
சமுத்திரா – 37:
“டேய்! உன்னோட நேம் அமரன் அந்தோணி. ஆனா, நீ எதுக்கு உன்னோட கழுத்துல ருத்ராட்சம் போட்டிருக்க?” என கல்லூரி காலத்தில் ஒரு முறை அமரனிடம் ப்ரதீப் கேட்டிருக்கிறேன்.
“எனக்கு பிடிச்சிருக்கு போட்ருக்கேன் டா. இதுல என்ன இருக்கு?” என அமரன் அசைட்டையாக பதிலளித்தான்.
“இல்லை டா நீ கிறிஸ்டின்ல அதான்..” என ப்ரதீப் இழுத்தான்.
“சோ.. ருத்ராட்சம் போட கூடாதுன்னு ரூல் ஏதாவது இருக்கா என்ன?” என்று அமரன் அழுத்தமாக கேட்டான்.
“ச்ச ச்ச தப்பா எதுவும் சொல்லல டா. சும்மா கேட்டேன். அதை நீ கழட்டுனதே இல்லையா அதான். நீ அதை கழட்டவே மாட்டியா டா?”
“இது எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க கொடுத்தது. சோ, என் உடம்புல உயிர் இருக்க வரைக்கும் இது என்கிட்ட அப்படியே தான் இருக்கும்.” என உணர்ச்சி மிகுதியில் சொன்ன அமரன் அதனை அவனின் நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டான்.
“டேய். டேய். ஏதோ சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன் டா. அதுக்காக இப்படிலாமா அபசகுணமா பேசுவ?” என அன்று அவனை கண்டித்திருந்தான் ப்ரதீப்.
ஆனால், இன்று ப்ரதீப்பின் கரத்தில், அவ்வளவு நாட்கள் அமரனின் கழுத்தில் தொங்கியபடி அவனின் நெஞ்சில் உறவாடிய ருத்ராட்சம் கயிரோடு இருந்தது.
கடைசியாக வந்துவிடும் படி அமரனின் சட்டை காலரை இறுக்கமாக ப்ரதீப் பற்றி இழுக்கும் பொழுது அவனின் கையோடே அமரனின் ருத்ராட்சம் கயிரோடு வந்திருந்தது. உள்ளங்கையில் அதனை இறுக்கி பிடித்தபடியே கண்கள் கலங்க ப்ரதீப் அமர்ந்திருந்தான்.
அங்கிருந்த கரு மேகங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, சூறாவளி காற்றுடன் இணைந்து மழை பொழிய துவங்கியது. அந்த மழையில் அவர்களின் சிறிய மீட்பு படகு கடலில் தத்தளித்தப்படி இருந்தது.
அழுதபடி இருந்த ப்ரதீப்பின் தோளில் கைவைத்த சக்தி, “ட
ப்ரதீப்..” என மெதுவாக அழைத்தான்.
“ச..சக்தி! நம்.. நம்ம அமர் டா. என்னோட கண்ணு முன்னாடியே அவன்.. என்னால எதுவுமே பண்ண முடியல டா..” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் சக்தியிடம் அழுகையில் கரைந்தான். சக்தியும் அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“நம்ம எல்லாரையும் அந்த நத்தை கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொன்னான் டா. ஆனா, அவன் மட்டும் அப்படி இல்ல போல..” என ப்ரதீப் புலம்பினான்.
கடைசியாக அமரனின் உயிர் பறவை பிரியும் பொழுது ப்ரதீப்பை தான் விழியசைக்காமல் பார்த்தான். இப்பொழுதும் அதனை நினைத்தால் ப்ரதீப்பிற்கு உடல் தானாகவே நடுங்கியது.
அங்கு கடலில் பற்றி எரிகிற கப்பலில் தான் அமரனின் உடலும் இருக்கின்றது. இங்கிருந்த அனைவரின் கண்களும் நீர் தழும்ப அதனை தான் பார்த்தன.
