Loading

சமுத்திரா – 9

பலம்பொருந்திய மரக்கட்டைகள் மற்றும் இரும்புகளாலான தூண்கள் தீடிரென அந்த கப்பலின் மேல் தளத்தில் இருபக்கமும் முளைத்திருந்தன. அவற்றை பல அடுக்கில் பாய்கள் போன்ற வெண்ணிற துணியால் இணைக்கப்பட்டு, அது ஒரு பாய்மரக்கப்பல் என்பதனை உறுதி செய்தது.

நீட்டமாக இருக்கும் கப்பலின் இரண்டு மூலைகளிலும் மேடாக எழும்பி இருந்தது. அந்த இரண்டு மேட்டிற்கும் செல்ல படிகள் அமைத்து பார்ப்பதற்கு பிறை நிலா போன்று கப்பலின் வடிவமும் மாறியிருந்தது.

சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நீச்சல் குளம் அப்படியே இருந்தது. ஆனால், அவர்கள் ரசித்த பௌர்ணமி நிலா மற்றும் அதனுடன் பவனி வந்த நட்சத்திரங்கள் அனைத்தும் காணாமல் வானம் இருட்டிக்கிடந்தது.

“என்னடா கப்பல் இப்படி மாறியிருக்கு?”என்ற

சக்தியின் கேள்விக்கு அவனை ஏறிட்டே ரங்கா குழப்பத்துடன், “தெரியல சக்தி நாங்க மேல வந்தப்பவே கப்பல் இப்படி தான் இருந்தது.” என்றான்.

காலையில் இருந்து மனது சொல்ல முடியாத உணர்வில் ஆர்பரித்த காரணத்தை இப்பொழுது அறிந்துக் கொண்டான் சக்தி. ‘மனதின் குரலை கேட்டிருக்க வேண்டுமோ..?’ என்று காலம் கடந்து யோசிக்கவும் செய்தான்.

“நான் தான் சொல்லிட்டே இருக்கேன்ல.. இதுவும் அந்த விளையாட்டால வந்தது தான்.” – விலோ

அதனையே கேட்டு சலித்துப்போன ரங்கா, “எல்லாத்துக்கும் துர்காதான் காரணம்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி நீ சொல்லிட்டு இருக்க விலோ..” என புலம்பியவன்,

“நீங்க அந்த பெட்டியை எடுத்துட்டு வந்தீங்களா டா?” என வினவ, அமரனிடம் இருப்பதாக கைகாட்டினான் சக்தி.

சக்தியின் கூடவே மேலேறி வந்த அமரனும் அங்கிருந்த மாற்றங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமரனை நெருங்கினான் ரங்கா. அவனிடம் பெட்டியை கொடுத்தவன் கப்பலின் இரண்டு மூலைகளிலும் சென்று பார்த்தான்.

கப்பலின் மாற்றமும்; கீழே நிகழ்ந்த நிகழ்வுகளும் அவனை சற்று அசைத்து பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் கலங்கரை விளக்கம் அங்கிருந்தே தெரிய, அதில் சற்று தெளிந்தான் அமரன்.

“சமுத்திரா” பெட்டியில் இருந்த குறிப்புகளை படித்த சக்தியும் ரங்காவும் அமரனை வருமாறு அழைத்தனர். அவனும் அவர்களின் அருகில் வந்தான். பின், அதில் குறிப்பிட்டிருந்ததை மூவரும் முழுமையாக படித்தனர்.

“ஒரு விளையாட்டினால் இப்படி நடக்குமா..?” நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் வாய்விட்டு கேட்டேவிட்டான் சக்தி. ரங்காவின் நிலையும் அதே தான் என்று அவனின் முகத்தில் தோன்றிய குழப்ப ரேகைகளே கூறிவிட்டது.

ஆனால் அதனை இப்பொழுது முழுமையாக நம்ப தொடங்கினான் அமரன்.

நம்பியவனிற்கு அது நல்லதாக தோன்றவில்லை. ப்ரதீப், ஷிவன்யா, விலோ மூவரும் அவர்களின் முகத்தையே பார்த்தபடி அமைதியையே கடைபிடித்தனர்.

‘முதலையும், ஆமையும் விளையாட்டில் தான் வந்தது என்று அவர்கள் மூவரும் நம்பியிருந்தாலும், அவர்களின் மனதில் ஒரு சதவீதமாக அப்படி இருக்காது’ என்றே எண்ணியிருந்தனர். மேலே வந்து கப்பலின் நிலையை பார்த்ததுமே பகீர் என்றிருக்க எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்துக் கொண்டனர்.

