
சமுத்திரா – 38:
‘ஆழ்மன ஆசைக்கு பதில் கிடைக்கும்!’ என சொல்லி மறைந்தது அற்புத பூதம். அது சென்ற அடுத்த நொடி, “உன்னோட ஆழ்மன ஆசை என்னது ஷிவ்?” என ரங்கா அவளிடம் வினவினான்.
ஷிவன்யாவிற்கும் ஒன்றும் புரியாத நிலை தான். ‘அதெப்படி என்னோட மனசுல இருக்க ஆசைகள், ஏக்கங்கள் அதுக்கு தெரியும்?’ என யோசித்தவள், “எனக்குமே ஒன்னும் புரியல ரங்கா..” என குழப்பத்துடன் பதிலுரைத்தாள்.
இருள் சூழ்ந்த கடலின் மேல் பறந்து விரிந்திருந்த கருநிற மேகத்தில் மின்னல் ஒன்று வெட்டியது. அதில் இருந்து அண்டசராசமும் அதிரும் வண்ணம் ஒரு பெரிய இடியும் உருவாகியது. பின், அந்த மின்னலில் தோன்றிய வெளிச்ச கீற்றில் சில நிகழ்வுகள் படமாக அவர்களின் கண்களுக்கு விரிய துவங்கின.
மத்திம வயதில் ஒரு தம்பதியினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். அந்த ஆணின் கரத்தில் வெள்ளை நிற துணியால் சுற்றப்பட்டிருந்தது அழகிய பெண் குழந்தை ஒன்று! அதனை சுமந்தபடியே அங்கிருந்த படிகளில் ஏறினர்.
‘யாரேனும் தங்களை கவனிக்கின்றனரா?’ என சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு, அங்கு கொட்டை எழுத்தில் ‘ஸ்ரீ இல்லம்’ என பலகையை சுமந்திருந்த பெரிய கட்டிடத்தின் முன்பு ஈரதரையில் கைகள் நடுங்க அந்த குழந்தையை வைத்தான் அந்த ஆடவன்.
பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த நிலையில் அந்த மழையின் குளிரில் வெடவெடுத்து நடுங்கிய குழந்தை வீரிட்டு அழ துவங்கியது.
“எங்களுக்கு ஏற்கனவே மூணு பொண்ணுங்க இருக்கு. இதுக்கு மேல எங்களால உன்னையும் வளர்க்க முடியாது. அதனால எங்களை மன்னிச்சிடு மா.” என அந்த பிஞ்சு குழந்தையிடம் பெயரளவில் ஒரு மன்னிப்பை யாசித்துவிட்டு அதனை திரும்பியும் பார்க்காமல் மனதை கல்லாக்கிக்கொண்டு சென்றனர்.
அந்த கட்டிடத்தில் ஸ்ரீ இல்லம் என பொறிக்க பட்டிருத்ததை வைத்தே அந்த குழந்தை ஷிவன்யா தான் என புரிந்தது. அங்கு தானே அவள் வளர்ந்தாள். அதனை பார்த்த நண்பர்கள் அனைவருக்குமே அது ஷிவன்யா ஸ்ரீயுடைய கடந்தகாலம் என நன்கு புரிந்தது.
ஷிவன்யாவின் சிறு வயதில் இருந்தே அவளின் மனதில் தோன்றிய கேள்வி இது தான். ‘என்னுடைய அப்பா அம்மா யார்? யார் என்னை இங்கு வந்து விட்டுவிட்டு சென்றது?’ என்ற கேள்விகள் அவளின் மனதில் உதித்து அதற்கு விடை கிடைக்காமல் அது ஒரு ஏக்கமாகவும் அவளின் ஆழ்மனதில் உருமாறி இருந்தது.
விலோ, அமரனின் நட்பு கிடைக்கும் முன்பு வரை, “உனக்கு ஒண்ணுனா கேட்க கூட ஆள் இல்லை. நீயெல்லாம் எங்களை எதிர்த்து கேள்வி கேட்கலாமா?” என்றும்,
“அப்பனும் ஆத்தாளும் யாருன்னு தெரியதப்பவே இவ்வளவு திமிர் இவளுக்கு. இதுல இவ நம்மள மாதிரி குடும்பமா மானத்தோட வாழ்ந்துட்டா அவ்ளோ தான் போல..” என அவர்களின் இயலாமையை இவள் மேல் வன்மமா கொட்ட பட்டிருக்கிறது.