மற்றவர்களாவது பேசி அவர்களின் எண்ணங்களை பரிமாறிக் கொள்கின்றனர். ஆனால், எப்பொழுது தவலையாக மாறினாளோ அந்நேரத்தில் இருந்து விலோவினால் கத்தி அழுக கூட முடியவில்லை. அவளின் துக்கம் அனைத்தையும் ரங்காவை இறுக்கமாக அணைத்து அவனுடனே பகிர்ந்துக் கொண்டாள்.
‘அமரன்!’ மிகவும் நேர்மையானவன். கோபம் மட்டும் அடிக்கடி கண்ணை மறைத்துவிடும். அவனின் வாய் பேசும் முன்னே அவனின் கை நீண்டுவிடும். நண்பர்கள் அனைவரிடமும் அன்பு கலந்த கண்டிபோடே இருப்பான்.
நண்பனை இழந்த மித்ரசோகம் அனைவரையுமே அழுத்தமாக தாக்கியது. அமரனால் அவர்களுக்கு அறிமுகமாகிய கடல் பயணத்தில் இன்று அவர்களுடன் அமரன் இல்லை என்பதை ஏற்க முடியாமல் ஸ்தம்பித்த படி எரிகின்ற கப்பலையே பார்த்தனர்.
அந்த நெருப்பில் இருந்து தீப்பொறி பறக்க பறக்க இங்கு அனைவரின் இதயமும் அதிர்ந்து அடங்கியது. பொழிகின்ற மாரியால் கூட அந்த நெருப்பினை அணைக்க முடியவில்லை.
மெல்ல தன்னை மீட்டிக் கொண்டான் சக்தி.
“அமரன் திரும்பி வருவான் டா. அவனோட பேரே அமரன்! அழிவில்லாதவன் தான? கண்டிப்பா நம்மகிட்ட வந்துடுவான். நம்மள தேடி வருவான். அவனை திருப்பி வர வைப்போம். நாம இந்த கேமை முடிப்போம்னு தான் நம்மள கா..காப்பாத்தி விட்டான். அதுக்கு ஏத்த மாதிரி நாமளே இதை முடிச்சு அவனை வர வைப்போம்..” என்ற சக்தி ஆறுதலாக சொன்னான்.
அதற்கு அடுத்து விளையாட வரிசையில் இருந்த அனைவருக்குமே சமுத்திரா விளையாட்டை முடிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், அது யார் கையில் முடியும் என்பது தான் மிக பெரிய கேள்வி குறியாக தற்சமயம் உள்ளது.
“நீ தான் சக்தி இப்ப போடணும். நீ மூணு போட்டா கேம் முடியும்..” என்ற ரங்கா பகடையை சக்தியின் கையில் கொடுத்தான். இதனை எடுக்க சென்று தானே அமரனுக்கு அந்த நிலை என பகடையை
கொடுக்கும் பொழுது ரங்காவின் கைகள் நடுங்கின.
அதனை வாங்கிய சக்தி நொடியும் தாமதிக்காமல் அந்த படகிலே உருட்டி விட்டான். அவர்கள் அனைவரும் மூன்றை எதிர்பார்த்து காத்திருக்க பகடையில் வந்ததோ இரண்டு!
“ஐயோ.. இப்ப என்ன வருமோ..” என ரங்கா சொல்ல பன்னிரண்டில் நின்றிருந்த சக்தியின் பச்சை நிற கப்பல் பதினான்கில் சென்று நின்றது.
முதுகெலும்பில்லா காளான் உருவமானவன்..
உயிர் நீத்தும் உருக்குலைப்பான்!
என குமிழுக்குள் தோன்றிய எழுத்துக்கள் மறையும் முன் ஒருவித வெளிச்ச பூக்கள் அவர்களின் கப்பலை சூழ்ந்தது.
‘கடல்ல மின்மினி பூச்சி வருமா..’ என்றவர்களின் யோசனையை முறியடிக்கும் விதமாக ஜெல்லி மீன்கள் வந்தன. அந்த ஜெல்லி மீன்கள் தான் ஒருவித ஒளியை பிரகாசித்தபடி கூட்டம் கூட்டமாக வந்தன.
ஜெல்லி மீன்களுக்கு முதுகெலும்பேன்ற ஒன்று இல்லை. எனவே, அதனால் கடலில் நீந்த முடியாமல் கடல் அலையின் நீரோட்டத்துடனே பயணிக்கும்.