“யார் இதை முதல்ல ஸ்டார்ட் பண்ணது..?” என்ற அமர் மூவரையும் பார்த்தான். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

விலோ, “ப்ரதீப் தான் ஷிவ் கிட்ட இருந்து டைஸை பிடுங்க பார்த்தான். அப்ப தான் இது ஸ்டார்ட் ஆச்சு.” என்று விலோ முடித்ததும் அமர் ப்ரதீப்பை பார்க்க, “அவ தான டா எடுத்துட்டு வந்தா என்னை பார்க்கிற..” என்றான் ப்ரதீப் விலோவை முறைத்துக்கொண்டே.

“இங்க இருக்க ரெண்டு காயின் ஷிவ் அண்ட் விலோ உடையதா..?” என்றான் ராங்க.

அவனின் கேள்விக்கு, ஆமா என்னும் விதமாக மூவரும் தலையை மட்டும் அசைத்தனர்.

“அடுத்து யார் போடணும்?” – அமர்.

“நாங்க இரண்டு பேர் விளையாடிட்டோம். அடுத்து ப்ரதீப் தான்.” என்று விலோ ப்ரதீப்பை கைக்காட்டினாள்.

ஏற்கனவே நிகழ்ந்ததை பார்த்திருந்த ப்ரதீப், “என்.. என்னால முடியாது. நீ.. நீங்க தான ஸ்டார்ட் பண்ணுனீங்க? நீங்களே முடிங்க. எ..என்னை விட்டுடுங்க..” பயம் நிறைந்த குரலில் உதடு தந்தியடிக்க கூறினான்.

“ப்ரதீப்! இங்க வா நீ ..” என்ற அமரன் பகடையை கையில் எடுத்தான்.

“டேய் என்னடா பண்ண போற..?” – ரங்கா.

ஒரு பெருமூச்சுடன், “அதுல தான் தெளிவா போட்டிருக்கே ரங்கா. முழுசா முடிக்கலனா.. இந்த ஆமையும், இந்த முதலைங்களும் நம்ம கூடவே நம்ம ஊருக்கு தான் வரும். அண்ட் இப்படி இருக்க கப்பலை எப்படி நாம ரிசார்ட்டுக்கு எடுத்துட்டு போக முடியும்?” என கப்பலின் மாற்றத்தை குறித்தும் அமரன் கேட்டான்.

“இதை மறுபடி விளையாடி ஏற்கனவே இருக்க பிரச்சனையை பெருசாக்க வேண்டாமே அமர். என்னால இன்னும் இந்த கேமை நம்பவே முடியல..” என்ற சக்தி தளர்ந்து அமர்ந்தான்.

“சில சமயம் நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் நடக்கும் சக்தி. நம்மால கூட  அதனை தடுக்க முடியாது. அது மாதிரி தான் இதுவும். எதையும் பாதியிலே விட கூடாது. இரு ப்ரதீப்பை வெச்சி உன்னை நம்ப வைக்குறேன்.” என்று சொன்ன அமர் விளையாட எதுவாக அந்த பெட்டியை வைத்தான்.

‘இந்த கப்பல் பழைய நிலைக்கு மாற வேண்டும். இந்த விளையாட்டால் வந்த அனைத்து மாற்றமும் சரியாக வேண்டுமென்றால் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும்’ என்று தெரிந்துக் கொண்ட ரங்காவும் சக்தியை சம்மதிக்க வைத்தான்.

“அப்படினா.. ஷிவ், விலோ ரெண்டு பேர் மட்டும் விளையாடட்டுமே..? அவங்களே இந்த கேமை முடிக்கட்டும்.” என்று அதிமேதவியாக சொன்னான் ப்ரதீப்.

“டேய்.. அதுக்காக பொண்ணுங்கள மட்டும் எப்படிடா தனியா விளையாடவிட முடியும்? இதுல அவங்க போய் எங்கேயாவது மாட்டிக்கிட்டா? அவங்களை யாரு காப்பாத்துவாங்க? நாம எல்லாருமே சேர்ந்து தான் விளையாட போறோம். நீ பண்ண வேலைக்கு உன்னைய முதல்ல நாங்க கும்மிருக்கணும்.” எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்ற எரிச்சல் அமரனின் குரலில் தெளிவாக தெரிந்தது.

“சரி டா. என்னால தான வந்தது. நானே இதை சரி செய்யுறேன்.” என்று ப்ரதீப் முறுக்கிக் கொண்டான்.