அப்பொழுதெல்லாம், ‘யார்தான் என்னை இங்கு வந்து விட்டது? இப்படி கண்டவர்களின் ஏச்சு பேசிச்சுகளை நான் ஏன் கேட்க வேணுமா?’ என ஒரு விரக்தியும் அடைந்திருக்கிறாள், ஷிவன்யா.
அதன் பிறகு தான் விலோவின் நட்பு அவளுக்கு கிட்டியது. அதன் மூலம் அமரன், ரங்காவின் நட்பும் கிடைத்தது. அதன் பிறகு அவளுக்கு ஒன்றுன்றால் முதல் ஆளாக அமரன் தான் வந்து நிற்பான்.
ஆனால், இப்பொழுது அவளின் ஆழ்மனதின் ஆசை என்னும் ஏக்கமாக இருந்த வினாவிற்கு விடையாக வானிலே தோன்றியது, அவள் அந்த ஸ்ரீ இல்லத்திற்கு வந்த கதை!
‘நா..நான் அவங்களுக்கு பாரமா இருந்தனு என்னை விட்டுட்டு போனாங்களா?’ என யோசித்தவளின் கண்ணில் இருந்து கோடாக கண்ணீர் இறங்கியது.
அவளின் தோளில் வந்து கையை வைத்தாள் விலோ. விலோவினால் பேச தான் முடியவில்லை ஆனால் தோழியின் மனவலியை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அதனை பார்த்த அங்கிருந்த மற்றவர்களுக்கே அது வலியை கொடுக்க, அங்கே குழந்தையாக இருந்தது அவள் தான் என்னும் பொழுது ஷிவன்யாவால் தாங்க முடியவில்லை.
“வி.. விலோ..” என அவளை கட்டிக்கொண்டு அழுதாள்.
“ஒ..ஒருவேளை நா..நான் பையனா பிறந்திருந்தா இங்க என்னை விட்டிருக்க மாட்டாங்க தான? நா..நானும் இப்படி அ.. அனா..” என்ற வார்த்தையை ஷிவன்யா சொல்லும் முன் அவளின் வாயில் கரத்தை வைத்து தடுத்துவிட்டாள் விலோ.
“ஷிவ். உனக்கு நாங்க இருக்கோம் டா..” என அவளை தேற்றினான் ரங்கா.
‘இப்படி ஒரு வரம் கிடைச்சத்துக்கு சும்மாவே அந்த பூதம் போயிருக்கலாம்..’ என மனதோடு சொல்லிக் கொண்டான் சக்தி. அவனுக்கு ஷிவன்யாவிற்கு ஆறுதல் சொல்ல தோன்றினாலும், அவனுள் எதுவோ ஒன்று தடுக்க அமைதியாக நின்றுக் கொண்டான்.
“நாம அந்த போர்டுல கேமை பத்தி படிக்குறப்பவே அது முக்காலங்களையும் உணர்ந்ததுன்னு வந்துச்சு வனித்துச்சு. அது என்னனு அப்ப புரியல.. ஆனா இப்ப புரியுது..” என்றான் ப்ரதீப்.
தன்னை தானே சமன்படுத்திக் கொண்டாள் ஷிவன்யா. பின், கண்ணை அழுந்த துடைத்தவள், “இப்ப நீ தான் விலோ போடணும்..” என பகடையை அவளிடம் கொடுத்தாள்.
அதனை விலோவினால் வாங்க முடியாமல் ரங்காவை பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தவன் ஷிவன்யாவிடம் இருந்து வாங்கிய பகடையை விலோவின் வாயில் வைத்து கீழே போட வைத்தான்.
அடுத்தடுத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்த அலையில் பகடையோ இப்படி அப்படி என நிலையில்லாமல் வெகு நேரம் சுழன்று இறுதியில் “ஒன்று!” என நின்றது.
“ஒ..ஒன்னு வந்துடுச்சா..” என ஆச்சரியமாக கேட்டான் ப்ரதீப்.
கண்ணீர் கண்ணை மறைக்க ‘ஆம்!’ என அழுகையுடன் தலையை அசைத்தாள் விலோ.
எத்தனை தடைகள்! எத்தனை வலிகள்! எத்தனை இழப்புகள்! என அனைத்திற்கும் விடிவு காலமாக யாரால் இந்த ஆட்டம் அவர்கள் அனைவரையும் வந்தடைந்ததோ.. அவளாலே அந்த விளையாட்டிற்கு முடிவுரையும் எழுதபட்டது.
