Loading

சமுத்திரா – 7

விலோவின் கேள்வியில், “பயம் போய்டுச்சி போல..” என்று ப்ரதீப் அவளை நக்கலாக பார்த்து சிரித்தான்.

“எனக்கென்ன பயம்? நாம ஜாக்கிரதையா இருக்கணும்னு நான் சொல்லுறது உனக்கு பயமா தெரிஞ்சா நான் என்ன பண்ணுறது?” என்றவள் பகடையை கையில் எடுத்தாள்.

பத்திரிகையாளரான விலோச்சனா இயல்பிலே துணிச்சல் நிறைந்தவள் தான். அதனால் தான் தனியாக சென்று அந்த இருட்டு அறையில் இருந்த பெட்டியையும் தூக்கி வந்துவிட்டாள். பயம் ஒரு புறம் இருந்தாலும் அந்த சமுத்திரா விளையாட்டை முழுவதுமாக அறிந்துக்கொள்ளும் ஆவலும் மேலோங்க கையிலிருந்த பகடையை உருட்டிவிட்டாள்.

இம்முறை அதில் நான்கு என விழுந்தது. பின் அந்த பெட்டியில் இருந்த சிவப்பு நிறத்திலான சிறிய காயின் தானாகவே நகர்ந்து நான்காம் கட்டத்தில் நின்றது. அதன் பின் அந்த நீர் குமிழின் வடிவத்தில் மறுபடியும் எழுத்துக்கள் தோன்ற ஆரம்பமாகியது. அதனோடு அவர்களுக்காக காத்திருக்கும் சோதனைகளும் தொடங்க ஆரம்பமாகியது!

கப்பல் நகர்ந்தத்தில் இருந்து எழுத்துக்கள் தோன்றியது வரை கண்ணிமைக்காமல் பார்த்த மூவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. “இது எப்படி தானாவே நகருதுன்னு தான் புரிய மாட்டிங்குது..” என்று புலம்பிய விலோ அந்த குமிழுக்குள் மின்னிய எழுத்துக்களை வாசிக்க தொடங்கினாள்.

“பசியில் இருக்கிறான் 

புசிக்க வருகிறான்”

விலோ வாசித்து முடித்ததும் ப்ரதீப், “எப்படியும் எதுவும் வரப்போகிறதில்லை. அதுக்குள்ள வருகிறான்! வரப்போகிறான்! வந்துக் கொண்டிருக்கிறான்ன்னு நம்மளவிட பயங்கரமா உருட்டுதே..” என்று கிண்டலுடன் சொன்னான். அதனை கேட்ட ஷிவன்யாவும் விலோவும் சிரித்துவிட்டனர்.

“இப்ப என்னோட டர்ன்..” என்று பகடையை எடுக்க கையை நீட்டிய பிரதீப் விலோவின் பின் புறம் பார்த்துவிட்டு அவளின் கைப்பற்றி, “விலோ..” என்ற அலறலுடன் அவளை அவன் பக்கம் இழுத்தான்.

அவனது அலறலை கேட்ட அனைவரும் அங்கு பார்க்க, ராட்சத முதலை ஒன்று கோர பற்கள் தெரிய தன் வாயை திறந்துக்கொண்டு மெல்ல அவர்களை நோக்கி ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது.

“முதலையா! இங்க எப்படி..?”

“எவ்ளோ பெருசா இருக்கு..?”

“இங்க என்ன நடக்குது..?”

“கப்பளுக்குள்ள எப்படி முதலை வரும்?”

“சீக்கிரம் சீக்கிரம் இந்த சோபால ஏறுங்க” என்று முதலையை பார்த்த அதிர்ச்சியில் அனைவரும் பதட்டத்துடன் கத்திக் கொண்டே அங்கிருந்த சோபாவில் ஏறி நின்றுக் கொண்டனர்.

“இவ்வளவு பெரிய முதலை இங்க எப்படி வரும்? ஏற்கனவே கப்பல்ல இருந்திருக்கா?” சக்தி சொல்லிக் கொண்டிருக்க,

“கைஸ் இந்தப்பக்கம் பாருங்க” என்று ரங்கா கைகாண்பித்த இடத்தினில் பார்த்தனர்.

திடமான சொரசொரப்பு சதைகளையும் கூரான கோரபற்களையும் வேட்டையாட துடிக்கும் பளபளப்பு கண்களும் என நான்கு கால்களை தளத்தில் பதிந்து ஊர்ந்தவண்ணம் மேலும் மூன்று முதலைகள் அவர்களை நெருங்கி வேறொரு பக்கமிருந்து வந்துக் கொண்டிருந்தன.

அதனை பார்த்தவர்களின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. அவர்களின் இதயத்தின் ஓசை அவர்களுக்கே கேட்கும் அளவிற்கு துடித்துக் கொண்டிருந்தது.

