவ மூஞ்ச மட்டும் பாக்க மாட்டாளாமான்… ஆனா தினமும் எனக்கு புடிச்சத மட்டும் விதவிதமா செஞ்சு வச்சுட்டு போவாளாம்..? நல்லா இருக்கும்மா அவ நியாயம்… அதான் வேண்டாத தங்கச்சினு ஆகிப் போச்சுல… அப்பறம் ஏன் எனக்கும் என் புள்ளைக்கும் சேத்து சமைக்கறாளாம் அவ…” என்றாள்  தட்டில் உருளைக்கிழங்கை இட்டு நிரப்பியபடி.

“கனிம்மா…” என்றார் மீண்டும் பாவமாய் அவர்.

“ஆவூன்னா இது ஒண்ண சொல்லிடறம்மா நீ… ஆனாலும், என்ன சொல்லு அவ கைப்பக்குவம் உனக்கு கூட வரல…” எனச் சப்புக் கொட்டி சாப்பிட்டாள் சின்னவள்.

“கனிம்மா…” தயக்கமாய் மகளை அழைத்தவரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“இந்த கனிம்மாவுக்கு என்ன அர்த்தமாம்… இழுத்துட்டே இருக்காம என்னனு தான் சொல்லேன்ம்மா…”

“ஆருக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்குடி… அவங்களே கேட்டு வந்திருக்காங்க… அநேகமா இந்த இடம் கூடி வரும்னு தான் என் மனசுக்கு படுது…” என்றவரைப் பாவமாய் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“பச்… என்னம்மா நீயி… அவள பத்தி உனக்கு தெரியாதா..? என்னதையாவது சொல்லி களைச்சு விட்டுடுவாம்மா… நீ வேணா பாரேன்… அவங்களே சாய்ந்தரத்துக்குள்ள போன் பண்ணி இந்த சம்பந்தம் சரிவராதுனு சொல்லுவாங்க…” என்றாள் தமக்கையை அறித்தவளாய்.

“அதெல்லாம் பண்ண மாட்டாடி… நேத்து நான் கேட்டப்ப கூட ஒன்னுமே சொல்லல… அமைதியா வர சொல்லுங்கனு தான் சொன்னா…” என்றார் பர்வதம் நம்பிக்கையாய்.

அவரின் அறியாமையை என்னவென்று நொந்துக் கொள்வதென அவளுக்கும் தெரியவில்லை. “ஆனாலும் அவ விசயத்துல இவ்வளவு பச்சபுள்ளையா இருக்கீயேம்மா நீ… நானும் உன் ஆசைப்படி நடக்கணும்னு தான் வேண்டியக்கறேன்… பாப்போம்… அந்த ராங்கி என்ன பண்ணறானு…” என்றவள், உண்டு முடித்து எழுந்து கொண்டாள்.

ஆரா செய்ததையே தனக்கும் மதியத்திற்கு எடுத்துக் கொண்டு, மகனின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து, தாயின் கையில் கொடுத்துவிட்டு கிளம்பினாள் அவள்.

அமுதன் ஆறுமாத குழந்தையாய் இருப்பதிலிருந்தே இப்படிதான் நடக்கிறது. கனிக்கு தனியார் வங்கி ஒன்றில் வேலை. அமுதனை காலையில் விட்டு மாலையில் வேலை முடிந்து செல்லும் போது அழைத்துக் கொள்வாள். அவன் இங்கு வந்த பிறகு தான் பர்வதத்தின் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்தது. தாயின் மன நிம்மதிக்காகவே இதை ஆரா தடுக்கவில்லை. அதே நேரம், அவர்கள் வந்து சென்ற பின்பு தான் இல்லம் திரும்புவாள்.

❀❀❀❀❀

செல்லும் வழியெல்லாம் ‘எப்படி இதைத் தடுப்பது… எப்படி அவனுக்குப் புரிய வைப்பது… என்ன சொல்லி மறுப்பது…’ என்ற ரீதியில் தான் இருந்தது அவளின் எண்ணங்கள்.

‘இப்போதே பேசி தீர்த்து விடலாமா..? இல்லை வேலை நேரம் முடிந்து பேசலாமா..?’ என்றொரு சிறு குழப்பம். இதே குழப்பத்தோடு வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. வண்டியை ஓரமாய் நிறுத்தி உரியவருக்கு கைப்பேசியில் அழைத்து, ஒரு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டாள்.

இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், எப்படி சொல்லி அவனுக்குப் புரிய வைப்பது என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தப் பாடில்லை. அதே குழப்பத்தோடு அவளின் வாகனத்தை நூலகத்தை நோக்கி செலுத்தினாள் ஆரா.

இப்போது தான் அலுவலக நேரம் துவங்கி இருக்கிறது. பெரிதாக ஆள்நடமாட்டம் எதுவுமில்லை. ஏன் அங்கே ஆள் நடமாட்டமே இல்லை என்றுக்கூட சொல்லலாம். தனது இருசக்கர வாகனத்தை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் ஆரா.

புதிதாக வந்திருந்த புத்தகங்களுக்கு நூலக முத்திரையைக் குத்தியபடியே, நூலகத்தின் நடுநாயகமாக அமர்ந்திருந்தான் அவன். மெல்ல அடியெடுத்து வைத்து அவனின் முன்னால் போய் நின்றாள் அவள்.

மெல்ல நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதுவே அவளை இந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்கவில்லை என்று சொன்னது. மாலை நேரத்தில் அங்கே வருவது தான் அவளின் வழக்கம்.

“வெற்றி… வெற்றி தானே உங்க பேரு…” என்றாள் யோசனையாய்.

மென்மையாய் புன்னகையில் வளைந்தது அவன் இதழ்கள். ஆம் என்னும் விதமாய் தலை தன்னால் ஆடியது.

“ம்ம்ம்… வெற்றி… உங்ககிட்ட தனியா பர்ஸ்னலா கொஞ்சம் பேசணுமே…” என்றவள் தன்னை சுற்றி ஒரு முறை பார்வையைச் சுழல விட்டாள்.

“வெளியனா எனக்கு கொஞ்சம் கம்ஃபர்டபிளா இருக்கும்… ப்ளீஸ் வரமுடியுமா..? உங்களுக்கு வேலை எதுவும் இல்லை தான…” என்றவளை எட்டாவது அதிசயம் போல வியந்து விழி விரித்துப் பார்த்திருந்தான் அவன்.

இங்கு அவன் நூலக உதவியாளராய் வேலைக்குச் சேர்ந்த ஆறுமாத காலமாக அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். அவளுக்கு அவன் பெயர் தெரிந்து இருக்கிறது என்பதே அதிசயம் தான். தனக்கு வேண்டிய புத்தகங்களுடன் அவன் முன்பு நிற்பாள். பதிவேட்டில் பதிந்து கொடுத்தால், எடுத்துக் கொண்டு போயே விடுவாள். அவளின் அடையாள அட்டையின் மூலம் தான் அவளின் பெயரையே தெரிந்து கொண்டிருந்தான் அவன். சேர்ந்தாற்போல யாரிடமாவது நாலு வார்த்தை அவள் பேசினாலே அதிசயம். அப்படி இருக்க அவனிடம் இத்தனை வார்த்தைகள் பேசுகிறாள் என்றால் அதே பேரதிசயம் தானே.

“ஒரு நிமிஷம் ஆரா…” என்றவன் உடன் பணிப்புரிபவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தான். அவள் என்ன பேசப் போகிறாள் என்று தெரியவில்லை என்றாலும் அவளுடனான முதல் பயணம் என்ற எண்ணமே மனதிற்குள் உற்சாகத்தை கரைப்புரண்டு ஓடச் செய்திருந்தது.

“நான் என்னோட ஸ்கூட்டில முன்னால போறேன்… நீங்க பக்கத்துல இருக்க பார்க்குக்கு  வந்துடுங்க…” என்றவள் தனது வாகனத்தில் முன்னால் கிளம்பிக் கொண்டு போய்விட, ஒரு நொடி அவனின் உற்சாகம் அனைத்தும் வற்றி முகம் வாடிப் போனது. இருந்தாலும் அவளுடன் தனிமையில் பேசப் போகும் நொடிக்காக அத்தனையும் ஒதுக்கிக் கிளம்பிவிட்டான். மெல்ல ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி அவளுக்கு பின்னால் தனது வாகனத்தை விரட்டியவன், முயன்று உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான்.

  – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்