
சமுத்திரா – 8:
நடுக்கடலில் அடித்துக் கொண்டிருந்த சூறாவளி காற்றின் வேகத்திற்கு ஏற்ப கடலைகளும் ஆர்ப்பரித்து சீறிக் கொண்டிருந்தன. அதனால், எப்பொழுது வேண்டுமென்றாலும் அங்கு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப நண்பர்கள் கூட்டம் சென்றுக் கொண்டிருந்த கப்பலும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அந்த கப்பலின் உள்ளேயுள்ள மினி தியேட்டரில் மிக பெரிய கடலாமை ஒன்று இருந்தது. அதனை தான் நம் நண்பர்கள் கூட்டம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஆமையின் ஓடு கருப்புநிறத்தில் இருந்தது. அது தங்கநிற கோடுகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. அவை பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் வண்ணம் அழகாக இருந்தாலும், வலுபொருந்திய பல அடுக்கு எழும்பு தட்டுகளால் உருவான ஓடு அந்த உயிரினத்திற்கு பாதுகாப்பை வழங்கியது.
சிறு குன்றுபோல் அந்த அறையில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த ஆமையை அதிர்ச்சியில் பார்த்த அனைவரின் விழிகளும் இப்பொழுது அதிசயித்து பார்த்தன.
‘இவ்வளவு நேரமும் இவ்வளவு பெரிய ஆமை மீதா சாய்ந்திருந்தேன்!’ என எண்ணிய அமரனின் உடலெல்லாம் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. ஆறடியில் இருக்கும் அவனை விட இருமடங்கு உயரம் கொண்ட ஆமையின் அருகில் சென்று தொட்டுப்பார்த்தான்.
அனைவரின் பேச்சினையும் கருத்தினையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரங்காவின் போலீஸ் மூளை விழித்துக் கொண்டது. “நீங்க சொல்லுற மாதிரி இது எந்த ஒரு விளையாட்டும்; மாய மந்திரமும் கிடையாது. சக்தி சொல்லுறது தான் சரி. நாம போய் அந்த மாஸ்டர்கிட்ட தான் முதல்ல விசாரிக்கணும். எனக்கென்னமோ இவங்க இதெல்லாம் கப்பல்ல கடத்துறாங்களோன்னு தோணுது.” முதலையையும் ஆமையையும் குறித்து தன் சந்தேகத்தினை அனைவரின் முன்னும் தெளிவான குரலில் விளக்கினான்.
போலீஸ் மூளைக்கு சிறிதும் சலைக்காத பத்திரிக்கை மூளையுடைய விலோ, “இப்படி திறந்த வெளில நம்ம கண்ணுல படுறமாதிரியா மறைச்சு வைப்பாங்க?” சிரிப்புடனே கேட்டாள்.
சிறுவயதில் இருந்து கடல்வாழ் உயிரினத்துடன் வளர்ந்த அமரன் அந்த ஆமையை ரசித்தபடி, “விலோ சொல்லுறது சரிதான் ரங்கா. காலைல இருந்து இந்த கப்பல்ல தான் நானும் சக்தியும் இருக்கோம். இப்ப தான் இந்த ஆமையை நான் இங்க பார்க்கிறேன்.” என்றான்.
“நான்தான் சொல்லுறேனே.. இது நிச்சயமா அந்த விளையாட்டுல இருந்து தான் வந்திருக்கு..” என்ற விலோவின் குரலில் யாராவது நம்பமாட்டார்களா என்ற தவிப்பு நிறைந்திருந்தது.
அவ்வளவு நேரம் நின்றுக் கொண்டிருந்த ப்ரதீப் அருகினில் இருந்த இருக்கையில் அமர்ந்த்துவிட்டு மற்றவரையும் அமருமாறு கைகாட்டினான். ‘இங்க என்ன போய்க்கிட்டு இருக்கு?’ என்று அனைவரும் அவனை முறைத்து பார்த்தனர்.
“சமுத்திரம்னா கடல். கடலுக்கு வழிகாட்டின்னு ஆமையை சொல்லுவாங்களா..?” ஞாபகம் வந்தவளாக ஷிவன்யா சட்டென்று வினவினாள்.