இப்பொழுது சிந்திக்க நேரமில்லை என்று நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட அமரன், “இதுக்கு மேல இங்க இருந்தா விபரீதமா எதாவது நடந்துவிடும். எல்லாரும் எதிர்ல இருக்க மினி தியேட்டர்க்கு உள்ள போயிடலாம். அங்க போய்ட்டு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.” என்று இவர்களின் அறைக்கு நேரெதிரே இருந்த பெரிய அறையை கைக்காட்டினான்.

‘ப்ரதீப் மட்டும் இழுக்கவில்லை என்றால் என்னவாகிருக்கும்..?’ என்று நினைக்கவே பயந்த விலோ நடுக்கத்துடன் ரங்காவின் கையை இறுக்கமாக பற்றினாள். அவளின் கையை தட்டிக்கொடுத்து கொண்டே, “சரியா சொன்ன அமர். நான் விலோவை முதல்ல இங்கிருந்து கூட்டிட்டு போறேன். நீ ஷிவ்வை கூட்டிட்டு வா..” என்று சக்தியை பார்த்தவன், “என்ன யோசிக்கிற சக்தி?” என்றான்.

இன்னமும் அங்கு நடந்துக் கொண்டிருந்ததை நம்ப முடியாத நிலையில் இருந்த சக்தி, “இதுங்க எப்படி இங்க..” என்று ஆரம்பிடித்தவனை முடிக்க விடாமல், “இப்ப அத யோசிக்க நேரமில்லை. நாம இங்க இருந்து தப்பிக்க தான் பார்க்கணும் சக்தி.” என்று சொன்ன ரங்கா விலோவின் கையை பற்றி அந்த மினி தியேட்டரை நோக்கி ஓடினான்.

அவனின் வேகத்திற்கு விலோவும் ஓட, அவர்களை பிடிக்க முயன்ற முதலைகளிடம் சிக்காமல் சென்றவர்களை பார்த்த மற்ற நால்வருக்கும் பயத்தில் துடித்துக் கொண்டிருந்த இதயம் வெளியே வந்துவிடும் போல் இருந்தது.

இந்த பக்கம் இருட்டாக இருந்த அறைக்குள் வந்த விலோ மற்றும் ரங்கா உள்ளே சென்று கதவினை அடைத்துக் கொண்டனர். அவ்வறையின் வாசலில் சிறு விளக்கு ஒன்று மட்டும் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த அறையின் உள்ளே இருளே முழுவதுமாக ஆட்சி செய்துக் கொண்டிருந்தது.

“உனக்கு எதுவும் ஆகலையே விலோ..?” என்று பார்வையால் அவளின் தலை முதல் பாதம்வரை ஆராய்ந்தவன் அவளை கட்டிக்கொண்டான். அவனின் அணைப்பில் இருந்தவள், “என..எனக்கு ஒன்றும் இல்லை ரங்ஸ்..” என்றவள் யோசனையுடன் அவனை பார்த்தாள்.

சிறு வெளிச்சத்தில்அவளின் யோசனை படிந்த முகத்தை பார்த்தபடி, “ஷிவ்வை அமர் பத்திரமா கூட்டிட்டு வருவான். நீ கவலை படாத..” என அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தவன் கதவை லேசாக திறந்து அவர்களை பார்த்தான்.

“ஹ்ம்ம் ப்ரதீப் அடுத்து நீ போ. உன் பின்னாடி ஷிவ் வருவா. அவளுக்கு பின்னாடி நான் வரேன்.” – அமர்.

ப்ரதீப், “நானா..? முடியாது முடியாது. முதல்ல போறவங்களை தான் முதலை பிடிக்கும். நீ போ” என அந்த நேரத்திலும் எதுகை மோனையுடன் அமருடன் வாதிட்டான்.

“சக்தி! நீ போறியா?” என்று அமர் கேட்க. சரி என்று தலையசைத்தவன் சைகையில் கதவை லேசாக திறந்து வைக்குமாறு அந்தப்பக்கம் இருந்த ரங்காவிடம் தெரிவித்தான்.

சோபாவில் இருந்து அவனின் வலதுக்காலை கீழே இறக்க, முதலைகள் அவனை நோக்கி வர தொடங்கியது. பின் காலை மேலே எடுத்துவிட்டு அமரனை பார்த்தான். அவனின் பார்வை புரிந்தவன் போல், ஷிவன்யாயின் கரங்களை இறுக்கமாக பற்றியவன் சோபாவிலிருந்து இறங்கி அமரன் ஓட தொடங்கினான்.

