
சமுத்திரா – 40:
‘சமுத்திரா!’ என்னும் மாய விளையாட்டையும், அந்த உலகத்தைய விட்டு நண்பர்கள் அனைவரும் நம் உலகத்திற்கு திரும்பி வந்திருந்தனர்.
சக்தி மடிக்கணினி சகிதம் அமர்ந்திருக்க, அவனின் அருகில் ரங்கா மற்றும் அமரன் இருவரும் அமர்ந்திருந்தனர்.
கீழே அந்த சமுத்திரா கேம் போர்டை சுற்றி விலோ, ஷிவன்யா மற்றும் ப்ரதீப் அமர்ந்திருந்தனர். ஷிவன்யாவின் கையில் சிவப்பு நிற பகடை அப்படியே தான் இருந்தது. அந்த விளையாட்டில் பல வண்ணங்களில் இருந்த குட்டி கப்பல்கள் அனைத்தும் அந்த பெட்டியின் உள்ளே அடைபட்டிருந்தன.
‘அனைத்தும் கனவா? நனவா’ என திகைத்து விழித்த ஷிவன்யா விலோவையும் ப்ரதீப்பை பார்த்தாள்.
அதனையே வாய் வார்த்தையாக ப்ரதீப் கேட்டான். “இப்ப நடந்தது எல்லாமே கனவில்லையே? எதோ பாதி தூக்கத்துல இருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கு.” என அனைவரையும் பார்த்துக் கேட்டான்.
“நிஜம் தான் டா. மணி மூணாகுதே..” என்று ரங்கா சொல்ல அனைவரின் உடலும் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது. வேறொரு உலகிற்கு சென்று வந்த அவர்களின் உடல் இன்னுமே நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.
“அமர் நீ திரும்பி வந்துட்டியா? நீ இல்லாம எங்களுக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்ற ப்ரதீப் அவனை பாய்ந்து அணைத்தான்.
அதில் நிலை தடுமாறிய அமரன் கீழே விழ அவனின் மேலே ப்ரதீப்பும் விழுந்து வைத்தான். “எருமை மாடு! மேல இறந்து எழுந்திரு டா நாயே..” என ப்ரதீப்பின் தோளிலே பட்டென்று அடித்தான் அமரன்.
ஆனால் ப்ரதீப் அதனை கண்டுக் கொள்ளாமல் அமரனின் சட்டைக்குள் கையை விட்டான்.
“டேய் என்ன டா பண்ணுற..?” என நெளிந்துக் கொண்டே ப்ரதீப்பின் கையை அமர் தட்டிவிடும் முன்,
“இது உன்கிட்டயே இருக்கான்னு தான் டா பார்க்குற..” என்ற ப்ரதீப் அமரனின் கழுத்துடன் ஒட்டி உறவாடிய ருத்ராட்சத்தை கையில் பிடித்து பார்த்தான்.
‘அந்த கேம்ல இது என்னோட கைலையே வந்துடுச்சு..’ என அதனை சொல்லக்கூட தைரியம் இல்லாத ப்ரதீப் அமைதியாக அமரனை பார்த்து சிரித்தான்.
சக்தி, ரங்கா இருவரும் கூட அவர்களின் மேல் விழ, “டேய் நான் நல்லா தான் டா இருக்கேன். இப்படி மலமாடுங்க மாதிரி என் மேல விழாதீங்க..” என்றவனிற்கு அவர்களின் அன்பில் கண்கலங்க தான் செய்தது.
விலோவும் ஷிவன்யாவும் கூட அமரனின் இருக்கைகளையும் பிடித்தப்படி அமர்ந்து விட்டனர்.
அவன் இல்லாமல் அவர்கள் அடைந்த மனநிலையை நினைக்க கூட தெம்பிலாமல் அனைவரும் அந்த நொடிகளை அமைதியாக கடக்க முயன்று வெற்றியும் கண்டனர்.
