
சமுத்திரா – 39:
சமுத்திரா விளையாட்டில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றாக அந்த பெரிய சுழலிற்குள் சென்றபின், அந்த உயிரினங்களுடன் சேர்ந்து அதனை விளையாடியவர்கள் அனைவரும் கூட அந்த சுழலில் சிக்கியபடி சுழன்றுக் கொண்டே அதனின் உள்ளே சென்றனர்.
ஷிவன்யாவின் காலில் இருந்த காயம், சக்தியின் தோளில் இருந்த காயம் மற்றும் ரங்காவின் வெட்டபட்ட கையில் இருந்த காயம் என அனைத்துமே அவர்களின் உடலில் இருந்து மாயமாக மறைந்திருந்தன.
தவளையின் உருவில் இருந்த விலோவும் அவளின் நிஜஉருவத்திற்கு முழுதாக மாறியிருந்தாள். அப்படியே அவர்கள் அனைவரும் மிதந்தபடியே கீழே சென்றனர்.
என்ன ஒரு ஆச்சரியம்! அவர்களுக்கு முன்பாகவே அங்கே அமரன் மிதந்தபடி இருந்தான். அவனை பார்த்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த அனைவரும் அவனிடம் மிதந்தபடியே சென்றனர். அமரனும் அவர்களை பார்த்து சிரித்தான்.
ஆனால் அவர்கள் யாராலும் அங்கு பேசவே முடியவில்லை. ஏன்? ஒருவரை மற்றவரால் தொடக் கூட முடியவில்லை. கண்களால் அனைத்தையும் பார்க்க மட்டுமே முடிந்தது. கண்களின் மூலமே மற்றவருடன் பேசிக்கொண்டனர்.
அந்த ஆழ்கடலில் அவர்களால் மூச்சு மட்டும் தான் விட முடிந்தது. ‘தண்ணீருக்குள் மூச்சு விட முடியுமா?’ என்ற ஆச்சரியத்துடனே மெல்ல மெல்ல அப்படியே ஆழக்கடலிற்குள் தானாகவே அனைவரும் இறங்க துவங்கினர். நடப்பது அனைத்தும் வியப்பாக இருந்தாலும், சற்று பயமும் அவர்களிடம் வெளிப்பட்டது.
‘சமுத்திரா விளையாட்டு முடிந்தால் நம் உலகிற்கு சென்றுவிடலாம்.’ என அவர்கள் அனைவரும் இதுவரை எண்ணி இருந்தனர். ஆனால், அந்த எண்ணத்தில் கல் எரிந்ததை போல், ஒருவித மாய சுழலில் சிக்கிக்கொண்ட அனைவரும் கடலில் ஆழத்திற்கு செல்ல துவங்கினர். ‘இந்த மாய சுழல் நம்மை எங்கே அழைத்து செல்கிறது?’ என விடை தெரியாமலே அந்த கடல் நீரில் அவர்களின் மற்றொரு பயணம் துவங்கியது.
அவர்கள் அறுவரும், கடலின் மேல் மட்டத்தில் இருந்து ஒரு ஐம்பது அடி ஆழத்திற்கு மிதந்தபடி இறங்கியிருப்பர். அங்கே அவர்களின் கண்களுக்கு முன்னே, கூரான பற்களை கொண்ட முதலைகள் வாயை பிளந்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன.
‘ஐயையோ மீண்டுமா?’ என அவர்களின் உடல் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கியது. அங்கிருந்து மேலும் மெல்ல மெல்ல கீழிறங்கினர்.
அடுத்து மேலும் ஒரு ஐம்பது மீட்டர் கீழே இறங்கியிருப்பர். அவர்களின் கப்பலிற்கு வந்திருந்த பெரிய கடலாமை அங்கே நீந்தியபடி இருந்தது. ‘இது அதுல? நம்ம கப்பலுக்கு வந்தது தான?’ என அறுவரும் நினைத்தாலும் அவர்களால் வெளியே சொல்ல முடியவில்லை. அந்த கடலாமை அதனின் முன்னிறுகால்களை துடுப்பாக உபயோகித்து கடலின் நீரோட்டத்துடன் வேகமாக நீந்திக் கொண்டு சென்றது.