முதலைகள் அதன் கவனத்தை அந்த பக்கம் திருப்ப சக்தி ப்ரதீப்புடன் இந்தப்பக்கம் இறங்கி எதிரேயிருந்த அறையை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

ஒருவழியாக முதலைகளை இப்படி அப்படி என்று ஏமாற்றி நால்வரும் அந்த அறைக்குள் ஓடி வந்து கதவை அடைத்துக் கொண்டனர்.

ஷிவன்யாயை கட்டியணைத்த விலோ பரிதவிப்புடன், “உனக்கு எதுவும் ஆகலையே ஷிவ்?” என்று வினவ,

“இல்லை..” என்ற ஷிவன்யாயும் அவளின் நடுக்கம் நீங்கும்வரை விலோவை அணைத்து விடுவித்தாள்.

“எப்பா என்ன ஒரு ஓட்டம்..” என்ற அமரன் மூச்சுவாங்கியபடியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.

அவர்களின் ஓட்டம் இப்பொழுது தான் துவங்கியது! இன்னும் பல தூரம் ஓட வேண்டியிருக்கு என்று அவர்கள் யாருமே அறியவில்லை!

ப்ரதீப், விலோ, ஷிவன்யா மூவர் மட்டும், ‘இது அந்த விளையாட்டினால் வந்த விளைவோ..?’ என்று யோசிக்க தொடங்கினர்.

இதே சாதாரண நேரமென்றால், “முதலைய பார்த்ததும் எங்களையெல்லாம் விட்டுட்டு உன்னோட ஆளை மட்டும் கூட்டிட்டு வந்துட்ட..?” என ரங்காவிடம் சண்டைப் பிடித்திருப்பான் ப்ரதீப். ஆனால், ‘அவர்களால் தான் இந்த நிலையோ..?’ என்ற எண்ணத்தில் உளன்றுக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருந்தான்.

“இந்த முதலையெல்லாம் எப்படி இங்க வந்துச்சு..?” என்று ரங்கா யோசித்தப்படியே சக்தியை கேட்டான்.

“இந்த ரூம்ல இருந்து மேல போறதுக்கும், கீழ போறதுக்கும் வழி இருக்கு. நாம கீழ போய் மாஸ்டர் கிட்ட தான் விசாரிக்கனும் டா.” என்று சொன்ன சக்தியை நெருங்கினாள் விலோ.

“ச.. சக்தி!” என்று மெல்ல அழைத்தவள் பயத்தினால் முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைத்துக்கொண்டே அந்த விளையாட்டினை பற்றி அவர்களிடம் கூறினாள். “அதுல இருந்து தான் முதலை வந்திருக்கணும்..” என்று அவளின் சந்தேகத்தையும் சேர்த்துக் கூறினாள்.

கேட்டுக்கொண்டிருந்த ரங்காவும் சக்தியும் சிரிக்க, சுவரில் சாய்ந்த வாக்கிலே கண்களை மூடியிருந்த அமரனும் அவர்களின் சிரிப்பில் இணைந்துக் கொண்டான். சிரிப்பவர்களை பார்த்த ப்ரதீப்பும் விலோ கூறியதற்கு வழி மொழிந்தான்.

“எப்படி எப்படி?  விலோ எடுத்துட்டு வந்த பெட்டில இருந்த குட்டி கப்பல் தானாவே நகர்ந்துச்சு. இப்ப அதுல இருந்து முதலையும் வந்திருக்கா? ம்ம்ம்..அப்புறம் வேறென்னலாம் வந்துச்சு சொல்லுங்க? ” என்று ரங்கா நக்கலாக கேட்டான்.

“நீ என்னை நம்பலயா ரங்ஸ்” – விலோ.

“கண்டிப்பா நம்பல விலோ. நீ மட்டும் தனியா எதாவது சொல்லிருந்தா கூட யோசிச்சிருப்பேன். நீயும் ப்ரதீப்பும் சேர்ந்து சொல்லுறது தான் டௌட்டா இருக்கு..” என்ற ரங்கா நம்ப மறுத்து தாடையை தடவியபடி கூறினான்.

“எதாவது ப்ராங் பண்ண ட்ரை பண்ணுறீங்களா டா. அப்படி மட்டும் இருந்துச்சி ப்ரதீப் நீ காலி டா..” என்று சக்தி உருமினான்.

அனைவரும் படித்து அவரவர்களின் துறையில் முன்னேறி கொண்டிருப்பவர்கள். அதனால் இதனை போன்ற விஷயங்களை அவர்களால் எளிதில் நம்பமுடியவில்லை.

“சரி டா. நீங்க எங்களை நம்ப வேணாம். உங்க நம்பிக்கை நட்சத்திரம் ஷிவன்யாவை வேணும்னா கேளுங்க..” என்று அவளை ப்ரதீப் கைகாட்டினான்.