அவர்களின் சண்டையை பார்த்த விலோ, “நான்தான் என்னையறியாம இதை எடுத்துட்டு வந்துட்டேன். சாரி கைஸ்” என்றாள் சிறுகுரலில்.

“நாங்க திட்ட கூடாதுன்னு ரெண்டு பேரும் கேவலமா நடிக்காதீங்க.. நீங்க ரெண்டுபேரும் யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்ற சக்தியின் நக்கலில் விலோவும் ப்ரதீப்பும் முழிக்க, மற்றவர் சிரித்துவிட்டனர்.

அவர்கள் அனைவரையும் பற்றி ஏற்கனவே தெரிந்த ஷிவன்யா, நண்பர்களுடன் தான் என்கிற கர்வம் இல்லாமல் பழகிய சக்தியை ஆச்சர்யத்துடன் பார்த்தவள், அவளோடு அவன் சண்டையிட்டதையும் நினைத்துக் கொண்டாள்.

சக்தியும் எடுத்துரைக்க விளையாடும் எண்ணத்துடன் தன் பக்கம் வந்த ப்ரதீப்பின் தோளில் கைப்போட்ட அமரன், “எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் டா.” என்று நம்பிக்கையையூட்டி அவனின் கையில் பகடையை திணித்தான்.

‘நீங்க பார்ப்பீங்க டா, ஆனா அதை பார்க்குறதுக்கு நான் இருக்கணுமே..’ என்று மனதோடு நினைத்துக்கொண்ட ப்ரதீப், அவனின் கைகள் நடுங்க பகடையை உருட்டிவிட்டான். இருமுறை சுழன்ற பகடை ஆறு என்று விழுந்தது.

கப்பலில் எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் அனைவருக்கும் அது நன்றாகவே தெரிந்தது. அந்த பெட்டியினுள் இருந்த ரோஸ் நிற சிறுக்கப்பல் ஆறில் நகர்ந்து நின்றது.

“இப்படித்தான் உங்களுக்கும் அதுவே நகர்ந்ததா?” என்று சக்தி, ரங்கா, அமர் மூவரும் ஒன்றாக அதிர்ச்சியுடன் கேட்டனர். “ஆமா. அடுத்து அந்த நீர்குமிழ் மாதிரி இருக்குறதுக்குள்ள இருந்து க்ளூ வரும்.” என்றாள் விலோ.

‘தனக்கு என்ன வர போகிறதோ..’ என்ற பதைப்பதைப்புடன் அந்த நீர்குமிழையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான், பிரதீப்.

“வரமளிக்க வருகிறான். கேட்கபடும் வரம் சமயத்தில் கிட்டும்!!!”

என்று தோன்றிய எழுத்துக்களை படித்து முடித்தவவர்கள். “வரமா..?” என அதிசயித்தனர்.

“வரம்னா.. இந்த கேம் முடியனும்னு கேளு ப்ரதீப்.” என விலோ ஆலோசனை கூறினாள்.

“ஆனா அதுல சமயம்னு போட்டிருக்கே? அந்த வரம் எப்ப கிடைக்கும்னு தெரியலையே!” என்ற ஷிவன்யா சொல்ல, “இப்ப யார் வரப்போரானு தெரியலையே..” என்று ப்ரதீப் சுற்றியும் பார்த்தான்.

அந்நேரம் காற்று சுழற்சி அடிக்க கடலலையின் சலசலப்பும் அதிகமாகியது. அந்த பெட்டியை ஓரமாக வைத்தவர்கள் என்னவென்று கப்பலின் கைப்பிடியில் இருந்து எட்டி கடலை பார்த்தனர். புயல்காற்றில் அலையின் உயரம் அதிகரிக்க உப்பு தண்ணீர் இவர்களின் மேல் தாராளமாகவே சாரலாய் தெளித்தது.

கடலின் அடியில் இருந்து வெளிச்சக்கீற்று ஒன்று தோன்றியது. அவர்கள் மேல் தெளித்த தண்ணீரை துடைத்தப்படியே கடலையே நண்பர்கள் குழு கவனித்தனர்.

அந்த கப்பலின் அருகில் உள்ள கடல் இரண்டாக பிளந்து அதில் இருந்து வந்த வெளிச்சக்கீற்று அவர்களின் கண்ணை கூச செய்தது. பின் அந்த பிளவிலிருந்து பொன்நிறத்தில் ஆழ்கடலின் ஆழத்தில் இருந்து வெளிவந்தது அலாவுதீன் அற்புத விளக்கு!