“சரி நாம பத்திரமா வந்துட்டோம். நம்ம கப்பலும் அப்படியே இருக்கானு பார்க்கலாம்..” என்ற அமரன் அனைவரையும் அவனின் மேலிருந்து விரட்டி விட்டான்.
“நான் போய் ஆமை இருந்த இடத்தை பார்க்குறேன்..” என முதல் ஆளாக அந்த மினி தியேட்டருக்குள் ஓடினான் ப்ரதீப். அவனின் பின்னே மற்றவர்களும் சென்றனர்.
அங்கிருந்த விளக்கை ப்ரதீப் போட, அங்கே திரையரங்கில் இருப்பது போன்று அவர்களின் முன்னே பெரிய ஸ்க்ரீன் தான் விரிந்திருந்தது.
“இங்க இருந்த எல்லாம் தான் அந்த சுழல் மூலமா மறுபடி கடலுக்குள்ளேயே போய்டுச்சே..” என்றாள் ஷிவன்யா.
“என்ன?” என விசாரித்த அமரனுக்கு அவன் இல்லாத நேரத்தில் நிகழ்ந்தவற்றை, ஷிவன்யாவின் இறந்த காலம் உட்பட அனைத்தையும் சொன்னார்கள்.
“சரி. நாம மேல போய் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க..” என்றான் அமரன் அனைவரிடமும்.
அதன்படி அங்கிருந்த படிகளின் வழியே அனைவரும் மேலே செல்ல, “ஷிவ்..” என மெல்ல அழைத்தான் அமரன்.
அவன் எதற்கு அழைக்கிறான் என புரிந்தவள், “ஐம் ஓகே அமர்.” என புன்னகைத்தாள். பின் இருவருமே மேலே ஏறி சென்றனர்.
நடுக்கடலில் அவர்களின் கப்பல் நின்றுக் கொண்டிருக்க தமிழகத்தின் தலைநகரம் சென்னையின் கலங்கரை விளக்கம் அவர்களின் கண்ணுக்கு நன்றாகவே காட்சியளித்தது. அதனை பார்த்த விலோ, “நாம ஜெய்ச்சிட்டோம்!” என கத்தி ஆர்பரித்தாள்.
அந்நேரம் அங்கு மேலே அந்த கப்பலின் கேப்டன் மார்ட்டின் வந்தார். அவரை பார்த்தவர்கள், “அவருக்கு எல்லாமே ஞாபகம் இருக்குமா டா.. நம்ம கூட கேம்ல இருந்தாரே..” என ரங்கா கேட்டான்.
“தெரியலையே..” என சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை நெருங்கி வந்தார் மார்ட்டின்.
அவர்களை பார்த்து ஒருவித அர்த்தத்துடன் சிரித்த மார்ட்டினின் சிரிப்பே சொன்னது, அவருக்கும் அனைத்தும் தெரிந்து தான் இருக்கிறது என!
“ஜஸ்ட்! த்ரோ தட் கேம் இண்டோ தி சீ பட்டிஸ் (அந்த விளையாட்டை கடல்ல தூக்கி போடுங்க)” என சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
“நான் போய் எடுத்துட்டு வரேன் டா..” என ப்ரதீப் சொல்ல,
“இல்லை வேணாம்.. நானே போறேன்..” என்ற அமரனே சென்றான்.
அந்த சமுத்திரா விளையாட்டை எடுத்து வந்த அமரன் அதனை விலோவின் கையில் கொடுக்க சென்றான். “நானா?” என்ற விலோ அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்.
“நீ தான் விலோ. இந்த விளையாட்டு என்னனு நமக்கு முழுசா தெரியலனாலும் உன் மூலமா தான் இந்த விளையாட்டு நம்ம கைக்கு வந்துச்சு. உன்னால தான் இந்த விளையாட்டும் முடிஞ்சது. சோ நீயே உன்னோட கையால இதை கடல்ல தூக்கி போட்டுடு..” என்ற அமரன் விலோவின் கையில் அந்த விளையாட்டை திணித்தான்.