“ஷிவ்! நீ சொல்லு.. இப்படி நடக்க அந்த விளையாட்டு தான் காரணம்னு நீயும் நம்புறியா?” – ரங்கா

குழப்பம் நிறைந்த விழிகளால் ரங்காவை ஏறிட்ட ஷிவன்யா, “எனக்கு சரியா சொல்ல தெரியல ரங்கா. இவங்க மாதிரி எனக்கும் சந்தேகம் இருக்கு. ஆனா நான்தான் முதல்ல அந்த விளையாட்டை ஸ்டார்ட் பண்ணேன். அதுல வந்த என்னோட க்ளூவுக்கு எனக்கு எதுவும் வரலயே?” என்று மற்றொரு சந்தேகத்தை கிளப்பினாள்.

‘அவள் கூறுவதும் சரிதானே! அவளுடைய ஆட்டத்திற்கு வராதது! விலோவினுடைய ஆட்டத்திற்கு மட்டும் எப்படி வரும்..?’ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. அதற்கான பதில் அவர்களுக்காக அங்கேயே காத்துக் கொண்டிருந்தது!

“தட்ஸ் இட். இது எந்த விளையாட்டும் கிடையாது! எந்த மேஜிக்கும் கிடையாது! நாம முதல்ல கீழ போகலாம்.” என சக்தி அனைவரையும் துரிதபடுத்தினான்.

அமைதியாக இருந்த அமரன் விலோ, ப்ரதீப் மற்றும் ஷிவன்யாவின் முகத்தை பார்த்தான். அவனிற்கு

இவர்கள் விளையாடுவது போல் தெரியவில்லை. எனவே, “கொஞ்சம் வெயிட் பண்ணு சக்தி” என்று சக்தியை நிறுத்தியவன்,

“என்ன நடந்துச்சு? தெளிவா சொல்லுங்க..” சுவரில் சாய்ந்திருந்தவாறே கேட்ட நொடி, நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ப்ரதீப்பும் விலோவும் கூறி முடித்தனர்.

சக்தி, “இதெல்லாம் நீ நம்புறியா அமர்?”

“தெரியல டா சக்தி. இவங்க சொல்லுற அந்த பெட்டியை பார்த்தா தான் எதுவும் உறுதியா சொல்ல முடியும். அந்த பெட்டி வெளிய தான இருக்கு?”

உயிர் பயத்தில் அனைத்தையும் வெளியே விட்டுவிட்டு வந்தவர்கள் “ஆம்” என்றனர். கதவின் துவாரத்தின் வழியே பார்த்த ரங்கா, “அங்கேயே தான் இருக்கு. ஆனா அது பக்கத்துலயே முதலையும் இருக்கு. நாம கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்.” என்றான்.

சுவரில் சாய்ந்திருந்த அமரனுக்கு எதுவோ வித்தியாசமாக தோன்ற கண்களால் அவ்வறையை அலசினான். அங்கு கதவருகில் சிறு விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருக்க அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அப்பொழுது தான் அந்த அறையின் மாற்றத்தை உணர்ந்தவன், ‘இங்க சுவர் இருக்காதே! அப்படினா நான் எதுமேலயோ சாய்ந்து நின்னுட்டு இருக்கேன்..’ என்ற நினைப்புடன் அவ்வளவு நேரம் சாய்ந்து நின்றவன் சற்று தள்ளி வந்தான்.

“இந்த ரூம்ல ஏதோ சரியில்லை. இங்க எதுக்கு அந்த சின்ன லைட் மட்டும் எரியுது. ஒரு நிமிஷம். யாரும் அசையாதீங்க..” என்றபடி அந்த அறையில் இருந்த சுவிட்ச் போர்டு பக்கம் அமரன் சென்றான்.

“என்னாச்சு அமர்..?”

“என்னடா சரியில்லை..?”

“டேய் அமர். நீ வேற புதுசா எதையாவது கிளப்பாத..”

என்று தன்னை நோக்கி வந்த கேள்விகளுக்கு “ஷ்ஷ்ஷ்..” என்று வாயினில் விரல்வைத்து அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்த அனைத்து விளக்குகளையும் ஒளிரவிட்டான்.

அதுவரை இருளினில் மூழ்கி இருந்த அந்த பெரிய அறை, விளக்குகளின் உபயத்தால் பளிச்சென்று தெரிந்தது. சட்டென்று வந்த விளக்கின் வெளிச்சத்தில் கூசிய கண்களை தேய்த்து சரி செய்தவர்கள் அமரனின் விழி போகும் திசையை நோக்கினர்.

உடல் சிலிர்க்க அனைவரின் கண்கள் மட்டுமின்றி அதரங்களும் அதிர்ச்சியில் விரிய, அங்கிருந்த மாமிச உருவத்தை இமைசிமிட்டாமல் நெஞ்சம் படப்படக்க வெறித்து பார்த்தனர்.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்