அக்கேள்விக்கு சிறிதும் யோசிக்காத அமர், “ஆமா ஷிவ். இப்ப தான் புதுசு புதுசா டெக்னாலஜிஸ் வந்து நாம கப்பலுக்கு மேப்பா பயன்படுத்துறோம். அந்த காலத்துல கடல்ல பாதை மாறி போகாம இருக்க வழிகாட்டியா ஆமையை தான் பயன்படுத்தியிருக்காங்கன்னு நான் கேள்வி பட்டிருக்கேன். சில ஆராய்ச்சில அதை நிரூபிக்கவும் செய்திருக்காங்க.” என்று கடலோடியான அமரன் சொன்னான்.
‘நம் தமிழ் மன்னர்கள் அயல் நாட்டினை கைப்பற்றுவதற்கும்; அங்கே வாணிபம் செய்வதற்கும் கடல் கடந்து செல்ல வழிகாட்டியவை கடல் ஆமைகள் தான்!’ என்று இன்றளவும் அநேக நபர்களால் நம்பப்படுகிறது. அனைத்து நிறங்களையும் பார்க்கக்கூடிய தன்மையை உடைய ஆமையின் முன்னிருக்கால்கள் துடுப்புபோல் உள்ளதால் அது நீந்துவதற்கு எதுவாக இருக்கும்.
தரையில் மெதுவாக செல்லும் ஆமை தான், கடலில் அதன் நீரோட்டத்தைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை மிக எளிதாகக் கடக்கும் இயல்புடையது. அப்படிப்பட்ட ஆமைகளின் பாதையைப் பின்தொடர்ந்தே ஆயிரம் காலத்துக்கு முன் வழி தவறாமல் கடல் பயணம் மேற்கொண்டனர்.
“எனக்கு வந்த க்ளூ, ‘சமுத்திர உலகத்தின் வழிகாட்டி வரவேற்க காத்திருக்கிறான்.’ நாமலாதான இது கிட்ட வந்திருக்கோம். என்னோட கணிப்பு, எனக்கு வந்த க்ளூக்காக தான் இந்த ஆமை இங்க வந்திருக்கணும்.” என்றாள் ஷிவன்யா.
“அப்படினா இது நம்மள இந்நேரம் வரவேற்றிருக்கணுமே?” என்று ப்ரதீப் வினவினான்.
“ஆமா. நீ மாமியார் வீட்டு விருந்துக்கு வந்திருக்க பாரு. வெத்தலை பாக்கு வெச்சி உன்னை வரவேற்க? உனக்கு இதுவே போதும்னு நினைச்சிடுச்சி போல..” என்று விலோ முடித்தபொழுது சிறு குன்றுப்போல் இருந்த ஆமை அவர்களை பார்த்து கண்ணை சிமிட்டியது.
“ஹே! அது கண்ணை சிமிட்டுச்சில..? அது தான் நமக்கான வரவேற்பு போல..” என்று ஷிவன்யா சிரிக்க,
“இப்பவாது நாங்க சொல்லுறத எல்லாரும் நம்புறீங்களா..?” என சக்தி, அமர் மற்றும் ரங்காவை பார்த்தாள் விலோ.
“எது எப்படி இருந்தாலும் நான் நம்ப போறதில்லை! முதல்ல நான் நீங்க சொன்ன அந்த பெட்டியை பார்க்கணும்.” என்று திடமான குரலில் கூறிய சக்தியை ரங்காவும் ஆமோதித்தான்.
‘இவன் இப்படி தான் கூறுவான்’ என்று அறிந்திருந்த ஷிவன்யா அவனிடம் எதுவும் பேசமுனையவில்லை. அந்த சமுத்திரா பெட்டியுடன் முதலைகள் வெளியே இருக்க, இன்னமும் அந்த சமுத்திர மாயவலையில் அவர்கள் சிக்கிக் கொண்டதை நம்பாமல் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.
“நான் ஒன்னு சொல்லட்டா..?” நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்திருந்த ப்ரதீப் கேட்டான்.