அதனை வாங்கிய விலோ, ‘இதுக்கு மேல எங்களுக்கு எந்த பிரச்னையும் வர கூடாது கடவுளே!’ என மனதோடு கண்ணை மூடி வேண்டிக் கொண்டவள், சமுத்திரா விளையாட்டு பெட்டியை கடலில் வீசினாள்.
பொத்தென்று அந்த பெட்டி கடலில் விழுந்தது. அதன் விளைவால் அங்கிருந்த கடல் நீர் அனைத்தும் சிதறி அவர்கள் அறுவரின் மேலேயே தெளித்தது.
கடலில் விழுந்த சமுத்திரா விளையாட்டு பெட்டி மெல்ல மெல்ல கடலில் மூழ்க துவங்கியது.
தாயினிடம் அடைக்கலம் புகும் குழந்தையை போன்று, அந்த ஆழியை அன்னையாக கொண்ட சமுத்திராவும் ஆழியின் ஆழத்தை நோக்கி சென்றுக் கொண்டே இருந்தது.
இறுதியில் ஒரு பெரிய சிப்பி இரண்டாக பிளந்தபடி இருக்க, அதனின் மையத்தில் சென்று, ஒரு பெரிய கடல் உலகையே தன் கட்டுபட்டில் வைத்திருக்கும் சமுத்திரா அமைதியாக அடைக்கலம் அடைந்தாள்! பின் பிளந்திருந்த அந்த சிப்பியின் வாயும் மூடிக் கொண்டது.
“அப்பாடா ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்துட்டோம். இப்ப தான் டா மனசு நிம்மதியா இருக்கு..” என ப்ரதீப் சொல்ல,
“ஏன் சொல்ல மாட்ட.. உன்னால தான் எல்லாமே ஆரம்பிச்சது..” என விலோ பதிலுக்கு சொன்னாள்.
“மறுபடியும் ரெண்டு பேரும் ஸ்டார்ட் பண்ணாதீங்க..”என அவர்களை அடக்கினான் ரங்கா.
“இன்னமும் என்னால சுத்தமா நம்ப முடியல. உண்மையிலேயே இப்படி எல்லாமா விளையாட்டு இருக்கும்?” என ஷிவன்யா கேட்டிட,
“நாம அந்த கேமை விளையாடியே முடிச்சிட்டோம் ஷிவ். இன்னுமா உனக்கு சந்தேகம்..” என்ற ப்ரதீப் அங்கேயே அப்படியே அமர்ந்தான்.
“எனக்கும் தான் சந்தேகமாவே இருக்கு. எதோ கனவுல இருந்து முழிச்ச மாதிரி இருக்கு..” என சொன்ன விலோவும் அப்படியே அமர்ந்தாள். பின் ஒவ்வொருவராக அனைவரும் அமர்ந்தனர்.
“பெர்முடா ட்ரையங்கில் நம்ம எல்லாருக்கும் தெரியும்ல..” – அமரன்.
“அதான் அங்க போன கப்பல் எல்லாமே காணாம போய்டும்னு சொல்லுவங்களே அது தான டா.” என ப்ரதீப் கேட்டான்.
“எஸ் அதே தான். அதுக்கான காரணத்தை இன்னமும் யாராலையும் கண்டுபிடிக்க முடியல. சிலர் பெர்முடா ட்ரையங்கில் கிட்ட போனாலே கடல்ல மூழ்கிடிவோம்னு சொல்லுவாங்க. இன்னும் சிலர், அங்க போற கப்பல் எல்லாமே வேற ஒரு உலகத்துக்கு போய்டுதுன்னும் சொல்லுறாங்க.. மே பீ நாமளும் அப்படி ஒரு மாயா உலகத்துல மாட்டிருப்போம் போல..” என அமரன் சொன்னான்.