மேலும், அந்த கடலாமையை சுற்றி நூற்றுக்கணக்கான குட்டி குட்டி ஆமைகளும் அதனின் சிறு துடுப்புகளை உபயோகித்து நீந்தியபடி இருந்தன. அவற்றை பார்த்தாலே அந்த பெரிய ஆமையின் குட்டிகள் என தெரிந்தது. அதனை பாத்த அனைவரின் உதடுகளும் புன்னகையில் விரிந்தன.
அங்கேயே சில தாவரங்கள் புதர் போன்று அடர்ந்து வளர்ந்திருந்தன. அதனின் அருகே சில பவள பாறைகள் பச்சை பசேல் என பாசிபிடித்து இருந்தன. அதனோடே சில செடி கொடிகளும் படர்ந்து இருந்தன. அங்கிருந்த சிரிய வகை மீன்களுக்கு அது தான் உணவாகவும் இருந்தது.
அதனை பார்த்துக்கொண்டே மேலும் சில மீட்டர்கள் கீழே சென்றார்கள். அங்கே, பல வண்ணங்களில் சில வகை மீன்கள் நீந்தியபடியே நீரின் சுழற்சிற்கு ஏற்ப வட்டமாக சுழன்றுக் கொண்டே சென்றன.
அந்த மீன்களுடனே நண்டுகள், நத்தைகள், தவளைகள் என சிறு சிறு உயிரினங்களும் நீந்தியபிடியும் தாவியபடியும் கடல் நீரில் சென்றுக் கொண்டு இருந்தன.
அங்கு அவர்களால் பேச முடியுமென்றால், “ஃபைண்டிங் நீமோ படத்துல வர மாதிரியே இருக்குல..” என வியப்புடன் ப்ரதீப் எப்பொழுதோ நிச்சயமாக சொல்லியிருப்பான்.
அந்த கடல் உயிரினங்களுக்கு என்று ஒரு தனிஉலகம்! அதனை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தன. எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லாமல் அவை அனைத்தும் அதனதனின் வேலையை செய்தபடி இயங்கிக் கொண்டிருந்தன.
எங்கு செல்கின்றோம்?
எதற்காக கடலின் அடிமட்டத்தை நோக்கி செல்கிறோம்? என்று புரியவில்லை என்றாலும் செல்லும் வழியில் இருந்த எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க, அதனை ரசித்தபடியே அறுவரும் மேலும் கீழிறங்கினர்.
இப்பொழுது கடலின் மேல்மட்டத்தில் ஒரு இருநூறு மீட்டர் ஆழத்தில் வந்திருந்தனர். இந்த பகுதியில் இருந்து ஒரு ஆயிரம் மீட்டர் வரை இருக்கும் பகுதியை அந்தி மண்டலம் என குறிப்பிடுவர். இங்கே சூரிய ஒளி என்பது மிக குறைவு தான்.
இந்த பகுதியில் இதற்கு மேல் சாதாரண மீன்வகைகள் மட்டுமில்லாமல் விசித்திரமான கற்பனைக்கு எட்டாத வகையில் இருக்கும் உயிரினங்களும் வாழ்கின்றன. அவை அனைத்தும் உணவிற்காக மட்டுமே மேலே செல்கின்றன.
அவ்விடத்தில் அழகு நிறைந்த கடற்கன்னிகள் சில உடலை வளைத்து நெளித்து நடனமாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் சில வகை சிறிய மீன்களும் டால்பின்களும் கூட ஆடிக்கொண்டு இருந்தன.
அங்கே தான், கடற்கன்னியாக அவர்களிடம் அறிமுகமான சௌந்தர்யமும் இருந்தாள். அவளின் அருகே அவளின் மனம் கவர்ந்த வருணனும் இருந்தான். அவர்களை சுற்றி பல வகை விலைமதிப்பில்லாத கற்களும் சிப்பிகளும் குமிந்து கிடந்தன.