“வேணாம்னு சொன்னா விடவா போற..?” என்ற விலோவை பொருட்படுத்தாத ப்ரதீப்,
“ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுவாங்க. சின்ன ஆமைக்கே அப்படி சொன்னா? இங்க நம்ம கண்ணுக்கு முன்னாடி மாமிச மலையே இருக்கே! இதால நமக்கு எதாவது ஆகுமா?” கொஞ்சம் மிரட்சியுடன் ஆமையை பார்த்துக் கொண்டேக் கேட்டான்.
அந்த ஆமையை கண்டதிலிருந்து அதனை வருடிக்கொண்டே இருந்த அமர், “ச்ச. இந்த வாயில்லா ஜீவன் நம்மள என்ன செய்ய போகுது.? நம்மால இதுக்கு எந்த ஆபத்தும் வராம இருந்தாலே போதும்.” என்றான் வாஞ்சையுடன்.
“ஆமை உன்னை என்னடா பண்ணப் போகுது? பாற்கடலை கடையுறதுக்கு கூர்ம அவதாரமான ஆமை ரூபத்தில் மகாவிஷ்ணுவே வந்திருக்கிறார். அப்படி இருக்கப்ப இதனால நமக்கு என்ன கெட்டது நடக்கப்போகுது..?” என விலோவும் சீறினாள்.
“ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுறதுல ஆமைன்னு வர்றது உயிரினம் இல்லை ப்ரதீப். மனிதனை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் ஐந்து ஆமைகள் – கல்லாமை, இயலாமை, முயலாமை, அறியாமை, தீண்டாமை தான். இந்த ஆமைகள் எல்லாம் நம்ம வீட்ல புகுந்தா நம்ம வீடு முன்னேறாம, உருப்படாம போகும்! அதுக்கு தான் அப்படி சொல்லிருக்காங்க.” என்று தெளிவாக ஷிவன்யா விளக்கினாள்.
அவளை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்த ப்ரதீப் அதிசயத்துடன், “ஒரு பழமொழில இவ்வளவு இருக்கா..?”
“ஆமா. எல்லா பழமொழியையும் நம்ம பேச்சு வழக்கிற்கு ஏத்த மாதிரி உருவி மருவி மாத்திகிட்டிருக்கோம். அத பொருள் தெரிந்து உபயோகப்படுத்தினா இன்னும் நல்லது.” ஆற்றாமையுடன் ஷிவன்யா சொன்னாள்.
“உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?” – ப்ரதீப்
“அவ எங்க சேனல்ல தமிழ் ரிப்போர்ட்டர் டா. இப்ப சமீபமா தமிழ் பழமொழியை பற்றி நிறைய ரிசர்ச் பண்ணிட்டு இருக்கா..” என்று தோழியை பற்றி பெருமையாக விலோ கூறினாள்.
“உங்க எல்லாரோட சொற்பொழிவையும் முடிச்சிட்டீங்கன்னா? நாம அடுத்த வேலைய பார்க்கலாமா?” கைகள் இரண்டையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டு, தலையை சாய்த்து கேட்ட சக்தியின் குரலில் நக்கல் டன் கணக்கில் வழிந்தோடியது. பெருமூச்சுடன் தன் முகத்தை திரும்பிக் கொண்டாள் ஷிவன்யா.
‘இதற்குமேல் வாயடித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக திட்டிவிடுவான்’ என்று சக்தியை பற்றி நன்கு அறிந்த ப்ரதீப் கதவின் அருகினில் சென்று துவாரத்தின் வழி வெளியே பார்த்தான். “இப்ப வெளிய எந்த முதலையும் இல்லை. நாம பயப்படவேண்டாம்.” என்றான் அச்சம் நீங்கிய குரலில்.
ரங்கா, “அதுங்க அங்க இல்லனா..? பக்கத்து அறைக்கு தான் எங்கேயாவது போயிருக்கும் டா. பேசி நேரத்தை வீணாக்காம என்ன பண்ணலாம் சொல்லுங்க..?” என்றவன் யோசனை சுமந்த விழிகளால் அனைவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தான்.