பதினாங்கில் இருந்த விலோவின் சிவப்பு நிற குட்டி கப்பல் ஒரு கட்டம் நகர்ந்து பதினைந்தாகிய இறுதி கட்டத்திற்கு சென்றது.
சமுத்திரத்தின் இலக்கை எட்டியதற்கு வாழ்த்துகள்! இறுதி கட்டத்தை எட்டியவர் ‘சமுத்திரா!’ என்ற
மந்திரத்தை உச்சரிக்க
மாற்றம் கிட்டும்!
என அந்த குமிழில் தங்க நிறத்தில் எழுத்துக்கள் மிளிர்ந்தது.
“மை காட். கடைசியா கேம் முடிஞ்சிது..” என அனைவருமே ஆசுவாசமாகினர்.
“சீக்கிரமா சமுத்திரான்னு சொல்லு விலோ. நீ தான் சொல்லணும் போல..” என ப்ரதீப் விலோவை ஊக்கினான்.
அதில் கண்கள் கலங்க அனைவரையும் பார்த்தவள், தலையை இடவலமாக அசைத்தாள். “விலோ. ஜஸ்ட் ட்ரை பண்ணு..” என ரங்கா சொல்ல,
விலோவும் அதுவரை பசைபோல் ஒட்டியிருந்த உதட்டை பிரித்தாள். உடனே அவளின் வாயில் இருந்து வெளியே வந்து விழுந்தது அவளின் நாக்கு.
நாக்கு மேல் அண்ணத்தில் படுவதன் மூலம் தான் வல்லினம், இடையினம், மெல்லினம் என தமிழ் எழுத்துக்களுக்கு வித்தியாசம் கிடைக்கும்
ஆனால் இங்கே தவலையாக மாறியிருந்த விலோவிற்கு தவளையை போன்று நீண்ட நாக்கு உள்ளதால் ஒரு வார்த்தை என்ன? ஒரு எழுத்தை கூட அவளால் சரியாக உச்சரிக்க முடியவில்லை.
விலோவும் ஒவ்வொரு முறையும் நாக்கை உள்ளே தள்ளிவிட்டு பேச முயற்சி செய்கிறாள், ஆனால் அவளால் ‘சமுத்திரா!’ என்ற வார்த்தையை சொல்லவே முடியவில்லை.
அவர்களின் மற்றொரு பக்கத்தில் இருந்து கடல் கொள்ளைக்காரி அவர்களின் கப்பலை நோக்கி வந்து நொண்டிருந்தாள்.
அவளை பார்த்ததும் அனைவருக்கும் அமரனின் நினைவு மீண்டும் துளிர்த்தது. கொள்ளைக்காரர்களின் பெரிய கப்பலின் முன்பு சிறு துரும்பாக இருந்தது இவர்களின் மீட்பு படகு!
அவர்களின் கப்பல் இவர்களை மோதினால் நிச்சயம் இவர்கள் கடலில் மூழ்கிவிடுவர் என தெரிந்தது.
“விலோ கொஞ்சம் ட்ரை பண்ணு விலோ.. நீ முழு வார்த்தையா சொல்ல வேணாம். ஒரு ஒரு எழுத்தா கூட சொல்லு..” என ஷிவன்யா அவளின் கையை பிடித்துக் கொண்டாள். கண்ணீருடன் ‘சரி!’ என தலையை அசைத்தாள் விலோ.
விலோவின் மனதில் இந்த விளையாட்டில் நிகழ்ந்த அனைத்தும் ஒரு முறை வலம் வந்தன. சக்திக்கு அடிபட்டு இரத்தம் வழிந்தது; ஷிவன்யாவின் காலில் அடிபட்டது; ரங்காவிற்கு கையில் வெட்டுப்பட்டது; ப்ரதீப்பை காணாமல் இவர்கள் தவித்தது; இவை அனைத்தும் சாதாரணமே என எண்ணும் அளவிற்கு அமரனின் முடிவு!’ என அவளின் நண்பர்களுக்கு நிகழ்ந்த அனர்த்தனங்களை முழுதாக நினைத்தவள் மெல்ல நிமிர்ந்து ஒரு முடிவுடன் அனைவரையும் பார்த்தாள்.
பின், ‘ச’, ‘மு’, ‘த்’, ‘தி’, ‘ரா’ என ஒரு ஒரு எழுத்தாக சொல்ல முயன்றாள். ஆனால், அனைத்து எழுத்துக்களும் சரியாக ஒலிக்க படவில்லை.