இப்பொழுது அந்த கடலலையே அந்த ஜெல்லி மீன்களை அவர்களின் படகிடம் அழைத்து வந்திருந்தன. அடுத்து வந்த பெரிய அலையில் அவர்களின் படகை சூழ்ந்திருந்த ஜெல்லி மீன்கள் அனைத்தும் அவர்களின் கப்பலின் உள்ளே சிதறின.
அவை அனைத்தும் பார்ப்பதற்கு காளான் உருவத்திலே இருந்தது. படகில் வந்து விழுந்த சிறிது நேரத்திலேயே அனைத்து மீன்களும் உயிரை நீர்த்தது.
“ஜெல்லி ஃபிஷ் தான் காளான் உருவம்னு க்ளூல வந்திருக்கு போல. யாரும் அதை தொடாதீங்க. அது கிட்ட கூட போகாதீங்க. அது உயிரோட இருந்தாலும் சரி. உயிரில்லாமா இருந்தாலும் சரி. அது மூலமா நமக்கு பயங்கர அலர்ஜி வரும்னு அ.. அமர் ஒரு வாட்டி சொல்லிருக்கான்.” என்ற ரங்காவிற்கு தொண்டை அடைத்தது. தன்னை சரி செய்தவன், அது இருக்கும் இடத்தில் இருந்து அனைவரையும் அப்புற படுத்தினான்.
ஆனால், அந்த சிறிய வகை மீட்பு படகில் அதற்கு மேல் எங்கும் செல்ல அவர்களுக்கு வழியில்லை. கால் வலியினால் பாதி மயங்கிய நிலையில் இருந்த ஷிவன்யாவின் கரத்தில் பகடையை திணித்தான் ரங்கா.
“ஷிவ் ரெண்டு போட்டா கேம் முடியும்..” என்று ப்ரதீப் சொல்ல. அனைவருக்குமே அந்த எதிர்பார்ப்பு இருக்க தான் செய்தது.
அவளும் பகடையை உருட்டிவிட்டாள். அவளுக்கு அதில் ஒன்று என வந்தது. “ஓ! காட்! இப்ப என்ன வர போகுதுன்னு தெரியல.. எது வந்தாலும் இதுக்கு மேல ஒழிய கூட நம்ம கிட்ட இடம் இல்லை..” என ப்ரதீப் கவலையாக சொல்ல,
பதிமூன்றில் இருந்த ஷிவன்யாவின் நீல நிற கப்பல் ஒரே ஒரு கட்டத்தை கடந்து பதினாங்கில் சென்று நின்றது. அந்த குமிலுக்குள் அவளுக்கான குறிப்பு மின்ன துவங்கியது.
விளையாட்டினை தவிர்த்து வரம் கேட்க.. கேட்ட வரம் கிடைக்கும்!
என வந்ததை வாசித்த ரங்கா, “மறுபடி அந்த ஜீனி பூதம் வர போகுது போல..” என்று சொன்னான்.
அடுத்த நொடி, அவர்களின் படகின் அருகில் உள்ள கடல் இரண்டாக பிளந்து அதில் இருந்து வந்த வெளிச்சக்கீற்று அவர்களின் கண்ணை கூச செய்தது. பின் அந்த பிளவிலிருந்து பொன்நிறத்தில் ஆழ்கடலின் ஆழத்தில் இருந்து வெளிவந்தது அலாவுதீன் அற்புத விளக்கு!
பல வண்ணங்களில் புகைகள் சூழ தங்கநிற துகள்கள் மின்ன அதனினுடே காற்றில் மிளிர்ந்து கொண்டிருந்தது, அற்புத விளக்கு. அந்த விளக்கின் துவாரத்தில் இருந்து வெளியே வந்தது நீலவானின் நிறத்தையுடைய அற்புத பூதமான ஜீபூம்பா!
முதல் முறை இவை அனைத்தையும் அதிசயமாகவும் ஆனந்தமாகவும் பார்த்த அனைவருக்குமே இப்பொழுது அந்த எண்ணம் துளி அளவும் இல்லை. ‘எப்போதடா இந்த விளையாட்டு முடியும்?’ என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்டனர்.