“இவங்க சொல்லுற மாதிரி அந்த கேம் தான் இதுக்கெல்லாம் காரணமான்னு நாம முதல்ல தெரிஞ்சிக்கணும் ரங்கா. அதுக்குன்னு நாம இங்கயே இருக்கவும் முடியாது! இந்த ஆமையே பாதி இடத்தை அடைச்சிட்டு வேற இருக்கு” என்று அந்த ஆமையை மேலும் கீழும் பார்த்தவன்,
“அது லேசா நகர்ந்தாலும் நாம இங்கயே மாட்டிக்க நிறைய சான்ஸ் இருக்கு. சோ, நாம அந்த பெட்டியை எடுத்துக்கிட்டு மேல போய்டலாம். அங்க போய் என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம்.” என்று ரங்காவிடம் சொன்னாலும் அமரனையும் ஒரு பார்வை பார்த்தான் சக்தி.
அந்த ஆமையை விட்டு நீங்கி வந்த அமரன், “ஓகே சக்தி. இந்தப்பக்கம் கார்னர்ல இருக்க படிக்கட்டு வழியா நீங்க எல்லாரும் மேல போங்க. நானும் ப்ரதீப்பும் அந்த பெட்டியை எடுத்துட்டு வரோம்.”
“இல்ல அமர். நான் உன்கூட வரேன். ப்ரதீப் அவங்க கூட போகட்டும்” என்ற சக்தி அமருடன் இணைந்துக் கொண்டான்.
“நீங்க பார்த்து போங்க..” என்ற ரங்காவிற்கு தலையசைத்து சக்தியும் அமரனும் விடைபெற்றனர். அவர்கள் இருவரை தவிர்த்து அங்கிருந்த படிகளின் வழியே மேல் தளத்திற்கு சென்ற நால்வருக்கும் அடுத்த அதிர்ச்சி அங்கு காத்திருந்தது!
மெதுவாக கதவை திறந்த அமரனின் பின் சக்தியும் அந்த அறையில் இருந்து வெளியே சென்றான். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெட்டியை நோக்கி இருவரும் சென்றனர்.
முதலில் பெட்டியையும், அதனருகில் இருந்த பகடையையும் எடுத்தவர்கள், அங்கிருந்த அவர்களின் ஃபோனையும் எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல திரும்பினர். அங்கே நீண்ட நடைபாதையில் முதலையொன்று ஒரு அறைக்குள்ளிருந்து எதிரே இருந்த மற்றொரு அறைக்குள் சென்றதை பார்த்துவிட்டு விரைவாக அந்த தியேட்டரின் உள்ளே வந்து கதவை அடைத்தனர்.
அமரன் அங்கிருந்த ஆமையை தன் பார்வையால் வருடியபடியே கடந்தான். பின், அங்கிருந்த படிகளின் வழியே இருவரும் மேலேறினர். இறுதியாக மேலிருந்த கதவினையும் வெளிப்பக்கமாக அடைத்து சாத்திவிட்டனர்.
இவர்களுக்கு முன்னாகவே அங்கு சென்றிருந்த நால்வரும் அங்கிருந்த மேசையில் அமர்ந்திருந்தனர். கப்பலின் மாற்றங்களை கவனித்தபடியே அவர்களுடன் இணைந்த சக்தி, “என்னடா கப்பல் இப்படி மாறியிருக்கு?” என அதிர்ச்சியுடனே சுற்றியும் பார்த்தான்.
தற்காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைதிருந்த கப்பல் இப்பொழுது பல அடுக்கு வெண்ணிற இறக்கைகளைக் கொண்ட பாய்மரக்கப்பலை போன்று தோற்றமளித்தது. இவர்கள் சென்றுக் கொண்டிருந்த கப்பலில் இருந்த அனைத்து வசதிகளையும் இணைத்து பழங்காலத்தில் இருந்த பாய்மரக்கப்பலாகவே மொத்தமாக உருமாறி இருந்ததை தான் நம் நண்பர்கள் குழு அதிர்ந்து பார்த்தனர்.
-சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1