அந்த கடற்கன்னி அறுவர் கூட்டத்தை கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் அவர்களை பார்த்துவிட்டு மேலும் கீழே சென்றனர்.
அங்கே ஜோடியாக கடற்குதிரை மிதந்துக் கொண்டு இருந்தன. உயிரினங்களுள் கடற்குதிரையில் மட்டும் தான் ஆண் பாலினம் குட்டி போடுமாம்! அங்கே இரு கடற்குதிரைகளும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்த நிலையில் இருக்க, அதனை பார்த்தவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது.
அதனையும் கடந்து மேலும் கீழே வந்தனர். அங்கே பெரிய ஆக்டொபஸ் ஒன்று அதனிடம் உள்ள கரங்கள் அனைத்தையும் உபயோகித்து அதனின் முட்டைகளை மற்ற உயிரினங்களிடம் இருந்து பாதுகாத்தப்படி இருட்டில் அமைதியாக அமர்ந்திருந்தது.
இங்கே உள்ள உயிரினங்கள் அனைத்தும் அதனதன் வாழ்க்கையை அழகாக வாழ்ந்துக் கொண்டிருந்தன. ஆயினும், அந்த சமுத்திரா விளையாட்டை யார்? எப்பொழுது? விளையாடினாலும், இந்த உயிரினங்கள் அனைத்தும் அந்த மாய விளையாட்டின் கட்டளைக்கு இணங்க வெளியே வந்து விளையாடுகிறவர்களுடன் இணைந்துக் கொள்கின்றன.
‘இந்த மொத்த சமுத்திர உலகத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் அனைத்துமே சமுத்திரா விளையாட்டின் கட்டுப்பட்டில் தான் இயங்கி கொண்டு இருக்கின்றன!’ என்ற உண்மை அவர்களுக்கு அப்பொழுது தான் புரிய வந்தது.
மேலும் அவர்கள் கீழே இறங்கும் முன் அவர்களை கடந்தபடி ஒரு அசூர சுறா ஒன்று வேகமாக நீந்திக் கொண்டு சென்றது.
அந்த சுறாவை பார்த்தவர்களுக்கு பயம் வந்தது. ஆனால், அந்த சுறா அவர்களைக் கிஞ்சித்தும் கண்டுக் கொள்ளாமல் அதன் வழியில் சென்று விட்டது. ‘ஒருவேளை நாம அதோட கண்ணுக்கு தெரியல போலயே!’ என்ற சந்தேகம் அப்பொழுது தான் அனைவருக்குமே எழுந்தது.
அதற்கு மேல் கீழே சென்றவர்களை அடர்ந்த இருட்டே வரவேற்றது. அங்கே ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லாமல் முழுவதுமாக இருளே ஆட்சி புரிந்தது.
அவ்விடத்தை நள்ளிரவு மண்டலம் என குறிப்பிடுகின்றனர். இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் சூரிய வெளிச்சம் என்ற ஒன்றை நிச்சயம் சந்தித்திருக்காது என்றே கூறலாம்.
மேலும் இங்கு வாழும் கடல் உயிரினங்கள் அனைத்தும் அதனின் இரையை தேடவும், துணையை நாடவும் தேவையான வெளிச்சத்தை அதுவே உற்பத்தி செய்துக் கொள்கின்றன.
அந்த இருட்டிலும் தனது உடலை சுருட்டிக் கொண்டு பதுங்கியபடி இருந்தது கனலை கக்கும் டிராகன். அந்த இடத்தின் மையிருட்டினால் அவர்கள் அறுவரின் கண்களுக்கு தான் அது புலப்படவில்லை.
‘இதுக்கு மேல எதுவுமே இருக்காது போல..’ என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் கண்ணெதிரே சில வகை ஜெல்லி மீன்கள் மிதந்த படி சென்றுக் கொண்டிருந்தன.
சுருங்கி விரியும் தோள்களைக் கொண்டு, காளான் போன்று உடல் அமைப்பை உடைய ஜெல்லி மீன்கள் அனைத்தும் பல வண்ணங்களில் வெளிச்சத்தை அள்ளி தெளித்து அங்கிருந்த இருட்டை விலக்கிக் கொண்டிருந்தன.