“இதுக்கு தான் டா நீ வேணும்னு சொல்லுறது..” என்ற ப்ரதீப் அவனை கட்டிபிடிக்க வர, அவனை தள்ளிவிட்டு எழுந்துகொண்டான். அமரன்.
அதன் பின் வேறெங்கும் செல்லும் மனநிலையில் அவர்கள் இல்லாததால் கப்பலை ரிசார்ட்டிற்கு திருப்பிட சொல்லிவிட்டனர்.
*****
காலையில் ஆறுமணி போல் சூரியன் அந்த கடற்கரையில் உதிக்க அவர்கள் அனைவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
முன்தினம் இரவு நடந்ததை யாரிடமாவது சொன்னால், நிச்சயம் இவர்களுக்கு பைத்தியம் என்ற பட்டம் கட்டப்படும். எனவே, அந்த சமுத்திரா பெட்டியுடன் அதனின் நினைவுகளையும் அந்த கடலிற்குள்ளே புதைத்து விட்டனர்.
“இதுல இருந்து ஒன்னு மட்டும் புரியுது டா.” என்ற ப்ரதீப் கப்பலில் இருந்து இறங்கியதும் சொன்னான்.
“என்னது?” என அனைவரும் ப்ரதீப்பை பார்க்க,
“அந்த உலகத்துல கூட நான் சிங்கிளா தான் டா இருந்துருக்கேன்..” என சொன்னான்.
“வேணும்னா அந்த கேமை மறுபடி விளையாடி கள்ளிராணியை கரெக்ட் பண்ணு டா..” என்ற அமர் சொல்லிக் கொண்டே முன்னே நடந்தான்
“எப்பா! அந்த கேமை ஒருவாட்டி விளையாடினதே இந்த வாழ்க்கைக்கு போதும் டா.” என ப்ரதீப் கும்பிடு போட அனைவருமே சிரித்துவிட்டனர்.
“சரி டா. நாங்க அப்படியே கிளம்புறோம். நீங்களும் பார்த்து போங்க..” என்ற ரங்கா அனைவரிடமும் விடை பெற்றான். அவனுடனே விலோவும் ஷிவன்யாவும் புறபட்டனர்.
“நானும் கிளம்புறேன் டா.” என்ற ப்ரதீப் சொல்ல,
“டேய் என்னை நீதான் ட்ராப் பண்ணனும்.” என அமரன் அவனை தடுத்த அமரன்,
“நீ கிளம்பலையா சக்தி?” என்றான்.
“தாத்தா வரேன்னு சொல்லிருக்காரு டா. அவரோட போயிடுவேன்.” என்றவன் அங்கிருந்த ரிசர்டிற்குள் சென்றான்.
“டேய்! கோவளம்ல இருந்து எண்ணூர் வரைக்கும் நான் வண்டி ஓட்டனுமா? சத்தியமா என்னால முடியாது..” என ப்ரதீப் கத்த,
“ப்ச். பாதி தூரம் நான் ஓட்டுறேன். மீதி நீ ஓட்டு..” என அவனை இழுத்துக் கொண்டு சென்றான் அமரன்.
“முடியாது. நீ ஃபுல்லா என்னை தான் ஓட்ட விடுவ..” என ப்ரதீப் அமரனிடம் புலம்பிக் கொண்டே சென்றான்.
*****
வழியில் காரில் செல்லும் பொழுது அமைதியாகவே வந்தாள், ஷிவன்யா.
“ஷிவ், உன்னை பத்தின உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு சோகமா இருக்கியா?” என்ற விலோவின் கேள்விக்கு மெல்ல சிரித்தாள் ஷிவன்யா.
அந்த சிரிப்பு அவளின் கண்களை கூட எட்டவில்லை. அந்த இருள் வானில் தோன்றிய நபர்களின் உருவம் கூட அவளுக்கு அந்நேரம் சரியாக தெரியவில்லை என்பதே உண்மை.