“கமான் விலோ. இன்னொரு முறை ட்ரை பண்ணு..” என சக்தி சொல்ல,
மீண்டும் மீண்டும் முயன்று நான்காவது முயற்சியில் ஓரளவு சொன்னாள். ஆனால் இதற்கே அவளின் எச்சில் அனைத்தின் நாக்கின் மூலம் வெளியே வந்துவிட்டது.
மனதை திடப்படுத்தி நீண்ட மூச்சினை இழுத்துவிட்டு கண்களை இறுக்க மூடியவள் மீண்டும் அந்த எழுத்துக்களை அவளின் அடி மனதிலிருந்து உச்சரித்து முடித்தாள்.
“சமுத்திரா!” என்ற ஒற்றை மந்திரத்தை விலோ உச்சரித்து முடித்தவுடன் முதலாவதாக அந்த கேம் போர்டில் இருந்த அவர்கள் அனைவரின் பல வண்ணங்களில் இருந்த குட்டி கப்பல்கள் அனைத்தும் கலைந்து சிதறின.
அவர்களை நெருங்கிக் கொண்டிருந்த கொள்ளைக்கார கப்பல் அப்படியே பின்னோக்கி நகர்ந்து சென்றன.
அதன் பின், அந்த கடலிலே மாபெரும் சுழல் ஒன்று உருவாகியது. ஆழம் மிகுந்த பகுதில் உள்ள நீரை அனைத்தையும் ஒன்று திரட்டி, அந்த இடத்தின் அடர்த்திக்கேற்ப காற்றின் வேகத்தை உபயோகித்து சுழற்றி அடித்தது அந்த சுழல்.
அது சுழல்கின்ற சுழலில் அவர்களின் சிறிய படகும் ஆட்டம் காண தொடங்கியது.
முதலில், அந்த சுழலுக்குள் அவர்களை வரவேற்க காத்திருந்த ஆமை அவர்களுக்கு விடைகொடுத்து சென்றது.
“என்ன அந்த சுழலுக்குள்ள ஆமை போகுது?” என்ற கேள்வி உதித்தாலும் யாரும் வாயை திறந்து ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
அலெக்ஸை கொன்று; ஷிவன்யாவை கடித்து காயத்தை ஏற்படுத்திய முதலைகள் அனைத்தும் குழுவாக அடுத்து உள்ளே சென்றன.
மூன்றாவதாக சக்தியின் குருதியை சுவைத்த இரத்த காட்டெரி இனமான வௌவ்வால்கள் அனைத்தும் அந்த நீர் சுழலின் மேல் ஒருவித ஓசையை எழுப்பி பறந்தப்படி இருந்தன.
கப்பலில் குடித்து ஆட்டம் போட்ட டேனியலின் உயிரை சூறையாடிய சுறா; ஆக்டொப்ஸும் அதனை தீயில் கருகவைத்த டிராகனும் அடுத்தடுத்து அந்த சுழலுக்குள் சென்றன.
அடர்ந்த கொடிகளும் கடைசியாக வந்த ஜெல்லி வகை மீன்கள் என அவர்களை தாக்க வந்த விலங்குகளும் உயிரினங்களும் ஒவ்வொன்றாக அந்த சுழலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
சிறிய உருவில் வந்து அமரனுக்கு காலனாக மாறிய நண்டுகளும் நத்தைகளும் அந்த சுழலில் சிக்கியபடியே உள்ளே சென்றன.
சமுத்திரா விளையாட்டில் அவர்களுடன் பயணத்தை பகிர்ந்துக் கொண்ட கடற்கன்னியான சௌந்தர்யமும் அந்த நீர் சுழலுக்குள் மூழ்கிப் போனாள.
கடைசியாக
காதல் என்னும் மாயவலையில் அமரனை ஆடைய நினைத்த கடற்கொள்ளைக்காரியான ஆரலி அவளின் கப்பலில் இருக்க, அந்த கப்பல் அந்த சுழலையே சுற்றியபடி இருந்தது.
அனைத்தையும் ஒருவித அதிர்ச்சியில் பார்த்தபடியே அனைவரும் அந்த சிறு படகில் நின்றனர். “எல்லாமே அந்த சுழலுக்குள்ள போயிடுச்சு. ஆனா இன்னும் நம்ம அமரனை காணோமே? நாம எப்ப நம்ம உலகத்துக்கு போவோம்..” என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.
அடுத்த வினாடியில், அவர்கள் அனைவரும் கூட அந்த சுழலில் சிக்கி அப்படியே கடலிற்குள் செல்ல துவங்கினர்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1