ஷிவன்யாவை கனிவாய் பார்த்த ஜீபூம்பா, “ஆணையிடுங்கள் அரசியாரே! உங்களுக்கான வரத்தை அளிக்க யாம் கடமைப் பட்டிருக்கிறோம்.” என்று அடிமைப்போல் பணிவாக சொன்னது.
மேலும், “சமுத்திர விளையாட்டை சார்ந்திராத வரத்தை கண்ணை மூடி வேண்டிக் கொண்டு இந்த அற்புத விளக்கினை தங்களின் கரங்களால் வருடுங்கள் அரசியாரே! உங்களுக்கான வரம் உடனே அளிக்கப்படும்.” என மென்மையாக சொன்னது.
ஆஷ்ரமத்தில் வளர்ந்திருந்த ஷிவன்யாவிற்கு அமரன் என்றுமே ஒரு அரணாகவே இருந்திருக்கிறான். அவனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த ஷிவன்யா அந்த பூதத்திடம்,
“எங்..எங்களுக்கு எங்க அமர் தான் வேணும். அவனை எப்படியாவது திரும்பி கொடுத்துருங்க.” என அழுகையுடன் கைகூப்பி கேட்டாள்.
அவளை வாஞ்சையாக பார்த்த பூதம், “அது என்னால் முடியாது அரசி. தங்களின் மித்ரனான அமரன் இந்த சமுத்திரா விளையாட்டினாலே உயிரை துறந்தார். அதனால் என்னால் அவரை உயிருடன் உங்களிடம் கொடுக்க முடியாது.” என மறுத்த பூதம்,
“நான் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கிறேன். மீண்டும் நீங்கள் உங்களுக்கான வரத்தை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இம்முறையும் தவறவிட்டால் தங்களின் ஆழ்மனதின் ஏக்கங்களையும் நிராசைகளையும் அறிந்து நானே உங்களுக்காக ஒரு வரத்தை வழங்கிவிடுவேன்.” என சமாதானமாகவும் மிரட்டலாகவும் சொன்னது.
அமரனை அதனால் கொடுக்க முடியாது என ஏமாற்றம் அடைந்த ஷிவன்யாவிற்கு என்ன கேட்பது என தெரியவில்லை. இருந்தாலும், “எங்களுக்கு ஒரு பெரிய கப்பல் வேண்டும்.” என கேட்டாள்.
“மீண்டும் மீண்டும் இந்த சமுத்திரா விளையாட்டை சார்ந்ததையே தாங்கள் கேட்குறீர்கள் அரசியாரே!” என சலித்துக்கொண்ட பூதம், ஷிவன்யாவின் தலை மீது கைவைக்க வந்தது.
“ஹே! என்ன பண்ணுற..” என்ற ரங்கா அந்த பூதத்தை தடுத்தான்.
“அச்சம் தேவையில்லை மித்ரனே! நான் என்னுடைய கடமையை தான் செய்ய வந்தேன்..” என சொன்ன பூதம் ஷிவன்யாவின் தலையில் கையை வைத்து கண்ணை மூடியது.
சில விநாடுகளிலில் அவளின் தலையில் இருந்து கையெடுத்த பூதம், “ஞான் தங்களின் ஆழ்மன ஆசையை அறிந்தேன் அரசியாரே! நிச்சயம் அதற்கான பதில் உங்களுக்கு கிட்டும். இப்பொழுது நான் விடைப்பெறுகிறேன்.” என்று இருக்கரங்களையும் கூப்பி ஷிவன்யாவை வணங்கிவிட்டு அதனின் இருப்பிடமான பொன்நிற விளக்கின் உள்ளே மீண்டும் அடைந்துக் கொண்டது.
தங்கநிற துகள்கள் பறக்க பிளந்திருந்த கடலின் வழியே அற்புத விளக்கும் அதனின் அன்னையான ஆழியின் ஆழத்திற்கு சென்ற அடுத்த நொடி இரண்டாக பிளந்திருந்த கடலும் இணைந்துக் கொண்டது.
இங்கு, கருநிற வானில் வெளிச்ச கீற்று ஒன்று பலத்த இடியோசையுடன் உருவாகியது!
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