“உண்மையை சொல்லனும்னா.. எனக்கு எதுவுமே தோணல விலோ.” என தோளை குலுக்கியவள்,
“எங்க ஆஷ்ரமத்துல வளந்தவங்க எல்லாருமே அவங்கவங்க குடும்பத்துல கைவிட பட்டவங்க தான? எனக்கு அதனால எதுவும் பெருசா தோணல.” என்றவள் கண்ணை மூடி சாய்ந்துக் கொண்டாள்.
‘இங்கு வரும் பொழுது.. எங்கு செல்கின்றோம் என எவ்வளவு நச்சரித்தால்’ இப்பொழுது அவளின் அமைதியை பார்த்த ரங்கா, “இதுக்கு மேல எதுவும் கேட்காத..” என விலோவிடம் கண்களால் சொல்லிவிட்டு வண்டியை தொடர்ந்து ஓட்டினான்.
விலோவும் ஷிவன்யாவின் கையை அழுத்திவிட்டவள் வேறேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டாள்.
ஒன்றாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த அவர்கள் அறுவருமே வேறொரு பயணத்தில், விதி வசத்தால் சிக்கிக்கொண்டு தப்பி பிழைத்தனர். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட மனமாற்றங்களை பற்றி அதிகம் சிந்திக்காமல் அப்படியே நிகழ்கால வாழ்க்கைக்கு திரும்ப துவங்கினர்.
அந்த கடல் உலக நிகழ்வுகள் அனைத்தும் அவர்களை நிச்சயம் துரத்த தான் செய்யும். ஆனால், அதனையும் தாண்டி அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வார்கள் என வாழ்த்துவோம்!
**********
சில மாதங்களுக்கு பிறகு,
“இன்னும் நல்லா மேல இழு..” என சொல்லிக்கொண்டே அந்த பெரிய வலையை கடலில் இருந்து இழுத்து மேலே எடுத்தான் ஒருவன்.
“என்னால முடியல..” என மற்றொருவன் சொல்ல,
“உன்னால என்னத்தை தான் செய்ய முடியும். திங்குற சோறு எல்லாம் எங்க தான் போகுதோ..” என அவனை திட்டிய முதலாமாவன் வலை அருந்துவிடாமல் மேலே இழுத்தான்.
அவர்கள் இருவரால் இழுக்க முடுயாமல் போக, மேலும் இருவர் வந்து அவர்களுக்கு உதவினார்.
“இன்னைக்கு நம்ம வலைல நல்லா பெரிய பெரிய மீன்களா மாட்டிருக்கு போலயே..” என அவர்களுக்கு உதவிய ஒருவன் சொன்னான். அங்கிருந்த நால்வரும் சேர்ந்து வலையை மீன்களுடன் கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
பின், அனைத்து மீன்களையும் வலையை பிரித்து கப்பலில் கொட்ட, அதில் இருந்த ‘சமுத்திரா!’ விளையாட்டும் அந்த படகில் இருந்த துவாரத்தின் வழியே நழுவி அந்த கப்பலின் அடி மட்டத்திற்கு சென்று விழுந்தது.
அதனை பற்றி அறியாத அந்த மீன் பிடியாளர்கள் மீனின் அளவை பார்த்து பிரமித்து அவர்களுக்குள் பங்கிட்டு கொண்டிருந்தனர்.
அடுத்து யார் அந்த விளையாட்டை விளையாட போகிறார்களோ? என்னென்ன இன்னல்களை சந்திக்க போகிறார்களோ? அனைத்தையும் விதியும் அந்த சமுத்திரா உலகமும் மட்டுமே அறியும்.
அடுத்த ஆட்டம் தொடங்கும் வரை சமுத்திராவும் அங்கேயே அந்த கப்பலில் அவர்களுடனே தான் இருக்க போகிறாள். நாமும் இத்துடன் சமுத்திராவிடமிருந்து விடைபெருவோம்.
இதுவரை இந்த சமுத்திர பயணத்தில் என்னுடன் பயணித்து கரை சேர்ந்(த்)த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!
***முற்றும்***
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1