அங்கிருந்த யாருமே நினைத்து பார்க்காதவகையில் இருந்ததை வியப்பு கூடிய ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பல வண்ணங்களில் புகைகள் சூழ தங்கநிற துகள்கள் மின்ன அதனினுடே காற்றில் மிளிர்ந்து கொண்டிருந்தது, அற்புத விளக்கு.

அந்த விளக்கின் துவாரத்தில் இருந்து வெளியே வந்தது நீலவானின் நிறத்தையுடைய அற்புத பூதமான ஜீபூம்பா! அதனை பார்த்த அனைவரும் பேச்சு மூச்சினை மறந்து ஒருவித இன்ப அதிர்வில் திளைத்தனர்.

கையிலும் கழுத்திலும் தங்கத்தால் ஆபரணங்கள் பூட்டி, தலையில் இருந்த நீளமுடியில் ஒரு குடுமியும் போட்டு அந்த இரவின் இருட்டில் பிரகாசமாக ஜொலித்தான் வரமளிக்க வந்த அற்புத பூதம்!

சிறுவயதில் கதைகளில் கேட்டும்; படங்களிலும், பாட புத்தங்கங்களிலும் மட்டுமே பார்த்திருந்த பூதத்தை கண்ணுக்கு நேரெதிரே பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகை பூக்கள் பூத்தன.

“தரைல பார்த்தது திரைல வரும்னு சொல்லுவாங்க. இங்க என்னடான்னா திரைல பார்த்தது தரைல இல்ல இல்ல தண்ணில வருது..!” என்று ஆச்சார்யம் விலகாமல் விலோ சொல்ல, அனைவரும் அதனை ஆமோதித்தனர்.

ப்ரதீப்பை கனிவாய் பார்த்த ஜீபூம்பா, “ஆணைவிடுங்கள் அரசே! உங்களுக்கான வரத்தை அளிக்க யாம் கடமைப் பட்டிருக்கிறோம்.” என்று அடிமைப்போல் பணிவாக சொன்னது.

“இவன்லாம் அரசனா?”என்ற விலோவின் கேள்வியை அனைவரும் கவனிக்கும் நிலையில் இல்லை.

“சமுத்திர விளையாட்டை சார்ந்திராத வரத்தை கண்ணை மூடி வேண்டிக் கொண்டு இந்த அற்புத விளக்கினை தங்களின் கரங்களால் வருடுங்கள் அரசே! உங்களுக்கான வரம் தக்கசமயத்தில் அளிக்கப்படும்.” என மென்மையாக  சொன்னது விளக்கின் துவாரத்தின் வழியே வந்த ஜீபாம்பா பூதம்.

ப்ரதீப்பும் எதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போன்று கண்ணை மூடி வேண்டியவன், கண்ணை திறந்தான். அந்நேரம் பொன்னிறத்தில் கடலின் மேல் தோன்றிய அற்புத விளக்கு அவனின் அருகில் காற்றிலே மிதந்து வந்தது. அதனை பயத்துடன் பார்த்த ப்ரதீப் தன் வலக்கையை உயர்த்தி நடுங்கும் விரல்களால் அந்த விளக்கினை வருடினான்.

வந்த வேலையை சிறப்பாக முடித்த ஜீபூம்பா, “உங்களுக்கான வரம் தக்க சமயத்தில் கிட்டும் அரசே! இப்பொழுது நான் விடைப்பெறுகிறேன்.” என்று இருக்கரங்களையும் கூப்பி ப்ரதீப்பை வணங்கிவிட்டு அதனின் இருப்பிடமான பொன்நிற விளக்கின் உள்ளே மீண்டும் அடைந்துக் கொண்டது.

தங்கநிற துகள்கள் பறக்க பிளந்திருந்த கடலின் வழியே அற்புத விளக்கும் அதனின் அன்னையான ஆழியின் ஆழத்திற்கு சென்ற அடுத்த நொடி இரண்டாக பிளந்திருந்த கடலும் இணைந்துக் கொண்டது.

இதற்கு முன் அந்த விளையாட்டில் இருந்து வந்த பெரிய கடலாமையையும், முதலையையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர்களால் இப்பொழுது வெளிவந்த அற்புத பூதத்தை அப்படி எண்ண முடியவில்லை.

சற்று நேரம் முன்பு கண்களால் கண்ட அனைத்தும் கற்பனையா? இல்லை காட்சி பிழையா? என பகுத்தறிய முடியாமல் அருவருமே ஒருவித மோனநிலையில் திளைத்தனர்.

-சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்