அதனையும் கடந்து வர அங்கே தங்க நிற துகள்கள் பறக்க அற்புத விளக்கு அசையாமல் நங்கூரமாக இருந்தது. அதனின் அருகில் பெரிய பெரிய சிப்பிகளும் ஸ்டார் வகை மீன்களும் இருந்தன.
இருள் சூழ்ந்திருந்த ஆழ்கடலில் அந்த அற்புத விளக்கை சுற்றி மட்டும் பளிச்சென்று ஒளி வீசி கொண்டிருந்தது. ‘இது தான நம்ம கேம்ல வந்தது. அதுக்குள்ள அந்த பூதம் இருக்கும்ல..’ என அவர்கள் அறுவருமே எண்ணிக் கொண்டனர்.
அவ்வளவு நேரம் மெதுமெதுவாக இறங்கியபடி இருந்த அறுவரும் சட்டென்று பிரேக் பிடித்தது போல் திடீரென்று ஆடாமல் அசையாமல் நின்றனர்.
“என்ன டக்குனு நின்னுடுச்சு?” என்ற ப்ரதீப்பின் குரல் அனைவருக்கும் கேட்டது.
“நீ பேசுறது எனக்கு கேட்குது ப்ரதீப். நம்மால இப்ப பேச முடியுது.” என்றாள் விலோ ஆச்சரியத்துடன்.
“அமர் நீ எப்ப டா இங்க வந்த..” என்று தான் அனைவரும் முதலில் கேட்டனர்.
“கடைசியா நான் ப்ரதீப்பை கப்பல்ல இருந்து தள்ளி விட்டதுமே நான் இங்க வந்துட்டேன். எனக்கும் ஒன்னும் புரியல. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நீங்க வந்தீங்க. கேமை முடிச்சிட்டீங்களா டா.”
“ஆமா டா. கேமை நல்லபடியா முடிச்சிட்டோம். அதுக்கு தான நம்மள கடலுக்கடில இப்படி டூர் கூட்டிட்டு வந்துருக்கு..” என்றான் ரங்கா.
“நம்ம ஆறு பேரும் இங்க வந்துட்டோம். நம்ம கூட வந்த அந்த சைலர்ஸ் என்ன ஆனாங்க?” என சக்தி கேட்டவுடன், மீண்டும் ஆவர்களின் உடல் மெல்ல அசைந்தது.
‘அடுத்து என்ன?’ என அவர்கள் அறுவரும் உணரும் முன்னே எவ்வளவு மெதுவாக ஆழ்கடலிற்குள் வந்தார்களோ அதற்கு எதிராக அதனை விட நூறு மடங்கு வேகத்தில் மீண்டும் கீழே இழுத்து செல்ல பட்டனர்.
எதற்கு இவ்வளவு தூரம் வந்தோம்? எதற்கு மீண்டும் வேகமாக இழுக்கப்பட்டு சென்றுக் கொண்டிருக்கிறோம் என எதுவும் புரியாமல் ஒருவித அச்சத்துடனே ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்துக் கொண்டு கண்ணை மூடியபடி இழுத்த இழுப்பிற்கு சென்றனர்.
நீரின் அடியாழத்தில் வெகுநேரம் அழுத்தி பிடிக்கப்பட்ட பந்து வீறுக்கொண்டு மேலே வருவதை போல், ஆழ்கடலின் ஆழத்திற்கு சென்றவர்கள் வேகத்துடன் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
“டேய் யாருடா நீங்களாம்..”
“ஆ..”
“ஐயோ..”
“அம்மா..”
என்ற அலரலுடன் அனைவரும் பயத்தில் திகைத்து மூச்சு வாங்கியபடி கண்களை பட்டென்று திறந்தனர்.
இரவுணவை முடித்து அறுவரும் கப்பலில் எப்படி அமர்ந்திருந்தனரோ, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1









